Un Kannil Inbangal Kanbein – 5

Un Kannil Inbangal Kanbein – 5

5

சரவணபவன் ஹோட்டலில் தன் முன்னே மிளகு பால் ஆர்டர் செய்து அமர்ந்திருக்கும் சந்த்ருவை கேள்வியுடன் நோட்டம்விட்டவளுக்கு சில தினங்களாய் தினமும் இவனைப் பார்க்கிறோமோ எனத் தோன்றியது..

தன்மீது சந்தேகப் பார்வையை வீசும் கனியின் முன் கூலர்ஸ் அணிந்து அமர்ந்திருவனின் இதழ்கள் இறுகி கண்கள் சிரித்தது..

அவளது ஆராய்ச்சி பார்வையை சிறிது நேரம் தொடரவிட்டவன் அவளது மனதைப் படித்தவாறே, மிளகு பாலை சிப் செய்து குடித்து கொண்டிருக்க, அவளோ தனக்கு முன்னே வைத்திருந்த காபி ஆறி அளந்து போனப் பின்பும், ஏதோ யோசித்தவளாய் அமர்ந்திருந்தாள்..

பதுங்கி நின்று வேட்டையாடுவதைக் காட்டிலும் மானின் முன் வீரமாய் நின்று அதை விரட்டி வெலவெலக்க வைத்து வேட்டையாடும் புலிக்கு உண்மையில் தைரியமும் ஆவேசமும் மிக அதிகமே..

“இவன் கிட்ட பேசிப் பார்ப்போம்..” ஒரு முடிவெடுத்தவள் அவனை நோக்கி தொண்டையை செரும,
அவள் தன்னிடம் பேச விழைவதை உணர்ந்தவன் போல, “எக்ஸ்க்யூஸ் மீ..பில் ப்ளீஸ்..” என்றிருந்தான் சத்தமாய்..

அவன் சத்தமிட்டதும் பேரர் அருகே வந்துவிட, தனது பேச்சு தடைப்பட்டதை உணர்ந்தவள் அடுத்து பேச முயற்சிக்கும் முன்,

“பேரர்..மேடத்தோட காபி ஆறி போச்சு..நல்ல சூடா ஏலம் இஞ்சி தட்டிப்போட்டு நச்சுன்னு ஒரு டீ கொண்டு வந்து கொடுங்க..” என்றவன் ஒரு நூறு ரூபாய் தாளை அவன் கைகளில் திணிக்க,

“ஏய் நில்லு..” கோபமாய் கனி எழும் முன்..

“எனக்கு சாப்பிடாம எந்திரிச்சா பிடிக்காது…” அவளது காதின் ஓரத்தில் கதைத்தவன், அவள் திரும்பி முறைக்கும் முன் வெளியேறியிருந்தான்..

கோபத்தில் மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்க, தன்முன்னே டீயை வைத்த பேரரை முறைத்தவள், ஆடை போர்த்தியிருந்த காபியை வாயில் சரித்து,

“எனக்கு ஓசில வந்த எதுவும் பிடிக்காது..” கர்ஜனையாய் சொன்னவள் அவனது கைகளில் நூறு ரூபாய் தாளை கொடுத்தாள்..

கனியின் கோபத்தில் வாயை மூடிக் கொண்டு பேரர் நகர்ந்துவிட்டான்.

“நாராயணா..” எனக் கனி அழைக்க,

பாதி ரவா கிச்சடியை உண்டு கொண்டிருந்தவன் எழுந்து நின்றதும், “சாப்பிட்டு வாங்க, நான் காருல வெயிட் பண்றேன்..” என்றவளுக்குச் சிறிது நேரத்திற்கு முன் சந்த்ரு சொல்லிய
‘எனக்கு சாப்பிடாம எந்திரிச்சா பிடிக்காது…’ என்ற வரிகளே ரிங்காரமிட்டது..

வெள்ளை நிற சட்டையின் கைபகுதியை மடித்துவிட்டுக் கொண்டே படியிறங்கியவள், ஓரமாய் நிறுத்தியிருந்த தனது வண்டிக்கு அருகே சென்று சட்டையின் மத்தியில் மாட்டியிருந்த கூலர்ஸை கண்களில் மாட்டிக் கொள்ள, சிவப்பு நிற ஹோண்டா டிசையர் வண்டியில் இவளை உறுத்து விழித்துக் கடந்து சென்றான் சந்த்ரு..

கீழே குனிந்து நின்றவளுக்கு அவனது பார்வையை காணக் கிடைக்காமல் போக, இப்போது அவளது மண்டையில் அந்தக் கொலை சம்பவமே சுற்றிக் கொண்டிருந்தது..

