UMUV9

Banner-dfc430b7

UMUV9

9

ரிஷியின் மௌனத்தில் பேச்சை நிறுத்தியவள்,

“ரிஷி இருக்கீங்களா?”

“ம்ம் சொல்லு”

“பிசியா?”

“கொஞ்சம்” உணர்ச்சியின்றி அவன் சொல்ல,

“சரி! விடுங்க என்னமோ இன்னிக்கி என் கூடப் பேச உங்களுக்கும் பிடிக்கல போல, அவனும் எரிஞ்சு விழுந்தான், நீங்களும்…லீவ் இட்! சரி பை” அவள் அழைப்பைத் துண்டித்துவிட்டாள்.

ரிஷியோ அவள் கடைசியாகச் சொன்னதை மறுபடி யோசித்து பார்த்தான். ‘அவனும் எரிஞ்சு விழுந்தான்னா? விஷ்ணு நல்லா தானே பேசினான்…என்னையா சொன்னா?’ சட்டென்று நேராக அமர்ந்தவன், வர்ஷாவை அழைத்தான்.

“ம்ம் சொல்லுங்க ரிஷி” சோகமாக அவள் குரல் ஒலிக்க,

“சாரி கொஞ்சம் வேலையா இருந்தேன்” என்றவன், மென்மையாகவே பேசினான், “சொல்லு மா, யாரு எரிஞ்சு விழுந்தா, எனக்கு தலையும் புரியல, வாலும் புரியல”

“பரவால்ல ஆஃபிஸ் டைம்ல தொந்தரவு பண்ணிட்டேன், நான் ராத்திரி கால் பண்றேன், நீங்க வேலைய கவனிங்க. பை”

‘மறுபடி கட் பண்ணிடுவாளோ’ பதறியவன், “ஹே! வர்ஷா” கத்திவிட,

“சொல்லுங்க ரிஷி லைன்ல தான் இருக்கேன்”

“கொஞ்சம் தெளிவா சொல்ல முடியுமா, நான் அப்போ கவனிக்கல” அவன் கெஞ்சுதலாய் கேட்க,

“அதான் சொன்னேனே, ஒரு பையன்….” அவள் துவங்க, குறுக்கிட்டவன்,

“அதெல்லாம் ஞாபகம் இருக்கு, பார்த்தாலே பிடிச்சுருக்கு, அழகா இருக்கான் அதெல்லாம் இல்ல, இன்னிக்கி என்ன ஆச்சு?” அவசரப்படுத்தினான்.

“நான் தினமும் ஒரே ஹோட்டலுக்கு தான் போவேன், பாவம் பாட்டியை லன்ச் செஞ்சு தர சொல்லி கஷ்டப்படுத்த முடியாது பாருங்க, அந்த ஹோட்டல்ல சாப்பாடு அவ்ளோ நல்லா இருக்கும்…” அவள் பேசிக் கொண்டே போக,

‘இதெல்லாம் நான் கேட்டேனா? ஐயோ, நேரா பார்த்தா பேசாம கொல்றா, போன்ல பேசியே கொல்றா’ பெருமூச்சு விட்டவன், “வர்ஷா ப்ளீஸ்! அதெல்லாம் புரிஞ்சுது, நீ சொல்ல வந்ததை சொல்லுமா, ஆஃபீஸ்ல இருக்கேன்ல” அவன் அலுத்துக்கொள்ள,

“ஓஹ் ஓகே! எங்க விட்டேன்…”

“ஹோட்டல்ல”

“யாஹ் அந்த ஹோட்டல்ல ஒருநாள் நான் காஃபீ வாங்கினேன், அத அந்த சர்வர் மாத்தி வேறொருத்தர்கிட்ட கொடுத்துட்டாரா, நான் அவன் இருந்த டேபிளுக்கு போனேனா… ரிஷி இருக்கீங்களா?”

“ஏன் நிறுத்தின, சொல்லு” அவன் பரபரக்க,

“கேக்கறீங்களா?”

“கேட்டுட்டு தானே இருக்கேன்!”

“எனக்கு எப்படி தெரியும்?”

“என்னமா பண்ண முடியும்?” அவள் அலுத்துக்கொள்ள,

“ம்ம் கொட்டுங்க” அவள் ஆணையிட, தலையில் அடித்துக்கொண்டவன், “ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்” என்று சொல்ல இருவருமே சிரித்துவிட்டனர்.

