Banner-1905ba28

15

வர்ஷா முடிந்தவரை பார்வையைத் திருப்பாமல் வேலை செய்யத் துவங்க, ஆதேஷின் எடுபிடிகள் மெல்ல வர்ஷாவை சூழ்ந்தனர்.

“நீ செஞ்சது தப்பு!?”

“கொஞ்சமும் மனசாட்சியே இல்லாம ஆதேஷை ஏமாத்த எப்படி மனசு வந்தது?”

“அதானே உனக்கு கிடைக்கலைனு வயிதெரிச்சல்ல ஒரு உண்மையான காதலை பிரிக்கிறது கேவலமா இல்லையா?”

“இதெல்லாம் பொறாமைல பண்ணுற வேலை”

“ஆதேஷ கைக்குள்ள போட்டுக்கிட்டு ப்ரமோஷன் வாங்க திட்டம் போட்டிருப்பா, அது நடக்கலைன்னு இப்போ நிர்மலையும் மயக்கி வச்சுருக்கா” என்று பேச்சுக்கள் கேட்க,

ஆக்ரோஷமாக “ஜஸ்ட் ஷட் அப்!” என்று எழுந்த வர்ஷா, “என்ன ஏதுன்னு தெரியாம இஷ்டத்துக்கு பேசிக்கிட்டே போறீங்க? மொதல்ல இத கேட்க நீங்கலாம் யாரு? ஹூ ஆர் யு பீப்பிள்?

நான் என்னலாம் பண்ணிருப்பேன், பண்ணப்போறேன்னு இவ்வளவு கற்பனைகள்!

மை காட்! என்னைப் பத்தி நானே இவ்ளோ யோசிச்சுருப்பேனான்னு தெரியல!

ஆமா என் வாழ்கையை நீங்க வாழ்ந்தா உங்க வாழ்க்கையை எப்போடா வாழ்வீங்க? டிஸ்கஸ்டிங்!

இன்னொருத்தரை நொட்டு நொள்ளை சொல்லுறதுக்கு முன்னாடி போயி உங்க மனசுல இருக்க அழுக்க சரி பண்ணுங்க !” என்று அனைவரையும் பொரிந்து தள்ளியவள்,

“நீங்க யாரவது ஒருத்தர், இன்னும் ஒரு வார்த்தை என்னைப் பத்தி எக்ஸ்டரா பேசினாலும் என்ன பண்ணுவேன்னு தெரியாது! திஸ் இஸ் மை லாஸ்ட் வார்னிங்!” என்று எச்சரித்தவள், எதுவும் நடக்காதது போல வேலையைத் தொடர,

வர்ஷாவின் நேரடி மிரட்டலில் அரண்டு நின்ற ஆதேஷின் கூஜாக்களும், வர்ஷா ஆக்ரோஷமா கூட பேசுவாளென்று அப்பொழுது தான் தெரிந்துகொண்ட சக பணியாளர்களும் அமைதியாகக் குனிந்துகொள்ள,

“வெல்டன்!” என்று கைத்தட்டியபடி வந்தான் நிர்மல்.

அவளைப் பழித்தவர்களை முறைத்தவன், “வாவ்! தனியா சிக்கிட கூடாதே? வாய்ல வந்ததெல்லாம் பேசுவீங்களோ? இதெல்லாம் ஒரு பொண்ணுக்கு எந்தளவுக்கு மனசை பாதிக்கும்னு தெரியாது?” என்று கேட்க, அந்த வம்பர் கூட்டம் கடுப்பும் அவமானமுமாய் தலைகுனிய, ஒருவன் மட்டும்,

“நாங்க தப்பா என்ன சொன்னோம்? வர்ஷா பொறாமைல…”என்று துவங்க நிர்மலின் முறைப்பில் வாயை மூடிக்கொள்ள,

நிர்மல் “நீங்க என்ன பண்றீங்கன்னா? என்ன விளக்கம் சொல்லணுமோ அதெல்லாத்தையும் எச் ஆர் கிட்ட போய் சொல்லுவீங்களாம். ஏன்னா நீங்க எல்லாரும் இவ்ளோ நேரம் பேசின எல்லாமே இப்போ… எச்.ஆருக்கு அனுப்பறேன். இதோ…” என்று சொல்லிக்கொண்டே மொபைலில்  ஈமெயில் ‘சென்ட்’ பட்டனை அழுத்தியவன் “அனுப்பிட்டேன்!” ஏளன புன்னகையுடன் தோளைக் குலுக்கியவன்,

“ஆதேஷோட காதலை காப்பாத்துறதுக்கு முன்னாடி உங்க வேலையை காப்பாத்திக்க முயற்சி பண்ணுங்க” என்று சொல்ல, விஷமிகளின் முகம் வெளிறி அவனைக் கெஞ்சத் துவங்கினர்.

