UMUV18

Banner-7a93ce66

UMUV18

18

விஷ்ணுவின் அறைக்குள் வேகமாக நுழைந்த ரிஷி “வர்ஷா கிட்ட என்னடா சொன்ன?” மிரட்டலாக கேட்க,

“ஹேப்பி ஜெர்னி சொன்னேன்” என்றான் விஷ்ணு.

“அதுக்கு முன்னாடி?”

“போனதும் மெசேஜ் அனுப்ப சொன்னேன்”

“நான் பதறிட்டு கேட்கறேன் நீ கூலா யுட்யூப் பாத்துட்டு இருக்க? ஒழுங்கா சொல்லுடா வர்ஷா கிட்ட என்ன சொன்னனு?”

“எதுக்குடா கேக்குற?” விஷ்ணு அலுத்துக்கொள்ள,

“சொல்லுடா!”

“எங்க அண்ணன் உன்னை லவ் பண்றான்னேன்”

“விஷ்ணு!”

“சும்மா சொன்னேன்டா” என்று சிரித்த விஷ்ணு, “நான் ஜெனெரலா தான் பேசினேன். அவ மேல நீ கோவமா இருந்தா உன்னை சமாதானம் பண்ண சொன்னா. ஓகேன்னு சொன்னேன்” என்று ரிஷியின் முகம் பார்க்க,

அவனோ “இவ என்ன ஊரெல்லாம் சொல்லிக்கிட்டு இருக்காளா?” என்று உரக்கவே முணுமுணுத்தான்.

“என் கிட்ட சொன்னா என்ன?” விஷ்ணுவின் முறைப்பில் கோவம் மறந்து சிரித்த ரிஷி,

“உன் கிட்ட சொன்னா ஊருக்கே சொன்ன மாதிரி தானே?” என்று கண்ணடிக்க

“போடா போ! உன்ன போயி நல்லவன் வல்லவன், நாலும் தெரிஞ்சவன்னு சொல்லி பில்டப் பண்ணேன் பாரு, என்ன சொல்லணும்” விஷ்ணு கோவமாக கையை கட்டிக்கொண்டான்.

“டேய்! அவளுக்கு உண்மை தெரிஞ்சு போச்சோன்னு நானே டென்க்ஷனா இருக்கேன்”

“எந்த உண்மை?”

“எந்த உண்மைன்னா?”

“நீ அவளை லவ் பண்றேன்றேன்றதையா? இல்ல அகாங்ஷாகிட்ட வர்ஷாவோட ஆன் சைட் ஆசையை சொல்லி, அவளுக்கு லண்டனுக்கு பதிலா கேனடாவா இருந்தா நல்லா இருக்கும்னு, நீ இருந்த ஊருன்னு அங்கேயே ஏதான வாய்ப்பிருந்தா சிபாரிசு பண்ண சொன்னதயா இல்ல…”

அவசரமாக குறுக்கிட்ட ரிஷி “நான் தான் ரிஷின்றத! நீ பாட்டுக்கு எதையான அவ கிட்ட உளறி வைக்காத, சொல்லிட்டேன்” என்று எச்சரிக்க,

“அவளுக்கு எப்படி தெரியும்?”

“என்ன கேட்டா? நீயும் நந்தாவும் ஒரே ஆளா இருக்க கூடாதான்னு கேட்டாடா…” என்ற ரிஷி நெற்றியை பிடித்துக்கொண்டான்.

“வாவ்! அப்போ ரிஷியாவும் அவளை இம்ப்ரெஸ் பண்ணிருக்கன்னு சொல்லு. நந்தா ரிஜெக்ட் பண்ணதும், ரிஷியை டேட் பண்ணலாம்னு நினைக்கிறாளோ?” விஷ்ணு விஷமமாக கேட்டதில், பற்களை கடித்த ரிஷி,

“அவ நந்தாவ மட்டும் தான் லவ் பண்றா!” கடிந்துக்கொள்ள,

விஷ்ணு நமுட்டுசிரிப்புடன் “மிஸ்டர் அண்ணா, நந்தாவும் நீ தான், ரிஷியும் நீ தான். உன்னை பார்த்து நீயே பொறாமை படுற!”நினைவூட்டினான்.

