UMUV7

Banner-a0733628

UMUV7

7

மாலை வண்டியை எடுக்க வந்த வர்ஷா, தலையில் கைவைத்தபடி நின்றுவிட்டாள், நம்பர் பிளேட் கொஞ்சம் நசுங்கி, அதன் பக்கத்தில் பெயிண்ட் உரிந்து நீளமான கீறலொன்றும் விழுந்திருந்தது.

விழிகளில் நீர் கோர்க்க, உதட்டைப் பிதுக்கியபடி விழித்திருந்தவள் கண்ணில் அங்கிருந்த துண்டு சீட்டுப் பட, அதிலிருந்த மொபைல் எண்ணிற்குக் கால் செய்தவள்,

“ஹலோ சார், என் வண்டி…” என்று துவங்கும் பொழுதே, விஷ்ணு குஷியானான்.

“வாங்கி ஒருமாசம் தான் ஆச்சு சார்” அவள் வருந்த,

சிரிப்பைக் கட்டுப்படுத்திக் கொண்டவன், “சாரி மேடம்…”

உடனே வருவதாகச் சொல்லி விழுந்தடித்துக்கொண்டு கீழே சென்றவன் தூரத்திலிருந்தே வர்ஷாவை கண்டுகொண்டான்.

ஆஹா நீ தானா அந்தக் குயில்? டேய் அண்ணா விதி உன்னை வச்சு செய்யுது’ சிரித்துக்கொண்டே அவளை நோக்கி நடந்தான்.

“ஹாய்!” என்றவன், தாழ்ந்த குரலில், “நான் தான் அதை வச்சேன். சாரி வேகமா வந்து பார்க் பண்ணும்போது தெரியாம உங்க வண்டிமேல இடிச்சுடுச்சு”

குனிந்து வண்டியிலிருந்த கீறலைத் தடவிக் கொண்டிருந்தவள் விஷ்ணுவின் முகத்தைப் பாராது,

“பார்க்கிங் பண்ணுறதுல என்ன சார் வேகம்?” என்றபடி நிமிர்ந்து அவன் முகம் பார்த்துக் கண்கள் விரிந்தாள்.

இவன் இங்கன்னா அவன்?’ கண்களை அவர்களைச் சுற்றிச் சுழல விட்டாள்.

ஐயோ அடிக்க ஆள் சேக்குறாளோ?’ எச்சிலை விழுங்கியவன், “மேடம் சாரி, நான் இடிக்கல, என் அண்ணன் தான் பார்க் பண்ணான்”

அண்ணன்! அவன் இவனோட அண்ணனா?’ அவள் யோசிக்கும்பொழுது

“அன்னிக்கி காக்கா டி ஞாபகம் இருக்கா?” விஷ்ணு கேட்க, வர்ஷா ஆமென்று வேகமாகத் தலையாட்டினாள்.

“அவன் தான் என் அண்ணன். உங்களுக்குத் திட்டணும்னா அவனைத் திட்டுங்க. இதோ ஃபோன் பண்ணி தரேன்” என்று ரிஷிக்கு ஃபோன் செய்தான்.

வர்ஷா பதறி, “வேண்டாம் சார். பரவால்ல” என்று மறுக்க, மறுமுனையில் ரிஷியோ விஷ்ணுவின் அழைப்பை ஏற்கவில்லை,

“ஃபோன் எடுக்க மாட்டேங்கிறான்” என்றபடி மீண்டும் அவனை அழைக்க,

வர்ஷா, “ப்ளீஸ் சார்! விடுங்க. அவர் தெரியாம தானே…” என்று கீறல் விழுந்த இடத்தையே பார்க்க, விஷ்ணுவிற்கு அவளைப் பார்க்கப் பாவமாகத்தான் தோன்றியது.

“ரிப்பேர் பண்ண எவ்ளோ ஆகுதுன்னு சொல்லுங்க, நான் கொடுத்துட்றேன், மிஸ்?”

