Un manaiviyaaga naan full novel

கிருஷ்ணாவிற்கு பெண் பார்க்க குடும்பத்துடன் கன்னியாகுமரி வந்திருந்த நாளது. பொன்னிற மாலைபொழுது கன்னியாகுமரியின் கடற்கரையில்..

இரவு முழுவதும் தன்னுடன் நித்திரைக் கொண்டு பகலில் உலகிற்கு வெளிச்சம் தரும் பணிக்குச் சென்று வீடு திரும்பும் ஆதவனின் வருகைக்கு காத்துக்கொண்டிருக்கும் குமரி கடல் தேவி. தனக்காய் இத்தனை நேரம் காத்திருந்த கடல் தேவியினை முத்தமிட அருகில் நெருங்கிக் கொண்டிருக்கும் ஆதவன். இவர்களது காதல் காட்சியினை பார்த்துக்கொண்டிருக்கும் வானம் வெட்கத்தில் சிவந்துக் கொண்டிருந்தது.

ஆம் அது சூரியன் அஸ்தமனமாகும் நேரம்..!

மறுநாள் காலை தான் பெண் வீட்டிற்கு போகவேண்டும் என்பதால் இன்றைய மாலையில் இளைப்பாற கன்னியாகுமரி கடற்கரைக்கு தோழர்களுடன் வந்து சூரிய அஸ்தமனம் பார்க்க காத்துக் கொண்டிருந்தான் கிருஷ்ணா.

பார்க்கும் ஒவ்வொரு விஷயத்தையும் மிகுந்த பிரியத்துடன் ரசித்துப் பார்க்கும் கலாரசிகன்..!

தோழர்கள் அவனை செல்லமாக ரசிக கர்த்தா என்று அழைப்பதும் உண்டு. வாழ்வின் சிறு சிறு வனப்புகளையும் ரசிக்க வல்லவன். புதுமை சிந்தனைக் கொண்டவன். வாழ்க்கை பக்கங்கள் ஒவ்வொன்றையும் வித்தியாசமான கோணத்தில் காண்பவன். விஷயத்தின் கூறுகளைக் கண்டு அணு அணுவாய் ரசிப்பவன்.

பூக்களை ரசிப்பதைவிட மலர்ந்த பூ மொட்டாய் இருக்கையில் தாய் கோழி போல அரவணைத்து பாதுகாத்த புல்லிவட்டத்தை ரசிப்பவன்.

பெளர்ணமி நிலவின் பிரகாசத்தை கண்டு மகிழாது அதனை சுற்றி வட்ட மேனி கொண்ட வளையமாய் நிலவின் அழகினை மெருகேற்றிக் காட்டும் நிலவொளியின் பட்டையை ரசிப்பவன். இலைகளில் வீற்றிருக்கும் நீர்த்துளிகளை ரசிக்காது அத்துளிகளில் ஊடுருவி வரும் இலை நரம்பின் அழகை வியப்பவன்.

இவ்வாறு தனக்கே உரித்தான தனித்தன்மை பல கொண்டவன். தன் பெயருக்குரிய அர்த்தம் புலப்பட இளம் ஆடவனின் குறும்பிற்கும் அவனிடம் பஞ்சம் இருக்காது.

அறிமுக படுத்தின பில்ட்அப் -லயே கண்டுபிடிச்சிருப்பீங்க.. ஆமாங்க இவருதான் நம்ம கதையோட ஹீரோ.

தமிழ் மீது கொண்டுள்ள பற்றால் புதிது புதிதாக தமிழ் புத்தகங்கள் வாங்கி அலமாரி முழுவதும் அடுக்கி வைத்திருப்பான் கிருஷ்ணா. புத்தகம் வாங்கியது படிப்பதற்கல்ல. நம்ம ஹீரோ தான் விசித்திரமானவராச்சே..!

ஒவ்வொரு புத்தகத்திலும் வெவ்வேறு கோலங்களாய் அச்சடிக்கப்பட்டிருக்கும் தமிழ் எழுத்துக்களை ரசிப்பதற்கே அத்தனை புத்தகங்களையும் வாங்கி வைத்துள்ளான்.

புத்தகங்களே அவனது முதல் காதல்..!

வாங்கி வைத்துள்ள புத்தகங்கள் எண்ணற்றவை என்பதால் தனக்கு எண்ணற்ற காதலிகள் என்று குறும்பாகக் கூறிக்கொள்வான். அவனது அலமாரியில் அடுக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு காதலிக்கும் ஒவ்வொரு கையெழுத்து. அந்த அழகிய கையெழுத்துக்களை ரசிக்காமல் ஒரு நாளும் அவனுக்கு முடிந்ததில்லை.

அன்றைய மாலை பொழுதில் சூரியன் அஸ்தமனமாகும் காட்சியை காண சென்ற கிருஷ்ணாவுக்கு கூடுதல் போனஸ் ஒன்று காத்திருந்தது.

கண்ணுக்கு விருந்தாக ஆதவனது அழகை ரசித்துக்கொண்டிருக்கையில் சட்டென ஒரு காகிதம் அவன் முகத்தில் பதிந்து காட்சியை மறைத்தது.

‘நமது காதலியின் தங்கை (காகிதம்) இவளுக்கு நம் மீது என்ன ஒரு காதல்..! சூரியனை நான் ரசிப்பது பொறுக்காமல் என்னை முகத்தோடு அணைத்து கட்டித்தழுவிக்கொண்டாளே..?! அது சரி பொசசிவ்னஸ் என்பது காதலின் ஆணிவேரல்லவா..?’என்று நகைப்புடன் எண்ணியவாறு காகிதத்தை பிடித்து இழுத்து, தன் முகத்திலிருந்து பிரித்தான்.

காகிதம் அடித்த அடியில் இறுக மூடிய தனது கண்களை திறந்து பார்த்தான். எங்கிருந்து வந்தது என்ற ஐயத்தில் வலப்பக்கம் திரும்பினான். பாதையில் தடமில்லை. பின்பு இடப்பக்கம் திரும்பினான்.

வரி வரியாய் வரிசயித்து நிற்கும் அவன் முடியினை தென்றல் காற்று இதமாக கோதிவிட்டுச் சென்றது. அதன் சுகத்தை ஒரு விநாடி கண்களை மூடி அனுபவித்துக் கொண்டு மெல்ல இமை திறந்துக்கொண்டிருந்தான்.

அவன் விழிவாசல் முழுமையும் திறக்கும் முன்பே கச்சிதமான கற்சிலையாய் விழித்திரையில் விழுந்தெழுந்த பிம்பத்தை ரசித்தவண்ணம் இமையின் கதவுகளை திறந்துக்கொண்டிருந்தான்.

கடற்கரையில் பறக்கவிடப்பட்ட வர்ண பலூன்கள் வழிவிட, இடைமறித்த தென்றலை தன் மெல்லிய மேனியால் ஊடுருவி, காதோரம் குழலாடும் கார்மேக கூந்தல் விரிப்பினை ஒதுக்கி காதில் அணிந்துள்ள ஜிமிக்கியின் நடனத்தை பார்வையாளர்களுக்கு விருந்தாக்கி, வில்போன்று வளைந்த புருவம் வானைத் தொட, மாலை நேர வண்டுகளின் ரீங்காரத்திற்கு போட்டியாக தன் பாத கொலுசின் ஓசையை பதிய வைத்து ஓடி வந்தாள் ஒரு பெண் தேவதை.

அவனோ ஒன்றும் பேசாமல் மையிட்ட அவள் வேல்விழிகளை நோக்கிக் கொண்டிருந்தான்.

அவளோ,

‘அது என்னுடையது’ என்று கண்களால் கதை பேசினாள்.

இவன் பார்வையோ கருமை கோலமிட்ட அவள் கண்களுடனேயே உரையாடிக் கொண்டிருந்தது.

யார் அவள்? நம்ம கதையோட ஹீரோயின்னு மட்டும் நினைச்சிராதிங்க. இது ஹீரோயினுடைய பக்கத்துவீட்டு பொண்ணு மீரா. வயது 8.

பேப்பர பறக்க விட்டுட்டீங்களா பாப்பா?? – நம்ம ஹீரோ கேட்க

“ம்ம்ம்” என்று சற்று அழுதாற்போல தலையை ஆட்டினாள் மீரா.

அதிகம் தாமதிக்காமல் மீராவை பின் தொடர்ந்து ஓடி வந்து கொண்டிருந்தாள் கலை. கலை தான் நம்ம கதையோட ஹீரோயின். கலாரசிகனோட ஜோடி கலையாக தானே இருக்க முடியும். நம்ம ஹீரோ கிருஷ்ணாவோ கொஞ்சம் அல்ல ரொம்பவே குறும்புக்காரன். குழந்தைகள் என்றாலோ கொள்ளை பிரியம்.

காகிதத்தில் என்ன இருக்கிறது என்று பார்த்தான். அழகிய கையெழுத்தில் எழுதப்பட்ட தமிழ் எழுத்துக்கள்! உல்லாசத்தின் உச்சியை அடைந்தான்!

மனதிற்குள்‘அடேய் கிருஷ்ணா இத எப்படியாவது சுட்டுடனுமே’ என்று நினைத்தபடி சிரித்துக்கொண்டே குழந்தையிடம்,

“அண்ணனோட முகத்துல வந்து விழுந்ததால இது அண்ணனுக்கு சொந்தம் சரியா??” என்று கூறியபடியே காகிதத்தை மடித்து தன் சட்டை பையில் வைக்க துவங்கினான்.

மீராவை பின் தொடர்ந்து வேகமாக வந்த கலை, அந்த காகிதத்தின் கால் அவன் சட்டை பையின் தலையை தொடுவதற்கு முன்னே வெடுக்கென பிடுங்கினாள்.

“இதில் உள்ள கையெழுத்து என்னுடையது. அதனால இது எனக்கு தான் சொந்தம்” என்று கூறிவிட்டு மீராவை தூக்கிக்கொண்டு வந்த வேகத்தில் பறந்துவிட்டாள்.

கையெழுத்தில் அவளிடம் சரணடைந்த அவனது தலையெழுத்தை காதல் தீர்மானிக்க, நடந்தேறிய காட்சிக்கு கிருஷ்ணா முகபாவணை செய்வதற்குள்ளாகவே சிறிய தொலைவில் இருந்து ஒரு சத்தம் கேட்டது.

“அடேய் ரசிக கர்த்தா.. அங்க என்னடா வேடிக்கை பாத்துட்டு இருக்க..? சீக்கிரம் ரூம்க்கு வரனுமாம். அப்பா கால் செஞ்சாங்க!” பாக்கெட்டில் கைபேசி அலற தானும் உடன் அலறினான் ரமேஷ்.

முகத்தில் மாற்றம் ஏதும் இன்றி அருகில் சென்றான் கிருஷ்ணா.

“உன் போன் ரூம்லயே வச்சிட்டு வந்துட்டியாமே?” – ரமேஷ் கேட்க,

காகிதம் வந்து சேர மறுத்த தன் சட்டை பையினை தடவிப்பார்த்துவிட்டு

“அட ஆமா.. சரி வாடா போகலாம்” என்று காதல் மயக்கம் தெளியா நகைப்புடன் கூறிய கிருஷ்ணா ரமேஷின் கன்னத்தில் ஒரு இச்சு வைத்தான்.

“அட ச்சய்! என்ன டா ஆச்சு உனக்கு? வேகமா வந்து தொல” என்று கிருஷ்ணாவை தர தரவென வீட்டிற்கு இழுத்துச்சென்றான் ரமேஷ்.

இவை அனைத்தையும் ஓடிய வேகத்தில் ஒழிந்துக்கொண்டு பார்த்திருந்தாள் கலை. தன் கிருஷ்ணனை நீண்ட நேரம் ரசிக்க இயலா ராதையாக அங்கு தவித்திருந்தாள் கலை.

நண்பர்கள் கிருஷ்ணாவை அவசர அவசரமாக இழுத்துச் சென்றதை கண்டவள் தன் வாய்க்குள் ரமேஷை கரித்துக் கொட்டிவிட்டு இடப்பக்கமும் வலப்பக்கமும் வாயை சுழுக்கிக் கொண்டு தானும் கிளம்பிவிட்டாள்.

மீராவை அவள் வீட்டில் விட்டுவிட்டு துள்ளிக் குதித்துக்கொண்டு தன் வீட்டை அடைந்தாள் கலை. உள்ளே நுழையவும் மண்டையில் நங்கென ஒரு கொட்டு விழுந்தது.

“ஸ்ஸ்ஸ்… ஆஆஆ…..” என்று கீழே அமர்ந்தவள் தலையை உயர்த்தி மேலே பார்த்தாள்.

“உன்ன எத்தன தடவ சொல்லிருக்கேன்.இப்படி கொட்டாத கொட்டாதனு” என்று வாசல் கதவின் நிலையை பார்த்துத் திட்டிக் கொண்டிருந்தாள்.

மீண்டும் நங்கென ஒரு கொட்டு, இந்த முறை அம்மாவுடையது.

“ஐய்யோ.. அம்மா.. உன்னையும் தான சொல்லியிருக்கேன்.. இப்படி கொட்டாதனு.. வலிக்குது மா” என்றாள்.

“விடிஞ்சா பொண்ணு பார்க்க வர்றாங்க. இன்னும் என்ன பாரு என் ஆட்டத்த பாருனு குதிச்சிட்டு வர்றே.” என அம்மா கடிந்துக் கொள்ள,

“நாளைக்குத் தானே மா வர்றாங்க.. இன்னைகே எதுக்கு உயிர வாங்குற” என்றாள் கலை.

“ஒரே நாள்ல இமய மலை ஏற முடியாது டி!” என்று சொன்ன அம்மாவிடம் “அப்ப வாம்மா பழனி மலை ஏறுவோம்” என்று தோளில் கைப்போட்டு சிரித்துக் கொண்டே கூறினாள் குறும்புக்காரி கலை.

ஹுக்கும் என சுளித்துக்கொண்ட அம்மா

“வாய்க்கு ஒன்னும் குறைச்சல் இல்லை, நாளைக்காவது இந்த வால எல்லாம் சுருட்டி வச்சிக்க, அப்புறம் பார்க்க வந்தவன் வந்த வேகத்துல துண்ட காணோம், துணிய காணோம்னு ஓட போறான்” என்றாள்.

“கவலபடாத மா.. நீ அப்பாவ ஒவ்வொரு பொருளையும் தேட வைக்கிற மாதிரி எல்லாம் நான் பண்ண மாட்டேன்.. நாளைக்கு காபி கொடுத்த கையோட இந்தாங்க துண்டு இந்தாங்க துணினு கையில எடுத்துக் கொடுத்துருவேன்” வேண்டுமென்றே வம்பை இழுக்க முனைந்தாள் கலை.

‘இவள் வாயை அடக்க முடியலையே இறைவா!’ என்பது போல விழித்த அம்மா பதில் தோட்டா கிளப்பாததால் தானே தொடர்ந்தாள் கலை.

“மாப்பிள்ளைக்கிட்ட அந்த பக்கம் குளியலறை, துண்டோட குளிக்கப் போங்க இல்லைனா……” என்று கலை முடிப்பதற்குள் அவளது வாயாஜாலம் தாங்காமல் வாயை பொத்திவிட்டாள் அம்மா.

“உங்கிட்ட மல்லுக்கட்ட இப்போ எனக்கு ஜீவன் இல்லை தாயே போய் கை கால் கழுவிட்டு வா.. சாப்பாடு எடுத்து வைக்கிறேன்” என்று சமாளித்து அனுப்பி வைத்தார்.

தனக்கும் கப கபவென வயிறு பசித்ததால் அம்மா போட்ட அக்கிரிமெண்டில் கையெழுத்திட்டாள் கலை. அதாங்க..! இரவு உணவருந்தத் தொடங்கியாச்சு.

கடற்கரையில் இருந்து கிளம்பிய நமது ரசிக கர்த்தா தனது நண்பர்களான தீபக் மற்றும் ரமேஷுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்தான். பயணம் செய்யும் பாதையில் அமைதியாக எதையோ யோசித்துக் கொண்டே வந்த நமது ரசிக கர்த்தாவிடம் தீபக் கேட்டான்,

“என்னடா.. ரொம்ப அமைதியா வர்ற? நாளைக்கு பொண்ணு பார்க்க போற டென்ஷனா?”

“அப்படியெல்லாம் இல்லடா, இன்னைக்கு ஒரு அழகான தமிழச்சிய மிஸ் பண்ணிட்டேன் டா!” என்றான்.

“என்ன தமிழச்சியா?” அதிர்ந்தான் தீபக்.

“அதான்டா பீச்ல வச்சி ஒரு பேப்பர் முகத்துல விழுந்துதே!

பேப்பர்ல தமிழ்னு எழுதி இருந்திருக்கும் சரிதானடா?” ரமேஷ் வினவினான்.

கிருஷ்ணாவோ முழுமாங்காயை முழுசாக முழுங்கியது போல முழித்துக்கொண்டே “ஆமாம்” என்றான். தீபக்குக்கோ ஏதோ சரியில்லை என்று மட்டும் தெளிவாய் தெரிந்தது இருந்தும்,

“அட யாருடா இவன்? போட்டோ கூட பார்க்காம பொண்ண பாக்குறதுக்கு நாளைக்கு போறோம்னு சந்தோஷமா இருப்பானா அத விட்டுட்டு பேப்பர மிஸ் பண்ணிட்டானாம்!”

“ஹாஹா” அனைவரும் சிரிக்க, சில நிமிடங்களில் தங்கள் ரூம்க்கு வந்து சேர்ந்தனர்.

கிருஷ்ணாவின் அம்மா,

“வாடா எப்பவும் ஃபோன மறந்திடு அவசரத்துக்கு எப்படி உன்ன கூப்பிடுறது? சரி வா இன்னைக்காவது சீக்கிரம் சாப்பிட்டு தூங்கு.. நல்லா தூங்கினாதான் நாளைக்கு முகம் கொஞ்சமாவது தெளிச்சியா இருக்கும். போய் கை கால் கழுவிட்டு வா. சாப்பாடு எடுத்து வைக்கிறேன். பசங்களா நீங்களும் வாங்க” என்று கூறவும் “சரிங்கம்மா” என அனைவரும் கோரஸ் பாடினர். சாப்பாடு தொடங்கியதும் அப்பாவும் பேச்சை தொடங்கினார்.

“என்னடா சூரியனை பார்க்க போயிருந்தியே அத பத்தி ஏதும் செய்தி உண்டா?” என்றார்.

“அய்யோ அப்பா அத பத்தி மட்டும் கேட்டுடாதீங்க” ரமேஷ் அலறிட

“ஏன் டா? அப்படி என்ன நடந்தது?” என கேட்ட அப்பாவிடம்

“நம்ம பையனுக்கு காதல் வந்துருச்சி” என்று நகைத்துக்கொண்டே கூறினான் தீபக்.

“நாளைக்கு பொண்ண பாக்க போறோம். அத ஃபீல் பண்ணுறதுல தப்பில்லையே!” இந்த குரல் ரமேஷுடையது.

“ஆனா புதுசா ஒரு தமிழச்சிய ஃபீல் பண்ணறது தப்புதானே?”

(கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி தன் குழப்பத்தை தீர்த்துக்கொள்ள தீவிரமாய் ஈடுபட்டான் தீபக்.)

“என்ன புதுசா ஒரு தமிழச்சியா?” இடியை கடன்வாங்கி கத்தினாள் அம்மா.

கிருஷ்ணாவோ வாயில் வைத்திருந்த இட்லி துண்டு கண் வழியே எட்டிப்பார்ப்பது போல கொட்ட கொட்ட விழித்தான்.

அம்மாவே தொடர்ந்தாள்,

“என்ன டா இது வந்த இடத்துல? நாளைக்கு பொண்ண பார்த்து பூ வைக்க போறோம் நியாபகம் இருக்கா இல்லையா?”

இட்லியை விழுங்கவா வேண்டாமா என்ற யோசனையில் இருந்தவன் சற்று கருவிழியினை அங்கும் இங்கும் உருட்டிப் பார்த்துவிட்டு ஒரே விழுங்காக விழுங்கிவிட்டான்.

“என்னடா முழிக்கிற?”

அம்மாவின் மிரட்டலுக்கு மிகவும் சாதுவாக

“பொண்ண பிடிச்சிருக்குனு சொன்னாதானேம்மா பூ வைக்கனும்” என்று கூறிக்கொண்டே எழுந்து இட்லி உண்ட கைகளைக் கழுவினான்.

“என்ன டா சொல்லுற? போய் பார்த்துட்டு பிடிக்கலைனு சொன்னா ஒரு பொண்ணோட மனசு எவ்வளவு சங்கடப்படும்?” என்று மிரட்டலைக் கூட்டியவாறு கிருஷ்ணாவை பார்வையால் உருக்கினாள் அம்மா.

சிரித்துக்கொண்டே அம்மாவின் முந்தானையில் தன் கைகளைத் துடைத்தவன் “ஆமா” என்றான். முந்தானையை வெடுக்கென பிடுங்கி உதறி இடுப்பில் சொருகிக்கொண்ட அம்மா

“பின்ன எதுக்குடா போட்டோ பார்க்காம பந்தா பண்ணிகிட்டு இருந்த..? நீங்க பார்த்தா போதும், உங்களுக்கு பிடிச்சா போதும்னு டயலாக் வேற.. ஏங்க.. என்னனு கேளுங்க”என்று பஞ்சாயத்தை தன் கணவரிடம் ஒப்படைத்துவிட்டு பாத்திரத்தை எடுத்து வைக்கும் பணியில் ஈடுபட்டாள் கிருஷ்ணாவின் அம்மா.

“ஆமா என்ன டா நினைச்சிட்டு இருக்க? போட்டோவ பார்த்தப்பவாது இந்த பொண்ண பிடிக்கலைனு சொல்லியிருந்தா இவ்வளவு தூரம் வந்திருக்க வேணாம்ல” என்று அப்பா கூறிய மறுகனம்

“என்னது போட்டோவ பார்த்துட்டானா?” அதிர்ச்சியில் பாத்திரத்தை கீழே போட்டுவிட்டாள் அம்மா.

“அந்த பாத்திரம் உன் தலைக்கு குறி வைக்க வேண்டியது டா ஜஸ்ட் மிஸ்” கிருஷ்ணாவின் காதில் ரமேஷ் முணுமுணுத்தான். அவன் வார்த்தைக்கு காதுகள் வழி கொடுத்தாலும் கிருஷ்ணாவின் கண்கள் பயணம் செய்ததென்னவோ தன் அப்பாவை நோக்கி தான்.

விரும்பி மென்றுக் கொண்டிருக்கும் சோற்றில் நொறுங்க கடிக்கப்பட்ட கல்லென ஒற்றை கடவாயினையும் ஒற்றை கண்ணையும் இறுக மூடிக்கொண்டு ’மன்னிச்சிருடா மகனே’ என்று சமிக்ஞை செய்தார் அப்பா.

கிருஷ்ணாவோ உள்ளே தேக்கி வைத்த பெரும் மூச்சை சட்டென வெளிவிட்டு தலையில் கை வைத்து குனிந்தபடி ‘உளறிட்டியே தகப்பா’ என்று எண்ணிக்கொண்டான். பின்பு, இனியும் மறைக்க முடியாது என்று தெரிந்துக்கொண்டு சிறிது நகைத்தான்.

“என்னடா சிரிப்பு? பதில் சொல்லுடா” அம்மா அவசரித்தாள்.

“அதான் நேர்லயே பார்த்தாச்சே பின்ன போட்டோ பார்த்தால் என்ன பார்க்கலைனா என்ன மா?” என்று கிருஷ்ணா அடுத்த குண்டை போட

“என்ன நேர்ல பார்த்துட்டியா? இது எப்போ டா?!”அடுத்த அதிர்ச்சி நண்பர்களுக்கு.

“எங்க கூடதானடா இருக்க நாள் முழுக்க! இதுல எப்போ நீ பொண்ண நேர்ல பார்த்த?” ரமேஷ் கேட்டான்.

“இன்னைக்கு தான் பீச்ல” சாதாரணமாக கூறினான் கிருஷ்ணா.

இதை கேட்டதும் குடித்துக்கொண்டிருந்த தண்ணீர் சிரசலடிக்க பிளீர்ச்சென கொப்பளித்த தீபக்,

“என்ன பீச்லயா? எப்போ டா?” என்றான்.

“அதான் என் கொளுந்தியாள் முகத்தில ஒரு அறை விட்டாளே” கிருஷ்ணா வாசகத்தை முடிக்கும் முன்பே

“என்ன பொண்ணோட தங்கச்சியையும் பார்த்துட்டியா?” என்று ஆளுக்கு முந்திக்கொண்டு முன்னால் வந்து நின்ற தீபக் ஒரு நொடி திகைப்பில் கண் மூடாது நின்றுவிட்டு

“நினைச்சேன் டா நீ பீச்ல முழிச்ச முழியிலயே பையன் சரி இல்லையே னு நினைச்சேன் டா ஆமா பொண்ணோட தங்கச்சி ஏன் டா உன்ன அடிச்சா?” என்று கேட்டான்.

அவன் தலையில் ஒரு தட்டு தட்டி “அட அவசரத்துக்கு பிறந்தவனே..! அவன் முகத்தில விழுந்த பேப்பர சொல்றான் டா” என்றான் ரமேஷ்.

இதை கேட்ட தீபக் “அடங்கப்பா டேய் ரசிக கர்த்தா! கொஞ்ச நேரம் டேரக்டா பேசுடா.. எனக்கு சுகர் பாடி.. சஸ்பன்ஸ் தாங்காது.. டக்குனு தூக்கிவிட்டுடும்!” என்றான்.

“உனக்கு சுகரா? சொல்லவே இல்ல?” கிருஷ்ணா கிண்டல் செய்ய

“நான் ரொம்ப ஸ்வீட் பாய்ங்கிறதை தான் அப்படி சொன்னேன். நீ மேட்டர்க்கு வா. பொண்ண எப்ப பார்த்த எப்படி பார்த்த? ஏதோ குழந்தை கிட்டதான பேசிக்கிட்டு இருந்த? நான் கூட பார்த்தனே நீ போனத?!” என்று விடாப்பிடியாய் நின்றான் தீபக்.

“என்னதான் நிலவு அழகுனாலும் சஞ்சலமின்றி அதோட வெளிப்புற வளைய வெளிச்சத்தை கண்டுபிடித்து ரசிப்பவனடா நான்..!குழந்தைக்கு பின்னால் என்னை பார்க்க ஓடி வரும் அவளை என்னவளை நான் அறிய மாட்டேனா?” என்று காதல் சுருதி பாடினான் கிருஷ்ணா.

“ஓ.. அப்ப சூரியன் வந்துச்சா?” அப்பா ஆர்வத்துடன் கேட்டார்.

அம்மாவோ அதிர்ச்சியில் “என்னது..? சூரியன் வந்துச்சாவா..? அப்படின்னா அப்பாவும் பிள்ளையும் இவ்வளவு நேரம் கோட்வேட் வச்சி பேசிக்கிட்டு இருந்தீங்களா” என கேட்டார்.

“இல்ல டி அது வந்து” சொல்ல வந்தவரை இடைமறித்த அம்மா

“நீங்க ஒன்னும் சொல்ல வேணாம் நீ வந்தத அந்த புள்ள எப்படி டா பார்த்துச்சி?” கிருஷ்ணாவிடம் கேட்டாள் அம்மா.

“நான் வந்தத எங்க அந்த புள்ள பார்த்துச்சி? என்ன பார்க்கனும்னு தான அது வந்துச்சி” என்றான் குறும்பாக.

“என்னது உன்ன பார்க்க தான் அந்த பொண்ணு வந்தாளா?” மொத்த குடும்பமும் குழப்பம் கலந்த அதிர்ச்சியில் இருந்தது.

“அந்த பொண்ணு உன்ன பார்க்க வந்தாளா? என்னடா சொல்லுற? கொஞ்சம் புரியுறமாதிரி சொல்லு” அம்மா பதபதைத்தாள்.

தன் இரட்டை இதழின் இணைப்புகள் இரண்டும் காதை நோக்கி செல்ல சிறிய புன்முறுவலோடு தன் அன்னை அருகில் சென்றான் கிருஷ்ணா. அம்மாவின் கையைப் பிடித்து

“ஒன்னுமில்லை மா நேரா வீட்டுக்கு போய் பார்த்து, பேசி அத்தனை பேரு முன்னால அவளுக்கு என்ன பிடிச்சிருக்கா இல்லையானு தெரிஞ்சிக்குறதுல என்ன மா ரசனை இருக்கு?” என்றான்.

“அதுக்குகுகு??” சற்று முறைத்த பாவனையிலேயே கேட்டார் அம்மா.

நம்ம ரசிக கர்த்தா யாரு? கிருஷ்ணராச்சே…. !

“நீ அதட்டும் போது கூட அத்தனை அழகு டி என்ன பெத்த தாயே”

என்றான். சிரிப்பு தன் மனதை எட்டினாலும் வாய்க்கு எட்டவில்லை அம்மாவுக்கு.

“முதல்ல நடந்தத சொல்லு அப்புறமா வச்சிக்க உன்னோட ரசனையெல்லாம்” என்றார்.

“சரி சரி கோவபடாத என் செல்ல குட்டி அத்தன பேர் முன்னால போய் அவளுடைய சம்மதத்த தெரிஞ்சிக்கிறதவிட எனக்கான ஒப்புதல், அந்த பாவனை, என்னை பார்க்கத் துடிக்கும் அவளது ஆர்வம் இது எல்லாத்தையும் நானே முதலானவனாய் நான் மட்டும் தனியாய் பார்த்துத் தெரிஞ்சிக்கனும்னு ஆசைப்பட்டேன்” என்றான்.

குடும்பமே நிசப்தமாய் கதை கேட்டுக் கொண்டிருக்கும் அழகை ஒரு வினாடி ரசித்துவிட்டு மீண்டும் கதையை தொடர்ந்தான் நமது ரசிக கர்த்தா.

“அவங்க வீட்டுக்கு நீங்க போன் செய்து என்னைக்கு பார்க்க வரலாம்னு கேட்ட பொழுது வீட்டுல கலந்து பேசிட்டு சொல்லுறதா பொண்ணோட அப்பா சொன்னாங்களா?” கிருஷ்ணாவின் இந்த கேள்விக்கு அம்மா “ஆமாம்” என்றாள்.

“அன்றைக்கு முடிவை உங்ககிட்ட சொல்லுறதுக்கு போன் பண்ணிருக்காங்க. உங்களுக்கு ரீச் ஆகாததால எனக்கு கால் செய்து எல்லா விபரமும் சொன்னாங்க. நான் தான் பொண்ணு எவ்வளவு ஆர்வமா இருக்கிறாள், அவளுக்கு நிஜமாவே இஷ்டம் இருக்கா இல்லைனா பெத்தவங்களோட கட்டாயத்துக்காக ஒத்துக்கிறாளா, எனக்காக எவ்வளவு ரிஸ்க் எடுக்குறா எல்லாத்தையும் பார்க்கனும்னு ஆசைல இந்த தேதில சாயங்காலம் ஊருக்கு வந்திடுவோம், களைப்ப போக்க சூரிய அஸ்தமனம் பார்க்க நண்பர்களோட கடற்கரைக்கு போய்விட்டு மறுநாள் காலைல வீட்டுக்கு வரோம்னு ஒன்னு விடாம எல்லாத்தையும் தெளிவா சொன்னேன்.

கடைசியா அப்பாவுக்கு ஒரு முறை கால் செஞ்சி பாருங்க, கிடைக்கலைனா நானே சொல்லிடுறேன்னு சொன்னேன். கடவுள் புண்ணியத்துல உங்களுக்கு போன் கிடைச்சிட்டு. என் பிளான் சக்ஸஸ் ஆகிடுச்சி சிம்பிள்!” என்று கண்ணடித்தான் கிருஷ்ணா.

“அட பாவி! கூடவே இருந்துட்டு கமுக்கமா எம்புட்டு வேலைய பார்த்துருக்க?” என்று ரமேஷ் கிருஷ்ணாவின் கையை பிடிக்க தீபக் அவன் வயிற்றில் மாங்கு மாங்கென்று குத்தினான்.

இந்த செல்ல சண்டையினை கண்ட அம்மா,

“நிறுத்துங்கடா..! நா அப்பவே யோசிச்சேன், நடக்கிற ரோட்டுலையும் போகிற பஸ்லயுமே ஆயிரம் வர்ணனை பத்தாயிரம் நுணுக்கம் பாக்கிற இவனா கட்டிக்கப்போகிற பொண்ண போட்டோ கூட பார்க்காம நாம சொன்ன எல்லாத்துக்கும் தலையாட்டிக்கிட்டு வர்றான்னு!” என கூறினார்.

“அப்புறம் எனக்கு இந்த பிளான் எல்லாமே முன்னாடியே தெரியும் டி” கூறிக்கொண்டே மெல்ல மெல்ல அப்பா முன்னுக்கு வந்தார்.

“ஆமா கல்யாணம் முடிஞ்சப்பிறகு சொல்லுங்க” விளையாட்டாய் கடிந்துக்கொண்டாள் அம்மா.

அப்பாவோ சமாதானப்படுத்தும் படலத்தில்

“இல்ல டி உனக்கு தெரிஞ்சா நீ ஒத்துக்க மாட்டியோனு தான் மெதுவா சொல்லிக்கலாம்னு” என்று இழுக்க “எப்படியோ எங்கையும் பிரச்சனையாகி அடிவாங்கிட்டு வராம இருந்தா சரிதான்” என்று தன் கணவனுக்கு வேலை வைக்காமல் தானே முடித்து வைத்தாள். வீடு கொஞ்சம் அமைதியடைந்தது.

“நேரமாகுது எல்லாரும் போய் தூங்குங்க” என்ற அம்மாவிடம்

“என்மேல எதுவும் கோவமில்லையே மா?” என கேட்டான் கிருஷ்ணா.

“அப்படியெல்லாம் எதுவும் இல்லை. என்கிட்ட முன்னாடியே சொல்லிருக்கலாம்னு ஒரு சின்ன வருத்தம் அவ்வளவு தான். நீங்க யோசிச்சதும் சரிதான். நான் நிச்சயமா இதுக்கு சம்மதிச்சிருக்க மாட்டேன் தான்” என்றாள் அம்மா. அப்படியும் மனது கேட்காததால் அம்மாவிடம் மண்டியிட்டு “சாரி மை டியர் சிவகாமி” என மன்னிப்பு கேட்டான் கிருஷ்ணா.

சிரித்தவாறு அவன் காதை திருகிய அம்மா “ஏதோ சொல்லிக்கிட்டு இருந்தியே.. கோவத்துல கூட இந்த சிவகாமி அழகுனு.. இப்ப சொல்லு.. கேப்போம்” என கேட்டாள் அம்மா.

உதட்டோரமாய் சிறு புன்னகை சிதறியவாறு எழுந்த கிருஷ்ணா

“இல்ல மா.. இந்த சிவகாமிய விட அந்த பொண்ணு அவ்வளவு அழகா இருக்கா மா.. அதைத்தான் சொல்லிக்கிட்டு இருந்தேன்” என்றான் தனது பிரத்யேகமான தனி ராகத்துடன்.

“டேய் உன்ன!” என்று அவனை செல்லமாய் அம்மா அடிக்க, அனைவரும் சிறிது நேரம் அன்பால் சிலிர்த்தனர்.

“ஜோக்ஸ் அப்பார்ட் மா. நிஜமா என்னை மன்னிச்சிரு. இனி உனக்கு தெரியாம இப்படி எதுவும் பண்ண மாட்டேன்” என்றான் கிருஷ்ணன்.

அம்மாவோ “ஒன்னுமில்லை டா.. மனச போட்டு குழப்பிக்காத.. போய் நிம்மதியா தூங்கு” என்றாள்.

அனைவரும் தூங்க ஆயத்தமானார்கள். அப்பாவும் அம்மாவும் தூங்கிவிட, நண்பர்கள் மூவரும் தூக்கம் வராததால் (தூங்க மனமில்லாததால்னு கூட சொல்லிக்கலாம்) சிறிது நேரம் பால்கனியில் அரட்டை அடித்துவிட்டு படுக்கையை வந்தடைந்தனர்.

ரமேஷ் தீபக் இருவரும் தூங்குவதற்கு பரபரப்பாய் தயாராக கிருஷ்ணா மட்டும் எதையோ யோசித்துக் கொண்டிருந்தான். அவனை நோட்டமிட்ட தீபக்

“என்னடா அடுத்தது கதையில என்ன டுவிஸ்டு கொண்டு வரலாம்னு யோசிச்சிட்டு இருக்கியா? மவனே கொன்னுடுவேன் ஜாக்கிரதை வந்து தூங்கு வா” என்றான்.

“இல்லை டா அந்த பேப்பர் -ல எனக்காக என்னவோ எழுதியிருந்தது டா.. நான் அத படிக்க தவறிட்டேன். ஒரு வேளை என்ன பிடிக்கலைனு எழுதிருப்பாளோ? சும்மா பார்த்துட்டு மட்டும் போகாம எதுக்கு பேப்பர தூது விடனும் ? அதுல என்னவோ எழுதியிருக்கனும்? என்கிட்ட இருந்து திரும்ப அத பிடுங்கிட்டு போகனும்? காரணம் இல்லாமையா?” என்று வசை பாட ஆரம்பித்தான்.

“அய்யா ராசா..! விடிஞ்சா தெரியபோகுது.. இதுக்கு எதுக்கு டா இப்படி நீயும் குழம்பி எங்களையும் படுத்துற?” என்று ரமேஷ் விளையாட்டாய் கெஞ்சினான்.

“ஆனா பாவம் டா என் தங்கச்சி உன்ன கட்டிக்கிட்டு என்ன கஷ்டப்பட போறாளோ?” என்றான் தீபக்.

“என்னோட ஃபீலிங்ஸ் உங்களுக்கு விளையாட்டா இருக்கா?” என்று கிருஷ்ணா சீரியஸாக கேட்டது குபீரென சிரிப்பை ஏற்படுத்த, ரமேஷும் தீபக்கும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துவிட்டு கிருஷ்ணாவை நோக்கி

“செட் ஆகல செட் ஆகல” என்று அலறிக்கொண்டே போர்வையினைப் போர்த்திக் கொண்டனர்.

“உங்கள!” என்று சிரித்துக்கொண்டே ஓடிச் சென்று இருவரையும் கிருஷ்ணா அடிக்க, வாடகைக்கு அவர்கள் தங்கியிருந்த அந்த லாட்ஜில் இனிய இரவின் துயில் தொடங்கியது. கிருஷ்ணா நன்றாக தூங்கிப் போனான். ஆனால் அவனுடைய ராதாவான நம்ம கலைக்கு தான் தூக்கம் வரவில்லை. கிருஷ்ணருக்கு வேலையே இதுதானே?!

தூக்கம் வராமல் அங்கும் இங்குமாய் உருண்டுக்கொண்டிருந்தாள் கலை. இறுதியாக கிருஷ்ணா தன் நண்பன் தோளில் கைப்போட்டு ஸ்டைலாக திரும்பிச் சென்றதை தன் கண்களுக்குள் மீண்டும் மீண்டும் காட்சி செய்து வெட்கத்தில் கொஞ்சம் கொஞ்சமாக சிவந்துக் கொண்டிருந்தாள். அத்தனை நாட்கள் யாரும் வீழ்ந்திடா கன்னியவள் கர்வத்தை தன் ஒற்றை அசைவில் போட்டியின்றி வென்றுச் சென்றிருந்தான் கிருஷ்ணா.

திடீரென இதயத்தின் காதல் படபடப்பு சுகத்தை மாற்றி வலியை உணர்த்தியது. மனதிற்குள் ஆயிரம் ஆயிரம் குழப்பங்கள்.செய்வதறியாது தரையில் இட்ட மீனென துடிதுடித்த கலை தண்ணீர் கொண்ட கடலென தன் கண்களை மூழ்கடித்தாள். அவளுடைய மனம் அவளிடம் பேச தொடங்கியது. ‘உன் மனசுல பட்டதை தயங்காம செய் உன் வாழ்க்கைகான முடிவ நீதான் எடுக்கனும்’ என்றது.

“அப்படின்னா அம்மா அப்பா?” என்றாள் கலை. பதிலளிக்காமல் மெளனத்தில் தொலைந்தது அவளது மனம். விம்மி விம்மி அழத்தொடங்கினாள்; அழுது அழுது தூங்கியே போனாள். இன்பமும் துன்பமுமாய் இரட்டை வேடமிட்ட அந்த நீண்ட இரவு ஒரு வழியாக தன்னை மாய்த்துக் கொண்டது. காலை பிறந்தது.

கிருஷ்ணா வீட்டில் ஆளுக்கு முன்பாக கூப்பாடு போட்ட கடிகார அலாரத்தை அணைத்தபடி அப்பா எழுந்தார். கூடவே கிருஷ்ணாவும் எழுந்துக் கொள்ள இவர்களுக்கு முன்பே எழுந்திருந்த அம்மா ஃப்ளாஸ்கில் இருந்த காபியை இருவருக்கும் ஊற்றி எடுத்து வந்தாள்.

“போய் பல்ல தேய்சிட்டு வாங்க, காபி குடிக்கலாம்” என்றாள்.

அசையாமல் அம்மாவையே பார்த்துக்கிட்டு இருந்த கிருஷ்ணாவிடம்

“என்ன டா?” என்றாள் அம்மா.

“என் மனைவி இப்படி எனக்கு முன்ன எழுந்து காபி தருவாளா, இல்ல நான் தான் எழுப்பனுமான்னு தெரியலையே மா” என்றான்.

“நீங்கதான் எதையும் புது கோணத்துல பார்க்கிறவறாச்சே! நீங்களே காபி போட்டு மனைவிய எழுப்புங்க” காலை சிணுங்களுடன் எழுந்தான் ரமேஷ்.

அம்மாவோ “காலைலயே ஆரம்பிக்காதீங்க டா எழுந்து கிளம்புற வழிய பாருங்க” என்று அடுத்த வேலையை கவனிக்க சென்றாள்.