ரிஷியோ அதை காதில் போட்டுக்கொள்ளாததைப் போல சென்றுவிட,

“காதல் வந்தா நட்டு கழண்டுதான் போகுமோ?” முணுமுணுத்துக் கொண்டான் விஷ்ணு.

தன் அறைக்குள் நுழைந்த ரிஷி, வர்ஷாவின் விமானத்தை இன்டர்நெட்டில் ட்ராக் செய்ய துவங்கினான். மனம் அவ்வப்போது அவள் சொன்ன வார்த்தையில் குழம்பினாலும்,

“இல்ல அவ நந்தாவை தான் லவ் பண்ணுறா. நான் நோ சொன்னவுடனே மனசை மாத்திக்கற ஆளில்ல” தனக்குத்தானே சமாதானம் சொல்லிக்கொண்டான் .

சுமார் இருபத்தியிரண்டு மணிநேர பயணத்திற்கு பிறகு கெனடா சென்றடைந்தாள் வர்ஷா.

ஹோட்டல் அறையை அடைந்தவள் பசிக்கு எதையோ கொரித்துவிட்டு உறங்கிவிட, அவள் மெசேஜை எதிர்பார்த்திருந்த ரிஷியோ தன் அலுவலகத்தில் குறுக்கும் நெடுக்கும் தவிப்புடன் நடந்து கொண்டிருந்தான்.

‘ஒரு மெசேஜ்! ஒரே ஒரு மெசேஜ், பத்திரமா வந்து சேர்ந்துட்டேனு அனுப்பினா என்னவாம்?’ கடுகடுவென இருந்தவன், மதிய உணவின் போதும் கோவம் குறையாமல் இருந்தான்.

விஷ்ணு “என்னடா சாப்பிடாம தட்டையே பார்த்துட்டு இருக்க?” ரிஷியின் முகத்திற்கு நேரே கையை வீசி அவன் சிந்தனையை கலைக்க,

ரிஷி, “வர்ஷாவ ரீச் ஆனதும் மெசேஜ் பண்ண சொன்னேன், வாட்ஸாப்ப்ல லாஸ்ட் சீன் காட்டல, கவலையா இருக்குடா. மதுவுக்கு ஃபோன் பண்ணி கேக்கலாமா?”

“என்ன சொல்ற, அவ தான் அந்த ஊர் நம்பரிலிருந்து மெசேஜ் அனுப்பினாளே!” என்று தன் மொபைலில் அவள் மெசேஜை காட்டியவன்,

“பாரு அவ ஹோட்டல் ரூமை ஃபோட்டோ கூட எடுத்து அனுப்பிருக்கா, கொஞ்சம் முன்னாடிதான் டின்னர் சாப்பிட்டு தூங்க போறேன்னு சொன்னா” என்று மொபைல் திரையை காட்ட,

வர்ஷா தன்னை வேண்டுமென்றே புறக்கணித்ததை புரிந்துகொண்ட ரிஷி, ஏனென்று விளங்காமல்,

‘நான் ஒருத்தன் இங்க பைத்தியம் மாதிரி காத்துகிட்டு இருக்கேன்’ கோவத்தையும் ஏமாற்றத்தையும் வெளிக்காட்டாத, போலியான எதார்த்த குரலில் “சரி, என்னை பத்தி கேட்டாளா?” என்று கேட்க,

விஷ்ணுவோ மறுப்பாக தலையசைத்து, “நீ தான் அவளை வேணாம்னு சொல்லிட்டேல? அப்புறம் உன்னை பத்தி ஏன் கேக்கணும். நீயே சொல்லு” நக்கலாக கேட்டவன், ரிஷியின் பதிலுக்கு காத்திராமல்,

“வர்ஷாக்கு பிடிச்ச வத்தல் குழம்பு, அவளை கடுப்பேத்த போறேன்”, தன் தட்டை புகைபடமெடுத்து ‘நீ ஊருக்கு போனதை கொண்டாட நந்தா எனக்கு பார்ட்டி தாரான்’ என்று அவளுக்கு அனுப்பிவைத்தான்!

