UMUV19
UMUV19
19
முதலில் கனடாவின் சூழலும், கடுங்குளிரும் வர்ஷாவிற்கு சங்கடமாக இருந்தாலும், விரைவிலேயே பழகிக்கொள்ளத் துவங்கினாள்.
அன்று குடும்பத்தினருடன் பேசி முடித்தவள், ரிஷியை அழைத்தாள்.
“என்ன மேடம் வர வர ஃபோன் பண்ணக்கூட நேரமில்லையோ? நான் பண்ணாலும் எடுக்கிறதில்ல, வாட்ஸாப்ப் மெசேஜ் தான் வருது?” ரிஷி அலுத்துக்கொள்ள,
“டைட்டா இருக்கு, வந்தா சமைச்சு சாப்பிடக் கூட நேரமில்ல, பாதி நாள் பிரெட் தான், இப்படியே ரெண்டு கிலோ காணாம போச்சு”
“என்னமா நீ? நேரம் கிடைக்கும்போது பொடி, தொக்கு ஏதான செஞ்சு வச்சுக்கலாம்ல? இல்ல இருக்கவே இருக்கு உனக்கு பிடிச்ச வத்தல் குழம்பு, செஞ்சு வச்சா அந்த குளிருக்கு ஒருவாரம் அப்படியே இருக்கும்” அவன் சொல்ல,
‘மாட்னியா வாடா வா’
“எனக்கு வத்தல் குழம்பு பிடிக்கும்னு உங்களுக்கு எப்படி தெரியும் ரிஷி?” அவள் சிரிப்பை அடக்கிக்கொண்டு கேட்க,
‘ஸ்ஸ்ஸ்’ தலையில் அடித்துக்கொண்டவன்,
“நீ தானே சொன்ன?” என்று சமாளிக்க,
“இல்லையே” கிண்டல் புன்னகையுடன் அவள் சந்தேகமாக கேட்க,
அவசரமாக, “இதுவா முக்கியம்? சொன்னதுக்கு சரின்னு ஒரு வார்த்தை சொல்றதில்ல, ஆர்கியு மட்டும் பண்ணு!” என்று பேச்சை மாற்றினான்.
“நீங்க என்ன என் டீச்சரா? நான் ஏன் நீங்க சொன்னதை கேட்கணும்? ப்ளஸ் இதெல்லாம் அடக்குமுறை சொல்லிட்டேன்”
“அடக்கு முறையா?”
“ஆமா!”
“நல்லதுக்கு சொன்னா பழி போட்றே?”
“உங்க ஊர்ல நல்லதை இப்படி கட்டளை மாதிரி தான் சொல்லுவீங்களோ?”
பொறுமையின்றி, “இப்ப என்னதான் சொல்றே?” என்று அவன் கடுகடுக்க,
“அய்யா சாமி! ஒன்னுமில்ல, பாக்கறேன்னு சொன்னேன்”
“பாக்காத, செய்!”
“சரி…சரி…சரி…” என்று அலுத்துக்கொண்டவள், “மொக்க போடாதீங்க ரிஷி” என்றவள் குரலில் தெரிந்த சிரிப்பில் தானும் சிரித்துவிட்டவன், “மொக்கையா? தேவைதான் எனக்கு. சரி விடு, வீகென்ட் என்ன பிளான்?”
“லூகாஸ் மூவி போலாம்னு சொன்னான், அத தவிர வேற பிளான் எதும் இல்லை. எப்படியும் எதாவது சுவாரசியமா பண்ணுவான்” அவள் அலட்டிக்கொள்ளாமல் சொல்ல, வர்ஷா லூகாஸின் பெயரைச் சொன்னதுமே ரிஷியின் முகத்தில் புன்னகை மறைந்து,
“நான் தான் சொன்னேன்ல அவன் கூடச் சுத்தாதேன்னு? போன வாரமும் இப்படித்தான் அவன் கூட ஷாப்பிங் போன?” என்று குரலுயர்த்த,
‘பார்றா ஞாபகம் வச்சுருக்கான்’ குஷியானவள்,
“தனியா போர் அடிக்குது ரிஷி. லூகாஸ் கூட போனா ஜாலியா பொழுதுபோகும்” என்று சிணுங்க,
“ஏன் உங்க டீம்ல லேடீஸ் இல்லையோ? இல்ல லூகாஸ விட்டா வேற பிரெண்டே இல்லையா?”
