UMUV10

Banner-86c30463

UMUV10

10

தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்திருந்தான் ரிஷிநந்தன்.

‘விஷ்ணு கிட்ட மட்டும் சிரிக்க சிரிக்க பேசுற, என் கிட்ட பேசக்கூட தோனலையா உனக்கு’ கண்களை மூடியிருந்தவன், மெசேஜ் வந்த அதிர்வில் கண்களைத் திறந்தான்.

“கால் பண்ணவா?” வர்ஷாவின் குறுஞ்செய்தி தான். அவனே அழைத்தான்.

“கொஞ்சம் பிசி அதான் அப்போ ஃபோன் பண்ணலை” அவன் துவங்க,

“அதே தான் என்னாலும் கால் பண்ண முடியல” என்றவள், “மறுபடி அவனை பார்த்தேன், அவன் கூடவே கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் கார்ல போனேன், என்னமோ எல்லாமே கனவு மாதிரி இருக்கு. தூக்கமே வரமாட்டேங்குது” அவள் புலம்ப,

“இதையே சொல்லுமா ஆனா எதையும் ஒழுங்கா சொல்லிடாத, மொட்டைத் தாத்தா குட்டையில விழுந்தார்ன்னா என்ன புரியும்?”

“சாரி, எவ்ளோ சொன்னேன்?”

“மறுபடி மொதலேந்தா? காஃபி வாங்கினதுல விட்டே” அவன் அலுத்துக்கொண்டதில் சிரித்தவள்,

“என் காஃபியை வாங்கிக்க போனேனா, அப்போதான் அவனை பார்த்தேன். ச்சே பக்கி மாதிரி பாத்தேன்னு சொல்லனும். கொஞ்சமா குட்டியூண்டு ஸ்மைல் பண்ணான் பாருங்க ஐயோ ஐயோ அப்படியே காலுக்குக் கீழ உலகமே நழுவி போச்சு…” அவள் பேச, தலையைப் பிடித்துக்கொண்டான்.

‘அங்கேயே நில்லு தப்பித் தவறி யார் என்னன்னு சொல்லித் தொலைக்காத’ பொறுமை இழந்தவன்,

“போதும் வர்ஷா போர் அடிக்குது, மேல சொல்லு” என்று கடுகடுக்க,

“போர் அடிக்குதுன்னா வேணாம் நான் சொல்லலை”

“ஹே சொன்னதையே சொல்லாம மேல சொல்லுன்னு தானே சொன்னேன்”

“…”

ரிஷியின் பொறுமை மெல்லக் கரையக் கெஞ்சுதலாய், “வர்ஷா ப்ளீஸ்” என்று கேட்க,

“சரி… அந்த டேபிள்ல இருந்தவன் கிட்ட, என் காஃபி கப்…”

“வெயிட்!”

“என்ன ரிஷி”

“நீ ஏனோதானோன்னு சொல்றே, சந்தோஷமா சொல்லு”

“ஸ்ஸ்ஸ் படுத்துறீங்க பா” அவள் அலுத்துக்கொள்ளச் சிரித்தவன்,

“உன்னை விடவா” என்று கேட்கச் சிரித்துவிட்டவள்,

“ம்ம் என் காஃபி உங்க கிட்ட இருக்குன்னு சொல்ல வாயை தொறந்தா வார்த்தையே வரல! கா கா டீன்னு சொல்லி தொலைச்சுட்டேன்” வர்ஷா சிரிக்க, ரிஷியும் அன்றைய நிகழ்வை நினைத்துச் சிரித்துக்கொண்டான்.

“நல்லவேளை அவன் புரிஞ்சுகிட்டு கப்பை கொடுத்தான், என்ன அவன் தம்பி தான் கலாய்ச்சு விட்டான்…” அவள் பேசிக்கொண்டே போக,

‘அவன் தம்பி’ என்பதில், அவள் சொன்ன ‘அவன்’ தன்னைத்தான் என்று உணர்ந்த நொடியே ரிஷி அனைத்தையும் மறந்திருந்தான், அவள் பேசிய எதையுமே அவன் மூளை ஏற்க மறுத்தது.

வர்ஷாவோ, “எவ்ளோ நான் திக்கினாலும் நான் என்ன சொல்ல வரேன்னு அவனுக்கு மட்டுமே எப்போவும் புரியுது தெரியுமா? அவன் அழகு மட்டுமில்லை, ரொம்ப புத்திசாலி, அன்னிக்கி கூட ஆதேஷை…” அவள் அவளின் கனவுலகில் மிதந்தபடி பேசிக்கொண்டிருக்க,

ரிஷி முகத்தில் சிரிப்பு பெரியதாகிக் கொண்டே போனது.

