Un Kannil Inbangal Kanbein – 13

13

தேவியின் தோளில் பரத்தின் கைகள் ஆழப் பதிந்திருக்க, மூன்று முடிச்சுகளையும் தானே போட்டு முடித்தான் பரத்..

பின்னால் நின்ற கனியைப் பொருட்படுத்தாதவனின் விழிகள் அதிர்ச்சியாய் பார்த்து நிற்கும் தேவியின் தேவியின் கருவிழிகளை விட்டு கொஞ்சமும் அகலவில்லை..

கூட்டத்தினர் கூட அவன் தாலி கட்டி முடிக்க எடுத்துக் கொண்ட அந்த அரை நொடிப் பொழுதில் மூர்ச்சையாகி இருந்தனர்..

அவன் தாலி கட்டி முடித்ததும் அவளது முழங்கையைப் பற்றி கனியைப் பார்க்கத் திரும்ப,
“என்ன டா இது..?” என்ற கேள்வியை விழிகளில் தாங்கி கூர்மையுடன் பார்த்து நின்றாள் கனி..

“அக்கா, இவளை எனக்கு பிடிச்சிருக்கு..” தகவலாய் உரைக்கும் தமையனை முறைத்தவளுக்கு இப்போது என்னப் பேச வேண்டுமென்பது புரியவில்லை..

இருந்தாலும், “இது இப்போ நீ சொல்ல வேண்டிய டைலாக் இல்ல..” எனக் கண்கள் குற்றம் சாட்டியது..

அதிர்ந்து அழ மறந்து நிற்கும் தேவியுடன், அவளது அன்னையின் கால்களில் விழ, தன்னிச்சையாய் விலகியவரின்
விழிகளில், ‘ஏன் இப்படி..?’ என்ற கேள்விகள் இருந்த போதிலும், கையெடுத்துக் கும்பிட்டார்..

அவரது கைகளைத் தடுத்தவன் கனிக்கு அருகே விரைய, கூட்டத்தின் சலசலப்பு கொஞ்சம் கொஞ்சமாய் கூடியது..

அனைவரில் ஏகபோகப் பேச்சுக்களை உள்வாங்கிய கனி, தனக்கு முன்னே வந்து நெஞ்சை நிமிர்த்தி நிற்கும் பரத்தின் கன்னத்தில் சப்பென அரைந்தாள்..

அடுத்த அடி அடிக்க கைகளை ஓங்கும் கனியின் முன் அதே போல நெஞ்சை நிமிர்த்தி நின்றானே தவிர விலகவும் இல்லை, எதிர்த்து பேசவும் இல்லை… அவள் அடித்ததும் பேசிய ஊரார் அனைவரும் வாயடைத்து நின்றுவிட, அவள் அடுத்து அடிக்க கை ஓங்கிய நொடி, இருவருக்கும் குறுக்கே நின்றாள் தேவி..

“மேடம், வேணாம்..என் மேல ஏதோ பாவப்பட்டு இந்த சார் இப்படி பண்ணிட்டாரு…இவரை நீங்க கூட்டிட்டு போங்க..” என்றவள் நிமிர்ந்தும் பரத்தின் முகம் பார்க்காமல் திரும்பி நடக்க முயல, அவளது கரத்தை பற்றி இழுத்து நிற்க வைத்தவன் அவளை விடுவதாய் இல்லை..

“பரத், அவா கைய விடுறா..” கனி கத்த, அவளது கத்தலை புறந்தள்ளியவன்,

“உனக்கு என்ன பிடிக்கலையா..?” என்றான் அவள் விழிகளைப் பார்த்து.

‘எந்த நேரத்துல எப்படிப்பட்ட சூழ்நிலைல இந்தக் கேள்வி கேட்கடா பரத்..’ மனம் தறிகெட்டு கேள்வியெழுப்பவும்,

“சாரி, உனக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பம் இல்லையா..?” எனவும்,

“இதை நீ எப்போ டா கேட்கனும்..” என அவர்கள் இருவருக்கும் இடையில் கனி குறுக்கிட..

