2
இரவு வெகு நேரம் கழித்து வீட்டுக்கு வந்த போதும் அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து கொண்டான் சந்த்ரு..அவனது வீட்டில் இருக்கும் ஜிம்மிற்கு சென்றவன் உடற்பயிற்சிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள, வரிசையாய் வந்த மெசேஜ்களில் அவனது கவனம் பதிந்திருக்க வாய்ப்பில்லை..
இரண்டாம் தளத்தில் இருந்த பாத்ரூமில் குளித்து ஏழு மணிக்கெல்லாம் அலுவலகம் செல்ல ரெடியாகி கீழே
வந்தவனை தனசேகர் கேள்வியாய் பார்க்க அவரது முகத்தை நிமிர்ந்தும் பாராமல், ஹாலில் அமர்ந்தவனின் கண்கள் இப்போது தனது செல் போனை நோண்டத் துவங்கியது..
பசைப்போட்டது போல வாயை அழுந்த மூடிக் கொண்டிருக்கும் சந்த்ருவை எப்படி பேச வைப்பது எனக் குழம்பியவர், முயன்று தனது குரலைச் சரிசெய்து கொண்டு, “தம்பி, நான் இன்னைக்கு ஊருக்கு கிளம்புறேன்..” என்றார் தரையில் தனது தலையைப் புதைத்து..
அவரது குரலில் ஒருமுறை தலையை நிமிர்த்திப் பார்த்தவன், தனது இருகையை இணைத்துத் தட்ட, அவனது வலது புறத்தில் இருந்த அறையில் இருந்து, “இதோ வந்துட்டேன் சார்..” எனச் சத்தமிட்டான் ஆனந்த், சந்த்ருவின் உதவியாளன்.
சந்த்ரு அழைத்து ஒரு நிமிடத்தில் அந்த அறைவிட்டு வெளியே வந்த ஆன்ந்திடம் தனது இடக்கையை நீட்ட, அவனது குறிப்பறிந்து பைலில் வைத்திருந்த ஐநூறு ரூபாய் கட்டை சந்த்ருவின் கைகளில் கொடுத்தான்..
எதிரே அமர்ந்திருந்த தனசேகரை ஒரு பார்வை பார்த்தவன், தனது முன்னால் இருந்த டீபாயில் ரூபாய் கட்டினைப் போட்டுவிட்டு வேக எட்டுகள் வைத்து வெளியேறிவிட்டான்..
அவன் சென்ற திசையைப் பார்த்து பெருமூச்சை விடுத்த தனசேகர் ரூபாய் கட்டினை தனது பையில் பத்திரப்படுத்திக் கொள்ள, அப்பெரியவரைப் பார்க்க பாவமாய் இருந்த போதிலும் எதுவும் சொல்லாமல் சந்த்ருவின் பின்னே ஓடினான் ஆனந்த்..
ட்ரைவர் சீட்டில் ஏறி அமர்ந்த சந்த்ரு, வண்டியைக் கிளப்ப அவனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஆனந்தும் அவனையும் போலவே வாயை இறுக மூடி தனது பயணத்தைத் தொடர்ந்தான்..
முழுதாய் ஒரு மணி நேரம் கடந்து அந்த மிகப்பெரிய கட்டடத்தினுள் தனது வண்டியை பார்க் செய்தவனின் பார்வையில் நேரத்துடன் வந்துவிட்ட முக்கிய பெரும் புள்ளியின் கார் விழுந்தது..
இதழ் பிரிக்காமல் அர்த்தத்துடன் ஆனந்தை நோக்கி கண்ணைச் சிமிட்டி சிரித்தவன் திரும்ப, சற்று தூரத்தில் நிறுத்தி வைத்திருக்கும் Yamaha FZ25 அவனது கருத்தில் பதிந்து நேற்றைய சம்பவத்தை நினைவுபடுத்தியது..
