Un Kannil Inbangal Kanbein – 1

Un Kannil Inbangal Kanbein – 1

1

நடுஇரவு ஒரு மணிக்குத் தனது பிரத்யேக Yamaha FZ25 பைக்கை கிளப்பி சென்னையை வலம் வந்து கொண்டிருந்தாள் அவள்..

ஆம்! நடுஇரவு தான், ஆனால் பகல் போல, யாருமற்ற சாலையில் ஒய்யாரமாய் கருப்பு நிற ஜீன்ஸும் பழுப்பு நிறமுழுக்கை சட்டையும் அணிந்து ஆறஅமர ஓட்டிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணுக்கு பயம் என்பது தமிழில் வரும் ஒரு வார்த்தை அவ்வளவே..

அவளது உறுத்து விழித்த கருவிழிகள் இருட்டில் எதையோ தேடி அலைபாய, கவனம் முழுவதும் சாலையிலும் தன்னைச் சுற்றிலும் எனச் சரிபாதியாய் நிலைத்திருந்தது.

தோள்ப்பட்டையில் புரளும் முடிக்கற்றைகளை அவள் தூக்கி முடிந்திருக்க, ஒற்றைக் கையை ஹான்ட்பாரிலும் மறுகையைத் தொடையிலும் தட்டி வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தவளின் அசட்டுத் துணிச்சல் அபாரம் தான்..

அவளது வண்டியின் வேகம் நுங்கம்பாக்கத்தின் ஒரு பிரத்தியேக சாலையில் முடிவுற, அங்குள்ள முச்சந்தில் வண்டியை ஓரங்கட்டி நிறுத்தியவளின் உடல் மொத்தமும் அங்குள்ள மரத்தில் சாய்ந்து வலது கால் வண்டியின் மீது மடங்கியிருந்தது…

சட்டையின் மத்தியில் மாட்டியிருந்த கூலர்ஸை இப்போது கண்ணுக்கு இடம் மாற்றியவள், போனை ஆன் செய்து ஹெட் ப்ளுடூத்தை அதனுடன் இணைத்து காதுக்கு கொடுத்து வைத்தாள்..

அவள் அங்கு வந்து நின்ற சில மணி நேரங்கள் கழித்து, வெள்ளை நிற ஸ்கார்ப்பியோ அவளைக் கடந்து பத்தடி தூரத்தில் நிற்க, அவர்களின் மீதே தனது கவனத்தைப் பதித்து நின்றவளின் கரங்கள் தனது சட்டைப்பையில் மாட்டி வைத்திருந்த பேனாவின் முனையில் உள்ள கேமராவை ஆன் செய்தது..

இவளது மொத்த உருவத்தையும் அந்த இருட்டு உள்வாங்கியிருக்க, அருகே வந்து உற்று நோக்கினால் ஒழிய அவள் தெரிவதற்கு வாய்ப்பில்லை என்பதால் அசிரத்தையாய் அவ்விடத்தை நோட்டம் விட்டவளின் பார்வை வட்டத்துக்குள் இப்போது அந்த ஸ்கார்பியோவில் இருந்து இறங்கிய இளம் பெண்கள் விழுந்தார்கள்..

அவர்களின் வயது கண்டிப்பாக இருபத்தி மூன்றுக்குள் தான் இருக்க வேண்டுமென வேகமாய் கணக்குப் போட்டவளின் வயது(!) கண்டிப்பாக இருபத்தி ஏழு இருக்கும்..

அவர்கள் வந்திறங்கிய சில நொடிகள் கடந்து உள்ளிருந்து ஒருவன் இறங்க அவனை உற்று நோக்கியபடியே தனது இடது கையால் தனக்குத் தெரிந்த ஒருவனுக்கு அழைப்புவிடுத்தவளின் கவனம் அவர்களிடையே இருந்தாலும், கோபம் என்னவோ அழைப்பை ஏற்க மறுப்பவனிடம் வந்து நின்றது..

