Banner-8be96a05

5

 

உணவகத்தின் உள்ளே காத்திருந்த விஷ்ணு, தன்னை பார்த்துப் புன்னகையுடன் வந்த ரிஷியிடம், “எவ்ளோ நேரம்டா? எனக்கு பசி காதடைக்குது” என்று முனக, ரிஷியின் முகத்திலிருந்த புன்னகையைக் கவனித்தவன், “என்ன சார் முகத்துல பல்ப் எரியுது?”

“சொல்றேன் சொல்றேன்” என்றபடி நாற்காலியில் அமர்ந்த ரிஷி, “மொதல்ல ஆர்டர் பண்ணிடு, எனக்கு மினி மீல்ஸ்”

“ம்ம்”

“ஹேய் ஒரு ஸ்ட்ராங் டீ, கொஞ்சம் தலைவலிக்குது”

“ஓகேடா”

ஆர்டரை கொடுத்துவிட்டு, வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்த விஷ்ணுவின் கண்ணில் கதவைத் திறந்துகொண்டு புன்னகையுடன், மொபைலால் கன்னத்தைத் தட்டிக்கொண்டே உள்ளே நுழைந்த வர்ஷா பட்டாள்.

விஷ்ணுவின் அருகில் வந்தவள், கேஷியரிடம், “அண்ணா ஒரு மினி மீல்ஸ், ஒரு காபி” என்றபடி எதேச்சையாக விஷ்ணுவை பார்க்க, அவன் புன்னகைக்குப் பதிலாகப் புன்னகைத்தவள், மொபைலை பார்த்தபடி குனிந்துகொண்டாள்.

விஷ்ணுவின் உணவு தயாராக, ட்ரேவை எடுத்துக்கொண்டவன் ரிஷியிடம் சென்றுவிட, வர்ஷாவோ, தான் பேசப் பேச ஆதேஷின் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியை நினைத்துச் சிரித்துக்கொண்டாள்.

தனக்கான டிரே வர அதைப் பார்த்தவள், “அண்ணா காபி கேட்டேனே, டீ குடுத்துருக்கீங்க” என்று விழிக்க,

“சாரி மா” என்றவர், விஷ்ணுவின் மேசையைக் கைகாட்டி, “அந்த டேபிள்ல இருக்கவர்கிட்ட மாத்தி கொடுத்துட்டேன்”

“பரவால்ல நான் வாங்கிக்கிறேன்” தன் உணவு ட்ரேயுடன் விஷ்ணுவும் ரிஷியும் அமர்ந்திருந்த மேசைக்குச் சென்றாள்.

விஷ்ணுவைப் பார்த்துப் புன்னகைத்தவள் அவன் முன்னே காபி டம்பளர் இல்லாததைக் கண்டு அவன் எதிரே அமர்ந்திருந்த மற்றவனை நோக்கித் திரும்ப, அதே நொடி அவனும் அவளைப் பார்க்க, பெண்ணவள் சிலையாகிப்போனாள்.

இதுவரை எந்த ஆணையும் பார்த்த நொடியே அவள் உறைந்ததில்ல, அவன் பார்வை அவளுள் எதையோ பிறழச் செய்தது, தன் மனதைக் காத்துக் கொள்ளும்படி எச்சரித்தது, யார் அவன் என்று தெரிந்துகொள்ளத் தூண்டியது. 

ஒரே பார்வையால் தன்னை மொத்தமாகப் பிரட்டி போட்டவனை இமைக்காமல் பார்த்திருந்தவள், விஷ்ணுவின் தொண்டை செருமலில் சுயநினைவுக்கு வந்தாள்.

ஆண்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்தவளின் கண்கள் ரிஷியின் மீது நிலைகொள்ள, முகம் இருகியவனோ கேள்வியாய் புருவம் உயர்த்தியதில்,

உடல் சில்லுடுவதை போல் உணர்ந்தவள் பதற்றமாக, 
“கா…கா…கா…டி…” என்று திணற, ரிஷியின் புருவம் முடிச்சிட்டது. 

