Un Kannil Inbangal Kanbein – 12

Un Kannil Inbangal Kanbein – 12

12

ஒன்பது மாதங்களுக்கு முன்,
புளியரை கிராமம்..

தென்காசியை அடுத்து செங்கோட்டை அருகேயிருக்கும் புளியரை கிராமத்தின் வளமையைக் காண நமக்கு இரு கண்கள் போதாது.. தமிழகம் வழியே கேரளா செல்லும் பாதையில் அமைந்திருக்கும் இக்கிராமும் மலையடிவாரமே..

கிராமம் எனச் சொல்லிய பிறகு ஜாதியம் இல்லாமல் இருக்குமா..?அல்லது ஜாதி சண்டை தான் இல்லாமல் இருக்குமா..?

மேல் ஜாதியினர் தெருவிற்கு போகும் வழியில் நூற்றுக்கணக்கானோர் கூடியிருந்தனர்..

அங்கே, கீழ் ஜாதியினர் எனச் சொல்லப்படுபவர்கள் கத்தி, அருவாளோடு அங்கே குழுமியிருக்க, மேல் ஜாதியினர் எனத் தங்களை முதன்மை படுத்துவோரும் அவ்வாறே கோபத்துடன் கூடிய தெனாவெட்டுடன் இடையிலும் முதுகிலும் சொருகிய அருவாளோட நின்றும் அமர்ந்தும் இருந்தனர்..

இக்கூட்டத்திற்கு நடுவே இருந்த அம்மன் கோவிலின் முதல் படியில் நின்றிருந்தாள் கனிஷ்கா சரவணன்..

இரண்டு நாட்களுக்கு முன், மேல் ஜாதியில் இருந்து ஒரு பெண்ணை,கீழ் ஜாதி பையன் இழுத்து கொண்டு ஓடியிருந்தான்.. ஓடியவனைக் கண்டுபிடிக்க முடியாததால் ஓடிப் போனவனின் தங்கையை அப்பெண்ணின் அண்ணன் தூக்கி வந்துவிட்டான்..

ட்ரான்ஸ்பர் மூலம் தென்காசியில் பொருப்பெடுத்த முதல் மாதத்தில் இப்பிரச்சனை..ஓடிப் போன இருவரும் கனிஷ்காவின் பாதுகாப்பில் தான் இருந்தனர்.. ஆனால் அது ஊராருக்கு தெரியாது..

கைகளைப் பின்னால் கட்டிக் கொண்டு நின்றவள், வீதியில் நின்ற கூட்டத்தினரைப் பார்த்து,

“எதுக்கு வெளில நிக்கிறீங்க..? உள்ள வாங்க..” என அழைக்க,

“இது எங்க கோவில்..எங்க இனத்தான தவிர யாரும் உள்ள வரக் கூடாது..” என ஒரு இளைஞன் சத்தமிட, ஆமோதிப்பாய் பல இளைஞர்கள் கூச்சலிட்டார்கள்..

சபையில் அமர்ந்திருந்த பெரியவர்களிடம் திரும்பியவள், “அவங்க கோவில் உள்ள வரலாமா..?” எனத் தணிவாய் கேட்பது போல இருந்தாலும், குரலில் கொஞ்சம் திமிர் இருந்தது..

முன்னே நிற்பவள் போலீஸ் என்பதால் அவளைப் பகைத்து கொள்ள விரும்பாதவர்கள், “சரி..” எனத் தலையசைக்க,

“உள்ள வாங்க..” என அனைவரையும் அழைத்தவள் அமரச் சொன்னாள்..

அவர்கள் அனைவரும் அமர்ந்ததும், தூரமாய் நின்ற போலீஸ் அதிகாரிகளை அருகே அழைத்தவள் காதில் ஏதோ கூறி முடித்து,

“என்ன பிரச்சனை..?” எனக் கேட்டாள்..

இவள் பேச ஆரம்பித்தது முதல் ஒரு அதிகாரி அனைத்தையும் வீடியோ எடுக்கத் துவங்கினார்..