“வர்ஷா” என்றவள், “பரவால்ல” என்று உதட்டைக் கடிக்க,

‘அப்பாடா இவதான்னு கண்ஃபார்ம் ஆயிடுச்சு’
“ப்ளீஸ் எனக்கு ரசீதை வாட்ஸாப்ப் பண்ணுங்க. நான் கொடுத்துட்றேன்” என்று வற்புறுத்த,

“இன்சூரன்ஸ் இருக்கு. கவர் ஆகுமான்னு பார்க்கறேன். இடிச்சுட்டு எனக்கென்னன்னு போகாம செல் நம்பர் வச்சீங்களே அதுக்கே தேங்க்ஸ் சார்”

“விஷ்ணு, விஷ்ணுவர்தன்” என்றவன், கைப்பேசியைக் காட்டி, “சாரி அவன் கால் எடுக்கலை” உதட்டைப் பிதுக்க,

“ஐயோ பரவால்ல விடுங்க” என்றவள், மனமோ ‘அண்ணனோட பேர் என்னனு கேட்டா என்ன நினைப்பான்?’ யோசித்தது.

“வர்ஷா! ப்ளீஸ் மறக்காம எனக்கு மெசேஜ் பண்ணுங்க” அந்த துண்டுச் சீட்டைக் காட்டி சொல்லிவிட்டு, “நான் கிளம்பவா?” என்று கேட்க,

“ஆ… சரி சார்”

“சார் இல்ல விஷ்ணு” அவன் புன்னகைக்க, “ஓகே…விஷ்ணு” அவளும் புன்னகைத்தாள்.

“ஆமா நீங்க எங்க வேலை பாக்குறீங்க வர்ஷா?”

“எதுக்கு?” அவள் குழப்பமாகப் பார்க்க, சுதாரித்தவன்,

“உங்களை ஃபாலோ பண்ணத் தான்! பில்…பில்…பில் காக” என்று திணறிச் சமாளிக்க,

தான் வேலை செய்யும் நிறுவனத்தின் பெயரைச் சொன்னவள். மீண்டுமொருமுறை கீறல் விழுந்த வண்டியை சோகமாகப் பார்த்துவிட்டுக் கிளம்பினாள்.

தலையைக் கலைத்துக்கொண்ட விஷ்ணுவோ, “அவன் என்னடான்னா இவளையே தேடுறான், இவளையே தவிர்க்கவும் பாக்குறான். இவ என்னடான்னா அவன் தான் இடிச்சான்னு சொன்னதும் பம்முறா! ரெண்டும் சரியே இல்லடா விஷ்ணு! சரியே இல்ல” முணுமுணுத்தபடி தன் பைக்கை கிளப்ப, ரிஷி அழைத்தான்.

“இப்போ ஃபோன் பண்றே? இவ்ளோ நேரம் வர்ஷா உன்கூட பேசக் காத்துகிட்டு இருந்தாங்க!” அவன் சொன்னதுதான் தாமதம்,

“எங்கடா? நான் உன் கம்பெனி வாசல்ல தான் இருக்கேன்” ரிஷி கண்களால் தேடியபடி கேட்க, வெளியே வந்த விஷ்ணு, “வண்டி எங்க? டெலிவரி வாங்கலையா?” என்று கேட்க,

“அது இன்னும் கொஞ்சம் கஸ்டமைசேஷன் பண்ணலை” அவசரமாகச் சொன்னவன், “வர்ஷா எங்கடா?” விடாமல் தேட, பார்க்கப் பாவமாகத் தோன்றிய பொழுதும், ‘கொஞ்சம் அலை அப்புறம் சொல்றேன்’ என்றெண்ணிய விஷ்ணு,

“அவ கொஞ்சம் முன்னாடிதான் கிளம்பினா”

“எதுக்கு வெயிட் பண்ணனும்?” என்றவன் முகம் கலவரமானது. “நான் யாருன்னு சொல்லி தொலைச்சுட்டியா?” அவனை முறைத்தவன், “விசாரிக்கத்தானே சொன்னேன்” நெற்றியில் தட்டிக்கொண்டு கண்களை மூடிக்கொள்ள.

“ஷ்ஷ்! நான் சொல்றதை மொதல்ல கேளு” நடந்ததைச் சொன்னவன், உணவகத்தில் பார்த்தவள் தான் வர்ஷா என்பதை மட்டும் மறைத்துவிட்டான்.

“அடப்பாவி அது புது வண்டிடா பாவம். லூசாடா நீ?” என்று ரிஷி முறைக்க,

விஷ்ணு “அவ யார் என்னனு தெரியணும்னு சொன்ன, இப்போ தெரிஞ்சுகிட்டேன் சும்மா கத்தினா சொல்லமாட்டேன் ஆமா” என்று மிரட்ட, ரிஷிக்குக் கோவம் குறைவேனா என்றது.