விஷ்ணுவோ, “என்னது காக்கா டீயா? அடப்பாவிகளா தேயிலைக்கு பதிலா காக்காவை முக்கி டீ போடுறாங்களா! ஐயோ ப்ளூ கிராஸுக்கு கால் பண்ணுடா” ரிஷியைப் பார்த்துப் போலியாகக் கத்த,

பதறிய வர்ஷா வேகமாக மறுப்பாகத் தலையாட்டியபடி விஷ்ணுவிடம், “இல்ல என் காக்கா…கா…டி…மாறி” ‘ஐயோ சொதப்புறேனே’ என்று உதட்டைக் கடித்துக்கொண்டாள்.

அவள் தடுமாற்றத்தைப் புரிந்துகொண்ட ரிஷி காப்பி கப்பை அவள் ட்ரேவில் வைத்துவிட்டு, டீக்கப்பை எடுத்துக்கொண்டான்.

“தேங்…தேங்…” அவள் திக்க, ரிஷி புன்னகையுடன், “வெல்கம்” என்று சொல்ல, மெல்லத் தலையசைத்தவள் வேகமாகச் சென்று தொலைவில் அமர்ந்துகொண்டாள். அவள் செய்கையைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாத ரிஷி சாப்பிடத் துவங்க, விஷ்ணுவோ அவனையே வினோதமாகப் பார்த்திருந்தான்.

“என்னடா” ரிஷி கேட்க, விஷ்ணு சந்தேகமாக,

“அவ ஸ்டார்ட் ஆகாத பழைய ஸ்கூட்டர் மாதிரி கா கா கா ன்னு சொல்லிக்கிட்டு இருக்கா, உனக்கெப்படி அவ சொல்ல வந்தது புரிஞ்சுது?” நாடியை வில்லனைப் போல் தடவிக்கொண்டான்.

“அதுல என்னயிருக்கு புரியாம இருக்க?”

“இல்ல உன்ன பார்த்து அவ அப்படியே நின்னது, முழிச்சது, திக்கித் திணறினது….எல்லாத்தையும் கூட்டி கழிச்சு பார்த்தா….” விஷ்ணு நக்கல் பார்வையுடன் நிறுத்தம் கொடுக்க, ரிஷியோ தொலைவில் அமர்ந்திருந்த வர்ஷாவை பார்த்தபடி யோசனையில் மூழ்கியிருந்தான்.

“நான் பேசிக்கிட்டே இருக்கேன் நீ என்ன அப்படி….” என்று ரிஷியின் பார்வை போகும் வழியைப் பார்த்த விஷ்ணு, “ஏண்டா அவளையே பாக்குற? என்னடா நடக்குது உங்க…” ஸ்பூனை பற்றியிருந்த கையைக் காற்றில் வீசி அவனை நிறுத்திய ரிஷி,

“உனக்கு அந்த பொண்ண அடையாளம் தெரியல?” என்று புருவம் சுருக்க,

மறுப்பாகத் தலையசைத்த விஷ்ணுவிடம், “அன்னிக்கி நமக்கு பின்னாடி சீட்ல அழுதுட்டு இருந்தாளேடா. நான் கூட டிஷ்யூ கொடுத்தேன், நீ கூட சாப்பிடாம போனானு வருத்தப்பட்டியே” சொல்ல,

“அப்படியா? எனக்கு சுத்தமா ஞாபகம் இல்ல… ஆமா இதெல்லாம் நீ எதுக்கு ஞாபகம் வச்சுக்கற?” விஷ்ணு கண்களைச் சுருக்க அதைக் கண்டுகொள்ளாத ரிஷியோ,

“அழுமூஞ்சியா பாத்த பொண்ணு இப்போ சாதாரணமா சின்ன ஸ்மைலோட பாக்க நல்லாத்தான் இருக்கு மனசுக்கு. என்ன சொல்றே?” புன்னகையுடன் விஷ்ணுவைப் பார்த்தான்.