நிர்மலோ கண்களில் கோவம் பொங்க, “கெட் லாஸ்ட்!” என்று உறும, வம்பிகள் தங்களுக்குள் முணுமுணுத்த படி கலைந்து சென்றனர்.

வர்ஷா, “ஐயோ ஏன் நிர்மல்? பாவம் அவ்ளோ பெரிய தண்டனை எதுக்கு? விடுங்க எதோ தெரியாம பேசிருப்பாங்க” என்று அவர்களுக்காகப் பரிந்து பேச,

“ஒரு டீம் லீடா இதை நான் என்னிக்கோ செஞ்சிருக்கணும். இதுவே லேட்! இப்போ போன பீசுங்கள்ல ஒருத்தர் கூட உண்மையா வேலை செய்ற ஆள் இல்லன்னு உனக்கும் தெரியும். வீட்ல உட்கார்ந்து பொறுமையா வம்பு பேசிக்கட்டும். என்னால இதெல்லாம் இனிமே பொறுத்துக்க முடியாது” என்று கடுமையாகச் சொன்னவன் தணிந்த குரலில்,

“சரி உனக்கு வந்த ஈமெயில் பார்த்துட்டு என்கிட்ட வருவேன்னு பார்த்தேன், நீயோ சத்தமே காட்டாம இருக்க?” பேண்ட் பாக்கெட்டில் கை விட்டுக்கொண்டு நிர்மல் புன்னகைக்க,

“என்ன இன்னிக்கி எல்லாரும் ஈமெயில் பார்க்க சொல்றீங்க?” என்றபடி இன்பாக்ஸை பார்த்தவள், நிர்மல் சுட்டிக்காட்டிய மின்னஞ்சலைத் திறந்து படிக்கத் துவங்கினாள்.

படிக்கப் படிக்க விழிகள் விரிந்தவள், “என்ன நிர்மல் இது? கனடா? நீ தானே போறதா இருந்துது?” நிர்மலை குழப்பமாகப் பார்க்க,

புன்னகைத்தவனோ, “அகாங்ஷா மெயின் பிராஞ்சுல உன்னைப்பத்தி நல்ல ரிப்போர்ட் கொடுத்துருக்காங்க. நானும் போக இஷ்டம் இல்லைனு சொல்லவும் உடனே அவங்க உன்னை அங்க கூப்டுக்க முடிவு பண்ணியிருக்காங்க.

இது நான் சிபாரிசு பண்ணி ஒன்னும் கிடைக்கல, உடனே சண்டைக்கு வராத! உன் சின்சியாரிட்டிக்கு இது எப்போவோ வந்திருக்க வேண்டிய ஆஃபர்!”

“ஏன் இப்படி? நீ தானே போகணும். இது சரி இல்ல” வர்ஷா முகம் வாட,

“ஹலோ மேடம் நான் ஒன்னும் தியாகம் பண்ணலை, இது ஒரு வருஷ ப்ராஜெக்ட் காண்ட்ரேக்ட், பிடிச்சுப்போனா அங்கேயே நிரந்தர வேலை கொடுக்கவும் வாய்ப்பிருக்கு, எனக்கு சென்னை விட்டுப் போக வேண்டாம் சோ வேணாம்னு சொன்னேன். அவ்ளோதான்”

“ம்ம்…”

“என்ன ம்ம்?”

“எனக்கு இப்போ ஒன்னும் யோசிக்க முடியல நிர்மல்.”
அவள் குழப்பத்தைப் புரிந்துகொண்டவன்,”உனக்கு விருப்பம் இருந்தா ஓகே சொல்லு, அவசரம் இல்ல, பொறுமையா யோசிச்சு என்கிட்ட சொல்லிட்டு அப்புறமா ஈமெயிளுக்கு பதில் அனுப்பு சரியா?”

“ம்ம் தேங்க்ஸ். ஆமா என்னாச்சு? எப்படி எல்லாரும் என்னை தப்பா….” அவள் தயங்க,

“நம்ம ஊரு பொண்ணுங்க மாதிரி சாதுவான பொண்ணுன்னு தப்பா நினைச்சு அவன் சீன் போட, அகாங்ஷா பேயாட்டம் ஆடி அவனை எச் ஆர் மேனேஜர் முன்னாடியே கிட்டத்தட்ட அவ காலிலேயே விழாத குறையா கெஞ்ச வச்சுட்டா.

