Banner-ec9be196

6

இரவு சற்று தாமதமாகவே வீடு வந்தான் ரிஷிநந்தன்.

“மா எப்படி இருந்துது ஜர்னி?” ஷூவை கழற்றிக்கொண்டே கேட்ட மகனை முறைத்த ரஞ்சனி,

“அதெல்லாம் நல்லாத்தான் இருந்தது , மொதல்ல யாரு மாலதின்னு சொல்லு” கையை கட்டிக்கொண்டார்.

“யாருமில்ல மா” என்றவன், “என்ன இவன் சொன்னானா?” விஷ்ணுவை பார்த்து சிரித்தவன், “அவனுக்கு வேற வேலையில்ல” என்றபடி ரஞ்சனியை கட்டிக்கொண்டான்.

“என்ன நீ இன்னும் அழகா ஆயிட்டே போற?” கன்னத்தை பிடித்து கிள்ளிய மகனின் கையை கோவமாக தட்டிவிட்டவரோ, “யார்டா மாலதி?” என்று அதிலேயே நிற்க,

“சொல்லு! மாலதி அண்ணி யாருன்னு சொல்லு” ‘மாட்டினியா’ என்பதுபோல தலையை ஆட்டியபடி விஷ்ணு ஏத்திவிட,

“அண்ணியா? முடிவே பண்ணிட்டானா?” ரஞ்சனி ரிஷியை முறைத்ததில் பதறியவன்,

“லூஸாமா நீ? அவன் புழுகுறான்! நீ என்னையே சந்தேகப்படுற? உன்கிட்ட சொல்லாம இருப்பேனா?”, மறுப்பாக தலையசைத்து “குளிச்சுட்டு வந்து என்னன்னு உனக்கு தெளிவா சொல்றேன்” என்றவன் விஷ்ணுவிடம், “டேய் பசிக்குது இட்லி வை வந்துடறேன்” என்றபடி தன் அறைக்கு சென்றுவிட்டான்.

ரஞ்சனி கோவமாக கையை கட்டிக்கொண்டு சோஃபாவில் அமர்ந்துவிட, விஷ்ணு சிரித்தபடியே இரவு உணவிற்கு தயார் செய்ய துவங்கினான்.

குளித்துவிட்டு வந்தவன், கோவமாக இருந்த ரஞ்சனியை கண்டுகொள்ளாமல் தட்டில் இட்லியை பரிமாறி அவர் முன் நீட்ட, அவரோ முகத்தை திருப்பி கொண்டார்.

“மேடம்! இப்படி ஓவரா பிகு பண்ணா எதுவும் சொல்லமாட்டேன். நீ சாப்ட்டா என்ன ஏதுன்னு பொறுமையா சொல்லுவேன், இல்ல நான் சாப்ட்டு தூங்க போயிகிட்டே இருப்பேன்” ரிஷி மிரட்ட, கோவமாக தட்டை வாங்கி ரஞ்சனி சாப்பிட,

அவ்வப்போது ரிஷியும் விஷ்ணுவும் ரகசியமாக ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்தபடி அவருடன் சாப்பிட்டு முடித்தனர்.

ரஞ்சனியின் மடியில் விஷ்ணு படுத்திருக்க, அவன் தலையை கோதி கொண்டிருந்தார் ரஞ்சனி, அவர் எதிரே அமர்ந்து கைபேசியை பார்த்திருந்தான் ரிஷி.

“நீ சொல்றேன்னு சொல்லி ரொம்ப நேரமாச்சு” விஷ்ணு நினைவூட்ட,

“உன்ன மிதிச்சா சரியா வரும்” ரிஷி அவன் மேல் குஷனை ஏறிய,

“குழந்தையை ஏன்டா?” ரஞ்சனி முறைக்க

“பல்லத்தட்டி தொட்டில்ல போடு, பக்கத்து வீடு வரை காலு நீளுது, குழந்தையாம்” என்றவன் அவரிடம், “ இங்க பாரு நீ நினைக்கிற மாதிரி மாலதின்னு ஒருத்தி இல்லவே இல்ல, வர்ஷான்னு ஒருத்திவேனா இருக்கா!” என்றான் கூலாக.