“குட்! அப்போ அந்த டேபிளுக்கு போனேனா…ஒன் மினிட் லீட் கூப்படறான் வந்துடறேன்” என்றவள் அழைப்பைத் துண்டித்துவிட்டு சென்றுவிட,

பொறுமை இழந்தவனோ, “வ்வ்வ்வ்வ் லூசு லூசு’” தரையை எட்டி உதைத்தவன், நிலைகொள்ளாது எழுந்து சென்று கண்ணாடி ஜன்னலின் வெளியே வேடிக்கை பார்த்தபடி நின்றான்,

சில முறை பொறுமை இழந்து, கண்ணாடியைக் குத்தியவன், “இப்போ தான் அவன் கூப்படணுமா? சொல்லிட்டு போறதுக்கு என்ன ? சீரியல் மாதிரி நீட்டி முழக்கணுமா?” ‘ஆஆ’ கத்தியவன், கண்ணாடியை நெற்றியால் முட்டியபடி நின்றிருக்க,

மீண்டும் மொபைல் ஒலிக்க, வேகமாக எடுத்தவன், “சொல்லு வர்ஷா” என்று பறக்க,

“டேய்! நான் அம்மா பேசறேன் டா”

நெற்றியில் தட்டிக்கொண்டவன், “என்ன மா வேணும்” கடுகடுத்தான்.

“அலுத்துக்கற? வேணாம் நீ பேசவே வேணாம்”

அன்னை கோபித்துக்கொண்டதை உணர்ந்தவன், “மா ப்ளீஸ் மா! கொஞ்சம் டென்ஷன் சொல்லு என்ன விஷயம்”

“வர்ஷான்ன? அவ தான் டென்ஷன் பண்றாளோ, நான் அந்த பொண்ணுகிட்ட பேசுறேன் நீ நம்பர் தா”

“ஐயோ இல்ல, நீ எதுக்கு போன் பண்ண அத சொல்லுமா”அவன் மீண்டும் கண்ணாடியில் முட்டியபடி பேச,

“நாளான்னிக்கி சனிக்கிழமைடா”

“அம்மா” கத்திவிட்டவன், “இதை சொல்லத்தான் போன் பண்ணியா”

“டேய்! கேளுடா”

“சொல்லு”

“கோவிலுக்கு போகணும்னு சொன்னேனே நெய் விளக்கு ஏத்த, எதுவும் பிளான் வச்சுக்காத, அதுக்குதான் நினைவுபடுத்த போன் பண்ணேன்”

“சரி சரி போலாம், வேற என்ன?”

“ஒன்னுமே இல்ல சாமி, அழுதுகிட்டு யாரும் என் கூடப் பேசவேண்டாம் நீ போனை வை” ரஞ்சனி கடுகடுக்க,

கண்களை மூடிகொண்டவனோ, ‘எல்லாருமா ஒரே நேரத்துல கடுப்படிச்சா என்ன பண்ணுவேன்’

“நான் கோவமா போனை வைக்கிறேன்” ரஞ்சனி சொன்னதில் சிரித்துவிட்டவன்,

“டார்லிங் கொஞ்சம் ஸ்ட்ரெஸ்ல இருக்கேன் சாரி, கண்டிப்பா கோவிலுக்குப் போகலாம். நான் அப்புறமா கால் பண்ணவா…ப்ளீஸ்” என்று கொஞ்ச,

“ம்ம் சரி சரி” என்றவர், “வரும்போது ரெண்டு லிட்டர் பால் வாங்கிகிட்டு வா, விஷ்ணுக்குட்டிக்கு நாளைக்கு பொறந்த நாள்ல அவனுக்கு பிடிச்ச பாதம்கீர் பண்ணனும்”

“சரி மா, வச்சுடவா?”

“வை”

அழைப்பைத் துண்டித்தவன் மொபைலையே வெறித்திருக்க, கதவைத் தட்டிக்கொண்டு உள்ளே வந்த அவன் ஊழியர்களில் ஒருவன், மீட்டிங் இருப்பதை நினைவு படுத்த,

“வரச்சொல்லுங்க பாஸ்கர்” என்றவன், தண்ணீரை குடித்துவிட்டு, வேலையைத் துவங்கினான்.

தன் வேலையை முடித்துக்கொண்ட வர்ஷா, ரிஷியை அழைக்க அவனோ எடுக்காமல் போகவும், “எப்போ ஃப்ரீயோ கால் பண்ணுங்க” என்று மெசேஜ் அனுப்பி வைத்தாள்.