அதுல அவன் காண்டாகி வர, அப்போ பார்த்து அவன் சொம்பு ஒருத்தன் உன்னையும் அவளையும் பார்த்ததைப் போட்டுக்கொடுக்க,

இந்த வெட்டி முண்டங்களை ஏவி விட்டிருப்பான் இல்லை அவனை குஷிப்படுத்த இவங்களா உன்கிட்ட வந்துருக்குங்க.

இதெல்லாம் யோசிக்காம நீ வேலையப்பாரு, எச் ஆர் பார்த்துட்டு வரேன், நான் அனுப்பின மெயில் பார்த்துட்டு கூப்படறாங்க” வைப்ரேட் ஆகிக்கொண்டிருக்கும் மொபைல் திரையைக் காட்டினான்.

“ஐயோ! நீ சும்மா சொல்லலையா? அவங்க எல்லாரும் பாவம் நிர்மல். ஒருவாட்டி மன்னிச்சு விடக்கூடாதா?” வர்ஷா கெஞ்ச, மறுப்பாகத் தலையசைத்தவன்,

“டூ லேட்! நீ போகலாமா வேண்டாமான்னு மட்டும் யோசி போதும்” என்று சென்றுவிட, தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டாள் வர்ஷா.

இரவு வீட்டில் வெளிநாடு செல்ல வாய்ப்பு வந்ததைப் பற்றிப் பேசத் துவங்கியவள் குடும்பத்தினர் அனைவரின் விருப்பத்தைக் கேட்டறிந்துகொண்ட போதும், அவள் மனம் இறுதியாய் வந்து நின்றது அவள் நந்தாவிடம் தான்.

‘உன்னை பார்க்காம இருந்திருந்தா போயிருப்பேன் ஆனா இப்போ கிளம்பினா உன்னை தூரத்துலேந்து பார்க்கக் கூட முடியாதே’ குழப்பத்துடன் இருந்தவள், யோசிக்கமுடியாமல் தடுத்த தலைவலியால் போராடி உறங்கிப்போனாள்.

இரண்டு நாட்கள் கடந்தும் குழப்பம் தீராமல் போக ரிஷியை அழைத்தவள் விஷயத்தைச் சொல்லி,

“எனக்கு என்ன பண்ணுறதுன்னே தெரியல ரிஷி, உங்களுக்கு என்ன தோணுது?” என்று கேட்க,

இதை எதிர்பாராத ரிஷியோ அதிர்ச்சியில் அமைதியாகிவிட,

வர்ஷா, “நான் முன்னாடிலாம் யோசிச்சுருக்கேன் ஆன்சைட் போயி வேலை பாக்கணும்னு ஆனா இப்போ அந்த ஆசை இல்ல ரிஷி, எனக்கு நந்தாவை தூரத்துலயாவது பார்த்து கிட்டு இருக்கணும்.

வேற நாட்டுக்கு போனா அவனை பாக்கவே முடியாதே, அதான்…”

“நீ போகணும் வர்ஷா!” என்றான் ரிஷி தீர்க்கமாக.

அதிர்ந்த வர்ஷா, “என்ன ரிஷி ஏன் இப்படி சொல்றீங்க? உங்களுக்கு என் மனசு தெரிஞ்சும் ஏன்?” அவள் குரலில் ஏமாற்றம்.

“இது உன் கனவுன்னு நீ சொல்லியிருக்க, அந்த நந்தாவை பாக்குறதுக்கு முன்னாடியே. இப்போ அவனுக்காக ஏன் உன் கனவை இழக்கனும்? நீ தான் அவன் கிட்ட உன் காதலை சொல்ல மாட்டேன்னு சொல்லிட்டே அப்புறம் எதுக்கு அவனை பார்த்துக்கிட்டு உன் வாழ்க்கையை வீணடிக்கிற, வேண்டாம் நீ உன் வாழ்க்கைல முன்னேறுற வழிய பாரு.

இதே துறைல இருக்கறதால சொல்றேன் சின்ன வயசுல இப்படியொரு வாய்ப்பு நிறைய பேருக்கு கிடைக்காது. நீ உன்னை உயர்த்திக்கோ இந்த நந்தா என்ன? அவனை விட சூப்பரா உனக்குன்னு ஒருத்தன் வருவான்” என்றவன் குரல் ஏனோ உடைந்து, இறுதி வரியில் ரிஷியின் மனதில் வலி தோன்றியது.

வர்ஷாவோ கோவமாக அழைப்பைத் துண்டித்திருந்தாள்.

‘எவனோ வருவானாம், மண்ணாங்கட்டி! எனக்கு வேற எவனும் வேணாம்!’ கடுகடுவென மொபைலை அனைத்தவள், தலையணையில் முகத்தைப் புதைத்துக்கொண்டாள்.