ரமேஷ் சிரித்துக்கொண்டே தீபக்கை எழுப்பினான். எழுந்ததும் எழாததுமாய்

“அய்யயோ விடிஞ்சிருச்சா? அடேய்! கனவா? ஏன் டா என்ன எழுப்பின? எரும மாடே” என்று ரமேஷை அடித்துத் துவைத்தான்.

“டேய் தடிமாடு விடிஞ்சிருச்சி டா.. பொண்ணு வீட்டுக்கு போக வேணாமா?” என்றான் ரமேஷ். அதற்கு தீபக்

“கனவுல கூட எனக்கு ஒரு நல்லது நடந்துற கூடாதே?” என்றான்.

“அப்படி என்ன டா நல்லது?” என்றான் கிருஷ்ணா.

தீபக், “போடா இவனே.. சூரிய உதயம் அதுவுமா கன்னியாகுமரி கடற்கரையில உன் கொளுந்தியாவும் நானும் மீட் பண்ற நேரம் பார்த்து இப்படி எழுப்பி விட்டுட்டானே டா” என்று கதறினான்.

அவனிடம்,

“ரொம்ப கவலை படாத கிருஷ்ணாவோட கொளுந்தியாதான? இதோ இருக்கா பாரு” என அருகில் இருந்த பழைய செய்தி தாளை எடுத்து தலையை சுற்றி பொட்டலம் போட்டான் ரமேஷ்.

வீட்டில் அனைவரும் கலகலவென சிரிக்க, நாள் இனிதே தொடங்கியது. இதே உற்சாகத்துடன் அனைவரும் கிளம்பி தயாரானார்கள்.

“ஏங்க.. நம்ம கிளம்பிட்டோம்னு ஒரு தடவ போன் பண்ணி சொல்லிருங்க” என்றாள் கிருஷ்ணாவின் அம்மா.

“இதோ சொல்றேன் டி” என்றார் அப்பா.

கலையின் வீட்டில் அவளது அப்பாவுடைய கைபேசி மணியின் அமைதி விடுப்பு எடுக்காதா என பார்த்துக்கொண்டிருந்தாள் கலை.

எப்போதும் காதில் கேட்கவே பிடிக்காத எரிச்சலூட்டும் அப்பாவின் கைபேசி ரிங்டோன், இன்று மாப்பிள்ளை வீட்டாரின் அழைப்புக்காக காத்திருந்த அவளை அவ்வளவு நேரம் அழைப்பு மணி அடிக்காமல் பழி வாங்கிக்கொண்டிருந்தது. நீண்ட நேரம் அழைப்பை எதிர்ப்பார்த்து தன்னை நொந்துக்கொண்டு இருந்தாள் கலை.

புதிதாய் பூத்த பூவாய் புது பெண் கோலத்தில் அலங்கார அன்னமாய் கலையை தயாராக்கிக் கொண்டிருந்தனர் அவளது அன்னையும் தங்கையும்.

நீண்ட நேரம் எதிர்பார்த்த கைபேசி மணி இப்போது ஒலித்துக் கொண்டே இருக்க

“யாராவது சீக்கிரம் எடுங்களேன்” என்ற ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள் கலை.

அப்பா வந்து கைபேசியை கையில் எடுத்தார். நீண்ட நேரம் அதிர்ந்து ஒலித்த மணி அமைதிக்கொண்டு நின்றுவிட்டது.

“ச்சே” என்று ஒரு சத்தம்.

அப்பா திரும்பி பார்த்தார். கலை தவிக்கும் கண்களோடு, பதட்டத்தோடும் தன் கைகளை பிசைந்துக் கொண்டு “அப்பா எப்பவும் இப்படி தான். எதையும் நேரத்துக்கு செய்வதே இல்லை” என முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்.

இதனை பார்த்த கலையின் அப்பாவுக்கு, கலை தனது மழலை பருவத்தில் மிட்டாய்க்கு முணுமுணுத்த காட்சி கண்களில் படமாய் ஓட, தன் மகள் இவ்வளவு வளர்ந்துவிட்டாளே என்று சிலாகித்துக் கொண்டார்.

கலையின் தங்கை கீதா கலையின் தவிப்பை கவனித்துக்கொண்டு, அப்பாவிடம் கண்களால் சைகை காட்டினாள். இருவரும் மெதுவாக சிரித்துக்கொண்டனர். பின்பு கீதா,

“ஹய் மாமா வந்தாச்சி” என்று கத்த, கலை பட்டாசு வெடித்தது போல பதறி எழுந்து, கால்களில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தாள். வாசல் ஆரவாரமின்றி அமைதியாய் இருப்பதைப் பார்த்தவுடன் மனதிற்குள்

“அய்யோ ஒரு வேகத்துல வாயாடி பேச்ச நம்பி பொங்கி எழுந்துட்டியே கலை” என்று எண்ணியவாறு கீதாவை முறைத்தாள். கீதாவும் அப்பாவும் பூரித்து சிரிக்க மீண்டும் கைபேசி அதிர்ந்தது.

“அப்பா சீக்கிரம் எடுத்து பேசிருங்க இல்லைனா அக்காவே எடுத்து பேசினாலும் பேசிருவா” என்றாள் கீதா.

“வாய மூடு டி” கூறினாள் கலை.

அப்பா கைபேசியை எடுத்து “சொல்லுங்க சார்” என்றபடி வெளியே சென்றார்.

“இங்க நின்னு பேசினாதான் என்னவாம்?” கலை சினந்துக் கொண்டாள்.

“நான் வேணும்னா ஸ்பீக்கர்ல போட சொல்லவா?” கீதா கிண்டல் செய்தாள்.

அப்பா உள்ளே வந்து “மாப்பிள்ளை வீட்டுல கிளம்பிட்டாங்களாம் எல்லாரும் சீக்கிரம் ரெடி ஆகுங்க” என்றார்.

“இப்போ ஸ்பீக்கர் தேவை இருக்காதே?” என்று கூறிய கீதாவை தலையில் கொட்டிவிட்டு உள்ளே வந்தார் அம்மா. கலையிடம் நகை பெட்டியை கொடுத்து சீக்கிரம் இதெல்லாம் போட்டுக்கோ டி என்றாள்.

மிகுந்த ஆர்வத்துடன் ஒவ்வொரு நகையையும் ரசித்து ரசித்து சந்தோஷத்துடன் கலைக்கு அணிவித்துக் கொண்டிருந்தாள் கீதா.

அசையாது அமைதியாய் அமர்ந்திருந்த கலையின் தாடையை உயர்த்திய அம்மா

“என்ன டி அதிசயமா இருக்கு? இம்புட்டு அமைதியா இருக்க.. உன்ன நான் வால சுருட்டிக்கிட்டு தான் டி இருக்க சொன்னேன். இப்படி நாக்க சுருட்டிக்கிட்டு இல்லை” என்றார்.

கலையிடம் அமைதி மட்டுமே பதிலாய் இருந்தது.

“ஏதாவது பேசு டி முகத்த பாரு எப்படி வாடி போய் இருக்கு.. டென்ஷனா இருக்கா” என்றார் அம்மா.

‘ஆமாம்’ என தலையை மட்டும் ஆட்டினாள் கலை.

கலையை அணைத்தவாறு “ஒன்னுமில்லை டி மா.. எப்பவும் போல சகஜமா இரு.. உன் வாலுத்தனம் புடிச்சி உன்ன அவன் கட்டிக்கிட்டு போகட்டும்” என்றார்.

நேரம் உருண்டோடி மாப்பிள்ளை வீட்டாரை அழைத்து வந்தது. கூடவே கலையின் நெருங்கிய தோழி ரம்யாவும் வந்தாள்.

வீட்டிற்குள் வந்த ரம்யா அப்பாவுக்கு வணக்கம் வைத்துவிட்டு நேராக கலையை பார்க்க அவளது அறைக்கு விரைந்தாள்.

“ஹேய்ய்ய் புதுப்பொண்ணே” என்று கூச்சலிட்டவாறு கலை முன் வந்து நின்றாள். கலையின் முகம் கலையின்றி வாடிக் கிடப்பதைக் கண்டு சருகானாள்.

“என்ன டி நீ மூஞ்ச இப்படி வச்சிருக்க? அதுவும் மாப்பிள்ளை வர நேரம் பார்த்து? டென்ஷனா இருக்கியா? நீ அப்படிப்பட்ட ஆளு இல்லையே.. சொல்லு டி என்னதான் ஆச்சு?” என கேட்டாள் ரம்யா.

கலைக்கு சோகம் விளிம்பை தாண்டியதால் கண்ணீரும் விழி தாண்டியது. அழுதுக்கொண்டே ரம்யாவிடம் பேச வாயெடுக்கவும்

“ரம்யா கொஞ்சம் இங்க வா மா” கலை அம்மாவின் அழைப்பு குரல்.

“அய்யோ இரு டி இதோ என்னனு கேட்டுட்டு சீக்கிரம் வரேன்” ஒடினாள் ரம்யா.

செய்வதறியாது கண்ணீரை துடைத்துக் கொண்டு மீண்டும் அமைதி கொடியை பிடித்துக்கொண்டாள் கலை. நேரம் சற்று கடந்ததால் வீட்டின் வரவேற்பறையில் மாப்பிள்ளை வீட்டார் என்ன செய்கிறார் என எட்டிப் பார்த்தாள் கலை.

தன் வீட்டில் இருந்து பெண் பார்க்க குஷியாய் கிளம்பிய நமது ரசிக கர்த்தா பெண் வீட்டினுள் வந்து பொறுமை காக்க விரும்பவில்லை. சம்பிரதாயத்திற்காக வீட்டினுள் இரண்டு நிமிடம் மட்டுமே நின்றவன், அங்கிருந்த பெண்வீட்டு உறவுக்கார குட்டி பையனை கூட்டிக்கொண்டு வெளியில் வந்தான் சாமர்த்தியமாக.

வெளியில் வந்ததும் அந்த பையனிடம்,

“மாமா உங்களுக்கு சாக்லேட் வாங்கி தரேன். எனக்கு அக்கா இருக்கிற அறையின் ஜன்னல் கதவு எங்க இருக்குனு காட்டுறியா?” என்றான்.

“சும்மா வாயால சாக்லேட்னு சொன்னா எப்படி நம்புறது?” என்றான் அந்த குட்டி.

‘இந்த ரசிக கர்த்தாவையே ஆஃப் பண்ணிட்டானே?!’ என்று எண்ணியவன் ஓடிச் சென்று சாக்லேட் வாங்கி வர, பையனும் அறையை காட்டினான்.

மிகுந்த ஆவலுடன் எட்டிப்பார்த்தான்.. பார்த்தவன் செல்ல முறைப்போடு அந்த சிறுவனை முறைத்துவிட்டு வலிக்காதவாறு பிடறியில் ஒரு அடி வைத்தான்.

“டேய் எங்கிட்டயேவா? உன்ன கல்யாண பொண்ண தான காட்ட சொன்னேன்?” என்றான்.

“இதுதான் மாமா கல்யாண பொண்ணு!!” என அந்த சிறுவன் கூறியதும்

“என்ன??” என அதிர்ச்சியடைந்தான் கிருஷ்ணா.

“போட்டோவிலும் நேரிலும் நான் பார்த்த பெண் இது இல்லையே?!”

அதிர்ந்து போனான் கிருஷ்ணா உடனடியாக ரமேஷுக்கு கால் செய்தான். அழைப்பை எடுத்தவுடன் ரமேஷ்

“டேய் நல்லவனே, எங்க டா போய் தொலைஞ்ச?” என்றான்.

“டேய் மச்சான்! ஒரு சின்ன கன்ஃபியூஷன் டா.. கொஞ்சம் வீட்டுக்கு வெளியில வாயேன்!” என்று அழைக்க

“என்னது வீட்டுக்கு வெளியில வரனுமா? உன்ன காணோம்னு இங்க ஏற்கனவே கடுப்புல இருக்காங்க, மரியாதையா வந்து சேரு.. எதுவா இருந்தாலும் அப்புறமா பார்த்துக்கலாம்” என்று ஆத்திரத்தை கக்கினான் ரமேஷ்.

“சொல்லுறத புரிஞ்சிக்கோயேன் டா! பொண்ணு மாறிப்போச்சு டா” என்றான் கிருஷ்ணா.

“என்னது பொண்ணு மாறிப்போச்சா??” கூச்சலிட்டான் தீபக்.

பதறிப்போய் கைபேசியை கீழே போட்ட ரமேஷ்

“அட எரும மாடே! நீ எப்பத்துல இருந்து டா ஒட்டுக் கேட்டுட்டு இருக்க?” என்றான்.

அம்மாவும் அப்பாவும் நடப்பது விளங்காமல் அதிர்ச்சியில் முழிக்க பெண்ணின் அப்பா வந்து

“என்ன ஆச்சு? எதுவும் பிரச்சனையா?” என கேட்டார்.

“அதெல்லாம் ஒன்னுமில்லைங்க” ரமேஷ் கூறினான்.

இருந்தும் அவனது பேச்சு பிடிபடாததால் பெண்ணின் அப்பா மேலும் தொடர்ந்தார்,

“இல்லை தம்பி.. மாப்பிள்ளைய காணோமே இன்னும்.. அதான்” என்று இழுத்தார்.

“இதோ வந்துடுரேன் சார்” என்று கூறிவிட்டு கைபேசியை கையில் எடுத்துக்கொண்டு வெளியே செல்ல முயன்ற ரமேஷ் தீபக் அருகில் சென்று

“ஒழுங்கா வாய மூடிக்கிட்டு அம்மா அப்பா கூட இரு.. நான் போய் கிருஷ்ணாவ கூட்டிட்டு வரேன்” என அழுத்தம் திருத்தமாக சொன்னான்.

மிரட்டல் பாணியை புரிந்துக்கொண்ட தீபக் வெளியில் காட்டிக் கொள்ளாமல் சிரித்துக்கொண்டே

“ஆ.. ஓகே டா ஓகே டா.. போயிட்டு வா” என்று தோளில் தட்டினான்.

நண்பர்கள் வர்க்க கள்ள முறைப்போடு தன் தோளை விலக்கி நகன்று வந்தான் ரமேஷ்.

“என்னாச்சு? தம்பி என்ன சொல்லுறாரு?” பொண்ணோட அப்பா கேட்டார்.

‘அட ஏன் டா நீ வேற உசுர வாங்கிக்கிட்டு’ என்று மனதில் எண்ணியவாறு “அவனுக்கு சுச்சா வருதாம் போயிட்டு வந்துடுவானாம்” என்று பல்லை காட்டிக்கொண்டே கூறினான்.

பொண்ணோட அப்பா அப்பொழுதும் விட்ட பாடு இல்லை

“அப்போ மாப்பிள்ளை??” என்றார் மண்டையை பிய்த்துக் கொள்ளலாம் போல் இருந்தது தீபக்குக்கு.

“மாப்பிள்ளையும் சுச்சாவுக்கு தான் போயிருக்கானாம். இப்படி பேசிக்கிட்டே இருந்தீங்க நானும் போயிடுவேன்” என்றான் எரிச்சல் தாங்காமல்.

“இல்லை தம்பி.. எங்க வீட்டுக்குள்ள பாத்ரூமும் இருக்குனு சொல்ல வந்தேன்” தம்பிக்கு கோவம் வந்துடுச்சி.. ஹீ..ஹீ..ஹீ.. என்று பெண்ணின் அப்பா சிரித்துக்கொண்டே நயந்துக் கூறினார்.

‘ஆமா எங்க வீட்டுக்குள்ள எல்லாம் பாத்ரூம் கிடையாதுல!!’ வாய்க்குள் முனங்கிக்கொண்டான் தீபக்.

சிவகாமி தீபக்கின் மடியில் தட்டி “என்ன டா பழக்கம் இது? பெரியவங்க கிட்ட விளையாட்டு பேச்சு வச்சிக்கிட்டு” என்றார்.

“நாகரீக யுவனாச்சே, அப்படிதான்மா இருப்பாங்க. ஒன்னுமில்லை விடுங்க பரவாயில்லை” என்றார் பெண்ணின் அப்பா.

“பெருந்தன்மையாமாம்” வாய்விட்டு சொல்லிவிட தான் ஆசை தீபக்குக்கு. ஆனால் மனதிற்குள் மட்டுமே சொல்லிக்கொண்டான்.

வீட்டிற்கு வெளியில்

“டேய் கிருஷ்ணா என்ன டா ஆச்சு?” ரமேஷ் வேகமாக நடந்துவந்த வண்ணம் கேட்டான்.

“பொண்ணு மாறிப்போச்சு டா மச்சான்” என்றான் கிருஷ்ணா.

“அடேய் பொண்ண இன்னும் கண்ணுல காட்டவே இல்லையே டா?” என்றான் ரமேஷ்.

“அதெல்லாம் நான் பார்த்துட்டேன்” என்ற சொல்லிய பின் வேறு திசையைப் பார்த்துக்கொண்டிருந்த கிருஷ்ணாவின் தாடையை தன் கைகளால் பிடித்து, தனது முகத்தை நோக்கி மெல்ல திருப்பினான் ரமேஷ்.

“பார்த்துட்டியா?!!!” மெல்லிய குரலில் கேட்டான் ரமேஷ்.

“ஆமா டா” என்று கிருஷ்ணா கூற

“எப்படி டா? இந்த பொண்ணுக்கும் ஏதாவது தூது அனுப்பிட்டியா என்ன?” என்று கேட்டான் கிருஷ்ணாவின் குசும்பை அறிந்த ரமேஷ்.

“டேய் பொண்ணையே இப்போதான் பார்க்கிறேன். பின்ன எப்படி டா தூது?” கிருஷ்ணா கூறினான்.

“அய்யோ..!! பின்ன எப்படி டா???” என மண்டையை வேகமாய் சொறிந்துக் கொண்டே கேட்டான் ரமேஷ்.

“ஜன்னல் வழியா பார்த்துட்டேன்” என்று மிக சாதுவாக கூறினான் கிருஷ்ணா.

“பொறுமையா ரூல்சை ஃபாலோ பண்ணுறதுலாம் உன் அகராதியிலயே இல்லையா டா?” கேட்டான் ரமேஷ்.

“ரூல்ஸ் எல்லாம் யாருக்கு டா வேணும்? இப்போ நீ என்ன செய்யனும்னா” கிருஷ்ணா வசனத்தை இழுத்துக்கொண்டிருக்க

“டேய் உன்கூடலாம் இருந்தேன்னு வச்சிக்க அல்பாயுசுல போயுருவேன் டா” என்றான் ரமேஷ்.

“என்னைக்கு நாளும் போகபோற உசுருதான டா.. சொல்லுறத கேளு.. இப்ப நீ என்ன செய்யுறனா உள்ள போய், மாப்பிள்ளைக்கு ஆபிஸ்ல இருந்து கால் வந்துது.. அவசர வேலையாம் அப்படி இப்படினு ஏதாவது சொல்லிட்டு பொண்ணு பார்க்கிற விஷயத்த இன்னைக்கு கேன்சல் செஞ்சிட்டு வந்திடு.. நான் வீட்டுக்கு போய் புரோக்கர் கிட்ட விசாரிக்கிறேன் இந்த குழப்பத்த பத்தி” என்று கிருஷ்ணா கூறியது தான் தாமதம்.

“டமால்ல்ல்ல்” என்ற ஒரு சத்தம்.

அட வேற ஒன்னும் இல்லைங்க.. வெடிச்சது நம்ம ரமேஷோட நெஞ்சு தான்.

“என்னது நான் உள்ள போய் சொல்லனுமா??! நீ வந்து சொல்லு எல்லாரும் கிளம்பிறலாம்” என்றான் ரமேஷ்.

“அந்த சீன் எல்லாம் இங்க இல்லை டா. இங்க கட் பண்ணா நேரா நம்ம ரூம் தான் அடுத்த ஷாட். சொன்னத முடிச்சிட்டு என்ன வந்து பாரு.சீ யூ பேபி!” என்று கூறிவிட்டு கையில் இருந்த கூலிங்கிளாசை ஸ்டைலாக போட்ட படி ஹீரோ பி.ஜி.எம் –மோட அங்கிருந்து கிளம்பினான் கிருஷ்ணா.

‘உயிர் நண்பன்னா நடுத்தெருவுல தான் நிக்கவைப்பான்னு சொல்லுறது சரிதான் போல’ தெருவின் நடுவே நின்றார் போல புலம்பிக்கொண்டு பெண் வீட்டிற்கு சென்றான் ரமேஷ்.

கலை வீட்டில்

ஜன்னல் வழியே கலை எட்டிப்பார்க்க, வந்தவர்களுக்கு ஜமுக்காலத்தை விரித்துக்கொண்டிருந்தனர் ரம்யாவும் கீதாவும்.

மாப்பிள்ளை, மாப்பிள்ளையின் அம்மா, அப்பா, அவர்களின் மூத்த பையன்கள் இரண்டு பேர், அவர்களது மனைவிமார் மற்றும் குழந்தைகள் என பெரிய அணியாகவே திரண்டு வந்திருந்தனர் பெண் பார்ப்பதற்கு.

கலையோ ‘ச்சே.. எப்படி வந்தான் இந்த டொனால்டு டக் ( Donald Duck) மூஞ்சி’ என்று அழுகை மாறாமல் மனதில் வினவிக் கொண்டிருக்க பெண்ணை அழைத்து வருமாறு குரல் வந்தது.

கலையின் அம்மா கலையை அழைத்துக்கொண்டு வர, பெண் பார்க்கும் சங்கதி நன்றாகவே நடந்து முடிந்தது. கலை தான் மாப்பிள்ளையை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.

மாப்பிள்ளை வீட்டார் கிளம்பியதும் தங்களது வழக்கமான உடைகளுக்கு மாறிக்கொண்ட அனைவரும் வட்ட மேஜை மாநாடு போட்டு தேநீர் குடித்துக்கொண்டிருந்தனர்.

கீதா கலையிடம் “அப்புறம் அக்கா.. மாப்பிள்ளை செமையா இருக்காரு போ.. கொடுத்துவச்சவதான் நீ” என்றாள்.

ரம்யாவும் அங்குதான் இருந்தாள். கலை அழுதது தனக்கு மட்டும்தானே தெரியும் என எண்ணிக்கொண்டு

“யேய் வாயாடி.. கொஞ்சம் நேரம் வாய மூடு” என்றாள்.

“அட போ ரம்யா அக்கா, உனக்கு என் அக்கா மேல பொறாம இவளுக்கு மட்டும் அழகான மாப்பிள்ளை கிடச்சிட்டாரே நம்ம ஆத்துக்காரர் அசடா இருக்காரேன்னு” என்றாள்.

“யாரு டி அழகு? அந்த டொனால்டு டக்கு மூஞ்சா?”என்றாள் கலை.

“அய்ய்ய்ய்யோ…. அக்கா எப்படி கா??” கீதா துள்ளிக்குதித்தாள்.

“என்னடி?” கலை களைப்போடே கேட்டாள்.

“நான் மனசுல நினைச்சத அப்படியே சொல்லிட்ட.. அக்கானா அக்கா தான்…. உம்ம்மாமாமா” என்றாள்.

“அடியேய் இப்போதான டி அழகன் கொஞ்சம் பழகேன்னு அந்த மொசரக்கட்டைய பீத்திக்கிட்டு திரிஞ்ச? அதுக்குள்ள அந்தர் பல்டி அடிக்கிற?” என்றாள் ரம்யா.

“இல்லை கா நான் ஏதாவது சொல்லி, மாமா மேல உள்ள லவ்ஸூல அக்கா என் மண்டைய உடைச்சிட்டான்னா! அதான் போட்டு வாங்கினேன்.. ஹாஹா” என்றாள் கீதா.

‘அய்யய்யோ இவ வேற நேரம் காலம் தெரியாம கொதிக்கிற எண்ணெய்யில பெட்ரோல கொண்டு ஊத்துறாலே’ என்று ரம்யா மனதிற்குள் எண்ணிக்கொண்டு

‘இப்பவும் அதான் டி நடக்க போகுது’ என்றாள்.

கலை அங்கிருக்க பிடிக்காமல் எழுந்து உள்ளே சென்றுவிட்டாள்.

வேகமாக கலை செல்வதை பார்த்த கலையின் அம்மா

“அடியேய் குட்டி குரங்கே வாய மூடிக்கிட்டு இருக்க மாட்ட? அவளே அசதியில இருக்கா, அவள போட்டு வறுத்துக்கிட்டு” என்று சொல்லிவிட்டு குடித்துமுடித்த தேநீர் கோப்பைகளை அங்கிருந்து எடுத்துக் கொண்டு உள்ளே சென்றார்.

கலை உள்ளே சென்றதும், ரம்யா சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவள் அழுததற்கான காரணத்தை கேட்க சென்றாள்.

“என்ன டி ஆச்சு இப்பவாவது சொல்லு” என்றதும் ரம்யாவின் தொலைபேசி அவளது கணவரின் அழைப்பை காட்டியது.

“அட கடவுளே இவ்வளவு நேரம் சும்மா தானே உட்காந்திருந்தேன் அப்ப எல்லாம் அடிக்க மாட்டாரே இந்த மனுஷன்” என்று திட்டியவாறு அழைப்பை ஏற்று பேசினாள்.

மாமியாருக்கு திடீர் நெஞ்சுவலி வந்ததால் உடனடியாக கிளம்பிவர சொல்லி செய்தி. நிலைமையை புரிந்துக்கொண்ட கலை ரம்யாவை அதற்கு மேல் பேச விடாமல் வீட்டிற்கு அனுப்பிவைத்தாள்.

ரமேஷிடம் பெண் வீட்டாரை சமாளித்து வர சொல்லி சிறிது நேரம் கழிந்திருக்க, வீட்டை வந்தடைந்திருந்தான் கிருஷ்ணா. தன் கைபேசியில் கல்யாண புரோக்கரது நம்பரை எடுத்து டயல் செய்தான்.

“ஹலோ சொல்லுங்க கிருஷ்ணா தம்பி” என்று புரோக்கர் கூற

“என்ன புரோக்கிள் இப்படி குழப்பம் பண்ணிட்டீங்க?”

(என்ன டா இது புரோக்கிள் –னு தான யோசிக்கிறீங்க. Broker + uncle = Brokle ஆகிடுச்சு நம்ம கிருஷ்ணாவுக்கு )

கிருஷ்ணா எதை பற்றி கேட்கிறான் என்ற சிறு துருப்பும் இல்லாத புரோக்கிள் அமைதியாக யோசித்துக்கொண்டிருந்தார்.

“என்ன புரோக்கிள் இருக்கீங்களா லைன்ல?” என்றான் மீண்டும்.

“ஆஆஆ….. இருக்கேன் தம்பி.. என்ன குழப்பம்?” என்றார் புரோக்கிள்.

“பொண்ணு போட்டோ அட்ரஸ் எல்லாம் சரியா தான் கொடுத்தீங்களா?” என கேட்டான்.

“ஆமா தம்பி, அதுல என்ன சந்தேகம்?” என்றார் புரோக்கர்.

“நீங்க கொடுத்த போட்டோல இருந்தது வேற பொண்ணு! நீங்க கொடுத்த அட்ரஸ்ல இருந்தது வேற பொண்ணு!” என்றான் கிருஷ்ணா.

“என்னது வேற வேறயா?” அதிர்ச்சியடைந்த புரோக்கர்

“வாய்ப்பு இருக்காதே தம்பி?! 13 வருஷமா இந்த தொழில் பண்ணிக்கிட்டு இருக்கேன். இதுவரை இப்படி ஒரு குழப்பம் வந்ததில்லையே?!” என்றார்.

“ஓஓ…. அதானா செய்தி..?? இதுக்கு முன்னால இப்படி நடந்திருந்தா ஜாக்கிரதையா அனுப்பிருப்பீங்க.. என்ன செய்யுறது. இந்த கிருஷ்ணா தான எல்லாருக்கும் டுவிஸ்டு கொடுக்க வேண்டியதா இருக்கு” தன் குறும்பு மாறாமல் கூறினான் கிருஷ்ணா.

இந்த இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் வார்த்தைகளால் கடிச்சி துப்பி இருப்பார்கள் என்பதை உணர்ந்த நம்ம புரோக்கிள்

“மன்னிச்சிடுங்க தம்பி. நீங்க சொல்லுற எதுவும் விளங்கல, நான் இதோ உடனே நேர்ல வரேன்” என்று அழைப்பை துண்டித்தார்.

புரோக்கிளுடன் பேசி முடித்தக் கையோடு கிருஷ்ணா ஒரு கப் தேநீர் தயாரித்தான். அதை பருகி முடிப்பதற்கும் அம்மா அப்பா வீட்டுக்கு வரவும் சரியாக இருந்தது.

வந்ததும் சிவகாமி பொளந்து கட்டுவாள் என முன்னரே யூகித்திருந்தான் கிருஷ்ணா. அவன் நினைத்தது தவறாகாமல் உள்ளே நுழைந்ததுமே அம்மா ஆரம்பித்தார்.

“என்ன டா நினைச்சிட்டு இருக்க..? எங்கள அசிங்கப்படுத்தனும்னே குறியா இருக்கியா..?” என கத்தினார்.

சிவகாமி கோவப்படுவாள் என எதிர்பார்த்திருந்தான் கிருஷ்ணா. ஆனால் இத்தனை ருத்ர தாண்டவம் ஆடுவாள் என அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

“அம்மா அப்படியெல்லாம் இல்லை மா” என தன் அன்னையின் அருகே சென்றான் கிருஷ்ணா.

“என்ன டா அப்படி இல்லை? இப்படிதான் சொல்லாம கொள்ளாம ஓடி வருவியா?” என்றார்.

“நான் சொல்லுறத கொஞ்சம் கேளு மா” கிருஷ்ணா சிணுங்கினான்.

ஆனால் அது எல்லாம் சிவகாமியின் காதில் ஏறியதாய் தெரியவில்லை.

“உனக்கு தான டா தெரியும் பொண்ணு மாறிடுச்சுன்னு. அந்த பொண்ணு வீட்டுக்கு தெரியுமா? பாவம் அலங்காரம் எல்லாம் செஞ்சிக்கிட்டு உட்காந்திருந்த அந்த பொண்ணோட மனசு எவ்வளவு பாதிச்சிருக்கும்? பெண் பாவம் பொல்லாதது டா!” சிவகாமியின் பேச்சில் காட்டம் கொஞ்சம் தூக்கலாகவே இருந்தது.

இதுவரையில் சிவகாமி எதற்கும் இப்படி திட்டியதில்லை தன் மகனை. பெண்கள் விஷயம் என்பதால் சிறிது கோபம் அதிகமாகவே வந்துவிட்டது அவருக்கு. பின்பு ஆத்திரத்தில் திட்டிவிட்டோமே என்று சிவகாமியே வருந்த வீட்டை சமாதான நிலைக்கு கொண்டுவர படாத பாடு பட்டுக்கொண்டிருந்தனர் ரமேஷும் தீபக்கும்.

அனைவரையும் சிரிக்க வைக்க அவர்கள் இருவரும் குட்டிக்கரணம் போடாதது ஒன்னுதான் பாக்கி. அம்மா இன்னும் சாந்தம் ஆகாமல் இருந்திருந்தால் அதையும் கூட செய்ய தயாராக இருந்தான் தீபக்.

“டேய் நல்லவேளை டா நீ உள்ள இல்லை. பொண்ணோட அப்பன் இருக்கானே.. அய்ய்ய்ய்யோ…. கேள்வியா கேட்டு கேட்டே சாவடிச்சிட்டான் டா” கூறிய தீபக்கிடம் ரமேஷ்

“ஆமா சார் என்ன செஞ்சீங்க? யாரும் அவங்க லவ்வர்கிட்ட கூட இப்படி பேசிருக்க மாட்டாங்க டா. அவ்வளவு மெதுவா சத்தமில்லாம காதோட காது வச்ச மாதிரி போன்ல உன்கிட்ட பேசிகிட்டு இருக்கேன். இடிய முழுங்கிட்டு பிறந்தவன் ஒட்டுக்கேட்டதோட மட்டும் இல்லாம விஷயத்த டமால்னு போட்டு உடைச்சிட்டான் எல்லார் முன்னாலையும்” என்றான் கிருஷ்ணாவிடம்.

“என்னது விஷயத்தை சொல்லிட்டானா?” சற்று அதிர்ச்சியானான் கிருஷ்ணா.

“டேய் உளறினது நான் தான். ஆனால் அதை சமாளிச்சதும் நான்தான? நீ கிருஷ்ணா –வ கூட்டிக்கிட்டு வர்றதா வெளியில போய்ட்ட.. அந்த சொட்ட மண்ட போட்டு வாரு வாருனு வாரிக்கிட்டு கிடந்தான்” தீபக் காலரை தூக்கிவிட்டுக்கொண்டான்.

“சார் அப்படி என்ன சொல்லி சமாளிச்சீங்க???” கேட்டான் ரமேஷ்.

“நீங்க ரெண்டு பேரும் சுச்சா போயிருக்கீங்கனு சொல்லிட்டேனே” சொல்லிவிட்டு கலகலவென சிரித்தான் எதையோ சாதித்தது போல.

“அட கருமம் பிடிச்சவனே” என்ற ரமேஷின் சத்தம் சிவகாமியின் கூச்சல் அடங்கியதும் கேட்க, அப்பொழுதே வீட்டின் காலிங் பெல்லும் அலறியது. அப்பா கதவை திறக்க வெளியில் சென்றார்.

“புரோக்கிளுக்கு கால் பண்ணிருந்தேன் மா பொண்ணு விஷயமா அவருதான் வந்திருப்பாரு” கிருஷ்ணா சொல்லிக்கொண்டே வாசலுக்கு சென்றான். ஆனால் அவனுக்காக அங்கு காத்திருந்தோ ஒரு இளம் பெண். பறக்கவிடப்பட்ட தன் கூந்தலை கோதியவாறு நின்றிருந்தாள்.

மிடுக்கான தோற்றம். கருப்பு கண்ணாடி கழுத்தில் தொங்கவிடப்பட்ட இடுப்புவரையிலான மேற்சட்டை, கால்களை ஒட்டிய, ஆங்காங்கே கிழிந்த நவநாகரீக ஜீன்ஸ் காற்சட்டை.

கிருஷ்ணாவுக்கு ஒன்றும் புரியவில்லை,மனதிற்குள் ‘யாரு டா இந்த பொண்ணு லூசு மாதிரி டிரெஸ் பண்ணிருக்கு.. ஹாஹாஹா’ என்று தனக்குள்ளேயே சிரித்துக்கொண்டான்.

“உன்ன பார்க்க தான் டா வந்திருக்காங்களாம்” என்று கூறிவிட்டு உள்ளே சென்றார் அப்பா.

“எஸ்.. ஜென்டில் வுமன்.. அயம் கிருஷ்ணா” என்றான்.

‘பளார்’ என ஒரு அறை விழுந்திருந்தது அடுத்த கணம்.

ஆம்.. அந்த பெண் கிருஷ்ணாவின் முகத்தில் வண்ணம் பூசியிருந்தாள்.

அதாங்க.. அந்த புள்ள நம்ம ஹீரோவையே அடிச்சிட்டு போய்டுச்சி..!

ரம்யாவை அவள் வீட்டிற்கு அனுப்பி வைத்த கலை, கட்டிலில் படுத்து சிறிது நேரம் அயர்வை போக்கினாள். அவளது பகல் நித்திரையை துவம்சம் செய்தது கைபேசியின் அலறல் சத்தம். அவள் நித்திரையை மட்டும் அல்ல குடும்பத்தின் நிம்மதியையும் துவம்சம் செய்யப் போகிறது என்று அவள் அப்போது அறியவில்லை. கைபேசியை கையில் எடுத்து அதன் திரையை பார்த்தாள். ஏதோ புதிய எண் அழைப்பு எழுந்து அமர்ந்து “ஹலோ” என்றாள்.

“என்ன கலை ரொம்ப சந்தோஷமா இருக்க போல.. மாப்பிள்ளை எல்லாம் பார்த்துட்டு போனதா கேள்வி பட்டேன்.. நான் விட்டுடுவேனா உன்ன?” என்றது அந்த கர்ஜனையான குரல்.

“உன்னால முடிஞ்சத பார்த்துக்கோடா” என்றபடி இணைப்பை துண்டித்தாள். மீண்டும் அழைப்பு வந்தது.

“என்ன டி பேசும்போதே கட் பண்ணுற.. அவ்வளவு திமிரா?” என்றான்.

மீண்டும் கட் செய்து சிம்மை அகற்றி ஒடித்து எறிந்துவிட்டாள். அந்த நேரம் கீதா உள்ளே வர,

“அக்கா என்ன அக்கா பண்ணுற” என்று கூச்சலிட

“உன் வேலையை பார்த்துக்கிட்டு போ டி” என்று மீண்டும் நித்திரைக்கு செல்ல எத்தனித்தாள்.

“எதுக்கு இப்ப கத்துற? அப்பா உன்ன சாப்பிட கூப்பிட்டுச்சு வா” என்றாள்.

“எனக்கு சாப்பாடு வேண்டாம் நீங்க சாப்பிடுங்க” என்றாள் கலை.

“எதுக்கு சாப்பாடு வேண்டாம்” என்றவாறு உள்ளே வந்தார் அம்மா.

“வேண்டாம்னா விடேன் மா எதுக்கு எல்லாரும் என்ன போட்டு படுத்துறீங்க?” தலையை பிடித்துக்கொண்டு கத்தினாள் கலை.

“என்ன ஆச்சு கலை எதுக்கு இப்படி கத்திகிட்டு இருக்க?” அப்பாவும் தன் பங்கிற்கு கேள்விகளை தொடுக்க, கலைக்கு தலை வெடித்துவிடும் போல் ஆனது. வீடே அதிர கூச்சலிட்டவாறு மேஜை மேல் இருந்த தண்ணீர் குடுவையை தள்ளி விட்டாள்.

என்றும் சுட்டியாய் மட்டுமே கண்ணில் பதிந்த கலையை, கோப கனல் சுட்டு பொசுக்கும் பாணியில் கண்டது அனைவரது மனதிலும் அதிர்ச்சியையும் நெருடலையும் தீரா கனத்தையும் கொடுத்தது.

“ஏய்! என்ன டி ஆச்சு? லூசு பிடிச்சிட்டா உனக்கு? எதுவா இருந்தாலும் சொன்னாதான தெரியும்” என்ற கீதாவின் வாயை அடைத்த அம்மா

“நீ தூங்கி எழுந்திரி அப்புறம் பேசிக்கலாம்” என்று அறையை விட்டு வெளியேறினார். கீதாவும் பின்னே சென்றுவிட்டாள் கோவத்துடன்.

அப்பா கலையின் அருகே சென்று “வா டா மா அப்பாவோட மடியில படுத்துக்க!” என்று அவளை சாய்த்து மடியில் போட்டு தலையை வருடிக்கொடுத்தார்.

அப்பாவின் ஸ்பரிசம் தீண்டிய அடுத்த கணம் கண்களில் வெள்ளப் பெருக்கெடுக்க அழுதாள்.

அவளிடம் கேள்வி ஒன்றும் எழுப்பாது அவளது கண்ணீரை துடைத்துவிட்டபடி தன் ஆறுதலை சமர்ப்பித்துக் கொண்டிருந்தார் அப்பா.

அழுது வீங்கிய முகம், வாடி வதங்கி தெம்பின்றி எட்டிய தூக்கத்தின் உதவியால் சாந்தம் அடைந்தது. அவள் கண் விழிக்கும் வரை அப்பா அங்கிருந்து நகரவில்லை. சோர்ந்த கண்கள் மெல்ல விழித்திறக்க மணியோ இரவு ஒன்பதை தொட்டிருந்தது.

“அப்பா நீங்க இன்னும் இங்க தான் உட்கார்ந்திருக்கீங்களா?” என்றாள் தன் செயலை எண்ணி நொந்துக்கொண்டவள்.

“ஒன்னுமில்லை டா மா இப்ப உனக்கு எப்படி இருக்கு?” என்றார் தலையை கோதியபடி.

“மன்னிச்சிருங்க பா நான் ரொம்ப கஷ்டபடுத்துறேன் எல்லாரையும்” என்றாள்.

“ச்சி.. குட்டி கழுத.. அப்பா தான டா..! சொல்லு உனக்கு என்ன பிரச்சனை? எதுவா இருந்தாலும் அப்பா பார்த்துக்கிறேன்” என்றார்.

( அவளே சொல்லும்வரை இதை கேட்க வேண்டாம் என நினைத்திருந்தவர் விஷயம் பெரிதாய் இருந்தால் தன் அன்பு மகளை இன்னும் பாதிக்குமே என்று எண்ணி ஒருமனதாய் தன் கேள்வியை கேட்டுவிட்டார்)

“ஒன்னுமில்லை பா.. கொஞ்சம் டென்ஷன்.. அதனால தான் கத்திட்டேன்.. பிரச்சனையெல்லாம் ஒன்னுமில்லை.. இப்ப எனக்கு உடம்பு பராவாயில்லை” என்ற கலையின் அடுக்கடுக்கான வார்த்தைகளின் பொய்மையை உணர்ந்த அப்பா தற்போதைக்கு விட்டுவிடலாம் என மனதை அமைதிப்படுத்திக் கொண்டு

“சரி மா வா சாப்பிடலாம்” என கூட்டி வந்தார்.

அம்மாவும் கீதாவும் உணவை எடுத்து வைக்க கலை கீதாவின் அருகில் சென்று அமர்ந்தாள்.

“எம்மாடி! இந்த ராட்சஷி பக்கத்துல எல்லாம் நான் உட்கார மாட்டேன் பா!” என்று கூறிக்கொண்டே எழுந்து ஓட முயன்றாள்.

அவள் கையை பிடித்து கலை ஒரே இழு இழுத்து கீழே உட்கார செய்தாள்.

“இப்ப நீ மட்டும் என் பக்கத்துல உட்கார்ந்து சாப்பிடல மவளே”

என கலை சொல்லி முடிப்பதற்குள்

“என்ன என் சாக்லேட்ட திருடி நீ சாப்பிட்டுவ அதானா? எல்லாம் பதுக்கி வைக்க இடம் பார்த்தாச்சி பார்த்தாச்சி ஹுக்கும்!” என்றாள் கீதா.

கலை சிரித்துக்கொண்டே “இல்லை மேடம்.. இன்னைக்கு நைட்டு கனவுல உங்களுக்கு பேய் தான்” என்றாள்.