“ஆனா அவனுக்கு என்னை பிடிக்கலை போல இருக்கு ரிஷி! அவனை இனிமே பார்க்கவே கூடாதுன்னு இருக்கு”

“என்ன? ஏன்?” அவன் பதற, அவன் முகத்திலிருந்த சிரிப்பு தொலைந்தது.

“இவ்ளோ நேரம் சொல்லிக்கிட்டு இருந்தேனே, நீங்க கேக்கல?” அவள் கடுகடுக்க,

‘ஐயோ என்ன சொன்னா?’ அவன் கண்களை மூடி நினைவுபடுத்தத் தடுமாறிக்கொண்டிருந்தான்.

“ஹலோ”

“இருக்கேன்… கேட்டேன் வர்ஷா… நான் என்ன கேக்கறேன்னா… எதைவச்சு அவனுக்கு உன்னை பிடிக்கலைன்னு முடிவு பண்ணே?” அவசரமாகக் கேட்டான்.

“அதான் சொன்னேனே! அவன் என்கிட்டே நிமிஷத்துக்கு ஒரு முகம் காட்டுறான் ரிஷி. அவன் தம்பி எப்போவும் ஃப்ரீயா பேசறான், இவன் தான் இஞ்சி தின்னக் குரங்கு மாதிரி உர்ருன்னு இருக்கான்”

‘அடிப்பாவி குரங்கா? தேவைதான் எனக்கு’ சிரித்துக்கொண்டவன்,

“அதுக்கு எதாவது காரணம் இருக்கலாம்ல? அவன் மனசுல என்ன ஓடுதோ என்னவோ” தனக்கு தானே பரிந்து பேசினான்.

“அதுக்குன்னு… ஆனா அவன் வர்ஷான்னு கூப்பிட்டா எவ்ளோ நல்லாயிருக்கு தெரியுமா? என் பெயரே எனக்கு இப்போ தான் பிடிக்குது” புன்னகைத்துக்கொண்டவள்,

“சொல்ல நினைச்சேன், அவன் குரல் அப்படியே உங்களை மாதிரியே இருக்கும் தெரியுமா? நம்பமாட்டீங்க, நான் ரிஷி தானே நீங்கன்னு கேட்க நினைச்சேன்” அவள் சொல்ல, உடல் சில்லிடுவதை உணர்ந்தவன்,

“நானா?” அதிர்ந்தவன், அதை வெளிகாட்டிக்கொள்ளாமல், “ஒருத்தர் மாதிரி இன்னொருத்தர் குரல் இருக்காதா என்ன?” கேட்க,

“அதெப்படி அப்படியே உங்களை மாதிரியே இருக்குமா என்ன?”

“அப்போ நான் தான் அவன்னு சொல்றியா?” போலியாக அவன் கோவித்துக்கொள்ள,

“அப்படியா சொன்னேன், ஜஸ்ட் ஒரே மாதிரி இருக்குனு சொன்னேன்”

“இதென்ன பிரமாதம், சில நேரம் மனோ குரல் எஸ்பிபி குரல் மாதிரி இருக்கிறதில்லையா? நீ ரெண்டு பேர் பாட்டையும் கேட்டுப்பாரு நமக்கே சில தடவை குழப்பமா இருக்கும். அப்படி தான் இதுவும்” சமாதானம் சொன்னவன் நகத்தைக் கடிக்க.

“அப்படியும் ரொம்ப ஒரேமாதிரி…”

“ஃபோன்ல இருக்க மாதிரியே குரல் நேர்லையும் இருக்குமா? என் குரல் நேர்ல கேட்க வேற மாதிரி இருக்கலாமே”

“கரெக்ட் தான் ரிஷி! நான் தான் ஓவரா யோசிச்சுட்டேன். அவன் வேகமா படபடன்னு பேசுறான், நீங்க பொறுமையா நிதானமா பேசுறீங்க, சாரி” அவள் சரண்டர் ஆனாள்.

‘அப்பாடி நம்பிட்டா’ “சரி என்னதான் இப்போ அவனுக்கு, என்ன சொல்ல வர” அவளைக் கேட்க,

“தெரியலே! அவனை பிடிச்சுருக்கு ரிஷி, என்னவோ எனக்கே தெரியாம என்னை ஈர்க்கறான். ஒரு பக்கம் ரொம்ப பயமா இருக்கு” அவள் குரலிலிருந்த உணர்வு அவனைச் சுட,

“ஏன் பயம் வர்ஷா, என்னாச்சு உன்னை ஏதாவது தப்பா. ஐ மீன் கஷ்டப் படுத்துறானா?” அவன் மனதில் பாரம் கூடியது.