ரிஷியின் மனமோ, ‘ஏன் போக சொல்லிட்டு இப்போ வறுத்தப் படுறே?

விஷ்ணுவா வர்ஷாவான்னு வரும்போது எப்படி விஷ்ணுவை விட்டுக்கொடுக்க முடியும்?

அப்போ வர்ஷாவ மட்டும் விட்டுக்கொடுத்துடுவியா?’ அவனையே அவன் மனம் கேள்வி கேட்டு வதைக்கத் துவங்கியது.

***

“ரிஷி நீ விளக்கேத்திட்டு வா, எனக்கு முட்டி வலிக்குது நான் விஷ்ணுவோட அங்க உட்காந்துகிட்டு இருக்கேன்” என்ற ரஞ்சனி விஷ்ணுவுடன் கோவில் பிரகாரத்தில் ஒரு ஓரமாக அமர்ந்துகொண்டார்.

விஷ்ணுவும் ரஞ்சனியுடன் கதை பேசியபடியே பராக்கு பார்த்துக்கொண்டிருந்தான்.

“மா! மா! வர்ஷா! அங்க பாரேன்” ரஞ்சனியை அழைத்தவன், சந்நிதியில் கண்களை மூடிக் கடவுளை வேண்டியபடி நின்றிருந்தவளைக் காட்டினான்.

“டேய்! வா போய் பேசலாம்” என்று அவர் எழ முற்பட, அவர் கையைப் பிடித்துத் தடுத்தவன்,

“இரு அவசர படாத. இப்போ நான் போயி அவ முன்னாடி நிக்குறேன் அவ என்ன பார்த்துட்டு கண்டிப்பா ரிஷிய தேடுவா பாரேன்” என்று விஷமமாகச் சிரிக்க,

“ச்சே வேணாம்டா. ஏன் குழந்தையை ஏங்க விடனும்? நாம போயி பேசுவோம்”

“சும்மா ஒரு நிமிஷம், அப்புறம் நானே இங்க கூட்டிட்டு வரேன்” என்றவன், வேகமாகச் சென்று வர்ஷாவின் முன்னே கண்களை மூடியபடி நின்றுகொண்டான்.

“மா! எங்க போறான் அவன் மறுபடியும்? விளக்கு ஏத்திட்டேன் கிளம்பலாமா?” என்றபடி ரிஷி வர, அவன் கையைப் பிடித்திழுத்து அவனைத் தன்னருகில் அமரச்செய்தவர், தொலைவில் வர்ஷாவையும் விஷ்ணுவையும் காட்ட,

“லூசா அவன் எதுக்கு அங்க போறான்?” ரிஷி அவரை முறைத்தான்.

அங்கே சன்னிதியில் வர்ஷா கண்களை மூடித் தீவிரமாக,

‘ப்ளீஸ்! ப்ளீஸ்! எனக்கு நீ தான் என்ன பண்ணலாம்னு ஏதாவது வழிய காட்டணும். நந்தாவை விட்டுப் போக மனசே வரலை, தாத்தா, அம்மா, ரிஷி, மது எல்லாருமே கனடாக்கு போடின்னு சொல்றாங்க, அப்பாவும் பாட்டியும் மட்டும்தான் வேண்டாம்னு சொல்றாங்க. எனக்குப் போகவும் பிடிக்கல.

ஒரு பக்கம் போயிட்டா நந்தாவுக்கு தொந்தரவா இருக்க மாட்டேன்னும் தோணுது. சத்தியமா எனக்கு என்ன பண்ணனும்னே புரியல. ப்ளீஸ் நீ தான் என்ன பண்ணலாம்னு சொல்லணும்.ப்ளீஸ்!’

தலையை ஆட்டி ஆட்டிக் கடவுளிடம் பேசிக்கொண்டிருந்தவள் கண்களைத் திறக்க எதிரில் நின்றிருந்த விஷ்ணுவைக் கண்டு கண்கள் விரிந்தாள்.

‘விஷ்ணு! அப்போ நந்தா வந்துருப்பானா?’ வேகமாகப் பார்வையைச் சுழற்றி வர்ஷா தேட, சற்று மறைவாக அமர்ந்திருந்த ரஞ்சனியும் ரிஷியும் அவள் கண்ணில் சட்டென்று படவில்லை.

“ஆமா டா ! பாரேன் விஷ்ணு சொன்ன மாதிரியே தேடுறா!” சந்தோஷமாகச் சொன்ன ரஞ்சனி, “பாவம் ஏங்க விடக் கூடாது, நீ கொஞ்சம் அவ கண்ணுல படுற மாதிரி போயி நில்லு” ரஞ்சனி சொல்லிக்கொண்டே ரிஷியைப் பார்க்க, அவனோ அவரை முறைத்துக்கொண்டிருந்தான்.

