Banner-268a74bf

13

 

***

எவ்வளவு முயன்றும் வர்ஷாவிற்கு அன்று அதற்குமேல் பொறுமை இல்லையென்றாகிவிட  விஷ்ணுவை அழைத்தாள்.  

“நீங்க ரெண்டுபேரும் இப்போல்லாம் சாப்பிடவே வரதில்லையே, ஏன்?”

“அது அண்ணாக்கு ஆஃபீஸ்ல ஒரு ப்ராஜெக்ட் டெலிவெரி, இந்த வாரம் பூராவும் அவன் ரொம்ப பிசி. அதான் நானும் அவனுக்கு பார்ஸல் வாங்கிட்டு அவன் ஆஃபீஸ் போயிடுறேன்”

“ஓஹோ!”

“ஆமா ஒரு ஹலோ கூட சொல்லாம நேரா ஏண்டா நீங்க வரலைன்னா என்ன அர்த்தம்? ஏன் எங்களை ரொம்ப தேடினியோ?” விஷ்ணுவின் குரலில் தெரிந்த கிண்டலில், கடுப்பானவள், ‘தேடினியாவாம்! அவ அவ இங்க பைத்தியம் பிடிச்சு சுத்தாத குறையா இருக்கா!’ என்று யோசித்திருக்க,

“வர்ஷா லைன்ல இருக்கியா?”

“ம்ம்”

“கேட்டதுக்கு பதிலே இல்லையே? ரொம்ப தேடினியா?”

“தெரிஞ்சுக்கிட்டே கேட்குறவங்க கிட்ட என்னன்னு சொல்லுறதுன்னு சும்மா இருந்தேன்” அவள் புகார் வாசிக்க, உறக்கவே சிரித்துவிட்ட விஷ்ணு, “சரி சரி சாரி. ஆமா நீ எப்படி இருக்கே?” என்று கேட்க, 

“இருக்கேன்” 

“ஒர்க் எப்படி போகுது?”

“எதோ போகுது” 

“உடம்புக்கு ஒன்னும் இல்லையே? குரல் என்னமோ போல இருக்கு”

“ஒண்ணுமில்ல. .ஐயோ!” வர்ஷாவின் அலறல் விஷ்ணுவை ஒரு நொடி அச்சுறுத்தியது. “வர்ஷா! வர்ஷா!” அவன் கத்த, எதிர்புறம் பதில் வராமல் அழைப்பு துண்டிக்கப்பட பதறியடித்து மீண்டும் முயற்சிதான். 

மொபைல் ஆஃப் என்று வர, வர்ஷாவின் அலுவலகத்திற்கு விரைந்தான் விஷ்ணு. 

ரிசெப்ஷனில் இருந்த செக்கியூரிட்டி ஆபிசரிடம், “சார் வர்ஷா மேடமை பாக்கணும்” என்று அவசரப் படுத்த, யாருக்கோ ஃபோன் செய்தவர், “அவங்க இன்னிக்கி லீவ் சார்” என்றார். 

“எங்க இருக்கே வர்ஷா!” குழம்பியவன் வேறு வழியின்றி ரிஷியை அழைத்தான். 

“அய்யோன்னு கத்தினா அப்பறம் கால் கட்டாகி போச்சுடா! எனக்கு பயமா இருக்கு,அவ குரலே சரியில்ல” அவன் பதற, 

நொடி கூடத் தாமதிக்காதவன் “இரு வரேன்! ஒன்னும் இருக்காது” விஷ்ணுவிடம் விரைந்தான். 

ரிஷி. விஷ்ணுவின் மொபைலில் கால் ஹிஸ்டரியை பார்த்தபடி, “நீ பேசும்போது எங்க இருந்தா?” கேட்க,

“தெரியலை ஆனா ரொம்ப பெரிசா சவுண்ட் கேட்டுது” விஷ்ணு சொல்ல, ரிஷியின் முகம் வெளிறியது. 

விஷ்ணுவின் மொபைல் ஒலிக்க,  வர்ஷாவின் எண் தான், அழைப்பை ஏற்றான் ரிஷி. 

“சார் இங்க ஒரு பொண்ணு… இப்போ தான் ஃபோன் ஆன் ஆச்சு… அந்த பொண்ணை… இப்போ தான் ஆம்புலன்ஸ்ல ஏத்திக்கிட்டு இருக்காங்க, இருங்க நர்ஸ் கிட்ட கொடுக்கறேன்” பதற்றமாக யாரோ சொல்ல, ரிஷியின் உடல் அதிர்ச்சியில் சில்லிட்டது! 