“மறுபடி காதல், ரிலேஷன்ஷிப், பிரேக்கப் இதுக்கெல்லாம் மனசுல தெம்பில்ல. அவனுக்கு என்னை பிடிக்குமான்னே தெரியாது நான் பிரேக்கப் எல்லாம் யோசிக்கிறேன் பாருங்க! சரியான லூசு நான்.

ஆனா ஏனோ அவனை பார்த்தாலே எல்லாமே நின்னுபோகுது. யாரானா கேட்ட என்ன நினைப்பாங்க, என்னடா இந்த பொண்ணு வெட்கமே இல்லாம இப்படி ஒரு பையன் பின்னாடி சுத்துறான்னு நினைப்பாங்க… ஐயோ ரிஷி நீங்களும் அப்படித்தானே நினைக்கிறீங்க? அலைஞ்சான்னு என்னை”

“ஹே சே! நான் அப்படி சொன்னேனா?” கடிந்து கொண்டவன், “நீ இயல்பா பழகு, அவன் எப்படி பழகுறானு பார், ஒரு அழகான நட்பா கூட இது ஆகலாம்ல” பொறுமையாகச் சொல்ல,

“காமெடி பண்ணாதீங்க ரிஷி, நட்பா? நான் வெட்கமே இல்லாம சொல்றேனே நான் அவனை சைட் அடிக்கிறேன். க்ரஷ் வந்துருக்கு எப்படி ஃபிரெண்டுன்னு பொய் சொல்ல முடியும், கண்டிப்பா என் மனசு சுத்தமா இல்ல ரிஷி.

அவன் தம்பிகிட்ட பேச முடியுது அவன் கிட்ட ஒரு வார்த்தை வரலை, கைகாலெல்லாம் நடுங்குது, கர்மம் என்ன ஆகுதுன்னு புரியல, ச்சே நான் இப்படி ஆனதே இல்ல, அவன்கிட்ட போனாலே எல்லா தைரியமும் எங்கேயோ ஓடி  போகுது.

நான் அவன் மேல எசகுபிசகா பைத்தியமா ஆகிட்டேன் அதுவும் இவ்ளோ வேகமா! அதான் எனக்கு என் மேல கோவமே”

அவள் சொல்லச் சொல்ல, ரிஷி தலையைப் பிடித்துக்கொண்டான்.

“இருக்கீங்களா?”

“இருக்கேன்மா”

“எதுவுமே சொல்ல மாட்டேங்கறீங்க” அவள் வருந்த,

‘என்ன சொல்லச் சொல்ற வர்ஷா’ அவன் மூளை யோசிக்க மறுத்தது.

“ரிஷி என்னை ஆம்பளை பொறுக்கின்னு நினைக்கறீங்களா?” அவள் கேட்டதில் ஏனோ கோவம் தலைக்கேற,

“ஸ்டுபிட்! ஒருத்தரை பிடிச்சா உடனே பொறுக்கியா? என்ன இப்படி யோசிக்கறே? எனக்கு இதுல என்ன சொல்லனும்னு தெரியலமா, அவன் மனசுல என்ன இருக்கோ, இப்போதைக்கு முடிஞ்சா அவன்கிட்ட சாதாரணமா பழக பாரேன்.

உன்னை ரொம்ப கஷ்ட படுத்துறான்னு தோனுச்சுன்னா பேசாம அவனை அவாய்ட் பண்ணிடு, உன் நிம்மதிதான் முக்கியம். நீ மனச வேற எதுலயான திசை திருப்பேன்”

“முடியல ரிஷி, இப்படி நான் ஆதேஷ் பத்தி ஒருநாள் கூட நினைச்சதில்ல, இதெல்லாமே புதுசா இருக்கு, விடுங்க நீங்க சொல்றமாதிரி சாதாரணமா இருக்க முடியுதானு பாக்கறேன் இல்லைனா அவனை மொத்தமா தவிர்க்கனேம்” அவள் நிறுத்த,

‘அவனைத் தவிர்ப்பேன் என்றாளே, அவ்வார்த்தை தன்னை வதைப்பதேன்?’ அவன் யோசித்திருக்க,

“இதுல பெரிய ஜோக் என்ன தெரியுமா?” கேட்டவள், “நான் அவன் பெயர் என்னன்னு கேட்கவே இல்ல. இவ்ளோ பிடிச்ச அவனோட பேரே எனக்கு தெரியாது ரிஷி!” அவள் சிரிப்பில் அவள் வலியை உணர்ந்தவன், தன் பெயரைச் சொல்லிவிட முடிவு செய்தான்.