“லூசாமா நீ? அவனுக்கு தான் அறிவில்ல, உனக்குமா?”

“அட போடா!” என்ற ரஞ்சனி திரும்ப விஷ்ணு வர்ஷாவுடன் அவர்களை நோக்கி வந்துகொண்டிருந்தான்.

“மா! இவ தான் வர்ஷா, வர்ஷா இது எங்க அம்மா” என்று அறிமுகம் செய்துவைத்தான் விஷ்ணு.

ரஞ்சனிக்கு வணக்கம் சொன்ன வர்ஷா, ரிஷியைப் பார்த்து மெல்லிய புன்னகையுடன் தலையசைக்க, அவனும் அதையே செய்தான்.

ரஞ்சனி ஆர்வமாக வார்ஷாவுடன் பேசத் துவங்கிவிட, அதுவரை கடுகடுவென இருந்த ரிஷியின் மனநிலையும் கொஞ்சம் இலகுவானது.

சில நிமிடங்கள் பேச்சு நீள ரஞ்சனி, “ஆமா அடிக்கடி இந்த கோவிலுக்கு வருவியா மா நீ?”

“இல்ல ஆன்டி, இன்னிக்கி கொஞ்சம் மனசுக்கு இங்க வந்தா தேவலாம்னு தோணவே வந்தேன். நீங்க அடிக்கடி வருவீங்களா ஆன்டி?”

“இல்ல மா, நான் இவனுக்காக தான் வந்தேன்” என்று ரிஷியைப் பார்த்தவர், “கல்யாணம் செஞ்சுக்கோ செஞ்சுக்கோன்னா மாட்டேங்குறான். அதான் பரிகாரம் பண்ணா ஏதாவது அவன் மனசு மாறுதான்னு முயற்சிக்கிறேன்” என்றவர் வர்ஷாவை கூர்ந்து நோக்கி,

“நானும் எவ்ளோ தான் பொண்ணு தேடுறது? இப்போ கூட ஒரு சம்மந்தம் வந்துருக்கு, வாடா சும்மா பாருன்னு சொன்னா மாட்டேங்குறான்” என்று சொல்ல, வர்ஷாவின் முகமோ ஒரு நொடி இறுகி இளகியது.

“இரு மா நீ வேற” என்ற விஷ்ணு, “ஏன் டல்லா இருக்க வர்ஷா?” என்று கேட்க, ரிஷியும் அப்பொழுதுதான் வாடியிருந்த வர்ஷாவின் முகத்தைக் கவனித்தான்.

“அது ஆபிஸ்ல ஒரு ப்ராஜெக்ட்…” என்று வெளிநாடு செல்ல வேண்டியிருப்பதை பொதுவாகச் சொன்னவள், “என்ன பண்ணுறதுன்னு புரியல அதான்” என்று சொல்லி முடிக்கும் முன்பே,

“வேண்டாம் மா. நம்ம ஊர்ல இல்லாததா? சென்னைலயே இரு” ரஞ்சனி சொல்ல, விஷ்ணுவும் அதையே சொல்ல வர்ஷாவோ ‘உன் விருப்பமென்ன’ என்பதை போல் ரிஷியைப் பார்க்க,

அவனோ “ஓகே சொல்லிட்டு கிளம்பு! இதுல என்ன யோசனை? நல்ல வாய்ப்பு நிறைய கத்துக்கலாம். என்னை கேட்டா நீ கிளம்பு. அதான் உனக்கு பெஸ்ட்!” என்றான் தீர்க்கமாக.

“டேய் ஏன்டா…”ரஞ்சனி விஷ்ணு இருவரும் அவனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவன் போ என்றதில் வர்ஷாவின் மொத்த நம்பிக்கையும் நிலைகுலைந்தது.

‘அப்போ நான் போனா உனக்கு எதுவுமில்லையா? மிஸ் பண்ண மாட்டியா?’ ரிஷியிடம் மானசீகமாகக் கேட்டவள் கண்களில் நீர் கோர்க்க, அதை வேகமாகத் துடைத்துக்கொண்டு,

“சரி ஆன்டி நான் கிளம்பறேன், வந்து ரொம்ப நேரமாச்சு வீட்ல பாட்டி தேடுவாங்க” என்று எழ,

“அவன் கெடக்கான், நீ சென்னலையே இரு” என்ற ரஞ்சனி, “எப்போ முடியுமோ வீட்டுக்கு வா” என்று சொல்ல, அவர்களிடமிருந்து விடை பெற்றவள், ரிஷியைப் பாராமல் தவிர்த்து வேகமாக வெளியேறினாள்.

