UMUV23b

Banner-4cc16550

UMUV23b

23 – B 

***

“டேய் பேச்சுலர் பார்ட்டி எப்போடா?” பாப்கார்னை தின்றபடி ரிஷியின் அரை கதவில் சாய்ந்து நின்றான் விஷ்ணு.

லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்தவன், “நீயும் நானும் தானே? இதுக்கு எதுக்கு தனியா பார்ட்டி, இன்னிக்கிகூட போகலாமே!” என்றான் புன்னகையுடன்.

“அப்போ நாளைக்கு போலாமே, சனிக்கிழமை தானே…ஆமா ஹனிமூன் எங்க போறதா பிளான்?” விஷ்ணு கொறித்தபடியே சென்று கட்டிலில் அமர்ந்தான்.

“அதெல்லாம் பிளான் இல்லடா. அவளுக்கு இருக்குறதே ரெண்டு வார லீவ். ஒரு வாரம் கல்யாணத்துல, அதுக்கு அடுத்த வாரம் ஊர்க்கு போறது கோவிலுக்கு போறதுன்னு இருக்கும். பாத்துப்போம் கனடால எங்கயான போயிக்கலாம்”

“இப்படியே இருந்தேன்னு வை, அவ உன்னை கடிச்சு கொதறிடுவா. ஏற்கனவே உன்னை பத்தி எக்கச்சக்க கம்ப்ளெயிண்ட் வேற, பாத்துக்கோ”

விஷ்ணுவின் பக்கம் திரும்பிய ரிஷி, புருவம் சுருக்கி, “நான் என்ன பண்ணேன்?”

“என்ன பண்ணல? அவ கிட்ட பேசி மூணு நாள் ஆச்சாம், ஃபோன் பண்ணா எடுக்கலையாம், மெசேஜ்கு பதில் அனுப்பலையாம்…” தலையணையை கட்டிக்கொண்டு படுத்துவிட்டான் விஷ்ணு.

“உங்க ரெண்டு பேருக்கும் வேற வேலையே இல்லையா? எப்போவும் அரட்டையா?” தம்பியை முறைத்தவன்,

“அடுத்த வாரம் எந்த தொந்தரவும் இருக்க கூடாதுன்னு தானே இப்போவே இவ்ளோவும் பண்றேன். அவளுக்குத் தான் புரியல உனக்கும் புரியலன்னா எப்படி?” ரிஷி முறைக்க,

“புரியாமையா இப்போ உன்கிட்ட பேச வந்தேன்?” விஷ்ணுவும் பதிலுக்கு முறைதான்.

“என்ன பேசணும்?”

“நான் உன் கம்பெனில சேரலாமுன்னு இருக்கேன்” என்றான் விஷ்ணு கூலாக.

“என்ன?” ரிஷி, நம்பமுடியாமல் பார்க்க,

“உன்னோட கம்பெனில சேர போறேன். உன் மெயில் பாரு, அப்ளிகேஷன் அனுப்பியிருக்கேன்” என்றவன், “நீங்க பெரியமனசு பண்ணி என்னை வேலைக்கு சேர்ந்துக்கிட்டா, திங்குற தூங்குற நேரம் போக மூட் வரும்போதுலாம் உனக்காக உழைப்பேன்” என்றான் நக்கலாக.

“டேய்!” வேகமாக விஷ்ணுவை அணைத்துக்கொண்டான் ரிஷி. “மனசு வந்துருச்சா? எப்படி இந்த திடீர் ஞானோதயம்?” அவன் முகமெங்கும் பல்லாகச் சிரிக்க,

“அதெல்லாம் இல்ல. எல்லாம் என் அண்ணி பண்ற இம்சை! நீ பொலம்பினே இருந்தியாம். அவ என்னை போட்டு காதுல ரத்தம் வர அளவுக்கு காச்சி எடுத்துட்டா, அப்படி என்ன வீம்பு இது அதுன்னு. அவ தொல்லை தாங்காம உனக்கு மெயில் பண்ணேன்” தோளைக் குலுக்கியவன்,

“சரி எமோஷனல் ஆகாத. வா பசிக்குது, ஏதான சமைச்சு கொடு, இந்த வாரம் விட்டா உன் சமையல் சாப்பிட இனி எப்போ முடியுமோ! வர்ஷா ஏற்கனவே தினமும் கலர் கலரா போட்டோ அனுப்பி பயமுடுத்துறா! பாரு இப்போ அனுப்பினா” தன் மொபைலில் சில புகைப்படங்களை காட்டி,