“மேடம் எங்க வூட்டு பொண்ண அந்த சாதிகார பய தூக்கிட்டு போயிட்டான்..” கீழே அமர்ந்திருந்த ஒருவன் சொல்ல,

“சரி, எங்க கிட்ட கம்ப்ளைன்ட் கொடுத்துட்டிங்களா..?” என்றதும் வாயை மூடிக் கொண்டனர்..

“இவங்க பொண்ணு எதுக்கு நீங்க கடத்துனீங்க..?” மார்பின் குறுக்கே கைகளைக் கட்டி அவள் கேட்க,

“இவங்க பொண்ணு எந்த சாதிகாரப்பய கூட ஓடிப் போனாவளோ..? எங்க கிட்ட கேட்டா எப்படி..?” ஓரமாய் நின்ற ஒருவன் எகிற,

“சரி, ஆனா இவங்க உங்க மேல கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காங்கலே அப்போ எல்லாரையும் அரெஸ்ட் பண்ணிடலாமா..?” ஆணித்தரமாய் அவள் கேட்டதும்,

“ஏலே எங்க வந்து யாரு கிட்ட பேசுறவ..? சிதச்சிடுவோம் பார்த்துக்க..”கனியின் முன் விரல் நீட்டி எச்சரித்தவன்,

கூட்டத்தில் நின்ற சகாக்களிடம், “நம்ம சாதி பவர் தெரியாம பேசுறா மாப்ள..பயபுள்ளைக்கு நம்மள பத்தி தெரியாதுல..” என்க..

கை நீட்டியவனை அடித்துவிடும் வேகமிருந்தாலும், கைகளை மடிக்கி அமைதி காத்தவள்,

“ஐயா, எங்க சைட்ல நாங்க சொல்ல வேண்டியத சொல்லிட்டோம்..இன்னைக்கு சாய்ந்திரத்துக்குள்ள அவங்க பொண்ணு வீடு போகலன்னா அரெஸ்ட் பண்ண சொல்லி மேலிடத்து உத்தரவு..இதுக்கு மேல நீங்க தான் முடிவு பண்ணனும்..” எனவும்,

“என்ன மா அரெஸ்ட்னு சொன்னதும் அப்படியே அடங்கிருவோம்னு நினைச்சுட்டியா..? வீரப் பரம்பறை எங்களோடது..” என்றவர்களை விடுத்தவள் அங்கிருந்த பெண்கள் கூட்டத்திடம் திரும்பி,

“ஏமா, இங்க இருக்க ஆம்பளைங்க எல்லோரும் வெளிநாடு போயிட்டு வந்துட்டு இருக்கவங்க தான்..வீனா, எல்லார் மேலயும் கேஸ் பதிவாச்சுன்னா அடுத்து அவங்க உள்ளூர விட்டு எங்கயும் போக முடியாது..நான் சொல்ல வேண்டியத சொல்லிட்டேன் அப்புறம் உங்க இஷ்டம்..” என்ற கனியிடம்,

“மேடம், நாங்க கீழ் சாதிக்காரங்கன்னு நாங்க கொடுத்த கம்ப்ளைன்ட்ட எடுத்துக்காம, அவங்க கிட்ட சமரசம் பேசுதியலா…?” என்றான் ஒருவன் எழுந்து..

“கொஞ்சம் அமைதியா இருங்க..” என்றவள்,

“இன்னும் ஒரு மணி நேரம் தரேன் ஐயா..அதுகுள்ள புள்ளைய இங்க வந்து விடச் சொல்லுங்க..” என அப்படிக்கட்டிலே அமர்ந்துவிட, கூட்டத்தில் சலசலப்பு கூடியது..

அவள் அமர்ந்த பத்து நிமிடங்களில் சரம் சரமாய் போலீஸ் வண்டி ஊருக்கு வெளியே வந்து நின்றது..