அதன் பிறகு, இருவருமே தத்தம் வேலையில் மூழ்கிவிட, பேசிக்கொள்ள நேரமின்றி போனது.

மாலை விஷ்ணு வர்ஷாவின் அலுவலக ரிசெப்ஷனில் நின்றிருந்த பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்தான்,

“நீங்க ஓகேன்னு ஒரு வார்த்தை சொல்லுங்க, நாளைக்கே அப்பாயின்மென்ட் ஆர்டர் கையில கொடுத்துடுவேன். உங்களை மாதிரி அழகான பொண்ணு இப்படி மொக்கையா ரிசெப்ஷன்ல இருக்கிறது நல்லா இல்ல” மயக்கும் புன்னகையை வீசினான்.

பற்களைக் கடித்த பெண்ணோ, “மிஸ்டர் இங்க நின்னா ரிசெப்ஷனிஸ்ட்டா? செக்கியூரிட்டி டீ குடிக்க போயிருக்கார்னு கொஞ்ச நேரம் நின்னா, சும்மா தொன தொனன்னு” எரிந்து விழ,

“வாவ் அப்போ என்னவா வேலை பாக்குறீங்க? உங்க நம்பர் தாங்க நான் நல்ல ஓப்பனிங் இருந்தா சொல்றேன்” அவளை ஆர்வமாகப் பார்க்க,

“காட்! லுக் மிஸ்டர்…”

“விஷ்ணுவர்தன், விஷ்ணு” அவன் சிரிக்க

“உங்களுக்கு யாரைத்தான் பார்க்கணும்?” என்று முறைக்க,

“வர்ஷா” என்று சொல்ல,

“என்ன டிபார்ட்மென்ட்?” அவள் கணினியைப் பார்க்க,

“அதெல்லாம் தெரியாது”

“இப்படி சொன்னா? அவங்க மொபைல் நம்பருக்கு ஃபோன் பண்ணுங்க” அவள் கடுகடுக்க,

“விஷ்ணு எப்போ வந்தீங்க” வர்ஷாவின் குரலில் திரும்பியவன், “அப்பாடி வந்தீங்களே, வாங்க கிளம்பலாம்” என்றவன்,

அங்கே நின்றிருந்த பெண்ணிடம், “தேங்க்ஸ் சிஸ்டர்” என்று ஒரு சல்யூட் வைக்க, கண்கள் விரிந்தவள் எதுவும் சொல்லும் முன்பே, “வாங்க” என்று வர்ஷாவை அழைத்தான்.

“எங்க” அவன் விழிக்க, “அதெல்லாம் சொல்றேன் வாங்க” அவளை விடாப்பிடியாய் அழைத்துக்கொண்டு புறப்பட்டவன், அவர்கள் கட்டிடத்தின் வாசலில் வர்ஷாவுடன் நின்றான்.

“இப்போவாது என்னன்னு சொல்லுங்க விஷ்ணு”

“சர்வீஸ் சென்டர் போகணும்ல?”அவன் சந்தேகமாகக் கேட்க,

“ஆமா அங்க தான் போறேன்” அவளும் சந்தேகமாகவே சொல்ல,

“அதுக்கு தான், அண்ணா வந்துருவான் இப்போ” அவன் பேன்ட் பாக்கெட்டில் கைகளை விட்டுக்கொண்டு ரிஷியின் கார் வருகிறதா என்ற பார்க்க,

பதறியவள், ‘ஐயோ! கார்த்தாலேயே உர்ருன்னு இருந்தான், யார் இப்போ அவனை…’ யோசித்தபடி விஷ்ணுவைப் பார்த்தவள், ‘இவன்தான் முந்திரிக்கொட்டை வேலை பண்ணிருக்கான்…’ அவள் மனதுள் விஷ்ணுவை திட்டுவதற்குள், அவனை காப்பதுபோல் வந்து நின்றது ரிஷியின் கார்.

“வாங்க” என்றபடி வர்ஷாவிற்கு பின் இருக்கைக்கான கதவை விஷ்ணு திறந்துவிட, “ஏன் விஷ்ணு இப்படி பண்றீங்க? நானே போயிப்பேனே” அவள் மன்றாட,

“ஐயோ தூறல் ஜாஸ்தியாகுது, வண்டில ஏறுங்க” விஷ்ணு அவளை அவசரப்படுத்த, வேறு வழியின்றி ஏறிக்கொண்டாள்.

