Banner-9301d2a0

14

அலுவலகத்தில் வேலை கழுத்துவரை இருக்க, நல்லவேளையாக, கவனம் சிதற வழியின்றி வர்ஷாவின் நாள் சென்று கொண்டிருந்தது, நிர்மல் வந்து அவள் முன்னே நிற்கும் வரை.

“என்ன நிர்மல் மீட்டிங் இல்லையா? கேன்சல் ஆனதா மெசேஜ் வருது, இப்போ தான் உனக்கு ஃபோன் பண்ண நினைச்சேன்”

“ஆமா” என்றான் மெல்லிய குரலில்.

“எப்படி இன்னிக்கி வீக்லி ரெவ்யூ மீட் ஆச்சே. ஆதேஷ் எப்படி விட்டார்” அவள் குழப்பமாகப் பார்க்க,

“கேன்சல் பண்ணதே அவன் தானே” சிரித்தவன், “அதுக்கு ஏன் இப்படி முழிக்கிற” என்று மேலும் சிரித்தான்,

“நீ சொல்றது ஒண்ணுமே புரியல” அவள் உதட்டைப் பிதுக்க,

“சார் இன்னிக்கி ரொமான்ஸ் மோட்ல இருக்கார்” என்றவன், அவள் காதுவரை குனிந்து ரகசியம் பேசும் குரலில்,

“ஆதேஷ் இன்னிக்கி அகாங்ஷாவை ப்ரொபோஸ் பண்ண போறான், எல்லாரும் என்ன என்ன செய்யணும்னு பலமா உத்தரவு பறக்குது”

விழிகள் விரிந்தவள், “ஆஃபீஸ்ல ப்ரோபோசலா? பெர்மிஷன் வாங்கினாரா என்ன?” நிர்மலை பார்த்து விழிக்க, அதற்கும் சிரித்தவன், தோளைக் குலுக்கிவிட்டு,

“அவன் தான் சொம்படிச்சு எல்லாரையும் கைக்குள்ள போட்டு வச்சுருக்கானே, ஒருத்தரும் அவனை கேட்கமாட்டாங்க” என்றவன்,

“நான் வந்ததே இத சொல்லத்தான். நீயும் காஃபி பிரேக், லன்ச் பிரேக்ன்னு இப்போவே போயிடு, இல்லை உன் கைலயும் பலூன் பார்ட்டி பேப்பர்ன்னு எதையாவது கொடுத்து நம்மளை கோமாளி மாதிரி நிக்க வைச்சுடுவாங்க இந்த ஆதேஷோட எடுபுடிங்க. அதான் நான் இப்போவே லஞ்சுக்கு கிளம்பிட்டேன்” என்றவன், கண்ணடித்துவிட்டுக் கிளம்பிவிட்டான்.

‘ஆதேஷ் அவளைக் கல்யாணம் செஞ்சுக்குற அளவுக்கா உண்மையா பழகுறான்? என்னமோ அவ கிட்டயாவது நல்லவனா இருந்தா சரி’ நிர்மல் எச்சரித்தது போலவே, ஆதேஷின் எடுபிடிகள் ஒவ்வொரு இருக்கையாகச் சென்று பார்ட்டி பொருட்களை விநியோகம் செய்யத் துவங்க,

ஓசைப்படாமல் மெல்ல எழுந்தவள் யார் கவனத்தையும் ஈர்க்காமல் மெல்ல வெளியேறி லிஃப்டிற்காகச் செல்ல, எதிரே அவளைப் பார்த்து புன்னகைத்துக்கொண்டே வந்தாள் அகாங்ஷா.

( அவர்களில் ஆங்கில உரையாடல்கள் தமிழில் )

“என்ன சீக்கிரம் சாப்பிட கிளம்பியாச்சா?”

“எஸ் கொஞ்சம் பசி, அதான்” வர்ஷா தடுமாற,

“மீட்டிங் முடிச்சு உனக்கு கால் பண்ணலாம்னு இருந்தேன், இப்போ தான் கேன்சல்ன்னு ஈமெயில் வந்தது” கைப்பேசியைக் காட்டி கண்சிமிட்டியவள், “நான் உன்கூட கொஞ்சம் பேசணும் ஒரு பத்து நிமிஷம் வர முடியுமா?” என்று சினேகமாகப் புன்னகைக்க, வர்ஷாவால் மறுக்க முடியவில்லை.