“எத்தனை பேருடா? இதெல்லாம் தப்புடா!” ரஞ்சனி பதற,

“ஆர்வ கோளாறா மா நீ?” அவரை முறைத்தவன், “ஓவரா சீரியலை பாக்காதன்னா கேட்டாத்தானே? யாருமே வேண்டாம்னு சொல்றேன் எனக்கு இதுல பல கேர்ள் பிரெண்ட்ஸா?” அலுத்துக்கொண்டவன்,

“தலைவலிக்குது அதுவும் உன்னால! என் தலையையும் மசாஜ் பண்ணு” வீம்பாக தாயின் மடியில் படுத்து கொள்ள, இரு பிள்ளைகளின் சிகையயும் கோதியபடி கவலையாய் யோசித்திருந்தார்.

ரிஷி பேச துவங்கினான்.

“போன மாசம் ஒரு நாள் ராத்திரி ஒரு ஃபோன் வந்தது, எடுத்தா…” பொறுமையாக வர்ஷாவை பற்றி மேலோட்டமாக சொன்னவன், “இப்போ தெரியுதா யார் அந்த மாலதின்னு? நானே வாயில வந்த பேரை அடிச்சுவிட்டா நீ என்னடான்னா” தாயின் கன்னத்தை கையால் தள்ளிவிட்டு சிரித்தான்.

அவரோ கவலை குறையாத முகத்துடன், “பாவம் டா. ஆமா அந்த பொண்ணு இப்போ எப்படி இருக்கா? தெளிஞ்சுட்டாளா?”

“ம்ம் கொஞ்சம் பரவால்ல. நான் பேசியே ஒருவாரம் மேல ஆச்சு”

“ம்ம் மறுபடி பேசினா எனக்கு அறிமுக படுத்து நானும் அட்வைஸ் பண்றேன்” அவர் ஆர்வத்தில் , விஷ்ணு கிளுக்கென்று சிரிக்க, ரிஷியோ இருகரம் கூப்பி,

“ஆத்தா பரதேவதையே! அவளே இப்போதான் முருங்க மரத்திலிருந்து இறங்கி வந்துருக்கா. நீ எதையாவது ஞாபகப்படுத்த போய் மறுபடி அவ ஆரம்பிச்சுடுவா பீச்சுக்கு போறேன் மொட்டைமாடிக்கு போறேன்னு. ஒவ்வொரு தடவையும் அவளை பேசி சரிக்கட்டுறதுக்குள்ள என் நாக்கு தள்ளிடுது. இந்த லேடீஸ் எல்லாரும் ரொம்ப அழுத்தம் தான் போல, என்னடா விஷ்ணு” மறைமுகமாக ரஞ்சனியை வம்பிழுத்தவன்,

“ஆமா மேடம் என்ன திடீர் சென்னை விசிட்? இந்த வாட்டி எந்த ஜோசியர் என்ன சொன்னான்?” நேராக விஷயத்திற்கு வந்தான்.

“உனக்கு என்ன பாத்தா எப்படி தெரியுது?”

“இங்கேந்து பார்த்தா கொஞ்சம் டபிள் சின் தெரியுது” அவன் சிரிப்பை அடக்கிக்கொண்டு சொல்ல,

“ஏன் சொல்ல மாட்ட? நானே உனக்கு நல்லபடியா கல்யாணம் ஆகணுமேன்னு இருக்கேன்”

“அதெல்லாம் தெரியும். இப்ப…என்ன பிளானோட வந்த அத சொல்லு”

“அது பெரிசா ஒண்ணுமில்லடா… ஆறே ஆறு சனிக்கிழமை விடாம கோயிலுக்கு போயி நெய்தீபம் ஏத்தணும், உன் ஜாதகத்துல இருக்கிற திருமண தடை அப்போதான் நீங்குமாம்”

கைதட்டி சிரித்த விஷ்ணு “பெரிமா! அவன் திருமணத்துக்கு தடையே அவன்தான்! நீ என்னடான்னா”

ரிஷியோ “என்னமா நீ இப்படி இம்சிக்கற? நான் தான் சொல்றேன்ல ரெண்டு வருஷம் போகட்டும்னு?” கடுகடுதான்

“இப்போவே வயசு இருபத்தியெட்டாச்சு, இன்னும் ரெண்டு வருஷம்னா முப்பது வயசாகிடும்” கோவப்பட்டவர், தாழ்ந்த குரலில், “இப்போகூட ஒரு நல்ல வரன் வந்துருக்குடா. பொண்ணு நமக்கு தெரிஞ்சவங்க சொன்ன இடம்தான், சென்னைல தான் எங்கயோ வேலை பாக்குறா. நீ சரின்னு சொன்னா இந்த சண்டே மீட் பண்ணலாம்” ரஞ்சனி தயங்கி தயங்கி சொல்ல,