“ஏறு” விஷ்ணு வண்டியை ஸ்டார்ட் செய்ய, ஏறிக்கொண்ட ரிஷி, “எந்த கம்பெனில வேலை செய்றாளாம்?” மெதுவாகக் கேட்க, கம்பெனி பெயரைச் சொன்னான் விஷ்ணு.

“நாம பாத்துருக்கோமா?” ஆர்வமாகக் கேட்க,

“நீ யாரையெல்லாம் பார்த்தேன்னு எனக்கு எப்படித் தெரியும்?” தோளைக் குலுக்கிக்கொண்டான் விஷ்ணு.

“டேய் சும்மா…” கோவமாக எங்கோ பார்த்தவன் “உண்மையை சொல்லு. என்னை பத்தி சொல்லி தொலைச்சியா?” வேகமாகக் கேட்க,

“ஆமா நீ தான் அவ வண்டியை இடிச்சேன்னு சொன்னேன்” என்றான் அலட்சியமாக.

“நான் எப்போ டா…” பதட்டத்தில் ரிஷி விஷ்ணுவின் தோளில் அடிக்க,

“ஸ்ஸ்ஸ் ஹே நான் வெறுமனே அண்ணன் தான் இடிச்சன்னு சொன்னேன். மத்தபடி நான் எப்படி சொல்லமுடியும் நீ தினமும் கடலை போடுற ரிஷியோட தம்பி நான் தான்னு?”

“கடலையா?” மீண்டும் விஷ்ணுவின் தோளில் அடித்தவன், யோசனையாய், “அவகிட்ட உன் ஃபோன் நம்பர் இருக்கேடா! சூசைட் ஹெல்ப்லைனு சேவ் பண்ணி வச்சிருந்தா?” 

“அதுகூடவா யோசிக்க மாட்டேன்? நான் பர்சனல் நம்பர் தான் தந்தேன். அவ சூசைட் ஹெல்ப்லைன்னு வச்சிருக்குறது என் ஆஃபிஸ் நம்பர் தானே” ரிஷியின் பயத்தைக் கண்டுகொண்டான்.

விஷ்ணு மட்டும் வர்ஷாவை பார்த்து, தான் பார்க்க முடியாமல் போகவே, நிலைகொள்ளாது அவள் யாரென்று தெரிந்துகொள்ள மனம் துடிக்க, புது அவஸ்தையை உணர்ந்தவன், ‘அவளைப் பாக்க நான் ஏன் இப்படி…ச்சே’  தலையை உலுக்கிக்கொண்டவன், ‘வேண்டாம் இதெல்லாம் டேஞ்சரஸ் ஃபீலிங்ஸ்’சாலையை வேடிக்கை பார்ப்பதில் கவனத்தைத் திருப்பினான்.

இரவு உறக்கம் வராமல் பால்கனியில் நடந்து கொண்டிருந்தாள் வர்ஷா.
‘நல்லவேளை அவன் ஃபோன் எடுக்கல, எடுத்திருந்தா என்னனு பேசிருப்பேன்?…பேசியிருக்கலாமோ?’ குழப்பம் தலைக்கேற யோசித்தபடி அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்துகொண்டாள்.

மறுபுறம் ரஞ்சனி, “தயிர் சாதத்துல என்ன கோலம் போட்டுக்கிட்டு இருக்க?” ரிஷியைப் பார்த்துச் சிரிக்க,

“ம்ம்” என்று சுயநினைவுக்கு வந்த ரிஷி, சாதத்தில், எதையோ எழுதி வைத்திருந்ததைப் பார்த்து வேகமாக அதை அழித்தான்.

“அவன் அவன் புறால தூதுவிடுவாங்க நீ சோத்துல விடுற” அவன் மட்டும் கேட்கும்படி விஷ்ணு சொல்ல, அவனை முறைத்த ரிஷி, “உளறாத” என்று வாயசைத்து முறைதான்.