‘டுபுக்கு! நந்தாவா ஃபோன் மெசேஜ் எதுவும் பண்ண மாட்டானாம், ஆனா லூகாஸ் பேர சொன்னா பொத்துக்கிட்டு கோவம் மட்டும் வருமாம்’
“இருக்கியா இல்லையா?” ரிஷியின் மிரட்டலில் கடுப்பானவள்,
“ஏன் ஆம்பள பசங்ககூட பிரெண்டா இருக்க கூடாதா, இல்ல வெளியில போகக்கூடாதா? நீங்க என்ன உங்க ஆஃபிஸ்ல எந்த பொண்ணோடயும் பேசுறது இல்லையா? இல்ல வெளியில தான் போறது இல்லையா?”
“எங்களுக்கும் கேர்ள் பிரெண்ட்ஸ் இருக்காங்க தான், ஆனா இப்படி சதா சர்வ காலமும் அவங்க கூடவே திரிய மாட்டோம். எப்போ பாரு லூகாஸ் லூகாஸ்! ஜஸ்ட் இரிடேடிங்!”
“என் லிமிட் எனக்கு தெரியும் நீங்க ஒன்னும் சொல்ல வேண்டாம்! ச்சே மாலதி பாவம் உங்க கூட எப்படி தான் குப்பைக் கொட்ட போறாங்களோ! சரியான சந்தேக சாம்பிராணி!”
“பிச்சுடுவேன் பிச்சு! யாரு சந்தேக சாம்பிராணி?”
“ஏன் நீங்கதான்!”
“லூசு! உன் பாதுகாப்புக்குன்னு சொன்னா, அறிவில்லாம வாக்குவாதம் பண்ணிக்கிட்டு…வந்தேன் என்ன பண்ணுவேன்னு தெரியாது!” அவன் அதட்ட,
“மொதல்ல வாங்க, அப்புறமா என்ன பண்ணுவீங்கன்னு பார்ப்போம்”
“வரமாட்டேன்னு நினைக்கிறியோ?”
“வாங்களேன் யார் வேணாம்னு சொன்னா?”
“அப்படி வேற சொல்லுவியோ?”
‘நான் ஏன்டா உன்னை வராதன்னு சொல்லப்போறேன்?’ புன்னகைத்துக்கொண்டவள், போலியான கோபத்துடன்,
“என்னை இம்சிக்க தான் வர போறீங்கன்னா சொல்லுவேன்” என்றாள்.
அவள் பதிலில் ஒரு நொடி கோவம் வந்தாலும், சொல்லாதெரியாத வலி மேலோங்க, ரிஷி “எவனோ ஒருத்தனுக்காக என்னை வரவேண்டாம்னு சொல்லுவியா வர்ஷா?” ஆதங்கமாக கேட்க, சட்டென விளையாட்டை கைவிட்டவள்,
“லூஸா நீங்க, விளையாட்டுக்குத் தானே சொல்றேன்.நீங்க வந்தீங்கன்னா ரொம்பவே சந்தோஷப் படுவேன்” என்றாள் சினேகமாக.
அவனிடமிருந்து பதில்வராமல் போகவே, “ரிஷி…கோவமா? சும்மா தானே சொன்னேன். என்னப்பா நீங்க இதுகூட புரியாம”
“ஹ்ம்ம்”
“ஹ்ம்ம்னா?”
“என்ன சொல்லணும்?”
“என் மேல கோவமில்லைன்னு சொல்லணும்”
“வர்ஷா. ப்ளீஸ் ஒரு வெல்விஷ்ஷரா சொல்றேன். பார்த்துப் பழகு. தனியா வேற இருக்க, ஏதாவது ஆபத்துன்னா வந்து உதவி செய்ற தூரத்துல கூட நா இல்ல…” அவன் குரலில் தெரிந்த அக்கறையில்,
“என்னால என்னை பார்த்துக்க முடியும்! நான் கராத்தேல ப்ளூ பெல்ட்!” என்று அவனுக்கு தன் வீரத்தை பறைசாற்ற,
“சண்டை போட்டு மானத்தையும் உயிரையும் காப்பாதிப்ப. ஆனா மனசை எப்படி காப்பாதிப்ப?” ஏளன புன்னகையுடன் அவன் கேட்க,
“புரியல”
“நந்தா கிட்டேந்து தப்பிக்க அங்க போயி லூகாஸ் கிட்ட மாட்டிக்க பிளானா?”