“க்ரீன் பூரி, ரெட் பூரி…கீரை பீட்ரூட் போட்டு! இதெல்லாம் ஓகே! இத பாரு ப்ளூ பூரி! சொல்லுடா ப்ளூ பூரி??? எப்படின்னு கேட்டா அது சீக்ரெட்ன்னு சொல்றா!” மறுப்பாகத் தலையசைத்துப் புலம்ப,

சிரித்த ரிஷி, “போன வாரம் ஹல்வான்னு ஒரு ஃபோட்டோ அனுப்பினா பாத்தா காத்தடிக்கு தடவுற மாஞ்சா மாறி இருக்கு!” தலையில் அடித்துக்கொண்ட ரிஷி, “அதுகூட அவ அனுப்பின மெசேஜ் தான் ஹைலைட்!” என்றபடி விஷ்ணுவிடம் அதைக் காட்ட,

‘இது விஷ்ணுக்காக நான் சமைக்க போற முதல் ஸ்வீட்!’ என்று இருந்தது.

“அடப்பாவிகளா! சமையல்ன்ற பேர்ல என்னை போட்டுத்தள்ள பாக்குறாளா?” நெஞ்சை பிடித்துக்கொண்ட விஷ்ணு,

“கொலைகார கூட்டமா இருக்காங்க அவங்க வீட்ல! மது போனவாரம் கொடுத்த தயிர் சாதத்துல ஆரம்பிச்ச வயத்துவலி இன்னிக்கு கார்த்தாலதான் போச்சு வெறும் தயிர் சாதத்துல வயத்தை கெடுக்குறதுக்கு ஒரு தனி திறமை வேணும்! அவங்க குடும்பத்துல யார் சமைச்சாலும் சாப்பிட மாடேன்னு சொல்லிடு” விஷ்ணு கையெடுத்து கும்பிட்டு சொல்ல,

“அதான் நீயே சொல்லிட்டியே நான் ஏன் தனியா சொல்லிக்கிட்டு?” மொபைல் திரையைக் காட்டினான் ரிஷி, அதில் விஷ்ணுவை கொலைவெறியோடு முறைத்து கொண்டிருந்தாள் வர்ஷா.

அசடு வழிந்த விஷ்ணு, “ஹே வர்ஸு எப்படி….”

“மது கொடுத்த தயிர் சாதத்துல வயிறு கெட்டுதா சாருக்கு? அடிக்கு! யூ…”

“நோ நோ பேட் வேர்ட்ஸ்! என்னை மட்டும் சொல்ற, உன் அழகான அல்வாவை மாஞ்சான்னு சொன்னான் அவனை கேக்காம” விஷ்ணு வேகமாகப் போட்டுக்கொடுக்க,

“ஐயோ நான் ஒன்னும் சொல்லல” ரிஷி விஷ்ணுவை முறைத்தபடி வர்ஷாவிடம் மாட்டிக்கொண்டு விழிக்க, விடிய விடிய அவர்கள் ரகளை ஓய்ந்தபடில்ல்லை.

***

வர்ஷாவின் வருகைக்காக விமானநிலையத்தில் காத்திருந்தான் ரிஷி. யாரையும் வரவேண்டுமென்று சொல்லிவிட்டு தன்னவளை அழைத்துச்செல்லத் தனியாக வந்திருந்தான்.

முதல் முறை காத்திருப்பின் பாரம் மனதை அழுத்த, குறுக்கும் நெடுக்கும் விசிட்டர் பகுதியில் நடந்துகொண்டிருந்தான்.

“ரிஷி!” வர்ஷாவின் குரலில் பார்வையை ஓடவிட, தன்னை நோக்கிக் கையை உயர்த்தி அசைத்தபடி வந்தவளை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்தான்.

அவனை மென்மையாக அனைத்துக்கொண்டவள், “மிஸ்ட் யுடா” என்று அவன் முகம் பார்க்க,

கலங்கிய கண்களை வேகமாகத் துடைத்துக்கொண்டவன், “ரொம்ப மிஸ் பண்ணேன்டா நானும்” என்றபடி அவள் லக்கேஜ் டிராலியை பிடித்துக்கொண்டான். இருவரும் பேசியபடி காரை நோக்கி நடந்தனர்.