“ ‘வ’ மாதிரி எதுவோ தெரிஞ்சுது?” விஷ்ணு புருவத்தை உயர்த்த,

“ஒண்ணுமில்ல சும்மா எதோ” என்றவன், “மா! கோவிலுக்குப் போகணும்னு சொன்னியே எப்போயிருந்து போகணும்?” என்று பேச்சை மாற்ற,

அவனை நம்பமுடியாமல் சிலநொடிகள் பார்த்த ரஞ்சனி. “இந்த சனிக்கிழமை கூட ஆரம்பிக்கலாம்” என்றார் ஆர்வமாக.

“சரி, டைம் எப்போன்னு சொல்லு போலாம்” என்ற ரிஷி சாப்பிட, விஷ்ணுவை ஆச்சரியமாகப் பார்த்த ரஞ்சனி, பார்வையால் என்னவென்று கேட்க, பிறகு சொல்வதாய் விஷ்ணுவும் ஜாடை செய்தான்.

உணவிற்குப் பின் ரஞ்சனி விஷ்ணுவுடன் சீரியல் பார்க்க அமர்ந்துவிட, தன் அறையில் லேப்டாப்பை பார்த்திருந்த ரிஷியோ கவனம் மீண்டும் மீண்டும் சிதற, கோவமாக அதை மூடிவைத்துவிட்டு, நாற்காலியில் சாய்ந்துகொண்டான்.

மொபைல் வைப்ரேட் ஆக, வர்ஷாவின் மெசேஜ். மின்சாரம் பாய்ந்ததுபோல் நிமிர்ந்தவன் படித்துவிட்டு அவளை அழைத்தான்.

“உயிரோட தான் இருக்கீங்களா?” ஏனோ கோவமாக அவன் கேட்க,

“என்ன ரிஷி? இப்படி கேட்டா. நான் உயிரோட இருக்கறது உங்களுக்கு வருத்தம்னு நினைச்சுக்கவா?” அவள் குரலில் குழப்பம் குறும்பு

“பின்ன மெசஜ் இல்ல, கால் இல்ல, என்னன்னு நினைக்கறது?” அவன் சீற

“அச்சோ ஏன் நீங்க வேற, தாத்தா வந்தார் அதுல பிசி, தினம் அவர் கூட பேசிட்டு தூங்கிடுவேன்”

“இன்னிக்கி பேசலையோ?” அவன் நக்கலாகக் கேட்க, அதை உணராதவளோ அப்பாவியாய், “இல்ல அவர் டயர்டா தூங்கிட்டார்” என்று விளக்கம் தந்தாள்.

“அதாவது அவர் பேசலைனா தான் என் ஞாபகம் வரும்ல?” அவன் தடுக்க நினைத்தும் வார்த்தைகள் வந்து விழ,

“ஐயோ அதெல்லாம் இல்ல! காரணமே இல்லாம ஃபோன் பண்ணா நீங்க என்ன நினைப்பீங்களோன்னு…”தயங்கியவள், “அடிக்கடி ஃபோன் பண்ணா உங்க வீட்ல என்ன நினைப்பாங்க? கல்யாணம் வேற ஆகப்போகுது…”

அதான் உன் பிரச்சனையா?’ என்றெண்ணிச் சிரித்துக்கொண்டவன்,
“அதுக்கும் நீங்க ஃபோன் பண்ணுறதுக்கென்ன? ஃபிரீயா இல்லைனா சொல்லப்போறேன்” என்று சகஜமானான்.

“சரி சரி இனிமே பண்றேன், ஆமா நீங்க பண்ணிருக்கலாமே ஏன் பண்ணல?”

இதெல்லாம் மட்டும் கேளு வக்கணையா
“கொஞ்சம் பிசி…அப்புறம் வாழ்க்கை எப்படி போகுது?”

“இன்னிக்கி என் பைக்கை ஒருத்தர் இடிச்சுட்டார்” அவள் வருத்தமாகச் சொல்ல, அவன் இருதய துடிப்பு எகிறியது.

“ரிஷி…இருக்கீங்களா?”