முன்னிருக்கையில் அமர்ந்துகொண்டு விஷ்ணு, ரிஷியைப் பார்க்க, அவனோ “எங்க போகணும்” என்றான்.

‘இது உலகமகா நடிப்புடா சாமி’ அவனை முறைத்தவன், ‘பிளான் போட்டதே நீ, என்னை கேளு’

“கேக்கறேன்ல” ரிஷி குரலை உயர்த்த, வர்ஷா மனதில் ஏனோ அதிர்வு.

“ம்ம்ம் அவங்க வண்டியை வாங்க சர்விஸ் சென்டர் போகணும்” என்று முறைத்தான் விஷ்ணு.

“சர்வீஸ் சென்டர்னா? எங்க இருக்கு என்ன பேரு?” வர்ஷாவை ரியர்வியூ கண்ணாடியில் பார்த்தபடி கேட்க, அவளோ விஷ்ணுவிடம் தன் மொபைலில் அவசரமாகக் கூகுள் மோப்பைத் திறந்து, அவர்கள் செல்லவேண்டிய இடத்தைக் காட்ட,

‘மறந்தும் பேசித் தொலைச்சுடாத, ஃபோன்ல மட்டும் ஊர் உலகத்து கதையெல்லாம் அடி’ மனதுள் அவளைத் திட்டிக்கொண்டு ரிஷி, காரைக் கிளப்பினான்.

விஷ்ணு, “அப்புறம் வர்ஷா, உங்க வீடு எங்க இருக்கு?”

ரிஷியின் பக்கவாட்டு தோற்றத்தை ஓர கண்ணால் பார்த்து ரசித்தபடி இருந்தவள், விஷ்ணுவின் கேள்வியைக் காதில் வாங்கியிருக்கவில்லை.

“என்ன?” வர்ஷா விழிக்க,

“உங்க வீடு எங்க இருக்குன்னு கேட்டேன், சர்வீஸ் சென்டர் போயிட்டு டிராப் பண்ணனும்ல?” என்று திரும்பிப் பார்த்தபடி கேட்க,

“ஆஹ்…எங்க ஃபிளாட்ல இருக்கு” அவள் அப்பாவியாய் சொல்ல, ரிஷி விஷ்ணு இருவருமே சிரித்துவிட,

“நான் கேட்டது வீடு எங்க, எந்த ஏரியால இருக்குன்னு” விஷ்ணு சிரித்தபடியே மீண்டும் கேட்டான்.

வர்ஷாவோ “கேகேநகர், ஆர்கேட் டவர்ஸ்” அசடுவழிந்தாள்.

“அந்த பேக்கரி ஒன்னு இருக்கே அங்கயா?” விஷ்ணு கேட்க,

“ஆமா அந்த தெருதான், உங்களுக்கு தெரியுமா?” அவள் ஆர்வமானாள்.

“நாங்களும் அங்க தான் ரெண்டு ஸ்ட்ரீட் தள்ளி இருக்கோம், க்ரீக் கார்டன்ஸ்” என்று சொல்ல, ஒரு நொடி அவனை ரிஷி முறைத்ததை விஷ்ணு கவனிக்கவில்லை, ஆனால் வர்ஷா பார்த்திருந்தாள்.

‘ஏன் என்கிட்ட சொன்னா என்னவாம்? அவனை எதுக்கு முறைக்கணுமாம்? என்னமோ வீடு புகுந்து உங்கள யாரோ தூக்கிட்டு ஓட போகுற மாதிரி’ மனதில் ரிஷியை அர்ச்சித்தவள் கோவமாகச் சாலையின் புறம் திரும்பிக்கொள்ள,

எதையுமே உணராத, விஷ்ணுவோ, “சொந்த வீடா வர்ஷா? கூட யார்லாம் இருக்காங்க”

அவள் “ஏன்?” என்று கடுகடுக்க,

“சும்மா ஒரு பொது அறிவுக்குத் தான். சொல்லுங்க” விஷ்ணு திரும்பி அவளைப்பார்க்க,

“வாடகை வீடுதான், என் தங்கை பாட்டி தாத்தா நான் அவ்ளோதான். அப்பா அம்மா மயிலாடுதுறை பக்கத்துல எங்க ஊர்ல இருக்காங்க, அப்பா ரிட்டயர்டு இப்போ எங்க நிலத்தை பாத்துக்கறாங்க, அம்மா ஹவுஸ் ஒய்ஃப், தங்கை காலேஜ்ல படிக்கிறா, நாங்க இங்க இருக்கறதால துணைக்குப் பாட்டி தாத்தா இருக்காங்க, போதுமா இல்ல இன்னும் எதாவது தெரியனுமா?” அவள் நக்கலாகக் கேட்க,