அழைப்பை ஏற்காமல் நடுச்சாமத்தில் தூங்கும் அவனை ஒன்றும் செய்ய இயலாமல், மறுபடியும் அவனுக்கு அழைப்புவிடுக்கக் கீழே குனிந்த நொடி நேரத்தில் அவளுக்கு முன் பைக்கில் வந்து நின்று, அவளது கைகளில் இருந்த மொபைலை தட்டிவிட்டு, “யார் நீ..?” என்றான் தனது கர்ஜனைக் குரலில்..

அவனது கர்ஜனைக் குரலில் அவனை நிமிர்ந்து உற்று நோக்கியவளின் மறுகரம் கீழே விழவிருந்த மொபைலை அசூசையாய் பிடிக்க, அவனுக்குப் பதிலேதும் சொல்லாமல் தனது கூலர்ஸைக் கழற்றி வைத்தவளின் பார்வை தன்னிச்சையாய் அவனது பின்னே நின்ற வெள்ளை நிற ஸ்கார்ப்பியோவைத் தழுவியது..

அவளது பார்வை சென்ற திசையில் தனது பார்வையையும் ஓட்டியவனின் முகத்தில் இப்போது அறுவெறுப்பு குடியிருக்க, “சொல்லு யார் நீ..?” என்றான் தனது கர்ஜனைக் குரலைக் கடினமாக்கி..

அவனது அதட்டல் மொழியில் எரிச்சலுற்றவள், “யார் யா நீ..? சும்மா நொய்யி நொய்யின்னு..கிளம்பு..வேலை நேரத்துல இடஞ்சல் பண்ணிகிட்டு” தனது முழு கோபத்தையும் அவனது முன்னே கொட்டியவளின் ‘வேலை நேரம்’ என்ற வார்த்தையில் சினம் பொங்கப் பார்த்தவன்,

“என்னது வேலை நேரமா..? கிரகம்…கவுரவமா ஏதாச்சும் ஒரு ஹோட்டல்ல டேபிள் துடைச்சு சாப்பிடுறத விட்டுட்டு..ஏம்மா இப்படிப்பட்ட தொழில் செஞ்சு நாசமா போற..?” என்றவனின் அதட்டலில் யாருடா நீ? என்கிற பார்வை வீசியவள்..

“யோவ் இப்போ கிளம்ப போறீயா இல்லையா..?” என்றவளின் எரிச்சல் அவனுக்கு அனல் வீச,

“யோவா..?” பைக்கைவிட்டு வேகமாய் அவன் இறங்குவதைப் பொருட்படுத்தாதவள்,

“ஆமா யோவ் தான்..ஒழுங்கா மரியாதையா இங்கயிருந்து போயிடு..நானே செம காண்டுல இருக்கேன்..”

“என்ன இன்னைக்கு கஷ்டமர் ஏதும் கிடைக்கலன்னு காண்டுல இருக்கியா..?” அவனது கேள்வியின் முழு சாராம்சத்தை இப்போது புரிந்து கொண்டவளின் இதழ் இப்போது சிரிப்பில் நெளிந்தது..

“ஏன் நீ வந்து கஷ்டமர் பிடிச்சி கொடுக்கப் போறீயா..?” என்றவளின் கேள்வி அவனுக்கானதாக இருந்தாலும், கண்களால் யாருக்கோ கட்டளைப் பிறப்பித்தாள்..

அவளது விழியசைவை இருட்டின் விளைவால் அறியாதவன், “ஆமா அதுக்கு தான் நாங்க ஊருக்குள்ள சுத்துறோம்..சரி உனக்கு என்ன ரேட்டு..?”

அவனது பதிலில் வந்த சிரிப்பை இதழுக்கடியில் புதைத்தவள், “யேய், பேசாம இங்கிருந்து போ..அதுதான் உனக்கு இப்போதைக்கு நல்லது..”

அவனது கூர்விழியில் தனது ஸ்திரமான பார்வையை நிலைக்கவிட்டுப் பதிலளித்த இடைப்பட்ட நேரத்தில் அந்த ஸ்கார்ப்பியோ அவ்விடத்தைவிட்டுப் பறந்தது..

ஸ்கார்ப்பியோ அங்கிருந்து அகன்றதும் கோபமாய் தனது வண்டியைத் தட்டியவள், தனக்கு முன்னே நிற்பவனைப் பொருட்படுத்தாமல் பைக்கில் ஏறி அமர, அவளின் வேகத்தைக் குறைக்கும் விதமாய் அவளது பைக்கின் முன்னே வந்து நின்றான் அந்நெடியவன்..