விழிகள் விரிந்த விஷ்ணு, “அடப்பாவி! அந்த பொண்ணு தன்னோட காப்பிய உன்கிட்ட பறிகொடுத்துட்டு, உன்கிட்ட கேக்க பயந்துகிட்டு வார்த்தை வராம திக்குது, திணறுது ! நீ என்னடான்னா மனசாட்சியே இல்லாம அவளை சைட் அடிச்சுகிட்டு கிடந்தியா?”

“அடச்சே! எங்கேயோ பார்த்த மாதிரி தோணிச்சேன்னு யோசிச்சா…சொல்லப்போனா அந்த பொண்ணு குரல் கூட ரொம்ப பழக்கப்பட்ட மாதிரி இருந்துது. உனக்கு அப்படி தோணல?”

“ஏது? அவ சொன்ன அந்த ‘கா…கா…டி’ இந்த ரெண்டு வார்த்தைல அப்படியே பரிச்சயமான குரலா?” முறைத்தவன், “மாலதி அண்ணிக்கு துரோகம் பண்ணாத” விஷ்ணு மிரட்ட,

“விடு விடு அவ புரிஞ்சுப்பா” என்று புன்னகைத்துக்கொள்ள,

“ஹம் பிஞ்ச செருப்பால அடிப்பா!” விஷ்ணு மூக்கை சுருக்கி சிரித்தான்.

“அதெல்லாம் கொஞ்சி கெஞ்சி சரி பண்ணிக்கலாம்” ரிஷி கண்ணடிக்க,

“நான் விடமாட்டேன் போட்டுக்கொடுப்பேன்” என்றவன் நாக்கை துருத்த,

“நான் சமாளிச்சுப்பேன்” என்று விஷ்ணு சிரிக்க, சகோதரர்கள் இருவரும் இல்லாத ஒருபெண்ணை பற்றி விளையாட்டாக வாதித்துக்கொண்டிருக்க,

வர்ஷாவோ அந்தப் புதியவனை ‘திரும்பிப் பார்’ என்று தூண்டும் மனதை அடக்கப் போராடிக்கொண்டிருந்தாள்.

‘அவன் முன்னாடி கேவலமா திக்கி திணறிட்டு, எதுக்கு இப்போ பாக்க சொல்ற?’

‘அவன் கிட்ட என்னவோ இருக்கு. ஒருவாட்டி தான் பாரேன்’

‘ஒன்னும் இல்ல காபி தான் இருந்துது, நீ மூடிக்கிட்டு தின்னுட்டு கிளம்பு’

‘ஒருவாட்டி பாரேன், என்ன கண்ணுல? செம அழகா இருக்கான், என்ன பிங்க் லிப்ஸ், அந்த கண் இமை? வாவ்! உனக்குக் கூட அவளோ அடர்த்தியான புருவுமிருக்குமான்னு டவுட்! கண்டிப்பா அவன் மனுஷனா இருக்கமாட்டான்! ஏஞ்சல்!’

‘மானங்கெட்ட மைண்ட் வாய்சே சும்மா இரு, இப்படி நீ பாட்டுக்கு இழுத்துவிட்டு போயிடுவே அப்புறம் எனக்குத்தான் மண்டைக்காயும்’

‘ஒரு தரம் பார்த்தா என்ன குறைஞ்சு போகும்’

‘வேண்டவே வேண்டாம்! போதும் ஆதேஷ் இம்சையே இன்னும் முடியல மறுபடி வாழ்க்கைல எவனும் வேண்டாம். அழகா இருந்தா இருக்கட்டும்’

‘பாருடி அவன் மாயமா மறைஞ்சுட போறான்’

தனக்குள்ளே தன்னைத்தானே மிரட்டிக் கொண்டிருந்தவள், சாப்பிட மறந்து தட்டை வெறித்திருக்க, ஒரு அளவிற்குமேல் தாங்கமாட்டாது தன்னிச்சையாய் ரிஷியின் புறம் கண்களைத் திருப்ப, அதே நொடி அவனும் அவளைப் பார்க்க. கண்கள் விரிந்தவள் வேகமாகப் பார்வையைத் திருப்பிக் கொண்டாள்.