நர்ஸிடம் பேசிய ரிஷி, அவர் சொன்ன மருத்துவமனைக்கு விஷ்ணுவுடன் விரைந்தான். 

“என்னடா? என்ன ஆச்சாம்! ரிஷி ஏதாவது சொல்லு ப்ளீஸ்” விஷ்ணு ரிஷியின் தோளை  உலுக்க, காரை வேகமாகச் செலுத்திக்கொண்டிருந்தவனோ, 

“வர்ஷா…வர்ஷா…”அவன் குரல் நடுங்கப் பேச முடியாமல் துடித்த அவன் உதடுகள், கலங்கிய அவன் கண்கள், ஏதோ விபரீதம் நிகழ்ந்ததென்று மட்டும் விஷ்ணுவிற்கு உணர்த்தியது. 

“எதுவும் இருக்காது. டென்ஷன் ஆகாத” அவனைத் தேற்ற நினைத்தவன் மனதிலும் பதட்டம் இருக்கத்தான் செய்தது.

மருத்துவமனையில் நுழைந்தவர்கள் விவரத்தைக் கேட்டுக்கொண்டு வர்ஷாவை பார்க்க ஓட, அங்கே ஒரு தனி அறையில், கையில் ட்ரிப்ஸ் ஏறப் படுத்திருந்தாள் வர்ஷா! 

வேகமாக அவளைத் தலை முதல் கால்வரை ஆராய்ந்த ரிஷி குழப்பமாக விஷ்ணுவைப் பார்க்க, அவனும் அதே குழப்பத்துடன் தான் இருந்தான். 

“என்னடா எல்லாம் உள் காயமா இருக்குமா?” விஷ்ணு கேட்க, ரிஷியோ நடுங்கும் விரல்களால் மெல்ல வர்ஷாவின் கையைத் தொட்டு அவள் முகத்தை உற்றுப் பார்க்க. 

“சார்! யார் நீங்க? நீங்க தான் ஃபோன்ல பேசினதா?” நர்ஸின் குரலில், “எஸ் நாங்க தான் சிஸ்டர்” என்ற விஷ்ணு அவரிடம் பேச வெளியே சென்றான். 

ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருந்த வர்ஷாவின் கையை மென்மையாகத் தடவிக் கொடுத்தவன், 

“நான் ரிஷி வந்துருக்கேன், என்னை ஒரு வாட்டி பாரேன்! ப்ளீஸ்” அவன் அவள் முகத்தைத் தொட்டுக் கண்கலங்கச் சொல்ல. அவளிடம் எந்த அசைவுமில்லை. 

“என் தப்புதான், நான் உன்னை அவாய்ட் பண்ண நெனச்சேன், தப்புதான்! இனிமே பண்ணமாட்டேன். ப்ளீஸ் கண்ணை திறந்து பாரேன். ப்ளீஸ். நீ சொன்னது சரிதான் நான் ரிஷி தான், வேணும்னா எழுந்து நாலு அடி அடிச்சுக்கோ. ஏன்டா உண்மையை மறைச்சேன்னு அறைஞ்சா கூட பரவால்ல. ப்ளீஸ் வர்ஷா. ப்ளீஸ்” என்றவன் குரல் உடைந்தது. உணர்ச்சியைக் கட்டுப்படுத்த திணறியவன் வர்ஷாவின் கையில் முகத்தைப் புதைத்துக்கொண்டான். 

அறைக்குள் வந்த விஷ்ணு, ரிஷியின் தோளைத் தொட, நிமிர்ந்தவன் முகத்திலிருந்த கண்ணீரைக் கண்டவன், “டேய்! என்னடா இது” என்று அவன் கண்களைத் துடைத்தான்.

அவன் கையைப் பற்றிக்கொண்ட ரிஷி “டேய் என்னடா ஆச்சு இவளுக்கு? ஏண்டா பேசவே மாட்டேங்குறா? அடியேதும் பட்டமாதிரி இல்ல ஆனா ஏண்டா இப்படி படுக்க வச்சுருக்காங்க?” என்று பதற, 

அவன் தோளில் தட்டிக்கொடுத்த விஷ்ணு, “கூல் டவுன்! அவளுக்கு ஒண்ணுமில்லை, மொதல்ல அங்க வந்து உட்கார்” என்று அழைக்க,  

“டேய்!” கத்திவிட்டான் ரிஷி. “இப்படி பேச்சு மூச்சில்லாம கெடக்கா ஒண்ணுமில்லைனு சொல்ற? என்னடா ஆச்சு இவளுக்கு” என்று ஆதங்கமாகக் கடுகடுக்க. 