“ரிஷி தாத்தா கூப்படறார், அப்புறம் கால் பண்றேன். சாரி ரொம்ப மொக்கை போட்டுட்டேன். குட் நைட்” வேகமாக அழைப்பைத் துண்டித்துவிட்டு அவள் சென்றுவிட, ரிஷியின் நிலை தான் குழப்பமானது.

‘நான் என்ன செஞ்சேன் உன்னை இவ்ளோ பாதிக்கிற மாதிரி?’ கண்களை மூடிக்கொண்டவனுக்குத் தூக்கம் வருவேனா என்றது.

மறுநாள் காலையில் வழக்கத்துக்கு முன்னதாகவே தயாராகி ஹாலில் அமர்ந்திருந்தான் ரிஷிநந்தன்.

சமைத்துக்கொண்டிருந்த ரஞ்சனி, “என்னடா ஏதாவது மீட்டிங் இருக்கா, சீக்கிரம் கிளம்பனுமா?” என்று கேட்க,

“இல்ல மா ஜஸ்ட் சும்மா” என்றவன், மெல்ல அவர் அருகில் சென்றான்.

“அம்மா ஒன்னு கேட்கனும்”

“கேளுடா” என்றவர், “இந்த தேங்காயை பத்தை போட்டுக்கொடு” அவன் கையில் உடைத்த தேங்காயைக் கொடுக்க,

அவர் சொன்னதைச் செய்துகொண்டே ரிஷி, “மா ஒரு பொண்ணுக்கு ஒருத்தனை ஏன் பிடிக்கும். ஐ மீன், எதுனால ஈர்க்க படுவா?”

ஒருநொடி ரிஷியை அதிசயமாகப் பார்த்தவர், புன்னகையுடன், “யார் டா அது?” என்று சிரிக்க,

“நீ மொதல்ல சொல்லு அப்புறம் சொல்றேன்” அவன் வம்பு செய்ய,

“எவ்வளவோ காரணம் இருக்கலாம் டா” யோசித்தவர்,

“தன்னை போலவே யோசிக்கிறானேன்னு வரலாம், தன்னை நல்லா புரிஞ்சுகிட்டு பழகுறவன் மேல வரலாம், கஷ்டத்துல இருக்குறப்போ பரிவா பேசுறவன் மேல வரலாம், இல்ல தனக்கு ரொம்ப பிடிச்ச வீட்டு ஆம்பிளைங்க சாயல் அதாவது அவங்களை ஞாபக படுத்துற மாதிரி இருந்தா வரலாம்.

ஏன்… காரணமே இல்லாம கூட வரலாம்! ஆயிரம் காரணம் இருக்கும் ஒருத்தரை பிடிக்க” என்றவர், குழப்பமாக இருந்த மகனைக் கூர்ந்து நோக்க, அவனோ முகம் இறுகியபடி இருக்க,

“வர்ஷாவா?” அவர் கேட்டதில் அதிர்ந்து நிமிர்ந்தவன்,

“எப்படி மா?” என்று வியக்க,

“நான் உன் அம்மாடா! இதுவரைக்கும் நீ யாழினியைத் தவிர எந்த பொண்ணையும் பத்தி பேசி நான் கேட்கல. லவ் பண்றேன்னு சொன்னாளாடா?” அவர் ஆர்வமாகக் கேட்க,

“இவ காதலிக்கிறேன்னு சொல்லலமா. ஆனா நிறையவே டிஸ்டர்ப் ஆகியிருக்கா”

“பிடிக்கலைன்னா எப்போவும் உன்கிட்ட காதலை சொன்ன பொண்ணுங்க கிட்ட சொன்னதையே சொல்லு”

“என்னன்னு?”

“சாரி! எனக்கு லவ்மேல நம்பிக்கை இல்லை…”என்றவர், “வேணும்னா எனக்கு கல்யாணம் செஞ்சுக்கவே விருப்பம் இல்ல, நான் இப்படியே சந்நியாசியா காசி ராமேஸ்வரம்னு போகப்போறேன்னு சொல்லு, 

கூடவே எனக்குப் பின்னாடி தான் கல்யாணம் செஞ்சுப்பேன்னு நினைக்கிற தம்பியையும் சிஷ்யனா கூட்டிகிட்டு போகப்போறேன்னு வேணாலும் சேர்த்து சொல்லிடு” நக்கலாகச் சொல்ல,

“மா!” கத்தியவன், “விளையாடாத மா, நான் சீரியஸா கேட்கறேன்” என்று முறைக்க,

“என்னதான்டா சொல்லனும்னு நினைக்கிற?” அவரும் முறைக்க,

“எதுவும் நினைக்கல, இந்தா பிடி” கோவமாகத் தேங்காய் பத்தைகளைக் கொடுத்தவன்,

“உன்ன போய் கேட்டேன் பாரு என்னை சொல்லனும்” கடுகடுத்தபடி திரும்ப, அங்கே சுவரில் சாய்ந்து சத்தம் வராமல் சிரித்துக்கொண்டிருந்தான் விஷ்ணு.