“ஹேய் உனக்கொன்னும் இல்லையே?” என்று பரிவாகக் கேட்க

அவன் ஒருமைக்கு மாறியதை அவள் உணரவில்லை, “இல்ல, தெரியாம இடிச்சுட்டார். ஆனா எனக்கென்னு போகாம ஃபோன் நம்பர் கொடுத்தார்” அனைத்தையும் சொன்னவள் மறந்தும் ரிஷி, விஷ்ணு இருவரையும் ஏற்கனவே பார்த்ததைச் சொல்லவில்லை,

ரிஷியோ போலியான கோபத்துடன், “அப்போ அந்த அண்ணன் காரனை சும்மாவா விட்டே?” என்று கேட்க,

அவளோ மிகவும் தாழ்ந்த குரலில், “பாவம் எதோ தெரியாம”

“தெரியாமலா? புது வண்டி, நீ சும்மா விடாத”

“ஐயோ வேணாம்! பாவம்” அவள் குரல் இளக

“அப்போ சும்மா இருக்க போறியா?”

“இல்ல ரிப்பேர் பண்ணிட்டு சொல்றேன்னு சொல்லிருக்கேன்”

“இருந்தாலும்…அந்த அண்ணனை எதுவும் சொல்ல மாட்டியா? பார்த்து ரெண்டு வார்த்தை கேட்கலாம்ல, ஏன்டா இப்படித்தான் கண்ணுமண்ணு தெரியாம வண்டி ஓட்டுவியான்னு?” புன்னகையுடன் கட்டிலில் படுத்துக்கொண்டான்.

“…”

“ஹலோ என்னாச்சு?”

“சொல்றேன்ல தெரியாம இடிச்சுருப்பார்ன்னு”

அவனோ, “நோ நோ! எனக்காக நீ அவனை ரெண்டு வார்த்தை நறுக்குன்னு கேட்டே ஆகணும்” தலையணையைக் கட்டிக்கொண்டான்.

“நான் தானே? பாப்போம்” என்றவள் நிலவை வெறிக்க

“ஏன்?”

“கேக்கறேன் கேக்கறேன்” என்றவள், கண்களை மூடி அவன் முகத்தை நினைத்துப்பார்க்க, ‘அந்த கண்ண பார்த்தா பேச்சு என்ன காத்துக்கூட வரமாட்டேங்குது’ மௌனமானாள்.

கதவைத் தட்டிவிட்டு ரஞ்சனி உள்ளே வர, “அப்புறம் பேசறேன்” என்று வேகமாக அழைப்பைத் துண்டித்தான் ரிஷி.

“முக்கியமான கால்ல இருந்தியா?” ரஞ்சனி கேட்க,

“இல்ல சொல்லு” எழுந்து அமர்ந்தான்,

“அப்பா லைன்ல இருக்கார்” என்றபடி தனது மொபைலை அவனிடம் நீட்ட, வாங்கிக்கொண்டவன், “சொல்லு பா, சாப்பிட்டியா?” என்று பேசத் துவங்க,

‘பேசிட்டு தா’ என்று ஜாடை செய்த ரஞ்சனி ஹாலிற்குசென்றுவிட்டார்.

ரிஷி அழைப்பைத் துண்டிக்கும்பொழுது நேரம் நள்ளிரவைக் கடந்துவிட, வர்ஷாவை அழைக்க நினைத்தவன் அழைக்காமல் படுத்துக்கொண்டான்.

வண்டி ரிப்பேர் செய்ய, கொடுத்தவள் ஆட்டோவில் அலுவலகம் சென்றுவிட, அவளை அழைத்த விஷ்ணு, “வண்டி எப்போ வரும்?” என்று கேட்க

“நாளைக்கு சாயங்காலம்”

“இன்சூரன்ஸ் கவர் ஆகுமா?”

“இல்ல ஆகாதாம். என்னன்னமோ காரணம் சொல்றாங்க” அவன் வருந்த

“எவ்ளோ ஆகுமாம்?”

“நாலாயிரம் குறைந்தபட்சம், பாப்போம்” அவள் சொல்லத் திடுக்கிட்டவன்,

‘அடப்பாவிகளா உன்னை கண்டுபிடிக்க நாலாயிரமா?’ மானசீகமாகத் தலையில் அடித்துக்கொண்டான்.

“நான் கொடுத்துட்றேன் வர்ஷா” அவன் சொல்ல, வேகமாக மறுத்தவள்,

“நானே பே பண்ணிக்கிறேன், உங்க அண்ணா தெரியாம தானே இடிச்சார்”

ஆஹா அதானா? இதுவே நான் இடிச்சுருந்தா இந்த தாராளம் வருமா?’ “நீங்க அந்த ரெஸ்டாரண்டுல தான் எப்போவும் சாப்பிடுவீங்களா வர்ஷா?”

