umuv4

Banner-432b93c9

umuv4

அத்தியாயம் 4

வர்ஷா தன் வீட்டு வாசல் கிரில் கதவின் வழியே, “தாத்தா கதவை ஓபன் பண்ணேன்” என்று குரல் கொடுக்க,

சோஃபாவில் அமர்ந்து செய்தித்தாளில் மூழ்கியிருந்தவர் “என்னமா இவளோ சீக்கிரமா வந்துட்ட, உடம்புக்கேதும் முடியலையா?” என்று கேட்க,

“யாரு?” என்றபடி அங்கே வந்த பாட்டி, “உங்க கூட இதே ரோதனை. வாசல்ல நிக்கவச்சு என்ன கேள்வி?” என்று கதவின் அருகே சென்றவர்,

“என்னடி இவளோ சீக்கிரமா?” என்றபடி சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தவர், “உடம்புக்கு ஏதாவது முடியலையா?” என்று கேட்க,

“இதையே தானே நானும் கேட்டேன்? மொதல்ல கதவைத் திற” அவரை முறைத்தார் தாத்தா.

க்ரில்லில் இருந்த பூட்டை திறந்த பாட்டி, மறுபடி அதையே கேட்க, புன்னகைத்த வர்ஷா, “சும்மா தான் சீக்கிரம் கிளம்பினேன். பாட்டி ஒரு காபி தரியா தலை பாரமா இருக்கு” என்றபடி உள்ளே நுழைந்தாள்.

“நீ போய் ரிஃபிரெஷ் பண்ணிக்கிட்டு வா, சூடா பஜ்ஜியும் காபியும் போடறேன்” என்றபடி சமையலறைக்குச் செல்ல, நாளிதழைப் பிரித்த தாத்தா,

“எப்போது பார்த்தாலும் தீனி தானா?” என்று குரல் கொடுக்க, சமையலறையிலிருந்து எட்டிப்பார்த்து பாட்டி, “யாரோ மழை வர மாதிரி இருக்கு சூடா மிளகா பஜ்ஜி போட்டுக் கொடுன்னு  கேட்ட மாதிரி இருக்கு?”

“போ போ எண்ணெய் காஞ்சு புகை வருது, கொஞ்சம் சூடு குறைஞ்ச அப்புறமா பஜ்ஜி போடு, இல்லைனா உள்ள வேகாம மாவா இருக்கும், மாவுல கொஞ்சம் சூடு எண்ணெய் விட்டுக்கோ, சோடாப்பு போட்டுடாத …” அவர் சொல்லிக்கொண்டே போக,

“இவளோ நொட்டு நொள்ளை எல்லாம் என்னால முடியாது, நீங்களே போயி பஜ்ஜி போடுங்க” கோவமாக அடுப்பை அணைத்துவிட்டு பாட்டி சோஃபாவில் அமர்ந்துகொண்டார்.

“இதுக்கு தான் எங்கப்பா அப்போவே சொன்னார், காபின்னு சொல்லிச் சுடுதண்ணி கொடுத்து ஏமாத்துறாங்க இந்த சம்பந்தம் வேணுமான்னு யோசிச்சுக்கோடான்னு. இப்படி ஏமாந்துட்டேனே” தாத்தா செய்தித்தாளை மடித்து கோவமாக மேசையில் வைத்தார்.

பாட்டியோ கோவமாக, “எங்கப்பாவும் சொன்னார் பையன் சோடாபுட்டிய பார்த்தா சரியான அசமஞ்சம் மாதிரி இருக்கு, இன்னும் கொஞ்சம் கேசரி வேற கூச்சமில்லாம கேக்குறான் பாத்துக்கோன்னு’ நான் தான் நீங்க பாடின பாட்ட கேட்டுக் கழுத்தை நீட்டிட்டேன்” அவரை முறைத்தார்.

“அப்படி என்னதான் பாடினே தாத்தா? நானும் எவளோ வருஷமா கேக்கறேன், ரெண்டுபேரும் சொல்லவே மாட்டேங்குறீங்க” முகத்தைத் துடைத்தபடி வந்தாள் வர்ஷா.