“பர்ஃபெக்ட்!” என்று கட்டைவிரலைக் காட்டிய விஷ்ணு, “ஒண்ணே ஒண்ணுதான் இன்னும்” என்று பார்க்க,

“இன்னும் என்ன? பிறந்த நாள் நட்சத்திரம் எல்லாம் வேணுமா”

“ஹாஹாஹா இப்போதைக்கு நீங்க சிங்கிளா இல்ல கமிட்டடான்னு மட்டும் சொன்னா போதும்” விஷ்ணு சிரிக்க,

“விஷ்ணு!” ரிஷியின் அதட்டலில், வர்ஷா பயந்துதான் போனாள், விஷ்ணுவோ கண்டுகொண்டதாகத் தெரியவில்லை, “நீங்க சொல்லுங்க வர்ஷா” மீண்டும் கேட்க, ரிஷி வாய்திறக்கும் முன்பே,

வர்ஷா, “கமிட் ஆகி மொக்க வாங்கி, சிங்கள் ஆன சிங்கள்” என்று சொல்ல, ரியர்வியூ கண்ணாடியில் அவளைப் பார்த்த ரிஷிக்கு அவள் முகத்தில் சோகமில்லாது புன்னகை இருக்க, கொஞ்சம் நிம்மதியானான்.

“வெரி குட்! நாங்க ரெண்டு பேருமே சிங்கிள், அதுவும் இவன் மிங்கிள் ஆகவே கூடாதுன்னு கங்கணம் கட்டிக்கிட்டு இருக்க முரட்டு சிங்கள்” என்று சொல்ல, சிரிப்பதா வேண்டாமா என்று குழம்பிய வர்ஷா, தர்மத்துக்குப் புன்னகைக்க, ரிஷியோ, “சும்மா வர மாட்டியா?” என்று கடிந்து கொண்டான்.

விஷ்ணுவோ எப்பொழுதுபோல் அதைக் கண்டுகொள்ளவில்லை, “நாங்க இருக்கறது வாடகை வீடுதான், நான் இவனோட சித்தப்பா பையன், பூர்விகம் கும்பகோணம் பக்கம்…வேற என்ன இருக்கு…” அவன் யோசிக்க,

விஷ்ணுவின் அம்மாவைப் பற்றிக் கேட்க வேண்டாமென்று ரிஷி சொன்னது நினைவிற்கு வரவே வர்ஷா எதுவும் கேட்காமல் மௌனமாக, “ம்ம்” என்று சொல்ல,

விஷ்ணுவே தொடர்ந்தான், “அம்மா…”

அவசரமாகக் குறுக்கிட்ட ரிஷி, “டேய் விடு” என்று சொல்ல,

“பரவால்ல நம்ம வர்ஷா தானே” என்ற விஷ்ணு,

“அம்மா நான் பிறந்ததுமே, அப்பாகூட சண்டைபோட்டுக்கிட்டு போயிட்டாங்க, அப்பாவும் அந்த கோவத்துல என்னை பெரியம்மா கிட்ட கொடுத்துட்டு கேனடா போயிட்டார். சோ பெரிமாதான் எனக்கும் அம்மா, பெரிப்பா தான் அப்பா, இவன் தான் என் அண்ணா” என்று வேகமாகச் சொல்லி முடித்து ஆர்வமாக வர்ஷாவின் முகம் பார்க்க,

“அப்போ அவங்களை பெரியம்மா பெரியப்பாவுக்குப் பதிலா அப்பா அம்மானே கூப்பிடலாமே, இவரை அண்ணன்னு தானே சொல்றீங்க அதான்….சாரி ஜஸ்ட் தோணிச்சு” அவள் உதட்டைக்கடித்துக்கொண்டாள்.

ரியர்வியு கண்ணாடி வழியே, அவள்மீது ஒருநொடி நிலைகொண்ட ரிஷியின் கண்களை அவள் பார்க்கவில்லை.