அங்கே நடக்கும் சலசலப்புகளைக் கடந்து நடுநாயகமாய் அமர்ந்திருக்கும் தனது சகோதரியை நாடி வந்தான் பரத்..
சகோதரியை பார்க்க வேண்டி நேற்று தான் ஊரில் இருந்து வந்திருந்தான்..

பரத்தைக் கண்டதும் என்னவென புருவம் உயர்த்த, ஒன்றுமில்லை எனத் தோள் குலுக்கியவன் அவளுக்கு அருகே கொஞ்சம் இடைவெளி விட்டு அமர்ந்து கொண்டான்..

இப்போது ‘போ’ எனச் சொன்னாலும் போக மாட்டான் என்பதை அறிந்த கனிஷ்காவும் அவனைக் கண்டு கொள்ளாமல், தனது அலைபேசியில் இருந்து சில மெசேஜ்களை வாயிலில் நின்ற அதிகாரிகளுக்கு அனுப்பியவள்,

“பரத், வீட்டுக்கு போ..” எனச் சொல்ல, காது கேளாதவன் போல அமர்ந்து கொண்டான்..

அவள் கொடுத்த அவகாசத்தில் அரை மணி நேரம் கடந்திருக்க, கோவிலுக்கு வெளியே ஒரு கார் வந்து நின்றது..

கான்ஸ்டபிள் ஒருவன் உள்ளே ஓடி வந்து, “மேடம், எம்.எல்.ஏ உங்களை வரச் சொன்னார்..” அவன் சொன்னதும் கூட்டத்தினரிடம் பார்வையை ஓட்ட, மேல் ஜாதியினரின் முகத்தில் எக்காளப் புன்னகை..

“வரேன்..” எனப் பதிலுரைத்தவள், வெளியே சென்று அவருக்கு வணக்கம் வைத்தாள்..

“ஏமா, ட்ரான்ஸ்பர் ஆகி ஒரு மாசம் ஆகல, அதுக்குள்ள எதுக்கு மா இந்தக் கேஸை எடுத்த..?”

அவரது அதட்டலைப் புறம் தள்ளியவள் மென்மையான குரலில், “சார், நீங்க வந்து பேசுங்க பிரச்சனை கொஞ்சம் முடிஞ்சிரும்..” என்ற கனிஷ்காவை முறைத்த எம்.எல்.ஏ

“என்னால முடியாது..? இங்க நிக்கிற போலீஸ் காரப் பயலுங்க எல்லாம் கிளம்புங்க..எங்க சாதிக் காரனுங்க அதைப் பார்த்துப்பானுங்க..” என்றதும்

“அந்தப் பொண்ண இப்போ விட்டுட்டா பிரச்சனை முடிஞ்சது சார்..” என்றவளும் தான் பிடித்த பிடியில் நிலையாய் நின்றாள்..

“இங்க பாரு நான் சொன்னா என் சாதிகாரனுங்க பொண்ண விட்டிருவாங்க தான்…ஆனா என்னால சொல்ல
முடியாது..” ஸ்திரமாய் மறுப்பவரிடம்,

“ஏன் சார்..” என்க

“இங்க இந்த நாற்காலில சும்மா உட்கார்ந்திருக்கம்னு நினைக்கிறீயா..? சாதி இல்லனா அரசியல் இல்ல..அந்த அரசியல் இல்லனா எங்க பொழப்ப நாங்க எப்படி ஓட்டுறது..இன்னைக்கு இந்த நாய்களுக்காக என் சாதிக்காரனா நான் பகைச்சுகிட்டா நாளைக்கு யார் எனக்கு ஓட்டு போடுவா….நாலு பேர் வெட்டிட்டு செத்தா ஒண்ணும் ஆகிடாது..நீங்க எல்லோரும் இங்க ஆட்டுனது போதும் கிளம்புங்க..” அசிங்கமாய் பேசுபவனை முறைத்தவள்,