ஸ்கூட்டியில் அமர்ந்தவள் எப்படி வீடு சென்று சேர்ந்தாள் என்பதே அவள் கருத்திலில்லை. அவளது நந்தன் அவளைப் போய்விடு என்றது மனதைக் குத்தி கிழித்துக்கொண்டிருந்தது.

வேகமாக வீட்டிற்குள் நுழைந்தவள், “நான் கனடா போலாம்னு முடிவு பண்ணிட்டேன்” என்றாள். பாட்டியின் மிரட்டலையோ புலம்பலையோ காதில் போட்டுக் கொள்ளாதவள், பெற்றோரையும் அழைத்து அவள் முடிவைச் சொல்ல, அங்கும் அவள் தந்தையின் எதிர்ப்பு கிளம்பியது. அனைவரையும் சம்மதிக்க வைத்தவள், “விசாக்கு அப்பளை பண்ணிட்டு நான் ஊருக்கு வரேன். கொஞ்ச நாள் உங்க கூட இருந்துட்டு கிளம்பறேன்” என்றாள்.

மறுபுறம், வீட்டிற்குள் நுழைந்த ரஞ்சனி கோவமாகக் கையைக் கட்டிக்கொண்டு அமர்ந்துவிட, விஷ்ணுவும் கடுகடுவெனத் தான் இருந்தான். காரைப் பார்க் செய்துவிட்டு பின்னே வந்த ரிஷிநந்தன் அவர்களைக் கண்டுகொள்ளாமல் கடந்து தன் அறைக்குச் செல்ல,

“டேய்! நில்லுடா” என்ற ரஞ்சனியின் குரலில் திரும்பாமல் அப்படியே நின்றான் ரிஷி.

ரஞ்சனி கோவமாகச் சத்தம் போடத் துவங்கினார்.

“அந்த பொண்ணு ஊருக்கு போறேன்னு சொன்னா, வேண்டாம்னு சொல்லாம போன்னு சொல்லுற? என்ன நாங்க எல்லாரும் ஓகே சொன்னதால கொழுப்பா இல்ல அந்த பொண்ணு உன்னையே சுத்தி சுத்தி வரான்னு திமிரா?”

விஷ்ணு, “நீ போன்னு சொன்னதும் அவ முகம் எப்படி வாடிப்போச்சு தெரியுமா?“

“அதெல்லாம் பத்தி அவனுக்கு என்ன கவல? அவனுக்கு அவன் வறட்டு பிடிவாதம்தான் முக்கியம்! காரணமே இல்லாம கல்யாணம் வேண்டாம் வேண்டாம்ன்னு சொல்றானே, அந்த பொண்ணு அன்பை உணர்ந்து பிடிவாதத்தை விடுவான்னு நினைச்சேன், இவன் திருந்த மாட்டான்”

“உணர்ந்ததால தான் மா போக சொன்னேன்!” என்றவன் குரல் உடைந்தது.

ரஞ்சனியும் விஷ்ணுவும் ரிஷியின் முதுகை வெறிக்க, அவனோ அமைதியாகவே இருந்தான்.

“அப்போ ஏன் இப்படி பிடிவாதம் பிடிக்கிறே? எனக்கு இன்னிக்கி தெரிஞ்சே ஆகணும்!” ரஞ்சனி வேகமாக எழுந்து சென்று ரிஷியைத் திருப்ப,

கண்கள் கலங்க நின்றிருந்தவன், “என்னை எதுவும் கேட்காத மா!” என்று தன் அறைக்குச் செல்ல, மகனின் கண்ணில் கண்ணீரை எதிர்பாராவதரோ பதறி விட்டார்,

“டேய் என்னடா ஆச்சு? எனக்கு புரியல உன் பிரச்சனை என்ன?” விஷ்ணு அவனைப் பின் தொடர,

ரிஷியோ முகத்தைக் கைகளில் முட்டுக்கொடுத்து அமர்ந்துவிட்டான்.

“என்னன்னு வாய தொறந்து சொன்னா தானே தெரியும்?” ரஞ்சனி அவன் முதுகை வருட, கண்களைத் துடைத்துக்கொண்டு நிமிர்ந்தவன்.

“எனக்கு கல்யாணமே வேண்டாம் மா!” என்றான் விரக்தியுடன்.

ரஞ்சனி, “ஏனாம்?” என்று அவனை முறைக்க

“ஏன்னா? அப்பா சித்தப்பா மாதிரி நானும் விஷ்ணுவும் பிரிய வேண்டாம்னு அர்த்தம்!” கத்திவிட்டவன்,

“அப்பாவும் சித்தப்பாவும் பிரிஞ்சது சித்தியால தானே? நானும் இப்போ கல்யாணம் பண்ணிக்கிட்டு விஷ்ணுவை பிரியணுமா? சித்தியும் பாட்டியும் சண்டை போட்டு தானே மொத்தமா நம்ம குடும்ப நிம்மதியே போச்சு?