“ஓ…சரி அப்போ உனக்கு பிடிக்கலன்னா தாலிய கழத்தி கொடு..” என்றான் கால்களை அகல் விரித்து, வலது கையை பின்னால் வைத்து இடது கையை அவள் புறம் நீட்டி..

வரிசையான அதிர்ச்சிகளில் சிக்கியிருந்தவளுக்கும் என்ன செய்வது ஏது செய்வதென புரியாமல் அழத் துவங்க, முன்னால் வந்த தேவியின் தாய்,

“மாப்ள, இப்படி பேசுறது நல்லா இல்ல..” என்றார் மறைமுகமாக தனது மகளுக்கு கிடைத்த நல்ல வாழ்க்கையை சம்மதித்து..

அத்தையின் பேச்சில் சிரித்தவன் கனியின் புறம் திரும்பி, “மேடம், என் மனைவிய காணும்னு கொடுத்த கம்ப்ளைன்ட் அப்புறம் இவங்க பேருல கொடுத்த எல்லாத்தையும் வாபஸ் வாங்கிக்கிறோம்..” என்றவனது பதிலில் கூட்டத்தில் மறுமுறையும் சலசலப்பு கூடி,

“என்ன மேடம்..உங்க தம்பிய வச்சி கல்யாணம் முடிச்சிட்டு மேல் சாதிகாரனுக்கு கும்புடு போடுதியலா..?” தேவியின் சொந்தம் சத்தமிட,

முன்னால் வந்தவன், “மேடம், என் குடும்ப விஷயத்தை நானே தீர்த்துக்க நினைக்கிறேன்…கேஸை வாபஸ் வாங்க என் மனைவி கையெழுத்து போடுவாங்க..” பரத்தின் விழிகளில் இருந்த தீர்மானத்தில் அவனை முறைத்த கனி, தேவியின் பக்கம் குனிந்து,

“தேவி, உனக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பம் இல்லனா சொல்லு இவனை அரெஸ்ட் பண்றோம்..” கனியின் கேள்விக்கு தேவி குனிந்தே நிற்க, திமிராய் நிற்பது போல பரத் காட்டிக் கொண்டாலும் பரத்தின் மனதில்,
‘தாயே பரதேவதை வாயைத் தொறந்து சொல்லிடுமா..’ என அவளிடம் வேண்டல் வைத்தது..

குனிந்து அழும் தேவியின் நாடியைப் பிடித்து நிமிர்த்தியவள், “உனக்கு விருப்பமா இல்லையா மா..” என மறுபடியும் கேட்க, அழுதாளே தவிர வாயைத் திறக்கவில்லை..

பக்கத்தில் நின்ற இன்ஸ்பெக்டரை அழைத்தவள், “சார், பரத் க்ருஷ்ணா சரவணன் அவங்க பேருல கேஸ் ஃபைல் பண்ணுங்க…இப்போ கூட்டிட்டு போங்க..” என்றுவிட்டாள்..

கைது செய்யுமாறு சொன்னப் பின்பும் நிமிராமல் அழுது கொண்டே தேவி நின்றுவிட, ஒரு நிமிடம் யோசித்த இன்ஸ்பெக்டரிடம், “நீங்க அரெஸ்ட் பண்றீங்களா இல்ல நான் பண்ணனுமா..?” என கனி அதட்டினாள்..

அப்போதும், பின்னால் கைகளைக் கட்டி திமிராய் நின்றானே தவிர வாயைத் திறந்து பரத் பேசவில்லை..

இன்ஸ்பெக்டர் பரத்தின் கைகளைப் பற்றி அழைத்து செல்ல, ஓரக் கண்ணால் அழும் தேவியையே பார்த்து கொண்டிருந்தானே தவிர வேறெதுவும் சொல்லவில்லை..