இன்னும் போகாமல் தனது முன்னே வந்து நிற்கும் ஆறடி ஆடவனைத் தனது உயரம் குறைவு காரணமாய் தலையை நிமிர்த்தி முறைத்து,”அடிங்க என்ன யா வேணும் உனக்கு..?”

அவளின் கோபத்தைப் புறம் தள்ளியவன், “நீ யாருன்னு எனக்கு இப்போ தெரிஞ்சே ஆகனும்..” பைக்கின் ஹேன்ட்பாரை வலுவாய் பிடித்து கேள்வி கேட்பவனை என்ன செய்தால் தகும் என்கிற ரீதியில் பார்த்து வைத்தவள்…

“அடங் கொய்யால..இவனோட என்ன யா இது இம்சையா போச்சு..?” வெறுப்பாய் பேசியவளின் அலைபேசி இப்போது மூன்று முறை அடித்து ஓய்ந்திருந்தது,

“ஏழரைய கூட்டாம வழிவிட்டு நில்லு யா..”
அவளின் கத்தலைப் புறம் தள்ளியவன் இப்போது அவள் முன்னே கைகளைக் கட்டி கால்களை அகல விரித்து வலுகூட்டி நிற்பவனின் மொபைல் இப்போது சிணுங்கியது..

அவள் மீது தனது ஓரப் பார்வையை நிலைக்கவிட்டவனின் கைகள் தாமாய் அவளது பைக்கை விடுத்து மொபைலை எடுத்து, “ஹலோ, திஸ் சந்த்ரு ஹியர்..” என்றான் கடினமானக் குரலில்

அவனது பெயரைக் குறித்துக் கொண்டவளின் நொடி நேரப் பார்வை அவனது பைக்கின் நம்பர் ப்ளேட்டை தொட்டு மீள, அவன் அவளைவிட்டு அகன்ற அந்த அரையடி தூரத்தைப் பயன்படுத்து அங்கிருந்து பைக்கை கிளப்பினாள்..

தனது நொடி நேர கவனக் குறைவை ஏகத்துக்கும் சபித்த சந்த்ரு அவள் சென்ற திசையைப் பார்த்து மூச்சை இழுத்துவிட்டு தனது Harley-Davidson பைக்கை கிளப்பியிருந்தான்..

நடுச்சாமம் கடந்து நிதானமாய் வண்டியைச் செலுத்திக் கொண்டிருந்தவனுக்கு மனதில் மூன்று தினங்களாய் இந்தச் சாலையில் அவளைப் பார்த்த நியாபகச் சுவடுகள் தான்..

அவனுக்கு அவள்மீது பெரிதாய் ஈர்ப்பு இல்லை ஆனால் இரவு நேரத்தில் பயமில்லாமல் தனியாய் சுத்தும் அவள் யாரென அறிந்து கொள்ளும் ஆர்வம் மட்டுமே..இப்போது அவள் யாரென கொஞ்சம் தெரிந்து கொண்டதில் அவனது ஆர்வம் மொத்தமும் வெறுப்பாய் மாறியிருந்தாலும் மனதின் ஓரம் இன்னும் அவளைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற வேகம் மட்டும் வலுவாய் இருந்தது..

இப்படியான பல சிந்தனைகளுடன் பைக்கை ஓட்டிச் சென்றவனின் கைகள் தன்னிச்சையாய் வீட்டு வாசலில் பிரேக் அடித்து நிற்க, ஹாரன் சத்தத்தில் அவசரமாய் வந்து கதவைத் திறந்து வணக்கம் வைக்கும் செக்யூரிட்டியிடம் லேசாய் தலையசைத்தவனின் முகம் முன்பிருந்ததைவிட இப்போது நன்றாக இறுகிப் போயிருந்தது..