“சரி சரி அவ நம்பர் தா”

“சாரி டா! ஒரு பொண்ணோட நம்பரை அவ அனுமதி இல்லாம மூணாவது மனுஷனுக்கு தரக்கூடாது” என்ற விஷ்ணு, “அவ ஓகேன்னு சொன்னா தரேன்” என்று சர்வ சாதாரணமாக சொல்ல,

கோபமாக மேஜையை அடித்த ரிஷி, “நான் மூணாவது மனுஷனா?” என்று கண்கள் சிவக்க,

விஷ்ணுவோ அலட்டிக்கொள்ளாமல், “அவளை வேண்டாம்னு சொன்னதுமே நீ மூணாவது மனுஷனா ஆயிட்டேதானே?” கேட்க,

“வேண்டாம்னு எப்போடா சொன்னேன்?”

“வேணும்னும் மட்டும் எப்போடா சொன்ன? காதலிக்கிறேன்னு ஒரு பொண்ணு சொன்னா, எவனாவது சாரின்னு சொல்லிட்டு வருவானா?”

பொறுமை இழந்த ரிஷி உடனே எழுந்துவிட்டான்.

“சாப்பாட்டை வேஸ்ட் பண்ண கூடாதுன்னு நீ தான் எனக்கு சொல்லிக்கொடுத்த?” விஷ்ணு நினைவுபடுத்த, கோவமாக மீதி உணவை உண்டவன் விறுவிறுவென புறப்பட்டுவிட்டான்.

விஷ்ணுவோ ‘மனசு முழுக்க லவ், ஆனா வெளிய வெட்டி பந்தா!’ என்று சிரித்துக்கொண்டான்.

இரண்டு நாட்கள் வர்ஷாவிடமிருந்து எந்த தகவலும் வராமல் போகவே நிலைகொள்ளாமல் ரிஷி தவிப்பதைப் பார்த்து, தங்களுக்குள் கேலிபேசி ரஞ்சனியும் விஷ்ணுவும் சிரித்துக்கொண்டத்தை அவன் அறியவில்லை.

இந்தியாவிற்கும் கெனடாவிற்கும் இடையேயான நேர வித்தியாசத்தால், பகல் இரவு பாராமல் உறங்குவதும் விழித்திருப்பதுமாக நாட்களை கழித்தவள், மூன்றாவது நாள் முதல் முறையாக தன்னுடைய அலுவலகத்திற்கு சென்றாள்.

புதிய அலுவலகத்தில் மேலாளர்கள் மற்றும் சக பணியாளர்கள் அன்பாக வரவேற்றதும், நட்பு பாராட்டியதும் அவள் பயத்தையும் தயக்கத்தையும் வெகுவாக குறைத்தது.

***
வர்ஷா அன்று ரிஷிக்கு முதல் முறையாக,

‘வர்ஷா ஹியர். எப்படி இருக்கீங்க ரிஷி? சாரி ஜெட்லேக்னால தூக்கம் சரி வரல. இது என் நம்பர்,சேவ் பண்ணிக்கோங்க. உங்ககிட்ட நிறைய நிறைய பேசணும், எப்போ நேரம் கிடைக்குமோ சொல்லுங்க’ என்று மெசேஜ் அனுப்பிவைத்தாள்.

அடுத்த நொடியே ரிஷியின் அழைப்பு வர விழிகள் விரிந்தவள், “ஹாய் ரிஷி எப்படி…” என்று துவங்கும் பொழுதே,

“கொஞ்சமும் பொறுப்பே இல்லையா வர்ஷா?” என்று ரிஷி கத்தியிருந்தான்.