அவன் சொன்னதின் அர்த்தம் புரிந்த நொடியே, “பாக்குறவன் பின்னாடியெல்லாம் காதலிக்கிறேன்னு போறவளா நான்?” ஆத்திரமாக எதிரே இருந்த தண்ணீர் பாட்டிலைத் தூக்கி எறிந்தவள், “மைண்ட் யுவர் வோர்ட்ஸ் ரிஷி!” என்று எச்சரிக்க, இருவரின் மூளையும் கோபத்தின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிட, வார்த்தைகள் எல்லை மீறத் துவங்கியது.
“நீ போற போக்க பார்த்தா என்ன வில்லங்கத்தை இழுத்துட்டு வருவியோ!”
“என்ன சொல்லவறீங்க?”
“நந்தாகிட்டேந்து மனசை மீட்கறேன்னு கண்டவன் வலையில சிக்கிக்காதன்னு சொல்றேன்”
“நான்சென்ஸ்!”
“நீ தான் சென்ஸ் இல்லாம இருக்க!”
“ரைட் தான், சென்ஸ் இல்ல தான்! காதலிக்கிறேன்னு சொல்லியும் கண்டுக்காம இருக்கிறவனையே இருபத்தி நாலு மணிநேரமும் நினைச்சுகிட்டு சுத்துறேன் பாருங்க நான் லூசு தான், சென்ஸ் இல்லாதவ தான்! பெஸ்ட் ஃப்ரெண்டுன்னு நம்பி உங்க கிட்ட எல்லாத்தையும் பகிர்ந்துக்கிறேன்ல நான் சென்ஸ் இல்லாதவ தான். உங்களுக்கு என்னை பார்த்த இவ்ளோ சீப்பாவா தெரியுது?”
“சம்பந்தமே இல்லாம பேசாத வர்ஷா!”
“என்னை பத்தி யோசிக்காத நந்தாவையும், என்னை புரிஞ்சுக்காத உங்களையும் வச்சுக்கிட்டு என்னால முடியல! ஐ ஹேட் யு போத்!”
“வர்ஷா!”
“வேணாம் ரிஷி, நான் ஃபோன் வைக்கிறேன், ஏதான சொல்லிட்டு அப்புறம் அதுக்கும் சேர்த்து நான் தான் வருத்தப்படுவேன். பை” என்றவள் அழைப்பைத் துண்டித்துவிட, கோவத்தில் மொபைலை மேஜையில் எறிந்தவன், நாற்காலியில் சாய்ந்துகொண்டான்.
‘அக்கறையா சொன்னா ஹேட் யுவாம்! அப்படி கூட வெறுத்துடுவியா நீ என்னை? பாக்குறேன் எப்படி வெறுக்குறன்னு!’ கறுவியவன் மனது எரிமலையாகக் குமுறத் துவங்கியது.
திட்டமிட்டபடி நண்பனுடன் திரைப் படத்திற்குச் சென்றவள், படத்தை ரசிக்காமல் உம்மென்றே இருக்க, லூகாஸ் பலமுறை கேட்டும் ஒன்றுமில்லை என்று சாதித்தவள், வீடு திரும்பியும் ரிஷியுடனான வாக்குவாதத்தை எண்ணி வருத்தமாகவே இருந்தாள்.
‘நான் கோவ பட்டிருக்கக் கூடாதோ? என் நல்லதுக்குத் தானே சொன்னார்… இல்ல அவன் பொறாமைல சொன்னான்… இருந்தாலும் வெறுக்குறேன்னு சொன்னது தப்புதான்’
வாட்ஸாப்பில் “சாரி ரிஷி! ஆனா நீங்க அப்படி சொன்னது தப்பு, இனிமே இப்படியெல்லாம் பேசாதீங்க” என்று டைப் செய்தவள், ‘நோ!’ அதை அழித்து, “சாரி ரிஷி” என்று மாட்டும் அனுப்பிவைத்தாள்.
அவனிடமிருந்து பதிலேதும் வராமல் போகவே, பொறுமையின்றி விஷ்ணுவை அழைத்தவள் வழக்கமான விசாரிப்புகளுக்குப் பின்னர், “நந்தா எங்க?” என்று கேட்க, வீடியோ காலை ஆன் செய்தான் விஷ்ணு.
“ஹாய் என்ன வீடியோ” அவள் விழிக்க,
“வா! நம்ம ஆளை பாப்போம்” ரகசியமாகச் சொன்னவன், மெதுவாக ரிஷியின் அறைகுள் செல்ல, அங்கே அவன் லேப்டாப்பின் முன்னே அமர்ந்தபடி நாற்காலியிலேயே உறங்கிவிட்டிருந்தான்.