அடித்துபிடித்து ஓடிவந்த நாராயணன் வண்டியைக் கிளப்ப இப்போது சிசிடிவி ஃபுடேஜை மறுபடியும் மறுபடியும் ஓடவிட்டுப் பார்த்தாள் கனி…

பேருந்து நிலையத்தின் ஒரு பக்க ஃபுட் ஏஜ் மட்டுமே அதில் இருக்க, வெளியே இருந்த கான்ஸ்டேபிளை சத்தமாய் அழைத்தவள்,
“இந்த பஸ் ஸ்டான்ட் சுத்தி எங்கலாம் சிசிடிவி இருக்கோ அதெல்லாம் வாங்குங்க…இந்த ஆள் எப்படி அங்க வந்தாம்னு தெரியனும்..” என்றவளின் விழிகள் கட்டம் போட்ட சட்டை அணிந்து துப்பாக்கியுடன் ஓடும் கொலைகாரனின் மீதே நிலைத்திருந்தது..

கேஸின் ஃபைலை இப்போது மறுபடியும் சரிபார்த்தவள் இன்ஸ்பெக்ட்டரை அழைக்க, “சார், இந்தப் பொண்ணோட வீட்டுல அப்புறம் காலேஜ்ல எல்லாம் விசாரிங்க..” என்றவள் நாற்காலியில் கண்கள் மூடி அமர்ந்தாள்…

ஹோட்டலில் இருந்து தனது வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தவனின் இதழில் சிரிப்பு குடி கொண்டிருக்க, பக்கத்தில் இருந்த ஆனந்திற்கு அவனது சிரிப்பின் காரணம் புரியவில்லை…

“ஆனந்த்..”

“சார்…”

“அந்த ஈஸ்வர நுங்கம்பாக்கம் கொண்டு வரச் சொன்னேனே..?”

“கொண்டு வந்தாச்சு சார்..அந்த அப்பார்ட்மென்ட்ல..”

“அப்பார்ட்மென்ட்…சரி..அவனை இன்னைக்கு மிட் நைட் ஒரு டுவல் தேர்ட்டிக்கு நுங்கம்பாக்கத்துல நான் சொல்ற இடத்துக்கு கொண்டு வாங்க..” என்றவன் சாலை ஓரத்தில் ஆனந்தை இறக்கிவிட்டான்..

வழியில் இறக்கவிட்டு கட்டளையுடன் நகரும் சந்த்ருவின் காரை வெறித்தவனுக்கு நேற்று ஈசிஆரில் நடந்த சம்பவம் நினைவுக்கு வந்தது..

கையில் ஒரு பார்சலுடன் ஆனந்த் அறைக்குத் திரும்பும் போது ஈஸ்வரும் சந்த்ருவும் சுவாரஸ்மாய் பேசிக் கொண்டிருந்தனர்..

இருவரையும் திகைப்புடன் பார்த்தவன், பார்சலை சந்த்ருவின் முன் வைக்க,

“யார் தல இவரு..?” என்றான் ஆனந்தை சுட்டிக் காட்டி சந்த்ருவிடம்..

“இது நம்ம ஆளு தான் பா..” என்ற சந்த்ருவின் பேச்சில் அவனுக்குப் பின்னே சென்று நின்று கொள்ள,

“இந்தா டேனி எடுத்து சாப்பிடு..” என்றான் தனது எண்ணில் இருந்து பின்னால் நின்றவனுக்கு ஒரு மெசேஜ் அனுப்பிக் கொண்டே..

சந்த்ரு சைகையால் மொபைலை சுட்டிக் காட்ட, அவனது விழியசைவைப் புரிந்து கொண்டவன், ஈஸ்வர் அறியாமல் மொபைலில் வந்திருந்த வேலையை செய்து முடித்தான்…

முன்னே இருந்த ஈஸ்வர் உண்டு முடித்து கைகழுவி வந்ததும், “டேனி..என்ன ஈஸ்வர்னு பேர் மாத்திட்டியாமே..? அப்படியா..?” எனக் கேட்க,

“தல, நம்ம தொழிலுல இதெல்லாம் சாதாரணம் உண்மையான பேரை தான் யார்கிட்டயும் சொல்ல கூடாதே..” என்றவன் அன்னார்ந்து தண்ணீர் அருந்தினான்..

மற்றவன் தண்ணீர் அருந்தி முடித்ததும், “போலீஸ்ல ரொம்ப அடியோ..?” எனக் கேட்க

“தல..அந்த குட்டி அது பேரு என்ன கனிஷ்கா வா எம்மா என்ன பார்வை அது குலநடுங்கி போச்சு சார்…” என்றவனின் குரலில் சிரித்தவன்..