விஷ்ணு “ஒன்னும் இல்லைனு சொல்றேன்ல! வா” ரிஷியை அங்கிருந்த சோஃபாவிற்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றான். 

“என் கூட பேசும்போது, ஸ்கூட்டியை ரோடுல நிறுத்திட்டு நின்னுட்டு இருந்துருக்கா, அங்க ஒரு கார்காரன் பிரேக் ஒழுங்கா பிடிக்காம இடிக்கிற மாதிரி வந்து இல்ல கிட்டத்தட்ட இடிச்சுட்டான்னே வச்சுக்கோ, இவ அதிர்ச்சில பக்கத்துல தடுக்கி விழுந்துருக்கா. அடியெதுவும் படலை, ஆனா மயக்கமாயிருக்கா.  

மேடம் ஒழுங்கா சாப்பிடலைப் போல, வீக்கா இருக்காளாம், பயத்துல மயங்கினவ உடம்புல தெம்பில்லாம மயக்கமாவே இருக்கா. ரெண்டு பாட்டில் க்ளுகோஸ் ஏத்தினா எழுந்து உட்காந்துருவான்னு சொல்றாங்க”,

வேகமாகவே சொல்லி முடித்த விஷ்ணு, ரிஷியின் முகத்தைக் கவனித்து, ‘நீ நான் சொல்றதை நம்பலைல?” என்று கேட்க, அவனிடமிருந்து பார்வையை வர்ஷாவிடம் பக்கம் திருப்பினான் ரிஷி. 

“இல்ல விஷ்ணு! வேறெதோ ஆகியிருக்கு. சும்மா மயக்கம் போட்டா ஆம்புலன்ஸ் கூப்பிடுவாங்களா என்ன?” அவன் பார்வை வர்ஷாவின் மீதே இருக்க, 

“டேய் அங்க இருந்தவங்க எவ்ளோ முயற்சி பண்ணியும் வர்ஷா எழுந்துக்கலயாம், அதான் பயந்து ஆம்புலன்ஸ கூப்பிட்டுருக்காங்க. இங்க வந்ததும் செக் பண்ணியிருக்காங்க எல்லா வைடல்சும் நார்மல் தானாம்”

“இல்ல நீ பொய் சொல்ற” என்று கோவமாக எழுந்தவன், “நான் டாக்டர் பார்த்துட்டு வரேன். இல்ல வேற ஹாஸ்பிடல் கூட்டிகிட்டு போகலாம்” என்று கோவமாக அறையை விட்டு வெளியேறினான்.  

“இவனை வச்சுக்கிட்டு” அலுத்துகொண்ட விஷ்ணு, வர்ஷாவின் அருகில் சென்று நின்றான், 

“இதெல்லாம் ஓவரா இல்ல? இடிக்க வந்த காரை பார்த்து பயத்துலயே இப்படி அட்மிட் ஆகுற அளவுக்கு ஸ்ட்ராங்கா நீ?” சிரித்தவனுக்கும் உள்ளுக்குள் வலிதான், 

“உன்னைத்தான் என் அண்ணின்னு நினைச்சுட்டு இருக்கேன், நீ என்னடான்னா இப்படி இவ்ளோ வீக்கா இருக்க? நாளைக்கு நான் யாரையாவது காதலிச்சு, வம்பு வந்தா நீயும் ரிஷியும் தானே எனக்கு பக்க பலமா இருந்து என் ஆளை வீடு பூந்து தூக்க உதவனும். சீக்கிரமா எழுத்துருங்க மிஸஸ் ரிஷிநந்தன். நான் உங்க கிட்ட இன்னும் நிறைய எதிர்பாக்க…” கதவு திறக்கும் சத்தத்தில் பேச்சை நிறுத்தியவன் திரும்ப, 

அறைக்குள் நுழைந்த ரிஷியின் முகமே நடந்ததை உணர்த்திவிட, சிரித்துக்கொண்ட விஷ்ணு, “என்ன சார், டாக்டர் என்ன சொன்னார்?” 

“நீ சொன்னதைத்தான்” என்றவன் வர்ஷாவின் பக்கம் அமர்ந்துகொண்டான். அவள் தலையை மெல்ல வருடியவன், “இவளை வச்சுக்கிட்டு என்ன பண்ணுறதுன்னே புரியலை டா விஷ்ணு” என்றான் ஆதங்கமாக. 