“எரும மாடே.. எரும மாடே.. பேய் –னு சொல்லாதனு சொல்லிருக்கேன்ல.. ?? பாரு மா இவள..!” என்று பொய் சிணுங்கல் காட்டினாள் கீதா.

“கொஞ்ச நேரம் வாய மூடிக்கிட்டு சாப்பிடுங்க டி” என்றார் அம்மா.

“பாருடா..! அம்மா நமக்கே டாஸ்க் கொடுக்கிறத..?! ஹாஹா.. வா அக்கா நாம அம்மா சொன்ன மாதிரி கொஞ்ச நேரம் வாய மூடிக்கிட்டு சாப்பிட்டு காமிப்போம்” என்றாள்.

“ம்ம்.. வா” என கலையும் தயாராக

ரெண்டு வாண்டுகளும் என்ன செய்ய போகுதுனு அப்பாவும் அம்மாவும் பார்த்திருக்க முதலில் கலை வாயை தன் ஒரு கையால் மூடிக்கொண்ட கீதா, மறு கையால் உணவை அள்ளி தன் வாயில் வைத்துக்கொண்டாள். மீண்டும் கலை தன் ஒரு கையால் கீதாவின் வாயை மூடிக்கொண்டு, மறு கையால் ஒரு வாய் உணவெடுத்து தன் வாயில் வைத்துக்கொண்டாள்.

இப்போ மென்னு முழுங்கலாம் என்று கண்களால் கூறிக்கொண்டு சாப்பிட்டனர். வீடு சற்று சகஜ நிலைக்கு வந்துவிட்டதாய் எண்ணி கலையின் அம்மா மூச்சுவிட்டாலும், கலையின் வெற்று சிரிப்பையும் பொய் சமாளிப்பையும் உணர்ந்தவிட்ட அப்பா மூச்சடைத்து தன்னுள் மூழ்கிக் கொண்டிருந்தார். தன்னுடைய அன்பு மகள் சிக்கித் தவிக்கும் துன்பம் தன்னில் இருந்து அவளை விடுவிக்க வேண்டுமென எண்ணி தானே களத்தில் இறங்க முடிவெடுத்தார்.

சில மாதங்களுக்கு பிறகு…

காலை 8 மணி. கல்லும் கசிந்துருகும் வண்ணம் கதிரவன் தன் கதிர்களை கர்வத்துடன் கொட்டித் தீர்த்த அந்த கோடை காலத்தில் கலை முதலாமாண்டு முதல் நாள் கல்லூரிக்கு செல்லும் தன் தங்கை கீதாவிடம் அவளது கல்லூரி பேருந்து வந்ததும்,

“காலேஜ்க்கு போக ஆரம்பிச்சுட்ட கொஞ்சமாவது கவனமா இரு”என்று சற்று தீட்டிய படியே ஏற்றி விட்டு டாடா காட்டினாள் கலை.

பின், தான் வேலைக்கு வழக்கமாக செல்லும் பேருந்தினை எதிர்நோக்கி பேருந்து நிலையத்தில் காத்துக்கொண்டிருந்தாள். நேரம் கடந்தும் பேருந்து வந்த பாடில்லை. பின்புறத்தில் இருந்து வரும் விசில் அழைப்பு ஓசை சுட்டெரிக்கும் வெயிலின் எரிச்சலை விட சற்று அதிகமாகவே இருந்தது கலைக்கு..

பொதுவாக இளங்கயவரது லீலைகளைக் கண்டு ஒதுங்கிப் போகும் பெண்களுக்கு மத்தியில் விசில் எழுப்பிய ஆடவனின் முகத்தினை தன் பார்வையால் கிழித்தெறிந்து, ஒரு அடி அவனை நெருங்கி சென்ற கலையை கண்டு அந்த ஆடவன் சற்று அதிர்ந்து போனான் என்றே சொல்ல வேண்டும். இரண்டு அடி அவனை நோக்கி கலை எடுத்து வைக்க, அதற்குள் பேருந்து வந்துவிட்டது.

“இன்னைக்கு தப்பிச்சிட்ட டா” என எண்ணியவாறு இரண்டு அடி எடுத்து வைத்து பேருந்தில் ஏறி இருக்கையில் அமர்ந்தாள் கலை. பயணிகளுடன் பயணியாய் ரேடியோவும் கதை பேசிக் கொண்டிருக்க, நேரமாகிவிட்டதோ என கலை தன் கைகடிகாரத்தை பார்த்துவிட்டு பின் ஜன்னல் வழியே வேடிக்கைப் பார்க்க தொடங்கினாள்.

அத்தனை நேரம் கதைத்துக் கொண்டிருந்த ரேடியோ தற்போது சங்கீத சுருதிக்குள் நுழைந்தது. கூட்டத்தின் அனைத்து சலசலப்பினையும் தாண்டி அப்பாடல் கலையை மிக எளிதாக தன் வசம் இழுத்தது.

அடிக்கும் வெயிலின் தாக்கத்தினால் பயணிகள் ஒவ்வொருவரும் தண்ணீர் குடிப்பது, கைக்குட்டையினால் வீசிறிக்கொள்வது என வெவ்வேறு செயல்களில் ஈடுபட்டிருக்க கலை மட்டும் ரேடியோவில் ஒலிக்கும் பாடலுக்கு தன் காதுகளையும் உணர்வுகளையும் கடன் கொடுத்துவிட்டவளாய் அசைவின்றி அமர்ந்திருந்தாள்.

பாதையின் குறுக்கே எதிர்பாராமல் பாய்ந்த நாயினைக் கண்டு பிரேக்கை சட்டென அழுத்தினார் பஸ் டிரைவர். பஸ்ஸில் ஏற்பட்ட திடீர் அதிர்வினால் ரேடியோ பாடல் நின்று போக, திடுக்கென பதறியவாறு தன்னிலை திரும்பினாள் கலை. மீண்டும் சராசரி வேகத்தில் பேருந்து பயணமாக, கலை தன்னுள் அப்பாடலை படமாக்கத் தொடங்கினாள்.

இப்பாடலை, தான் கடந்து வந்த ஒவ்வொறு பருவநிலையினையும் தன்னுள் கிரகித்துக் கொண்டே வந்தாள். உணர்வில் ஒன்றும் பூத்திடச் செய்யாத ஓர் சராசரி பாடலாய் அறிமுகமாகி, தன்னை மறந்து இன்ப வெள்ளத்தில் மூழ்கி தன் உயிருடன் உறவாடிய இன்னிசை பாடலாய் உருமாறி, என்றேனும் தப்பித்தவறி காதில் கேட்டுவிட்டால் இடியை விழுங்கிய மேகம் கர்ஜித்துக் கொட்டும் மழையென அழுது ஓடி ஒழிவதாகி பல பரிணாமங்களைக் கொண்ட அதே பாடல் தற்போது பனிமலர் ஏந்திய கொடும் கனமென நெஞ்சில் ரணத்தோடும் உதட்டில் புன்னகையோடும் கடப்பதற்குரிய அவதாரம் கொண்டுள்ளது அவளிடத்தில்.

துளிர்த்தது ஒரு துளி கண்ணீரே ஆயினும் அதனை தேவையற்று வீணடிக்க மனமில்லாதவளாகத் துடைத்துக் கொண்டு தன் இதழினை மலரச் செய்தாள். இத்தனை பரிணாமமும் அத்தனை உருமாற்றமும் கொண்ட பெரும் பிணி பெண் இவளை விரும்பி வந்தடைந்ததற்கு காரணம் ஒருவனே..

கன்னியமான கன்னியவள் கன்னக்குழி சிரிப்பிற்கு காரணமானவன் எவனோ அவனே..

கட்டுமரமாய் தனியே தவிக்கவிட்டு, மனம் கல்லாகிப்போக காரணமானவன் எவனோ அவனே..

கரிசல் காட்டு கண்ணகி அவளது கண்ணாளன் எவனோ அவனே.. அவன் ஒருவனே..

பட்டாம்பூச்சி அவள்,

மயக்கும் வர்ணங்கள் தன்னிடம் கொண்ட போதிலும் கர்வமின்றி மனதில் சமநிலை அன்பெனும் வர்ணங்கள் கொண்டு ஆகாயத்தில் பறந்தாள். காதல் வாடைப்பட்டு தன் வாசம் திறந்தாள்; சுவாசம் மறந்தாள்.

பட்டாம்பூச்சி அவள்,

கண்ணாடிக்கூண்டில் அடைந்த போதிலும் மதி மயக்கத்தால் அதன் மதிலை ஊடுருவி உலகம் காண மறந்தாள். தன் கள்வன் பிம்பம் ஒன்றை மட்டுமே கண்ணாறக் கண்டு கொஞ்சம் கொஞ்சமாய் தன் நெஞ்சினுள் அவனை கரைத்தாள்; அவனுள் தன்னை மறைத்தாள்.

பட்டாம்பூச்சி அவள்,

கிளிக்கூண்டு என தெரிந்த போதிலும் கம்பிக்கிடையில் நுழைந்து சுதந்திர வெளியில் பறக்க மறுத்தாள். விடுதலை விரும்பா கைதியாக அவன் இருதய சிறையில் அடைப்பட துடித்தாள். தன் உயிரில் அவனை பூட்டிக்கொண்டு சாவியை தொலைத்தாள்.

அவனை காணும் முன் என்றென்றும் புன்னகையில் திளைத்திருப்பாள். அடுத்தவர் சோகம் திறக்கும் ஒற்றை மந்திரக்கோலாய் இருந்தது அவளது அந்த அழகிய சிரிப்பினால் செதுக்கப்பட்ட தெய்வீக முகம். காண்போரை எல்லாம் எளிதில் ஈர்த்துவிடுவாள் அந்த பிச்சிப்பூ வாசக்காரி. தன்னை கடிந்துக் கொள்பவரிடம் கூட நறுக்கென வார்த்தையினை அவிழ்காது நாசுக்காய் தெளியவைக்கும் நங்கை அவள்.

இவ்வத்தனை ரத்தினத்தையும் சூரையாடிக்கொண்டு அவற்றுடன் அவளையும் தன்வசமாக்கினான் அந்த கொள்ளைக்காரன். அவள் இதயத்தில் சிதறிக்கிடந்த இவ்வனைத்து முத்துக்களையும் வாரி மூட்டையெனக் கட்டி ஒரு மூலையில் போட்டுவிட்டு அவ்விடத்தில் பாய் விரித்துப் படுத்துக்கொண்டான் அவன்.

அவளே காரணமாய் இருந்த அவளது சிரிப்பிற்கு காரணி அவனாய் ஆனான். இத்தனை ரகசியத்தை கவரும் வண்ணம் எய்த அவளது அன்பின் அம்பு அவள் உயிர் சிதைக்கும் ஆயுதமாய் மாறியது. வாழ்க்கையை உணரத்தொடங்கினாள்.

இருப்பது காணாது என்று சொல்வது போல், அவளது அதிக பட்சமான அழுத்தத்திற்கு விருந்தாளி போல் துணை வந்தது அப்பாவின் தொழில் முடக்கம். இருந்தும் வீட்டின் துயர் நீக்கத் துடிக்கும் தேவியாய் இருந்தாள் அவள்.

அம்மாவின் சோக சங்கதிக்கு வர்ணம் பரிசளிக்க விளையாட்டாய் வாழ்க்கை தத்துவம் பேசுகையில் கிடைக்கும் “உனக்கென்ன டி புரியும் இந்த மனவலியெல்லாம்” என்ற ஒற்றை வார்த்தையின் ஆழத்தை சமீபத்தில் பரிட்சயமானவள், அதை தன் ஒற்றை சிரிப்பினால் கடந்திடுவாள் அந்த மாயக்காரி.

எதிலும் முதன்மையானவள். அப்பாவிற்கு கைகொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மேற்படிப்புக்கு செல்லாது பணியில் இறங்கியதால், தன் வேலைகளை செம்மையாக செய்ய வேண்டும், நற்பெயர் எடுக்க வேண்டும் என அயராது உழைப்பாள்.

நினைத்தபடியே தனது வேலை சுத்தத்தினால் ஒட்டுமொத்தமாய் அனைவரது மனதிலும் தன் பெயரை பதித்தவள், நாட்கள் நகர நகர இவை அனைத்தையும் மறந்து அவன் ஒருவன் பெயரையே பதித்து வந்தாள் தன் உயிரின் ஒவ்வொரு செல்களிலும். உயிரோடு ஒட்டிய பிணியை குணப்படுத்த முடியாதவளாய் தவித்துக்கொண்டிருந்தாள்.

நாட்கள் நகர்ந்து மாதங்களாகின. தொடர்ந்த மாதங்கள் அவளை மந்தமாக்கத் தொடங்கின. குடும்பத்தின் பொல்லா நிலையும், பாடாய் படுத்தும் காதலின் கண்மூடித்தனமும், அண்டமாய் இருந்த அலுவலக வேலை அழுத்தமும் அவள் புன்னகையை மனதளவில் சிதைக்கத் தொடங்கியது.

ஒவ்வொரு நாட்களும் கூட கூட, தனக்கான பொறுப்புகளை தானே கூட்டிக் கொண்டாள். தன்னை சூழ்ந்துள்ள கொடும்பிணி தன்னை கட்டிப்போட்டு இருட்டறையில் அடைப்பதை அறிந்தும் ஒன்றும் செய்ய முடியாமல் தனக்குள் குமுறிக்கொண்டிருந்தாள்.

இவை அனைத்திற்கும் முன்பே, அவளது போலியான சிரிப்பினை அறிந்திருந்தான் அவளது அலுவலக மேனேஜர் ராகுல். மேனேஜர் என்ற போதிலும் கலையின் மீது தனி மரியாதை கொண்டுள்ள அவன் அவளிடம் தோழமையாகவே பழகினான்.

தோழமையை அடுத்த கட்ட உறவிற்கு எடுத்து செல்ல வேண்டும் என்பது ராகுலின் ஆசையாய் இருந்தாலும், அதை ஒரு நாளும் கலையிடம் காட்டிக்கொள்ளவில்லை. துன்பப் பிணியில் அவள் வாடுவதைக் கண்டு வருந்திய ராகுல், அவளாய் வாய்திறப்பாள் என அமைதிக் கொண்டிருந்தான் இத்தனை நாட்களும்.

ஒரு நாள் வழக்கம் போல் அலுவலகத்திற்கு வந்தாள் கலை. அழுது வீங்கிய முகம் தன்னில் அள்ளி அப்பப்பட்ட பொய் நகையுடன் அவள் வந்து நின்றது ராகுலின் பொறுமையை சுக்குநூறாக்கியது. அவள் பேச வாயெடுக்கும் முன் தானே முந்திக்கொண்டான்.

“என்ன ஆச்சு கலை உங்களுக்கு..? நான் ரொம்ப நாளா உங்கள கவனிச்சிக்கிட்டு தான் இருக்கேன்.. என்ன பிரச்சனை உங்களுக்கு..?” என உரிமையாய் கோபித்துக் கொண்டு மேலும் கேள்விகளை அடுக்கினான்.

“பிரச்சனையா..?? அப்படியெல்லாம்ம்ம்ம்ம்” அவள் சொல்லி முடிப்பதற்குள் அவளது காதுகளை துளைத்தது அதே பாடல்.

அவனது அத்தனை கேள்விகளுக்கும் அந்த ஒற்றை பாடலுக்கும் அவளது பதில், எத்தனையோ காலமாய் புழுங்கும் மனதை மறைக்கத் தெரியாத அந்த நீண்ட குமுறல் மட்டுமே. இதுவரை கோடானு கோடி இன்னல்களிலும் சிரிப்பு மட்டுமே குடிக்கொண்டிருந்த அந்த முகத்தின் இந்நிலையினை கண்ட ராகுல், தன் இரவு நித்திரையை தொலைத்தான்.

செய்வதறியாது மறுநாள் அவளை காண அவள் இல்லம் சென்ற ராகுல், அவளது நடவடிக்கைகளைக் கண்டு பிரம்மித்தே போனான். நடப்பவை அனைத்தினையும் ஒரு ஓரத்தில் நின்று கவனித்துக் கொண்டிருந்தான்.

வீட்டில் பாடும் வசைகளுக்கெல்லாம் மிகுந்த இன்முகத்தோடு முற்றுப்புள்ளி வைத்து இன்பத் தொடர்புள்ளியாய் மாற்றும் அவளது கச்சிதமான அரவணைப்பினை கண்டு வியந்தான். அவளிடம் தன் அன்னையை உணர்ந்தான்.

எரிமலையில் விழுந்த எறும்பென துக்கத்தில் வெந்து பொசுங்கிக் கொண்டிருப்பவள், எரிமலை குழம்பென சிதறாது பனிமழையாய் பொழியும் அந்த சக்தியினில் துர்கையினையும், பூமாதேவியினையும், பார்வதிதேவியினையும் ஒரு சேரக் கண்டான்.

எதற்கெடுத்தாலும் குறை கூறும் இவ்வுலகினில் எப்படி ஒரு உள்ளம் தனது அனைத்து பிணியினையும் மறைத்து இன்முகம் காட்டி மற்றவரை இன்பத்தின் வழியே அழைத்துச் செல்ல இயலும் என ஒருபக்கம் குழம்பினான்; மறுபக்கம் பூஜித்தான்.

தன் துயரை எவரிடமும் செல்லாமல் இருக்கும் அவளது உள்ளத்தின் கனத்தையும் ரணத்தையும் உணர்ந்தவன், பிரச்சனை என்னவென்று தெரியாமல் தன் வினாக்களுக்கு விடைத்தேடி வந்தான். விடை கிடைக்கவில்லை; ஆனால் வினாவும் நீடிக்கவில்லை. பெண்ணின் மனதின் ஆழத்தையும் அதில் சுமக்கும் பாரத்தையும் அவளிடம் உணர்ந்துக்கொண்டான். உணர்ந்தவன், கலை தன்னை அழைப்பது கூட தெரியாமல் உறைந்து போய் நின்றிருந்தான்.

“சார்..! சார்..! ஆர் யூ ஆல்ரைட்??” என்றாள்.

“யா.. கலை.. ஐ அம்..!” என்றவன் தன்னிலை திரும்பினான்.

“என்ன சார் அதிர்ச்சியா இருக்கு? வீட்டுக்கு வந்துருக்கீங்க?” என்றாள்.

“ஏன் கலை நான் வரக் கூடாதா?” என்றான் சூட்சும புன்னகையோடு.

“அட கடவுளே அப்படி சொல்லல சார் வாங்க வந்து உட்காருங்க” என்றவள் வீட்டில் அனைவரையும் அறிமுகப்படுத்தினாள்.

இளம் வயது பெண் என்றால் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் மட்டுமே இருக்கும் என்று யார் கூறினார். அவள் மனதிலும் இருக்கும் கொடும் பிணி. உள்ளுக்குள் புண்ணாக்கிக் கொண்டு வெளியில் புன்னகைத்து திரிபவள் இளங்கன்னியவள்.

குழப்பத்துடன் வாழ்க்கை பாடங்களை கற்கும் வயதில், அவளது உணர்வினை மதிக்காவிடிலும் சபிக்காதிருக்கலாம் என எண்ணினான் ராகுல். தன் சுயம் இழந்து, தெரிந்தே தன்னை தொலைத்து, தலை குனியும் படலம் ஒவ்வொருவர் வாழ்விலும் நிச்சயம் வந்துவிடுகிறது.

வாய் சொல்லால் விவரிக்க இயலும் பிணிகள் பல..

கண்ணீர் வடித்துக் கொட்டித் தீர்க்கும் வலிகள் பல..

கொண்ட ரணத்தால் வாயடைத்து மெளனம் பேசும் மொழிகள் பல..

இவற்றை இவ்வளவு கச்சிதமாய் கையாளும் கலை, ராகுலின் மனதில் இன்னும் பெரிய சிம்மாசனமிட்டு அமர்ந்துக் கொண்டாள். அவளை இந்த கணமே தூக்கிச் சென்று தன்னவளாக்கி மகாராணி போல பார்த்துக்கொள்ள வேண்டுமென புடைத்து நின்ற அவனது காதல் நரம்புகளை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்தினான்.

“கலை ஒரு முக்கியமான விஷயம் சொல்ல தான் இப்ப வந்தேன்” என்ற ராகுலிடம்

“சொல்லுங்க சார்” என்றாள் கலை.

“சம்திங் பர்சனல் தனியா பேசலாமா?” என்று மெல்லிய குரலில் கேட்டான்.

சிறிது குழப்பத்துடன் “வாங்க சார் ” என தோட்ட பகுதிக்கு அழைத்து சென்றாள் கலை. அங்கிருந்த நாற்காலியில் அவனை அமரச் சொல்லி தானும் அமர்ந்தாள்.

ராகுல், தன் மேற்சட்டை மேல் அணிந்திருந்த கோட்டை கழற்றி நாற்காலியின் முன் இருந்த மேஜை மேல் வைத்தவன், பூட்ஸ் அணிந்திருந்த தன் கால்களை ஒன்றின் மேல் ஒன்றாக போட்டு சவுகர்யமாக அமர்ந்தான்.

“சொல்லுங்க சார், வேலை விஷயமா பர்சனல்னா ஆபிஸ்லயே பேசிருக்கலாமே சார்?” என்றாள்.

“இட்ஸ் நாட் எபௌட் அவர் ஒர்க் இட்ஸ் எபௌட் யூ” என்றான் ராகுல்.

“என்ன பத்தியா? என்ன சார் சொல்லுறீங்க?” கலையின் குழப்பம் அதிகமானது.

“நான் சுத்தி வளைத்து பேச விரும்பல கலை. நீங்க ஏதோ மனசுல போட்டு குமுறிக்கிட்டு இருக்கீங்களே அது என்னனு நான் தெரிகஞ்சிக்கலாமா?” என்றான் துப்பாக்கியில் இருந்து புறப்பட்ட தோட்டாவை போல.

தன்னிடம் பதில் எதுவும் இல்லாதது போல அமைதியாய் தலைகுனிந்தாள் கலை.

அவளது சோகத்தை தனக்கு சாதகமாய் எடுத்துக் கொண்டு அவளுக்கு ஆறுதல் கூறி அவள் மனதில் இடம் பிடிக்க முயன்றான் ராகுல்.

அவளோ தன் கள்வனை வைத்துப் பூட்டிய தன் இதயத்தின் சாவியை தான் தொலைத்து விட்டாளே! அப்படி இருக்கையில், அவளது இதய கதவினை திறப்பது கூட அவனால் முடியாத காரியம் என்பதை அறியாதவன், அவள் மனதில் ஒர் இடத்தை பிடிக்க எண்ணும் பச்சிளமாய் “வாய்ப்பில்லை ராஜா” என்று விதி அவனை கேலிப்பதை கூட உணர இயலாதனாய் பேசிக்கொண்டிருந்தான்.

“சொல்லுங்க கலை. என்ன உங்க பெஸ்ட் பிரண்டா நினைச்சிக்கோங்க. மனசு விட்டு பேசுங்க” என்றான்.

‘டேய் பால் டப்பா ஏன் டா என் உயிர வாங்குற’ என்று எண்ணியவள்,

“அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை சார். அப்பாவுக்கு தொழில் முடக்கம், வீடு கஷ்டத்துல இருக்கு. அதுதான் உங்களுக்கே தெரியுமே?” என்றாள்.

“என் கிட்ட ஏன் கலை மறைக்கிறீங்க? சும்மா சொல்லுங்க” என்றான்.

‘இவன் விடமாட்டான் போலயே’ என கலை செய்வதறியாது திணறிக்கொண்டிருக்க,

ஐஐஐ….. ஹன்சம்.. என்று துள்ளிக் குதித்துக்கொண்டு அங்கு வந்தாள் கீதா.

அவள் குதித்த குதியில் தரையில் இருந்த மண் சேறு கலையை பார்த்து இளித்துக் கொண்டிருந்த ராகுலின் வாயில் அவன் சுவைக்கும் படி விழுந்தது.

அதை கண்ட பொழுதினில் சிரிப்பினை அடக்க முடியா கன்னிகைகள் இருவரும் அதீத சத்ததின் நகைப்பில் மூழ்கிவிட்டனர்.

ஒரு வழியாக கஷ்டப்பட்டு சிரிப்பினை முழுங்கிய கலை,

“ஐயோ சாரி சார், அதோ பைப் இருக்கு போய் முகத்தை கழுவிட்டு வாங்க சார்” என்று அவசரித்தாள்.

என்ன தான் கோபம் வந்தாலும் கலை முன் தன்னை நல்லவன் போல காட்டிக்கொள்ள பொய்யாய் எடுத்து ஒட்டவைத்திருந்த சிரிப்போடு சென்றான் ராகுல்.

“அக்கா சாரி அக்கா” என தொடங்கிய கீதாவை இடை நிறுத்தி பசக்கென்று கன்னத்தில் முத்தியவள்

“சூப்பர் டி!!!” என்றாள்.

“என்னது சூப்பரா..??? அவருதான அக்கா பால்கோவா டப்பா? அதுதான் உன் மேனேஜர்?? இது அவரு இல்லையா?” என்று கேட்டாள்.

“அவருதான்டி” என்றாள் கலை.

“பின்ன சூப்பர்னு சொல்லுற? என்ன கடிச்சி துப்ப போறனு நினைச்சா முத்தா கொடுக்கிற??” என்றாள்.

“அது ஒரு மேட்டர் டி விடு விடு பால் டப்பா வருது” என்று சுதாரித்தாள் கலை.

“சாரி சார். நான் கலையோட தங்கச்சி” கீதா ராகுலிடம் கூறினாள்.

“பரவாயில்லை மா நான் ஒன்னும் நினைக்கல” என்றான் ராகுல்.

“இல்லை சார் சாரி அதுவந்து” என்ற கீதாவிடம் ராகுல் மீண்டும்

“சேறு இப்ப இல்ல மா கழுவிட்டேன் கவலப்படாத!” என்றான்.

“சோறும் இல்லை சார்! நானும் கழுவி வச்சிட்டேன்!” என்றாள் கீதா.

ஒன்றும் புரியாமல் கலையும் ராகுலும் விழித்துக் கொண்டிருக்க,

“அம்மா உங்களுக்காக சமைச்சி வச்சிருந்த சாப்பாட்டை சாப்பிட்டுட்டு பாத்திரத்தை கழுவியே வச்சிட்டேன்!” என்றாள் கீதா.

இந்த மொக்கை காமெடிக்கு வராத சிரிப்பை வலுக்கட்டாயமாக இழுத்து சிரித்தான் ராகுல். ஏனென்றால் நம்ம கலை மீண்டும் அதீத சிரிப்பின் ஆரவாரத்தில் இருந்தாள்.

“ஹாஹா பயந்துட்டீங்களா?!! சும்மா சொன்னேன் சார் வாங்க அம்மா சாப்பிட கூப்பிட்டாங்க” என்ற கீதாவிடம்

“பரவாயில்லை மா நான் கலைய மீட் பண்ண தான் வந்தேன் சாப்பிட வரல” என்றான் வெற்று புன்னகையோடு.

‘அய்ய்ய்யோ பால் டப்பாவுக்கு கோபம் வந்துடுச்சி போலயே’ என்று எண்ணிய கலை

“மன்னிச்சிருங்க சார் சின்ன பொண்ணு விளையாட்டுத்தனமா பேசுவா மனசுல வச்சிக்காதீங்க வாங்க சாப்பிடலாம்” என்றாள்.

“இருக்கட்டும் கலை நான் கேட்டதுக்கு பதில் எப்ப சொல்லுறீங்களோ அப்ப நான் சாப்பிடுறேன் நாளைக்கு ஆபிஸ்ல பார்க்கலாம்” என்று அங்கிருந்து கிளம்பினான்.

“என்ன டி செஞ்சீங்க்க ரெண்டு பேரும்? வந்த மனுஷன சாப்பிடாம அனுப்பிட்டீங்க?” என்றாள் கலையின் அம்மா.

“அம்மா அவரு எவ்வளவு பெரிய ஆபிசர் நம்ம வீட்டுல எல்லாம் சாப்பிடுவாரா?” என்று சமாளித்த கீதா, கலையிடம்

“என்ன அக்கா பால்கோவா டப்பா நிஜமா கோவிச்சிக்கிச்சோ?” என்றாள்.

“அத உன் பால் டப்பா கிட்டயே கேளு!” என்றாள் கலை.

“அக்கா எத்தன தடவ சொல்றேன் அவரு பால் டப்பா இல்லை, பால்கோவா டப்பா” சினந்துக் கொண்டாள் கீதா.

“பார்க்க தான் டி பால்கோவா டப்பா பழகி பாரு அது வெறும் பால் டப்பா தான்” என்றாள் கலை.

இவ்வாறாக பேசிக்கொண்டிருக்க கலை ஆபீஸில் இருந்து ஒரு குறும் செய்தி வந்தது. சென்ற வாரம், அவர்களது விளம்பர கம்பெனி மதுரையில் புதிதாய் ஒரு கிளையினை தொடங்கவிருப்பதால், அதில் அசிஸ்டண்ட் மேனேஜர் பதவியில் ஊழியர் ஒருவரை நியமிக்கும் வண்ணம், கலை பணிப்புரியும் கன்னியானகுமரி கிளையில் சிறு பொது குழு கூட்டம் வைத்து தகுதியானவர்களை சோதனை செய்தனர். அதில் கலை வெற்றி பெற்றிருப்பதாய் கூறி அக்குறுஞ்செய்தியில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப் பட்டிருந்தது.

செய்தியை மகிழ்வுடன் தன் பெற்றோரிடம் சொல்ல முனைந்தாள் கலை.

“அக்கா அப்பா உன்ன மதுரைக்கு அனுப்புவாரா?” என்றாள் கீதா.

“அனுப்பி தான டி ஆகனும்” என்ற கலை

“இந்த முறை அவர நான் கண்டிப்பா மிஸ் பண்ணமாட்டேன்” என்று கண்ணீருடன் சிலிர்த்தாள். கீதா கலையை அணைத்துக் கொண்டாள்.

இரவு வேளை உணவிற்கு பின், கலை இந்த செய்தியினை பெற்றோரிடம் கூறிட, அப்பா எந்த வாக்குவாதமும் இன்றி ஒப்புதல் கொடுத்ததில் கலைக்கு ஆச்சரியம் இல்லை. அவளது அம்மா கடிந்துக்கொள்ளாதது தான் ஆச்சரியம்.

மாதங்களுக்கு முன் அவளது அம்மாவுடைய தோழியின் வழியே வந்து பெண் பார்த்து, பூ வைத்து சென்றதும் 3 நாட்களுக்கு பிறகு, என்றும் இல்லாத தைரியத்தை தன் மனதில் வரச்செய்து, அம்மாவை எதிர்த்து அந்த சம்பந்தம் வேண்டாமென அவள் கூறியதில் ஆரம்பித்தது அவர்களுக்குள் மனஸ்தாபம்.

பெண் பார்த்துவிட்டு சென்ற மூன்றாம் நாள் கலையின் வீடு போர்களமானது.

“பெண் பார்த்துட்டு போனதுல இருந்து உன்னோட முகத்துல நான் பழைய கலையை பார்க்கல டி என்ன தான் ஆச்சு? சொல்லியும் தொலைய மாட்டேங்குற!” என்று கத்திக்கொண்டிருந்தாள் அம்மா.

அப்பாவும் தன்னால் முடிந்தவரை செல்லம் கொஞ்சிக் கேட்டுப் பார்த்தார். அம்மா அப்பாவை கஷ்டப்படுத்த விரும்பாத அவள், தான் செய்த காரியத்தை எண்ணி தன்னை மிகவும் நொந்துக்கொண்டிருந்தாள்.

சொல்வதை தவிர வேறு வழியே இல்லை என்று எண்ணியவள், ஒரு வழியாக தன்னை சமாதானப்படுத்தி தைரியத்தைக் கொண்டு வந்து உண்மையை கூற முன் வந்தாள்.

கலை இளங்கலை மூன்றாமாண்டு ஊடகம் பயிலும் பொழுது, தன் கல்லூரி சார்பாக பல்வேறு போட்டிகளில் கலந்துக் கொள்வதோடு பரிசுகளும் பெற்று வருவாள்.

ஒரு முறை மதுரையில் உள்ள கல்லூரி ஒன்றில் பல்கலை போட்டிக்காக கலையின் கல்லூரி மாணவர்கள் சென்றிருந்தனர். கலையின் கலை திறமையினையும் ஆளுமை திறமையினையும் கண்டு அவளது கல்லூரியின் குழுவிற்கு அவளையே தலைவியாய் நியமித்திருந்தனர். அந்த போட்டிக்கு சிறப்பு விருந்தினராய் வந்திருந்தவர் தான் நமது கிருஷ்ணா.

தமிழ்நாட்டின் முன்னனி ஓவியர்களில் ஒருவரான கிருஷ்ணாவை விழாவின் தொடக்கத்திலேயே அறிமுகம் செய்த அக்கல்லூரியின் தொடக்க விழாவினை காண தவறினாள் கலை.

தன் கல்லூரி நண்பர்கள் அனைவரையும் தொடக்க விழா அரங்கத்திற்கு அனுப்பிவிட்டு, ரிஜிஸ்டர் செய்யும் வேலையில் இருந்த கலைக்கு இளம் சாதனையாளர் கிருஷ்ணா என்ற வசனம் மட்டும் காதில் விழுந்து அடி மனதில் பதிந்திருந்தது. அதை அவள் அப்பொழுது உணரவில்லை.

விழா முடிந்து நண்பர்கள் அனைவரும் அவர்கள் கல்லூரிக்காக ஒதுக்கப்பட்ட அறைக்கு வந்தனர். ரம்யாவும் கலையும் சிற்றுண்டி சாலைக்கு சென்றுக் கொண்டிருந்தனர். கலைக்கு தேன் மிட்டாய் என்றால் மிகவும் பிரியம். ஆகையால் ரம்யா கலைக்காக அதை வாங்கிக் கொண்டு தனக்கு விருப்பமான தேங்காய் மிட்டாயையும் வாங்கிக் கொண்டாள்.

“வேறு என்ன டி வேணும்?” ரம்யா கேட்க அது காதில் விழாதவாறு எதையோ கிறுக்கிக் கொண்டிருந்தாள் கலை.

“யேய் உன்ன தான் டி கேட்கிறேன் வேற என்ன வேணும்?” என்றாள் அழுத்தி

“கிருஷ்ணாவோட போன் நம்பர் வேணும் வாங்கி தரியா?” என்றாள் அருகில் இருந்த வேற்று கல்லூரியின் மாணவி.

கலைக்கு இம்மாதிரியான சில்லறை தனமான பேச்சுக்கள் என்றாள் பிடிக்கவே பிடிக்காது. முறைத்துக்கொண்டே அவர்களை திரும்பி பார்த்தாள்.

அந்த வேற்று கல்லூரி மாணவியும் அவளது தோழிகளும் வாய்விட்டு சிரித்துக் கொண்டிருந்தனர்.

“அந்த வேலையெல்லாம் இங்க செய்யறதில்லை. போய் வேற இடத்தை தேடு” என்றாள் ரம்யா.

இருவரும் என்னவோ சாதாரணமாக தான் கேலித்தார்கள். விளையாட்டு தான் விணையாகும் என்பது போல அதுவே பின்னாளில் தன் நடவடிக்கையையும், செயல்களையும், வாழ்க்கையை திருப்பிப் போடும் என்பதை கலை அப்போது அறிந்திடவில்லை.

அவர்களது கேலிக்கைக்கு ரம்யாவும் பதில் கொடுத்ததைக் கண்ட கலை,

“யாரு டி அது கிருஷ்ணா?” என்று கலையின் வாய் மட்டுமே உச்சரித்தது. மனமோ அவனுடன் நெருங்கிய பந்தம் கொண்டதாய் உணர்ந்தது.

அந்த வேற்று கல்லூரி மாணவிகள் கலையின் கேள்வியை பார்த்ததும்,

“யாரு டி இவ? நாம எல்லாரும் அவன பார்த்ததுல இருந்து நைட்டு தூக்கம் வருமானு யோசனைல இருக்கோம். இவ என்னடானா சாக்லேட் பாய் –அ யாருனு கேட்கிற!” என மீண்டும் சிரிக்கத் தொடங்கினர்.

“ச்சீ என்ன டி இவளுங்க இப்படி பேசுறாளுக” என்றாள் கலை.

“யார பார்த்து ச்சீனு சொன்ன?” என்று கொந்தளித்தாள் எதிர்புறத்தில் ஒருத்தி.

“பின்ன வேற என்ன சொல்லனும். வந்த இடத்துல வந்த வேலையை பார்க்காம இந்த வயசுல பேசுற அழக பாரு” என சண்டை பிடித்தாள் கலை. என்றும் இல்லாது இன்று கலை இவ்வாறு சண்டை பிடிப்பது ரம்யாவுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.

“கலை என்ன டி பண்ணிக்கிட்டு இருக்க? பொது இடத்துல இப்படி கத்திக்கிட்டு இருக்க வா” என்று இழுத்து சென்றாள் ரம்யா.

தொடர்ந்து ஐந்து நாட்கள் நடக்கவிருக்கும் அந்த கலை விழாவின் முதல் நாள், முதல் போட்டியாக ஓவியப் போட்டி நடந்தது. கலை ஓவியம் வரைய சென்றிருந்தாள். துணையாக ரம்யாவும் சென்றிருந்தாள். செல்லும் வழியில ரம்யா கலையிடம்

“ஏன் டி அந்த பொண்ணுங்க கிருஷ்ணா பத்தி பேசினதுக்கு அப்படி சண்டை பிடிச்ச? நீ அப்படி பட்ட ஆளு இல்லையே?” என்று கேட்டாள்.

‘தான் சண்டை பிடித்தது எதற்காக? அவர்கள் அத்து மீறி பேசியதற்காகவா இல்லை அவன் பெயர் வைத்து அத்து மீறி பேசியதற்காகவா? இதுவரை இம்மாதிரியான பேச்சுக்களைக் கண்டால் விலகியல்லவா வந்திருக்கிறோம்? நேற்று சண்டை பிடிக்க காரணம் என்ன? ஏன் அவன் பெயர் சொன்னதும் தனக்குள் ஏதோ செய்கிறது? இத்தனைக்கும் அவனை பார்த்தது கூட இல்லையே?’ என்ற பல கேள்விகளை ஏற்கனவே தனக்குள் வைத்திருந்த கலை ரம்யாவின் கேள்விக்கு பதில் தராமல்

“யாரு டி அந்த கிருஷ்ணா?” என கேள்வியையே எழுப்பினாள்.

இது ரம்யாவுக்கு கூடுதல் அதிர்ச்சியாகவே இருந்தது. ஓவிய போட்டிக்கான அறை வந்துவிட்டதால் ரம்யா பதில் எதுவும் கூறாமல் கலைக்கு வாழ்த்துச் சொல்லி உள்ளே அனுப்பி வைத்தாள். போட்டி முடிந்து வெளியே வந்த கலையிடம்

“என்ன டி நல்லாபடியா முடிச்சியா?” என்று ரம்யா கேட்டாள்.

கலை ரம்யாவின் கேள்வியை காதில் கூட வாங்கியதாய் தெரியவில்லை.

“இப்ப சொல்லு டி யாரு டி அந்த கிருஷ்ணா?” என்றாள்.

“ஆஹா கலை காதல்ல விழுந்துட்டா டோய்!” என்பது போல சைகை செய்தாள் ரம்யா.

“உன் மைண்டு வாய்சு கேட்குது டி நீ ஒன்னும் சொல்ல வேணாம். வா ரூம்க்கு போகலாம்” என்றாள் கலை.

“ஹாஹா அப்படியெல்லாம் இல்லை டி! கிருஷ்ணா சார் தான் இந்த ஈவன்ட்டுக்கு சீஃப் கெஸ்ட். அவரு தமிழ்நாட்டுல டாப் 5 ஓவியர்ல ஒருத்தர். ஒவர் ஆல் சாம்பியன்ஷிப் ஜெயிக்கிற கல்லூரிக்கு அவரு தன்னுடைய பெயின்டிங் அசோசியேஷன் சார்பா ஒரு லட்சம் பரிசுனு நேத்து தொடக்க விழால சொன்னாரு” என்றாள் ரம்யா.

“இந்த பொண்ணுங்க திறமைசாலிகள, சாதனையாளர்கள கூட பார்க்கிறாளுகளா? அதிசயமாயிருக்கு?” என்றாள் கலை.

“யாரு டி திறமையையும், சாதனையையும் பார்த்தா? டாப் 5 என்ன? தமிழ்நாட்டுலயே இவருதான் இளம் சாதனையாளர். சாதனையாளர் பட்டியல்ல சாதனையில சீனியராவும் வயசுல ஜூனியராவும் இருக்காரு. பார்க்கிறதுக்கு பக்கா ஸ்மார்ட்.. பின்ன எப்படி விடுவாளுங்க?” என்று நொடித்துக் கொண்டாள் ரம்யா.

“அதான பார்த்தேன் பூனை எதுக்குடா அடுப்பங்கறைக்கு போகுதுனு!” என்றாள் கலை.

“அது மட்டுமா யாராவது ஏதாவது கேள்வி கேட்கனும்னா சார்கிட்ட இப்ப கேட்கலாம். 2 பேர் ஆளுக்கு 1 கேள்விதான் அப்படீன்னு அந்த அன்க்கர் அண்ணா சொன்னதுதான் டி தாமதம். ஒருத்தி எழுந்து ‘சார் உங்க போன் நம்பர் கொடுங்கனு கேட்டா.. அந்த மனுஷன் சிரிச்சிக்கிட்டே அடுத்த கேள்வினு கேட்டாரு.. இன்னொருத்தி எழுந்து சாம்பியனுக்கு 1 லட்சம், அப்ப ரன்னருக்கு என்ன கொடுப்பீங்கனு கேட்டா.. பாவி பையன்..! ரெண்டாவது கேள்வியோட பதில் தான் முதல் கேள்வினு சொல்லிட்டு சிரிச்சிக்கிட்டே கிளம்பிட்டான் டி….!” என்றாள் ரம்யா.

“ஸ்மார்ட் பாய்” என்றாள் கலை.