கோவமாக அவர் மடியை விட்டு எழுந்த ரிஷி, “இந்த பொண்ண பாரு அந்த பொண்ண பாருன்னு என்னை தொல்லை பண்ணத்தான் ரயில பிடிச்சு வந்தியா? மறுபடி இதையே பேசினேன்னா அப்புறம் மனுஷனா இருக்க மாட்டேன்” கத்திவிட்டு தன் அறைக்கு சென்றுவிட்டான்.

ரஞ்சனியோ உரக்க, “போடா போடா! நீயா வந்து கல்யாணம் செஞ்சுவைன்னு கெஞ்சுற வரை உனக்கு நான் பொண்ணு தேட மாட்டேன் பாத்துக்கோ” என்று கத்த,

“அப்போ என் கல்யாணம்? நீ தானே எனக்கும் அம்மா…” பாவமான முகத்துடன் விஷ்ணு அவரை பார்க்க,

“உனக்கில்லாமலா செல்லம்” அவனுக்கு திருஷ்டி கழித்தவர், “உனக்கு ஜம்முன்னு ஒரு பொண்ணு பாத்து கண்டிப்பா கல்யாணம் பண்ணிவைக்கிறோம்” என்றவர், நக்கல் புன்னகையுடன், “ஆனா ரிஷி கல்யாணத்துக்கு அப்புறம்” என்று விட்டு எழ, உதட்டை பிதுங்கிய விஷ்ணு,

“அப்போ எனக்கும் நேரா அறுபதாம் கல்யாணம் தானா?” போலியாக அலுத்துக்கொண்டான்.

காலை ரிஷியும் விஷ்ணுவும் அலுவலகத்திற்கு புறப்பட, ரஞ்சனியோ காலை டிஃபனை செய்துவைத்துவிட்டு, கோவிலுக்கு கிளம்பிவிட்டிருந்தார்.

“பாவம் பெரியம்மா கொஞ்சமான அவங்களுக்காக யோசியேன்”

ரிஷியோ எதுவும் சொல்லாது கதவை திறந்துகொண்டு புறப்பட, விஷ்ணுவும் அதற்குமேல் பேசாமல் அவனுடன் புறப்பட்டான்.

“உன் பைக் டெலிவரி வரவரை என் பைக் யூஸ் பண்ணிக்கோ” விஷ்ணு தன் பைக் சாவியை ரிஷியிடம் நீட்ட,

மறுத்த ரிஷியோ இறுகிய முகத்துடன், “வேண்டாம் நான் கார்ல போயிக்கிறேன்” என்று தன் காரை நோக்கி நடந்தான்.

அவனை வழிமறித்த விஷ்ணு, “சரி சரி நான் பெரியம்மாக்கு சப்போர்ட் பண்ணமாட்டேன், இப்போ ஸீன் போடாம இந்த பைக் சாவிய புடி. ப்ளீஸ் அண்ணா” அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு அண்ணா என்ற அஸ்திரத்தை பிரயோகிக்க, அது ரிஷியை சரியாக தாக்கியது,

உடனே முகம் இளகிய ரிஷி, புன்னகையுடன். “ம்ம் விடு இட்ஸ் ஓகே” என்றபடி பைக் சாவியை வாங்கிக்கொண்டான்.

விஷ்ணுவை அவன் அலுவலகத்தில் இறக்கி விட்டவன், “லன்ச் டைம்ல வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்” என்றுவிட்டு கிளம்பினான்.

‘பேசினா இவன் முறைக்கிறான், பேசாட்டி பெரியம்மா முறைக்கிறாங்க எல்லாம் என் நேரம்’ முணுமுணுத்தபடி அலுவலகத்திற்குள் சென்றான் விஷ்ணு.

***

தனது தளத்திற்கு செல்ல லிஃப்ட்டிற்காக காத்திருந்தாள் வர்ஷா, லிப்ட் வர, அவள் உள்ளே நுழைய வேகமாக உடன் நுழைந்தான் ஆதேஷ்.