“அப்போ எனக்கு கல்யாணம் இல்ல, கமண்டலம் தானா?” அண்ணனைச் சீண்டியவன், ரஞ்சனியிடம், “நேத்து சொன்னேனே நம்பினியா?” என்று சிரிக்க,

“இப்போ நம்பறேன்” அவரும் சிரிக்க,

ரிஷி “என்னடா சொன்ன? நீ என்ன நம்புறே?” என்று இருவரையும் முறைக்க,

“அதெல்லாம் எங்களுக்குள்ள ரகசியம்” விஷ்ணு நக்கலாக உதட்டைக் குவிக்க,

“எப்படியோ போங்க” என்றவன், காலை உணவை அமைதியாகவே உண்டான்.

சாப்பிட்டு தன் அறைக்குச் சென்றவன் கையில் சிறிய பரிசோடு வந்தான்.

விஷ்ணுவிடம் “ஹேப்பி பர்த்டே டா! இந்தா என் கிஃப்ட்” என்று அவன் கையில் பரிசைக் கொடுக்க,

புன்னகைத்த விஷ்ணு, “தேங்க்ஸ் அண்ணா” என்று சொல்ல, ஒரு நொடி இளகிய ரிஷி அவனை அணைத்துக்கொண்டான். 

“எப்போவும் இப்படியே சந்தோஷமாவேயிருடா” என்று வாழ்த்த,

“நீங்க இருக்கவரை எனக்கு என்னடா” என்றவன், ரஞ்சனியைப் பார்க்க, அவர் விஷ்ணுவைக் கண்ணால் அழைத்தார்.

ரஞ்சனியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியவனை வாழ்த்தியவர், அங்கே பூஜை அலமாரியில் வைத்திருந்த பெட்டியொன்றை எடுத்து அவன் கையில் கொடுக்க,

“என்ன இது ரெண்டு பேருமே குட்டி குட்டியா கொடுத்துருக்கீங்க” கேட்டபடியே, சோஃபாவில் அமர்ந்து,

முதலில் ரிஷியின் பரிசைத் திறந்தவன், ஆச்சரியத்தில் விழிகள் விரிந்தான்.

“என்னடா” என்று அவன் அதிர்ந்து ரிஷியைப் பார்க்க, “பிடிச்சிருக்கா” அவன் புன்னகைக்க, “எதுக்குடா இப்படி பண்ணற?” என்றவன் வேகமாக எழுந்து ரிஷியை அணைத்துக்கொண்டான்.

“ஹே உனக்கு பிடிச்சிருக்கா இல்லையா அவ்ளோதான் எனக்கு வேணும்” ரிஷி விஷ்ணுவின் தோளைப் பற்றி, கொஞ்சம் விலக்கி ஆர்வமாக அவன் முகத்தைப் பார்க்க,

சந்தோஷமாகச் சிரித்தவன், “பிடிச்சுருக்காவா? ரொம்ப பிடிச்சுருக்கு” என்று சிரிக்க,

“டேய் பாசமலர் ஓட்டாதீங்க. அப்படி என்னடா குடுத்த” ரஞ்சனி எட்டிப்பார்த்தார்.

“டொட்டொடொய்ங்” என்றபடி, கைக்கடிகாரமொன்றை எடுத்துக் காட்ட,

“நல்லா தான் இருக்கு, ஆனா என்ன அப்படி அதுல ஸ்பெஷல்?” ரஞ்சனி வம்பிழுக்க,

“இது சாதாரண வாச் இல்ல, ஃபிட்னெஸ் வாச்” பெருமையாகச் சொன்னவன், ரிஷியிடம், “ஆமா இது இன்னும் இந்தியால விற்பனைக்கு வரவே இல்லையே எப்படி வாங்கின”

“ஆன்லைன் ஷாப்பிங் இருக்கேடா” என்றவன், “வா போட்டுவிடறேன்” என்று விஷ்ணுவின் கைகளில் கடிகாரத்தைக் கட்டிவிட்டான்.