“அது…” துவங்கியவரைப் பார்வையால் பாட்டி அடக்க, அவர், “பல வருஷமாச்சா மறந்து போச்சுடாம்மா” மூக்கு கண்ணாடியைத் துடைத்தபடி தாத்தா சமாளிக்க,

“உனக்குமா மறந்துபோச்சு?” வர்ஷா பாட்டியைப் பார்க்க, அவரோ “நல்ல வேலை எனக்கும் மறந்துபோச்சு” என்று சொல்ல,

“சும்மா உடான்ஸ் விடாதீங்க, அதெப்படி மறக்கும் அப்போ குடிச்ச காபியும் சாப்பிட்ட கேசரியும் ஞாபகம் இருக்கும் பாட்டு மறந்து போகுமோ?” விடாமல் வம்பிழுத்தபடி வர்ஷா சமையலறைக்குச் சென்று பஜ்ஜிக்கு மீண்டும் எண்ணெய்யைச் சுடவைத்தாள்.

“அவர் பாடுறதை எப்படியான நிறுத்தினா போதும்னு பதறி அடிச்சு தானே கல்யாணத்துக்கு சரி சொன்னேன்” அவள் பின்னே வந்த பாட்டி, பஜ்ஜி மாவு தயார் செய்தபடி, “சில விஷயங்களை மறந்தா தான் வாழவே முடியும்” சிரித்தபடி அவர் வேலையைத் தொடர, யோசனையில் மூழ்கியபடி பாட்டிக்கு உதவத் துவங்கினாள் வர்ஷா.

அன்றிரவு விஷ்ணுவின் அபிமான சீரியலை அவனுடன் கீரையை ஆய்ந்தபடி பார்த்துக்கொண்டிருந்த ரிஷி,

“போன மாசம் சாப்பிட்ட விஷத்துக்கு இப்போ தான் இவ மயக்கமே போட்டுருக்கா, இனி ஹாஸ்பிடல் போக எத்தனை மாசமோ” என்று வம்பிழுக்க,

விஷ்ணுவோ தீவிரமான முகத்துடன் “பாவம் அந்தப்பொண்ணு ரத்தம் ரத்தமா வாந்தி எடுக்குறா, உனக்கு நக்கலா இருக்குல?”

ரிஷியோ சிரித்தபடி, “இத பார்த்து எத்தனை பேர் ரத்த வாந்தி எடுப்பாங்களோ!”

“உனக்கு மனிதாபிமானமே இல்ல”

“எங்கம்மா கூட சீரியல் பார்த்து கெட்டதுக்குப் பதிலா, நான் சொன்ன மாதிரி வந்து நம்ம கம்பெனில சேர்ந்திருக்கலாம் இல்ல ஏதாவது கோர்ஸ் படிச்சுருக்கலாம்” என்றபடி ரிஷி, ஆய்ந்த கீரையை ஃபிரிட்ஜில் வைக்கச் செல்ல, குப்பை கூடையில் தண்டுகளைக் கொட்டிய விஷ்ணு,

“நானே நாலுவருஷம் இன்ஜினியரிங் படிச்சுட்டு மண்டை காஞ்சு, அப்பாடான்னு கொஞ்ச நாள் வீட்டுல இருந்தேன். அது பொருக்கலைல?” என்று முறைக்க,

“நாலு வருஷமாடா படிச்ச?” ரிஷியின் நக்கல் பார்வையில், கண்களை உருட்டிய விஷ்ணு,

“சரி சரி நாலு வருஷம்….பதினோரு மாசம்னு வச்சிக்கோ” என்றபடி ஹாலிற்கு நழுவ,

“அஞ்சு வருஷம்னு சொல்லு” இருவருக்கும் பாலை எடுத்துக்கொண்டு விஷ்ணுவின் அருகில் அமர்ந்த ரிஷி, அதைக் குடித்தபடியே வைப்ரேட் ஆன மொபைலை எடுத்துப் பார்த்தான்.

வர்ஷாவின், “பேசமுடியுமா? கால் பண்ணவா?” என்ற மெசேஜை கண்டு, அவசரமாக “எஸ்” என்று பதிலனுப்பி வைத்தான்.