“கல்யாண பொண்ணு வரேன் ஒருத்தரும் வரலை” அவள் முகம் வாட,

“ஏண்டி நான் வந்துருக்கேன் சந்தோஷமா இல்லையா?”

“அதுக்கில்லை! எல்லாரும் ஜோரா வரவேற்பாங்கன்னு நினைச்சேன்” அவள் உதட்டைச் சுழித்தாள்.

“நான் தான் வரவேண்டாம்ன்னு சொன்னேன். எனக்கு உன்கூட தனியா இருக்க இப்போ விட்டா இன்னும் ரெண்டு நாளாகும்” என்று முனக,

“என்னமோ போ! சொல்ல மறந்துட்டேன், நாளைக்கு லூகாஸ் வரான். நீயோ விஷ்ணுவோ பிக்கப் பண்ணுங்க” அவள் காரில் அமர்ந்துகொள்ள,

“அவனை எதுக்கு…யாரு…” கோவமாக ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்துகொண்டான் ரிஷி.

“நீ தானே அவனை கல்யாணத்துக்கு வந்தே ஆகணும்னு இன்வைட் பண்ண, பாவம் அதான் வரான்” என்றவள் தன் வீட்டுக்கு ஃபோன் செய்ய,

“இவன் தொல்ல விடாது போல இருக்கே! எனக்குன்னு வருவீங்களாடா!” ரிஷி முணுமுணுத்தது அவள் காதில் விழவில்லை.

ஒரு வழியாகப் பேசி முடித்தவள், ரிஷியை உற்றுப் பார்த்திருந்தாள்,

“என்ன வந்ததும் ஸ்டார்ட் பண்ணிட்டியா?” புன்னகையுடன் அவன் கேட்க, அவன் கன்னத்தை ஒற்றை விரலால் தடவியவள்,

“செம்ம ஹேண்ட்ஸம் ஆகிட்டே. நீட்டா ஷேவ் பண்ணி, பக்காவா முடியையும் மீசையையும் ட்ரிம் பின்னி, ஜம்முன்னு இருக்கே. கல்யாண களை வந்துருச்சு”

“ஹாஹாஹா. இது வேறயா?” மனதார சிரித்தவன், “ரொம்ப மிஸ் பண்ணேன் உன்னை! நாம எப்படி இருந்தாலும் நீ ஹீரோ! நீ அப்படி இப்படின்னு கூடவே ஒரு பொண்ணு அதுவும் மனசுக்கு பிடிச்சவ சொல்லிகிட்டே இருந்தாலே தனி தெம்பு தான்”

“ஆஹான்!” அவள் சிரிக்க,

“நிஜமா தான் சொல்றேன் வர்ஷா. உன்னை முதல் முதலா பாத்தப்போ நீ எனக்கு இவ்வளவு முக்கியமானவளா மாறுவேன்னு கண்டிப்பா நினைக்கவே இல்ல!

அடுத்த ஜென்மம்ன்னு ஒன்னு இருந்தா உன்னை இன்னும் சீக்கிரமா தேடி கண்டுபிடிச்சுடுவேன்!”

அவன் சொல்லச் சொல்ல மெல்ல பார்வையை தாழ்த்திக்கொண்டாள்.

“எனக்கு என் மனசை உன்ன மாதிரி வெளிப்படையா சொல்லத் தெரியல வரல வர்ஷா.

நீ என்னை ஆசையா பார்கும்போது உன் கண்ணுல தெரியற அன்பு, உன் குரல்ல தெரியற சின்ன நடுக்கம், உன் குட்டி ஸ்மைல் இதெல்லாம் எனக்குள்ள எப்போவும் ஒரு சின்ன சிலிர்ப்பை தந்துகிட்டே இருக்கு” கியறை பற்றியிருந்த கையால் அவள் கையை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டான்.

“என் மனசுக்குள்ள இந்த நிம்மதியும் அமைதியும் உன் கூட இருக்கும் போது மட்டுமே இருக்கு. உன் கூட இருக்கும் போது தான் நான் முழுமையானவனா பீல் பண்றேன். இனிமே எதுக்காகவும் உன்னை பிரியவே கூடாதுன்னு நினைக்கிறேன்.