“ஆமா, அதானே பக்கமா இருக்கு”

“ரைட் தான், ஆமா இன்னிக்கி எத்தனை மணிக்கு சாப்பிட வருவீங்க?”

“இன்னிக்கி டீம்ல ஒருத்தருக்கு பர்த்டே, அதுனால ட்ரீட்டுக்கு வேற எங்கயோ போறோம். ஆமா ஏன் கேட்கறீங்க?”

“இல்ல அண்ணா மன்னிப்பு கேட்கணும்னு சொன்னான், அதான்”

“ஐயோ” கத்திவிட்டவள் “அதெல்லாம் எதுக்கு வேணாம், பரவால்ல”

விஷ்ணுவோ, “இல்ல இல்ல! உங்ககிட்ட சாரி கேட்காம அவனால சாப்பிட முடியல, தூங்க முடியல, ரொம்ப வருத்தமா இருக்கான். நீங்க மன்னிச்சுட்டேன்னு ஒரு வார்த்தை சொல்லாட்டி, அவன் மனசு தாங்காது” போலியான வருத்தத்துடன் சொல்ல,

சங்கடமாக உணர்ந்தவள், “அதெல்லாம் எதுக்கு ப்ளீஸ் வேண்டாமே” என்று மன்றாடியும்,

“நோ நோ அண்ணா ரொம்ப கில்டியா ஃபீல் பண்றன், கண்டிப்பா நாளைக்காவது நாம மீட் பண்ணியே ஆகணும்” விஷ்ணு வற்புறுத்த, வேறு வழியின்றி ஒப்புக்கொண்டாள்.

இரவு உணவை முடித்துவிட்டு அறையில் சிறிதுநேரம் புத்தகத்தைப் புரட்டினாள் வர்ஷா, மனம் அதில் லயிக்காமல் நாளை அந்த வசீகரனை பார்க்க வேண்டுமே என்ற பதற்றம் யோசிக்க யோசிக்க அதிகரித்துக்கொண்டே போனது,

ம்ம்ஹும் நானே யோசிச்சுகிட்டு இருந்தா இப்படித்தான் குழப்பிக்கிட்டே இருக்கணும், இதுக்கெல்லாம் ரிஷி தான் சரி’ என்றெண்ணியவள், அவனுக்குக் கால் செய்தாள்.

“பேசலாமா ஃப்ரீயா?” அவள் கேட்க, “எஸ்” என்றான் ரிஷி.

“கவுன்சிலிங் இல்லையா? கால்ஸ் வருமே” அவள் கேட்க,

“இல்ல, கால் வந்தா சொல்றேன்” என்று சமாளித்தவன், “சொல்லுமா என்ன விஷயம்? எல்லாம் ஓகே தானே?” என்று கேட்க,

“உங்க கிட்ட ஒரு விஷயம் கேட்கணும்னு நினைச்சேன், ஆனா நீங்க என்ன நினைப்பீங்களோன்னு தயக்கமா இருக்கு”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல, என்ன விஷயம்?” என்று பரிவுடன் கேட்க,

“நான்….நான் வேலை பண்ற இடத்துல…”

“ம்ம் இடத்துல?”

“ஒருத்தரை கொஞ்ச நாளா பாத்துகிட்டு இருக்கேன், ரொம்ப அழகா இருப்பான்” ஆழ்ந்து சுவாசித்தவள்,

“என்னமோ மனச டிஸ்டர்ப் பண்ணிகிட்டே இருக்கான் ரிஷி. ஆதேஷ் மேல இருந்த கோவமும் வருத்தமும் அவனை பார்த்தா எங்க போகுதுண்ணே புரியலை…” அவள் பேசிக்கொண்டே போக, அதுவரை லேப்டாப்பில் வேலை செய்துகொண்டிருந்தவன் அதை நிறுத்திவிட்டு அவள் பேச்சைக் குறுக்கிட்டு,

“என்ன சொல்லவர? அந்த பையனை பிடிச்சுருக்குன்னா…லவ்?” கீழுதட்டைக் கடித்துக்கொண்டவன் முகம் இறுகியது.