“என்னது ஸ்மார்ட்டா?!” என்று புன்முறுவலோடு கேட்டாள் ரம்யா.

“ஹேய் ரொம்ப குழையாத அவ்வளவு பெரிய ஆளுங்க எல்லாம் தன்னோட நம்பர கொடுக்க மாட்டாங்க ரன்னருக்கு என்ன கொடுப்பீங்கனு அந்த பொண்ணு பைசாக்கு அடி போட்டதால அவரு ரெண்டையும் சாதுரியமா சமாளிச்சிட்டு போயிருக்காரு. அதுக்கு தான் அப்படி சொன்னேன்” என்றாள் கலை.

இவர்கள் பேசிக்கொண்டிருக்க ஓவிய போட்டியில் கலந்துக்கொண்ட அனைவரும் அறைக்குள் வரவேண்டுமென அறிவிப்பு வந்தது. அனைவரும் அறைக்குள் கூடிய பின்னர், அங்கு முன்தினம் வருகை தந்திருந்த கிருஷ்ணாவை பற்றிய அறிமுகத்தை கூறிய அக்கல்லூரியின் துணை வேந்தர் AIFACS ( All India Fine Arts and Craft Society) –ல் வெற்றி பெற்ற கிருஷ்ணாவின் ஓவியத்தையையும் கிருஷ்ணாவின் சாதனைகளையும் கூறி நிகழ்ச்சியினை முடித்தார்.

கலை வெளியில் வந்ததும் முந்தைய நாள் வம்பிழுத்த அந்த வேற்று கல்லூரி மாணவி,

“என்னங்க மேடம்! நேத்து என்னமோ ச்சீனு சொல்லிக்கிட்டு போனீங்க இன்னைக்கு கிருஷ்ணாவோட பெயின்டிங்க அப்படி பார்த்துக்கிட்டு இருக்கீங்க?” என்றாள்.

“ஹலோ நான் ரசிச்சது பெயின்டிங்க மட்டும் தான்! அந்த கிருஷ்ணாவ நான் பார்த்த்து கூட கிடையாது!” என்றாள்.

“அப்படியா சரி நான் போன் நம்பர் கேட்டதுக்கு தான அந்த குதி குதிச்ச? நான் உங்கிட்ட சேலஜ் பண்ணுறேன். ரன்னர் ஆகி நம்பர் வாங்கிக் காட்டு பார்ப்போம்” என்றாள்.

“எக்ஸ்க்யூஸ் மீ, நான் இங்க வந்தது அந்த கிருஷ்ணாவோட நம்பர் வாங்கிறதுக்கு இல்லை.. ஒன் மோர் திங்க்.. நான் ரன்னர் ஆக வரல.. வின்னர் ஆக வந்துருக்கேன்!” என கூறிவிட்டு ரம்யா கையை பிடித்து இழுத்துச் சென்றாள்.

“இந்த பிசாசும் ஓவிய போட்டில கலந்துக்கிச்சா டி கலை?” என கேட்டாள் ரம்யா.

“ஆமா டி இரிடேட்டிங்க் ஃபெல்லோஸ்” என்றாள் கலை.

அன்றில் இருந்து ஐந்து நாட்கள் நடந்தேறிய எல்லா போட்டிகளிலும் இவ்விரு அணியினருக்கும் முட்டிய வண்ணமே இருந்தது. வின்னர் ஆக வேண்டும் என்ற முனைப்பினை விட ரன்னர் ஆகிவிட கூடாதென்ற முனைப்பே அதிகமாய் இருந்தது கலைக்கு.

அதன் கூடவே அவனை காண வேண்டும் என்னும் ஆர்வமும் தளிர்விட்டிருந்தது. அவனை குறித்த பேனர்கள், விளம்பர பலகைகள் எதுவும் உள்ளதா என முதல் நாள் யாருக்கும் தெரியாமல் தேடினாள் கலை. எதுவும் சிக்கவில்லை என்பதால் ஓவிய போட்டி தினத்தன்று துணை வேந்தர் கூறிய தேசிய அளவிலான வெற்றி செய்தியினை துருப்பாய் பயன்படுத்தி தன் கைபேசியின் துணையை நாடினாள்.

அவள் விரல் பாஷையில் காதல் கொண்டு, அவள் கண்கள் தேடும் அழகினில் நாணம் கொண்ட அவளது கைப்பேசி அவள் எதிர்பார்த்திருந்த அத்தனை செய்திகளையும் அவள் காலுக்கடியில் போட்டது. அவன் பெயரை கேட்ட போது இருந்த மன நெருக்கம் தற்பொழுது தொலைவில் சென்றது.

“இவன் மூஞ்ச பார்த்தாலே தெரியலையா? பொண்ணுங்கல தன் பின்ன சுத்த விடனும்னு நினைக்கிற மூஞ்சிகள்ல ஒன்னுதான் இது” என்று மனதிற்குள் சபித்துக் கொண்டு போனை கீழே வைத்துவிட்டாள்.

“இது எல்லாம் உன் மனசை சமாதானப்படுத்த தான் நீ பண்ணுறேன்னு உனக்கு தெரியாம இருக்கலாம். ஆனால் எனக்கு எல்லாம் தெரியும். நீ அவன் மேல் கொண்டுள்ள காதல் உட்பட” என்று சொல்லி மறைந்தது அவளது மனசாட்சி.

விழாவின் இறுதி நாளும் வந்தது. சாம்பியன் அறிவிப்புக்காக பாதி கூட்டம் காத்திருக்க, கிருஷ்ணாவின் தரிசனத்திற்காக மீதி கூட்டம் காத்திருந்தது. நன்றியுரையை அனைவரும் பேசி முடித்த பின்னரே கிருஷ்ணா வருகை தந்தான்.

அந்த பிரம்மாண்ட மேடையை நோக்கி ராஜாவை போல நடந்துவந்த அவனது பிம்பம் அங்கிருந்த இளம் கன்னிகளின் கண்களுக்கு விருந்தாகவும், இளம் காளைகளுக்கு மருந்தாகவும் இருந்தது. சிறு துள்ளலுடன் மேடையின் படிகளில் ஏறி தனக்கான இருக்கையினில் அமர்ந்தான் கிருஷ்ணா.

“இவரு தான் டி கிருஷ்ணா..” என்று கரவோசை கர்ஜித்துக் கொண்டிருக்கும் அந்த கூட்டத்தில் ஒரு ஓரமாய் நின்றிருந்த ரம்யா கைகளை தட்டி வரவேற்பை தெரிவித்தபடி தன் அருகில் உள்ள கலையின் காதை கடித்தாள்.

“ம்ம்ம் தெரியும் தெரியும்” என்றாள் கலை.

சட்டென்று கைத்தட்டலை நிறுத்திவிட்டு கலையை திரும்பி பார்த்தாள் ரம்யா. கலை கண் இமைக்காது கிருஷ்ணாவையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

(இதை நான் உங்கிட்ட சொன்னா “ஹலோ நான் பார்க்கல.. முறைக்கிற.. சரியா?!” அப்படிங்குது இந்த பொண்ணு )

ரம்யாவோ கலையிடம் “என்ன டி ரன்னர் ஆகிருவ போல?” என்று கேட்டாள்.

“கலையாவது ரன்னர் ஆகுறதாவது! நான் வின்னர் டி எப்பவுமே” என்று கலை தீர்க்கமாக கூறினாள்.

“போட்டியில வின்னர் தான் கிருஷ்ணா பின்னாடி ரன்னர் ஆகிடுவியோனு கேட்டேன்” என்றாள் ரம்யா.

சொல்லிவிட்டு ‘அய்யய்யோ வாய் சும்மா கிடக்காம கேட்டுபுட்டேனே எனக்கு இவ காரியம் பண்ணிடுவாளே?!’ என்று பயந்தவாறு கலையை திரும்பி பார்த்தாள். அங்கு அவளை காணவில்லை.

“நல்லவேளை கலைய காணோம்! அய்யய்யோ கலைய காணோம்” என்று உணர்வு சிதறல் சிந்து பாட பாவனை கொடுத்தாள்.

‘இவ்வளவு நேரம் தனியாவா பேசிக்கிட்டு இருந்தேன்? பரவாயில்லை அவகிட்ட பேசி அடி வாங்கிறதை விட தனியா பேசி பைத்தியம்னு பெயர் வாங்குறது எவ்வளவோ மேல்’ என எண்ணிக் கொண்டு கலையை தேட ஆரம்பித்தாள்

“என்ன இவள எங்கயும் காணோம்?? இவ்வளவு கூட்டத்துல எங்க போய் தேடுறது?!!” முணுமுணுத்தபடியே நின்றிருந்தாள் ரம்யா.

போட்டி முடிவுகள் அறிவிக்கத் தொடங்கியது. கலையை காணாமல் தவித்திருந்த ரம்யாவின் துயர் போக்கும் வண்ணம் அங்கு வந்து சேர்ந்தாள் கலை.

“எங்க டி போய் தொலைஞ்ச..? வா ரிசல்ட் சொல்ல போறாங்க” என்றாள்.

“கேமரா எடுக்க போனேன் டி நம்ம பிரண்ட்ஸ் இருக்கிற பக்கம் போகலாம் வா” என ரம்யாவை அழைத்துச் சென்றாள் கலை.

தோழி ஒருத்தியிடம் கேமராவை கொடுத்து அனைத்தையும் ரெக்கார்டு செய்ய சொன்னவள் ரம்யாவை அழைத்து

“அந்த ராங்கி காரிய பார்த்தியா டி?” என கேட்டாள்.

“இல்லை டி நானும் அவள தான் ரொம்ப நேரமா தேடிகிட்டு இருக்கேன்” என்றாள் ரம்யா.

“இன்னைக்கு எப்படியாவது அவ முகத்துல கரிய பூசனும் டி” என்ற அவளது குரலை ரம்யா காதில் தெளிவாய் நுழைய விடாமல் செய்தது மைக்கில் பேச தொடங்கிய கிருஷ்ணாவின் குரல்.

“எல்லாருக்கும் வணக்கம்” என்று அவன் சொல்லி முடிப்பதற்குள் அரங்கம் அதிர அத்தனை ஆரவாரம்.

ஆங்காங்கே எழுந்த விசில் சத்தம் காதை ஒருவித அசவுகரியத்திற்கு உள்ளாக்கியது. மேலும் கிருஷ்ணா தன் பேச்சை தொடர்வதற்கு முன், மேடையில் வரிசயித்த பெண்கள், ஒருவர் பின் ஒருவராக கிருஷ்ணாவிற்கு பூச்செண்டுக் கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். பின் கூட்டணி புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.

அத்தனை பெண்கள் தன்னை சூழ்ந்த போதிலும், கண்ணியமாய் நின்ற அவன் தோரணையும் பாவனையும் கலை மனதில் ஒருவித மரியாதையை ஏற்படுத்தியது என்பதை அவளால் மறுக்க முடியவில்லை.

“இவன தப்பா எடை போட்டுட்டோமோ?” என தலைக்கனமும் கர்வமும் சிறிதும் இல்லா அவன் முகத்தை பார்த்து மானசீகமாக மன்னிப்பு கேட்டாள்.

எப்படியும் தான் பரிசினை வாங்கும் பொழுது அவரிடம் ஒரு சிறிய பாராட்டு சொல்லிவிட வேண்டும் என மனதில் பயிற்சி செய்துக் கொண்டிருந்தாள்.

முறையே மூன்றாம் சாம்பியன்ஷிப் பரிசில் இருந்து ஒவ்வொரு பரிசாக அறிவிக்க, முதல் பரிசை தட்டுவோம் என எதிர்பார்திருந்த கலை மற்றும் அவர்களது கல்லூரி மாணவர்களின் கனவு அன்று தவுடு பொடியாகியது.

தொடர்ந்து இரண்டு வருடங்கள் தங்கள் கைக்குள் வைத்திருந்த சாம்பியன்ஷிப் கோப்பையை இன்று வேறு ஒருவர் தட்டிச் செல்வதை தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாதவர்களாய் அரங்கத்தில் இருந்து தங்கள் அறைக்கு விரைந்தனர்.

போட்டியில் தான் முதல் மூன்று இடங்களில் இடம் பெறவில்லை என்பது வலித்ததைவிட, வம்பு செய்த வேற்று கல்லூரி மாணவிகள் முதலிடம் பிடித்தனர் என்ற செய்தியே அதிக வலியை தந்திருந்தது கலைக்கு.

எதிரியாய் எண்ணியவர் முன் வெற்றியை இழந்தவர்கள் பேச வார்த்தைகளின்றி அங்கிருந்து கிளம்பினர். என்ன தான் வலி மனதில் இருந்தாலும் உண்மை நிலவரத்தை மாற்றி அங்கு சிறிது வனப்பு சேர்க்க எண்ணி, மாணவர்கள் ஒருவருக்கொருவர் கேலி செய்வதும் விளையாடுவதுமாய் தங்கள் ஊரை நோக்கி பயணமானார்கள்.

இரவு நேரம் ஆகிவிட்டதென்பதால் கல்லூரியின் பேருந்து மாணவர்கள் அனைவரையும் அவரவர் வீட்டிற்க்கு அருகாமையில் இறக்கிவிட்டது.

கலை இறங்க வேண்டிய இடம் வந்ததும் ரம்யாவுக்கும் மற்ற நண்பர்களுக்கும் டாடா காண்பித்தவள் தன் உடைமைகளை எடுத்துக் கொண்டு கல்லூரி பேருந்திலிருந்து இறங்க எத்தனித்த வேளை சிறிது தாமதமாக்கி தன் ஆசிரியையிடம்

“சாரி மேம்!” என்றாள்.

“டோன்ட் ஒர்ரி டா கண்ணா.. யூ கெய்ஸ் டன் எ கிரேட் ஜாப்..” என்று சமாதானம் கூறி அனுப்பி வைத்தார்.

வீட்டில் சென்று தன் தோல்வியை கூறிய கலையிடம் அவளது அப்பாவும் அம்மாவும் ஆறுதலாய் பேசி, அவளை நீண்ட நாட்கள் எவ்வளவு தேடினார்கள் என்பதை கூறி அன்பு மழையினை பொழிந்துக் கொண்டிருந்தார்கள்.

கலை அவளது உடல் இங்கே இருந்தாலும் உயிர் என்னவோ கிருஷ்ணாவிடமே தொலைந்து விட்டதாய் உணர்ந்தாள். அந்த ஊரை விட்டு இங்கு வந்தவள் அவனை இனி காணவே முடியாதென்பதை எண்ணுகையில் உயிரை அறுப்பது போன்ற உணர்வினை கொண்டாள். தன்னுள் அவனை முழுவதுமாய் புதைத்திருந்ததை அப்போதுதான் அவள் ஊர்ஜிதப்படுத்தினாள்.

இரவு முழுவதும் அவன் நினைவுகளை கண்களில் கொண்டு கண்ணீரால் தேடல் மொழிந்துக் கொண்டிருந்தாள். அவள் கேமராவில் பதிந்து வைத்திருந்த வெற்றி விழா காட்சியில் அவனை மீண்டும் மீண்டும் கண்டு மனம் நொந்துக் கொண்டிருந்தாள்.

இவை இருந்தால் திரும்ப திரும்ப ஒளிக்கத் தோன்றுமென எண்ணி அவற்றை முற்றிலுமாக அழிக்க முற்பட்டாள். அதை செய்ய தன் உணர்வுகள் தடுத்தமையால் தோல்வியும் பெற்றாள்.

இவ்வாறாக அன்று இரவு கழிந்திட, மறுநாள் காலையில் வழக்கம் போல கல்லூரிக்கு புறப்பட ஆயத்தமான கலையினை தடுத்த அம்மா,

“இன்னைக்கு காலேஜ் போக வேணாம் கலை கீதாவை ஸ்கூல்ல கொண்டு போய் விட்டுட்டு நீ வீட்டுக்கு வந்திடு சுவர்ணா அத்தை வர்றாங்க வீட்டுக்கு.அவங்க சொந்தத்துல ஒரு பையனுக்கு உன்ன கேட்டுருக்காங்க. நல்ல குடும்பம் அப்பாவுக்கும் எனக்கும் சம்மதம்.. உன்ன அவங்க பொண்ணு பார்க்க வர்றதுக்கு முன்ன ஒரு ஃபார்மாலிட்டிக்கு சுவர்ணா உன்ன பார்த்து பேசிட்டு போகனும்னு நினைக்கிறா” என்று கூறினார்.

தான் இரண்டாமாண்டு படிக்கும் பொழுதே வீட்டில் மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கிவிட்டதை அறிந்திருந்த கலைக்கு இந்த செய்தி அதிர்ச்சியாய் இல்லை. ஆனால் தன் மனதின் நாயகனை எண்ணி வருத்த பிணியில் இருந்தாள். என்னதான் சுட்டி என்றாலும் அம்மாவையும் அப்பாவையும் இதுவரை கலை எதிர்த்து பேசியதில்லை. இம்முறையும் சரியென தலையாட்டிச் சென்றுவிட்டாள்.

கீதாவை ஸ்கூலில் இறக்கிவிட்டவள் அங்கிருந்தே ரம்யாவுக்கு போன் செய்து கல்லூரியில் விடுப்பு தெரிவிக்குமாறு கூறிவிட்டு வீட்டிற்கு விரைந்தாள். வந்தவள் குளித்து நல்லதொரு ஃபேன்சி புடவையினை உடுத்திக் கொண்டு அழகாகவே தயாராகி இருந்தாள்.

சுவர்ணா அத்தையை எதிர்பார்த்தபடியே அமர்ந்திருந்தார் கலையின் அம்மா. அப்பா சுயதொழில் செய்வதால் வீட்டில் இருக்க முடியவில்லை. கலை தன் அம்மாவிடம்,

“அத்தை வந்த பிறகு கூப்பிடு மா” என சொல்லிவிட்டு தன் அறைக்கு சென்று மீண்டும் கிருஷ்ணாவின் வீடியோவினை பார்க்கத் தொடங்கினாள். பின் கண்ணாடியை பார்த்த வண்ணம் அவளிடம் அவளே பேச்சுவார்த்தை நடத்தினாள்.

“இதோ பாரு டி கலை! அவரு ஊரே பேரு சொல்லுற அளவு பெரிய ஆளு. உன்னைய ரெண்டு தெரு தாண்டினா கூட ஒரு நாயிக்கும் தெரியாது. தேவையில்லாத எதையாவது யோசிச்சிக்கிட்டு மனசையும் உடம்பையும் கெடுத்துகாத! ஒழுங்கா அம்மா சொல்லுற பையனை பார்த்து கல்யாணம் பண்ணிக்கிட்டு உன் வேலைய பார்த்துக்கிட்டு இரு!” என்றாள்.

மின்னல் வேகத்தில் அவளிடம் இருந்து வெளியே வந்து நின்ற அவளது மனசாட்சி, “உனக்கு என்ன டி குறை? ஏன் இதை நீ ஆசப்படக் கூடாது? இதுவரை எந்த பையனையாவது பார்த்து இருக்கியா. இல்லை நினைச்சி இருக்கியா? இப்ப அதை எல்லாம் பண்ணுற அப்படீன்னா எதுவும் இல்லாமையா?” என்றது.

‘உன்னனனனனன’ என்று கொலை செய்யும் ஆத்திரத்தில் அதனை அடிக்க முயன்றவள், அது முடியாது எனவும் அறிந்திருந்தாள். அதனால், “இதோ இப்பவே அந்த கிருஷ்ணாவோட எல்லா வீடியோவையும் என் கேமரால இருந்து அழிக்கிறேன் பாரு!” என்று தன் மனம் மாறுவதற்கு முன் விரைந்து அத்தனையையும் அழித்து முடித்தாள். இதை பார்த்திருந்த அவளது மனசாட்சியோ கைத்தட்டிக் கொண்டே அடக்கமுடியாத சிரிப்பினால் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது.

“இப்ப எதுக்கு சிரிக்கிற? நான் எல்லாத்தையும் அழிச்சிட்டேன். நான் ஜெயிச்சிட்டேன்!” என்றாள் கலை. இதை கேட்ட மனசாட்சிக்கு மேலும் மேலும் சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது.

“இப்ப சிரிக்கிறத நிறுத்த போறயா இல்லையா?“ என்று கலை கத்தியதும் தன் சிரிப்பினை நிறுத்திக்கொண்ட மனசாட்சி, “இந்த கேமரா திரையில் அவனை அழித்துவிட்டாய். உன் மனத்திரையில் இருந்து அவனை அழிப்பது சாத்தியமா?” என்று கேட்டதற்கு பதில் யோசித்துக் கொண்டிருந்த கலையை சுவர்ணா அத்தையின் குரல் வீட்டின் வரவேற்பறைக்கு அழைத்து வந்தது.

அவர்களது சந்திப்பு இனிதே தொடங்க, விட்ட கதை தொட்ட கதை எல்லாம் பேசி முடித்தனர் கலையும் அவள் சுவர்ணா அத்தையும். அம்மாவின் தோழியை வயது வித்தியாசம் பார்க்காமல் தனக்கும் தோழியாக்கிக் கொள்ள உதவியது கலையின் சுட்டி பேச்சு. கலை என்றால் சுவர்ணா அத்தைக்கு அத்தனை பிரியம்.

இன்னும் இரண்டு வாரங்களில் மாப்பிள்ளை வீட்டார் வந்து கலையை பேசி முடிக்கும் படி செய்யலாம் என சுவர்ணாவும் கலையின் அம்மாவும் பேசி முடிவெடுத்தனர். தன்னால் கலைக்கு ஒரு நல்வாழ்வு அமைய போவதாய் மிகுந்த மகிழ்ச்சியுற்றிருந்தார் சுவர்ணா.

அத்தை முகத்தில் பூத்திருந்த மகிழ்ச்சியை தன் மனக்கண்ணில் அச்சுற பதித்துக் கொண்டாள் கலை. அதை தூண்டுகோலாய் பயன்படுத்தி கிருஷ்ணாவை மறக்க முயற்சி செய்ய தொடங்கினாள்.

மறுநாள் கலை வழக்கம் போல் கல்லூரிக்கு சென்றாள். அன்று கல்லூரியின் காலை பிரார்த்தனை கூட்டத்தின் பொழுது கலையின் பெயர் அறிவிக்கப் பட்டு, அவர்கள் மதுரையில் சென்று வந்த கலைவிழா போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று வரவில்லை என்றாலும் கலை பங்கெடுத்த ஓவிய போட்டியில் அவளது ஓவியம் தனி கவர்ச்சியை அனைவரிடத்திலும் ஏற்படுத்தி அதனை ஊக்குவிக்கும் வண்ணம் தேசிய ஓவிய கலைஞன் கிருஷ்ணா அவர்களது ஓவிய அசோஷியனில் நடக்கவிருக்கும் ஒரு வார ஓர்க் ஷாபில் கலந்துக் கொள்ளும் வாய்ப்பை கலை பெற்றிருப்பதாய் அறிவித்தனர்.

‘தானே விலக நினைத்தாலும் விதி தன்னை வீழ்த்தாமல் விடாது போலயே’ என திக்குமுக்காடி நின்றிருந்த கலையை மேடைக்கு அழைத்து கைத்தட்டல் ஓசையில் மூழ்கடித்தது அவளது கல்லூரி.

‘அட சும்மா இருங்க டா. நீங்க வேற கைய தட்டி தட்டி உசுப்பேத்திக்கிட்டு’ என அலுத்துக்கொண்டு

‘என்ன டி கலை உனக்கு வந்த சோதனை’ என மனம் முணுமுணுக்க ‘கம்முனு கிட’ என அதை அமுக்கி உள்ளே வைத்துவிட்டு, சுழித்துக் கொண்டிருந்த உதட்டில் சிரிப்பினையும், குழப்பத்தை துரத்திய கண்களில் மகிழ்ச்சி ராகத்தையும் கொண்டு வந்து அனைவரது பார்வைக்கும் வைத்து நன்றி கூறிவிட்டு திரும்பி வந்தாள்.

வகுப்பிற்குள் நுழையவும் அனைவரும் வாழ்த்து தெரிவிக்க, ரம்யா ஓடி வந்து கலையை கட்டிக்கொண்டாள். “சூப்பர் டி! நாம ஜெயிக்கலைனு கவலைல இருந்தோம். அதுக்கு இது செம பூஸ்ட்டு டி” என துள்ளிக் குதித்தாள்.

‘ஆமா டி ஆமா பூஸ்ட்டு தான். என் மண்டைக்குள்ள இருக்க மக்காடுக்கு செம பூஸ்ட்டு தான்’ என்று எண்ணிக் கொண்ட கலை “இந்த விஷயத்தை மதுரையில நம்மகிட்டு வம்பு இழுத்த ரவுடி பொண்ணு கிட்ட சொல்ல முடியலையே டி!” என்றாள்.

“கிருஷ்ணா போன் நம்பர் கேட்ட அவகிட்ட நாம அவளோட போன் நம்பர் வாங்கிருக்கனும்” என்றாள் ரம்யா.

“அட நீ வேற ஏன் டி அவன் பெயர சொல்லிக்கிட்டு இருக்க?” என்று அயர்வானாள் கலை.

“ஏன் டி அவன் பேர சொன்னா என்ன?” ரம்யா கேட்க

“மண்டைக்குள்ள நின்னு இம்சை பண்ணுறான் டி” என்றாள் கலை.

“அடியாத்தி நான் சொன்ன மாதிரியே ரன்னர் ஆகிடுவ போலயே” என்று ரம்யா கலையை வார, மண்டயில் நங்கென்று ஒரு கொட்டு வைத்தாள் கலை.

“எரும மாடே வலிக்குது டி” ரம்யா கத்திய கத்தில் அருகாமை வகுப்பறையில் இருந்த பேராசிரியர் உள்ளே வந்து ரம்யாவை இந்த வகுப்ப நேரம் முடியும் வரை நின்றுக் கொண்டிருக்குமாறு தண்டனை கொடுத்து சென்றார். கலைக்கோ தன்னால் அவள் மாட்டிக் கொண்டதை எண்ணி எவ்வளவு சிரித்தும் அடங்கவில்லை.

அந்த வகுப்பு நேரம் முடியும் முன்னரே அவர்களது ஆசிரியர் உள்ளே வர, வணக்கம் சொல்லி அனைவரும் அமர்ந்த சாக்கில் தானும் அமர்ந்துக்கொண்டாள் ரம்யா.

அன்றைய பாடம் முடிந்த பின்னர் வீட்டுக்கு திரும்பிய கலை, தன் பெற்றோரிடம் விபரத்தை கூறி தான் மீண்டும் ஒரு வார காலத்திற்கு மதுரை செல்ல வேண்டுமென்பதை தெரிவித்தாள். தன் பிள்ளை பரிசு கிடைக்கவில்லை என வாடிய அம்மாவுக்குதான் இது பெரும் இன்ப செய்தியாக இருந்தது.

“குழந்தைக்கு நல்ல வாய்ப்பு கிடைச்சிருக்கு. மாப்பிள்ளை பையன் வர்றான் அப்படி இப்படி ஏதாவது சொல்லி என் புள்ளைய போகவிடாம செஞ்சனு வச்சிக்க..” என கலையின் அப்பா அசைப்போட்டு முடிப்பதற்குள்

“யாரு இப்போ போகாதனு சொன்னது? என் புள்ள எம்புட்டு திறமைசாலியா இருந்தா போன அத்தனை புள்ளைங்க மத்தியில ஒத்த ஆளா நின்னு ஜெயிச்சிருப்பா. அவ மறுபடியும் போய் இன்னும் நல்ல பேரு வாங்கிட்டு வருவா” என முடித்து வைத்தார் கலையின் அம்மா. கலை தன் மிகப் பெரிய ஆசிர்வாதமாய் நினைப்பது அவளது பெற்றோரின் இத்தகைய வார்த்தைகள் தான்.

தன் பெட்டி படுக்கைகளை கட்டிக் கொண்டு மதுரைக்கு கிளம்பினாள் கலை. பேருந்தில் ஏறி அமர்ந்து அம்மா அப்பா தங்கைக்கு கைக்காட்டிவிட்டு இருக்கையில் சாய்ந்து கண்களை மூடினாள்.

ஜன்னல் வழியே அவளிடம் தஞ்சம் புகுந்த வாடை காற்று தன்னை கொஞ்சம் சினேகிக்குமாறு கெஞ்சி நின்றது. அதன் தீண்டலுக்கு ஆசையாய் ஆமோதித்தவள் தன் விழித்திரையை மெல்ல மூடினாள். சந்தர்ப்பத்தை தன் வசமாக்கிய மேக காதலன் வானத்தில் இருந்து பிரிந்து சில்லென்று சிதறிய மழைத்துளியாய் அவளது நுதலில் முத்தமிட்டு முத்தாய் தெறித்தோட அவள் உடம்பின் மயிர் கால்கள் உயிர் பூத்து நின்றது.

பூவானம் தூவிய காதல் மேகம் பூவையவள் இதயத்தில் உலாவிட, தட்டாமலே திறக்கப்பட்ட அவளது மன கதவு கண்ணாளன் அவனது கள்ளமில்லா முகத்தை வரைந்து வைத்து வரையரையின்றி வீழ்த்தியது.

கிருஷ்ணனின் லீலைக்கே உரித்தான தெய்வீக புன்னகையில்

‘என்னை காண ஓடோடி வா என் அன்பே’ என்று தன் புஜங்களை விரித்தவாறு அவளை அள்ளி அணைக்க துடிப்பவனாய் காட்சிக்கொடுத்தான் கிருஷ்ணா.

பட்டென்று முழித்துக் கொண்டவள் கண்கள் படபடக்க உதடுகள் வழுவிழக்க இறைவா.. இறைவா.. இறைவா.. என தன் காதுகளை மூடிக்கொண்டே முணுமுணுக்கத் தொடங்கினாள்.

“கடவுளே என்ன இது சோதனை. நான் என்னோட திறமைய பார்த்து என்ன தேடி வந்த வாய்ப்புக்காக மட்டும் தான் இப்ப போய்க்கிட்டு இருக்கேன். என் அம்மா, அப்பா, அவங்களோட சந்தோஷம் மட்டும் தான் எனக்கு முக்கியம். என் மேல அம்புட்டு பிரியம் வச்சிருக்கிற சுவர்ணா அத்தை நல்ல வரன தேடி கொண்டுவந்துருக்காங்க.. அம்மாவுக்கு அதுதான் சந்தோஷம். நான் அவங்க காட்டுற மாப்பிள்ளைய தான் கட்டிக்க போறேன்” என அடுக்கடுக்கு மொழிகளால் காதல் கள்வனது பார்வை தீண்டா வண்ணம் தன்னை பாதுகாப்பாய் போர்த்தினாள். அம்மாவும் அப்பாவும் அத்தனை நம்பிக்கை வார்த்தைகள் பேசி அனுப்பி வைத்த காட்சியினை தன் மனக்கண்ணில் ஓடவிட்டுக் கொண்டே பயணித்தாள்.

இறங்கும் இடமும் வந்தது. அலைபேசி அழைப்பும் வந்தது. பேருந்திடம் விடைப்பெற்று அலைபேசியினுள் அவதரித்தாள்.

“என்ன டி எங்க இருக்க?” அம்மாவின் துள்ளிய கணிப்பையும் தன் மீதுள்ள அக்கறையையும் மனதில் சிலாகித்தவள்

“இப்ப தான் மா ஆரப்பாளையத்துல இறங்கிருக்கேன்” கூகுள் மேப் –அ விட பெர்ஃபக்ட் –ஆ இருக்கியே எப்படி மா?” என கேட்டாள் கலை.

“வாயாடி நடு ரோட்டுல நின்னுக்கிட்டு வாய் என்ன வேண்டி கிடக்கு? அவங்க அசோசியேஷன் வண்டி நிக்கும்னு சொன்னாங்களே நிக்குதா?” என கேட்டாள் அம்மா.

“யாருக்கு தெரியும்?” என்றாள் சாதாரணமாக.

“என்ன டி சொல்லுற யாருக்கு தெரியுமா? அப்ப அவங்க உன்ன கூட்டிட்டு போக வரலையா?? இதுக்கு தான் அப்பாவ கூட அனுப்புறேனு சொன்னேன் கேட்டியா? பெரிய இவ மாதிரி அப்பாவுக்கு வேலை இருக்கும் வேணாம் கீணாமுன்னு சொல்லிட்ட” என பொரிந்தாள் அம்மா.

“அய்யோ அம்மா நான் பேசுறதுக்கும் கொஞ்சம் இடைவெளி விடு இறங்கின உடனேயே ஃபோன் பண்ணிட்ட நான் ஃபோன பார்ப்பேனா இல்லை வண்டி நிக்குதானு பார்ப்பேனா?” என்றாள்.

“அத முதல்ல பார்த்து சொல்லு டி வாலு வாயுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை” என செல்லமாய் திட்டினாள்.

“ஆமா ஆமா உனக்கு மட்டும் மில்லிமீட்டர் சைசு பாரு. எனக்கு கிலோமீட்டர் சைசுல இருக்க மாதிரி பேச வேண்டியது” என புன்னகைத்தவாறு வாய்க்குள் சொல்லிக்கொண்டே அசோஷியேஷன் வண்டியை தேடினாள். கண்ணில் எதுவும் தென்படவில்லை.

“அம்மா இங்க ஒன்னும் காணோம் மா” என்றாள் அம்மாவிடம்.

“என்ன இவனுங்க பொம்பள புள்ளைய ஒத்தையா அனுப்பி வச்சிருக்கேன். சொன்ன மாதிரி வந்து நிக்காம என்ன செய்யுறானுங்க? அவங்களுக்கு ஃபோன் பண்ணி கேளு டி” என்றாள் அம்மா.

“சரி மா நான் பேசிட்டு சொல்லுறேன்” என்றவள் போனை துண்டித்துவிட்டு அசோஷியேஷனுக்கு கால் செய்தாள். அப்பொழுது அங்கு வந்த ஸ்கூட்டி ஒன்று கலையின் அருகே வந்து நின்றது.

“ஹாய் கலை தான நீங்க?” என்றது அந்த பெண்ணின் குரல்.

‘யாருடா அது! புது ஊருல நம்மல தெரிஞ்ச ஆளு? ஒருவேளை இந்த அசோசியேஷன் நம்மல பாராட்டி பேனர் கீனர் ஏதாவது வச்சிட்டாங்களோ?!’ என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.

“எக்ஸ்க்யூஸ் மீ“ மீண்டும் குரல் கொடுத்தாள் அந்த பெண்.

“சாரி சாரி ஆமா நீங்க?” என்றால் கலை.

“கிருஷ்ணா அசோசியேஷன்ல இருந்து உங்கள பிக் அப் பண்ணிக்கிட்டு வர சொல்லி என்னை அனுப்பினாங்க” என்றாள்.

‘இருந்தாலும் உனக்கு ஓவர் ஆச தான் டி கலை. உனக்கு பேனர் ஒரு கேடா’ என்று தன்னை தானே கேலித்துக் கொண்டு அந்த பெண்ணிடம்

“ஐடி இருக்கா?” என்று கேட்டாள் கலை.

அவள் குழந்தை தனமான பேச்சில் பூரித்த அந்த பெண் “இதோ பாரு மா என் ஐடி! இப்ப நம்புறியா? நான் உன்ன கடத்திட்டு எல்லாம் போய்டமாட்டேன் தைரியமா வரலாம்” என்றார்.

“ஹாஹா கடத்திக்கிட்டு போனாலும் என்ன எல்லாம் வச்சி சமாளிக்க முடியாது அக்கா, பயம் எல்லாம் இல்லை, ஆபீஸ்க்கு எங்கூட வர போறீங்க ஐடி எல்லாம் மறக்காம எடுத்து வச்சிருக்கீங்களானு நியாபகப்படுத்தினேன்” என்று சொல்லியவாறு வண்டியில் ஏறி அமர்ந்தாள்.

முதல் நாளே நட்பாய் உரையாடிய கலையை ரொம்ப பிடித்திருந்தது அந்த பெண்ணுக்கு. அசோசியேஷனிற்கு அலைத்துச் சென்று ஒர்க் ஷாபிற்கு வந்திருக்கும் பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட அறையினை காண்பித்துவிட்டு மீட்டிங்கிற்கான நேர அட்டவனையினையும் சொல்லிவிட்டு விடைப்பெற்றாள் அந்த பெண்.

கலை தான் பத்திரமாக வந்து சேர்ந்த்தாக அவள் அம்மாவிடம் சொல்லிவிட்டு, தனக்கு முன்னதாகவே அங்கு வந்திருந்த அனைத்து தோழிகளிடமும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள். பின் தன்னை பசிப்போரில் இருந்து காக்கும் முயற்சியில் இறங்கினாள். (அதாங்க சாப்பிட ஓடிவிட்டாள். பசி மட்டும் வந்துது.. மேடம் ரொம்ப பிசி ஆகிடுவாங்க.. அவளுக்கும் அவள் வயிற்றுக்கும் இடையில் நடக்கும் பசி போர் எல்லா உலகப்போரையும் மிஞ்சக் கூடியது)

உணவு அருந்தி முடிந்ததும் புது தோழிகளுடன் இணைந்து ஓவியம் குறித்த உரையாடலில் இணைந்திருந்தாள் கலை. அப்பொழுது அசோசியேஷன் மேலாளர் ஒருவர் மீட்டிங்கிற்கு வருமாறு அழைப்பு விடுத்து போனார்.

கலை தன் மனதை மாந்திரீக கயிறுகளால் மந்திரித்துக் கட்டியதாய் பாவித்துக் கொண்டு,

“அந்த கிருஷ்ணா படுபாவி முகத்தை நேருக்கு நேரா பார்க்க வேண்டிய சூழ்நிலை வந்தாலும் தில்லா நிக்கனும் சரியா கலை?!” என்று கண்ணாடி முன்னால் நின்று வழக்கம் போல தனக்கு தானே அறிவுரை ஆராதனையெல்லாம் முடித்துவிட்டு மீட்டிங்கிற்குச் சென்றாள்.

அவள் புண்ணியம் அங்கு கிருஷ்ணா வரவில்லை. அந்த மேலாளர் தான் ஒர்க் ஷாப்பிற்கு இன்சார்ஜ் என்பதால் அவரே அன்றைய வகுப்பை எடுத்து நடத்தினார்.

அவளது ஒர்க் ஷாப்பின் அத்தனை நாட்களும் அவன் வந்துவிடுவானோ என்ற ஐயத்திலும், வரவில்லை என்ற திருப்தியிலுமே கழிந்துக் கொண்டிருக்க, கடைசி நாள் அனைவருக்கும் பொதுவாய் ஒரு தலைப்பு கொடுக்கப்பட்டு ஓவியம் தீட்டும் படி சொல்லியிருந்தார் அந்த மேலாளர்.

அவரவர் இருக்கையில் அமர்ந்த படி அனைவரும் ஓவியம் தீட்டிக்கொண்டிருந்த வேளை பெரும் அமைதி நிலவியது அந்த அறையில். அந்த நிசப்தத்தில் ஒரு பூட்ஸ் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. கலையை தவிர மற்ற ஒர்க் ஷாப் கேன்டிடேட் அனைவரும் சத்தம் வரும் திசை பார்த்துத் திரும்பினர்.

ஆம்..! நடந்து வருவது கிருஷ்ணாவே தான் ‘அமைதியாக அமர்ந்து வேலையை தொடருங்கள்’ என்று தனக்கே உரித்தான கை சைகையில் உணர்த்தினான் கிருஷ்ணா. கலை மட்டும் அவனை கவனிக்காமல் தன் ஓவியத்தில் ஒன்றிப்போயிருந்தாள்.

அவளை நோக்கி அருகே சென்ற கிருஷ்ணா, “நைஸ் பிக்டோரியல்” என்றான்.

“ம்ம்ம்.. ஆமா ஆமா மத்தவங்கள போய் பாருங்க” என்றாள் தலையை நிமிர்த்தாமல்

“வாட்??” என கேட்டான் கிருஷ்ணா.

“வேலை செய்யறப்ப பேசாதனு சொன்னேன்” என்று குனிந்தாவாறே கூறியவள் அப்பொழுதுதான் நிமிர்ந்து பார்த்தாள்.

ஒரு கோடி மெகா வாட்ஸ் மின்சாரம் ஓரே வினாடியில் தன் மீது பாய்ந்தது போல படாரென அதிர்ச்சியில் எழுந்தாள்.

அவள் எழுந்த வேகத்தில் பலகையில் இருந்த திரவ வர்ணங்கள் அனைத்தும் அவளது ஓவியத்தின் மீது கொட்டி பாழாய் போனது. கலைக்கு கோபமும் அழுகையும் பின்னிப்பிணைந்து வந்தது. செய்வதறியாது கைகளை பிசைந்துக் கொண்டும் உதடுகளைப் பிதுக்கிக்கொண்டும் நின்றிருந்தாள்.

அவனுக்கோ அவள் முகபாவணையை கண்டு சிரிப்புதான் வந்தது. அவனது ஒற்றை சிரிப்பினில் தன் இன்னல்கள் மறந்து இன்முகம் காட்டினாள் கலை.

‘காதல் என்ற சொல் நாணத்திற்குரியது என்றெண்ணி மெளன மொழி பேசித்திரிந்தேன் இத்தனை தினங்களும். என்ன பாதகம் செய்தாயோ பாவை இவள் உன்னில் மயங்கி பார்வைகள் பதிக்கிறாள் உன் மீது கொண்ட மீளா காதலால். இதுதான் உன் லீலை என்பதோ என் மாய கண்ணா ??!!’ என்று மனதினுள் அவனோடு மஞ்சம் கொண்டாள்.

அவன் போகின்ற வழியில் சிரிப்பை சிதறிவிட்டு சென்றுவிட்டான். ஆனால் அந்த ஒற்றை புன்னகையினைத் தாண்டி அவளால் அணு அளவும் நகன்று வர இயலவில்லை. கலைக்கு தான் கொண்ட சபதமெல்லாம் சங்கடமின்றி காணாமல் போனது; மாயவனது சிறு குறு புன்னகை மட்டும் முகவரியாய் ஆனது.

“சிட் டெளன்” என கூறிவிட்டு தானும் அமர்ந்தான் கிருஷ்ணா.