அவனது பைக் வீட்டின் போர்டிக்கோவை அடைந்ததும் வாசலை இழுத்து மூடியவர், திரும்பத் தனது இடத்திற்குச் சென்று உட்காந்து கொள்ள, நீள எட்டுக்கள் வைத்து வீட்டுக்குள் சென்றவனுக்கு எப்போதையும் போல் யாருமற்ற தனிமை நெஞ்சைச் சுட்டது..

ஹாலில் நடுநாயகமாய் மாட்டி வைத்திருக்கும் தந்தையின் புகைப்படத்தை நிமிர்ந்து பார்க்க விரும்பாதவன் போல மாடிப்படிகளில் தாவி ஏறி தனது அறைக்குச் சென்று கதவடைத்துக் கொள்ள, அவன் வந்த சத்தம் கேட்டு முன்னறைக்கு வந்த தனசேகர் எப்போதையும் போல ஒரு பெருமூச்சைவிடுத்து அங்கிருந்து நகர்ந்தார்..

அறைக்குள் வந்தவனின் மனதில் நிம்மதி என்பது துளியளவும் இல்லை.. ஆழபெருமூச்சை விடுத்தவனின் மனச் சோர்வு உடலையும் தாக்க, உடையைக்கூட களையாமல் கட்டிலில் குப்புற விழுந்த சந்துருவின், ஆறடி உயரத்தை மெத்தைகள் விழுங்கிக் கொண்டது..

அவனது முறுக்கேறிய உடம்பில், ஹிந்திக்கார நடிகன் போல இருந்தவனின் தாடையில் லேசாய் வளர்ந்திருந்த தாடி அவனுக்குத் தனி அழகைக் கொடுக்க, தூங்கும் போது கூட இறுக்கமாய் எதையோ சிந்திப்பவன் போல இருந்தான்..

கற்றையாய் இருந்த முடிகள் கொஞ்சம் ஏறியிருந்த நெற்றியில் புரள, அதனுள் தனது வலது கையை விட்டு அழுந்தப் பிடித்தவனுக்கு தலைவலியா அல்லது மனவலியா என்பது அவனறிந்தது..

வருடம் பல கடந்தாலும் சில உறவுகள் அவனுக்குக் கொடுத்த அதிபயங்கர வலி கற்றுத் தந்த பலவற்றுள் ஒன்று
எவ்வளவு துன்பம் வந்தாலும் சிரித்து கொண்டே கடப்பது தான்..

அவனுக்கு எப்போதும் அவனே எதிரி அவனே சொந்தம் அவனே நெருங்கிய நண்பன்.. இந்த உலகம் என்பது கூட சந்த்ரு என்கிறவனில் தொடங்கி அவனுள்ளே முடிந்து போகும் சகாப்தம் எனப் பல இடங்களில் அவன் பேசும் போது கேட்கக் கூடும்..

இவனைப்பற்றி நாம் தெரிந்து கொள்ள போன சில மணித் துளிகளில் அவனை நித்ராதேவி வாரியணைத்துக் கொள்ள, நமது நாயகி இப்போதும் தனது பைக் பயணத்தைவிடாமல் தொடர்ந்து கொண்டிருந்தாள்..

சந்த்ருவிடமிருந்து தப்பி பைக்கை விரட்டியவளின் போன் இப்போதும் விடாமல் சிணுங்க, போனை அட்டென்ட் செய்து அவர்களுக்குத் தக்க பதிலளித்தவளின் நினைவிடுக்கிலும் மூன்று தினங்களாய் தன்மீது குழப்ப பார்வையை வீசிச் செல்லும் அவனின்மீதே இருந்தது…

அதிகாலை ஆறு மணி வரையிலும் பைக்கில் வலம் வந்தவள் இப்போது தனது பைக்கை ஒரு வீட்டின் முன்னிறுத்தி அங்கிருந்த காலிங்பெல்லை அழுத்த, துவண்ட நடையுடன் கதவைத் திறந்த தேவியின் தூக்கம் நிறைந்த நடையை, “உன் புருஷன் எங்க..? நைட் போன் பண்ணுனா எடுக்க மாட்டானா அவன்?” என்ற அதட்டலான குரல் நிறுத்தியது..

அவளது கேள்விக்கு மலுப்பலாய் சிரித்தவள், “தூங்குறாங்க..”