கீழ் தளத்திலிருந்த காஃபி கடைக்குச் சென்றவர்கள் கண்ணாடி சுவரினருகே அமர்ந்து கொண்டனர்,

“வர்ஷா காஃபி?” ஆர்டர் கொடுக்க எழுந்த அகாங்ஷா புன்னகையுடன் கேட்க,

வர்ஷா “இல்ல அப்புறம் லன்ச் சாப்பிட முடியாது, நீங்க எடுத்துக்கோங்க” என்று சொல்லத் தனக்கானதை வாங்கிக்கொண்டு வர்ஷாவின் முன்னே அமர்ந்தாள் அகாங்ஷா.

“எனக்கு தினமும் நாலஞ்சு காஃபி இல்லைனா வேலையே ஓடாது” என்று புன்னகைத்தவள்,

“வர்ஷா நான் இங்க வந்ததிலிருந்து நீ மட்டும்தான் என்கிட்ட ஒழுங்கா பேசாத ஒரே ஆள். ஏதாவது பெர்சனல் காரணம் இருக்கா?” புன்னகை மாறாத முகத்துடன் கேட்க,

மறுப்பாகத் தலையசைத்த வர்ஷா, “அதெல்லாம் இல்ல, ஜஸ்ட்…”

“ஆதேஷ் காரணமா?” அகாங்ஷா கேட்டதில் திடுக்கிட்டவள், “எப்படி…” என்று அதிர,

“என்ன சொன்னான்?” அகாங்ஷா காஃபீயை பருகியபடி கேட்க,

“அது…அது…விடுங்க. என்ன விஷயமா பேச கூப்டீங்க?”

“சும்மா பேச தான். ஆமா உனக்கு என்கிட்ட பேச, சொல்ல எதுவுமே இல்லையா?”

“இருக்கு. ஆனா இனிமே அதெல்லாம்…எதுக்கு?” என்றவள் எங்கோ பார்க்க,

அகாங்ஷாவோ வர்ஷாவையே பார்த்தபடி பொறுமையாகக் காஃபியை குடித்துக்கொண்டிருந்தாள்.

“ஒன்னு சொல்லணும் ஆனா உங்களை குழப்புற நோக்கமோ இல்ல கஷ்டப்படுத்துற எண்ணமோ இல்ல… நீங்க ஆதேஷை…” சொல்வதா வேண்டாமா என்று வர்ஷா தயங்குவதை உணர்ந்தவள், கண்களால் தொடரும்படி ஜாடை செய்ய,

“அவனை நாம்பாதீங்க” என்றவள் அகாங்ஷாவை பார்க்க,

அவளோ கலகலவென்று சிரித்தபடி, “என்ன ஒத்துமை! அவனும் இதையேதான் சொன்னான். உன்னை பத்தி!”

வர்ஷா இதை எதிர்பார்த்தது தான் என்பதால் உணர்ச்சியைக் காட்டிக்கொள்ளாமல்,

“நான் எல்லாமே சொல்றேன். உங்களுக்கு எவ்ளோ தெரியும், இல்ல என்ன மாதிரி கேள்வி பட்டிருப்பீங்கன்னு எனக்கு தெரியாது.” என்று துவங்கியவள் அனைத்தையும் அவளிடம் சொல்லி,

“ஆனா அவர் உங்களை விரும்புறார் நீங்களும் விரும்புறீங்கன்னு தெரிஞ்ச அப்புறமும் நான் இதெல்லாம் சொன்னா அது நாகரீகமா இருக்காதேன்னு தான் சொல்லல. மன்னிச்சுடுங்க” என்று உதட்டைக் கடிக்க,

புன்னகையுடன் வர்ஷாவின் கையைப் பற்றிய அகாங்ஷா, “எனக்கு எல்லாமே தெரியும் வர்ஷா. அவன் என்ன செஞ்சான், என்ன செய்றான், என்ன செய்ய போறான் எல்லாமே!”

“புரியலை” வர்ஷா விளங்காமல் கேட்க, “நான் உன் வாயால எல்லாத்தையும் கேட்க நினைச்சேன் அவ்ளோ தான். இப்போ கூட அவன் என்னை ப்ரொபோஸ் பண்ண மேல ஏற்பாடு பண்ணிக்கிட்டு இருக்கான்னு கூடத் தெரியும்!” சிரித்தவள், வர்ஷாவின் வியப்பைக் கண்டு “என்ன வர்ஷா?” என்று கேட்க

“எப்படி?” அவளால் நம்ப முடியவில்லை.