“கல்யாணம் பண்ணி, பாதம் பிஸ்தான்னு குடுத்து உடம்பை தேத்து! பாரு ஆள் பாக்கத்தான் தான் புசுபுசுன்னு இருக்கா, ஆனா ஹெல்த் சுத்தமா வீக்” இடம் வலமாகத் தலையசைத்துக் கொண்ட விஷ்ணு, 

வர்ஷாவின் மொபைலை எடுத்து, “இதுலயும் வீக்! பார் மொபைலுக்கு லாக் இல்ல” என்றான். 

“என்னடா பண்றே?”

“அவ தாத்தாக்கு ஃபோன் பண்ணறேன்” என்றவன் வர்ஷாவின் மொபைலில் வீட்டு எண்ணைத் தேட, வேகமாக அவன் கையிலிருந்து மொபைலை பிடுங்கிய ரிஷி, 

“யாருக்கும் ஃபோன் பண்ணாத” என்றான்.

“டேய் வீட்டுக்கு சொல்லணும்ல” 

“வேண்டாம்! வர்ஷா வீட்ல வயசானவங்க தான் இருக்காங்க. நாம மதுகிட்ட மொதல்ல சொல்லலாம்” என்றவன் நேரத்தைப் பார்த்தான். 

“இப்போ காலேஜ்ல இருப்பா, லன்ச் டைம்ல கால் பண்ணலாம். அதான் பயப்படும்படியா ஒண்ணுமில்லைனு சொல்றாங்கல” என்றவன்,

வர்ஷாவின் தங்கை மதுவிற்கு மதியம் ஃபோன் செய்து விஷயத்தைச் சொல்ல, அவளோ அவன் யூகித்தது போலவே வந்ததும் அழத் துவங்கிவிட, அவளை சமாதானம் செய்வதற்குள் ஆண்கள் இருவருக்கும் விழி பிதுங்கி விட்டது.

வர்ஷா கண்விழிக்கக் கிட்டத்தட்ட மாலையாகிவிட்டது. 

“என்னடி இதான் சாக்குன்னு நல்லா தூங்கிட்டியா?” கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்ட மது வர்ஷாவை கிண்டல் செய்ய, மெல்லப் புன்னகைத்தவள் தான் இருந்த இடத்தை ஓரளவிற்கு உணர்ந்து, “ஹாஸ்பிடல எதுக்குடி இருக்கேன்?” என்று கேட்க, 

“நீ இப்போ நியாயமா நான் யாருன்னு தான கேக்கணும்” என்று புன்னகையுடன் நெருங்கி நின்று சிரித்தான் ரிஷி.

அவனைப் பார்த்ததும் உணர்ச்சி பொங்க, அவளையும் மீறிக் கண்கள் கலங்கியவள், கண்களைத் துடைத்துக்கொள்ள, மதுவின் முன்னே அவளைத் தேற்ற முடியாமல் தவித்த ரிஷி அவளைத் தேற்றப் பேச்சை மாற்றினான்.  

“இப்படி மயக்கத்துலேந்து எழுந்தா நான் யாரு? நீங்க யாரு? எனக்கு எதுவுமே ஞாபகம் இல்லையே! இங்க எப்படி வந்தேன்னு தான் கேட்கணும்? இப்படி தெளிவா ஏன் ஹாஸ்பிடல்ல இருக்கேனு கேக்க கூடாது” என்றவன் வலியை மறைத்துக் கஷ்டப்பட்டு போலியாகச் சிரிக்க, 

அசடு வழிந்து பார்வையைத் தாழ்த்தி சிரித்தவள், மெதுவாக மதுவைப் பார்த்தாள். 

“ஆத்தாடி! மொதலேந்து சொல்ல இப்போ எனக்கு எனெர்ஜி இல்ல” என்று இருக்கையைவிட்டு எழுந்த மது, 

“நந்தா சார் எல்லாத்தையும் நீங்களே சொல்லிடுங்க. மூனுபேருக்கும் சாப்பிட ஏதாவது வாங்கிகிட்டு வரேன். நீங்களும் ஒண்ணுமே சாப்பிடலைன்னு விஷ்ணு சொன்னார். நானும் லன்ச் சாப்பிடல அப்படியே ஓடி வந்துட்டேன்” என்று வர்ஷாவை விஷமமாய் பார்த்துச் சிரித்துவிட்டுச் சென்றுவிட்டாள். 