ரிஷியின் செய்கையில் அவன் புறம் திரும்பிய விஷ்ணு பார்வையால் என்னவென்று கேட்க, அதற்குள் வர்ஷாவின் கால் வந்தது,

அவள் பெயரைக் கண்டவன், ரிஷி சுதாரிக்கும் முன்பே ஸ்பீக்கரில் போட, மறுப்பாகத் தலையசைத்த ரிஷி, “சொல்லுங்க என்ன விஷயம்” என்று கேட்க,

வர்ஷா வருத்தமாக, “எவளோ ட்ரை பண்றேன் முடியல. என்னமோ மனசு ரொம்ப வலிக்குது” சொல்ல,

‘பெயின் கில்லர் போடச் சொல்லு’ என்று விஷ்ணு வாயசைக்க அவனை முறைத்தவன், “என்னாச்சு வர்ஷா, மறுபடி ஏதாவது பிரச்சனையா?”

“இல்ல நாளைக்கு அப்ரைசல். அவனைத் தனியா பாக்கணும்னு நினைச்சாலே பயமா இருக்கு”

“இதுக்கெல்லாம் பயந்தா எப்படி வர்ஷா?”

“அவன் வேணும்னே என்னை வம்பிழுப்பான், ஹர்ட் பண்ணுவான். என்ன பண்ணுவேன்?”

‘அவன் மூஞ்சிலேயே பொக்குன்னு குத்து’ விஷ்ணு கிசுகிசுக்க, ஓசைவராமல் சிரித்த ரிஷி, “அவனை கண்டுக்காதீங்க, ரொம்ப இரிடேட் பண்ணா கம்ப்ளெய்ன்ட்  பண்ணுவேன்னு சொல்லுங்க”

“அவன் என் மேனேஜர் நான் எப்படி…” அவள் தயங்க

“அவன் மேனேஜரா இருந்தா என்ன கொம்பா முளைச்சுருக்கு?”

“பாவமாச்சே”

‘பாவம்னா போயி முட்டிக்கோ’ கோவமாகக் கண்களை மூடிக்கொண்ட ரிஷி,
“அப்போ அவன் என்ன பண்ணாலும் பொறுத்துப்போங்க அவ்ளோதான்”என்று கடுகடுத்தான்.

“அதெப்படி முடியும்?”

‘என்ன கேட்டா?’ கடுப்பானவன், “உங்களுக்கு என்ன தான் பிரச்சனை மிஸ், இன்னுமா அவனை லவ் பண்றீங்க?” தன் கோவத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் சற்று கடுமையான குரலில் கேட்டுவிட்டான்.

“ஐயோ இல்ல! ஆனா…”

“ஆனா?”

“லவ் இல்ல! கொஞ்சம் வெறுப்பு, அதைவிட அதிகமா பயம்” அவள் தயங்கியபடி ஒப்புக்கொண்டாள்.

ஏதோ சொல்ல வாயெடுத்த விஷ்ணுவின் வாயைப் பொத்திய ரிஷி, ஸ்பீக்கரை அணைத்துவிட்டு விஷ்ணுவின் கையில் சிக்காமல் அறைக்குள் சென்று கதவைச் சாத்திக்கொண்டான்.

“ஹலோ ரிஷி இருக்கீங்களா?”

“எஸ்! என்ன பயம்? என்ன பண்ணிடுவான், பெரிய வஸ்தாதோ?”

“இல்ல அவன் வாய்லேந்து வர வார்த்தையும் அவன் முகத்துல தெரியுற வெறுப்பயும்  என்னால தாங்கிக்க முடியல, கொஞ்சம் கொஞ்சமா நான் சேர்த்துவைக்கிற தைரியம் எங்கேயோ காணாம போயிடுது”

“மொபைல்ல இன்னும் அவன் போட்டோ நம்பர் எல்லாம் இருக்கா?”

“ம்ம்””

“மொதல்ல அவன் மெசேஜ் போட்டோ இன்னும் என்னவெல்லாம் இருக்கோ எல்லாத்தையும் டெலீட் பண்ணுங்க” ஆணையிட்டான்.

“ஏன்..” அவள் தயங்க, ரிஷி கோவமாகக் கட்டிலை எட்டி உதைத்த சத்தம் கேட்டு ,

“என்னாச்சு?” என்று அவள் பதற, அவனோ கத்திவிட்டான், “நீங்க ஃபோன வைங்க”

“என்னாச்சு ப்ளீஸ் சொல்லுங்க?”

“பின்ன, அவனே வேணாம்னு ஆன அப்புறம் அவன் சம்மந்தப்பட்டதெல்லாம் உங்ககிட்ட ஏன் இருக்கணும்? புரிஞ்சுக்காம ஏன்னு கேட்டா?”