“அப்படி என்ன இருக்குன்னு இவ்ளோ பில்டப் பண்ணுறீங்க அண்ணனும் தம்பியும்? இதெல்லாம் இங்க மார்க்கெட்ல கொட்டி கிடக்கு!” ரஞ்சனி விஷ்ணுவின் கையைப் பார்க்க,

ரிஷியோ “இதுல என்னன்னவோ இருக்குமா, அவன் இதய துடிப்பு, ஆக்சிஜன் எவ்ளோ இருக்கு எல்லாமே மொபைல்ல நொடிக்கு நொடி அப்டேட் ஆகும். எல்லாத்துக்கும் மேல சார் ஒரே இடத்துல ரொம்ப நேரம் உட்காந்தா எழுந்து நடடா படவான்னு சொல்லும். உள்ள ஜிபிஎஸ் இருக்கு, உலகத்துல இவன் எங்க இருந்தாலும் மொபைல்ல காட்டும்…” சொல்லிக்கொண்டே போக அவனைத் தடுத்த விஷ்ணு,

“நான் அப்புறமா உனக்கு யூடியூப்ல காட்டறேன், என்னலாம் இருக்குனு. இப்போ கிளம்பனும்” என்று சொல்ல,

“நேரமான பரவால்ல! நான் கொடுத்ததை பார்” ரஞ்சனி நினைவு படுத்த, அதையும் பிரித்தான் விஷ்ணு.

“ஹை நல்லா இருக்கே!” விழிகள் விரிந்தவன், மெல்லிய தங்கக் காப்பை எடுத்து ரிஷியிடம் காட்டி, எதையோ உணர்ந்து “இது… இது தாத்தாவோடதுல” கேள்வியாய் ரஞ்சனியைப் பார்த்தான்.

“ஆமா உனக்குத்தான் கொடுக்கனும்னு சொல்லி இருந்தார், அதான் பாலிஷ் போட்டுக் கொண்டுவந்தேன்”

“ஆனா எனக்கு எப்படி” அவன் ரிஷியைப் பார்க்க,

“நீயும் அவர் பேரன் தான? என்னை பாக்குற?” ரிஷி செல்லமாய் முறைத்தான்.

“அதுக்கில்ல… அவருக்கும் என்னை பிடிக்காதுன்னு நினைச்சேன்” விஷ்ணு முகம் வாடினான்.

“அப்படியெல்லாம் இல்ல, அவர் இருந்தவரை உனக்கு அவ்ளோவா நினைவு தெரியலையே, அவருக்கு என்னைவிட நீ தான் செல்லம்” ரிஷி சிரிக்க, ரஞ்சனியும் ஆமென்பதுபோல் கண்களை மூடித் திறக்க,

“என்னமோ சொல்றீங்க நம்பறேன்” என்ற விஷ்ணு, புன்னகையுடன் வலக் கையை நீட்டி, “அம்மா நீயே கட்டிவிடு” என்று கேட்க,

முதல் முறை அம்மா என்று அழைத்ததில், இன்ப அதிர்ச்சியில் ரஞ்சனி கண்கலங்கி நின்றுவிட, “அம்மான்னு கூப்படலாம்ல?” தயங்கி விஷ்ணு கேட்டதில், அவனை உணர்ச்சி பொங்க அணைத்துக்கொண்டார்.

“செல்லம் இந்த வார்த்தை கேட்க எவ்ளோ நாள் ஏங்கி இருந்தேன் தெரியுமா? படவா இதை சொல்ல இருபத்தி மூனு வருஷமா?” கண்ணீர் வழிய சிரிக்க,

“சாரி மா” என்றவன், “ம்ம் கட்டிவிடு” மீண்டும் கேட்க, ரஞ்சனி அவன் கையில் காப்பை அணிவிக்க, கண்கள் கலங்கிவிட்ட ரிஷி, மொபைலில் அனைத்தையும் விடியோவாகப் பதிவு செய்திருந்தான்.

கண்களைத் துடைத்துக்கொண்ட ரஞ்சனி, “வாடா செல்ஃபி எடுத்துப்போம்” என்று சிரிக்க, மூவரும் புகைப்படங்களை எடுத்துத் தள்ளினர்.

“எனக்கு வாட்ஸாப் பண்ணிடு, ப்ரொபைல் பிக்கா வச்சுக்கறேன்” என்றவர், சமையலறைக்குச் செல்ல,

“ரொம்ப தான் மாடர்னாகிட்ட மா” சிரித்த ரிஷி, அனைத்தையும் ரஞ்சனிக்கும் விஷ்ணுவிற்கும் அனுப்பிவைத்தான்.

“சாயங்காலம் கோவிலுக்கு போகனும், சீக்கிரமா வாங்க” ரஞ்சனி நினைவு படுத்த, சரியென்றுவிட்டு இருவரும் கிளம்பினர்.

காரில் ஏறிய விஷ்ணு, “என்னடா யோசிச்சுகிட்டு இருக்க?” ஸ்டிரிங் வீலை வெறித்திருந்த ரிஷியை கேள்வியாய் பார்க்க,

“வர்ஷாவை அவாய்ட் பண்ணினா நல்லதுன்னு தோனுது” அவன் குரல் உடைய, கண்கள் விரிந்த விஷ்ணுவோ, “என்னடா! இப்போ என்ன ஆச்சு?” புருவம் சுருக்கினான்.