“ஓஹ்..சார் தூங்குறாங்களோ…இன்னும் நல்லா இழுத்து மூடித் தூங்க சொல்லு..போ..”

“அதுவந்து…அண்ணி…” தேவியின் அண்ணி என்கிற அழைப்புக்கு முறைத்தவள்..

“தேவி…என்னை அப்படி கூப்பிடாதேன்னு உனக்கு எத்தனையோ தடவை சொல்லிட்டேன்..இதுவே லாஸ்ட் வார்னிங்கா இருக்கட்டும்..காட் இட்..”

“சாரி கனி…”

“ம்..சொல்லு..”

“இல்ல இன்னைக்கு என்ன ரொம்ப நேரமாகிட்டு..?அத தான் சந்து கேட்க வந்தேன்..” தேவியின் கேள்விக்கு நிமிர்ந்து கடிகாரம் பார்த்த சந்துவிற்கும் இன்றைய தாமதம் புரிய,

“அரசி எங்க..?” என்றாள் கேள்வியாய், சந்துவின் சத்தம் கேட்டதும் துள்ளிக் குதித்து வந்த அரசி,

“மம்மி…” என ஓடிவந்து அவளது காலைக் கட்டிக் கொண்டது..

“பேபி..குட் மார்னிங்..” சந்துவின் குரலில் இதுவரையிருந்த இறுக்கம் முற்றிலும் தொலைந்திருக்க, சின்னவளை அதட்ட வந்த தேவி கூட இப்போதிருக்கும் கனியின் நிலையில் கப்சிப்பென வாயை மூடிக் கொண்டாள்..

தனது கன்னத்தில் முத்தம் வைத்து காலை வணக்கம் சொல்லும் மம்மியின் கழுத்தைக் கட்டி கன்னத்தை மெல்லமாய் கடித்த அரசி, “மம்மி..வாங்க நாம அப்பா கிட்ட பேசலாம்..” என்றழைத்தாள்..

அவளின் அழைப்பிற்குச் செவிசாய்த்தவள், “வாங்க தங்கம் பேசலாம்..” இடுப்பில் அமர்ந்திருக்கும் குழந்தையுடன் சின்னவளின் அறை நோக்கி ஓடியவளை ஏமாற்றாமல் ஸ்கைப்பில் அனுஷ் காத்திருந்தான்..
“ஹாய் மாம்ஸ்…” கனியின் குரலில் கீழே குனிந்து மொபைலை நோண்டிக் கொண்டிருந்தவன் நிமிர்ந்து,

“ஹாய் டார்லிங்…என்ன இன்னைக்கு லேட் ஆகிட்டு போல..” என்றான் தனது அக்மார்க் துள்ளல் குரலில்..

“என்ன மாம்ஸ் பண்ணுறது…நம்ம தொழில் அப்படி…என்ன இன்னும் தூங்கலையா..?”

“ஹாஹா..பேசாம வேலையைவிட்டுட்டு கனடா வந்துருன்னு சொன்னா நீ கேக்குறீயா..தூங்கலாம்னு போனேன் பேபி போன் பண்ணிட்டாங்க…” என்றவனின் விழிகள் இப்போது அரசி எனப்படும் அன்பரசியை தழுவி நிற்க, அவனது பார்வையின் ஏக்கம் புரிந்தவள்..

“டோன்ட் வொர்ரி மாம்ஸ்..இன்னும் மூனே மாசம் தான்..நாங்க வரோம் அங்க..” என்றவளின் சில பல நலவிசாரிப்புகளுடன் தேவியும் அனுஷிடம் பேச, மேலும் அரை மணி நேரம் கடந்து போனை வைத்த அனுஷிற்கும் கனிக்கும் மனம் நிறைந்திருந்தது..

உரையாடலின் முடிவில் அரசி தூங்கியிருக்க, அவளைக் கட்டிலில் கிடத்தியவள், தனது அறைக்குச் சென்று உடை மாற்றிக் கட்டிலில் சரிந்தவளின் மனம் எப்போதும் போல முன்தினம் நடந்த சம்பவங்களை அக்குவேறு ஆணிவேராக அலசத் துவங்கியது..

இன்பங்கள் காண்பார்கள்!

error: Content is protected !!