“சரி சரி கோவப்படாதீங்க….” அவன் கோவத்தில் மிரண்டவள், “பேசிட்டு பண்ணிட்றேன்” என்று வாக்களிக்க,

“பண்ணிட்டு கால் பண்ணுங்க” பொறுமை இழந்தவன் அழைப்பைத் துண்டித்துவிட, பேயறைந்தார் போல் விழித்தவள், தயக்கத்துடன் ஒவ்வொன்றாக ஆதேஷின் அணைத்து சுவடுகளையும் மொபைலிலிருந்து நீக்கத் துவங்கினாள்.

ரிஷியின் கத்தலை கேட்டுவிட்ட விஷ்ணு அந்த அறைக்குள் நுழைந்தான்.

“என்னடா ஆச்சு? தொம்முன்னு சத்தம் கேட்டுது” கட்டிலில் கோவமாக அமர்ந்திருந்தவனை நெருங்கி அவன் தோளைத் தொட,

“இந்த பொண்ணுங்க எல்லாம் லூசா? இவளோ கொடுமை படுத்துறான், அவன் நம்பர் போட்டோ எல்லாம் டெலீட் பண்ணுன்னா ஏன்னு கேக்குறா? பைத்தியம்! அறிவு கெட்ட முண்டம்! ஃபூல்!” ரிஷி பற்களைக் கடிக்க,

“அதுக்கு எதுக்கு இப்போ நீ கோவப்படறே? அவ பேசுறத பார்த்தா அவனைக் கொஞ்சம் கடந்து வந்த மாதிரி தான் தெரியுது, அவ குரல்ல பயம்தான் இருக்கு, காதல் தோல்வி இல்ல” விஷ்ணு அவனருகில் அமர்ந்துகொண்டான்.

“அப்புறம் என்ன மண்ணாங்கட்டி யோசனை” ரிஷி பொறும, அவன் மொபைல் ஒலித்தது, வர்ஷா தான் அழைத்துக்கொண்டிருந்தாள்,

‘எடு’ என்று விஷ்ணு சொல்ல, ரிஷி கோவமாக எங்கோ பார்க்க, தாவி அழைப்பை ஏற்று ஸ்பீக்கரில் போட்டான் விஷ்ணு,

“ஹலோ ரிஷி…”

அவள் குரல் கேட்க, கோவம் கொஞ்சம் குறைவதை உணர்ந்தவன், “ம்ம்” என்று மட்டும் சொல்ல,

“எல்லாமே டெலீட் பண்ணிட்டேன். ஹேப்பி?” என்று கேட்க, ரிஷியோ கோவமாக, “பொய் சொல்லாதீங்க வர்ஷா, அதெப்படி இவ்ளோ சீக்ரம் எல்லாத்தையும் டெலீட் பண்ண முடியும்?” கேட்க,

“ஐயோ இல்ல! அவன் சம்மந்தப்பட்ட எல்லாமே ஒரே ஃபோல்டர்ல தான் இருந்துது. அதுல இருந்ததே ரெண்டு ஃபோட்டோ அவன் காண்டாக்ட் நம்பரும் தானே? எல்லாத்தையும் அழிச்சுட்டேன். ட்ரஸ்ட் மீ!” அவள் மௌனமானாள்.

‘பாவம் டா’ விஷ்ணு வாயசைக்க, கோவம்குறையாத ரிஷி, “குட்” என்று நிறுத்திக்கொண்டான்.

“அடுத்து என்ன பண்ணனும்னு சொல்லுங்க பண்றேன்” வர்ஷா சரணடைந்தாள்.

“மறுபேச்சு பேசாம கேப்பீங்கன்னா சொல்றேன், இல்லைனா ஆளை விடுங்க” என்ற ரிஷி சிடுசிடுக்க, வர்ஷா சரியென்று சொல்ல, தணிந்த குரலில் பேசத்துவங்கினான் ரிஷிநந்தன்.

சிறிது நேரம் சுவாரசியமாகக் கேட்டுக்கொண்டிருந்த விஷ்ணுவர்தனோ அப்படியே உறங்கி விட, ரிஷி வர்ஷா உரையாடல் நடுநிசி வரை தொடர்ந்தது.