அவனிடம் நேற்றைய டெலிபோன் உரையாடலைச் சொன்ன ரிஷி, “உதவி பண்ணறேன்னு அவ மனசை கலைச்சு விட்டேன்னு பயமா இருக்குடா. தப்பு பண்ணிட்டேன்” கவலை தோய்ந்த முகத்துடன் சொல்ல,

“டேய் இதுல உன் தப்பென்ன? நீ உதவி தான் பண்ண. இத்தனைக்கும் அவளுக்கு பிடிச்சுருக்கறது ஃபோன்ல பேசுற உன்னை இல்லையே, நேருல பார்க்குற உன்னை தானே?”

“எல்லாம் நான் தானே?”

“அது அவளுக்கு தெரியாதே!”

“அதான் இப்போ அவளை பிக்கப் பண்ணின உடனே நான் யாருன்னு சொல்லிட போறேன்” தீர்மானமாகச் சொன்னான். 

“அவசரப்படாத, நேத்தே ஏன் சொல்லலைனு கேட்க மாட்டாளா? நீ வேற ஆளுன்னு சாதிருச்சுக்க, கொஞ்சம் பொறுத்து பாரேன்”

“இல்லடா. ஏமாத்தக் கூடாது” என்றவன் காரை கிளப்ப,

“என்னமோ பண்ணிக்கோ” என்ற விஷ்ணு, வர்ஷாவை அழைத்து, ஃபிளாட் வாயிலில் வந்து நிற்கும் படி சொன்னான்.

வர்ஷாவை ஏற்றிக்கொண்டவர்கள் அலுவலகம் நோக்கிப் பயணிக்க, முடிந்தவரை ரிஷியைப் பார்க்கக் கூடாதென்று நினைத்தவள், தன்னையும் மீறி அவ்வப்போது அவனைப் பார்க்கத்தான் செய்தாள்.

ரிஷி தன் மனதில் பல விதமான உரையாடல்களை ஒத்திகை பார்த்துக்கொண்டபடி, வெளியே அமைதியாகவே காரை ஒட்டிக்கொண்டிருந்தான்.

இருவரின் மௌனமும் விஷ்ணுவைக் கடுப்பேற்ற, அவன் “வர்ஷா இன்னிக்கி என் ட்ரீட், புதுசா எங்கயானா சாப்பிட போகலாமா” அவளைத் திரும்பிப் பார்த்தான்.

“என்ன விசேஷம்” அவள் பார்க்க,

“விஷ்ணுக்கு பிறந்தநாள்” என்ற ரிஷி, தான் ஏன் பதில் தந்தோமென்று பற்களைக் கடித்துக்கொண்டான்.

“ஹேப்பி பர்த்டே விஷ்ணு” என்றவள், “நேத்தே சொல்லியிருக்கலாம்ல?” விஷ்ணுவைச் செல்லமாகக் கடிந்து கொள்ள,

“அதுனால என்ன பரவால்ல” என்றவன், “லஞ்சுக்கு போகலாமா இல்லை டின்னர்?” என்று கேட்க,

“லன்ச் போலாம், ஈவினிங் டாக்டர் கிட்ட போகனும்”

“என்னாச்சு உடம்புக்கு?” ரிஷி மீண்டும் தான் உணரும் முன்னே கேட்டிருந்தான்.

‘போச்சு நேராவே பேசிட்டானே! ஐயோ வாய திறந்தா கண்டிப்பா வார்த்தை வராது, என்ன சொல்ல’ வர்ஷா தயங்க,

“வர்ஷா! என்னாச்சு உடம்புக்குன்னு கேட்டேன்” உரிமையாகவே அதட்டினான்.

“எ…இ…தா…ப…” திணறியவள், ‘அடபோடா’ வெறுத்தே விட்டாள்.

“ச நீ த பா தானே வரும்?” வர்ஷாவை பார்த்துச் சிரித்த விஷ்ணு, அவள் என்னவென்று சொல்லும் முன்னே, “இரு, இங்க ஒருத்தன் நேத்து சீன போட்டான்ல, இப்போ என்னத்த புரிஞ்சுக்கிட்டானு கேட்போம்” என்று விஷமமாய் ரிஷியைப் பார்க்க,

“என்னையா?” ரிஷி விஷ்ணுவை ஒருநொடி பார்க்க,

“எஸ் நீயே தான்”

அவன் நக்கலை உணர்ந்தவன், “எ…இ… எனக்கு இல்ல… தா ப தான் புரியலை” அவளை ரியர் வியூ கண்ணாடியில் பார்க்க, அவளோ சங்கடமாக நெற்றியைப் பிடித்திருந்தாள்.