பாக்கெட்டில் வைத்திருந்த கையடக்க டைரியை எடுத்தவன், அதில் நேற்றைக்குப் பார்த்தவளின் வண்டி எண்ணை எழுதி ஆனந்திடம் நீட்டியவன் செய்கை செய்ய, சந்த்ருவின் மனதைப் படித்தவன் போல ஆர்டிவோ ஆபிஸிற்கு தனது அழைப்பை விடுத்தான்..
ஆர்டிவோ ஆபிஸில் அவன் பேசி வைப்பதற்குள் அந்த ஹோட்டலில் தாங்கள் சந்திக்க போகும் நபர் இருக்கும் அறை வந்துவிட, ஒரு சில நொடி தாமதித்தவன் பின் அறைக்குள் நுழைந்தான் முகத்தில் வரவழைக்கப்பட்ட புன்னகையோடு..
“ஹாய் சந்த்ரு…”
“ஹலோ சார்…ரொம்ப நேரம் ஆச்சா வந்து..?”
“நோ நோ…நான் இப்போ தான் வந்தேன்..” என்றவர் தனது பெட்டியில் இருந்து சில பல டாக்குமென்டுகளை அவனிடம் கொடுக்க, அதை வாங்கிப் பார்க்க ஆரம்பித்தவனின் பாவனை திருப்தியாய் இருந்தது..
“சார்..யூ டோன்ட் வொர்ரி…இனி எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்..” என்றவனின் இதழில் விஷமச் சிரிப்பும், கண்களில் கொலை செய்யவும் நான் துணிவேன் என்கிற எச்சரிக்கையும் இருக்க,
அவனது முகத்தில் இருந்தே மனதைப் புரிந்து கொண்டவர், “நோ அவசரப்படாதீங்க…எனக்கு எந்தப் பொருளும் கைவிட்டு போகக் கூடாது அதே நேரம் அவன் உயிரோட வேணும்..ரொம்ப ரிஸ்க்கி ஜாப் தான் பட் சக்ஸஸ் ஆகிட்டா அதுகேத்த லாபம் நமக்கு இருக்கும்..சோ…” என்றவர் தனது பேச்சை நிறுத்தி அவனது முகம் பார்க்க, புரிந்தது எனும் விதமாய் தலையசைத்து அவரிடம் விடைபெற்றான் சந்த்ரு..
அறையைவிட்டு வெளியே வந்ததும், தன்பின்னே வந்த ஆன்ந்திடம் கையில் வைத்திருந்த ஃபைலைக் கொடுத்தவன், “செக் இட் அவுட்..” என்பதை மட்டும் உதிர்த்து அவனது முகம் பார்க்க
“சார்…அந்த வண்டி வேணுகோபால்’னு ஒருத்தர் பேர்ல ரிஜிஸ்ட்டர் ஆகிருக்கு, வண்டி ரிஜிஸ்ட்ரேஷன் திருவான்மியூர் தான் சார்..இப்போ அட்ரெஸ் வாங்கியாச்சு..” என்றவன் மனப்பாடப்பகுதியைப் போல் ஒப்பிக்க ஒற்றைத் தலையசைப்பில் கேட்டுக் கொண்டவனுக்கு அவளது முகம் மனக்கண்ணில் வந்து சென்றது.
“ஆனந்த்..எனக்கு அந்த அட்ரெஸ்ல யார் யார்லாம் இருக்காங்க..என்ன வொர்க் பண்ணுறாங்க் எல்லா டீடெய்ல்ஸும் வேணும்…அதுவும் டூ டேய்ஸ்ல..” என்றவனின் முழுநீள பேச்சில் ஆனந்துக்கு தலைச் சுற்றியது..