“எனக்கு தமிழ் புரியலன்றதால நான் இருக்கும்போதெல்லாம் ஆதேஷ் உன்கிட்ட பேசின எதுவுமே எனக்கு புரியல, ஆனா உங்க ரெண்டு பேருக்குள்ளயும் என்னமோ மனக்கசப்பு இருக்குன்னு மட்டும் புரிஞ்சுது” என்றவள்,

“நல்ல வேளையா ஒரு நலம்விரும்பி புண்ணியத்தால என்ன விஷயம்ன்னு தேட ஆரம்பிச்சேன் அப்ப ஒரு நாள் …எல்லாம் நல்லதுக்குதான். விடு” என்றபடி எழுந்து வர்ஷாவின் கையைக் குலுக்கியவள் “வாழ்த்துக்கள்” என்று புன்னகைக்க,

“எதுக்கு?”

“டெஸ்க்குக்கு போய் ஈமெயில் பாரு புரியும்! எப்போ எந்த உதவி வேணும்னாலும் என்னை தயங்காம நீ அணுகலாம்”

“தேங்க்ஸ்” என்ற வர்ஷா, அகாங்ஷாவுடனேயே மீண்டும் அலுவலகத்துக்குள் நுழைந்தாள்.

அவள் விடை பெறவும், இருக்கையில் குழப்பமாக அமர்ந்தவள் அங்கே எழத் துவங்கிய ஆரவாரத்தில் சுயநினைவுக்கு வந்தாள்.

‘ஆஹா இத மறந்துட்டேன்! இப்போ எப்படி கிளம்புறது’ அங்கே, அந்தப் பெரிய அறையின் நடுவே ஆதேஷ் நிற்க, அகாங்ஷாவின் கண்களைக் கட்டி, பெண் ஒருவள் அழைத்து வந்தாள்.

வேகமாக எழுந்து வெளியேற முயன்ற வர்ஷா, திரண்டிருந்த சக பணியாளர்களைக் கடந்து செல்ல முடியாமல், வேறு வழியின்றி அங்கேயே நின்றுவிட்டாள்.

இப்பொழுது கண் கட்டு அவிழ்க்கப்பட்டு நின்ற அகாங்ஷாவின் முன்னே ஆதேஷ் மண்டியிட, அந்த அறையே அதிரும் வண்ணம் ஆரவாரம் எழுந்தது.

‘இந்தக் கொடுமையைப் பார்க்க வேண்டாம்னுதான் நிர்மல் எஸ்கேப் ஆகிட்டான்’ வர்ஷா பெருமூச்சு விட,

மேலே பறந்த பலூன்களும் ஜிகினா பேப்பர் துகள்களும் வர்ஷாவின் கவனத்தை ஒரு நொடி சிதறடிக்க, சக பணியாளர்களின் கூச்சலில் ஆதேஷ் அகாங்ஷாவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டது வர்ஷாவின் காதில் விழாமல் போனது.

புன்னகையுடன் அனைவரையும் ஜாடை செய்து அமைதியாக இருக்குமாறு சொன்ன அகாங்ஷா,

“சோ ஸ்வீட் ஆஃப் யு ஆதேஷ்! பட் சாரி!” என்றாள் புன்னகை மாறாமல்.

காற்று போன பலூன்போல முகம் சுருங்கிய ஆதேஷ் அவளைக் குழப்பமாகப் பார்க்க, அகாங்ஷாவே தொடர்ந்தாள்.

“கல்யாணம், குடும்பம் எல்லாம் எனக்கு செட் ஆகாது. உங்க இந்தியன் கலாச்சாரம் எனக்கு சத்தியமா சரி படாது. வெரி சாரி டியர்” என்றாள் மென்மையாகவே.