அவன் கோவத்தின் காரணம் புரிந்தாலும் காட்டிகொள்ளாதவள், “என்ன ஆச்சு ரிஷி?” என்று அப்பாவியாக கேட்க,

அவனோ “என்ன ஆச்சா? ஒரு மெசேஜ்! ஒரே ஒரு மெசேஜ் அனுப்பினா குறைஞ்சு போவியா? தூக்கம் சரி இல்லைனா முழிச்சு இருக்கும்போது அனுப்புறது! நீ எப்படி இருக்கியோ என்னவோன்னு தவிச்சுக்கிட்டு இருந்தேன் தெரியுமா?” படபடவென பொரிந்து தள்ள,

‘தவிச்சியா? எனக்காகவா?’ சந்தோஷத்தில் முகம் மலர்ந்தவள்,
“சாரி ரிஷி, என்னை பத்தி நினைக்க நந்தாவுக்கே நேரமில்லை, உங்களுக்கு மட்டும் இருக்குமான்னு தான்..” அப்பாவியாக கேட்டதில்,

“வாட்?” என்று ரிஷி அதிர, உற்சாகமான வர்ஷா,

“பின்ன என்ன ரிஷி? என் நம்பரை அவன் தம்பிகிட்ட கொடுத்து மூணு நாளாச்சு…முழுசா மூணு நாளாச்சு! ஒரே ஒரு ஹாய் அனுப்பினா குறைஞ்சு போவானா என்ன? எல்லாம் கொழுப்பு! நானா போயி காதலை சொன்னேன்ல அந்த கொழுப்பு!”

“என்ன? நம்பர் கொடுக்க சொன்னியா?” என்றவன், ‘அடப்பாவி விஷ்ணு எல்லாம் உன் வேலையா? வச்சுக்கறேன்!’ என்று தம்பியை கருவிக்கொண்டு, “விடு ஏதாவது வேலையா இருப்பான்” என்று சமாளித்தான்.

“நீங்க என் பிரெண்டா அவன் பிரெண்டா?” உரிமையாக வர்ஷா மிரட்ட ,

“உனக்கு தான்” என்று கொஞ்சும் குரலில் சொன்னவன்,

“அவனை அனாவசியமா தப்பா நினைக்கவேண்டாம்னு சொன்னேன் அவ்ளோதான். பாவம் அவன் பக்கம் என்ன நடந்ததுன்னு தெரிய வேணாமா?” தானாக தனக்கே பரிந்து பேசினான்.

“வேண்டவே வேண்டாம்! மனசுக்குள்ள ஆசையை வச்சுக்கிட்டு, சாமியார் வேஷம் போடுற சரியான கேடி அவன்!”

“நீ பிளேன்லேந்து ஃபோன் பண்ணப்போவே கேக்கணும்னு நினைச்சேன், அவன் உன்ன கா..காதலிக்கிறானு எப்படி உறுதியா சொல்லறே?”

“என் நந்தாவை எனக்கு தெரியாதா?” அவள் குரலில் தெரிந்த உரிமை ரிஷியின் முகத்தில் புன்னகையை படரச்செய்தது.

வர்ஷா “நான் ஊருக்கு வந்ததுலேந்து அவன் ஒழுங்கா சாப்பிடலையாம், தூங்கலையாம் ஏன் வீட்ல யார்கிட்டயும் ஒழுங்கா பேசக்கூட இல்லையாம். அவன் என்னை ரொம்ப மிஸ் பன்றான் ரிஷி”

“எப்படி சொல்றே?”

“அவன் தம்பி தான் எனக்கு அடிக்கடி ரன்னிங் கமென்டரி தாரானே” வர்ஷா மிடுக்காக பதிலளித்ததில் அதிர்ந்தவன், ‘எனக்கு எதிரி வீட்லயே இருக்கான்’ நெற்றியில் அடித்துக்கொண்டு, “அதை விடு வர்ஷா ஏதாவது அஜீரணமா இருக்கும்” என்று பதற்றத்தில் உளற,

“காமெடி பண்ணாதீங்க ரிஷி, மூணு நாளா அஜீரணமா? அது வயரா வேற ஏதாவதா?” என்று வர்ஷா விடாமல் சிரிக்க, ரிஷியும் சிரித்துவிட்டான்.