அறையில் ரிஷியுடன் தனிமையில் இருப்பதை உணர்ந்தவள் உடலில் மெல்லிய நடுக்கம் பரவ எதுவும் பேசாது அவனைத் தயக்கத்துடன் பார்த்தாள். 

அவள் அருகில் நாற்காலியை இழுத்துப்போட்டு அமர்ந்தவன், நடந்ததை மேலோட்டமாகச் சொல்லி,

“விஷ்ணுகிட்ட பேசினதுனால, லாஸ்ட் டைல்ட் நம்பர் பார்த்து ஃபோன் பண்ணியிருக்காங்க” என்றவன், அவள் கையை மென்மையாகப் பற்றி அவள் முகத்தை ஆதங்கத்துடன் பார்த்து, “கவனமா இருக்க கூடாதாமா? அந்த கார் இடிச்சுருந்தா என்ன ஆயிருக்கும்?” 

அவன் முதல் தொடுகையில் உறைந்துவிட்டவளோ ஐம்புலனும் வேலை நிறுத்ததம் செய்வதைப் போல் சிலையாகி விட, மௌனமாகவே இருந்தாள்.

“ப்ளீஸ் வர்ஷா இனிமே இப்படி பண்ணாத. ரோடுல ஃபோன் பேசணும்னா வண்டியை எவ்ளோ முடியுமோ அவ்ளோ ஓரமா நிறுத்திட்டு பேசு” என்று ரிஷி கெஞ்சுதலாய் கேட்டு, அவன் பிடியின் இறுக்கத்தைக் கூட்ட, சுயநினைவுக்கு வந்தவள், “ம்ம்” என்று வேகமாகத் தலையசைத்தாள். 

சிலநொடி அமைதியாகக் கழிய, “விஷ்…” வர்ஷா திக்க,  

“மது வரும் வரைக்கும் இங்கதான் இருந்தான். நான் தான் கிளம்பச் சொன்னேன். நீ முழிச்சதும் ஃபோன் பண்ணறேன்னு சொன்னேன்” என்றவன், அவளை மௌனமாகப் பார்த்திருக்க, சொல்ல ஆயிரம் இருந்தும் வர்ஷாவிற்கும் வார்த்தை வருவேனானென்று சதிசெய்தது.

“வர்ஷா…”

“ம்ம்”

ஒரு முறை கண்களை இறுக்கமாக மூடியவன், “உன்கிட்ட ஒன்னு சொல்லணும்”

“ம்ம் சொ…”  அவனைத் தயக்கத்துடன் பார்த்தவள் அவன் முகத்தில் தெரிந்த கவலையில், பார்வையால் என்னவென்று கேட்க,

“உன்கிட்ட ஒன்னு சொல்லணும்னு இருந்தேன். நான் முன்னாடியே இதை சொல்லியிருக்கணும். நான் தான் ரி…” 

“சார்!” என்ற குரலில் அதிர்ந்து திரும்பியவன் முன்பு வந்து நின்ற நர்ஸ், “உங்களை டாக்டர் கூப்பிடுறார்” என்று அழைக்க, “வரேன் சிஸ்டர்” என்றவன், 

வர்ஷாவிடம் “நீ ரெஸ்ட் எடு. நான் டாக்டரை பார்த்துட்டுவரேன்” மென்மையாகப் புன்னகைத்தவன் அறையை விட்டு வெளியேறினான்.

அவன் பற்றியிருந்த கையில் அவன் வெப்பம் இன்னும் இருக்க, கண்களை மூடிகொண்டவள், அவன் என்ன சொல்ல வந்திருப்பான் என்ற யோசனையில் ஆழ்ந்தாள்.

சிறிது நேரத்தில் மது வந்துவிட அவளுடன் பேசித் துவங்கியவளின் மனமோ ரிஷியின் மீதே இருந்தது. 

“நல்லவேளை இவங்க வந்தாங்க இல்லைனா வீட்டுக்கு ஃபோன் பண்ணியிருப்பாங்க பெரிய சீனா ஆகியிருக்கும்” என்ற மது, 

“இந்தா இந்த சாத்துக்குடி ஜூஸ குடி! இனிமே பசிக்குதோ இல்லையோ ஒழுங்கா சாப்பிடு, இப்படி பயத்துல மயக்கம் போட்டு மானத்தை வாங்காதே” வர்ஷாவை சீண்ட, சிரித்துவிட்டவள் எதுவும் சொல்லாது கையிலிருந்த ஜூஸ் கிளாஸையே பார்த்திருந்தாள். 