“இரு எழுப்பறேன்” என்றபடி விஷ்ணு அவனை நெருங்க,
“ஐயோ வேணாம்! ப்ளீஸ்! டையர்டா இருக்கார் போலயிருக்கு” வர்ஷா கேட்டுக்கொண்டதால் கதவருகேயே நின்றுகொண்டவன், திரையில் வர்ஷாவை பார்க்க, அவளோ மொபைலில் ரியர் கேமெரா வழியாக, உறங்கிக்கொண்டிருக்கும் ரிஷியையே ரசித்துக்கொண்டிருந்தாள்.
விஷ்ணுவின் “கியூட்டா இருக்கான்ல?” என்ற கேள்வியிலிருந்த கிண்டலை உணராதவள், “ரொம்பவே கியூட்டா இருக்கான். பாரேன் எப்படி பேபி மாதிரி தூங்கறான். பாத்துகிட்டே இருக்கணும் போல இருக்குல?” என்றாள் கண்ணில் காதல் மின்ன.
விஷ்ணு கிளுக்கென்று சிரித்ததில் சுயநினைவுக்கு வந்தவள், உதட்டில் ஒற்றை விரலை வைத்து “ஷ்ஷ்! தூங்கறான்ல?” சத்தமாகச் சிரிக்காதே என்று வாயசைக்க, மெல்லமாகக் கதவைச் சாத்திய விஷ்ணு தன் அறைக்குச் சென்று,
“உன் ஆளை பாத்துட்டியா? இப்போ சந்தோஷமா?”
“தேங்க்ஸ் விஷ்ணு” என்றவள், மெய்யாகவே எதிர்பாராமல் தன்னவனைப் பார்த்ததில் மனம் நிறைந்துதான் போயிருந்தாள்.
விஷ்ணு புருவம் சுருக்கி, “வர்ஷா, முகத்துல என்னமோ இருக்கு” என்று சொல்ல,
“என்ன? எங்க?” என்றவள், முகத்தை துடைத்தபடி கேட்க,
“அங்க உதட்டுக்கிட்ட, காதுகிட்ட என்னத்த தேடறே?”
“தெரியலையே விஷ்ணு, என்ன இருக்கு?”
“என்ன நீ? இப்படி அப்பட்டமா வழியுது தெரியலைன்னு சொல்ற?” அவன் கேலி புன்னகையில், எதையோ உணர்ந்தவள்,
“ஹேய் என்ன கலாய்க்கிறியா?” என்று செல்லமாக மிரட்ட,
“வண்டி வண்டியா ஜொள்ளு கொட்டுது. எங்கண்ணனுக்கு இவ்ளோ தீவிர ரசிகையா நீ?” விஷ்ணு சொன்னதில் கன்னம் சிவந்தவள், வெட்கத்தை மறைக்கப் போராட, சிரித்துவிட்ட விஷ்ணு, “இருந்தாலும் அவனை இவ்ளோ சைட் அடிக்கக் கூடாது” என்று வம்பிழுக்க,
“ம்ம்க்கும் அடிச்சுட்டாலும்! நான் வேற சைட்டுக்கு மாறி ரொம்ப நாளாச்சு தெரியுமா?” என்றவள், தன்னுடன் பணிபுரியும் லூகாஸை பற்றிச் சொல்லத் துவங்கினாள்.
“டேய் ரூம்க்கு வந்தியா, குரல் கேட்டுது?” கண்களைக் கசக்கியபடி வந்த ரிஷி, அவன் முன்னே “ஹாய் சொல்லு” என்று விஷ்ணு மொபைல் திரையில் வர்ஷாவை காட்ட,
“ஹாய் நந்தா” என்று கையசைத்த வர்ஷா, “சாரி எழுப்பிட்டோமா?” என்று குற்றவுணர்வோடு கேட்க,
“இல்ல… இட்ஸ் ஓகே” என்ற ரிஷி, எதிர்பாராமல் அவளைப் பார்த்ததில் கனவோ என்பதைப் போல் குழப்பமாக அப்படியே நின்றுவிட்டான்.
“ஓகே நீ இவன் கூட பேசு, நான் சாப்பிட்டு வரேன், அதுவரை நீ உன் புது பாய்பிரென்ட் பத்தி அவன்ட்ட சொல்லு” என்ற விஷ்ணு ஹாலிற்கு சென்றுவிட, தானும் லூகாஸும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை அனுப்பிய வர்ஷா, அவனைப் பற்றி இப்பொழுது நந்தாவான ரிஷியிடம் சொல்லத் துவங்கினாள்.