“சரி அதவிடு, தங்குறதுக்கு என்ன ஏற்பாடு செஞ்சிருக்கே, எவ்ளோ நாள் ஹோட்டல் ரூம் கொடுத்திருக்காங்க?”விளையாட்டை கைவிட்டு அவன் கேட்க,

“இன்னும் ஒரு வாரம் ரூம் இருக்கு, வேணும்னா இன்னொரு வாரம் நீட்டிக்கலாம்னு சொல்லிருக்காங்க. நானும் தேட ஸ்டார்ட் பண்ணியிருக்கேன். எல்லாமே ரொம்ப காஸ்டலியா இருக்கு ரிஷி. எனக்கு மட்டும்தானே சின்னதா ஸ்டூடியோ பிளாட் (ஒற்றை அரை அடுக்குமாடி குடியிருப்பு) இருந்தா போதும். ஆஃபீஸ்லயும் சொல்லி வச்சுருக்கேன்” என்றாள் கவலையாக.

“என்ன பட்ஜெட்ல தேடற?”

அவள் தன்னால் முடிந்ததை சொல்ல, “கிடைக்கும், பொறுமையா தேடு” என்றவன் பொதுவாக சில நிமிடங்கள் பேச, நேரமாவதை உணர்ந்தவள்,

“நீங்க தூங்குங்க ரிஷி, உங்களுக்கு இப்போவே ராத்திரி ரெண்டு மணி இருக்கும்ல. நாளைக்கு ஆபீஸ் வேற போகணும்” என்றாள்.

“ம்ம்ம், சரிமா. இனிமேயாவது அப்பப்போ மெசேஜ் பண்ணு தாயே, என்னை மறுபடியும் இப்படி திராட்டுல விடாத. புரியுதா?” அவன் செல்லமாக மிரட்ட,

“கண்டிப்பா” என்றவள், அழைப்பை துண்டித்துவிட்டு, ‘லவ் யு ரிஷி’ என்று சொல்லிக்கொண்டாள்.

மறுநாள் காலை உணவுமேஜையில் விஷ்ணுவை பிடித்திருந்த ரிஷி, “அவ நம்பர் கொடுத்தாளா?” என்று மிரட்ட,

விஷ்ணுவோ, “அம்மா தக்காளி சட்னி சூப்பர்” என்றான் காதில் விழாததுபோல்.

ரஞ்சனி, “உனக்கு பிடிக்கும்னுதான் பண்ணேன் செல்லம்” என்று இன்னும் பரிமாற,

“டேய் வர்ஷா நம்பர் கொடுத்து, என் கிட்ட கொடுக்க சொன்னாளா?” இல்லாத பொறுமையை இழுத்து பிடித்துக்கொண்டு ரிஷி கேட்க,

விஷ்ணுவோ “அம்மா இட்லி ரொம்ப மெத்து மெத்துன்னு இருக்கு இன்னும் ரெண்டு கிடைக்குமா?” அப்பாவியாக கேட்க,

ரஞ்சனியோ அவன் தலையை கோதியபடி “உனக்கில்லாததா இந்தா” என்று கொஞ்ச, பொறுமையை இழந்தவன்,

“நான் ஒருத்தன் கேட்டுகிட்டு இருக்கேன்” என்று கத்த,

“நீயும் இந்த வீட்ல தான் இருக்கியா?” ரஞ்சனி கிண்டலாக கேட்டபடி, விஷ்ணுவிற்கு இட்லியை பரிமாறினார்.

“அம்மா ப்ளீஸ்” என்றவன், விஷ்ணுவை “டேய் உன்ன தான் கேட்டேன், ஏன்டா வர்ஷா நம்பரை தரல?” என்று குரலுயர்த்த,

“நான் தான் தரவேணாம்னு சொன்னேன்” என்றார் ரஞ்சனி

“ஏன் மா இப்படி பண்றீங்க ரெண்டு பேரும்? ச்சே!” கோவமாக எழுந்தவன் கைகழுவ,

“இவ்ளோ நாளா குட்டி போட்ட பூனை மாதிரி இருந்துட்டு… அவளை தான் வேண்டாம்னு சொல்லி அனுப்பிட்டேல்ல, இன்னும் என்ன?”