அனுமதியினை ஏற்று மாணவர்கள் அனைவரும் அமர்ந்துக்கொள்ள, கலை இன்னும் தன்னிலை அடைந்த பாடில்லை. அவளருகில் வந்த மேனேஜர் “கலை.. ஆர் யூ ஓகே?” என கேட்டார்.

அதுவரை அசையாதிருந்த கண்கள் அசைவினைப் பெற்று மேனேஜரை நோக்கியது. “உட்காரு மா” என்றார்.

“சாரி சார் ஐம் லீவ்ங் தப்பா எடுத்துக்காதீங்க!” என்றவள் அவளது அறைக்கு விரைந்தாள். உள்ளே வந்தவள் கையில் வைத்திருந்த பையினை தூக்கி எறிந்துவிட்டு முகத்தினை மூடி தன் மடியையே ஆறுதலாய் கொண்டு அழுதுத்தீர்த்துக் கொண்டிருந்தாள்.

“ஏன் இத்தனை இத்தனை சோதனை எனக்கு? நான் என்ன தப்பு செஞ்சேன்? எவ்வளவு தான் நான் என்னை கட்டுகோப்பா வச்சாலும் என் மனசு என்னை மீறி அவன்கிட்ட தான் போகுது.. எனக்கு இங்க இருக்க வேணாம்.. உடனே நான் கிளம்பனும்.. கிளம்பனும்” என்று குமுறத் தொடங்கினாள்.

துன்பத்தில் வரும் கண்ணீர் துளியும் மாறாமல் துன்புறுத்த, அவள் காதினுள் சென்று மூளையை வேவு பார்த்தது எங்கிருந்தோ ஒலித்த அந்த பாடல்.

யாரோ.. மனதிலே..

ஏனோ.. கனவிலே..

நீயா உயிரிலே..

தீயா தெரியலே..

சென்ற வாரம் மதுரை கலைவிழா போட்டிக்கு வந்திருந்தவள், வேற்று கல்லூரி மாணவியுடனேயான வாக்குவாதத்தின் தாக்கத்தினால் கிருஷ்ணாவை பார்க்க எண்ணி இணையத்தின் துணை நாடிய பொழுது அவள் கண்கள் முதலில் கண்டது அந்த காணொலியைதான்.

அவனது பெண் ரசிகை ஒருத்தி அவனுக்காய் தேர்வு செய்த புகைப்படங்களை அந்த பாடல் வழியே சமர்ப்பித்திருந்தாள்.

அதை காணும் பொழுது எழுந்த தாக்கம் அவள் மனதில் பெறும் ஏக்கத்தை ஏற்படுத்தியது. ‘இவள் யார் என்னவனுக்கு இப்படியொரு பாடலை பதிவு செய்வதற்கு’ என மனம் கொந்தளிப்பதை அவள் உணராவிடுனும் அதன் வெப்பத்தை அவள் உணர மறுக்கவில்லை.

அன்றிலிருந்து அப்பாடலை அவள் கேட்கும் பொழுதெல்லாம் சூழலுக்கேற்ப அதன் ஒவ்வொரு வரியிலும் அவளையே அறியாமல் அவளது மனது அவனை செதுக்கிக் கொண்டிருக்கும்.

இன்றும் அதே பாடல் ஒலிக்க, பிணியில் வாடிய அவள் மனநிலை கூடுதல் வலியை அனுபவித்தது.

மீட்டிங் முடித்து அறைக்குள் வந்த சக தோழமைகள் அவளது அழுகையை பார்த்து சமாதானம் கூற, தன் நிலையை விளக்க இயலாமல் தானே சமாதானமாகிக் கொண்டாள் கலை.

தோழமையில் ஒருத்தி,

“பெயிண்டிங் போனதுக்கு எதுக்கு டி இப்படி அழுகுற? மீட்டிங் கூட அட்டண்ட் பண்ணாம இங்க வந்துட்ட கிருஷ்ணா சார் உன்னோட பெயிண்டிங்க தான் பெஸ்ட்னு மீட்டிங்ல சொன்னாரு” என்றாள்.

அழுது வீங்கிய கண்கள் வியப்பின் வினாவை எழுப்பியது.

“என்னுடையதையா? அதுதான் அழிஞ்சிடுச்சே!” என்றாள்.

“அவரு பார்த்த பிறகு தான அழிஞ்சிச்சு? நான் பார்த்த அந்த பெஸ்ட் பெயிண்ட்டிங்க உங்களுக்கு பார்க்க கொடுத்து வைக்கலனு சொன்னாரு” என்றாள் அந்த தோழி.

மனதின் சங்கடங்கள் அனைத்தும் அவளிடம் மன்றாடி அவனை காணதிருக்க சொல்வதை மறந்து அவனை காண ஓடிச் சென்றாள் கலை. தான் என்னதான் முயற்சித்தாலும் தன் மனம் அவனை நாடுவதையோ அவனின்றி வாடுவதையோ அவளால் தவிர்க்க முடியவில்லை.

‘கண்டிப்பாக அவன் என்னவன் தான். அவனின்றி நானில்லை.. இப்பொழுதே அவனை காண வேண்டும்’ என்ற அவள் எண்ண ஓட்டம் அவள் கால்களில் சக்கரத்தை கட்டி விட்டது.

கான்ஃபிடென்ஷியல் அறையின் உள்ளே மேனேஜருடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்த கிருஷ்ணாவை கண்ட கலை, கிருஷ்ணாவிடம் பேச அந்த அறைக்கு வெளியே காத்துக் கொண்டிருந்தாள்.

பேசி முடித்துவிட்டு வெளியே வந்த மேனேஜர், “என்ன மா கலை.. சின்ன பிள்ளை மாதிரி சாதாரண விஷயத்துக்கு எல்லாம் இப்படி அழுது ஓடிட்டியே இப்ப நார்மல் ஆகிட்டியா?” என்றார்.

“சாரி சார் நான் நல்லா இருக்கேன் கிருஷ்ணா சார்கிட்ட பேசனும்” என்றாள் ஒரு வித படபடப்புடன்.

“சாரோட விசிட்டிங் டைம்ல தான் மா பேச முடியும். இப்ப முடியாது” என்றார்.

“சார் சார் ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க சார் நான் அவர்கிட்ட பேசியே ஆகனும்” என கெஞ்சினாள் கலை.

“சரி என் கூட வா கிருஷ்ணா சார்க்கு ஒரு கொரியர் வந்துருக்கு அதை நான் கொடுத்ததா சொல்லி கொண்டு போய் கொடுத்துட்டு பேசிட்டு வா” என்றார் மேனேஜர்.

“நன்றி சார் ரொம்ப ரொம்ப நன்றி!” என்றவள் துள்ளிக் குதித்துக் கொண்டு மேனேஜருடன் சென்றாள்.

அவர் கொடுத்த ஒரு கவரை வாங்கிக் கொண்டவள் முன்னும் பின்னும் திருப்பி பார்த்தாள். “என்ன சார் கொரியர்னு சொல்லவும் ஏதோ பெரிய பார்சல்னு நினைச்சேன் இப்படி குட்டியா தாரீங்களே!” என்றாள்.

“அது கிருஷ்ணா சாருக்கு பொண்ணு பார்த்துருக்காங்க மா அந்த பொண்ணோட போட்டோதான் அது” என்றார் மேனேஜர்.

இதை கேட்டதும், தன் நிலையை கண்டு தானே பாவப்படும் நிலைக்கு ஆளானாள் கலை. ‘அவரை நெருங்க நினைத்தால் விலகச் சொல்கிறது, விலக நினைத்தால் நெருங்க சொல்கிறது விதியின் இந்த விளையாட்டிற்கு பதில் தான் என்ன? அவன் என்னவன் இல்லையா? விதி அவனுக்காய் என்னை இங்கு அனுப்பவில்லையா?!’ என தன்னுள் மேலும் நொந்துக் கொண்டிருந்தாள் கலை.

“கலை சீக்கிரம் கொண்டு போய் கொடு அவருக்கு அடுத்த வேலை இருக்கும்” என்றார் மேனேஜர்.

“நீங்களே கொடுத்துருங்க சார்” என்றவள் அந்த கொரியரை மேனேஜர் கையில் புதைத்தாள்.

“என்ன மா சார்கிட்ட பேசனும்னு சொன்ன?” என்று கேட்டார் மேனேஜர்.

“இல்லை சார் இப்ப வேண்டாம்” என்று கூறிய கலை, அவர் பதிலை கூட கேட்காமல் அங்கிருந்து நகர்ந்து விட்டாள். மேனேஜரோ ஒன்றும் புரியாமல் தன் வேலையை பார்க்க தொடங்கினார்.

கலையால் அன்று இரவு உணவு உண்ண முடியவில்லை. தட்டில் வைத்திருந்த உணவை குப்பையில் கொட்டிவிட்டு படுக்கைக்கு சென்றாள்.

தன் தலை முழுவதையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் இந்த குழப்பத்திற்கு ஒரு முடிவு கட்டியே ஆக வேண்டும் என்பதில் ஊர்ஜிதமானாள்.

“அவர் பெரும் புகழ் கொண்ட ஓவியர். நம் உலகமோ மிக சிறியது. அவரை கணவனாய் அடையும் தகுதி நமக்கு இல்லை. இது வயதின் கோளாறால் ஏற்பட்ட சிறு சிந்தனை சிதறல் தானே தவிர வேறொன்றும் இல்லை. அவர் பெயருக்கும் புகழுக்கும் எத்தனையோ பெண்கள் அவரை ரசிப்பார்கள், நேசிப்பார்கள். அவர்கள் அனைவராலும் அவரை அடைந்து விட முடியுமா என்ன? அந்த பெண்கள் கூட்டத்தில் நீயும் ஒருத்தி அவ்வளவு தான்”

இவ்வாறு தனக்கு தானே கூறி தன் மனதை ஒருமுகப்படுத்தினாள் கலை. நாளை ஒர்க் ஷாப் முடிகிறது. இங்கிருந்து போகும் வேளையில் அவரை நேருக்கு நேர் பார்க்க நேரிட்டாலும் மனம் கலங்காமல் வலியில் துவண்டுவிடாமல் தெளிவாய் எதிர்க்கொள்ள வேண்டுமென முடிவெடுத்தாள் கலை.

ஒர்க் ஷாப்பின் இறுதி நாள் பொழுது விடிந்தது. எழுந்ததும் அம்மாவிற்கு அலைபேசி அழைப்புக் கொடுத்து,

“அம்மா… ஹாஆஆஆஆ” என்ற கொட்டாவி குரலோடு தொடங்கினாள் கலை.

“என்ன டி எரும குட்டி இப்ப தான் எழுந்திருக்கிறியா?” அம்மா கேட்டாள்.

“ஆமா மா” அசதி குறையாமல் கூறினாள் கலை.

“எப்ப கிளம்புற?” அம்மா கேட்டாள்.

“காலை சாப்பாட்ட முடிச்சிட்டு மா” என்றாள் கலை.

“சரி டி வேகமா குளிச்சு புறப்படு பஸ் ஏறினதும் சொல்லு அப்பா வந்து பிக் அப் பண்ணிப்பாரு உன்ன” என்று அம்மா அக்கறையோடு கூறினார்.

“சரி மா நான் கிளம்பிட்டு கால் பண்றேன்” என்ற கலை அலைபேசியை துண்டித்துவிட்டாள்.

குளித்து சாப்பாட்டினை முடித்தவள், கிளம்புவதற்கு ஆயத்தமாக தன் பொருட்களை எடுத்து வைத்து மூட்டைக் கட்டி விட்டாள். மேனேஜர் சார் கிட்ட ஒரு டாடா காட்டிட்டு வந்துவிடலாம் என எண்ணியவள் பெட்டி படுக்கையுடன் மேனேஜர் அறையை அடைந்தாள்.

“எக்ஸ்க்யூஸ் மீ சார்” கலை மெல்லமாய் கதவை திறந்தாற்போல் கேட்க

“வா மா கலை” என்றார் மேனேஜர்.

“ரொம்ப நன்றி சார் ஒர்க் ஷாப் நிஜமா ரொம்ப நல்லா இருந்தது நிறைய கத்துக்க முடிஞ்சிது.. எங்கள நல்லா பார்த்துக்கிட்டீங்க சார்” என்றாள்.

“ரொம்ப சந்தோஷம் மா பெரிய ஆளா வரனும் நீங்க எல்லாரும்” ஆசிர்வதித்தார் மேனேஜர்.

“நன்றி சார் நான் அப்ப கிளம்புறேன்” என்றவாறு அவரிடமிருந்து விடைப்பெற்ற கலையை ஒரு நிமிடம் தடுத்து நிறுத்தியது கிருஷ்ணாவின் நினைவு.

தன் மனதின் கட்டுப்பாட்டை மீறியும் கிருஷ்ணாவை காண அவன் அறைக்குள் நுழைந்தாள் கலை. யாரும் அங்கு இருப்பதாய் அவளுக்கு தென்படவில்லை. சுற்றி முற்றி பார்த்தாள். அவனை காணவில்லை. சரி கிளம்பலாம் என அவள் வெளியே செல்ல எத்தனிக்கையில் அவள் கண்களில் பட்டது அந்த காகித கவர்.

‘இது மேனேஜர் சார் நம்மகிட்ட கொடுத்து கிருஷ்ணா சார் ரூம்ல வைக்க சொன்னாரே அந்த கவர் தானே??’ மனதில் கேள்வியுடன் கவர் இருந்த மேஜையின் அருகில் சென்றாள்.

‘இதுல பொண்ணு போட்டோ இருக்கிறதா தானே மேனேஜர் சொன்னாரு? பிரிச்சு பாத்திருவோமா?’ என்ற யோசனையில் அந்த கவரை கையில் எடுத்தாள் கலை.

அந்த சமயம் அறைக்குள் நுழைந்தார் மேனேஜர்.

“இங்க என்ன கலை பண்ணுற??” என்றார்.

“சார் அது அது வந்து” திக்கி திக்கி நின்றவளது கைகளைக் கண்ட மேனேஜர்,

“இத எடுக்க தான் வந்தேன் கிருஷ்ணா சார் இன்னும் பார்க்கலையாம். உன் கையாள கொடுக்கனும்னு இருக்கோ என்னவோ சார் மீட்டிங் ஹால் –ல தான் இருக்காரு. போகிற வழி தானே கொஞ்சம் கொடுத்துட்டு போய்டு மா எனக்கு ஒரு அவசர வேலை இருக்கு” என்றார் மேனேஜர்.

“சரிங்க சார்” என வேகமாக தலையை ஆட்டிய கலையிடம் நன்றி தெரிவித்துவிட்டு இடத்தை காலி செய்தார் மேனேஜர்.

அவசர அவசரமாக அந்த கவரை பிரித்த கலை, அதில் இருந்த பெண்ணின் போட்டோவை மாற்றி தன் போட்டோவை வைத்தாள். பின்பு கிருஷ்ணா இருந்த மீட்டிங் ஹாலுக்குச் சென்றாள்.

“சார் உள்ள வரலாமா?” என்றாள் இன்முகத்தோடு.

“வாங்க” என்றவன் தோரணையாக அமர்ந்திருந்தான் அந்த சிவப்பு நாற்காலியில்.

“சார்” என்று கையில் இருந்த கவரை நீட்டினாள்.

“யார் நீங்க? என்ன இது?” என்றான்.

“என்னது யாரு நீங்களா?! என்ன டா இது புது கதையா இருக்கு? நம்ம பெயிண்டிங்க புகழ்ந்து தள்ளினதா கேள்விப்பட்டோமே இப்ப யாருனு கேட்கிறான்? நிஜமாவே இவன் பெயிண்டிங்க மட்டும்தான் பார்த்தானா? அம்புட்டு நல்லவனா டா நீ?!” என தனக்குள்ளேயே யோசித்துக்கொண்டிருந்தாள் கலை.

“ஹலோ டைம் வேஸ்ட் பண்ணாதீங்க” என்று சிறிது அழுத்தம் திருத்தமாக சொன்னான் கிருஷ்ணா.

“மேனேஜர் இத உங்க கிட்ட கொடுக்க சொன்னாரு சார்” என்றவள் அவள் முகம் அவன் மனதில் பதியும் முன்னர் கவரை மேஜையில் வைத்துவிட்டு ஒரே ஓட்டமாக ஓடி விட்டாள். அங்கு பிடித்த ஓட்டம் கன்னியாகுமரி பஸ் ஸ்டாண்டில் அவளது தந்தை அருகில் தான் நின்றது.

இவ்வாறு தான் செய்த காரியத்தையும், தன் மனதில் கிருஷ்ணா தான் இருப்பதாகவும், அவனை தான் மணம் முடிக்க விரும்புவதாகவும் கூறிய கலை, சுவர்ணா அத்தை வழியே வந்த சம்பந்தம் வேண்டாமென கூறி மண்டியிட்டு கைக்கூப்பி அழுது வேண்டினாள் பெற்றோரிடம்.

கலையின் மீது தீக்கனல் பார்வையை வீசிய அவளது அம்மா, கலையை அடித்து நொறுக்கிவிட்டார். அப்பாவும் கீதாவும் எவ்வளவு தடுக்க முயன்றும் முடியவில்லை.

“உனக்கு செல்லம் கொடுத்து வளர்த்து, எல்லாம் பார்த்து பார்த்து செஞ்சது எல்லாம் இதுக்கு தானா டி? என்ன தைரியம் இருந்திருந்தா இப்படி ஒரு காரியத்தை பண்ணியிருப்ப?” அம்மா கொந்தளிக்க அவளை அதற்கு மேல் பேசவிடவில்லை அப்பா.

வீட்டினை சிறிது அமைதியான சூழலுக்கு கொண்டுவந்து கலையை சாந்தப்படுத்தினார் அப்பா.

“ஏன் மா கலை இத அப்பாகிட்ட முன்னாடியே சொல்லியிருக்கலாம்ல டா மாப்பிள்ளை பார்க்க வர்றதையாவது தடுத்திருக்கலாம்ல” என்றாள்.

தன் உணர்வை புரிந்து பேசிய அப்பாவை கட்டிக்கொண்டு கூப்பாடு போட்டு அழுதாள் கலை.

“விடு டா விடு டா அழாத! இப்ப அந்த பையன் என்ன பண்ணுறான்?” என்று கேட்டார் அப்பா.

“தெரியல பா நான் போட்டோ மாத்தி வச்சிட்டு ஒரு சீட்டுல என்னுடைய போன் நம்பரும் எழுதி வச்சிட்டு வந்தேன். தினம் தினம் கால் வருமா வருமானு பார்த்துட்டே இருந்தேன். வரவே இல்லை” என்று தேம்பினாள்.

“அப்போ அந்த பையனுக்கு உன்ன பிடிச்சிருக்கா இல்லையானு எப்படி தெரிஞ்சிக்கிறது? என்னனு தெரியாம நீ எப்படி டா காத்திருக்க முடியும்?” என கேட்டார் அப்பா. அவர் கேட்கும் கேள்வியும் நியாயம் தானே.

“அந்த மேனேஜர் சார் போன்ல யார்க்கிட்டயோ சொன்னாரு இந்த தேதியில தான் கிருஷ்ணா சார் பொண்ணு பார்க்க ஊருக்கு போறாரு, அதனால அன்னைக்கு மீட்டிங் வைக்க முடியாது அப்படீன்னு எனக்கும் அதே தேதியில தான் நீங்க பெண் பார்க்கிற நாள குறிச்சிருந்தீங்க எப்படியும் அவரு போன் பண்ணுவாருனு எதிர்ப்பார்த்தேன். அவரு பண்ணல” என கூறிக்கொண்டே அழுகையை முழுங்கினாள் கலை.

“பின்ன எப்படி மா நீ அவனுக்காக காத்திருக்க முடியும்? எங்க இருக்கான் என்ன பண்ணுறான் எதுவும் தெரியாது” என அப்பா சொல்லி முடிப்பதற்குள் கலை தொடர்ந்தாள்.

“இல்லை பா அவரு கால் பண்ணலைனதும் நான் என் கல்லூரி நண்பனோட உதவியோட அவருடைய கால் எல்லாத்தையும் டிராக் பண்ணினேன். அவரு பொண்ணு வீட்டுக்காரங்க கிட்ட பேசின டாக் எல்லாம் கேட்டதுக்கு அப்புறம் தான் புரிஞ்சிது அவருக்கு என் போன் நம்பர் போய் சேரலைனு.

அவருக்கு பார்த்து வச்சிருந்த பொண்ணு வீட்டுல அவரு பேசினத எல்லாம் நான் கேட்டேன். அவரு கன்னியாகுமரி கடற்கரையில சூர்ய அஸ்தமனம் பார்க்க வர செய்திய அது மூலமா நான் தெரிஞ்சிக்கிட்டேன். அவர பார்த்து எல்லா விஷயத்தையும் தெளிவா சொல்லிடலாம்னு நினைச்சேன்” கலை சொல்லிக் கொண்டிருக்க அப்பா திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

“என்ன மன்னிச்சிருங்க பா” என்றாள்.

“பரவாயில்லை மா சொல்லு என்ன நடந்ததுனு” என்றார் அப்பா.

“நான் அவரோட தனியா பேசனும்னு சொல்லி ஒரு பேப்பர்ல எழுதி ஒரு கவிதையும் அதோட வச்சி அவர பார்க்குறதுக்கு கடற்கரைக்கு போனேன். போய் பேப்பர அவரு கையில கிடைக்கிற மாதிரி செஞ்சேன். அவரு அதுல உள்ளத படிச்சதும் பேப்பர பிடுங்கிட்டு ஒரு இடத்துல நின்னு அவரு வருவாருனு பார்த்துட்டு இருந்தேன் ஆனா அவரு போய்ட்டாரு என்கிட்ட பேச வரல” என்றாள்.

“உன் கையெழுத்த பார்த்து பயந்து ஓடிருப்பாரு மா” என்று கலையை வாரியவாறு அப்பா கலகலவென சிரித்தார்.

“அப்பா என் கையெழுத்து நல்லா இருக்காதுனு எனக்கே தெரியும். நான் ரம்யாவை ஐஸ் வச்சி அவள எழுத சொல்லி அதை தான் எடுத்துகிட்டு போனேன்” என்று தன் முகத்தை தோள்பட்டையில் ஒரு இடி இடித்துக் கொண்டாள்.

“சரி டா சரி டா” என்ற அப்பா தன் மகளை சாந்த நிலைக்கு கொண்டு வந்துவிட்டதை எண்ணி மகிழ்ந்தார். அதே சமயம் அவளது காதல் போராட்டம் கண்டு வருந்தினார்.

“சரி மா கலை நீ எத பத்தியும் யோசிச்சு கவலபட்டுக்காத அந்த பையனுக்கு உன் மேல இஷ்டம் இருக்குற பட்சத்துல அப்பா அவன கண்டுபிடிச்சு உன்கிட்ட சேர்க்கிறேன் அப்படி இல்லைனா நீ உன் வாழ்க்கைய வேற நல்ல வழில செலுத்தனும் சரியா??” என கேட்டார். கலையும் அப்பாவுக்கு சம்மதம் தெரிவித்தாள்.

“இந்த வருஷம் போகட்டும், கல்யாண பேச்சை தள்ளி போட்டுடலாம் நான் சுவர்ணா அத்தைக்கிட்ட பேசிக்கிறேன். நீ முன்ன போல இருக்கனும் சரியா?” என்ற அப்பா – மகளின் வாக்கு இன்றுவரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

கலையின் கல்யாணம் சம்பந்தமான பேச்சு வார்த்தை எதுவும் வீட்டில் எடுக்கவில்லை. அவளவன் அவளிடம் வந்து சேருவான் என்ற நம்பிக்கையில் தனது ஒவ்வொரு நாளையும் கழித்து வந்தாள் கலை.

அப்பாவுக்கு பெரிதும் கோபம் இல்லாவிடினும் கலையின் அம்மா இந்த விஷயத்தில் உடைந்து போனார் என்றே சொல்ல வேண்டும். அதனாலேயே மீண்டும் தான் மதுரை செல்ல வேண்டியிருக்கும் செய்தியை அம்மா எவ்வாறு எடுத்துக் கொள்வாள் என மனதினுள் புழுங்கியிருந்தாள் கலை.

அப்பாவின் ஒப்புதலும் அம்மாவின் மெளனமும் கலைக்கு சம்மதம் தெரிவிக்க குறித்த நாளில் மங்கை மீண்டும் மதுரையை நோக்கி பறந்தாள்.

மதுரையை அடைந்த முதல் நாள் ஊழியர்களுக்காக ஒதுக்கப்பட்ட குடியிருப்பில் தன் அறையை அழகாய் செதுக்கினாள் கலை. குடியிருப்பில் இருக்கும் சக ஊழியர்களிடம் அறிமுகமாகி நட்பினை ஏற்படுத்திக் கொண்டாள்.

இரண்டாம் நாள் புதிய கிளையின் திறப்பு விழா. சகல அலங்காரத்துடன் அலங்கரித்திருந்த மேடையில் ராகுல், கலை மற்றும் இரண்டு முக்கியமான ஊழியர்கள் அமர்ந்திருக்க நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கும் வேலையை சக ஊழியர் ஒருவர் செய்துக் கொண்டிருந்தார்.

தொகுப்பித்த நபர் ராகுலை அழைத்து பேச சொல்ல, ராகுலோ எடுத்த எடுப்பில் கலைக்கு அதிர்ச்சி ஒன்றை வைத்திருந்தான்.

“அனைவருக்கும் வணக்கம். நம்ம ஆர்ட் டிசைனிங் கம்பெனியோட இந்த புது கிளை ஆரம்பிக்கிறதுக்கு மிக பெரிய பலமா இருந்தது நம்ம ஊழியர்கள் தான். உங்க எல்லாருக்கும் நான் மன நெகிழ்ச்சியோட நன்றி சொல்லிக்கிறதோட மட்டும் இல்லாம ஒரு சர்ப்ரைஸ் வச்சிருக்கேன்..” ராகுல் சொல்லி முடித்த அடுத்த கணம் கூட்டத்தில் ஒரே சலசலப்பு.

“அமைதி அமைதி நானே சொல்லிடுறேன் உங்க எல்லாருக்கும் அனுப்பின செய்தியின் மூலமா உங்களூக்கு தெரிஞ்சிருக்கும் இந்த கிளையோட அசிஸ்டண்ட் மேனேஜர் போஸ்ட்டுக்கு மிஸ் கலை பொறுப்பேற்க போறாங்க அப்படீன்னு” ராகுல் முழுமையாக சொல்லி முடித்துவிட மாட்டானா என கூட்டத்தில் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

“நம்ம கம்பெனி இன்னைக்கு இவ்வளவு முன்னேற்றத்தை அடைஞ்சிருக்கு அப்படின்னா அதுக்கு மிக முக்கியமான காரணம் மிஸ் கலை அதனால அவங்கள இந்த கிளையோட மேனேஜராகவே போடலாம்னு ஹையர் அஃபீஷியல்ஸ் கூட பேசி சேர்ந்து முடிவு செஞ்சிருக்கோம்” என்றவுடன் கலை அதிர்ச்சியில் உறைந்து போனாள்.

“வாழ்த்துக்கள் கலை” என்றவன் தன் இருக்கையில் போய் அமர்ந்தான்.

‘இந்த பால் டப்பா என்ன பிளான் போட்டுருக்கான்னு தெரியலையே இதை எப்படி கலை சமாளிக்க போற?!!’ என மனதினுள் எண்ணிக் கொண்டிருந்தவளை அழைத்து பேச சொன்னார் தொகுப்பாளர்.

“இந்த குறைவான கால கட்டத்துல எனக்கு இவ்வளவு பெரிய பொறுப்பு கொடுப்பாங்கனு நான் கொஞ்சம் கூட எதிர்ப்பார்க்கல! என்ன நம்பி இத ஒப்படைச்சிருக்கீங்க கண்டிப்பா என்னோட பெஸ்ட்ட இதுல நான் கொடுப்பேன்” என்ற கலையிடம் ரிப்போர்ட்டர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

“மேடம் ஒரு கேள்வி” என கைத் தூக்கினார்.

‘உன்ன மதிச்சி கேள்வியெல்லாம் கேட்குறாங்க கலை’ மனதினுள் எண்ணியவள் “எஸ் சொல்லுங்க” என்றாள்.

“உங்களுடைய இந்த அபரிமிதமான வெற்றிக்கு என்ன காரணம்னு நினைக்குறீங்க?” என்றான்.

‘வேறென்ன எல்லாம் இந்த பால் டப்பாவோட சித்து விளையாட்டுதான்’ என சிந்தையில் சிந்தித்தவாறு “என்னுடைய தொழில் பக்தி தான். என்னுடைய ஒவ்வொறு டிசைனும் என் உயிருல இருந்து நான் பிறக்க வைக்க முயற்சி பண்ணுவேன் அதுதான் என்னுடைய பிளஸ்” என்று கலை கூறவும் கூட்டத்தின் கரகோஷம் காதுகளை கிழித்தது.

‘பாரு டி கலை மேனேஜர்னு சொன்னதும் கைத்தட்டி காக்கா பிடிக்க ஆரம்பிச்சிட்டாங்க’ என்று தனக்குள் சிரித்துக் கொண்டவள் தன் இருக்கையை அடைந்து அமர்ந்தாள்.

கூட்டம் முடிந்து உணவு கொண்டாட்டம் தொடங்க, ராகுல் தனக்கான ஆகாரத்தை எடுத்துக் கொண்டு கலை இருக்கும் மேஜையை நோக்கி சென்றான்.

கலை சக பெண் ஊழியர்களுடன் அமர்ந்திருந்த அந்த மேஜையினை அவன் அடைந்ததும், அங்கு வேறு இடமில்லாததைக் கண்டு சிறிது தயங்கி நின்றான். இதனை கண்ட ஒரு பெண் ஊழியர்

“வாங்க சார் வந்து உட்காருங்க” என்று தன் இருக்கையை தர இவனும் அமர்ந்துக் கொண்டான் நன்றி கூறுவதையும் மறந்தவனாக.

“கலை நாளைக்கு உங்க அசிஸ்டண்ட் எல்லா ஃபைல்ஸ்சையும் உங்ககிட்ட கொண்டு வந்துருவாங்க பார்த்துட்டு ஏதாவது சந்தேகம் இருந்தால் என்கிட்ட கேளுங்க” என்றான்.

“கண்டிப்பா சார் என்ன நம்பி கொடுத்த இந்த வேலையை கண்டிப்பா நான் நல்லபடியா செய்வேன் சார்” என்றாள்.

“எனக்கு தெரியும் கலை” என்றான் மர்ம புன்னகையோடு.

‘இவனோட சிரிப்பே சரியில்லையே! கலை நீ கொஞ்சம் ஜாக்கிரதையாவே இரு!’ தனக்கு தானே கூறிக்கொண்டாள் கலை.

“இப்பவும் என்கிட்ட சொல்லனும்னு தோணலையா கலை?” என்றான் நேரம் கடத்தாமல்.

“என்ன சார்” என்றாள் கலை.

“உங்க வீட்டுல வச்சி கேட்டனே!” என்றான் ராகுல்.

மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் கண்களை படபடத்தாள் கலை.

“இனி தான் சார் தேட போகிறேன். கிடைச்சதும் கண்டிப்பா உங்ககிட்ட நான் சொல்லுறேன்” என்று கூறியவள் எழுந்து கைகழுவ சென்றுவிட்டாள்.

“என்னது தேடனுமா??!!” குழப்பத்தில் மூழ்கிய ராகுல் இதற்கும் மேல் அவளை நச்சரித்து அவளது வெறுப்பை சம்பாதிக்க விரும்பவில்லை. எனவே அமைதியாக அங்கிருந்து நகர்ந்தான்.

மறுநாள் கோப்புகள் அனைத்தும் கலையின் மேஜையில் அடுக்கப்பட்டது. அதில் முதன்முதலில் கலை தேடிய விஷயம் எந்த ஒரு நிகழ்வாவது கிருஷ்ணாவுடைய கம்பெனியுடன் இணைக்கப் பட்டுள்ளதா என்று தான். அவள் தேடிய வரையில் ஒன்றும் கிடைக்கப் பெறவில்லை. பெல்லை அழுத்தி அசிஸ்டண்டை உள்ளே அழைத்தாள்.

“எக்ஸ்யூஸ்மீ மேடம்?!!” உள்ளே வர எத்தனித்திருந்தார் அந்த பெண் அசிஸ்டண்ட் மேனேஜர்.

கலையின் மீதுள்ள அதீத காதலினால் அசிஸ்டண்ட் மேனேஜரை கூட பெண்ணாக போட்டுவிட்டான் நம்ம ராகுல். ஆனால் அதுவே கலையின் காதலுக்கு மிக பெரிய உதவியாய் இருக்கும் என ராகுலும் கலையும் அன்று அறியவில்லை. இது அந்த பெண் அசிஸ்டண்ட் மேனேஜருக்கே தெரியாதுனா பார்த்துக்கோங்களேன்!!

உள்ளே வர அனுமதி கேட்ட பெண் “வாங்க!” என்ற கலையின் ஏற்பை கையில் எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தார்.

“எனக்கு சில தகவல் தேவை படுது” கலை கூற

“சொல்லுங்க மேடம்” என்றார் அசிஸ்டண்ட் மேனேஜர்.

“இந்த ஊருல கிருஷ்ணா குரூப் ஆஃப் கம்பெனி தெரியுமா உங்களுக்கு?” என்றாள் கலை.

சட்டென முகம் மாறியது அசிஸ்டண்ட் மேனேஜர் பெண்ணுக்கு. “என்ன ஆச்சு?” என கேட்டாள் கலை.

“இல்லை மேடம், ஒன்னும் இல்லை தெரியும் மேடம்” என்றாள்.

“ம்ம்ம் இதுவரை நடந்த எந்த மீட்டிங்காவது அவருடைய கம்பெனியோட பாண்டு-ல இருக்கா..?” என்று கேட்டாள்.

“இல்லை மேடம், அவரு எந்த கம்பெனி கூடவும் பாண்டு வைக்க மாட்டாரு எல்லாமே தனித்துவம் தான் மேடம்” என்றார் அசிஸ்டண்ட் மேனேஜர்.

“என்ன மேடம்னு எல்லாம் கூப்பிட வேணாம் உங்கள விட ஒன்னு ரெண்டு வயசு தான் பெரியவளா இருப்பேன் கலைனே கூப்பிடுங்க” என்று நட்பை தொடங்கினாள் கலை.

“ஓகே கலை நீங்களும் அசிஸ்டண்ட் மேனேஜரை சுருக்கி அசிமானு கூப்பிடுங்க” என்றார் அந்த பெண் மேனேஜர்.

“ஏன் உங்க பெயர்ச் சொல்லி கூப்பிட வேணாமா?” என்றாள் கலை.

“எல்லாரும் அப்படி தானே கூப்பிடுறாங்க நீங்க வித்தியாசமா கூப்பிடுங்க” என்றாள் அவள்.

“சரி அசிமா அப்படியே கூப்பிடுறேன்” என்றவள்

“நாம கிருஷ்ணா குரூப் எம்.டி. மிஸ்டர் கிருஷ்ணா-வ காண்டக்ட் பண்ணுவோமா? நம்முடைய முதல் டிசைனிங் எக்சிபிஷனுக்கு கெஸ்ட்டா இன்வைட் பண்ணலாம்” என்றாள் கலை.

“இல்லை மேடம் அவரு ஒரு முக்கியமான விஷயமா போன மாதம் தான் ஆஸ்திரேலியா போனாரு இப்போதைக்கு கண்டிப்பா வரமாட்டாரு” என்றாள் ஆசிமா.

“அட கடவுளே!!” என மனதால் வருந்தியவள் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.

“சரி வீடியோ கான்ஃபரென்ஸ் மூலமா ஒரு சர்ப்ரைஸ் விசிட் கொடுக்க சம்மதிப்பாரா??” என்று அடுத்த கேள்வியை தொடுத்தாள் கலை.

“கலை என்னச்சு? கிருஷ்ணா சார் பத்தி மட்டுமே கேட்குறீங்க மத்த டீலர்ஸ் எல்லாம் வேணாமா? இவர விட இன்னும் பெரிய டீலர்ஸ் கைவசம் இருக்காங்க. அவங்கள அப்ரோச் பண்ணலாமா இப்போதைக்கு?” என்றாள் அசிமா.

“இல்லை இல்லை நான் சொல்றேன் அப்ப சொல்லுங்க கிருஷ்ணா ரிடன் ஆகிடாருனா எனக்கு மறக்காம சொல்லுங்க” என்றாள் கலை.

“கண்டிப்பா கலை” என்று விடைப்பெற இருந்தவளை தடுத்து நிறுத்தினாள் கலை.

“அசிமா ஒரு நிமிஷம் நில்லுங்க” என்று கலை குரலெழுப்ப

“சொல்லுங்க கலை” என்றாள் அசிமா.

“கிருஷ்ணா பத்தி இவ்வளவு க்ளியரான டீட்டைல்ஸ் உங்களுக்கு எப்படி தெரியும்?” என கேட்டாள்.

“ஐய்ய்ய்யோ செத்த டி நீ!!” என திருட்டு முழி முழித்தாள் அசிமா.

“என்ன கலை” என அசிமா எச்சில் விழுங்கிக் கொண்டிருக்க

“இல்லை டீலர்ஸ் எல்லாரை பத்தின இத்தனை க்ளியரான அப்டேட்ஸ் எப்படி தெரிஞ்சிக்கிறதுனு கேட்கிறேன் அடுத்த முறை ஒவ்வொருத்தர பத்தியும் கேட்டு உங்கள டிஸ்டர்ப் பண்ண வேண்டி இருக்காதுல.. அதனால கேட்கிறேன்” என்றாள் கலை.

பெருமூச்சு விட்ட அசிமா “இல்லை கலை இண்டர்வ்யூக்காக தெரிஞ்சி வச்சிக்கிட்ட விஷயங்கள் தான் வேற ஒன்னுமில்லை” என்றாள்.

“சரி சரி பரவாயில்லை போய் வேலையை பாருங்க” என்றாள் கலை. தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடியேவிட்டாள் அசிமா.

நாட்கள் நகர நகர வேலைகளோடு வேலையாய் தங்கள் நட்பையும் வளர்த்துக் கொண்டனர் கலையும் அசிமாவும். அலுவலக ஊழியர்கள் குடியிருப்பில் தங்கியிருக்கும் கலைக்கு அசிமா தன் வீட்டில் இருந்து அடிக்கடி உணவு, திண்பண்டங்கள் என கொண்டு வருவாள்.

அசிமாவுடைய அம்மாவின் கை பக்குவம் கலைக்கு மிகவும் பிடித்து போய் இருந்தது. அவரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சமயலை பாராட்டி தள்ளுவாள் கலை.

இது ஒரு பக்கம் அரங்கேற, மறு பக்கம் அவ்வப்போது கிருஷ்ணாவின் வரவு பற்றி கலை கேட்ட வண்ணமும் அசிமா தப்பித்த வண்ணமுமாய் கடந்தது அவர்களது நாட்கள்.

கலை ஏன் கிருஷ்ணா மீது இவ்வளவு ஆர்வம் கொண்டுள்ளாள் என்ற கேள்வியும் அசிமாவுக்கு வந்து செல்வதுண்டு. தான் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காகவே இந்த சந்தேகத்தை கேட்டுக் கொள்ளவில்லை அசிமா. இருவரின் நட்பும் உண்மையாய் திண்மையாய் இருக்கும் இடத்தில் சிறிது குழைவாய் தென்பட்ட இந்த ஒழிவு மறைவு உடையும் நாள் வந்தது.

என்ன தான் மேனேஜர், அசிஸ்டண்ட் மேனேஜர் என்று பதவிகள் அவர்களை வெவ்வேறாக காட்சிப்படுத்தினாலும் தோழமையால் நாங்கள் ஒன்றானவர்கள் என்று காட்டிக் கொள்ளும் வண்ணம் அன்பை பொழிந்து தள்ளுவதில் இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல.

ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை கலையும் ஆசிமாவும் வழக்கம் போல ஊர் சுற்ற செல்லும் பொழுது ஓரிடத்தில் கூட்டம் ஒன்று அதிகமாய் இருப்பதை கண்டனர். ஏதோ அசம்பாவிதம் என்பதை மட்டும் அங்கிருந்தவர்களின் முகங்கள் காட்டிக் கொடுத்தது. இருவரும் அருகில் சென்று கண்டனர்.

இரு சிறு பிஞ்சு குழந்தைகள் லாரியால் அடிப்பட்டு இரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தனர். அருகில் இருந்த ஒருவர்,

“பாவம் இந்த சின்ன பையன், அப்பா அம்மா இல்லாம இந்த வயசுலை அவன் தங்கச்சிய தூக்கிக்கிட்டே அங்கும் இங்குமா அலைவான் போறவங்க வாரவங்க எல்லார்கிட்டயும் அஞ்சோ பத்தோ கேப்பான்’ இன்னைக்கு பாருங்க இறைவா உனக்கு கண் இல்லையா??” என்றார்.

அதை பார்த்த அடுத்த நொடி கத்தி அலறி மயங்கியே போனாள் அசிமா.

“அசிமா அசிமா என்னாச்சு?” என தாங்கி பிடித்த கலை, தண்ணீர் தெளித்து அவளை எழுப்பி அவள் வீட்டிற்கு அலைத்து சென்றாள்.

வீட்டினுள் நுழைந்ததும் ஓடி சென்று அம்மாவிடம் நடந்ததை கூறி அழத் தொடங்கினாள் அசிமா. அவளை சமாதானபடுத்தி அவள் அறையில் படுக்க வைத்த அசிமாவின் அம்மா கலையிடம் வந்தார்.

முதல் முதல்ல வீட்டுக்கு வந்துருக்க சாப்பாடு எல்லாம் முடிச்சிட்டு பொறுமையா போனா போதும் என்றார்.

“இல்லை மா இன்னொரு நாள் சாப்பிடுறேன் அசிமா இப்படி இருக்கையில எப்படி” என்றாள் கலை.

“அதனால என்ன மா, அவ கொஞ்சம் நேரத்தில சரியாகிடுவா, நீ வா வந்து உட்காரு” என அமர வைத்தார் அசிமாவின் அம்மா.