“நீங்க சொன்ன மாதிரியே மனசை மாத்திக்க முடிவு பண்ணிட்டேன் நந்தா. லுகாஸ் ரொம்ப பாசமா நடந்துக்குறான், ரொம்ப கேர் எடுத்துக்குறான். இனிமே நீங்க என்னை பத்தி கவலைப்பட வேணாம். உங்களையே நினைச்சுகிட்டு வருத்தப்படுவேன்னு உங்களை வருத்திக்காதீங்க” என்று சொல்ல, கோவம் தலைக்கேறிட ரிஷி,
“அப்போ அவளோதானா உன்…” பேசிமுடிக்கும் முன்னே,
“நந்தா லுகாஸ் கால் பண்றான், அப்புறமா பேசறேன்” என்று வராத காலை சோல்லி அழைப்பைத் துண்டித்துவிட்டாள் வர்ஷா.
இதுவரை நேரடியாக அறிமுகமாகாத லூகாஸை ஜென்ம விரோதியாகவே இப்பொழுது கருதியவன், “லுகாஸ் லுகாஸ் லுகாஸ்… ஆஆஆ” என்று கத்த, ஓடிவந்த விஷ்ணு, ரிஷியின் கத்தலில் “என்னடா?” என்று கேட்க,
“ஓவரா போறாடா, ரொம்ப ரொம்ப ஓவரா போறா! கண்டிக்க ஆளில்லாம போச்சு” என்று கத்த,
“யார கண்டிக்கணும்?” விஷ்ணு பூரியைத் தின்றுகொண்டே கேட்க,
“எல்லாம் உன் அண்ணிக்கு தான்!” என்றவன், “கொழுப்பு கூடிப்போச்சு, கைல மட்டும் சிக்கட்டும் இருக்கு அவளுக்கு” என்று உறுமியவன், “பிரென்ட்னா இப்படித்தான் ஒட்டிக்கிட்டு உட்காரணுமோ!” கோவமாக விஷ்ணுவின் மொபைலை கட்டிலில் எறிந்தவன்,
“அவளை கனடாக்கு போக விட்டிருக்க கூடாது” என்று கத்தியவன், தன் பின்னந்தலையில் அடித்துக்கொண்டு, “தப்பு பண்ணிட்டேன்! ச்சே!” என்று கட்டிலின் காலை எட்டி உதைத்துவிட்டு அறையை விட்டு வெளியேறியதும், வேகவேகமாக ரஞ்சனியை அழைத்தான் விஷ்ணு.
“அம்மா இப்போ பாத்து ஊருல உட்கார்ந்து இருக்கே? இங்க என்ன நடக்குதுன்னு தெரியுமா?” என்று உற்சாகமாகக் கேட்டவன், ரிஷியே வர்ஷாவை “அண்ணி” என்றதை அவரிடம் சொல்ல,
ரஞ்சனியோ “உன் வாய்க்கு சர்க்கரைதான் போடணும் செல்லம்” விஷ்ணுவை விடாமல் கொஞ்சியவர், “இத இப்படியே நூல்பிடிச்சுக்கிட்டு போனா போதும், மொத்தமா நம்ம வழிக்கு வந்துடுவான்” என்றவர்,
“நான் கோவிலுக்கு போயிட்டு வரேன், அவனுக்கு ஒரு வழியா நல்ல புத்தி வந்துடுச்சு”
“ம்ம் இந்த சந்தோஷத்துல உன் கடமையை மறந்துடாதமா” விஷ்ணு விஷமமாக நினைவூட்ட,
“எதை டா”
“எதையா? வெரி பேட்! அவன் தான் கல்யாணத்துக்கு ரெடி ஆய்ட்டான்ல? இப்போ எனக்கு பொண்ணு தேட வேண்டாமா?”
சிரித்து விட்ட ரஞ்சனி, “ஏன் சார் தேட மாட்டீங்களா?”
“அதுக்கெல்லாம் எனக்கு பொறுமை இல்ல, நீயே…” பேசிக்கொண்டிருந்தவன், ”சரி மா அப்புறம் ஃபோன் பண்ணறேன், அப்பாகிட்ட ‘லவ் யு’ சொன்னேன்னு சொல்லிடு” என்று அழைப்பைத் துண்டித்துவிட்டு,
திடீரென்று தன் அறைக்குள் நுழைந்து, கட்டிலில்படுத்து கொண்ட ரிஷியின் நெஞ்சில் கைவைத்து, “என்னடா?” என்று கேட்க, ரிஷியோ மௌனமாகத் தம்பியின் கையைப் பற்றிக்கொண்டான்.