அவன் “என்ன முன்னாடிலாம் சல்வார்ல வருவ இப்ப ஒரே ஜீன்ஸ்?” அவன் கேட்க, பதில் தராமல் மாறிக்கொண்டிருக்கும் ஃப்ளோர் நம்பரை பார்த்திருந்தாள்.

“நிர்மல்க்கு இதான் பிடிக்குமா இருக்கும்ல” அவன் நக்கல் சிரிப்பில் பொறுமை இழந்தவள்,

“என் டிரஸ், என் பாய் பிரென்ட் இதெல்லாம் என் பெர்சனல் விஷயம். கமெண்ட் பண்ண நீங்க யார்?” என்று முறைக்க,

“என்ன வரவர வாய் ஓவரா நீளுது?” அவன் அவளை நெருங்க,

“கை நீளலையேன்னு சந்தோஷ படு…” தங்கள் தளம் வர பேச்சை நிறுத்தியவள், அவனை முறைத்துவிட்டு சென்றுவிட,

பற்களை கடித்தபடி முன்னே சென்று கொண்டிருந்தவளை முறைத்தவன், ஆட்கள் இருந்ததால் மௌனமாக பின் தொடர்ந்து அலுவலகத்திற்குள் சென்றான்.

தன் இருக்கைக்கு சென்றவள் பொங்கிவந்த கோவத்தை அடக்கமுடியாமல் தலையை பிடித்தபடி அமர்ந்துகொண்டாள்.

“ஆர் யு ஓகே?” நிர்மலின் குரலில் தலை உயர்த்தியவள், “யா ஓகே, கொஞ்சம் தலைவலி” என்று விழிக்க,

“அர்ஜென்ட்ன்னு போன் பண்ணேன் ஏன் எடுக்கல?”

“சாரி ட்ரைவிங்ல இருந்ததால சைலென்ட்ல போட்டுட்டேன், சொல்லு”

“ஒரு எஸ்கலேஷன் உடனே பாக்கணும், ஆதேஷ் வேற ஒர்க் எனக்கு கொடுத்துருக்கார், உன்னை இதை பாக்க சொல்ல சொன்னார்” என்றுவிட்டு அவள் செய்யவேண்டிய வேலையை அவளுக்கு எடுத்துச்சொல்ல,

“நிர்மல் இது ரிஸ்கி நான் எப்படி?” அவள் தயங்க

“சொன்னேன், இதைக்கூட பாக்க முடியாத ஒருத்தருக்கா அவ்ளோ நல்ல ரேட்டிங் போட்டேனு கேட்டார்” நிர்மல் உதட்டை கடித்துக்கொள்ள, வேண்டுமென்றே தன்னை பிரச்னையில் சிக்கவைக்க ஆதேஷ் திட்டம் தீட்டியதை உணர்ந்து கொண்டவள்,

“சரி நான் மேனேஜ் பண்றேன், முடியலைன்னா உன்கிட்ட ஹெல்ப் கேக்கறேன்”

சிலநொடி அவளை பார்த்திருந்த நிர்மல், “உனக்கும் ஆதேஷுக்கும் ஏதாவது பிரச்சனையா? அப்ரெய்சல் போதே கேள்வி கேட்டு கொடைஞ்சுட்டார் எப்படி வர்ஷாக்கு இவ்ளோ நல்ல ரேட்டிங் கொடுத்தேன்னு, இவ்ளோ சீரியஸ் இஷ்யூல உன்னை இழுத்துவிடறதும் வேற குழப்பமா இருக்கு”

“அதெல்லாம் இல்ல”

“ம்ம் சரி கொஞ்சம் அந்த ஈமெயில் பார்த்துடு, முடிஞ்சா லான்ச்க்கு முன்னாடி முடிக்க பாரு, வேணும்னா கால் மீ” என்றுவிட்டு நிர்மல் சென்றுவிட

கண்களை மூடி சிலநொடி சுவாசத்தில் கவனம் செலுத்திவிட்டு, வேலையை துவங்கினாள். அவள் எதிர்பார்த்ததைவிட அவளிடம் ஒப்படைத்திருந்த வேலை கடினமாகவும், கொஞ்சம் மெத்தனம் காட்டினாலும் பெரியளவு பாதிப்பை ஏற்படுத்த கூடியதாக இருக்கவே, நொடியும் அவளால் எங்கும் நகர முடியவில்லை.