சுதாரித்த ஆதேஷ், “நீ என்னை காதலிக்கலயா…ஹே விளையாடுற தானே?” என்று அதிர்ச்சியை மறைத்துச் சிரிப்புடன் கேட்க,

மறுப்பாகத் தலையை ஆட்டியவள், “நான் நிறைய பேரை டேட் பண்ணியிருக்கேன், அப்படி பல ரிலேஷன்ஷிப்ல நீயும் ஒருத்தன். கல்யாணம் வரை நீ போவேன்னு நான் நினைக்கலை. உன் வாழ்க்கை முறை வேற, என் வாழ்க்கை முறை வேற. ஒருத்தன் கூடவே வாழணும்ன்ற உங்க இந்தியன் கலாச்சாரம் எனக்கு சரி வராது”

“நீயும் இந்தியன் பொண்ணு தான்”என்றான் ஆதேஷ் கடுமையாக,

“நோ நோ! என் அம்மா அப்பா தான் இந்தியர்கள், நான் பக்கா அமெரிக்கன்! எனக்கு மனசளவுல கூட இந்தியன்னு நினைப்பே இல்ல. நான் அந்த ஊர் பிரஜை, அப்படியே இருக்கத்தான் நினைக்கிறேன் ”

ஏதோ பேச வாயெடுத்த ஆதேஷ், “என் கேபின்ல பேசலாம்” என்று அவளை அழைத்துக்கொண்டு வேகமாகச் சென்றுவிட,

சில நொடிகள் நீண்ட மௌனத்தில், அனைவரும் என்ன செய்வதென்று தெரியாமல் அசடு வழிந்தபடி கலைந்து சென்றுவிட, வர்ஷாவோ யோசனையாக வெளியேறினாள்.

ஆதேஷின் அறையில், அகாங்ஷா நாற்காலியில் அமர்ந்தபடி மொபைல் திரையைப் பார்த்திருக்க, ஆதேஷ் கோவத்தை மறைத்து போலி புன்னகையுடன்,

“டியர் நீ எனக்காக உன் குடியுரிமையை விட்டு தரணும்னு இல்ல, நான் உன்ன கல்யாணம் செஞ்சுகிட்டு உன்கூடவே அமெரிக்கா வந்துடறேன். நானும் அங்க குடியுரிமைக்கு அப்பளை பண்ணறேன். இதுக்காக நம்ம காதல் பிரியணுமா என்ன” என்று குழைய, சில நொடிகள் அவனை மௌனமாகப் பார்த்திருந்த அகாங்ஷா,

“உனக்கு நான் சொன்னது புரியலன்னு நினைக்கிறேன். கல்யாணம்லாம் எனக்கு செட் ஆகாத விஷயம். எனக்கு எப்போவும் சுதந்திரமா இருக்கணும்” என்றாள் புன்னகை மாறாத முகத்துடன்.

“நான் நம்ம எதிர்காலத்தை பத்தி நிறைய கனவு வச்சுருக்கேன். எனக்கு அமெரிக்கால இருக்கறது தான் பிடிச்சு இருக்கு. நான் உன்ன எந்த விதத்துலயும் கட்டுப்படுத்த மாட்டேன்” என்றான் வசீகரிக்கும் புன்னகையுடன்.

“ஹே! நான் தான் சொல்றேன்ல? இஷ்டம் இல்லைன்னு சொல்லியும் நீ ஏன் கம்பெல் பண்றே?” முறைத்தவள், “நான் போறேன்” என்று எழ,

“எனக்கு அமெரிக்காவிலேயே செட்டில் ஆகத்தான் ஆசை, இப்போ கல்யாணம் செஞ்சுக்கலாம் எனக்கு குடியுரிமை கிடைச்சதும் நாம டைவர்ஸ் பண்ணிக்கலாம். நான் உன்னை என்கூடவே வாழ கட்டாயப் படுத்த மாட்டேன்” என்றான் கெஞ்சுதலாய்.

“வாட் நான்சென்ஸ்? பொய்யா கூட எனக்கு கல்யாணம் செஞ்சுக்க வேணாம். ப்ளஸ் இது என் நாட்டுக்கு நான் துரோகம் பண்ணுற மாதிரி!” அவனை முறைத்தவள் வெளியேற முற்பட, அவள் கையைப் பற்றி இழுத்தவன்,

“என்ன தப்பு? கல்யாணமே செஞ்சுக்காம நீ என்கூட நெருங்கி பழகிட்டு இப்படி சொல்றது என்ன நியாயம்? நீ இதுக்கு சம்மதிச்சே ஆகணும்! நாம எடுத்துக்கிட்ட போட்டோஸ் விடியோஸ் எல்லாமே என்கிட்டத்தான் இருக்கு. நெட்ல போட்டா என்ன ஆகும்?” என்று மிரட்ட, கைதட்டி சிரிக்கத் துவங்கிய அகாங்ஷாவை பார்க்கப் பார்க்க ஆதேஷின் ரத்தம் கொதி நிலைக்குச் சென்றது.

