ukksample
ukksample
உலாவரும் கனாக்கள் கண்ணிலே-5
குளித்துவிட்டு பனியனுடன் தனது ரூமிற்கு வந்த அமரை எதிர்பார்க்காத அர்ச்சனா கையில் மொபைலுடன் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தாள்.
அர்ச்சனாவை பார்த்தவாறு ரூமிற்குள் நுழைந்தவன், அங்கிருந்த அவனுடைய ஃபோர்டோர் வாட்ரோபில் வலதுபுறமிருந்த கதவைத் திறந்தான். அதில் இரண்டாவது அடுக்கின் ஹேங்கர்களில் தொங்கவிடப்பட்டிருந்த சட்டைகளில் இருந்து, காட்டன் ஹாஃப் ஃபுல் ஸ்லீவ் நீல நிற சட்டையை எடுத்திருந்தான்.
காயங்களுக்கு இடையில் வேதனை வராதவாறு சட்டையை போட்டவன், “அர்ச்சனா…!”, என அவனது அறைக்குள் நுழைந்தபோது மொபைலில் இருந்து தலையை நிமிர்த்தி யாரென பார்த்துவிட்டு, மீண்டும் மொபைலுக்குள் தனது கவனத்தை திருப்பியிருந்த மனைவியை மெதுவாக அழைத்தான்.
எழாமல் அமர்ந்தாவாறு, “என்ன?” எனக் கேட்ட மனைவியை
“எங்க வீடு உனக்கு பிடிச்சிருக்கா?”
“தெரியல”
“இது என்ன பதில் அர்ச்சனா?”
“தெரியாதத வேற என்னனு சொல்ல?”
அவளின் அருகில் வந்தவன் அவள் தோள்பற்றி மெதுவாக எழுப்பினான். பிறகு அவளின் தோளை அணைக்க கைகளை கொண்டு வந்தவனை, கேள்வியாக பார்த்தவளிடம்
“சாரி, நேத்து இப்டி நடக்கும்னு எதிர்பாக்கல, உனக்கு வருத்தமா இருந்திருக்கும்”, என்றவாறு தோளை அடிபடாத இடது கையினால் அணைத்திருந்தான்.
“…”
“இன்னும் பெயின் இருக்கு… டூ டேஸ்ல சரியாகிரும், நாளைக்கு டாக்டர் வர சொல்லிருக்கார். போயி பாத்துட்டு வந்தபிறகு உங்க வீட்டுக்கு மறுவீடு போகலாம்”
“…”, எதுவும் பேசாமல் தலையாட்டியவளை தோளோடு அணைத்து
“ம்… ஏன் பேச மாட்டிங்கற எங்கிட்ட ஃப்ரீயா பேசு”, என்பதை முடிக்கும்முன்
“நேத்து ஏன் வெளிய போயிருந்தீங்க?”
“ஒரு அர்ஜெண்ட் வர்க்… அதான்”
“என்ன வேல?”,விடாமல் கேட்டவளிடம்
“சொல்லக்கூடிய விடயம்னா… நானே சொல்லிருவேன் அர்ச்சனா”
“அப்ப இது எங்கிட்டகூட சொல்லக்கூடாத விடயமா?”
“ம்…”, என்றவாறு பெருமூச்சு ஒன்றை விட்டவன் ‘ஆமாவென’ , தலையசைத்தான்.
“…”
தன்னை சமாளித்தவன், “ஏன் ரூமை விட்டு வெளிய வராம உள்ளயே இருக்க?”, என தனது சந்தேகத்தை கேட்டிருந்தான்.
“வெளிய வந்து என்ன செய்ய?”, அடுத்த கேள்வியை அமரை நோக்கி வில்லின் வேகத்தில் கேட்டிருந்தாள்.
“நான் இவ்வளவு நேரம் ஹால்ல தான இருந்தேன், வந்து எங்கூட வந்து பேசிட்டு இருந்திருக்கலாம்ல”
“உங்க காயத்தை பார்த்தா எனக்கு ஒரு மாதிரி இருந்தது. அதான்…”, எதையும் மறைக்க நினைக்காமல் பேசியவளை கூர்ந்து பார்த்தவன், அணைப்பை விட்டிருந்தான்.
“அம்மாவும், அண்ணியும் மட்டும் எல்லா வேலையும் பார்த்துட்டு இருக்காங்க… அவங்களோட போயி பேசலாம், இல்லனா உனக்கு தெரிஞ்ச வேலய பாக்கலாம்”
“அத்தகிட்ட எதாவது வேலையிருந்தா சொல்லுங்கத்தனு சொன்னேன். அவங்க இதுவரை ஒரு வேலயும் சொல்லல”
“அவங்க சொல்லலனா என்ன? நீ கிச்சன் பக்கம் போனா சொல்லுவாங்க”
“இப்போ போகவா?”
“ம்…”, என்றவன் அறையை விட்டு வெளியேறி இருந்தான். காலை உணவுக்கான வேலைகள் முடிந்து வந்த உறவினர்களுக்கு பரிமாறியபடி இருந்த தனது தாயைக் கண்டவன், தனது தங்கையின் வரவை எதிர்பார்த்து வெளியே சென்றான்.