மனம் ஏதேதோ யோசிக்க, டிஸ்சார்ஜ் ஆகி வீடு செல்லும் வரை ரிஷியுடன் வர்ஷா எதுவும் பேசிக்கொள்ளவில்லை, மது இருந்ததால் ரிஷியும் வர்ஷாவிடம் சொல்ல நினைத்த உண்மையைச் சொல்லவில்லை. இரவு விஷ்ணு அழைத்துப் பேச, அவனுக்கு நன்றி சொன்னவள், உறக்கம் வராமல் விட்டதைப் பார்த்திருந்தாள். 

ஃபோன் ஒலிக்க ரிஷி தான் அழைத்திருந்தான், “எப்படி இருக்கீங்க ரிஷி? பேசி ஒரு வாரம் ஆச்சு” என்றாள் இயல்பாக, 

உண்மையைச் சொல்ல நினைத்தவனை, ‘அவ வீக்கா இருக்கா இப்போ போயி நான் தான் ரிஷின்னு சொல்லி டென்ஷன் ஆக்கணுமா? கோவப்பட்டு மறுபடி மயக்கம் போட்டா’ என்ற எண்ணம் தடுக்க, 

“ரிஷி! இருக்கீங்களா?” அவள் அழைத்ததில் சுயநினைவிருக்கு வந்தவன், “நான்…சும்மா  பேசலாம்னு ஃபோன் பண்ணேன், மதியம் ஃபோன் பண்ணேன், ஆஃப்ன்னு வந்தது” என்றான். 

அன்று நடந்ததைச் சொன்னவள், “இப்படி அடிபட்டுக்கிட்டா தான் அவனைப் பார்க்க முடியும்னா தினமும் எங்கயான முட்டிக்கலாம் போல இருக்கு” என்றதில் ரிஷிக்குக் கோவம் தலைக்கேறியது. 

“இடியட்! உனக்கே நீ சொல்றதை கேக்க நல்லா இருக்கா?”

“என்ன ரிஷி?”

“என்னவா? அவனை பார்க்க நீ உன்னை காய படுத்திக்கணுமா?” என்று கத்தியவன், கோவம் அடங்காத குரலில், 

“உனக்குன்னு வாழ்க்கை இல்லையா, கடமை இல்லையா? முன்னாடி ஆதேஷ்னால மனசு உடைஞ்சு செத்துடலாம்னு லூசு மாறி யோசிச்ச. இப்போ நந்தாவா? உன் சந்தோஷத்தை ஏன் யார் கையிலேயோ தர? 

நீ அவங்களுக்கு முக்கியம்னா, அவங்க வாழ்க்கைல நீ வேணும்னா அவங்களா வந்து பேசுவாங்க வர்ஷா! உன்னை மதிக்காதவங்களுக்காக உன் வாழ்க்கையை பணயம் வைக்காத! அவ்ளோ வொர்த் யாருமே இல்ல மா” என்றவன் தணிந்த குரலில், “ப்ளீஸ் புரிஞ்சுக்கோ!” கெஞ்சுதலாய் முடிக்க, 

வர்ஷாவோ மௌனமாகவே இருந்தாள்.

“கேக்கறியா இல்லையா?” அவன் குரல் உயர்த்த, 

“ம்ம் கேக்கறேன்” 

“காதலோ கண்றாவியோ எதுவும் உன் உயிரைவிட முக்கியமில்ல! உன்னை நம்பி உன் குடும்பம் இருக்கு. இனி இப்படி அசட்டுத்தனமான இருந்தேன்னா வந்து நாலு அரை விட்ருவேன் சொல்லிட்டேன். இனிமே இப்படி பொறுமையா பேசிகிட்டு இருக்க மாட்டேன் புரிஞ்சுதா?” அவன் மிரட்டலில், 

அவள் “ம்ம்” என்று மட்டும் சொல்ல, 

“விருப்பம் இருந்தா மேல படி, இன்னும் ஆபீஸ்ல உழை. இல்லை பிடிச்ச எதுலயாவது உன் மனசை திசை திருப்பு புரியுதா இல்லையா?” என்று கடுமையாகவே சொல்ல. 

“ம்ம்” 

“வெறும் ம்ம் கொட்டினா?”

“சரின்னு அர்த்தம்” என்று எரிந்து விழுந்தாள். “நான் ஒன்னும் நந்தா என்னை லவ் பண்ணனும்னு சொல்லலை, சும்மா அவனை அப்போ அப்போ பாத்தா கூட போதும்னுதான் இருக்…”

“வர்ஷா லூசா நீ? இவ்ளோநேரம் சொல்றேன் மறுபடி அங்கேயே வந்து நிக்குற?”