நீ இல்லாம எனக்கு எதையும் யோசிக்க கூட தெரியல…யோசிக்கவும் முடியாது!” அவள் கையில் மென்மையாக முதமிட்டவன்,

“என் கூடவே இருந்துடு வர்ஷா.எனக்கு வேற எதுவும் வேணாம். பீ மைன்!” என்றான் காதலுடன்.

எதுவும் பேசாது அவனைச் சில நொடிகள் பார்த்தவள், தன் வீடு இருக்கும் சாலை நெருங்க,

“ரிஷி இங்கயே ஸ்ட்ரீட் எட்டுல ஒரு நிமிஷம் பார்க் பண்ணேன்” என்றாள்.

அவள் சொன்னபடியே வண்டியை நிறுத்தியவன், “என்ன வேணும்? ஏதான வேணும்னா நான் வாங்கிட்டு வரேன், நீ வீட்டுக்கு போமா”

“இல்ல உன்கிட்ட பேசணும்”

“என்னமா? வீட்டுக்கு போயி பேசிக்கலாமே”

“இல்ல ரிஷி, எனக்கு இப்போவே பேசணும்…எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்!” என்றாள் அவன் கண்ணோடு கண் பார்த்து.

“ஹே விளையாடாத” அவன் மீண்டும் வண்டியை ஸ்டார்ட் செய்தான்.

“நிஜமாத்தான் சொல்றேன். எனக்கு உங்களை கல்யாணம் செஞ்சுக்க தோணலை ரிஷி!”

அவளைச் சிலநொடி கூர்ந்து நோக்கினான். அவள் முகத்தில் புன்னகையில்லை.

“என்ன ஆச்சு வர்ஷா? ஏன் இபப்டி பேசற” அவன் மனதிற்குள் அதுவரை இருந்த உற்சாகம் வடிந்து வெறுமை சட்டெனக் குடிகொண்டது.

“எனக்கு உங்களை வற்புறுத்துற மாதிரி இருக்கு. நீங்க முழு மனசா என்னை காதலிக்கலை ரிஷி!”

“வர்ஷா!” கத்திவிட்டவன், “ஹொவ் டேர் யூ? என் அன்பை சந்தேக படுறியா?” அவளை எரிப்பதைப் போல் பார்க்க,

“எனக்கு தோணுறதை சொல்றேன். நான் இவ்ளோ நாளா எவ்ளோ வாட்டி ஐ லவ் யு சொல்லிருப்பேன்? ஒரு வாட்டி கூட நீங்க சொல்லல! என்னமோ உங்களை தடுக்குது! நீங்க எனக்காக நடிக்க வேண்டாம்” அவள் கண்களை மூடிக்கொள்ள,

சீட் பெல்ட்டை கிழட்டிவிட்டு, அவளைப் பக்கவாட்டில் அணைத்து ஆழ்ந்த முத்தத்தை அவள் இதழில் பதித்தான்.

“இப்போ சொல்லு, எனக்கு உன் மேல காதல் இல்லையா?” அவள் முகத்திற்கு வெகு அருகே இருந்தபடி கேட்க, இல்லையென்று மறுப்பாகத் தயலசைத்தாள் அவள்.

“வர்ஷா ஏண்டி இப்படி பண்றே? சொன்னா தான் லவ்வா?” அவன் ஏக்கமாகக் கேட்க,

“நீ இப்போ சொல்வே அப்போ சொல்லுவேணு எவ்ளோ ஏங்கி போயிருப்பேன்? தெரியல எனக்கு ஒரு மாதிரி இருக்கு” அவள் கண்களைத் திறக்க,

“ச்ச்ச் என்ன இது?” அவள் கண்களைத் துடைத்தவன், “சொல்லுறதை விட என் செயலால என் காதலை தினமும் உணர்த்த தான்…” அவள் நெற்றியை முட்டியவன்.

“இனமே சொல்லவும் செய்வேன்” மீண்டும் ஆழமாக முத்தமிட்டவன், அவள் கேட்கப் பல யுகங்களாகக் காத்திருந்த அவ்வார்த்தைகளை, தன் மொத்த உயிரையும் தேங்கிய மென்மையான குரலில்,

“வர்ஷா! ஐ லவ் யூ!”

—————– ஹேப்பி!——————

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!