“சும்மா சும்மா வேண்டாம்னு சொன்னேன்னு சொல்லிட்டு… ஏன் உங்களுக்கு தெரியாதா, என் மனசு முழுக்க வர்ஷா தான் இருக்கான்னு?” கடுகடுத்தவன் “நான் கிளம்பறேன்” என்று கத்திவிட்டு அலுவலகம் புறப்பட்டுவிட்டான்.

வேலையில் கவனம் செலுத்த முடியாமல் தவித்தவன், யாருக்கோ கால் செய்து பேசிவிட்டு வார்ஷாவிற்கு மெசேஜ் செய்தான்.

‘என் பிரெண்ட் பிளாட், உன் ஆஃபிஸிலிருந்து கெஞ்சம் தள்ளி தான்… ஆனா நிறைய பஸ் இருக்கு. சரின்னா இந்த நம்பருக்கு கால் பண்ணு’ என்று ஒரு நண்பனின் பெயரையும் மொபைல் என்னையும் அனுப்பிவைத்தான்.

***

ரிஷி அனுப்பிவைத்த நபரை தொடர்பு கொண்டவள் , அந்த வார இறுதியில் வீடு பார்க்கச் சென்றாள்.

அவள் அலுவலகத்திலிருந்து சற்று தொலைவில் இருந்தாலும் அந்த குடியிருப்பு அமைந்திருந்த இடம் மிகவும் ரம்மியமாக இருந்ததது.

வெள்ளை பனி போர்வை போர்த்திய மரங்கள் நாற்புறமும் சூழ, குடியிருப்பின் அருகில் ஆங்காங்கே உறைந்திருந்த சிறிய ஏரியும், கண்ணிற்கெட்டிய தூரம் வரை பனி படர்ந்த கட்டிடங்களும் உடனே அவள் மனதை கவர்ந்தது.

அந்த சிறிய ஒற்றை படுக்கையறை பிளாட்டும், அந்த அமைதியான சூழலும், மிகவும் பிடித்துப்போக, கையோடு ஒப்புக்கொண்டவள், நன்றி சொல்ல ரிஷியை அழைத்தாள்.

‘தேங்க்ஸ் ரிஷி, உங்க பிரெண்ட் பிளாட் ரொம்ப நல்லா இருக்கு. கட்டில், சோஃபா, பிரிட்ஜ், ஸ்டவ்னு எல்லாமே இருக்கு. புதுசா வீட்டுக்கு போனா எல்லாம் வாங்கணுமேன்னு பயந்தேன்”

“அங்க எல்லாமே அப்படிதான் மா, எல்லா வீடும் முக்கால்வாசி ஃபர்னிஷ்டு தான், உனக்கு வீடு பிடிச்சிருக்கா? அந்த ஏரியா ஐடி கும்பல் மத்தில பிரபலம்”

“கேள்விப்பட்டேன். வாடகை மத்த இடத்தைவிட கம்மியாத்தான் சொன்னார் உங்க பிரென்ட். ரொம்ப தேங்க்ஸ் ரிஷி, நீங்க சொல்லாட்டி ரொம்ப தவிச்சிருப்பேன்”

“நமக்குள்ள எதுக்கு தேங்க்ஸ்?”

புன்னகைத்தவள், “ரிஷி…” என்று தயங்க,

“சொல்லு மா”

“நந்தாவ ரொம்ப மிஸ் பண்றேன்”

என்ன பதில் தருவதென்று புரியாமல் மௌனமாக இருந்தவன், அவளை தேற்ற வாயெடுக்கும் முன்னே,

“ஸ்னோ ஃபால் ( பணி மழை) ஸ்டார்ட் ஆகுது ஐயோ செம்ம அழகா இருக்கு” என்று வர்ஷா உற்சாகமாக சொல்ல,

“வாவ் அழகா இருக்கும்ல?” பழைய நினைவுகளில் மூழ்கியவனை,

“ஊர் மட்டுமில்ல, இங்க பசங்ககூட செம்மயா இருக்காங்க! அப்படியே செவ செவன்னு லட்டு மாதிரி, என் டீம்லயே ஒருத்தன் இருக்கான் பாருங்க! சும்மா மாடல் மாதிரி…” என்ற வர்ஷாவின் சொற்கள் ருத்ரமூர்த்தியாக மாற்றியது.