“என்னதான் பண்ண சொல்றீங்க ரிஷி?” கத்திவிட்டவள், வலி தோய்ந்த குரலில், “எனக்கு அவனை பார்க்கலைனா என்னமோ போல இருக்கு. என்ன மாதிரி உணர்வு எனக்குள்ள ஓடுதுன்னே புரியலை”

சிலநொடி மௌனமானவள், தீர்க்கமான குரலில், “இதெல்லாம் தான் காதல்னா, நான் நந்தாவை லவ் பண்றேன் ரிஷி! ஐ லவ் ஹிம்!” 

அவள் சொன்னதில் உலகமே சுழல்வதை நிறுத்தியதை போல் உறைந்துவிட்டான் ரிஷிநந்தன். 

“எனக்கு நந்தாவை பிடிச்சுருக்கு! அவனை கல்யாணம் பண்ணிக்க ஆசை படறேன்! காதலை சொல்லவோ, பிடிக்கலைன்னு அவன் சொல்லிட்டா அவனை வற்புறுத்தவோ எனக்கு தெம்பில்லை. இஷ்டமும் இல்ல!   

இல்லைனா இந்நேரத்துக்கு ஹாஸ்பிடல்ல நந்தா என் கையை பிடிச்சுக்கிட்டு அவ்ளோ பாசமா பேசின அந்த நொடியே என் மனசுல இருந்த எல்லாத்தையும் கொட்டிருப்பேன் ரிஷி.

பைத்தியக்காரத்தனமா இருந்தாலும் இதான் உண்மை. நான் நந்தாவை காதலிக்கிறேன் அவ்ளோதான். வயசு கோளாறுன்னு நினைச்சுக்கோங்க, கொழுப்புன்னு நினைச்சுக்கோங்க, லூசுன்னு நினைச்சுக்கோங்க! ஐ டோன்ட் கேர்! ஐ லவ் ஹிம்!”

“வர்ஷா இப்படி அவசர பட்டு வார்த்தையை விடாதே. அவன் அழகுமட்டும் போதுமா?” 

“அழகா? அழகை பார்த்தா லவ் பண்றேன்னு சொல்றீங்க? அப்ப அவனுக்கு வயசாகி அழகெல்லாம் போனா என் காதல் போயிடுமா? என்னை அவ்ளோ சீப்பா நினைச்சுடீங்களா?” அவள் குரல் உடைய, 

“அப்படி சொல்லல வர்ஷா, நீ சின்ன பொண்ணு. இன கவர்ச்சியா இருக்கலாம்னு ”

“ப்ளீஸ் ரிஷி! இன்ஃபேக்சுவேஷனுக்கும் காதலுக்கும் வித்தியாசம் தெரியாத டீன் ஏஜ் பொண்ணா நான்? முதல் நொடி தான் அழகு கவர்ந்தது ரிஷி, ஒத்துக்கறேன் ஆனா அதுக்கு அப்புறம் அவனை அவனுக்காக மட்டுமே ரசிக்கிறேன் நேசிக்கிறேன்! 

அப்படி என்ன செஞ்சுட்டான்னு இல்ல என்ன பழகிட்டேன்னு பிடிச்சுருக்குனு சொல்றேன்னு  தாத்தா கேட்டார். எனக்கு இருக்க ஒரே பதில் இதான் ரிஷி. 

நந்தா எனக்காகவே கடவுள் அனுப்பின என் ஏஞ்சல்! அவன் கொடுக்குற பாஸிட்டிவ்  உணர்வை, அவன் பக்கத்துல இருக்குறப்போ வர அமைதியை, அவனை பார்க்குறப்போ, அவன் குரல் கேட்குறப்போ, எனக்குள்ள வர உணர்வை வார்த்தைல சொல்லத் தெரியலை. 

எனக்கு வாழ்க்கை துணைனா அவன் தான். வேற யாரையும் கல்யாணம் செஞ்சுக்க நான் தயாரா இல்ல! அவனுக்கு என் மேல காதல் இல்லை அத என்னால உணர முடியுது. 

நான் அவன்கிட்ட என் காதலை ஏத்துக்க சொல்ல மாட்டேன், ஏன் நேரா என் காதலை சொல்லுவேனான்னு கூட தெரியாது ஆனா எனக்கு ஆயுசுக்கும் அவனை நினைச்சுகிட்டு இருக்க இந்த உணர்வு போதும்!” தீர்க்கமாகச் சொன்னவள் மெளனமாக, முதல்முறை ரிஷிக்கு வார்த்தை வர மறுத்தது.