“சார் அவ்வளவு தானா..?” என்றதும்,

தனக்குப் பின்னே நின்றவனை அருகே அழைத்து சப்பென ஒரு அறை வைத்த எம்.எல்.ஏ,
“இந்த அறை உனக்கு விழுறதுக்கு முன்னாடி கிளம்பு..நான் என் காருல தான் உட்கார்ந்திருப்பேன்.. புரிஞ்சுதா..” படபடப்பாய் மொழிந்தவர் காரில் ஏறி அமர, அவரிடம் அடி வாங்கியவன்,

“ஏமா, ஐயா சொன்னா சரியா தான் இருக்கும்…சும்மா அவரை பகைச்சிட்டு ட்ரான்ஸ்பர் வாங்கி ஊர் ஊரா சுத்தாம போய் சொல்றத பண்ணு மா..” கன்னத்தை தடவிக் கொண்டே அட்வைஸ் கொடுத்தான்..

நிதானமாய் கண் மூடித் திறந்தவள், தனது கையடக்க மொபைலை வெளியெடுத்து, காருக்கு அருகே சென்றாள்..
கண்ணாடியை மேலேற்றி ஏசியில் அமர்ந்திருக்கும் எம்.எல்.ஏவின் புறம் குனிந்து,

ஆள்காட்டி விரலையும், நடுவிரலையும் மடக்கி கண்ணாடியயைத் தட்ட, வின்டோவை இறக்கிய எம்.எல்.ஏவிடம் பேச ஏதுவாக, கதவு மீது கைகளை மடக்கி வைத்தாள்..

“என்ன நீ கிளம்புறீயா இல்ல, வேற யாரையாவது விட்டு உன்கிட்ட பேச சொல்லனுமா..?” என்றவரின் கேள்விக்கு தனது மொபைலை எடுத்து படமாய் ஓடவிட்டவள்..

அதில் இவ்வளவு நேரம் அவன் பேசியவை அனைத்தும் படமாய் ஓட, “டியூட்டியில இருக்கிற போலீஸ் அதிகாரிகளை அவங்க வேலை செய்ய விடாம தடுத்துட்டீங்க, கலவரத்தை வாலன்ட்டியரா உண்டு பண்ணி ஊரோட அமைதிய கெடுத்ததுக்காக..” மேலே பேசிக் கொண்டே சென்றவளை இடைமறித்தவர்,

“பொட்டக் கழுத…என்ன மிரட்டி பார்க்குறீயா..?” எனக் கேட்க,

“மிரட்டல் எல்லாம் அல்லு சில்லரைங்க பண்ற வேலை..” என நிறுத்தியவள், கைகளை நன்றாக ஊன்றி, “ நான் போட்டுத் தள்ளிட்டு போயிட்டே இருப்பேன்.. டிப்பார்ட்மென்ட்ல என்னைப் பத்தி விசாரிச்சிட்டு இந்த மாதிரி சிரிப்பு காமி.. வீடியோ வெளியே வுட்டேன் மவனே நடுரோட்ல நாயா தான் அலையனும்..” பொடியவள் மிரட்டியதும் பார்வையை அவள் பின்னே ஓட்டியவன்,

“அந்தப் படிக்கெட்டுல இருக்கிறது தான் உன் தம்பியா..உனக்கு ஒரு குழந்தை கூட இருக்காமே..” என்றதும்,

நக்கலாய் இதழ் வளைத்தவள், “உன்னால முடிஞ்சா அவனோட சுண்டு எப்படி சுண்டு விரல அசைச்சு பாரு.. எவிடென்ஸ் இல்லாம சிதச்சிருவேன்.. அப்புறம் என்ன சொன்ன என் குழந்தைய..ம்…மன தைரியம் இருக்க மனுஷனா இருந்தா இல்ல இல்ல கொஞ்ச நேரத்துக்கு முன்ன என்ன பொட்டக் கழுதன்னு சொன்னல்ல ம்ம்..நீ ஒரு ஆம்பளையா இருந்தா என் பொண்ண தூக்கிப் பாரு..” அவரது கண் முன்னே சொட்டக்கிட்டு பதிலுரைத்தாள்..