“நீ வேலை பண்ண தானே போன?” கோவமாக குறுக்கிட்டவன் குரலில் சட்டென்று வர்ஷாவிற்கு சந்தோஷம் பொங்க, அவனை மேலும் சீண்ட எண்ணியவள்,

“அதுக்காக கண்ணை கட்டிக்கிட்டா இருக்க முடியும்?” என்றாள் கிண்டலாக.

“அப்போ சைட் அடிச்சுகிட்டு ஊர் சுத்த போறியோ?”

“ஏன் கூடாது? கண்ணுக்கு குளிர்ச்சியா பசங்க சுத்துறாங்க, அவங்களை பார்த்துக்கிட்டே வேலை பார்த்தா ஸ்ட்ரெஸ் இருக்காது பாருங்க. நான் வேற காதல் தோல்வில இருக்கேன். என் புண்பட்ட மனசுக்கு மருந்தா இருக்கும்ல?”

‘காதல் தோல்வியா?’ அதிர்ந்தவன், “விளையாடாத வர்ஷா.சைட் மருந்தா?” என்று கடிந்து கொள்ள,

கண்டுகொள்ளாதவளோ, “விளையாடல ரிஷி. நிஜமாத்தான் சொல்றேன். ஜாலியா இருக்கு சைட் அடிக்க. அதுலயும் லூகாஸ்ன்னு என் டீம்ல ஒருத்தன் இருக்கான் பாருங்க.ஐயோ ஐயோ ஐயோ! அழகுனா அழகு கொள்ளை அழகு!

அழகு மட்டுமில்ல ரொம்ப நல்லவன் ரொம்ப டீசண்ட்! ஒரு வாரமா அவன் கூடத்தான் லன்ச் டின்னர் எல்லாமே, நான் இருக்க ஹோட்டல் பக்கத்துல தான் அவன் வீடு. அவன் தான் ஊர் பழகவும் ஹெல்ப் பண்றான்…”

“யாரா வேணா இருக்கட்டும். அவன் உனக்கு தேவையில்ல!” என்று குறுகிட்டவன்,

“ஊரெல்லாம் தானாவே பழகும், ஒழுங்கா சீக்கிரம் பிளாட்க்கு குடிபோகுற வழியப் பாரு.கண்டவன் கூட ஊர் சுத்தாம!” என்று மிரட்ட,

“ஊர் சுத்துறேனா? என்னமோ நான் இங்க டேட்டிங் போறமாதிரி பழிக்கிறீங்க?”

“ஓ அப்படிவேர நினைப்பிருக்கோ?”

“ஏன் நினைச்சா என்ன?”

“வர்ஷா!” ரிஷியின் குரலில் அதிர்ந்தவள் விளையாட்டை கைவிட்டு,

“நான் எங்கயும் போகல, யார்கூடவும் பேசல, தனியா விட்டத்தை பார்த்துகிட்டு பைத்தியம் மாதிரி கிடக்கேன் போதுமா? திருப்தியா?” என்று அலுத்துக்கொள்ள,

தலையை பிடித்துக்கொண்டவன், “ப்ளீஸ் வர்ஷா. உன் பாதுகாப்புக்குத்தான சொல்றேன்?” பொறுமையாகவே எடுத்துச் சொன்னான்.

“அதான் சரின்னு சொல்லிட்டேன்ல? இன்னும் ஏன் நொய் நொய்ன்னு இம்சிக்கிறீங்க?” அவள் கடிந்துகொள்ள,

“இம்சிக்கிறேனா? ஏன் சொல்லமாட்ட? நல்லதா பொல்லாதத பண்ணாதன்னா…என்னமோ பண்ணிக்கோ எனக்கென்ன?” கோவமாக அழைப்பை துண்டித்தான்.

வர்ஷாவோ “இது வெறும் ஆரம்பம் தான் பேபி. இனிமே என் வேலையே உன்னை கடுப்பேத்தி தலையை பிச்சுக்க வைக்கிறது தான்” என்றாள் வில்லி சிரிப்புடன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!