ஒருவழியாக வேலையை முடிந்துவிட்டதாக நிர்மலுக்கு ஈமெயில் செய்துவிட்டு தாமதமாகவே சாப்பிட கிளம்பினாள்.

உணவகத்தில் அமர்ந்திருந்தவள் கண்கள் அன்று பார்த்தவனை தேடி அலைய, தன்னை கட்டுப்படுத்திக்கொண்டவள் மொபைலில் கவனம் செலுத்தியபடி சாப்பிட, அவள் எதிரில் பைக்கை நிறுத்திவிட்டு விஷ்ணுவுடன் வந்த ரிஷியை கவனிக்கவில்லை.

உணவகத்தின் வேறு கோடியில், வாயிலின் அருகேயுள்ள மேசையில் ரிஷியும் விஷ்ணுவும் அமர்ந்திருக்க, விஷ்ணு,

“உன் விசிறி உள்ள சாப்படறாளே பாக்கலயா?” விஷம புன்னகையுடன் கேட்க

“தெரியும், அதான் இங்க உட்காரலாம்னு சொன்னேன்” ரிஷி முகம் இறுகியிருந்தது.

“அடப்பாவி ஏன்?” விஷ்ணு புருவம் விரிய,

“அவ அன்னிக்கே பார்த்தது என்னமோ மாறி இருந்துது. எதுக்கு நாம தேவையில்லாம ஒருத்தர் மனசுல ஆசையை வளக்கணும்? அதுக்கெல்லாம் எனக்கு டைமும் இல்ல ஆர்வமும் இல்ல” உணர்ச்சியே இன்றி ரிஷி சொல்ல, அவன் மனவோட்டத்தை புரிந்துகொள்ள முயன்றவன் தோற்றுப்போனான்.

சிறிதுநேரத்தில் ரிஷி, வெளியே வந்து கொண்டிருந்த ஆதேஷை பார்த்துவிட்டு, “அவன் தானே அந்த பொண்ணுகிட்ட சண்டை போட்டவன்?” என்று புருவம் சுருக்க,

அவன் பார்வை வந்த திசை பார்த்த விஷ்ணு, “இருக்கும்! அவன் கூட யார் கேர்ள்பிரெண்டா? இவனுக்கெல்லாம் எப்படிடா இவ்ளோ அழகான பொண்ணு அமையுது? நம்ம நாட்டு பொண்ணு மாதிரியே தெரியலையே. ஆங்கிலோ இந்தியனா?”

அவன் பேசியதை காதில் போட்டுக்கொள்ளாத ரிஷி “ஹே ஏதாவது பண்ணி அவனை துரத்து” என்று அவசரப்படுத்த,

“எதுக்கு?” என்ற விஷ்ணு விளங்காமல் பார்த்தான்.

“அந்த பொண்ணு நிம்மதியா சாப்பிட்டுக்கிட்டு இருக்கா. இவன் எதோ தப்பா செய்யப்போறான்னு எனக்கு தோணுது”

“நமக்கென்ன வந்தது? நீ ஏன் இவ்ளோ யோசிக்கிற? உனக்குத்தான் அவ மனசுல ஆசையை வளர்க்க கூடாதுன்னு தோணுதுல. ப்ளஸ் வர்றவனை வராதன்னு சொல்லவா முடியும்?”

“வரான் வரான் ஏதாவது செய்டா” விஷ்ணுவை விரட்டியவன், சாம்பார் கிண்ணியை அவன் முன் நகர்த்த,

“அடிவாங்கி வைக்க முடிவு பண்ணிட்ட!” பெருமூச்சொன்றை விட்ட விஷ்ணு, ஆதேஷ் அகாங்ஷா இருவரும் உள்ளே நுழையும் அதே நொடி வேகமாக சாம்பார் கிண்ணியுடன் எழுந்து தற்செயலாக கொட்டுவதைபோல் அகாங்ஷா மேல் சாம்பாரை கவிழ்க்க,

பதறி இரண்டடி பின்னாடி சென்றுவிட்ட ஆதேஷ், கோவமாக விஷ்ணுவை “இடியட்.” என்று முறைக்க, புன்னகையுடன் குனிந்துகொண்டான் ரிஷி.

விஷ்ணுவோ அப்பாவியை போல அகாங்ஷாவிடம் “சாரி சாரி” என்று போலியாக நடிக்க,
“இட்ஸ் ஓகே!” என்றவள் டாப்ஸை சுத்தம் செய்ய சென்று விட, விஷ்ணுவும் கைகழுவ பின்னாடியே ஓடி தப்பித்துக்கொண்டான்.