“பயத்துல உண்மையான பெயரைச் சொல்லிட்டியோ..?”

“பயத்துல தான் சார் ஈஸ்வர்னு சொன்னேன்..” என்றான் இகழ்ந்த சிரிப்பில்

“அப்போ உன் உண்மையான பெயர் என்ன உசேம்..?” என்றவனின் கேள்வியில் புரையேறி அமர்ந்திருக்க,

“என்ன ஆச்சு..? தண்ணீய குடி தண்ணீய குடி..”

“தல…” என்றவன் அதிர்வாய் அழைக்க

“ம்ம்ம்…சொல்லு சரக்கெங்க..?” என்றான் தனது கூலர்ஸை அளந்து கொண்டே..

“உங்களுக்கு தேவையான சரக்கு உங்ககிட்ட கொடுத்தாச்சு..மத்தது உங்களுக்கு எதுக்கு..?” என்றவனின் கேள்வியை புறந்தள்ளியவன்,

“மிச்ச சரக்கு இன்னும் யார் யார் கையில இருக்கு..?” கால் மேல் கால் போட்டு கர்ஜிக்கும் சந்த்ருவை கோபமாய் பார்த்தவன்,

“என்ன தள்ளிட்டு வந்து மிரட்டுறியா..? நான் மட்டும் இப்போ உனக்கெதிரா விரல் அசைச்சா போதும்..எப்படி..விரல் அசைச்சா..உன்னப் பத்தி கம்ப்ளைன்ட் நீ சரக்கு வாங்குன போட்டோவோட போலீஸுக்கு பறக்கும் …” என்றவனின் மிரட்டலில் வாய்விட்டுச் சிரித்த சந்த்ரு..

“விரல் அசைச்சா தானே வரும்..” என்றான் அடக்கமான குரலில்..

“ஏன் பண்ண மாட்டேன்னு நினைக்கிறியா..?”

“நான் உன்னை இன்னும் உயிரோட விட்டு வைப்பேன்னு நினைக்கிறீயா ஜாகீர் உசேன்…”

அழுத்தமாய் அவனது முகத்தைப் பார்த்து கத்தியவன், கைத்தட்டியதும் ஆனந்த் கதவடைத்து வேளியேறினான்..

கதவை அடைத்து அதன் அருகே நின்றவனுக்கு துல்லியமாக அந்த ஜாகீரின் அலறல் சத்தம் மட்டுமே கேட்டது..

ஒரு மணி நேரம் கழித்து வெளியே வந்தவன், “ஆனந்த் அவனுக்கெல்லாமே உள்காயம் தான்..அதுவும் ரெண்டு நாளுல ஆறிடும்..புரிஞ்சுதா…ரெண்டு நாளும் இவன் இங்க ராஜாவா இருக்கனும்..” என்று சென்றவன் தான்..

தனக்காக காத்திருக்கும் காரின் ஹார ஓசையில் நிகழ்வுக்கு வந்தவன் காரில் ஏறி ஈசிஆரை நோக்கி விரைந்தான்..

அங்கே காரை வீட்டின் வாயிலில் விட்டவனுக்குக் கனியுடன் விளையாட்டைத் தொடங்கி வைக்க மனம் ஆசை கொண்டதும்,
தனது உள்கோட்டில் இருந்த நோக்கியா பேஸிக் மாடலிலிருந்து,

“நீ தேடும் பொருள் கையில் இருந்தும்
தேடிக் கொண்டே இரு..”

என்ற குறுஞ்செய்தியை கனியின் பர்செனல் எண்ணுக்கு அனுப்பி வைத்து தனது விளையாட்டுக்கு பிள்ளையார் சுழி போட்டு வைத்தான் சந்த்ரு…

புலி கொஞ்சம் பூனையிடம் விளையாடிப் பார்க்க ஆசை கொண்டதோ..?

தனக்கு வந்த குறுஞ்செய்தியின் சத்தத்தை அசட்டையாய் தவிர்த்தவள் இப்போது விசாரணைக்கு நாயாய் பேயாய் அலைந்து கொண்டிருக்க,

எந்தப் பக்கம் திரும்பினாலும் கொலையாளி யாரென கண்டுபிடிக்க முடியவில்லை..

ப்ரெஸின் வாயை அடைக்க, சிசிடிவி ஃபுட் ஏஜில் இருந்த கொலையாளியின் புகைப்படத்தை வெளியிட, இப்போது எங்குத் திரும்பினாலும் இந்தக் கொலையைப் பற்றிய பேச்சாக மட்டுமே இருந்தது..