“நீ சுயநலவாதின்னு தெரியும், ஆனா இவ்ளோ முட்டாள்னு எனக்கு தெரியாது!” என்று சிரித்தவள்,

“மிஸ்டர் நான் ஒன்னும் அப்பாவி பொண்ணு இல்ல இதுக்கெல்லாம் பயப்பட. நீ என் பெர்மிஷன் இல்லாம என்னோட ஒரு சாதாரண போட்டோவ நெட்ல போட்டாலும் உன்மேல சைபர் கிரைம் கேஸ் கொடுப்பேன்” முகம் சிவப்பேறி கோவமாக அகாங்ஷா, அவனை நோக்கி நடக்கத் துவங்க, அவளின் எதிர்பாராத மிரட்டலில் மெல்ல பின்னே செல்லத் துவங்கினான் ஆதேஷ்.

அகாங்ஷா, “எல்லா சோஷியல் மீடியாலயும் உன்னைப்பத்தி போஸ்ட் பண்ணி உன் மரியாதையை குலைச்சு உன்னை யாருமே ஹா…கல்யாணம் என்ன டேட் கூட பண்ண வராதபடி நாறடிக்க முடியும்!” என்றவள் முன்னோக்கி நடந்தபடி,

“நான் அமெரிக்கன் சிட்டிசன். உன் கேவலமான திட்டத்தை சொல்லி நீ அமெரிக்க மண்ணுல காலையே வைக்கமுடியாதபடி பேன் பண்ணுவேன். ஆஃபீஸ்ல செக்ஸுவல் ஹரேஸ்மென்ட் கம்பளைண்ட் கொடுத்து ப்ளாக் மார்க் கொடுக்க வச்சு, எங்கேயுமே வேலை கிடைக்காத மாதிரி செஞ்சு உன் கேரியரை காலி பண்ணிடுவேன்!”

அகாங்ஷாவின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஆதேஷின் திமிரையும் தைரியத்தையும் நிலைகுலையச் செய்திருந்தாலும், பயத்தை மறைத்துக் கோவமாய்,

“என்னடி மிரட்டுற? இதுக்கெல்லாம் பயப்படுவேன்னு நினைக்கிறியா? என்ன இருந்தாலும் நான் ஆம்பளை! ரொம்ப தான் பேசிக்கிட்டே போற? சும்மா என் கூட ஊர் சுத்திட்டு…யு பிச்!” என்று சொல்லி முடித்த மறுநொடி இடியென அவன் கன்னத்தில் பாய்ந்தது அகாங்ஷாவின் கை!

“ஒரு வார்த்தை பேசின, ஏண்டா பொறந்தோம்ன்னு வருத்தப்பட வச்சுடுவேன். நீ என்ன பேசினாலும் கேட்டுட்டு போக நான் ஒன்னும் உன் அப்பாவி எக்ஸ் கேர்ள் பிரண்ட் இல்ல! என்ன சொன்ன நான் பிச்? நீ தான் சுயநலத்துக்காக என்கூட இருந்த ஒரு ஆண் வேசி!” என்று கர்ஜித்தவள்,

வேகமாக அறைக்கதவைத் திறந்து, அதிர்ச்சியில் உறைந்திருந்த ஆதேஷை நோக்கி, “இதுக்கு மேலயும் இந்த கம்பெனில நீ எப்படி வேலை செய்யுறேன்னு பாக்கறேன். நீ பேசின எல்லாமே என் மொபைல்ல ரெக்கார்ட் பண்ணிட்டேன். கிளம்ப ரெடியா இருடா *** பாஸ்டர்ட்!” என்று வேகமாகச் சென்றுவிட,

ஏற்கவே அவர்கள் சண்டையிடும் சத்தம் கேட்டு வெளியே கூடியிருந்த அனைவரின் முன்பும் அவமானமாக ஆகிவிட, “என்ன பார்வை. போய் வேலைய பாருங்க!” என்று மிரட்டியவன் அகாங்ஷா சென்ற திசையில் ஓடினான்.