அதே நொடி வர்ஷா கையை துடைத்தபடி வரவும், வழிமறித்தபடி நின்ற ஆதேஷ், முறைப்புடன்,

“நீ எங்க இங்க ? ஆமா நான் எங்க போனாலும் பின்னாடியே வருவியா, உனக்கெல்லாம் தன்மானமே இல்லையா? யூ ஃபில்தி ***” என்று நாக்கூசாமல் சொல்ல, அதில் பொறுமையை மொத்தமும் இழந்துவிட்டான் ரிஷி. 

“மிஸ்டர்!” என்று உறுமியபடி எழுந்தவன், ரெண்டெட்டில் ஆதேஷை அடைந்தான், “ஒரு பொண்ணுகிட்ட எப்படி பேசணும்னு தெரியாது? வாட்  நான்சென்ஸ் ஐஸ் திஸ்” என்று சீற,

வர்ஷாவிற்கோ, ஆதேஷின் வார்த்தையில் வரவிருந்த கண்ணீர், ரிஷியை பார்த்த சந்தோஷ அதிர்ச்சியில் எங்கோ ஓடி மறைந்தது.

“நீ யாரு கேட்க?” ஆதேஷ் ரிஷியை முறைக்க, 

“யாரா இருந்த உனக்கென்ன? மொதல்ல பப்ளிக் மேனர்ஸ் தெரிஞ்சுக்கோ”

“பொண்ணுன்னா உடனே வந்துடுவீங்களே?”

“மைண்ட் யுவர் வேர்ட்ஸ் மிஸ்டர்!” கண்கள் விரிய ஆவேசமாய் ரிஷி உறுமியதில் ஆதேஷ் மிரண்டுதான் போனான்.  

ஆண்கள் இருவரும் வாக்குவாதம் செய்திருக்க, வர்ஷாவோ அனைத்தையும் மறந்து கையை ஆட்டியபடி அவனை மிரட்டி கொண்டிருந்த ரிஷியையே இமைக்காது பார்த்திருக்க,

‘உஃப் எவ்ளோ உயரமா இருக்கான். ஆமா அன்னிக்கி இந்த தாடி இருந்ததா? ஐயோ மறந்துபோச்சே’ அவள் யோசனையை கலைத்தது, “எனி ப்ராபளம்?” என்ற அகாங்ஷாவின் குரல்.

ஆதேஷை முறைத்துவிட்டு ரிஷி வேகமாக உணவகத்தை விட்டு வெளியேறிவிட , வர்ஷாவை பிடித்துக்கொண்டான் ஆதேஷ்,

“எங்க போனாலும் எவனையாவது பிடிச்சுடுவியா? மொதல்ல நான் சொன்ன வேலைய முடிச்சியா? உனக்கெல்லாம்…” என்று மீண்டும் துவங்க,

ரிஷி சென்றுவிட்ட கோவத்திலிருந்த வர்ஷா, “சீ போடா லூசு!” என்று அவனை கையால் விலக்கிவிட்டு, வெளியேறினள்.

அதிர்ச்சியில் கண்கள் விரிய நின்றிருந்த ஆதேஷை, வினோதமாக பார்த்திருந்தாள் அகாங்ஷா.

‘ஐயோ எங்க போனான்னு தெரியலையே’ என்றபடி அவனை தேடி வெளியே எட்டி பார்த்த வர்ஷா, ‘ஓடி கீடி போய்ட்டானா? இப்போதான வெளியே வந்தான்!’ ஏமாற்றத்துடன் கிளம்பினாள்.

ரிஷியோ அருகில் இருந்த பார்க் ஒன்றில் கோவமாக அமர்ந்திருந்தான். அவனை காணாமல் தேடிய விஷ்ணு, ஒருவழியாக அவனுக்கு கால் செய்து அழைக்க,

வந்தவன், “சாரிடா உன்னை மறந்துட்டேன்” என்று நடந்ததை சொல்ல,

“அவளை பாக்கவே மாட்டேன்னு பந்தா பண்ணிட்டு, ஹீரோ மாதிரி ஸீன் காட்டிட்டு வந்துருக்கல? உன்னயெல்லாம் நம்பவே கூடாது” விஷ்ணு கண்களை சுருக்கி போலியாக மிரட்டினான்.