“உன்கிட்ட ஒரு விஷயத்தை சொல்லாம மறைச்சுட்டேன்…” தம்பியின் கண்ணைப் பார்த்துப் பேசத் துவங்கினான் ரிஷிநந்தன்.
***
நாட்கள் கழிய, மெள்ள மெள்ள ரிஷியும் வர்ஷாவும் சமாதானம் ஆகியிருந்தனர்.
ஜவுளிக்கடை ஒன்றில், கையில் இரண்டு உடைகளைப் பிடித்துக்கொண்டு, “இதுவா? இதுவா?” தங்கை மதுவிடம் வீடியோ காலில் கேட்டுக்கொண்டிருந்தாள் வர்ஷா.
“ரெண்டுமே நல்லாயிருக்கு ஆனா இந்த லேவெண்டர் டாப்ஸும் ப்ளாக் பேண்டும் ரொம்ப பிடிச்சிருக்கு” என்ற மது, “எதுக்கும் ஒரு வாட்டி ட்ரையல் போட்டு காட்டேன்”
“ஹ்ம்ம் ஓகே மாத்திட்டு வந்து ஃபோன் பண்றேன்” என்றவள், ட்ரையல் அறைக்குள் நுழைய, ரிஷி வாட்ஸாப்பில் மெசேஜ் செய்திருந்தான்.
‘ஹாய் பிசியா? வீகென்ட் எப்படி போகுது?’
‘பெரிசா ஒன்னும் பண்ணல, சும்மா டிரஸ் வாங்க வந்துருக்கேன்’ என்று பதில் அனுப்பி வைத்தாள்.
‘வாங்கிட்டியா?’
அவன் கேள்வியில் ஏதோ யோசனைத்தோன்ற, பதிலேதும் தராமல், ட்ரைல் ரூமிலிருந்து வெளியே வந்தவள், அங்கே தொங்கவிடப் பட்டிருந்த உடைகளிலேயே மிகவும் கவர்ச்சியான இரண்டு உடைகளைத் தேர்ந்தெடுத்து மீண்டும் ட்ரையல் அறைக்குள் நுழைந்தாள்.
‘இல்ல இனிமேல்தான்’ என்று மெசேஜ் செய்தவள், கையோடு அவற்றை அணிந்துகொண்டு, செல்ஃபீக்களை எடுத்து, கூடவே,
‘லூகாஸ் பர்த்டே வருது, பார்ட்டிக்கு போகணும். எந்த டிரஸ் வாங்கலாம்னு குழப்பமாயிருக்கு, எது நல்லா இருக்கு ரிஷி?’ என்று ரிஷிக்கு அனுப்பினாள். இப்பொழுது மது தேர்ந்தெடுத்த கருப்பு ஜீன்ஸ் மற்றும் இளம் ஊதாநிற சட்டையையும் அணிந்து அவளுக்குப் புகைப்படத்தை அனுப்பிவைத்தவள், மது சரியென்றதும் அதையே வாங்கிக்கொண்டு, வீடு செல்லப் பேருந்தில் ஏறிக்கொண்டாள்.
‘என்ன பய சத்தத்தையே காணும்? ச்சே கோவமா பொங்குவான்னு பார்த்தா… எங்கடா போனான்? ரிஷி உன் சோப் ஸ்லோவா?’ அவனிடமிருந்து எந்தவித பதிலும் வராமல் போகவே, ஏமாற்றத்துடன் பாட்டுக்கேட்ட படி பயணித்துக்கொண்டிருந்தாள்.
மறுமுனையில் வாரயிறுதியில் சொந்த ஊருக்கு செல்ல விஷ்ணுவுடன் பயணம் செய்துகொண்டிருந்த ரிஷி, பெட்ரோல் பங்கிலிருந்து கிளம்பியதும் மொபைலை எடுத்து பார்க்க, முட்டிவரை கூட எட்டாத கவர்ச்சிகரமான வர்ஷாவின் புகைப்படத்தில் ஒரு நொடி உறைந்தவன், அதனுடன் இருந்த மெசேஜை படிக்க காதல் மறந்து மனம் கோவத்தில் எறிய துவங்கியது.