“அவளுக்கு என்ன ஆச்சு மா? இப்படி தான் விபத்து எதுவும் பார்த்தா மயங்கிடுவாளா?” என கலை கேட்டாள்.

“அப்படியெல்லாம் இல்லை மா அவளுக்கு அண்ணா பாசம் அதிகம் அது அவளோட பலவீனம்னு கூட சொல்லலாம்” என்றார் அசிமாவின் அம்மா.

“என்ன அசிமாவுக்கு அண்ணா இருக்கிறாரா?” அதிர்ச்சித்தாள் கலை.

“ஆமா மா” மிகவும் சாதுவாக கூறினார் அசிமாவின் அம்மா.

“என்ன மா இப்படி சொல்லுறீங்க? இதுவரை அவ அவளோட அண்ணா பத்தி என்கிட்ட பேசினதே இல்லையே?!” வினவினாள் கலை.

“பேசினது இல்லையா?” இது அம்மாவுக்கு அதிர்ச்சியாய் இருந்தது.

“ஆமா மா ஏன் என்கிட்ட சொல்லல அவ? இப்போ எதுவும் சண்டையா ரெண்டு பேருக்கும்?” என கேட்டாள் கலை.

“சண்டையா? அதுவும் அவளோட அண்ணா கூடவா?” அம்மா புன்முறுவலை காட்டினாள்.

“பின்ன எதுக்கு மா என்கிட்ட சொல்லல அவ?” கலையின் வேகம் அதிகரித்தது.

“அதுதான் எனக்கும் புரியலை மா, அவ மூச்சுக்கு 100 தடவ அண்ணா அண்ணானு தான் ஜெபம் பண்ணிக்கிட்டு இருப்பா வீட்டுல” என்றார் அசிமாவின் அம்மா.

“அவளுக்கு அவ அண்ணா மேல அவ்வளவு பாசமா?” ஆச்சரியத்தோடு கேட்டாள் கலை.

“பாசமா அவளுக்கு உயிரே அவளோட அண்ணா தான்.. அம்மா அப்பா எல்லாரும் அடுத்தது தான்” என்ற அசிமாவின் அம்மாவிடம்

“அப்படியா சோ ஸ்வீட்.. இவங்க ரெண்டு பேர பத்தி ஏதாவது இண்ட்ரஸ்டிங்கான விஷயம் சொல்லுங்க மா” அதித ஆர்வத்தில் புத்துணர்வு கொண்டு கேட்ட கலையை சில வருடங்கள் முன்னோக்கி கூட்டிச் சென்றார் அசிமாவின் அம்மா. (வேறேன்னஅசிமாவோட ஃப்லஷ் பேக் தான்)

அசிமாவின் கல்லூரி பருவத்தில்

என்றும் இல்லாதவாறு வீட்டு வாசலுக்கும் வீதிக்கும் கண்களால் தூண்டில் போட்டுக்கொண்டே இருந்திருந்தாள் நம்ம அசிமா. அம்மாவுக்கோ ஒன்றும் புரியவில்லை.

நிறைந்த அன்பும் குறும்புப் பேச்சும் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் குணமும் கொண்டவள் இவள் எந்நேரமும் கலகலப்பான பேச்சால் தன்னைச் சுற்றி இருப்பவர்களை உற்சாகமாக வைத்திருப்பாள். இன்று அவளது நடவடிக்கை வித்தியாசமாக இருப்பதாய் உணர்ந்தாள் அம்மா. அவனை தான் தேடிக்கொண்டிருக்கிறாள் என்று மனம் கூற அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ,

“என்ன டி காலேஜ் க்கு கிளம்புற உத்தேசம் இல்லையா?” என்றார்.

காதில் விழாதவளாய் வழிமேல் விழி வைத்து அவனது கற்பனையில் திளைத்திருந்தாள். சிறு வயதில் கட்டிய மணல் வீட்டை உடைத்ததும் வாங்கிய மிட்டாயை பிடுங்கி உண்டதும் அன்று முதல் இன்று வரை அவன் உடையை இவள் அணிந்து மகிழ்வதும், அவன் அதை கண்டு நகைப்பதும் முத்தான நினைவுகளாய் அவள் கண்களில் வடிய, அவனது சட்டை ஒன்றை எடுத்து அணிந்துக் கொண்டவளாய் மெல்ல நகர்ந்து நாட்காட்டியின் அருகில் சென்றாள். தீபாவளிக்கு எத்தனை நாட்கள் உள்ளதென எண்ணிக்கொண்டிருந்தாள்.

“எவ்வளவு நேரமா கத்திக்கிட்டு இருக்கேன்? நான் சமையல் கூட முடிச்சிடேன். நீ இன்னும் குளிக்கக்கூட போகாம என்ன நின்னுக்கிடே இருக்க??” என்றது அம்மாவின் கணீர் குரல்.

இன்னும் பதில் ஏதும் வராததால் வேகமாக வந்து நாட்காட்டியை தடவிக்கொண்டிருந்தவளை வலது தோள்பட்டையை பிடித்து தன்னை பார்க்கத் திருப்பினாள் அம்மா. கண்களில் கண்ணீர் கட்டி நிற்பதைக் கண்ட அம்மா,

”அடியேய்! நான் உன்ன இப்ப என்ன சொன்னேன்னு இப்படி உக்காந்து அழுதுகிட்டு இருக்க??” காலேஜ்க்கு நேரமாகுதுனு சொன்னது ஒரு குத்தமா? என கேட்டார்.

“ஒன்னும் இல்ல மா”என ஸ்ருதி குறைந்த குரலுடன் கூறியவள் உள்ளே சென்று காலேஜ்க்கு கிளம்ப தொடங்கினாள். அம்மாவுக்கோ ஒன்றும் புரியவில்லை. இன்று ரக்‌ஷாபந்தன். வெளியூருக்கு வேலை விஷயமாய் சென்றிருக்கும் அவள் அண்ணனை விடுப்பு எடுத்து வரும்படி முந்தைய நாள் கைபேசியில் நான்காம் உலகப்போர் நடத்தியது நினைவுக்கு வந்தது.குளித்து முடித்து வெளியே வந்தவளிடம் அம்மா,

“கண்ணு! அண்ணன் தான் விடுப்பு கிடைக்கல தீபாவளிக்கு வரேன்னு சொன்னான்ல அப்புறம் எதுக்குடிமா இப்படி குழந்தை மாதிரி அழுதுகிட்டு இருக்க??” என கேட்டார்.

“நீ உன் பையனுக்கு சப்போர்ட் பண்ணாத! ரக்‌ஷாபந்தன் அதுவுமா எனக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க நேத்து வரலனு சொல்லிட்டு வந்திடுவான்னு நினைச்சேன்” என்று அழு குரலில் கூறியிருக்கிறாள் நம்ம ஆசிமா.

“நீயா ஏதாவது யோசிச்சிக்கிட்டு அழுதுகிட்டு உட்காந்திருந்தா நாங்களா பொறுப்பு?” சிறிது காட்டமாகவே கூறினார் அம்மா.

“உன்ன நான் ஏதாவது சொன்னேனா?? நானா கத்திக்கிட்டு இருக்கேன் விடு” என்றவள் இமையோரம் எட்டிப்பார்த்த கண்ணீரை துடைத்தவாறு நகர்ந்தாள்.

அம்மாவிற்கோ அவளது பாசத்தை எண்ணி மகிழ்வதா இல்லை அவள் அழுவதைக் கண்டு வருந்துவதா என புரியவில்லை.சமாதானம் சொல்ல வருவதற்குள் விறுவிறுவென வாசல் படி தாண்டிவிட்டால் அன்பு மகள்.

கல்லூரி முடிந்து மாலை வீட்டிற்கு வரும்பொழுது அவளுக்கு பிடித்த பலகாரம் செய்து சமாதானப்படுத்த முடிவு செய்தாள் அம்மா. அண்ணனின் நினைவலைகளை நெஞ்சில் சுமந்தவாறு கல்லூரிக்குச் சென்றாள் அசிமா. வகுப்பறையில் சகமாணவர்களோடு எப்போதும் உற்சாகமாக இருப்பவள் இன்று ஆழ்கடல் போல் அமைதியாய் காட்சியளித்தது அனைவருக்கும் ஆச்சரியமாகவே இருந்தது.

மருதாணி என்றாள் கொள்ளை பிரியம் அவளுக்கு. பண்டிகை நாட்களுக்கெல்லாம் தவறாமல் மருதாணியிட்டுக் கொள்பவள் சாதாரண நாட்களில் மருதாணி ஆசை வந்தால் ஏதேனும் சாக்குப்போக்கு சொல்லி அந்நாளை விஷேச நாளாக மாற்றி மருதாணியிட்டுக் கொள்வாள். முந்தைய நாள் கல்லூரி நண்பர்களுடன் இருக்கையில் ரக்‌ஷாபந்தன் பற்றியும் தன் அண்ணன் பற்றியும் ஆசை மொழிப் பேசிக்கொண்டே மருதாணி இட்டிருந்தாள் அவள். இன்று கைகளின் மருதாணிக்குப் போட்டியாக அவள் கண்கள் சிவந்திருந்தது. ஏதோ பிரச்சனை என்று மட்டும் புரிந்துக்கொண்ட நண்பர்கள் என்னவென்று விசாரிக்க தொடங்கினர்.

“ஏய், ஏண்டி இப்படி வந்து நிக்கிற?? கண்ணுலாம் சிவந்துபோய் இருக்கு??”

எதுவும் பேசாமல் வாடிய பூ தலைகுனிந்தாற் போல தலையை தொங்கப் போட்டவாறு அமைதியாக தன் இடத்தில் அமர்ந்துக் கொண்டாள் அசிமா. என்றும் சுறுசுறுப்பாகவும் நகைச்சுவையாய் வாயளந்துக்கொண்டும் துள்ளித்திரியும் இவளை பிடிக்காதவர் அவள் வகுப்பில் யாரும் இல்லை.தேனைத் தேடும் பட்டாம்பூச்சியாய் வளம்வந்தவள் இன்று நெருப்பிலிடப்பட்ட விட்டில் பூச்சியாய் காட்சியளிப்பது அனைவரது மனதையும் உருக்கியது.நண்பர்கள் அவள் அருகில் சென்றனர்.

“என்னடி ஆச்சு? என்ன பிரச்சனை??” கூட்ட்த்தில் ஒருத்தி கேட்க

“ஒன்னுமில்லை டி” என வலியில் வழிந்தோடும் விழிநீரைத் துடைத்தவாறு கூறினாள் அசிமா.

“உன்ன எங்களுக்கு தெரியாதா?? இத்தன வாட்டமா இருக்கிறவளா நீ?? என்ன ஆச்சு சொல்லு” விடாப்பிடியாக கேட்டனர் தோழமை கூட்டம்.

“அண்ணா இன்னைக்கு ஊருக்கு வரல” அழுகை தொண்டையை அடைக்க நடுங்கிய குரலுடன் கூறினாள். அவள் அவளது அண்ணன் மீது கொண்ட பிரியம் அவளை தெரிந்த அனைவருக்கும் தெரியும். ஏனென்றால் அவள் வாயை திறந்தால் உச்சரிக்கும் பத்து வார்த்தைகளில் எட்டு வார்த்தைகள் அண்ணனை பற்றியதாய் தான் இருக்கும். அதனால் அவளது வலியினை நன்கு உண்ர்ந்துக் கொண்டனர் அவளது நண்பர்கள்.

“சரி அழாத சீக்கிரம் உன்ன பார்க்க அண்ணன் வருவாங்க”ஒரு தோழி கூற இன்னொரு தோழியோ,

“போன் செய்து பேசினியா? ஒரு தடவ பேசு கொஞ்சம் அமைதியா உணருவ” என்றாள்.

“இல்ல இப்ப வேணாம் நான் அப்புறமா பேசிக்கிறேன்” என்றாள் அசிமா.

“ஹேய் உனக்கு ஒன்னு தெரியுமா நேத்து நம்ம ராமு வண்டியில சீன் போட்டு கீழே விழுந்து செமயா பல்பு வாங்கினான்” அவளை சிரிக்க வைக்க சகதோழர்கள் ஏதேதோ பேச கொஞ்சம் சாந்தமானாள் அசிமா.

அன்றைய பாடம் வழக்கம் போல் நடந்து முடிந்தது. வீட்டிற்குச் செல்ல ஆயத்தமான அசிமாவுக்கு அம்மாவிடம் காலையில் கத்திய நினைவு வந்தது.

“வீட்டிற்கு போய் அம்மாகிட்ட மன்னிப்பு கேக்கனும், வருத்தத்துல ஏதேதோ கத்திட்டு வந்துட்டோம்” என்று நினைத்தபடியே பேருந்து நிறுத்தத்திற்கு நண்பர்களுடன் பயணித்தாள்.

நண்பர்கள் ஏதேதோ பேசிக்கொண்டு வர இவளது நினைவுகளில் நிறைந்திருந்தது அம்மாவும் அண்ணனும் மட்டுமே. பேருந்து வந்ததும் ஏறி தனக்கு விருப்பமான ஜன்னலோர இருக்கையில் அமர்ந்துக் கொண்டு வீதியை ரசித்தபடியே வீட்டை அடைந்தாள். வீட்டில் நுழைந்தவுடன் பலகார வாசனை மூக்கை துளைத்தது.

“அம்மா!” என்ற அழைப்போடு உள்ளே நுழைந்தாள்.

“வாடி வந்துட்டியா??” அம்மா கேட்டார்.

“என்ன உன் பையன் வரலனு சந்தோஷத்துல பலகாரம் செய்யுற போல” கேலித்தாள் அசிமா.

எப்பொழுது அம்மாவிடம் சண்டை போட்டாலும் எதுவும் நடக்காதது போல குறும்புப்பேச்சில் வாக்கியத்தை தொடங்குவதே அசிமாவின் மன்னிப்புக் கேட்கும் ஸ்டைல். அவளது வழக்கமான குறும்பு பேச்சை கேட்டதும் அசிமா சாதாரண மனநிலைக்கு வந்துவிட்டதை எண்ணி நிம்மதி அடைந்தாள் அம்மா.

“இல்லடி என்னைக்கும் இல்லாம இன்னைக்கு” அம்மா சொல்லி முடிப்பதற்குள் சிட்டாய் பறந்தாள் அசிமா.

“அடியேய் பேசிக்கிட்டு இருக்கும்போது எங்க ஓடுற??” அம்மா கேட்க

“இன்னைக்கு என் செல்லத்த கொஞ்சவே இல்ல” கத்திக் கொண்டே ஓடினாள்.

சிறிய புன்முறுவலுடன் வேலையை தொடர்ந்தாள் அம்மா. ஓடிச்சென்ற வேகத்தில் திரும்பி வந்தவள் ஒரு பலகாரத்தை கையில் கொத்திக்கொண்டு மீண்டும் தன் செல்லக்குட்டியை நோக்கி படையெடுத்தாள்.

யார் அந்த செல்லக்குட்டி?? வேறு யாருமில்லை. தான் வளர்க்கும் ஆசை நாய்குட்டி தாமு. காலையில் அவளது ஸ்பரிசம் தீண்டாமல் ஏங்கிக் கிடந்த தாமு அவளை விட வேகமாய் வாலை ஆட்டிக்கொண்டு ஓடி வந்து அவள்மேல் பாய்ந்தது. இருவரும் சிறிது நேரம் விளையாட, அம்மா தேனீரும் பலகாரமும் கொண்டு வந்துக் கொடுத்தாள்.

“உனக்கும் எடுத்துகிட்டு வா மா சேர்ந்து சாப்பிடுவோம்” சொன்னாள் அசிமா.

“ம் வரேன்” என்றாள் அம்மா.

காற்று இதமாய் வீச, பொழுது சாய்ந்துக் கொண்டிருந்தது. அம்மாவும் மகளும் உரையாடிக்கொண்டே தேனீரையும் பலகாரத்தையும் உண்டுமுடித்தனர். பிறகு வீட்டின் அன்றாட வேலைகளை இருவரும் செய்யத் தொடங்கினர்.

தன் அறையை ஒதுங்கவைக்கும் பணியில் மும்புறமாக இருந்தாள் அசிமா. ஒரு பொட்டலம் கண்ணில் தென்பட்டது. அண்ணனுக்கு வாங்கி வைத்த ரக்‌ஷாபந்தன் பரிசுகள் தான் அது. அதை பத்திரமாக பீரோவில் பூட்டி வைக்க கையில் எடுத்தவள் ஏதோ யோசித்தவாறு பொட்டலத்தைப் பிரித்தாள்.

வாங்கி வைத்த ராக்கி கயிறு இருந்தது. அந்த பளிச்சிடும் பண்டிகை கயிறு தன் அண்ணன் கை சேராமல் கலையிழந்து கிடப்பதாய் உணர்ந்தாள். வாங்கி வைத்த ஒப்பனை பொருட்களும் இருந்தது. அண்ணனுக்கு எப்போதும் சிறு பிள்ளைபோல் குடுமி போட்டு ஒப்பனை செய்துவிடுவதில் ஓர் ஆத்மார்த்த பிரியம் அவளுக்கு. அதற்கான முன்னேற்பாடாக வாங்கி வைத்திருந்த ஒப்பனை பொருட்கள் அவளிடம் ’உன் அன்பு சகோ எப்போது வருவான்?’ என்று கேட்பது போல உணர்ந்தாள்.

இதழோரம் சிரிப்பு அளவாய் சிதற பொட்டலத்தை மடக்கி அலமாரியில் வைத்துப் பூட்டினாள். நேரம் உருண்டோடி இரவை அடைந்தது. வேலை முடிந்து வீடு திரும்பிய அப்பாவிடம் வந்ததும் வராததுமாக,

“என் தங்கச்சியவா மிரட்டுற! வீட்டை விட்டு வெளியே போ!”

என்று கூறியவாறு ஜாக்கிஜான் போல போஸ் கொடுத்து நின்றாள் அசிமா.

ஆம், அசிமாவின் மழலை பருவத்தில் அவளுக்கு செல்ல மிரட்டலிட்ட அப்பாவை வீட்டை விட்டு வெளியேற சொன்னவன் அவளது அண்ணன். தங்கையின் பாசத்திற்கு சிறிதும் சளைக்காது ஈடு கொடுப்பவன் அவள் அண்ணன். அவர்களது அன்பின் ஹிமாலயத்தை வார்த்தைகளில் வர்ணிக்க இயலாது.

அவன் குரலுக்கு முன்னால் அவளுக்கு அத்தனை கீதங்களும் தோற்றுப்போகும். அவனுக்கோ தங்கை என்ற ஒற்றை வார்த்தைக்கு முன்னால் மற்ற அழகெல்லாம் காணாமல் போகும். அவ்வப்போது தன் அண்ணனை போல நடித்துக்காட்டி வீட்டில் அவன் இல்லாக்குறையை தீர்த்து வைப்பாள் அசிமா. இன்று அவள் ஜாக்கிஜான் போஸில் நிற்க, சிரித்தபடி செல்லமாய் தலையில் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தார் அவளது அப்பா.

“அப்பா உன் பையனுக்கு போன் போடு பேசுவோம்!” என்றாள் அசிமா.

“இன்னுமா நீ பேசாம இருப்ப? நான் போன் போட்டு கொடுக்கிறதுக்கு?” என்று வாரினார் அப்பா.

அசிமா கண்ணடித்துக்கொண்டு நாக்கை கடித்தவாறு,

“அய்யோ நிஜமா பேசலப்பா இப்பவும் நா பேசமாட்டேன், அவன் கூட சண்ட நீங்க பேசுங்க, நான் கேட்கிறேன்” என்றாள் அசிமா.

அப்பாவும் போன் போட, அம்மா அப்பா இருவரும் பேசினர். அன்பு அண்ணன் அவன் அப்பாவிடம் தங்கையை கேட்க,

“அவ உன்கிட்ட பேச மாட்டாளாம்! சண்டையாம்!! ஆனா நீ பேசுறத எல்லாம் ஸ்பீக்கர்ல கேட்டுட்டு தான் இருக்கா!!!” நகைப்போடு கூறிய அப்பாவிடம் அசிமாவின் அண்ணனோ,

“ஏன் சண்டையாம்?? என் குட்டி தேவதைக்கு என்கிட்ட பேச வேணாமா??” என்றான்.

அப்பாவிடம் செல்ல முறைப்போடு போனை பிடுங்கிவிட்டு ஒற்றை விரலை தன் உதட்டின் மீது வைத்து

“ஸ்ஸ்ஸ்” என்றாள் அசிமா.

பின்பு போனை தன் வாய் அருகே வைத்துக்கொண்டு, தன் செல்லக்குட்டி தாமுவிடம் பேசுவது போல்,

“டேய் தாமு உனக்கு மட்டும் தான் டா நான் பலகாரம் ஊட்டிவிடுவேன் நீ மட்டும்தான் என்ன தேடுற நீ தான் என் கூட பிறந்த பிறப்பு வேற எந்த நாயுமில்ல” செல்லாமாய் சீண்டினாள் அசிமா.

அலைபேசி வழியாக அண்ணன்காரனோ,

“டேய் தாமு அண்ணன் சொல்லுறத கேளு டா என்ன வேணும்னாலும் சாப்பிடு அவ கையால கொடுக்கிற பலகாரத்த மட்டும் சாப்பிட்டுறாத கவனம் டா அண்ணன் வேற உன் கூட இல்ல உன்ன பார்த்துக்கிறதுக்கு” என்று நகைத்தான்.

“என்ன? அவன் அதெல்லாம் சாப்பிடுவான். நான் பார்த்துப்பேன் தாமுவ!” பேசமாட்டேன் என்று கூறியதை மறந்து சண்டைபிடித்தாள் அசிமா.

“யாரோ என்கிட்ட பேச மாட்டேன்னும், என் மேல கோவமா இருக்கிறதாவும் காமெடி பண்ணிக்கிட்டு இருந்தாங்க பாப்பா.. அதை தான் நம்ம தாமுகிட்ட சொல்லிட்டு இருந்தேன்” என்றான் அண்ணன் காரன்.

தோல்விக்கூட சுகம் தானே நம் அன்புக்குரியவர்களிடம் தோற்றுப் போகும் பொழுது அசிமா அந்த ஆனந்தத்துடன்,

“எரும என்ன ஏமாத்திட்ட டா நீ!” என்றாள்.

“அண்ணனுக்கு லீவ் கிடைக்கல அம்மு சாரி செல்லம்” என செல்லமாய் கெஞ்சினான்.

“சரி சரி மன்னிச்சிட்டேன் அழாத” என்றாள் அசிமா.

“சாப்பிட்டியா தங்கமே??” பாசமாய் கேட்டான் அண்ணன்.

“ஆ.. அதெல்லாம் நல்லா சாப்பிட்டேன். உன்ன விட்டு நான் மட்டும் தனியா நிறைய சாப்பிட்டேன்” என்றாள்.

“சரி சரி என் தங்கச்சி சாப்பிட்டா நான் சாப்பிட்ட மாதிரிதான்” என்றான் அவன்.

“இந்த ஐஸ் வைக்கிற வேலையெல்லாம் வேணாம் வரும்போது ஐஸ்கிரீம் வாங்கிட்டு வா அதான் வேணும்” என்றாள்.

“கண்டிப்பா வாங்கிட்டு வர்றேன் காலெஜ் எப்படி போகுது??” என கேட்டான்.

“ம்ம் அதுக்கென்ன செமயா போகுது” என்றவளிடம்

“அது போகுது சரி நீ கூடவே போறியா இல்ல அது ஒரு பக்கம் போக நீ ஒரு பக்கம் போறியா?” என கேலித்தான்.

“அடேங்கப்பா உன்ன மாதிரியா?? கடைசி பரிட்சையில கூட வழக்கம்போல நான் தான் முதல் மார்க்” என்றாள் கர்வ குரலில்.

“என்ன டி பிட்டு கிட்டு அடிக்கிறியா?? எப்பவும் முதல் மார்க் வாங்கிற??” என்றான்.

“எப்பா! கலாய்ச்சிட்டாராமா! சாப்பிட்டியா லூசு??” என தன் விசாரணையைத் தொடங்கினாள்.

“இப்ப தான் வேலை முடிஞ்சிது இனிதான் மெஸ்க்கு போகனும்” என்றான் அவன்.

“மெஸ்-க்கு போகிற மாதிரி தெரியலயே? உன் குரலுக்கு பின்னால வண்டி சத்தமா கேக்குது! எங்க ஊரு சுத்துற?? அம்மாகிட்ட சொல்றேன் இரு!!” என தொடங்கினாள் அவள் லீலையை.

“கம்பெனி வாசல்ல நிக்கிறேன் அதான் ரோட்டுல போகிற வண்டி சத்தம் கேட்குது” என்றான் அவன்.

“வண்டி ரோட்டுல போகிற மாதிரி கேட்கலயே! நீ வண்டியில போகிற மாதிரில கேட்குது” என்றாள் விடாபிடியாக. அவனோ ஒரு நிமிடம் கைபேசியின் வாயினை மூடிக்கொண்டு,

‘வாயாடி எதையும் கண்டுபிடிச்சிருவாளோ? சரி சமாளிப்போம்’ என்று எண்ணிக்கொண்டு உரையாடலைத் தொடர்ந்தான்.

“வயிறு ரொம்ப பசிக்குது நான் மெஸ்-க்கு தான் கிளம்புறேன்” என்றான் அழுத்தம் திருத்தமாக.

பசி என்றதும் தாயாய் மாறிய தங்கை, “சரி ஒழுங்கா சாப்பிடு உடம்ப கவனிச்சிக்க” என்று தன் புலன் விசாரணையை முடித்துக் கொண்டாள்.

பிறகு வழக்கம் போல் பாச மழை மட்டும் பொழிய தொலைபேசி உரையாடல் தொடர்ந்து முடியும் வேளையில்

“சரி மா நல்லா படி உடம்ப பார்த்துக்க எப்போதும் படிச்சுக்கிட்டே இருக்காம நேரத்துக்கு தூங்கு காலேஜ்-க்கு கவனமா போயிட்டு வா என்ன பிரச்சனைனாலும் அண்ணனுக்கு போன் செஞ்சிடு” என்றான்.

அண்ணனது இந்த டயலாக் தான் அவளின் ஃபேவரட் என்றாலும் அதை காட்டிக் கொள்ளாமல் குறும்புக்காரியின் பதிலோ, “ஆமா இவரு பெரிய இவரு கால் செஞ்சதும் பத்து அடியாள் அனுப்பிடுவாறு எல்லாம் நாங்க பார்த்துக்கிறோம்!” என்றாள்.

“வாயாடி! சரி அம்மாகிட்ட போன கொடு” என்றான்.

(பேசி முடித்ததும் எப்போதும் போனை அம்மாவிடம் கொடுக்க சொல்லி சரிமா நாளைக்கு பேசுறேன்னு சொல்லுறது அவனது வழக்கம். வழக்கம் தவறாது இன்றும் அதுவே நடந்தது)

“இதோ கொடுக்கிறேன் அம்மா” என்றவள் அம்மாவிடம் போனை கொடுத்துவிட்டு அண்ணனின் சட்டையை அணிந்துக்கொண்டு உறங்கச் சென்றாள்.

பொழுது விடிந்தது. ஞாயிற்று கிழமை. காலை சூரியன் அவள் முகத்தில் இதமாய் தன் கதிர்களை பரப்ப, கண்களை கசக்கியவாறு எழுந்து சோம்பலை முறித்துக்கொண்டு, மெத்தையை விட்டு இறங்க மனமின்றி அப்படியே அமர்ந்திருந்தாள் அசிமா. பொதுவாகவே அதிகாலையே எழும் பழக்கம் கொண்டவள் அசிமா.

இயற்கை மீது தீராத நாட்டம் கொண்டவள் அவள். ஜன்னல் திரையை விலக்கிக் கொண்டு வெளியே இயற்கையை ரசித்துக் கொண்டிருந்தாள். குருவிகளின் கீச் கீச் சத்தம் காதில் மயிலிறகால் சிணுங்கலூட்டியது போல் இனிமையாய் இருக்க சிறிது நேரம் வேடிக்கை பார்த்துக் கொண்டே இருந்தாள்.

திடீரென “அம்மா” என்று கத்தினாள்.

“காலங்காத்தால ஏன் டி இப்படி கத்துற?” எங்கிருந்தோ தன் குரலை மட்டும் அனுப்பி வைத்தாள் அம்மா.

“அம்மா சீக்கிரம் வா மா!” என்றாள் இன்னும் வேகமாக.

“இரு டி வர்றேன்!” என்றார். அசிமாவின் அலறல் சத்தம் கேட்டு அப்பாவும் அங்கு வந்தார்.

“என்ன டி ஏன் இப்படி கத்துற?” என்ற அம்மாவிடம்

“அய்யோ அம்மா நான் எப்படி சொல்லுவேன்??” என்று திணறினாள் உத்வேகத்தோடு. வானத்துக்கும் பூமிக்குமாய் துள்ளிக்குதித்துக் கொண்டிருந்தாள்.

“இப்ப என்ன-னு சொல்லுறியா இல்லையா?? நிறைய வேலை இருக்கு எனக்கு!” என்றார் அம்மா.

“அம்மா நம்ம வீட்டுக்கு இன்னைக்கு ஒரு வரவு மா!!” என்றாள்.

புருவங்கள் இரண்டும் ஆச்சரியத்தில் மிதக்க, கண்கள் வியப்பில் ஆகாயம் தொட, கன்னங்கள் இரண்டும் பொரித்து எடுத்த குலாப் ஜாமூன் போல் சிவக்க புன்னகை முத்துக்கள் வாயில் சிதற திகட்டா திகைப்புடன் கூறினாள் அசிமா.

அசிமாவின் கண்களையும் புருவங்களையும் கடன் வாங்கியது போல் அம்மாவும் கண்களை விழிக்க, வெடிக்க வைத்த எருக்கம் பூ போல மெதுவாய் வாயை திறந்த அம்மா, குழப்பத்துடன் தன் கணவனை பார்த்தாள். அவரோ ஆளுக்கு முந்திக்கொண்டு மனைவிக்கு போட்டியாய் வியப்பில் திரு திருவென முழித்துக் கொண்டிருந்தார். அம்மாவோ சைகையில் அப்பாவிடம்

“என்ன சொல்லிட்டீங்களா??” என கேட்டார்.

அப்பாவும் சைகையிலேயே “நான் எதுவும் சொல்லல டி” என்றார்.

இருவரும் சைகை பேச்சுவார்த்தையில் இருக்க, “என்ன ரெண்டு பேரும் இப்படி முழிக்கிறீங்க? இருங்க காட்டுறேன்” என்ற அசிமா வீட்டிற்கு வெளியில் ஓடிச் சென்றாள். அம்மாவோ

“என்ன நடக்குது இங்க?? நீங்க சொல்லிட்டீங்களா அவகிட்ட??” என மீண்டும் கேட்டார்.

“நான் எதுவும் சொல்லல டி அவ கத்துற சத்தம் கேட்டு தான் நானே வந்தேன்!” என்றார்.

“அப்போ வழக்கம் போல அவளே கண்டுபிடிச்சிட்டாளா??” என்றார் அம்மா.

“என்னனு தெரியலையே சரி வா பார்ப்போம்” என்று அப்பாவும் அம்மாவும் வெளியில் வர எத்தனிக்க,

அவர்களை நீண்ட நேரம் காக்க வைக்காமல் அவர்களது குழப்பத்திற்கு விடையளிக்கும் வண்ணம் வீட்டிற்குள் வந்து நின்றாள் அசிமா.

கையில் அழகிய பூனை குட்டி. இதற்கு தான் இத்தனை ஆர்பாட்டமா? என மனதில் எண்ணியவாறு அப்பாவும் அம்மாவும் ஒருவரை ஒருவர் பார்த்தவாறு சிரித்துக் கொண்டனர்.

“அடடே! ரொம்ப அழகா இருக்கே” என்றார் அம்மா.

“ஆமா அம்மா இனி இதுவும் நம்ம வீட்டுலையே இருக்கட்டும் நான் இல்லாத நேரம் இதுவும் தாமுவும் விளையாடுவாங்க” என்றாள்.

“பூனைக்கும் நாய்க்கும் ஆகாது பாப்பா” என்றார் அப்பா.

“அதுலா ஒன்னு இல்ல அப்பா எல்லாம் நாம பழக்குறதுதான் அத நான் பாத்துக்கிறேன்!” என்றாள்.

“என் பேச்ச எப்பவும் கேட்டுறாத” என துண்டை உதறி தோளில் போட்ட அப்பா, செய்தி தாளை எடுத்துக்கொண்டு திண்ணைக்குச் சென்றார்.

“அம்மா அம்மா இதுக்கு அழகா ஒரு பேரு சொல்லு பார்ப்போம்” என்றாள் அசிமா.

“ம்ம்ம்” யோசனையிலேயே இருந்தார் அம்மா.

“அம்மா சொல்லுமா” சிறிய சிணுங்களுடன் கூறினாள் அசிமா.

“உனக்கு பிடிச்ச மாதிரி நீயே வை மா” என்று கூறிவிட்டு பூனை குட்டியின் தலையை தடவிய அம்மா உள்ளே சென்றாள். என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்துக் கொண்டே பூனை குட்டியை தாமுவிடம் கொண்டு சென்றாள்.

“டேய் தாமு! இங்க பாருடா இவன் தான் நம்மளோட புதிய சொந்தம். உனக்கு இவன பிடிச்சிருக்கா??” என கேட்டாள். வேகமாக வாலை ஆட்டி தன் சம்மதத்தைத் தெரிவித்தான் தாமு.

“இவனுக்கு என்ன பேரு வைக்கலாம் தாமு??” என்றவள் தன் விரலை நாடியில் வைத்து கருவிழிகளை உயர்த்தி சிந்திக்கத் தொடங்கிய மறுநொடி

“ஆ.. நீ தாமு, இவன் ராமு சரியா??” கலகலவென சிரித்தாள் அசிமா.

“போதும் போதும் முதல்ல பல்ல தேச்சிட்டு வா” கூறியபடி தேனீரை அருகில் வைத்துச் சென்றாள் அம்மா.

காலை உற்சாகம் சிறிதும் குறையாமல் பூனை குட்டியுடன் ஓடித் திரிந்து பற்களை துலக்கிய அசிமா, தேனீர் அருந்திக் கொண்டிருந்தாள்.

“இன்னைக்கு உன் ராசிக்கு ஏதோ இன்ப அதிர்ச்சி காத்துக்கிட்டு இருக்குனு பேப்பர்ல போட்டுருக்கானே டா பாப்பா!” திண்ணையில் இருந்து அப்பாவின் குரல் கேட்க, எப்போதும் ராசிபலன் எல்லாம் உண்மை இல்லை என மார்டன் வசனம் பேசுபவள்,

“அடடா அப்படியா? ஆமா அதான் நம்ம ராமு வீட்டுக்கு வந்துருக்கானே!” என்று கூறிக் கொண்டே திண்ணையை அடைந்தாள். மான்குட்டிப் போல ஒரு துள்ளு துள்ளி திண்ணை மேல் ஏறி, இரு கால்களையும் மடக்கி அமர்ந்து, கைகளில் ஒட்டிய மண்ணை தட்டி விட்டு,

“அப்புறம் வேற என்ன சொல்லியிருக்காங்க??” என்றாள்.

“என்ன எப்பவும் இதெல்லாம் பொய்னு சொல்லுவ? இப்ப வேற என்ன சொல்லியிருக்காங்கனு கேட்கிற??” என்று கேட்டார் அப்பா.

“நல்லதா சொல்லியிருந்தா சந்தோஷப்பட்டுகனும் கெட்டதா சொன்னா இதெல்லாம் சும்மானு சிரிச்சிக்கனும் ஆக மொத்தத்துல எப்பவும் வருத்தப்படாம சந்தோஷமா சிரிச்சிக்கிட்டே இருக்கனும்” என்றவள் மீண்டும் கலகலவென சிரித்தாள்.

“அப்படீன்னா இன்னைக்கு ராசிபலன்ல உண்மைய சொல்லிருக்காங்கனு சொல்லுற??” என்றது தூரத்திலிருந்து ஒரு குரல்.

“ஆமா ஆமா இன்னைக்கு உண்மையதா” என்று பதில் கூற வந்தவள், வியப்புடன் வார்த்தையை இழுத்தபடி திரும்பி பார்த்தாள்.

“அடேய் எரும மாடு எப்ப டா வந்த??” திண்ணையிலிருந்து துள்ளி குதித்து, அப்பாவின் கையில் இருந்த தேனீர் டம்ளர் ஒரு பக்கம் பறக்க, செய்திதாள் ஒரு பக்கம் பறக்க தட்டிவிட்டவாறு எழுந்து ஓடினாள் அசிமா.

“என் தங்கச்சி என்கிட்ட ஐஸ்கிரீம் கேட்டா அதான் வாங்கிட்டு வந்தேன்” என ஐஸ்கிரீமை நீட்டினான் அவன்.

“டேய் எரும ஐஸ்கிரீம விட நீ தான் டா முக்கியம்” கூறியபடியே அணைக்க வந்தாள் அசிமா. கையை முன்பு நீட்டிக் கொண்டு இரு இரு என வேகமாக விலகினான் அவன். அசிமாவுக்கோ ஏதோ போல் ஆனது. அவன் விலகிய பின் அவன் பின்னே ஒன்று காட்சியானது. அது அசிமா நீண்ட நாட்களாக வாங்க வேண்டும் என்று கூறிக்கொண்டு இருந்த இருசக்கர வாகனம். அதனை கண்ட அசிமா வாயடைத்து நிற்க, அண்ணன்காரனோ தங்கையின் ஆனந்த கண்ணீரை ரசித்த வண்ணம் புன்னகை பூத்திருக்க, இதற்கிடையில் அண்ணன் தங்கையின் கண்கொள்ளா பாச பாஷையை தவறவிடாமல் காண அம்மாவும் வெளியே வந்துவிட்டாள்.

சந்தோஷத்தில் கூச்சலிடுவாள் என அனைவரும் எதிர்பார்த்தனர். எப்போதும் மற்றவர் எதிர்பார்ப்பை உடைத்து ஒரு டுவிஸ்ட் தரும் அசிமா இச்சமயமும் அதை தவற விடவில்லை. ஆனந்த கண்ணீருடன் அழத் தொடங்கினாள். சிரித்த படியே அன்பாய் அணைத்தான் அண்ணன். எதுவும் பேசாதவாறு அணைப்பின் ஆறுதலை உணர்ந்தவளாக அமைதியாய் இருந்தாள் அசிமா.

“அப்பபா.. இந்த பாசமலர் தொல்லை தாங்கல” வழக்கம் போல் அம்மா கிண்டல் செய்ய,

“ஆமா என் உணர்வு உனக்கு தொல்லையா தெரியுதா??” என்று விசும்பிக்கொண்டே கேட்டாள் அசிமா.

“ஏங்க பாருங்க இவ்வளவு நேரம் நம்மகிட்ட எப்படி இருந்தா இப்ப அவ அண்ணன் வந்ததும் பாருங்க!” என்றாள் அம்மா.

“ஆமா அதுக்கென்ன இப்போ?? அண்ணன்-னா தங்கச்சிக்கு எப்பவும் ஸ்பெஷல் தான். அண்ணனோட அன்பும், ஆதரவும், துணையும் தங்கச்சிகளுக்கு ஒரு பூஸ்ட்டுதான்” என்றாள் அசிமா.

“தெரியாம உன்கிட்ட வாயக் கொடுத்துட்டேன் மா உள்ள வாங்க எல்லாரும்” என்ற அழைப்போடு உள்ளே சென்றாள் அம்மா.

“இதுக்குத்தான் இவ்வளவு கலவரம் செஞ்சியாடா?? என்ன அழ வச்சிட்டல்ல தீபாவளிக்கு வர்றேன் பொங்கலுக்கு வர்றேன்னு?!” என்ற அசிமா தன் அண்ணன் கையில் செல்லமாக கிள்ளினாள்.

“ஸ்ஸ்ஸ்.. ஆஆஆ.. வலிக்குது பாப்பா” என்றான் அண்ணன் காரன்.

“நல்லா வலிக்கட்டும் அதுக்கு தான கிள்ளுறேன்” என்றாள் அசிமா.

“என்ன தான் நான் வரலனு சொன்னாலும், நீ எப்படியும் கண்டுபிடிச்சிருவனு தெரியும். எப்பவும் இப்படி தான என் சர்ப்ரைஸ் எல்லாத்தையும் நீ ஃப்ளாப் பண்ணுவ.. அதான் இந்த தடவ உனக்கு சர்ப்ரைஸ் கொடுத்தே ஆகனும்னு ஒரு நாள் லேட்டா வந்தேன்” என்றான் அன்புக்குரியவன்.

“எரும மாடு போடா, வா உனக்கு நான் என்ன வாங்கி வச்சிருக்கேனு பாரு” மீண்டும் ஒரு செல்ல கிள்ளல்.

தன் ஆசை படி தங்கைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த திருப்தியில் அண்ணனும், அன்பு அண்ணனிடம் மீண்டும் தோற்றுப்போன மகிழ்ச்சியில் தங்கையும் மிக சந்தோஷத்துடன் கைக்கோர்த்து வாய்க்கு பூட்டிட முடியாமல் சிரித்து மகிழ்ந்த தருணம் இப்போது நினைத்தாலும் மனதில் தேனாய் இனிக்கிறது என்றாள் அசிமாவின் அம்மா.

“இத்தனை பாசம் வச்சிருக்கிற அண்ணன பத்தி இதுவரைக்கும் என்கிட்ட ஒரு வார்த்தை கூட பேசலையே மா அவ?!” என புதிர் நீங்கா கேள்வியை கேட்டாள் கலை.

“ஒன்னும் கவலபடாத கலை அவளோட அண்ணன் இப்ப இங்க தான் வந்துக்கிட்டு இருக்கான் நீ நேர்லயே பார்த்திடலாம் அவனை” என்றார் அசிமாவின் அம்மா.

“அப்படியா சூப்பர் மா அப்ப அசிமாவுக்கு இன்ப மயக்கமா? அண்ணன் வர்றாங்க அப்படிங்கிற ஆனந்தத்துல தான் மயங்கிட்டாளா?” என சிரித்துக் கொண்டாள்.