“நீவேற என்ன வார்த்தை சொல்றான்? வந்த கோவத்துக்கு அடிக்காம விட்டேனு வருத்தமா இருக்கு” என்றவன் விஷ்ணுவை அவன் அலுவலக பார்க்கிங் லாட்டில் இறக்கிவிட்டு, வண்டியை பார்க் செய்தான்.

“நான் கேப் பிடிச்சு பைக் ஷாப் போறேன், வண்டி ரெடியாம் ஃபோன் வந்தது” சாவியை விஷ்ணுவிடம் கொடுத்துவிட்டு நடக்க, அவன் கண்ணில் வர்ஷாவின் ஸ்கூட்டர் பட, உள்ளே சென்று கொண்டிருந்த விஷ்ணுவை கத்தி அழைத்தவன்,

“டேய் இது வர்ஷா வண்டிடா! இங்கதான் வேலை பண்ணுறாளா, ஏன்டா சொல்லல?” விஷ்ணுவை முறைக்க

“இது அவ வண்டின்னு எனக்கெப்படி தெரியும்? மொதல்ல உனக்கு எப்படி தெரியும்?” அவனும் பதிலுக்கு முறைக்க

மொபைலில் வர்ஷா அனுப்பிய புகைப்படத்தை கட்டியவன், “பார் இதே நம்பர். இப்போ சொல்லு ஏன் சொல்லல?”

“நல்ல கதையா இருக்கே! இங்க எத்தன பொண்ணுங்க வேலை பண்றங்கன்னு கணக்கெடுத்துட்டா அலையிறேன்?”

“இனி அலை!”

“டேய்”

“சாயங்காலம் தெரியணும் சொல்லிட்டேன்”

“சாயங்காலமா?” அதிர்ந்த விஷ்ணு, புருவம் முடிச்சிட, “எதுக்குன்னு சொல்லு” என்று கேட்க

ரிஷியோ “என்ன…எதுக்கு?” என்று திணற,

“ஒண்ணுமில்ல” சிரித்துக்கொண்டான் விஷ்ணு,

“பல்லை காட்டாத, மொதல்ல போயி தேடு”

“இந்த பில்டிங்ல எத்தனை கம்பெனி இருக்கு தெரியுமா? மொத்தம் பதினாலு மாடி. எங்க வேல பாக்குறாளோ! என்னனு தேடுவேன்?”

“அதெல்லாம் தெரியாது கண்டுபிடி அவ்ளோதான்” என்ற ரிஷி நில்லாது சென்றுவிட்டான்.

“யாரா இருந்தா எனக்கென்னன்னு கேட்டுட்டு கண்டுபிடியாம் கண்டுபிடி. இவனுக்கு நட்டு கழண்டு போச்சு” முணுமுணுத்தபடி அவள் வண்டி நம்பர் பிளேட்டை புகைப்படம் எடுத்துக்கொண்டான் விஷ்ணு.

சிலநொடி யோசித்தவன், “உன்னை தேடியெல்லாம் சுத்த முடியாது, நீயா வாமா புண்ணியவதி” என்றபடி, பார்க் செய்த தனது பைக்கை வெளியே எடுத்து, வர்ஷாவின் வண்டியை ஒரு இடி இடித்துவிட்டு பார்த்தவன், “இன்னும் பலமா இடிக்கணுமோ” என்றபடி மீண்டுமொருமுறை இடித்துவிட்டு, அவள் வண்டியின் அருகிலேயே பார்க் செய்தான்.

வாயிலில் இருந்த செக்யூரிட்டியிடம் பேப்பர் பேனா வாங்கியவன்,

‘சாரி! உங்க வண்டியை தவறுதலா இடிச்சுட்டேன். இது என் நம்பர், கால் பண்ணுங்க’ என்று எழுதிய துண்டு சீட்டை அவள் வண்டி ஹேண்டிலில் சொருகி வைத்துவிட்டு கிளம்பினான்.

சீட்டிற்கு வந்த வர்ஷா தனக்காக பேசிய ரிஷியை பற்றி சிந்தனையில் மூழ்க, டேக்சியில் சென்றுகொண்டிருந்த ரிஷிநந்தனோ ஏன் வர்ஷாவை தேடுகிறோமென்று மீண்டும் மீண்டும் தன்னைத்தானே கேட்டுக்கொண்டிருந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!