சில நொடிகள் கழிய மீண்டும் வர்ஷா பார்வையைத் திருப்ப, அவன் அமர்ந்திருந்த மேஜை காலியாக இருக்க, ஆர்வமாக உணவகம் முழுவதும் பார்வையைச் சுழல விட்டவள், ஏமாற்றத்துடன் தன்னருகே இருந்த கண்ணாடிச் சுவரின் வெளியே பார்வையைத் திருப்பினாள்.

அவனோ தன் பைக்கில் ஏறி அமர்ந்து ஹெல்மெட்டை மாட்டிக்கொண்டிருந்தான்.

ஒருநொடி இருவரது பார்வையும்  சந்தித்ததில் அவள் உறைந்துவிட , ஹெல்மெட்டில் கண்கள் மட்டும் தெரியும்  சின்ன இடைவெளி வழியே தெரிந்த அவன் கண்கள், அவன் புன்னகைத்ததைப் போல் மெல்லியதாய் விரிவதை உணர்ந்தவள், சடாரென்று குனிந்து கொண்டாள்.

‘போச்சு போச்சு! பக்கி மாதிரி பாக்குறேன்னு நினைச்சு சிரிச்சுருப்பான். எனக்கிது தேவையா? இவன் இவ்ளோ அழகா இருக்கான்னு எத்தனை பொண்ணுங்க சைட் அடிச்சுருப்பாங்க? கண்டிப்பா என்னையும் இப்போ அந்த பட்டியல்ல சேர்த்திருப்பான்’ தன்னை தானே நொந்துகொண்டாள்.

வெளியே ரிஷி, “சரிடா சாயந்தரம் பார்க்கலாம்” விஷ்ணுவிடம் விடைபெற்றவன், கண்ணாடி வழியே வர்ஷாவை ஒருமுறை பார்த்துவிட்டுப் பைக்கை கிளப்பிக்கொண்டு புறப்பட்டான்.

நடுநிசியில் உறக்கம் கலைந்து எழுந்த வர்ஷா, தண்ணீரெடுக்க சமையலறைக்குச் செல்ல, அங்கே தெரிந்த உருவத்தைப் பார்த்து அலறிக்கொண்டு ஹாலிற்கு ஓட, எதிலோ தடுக்கி விழுந்தாள்.

“நான் தான் மா, சத்தம்போடாதே” என்றபடி விளக்கைப் போட்டார் தாத்தா.

“லூசு தாத்தா! லைட்ட போடாம இருட்டுல என்னத்த உருட்டிக்கிட்டு இருக்க?” வர்ஷா, வலித்த தன் இடுப்பைப் பிடித்தபடி, “என்ன பண்றே?” என்று முறைத்தாள்.

“ஷ்ஷ் கத்தாத, குலாப் ஜாமூன உன் பாட்டி எங்கயோ பதுக்கி வச்சுருக்கா. அதான் தேடிகிட்டு இருந்தேன்”

“அதான் ஏற்கனவே அவ்ளோ சாப்டியே, பேதியாக போகுது தாத்தா”

“அதெல்லாம் ஆகாது, உனக்கும் வேணுமா? வா தரேன்” என்றபடி முன்னே நடக்க,

“வேண்டாம் எனக்கு தண்ணி தான் வேணும், வெந்நீர் வச்சுக்க வந்தேன்”

“பரவால்ல ரெண்டு ஜாமுன் சாப்பிட்டு தண்ணி குடிச்சுக்கோ”

“வேணாம் வேணாம்” என்றவள், “தாத்தா…உன்கிட்ட பேசணும் எப்போ ஃப்ரீ?” தண்ணீர் பாத்திரத்தை அடுப்பில் வைத்தபடி கேட்க,

“ஃப்ரீ தான், பேசலாம்மா ” சில பல ஜாமூன்களை கப்பில் திணித்துக் கொண்டவர், “இங்க வேண்டாம் பால்கனிக்கு போகலாம்” என்று சொல்ல, சில நிமிடங்களில் இருவரும் ஓசை எழுப்பாமல் ஹாலிலிருந்த பால்கனிக்கு சென்றனர்.