மேலும் அவர் புறம் குனிந்தவள், “நீயே வந்து பேசி அந்த பொண்ண இப்போவே இங்க விடச் சொல்லு, இல்லனா ஒரே தட்டு தான் எங்க எங்க இந்த வீடியோ போகனுமோ அங்க அங்க போயிடும்..” தெனாவெட்டாய் உரைத்தவள் காரின் கதவைத் திறந்து வைத்து, அவரை வெளியே வரச் சொன்னாள்..

வசமாய் மாட்டிக் கொண்டோம் என்பதை உணர்ந்தவரும் தனது மிடுக்கை விட்டுவிடாமல், அடுத்து பேச வாயைத் திறக்கும் முன் அங்கே பத்திரிக்கையாளர்கள் குவிந்தனர்..

வாயை மூடிக் கொண்டு கனியின் பின்னே விரைந்தவர் தங்களது சாதியினருக்கு அருகே சென்று சன்னமான குரலில், “நிலமை நம்ம கைமீறி போச்சு அந்த புள்ளைய இங்க கொண்டு வந்து விடுங்க..” எனச் சொல்லியதும், கூட்டத்தினரின் கால் மணி நேர சலசலப்புக்கு பின், அப்பெண் அழைத்து வரப்பட்டாள்..

மூன்று ஆடவன்கள் கோவிலின் வாசல் வரைக்கும் கொண்டு வந்துவிட, கனியின் கழுகுப் பார்வை அவர்கள் யார் யாரென பார்த்து வைத்து கொள்ள,

“அதானே மா உங்க பொண்ணு..?” நடந்து வருபவளை கைநீட்டி கனி கேட்டதும், அப்பெண்ணின் தாய் ஓடிச் சென்று அனைத்து கொள்ள, அவர்களை விழியசைவில் தனது வண்டியில் ஏற்றியவள் ஸ்டேஷனுக்கு அனுப்பி வைத்தாள்..

அனைத்திலும் வேகம்..பத்திரிக்கையாளர்கள் அப்பெண்ணை படம் பிடித்து விடக் கூடாது என்ற வேகம் அவளுக்குள்.. பின் வாழ வேண்டிய பெண் அல்லவா..?

கீழ் சாதியினர் எனச் சொல்லப்படுபவர்கள் இப்போது சண்டைக்குத் தயாராய் நிற்க, இதர போலீஸ்களில் உதவியோடு அவர்களை அங்கிருந்து அகற்றியவளின் பார்வை இப்போது மேல் சாதியினர் மீது விழுந்தது..

தேவியை அனுப்பியதும், பின்னோடு பத்திரிக்கையாளர்களும் விரைந்திருக்க, அங்கிருந்த சொற்ப போலீஸிடம் தனது பார்வையை பதித்து கொண்டே அங்கிருந்து கூட்டத்திற்கு பின்னால் நின்ற மூவரின் அருகே சென்றவள், நிதானமாய் ஒரு பார்வை பார்த்தாள்..

இவளின் அமைதியைத் தொடர்ந்து அந்தக் கூட்டமும் அங்கிருந்து சென்றிருக்க, வெளியேறிய எம்.எல்.ஏவின் பின்னோடு வந்து சொடக்கிட்டு அழைத்தாள்..

சொடக்கு சத்தத்தில் திரும்பிய எம்.எல்.ஏவின் கன்னத்தில் சப்பென ஒரு அறை வைக்க அனைவருமே அங்கு அரை நொடிகள் பேச்சற்று நின்றுவிட்டனர்..

இவளது நல்ல நேரமோ அல்லது அவரது நல்ல நேரமோ இன்றைக்கென்று தொண்டர்கள் யாருமில்லாது வந்திருந்தார்..