ஆனந்திற்கு தெரிந்து இந்த மூன்று வருடங்களில் ஐந்தாவது முறையாக இன்று தான் அவன் இவ்வளவு பேசியிருக்கிறான்…
ஆனந்த் ஆச்சர்யமாய் பார்க்கும் போதே அவனது கண்களுக்கு முன் சொடக்கிட்ட சந்த்ரு…
“என் பெயர் எந்த இடத்துலையும் வெளிய வரக் கூடாது..” என்றான் செய்கையில்..
காலை ஆறு மணிக்கு வீடு வந்தவள் பத்து மணிக்கெல்லாம் விழித்து அறையைவிட்டு வெளியே வர, அங்கே ஹாலில் கால்மேல் கால் போட்டு தேநீர் அருந்திக் கொண்டிருந்தான் பரத், தேவியின் கணவன் போதாக் குறைக்கு கனியின் தம்பி..
தேநீர் உறிஞ்சும் சத்தம் முச்சந்தி வரை கேட்கும் அளவிற்குப் பெரியதாய் இருக்க, “ச்சுசூ…” என்ற கனியின் அதட்டலில் இப்போது மொத்த காபியும் அவனது வாயில் சரிந்திருந்தது..
“குட் மார்னிங் அக்கா..”
சகோதரனின் காலை வணக்கத்தைக் காதில் வாங்காதது போல் அவன் முன்னே அமர்ந்தவளின் கால்கள் டீபாயில் பதிய, அவனது முன்னே கையை நீட்டி பேப்பரை வாங்கியவளின் கண்கள் தினசரியை வாசிக்கத் துவங்கியது..
“திமிரு பிடிச்சவா..” காலையிலே முகத்தை உர்ரென வைத்து தனது பேச்சு கேட்காதது போல அமரும் கனியை மனதிற்குள் திட்டித் தீர்த்தவன் வெளியே சிரிக்க, அவனது முக்கல் முனங்கல் அறிந்தாலும் அதைப் பொருட்படுத்தாதவள்,
“நேத்து எதுக்கு போன் எடுக்கல..” என்றாள் கடுமையான குரலில்..
இக்கேள்வியை எதிர்பார்த்திருந்தவனைப் போல, “நேத்து ரொம்ப டையர்ட் கனி..என்னையும் அறியாம தூங்கிட்டேன்..” அவனது பதிலில் முறைத்தவள் ஏதும் சொல்லாமல் தலையை செய்தித் தாளில் புதைத்துக் கொண்டாள்..
அவள் எழுந்து வந்த அரவம் கேட்டு அவளுக்குக் காபி எடுத்து வந்த தேவி, “இந்தாங்க கனி..” என்க்
“ம்…அரசி எங்க..”
“அவா ஸ்கூலுக்கு போயிட்டா..”
“ஸ்கூலுக்கா..? நைட்லாம் தூங்கலையே அவா..”
“அங்கயும் தூங்க தான் வைப்பாங்க..பேபி க்ளாஸுக்கு படிக்கவா சொல்லப் போறாங்க..” என்ற பரத்தின் பதிலுக்குத் தலையசைத்தவள், இப்போது காபியை குடித்து அலுவலகத்திற்குச் செல்ல கிளம்பி வந்திருந்தாள்..
கனி கிளம்பி வருவதற்குள் பரத் கிளம்பிச் சென்றிருக்க, வேகமாய் சாப்பிட்டவளின் காக்கி பேன்ட்டும் வெள்ளை நிற முழுக்கைச் சட்டையும் அவளை எடுத்துக் காட்டியது..
வெளியில் வந்தவள், அங்கிருந்த ட்ரைவர் வைத்த வணக்கத்தை ஒற்றைத் தலையசைப்பில் ஏற்றுக் கொண்டு, ட்ரைவருக்கு அருகே அமர்ந்து கூலர்ஸை எடுத்து கண்களில் மாட்டியவளின் இடது கை கதவின் கண்ணாடியை இறக்கிவிட்டு அதற்குமேல் இருந்த கைப்பிடியைப் பிடித்திருந்தது..