அதில் “லூக்காஸ்க்கு சர்ப்ரைஸா இருக்கட்டும்னு அவனுக்கு காட்டாம உங்களுக்கு அனுப்புறன். எது நல்லா இருக்கு?” என்ற வர்ஷாவின் மெசேஜ் மேலும் தணலை வாரியிறைக்க, நொடியும் தாமதிக்காமல் வர்ஷாவை அழைத்து அவள் பேச வாயெடுக்கும் முன்னே,
“என்ன கண்றாவி வர்ஷா இது? மரியாதையா வேற ட்ரெஸ் வாங்கு” என்று கத்திவிட,
‘ஹை லேட் ஆனாலும் ஃபோட்டோ வேலை செய்யுது!’ உற்சாகமானவள், சன்னமான குரலில், “ஸ்ஸ்ஸ் கத்தாதீங்க ரிஷி. லூகாஸ் தூங்கறான்ல” என்றாள்,
“வாட்? துங்கறானா?”
“ம்ம் பாவம் ஷாப்பிங் பண்ணி டையர்ட்”
“நான் கேட்டதுக்கு லூகாஸுக்கும் என்ன சம்மந்தம்?” அவன் குரலுயர்த்த,
‘ஒண்ணுமில்லைனு சொன்னா நீ பொங்க மாட்டியே! அதுனால…’ விஷமமாக புன்னகைத்தவள்.
“லூகாஸ் என் தோளுல தானே சாஞ்சு தூங்கிட்டு இருக்கான்! செம்ம கியூட்டா இருக்கான் ரிஷி அவன் தூங்கும் போது பாத்துகிட்டே இருக்கலாம்” மனதில் ரிஷி தூங்குவதை பார்த்ததை நினைத்து சொன்ன வர்ஷாவின் குரலில் தெரிந்த குழைவு, ரிஷியின் கோவத்தை மேலும் அதிகரிக்க,
“என்ன கர்மம் இது? அவன் ஏன் உன் தோளுல…”
“ஸ்ஸ்ஸ் கத்தி பேசாதீங்க ரிஷி.மொதல்ல எதுக்கு கால் பன்னீங்க?” ரகசியமாகக் கேட்டவள், சிரிப்பை வெளிக்காட்டாமல், “இட்ஸ் ஓகே டியர் யு ஸ்லீப்” என்று அருகில் இல்லாத லூகாஸை உறங்கவைப்பதைப் போல் சொல்ல,
எவனோ ஒருவன் தன்னவளின் தோளில் உரிமையாய் உறங்குகிறானென்ற செய்தியில், பொறாமை தீ பற்றிக்கொள்ள , ரிஷி “வர்ஷா!” என்று உறும, அதை ரசித்தவளோ, “கத்தாதீங்கன்னு சொல்றேன்ல? எதுக்கு கூப்டீங்க?” போலியாகக் கடிந்துகொண்டாள்.
“மரியாதையா அவனை எழுப்பு!” அவன் கோவமூச்சுக்கள் ஏனோ வர்ஷாவிற்கு உற்சாகமூட்ட மௌனமாக புன்னகைத்துக்கொண்டாள், அதை அறியாத ரிஷியோ. “என்ன கண்றாவி ட்ரஸ் இது? ஏன் இப்படி மாறிட்ட? நல்லா இல்ல” கோபமும் வலியுமாக அவன் சொல்ல,
‘நல்லா இல்லையா? கண்றாவியா? ச்சே பயபுள்ள அழகுல மயங்கி ஜொள்ளுவிடுவான்னு பாத்தா அட்வைஸ் பண்ணி டார்ச்சர் பன்றான்!’
“நல்லா இல்லையா? இதெல்லாம் இப்போ ஃபேஷன் தானே? மொதல்ல அந்த ட்ரெஸ்க்கு என்ன குறைச்சல்? உங்களுக்கு பிடிக்கலையா? எனக்கு நல்லா இல்லையா?” அவள் கோவமும் வருத்தமுமாக கேட்க,
‘அழகாத்தான் இருக்கு நான் மட்டும் பார்க்க இதெல்லாம் செஞ்சா பரவால்ல. ஆனா அந்த லூகாஸ்க்காக நோ நோ நோ!’ “என்ன குறைச்சலா? அங்க ட்ரெஸ்ஸே குறைச்சல் தான் ! இவ்ளோ குட்டையா! நல்லாவே இல்ல. மரியாதையா அதை ரிட்டர்ன் பண்ணிட்டு, அந்த கர்மம் பிடிச்சவனையும் கடைலயே தொலைச்சுட்டு வந்துடு. இனிமே அவன் கூட பேசாத! அவன் முகத்தை கூட பார்க்காத!” ரிஷி கட்டளையிட,
‘பத்தலையே’ என்று யோசித்தவள், “நீங்க அந்த காலத்து ஆளா இருக்கீங்க. இதுவே நந்தாவா இருந்திருந்தா அழகா இருக்குனு சொல்லிருப்பான். ஏன் அவன் தம்பி விஷ்ணுவும் அதான் சொல்லிருப்பான். நான் அவங்களையே கேக்குறேன்” என்றவள் “எங்க ஸ்டாப் வந்தாச்சு. பை” என்று அழைப்பைத் துண்டித்துவிட்டாள்.