“அண்ணன் வருகிற நேரம் பார்த்து இப்படி ஒரு சம்பவத்தை பார்த்துட்டோமே அவன் பத்திரமா வருவானா அப்படின்னு பயம் அதான் மயங்கிருக்காள்” என்றார் அசிமாவின் அம்மா.

“ஓஓ.. செண்டிமெண்ட் மயக்கம் இத அவளோட அண்ணன் தான் சரி பண்ண முடியும் ஹாஹா” என்ற அவள் சிரிப்பிற்கு ஈடு கொடுத்தது காலிங் பெல் சத்தம்.

“வந்துட்டான் போலயே கலை, நீ அவள ரூம்-ல போய் எழுப்பு மா” என்று கூறிவிட்டு தன் மகனை வரவேற்க சென்றாள் அசிமாவின் அம்மா.

“சரிங்கமா” என்று அசிமாவை எழுப்புவதற்காக அவள் அறைக்கு சென்ற கலை அங்கிருந்த புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து நின்றாள். அசிமாவை எழுப்ப சென்றவளுக்கு காத்திருந்த அந்த அதிர்ச்சியை அவள் சிறிதும் எதிர்ப்பார்க்கவில்லை.

“கலை சீக்கிரம் வா மா” கீழிருந்து அசிமாவின் அம்மா குரல் கேட்க

“இதோ வந்துட்டேன் மா” என்றவள் அசிமாவை எழுப்பினாள். கண்களை திறக்க இயலாமல் கூசும் மங்கலான பார்வையினில் தன் கைவிரல் ஸ்பரிச தீண்டலினால் வெப்பத்தை நிரப்பி தெளிய வைத்து எழுந்தாள்.

“உங்க அண்ணன் வந்தாச்சு” என்றாள் கலை.

“என்ன மாடு வந்துட்டா??” உற்சாகத்தோடு துள்ளிக் குதித்து கீழே இறங்க முற்பட்டவள் தீடீரென நின்றாள்.

“நீ பார்த்துட்டியா அண்ணன?” என்றாள் அசிமா. கலை திரும்பி அந்த புகைப்படத்தை பார்த்தாள்.

“ஹாஹா” என சிரித்த அசிமா “ஓடி வா ஓடி வா” என தர தரவென கலையை இழுத்துக் கொண்டு கீழே இறங்கினாள். கலையும் அசிமாவும் கீழே இறங்கி வந்ததும் தன் அண்ணனிடம் ஓடி சென்ற அசிமா

“டேய் எரும மாடே இங்க பாரு யாரு வந்துருக்காங்கனு” என்றாள்.

“எதுக்கு என்கிட்ட மறச்சீங்க?!” கொஞ்சம் கடுமையாகவே கேட்டாள் கலை.

“என்ன ராகுல் சொல்லிடவா?” என்றாள் அசிமா.

“உன்னையும் சேர்த்து தான் அசிமா கேட்டேன்” என்றாள் கலை.

“அவன் தான் சொல்லக்கூடாதுனு சொல்லிட்டான் கலை. உனக்கு ஒன்னு தெரியுமா அண்ணாவுக்கு உன்ன ரொம்ப பிடிக்கும். நீ” சொல்ல வந்த அசிமாவை தன் கை சைகையின் மூலம் தடுத்து நிறுத்திய கலை அசிமாவின் வீட்டை விட்டு வெளியேறினாள்.

“கலை நில்லு டி” கலையை பின் தொடர்ந்து ஓடிய அசிமாவால் அவளது வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை. அவள் அருகில் செல்வதற்கு முன் அங்கு வந்த ஆட்டோவை இடை மறித்து ஏறி சென்றுவிட்டாள் கலை.

“ச்சே” என்று மூச்சிறைக்க நின்றவள் தன் வீட்டிற்கு திரும்பினாள்.

“மதி ஏன் டி கலை கோவிச்சிக்கிட்டு போய்ட்டா? நான் கூட விளையாட்டா தான் பேசிக்கிட்டு இருந்தேன்” என்றார் அம்மா.

(மதி யாருனு யோசிக்காதீங்க.. நம்ம அசிமாவின் உண்மையான பெயர் தான் மதி. முழு பெயர் மதிஷா)

“டேய் ராகுல் என்ன டா இப்படி ஆகிடுச்சு?” என்றாள் மதி.

“அவங்கள எதுக்கு நீ வீட்டுக்கு கூட்டிட்டு வந்த மதி? நான் சொல்லுறப்போ கலைக்கு தெரிஞ்சா போதும்னு தானே சொல்லியிருந்தேன்!” என்றான் ராகுல்.

“இல்ல டா நாங்க வழக்கம் போல வெளியில போனோம் நான் மயங்கிட்டேன் அதனால தான் அவ என்ன வீட்டுக்கு கூட்டிட்டு வந்தாள் இப்படி ஆகும்னு நான் நினைக்கல” என்று வேதனையாய் கூறினாள் மதி.

“சரி நாளைக்கு ஆஃபீஸ் –ல பேசிக்கலாம். நீ வருத்தப்பட்டுக்காத” என்றான் ராகுல்.

தன் குடியிருப்புக்கு சென்ற கலை கோபத்துடன் சிறிது நேரம் அமைதியாக இருந்தாள். அப்போது அவள் தங்கை கீதாவிடம் இருந்து அழைப்பு வந்தது.

“அக்கா எப்படி இருக்க?” கீதா கேட்க

“சொல்லு டி என்ன விஷயம்?” என நாட்டமின்றி கேட்டாள் கலை.

“என்ன ஆச்சு கா? எதுவும் டென்ஷனா?” என கேட்டாள் கீதா.

“இல்லை டி இந்த பால் டப்பா மனசுல என்ன நினைச்சுக்கிட்டு இருக்குனு தெரியல. அவன் இஷ்டத்துக்கு என்ன மேனேஜரா போட்டுக்கிட்டு, அவனோட தங்கச்சியவே எனக்கு அசிஸ்டண்டா போட்டுக்கிட்டு, என்கிட்ட எதுவுமே சொல்லாமா அண்ணனும் தங்கச்சியும் மறச்சிருக்காங்க இத்தனை நாளா!! நான் நாளைக்கு வேலையை ராஜினாமா பண்ணப்போறேன்” என்றாள் கலை.

“அய்யோ அக்கா அவசரப்பட்டு அப்படி செஞ்சிறாத” என கத்தினாள் கீதா.

“ஏன் டி?” என்றார் கலை.

“அந்த பால் டப்பாவோட ஃபேஸ் புக் போஸ்ட் இன்னைக்கு செக் பண்ணியா நீ?” என கேட்டாள்.

“இல்லையே எனக்கு வேற வேலை இல்லையா?” என்றாள் கலை.

“அய்யோ அக்கா உனக்கு இனி வேலையே அதுதான் முதல்ல அத பாரு” என்றாள் கீதா.

“இரு பார்க்கிறேன்” என்ற கலை அழைப்பை துண்டிக்காமல் தன் மடிக்கணினியில் தன் முகநூல் பக்கத்தை செயலாக்கினாள்.

ராகுலின் இன்றைய போஸ்டினை பார்த்து புன்னகை பூத்தாள். ஆனந்த கண்ணீரில் மூழ்கிப்போனாள்.

“அக்கா அக்கா லைன்ல இருக்கியா?” என்றாள் கீதா.

“ஏய் என்ன டி கீதா இது?” என்றாள் கலை.

“இப்ப சொல்லு வேலைய விடப்போறியா?” என்று கேலியாய் கேட்டாள் கீதா.

“போடி வாலு” என்று வெட்கத்தில் பூத்தவள்

“ஆமா இந்த பால் டப்பாவோட ஐ.டி உனக்கு எப்படி தெரிஞ்சிது?” என்றாள் கலை.

“ஆத்தீதீதீதீதீ… சிக்கிட்டியே சித்தப்பூ” என்றாள் கீதா.

“சொல்லு டி தினமும் இந்த வேலையதான் பார்த்துட்டு இருக்கியா நீ?” என்று அதட்டலுடன் கேட்டாள் கலை.

“அக்கா நான்தான் சொல்லிட்டனே. உனக்கு தான் அவரு பால் டப்பா எனக்கு பால்கோவா டப்பா” என்றாள்.

“ஏய்ய்” என்று கலை குரலை தொடுக்க

“நீ போய் உன் கிருஷ்ணாவ சைட் அடி” என்று அலைபேசியை துண்டித்தாள் கீதா.

“ஏய் ஏய் அடிபாவி” என்று சிரித்துக் கொண்ட கலை ராகுலின் அந்த பதிவினை மீண்டும் நோக்கலானாள்.

அதில், கிருஷ்ணா தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்த ஒரு பதிவினை எடுத்து ராகுல் தன் முகநூல் பக்கத்தில் மறுபதிவு செய்திருந்தான்.

அந்த பதிவினில் ராகுல், கிருஷ்ணா மற்றும் மதிஷா மூவரும் எடுத்திருந்த groupie இருந்தது. கிருஷ்ணாவை மிகவும் நெருங்கிவிட்டோம் என்ற அவளது மகிழ்ச்சி உச்சம் கொண்டிருந்தாலும் இதனையும் தன்னிடமிருந்து ராகுலும் மதியும் மறைத்திருக்க காரணம் என்ன என்று குழம்பிப்போனாள் கலை.

மறுநாள் பொழுது வழக்கம் போல தொடங்க, மதி கலையை காண அவள் கேபினுக்கு வந்தாள்.

“கலை என்மேல கோபமா?” என்றாள் மதி. நிமிர்ந்து பார்த்த கலை பதில் எதுவும் சொல்லாமல் எழுந்து நின்றாள்.

“என்ன டி ? எழுந்து நிக்குற?” என்று கேட்டாள் மதி.

“எங்க பாஸோட தங்கச்சி நீங்க. உங்களுக்கு மரியாதை கொடுக்கனும்ல” என்றாள் கலை.

“ஹேய் என்ன டி இது?” என்றாள் மதி.

“எதுக்கு டி என்கிட்ட மறச்சீங்க?” என்றவள் அடுத்த நொடியே

“என்ன மன்னிச்சிரு அசிமா” என்றாள்.

“நீ எதுக்கு டி மன்னிப்பு கேட்கிற?” என்றாள் மதி.

“நானும் உன்கிட்ட ஒரு விஷயத்த மறைச்சிட்டேன். நான் கிருஷ்ணாவை பற்றி உன்கிட்ட விசாரிச்சது அஃபீஷியலா இல்லை இட்ஸ் பெர்சனல், நான் அவர விரும்புறேன் அவருக்காக தான் இந்த ஊருக்கே வந்திருக்கேன். நேத்து ராகுல் சார் போஸ்ட் பார்த்தேன் நீயும் அவரும் கிருஷ்ணாவோட இருந்தீங்க என்ன அசிமா நடக்குது? தயவுசெய்து சொல்லிடு என்னால தாங்க முடியல” என்று மதியினை அணைத்துக் கொண்டு அழத்தொடங்கினாள் கலை.

“கலை ஹேய் இதுக்கு ஏன் டி இப்படி அழுகுற? கொஞ்சம் அங்க பாரு யாரு நிக்குறான்னு” என்றாள்.

வருடங்கள் பல தண்ணீரில் மூழ்கி விஷேசமாய் தன் பக்தர்களுக்கு காட்சி தரும் அத்திவரதர் போல, வருடங்கள் பல கண்ணீரில் தன்னை மூழ்கச் செய்தவள், அவளது மன்னவன் கிருஷ்ணாவுக்கு காதல் குறையாது காட்சிக் கொடுப்பதை கண்டு அவன் மலையென சிலையென அசையாது நின்றிருந்தான் அவள் முன்னே.

அது கிருஷ்ணாவே தான்!!

மதி தொடர்ந்து பேசுகிறாள்,

“கிருஷ்ணா இவங்க தான் கலை. உன்ன தான் எப்பவும் கேட்டுக்கிடே இருப்பாங்க. இன்னைக்கு நான் நேர்லயே பார்க்க வச்சிட்டேன்.”

அவள் சொல்லி முடிப்பதற்குள் சட்டென தன் கண்களில் துளிர்த்த கண்ணீரை துடைத்தவன் வேகமாக சென்று கலையை கட்டி அணைத்துக் கொண்டான் கிருஷ்ணா.

அவன் மேனி தன்னில் தஞ்சம் கொண்ட அந்த தருணம் அடக்கி வைத்திருந்த அத்தனை உணர்வுகளையும் விடுத்து கத்தி கதறி அழுதாள் கலை.

கலையின் குமுறல் சத்தம் கேட்ட ராகுல் அறையினுள் விரைந்து ஒடிவந்தான். கிருஷ்ணாவும் கலையும் இணைந்திருக்கும் காட்சி அவன் இதயத்தில் ஈட்டியால் குத்திய உணர்வினை கொடுத்தது. இம்முறை சிலையாய் வேடிக்கை பார்ப்பது ராகுலும் மதியுமே.

“அட பாவிகளா!! நான் ஒருத்தி இங்க இருக்கேன் பா!!” என்று கேலியாய் கூறினாள் மதி. ஆனால் அது இவர்கள் இருவரின் காதுகளை அடையும் முன்னரே காற்றோடு கரைந்து மறைந்தது.

கலையை அணைத்த அந்த தருணம் உலகையே வென்றுவிட்டதாய் உணர்ந்தான் கிருஷ்ணா. தன்னவன் கரங்களுக்குள் சிறைப்பட்ட கலை பிறவியின் பயனையே அடைந்துவிட்டதாய் உணர்ந்தாள். தேம்பி தேம்பி அழும் கலையின் சிரசை குழந்தையை தடவுவது போல தடவிக்கொடுத்து ஆறுதலளித்தான் கிருஷ்ணா.

“உங்களுக்காக தான் நான் மதுரைக்கு வந்தேன்” என்று திக்கி திணறி கூறினாள் கலை.

“நீ வரல டா கலை நான் தான் உன்ன வர வச்சேன்” என்றான் கிருஷ்ணா.

தன்னவன் மார்பில் இருந்து தன் முகத்தினை மட்டும் பிரித்தெடுத்தவள் அவன் விழிகளை குழப்பத்தோடு நோக்கினாள்.

“மதிஷா என்னோட தோழி” என்றான் கிருஷ்ணா.

அவன் அணைப்பில் இருந்தபடியே கண்களின் குழப்பம் மாறாமல் மதியை திரும்பி பார்த்தாள் கலை. அவள் ஆமாம் என்று சிரித்துக் கொண்டே கண்ணடித்தாள்.

ஆனந்த புன்னகையுடன் இருவரும் தங்கள் அணைப்பினை மேலும் இறுக்கிக் கொண்டனர். புன்னகை பெருமூச்சுடன் அங்கிருந்து நகன்ற மதி, வாசலில் நிற்கும் தன் அண்ணன் ராகுலை அப்பொழுதுதான் கவனித்தாள்.

“டேய் நீ எப்ப டா வந்த? நல்லவேளை காதல் காட்சியை மிஸ் பண்ணிட்டியேனு நினைச்சேன். நீயே பார்த்துட்ட கலை அழுகைக்கு காரணமான ஆளு கிடைச்சாச்சு. இனி கலை அழமாட்டா உனக்கு சந்தோஷம் தான?” என்ற மதி ராகுலின் இதயம் வெடிக்கும் சத்தம் காதில் விழாதவளாய் அவனை அழைத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

“உங்க வீட்டுல என்னை ஏத்துப்பாங்களா கிருஷ்ணா?” என கேட்டாள் கலை.

“என் மருமகள கூட்டிக்கிட்டு வா-னு என்ன அனுப்பி வச்சதே உன்னோட மாமனார் தான்” என்றான் கிருஷ்ணா.

இதை கேட்டதும் அதிகம் நேரம் கடத்த விரும்பாத கலை, தன் வீட்டிற்கு அழைப்பு கொடுத்தாள். அவள் அப்பா அழைப்பை ஏற்று “சொல்லு மா கலை சாப்பிடியா?” என்றார்.

கலை அழுகுரலோடு “அப்பா நான் அவர பார்த்துட்டேன் பா” என்றாள்.

அடுத்த தருணம் கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டனர் கலையின் அம்மாவும் அப்பாவும். அவர்கள் இருவரும் பேருந்தில் ஏறி அமர

“என்னையும் கூட்டிக்கிட்டு போங்களேன் பா” சிணுங்கிக் கொண்டிருந்தாள் கீதா.

“உதை வாங்குவ கீதா அடம் பண்ணாத சும்மா காலேஜ்-அ கட் அடிக்க நினைக்காத” கோவத்தில் வாட்டினாள் அம்மா.

“எதுக்கு டி உன் கோவத்த அவ மேல காட்டுற?” என்ற அப்பா

“கீதா தங்கம் சமத்தா இருக்கனும் சரியா! சுவர்ணா அத்தைய தொல்ல பண்ணக் கூடாது” என்றார்.

“போங்க பா என்ன மட்டும் விட்டுட்டு போறீங்க!” என்றாள் மீண்டும்.

“கிளம்பும் போது அடம் பண்ணாத கீதா குழந்தையா நீ” செல்லமாய் கீதாவின் தலையை வருடினாள் சுவர்ணா அத்தை.

“சுவர்ணா பார்த்துக்கோ டி!” என்று மெலிந்த குரலில் கூறினாள் கீதாவின் அம்மா.

“எனக்கு நீ சொல்லனுமா டி? கவலபடாம போய்டு வா கீதாவ நான் பார்த்துக்கிறேன் அங்க போய் நிதானமா இரு கலை மேல கைய கிய்ய வச்சதா தெரிஞ்சிது” என்றாள் சுவர்ணா.

“உன்னால எப்படி டி இப்படி சாதுவா பேச முடியுது?” கீதாவின் அம்மா கேட்க

“நமக்கு குழந்தைங்க சந்தோஷம் தான் டி முக்கியம் மனச போட்டு குழப்பிக்காத கவனம்” என்று கூற பேருந்தும் புறப்பட்டது.

அம்மா அப்பாவை எதிர்நோக்கி கலை காத்திருந்தாள் கிருஷ்ணாவின் வீட்டில். ‘செய்தியை ரம்யாவுக்கு சொல்ல மறந்து விட்டோமே’ என ஞான உதயம் பிறந்து ரம்யாவை அலைபேசியில் தொடர்புக் கொண்டாள்.

“சொல்லு டி கலை” என்று போனை ஸ்பீக்கரில் போட்டு மேஜை மேல் வைத்தாள் ரம்யா.

“ரம்யா வேலையா இருக்கியா? இல்லை பேசலாமா?” கலை கேட்க

“சொல்லு சொல்லு என்ன விஷயம்?” என்று தன் வீட்டில் காய்கறி வெட்டிக் கொண்டிருந்த ரம்யா கேட்டாள்.

“இப்ப நான் எங்க இருக்கேன்னு தெரியுமா?” என்றாள் கலை.

“ம்ம்ம்ம்.. பாகிஸ்தான்ல யாரு டி இவ?” என்று ரம்யா கூற

“சொல்லு டி” என இழுத்தாள் கலை.

“என்ன டி இப்படி நெளியுற? எங்க போய் தொலச்சிருக்க?” வேகமாய் கேட்டாள் ரம்யா.

“வாட்ஸ் ஆப் வா” என்றவள் கிருஷ்ணாவுடன் அன்று பிடித்த செல்ஃபி ஒன்றை எடுத்து ரம்யாவுக்கு அனுப்பி வைத்தாள். அதை பார்த்த அலறிய ரம்யாவின் உத்வேகம் அலைபேசியை அலறச் செய்தது. அழைப்பினை ஏற்ற கலை

“ஹலோ” என்றாள் நக்கல் பாணியில்.

“என்ன டி ஹலோ? இப்படி குண்ட தூக்கி போடுற திடீர்னு! எங்க டி பார்த்த? எப்படி பார்த்த?” கேள்விகளை அடுக்கிய ரம்யாவுக்கு நடந்தவற்றை எல்லாம் தெளிவாக கூறினாள் கலை.

“ஏதோ திரில்லர் படம் பார்த்த மாதிரி இருக்கு டி என்கிட்டயே மறச்சிட்ட பார்த்தியா?” என்றாள் ரம்யா.

“ஹேய் மறைக்கல டி நான் இருந்த மன அழுத்தத்துல நான் என்ன பண்ணுறேன்னு எனக்கே தெரியாம இருந்தேன். உன்ன விட்டா எனக்கு யாரு டி இருக்கா?” என்று சுவரம் பாடினாள் கலை.

“ஆமா டி ஆமா இதெல்லாம் நல்லா பேசு காலேஜ் படிக்கிறப்ப அவனுக்கு பூச்செண்டு கொடுக்க மேடைக்கு போகமாட்டேன்னு நின்ன கலையா இது?” என்று ரம்யா கலையை வார முயற்சிக்க

“என்ன நீ அவன் இவன்னு சொல்லுற அவருக்கு மரியாதை கொடுத்து பேசு” என்றாள் அவள்.

“அடி பாவி! சரிங்க மேடம் ‘கிருஷ்ணா அன்கோ’ ஓனர் அம்மா சொன்னா சரிதான்” என்று ரம்யா கூற இருவரும் ஆழ்மனதிலிருந்து சிரித்தனர்.

“இப்படியே சிரிச்சிக்கிட்டே சந்தோஷமா இரு டி” ரம்யா மனதின் அடியில் இருந்து ஆத்மார்த்தமாய் கூறினாள்.

“சரி பாட்டி பஞ்சாங்கம் பேசாத அப்பா அம்மா வந்துகிட்டு இருக்காங்க எனக்கு அம்மாவ நினைச்சாதான் ரொம்ப பயமா இருக்கு டி” என்றாள் கலை.

“போட்டோவ மாத்தி வைக்கிறப்ப இல்லாத பயமா டி இப்ப உனக்கு வந்துடுச்சி..?” என கேட்டாள் ரம்யா.

எதிர்பக்கம் நிசப்தமாய் இருக்க, “சரி சரி கிருஷ்ணா கிட்ட போன கொடு டி மனுசன் கிட்ட இப்பவாச்சும் பேசிக்கிறேன்” ரம்யா கேட்க,

“ஹலோ ஹலோ என்ன ஒன்னுமே கேட்க மாட்டேங்குது!” என்று கூறியவாறு அழைப்பை துண்டித்தாள் கலை.

“அதான பார்த்தேன் காலேஜ் படிக்கிறப்போவே அவன்கிட்ட பேச விடல இவ இப்போ கல்யாணம் பண்ணிக்க போறா கேட்கவா வேணும்?!” என்று சிரித்துக் கொண்டே தன் வேலையை கவனிக்க தொடங்கினாள் ரம்யா.

வீட்டின் நடுவே அமைந்திருந்த அந்த பெரிய படிக்கட்டுகளில் நின்று பேசிக் கொண்டிருந்த கலை, தான் கிருஷ்ணாவின் வீட்டில் இருப்பதை மறந்து சில்லென்று சிரித்துக் கொண்டே சந்தோஷத்தில் துள்ளி ஒரு குதி குதித்துக் திரும்பினாள்.

தன்னை அங்கு சற்றும் எதிர்ப்பார்க்காதவளது கரங்களைப் பிடித்து இழுத்து இடைவெளியை நொறுக்கி நெருக்கத்தை இறுக்கினான் கிருஷ்ணா.

அவளது துள்ளலின் வேகத்தை மெல்ல மெல்ல குறைத்து, மூச்சின் வேகத்தை மொத்தமாய் அதிகரித்து, இறுதியில் வாயடைத்து வியக்க வைத்து சிலையாக்கியது அவளவனது காந்த பார்வை.

“கலை…………..” என்று கத்தியவன் அருகில் இருந்த பீங்கான் பூ ஜாடியை எடுத்து உடைத்தான். சத்தம் கேட்டு ராகுலின் அறைக்கு ஓடி வந்தாள் மதிஷா.

“அண்ணா என்ன ஆச்சு?” பதறிப் போய் முழிக்கும் தன் தங்கையின் கண்களை கண்டதும் தன் முட்டாள்தனத்தை நினைத்து வருந்தியவன்

“ஒன்னும் இல்லை பாப்பா தெரியாமல் தள்ளி விட்டுட்டேன்” என்று சமாதானம் கூறினான்.

“உனக்கு ஒன்னும் ஆகலையே!! அடி எதுவும் பட்டுச்சா? காயம் ஆகலைல??” என்றாள் மதிஷா.

“ஒன்னும் ஆகல பாப்பா வா கீழே போகலாம்” என்று அவள் தோளை அரவணைத்து சென்ற ராகுலது கையினை பீங்கான் கிழித்திருப்பதை கவனிக்கத் தவறிய மதிஷா, அவன் ’கலை‘ என கத்தியதை கவனிக்க தவறவில்லை. ஒரு வித குழப்பத்துடனேயே அவனுடன் வீட்டின் வரவேற்பு அறைக்கு வந்தாள்.

கிருஷ்ணாவும் கலையும் தங்கள் காதல் கைக்கூடிய கொண்டாட்டத்தில் இருக்க, தன் நண்பர்கள் இருவரும் தன் மூலமாக ஒன்று சேர்ந்து விட்டனர் என்ற அலாதி இன்பத்தில் மதிஷா மிதந்திருக்க, ராகுல் மட்டும் தன் காதல் தோல்வியடைந்த வலியில் துடித்துக் கொண்டிருந்தான்.

அவன் அறையில் யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்திருந்த கலையின் புகைப்படத்தை எடுத்து பார்த்து சிறுபிள்ளை போல அழுதான். தன் கண்ணீர் துளிகள் அனைத்தினையும் அவளுக்கு காணிக்கையாக்கினான். அவனது அழுகுரலின் ஸ்வரங்களை பாமாலையாக்கினான். தனது ஏக்கங்கள் கொண்டு அர்ச்சனை செய்தான். இந்த வலிகளுக்கு பலியானது தான் அந்த பீங்கான் பூந்தொட்டி.

ஏக்கமும் காதலும் கண்ணீரும் சுமந்த ராகுலின் கண்கள், கொஞ்சம் கொஞ்சமாக கோவத்தில் சிவக்கத் தொடங்கியது; மிருகத்தையும் மிரட்டும் பார்வை அவன் கண்களை குத்தகைக்கு எடுத்தது.

“இந்தா தண்ணீர் குடி” என நீரை எடுத்துக் கொடுத்துவிட்டு காத்தாடியை சுழலவிட்டாள் மதிஷா.

“டேய் ராகுல் என்ன டா கை எல்லாம் இரத்தம்” அம்மா ஓடி வந்தாள் சமையல் அறையில் இருந்து.

“என்ன இரத்தமா காட்டு” என்ற மதிஷா

“எரும மாடு பாரு எப்படி இரத்தம் வருது ஒன்னும் இல்லைனு சொன்ன?” என்றவள் முதலுதவி பெட்டியை எடுத்து வந்து காயத்திற்கு மருந்திட்டு கட்டுப்போட்டாள்.

“நான் போய் ஜூஸ் எடுத்திக்கிட்டு வர்றேன்” என்று அம்மா செல்ல

“வலிக்குதா டா” என்று மதிஷா கேட்டாள்.

“பாப்பா கலை-ய நம்ம வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வந்திடுவோமா?” என்ற அவனது கேள்வியை சிறிதும் எதிர்ப்பார்க்காத மதிக்கு அதிர்ச்சியும் குழப்பமும் வந்ததில் ஆச்சரியமில்லை.

“என்ன அண்ணா சொல்லுற?” என்றாள் மதி.

“இல்லை மா அவங்க அப்பா அம்மா வந்துக்கிட்டு இருக்காங்க, கலை கிருஷ்ணா வீட்டுல இருக்கிறது நல்லாவா இருக்கு?” என்றான் ராகுல்.

“அவ தான் அவங்க அப்பா கிட்ட சொல்லிட்டாளே அவரு எதுவும் சொல்லலியே ரொம்ப வருஷத்துக்கு அப்புறமா சேர்ந்திருக்காங்க அண்ணா அவ அங்கேயே இருக்கட்டும் இரு அம்மா ஜூஸ் ரெடி பண்ணிட்டாங்களானு பார்த்துட்டு வர்றேன்” என உள்ளே சென்றுவிட்டாள் மதி.

தான் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வீண் போவதை பொறுத்துக் கொள்ள முடியாதவன், தன் பற்களை கடித்துக் கொண்டே தலையில் கைவைத்து அமர்ந்திருந்தான்.

“கலை ரொம்ப சந்தோஷமா இருக்கியா? ஒவ்வொரு நாளும் உன்ன நினைச்சி நினைச்சி நான் வருத்தப்பட்டுக்கிட்டு இருந்தேன். என்ன முழுசா சோகத்துல உட்கார வச்சிட்டு நீ இன்னொருத்தனோட சந்தோஷமா இருக்கியா? விடமாட்டேன்.. உன்ன அவ்வளவு சீக்கிரமா விட்டுக் கொடுத்திருவேனா?” என்று ராகுலின் மனம் அவனையே அறியாமல் தீப்பிழம்புகளைக் கக்கிக்கொண்டிருந்தது.

“என்ன ஆச்சு உங்களுக்கு?” என்ற கலையின் மெல்லிய குரல் அவனை தன்னிலைக்கு அழைத்து வந்தது.

ராகுலை அல்ல கிருஷ்ணாவை. தன் பிடியின் இறுக்கத்தை மட்டும் தளர்த்திய கிருஷ்ணா பதில் எதுவும் கூறவில்லை.

“ஏன் இப்படி பார்க்குறீங்க?” என்றாள்.

“இத்தனை வருஷமா பார்க்க வாய்ப்பு கிடைக்கலையே அதான் இப்ப பார்த்துக்கிறேன்” என்றான் கிருஷ்ணா. வெட்கத்தில் சிவக்கத் தொடங்கிய கலை தன் தலையை தரையை நோக்கி தளர்த்தினாள்.

“ஹேய் என்ன டா தேடுற?” என கேட்டான் கிருஷ்ணா.

“தேடுறேனா?!” கண்ணிமைக்கும் நேரத்தில் கிருஷ்ணாவின் விழிகளுக்கு குறி வைத்தது கலையின் பார்வை.

“எதையும் கீழ போட்டுட்டியா என்ன?” மீண்டும் கேலித்தான் கிருஷ்ணா.

“சும்மா இருங்க” என்றவள் கீழே இறங்க முற்பட்டாள். சிறிதும் தாமதமின்றி அவள் கைகளை சிறைப்பிடித்த கிருஷ்ணா

“எங்கே போற?” என்றான்.

“என்ன விடுங்க” என்றாள் கலை.

சரி என்றவன் அவள் கைகளை விடுவித்தான். இதுதான் சாக்கு என விரைந்து ஓடி ஒரு அறைக்குள் சென்று கதவினை பூட்டிக் கொண்ட கலை, அவன் பிடித்து இழுத்த சுவாசத்தினையும் அவளவனது வாசத்தினையும் நினைத்து நினைத்து பூத்துக் கொண்டிருந்தாள்.

“என்ன ஆச்சு அண்ணி? தனியா சிரிச்சிக்கிட்டு இருக்கீங்க?” என்ற குரலின் திசையை நோக்கி திரும்பிப் பார்த்தாள் கலை.

“அய்யோ ருத்ரா இது உன்னுடைய அறையா? சாரி சாரி” என்றாள்.

“இருங்க இருங்க இப்ப எதுக்கு இப்படி மூச்சு வாங்குறீங்க? ரன்னிங் ரேஸ் காம்படீஷன் எதுவும் போயிட்டு வர்றீங்களா என்ன?” என்று நகைப்புடன் கேட்டாள்.

“இல்லை இல்லை அது வந்து” விழிகள் பிதுங்கி நின்ற கலையின் அசவுகரியத்தை புரிந்துக் கொண்ட ருத்ரா

“சரி சரி வாங்க அண்ணி வந்து உட்காருங்க” என்று அவள் கைகளை பிடிக்க வந்தாள்.

“அய்யோ ருத்ரா கையை பிடிச்சி இழுக்காத! நானே வர்றேன்!” என்று அலறினாள். அவள் அலறியதில் பதறியே போனாள் ருத்ரா.

“அண்ணி நான் உங்க கை-ய இன்னும் பிடிக்க கூட இல்லை” என்றவள் ‘என்ன ஆச்சு அண்ணிக்கு?’ என மனதில் அசைப் போட்டவாறு மெத்தையில் அமர்ந்தாள்.

“தண்ணீர் குடிக்கிறீங்களா?” என்றாள் ருத்ரா.

“ம்ம்ம்ம்” என தலையை மட்டும் ஆட்டிய கலைக்கு டம்ளரில் தண்ணீர் ஊற்றி கையில் கொடுத்தாள் ருத்ரா.

“என்ன சொல்லுறாங்க உங்க அண்ணி?” என உள்ளே வந்தான் கிருஷ்ணா. அவன் குரல் கேட்டதும் பதட்டத்தில் கையில் வாங்கிய டம்ளரை கீழே போட்டுவிட்டாள் கலை.

“டேய் ரெண்டு பொண்ணுங்க இருக்கிற ரூம்-குள்ள வரும்போது கதவை தட்டனும்னு தெரியாதா?” என்றாள் ருத்ரா.

“பொண்ணுங்களா எங்கே” என்றான் கிருஷ்ணா.

“லூசு உன் சத்தத்துல அண்ணி பயந்துட்டாங்க பாரு” என்று ருத்ரா கூற

“சத்தத்துக்கா பயந்த?” என்று கேட்ட கிருஷ்ணா கலையின் அருகில் வந்து அமர்ந்தான். திடுக்கென எழுந்துக் கொண்ட கலை

“நா.. நா.. நான் போய் கிச்சன்ல அத்தைக்கு உதவி செய்றேன்” என மின்னல் வேகத்தில் பறந்துவிட்டாள்.

“டேய் ஏன் டா அவங்களுக்கு பயம் காட்டுற இன்னைக்கு தான வந்துருக்காங்க கொஞ்சம் செட் ஆகட்டும் எல்லாரோடையும்” என்றாள் ருத்ரா.

“சரிங்க பெரிய மனுசி!” என்று ருத்ராவின் காதை திருகினான் கிருஷ்ணா.

“வாங்க வாங்க உள்ளே வாங்க சம்மந்தி” என்ற சத்தம் கேட்டு வெளியே வந்தனர் ருத்ராவும் கிருஷ்ணாவும்.

கலையின் அம்மா அப்பாவை ஆரவாரமாய் வரவேற்றுக் கொண்டிருந்தார் கிருஷ்ணாவின் அப்பா.

கொஞ்சம் தயக்கத்துடனும், அளவான சிரிப்புடனும் அமைதியாய் வீட்டினுள் நுழைந்தார் கலையின் அப்பா. அவரை பின்தொடர்ந்து வந்தார் கலையின் அம்மா.

“வாங்க அத்தை மாமா உள்ளே வாங்க” இது நம்ம ஹீரோ சார்.

“இது தான் என் பையன் கிருஷ்ணா” என்றார் கிருஷ்ணாவின் அப்பா.

“உட்காருங்க மாமா, அத்தை நீங்களும் உட்காருங்க” என்றான் கிருஷ்ணா.

“சிவகாமி சம்மந்தி வந்தாச்சு சீக்கிரம் வா” என்றார் கிருஷ்ணாவின் அப்பா. வேகமாய் வெளியில் ஓடி வந்த கலை, தன் தந்தையை கட்டி அணைத்து அழத் தொடங்கினாள்.

“வேண்டாம் டா, வேண்டாம் டா அழக்கூடாது அப்பா தான் வந்துட்டேன்ல” என்று கலையை சமாதானபடுத்தினார் அவளது அப்பா. சிறிது சாந்தமானவள் அம்மாவை நோக்கினாள்.

“அம்மா என் மேல கோவமில்லையே” என்றாள்.

அம்மா வாய் திறக்கும் முன்பே “அடடே! சரியான நேரத்துல தான் வந்திருக்கேன் போலயே!” என்றவாறு உள்ளே நுழைந்தாள் மதிஷா. ராகுலும் மதிஷாவுடன் வந்திருந்தான்.

“மதி கம் கம்” என்ற கிருஷ்ணா ராகுலுடன் கைக்குலுக்கிக் கொண்டு அனைவரையும் அமர வைத்தான்.

“இவங்க தான் என் தோழி மதி. இவங்க இல்லைனா நானும் கலையும் சேர்ந்திருக்கவே முடியாது” என்று சிரித்துக் கொண்டே கூறும் கிருஷ்ணாவின் முகத்தினை கிழித்து வீசும் ஆத்திரத்தில் அமர்ந்திருந்தான் ராகுல்.

“கொஞ்சம் நிறுத்துங்க தம்பி. நான் இங்க வந்தது கலைய உங்களோட சேர்த்து வைக்குறதுக்கு இல்லை. எங்க கூட கூட்டிக்கிட்டு போகதான்” என்று அனைவரையும் அதிர வைத்தார் கலையின் அம்மா.

சற்றும் எதிர்பாராத இந்த வார்த்தையை கேட்ட அனைவரும் திகைத்திருக்க, பாலைவனத்தில் பசுவை கண்டது போல இருந்தது ராகுலுக்கு மட்டும்.

கலை அதிர்ச்சியில் கிருஷ்ணாவை நோக்கி விழிக்க “அத்தை என்ன சொல்லுறீங்க” என்றான் கிருஷ்ணன்.

“என்ன டி பேசுற?” கலையின் அப்பா கோபமாய் கேட்க

“பின்ன கல்யாணம் ஆக போகிற பொண்ண வீட்டுக்கு கூட்டிட்டு போய் நல்லதா வாய்க்கு ருசியா ஆக்கிப்போட்டு உடம்ப தேத்தி விடனும்னு எனக்கு ஆசை இருக்காதா?” என்றாள் கலையின் அம்மா.

ராகுலுக்கு கோவம் ஆகாயத்தை தொட, “நேரம் கெட்ட நேரத்துல இந்த காமெடி தேவையா?” என்றான் கர்ஜனையோடு. அவன் சொன்னது கர்ஜிப்பாய் இருந்த போதிலும் கலகலப்பான சூழலில் இருந்த அவர்களுக்கு என்னவோ அது காமெடியாகவே தெரிந்தது.

“ஆன்ட்டி சோ ஸ்வீட்ட்ட்” என்று ருத்ரா ஓடி வந்து கட்டி அணைத்து ஆசை முத்தமொன்று தந்தாள் கலையின் அம்மாவுக்கு.

சிரித்துக் கொண்டே கலையை நோக்கி “வா மா” என அள்ளி அணைக்க கைகளால் தூது விடுத்தாள் அவள் அம்மா. ஓடிச் சென்று தன் அன்னையை கட்டிக் கொண்ட கலை “லவ் யூ மா” என்றாள்.

“சந்தோஷமாய் இரு டி” என்று அம்மா ஆனந்த கண்ணீருடன் சொல்ல

“பசிக்குது பா சோறு போடுவீங்களா மாட்டீங்களா?” என்றான் தீபக்.

“அட சோத்துக்கு பிறந்தவனே” என ரமேஷ் திட்ட

“சரி எல்லாரும் கை கழுவிட்டு வாங்க சாப்பிடலாம்” என்றார் கிருஷ்ணாவின் அம்மா சிவகாமி.

அனைவரும் உணவு மேஜையில் ஒன்று கூட, கிருஷ்ணா கலை அருகே அமர்ந்தான். ராகுலின் கனல்மிகு பார்வை கிருஷ்ணாவின் மீது விழுந்தது. அதனை கவனித்த ருத்ரா

“என்ன ராகுல் ஜி எதுக்கு இப்படி பாடிகார்ட் பரமேஷ்வரன் மாதிரி முழிச்சுக்கிட்டு இருக்கீங்க?” என கேட்டாள்.

“யாரு பாடிகார்ட் பரமேஷ்வரன்? உங்க அண்ணா தான் முறைச்ச மூஞ்சி முனீஸ்வரன்” என்றாள் மதிஷா.

“எங்க அண்ணாவா?! என் அண்ணா காதல் மன்னன். அதான் எப்படி ஒரு பொண்ண பிடிச்சிருக்கானு பார்த்தியா? உங்க அண்ணன பாரு, இன்னும் சிங்கிள்!!” என்றாள் ருத்ரா.

‘நானும் அதே பொண்ண தான் லவ் பண்ணுறேன்’ என்று மனதிற்குள் எண்ணிய ராகுல் தன் வில்லன் அவதார சிரிப்பினை வெளிப்படுத்தினான். அப்போது ஹாட் பேக்குடன் அங்கு வந்த சிவகாமி

“என்ன டி வந்தவங்க கிட்ட வாயளந்துக்கிட்டு இருக்க.. வாயாடி..” என மண்டையில் ஒரு கொட்டு வைத்தவர், கிருஷ்ணாவும் கலையும் ஒன்றாய் அமர்ந்திருப்பதை அப்பொழுதுதான் கவனித்தார்.

“டேய் என்ன டா இது?” என்றார்.

“என்ன மா” என கிருஷ்ணா ஒன்றும் புரியாமல் கேட்க,

“கல்யாணத்துக்கு முன்னாடி ஒன்னா உட்கார்ந்து எல்லாம் சாப்பிடக் கூடாது எழுந்திரு எழுந்திரு” என்றார். அவர் சொன்னதை கேட்ட ரமேஷ், ருத்ராவின் அருகில் இருந்து வேகமாய் எழுந்தான். சட்டென உணவு மேஜையின் அடியிலிருந்து ரமேஷின் கையை பிடித்த ருத்ரா

“எங்க டா போற..?” என்றாள் காற்றிற்கும் வலிக்கா குரலில்.

“உங்க அம்மா சொன்னத கேட்டல” என்றான் அவளுக்கு ஈடுகொடுத்து.

“அவங்க அண்ணாவதான சொன்னாங்க நீ எதுக்கு ஓவர் ஆக்டிங் பண்ணுற? மரியாதையா உட்காரு” என்றாள் மிரட்டலாய்.

இதை பார்த்துக் கொண்டிருந்த தீபக் வேண்டுமென்றே செருமிக் காட்டினான். இதை சாக்காய் எடுத்த ரமேஷ்

“என்ன டா தீபக் கூப்பிட்டயா? இதோ வர்றேன்” என்றபடி எழுந்து நகர சென்றான். அவன் காலில் ஒரே மிதியாக ருத்ரா மிதிக்க ‘அம்மா‘ என கத்தியவாறு நாற்காலியில் பொத்தென அமர்ந்துவிட்டான் ரமேஷ்.