***

உணவகத்தில் விஷ்ணுவிடம் வர்ஷாவுடனான உரையாடலைச் சொல்லிக்கொண்டிருந்தான் ரிஷி.

“என்னடா சொல்றே?வர்ஷா உன்னை காதலிக்கிறேன்னு சொல்லியும் ஏன்டா நீ ஒன்னுமே சொல்லலை?”

“டேய்! என்னன்னு பதில் சொல்ல முடியும்? அவ எவ்ளோ உணர்ச்சியோட அவ காதல சொல்லிக்கிட்டு இருந்தா தெரியுமா?”

“நீ பொய் சொல்றே!”

“வாட்?”

“அவளுக்கு உன் மேல காதல் வரல” விஷ்ணு தோளைக் குலுக்க,

“லூசாடா நீ?” ரிஷி என்று பற்களைக் கடிக்க,

“அங்க பாரு வர்ஷா வரா! பாத்தாலே தெரியுது அவளுக்கு உன் மேல காதல் இல்ல”

“பைத்தியமா நீ?” என்று திரும்பி வெளியே வண்டியைப் பார்க் செய்துகொண்டிருந்த வர்ஷாவை பார்த்த ரிஷி, “பார்த்தாலே தெரியுதாம்” என்று விஷ்ணுவை முறைக்க,

விஷ்ணுவோ “ஆமா பாரு, ஜீன்ஸ் குர்தா போட்டு இருக்கா! அவளுக்கு காதல் வரல!” என்றான் தீர்க்கமாக.

“என்னடா உளர்றா?” ரிஷி விளங்காமல் அவனைப் பார்க்க,

விஷ்ணு “மாடர்ன் டிரஸ்ல வர ஹீரோயின் காதல் வந்தவுடனே புடவைக்கு மாறிடுவா! எவ்ளோ சினிமா பாக்குற இதுகூட தெரியல? வர்ஷா புடவைல வரல, அவளுக்கு உன் மேல காதலில்லை!” என்று சிரிப்பைக் கட்டுப்படுத்திக் கொண்டு சொன்னதில் ரிஷியும் சிரித்துவிட்டான்.

“பைத்தியம்” தலையைக் கோதிகொண்ட ரிஷி, வர்ஷா உள்ளே நுழைவதைப் பார்த்து அமைதியாக எழுந்து சென்றான்.

ஆதேஷின் அசடு வழிந்த முகத்தை நினைத்தபடி உணவகத்திற்குள்ளே நுழைந்த வர்ஷாவிற்கு, இன்ப அதிர்ச்சியாக அவளைப் பார்த்துப் புன்னகையுடன் கையசைத்தான் விஷ்ணுவர்தன். தொலைவில் ஆர்டர் கொடுத்தபடி நின்றிருந்தான் ரிஷிநந்தன்!

விஷ்ணுவின் அருகே சென்ற வர்ஷா, “என்ன அதிசயம் வரமாட்டிங்கன்னு நினைச்சேன்”

“நானும் தான் நினைச்சேன், ஆனா அவன் தான் இன்னிக்கி இங்க சாப்பிட வந்தே தீரணும்னு வந்தான்”

பதில் எதுவும் தராமல் புன்னகைத்த வர்ஷா, “ஆர்டர் கொடுத்துட்டு வரேன்” என்று செல்ல,

அங்கு நின்றிருந்த ரிஷி, “எப்படி இருக்கு இப்போ? உடம்பு தேவலாமா?” என்று விசாரிக்க, ‘நலம்’ என்பது போலத் தலையசைத்தவள், தனக்கான ஆர்டரை கொடுத்துவிட்டு நிற்க,

“நீ போய் விஷ்ணுகூட உட்காரு நான் வாங்கிட்டு வரேன், பில் குடு” என்று கையை நீட்ட, ஒரு நொடி தயங்கி பின்பு ரசீதை அவனிடம் கொடுத்துவிட்டு விஷ்ணுவின் அருகில் சென்று அமர்ந்தாள் வர்ஷா.

சில நிமிடங்களில் அங்கு வந்த ரிஷி அவளுக்கான உணவை அவள் முன் வைத்துவிட்டு, விஷ்ணுவிற்கும் தனக்கும் உணவைப் பரிமாறிக் கொண்டு அமைதியாகவே சாப்பிடத் துவங்கினான்.