“சொல்லும்மா” குலாப் ஜாமூனை சாப்பிட்டுக்கொண்டே சாய்வு நாற்காலியில் அமர்ந்துகொண்டார். அவர் காலடியில் அமர்ந்துகொண்ட வர்ஷா, தயக்கத்துடன் துவங்கினாள்,

“தாத்தா எனக்கு கொஞ்ச நாளா மனசெல்லாம் ஒரு மாதிரி இருக்கு. உன்கிட்ட முன்னவே சொல்ல நெனச்சேன், நீவேற ஊர்ல நிலத்தை விக்குற டென்க்ஷன்ல இருந்தியா….”

“என்னமா?”

“அந்த ஆதேஷ் நல்லவன் இல்ல தாத்தா…” கண்கள் கலங்கியவள், அவர் மடியில் தலை வைத்தபடி அனைத்தையும் மேலோட்டமாகச் சொல்ல, அவள் தலையை மெல்ல வருடிக்கொண்டிருந்தவர் ஒரு நொடி நிறுத்தி,

“நான் உன்னை இப்படியா வளர்த்தேன்? தற்கொலை கோழைத்தனமில்லையா?” அவர் குரலிலிருந்த கோவத்தில், “சாரி தாத்தா” வர்ஷா அவரிடம் சொல்லும்பொழுது தான் தன் மடத்தனத்தை உணர்ந்தாள்.

சிலநொடிகள் மௌனம் நீடிக்க, தாத்தா, “எல்லாம் தெய்வாதீனம்ன்னு நினைச்சுக்கோ. எல்லாமே நல்லதுக்கு தான், அவன் வெளிநாட்டுக்கு போனதும், அவனோட நீ நெருங்கிப் பழகாததும், நான் உங்கப்பன் கிட்ட சொல்லாததும்.

இருந்தாலும் எனக்கு வருத்தம் தான் மா. தற்கொலை எவ்ளோ பெரிய விஷயம், எல்லாமே என்கிட்டே சொல்லுவியே, மதுகிட்டவாது சொல்லிருக்கலாமே.

உன்னை எவ்ளோ தைரியமான பொண்ணுன்னு நெனச்சேன் இப்படி பண்ணலாமா? அந்த கவுன்சிலர் பையன் உன்கிட்ட பேசாம போயிருந்தா?” அவர் முகத்தில் தெரிந்த வலியில், குற்றவுணர்ச்சி வர்ஷாவை வாட்ட,

“சாரி தாத்தா”

“இல்ல மா நீ பண்ணது ரொம்ப தப்பு. அப்படி என்னமா காதல்? எங்களையெல்லாம் பத்தி யோசிக்கவே உனக்குத் தோணலயா?” அவர் குரலில் கடுமை கூடியது.

“அப்படி இல்ல தாத்தா” தலை கவிழ்ந்தவள், “ அவன் தான் சுத்தி சுத்தி வந்தான், அவனே விட்டுட்டும் போனான். அவனை உயிருக்கு உயிரா காதலிச்சேன்னு பொய்யெல்லாம் சொல்லமாட்டேன்.

ஆனா என்னை வேண்டாம்னா அப்போவே சொல்லியிருக்கலாமே, ரெண்டு வருஷம் நம்பவைச்சு, இப்படியொரு கீழ்த்தரமான காரணம் சொல்லி… அதெல்லாம் தான் மனசு வருத்தமா போச்சு. சொல்லத் தெரியல தாத்தா என்னமோ ஒருமாதிரி இருந்துது” அவர் காலைக் கட்டிக்கொண்டாள்.

சில நொடி அமைதியாக இருந்தவர், “அப்போ லவ் விட அவன் வேண்டாம்னு சொன்னதுதான் உனக்கு வலி, இல்லையா?”