வாங்கிய அடியில், “ஏய்..” என கர்ஜிக்க,

“என்ன ஏய்..? பொம்பளைங்கன்னா உனக்கு கேவலமா போச்சா..கொன்னு குழில இறக்கிடுவேன்..” என்றவளின் கண்களில் சிவப்பேறியிருக்க, வலுக்கட்டாயமாக அவ்விடம் விட்டு அவளை இழுத்து வந்தான் பரத்..

பரத் இழுந்து வந்து காரில் ஏற்றும் வரையிலும் அதே முறைப்புடன் இருந்தவளிடம்,
“கனி, உனக்கு இவ்வளவு கோபம் ஆகாது..” என்றான்.

அவனுக்குப் பதிலுரைக்காமல் இருக்கும் கனியிடம், “ம்ச்ச்” என வெளிப்படையாக சலித்தவன்,
“நாளைக்கு திதி கொடுக்கனும்” என்றாள் அறிவிப்பாய்..

அவனது பதிலில் கண்களை ஒருமுறை அழுந்த மூடித் திறந்தவள், “ம்ம்..” எனச் சொல்ல,

“தயவு செஞ்சி உன் கோபத்தை குறைச்சுக்கோ கனி..இப்போ எனக்கும் பேபிக்கும் நீ மட்டும் தான் இருக்க..ப்ளீஸ்..” வளர்ந்த குழந்தையாய் வண்டியை ஓட்டும் தனது தம்பியின் தலைக் கோதியவள்,

“ம்ம்…” என மறுமுறையும் சொல்ல,

“பேபிய கூட்டிட்டு போகனுமா..?” எனக் கேட்டான்..

அவனது கேள்விப் புரிந்தவள், வேண்டாமென தலையசைத்து தனது தாய் தந்தையின் நினைவுக்குச் சென்றாள்..

இரண்டு வருடம் முன்பு இந்த நாள் மட்டும் அவள் வாழ்வில் இல்லாமல் போயிருந்தால், அந்த ஆக்ஸிடென்ட் மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் நினைக்கும் போது நெஞ்சம் படபடத்தது..

அழக் கூடாது ஆயிரமாவது முறையாக தனக்குள் சொல்லிக் கொண்டவள் ஒரு ஆழ்ந்த பெருமூச்சைவிடுக்க, தனது தமக்கையின் மனநிலை புரிந்தவன் போல, அவளது கைகளில் அழுத்தம் கொடுத்தவன்,

“கனி, எப்பவும் உனக்கு நான் இருப்பேன்..” என்றான்..

காவல் நிலைய வாசலில் நின்ற பத்திரிக்கையாளர்களைக் கடந்து உள்ளே நுழைய, தனது அறையின் ஓரத்தில் போடப்பட்டிருந்த இருக்கையில் அந்த பெண்ணுடன் இன்னும் மூன்று பெண்கள் இருந்தனர்..

கனியின் பின்னோடு நுழைந்த பரத், அங்கிருந்த சேரில் அமர்ந்து கொள்ள, ‘இவன் அடங்கமாட்டான்’ பரத்தை மனதால் கனி திட்டினாலும்,

வெளியே நின்ற ஏட்டை அழைத்தவள், “அந்த ஊருக்கு ஊரடங்கு உத்தரவு போட்டிருக்கு..ரவுன்ட்ஸுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் எல்லாம் இருக்கணும்னு சொல்லுங்க..அப்புறம், நான் சொல்ற வரைக்கும் யாரையும் உள்ள விட வேண்டாம்..” என்றவள் அந்தப் பெண்ணுடன் அவளது அம்மாவை மட்டும் இருக்க வைத்து மற்றவரை வெளியே அனுப்பினாள்..

அழுது ஓய்ந்த விழிகளுடன், தலை முடிக் கலைந்து பாவமாய் இருக்கும் அந்தப் பெண்ணுக்கு மிக அருகே தனது இருக்கையை இழுத்துப் போட்டு அமர்ந்தாள் கனி..