வர்ஷாவோ ‘பண்றதையெல்லாம் பண்ணிட்டு ஒன்னும் தெரியாத குழந்தை மாதிரி கியூட்டா சாப்பிடறதை பாரேன். நேத்து பாசமா பேசினவனாடா நீ? நிமிஷத்துக்கு ஒரு முகம் காட்டுறியே!’ ஓரப்பார்வையால் ரிஷியைப் பார்த்தபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தவளுக்கு,

விஷ்ணுவின், “உங்க ஆபிஸ்ல பெரிய ப்ரபோசல் சீன் நடந்தது போல இருக்கு?” என்ற கேள்வியில் புரைக்கேறியது.

“உங்களுக்கு எப்படி தெரியும்?” வர்ஷா தலையைத் தட்டிக்கொண்டபடி கேட்க,

அவளிடம் தண்ணீரை நகர்த்திய ரிஷி, விஷ்ணுவை முறைக்க, விஷ்ணுவோ,
“எங்க ஆபீஸ் வரை நியூஸ் வந்தது அதான்” என்றான்.

வர்ஷா நடந்ததைச் சொல்ல, விஷ்ணுவிற்கு முன்னே உறக்கவே மனதார சிரித்தது ரிஷிதான்!

உலகம் மறந்து, தன்முன்னே சிரித்துக்கொண்டிருந்த ரிஷியைக் கண்களால் மனதில் நிறைத்துக்கொண்டிருந்த வர்ஷாவுக்கும் ரிஷியின் சிரிப்பு தொற்றிக்கொள்ள தானும் சிரிக்க,

விஷ்ணு, “என்ன இவ்ளோ லேட்டா சிரிக்கிற? கவனம் எங்கயோ?” ஓரக்கண்ணால் ரிஷியைப் பார்த்தபடி வர்ஷாவை கேட்க,

“அது..” தடுமாறியவள், “ஆமா நீங்க ஏன் வாயை பொத்திகிட்டு சிரிக்கிறீங்க? நீங்க தான் அந்த நலம்விரும்பியோ?” என்று வம்பிழுக்க, பதறி விஷ்ணு மறுக்க, ரிஷியோ வேகமாகத் தண்ணீரைக் குடித்தான்.

அதைக் கவனிக்காத வர்ஷா, “ஒரு பொண்ணு வாழ்க்கையை காப்பாத்தி இருக்கார். கண்டிப்பா அவர் க்ரேட் தான்! யார்னு தெரிஞ்சா இதுக்கே ஆயிரம் நன்றி சொல்லலாம், முடிஞ்சா கூட ஆட்டோகிராஃப்ம் வாங்கிடுவேன்!”

“வாங்கிக்கோ! அதான் எதிரேயே இருக்கானே!” என்ற விஷ்ணு, “உன் விசிறிக்கு ஒரு ஆட்டோகிராஃப் கொடேன்” ரிஷியை வம்பிழுக்க அவனை முடிந்தமட்டும் முறைதான் ரிஷி.

“நீ…ஏ…யு…ஆர் கிரே…” வர்ஷா எப்பொழுதும் போலத் திக்க,

“ஆத்தா நீ ஒழுங்கா என்கிட்டேயே முழு வாக்கியத்தையும் சொல்லு, அவன பாரு எப்படி முழிக்கிறான்னு” விஷ்ணு சிரிக்க,

அசடு வழிந்தவள், “அவர் எப்படி அவகிட்ட எல்லாத்தையும் சொன்னார். நிஜமாவே கிரேட்!” என்று பார்வையைத் தாழ்த்திக்கொள்ள,

ரிஷியோ இதெல்லாம் பெரிய விஷயமா என்ற தோரணையில் “ப்ரோபோசல் பிளான் தெரியாது, ஆனா கொஞ்ச நாள் முன்னாடி எதேச்சையா பார்த்தப்போ சொன்னேன்”

“ஏன்…”

“அந்த பொண்ணை காப்பாத்தணும்னு தோணிச்சு அவ்ளோதான்” என்றவன் மனதிலோ,

‘ உன்னை அழ வச்சவன் நிம்மதியா இருக்க விடுவேனா என்ன? இதுக்கு மேலயும் செய்யணும். நான் உன் வாழ்க்கைல ஒருத்தனா இல்லாம போனாலும் உன் நிழலா உன் பின்னாடியே இருப்பேன்! எதுவும் உன்னை இனிமே கஷ்டப்படுத்தாம பாத்துப்பேன். நீ என் லைஃப்ல எப்போவுமே முக்கியமானவ’ அமைதியாக நினைத்தவாறு வர்ஷாவை பார்த்திருந்தான்.