பரத்தைக் கைது செய்துவிட்டனர்..அவனுக்கெதிராக கனியே கேஸ் கொடுத்திருந்தாள்..தேவியின் அம்மா எவ்வளவோ கெஞ்சியும்,
“தேவி சொல்லாம கேஸை வாபஸ் வாங்க மாட்டேன்..” எனச் சொல்லிவிட்டவள், அன்று மாலையே தேவியின் வீட்டுக்கு முறையாய் அரசியுடன் வந்தாள்…

இனிப்பு, பூ, பழங்களுடன் வந்தவள், தேவியைத் தங்களுடன் அழைத்து கொள்ள விரும்புவதாகச் சொல்ல, சுற்றத்தாருக்கு அவளைப் பார்க்க விசித்திரமாக இருந்தது..

தேவியின் தாய், “அம்மா, மாப்பிள்ளைய நீங்க தான் அரெஸ்ட் பண்ணச் சொன்னீங்க இப்போ நீங்களே தேவியையும் முறையா கூப்பிட வந்திருக்கீங்க..” என்க..

“அம்மா, பரத்தை அரெஸ்ட் பண்ணுனது விருப்பம் கேட்காம ஒரு பொண்ண கல்யாணம் பண்ணுனதுக்காக.. இப்போ தேவியை என்கூட கூட்டி போறது என் தம்பி மேல எனக்கு இருக்குற நம்பிக்கையால.. நீங்க என்னை நம்பி உங்க பொண்ண அனுப்பத் தேவையில்ல ஆனா கண்டிப்பா என் தம்பிய நம்புங்க..” என்றவள் கூடுதல் தகவலாய் அவனும் போலீஸ் தான் என்பதில் தொடங்கி தங்களது குடும்பக் கதை மொத்தமும் சொல்லி முடித்தாள்..

அவளிடம் சரியென்ற தாயையும் மகளையும் உடன் அழைத்து வந்தவள், அன்று இரவே தேவியின் அன்னையை அவரது மகனுடன் அனுப்பி வைத்தாள்..

கனியின் வேகம் விவேகம் என அனைத்தையும் கண்டு ஒரு நாளில் பிரமித்து போனாள் தேவி… அதட்டலாய் மட்டுமே கனி பேசினாலும் அதில் இருக்கும் பாசம் தேவிக்கு இனித்தது..வந்த அன்றில் இருந்தே அரசியும் ஒட்டிக் கொள்ள, வீட்டுக்கு வந்த இரண்டாம் நாள் பரத்தை விட்டுவிடுமாறு தேவியே கனியிடம் சொன்னாள்..

“அண்ணி..”

“தேவி, கனினு சொல்லு..”

“கனி, அவங்கள எப்போ வீட்டுக்கு கூட்டி வருவீங்க..?”

“எவங்கள..?”

“உங்க தம்பி..” என்றவளின் முகத்தைக் கூர்ந்து பார்த்த கனி,

“நீ உண்மைய தான் சொல்றீயா…” எனக் கேட்க,

“அவங்க ஒரு தப்பும் பண்ணல..” தேவியின் வார்த்தைக்காக தான் காத்திருந்தேன் என்பதைப் போல, ஸ்டேஷனுக்கு அழைத்தவள் அவனை விடச் சொல்லிவிட்டாள்..

FIR என எதுவும் மூன்று நாட்களுக்குப் போட வேண்டாமென கனிச் சொல்லியிருந்ததால், அவள் போன் செய்துவிட்டு வைத்த அரை மணி நேரத்தில் பரத் வீட்டுக்கு வந்துவிட்டான்..

வாசலில் பரத்தின் செருப்பு சத்தம் கேட்கவுமே, “மாமா..” என அரசி ஓடிவர, தேவிக்கு நெஞ்சம் அடித்துக் கொண்டது..

ஓடிவந்த மருமகளை கைகளில் ஏந்திக் கொண்டவன் வீட்டுக்குள் நுழைய..

கைகளில் அமர்ந்திருந்த அரசி,”எங்க மாமா போன..?” எனக் கேட்டாள்..

“ம்..ஜெயிலுக்கு..” பதில் சொன்னவன் சோபாவில் அமர, கனி அவனுக்கு எதிரே அமர்ந்திருந்தாள், தேவி சுவருக்குப் பின்னே நின்றிருந்தாள்..