எவ்வளவு நேரம் அந்த மௌனம் நீடித்தது இருவரும் உணரவில்லை, தானாகவே  அழைப்பைத் துண்டித்தாள் வர்ஷா. 

தன் மீது அவள் கொண்டிருக்கும் காதலை மூன்றாம் மனிதன் போலக் கேட்டு நின்றவனின் மூளை எதையும் யோசிக்க மறுத்தது, எதிரே இருந்த சுவரை வெறித்திருந்த ரிஷி, விஷ்ணு அறைக்குள் வந்ததையோ, பலமுறை அழைத்ததையோ எதையுமே அவன் தோளை விஷ்ணு உலுக்கும் வரை அவன் உணரவில்லை. 

அவனுடன் ஹாலுக்கு சென்றவன் முன் கோவமாக நின்றிருந்தார் ரஞ்சனி. 

“ஏன்டா வர்ஷா ஹாஸ்ப்பிட்டல்ல அட்மிட் ஆகியிருக்கா, என்கிட்டே ஒரு வார்த்தை சொன்னீங்களா? விஷ்ணு இப்போதான் சொல்றான்” என்று கடுகடுக்க, 

“அம்மா அவங்க வீட்லயே இப்போதான் விஷயத்தை சொல்லியிருப்பாங்க, அனாவசியமா யாரையும் பதட்டபடுத்தவேண்டாமுன்னு தான்…”

“கிளம்பு” என்று அவன் பேச்சை மரித்தார் ரஞ்சனி.

“எங்க மா?” ரிஷி அவரைக் குழப்பமாகப் பார்க்க, 

“வர்ஷா வீட்டுக்குத்தான் வா, எனக்கு இப்போ அவளை பாத்தே ஆகணும்” அவர் செருப்பை மாட்டிக்கொண்டார்.

“அம்மா…ப்ளீஸ் மா இன்னுருநாள் நான் கூட்டிகிட்டு போறேன், இப்போ போனா நல்லா இருக்காது” ரிஷி விஷ்ணுவைப் பார்வையால் அழைக்க, அவனும் அதையே சொல்ல, 

“இல்ல, எனக்கு இப்போவே போகணும். நீ அட்ரஸ் குடு நானே போயிட்டு வரேன்” என்றவர் கதவைத் திறக்க, அவர் கையைப் பற்றிய ரிஷி, 

“அம்மா ப்ளீஸ் ஏற்கனவே எனக்கு கொஞ்சம் மூட் சரி இல்ல, இந்த சூழல்ல…ப்ளீஸ். கண்டிப்பா நான் அவளை எப்படியான இந்த வீகென்ட் உனக்கு அறிமுக படுத்துறேன். ப்ளீஸ் மா புரிஞ்சுக்கோ, எங்களையே அவங்களுக்கு தெரியாது, இதுல நாங்க உன்னையும் கூட்டிகிட்டு போயி நின்னா நல்லா இருக்குமா?” 

மகனின் முகத்தைச் சிலநொடி கவனித்தவர், எதுவோ சரியில்லை என்பதை மட்டும் யூகித்தார். “சரி இந்த வாரம் எனக்கு அவளை காட்டணும்” என்று விட்டுத் தன் அறைக்குச் சென்றுவிட, விஷ்ணுவிடம், 

“கொஞ்சம் வெளியே காத்தாட போயிட்டு வரேன்டா” என்று கிளம்பிய ரிஷி, தங்கள் அடுக்குமாடிக்குடியிருப்பின் மொட்டைமாடிக்குச் சென்று அங்குச் சுவரில் மீது சாய்ந்து அமர்ந்துவிட்டான். 

பள்ளியின் பிற்பாதி முதல் கல்லூரி, வேலை செய்த நிறுவனம்வரை சில பெண்கள் அவனிடம் காதலைச் சொன்னபோதும், அவர்களைப் புண்படுத்தாமல் மறுத்துவிட்டு அதைப் பற்றிப் பெரிதும் யோசிக்கக்கூடத் தோன்றாமல் எளிதாகக் கடந்து வந்தனுக்கு, வர்ஷாவின் அன்பைக் கடந்து செல்ல ஏனோ முடியவில்லை.

தன் கட்டுப்பாட்டையும் மீறி அவன் மனம் அவளிடமே மீண்டும் மீண்டும் சென்று தஞ்சம் கொள்வதைப் போலத் தோன்றியது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!