“வர்ஷாக்கு இல்லைனா… வீட்டுல யார்… எஸ்!” என்றவன், “தாத்தாக்கு…. ப…. பல்வலி… புடிச்சுட்டேன்! அவளுக்கு இல்ல தாத்தாக்கு பல் டாக்டரை பார்க்க போறா” சரியா ஒற்றை புருவம் உயர்த்தி அவளைப் பார்க்க, வியப்புடன் அவனைப் பார்த்தவள், வேகமாக ஆமென்று தலையை ஆட்ட,

‘உன்கிட்ட பேச நான் என்னல்லாம் செய்ய வேண்டி இருக்கு’ சிரித்துக்கொண்டவன், விஷ்ணுவைப் பார்க்க, அவனோ வாயைப் பொத்தி சிரித்துக்கொண்டிருந்தான்.

“என்னடா” அவனை முறைத்தவன், “வந்துட்டோம்” என்று காரை நிறுத்தினான்.

“ஒண்ணுமில்ல” என்று சிரித்துக்கொண்டவன், “ஃபோன் பண்றேன்டா” என்று இறங்க, வர்ஷா நன்றி என்பதைப் போல் ரிஷியைப் பார்த்துப் புன்னகை செய்ய, அவனும் புன்னகையுடன் தலையை அசைத்துவிட்டுப் புறப்பட்டான்.

வர்ஷாவுடன் நடந்து உள்ளே சென்ற விஷ்ணு, “கேக்கறேன்னு தப்பா நினைக்காத ஏன் அவன்கிட்ட பேச இப்படி திணறுற?”

“தெரியல விஷ்ணு” என்றவள், “நானும் பேசத்தான் நினைக்கிறேன், ஏனோ வார்த்தையே வரலை”

அவள் முகத்தில் தெரிந்த உணர்வைப் புரிந்துகொண்டவன் “மெதுவா ட்ரை பண்ணு” என்று புன்னகைக்க, லிஃப்ட் வந்தது.

உள்ளே நுழைந்தவள், “விஷ்ணு ஒன்னு கேட்டா சொல்லுவீங்களா?”

“ம்ம்”

“உங்க அண்ணா பேர் என்ன?” அவள் தயக்கமாகக் கேட்க,

“இன்னிக்கி நீயே அவனை கேப்பியாம்” என்றவன், குறும்பாக, “நேரா கேட்டாலும் சரி, இல்ல உன்னோட சரிகம கஙசஞ பாஷையில் கேட்டாலும் சரி, ஆனா நீதான் கேக்குற” சொல்லித் தன் தளத்தில் இறங்கிக்கொள்ள, வர்ஷாவின் பாடு அவஸ்தையானது.

“நான் எப்போ கேட்டு அவன் எப்போ சொல்லி” முணுமுணுத்துக் கொண்டாள்.

மதியம் விஷ்ணுவிற்காக பரிசொன்றை வாங்கிக்கொண்டு ஆட்டோவில் திரும்பிக்கொண்டிருந்தவள் ரிஷிக்கு,

“இன்னிக்கி அவனோட தம்பிக்கு பிறந்தநாள். லஞ்சுக்கு இன்வைட் பண்ணியிருக்காங்க. ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. அவன் கூட சாப்பிட போறேன். ஜாலி” என்று வாட்சப்ப் செய்தாள்.

அவள் ஆட்டோவிலிருந்து இறங்கும்பொழுது ரிஷியின் கார் அவள் அலுவலக வாசலில் நின்றிருந்தது.

ஆட்டோவிலிருந்து இறங்கியவள், காரை நோக்கி நடக்க, அவளைக் கவனித்துவிட்ட ரிஷியும் காரை விட்டு இறங்கினான்.

‘என்கூட சாப்பிட வர்றதுல மேடம்க்கு அவ்ளோ சந்தோஷமா? எவ்ளோ சிரிப்பு பார் முகத்துல’ சிரித்துக்கொண்டவன், அவள் கையிலிருந்த பையைப் பார்க்க, அவள் பேச முயற்சிக்கும் முன்பே, அவனே கேட்டான்.

“விஷ்ணுக்கா? கிஃப்ட் பேப்பர் சுத்தியிருக்கு” என்று அதைச் சுட்டிக்காட்டினான்.

ஆமென்று தலையசைத்தவள், “விஷ்…?” என்று அவனைப் பார்க்க,

“உன்ன கூப்பிடத்தான் போயிருக்கான், வர சொல்றேன், நீ கார்ல உட்கார்” என்று கார் கதவைத் திறந்து விட்டான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!