“ம்ம் எஸ்” சிலநொடிகள் மௌனமாக எதையோ யோசித்தவள், “அப்போ நான் அவனை லவ் பண்ணலயா?” நிமிர்ந்து அவர் முகத்தைப் பார்த்தாள்.

மறுப்பாகத் தலையசைத்தவர், “இல்ல! இது காதல் இல்லமா. அவன் உன்னையே சுத்தி வரவும் உனக்குள்ள ஒரு ஈர்ப்பு, அவன் வேண்டாம்னு சொன்னதும் ஷாக் அவ்ளோதான்.

இந்த ரெண்டு வருஷத்துல அவனை எவ்ளோ நாள் நினைச்சுருப்பே? அவன் கூட உன் எதிர்காலம் எப்படின்னு சீரியஸா யோசிச்சுருக்கியா?” அவர் கேட்க, மறுப்பாகத் தலையசைத்தவள்,

“அவ்ளோலாம் யோசிக்கல தாத்தா. என்னை பிடிச்சுருக்குனு அவன் சொல்லவே ஏன் ஒருத்தன் மனசை கஷ்ட படுத்துவானேன்னு சரி சொன்னேன். ஆனா உண்மையா இருக்க நினைச்சேன்.

இந்த ரெண்டு வருஷத்துல நான் வேற யாரையும் யோசிக்க கூட இல்ல, உண்மைய சொன்னா நான் அவனையும் நினைக்கல வேற எவனையுமே நினைக்கல” உதட்டைக் கடித்துக் கொண்டாள்.

“வருத்தப்படாதுடான்னு தூக்கி குடுக்க வாழ்க்கை என்ன அவ்ளோ சீப்பா போச்சா? உன்னை நீயே மதிக்கலைன்னா அவன் எப்படி மதிப்பான்?”

“அப்படி இல்ல…”

“நீ இதை அப்போவே என்கிட்டே சொல்லியிருக்கணும், அவனுக்காக சம்மதிச்சேன்னு! நான் அப்போவே உன்னை தடுத்திருப்பேன்” முகம் வாடியவர்,

“இந்தக் காலத்துப் பசங்களுக்கு எல்லாத்துலயும் அவசரம், சொன்னா சண்டைக்கு வருவீங்க. எது காதல்னு புரிஞ்சுக்கறதுல கூடவா அவசரம்? எந்த உறவுன்னாலும் பல தடவை யோசிக்கணும். அதுவும் காதல் ஒரு கமிட்மென்ட்.

இங்க பாரு வர்ஷா நான் பிரேக்டிகல் மேன்! உங்கம்மா கூடப் புரிஞ்சுப்பான்னு வச்சுக்கோ, ஆனா உன் பாட்டியும் அப்பனும் ஆகாசத்துக்கும் பூமிக்கும் குதிப்பாங்க.

உனக்கு அப்புறம் மது இருக்கா, உன்னை பார்த்து தான அவளும் நடப்பா? பொறுப்புள்ள அக்காவா இரு” சில நொடி மௌனமானவர், கோவத்தைக் கட்டுப்படுத்த முயல்கிறார் என்பதை அவர் முகம் காட்ட, வர்ஷா பயத்துடன் அவரைப் பார்த்திருந்தாள்.

“இனிமே என்ன விஷயமானாலும் என்கிட்டயோ இல்ல நம்பிக்கையானவங்க கிட்டயோ மனசு விட்டுப் பேசு. இனிமே இப்படி அசட்டுத்தனமான செய்ய மாட்டேன்னு எனக்கு வாக்கு கொடு” அவர் தன் உள்ளங்கையை அவள் முன் நீட்ட அதிர்ந்த வர்ஷா, “என்ன தாத்தா?” என்று பதற,

அவரோ, “ம்ம்” என்று முறைக்க, அவர் கையைப் பற்றியவள், “சத்தியமா இனிமே தற்கொலை செஞ்சுக்க நினைக்கவே மாட்டேன். என்ன மன்னிச்சுடு தாத்தா” என்றவள் மீண்டும் அவர் மடியில் தலைவைத்துக் கொண்டாள்.