“சொன்னா கேட்டா தானே” ரிஷி பொதுவாகச் சொல்ல,

“நீ ஆரம்பிக்காத! மாத்திக்க ட்ரை பண்றேன், பழக்கம் ஆகிப்போச்சுடா” அவன் ரிஷியைப் பார்க்க,

“நீ முயற்சி பண்ணறதே இல்லையே, அம்மாவும் ஆயிரம் தடவ சொல்லியாச்சு” ரிஷி அலுத்துக்கொள்ள,

“நான் என்ன செய்வேன், அம்மான்னு கூப்பிடாதான்னு பாட்டி திட்டினாங்க, அப்புறம் பெரிம்மான்னு கூப்பிட்டே பழகிட்டேன்” விஷ்ணு சாலையை வெறிக்க,

“அது ஒரு லூசு கிழவி, அது சொன்னதுக்கு நீ இவ்ளோ முக்கியத்துவம் கொடுக்கணுமா? அவங்க யாரையாவது பாசமா நடத்திருக்காங்களா?”

“அவங்களுக்கு என்னை பிடிக்காதே” விஷ்ணு குரல் உடைய,

“அவங்களுக்கு யாரைத்தான் பிடிச்சுது? அவங்க பண்ண கொடுமைல தான் எல்லாமே ஒடஞ்சுது, பணத்தாசை பிடிச்சு குடும்பத்தையே…” பேச்சை நிறுத்திய ரிஷி, ஒரு நொடி வர்ஷாவை பார்க்க, அவளோ மொபைலில் ஹெட்போனை பொருத்தி பாட்டுக் கேட்டபடி சாலையை வெறித்திருந்தாள்.

‘குடும்ப விஷயம்னு தானே….எப்போவுமே என்னை எதையுமே நோண்டிக் கேட்டதே இல்லையே! ஸ்வீட் வர்ஸு’ முதல் முறை தன்னையும் அறியாமல் அவளைக் கொஞ்சிக் கொண்டான்.

அவன் பார்வையைத் தொடர்ந்து வர்ஷாவை பார்த்த விஷ்ணு, வேகமாக அவள் ஹெட்போன் வொயரை பிடுங்க, அதிர்ந்தவள், “என்ன?” என்று விழிக்க,

“நாங்க பேசிக்கிட்டே வரோம், கேட்காம” விஷ்ணு போலியாய் கோவித்துக்கொள்ள,

“ஐயோ அப்படி இல்ல, குடும்ப விஷயம் பேசிகிட்டு இருந்தீங்க….” என்று பார்வையைத் தாழ்த்த,

“அப்படி இருந்தா சொல்ல போறோம், எங்க குடும்ப விஷயம் எங்க ஊர்ல பேசிப்பேசி அலுத்துப்போன பிரபலமான ரகசியம்” சிரித்துக்கொண்டவன், “அதை விடுங்க, மொக்கை வாங்கி சிங்கள்ன்னு சொன்னீங்களே என்னாச்சு?”

“விஷ்ணு! இதான் லிமிட்” கத்திய ரிஷி, வர்ஷாவிடம், “இட்ஸ் ஓகே வர்ஷா அதெல்லாம் சொல்லணும்னு இல்லை, சாரி” என்றவன், பொதுவாக, “இறங்குங்க வந்தாச்சு” என்று வண்டியை ஷோரூம் வாசலில் நிறுத்தினான்.

முன்னே வர்ஷாவுடன் நடந்த விஷ்ணு,

“அவன் அப்படிதான், சிடுசிடுன்னுவான் ஆனா என்னைவிட அவன்தான் நல்லவன். அவன் இல்லைனா நான் காம்ப்ளெக்ஸ்ல பைத்தியம் ஆகி இருப்பேன். ஹி இஸ் மை ஹீரோ”

காரை ரிவர்ஸ் எடுத்துப் பார்க் செய்துகொண்டிருந்த ரிஷியைப் பார்த்தவன், “என் தம்பி பாப்பான்னு முதல் முதலா தூக்கினதே அவன் தானாம்,. இப்போவர என்னை கீழ இறக்கிவிடவேல்ல” கண்கள் கலங்கியதோ திரும்பிக்கொண்டு கண்களைத் துடைத்துக்கொண்ட விஷ்ணு,