“இல்ல! லவ்லாம் இல்ல” பதறியடித்து மறுத்தாள். “பிடிச்சுருக்கு அவ்ளோதான்”

“ம்ம்” என்றவன் சில நொடி மௌனத்திற்குப் பிறகு,

“இப்ப தான் நீயே சகஜமாகிருக்கே, மறுபடி…வேண்டாம், அதுவும் யாரு என்னன்னு தெரியாம என்ன ஃபீலிங்ஸ், பார்க்க அழகா இருந்தா போதுமா நல்லவனான்னு தெரிய வேண்டாமா? என்னைக் கேட்டா வேண்டாம்னு தான் சொல்லுவேன். உனக்கு அவன் வேண்டாம்” அறிவுரையைப் போலத் துவங்கியவன், கட்டளையுடன் முடித்தான்.

ஏனோ அவள் மனம் அதை ஏற்க மறுத்தது, இருந்தும் வெளிக்காட்டிக் கொள்ளாதவள்,

“நான் ஒன்னும் லவ் பண்ணல. ஜஸ்ட் பிடிச்சுருக்கு. அழகுக்கு மட்டும் சொல்லல, அவன் பார்வையோ, சிரிப்போ என்னமோ ஒன்னு என்னை ரொம்ப பாதிக்குது ரிஷி. எனக்குதான் சொல்லத் தெரியலை

அவனை பார்க்கும் போது உலகமே அழகா தெரியுது. அவனை பார்த்தாலே என்னமோ ஒரு பாசிட்டிவ் ஃபீலிங். இப்போல்லாம் ஆதேஷ் செய்ற எதுவுமே பெரிசாவே தெரியல”

அவள் மனதில் ஆதேஷை ரிஷி திட்டியதும், அவனை ஒரு பொருட்டாகக் கருதாமல் கடந்து செல்ல முடிந்ததும் படம்போல ஓடியது.

“ம்ம்” என்றவன் மௌனமாகவே இருக்க, அவளே தொடர்ந்தாள்.

“நாளைக்கு அவனை பார்க்க போறேன், படபடன்னு இருக்கு, பேசி ஃபிரென்ட் ஆகிட்டா வேற நினைப்பு வராதுல அதான் முயற்சி பண்ணலாம்னு நினைக்கறேன்”

கண்களை இறுக்க மூடிக்கொண்ட ரிஷியோ, முகம் தெரியாதவனை வெறுக்கத் துவங்கினான்,

“ம்ம், வர்ஷா எனக்கு கால் வருது. அப்புறம் கால் பண்றேன் சாரி!” அவள் பதிலுக்காகக் காத்திராமல் அழைப்பைத் துண்டித்தான்.

நாற்காலியில் சாய்ந்து அமர்ந்துகொண்டவன் மனதில் ஆயிரம் குழப்பம் துவங்கிய பொழுதும், அவை அனைத்தும் வந்து நின்றதென்னவோ ஒரே இடத்தில் தான்.

எவனயோ பார்த்தாளாம் அழகா இருக்கானாம். அழகா இருந்தா…போதுமா, நல்லவனா இருக்க வேண்டாமா? அழகான பொறுக்கியா இருந்தா?’ மனம் மீண்டும் மீண்டும் வேலையைச் செய்ய முடியாமல் தடுக்க, கோவமாக எழுந்தவன், விஷ்ணுவின் அறைக்குச் சென்றான்.

“விஷ்ணு…விஷ்ணு…எழுந்துக்கோ, வாடா வெளியில வாக் போகலாம்” ஆழ்ந்த உறக்கத்திலிருந்தவனை எழுப்பினான்.

“விடிஞ்சுடுச்சா அதுக்குள்ள?” கண்களைச் சுருக்கிகொண்டு கடிகாரத்தைப் பார்த்த விஷ்ணுவோ, “மணி பதினொன்னுடா” இன்னும் வாகாகப் போர்த்திக்கொண்டான்.

“பதின்னொன்னு தானே? கிளம்பு ஒரு வாக் போயிட்டு ஐஸ்க்ரீம் சாப்பிட்டு வருவோம்” விஷ்ணுவிற்கு டீஷர்ட்டை எடுத்துக்கொடுத்தவன், “நான் பர்ஸை எடுத்துட்டு வரேன்” என்று அவன் பதிலுக்குக் காத்திராமல் தன் அறைக்குச் சென்று வர, விஷ்ணுவோ டிஷர்ட்டை மாற்றாமல்  மீண்டும் படுத்திருந்தான்.