சமையலறையில் வேலை செய்துகொண்டிருந்த ரிஷியிடம் விஷ்ணு, “அந்த பொண்ணு எங்க வேலை பாக்குறா?” கேட்க,

“நான் கேட்கல” என்ற ரிஷி அடுப்பை அணைத்துவிட்டு, உணவை மேஜை மீதி எடுத்து வைத்தான்

“எங்க இருக்காளாம்?”தட்டுடன் வந்த விஷ்ணு கேட்க, அவனோ “கேட்டுக்கல டா” என்றபடி இருவருக்கும் பரிமாறினான்.

“எதுவுமே கேட்டுக்காம அப்புறம் என்னதான் பேசினே? அதுவும் விடிய விடிய” சாப்பிட அமர்ந்தான் விஷ்ணு, “அவளுக்கு என்ன தேவையோ எனக்கு தெரிஞ்ச வரை சொன்னேன்” ரிஷியும் அமர்ந்தான்.

“அப்படி என்ன தேவையாம்?”

“அவளுக்கு இப்போதைக்குத் தேவை நம்பிக்கை. அதைத்தான் எப்படி வரவழைச்சுக்கறதுன்னு சொன்னேன், அவனை எப்படி பயப்படாம எதிர்கொள்ளலாம்னு சொன்னேன்”

“நல்லதுதான்…. இருந்தாலும், கூடவே அந்த பொண்ணு யாரு என்னன்னு விசாரிச்சா என்னவாம்?”

“தெரிஞ்சுக்கிட்டு நாம என்ன செய்யப்போறோம்?”

“அப்போ அவ யாரு என்னன்னு தெரிஞ்சுக்க உனக்கு இன்ட்ரெஸ்ட் இல்ல?”

மறுப்பாகத் தலையசைத்த ரிஷி, “சீக்ரம் சாப்பிடு கிளம்பலாம்” என்று பேச்சை நிறுத்தினான்.

லிஃப்ட்டில் ஏறிய இருவரும் பார்க்கிங் தளம் செல்லும் வரை மௌனமாக இருக்க, தன் பைக்கில் அமர்ந்த விஷ்ணு, அருகில் தனது பைக்கில் எதையோ சரிபார்த்துக் கொண்டிருந்த ரிஷியிடம்,

“உன் பைக்க  சர்வீஸ் விடணும் சொன்னியே விட்டுட்டு என் பைக்க யூஸ் பண்ணிக்கோயேன்”

ரிஷி, “பேசாம வேற வண்டியே வாங்கலாமான்னு யோசிக்கிறேன், இதை சர்விஸ் பண்ணின காசுக்கு ரெண்டு பைக் வாங்கியிருக்கலாம்” என்றபடி தன் பைக்கில் ஏறினான்.

“அதுவும் சரி தான் இந்த பைக்கெல்லாம் தாத்தா காலத்து மாடல், பெரிப்பா யூஸ் பண்ணி இப்போ நீ யூஸ் பண்றே”

சிரித்த ரிஷி, “சரி லன்ச் டைம்ல மீட் பண்ணலாம்” சரியென்று தலையசைத்தான் விஷ்ணு.
வர்ஷாவின் அலுவலகத்தில் அவளும் அவள் டீம் ஆட்களும் பதற்றத்துடன் காணப்பட்டனர்.

அன்று அவர்களுக்கு அப்ரைசல் நாளென்பதால், மேலாளர் என்ற முறையின் ஆதேஷ் ஒவ்வொருவராய் அழைத்து அவர்களது செயல்பாட்டைப் பற்றி அவன் கருத்துக்களைச் சொல்லிக்கொண்டிருந்தான்.

சிலர் சந்தோஷமாகவும், சிலர் சோகமாகவும் மேனேஜர் அறையை விட்டு வெளிவர, வர்ஷாவின் முறை வர, தயங்கியபடி ஆதேஷின் அறைக்குச் சென்றாள்.

அவளைப் பார்வை பார்த்தவன், கண்ணால் உட்கார் என்று சொல்ல, முகத்தில் எந்த உணர்வையும் காட்டாது அமர்ந்துகொண்டாள்.