“அது எங்க மாமா இருக்கு..?”

“ம்..என் மாமனார் வீட்டுக்கு பின்வாசல்ல..”

“மாமனார் வீடுனா என்ன மாமா..”

“உங்க அத்தை வீடு..”

“தேவி அத்தை வீடா இல்ல தாரா அத்தை வீடா மாமா..?” அரசி கேட்டதும் கனி பக்கென சிரித்துவிட தேவி அதிர்ந்து விழித்தாள்..

இருவரையும் நிமிர்ந்து பார்த்து முறைத்த பரத், “உங்க தாரா அத்தை இனி கிடையாது..உனக்கு இனி தேவி அத்தை மட்டும் தான்..” என்றதும், அவனது கன்னம் தடவி,

“ஏன் மாமா..?”எனக் கேட்க,

“எத்தன பேருக்கு தான் நான் வாழ்க்கை கொடுப்பேன்..ஒன்ன கட்டுனதுக்கே ஜெயிலுக்கு போயிட்டு வந்தாச்சு இதுல இன்னொன்னு வேறையா..?” அலறலாய் பரத் சொன்னதில் கனி சிரிக்க, தேவியோ வந்தச் சுவடு தெரியாமல் அறைக்குள் சென்றிருந்தாள்..

கனியின் ஒதுக்கத்தைக் கவனத்தில் கொண்ட கனி, “பரத் போதும் நீ போய் தேவி கிட்ட பேசு..” எனவும்,

“என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா கனி..” என்றான் அடிப்பட்ட பாவனையில்..

“உன்மேல நம்பிக்கை இருக்க போய் தான் தேவி இந்த வீட்டுல இருக்கா..” என்றவள் அரசியை தூக்கி கொண்டு உள்ளே சென்றுவிட, தனது அறைக்கு தேவியைக் காணச் சென்றான் பரத்..

உள்ளே வந்தவன் திரும்பி நின்ற தேவியிடம், “தேவி, என்மேல கோபமா..” என்க,
பரத்தை நோக்கித் திரும்பியவள், ‘இல்லையென பதிலளித்தாள்..

“என்மேல உனக்கு நம்பிக்கை இருக்கான்னு நான் கேட்க மாட்டேன்..ஆனா என்னைவிட என் அக்கா கனிய நம்பு..” என்றவனிடம் சரியெனத் தலையசைத்தாள்..

தேவி இருக்குமிடத்தில் வந்து வந்து பேச்சு கொடுத்தான் பரத்..இந்தச் சம்பவம் முடிந்த பத்து நாட்களுக்குள் மறுபடியும் கனியை சென்னைக்கே மாற்றிவிட, விடுமுறை முடிந்ததால் பரத் மட்டும் அவர்களுக்கு முன்னே சென்னை சென்றிருந்தான்..

அமைதியே உருவாய் இருப்பாள் தேவி..பரத்திடம் ஆம் இல்லையென்ற தலையசைப்புகள் மட்டுமே..இருவரும் ஒரே அறையில் தங்கினாலும் கூட கட்டிலில் தேவி தூங்குவாள், தரையில் மெத்தை விரித்து பரத் தூங்குவான்..

அவர்கள் அனைவரும் சென்னை வந்த பதினைந்தாம் நாளில் தேவிக்கு உடல் சுகமின்மையாகி இருந்தது..கனி, சென்னையின் வெயில் மற்றும் தண்ணீர் தான் அவளுக்கு ஒத்துக்கொள்ளவில்லை என நினைத்திருக்க, அன்று காலை குளித்து முடித்து வெளியே வந்தவள் அங்கு நின்ற பரத்தை பார்த்து சிரிக்க, பதிலுக்கு அவனும் சிரிக்க முற்படும் போது மயங்கிச் சரிந்தாள்..