“நீங்க சொல்லுங்க என்னாச்சு முன்னாடி ரிலேஷன்ஷிப்” என்று கேட்க,

தன்னை பற்றி இவ்வளவு சொன்னவனிடம் எப்படி மறைப்பது,

“அவன் என் கூட வேலை பார்த்தவன்தான், இப்போ எனக்கு மேனேஜர்…வெளிநாட்டுக்குப் போன அப்புறம் அந்த ஸ்டைல் லவ் தான் எதிர்பார்த்தான்,

எனக்கு அதுக்கெல்லாம் ஏனோ…தோணவே இல்லைனு வச்சுக்கோங்க…செக்ஸ் தான் காதலுக்கு முக்கியம் அது இல்லைனா காதலே இல்லைன்றது அவன் எண்ணம். இதெல்லாம் தானா வர வேண்டிய உணர்வு, கம்பல்சரி இல்லைன்றது என் அபிப்பிராயம், சரிவரலை அவனே பிரேக்கப் பண்ணிக்கிட்டான், நானும் எதுவும் சரி செய்ய முயற்சிக்கல…”எங்கோ வெறித்தவள்,

“நான் இப்போ கடந்து வந்துட்டேன்” என்று விஷ்ணுவை அண்ணாந்து பார்க்க,

விஷ்ணு, “நல்லதுக்குத் தான் எல்லாமே நடக்குது வர்ஷா! ரொம்ப நல்லவனா, உங்களை மனசார விரும்புறவனா, உங்களை மதிச்சு பாத்துக்குறமாதிரி உங்க வாழ்க்கைல ஒருத்தன் கண்டிப்பா வரப்போறான், அப்போ எனக்கு நீங்க ட்ரீட் தரணும்” என்று புன்னகைக்க,

“ஹாஹாஹா அப்படி ஒருத்தனை எங்க போயித் தேட” அவள் சிரிக்க

“அவனா வருவான், மார்க் மை வேட்ஸ்”

“அப்படி வந்தா கண்டிப்பா உங்களுக்கு தான் முதல்ல நன்றி சொல்லுவேன், ட்ரீட்டும்” என்று சிரிக்க,

“கண்டிப்பா” என்றவன், “அவன் வந்துட்டான் வாங்க” என்று பூடகமாகச் சொல்லிவிட்டு ஷோரூம் / சர்வீஸ் சென்டருக்குள் நுழைந்தான்.

வண்டியைப் பற்றி வர்ஷா கேட்கச் சென்றுவிட, நாற்காலியில் அமர்ந்துகொண்டு விஷ்ணுவிடம் பேசிக்கொண்டிருந்த ரிஷியின் பார்வை வர்ஷாவின் மீதே இருந்தது.

“என்னமோ ப்ராபளம் போலயிருக்கு, இரு” என்று அவளிடம் எழுந்து சென்றான் ரிஷி.

“என்ன வர்ஷா?” என்று வர்ஷாவை ரிஷி நெருங்க,

“வ…லே…ஆக…” அவள் திணற, ரிஷி அங்கிருந்தவரிடம்,

“வண்டி ரெடி ஆகலைனா ஃபோன் பண்ணி சொல்லணும்ல? இப்படித்தான் மழைல அலைய வைப்பீங்களா?” என்று குரல் உயர்த்தினான்.

“இல்ல சார், அந்த கலர் பிரீமியம் பெயிண்ட், ஸ்டாக் வரலை, ரெண்டு நாள்ல ரெடி பண்ணிடுவோம்” அவர் சமாளிக்க,

“அப்படினாலும் நீங்க சொல்லியிருக்கணும்ல” அவன் புருவம் சுருக்க,

“சார்!” என்று அழைத்தபடி வந்தார் அந்த இருசக்கர வாகன கடையின் மேனேஜர், “என்ன சார், உங்க வண்டி இந்த வீகென்ட் டெலிவரி கொடுத்துடுவோம் சார். டிலே ஆகாது ” என்று பதற

“நான் என் பைக்காக வரல, இவங்க என் பிரென்ட்…” துவங்கியவன், “வர்ஷா நீ போயி விஷ்ணுகிட்ட இரு, நான் பேசிட்டுவரேன்” என்று சொல்ல, சரியென்று தலையசைத்தவள் விஷ்ணுவின் அருகே சென்று அமர்ந்தாள்.