காதல் விவகாரத்தில் தொடங்கி பல கோணங்களில் விசாரித்து ஒரு துப்பும் துலங்கவில்லை..

நள்ளிரவில் நுங்கம்பாக்கத்தில் கனி இன்று ரவுன்ட்ஸ் வரப்போகும் சாலையில் முன்கூட்டியே ஈஸ்வருடன் வரப் பணித்த சந்த்ரு..தனது மற்றொரு வண்டியான டாட்டா இன்டிக்கோவில் காத்திருந்தான்..

அவன் வந்த சில மணி நேரங்களில் ஆன்ந்த் வந்துவிட, ஈஸ்வர் இருந்த காருக்குள் நுழைந்தவன், கை வாய் கட்டப்பட்டு இருக்கும் ஈஸ்வரின் தலைமுடியைக் கொத்தாய் பிடித்து அடித்தான்…

மதுவின் மயக்கத்தில் இருந்த ஈஸ்வருக்கு சந்த்ரு அடிப்பது தெரிந்தாலும் அவனை எதிர்க்கும் வலு சுத்தமாய் இல்லை..

இறுதியாய் தனது தொண்டையை செருமி, “இப்போ சொல்லு சரக்கெங்க இருக்கு..?” என்றான் அவனது விழிகளை ஊடுருவி..

“சத்தியமா எனக்குத் தெரியாது..” உளறலாய் மற்றவன் சொன்னதும்,

“அப்போ உன் முதலாளி யாருன்னு சொல்லு அவன்கிட்ட சரக்க வாங்கிட்டு அவனையும் உன்கூடவே அனுப்பி வைக்கிறேன்..” சந்த்ரு நக்கலாய் கேள்வி கேட்டதற்கு அங்கே ஈஸ்வர் அளித்த பதிலில் இருவருமே ஒரு நிமிடம் ஸ்தம்பித்து போயினர்..

“ஆனந்த்..” கோபமாய் சந்த்ரு அழைத்ததும் அவனது கையில் ஒரு கையுறையைக் கொடுக்க,

கையுறை மாட்டி முடித்த சந்த்ருவிடம் இப்போது ஒரு பொட்டலத்தை ஆனந்த் கொடுத்தான்..

அதில் இருந்த போதை வஸ்த்துவான ப்ரவும் சுகரை மொத்தமாய் தனது கைகளில் கொட்டியவன்..

“ஜாகீர்..உனக்கு மொத்தமாய் நான் கொடுத்த டைம் இதோட முடிஞ்சு போச்சு…இப்பவும் கடைசியா கேட்குறேன்..சொல்லு..சரக்கெங்க..?” என்றான் ஆழ்ந்த குரலில்..

போதை கொஞ்சம் தெளிந்த ஜாகீர், “எனக்குத் தெரியாது..” என்பதையே சொல்ல,

“இனி நீ இருந்து எனக்கு நோ யூஸ்…குட் பை மை பாய்..” பல்லைக் கடித்து வெறியுடன் சொன்னவன்..
ஆனந்திடம் செய்கையில் ஈஸ்வரின் வாய்க் கட்டை அவிழ்த்துவிடப் பணித்தான்..

கட்டு அவிழ்க்கப்பட்டதும் அதை மொத்தமாய் அவனது வாயில் அடைக்க,

ஒரு துளி எடுத்தாலே பல நேரம் இருக்கும் போதை, ஒரு கையளவு கொடுத்ததில் மூளை நரம்பு செயழிலக்க துவங்கியதும் நடுவீதியில் கனி வரும் சமயம் பார்த்து இறக்கிவிட்டவன் இப்போது வேகமாய் தனது காருக்கு மாறி ஆனந்தை கிளம்பச் சொன்னான்..

ஆனந்த அந்தத் தெருவை புயலாய் கடந்து, மெயின் ரோட்டில் எந்த அவசரமும் இல்லாமல் மெதுவாய் வண்டியைச் செலுத்தினான்..

காருக்குள் அமர்ந்த சந்த்ரு தனது க்ளவுஸை கழற்றி பாலீத்தின் பைகளுக்குள் திணித்து, தனது உடையை கர்சீப் கொண்டு தட்டி சரிசெய்து கொண்டவனின் பார்வை ரிவ்யூ மிரரில் தெரியும் கனியைக் கண்டு நக்கலாய் சிரித்தது..

ஆட்டம் தொடரும்…

error: Content is protected !!