அவனை வலுக்கட்டாயமாக எழுப்பி, உடைமாற்ற வைத்தவன், அவன் கெஞ்சுதலையும் வசவையும் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை.

“பனி கொட்டுது இப்போ என்ன ஐஸ்க்ரீம்?” முனகியபடி விஷ்ணு நடக்க,

“டி குடிக்கலாம் அதுவும் வேண்டாம்னா சூடா மசாலா பால் குடிக்கலாம்” ரிஷி மனம் மாறுவதாக இல்லை என்பதைத் தாமதமாகவே உணர்ந்தான் விஷ்ணு.

“யார் அடிச்சா?” விஷ்ணு ரிஷியைப் பார்க்க,

ரிஷி “வாட்?” புருவம் சுருக்க, நடப்பதை நிறுத்திய விஷ்ணு, ரிஷியையும் கைபிடித்து நிறுத்தினான்,

“ஒன்னும்மில்ல டா” அவன் கையை விலக்கிவிட்டு ரிஷி நடக்க,

அவன் பின்னே சென்ற விஷ்ணு, “இல்ல என்னவோ நடந்துருக்கு, நாம இப்படி நடுராத்திரி ஐஸ்கிரீம் சாப்பிட போயி நிறைய நாளாச்சு, ஒரு மூணு வருஷம் இருக்குமா?”

“ஒன்னுமில்லைன்னு தான் சொல்றேன்ல” ரிஷி அலுத்துக்கொள்ள,

விஷ்ணு “வர்ஷா கிட்ட பேசினியா? ஏதான சொன்னாளா?” விஷ்ணு கேட்டதில் ஒருநொடி நின்றவன் மீண்டும் நடந்தான்.

“ம்ம்”

“அதான காரணம் இல்லாம இருக்காதே! என்ன சொன்னா?” அவன் சிரிப்பைக் கட்டுப்படுத்திக்கொண்டு கேட்க,

அதற்குள் தெருமுனை டீக்கடை வந்துவிட, இருவருக்கும் மசாலா பால் சொன்னவன், விஷ்ணுவிடம் வர்ஷாவுடனான உரையாடலைச் சொல்லி, சாலையை வெறிக்க,

அடப்பாவி உன்னை வேண்டாம்னு நீயே சொல்லிட்டியா? விளங்கிடும்’ மனதிற்குள் சிரித்துக்கொண்டவன், அப்பொழுதும் வர்ஷா மறுநாள் சந்திக்கயிருப்பது ரிஷியைத்தான் என்று சொல்லவில்லை.

“உனக்கென்ன, அவளுக்கு பிடிச்சது நல்ல பையனா இருந்தா நல்லதுதானே?” வேண்டுமென்றே ரிஷியைச் சீண்டினான்.

அவனை முறைத்தவன், “அவ ரொம்ப வெகுளி, நான் சொல்ற பொய்யெலாம் எப்படி நம்புறா தெரியுமா?ம்ஹும் இதெல்லாம் சரி வராது. அவ பத்திரமா இருக்கணும் டா” அவன் முகத்தில் அவ்வளவு ஆதங்கம்.

“அவளுக்கும் சேர்த்து நீயேன் முடிவு பண்ணற?” கேட்டபடியே, விஷ்ணு கடைக்காரரிடமிருந்து பால் கிளாஸ்களை பெற்றுக்கொண்டான். ரிஷியின் கையில் ஒன்றைத் தந்தவன், “உனக்கு அவளைப் பிடிச்சுருக்கு தான?” நேரடியாகக் கேட்க,

“ச்ச்சே இல்ல, டென்சன்…ஆதங்கம்” என்றவன் விஷ்ணுவின் சிரிப்பில், “தேவையில்லாத கற்பனை வேண்டாம்டா. சீக்கிரம் குடிச்சுட்டு கிளம்பு”,

தம்பியின் வாயை அடைக்க நினைத்தவன், வீடு திரும்பும் வரை தன்னை நம்பாமல் கிண்டல் செய்துகொண்டே வரும் விஷ்ணுவின் கிண்டல்களை தன்னையும் மீறி ரசித்தபடியே தான் நடந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!