“உங்க அண்ணா இங்க தான் வண்டி வாங்குறாரா?” அவள் கேட்க,

“ஆமா, புக் பண்ணிட்டான் இன்னும் டெலிவெரி ஆகலை” என்று சொல்ல, அங்கு மேனேஜர் சிரித்தபடி ரிஷியிடம் பேசிக்கொண்டிருக்க,

“கஸ்டமர விட்டுட கூடாதுன்னு எவ்ளோ குழையுறாங்க” என்று விஷ்ணு சிரிக்க, கேள்வியாய் பார்த்தவள்,

“என்ன வண்டி வாங்கிருக்கார்” என்று கேட்க,

வண்டியின் பெயரைச் சொன்னவன், அங்கே ஷோரூமில் கம்பீரமாய் நின்றிருந்த வண்டியைக் காட்டி, அதான் மாடல் என்று சொல்ல, எழுந்து சென்று அவனுடன் பைக்கை பார்த்தவள்,

“வாவ் செமயாயிருக்கு எவ்ளோ?” ஆர்வமாக விஷ்ணுவைப் பார்க்க,

“நூத்தி எண்பதாயிரம் எக்ஸ்ட்ரா சேர்த்து ரெண்டு லட்சம் கிட்ட வரும்” என்று அவள் அருகில் கேட்ட குரலில் தூக்கிவாரி போடத் திரும்பியவள் கண்ணில் பட்டதென்னவோ, ரிஷியின் மார்பு தான்.

‘கொக்கமக்கா! எப்படி இப்படி லயிட் ஹவுஸ் மாதிரி வளந்துருக்கானுங்ளோ அண்ணனும் தம்பியும், இனி நாமளும் காம்பிளான் பூஸ்டுன்னு குடிக்கிறோம் உயரமா வளர்றோம்’ யோசித்தவளைப் பார்த்திருந்த ரிஷி,

“ஏலன் சாலி, இரண்டாயிரம் சொச்சம்” என்று சொல்ல, குழப்பமாய் அவனை அண்ணாந்து பார்த்த வர்ஷா, “எ…”என்று நிறுத்த,

எதுவும் சொல்லாது, திரும்பிச் சிரித்துக்கொண்ட ரிஷி வெளியே சென்றுவிட, குழப்பமாய் நின்றிருந்தவள் அருகில் கிளுக்கென்று சிரித்த விஷ்ணு,

“அவன் சட்டையை உத்து பார்த்தியா …சாரி பார்த்தீங்களா, அதான் அதோட பிரான்டையும் விலையையும் அடுத்து கேட்கப் போறீங்களோன்னு சொல்லிட்டு போறான்” என்று சிரிக்க, அசடு வழிந்தவள்,

“ஓட்டறீங்களா?” என்று போலியாய் முறைக்க,

இருகைகையும் காற்றில் உயர்த்திய விஷ்ணு, “நான் இல்ல, அவன் தான்” என்று சிரித்து, “டைம் ஆச்சு வாங்க” என்று முன்னே நடக்க,

“நீ வா போ வே போதும்” என்று அவள் பின்தொடர,

“டன்” என்றபடி விஷ்ணு சிரிக்க, வர்ஷாவின் கண்களோ, அவளுக்காகக் கார் கதவைத் திறந்துவைத்துவிட்டு ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த ரிஷியின் செய்கையில் வியந்து உறைந்தது.

வர்ஷாவின் ஃபிளாட் வாசலில் அவளை இறக்கி விடும்பொழுது,

“நாளைக்கு எப்போ காலைல கிளம்புவீங்க?” விஷ்ணு கேட்க,

“ஏழே முக்கால் கிட்ட, ஏன்?” வர்ஷா விஷ்ணுவைப் பார்க்க,

“வந்துடறோம்” இறுகிய முகத்துடன் சொன்ன ரிஷி, அவள் பதில் தரும் முன்னே கரை கிளப்பிக்கொண்டு சென்றிருந்தான்.

‘மறுபடியுமா’ தலையைக் கலைத்துக்கொண்டவள், மழையில் நினைத்தபடி வீட்டை நோக்கி நடந்தாள்.

‘ஒருநிமிஷம் சிரிக்கிறான், ஒரு நிமிஷம் முறைக்கிறான், என்னதான் நினைக்கிறான்னு ஒரு மண்ணும் புரியலை, ஆஹா இப்போவும் பெயரை கேட்டுக்க மறந்துட்டேன்!’ தலையில் தட்டிக்கொண்டவள், “நாளைக்கி கேட்டுக்கணும் மறக்காம” என்றபடியே லிஃப்ட்டில் ஏறினாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!