ஆதங்கத்தை வெளிக்காட்டிக் கொள்ளாதவர், “நீ உள்ள போயி படுத்துக்கோ. பாட்டிக்காரி எழுந்தா கப்பை பாத்து சண்டைக்கு வருவா, நான் அலம்பி வச்சுட்டு தூங்கறேன்” என்றபடி எழ,

“நீ போய் படுத்துக்கோ, நான் வாஷ் பண்றேன்” அவரிடமிருந்து கிண்ணத்தை வாங்கிக்கொண்டவள், “தேங்க்ஸ் தாத்தா, லவ் யு” மென்மையாக அவரை அணைத்துக்கொண்டாள்.

***

ரிஷியை அழைத்திருந்தான் விஷ்ணு, “கிளம்பிட்டியா?”

“இல்லைடா”

“ஐயோ பெரியம்மா வந்து வந்து வெயிட் பண்ண போறாங்க”

“சாரிடா, கொஞ்சம் அவசர வேலைல இருக்கேன், நீ வேணா உன் பைக்க இங்க வச்சுட்டு என் காரை எடுத்துட்டு போயி அம்மாவை பிக்கப் பண்ணிக்கிறியா”

“என்ன இப்போ சொல்றே?” கடிகாரத்தைப் பார்த்தவன், “சரி வரேன், கொஞ்சம் முன்னாடியே சொல்லிருக்கலாமே”

“எதிர்பாராம ஒரு சின்ன இஷ்யூ, சால்வ் பண்ணிடலாம்னு நினைச்சேன், ஆனா இழுத்தடிக்குது. பார் உன்னால முடியலைன்னா அம்மாவை டேக்சி பிடிச்சு வரச் சொல்றேன், நீ கஷ்டப்படாதே”

“இல்ல! நான் கூட்டிகிட்டு வரேன்” என்ற விஷ்ணு, சிறிது நேரத்தில் ரிஷிநந்தனின் கம்பெனிக்குச் சென்று காரை எடுத்துக்கொண்டு இரயில் நிலையத்திற்கு புறப்பட்டான். அவன் சென்றடைவதற்கும், இரயில் வந்து ப்ளட்ஃபாரத்தில் நிற்பதற்கும் சரியாக இருந்தது.

விஷ்ணுவர்தன் ரயிலில் கோச் எண்களைப் பார்த்தபடி நடக்க, இரயில் பெட்டி ஒன்றின் உள்ளே யாருடனோ பேசியபடி அமர்ந்திருந்தார் ரிஷியின் தாய் ரஞ்சனி.

விஷ்ணுவின் அழைப்பில் திரும்பியவர், முகமெங்கும் புன்னகையுடன், “செல்லம்! நீ எப்போ வந்த” விஷ்ணுவை ஜன்னல் வழியே பார்த்தவர், அருகிலிருந்த பெண்ணிடம் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினார்.

“ட்ரெயின் வந்து இவ்ளோ நேரமாச்சு எங்கடா உன்ன காணுமேன்னு பாத்தேன், பேச ஆள் கிடைச்சா போதுமே, நான் வரலைன்னா பேச்சு ஸ்வாரசியத்துல அதே ட்ரைன்ல மறுபடி ஊருக்கே போறதா பிளானா?” அவரை வம்பிழுத்தபடி, அவரிடமிருந்து பையை வாங்கிக்கொண்டான் விஷ்ணு.