அமர்ந்ததில் இருந்து தனது கழுகுப் பார்வையைச் சுழற்றிக் கொண்டே வந்தவளின் கார் ஒரு நான்குவழி சாலை சிக்னலில் நிற்க, அவளுக்கு வலது புறத்தில் இருந்த கவர்மென்ட் பஸ்ஸில் ஒரே சலசலப்பு..
ஒருசில நொடிகள் அங்கேயே உற்று நோக்கியவள் இப்போது காரைவிட்டு வேகமாய் இறங்கி அப்பஸிற்குள் நுழைய, அங்கே எதிர்புறமாய் காரில் அமர்ந்திருந்த சந்த்ரு அவளைக் கண்டு கொண்டான்…தனக்கு சிக்னல் விழுந்துவிட்டதைக் கண்டதும் காரை முன்னேற்றி ஓரமாய் நிறுத்தி, அவள் ஏறிய பஸ்ஸிலே தனது பார்வையை பதித்தான்..
பஸ்ஸிற்குள் ஏறியவள் கூட்டத்தை விலக்கி, ட்ரைவர் சீட்டுக்கு அருகே சென்று, “யோவ் வண்டிய ஆஃப் பண்ணுயா..” எனக் கத்த, அவளது தோற்றத்தைப் பார்த்தவன் உடனே அவள் சொன்னதைச் செய்தான்..
கூட்டத்தினரைப் பார்த்து, “யேய்..எல்லோரும் வழிவிடுங்க…” என்றவள் இப்போது அக்கும்பலுக்குள் நுழைந்திருக்க,
“இங்க என்ன பிரச்சனை..?” என்றவளின் குரலில் அனைவரும் அவளைத் திரும்பி பார்க்க,
“நீங்க யாரு மேடம்..?” என்ற பெண்களின் கேள்விக்கு..
“போலீஸ்..” என்றாள் ஒற்றை வார்த்தையில்..
“மேடம்…அந்தப் பையன் இந்தப் பொண்ணு மேல தப்பா கை வச்சிட்டான்..” அவர்கள் சுட்டிக் காட்டிய திசையைப் பார்த்தவள்,
அங்கே அடிவாங்கிக் கொண்டிருந்த பையனின், சட்டைக் காலரை தன்னோக்கி இழுத்தவள் தனக்கு அருகே பிடித்து வைத்து கொள்ள..
“ஏமா நீதான் அந்தப் பொண்ணா..?”
“ம்ம்ம்…இவனை சும்மா விடக் கூடாது மேம்..நான் இவன் மேல கம்ப்ளைன்ட் கொடுக்கிறேன்..பொம்பளைங்கன்னா இவனுக்கு அவ்வளவு கேவலமா போயிட்டா..?” என்றவளைத் தடுத்த கனி,
“நீயும் வண்டியை விட்டு இறங்கு மா…?”
அந்த பையனைப் பிடித்திருந்த சட்டையை விடாமல் கீழே இறக்கியவள் அந்தப் பெண்ணும் அவளுடைய தோழியும் கீழே இறங்கியதும், ப்ஸ்ஸின் பின்னேத் தட்டிய கனி
“நீங்க வண்டிய எடுங்க..” என்றாள்..
ஓரமாய் அவனை இழுத்துச் செல்லும் போதே கூட்டம் ஓரளவிற்குக் கூடியிருக்க, தனது வண்டியின் அருகே கொண்டு சென்றவள்..
அங்கிருந்த கூட்டத்தினரையும் அவர்களின் கையில் வீடியோ பதிவாகிக் கொண்டிருந்த மொபைலையும் கண்டு எரிச்சலுற்றவள், “நாராயணன் இவனை வண்டில ஏத்துங்க..”