அவளது தோற்றம் ஏதோ போல இருக்க, காதில் வெறும் ஹெட்செட்டை மாட்டி மொபைலை நோண்டுவதைப் போல நடித்து கொண்டிருந்தான் பரத்..

“உன் பேரு என்ன மா..?” கனி கேட்கவும், மெல்லமாய்

“தேவி..” என்க, அவர்கள் பேசுவதைத் தான் உன்னிப்பாய் கேட்டுக் கொண்டிருந்தான் பரத்..

“தேவி, அழகான பேரு..என்ன ஆச்சு மா..?” என மேற் கொண்டு கேட்க, இவ்வளவு நேரமும் வாய்க்குள் விழுங்கி வைத்த அழுகை பீறிட்டது..

அவளது இடைவிடாத அழுகை பல மணி நேரமும் தொடர, வெளியே நின்ற கான்ஸ்டெபிளை அழைத்தவள்,
“இவங்களை அவங்க வீட்டுல கொண்டு போய் விடுங்க..ஏமா, நாளைக்கு உங்க பொண்ண கூட்டிட்டு..வேணாம் நாங்களே உங்க வீட்டுக்கு வரோம்..” என்றவள் அனுப்பி வைக்க, இதையெல்லாம் கவனித்தும் கவனியாமல் அமர்ந்திருந்தான் பரத்.

“பரத், பேபி தேடுவா..இன்னைக்கு ஒரு நாள் நீ சமாளி..” எனவும்,

“ம்..நான் பேபிய தூங்க வச்சிட்டு உன்கூட வரேன்..” என்றவனிடம் வராதே எனச் சொன்னாலும் வருவான் எனப் புரிந்தவள் சரியெனத் தலையசைத்தாள்..

அன்று இரவு ரவுன்ட்ஸில் இருந்தாள் கனி, தேவியின் வீட்டுக்கு ஐந்தடி தூரத்தில் தான் காரை வைத்துக் கொண்டு நின்று கொண்டிருந்தாள்..

எப்போதும் போல இடுப்பில் துப்பாக்கி இருக்கிறதா எனச் சரிபார்த்து கொண்டவள், காரின் மேலே ஏறி படுத்திருக்கும் பரத்தின் மீதும் அங்கிருந்த பிரதான சாலையின் மீதும் ஒரு பார்வை வைத்திருந்தாள்..

நடு சாமத்தைக் கடந்த வேளையில், திடீரென, “அம்மா” என்ற அலறலுடன் சத்தம் கேட்க, தேவி வீட்டில் தான் விளக்கெறிந்து கொண்டிருந்தது..

படுத்திருந்த பரத் அடித்துபிடித்து எழுந்தமர, வேகமாய் அந்த வீட்டின் கதவைத் தட்டி உள்ளே நுழைந்தாள் கனி..
தேவியின் அம்மா அங்கிருந்த ஒரு ஜன்னலின் வழியே, “ஏம்மா எங்கள வுட்டு போயிராத தாயி..” எனக் கெஞ்ச, அவளது அப்பாவோ தள்ளாத வயதில் அந்தக் கதவை இடித்துக் கொண்டிருந்தார்..

அவரை ஒதுங்குங்க எனச் சொன்னவள், பின்னே நின்ற பரத்திடன் கண்ணசைக்க, வேகமாய் பின்னிருந்து ஓடி வந்தவன் இடித்த இடியில் தகரக் கதவு கீழே விழுந்தது..

மூச்சுக்குத் திணறுபவளின் கால்களை கனிப் பிடித்து உயர்த்த, அங்கிருந்த ஸ்டூலில் ஏறி முடிச்சுகளை விடுவித்தவன், அவளைத் தூக்கி கட்டிலில் கிடத்தினான்..

முகத்தில் தண்ணீரைப் பீய்ச்சியடித்ததும், லேசான மயக்கமும் முற்றிலும் வடிய எழுந்தமர்ந்த தேவி, “எதுக்கு என்னை காப்பாத்துன..சொல்லு…” என்றாள் கனியின் கைகளைப் பிடித்து உலுக்கி..