கணினித் திரையைப் பார்த்தவன், “நிர்மலையும் கைக்குள்ள போட்டுக்கிட்டப் போல இருக்கே” என்றவன் ஒரு நொடி வர்ஷாவை ஏளனப் பார்வை பார்த்து,

“எல்லாமே நல்ல ரேட்டிங் கொடுத்துருக்கானே, ம்ம்… பிரேக்கப் ஆகி ஒரே மாசத்துல எப்படி இன்னொருத்தனை பிடிச்ச? ஒருவேளை…” என்று அவன் பேசிக்கொண்டே போக,

வர்ஷாவின் மனமோ, ‘அவன் எது பண்ணாலும் மொதல்ல அழாத, அதுதான் அவனைமாதிரி ஆட்களுக்குச் சந்தோஷம் கொடுக்கும்’ ரிஷியின் வார்த்தைகள் ஒலித்தது.

“நிர்மல் கொடுத்திருக்க ரேட்டிங்க்கு நீ தகுதியானவ இல்லைன்னு நான் நினைக்கிறேன் நீ என்ன சொல்ற” அவள் புறம் முழுவதுமாகத் திரும்பினான் ஆதேஷ்.

உள்ளூர பயம் படர்ந்தாலும், அவன் கண்ணை நேருக்கு நேராகப் பார்த்தவள், “நீங்க சொல்றத நான் ஏத்துக்கிட்டா நாம ரெண்டு பேருமே தப்பா இருப்போமே!” என்று தோளைக் குலுக்கினாள்.

அவள் பதிலில் புருவம் சுருக்கிய ஆதேஷ், “என்ன சொல்லவர? நீ நிர்மலை மயக்கி இந்த ரேட்டிங் வாங்கலைன்னா? உங்க டீம்ல யாருக்குமே இவளோ நல்ல ரேட்டிங் இல்ல, அப்படி என்ன செஞ்சு அவனை இம்ப்ரெஸ் பண்ண?” கிண்டலாகக் கேட்க,

வர்ஷாவோ, “உங்க அனுமானத்துக்கெல்லாம் என்னால பதில் சொல்ல முடியாது, பர்சனலா பேசணும்னா வெளியே பேசிக்கலாம். இப்போ அப்ரெய்ஸல் வேலையை  மட்டும் பாக்கறீங்களா?” அதே கிண்டல் குரலில் கேட்க, நாசிகள் விரிய அவளை முறைத்தவன்,

“மிரட்டுறியா? என்ன நிர்மல் சப்போர்ட் பண்ணுவான்னு திமிரா? என்னை மீறி உன்னால இங்க இருக்க முடியுமா இல்ல அதுக்கு நான் விட்டுடுவேன்னு நினைக்கிறியா? எனக்கு இங்க செல்வாக்கு இருக்கு தெரியுமா?” என்று மிரட்ட, குறுக்கிட்டவள் கண்களை உருட்டித் தன் மொபைலில் நேரத்தைப் பார்த்துவிட்டு,

“லுக் உங்க சினிமா வசனமெல்லாம் கேட்க எனக்கு நேரமில்ல. நீங்க இப்படித்தான் உளரப்போறீங்கன்னா நான் கிளம்புறேன்” என்று அவனை முறைத்தபடி நாற்காலியை விட்டு எழுந்தாள் வர்ஷா.

“ என்ன ரொம்ப திமிர் ஏறிப்போயிருக்கும் போல? உன் மேனேஜர் கிட்டே பேசுறேன்னு ஞாபகம் இருக்கட்டும்” அவன் மிரட்ட.

“அது உங்களுக்கு இருக்கட்டும்” என்றவள் பார்வையில் கடுமை கூடியது,

வேகமாக எழுந்து அவளை நெருங்கியவன், “வேணாம் வர்ஷா! இவளோ திமிர் வேண்டாம்! ஏண்டா இவனைப் பகைச்சுக்கிட்டோம்னு இதை நினைச்சு ரொம்ப வருத்தப்படுவ” எச்சரித்தான்.

அவனைக் கண்ணோடு கண் பார்த்தவளோ நக்கல் புன்னகையுடன், “நான் இப்பவே வருத்தப்படறேன். இதோ உன்கூட பேசி வீணா போகுற இந்த நிமிஷத்தை நெனைச்சுகூட வருத்தமா தான் இருக்கு. என்ன செஞ்சு தொலைக்க, மேனேஜரா போயிட்ட. இப்போ நான் கிளம்பனும் லன்ச் டைமாச்சு, இன்னும் ஏதாவது பெனாத்தனும்னா தனியா பெனாத்திக்கோ. உன் நான்சென்ஸ்கெல்லாம் என்கிட்டே நேரமில்லை!” அவனை வழியிலிருந்து விலக்கிவிட்டு அவள் நடக்க,