இதோ இவன குழந்தைனும் கூட பாக்காம சித்தி உன்கிட்ட குடுத்துட்டு போயிட்டாங்க. சித்தப்பா என்னடான்னா இன்னொருபக்கம் போயிட்டாங்க! சிதைஞ்சுது என்னமோ நம்ம குடும்பமும் இவன் மனசும் தான்!

எவ்ளோ நாள் அம்மாவை தேடி அழுது இருப்பான்? எவ்ளோ நாள் பெத்தவங்களை நினைச்சு ஏங்கி இருப்பான்? இப்போ தான் அவன் நம்ம கூட நிம்மதியா இருக்கான். அதையும் வர போற ஒருத்திக்காக நான் குலைக்கணுமா?

என் மேல வர்ஷா பாசமா இருக்கா ஓகே ஆனா அதே மாதிரி விஷ்ணுவை பாசமா பாத்துப்பாளா? சித்தி மாறி சொத்தை பிரிச்சுக்கிட்டு தனிக்குடித்தனம் போகலாம்னு சண்டை போட்டா? நான் விரும்புற பெண்ணை நானே மனசார வெறுக்குற மாதிரி ஆகிடாதா?

இதைவிட நான் தனியாவே இருந்துக்குறேன். மனசுக்குள்ள இருக்க அவ நினைவுகளே போதும். எனக்கு விஷ்ணு தான் முக்கியம். இதுக்குமேல என்ன தொந்தரவு பண்ணாத!” படபடவெனப் பொரிந்து தள்ளியவன் கண்களை மூடிக்கொள்ள, சில நொடிகள் ஆழ்ந்த அமைதி நீடித்தது.

“அப்போ நானும் கல்யாணம் செஞ்சுக்கலமா!” என்ற விஷ்ணுவின் குரலில் நிமிர்ந்த ரிஷி, “பைத்தியம் இதுக்கும் உன் கல்யாணத்துக்கும் என்ன சம்மந்தம்?” என்று முறைக்க.

“எதுக்கு? எனக்கு வரவ மட்டும் நம்மளை பிரிக்க மாட்டான்னு என்ன நிச்சயம்? காதலிக்கிற பெண்ணையே நீ இழக்கலாம், நான் யாருன்னே தெரியாம வரப்போறவளை முன்னாடியே வேண்டாம்னு சொல்லக் கூடாதா?” விஷ்ணுவும் ரிஷியை முறைத்தான்.

“அவ அப்படி செய்வான்னு என்ன நிச்சயம்?”

“வர்ஷா மட்டும் அப்படி செய்வான்னு என்ன நிச்சயம்?”

“நீ சும்மா தர்க்கம் பண்ணாத டா” ரிஷி எழுந்து விட,

“நீ வர்ஷாவை வேண்டாம்னு சொன்னா, நானும் தனியாவே உனக்கு துணையா இருக்கேன் அவ்ளோ தான்!”

இருவரது வாதத்தையும் பார்த்திருந்த ரஞ்சனி, அமைதியாகவே இருக்க, “எனக்கு சப்போர்ட் பண்ண மாட்டியா?” விஷ்ணு அவரை முறைக்க,

அவர் பார்வையோ ரிஷியின் மீது இருந்தது, “நீ வர்ஷாவை விரும்புரியா இல்லயா?”

அமைதியாக அவன் கண்களை மூடிக்கொள்ள,

“விரும்புரியா இல்லையான்னு கேட்டேன்”

“விரும்பறேன் மா! மனசார விரும்பறேன்! ஆனா கல்யாணம் செஞ்சுக்குற எண்ணம் எனக்கு இல்ல. நான் தனியாவே இருந்துக்குறேன்” என்றுவிட்டு வேகமாக வீட்டைவிட்டு வெளியேறினான்.

ரஞ்சனி விஷ்ணுவைக் குழப்பமாகப் பார்த்திருக்க, கண்சிமிட்டி அவர் தோளைத் தட்டியவன், “சாமியார் இவ்ளோ தூரம் வந்ததே பெருசு, இன்னும் கொஞ்சம் டைம்தா தானா நம்ம வழிக்கு வந்துடுவான்” என்று புன்னகைத்தான்.