ஆத்திரத்தை அடக்க முடியாமல் தவித்தவனின் மற்ற மொபைலிற்கு மெசேஜ் வர, அதில் வர்ஷாவின் புகைப்படங்களும், ’ட்ரெஸ் நல்லா இருக்கா? என் பிரென்ட் நல்லா இல்லைனு சொல்றான். நீங்க சொல்லுங்க நந்தா எனக்கு இந்த டிரஸ் நல்லா இருக்கா?” என்று இருக்க,
அதே நொடி விஷ்ணுவின் மொபைல் அடிக்க, அவனுக்கு முன்னே பாய்ந்து மொபைலை எடுத்தான் ரிஷி. அதிலோ வேறொருவருடைய மெசேஜ் இருக்க. நிம்மதி பெருமூச்சு விட்டவன் செய்கையை ஓர கண்ணால் பார்த்த விஷ்ணு,
“என்னடா பிரச்சனை? என்ன ட்ரெஸ்?”
“ட்ரெஸ்ன்ற பேர்ல… அந்த கர்மத்தை அந்த இத்துப்போனவன் கூட டின்னர் போக இந்த லூசு வாங்கிக்கிட்டாளாம். நல்லா இல்லை திருப்பி குடுன்னா உனக்கு ரசனை இல்ல நந்தா கிட்ட கேக்கறேன்னு சொல்றா!
மரமண்டை! இவள ஏன் தான் அனுப்பி வச்சேன்னோ! ஒருநாளாவது நிம்மதியா இருக்க விடுறாளா? தினோ ஒரு தலைவலி இவளோட! நந்தாவா எனக்கு அனுப்பலாம் நான் கல்யாணம் பண்ணிக்க போறவன்! எனக்கு உரிமை இருக்கு. ரிஷிக்கு ஏன்டா அனுப்பனும்? அந்த லூகாஸ் என் வர்ஷாவை அந்த ட்ரெஸ்ல பாக்கவே கூடாது! கூடவே கூடாது!” என்றான் தீர்மானமாக.
“இரு இரு… என்ன சொன்ன?”
“என்ன?”
“கல்யாணம் செஞ்சுக்க போறவனா? உனக்கு மட்டும் தான் உரிமை இருக்கா? உன் வர்ஷாவா?”
“ஏன்? இல்லையா? சொல்லுடா இல்லையா?” ரிஷி மிரட்ட,
சிரித்துவிட்ட விஷ்ணு, “இல்லைனு யாராவது சொல்லிடுவாங்களா? நான் தான் சொல்ல விட்டுடுவேனா?” வீரமாகச் சொன்னவனை முறைத்த ரிஷி,
வர்ஷாவிற்கு நந்தாவாக, “சாரி மா. நல்லா இல்ல. உனக்கு சுத்தமா சூட் ஆகல. வேற ஏதாவது வங்கிக்கோ. அங்க குளிருக்கு இவளோ குட்டி ட்ரெஸ் போட்டா உறைஞ்சு போயிடுவ. அட்லீஸ்ட் உள்ள ஒரு முழு கை டீஷர்ட், பிளாக் லெக்கின்ஸ் போட்டுக்கோ” என்று வேகமாகப் பதில் அனுப்ப,
‘அடேய்! மீசைல மண்ணு ஒட்டவே ஒட்டாதாடா உனக்கு? உனக்கெல்லாம் ஈவிரக்கமே பார்க்க கூடாது’ கறுவிக்கொண்டவள்,
“குளிர் தெரியாது நந்தா. அதான் லுகாஸ் இருக்கானே. ஒட்டி உட்காந்துக்கலாம். வேணும்னா கட்டுப்பிடிச்சுக்கிட்டு ரொமான்டிக்கா நடக்கலாம். அதுக்கெல்லாம் யோசிக்காதீங்க” என்று பதில் அனுப்ப,
அதைப் படித்தவன் மனம் எரிமலையாய் சிதற, “டேய் வண்டிய திருப்புடா சென்னைக்கு” என்று கர்ஜித்தான்.