“எதுக்குடா செல்லம் நீ வீணா அலையுற? நான் டேக்சியோ ஆட்டோவோ பிடிச்சு வந்துருப்பேன்ல?” என்றபடி விஷ்ணுவுடன் நடந்தவர்,

“என்னடா மூணே மாசத்துல இவ்ளோ இளைச்சு போயிட்ட? ரெண்டு பேரும் ஒழுங்கா சாப்படறீங்களா இல்லையா?” விஷ்ணுவை ஆராய்ந்தபடி புருவம் சுருக்க,

“ஊர்லேந்து வந்தாலே இந்த டைலாக் சொல்லணும்னு ஏதாவது ரூல் இருக்கா? நானே நாலு கிலோ ஏறிப்போயிருக்கேனே எப்படி குறைக்கலாம்னு யோசிக்கிறேன்” கார் கதவைத் திறந்துவிட்டவன், “இதுக்கே இப்படி சொல்றே, இன்னும் ரிஷிய பாத்தா என்ன சொல்வியோ?” என்றபடி ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தான்.

“அவன் என்னிக்கி நான் சொல்லி கேட்டான்?” அலுத்துக்கொண்டவர், “ஆமா அவன் கிட்ட பேச சொன்னேனே பேசினியா?” விஷ்ணுவின் முகத்தை ஆர்வமாகப் பார்க்க,

“எதைப் பத்தி?” புருவம் சுருக்கியவன், “ஓஹ் அந்த பரிகார விஷயமா? மறந்துட்டேன் பெரிமா. அதான் நீயே வந்துட்டியே நீயே சொல்லிடு”

“நான் சொன்னா எதாவது சாக்கு சொல்லுவான்னு தானேடா உன்கிட்ட பேச சொன்னேன்” ரஞ்சனி முறைக்க,

“போ பெரிமா! போனவாட்டி ஜோசியர் சொன்னார்னு நீ அவனை அந்த ராசிக்கல் மோதிரம் போட சொன்னதுக்கு அவன் உன்னையும் என்னையும் கடிச்சு குதறினது மறந்துபோச்சா? நீ என்னடான்னா அதுக்குள்ள வேற ஜோசியர் சொன்னாருன்னு அடுத்த பரிகாரத்துக்கு ரெடியாகுற?”

“காலகாலத்துல கல்யாணத்தை பண்ணிக்கிட்டா நான் ஏன் இப்படி சுத்தப்போறேன்? எப்போ கேட்டாலும் இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்னே சொல்லிக்கிட்டு இருந்தா எப்படி?” அவர் சாலையை வெறிக்க,

வண்டியை ஒட்டிக்கொண்டிருந்த விஷ்ணு, குறும்பு புன்னகையுடன், “கல்யாணம் தானே? இப்போ ம்ம்ன்னு ஒரு வார்த்தை சொல்லு நாளைக்கே கல்யாணம் செஞ்சுக்க நான் ரெடி” என்று கண்ணடிக்க,

“சரி, இந்த வாட்டியும் அவன் பிடி குடுக்காம பேசினா அவனை விட்டு உனக்கு கல்யாணம் பண்ணிவச்சுடறோம்” ரஞ்சனி சிரிக்க,

“ஐயோ அப்படி எதுவும் செஞ்சுடாத நான் சும்மா சொன்னேன்”

“அதெல்லாம் தெரியாது அண்ணனோ தம்பியோ எவனாவது ஒருத்தனுக்கு இந்த வருஷம் கல்யாணம் நடந்தே ஆகணும் சொல்லிட்டேன்” ரஞ்சனி தீர்மானமாகச் சொல்ல,

“அப்போ ரிஷிக்கும் மாலதிக்கும் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிடு பெரிமா” விஷ்ணு சிரிக்க,

பதறியவர், “யாருடா மாலதி?” என்று விழிக்க,

“ம்ம் வீட்டுக்கு வருவான்ல, அவன் கிட்டயே கேளு. யாருடா மாலதின்னு” விஷ்ணு தோளைக் குலுக்க,

“வரட்டும் அவனையே கேக்கறேன்” ரஞ்சனி கோவமாகச் சாலையைப் பார்க்க,

“தாராளமா கேளு எனக்கும் சில பல விஷயங்கள் தெரிஞ்சுக்கணும்” விஷ்ணு புன்னகைத்தபடி வண்டியை வீட்டை நோக்கிச் செலுத்தினான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!