எதுவும் சொல்லாது, வேகமாகக் கைப்பையிலிருந்து ஒரு சிறிய நோட்டு புத்தகத்தையும் பேனாவையும் அவன் முன்னே நீட்டினாள் வர்ஷா.

“ஹே! என்ன இது?” ரிஷி திகைக்க,

விஷ்ணு, “சும்மா கையெழுத்துதானே போட்டுக்கொடு. வெத்து பேப்பர்ல வேணாம். ஏதான நல்லதா எழுதி அப்புறம் சைன் பண்ணு” என்று சிரித்தான்.

“என்ன வர்ஷா, விளையாடாதே” ரிஷி புன்னகைக்க, பார்வையால் கெஞ்சியவளை மறுக்க முடியாமல், அவள் கொடுத்த நோட்டில் எதையோ எழுதிக் கையெழுத்தும் போட்டுக் கொடுத்தான்.

அதைப் பெற்றுக்கொண்டவள் படிக்கும் முன்னே, ரிஷியின் மொபைல் ஒலிக்க,

“அகாங்ஷா!” என்றவன், பேசிமுடித்து, அவள் தன்னிடம் சொன்ன அனைத்தையும் இருவரிடமும் சொல்லி, வர்ஷாவிடம்,

“உங்க ஆஃபீஸ்ல ஒரே சீன் ஆகியிருக்கு. அவ கால்ல விழாத குறையா கெஞ்சியிருக்கான். இவளும் எச்சரிச்சு விட்ருக்கா…அப்புறம் நீயும் அவளும் இப்போ பேசினீங்களாம் அதை யாரோ ஆதேஷ் கிட்ட சொல்லியிருக்காங்க,

நீ தான் எல்லாத்தையும் கலைச்சுவிட்டுருக்கேன்னு உன் மேல அவன் பாய வாய்ப்பிருக்கு. பாத்து சமாளி, பிரச்சனைனா விஷ்ணுக்கு உடனே கால் பண்ணு” என்றவன் விஷ்ணுவிடம்,

“டேய் ஏதாவதுன்னா எனக்கும் உடனே சொல்லுன்னு” சொல்ல, விஷ்ணுவும் சரியென்று தலையசைத்தான்.

அனைத்தையும் கேட்ட வர்ஷா பொதுவாக, “மறுபடியும் இவனா? கடவுளே… சரி நான் கிளம்பறேன் நேரமாச்சு” சிரிப்பைத் தொலைத்தவள் ரிஷி கையெழுத்திட்ட நோட்டைக் கைப்பையில் பத்திரமாக வைத்துக்கொண்டு புறப்பட்டாள்.

ரிஷியோ முகம் இறுகி கண்களை மூடிக்கொண்டான்.

“என்னடா? என்னாச்சு இவ்ளோ நேரம் நல்லா தானே இருந்த” விஷ்ணு அவன் முகம் பார்க்க,

ரிஷி, “அவன் பச்சோந்திடா! எவ்ளோ தப்பா வர்ஷா பத்தி சொல்லி வச்சுருந்துருக்கான் தெரியுமா? அவனை வர்ஷா மயக்க பாத்தாளாம். ப்ளாடி பேஸ்கெட்! ” பற்களைக் கடித்தவன்,

“நேரா தைரியமா காதலையே சொல்லாதவ டா. அவளை போயி…வாய்ல கண்டதும் வருது…போலாம்” கோவமாக ரிஷி எழ, விஷ்ணுவும் அவனும் கோவமாகப் பேசியபடி கிளம்பினர்.

அலுவலகம் திரும்பிய வர்ஷா தன்னை சிலர் வினோதமாக பார்த்தபடி பேசிக்கொள்வதை கண்டு நடந்ததை ஓரளவிற்கு உணர்ந்துகொண்டாள்.

யாரையும் சட்டை செய்யாமல் இருக்கையில் அமர்ந்துகொண்டவள், கம்ப்யூட்டர் திரையை ஆன் செய்ய, அவள் காதுப்படவே பேச துவங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!