“ரிலாக்ஸ் தேவி..” தனது கைகளைப் பிடித்து சட்டையைப் பிடித்தும் புலம்பும் தேவியின் முதுகை வருடியவள்,

“இப்போ எதுக்கு இப்படி பண்ணுன..”என்றதும்,

“நான் எதுக்கு உயிரோட இருக்கனும் சொல்லு…என்கிட்ட ஒண்ணுமே இல்லையே நான் எதுக்கு இருக்கனும்..” அழுது சத்தமிடுபவளின் அர்த்தம் புரிந்ததும் அவளது அன்னை மார்பில் அடித்துக் கொண்டு அழ, தந்தை நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சரிந்துவிட்டார்..

கனிக்கு அந்த சூழல் மிகப் புதிது, பரத் அந்தப் பெரியவரைத் தாங்கி முகத்தில் தண்ணீர் தெளிக்க,

“அப்பா அப்பா..நான் பாவி பா…என்னால முடில ப்பா…திருப்பி சண்டை போட முடில பா…” என்ற தேவி தந்தையின் காலைப் பிடித்து கதற,

மயக்கத்தில் இருந்து எழுந்தவர், “உன் அண்ணனே உனக்கு எமனா வந்துட்டானே..” கத்தி அழுதவர் அடுத்த வார்த்தை பேசும் முன் உயிரை விட்டிருந்தார்..

சொற்ப நிமிடத்தில் தனது கண்முன்னே ஒரு உயிர் போய்விட்டது, பரத்தும் கனியும் அதிர்ச்சியுடன் ஒருவரின் முகத்தை மற்றொருவர் பார்த்து நிற்க, அதற்குள் அக்கம் பக்கத்தினர் கூடிவிட்டனர்..

அடுத்த நாளே தகனம், ஊர் முழுவதும் தேவியின் கதை தான் ஓடிக் கொண்டிருந்தது..

அதே ஊரம்மன் கோவிலின் வாயிலில் நடமாடும் பிணமாய் தேவி நிற்க, அவளைத் தாங்கி பிடித்து கொண்டு அவளது அன்னை..

அதே போன்ற சாதி வெறி கூட்டம், அனைவரையும் கொன்று குவிக்கும் கோபத்துடன் கனி..

“கெடுத்தவனுக்கே புள்ளைய கட்டி வைங்க மேடம்..”என்றவர்கள் சத்தமிட,

“யவனோ கெடுத்துட்டு எங்க சாதிக் காரன் மேல பழிய போடுதீயளா..?” என அவர்கள் பங்கிற்கு எகிறிக் கொண்டிருந்தனர்..

“மேடம், நாளைக்கு எங்க புள்ள வாழ்க்க என்ன ஆகுறது..?” தேவியின் உறவினர் தாலி கயிறை கனியின் கையில் கொடுத்து,

“கல்யாணத்த முடிச்சு வைங்க மேடம்..” எனக் கூச்சலிட, கனிக்கு அதில் கொஞ்சமும் உடன்பாடில்லை..

“தேவி, உள்ள வா மா..” என்றதும் அவளது அன்னையுடன் பதுமையாய் உள்நுழைய,

“யாரு..” எனக் கூட்டத்தினரை தேவியிடம் காட்டி கேட்டவளுக்கு எப்படி அந்தக் கேள்வியை முடிக்கவெனத் தெரியவில்லை.

அங்கிருந்த அனைவரையும் நிமிர்ந்து பார்த்தவளின் பார்வை ஒருவனில் நிலைத்து நின்று உடல் வெளிப்படையாக நடுங்க, அடுத்தக் கேள்வியை கனி கேட்கும் முன், அவளது கையில் இருந்த தாலியை பறித்து தேவியின் கழுத்தில் கட்டினான் பரத்..

ஆட்டம் அனல் பறக்கும்..

error: Content is protected !!