“இங்க என்ன படமா ஓடுது…இப்போ எதுக்கு எல்லாம் வீடியோ எடுத்துட்டு இருக்கீங்க..கலஞ்சு போங்க…ம்..” கூட்டத்தினரைப் பார்த்துச் சத்தமிட்டவள்…
“என்னப் பிரச்சனைனு ஒருத்தன் கேட்கல…வீடியோ மட்டும் எடுத்து தள்ளுறீங்க…போங்க…” என்றவள் இப்போது அந்தப் பெண் நின்றிருந்த திசையில் கை நீட்டி..
“ஏமா இங்க வா நீ..”
“மேம்..”
“படிக்கிறியா இல்ல வேலைக்குப் போறீயா..?”
“XXX காலேஜ்ல டாக்டருக்கு படிக்கிறேன் மேம்..”
“ம்ம்…ஏமா படிக்குற பொண்ணு ஒழுங்கா ட்ரெஸ் பண்ண மாட்டியா..”
“இப்போ என்ன மேடம் சொல்ல வரீங்க..நான் ஒழுங்கா ட்ரெஸ் பண்ணிருந்தா அவன் என்னைத் தொட்டிருக்க மாட்டாம்னா..?”
“அவனை யோக்கியம்னு நான் சொல்லல மா..தப்பு உன்மேலையும் இருக்குன்னு தான் சொல்றேன்..”
“ஐஞ்சு வயசு பொண்ணுங்களைக் கூட விட்டு வைக்காம கற்பழிக்குற நாட்டுல இருந்துட்டு எங்க ட்ரைஸை குறைச் சொல்லுறீங்க மேம்…குறை எங்க ட்ரெஸ்ல இல்ல மேம் நீங்க பார்க்கும் பார்வையில தான் இருக்கு…” சிறுபிள்ளையாய் தன் முன்னே எகிறும் நவீன யுவதியை கைநீட்டித் தடுத்தவள்..
“ஏமா..ட்ரெஸ் எதுக்காக பண்ணுறோம்…? நீங்க இப்படி ட்ரெஸ் பண்றதால தான் அவன் உன்னைத் தொட்டாம்னு நான் சொன்னேனா? இல்லையே… உன்னைப் பார்க்கும் போது கண்ணியமா தெரிய வேண்டாமா..சொல்லுங்க…கொஞ்சம் வல்கரா ட்ரெஸ் பண்ணுறத குறைச்சிக்கோங்க…உன்னைத் தொட்டோ இல்ல கற்பழிச்சலோ தான் தப்புன்னு இல்ல தப்பான பார்வை பார்த்தலே அது தப்பு தான்..அதுக்கு எதுக்கு மா நீ வழிவிடுற..”
“நீங்க கம்ப்ளைன்ட் எதுவும் பண்ண வேணாம்..படிக்குற பசங்க…நீங்க போங்க நான் பார்த்துக்கிறேன்..” என்றவள் தனது காருக்குள் செல்ல முற்பட,
“மேம்…அவனோட செல்லுல என்னைத் தப்பா போட்டோ எடுத்துட்டான்..”
“நாராயணன் அந்த பையன்கிட்ட அந்தப் போன வாங்குங்க..” கட்டளையாய் சொன்னவள் அப்பெண்களிடம் திரும்பி,
“இதுக்கு தான் கொஞ்சம் டீசென்ட்டா ட்ரெஸ் பண்ண சொல்லுறது..” என்றவள் அவர்களது முன்னே மொபைலில் உள்ள மெம்மரி கார்டை தனது பாக்கெட்டுள் போட்டு மொபைலையும் தனது கையில் வைத்துக் கொண்டு
“9543****** என் மொபைல் நம்பர் ஈவ்னிங் க்ளாஸ் முடிச்சிட்டு கால் பண்ணிட்டு வாங்க..” என்றவள் இப்போது காரில் ஏறி அமர்ந்து தனது கண்களை ஒரு வட்டமடித்து கூட்டத்தினரைப் பார்க்க, அவளது விழிவட்டத்துள் வந்து நின்றான் சந்த்ரு..
இன்பங்கள் தொடரும்..