“வர்ஷா!” அவன் கத்த அவன் புறம் திரும்பியவள்,

“மீட்டிங் டைம் ஓவர்! எனிவே , எனக்கு வந்த ரேட்டிங் சரியா இருந்தும், என் அப்ரெய்ஸல்ல நீ விளையாட நினைச்சா… ம்ம் நினைக்க மாட்ட. அப்புறம் நான் என்ன செய்யலாம்னு உனக்கும் தெரியும்ல” என்றபடி கதவைத் திறந்தவள்,

“ஏய்!” என்ற அவன் உறுமலை காதில் போட்டுக்கொள்ளாமல் வெளியேறினாள்.

நேராக நிர்மலின் கேபினுக்கு சென்றவள் அவனுக்கு நன்றி சொல்ல,

நிர்மல் புன்னகையுடன், “எனக்கெதுக்கு தேங்க்ஸ்? நீ சின்சியரா செஞ்ச வேலைக்கு உனக்குக் கிடைக்கவேண்டியதை தான் கொடுத்தேன். எங்க லன்ச் கிளம்பிட்டியா?”

“எஸ்!” என்றவள், “தேங்க்ஸ் ஒன்ஸ் அகைன்” என்றுவிட்டு அலுவலகத்தை விட்டு வெளியேறி உடனே ரிஷிநந்தனை அழைத்தாள்.

“தேங்க்ஸ்! தேங்க்ஸ்! ரொம்ப ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்!” அவள் சந்தோஷமாகக் கத்த, என்னவென்று தெரியாமலே அவள் சந்தோஷம் அவனுக்கும் தொற்றிக்கொண்டது.

“சொன்னா நம்பமாட்டீங்க…” துவங்கியவள் ஆதேஷுடன் நடந்த சந்திப்பைப் பற்றிச் சொல்ல,

சிரித்துவிட்ட ரிஷி, “அச்சோ அவன் முகத்தைப் பாக்க முடியலையே! எப்படி மேடம் ஒரே நாளுல இவளோ தைரியம்?” நாற்காலியில் சாய்ந்துகொண்டான்.

“நீங்க வேற, தைரியமாவது மண்ணாவது, உள்ளுக்குள்ளே அல்லில்ல, அவன் வேற முகத்துக்குக்கிட்ட வந்து புஸ்ஸு புஸ்ஸுன்னு மூச்சு விட்டான், எப்படா வெளியில ஓடிவருவேன்னு ஆகிடுச்சு” அவள் சிரிக்க

“வெறி குட் ! இதான் நான் உங்ககிட்ட எதிர்பார்த்தது. உள்ள பயமிருந்தாலும் எதிராளிக்கிட்ட காட்டிக்க கூடாது. இப்படியே மெயின்டெயின் பண்ணுங்க தானா பய ஓடிடுவான்”

“என்னவோ இப்போதான் சுதந்திரமா சுவாசிக்கிற மாதிரி இருக்கு” காற்றை ஆழ்ந்து உள்ளிழுத்தவள், கண்களை மூடிக்கொள்ள அவள் முகத்தில் மென்மையான புன்னகை படர, அவள் உணர்வை அந்த நொடிநேர மௌனத்தில் உணர்ந்தவன் முகத்திலும் அதே புன்னகை அரும்பியது.

“தேங்க்ஸ் ரிஷி, அவன் கடுப்படிக்கும் போது உங்க வார்த்தைகள்தான் மனசுக்குள்ள ஓடிக்கிட்டே இருந்துது. என்னமோ பக்கத்துல ஒரு பிரென்ட் துணைக்கு இருக்குற மாதிரி சொல்லத் தெரியல, தேங்க்ஸ்!”

“போதும் போதும் எவளோ தேங்க்ஸ்?” அவன் சிரிக்க, கைப்பேசியில் விஷ்ணுவின் அழைப்பு வர, “சரி வர்ஷா நான் கிளம்பனும். இப்படியே இருங்க, இதே தைரியம் எப்போவும் இருக்கணும் சரியா?” என்று கேட்க,

“கண்டிப்பா ட்ரை பண்றேன்” என்றவள் மறுபடி நன்றி சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தவள், புன்னகையுடன் தன் இருசக்கர வாகனத்தில் உணவகத்திற்கு கிளம்பினாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!