***

சில வாரங்கள் கழிய ரிஷியை அழைத்தவள், “நான் கனடாவுக்கு போலாம்னு டிசைட் பண்ணிட்டேன், விசா வந்தாச்சு, ஊருக்கு ஒருவாரம் போயிட்டு வரலாம்னு இருக்கேன் அப்பா அம்மாவ பார்க்க… ட்ரெயின்ல தான் இருக்கேன்” என்றாள் படபடவென.

அவள் சொன்னதில் செய்துகொண்டிருந்த வேலையை அப்படியே நிறுத்தியவன், “ஏன் ? எதுக்கு இவ்ளோ அவசரமா?” என்று கேட்டுவிட்டு உதட்டை கடித்துக்கொண்டான்.

“அவசரம் தான் ரிஷி! நீங்க சொன்னப்ப கூட கோவம்தான் வந்தது ஆனா நந்தாவே போன்னு சொன்னப்போ மனசு உடைஞ்சு போச்சு!” அவள் கலங்கியது அவள் குரலில் வெளிப்பட, ரிஷியின் கண்களும் கலங்கின,

‘சாரி வர்ஷா இதான் உனக்கு நல்லது. விஷ்ணுகாக நான் என் மனசை கல்லாக்கிக்கதான் வேணும்’

இருவரும் மௌனமாகவே இருக்க, வர்ஷாவே தன்னை தேற்றிக்கொண்டு, “விடுங்க ரிஷி, நான் மறுபடி லூசு மாதிரி ஏதாவது செஞ்சுப்பேன்னு நினைக்காதீங்க. நான் மனசை எப்படியான கட்டுப்படுத்திப்பேன். கவலை படாதீங்க”

ரிஷி. “கண்டிப்பா நீ நார்மலா வாழ்க்கையை தொடருவே தானே?” என்று மெல்லிய குரலில் கேட்க,

விரக்தியுடன் சிரித்தவள், “கண்டிப்பா ட்ரை பண்ணுவேன். பயப்படாதீங்க. ஊர்லேந்து வந்ததும் ரெண்டு நாள்ல கிளம்பனும்” என்றாள்.

“இவ்ளோ வேகமா கிளம்பணுமா?” ரிஷி இவ்வளவு துரிதமாக அனைத்து ஏற்பாடுகளும் நடக்குமென நினைக்கவில்லை.

“அதான் நல்லது, நந்தாவை பாத்தா மனசு மாறும்னு தான் நான் இவ்ளோ நாளா எப்போவும் போற ஹோட்டல் கூட போகல” சோகமானவள்,

“கால் வருது ரிஷி, அப்புறம் ஃபோன் பண்ணறேன்” என்று அழைப்பைத் துண்டித்துவிட்டு, அவள் தாயின் அழைப்பை ஏற்றாள்.

மனதில் கணம் கூடியதை உணர்ந்தவன் லேப்டாப்பை மூடிவிட்டு கண்களை மூடி நாற்காலியில் சாய்ந்துவிட்டான். தன்னையும் மீறிக் கண்களின் ஓரம் நீர் துளிர்த்தது.

நாட்கள் வேகமாகச் சென்றுவிட, விஷ்ணுவை அழைத்தாள் வர்ஷா,

“நாளைக்கு கிளம்பனும், இன்னிக்கி லஞ்சுக்கு மீட் பண்ணலாமா? நீங்களும் நந்தாவும் வர முடியுமா?”

“என்ன வர்ஷா ஒரு வார்த்தை சொல்லல?” விஷ்ணு கோவித்துக்கொள்ள, சில நிமிட போராட்டத்திற்குப் பிறகு அவனைச் சமாதானம் செய்தவள், “இப்போ ஒரு வருஷம் தான். அதான் வாட்ஸாப்ப் அது இதுன்னு இருக்கே. நான் டச்லேயே இருப்பேன்”

“என்னமோ போ ! ஒரு பிரெண்ட் கிட்ட சொல்லணும்னு தோணல? சரி இனி பேசி என்ன பிரயோஜனம்? சரி மதியம் வரோம் மீட் பண்ணலாம்” என்ற விஷ்ணு ரிஷியை அழைத்துக் கோவமாகக் கத்த துவங்கினான்.

அன்று வர்ஷா தன் அலுவலகத்தில் நெருங்கியவர்களிடம் சொல்லிக்கொண்டும், நிர்மலிடம் பேசியபடியும் பாதி நாளைக் கழித்து, ரிஷி விஷ்ணு இருவரையும் சந்திக்கப் புறப்பட்டாள்.

இதன் பிறகு எப்பொழுது பார்க்க முடியுமோ என்ற வலி ஒருபக்கம் இருந்தாலும், முடிந்தவரை அவனைக் கண்களால் மனதில் நிறைத்துக்கொள்ளத் துடித்தது பெண் மனம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!