“கனி..கனி இங்க வா..” தேவியை கட்டிலில் கிடத்தி பரத் கத்த,

என்னவோ ஏதோவென ஓடிவந்த கனியிடம், “கனி..இவா மயங்கிட்டா..” எனச் சொல்ல,

அவளது முகத்தில் தண்ணீரைத் தெளித்தாள் கனி, கருவிழிகள் இமைக்குள் அசைந்தாலும் கண் திறக்கவில்லை அவள்..

“என்ன டா ஆச்சு..” டாக்டருக்கு அழைத்து கொண்டே கனி கேட்க,

“தெரில கனி…அவா சிரிச்சா நானும் சிரிச்சேன் மயங்கிட்டா..” என பரத் சொல்ல,

“இதுக்கு பேரு தான் அழகுல மயங்குறதா டா மாமா..” என இடுப்பில் கைவைத்து கேட்டாள் அரசி..

அரசி சொன்னதும் மோவாயைத் தட்டியவன், “பேபி, ஒருவேள அப்படி இருக்குமோ..” என அவளை கைகளில் தூக்கிக் கொண்டு பரத் கேட்க, அதற்குள் பக்கத்து வீட்டில் வசிக்கும் டாகடர் சாரதா வந்திருந்தார்..

வந்தவர், தேவியின் உடல்நிலையைச் சோதனை செய்து அவள் கர்ப்பம் தரித்திருப்பதாய் சொன்னவர், பரத்தின் கைகளைப் பிடித்தும் வாழ்த்து தெரிவித்தார்..

டாக்டர் வாயில் இருந்து உதிர்ந்த வார்த்தையில் தேவி ஸ்தம்பித்து நின்றுவிட, தொடர்ந்த டாக்டர், “50 டேஸ் அப்புறம் ஆஸ்பிட்டல் கூட்டி வாங்க ஸ்கேன் பண்ணனும்..” என்றவர் கிளம்பிவிட்டார்..

இந்தச் சூழலை எதிர்பாராத பரத்திற்கு இதை எப்படி முன்னெடுக்க எனத் தெரியவில்லை..கனியும் கூட ஒரு நிமிடம் குழம்பினாள்..தேவி அதிர்ந்து சமைந்து உட்கார்ந்துவிட, பரத்தின் கைகளில் இருந்த அரசி மட்டும்,
“அத்தைக்கு என்ன ஆச்சு..? டாக்டர் என்ன சொன்னாங்க..” என அவனிடம் கேட்டுக் கொண்டே இருந்தாள்..

நிலைமையை எதிர் கொள்ளத் துணிவில்லாத பரத், இயலாமையுடன் கனியை நோக்கியவன், மறந்தும் தேவியைப் பார்க்காமல் அரசியைக் கீழேவிட்டு வெளியேறிவிட்டான்..

பரத் வெளியேறியதும் தேவி உடைந்து அழ, கனிக்கு எப்படி சமாதானப்படுத்த வேண்டுமென்பது தெரியவில்லை..

இரண்டு மணி நேரம் கழித்து வீட்டுக்கு வந்த பரத்தின் காதுகளில், “எனக்கு இந்தக் குழந்தை வேணாம் கனி..” என தேவி அழுவது அச்சரம் பிசுகாமல் காதில் விழ,
அவனது அறைக்குள் நுழைந்தான்.

பரத் வந்ததும், அவனிடமும் அதையே சொல்ல, “சரி ஆஸ்பிட்டலுக்கு கிளம்பு..” என ஒரே வார்த்தையில் முடித்துவிட்டான்..

வேண்டாமென சொல்லிவிட்டாள் தான், ஆனால் ஒரு பிஞ்சை அழிக்க வேண்டும் என்றதும் தேவியின் உடல் வெளிப்படையாக நடுங்க எழுந்து கிளம்பிவிட்டாள்..

“என்ன ஆனாலும் திரும்பி இங்கே வரக் கூடாது..” என்ற முடிவோடு..

“பரத்.. என்ன டா இது..” கனி அதட்டவும்

“அக்கா இதுல நீ தலையிடாத..” கத்தரித்தது போல முடித்து கொண்டவன் தேவியை அழைத்துச் சென்றுவிட்டான்..

ஆட்டம் தொடரும்…

error: Content is protected !!