“பார்த்து பா ரமேஷ் காலுல இடிச்சிடிச்சா உட்காரு அங்கயே “ என்று சிவகாமி கூற

“எப்படி அம்மாவே சொல்லிட்டாங்களா..? மூடிக்கிட்டு இங்கே உட்காரு” என்று ரமேஷிடம் கூறிய ருத்ரா எதிரே அமர்ந்திருக்கும் தீபக்கை நோக்கி முறைத்தாள்.

“ஆத்தாடி! காட்டேரி நம்ம பக்கம் திரும்புது!” என்று ஒரு வித பீதியான முகபாவனை செய்துவிட்டு சாப்பாட்டை கவனிக்கலானான்.

“பிசாசு” என வாய்க்குள் தீபக்கை திட்டிக் கொண்டு தன் வேலையில் கவனமானாள் ருத்ரா.

“எழுந்திரு டா போய் அப்பாக்கிட்ட உட்காரு” என கிருஷ்ணாவை பத்திவிட்ட பின்னரே உணவை பரிமாறத் தொடங்கினார் சிவகாமி.

“ஆன்ட்டி உங்க கை பக்குவம் சூப்பர்” என்றாள் மதிஷா.

“அது என்ன மா புது சாப்பாடு எனக்கு வைக்கவே இல்ல?!” என்று தீபக் கேட்க அனைவரும் சிரித்து சிதறினர். இவ்வாறாக மதிய உணவோடு உறவும் பரிமாறப்பட்டு வயிறும் மனதும் நிறைந்தது அனைவருக்கும். உணவை முடித்துக் கொண்டவர்கள் சிறிது நேரம் அங்காங்கே அமர்ந்து கதைகள் பேச தொடங்கினர்.

“உங்க சின்ன பொண்ண கூட்டிக்கிட்டு வரலையா..?” என்றார் சிவகாமி.

முதல் முறையாக, அதுவும் இப்படி ஒரு சந்தர்ப்பத்தில் அனைவரும் சந்திக்கும் வேளையில் கீதாவையும் ஏன் கூட்டிக் கொண்டு வர வேண்டும் என்பது அவளது பெற்றோரின் எண்ணம். சபை நாகரீகம் கருதி அதை கூற விருப்பம் இல்லை கலையின் அம்மாவுக்கு. அதனால்

“அவளுக்கு காலேஜ் இருக்கு சம்மந்தி” அதனால தான் கூட்டிக்கொண்டு வரல என்றார். இதை கேட்ட தீபக் கண்கள் மெருகேறியது.

“டேய் ரமேஷ் கலைக்கு நிஜமாவே தங்கச்சி இருக்காம் டா சின்ன வயசுலயே என் அம்மா சொல்லுச்சு பகல் கனவு பலிக்கும்னு” என தன் முப்பத்து இரண்டு பற்களையும் காட்சியாக்கினான்.

“அந்த பொண்ணும் அழகான பையன் வேணும்னு ஆசைப்படுவாள்ல டா!” என்றான் ரமேஷ். அப்பொழுது அவர்கள் அருகே வந்து அமர்ந்தனர் கிருஷ்ணாவும் கலையும்.

“என்ன மா கலை எப்படி எங்க கிருஷ்ணா?” என்றான் தீபக்.

“இனி அவரு உங்க கிருஷ்ணா இல்லை” என்றாள் கலை.

“அப்படி போடு நம்ம கூட்டணிக்கு ஏற்ற பொண்ணு தான்” என்று ரமேஷ் கூறியதை கேட்டு சிரித்துக் கொண்டிருந்தாள் கலை. கிருஷ்ணாவுக்கு சொல்லவா வேண்டும்? வானில் பறக்கும் உணர்வு தான் தன் மாய பார்வையினால் கலையின் முன் வலை விரித்து

“அப்படியா?” என்றான் புன்னகை மன்னன், பூ விழி கண்ணன்.

அவன் விரித்த வலையில் வேண்டுமென்றே போய் அகப்பட்ட கலை வெட்கத்துடன் “ஆமாம்“ என்றாள். இருவரும் ஒருவர் விழியை ஒருவர் நோக்கி பூட்டிக்கொண்டனர். தீபக்கும் ரமேஷும் ஏதேதோ பேசிக்கொண்டே இருக்க, கிருஷ்ணாவும் கலையும் தங்கள் பதில்களை மட்டும் அவர்களுக்கு வைத்துவிட்டு எண்ணத்தால் ஒன்றாய் பிரயாணித்துக் கொண்டிருந்தனர்.

கிருஷ்ணாவின் விழியின் வழியே வரும் வெப்பத்தை தாங்க இயலாத கலை தன் பார்வையை தளர்த்தினாள் ‘போதும் விட்டுவிடு‘ என விழியால் கிருஷ்ணாவிடம் மொழிந்தாள். அவள் வெட்கத்தில் பூப்பதை திகட்டாமல் ரசித்துக் கொண்டிருந்த கிருஷ்ணா அவள் வேண்டுகோளை ஏற்று சற்று இரக்கம் காட்டினான்.

“என்னுடைய பிரண்ட்ஸ் எப்படி கலை?” என்றான் கிருஷ்ணா.

“ரொம்ப நல்லா பழகுறாங்க. எனக்கு தீபக் –அ தான் ரொம்ப பிடிச்சிருக்கு. கீதா பார்த்தா உங்கள விடவே மாட்டா அவளுக்கும் உங்கள ரொம்ப பிடிக்கும்” என்றாள் கலை.

“ஐஐஐஐஐ…………… நம்ம லவ் சக்சஸ்”என மனதில் நினைத்துக் கொண்டு மீண்டும் புன்னகையில் பூத்த தீபக் ஆர்வத்தில் “நிஜமாவா?” என்று கேட்டுக் கொண்டே நாற்காலியின் விளிம்புக்கு வந்தான்.

“ஆமா நீங்க என்னுடைய சித்தப்பா போலவே இருக்கீங்க. முகம், தோரணை, உடல் வாகு எல்லாமே அப்படியே எங்க சித்தப்பா தான். கீதாவுக்கு எங்க சித்தப்பாவ ரொம்ப பிடிக்கும்” என்று கலை கூற

“அடடே! எவ்வளவு சந்தோஷமான விஷயம்?!” என்று குஷியில் துள்ளினான் ரமேஷ்.

“இரண்டு நிமிசம் நான் சந்தோஷமா இருந்திட கூடாதே!” என்று ரமேஷிடம் கேட்டான் தீபக்.

“நானா டா கலை கிட்ட கேட்டேன் அதுவா சொல்லுது” என்றான் ரமேஷ்.

“என்ன ஆச்சு?” என்று கலை கேட்க,

“ஒன்னுமில்லை மா” என்ற ரமேஷ் தன் அடுத்த கேள்வியை கலையின் முன் வைத்தான்.

“ஆமா கலை பீச்-ல கிருஷ்ணா மேல ஏதோ பேப்பர போட்டுட்டு போனியே அதுல என்ன எழுதியிருந்த?” என்று கேட்டான்.

“அது எனக்கும் அவருக்கும் உள்ள பெர்சனல்” என்றாள் கலை.

“அய்யோ கலை அதை அவனே படிக்கல நீ பாட்டுக்கு பிடிங்கிக்கிட்டு போயிட்ட அதுல என்ன இருந்திருக்கும், ஏது இருந்திருக்கும்னு இவன் எங்கள படுத்தின பாடு இருக்கே!” என்று ரமேஷ் கூறியது அதிர்ச்சியாய் இருந்தது கலைக்கு.

“நீங்க அதை படிக்கலையா கிருஷ்ணா?” என கேட்டாள் கலை.

“எங்க டா நீ படிக்க விட்ட நான் எடுத்த மறு நிமிஷமே பிடுங்கிட்டியே!” என்று சிறு புன்னகையோடு கூறிய கிருஷ்ணா “அதுல என்ன எழுதியிருந்த?” என கேட்டான்.

“அது வந்து” என பேசத் தொடங்கியவளை தடுத்தது “நான் வரலாமா??” என்ற ராகுலின் குரல்.

“வாங்க ராகுல் மதி எங்கே?” என்றான் கிருஷ்ணா.

“அவ உங்க சிஸ்டர் ருத்ரா கூட பேசிக்கிட்டு இருக்கா” என்று கூறிய ராகுல் கிருஷ்ணாவும் கலையில் அருகருகே அமர்ந்திருப்பதை கவனித்தான்.

“கலை கொஞ்சம் எழுந்து அந்த சேர்-ஐ (நாற்காலி) இங்க இழுத்து போடுங்களேன்” என்றான். அவளும் எழுந்து நாற்காலியை இழுத்து வர, கலை அமர்ந்திருந்த நாற்காலியில் ராகுல் அமர்ந்துக்கொண்டு

“இங்க போட்டு உட்காருங்க கலை” என்று தனக்கு அருகே அமர சொன்னான். கலையை எழுப்பிவிட்டு கலைக்கும் கிருஷ்ணாவுக்கும் நடுவே ராகுல் அமர்ந்தது அங்கிருந்த யாருக்கும் சரியாக படவில்லை; பிடிக்கவும் இல்லை. முக்கியமாக கிருஷ்ணாவுக்கு. வீட்டிற்கு வந்த விருந்தினர் என்பதை மனதில் கொண்டு அமைதி காத்தனர் அனைவரும்.

“கலை ரொம்ப திறமைசாலி வேளை சுத்தத்துல அவள அடிச்சுக்க ஆளே இல்லை அதனால கலைய எனக்கு ரொம்ப பிடிக்கும்” என்றான் ராகுல்.

ராகுலின் பேச்சில் உஷ்ணம் இருப்பதாய் சந்தேகித்த ரமேஷ்

“கிருஷ்ணாவுக்கு மனைவியாச்சே! திறமைசாலியாக தானே இருப்பாள்” என்று நறுக்கென கூறினான்.

இதை கேட்ட ராகுலின் முகத்தில் சட்டென வீரியம் கூடியது. அதனை கவனித்த ரமேஷும் கிருஷ்ணாவும் ஒருவருக்கு ஒருவர் பார்த்து சுமூகமாய் சிரித்துக் கொண்டனர்.

“கிருஷ்ணா அடுத்த காண்ட்ராக்ட் –ல எங்க கம்பெனியோட சைன் பண்ணுங்களேன் கலை தானே என்னோட கம்பெனியின் இந்த கிளையோட மேனேஜர்” என்று வீசினான் அடுத்த தோட்டாவை.

“மிஸ்டர் ராகுல். கலை உங்க கம்பெனி கிளையோட மேனேஜரா? அது நேற்று வரை தான். இன்னைல இருந்து மிசஸ் கலை அவர்கள், தி கிரேட் கிருஷ்ணா குரூப் ஆஃப் கம்பெனியோட முதலாளி. அவங்க எப்படி எனக்கு எதிரா இன்னொரு கம்பெனில வேலை பார்ப்பாங்க?” என்று தன் பேச்சில் திமிர் கலந்து கூறினான் கிருஷ்ணா. ராகுலுக்கு மட்டும் அல்ல; கலைக்கும் இது எதிர்ப்பார்த்திடாத அதிர்ச்சியாய் தான் இருந்தது.

“என்ன கலை ஷாக் ஆகுற நான் சொல்லுறது சரிதானே?” என்று கேட்டான் கிருஷ்ணா.

“அ.. அது வந்து” இழுத்தாள் கலை.

“வாட்ஸ் ராங் வித் யூ கலை அம் ஐ ரைட் ஆர் நாட்?” என்று கடுஞ்சொல்லாக கேட்டான்.

“உடனே எப்படி ரிசைன் பண்ண முடியும் கிருஷ்ணா? கையில எடுத்த வேலைகள முடிச்சதும்ம்” என்று அவள் சொல்லி முடிப்பதற்கு கூட காத்திருக்க விடவில்லை கிருஷ்ணாவின் கோபம்.

வேகமாக எழுந்து தன் கோவம் மொத்தத்தையும் சுருட்டி காலுக்கடியில் போட்டு, பாதத்தின் வழியே நாற்காலியில் அவன் செலுத்தியதில், நாற்காலி தோராயமாக ஒரு அடி பின்னோக்கி நகன்று அவன் செல்வதற்கு பாதை அமைத்துக் கொடுத்தது. அந்த பாதை வழியே கிருஷ்ணா தன் அறைக்கு செல்ல,

“டேய் கிருஷ்ணா” என அவன் பின்னால் ஓடினர் ரமேஷும் தீபக்கும்.

கலை ஒன்றும் புரியாதவளாய் விழித்துக் கொண்டிருக்க, ராகுலின் மனமோ உல்லாசமாய் கூத்தாடிக் கொண்டிருந்தது.

“என்ன ஆச்சு கலை ஏன் கிருஷ்ணா எழுந்து போயிட்டாரு?” என ஒன்றும் விளங்காதவன் போல கலையிடம் கேட்டான்.

“தெரியல சார் இருங்க நான் போய் பார்க்கிறேன்” என்று எழுந்தவளை இடைமறித்த ராகுல், “இப்ப வேணாம் கலை கொஞ்சம் கிருஷ்ணா அமைதியாகட்டும், அப்புறமா கேட்டுக்கலாம்” என்று கூறினான். என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் முகம் வாடிப்போனது கலைக்கு.

“ஹே கலை என்ன இது, இதுக்கெல்லாம் முகத்த தூக்கி வச்சிக்கிறீங்க நான் எதுவும் பேசாமல் அமைதியா இருக்கிறது உங்களுக்காகதான் உங்க மனசு நோகுற மாதிரி நான் நடந்துக்க மாட்டேன். உங்க முகம் வாடுறத பார்த்து சும்மாவும் இருக்க மாட்டேன்” என கூறி ஆறுதல் என்ற பெயரில் தன் வலையை வீச ஆயத்தமானான் ராகுல்.

“டேய் கிருஷ்ணா ஏன் டா நீ இப்படி பிகேவ் பண்ணுறவன் இல்லையே என்ன ஆச்சு உனக்கு? கலை பாவம் டா முகமே வாடிப்போச்சு” என்றான் தீபக்.

“என்ன டா பேசுற, யாருடா அந்த ராகுல் என்ன செஞ்சிக்கிட்டு இருக்கான்? அவனும் அவன் பேச்சும், கலை அவனோட கம்பெனில வேலை செஞ்சா, அவ என்ன இவனுக்கு வேலைக்காரியா?” என கிருஷ்ணா முடிப்பதற்குள்

“டேய் டேய் கத்தாத டா” என்றான் தீபக்.

“என்ன டா கத்தாத, அவன் இஷ்டத்துக்கு கலைய சேர் எடுத்து போட சொல்லுறான், எங்களுக்கு இடையில வந்து உட்காருறான். அப்புறம் என்ன சொன்னான்? நான் அவன் கம்பெனியோட சைன் பண்ணணுமா? என்ன நினைச்சிக்கிட்டு இருக்கான்” என்று கொந்தளித்தான் கிருஷ்ணா.

“ஆமா டா தீபக். கிருஷ்ணா பேசுறது சரிதான்.. இத்தனை வருஷமா ஃபவுண்டேஷ்ன் மீட்டிங் எல்லாத்துலையும் கிருஷ்ணா கூட பாண்டிங் கேட்டு வர எல்லா கம்பெனிக்கும் ‘கிருஷ்ணா க்ரூப் ஆஃப் கம்பெனி இஸ் அன் இண்டிவிஜுவல்’ -னு இந்த ராகுலும் மதிஷாவும் தானே இன்ஃபாம் பண்ணுவாங்க. இன்னைக்கு எங்க இருந்து கேட்கிறான் அவங்க கம்பெனிக்கு சைன் பண்ண சொல்லி எல்லாம் நம்ம கலை அங்க இருக்கிறதால தானே” என்றான் ரமேஷ்.

“ஆமா டா அதுக்கு தான் நான் கலைய ரிசைன் பண்ண சொன்னேன் அது புரியாம அவ என்ன பேசுறா? ஆனால் ரமேஷ், ராகுலுக்கு இதை தாண்டி வேற ஏதோ பிளான் இருக்கு” என்றான் கிருஷ்ணா.

“எனக்கும் அதே சந்தேகம் தான் டா, வந்ததுல இருந்தே ராகுல் சரி இல்லை, இதுவரை நான் பார்த்த ராகுல் இல்லை” என்றான் ரமேஷ்.

“மதி-ய கூப்பிட்டு பேசுவோமா?” என்றான் தீபக்.

“வேணாம் வேணாம் அவளுக்கு அவளோட அண்ணாவ ரொம்ப பிடிக்கும். நாம என்ன சொன்னாலும் நம்ப மாட்டா இதை நான் டீல் பண்ணிக்கிறேன்” என்றான் கிருஷ்ணன்.

“கிருஷ்ணா தம்பி” கலை அம்மாவின் குரல் கேட்டு அந்த அறையில் இருந்து வெளியே வந்த கிருஷ்ணாவை தொடர்ந்து அவனது நண்பர்களும் வந்தனர்.

“சொல்லுங்க அத்தை” என்றான் கிருஷ்ணா.

“ரொம்ப சந்தோஷம் தம்பி. அப்ப நாங்க கலை-ய கூட்டிக்கிட்டு ஊருக்கு கிளம்புறோம். உங்க அப்பா சொன்ன மாதிரி அடுத்த மாசத்துல நிச்சயதார்த்தம் வச்சிக்கலாம்” என்றார் கலையின் அம்மா.

“என்ன கலை-ய ஊருக்கு கூட்டிக்கிட்டு போறீங்களா?” என்றான் கிருஷ்ணா. தீபக், ரமேஷ் காதில் சென்று ‘மச்சான் அந்த ராகுலுக்கு பிங்கிலிக்கா பிலாப்பி தான்’ என கூறி சிரித்தான்.

“அண்ணி-ய அதுக்குள்ள கூட்டிக்கிட்டு போறீங்களா? ஏன் அத்தை? நிச்சயதார்த்தம் முடிஞ்ச அப்புறம் தானே வீட்டுக்குள்ளயே பூட்டி வைப்பீங்க பொண்ணுங்கள?” என்று கூறியவாறு அங்கு வந்தாள் ருத்ரா.

“இல்லை மா நிச்சயதார்த்த வேலை எல்லாம் பார்க்கணுமே கலை இங்க இருந்தா சரியா வராது அதனால தான்” என்றார் கலையின் அம்மா.

“என்ன ருத்ரா அண்ணிய பிரிய கஷ்டமா இருக்கா இப்பவே” என்று தீபக் கேலி செய்தான்.

“இப்படி ஒரு நாத்தனார் கிடைக்க கொடுத்து வைக்கணும் என் பொண்ணு” என்றார் கலையின் அப்பா. அதற்கு மெல்லிய சிரிப்பினை ருத்ரா வெளிப்படுத்த

“அய்யய்யோ! அவசரபட்டு அப்படியெல்லாம் முடிவு எடுத்துறாதீங்க அப்பா” என்று அதிர்ந்தான் தீபக். சிரித்துக் கொண்டே அங்கிருந்து நகன்றனர் கலையின் அம்மாவும் அப்பாவும்.

“பொறாமைல பொசுங்காத டா” என்று தீபக்கை திட்டியபடி அருகில் இருந்த குட்டி தலையணையை எடுத்து ரமேஷ் மேல் எறிந்தாள் ருத்ரா.

“ஹாஹா ஜஸ்ட் மிஸ்” என்று தீபக் கூற

“என்ன ஜஸ்ட் மிஸ்-ஆ? ருத்ரா குறி என்னைக்கும் தப்பாது. நான் என்.சி.சி. தெரியும்ல?” என்றாள் ருத்ரா.

“அப்ப எதுக்கு டி என்ன குறி வச்ச?” என்றான் ரமேஷ்.

“வரும் காலத்துல நீதான டா வாங்கனும்? இப்பவே பயிற்சி ஹாஹா” என்றான் தீபக்.

“தலவாணியா இருந்ததால உன்மேல போட்டேன் அம்மி கல்லா இருந்திருந்தா அவன் மேல போட்டுருப்பேன்” என்று சொல்லி செல்ல,

“ஹாஹா சிரித்துக் கொண்ட ரமேஷ், அம்மி எல்லாம் தூக்கி பயிற்சி பண்ணிக்கோடா என் செல்லம் டைம் பாஸ் ஆகலைனா வருவா உன்ன அடிக்க” என்றான்.

தான் நின்ற இடத்தில் இருந்து சிறிது தொலைவே சென்றிருந்த ருத்ராவுக்கு ரமேஷ் உரைத்த ‘செல்லம்’ எனும் வாக்கியம் காதில் விழ, புன்னகையுடன் சற்று அவனை திரும்பி பார்த்தாள். அவனோ தீபக்குடன் விளையாடிக் கொண்டிருந்தான். “நேர்ல மட்டும் கொஞ்சிறாத ஃப்ராடு” என்று காதல் ரிதத்துடன் தன் அறைக்கு சென்றாள்.

கிருஷ்ணாவிடம் பேசி முடித்து திரும்பிய கலையின் அம்மாவும் அப்பாவும் கலையிடம் வந்தனர். “ஆன்ட்டி எங்க வீட்டுக்கு வந்துட்டு போங்க” என்றாள் மதிஷா.

“அடுத்த முறை கண்டிப்பா வர்றோம் மா” என்ற கலையின் அம்மா கலையிடம், “கலை உன் ரூம்-ல முக்கியமான பொருள் ஏதாவது இருந்தா சொல்லு, போற வழியில எடுத்துக்கலாம் மற்றதை சுந்தர் மாமா அவரோட டெம்போ வண்டில அடுத்த வாரம் எடுத்துட்டு வந்திடுவாரு” என்றார்.

“இல்லை மா, கொஞ்சம் வேலை பாக்கி இருக்கு அத முடிச்சிட்டு அடுத்த வாரம் நான் வர்றேனே!” என்றாள்.

“ஆமாம் ஆன்ட்டி கலை இல்லைனா முடியாது.கல்யாணத்துக்கு தான் நாள் இருக்கே அதுவரை கலை எங்க கம்பெனிலயே கண்டினியூ பண்ணட்டுமே” என்றான் ராகுல்.

தன் அண்ணன் பேச்சு சரியாய் இருப்பதாய் உணராத மதிஷா, “அண்ணா வேலை எல்லாம் நான் பார்த்துக்கிறேன். கலை, நீ ஊருக்கு போய்ட்டு வா.. கல்யாண பொண்ணு நல்லா உடம்ப தேத்து” என்றாள்.

“சரி மா அப்ப நீங்க இருங்க நான் ரூம்க்கு போய் சில திங்க்ஸ் மட்டும் எடுத்துக்கிட்டு வந்திடுறேன். நாம ரயில்வே ஸ்டேஷனுக்கு இந்த வழியாதான் போகனும் திரும்ப திரும்ப அலைய வேணாம்-ல” என்றாள்.

“சரி மா நீ எப்படி போவ?” என்றார் கலையின் அப்பா.

“ருத்ராவோட ஸ்கூட்டி எடுத்துக்கிட்டு போறேன் பா” என்றவள் ருத்ராவிடம் சாவி வாங்க அவள் அறைக்கு சென்றாள்.

வேகமாக வீட்டின் போர்ட்டிகோவிற்கு வந்த ராகுல் அவசர அவசரமாக ருத்ரா ஸ்கூட்டியில் உள்ள காற்றை பிடுங்கி விட்டான். சாதூரியமாக கிருஷ்ணாவின் வண்டியில் காற்றை இறக்காமல், வீட்டு அலமாரி அருகே ஆணியில் தொங்கவிடப் பட்டிருந்த அவனது வண்டி சாவியை எடுத்து ஒழித்து வைத்து விட்டான்.

இதனை பார்த்துவிட்ட மதிஷா “என்ன அண்ணா பண்ணுற?” என்றாள். செய்வதறியாது பதட்டத்துடன் அங்கு நின்றிருந்தான் ராகுல்.

“சொல்லு அண்ணா என்ன செய்யுற நான் உன்ன கவனிச்சிக்கிட்டு தான் இருக்கேன் நீ சரி இல்லை” என்றாள் மதிஷா.

“என்னா டா பாப்பா நான் நல்லாதான் இருக்கேன்” என்றான் திக்கி திணறி.

“இப்ப எதுக்கு கிருஷ்ணாவோட சாவியை மறைச்சி வைக்கிற?” என்று காட்டமாக கேட்க

“அவனோட விளையாடி ரொம்ப நாள் ஆகுதுல டா அதான் ஒரு சின்ன விளையாட்டு” என்று சமாளிக்க முயற்சித்து தோல்வியுற்றான்.

“நடிக்காத அண்ணா உன்ன எனக்கு தெரியாதா?” என்றாள்.

ருத்ரா அறையில் இருந்து வெளியே வந்த கலையிடம்

“கலை ரயிலுக்கு இன்னும் 2 மணி நேரம் இருக்குல நான் 5-வது ஸ்டாப் வரை போய்ட்டு வந்திடுறேன் நீங்க இருங்க” என்றான் கிருஷ்ணா.

“டேய் க்ரிஷ் கலையோட ரூம் அந்த பக்கம் தானே அவளையும் கூட்டிக்கிட்டு போ அவளோட திங்க்ஸ் எடுத்துக்கிட்டு வரட்டும்” என்று மதிஷா கூற ராகுலின் மனதில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

“கல்யாணத்து முன்னாடி ஒன்னா பைக்குல போக வேண்டாம். நீ ருத்ரா வண்டியிலயே போ கலை” கலையின் அம்மா கூறினார்.

“ஆன்ட்டி இந்த காலத்துல என்ன பேசுறீங்க சும்மா போகட்டும் ஒன்னும் இல்லை ருத்ராவோட வண்டியில வேற ஏர் இல்லை நான் இப்ப தான் பார்த்தேன்” என்றாள் மதிஷா.

“நீ கிருஷ்ணாவோட போறியா கலை” என்றார் அவள் அப்பா.

“அப்பா நான் ராகுல் சார்-அ கூட்டிக்கிட்டு போறேன்” என்றாள் கலை.

“என்னது ராகுல் கூட போறியா? அட கூமுட்ட தங்கச்சி” என்று வாய்க்குள் கூறினான் தீபக்.

கிருஷ்ணா கலை மீது உள்ள காட்டத்தை தீபக்கிடம் முறைத்துக் காட்டினான். ரமேஷுக்கு குழப்பமும் அதிர்ச்சியும் கலந்து நின்றது. ராகுலுக்கு என்ன வாய் முழுக்க பல் தான்.

“அவர ஏன் மா கஷ்டபடுத்துற?” என்றார் கலையின் அப்பா.

“இல்லை பா உங்க கூடவே ஊருக்கு வந்திடலாமானு யோசிக்கிறேன் அதனால இன்னைகே வேலைய ரிசைன் பண்ணிட போறேன். மதி எல்லாதையும் பார்த்துப்பா நான் தான் இப்ப கிருஷ்ணா க்ரூப் அஃப் கம்பெனியோட முதலாளி ஆகிட்டேனே” என்று கூறியவாறு கிருஷ்ணாவை நோக்கி ஒரு புன்னகை விடுத்தாள்.

“அட ராமா என்ன டா இது ஒன்னுமே புரியல அறிவாளினு நினைச்சா வெங்காயம் மாதிரி பேசுறா கூமுட்டைனு நினைக்கும் போது கற்பூரம் மாதிரி பசக்னு பாய்ண்ட்-அ பிடிக்கிறாளே” என்றான் தீபக்.

“கொஞ்சம் நேரம் சும்மா இரேன் டா” என்றான் ரமேஷ்.

ராகுலுக்கு யாரோ காதில் சங்கு ஊதுவது போன்ற உணர்வு ’இவ்வளவு நேரம் வேலை-ய விடமாட்டேன்னு தானே சொல்லிக்கிட்டு இருந்தாள். திடீர்ன்னு என்ன இவளுக்கு?‘ என மண்டை காய்ந்து போனான்.

“ராகுல் சார் நீங்க வந்து முன்னாடி வண்டிய எடுங்க. நானும் கிருஷ்ணாவும் பின்னாடி வர்றோம்” என்றாள் கலை.

“ஓஓஓ ராகுல கூட்டிக்கிட்டு தானே போறதா சொன்னா கூட போறதா சொல்ல்லையே ஹாஹா” என தீபக் கத்தி சிரிக்க, அது அங்கிருந்த அனைவரது காதிலும் கேட்டுவிட்டது. அடக்கி வைத்திருந்த ஆத்திரம் அனைத்தும் கொப்பளித்துக் கொண்டு வெளியில் வர

“என்ன டா சிரிப்பு?” என கை கலப்பில் இறங்கினான் ராகுல்.

அதிர்ச்சியில் மதிஷாவும் கலையின் அப்பாவும் ராகுலை பிடிக்க, நண்பன் தீபக்கை தன் இடது கரங்களால் பின்னே நகற்றி வலது கரத்தினால் ராகுலின் சட்டை காலரை பிடித்தான் கிருஷ்ணா.

வீட்டில் அனைவரும் சர்ச்சையை கண்டு அதிர்ந்திருக்க, கிருஷ்ணாவின் அப்பா மட்டும்

“கிருஷ்ணா என்ன இது வீட்டுக்கு வந்தவங்க கிட்ட?” என்று கூற, சில வினாடிகளில் தன் பிடியை தளர்த்திய கிருஷ்ணா தன் ஆள் காட்டி விரல் மூலம் எச்சரிக்கை விடுத்தான்.

கிருஷ்ணா சட்டையை விடுவித்த பின் தன் தோளினை உதறியபடி அதனை சரி செய்துவிட்டு வேகமாக வெளியில் வந்து தன் வண்டியை எடுத்துக் கொண்டு தன் வீட்டிற்கு விரைய முற்பட்டவன், வாசலில் கலங்கிய கண்களோடு நின்றிருந்த தன் தங்கையை திரும்பி பார்த்து

“வா பாப்பா” என்றான். அவள் அசையாது சிலையாய் நின்றிருந்தாள்.

வண்டியை விட்டு கீழே இறங்கியவன், மதிஷாவின் அருகே சென்றான். அவள் கன்னங்கள் இரண்டினையும் தன் உள்ளங்கைகளில் ஏந்தி தன் முகம் நோக்கி நிமிர்த்தினான்.

“அண்ணன மன்னிச்சிடு பாப்பா வா நம்ம வீட்டுக்கு போகலாம்” என்றான். இதனை பார்த்த ருத்ராவுக்கும் கலைக்கும் கண்கள் கலங்கியதை மறுக்க இயலாது.

“மன்னிப்பு கேளு அண்ணா” என்றாள் மதிஷா.

“மன்னிச்சிடு பாப்பா” என்று தன் காதுகளை பிடித்தான்.

“என்கிட்ட இல்ல மத்தவங்க கிட்ட கேளு” என்றாள்.

மீண்டும் கோபம் உச்சிக்கு ஏறியது ராகுலுக்கு.

“பாப்பா வா போகலாம்” என்றான் பற்களை கடித்துக் கொண்டு.

“நீ கேட்டாதான் நான் வருவேன் உன் கூட” அழு குரல் மாறாமல் கூறினாள் மதிஷா.

தன் தங்கைக்காக வீட்டினுள் வந்த ராகுல் கையெடுத்து கும்பிட்டவாறு

“எல்லாரும் என்ன மன்னிச்சிடுங்க தீபக் அயம் சாரி கிருஷ்ணா” எனவும்

“அயம் சாரி ராகுல், யஸ் வி ஆர் பிரண்ட்ஸ் பட், வாட் இஸ் மைன் இஸ் மைன்” என்றான்.

ராகுல் வெளியே வந்ததும், ஒரு நிமிஷம் அண்ணா என்ற மதிஷா உள்ளே வந்து, “கிருஷ்ணா, இது தான் ராகுல். இப்ப அவனுக்கு பிடிக்கலைனாலும் நான் சொன்னதுக்காக மன்னிப்பு கேட்டவன் தான் உண்மையான ராகுல். பாசத்துக்காக என்ன வேணும்னாலும் செய்வான்.. அவன தப்பா நினைச்சிடாத நான் வர்றேன்” என புறப்பட்டாள்.

வீட்டின் அமைதி நிலவரம் கலவரமாய் மாறிப் போக, அனைவரது மனதிலும் கனம் ஏறியது.

“சம்மந்தி நடந்த விஷயங்கள மனசுல வச்சிக்காதீங்க.. குடும்பம்னா இது எல்லாம் சேர்ந்தது தானே” என்றார் சிவகாமி.

தன் பெண்ணோட ராசி தான் வீட்டில் கலகம் வந்துவிட்டதாய் கூறிவிடுவார்களோ என பயந்துக் கொண்டிருந்த கலையின் அம்மா அப்போது பெருமூச்சு விட்டார்.

“சாரி டா கிருஷ்ணா. எல்லாத்துக்கும் என் வாய் தான் காரணம்” என கலங்கி நின்றான் தீபக்.

“அட லூசு அந்த ராகுலோட காது பாம்பு காது வேற ஒன்னும் இல்லை சும்மா விடு நீ” என்று ஆளுக்கு முந்திக் கொண்டு தீபக்குக்கு ஆறுதல் கூறினாள் ருத்ரா. அவளது இந்த குணம் ரமேஷுக்கு அவள் மீதான காதலை இன்னும் அதிகரிக்க செய்தது.

மறுபக்கம் தங்கள் வீட்டை அடைந்த மதிஷாவும் ராகுலும் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர்.

“அண்ணா என் மேல கோவமா அங்க உன்ன மன்னிப்பு கேட்க சொன்னதுக்கு?” என்றாள் மதிஷா.

ஒன்றும் சொல்லாதவனாய் மெத்தை மேல் அமர்ந்திருந்தான் ராகுல். அவன் அருகே சென்று மண்டியிட்டு அமர்ந்துக் கொண்ட மதிஷா, அவன் கையினை தன் இரு கைகளினால் பற்றிக் கொண்டாள்.

“பேசு அண்ணா ப்ளீஸ்” என கண்ணீர் வடித்தாள்.

“அட கழுத எதுக்கு கண்ணீர் வடிக்கிற நான் உன்மேல கோப படுவேனா?” என அணைத்துக் கொண்டான்.

“நீ ஆச பட்ட கலை-ய நான் கிருஷ்ணாவோட சேர்த்து வச்சிட்டேனா அண்ணா?” என்றாள் சிறிதும் யோசிக்காமல்.

இதை கேட்டதும் மதிஷாவை சட்டென தன் அணைப்பில் இருந்து விடுத்த ராகுல் அவளை குழப்பத்துடன் பார்த்தான்.

“நான் ருத்ராக்கிட்ட பேசிக்கிட்டு இருக்கிறப்ப உங்களுக்கும் கிருஷ்ணாவுக்கும் இடையில நடந்த எல்லாத்தையும் பார்தேன். கிருஷ்ணாவும் அவன் பிரண்ட்ஸ்சும் பேசினதையும் கேட்டேன். நான் தான் கலைகிட்ட வேலையை ரிசைன் பண்ண சொன்னேன்” என்றாள் மதிஷா.

“அவங்க ஏதோ பேசிக்கிட்டதை வச்சி ஏன் டா இப்படி எல்லாம் யோசிக்கிற?” என்றான் ராகுல்.

“அவங்க செஞ்சத வச்சி நான் குழப்பிக்கல அண்ணா. நீ கலை பெயர சொல்லி கைய வெட்டினதுல தான் உறுதிபடுத்தினேன்” என்றாள் மதிஷா.

மதுரையில் இருந்து புறப்பட்ட கலையும் அவள் குடும்பமும் கன்னியாகுமரியில் இருக்கும் தன் வீட்டை வந்தடைந்தது. அவர்களை வரவேற்கும் வண்ணம் சுவர்ணா அத்தை, கீதா மற்றும் ரம்யா வாசலில் கூடியிருந்தனர். கலையை கண்டதும் ரம்யா,

“கலை” என ஓடிச் சென்று கட்டி அணைத்துக் கொண்டாள்.

“எப்படி டி இருக்க?” என்றாள் கலை.

“நீ கொடுத்த ஷாக்ல ஹார்ட் அட்டாக் வராதது ஒன்னு தான் டி குறை” என்றாள் ரம்யா.

“அடிங்க” என செல்லமாய் கலை ரம்யாவை சீண்ட அனைவரும் வீட்டினுள் வந்து அமர்ந்தனர்.

“அக்கா எனக்கு ஜிகர்தண்டா வாங்கிட்டு வந்தியா?” என கேட்டாள்.

“ஏன் டி வந்ததும் வாயளக்கிற? நாங்க என்ன பிக்னிக்ஆ போயிட்டு வர்றோம்?” என்றார் கலையின் அம்மா.

“கலை எழுந்து நில்லு திருஷ்டி சுத்துறேன்” என்றார் சுவர்ணா அத்தை.

“அத்தை” என அவரை கட்டிக் கொண்டாள் கலை. சிரித்துக் கொண்டே கலையின் நெற்றியில் ஒரு முத்தமிட்ட சுவர்ணா அத்தை அவளுக்கு திருஷ்டி சுத்திவிட்டு அதனை அடுப்பில் போட்டு தீ மூட்டினார். பட்.. பட்.. பட்.. என அது இடை விடாது வெடிக்க,

“பாருங்க பிள்ளை மேல எவ்வளவு கண்ணு” என்றார் சுவர்ணா அத்தை.

“எனக்கு எல்லாம் சுத்த மாட்டீங்களே!” என்றாள் கீதா.

“நீயே திருஷ்டி பொம்மைய கையில வச்சிக்கிட்டே தான திரியுற.. பின்ன தனியா வேற உனக்கு சுத்தனுமா?” என்றாள் ரம்யா.

“ரம்யா அக்கா அவன் என்னோட சின்சான் திருஷ்டி பொம்மை இல்லை” என்று கடிக்க ஆரம்பித்தாள்.

“ஐய்யோ தலைவலிக்கு அமைதியா இரு கீதா” என்றார் அவளின் அம்மா.

“இருங்க நான் எல்லாருக்கும் டீ கொண்டு வர்றேன்” என சமயலறைக்கு சென்றார் சுவர்ணா அத்தை.

மெல்ல பேசிக் கொண்டே அங்கிருந்து எழுந்து தோட்ட பகுதிக்கு சென்றனர் கலையும் ரம்யாவும்.

“ஆமா நீ எப்படி டி திரும்பி வந்த? மதுரையிலயே செட்டில் ஆகிடுவேன்னுல நான் நினைச்சேன்” என்று கலையை சீண்டத் தொடங்கினாள் ரம்யா. ரம்யா வேண்டுமென்றே வாருவதை புரிந்துக் கொண்ட கலை,

“கிருஷ்ணா போகத போகாதனு தான் டி சொன்னாரு. நான் தான் அவர சமாதானபடுத்தி வச்சிட்டு வந்திருக்கேன்” என்றாள் சூதானமாக.

“அடிபாவி கலையா இது?” என்றாள் ரம்யா.

“ஹாஹா சும்மா சொன்னேன் டி ஒரு வாரத்துல இருக்கிற வேலையெல்லாம் முடிச்சிட்டு வரலாம்னு இருந்தேன். ஆனால் அங்க கொஞ்சம் பிரச்சணை ஆகிடுச்சு” என்ற கலை நடந்த எல்லாவற்றையும் கூறினாள்.

“அப்ப வேலையை விட்டுட்டியா?” என்று அதிர்ச்சியாய் கேட்டாள் ரம்யா.

“ஆமா டி வேற வழி இல்லையே” என்றாள் கலை.

“ராகுலுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை? ஆரம்பத்துல இருந்தே ப்ளானோட தான் காய் நகர்த்திருக்கானா அப்ப?” என்றாள் ரம்யா.

“தெரியல டி அவரு ஏன் இப்படி நடந்துக்கிறாருனு இதுக்கும் மேல அங்க இருக்கிறது சரி இல்லைனு தான் வந்துட்டேன்” என்று கலை கூற

“சரி ரொம்ப யோசிக்காத நீ ஆசைப்பட்ட வாழ்க்கை இப்ப உன் கையில கிடச்சிருக்கு அத மட்டும் நினைச்சுக்கோ சந்தோஷமா இரு” என்றாள் ரம்யா.

“இந்த மா ரெண்டு பேரும் டீ குடிங்க” என அங்கு வந்தனர் சுவர்ணா அத்தையும் கீதாவும்.

“அத்தை உங்களுக்கு என் மேல கொஞ்சம் கூட கோவம் இல்லையா?” என்றாள் கலை.

“ச்சீ கழுத என்ன பேசுற கல்யாண பொண்ணு கண்டத யோசிக்காம சந்தோஷமா இரு” என்ற சுவர்ணா அத்தை அங்கிருந்து நகர்ந்தார்.

“அக்கா அக்கா பால்கோவா டப்பா எப்படி இருக்கு?” என்றாள் கீதா.

“வாடி வாடி உன்ன தான் தேடிக்கிட்டு இருந்தேன். அவனோட ஃபேஸ் புக் புரொஃபைல் -அ நீ எதுக்கு டி நோட்டம் விட்டுக்கிட்டு இருக்க?” என்றாள் கலை.

“அக்கா சும்மா தான் கா நீயா எதையாவது நினைச்சி பயப்படாத” என்றாள் கீதா.

“சும்மானாலும் இனி அப்படி பண்ணாத நாள பின்ன விசேஷத்துல பார்த்தாலும் உன் வாலுதனத்த காட்டிக்கிட்டு இருக்காத” என்று கலை கண்டிப்பாக கூறினாள்.

“ஏன் கா நான் சும்மா தான பார்த்தேன். உன்ன மாதிரி அவன தேடி போனேனா இல்லை தில்லுமுல்லு வேலை எல்லாம் பார்த்தேனா?” என்றாள் கீதா. இதனால் கோபம் அடைந்த கலை

“என்ன டி சொன்ன?” என்று கன்னத்தில் ஓங்கி ஒரு அடி வைத்து விட்டாள்.

“அய்யோ கலை” என்று பதறிய ரம்யா, கீதாவை அணைத்துக் கொண்டாள்.

“கீதா அக்கா உன்னோட நல்லதுக்கு தான சொல்லுவா. அவள இப்படியா பேசுவ நீ? தப்பு மா” என்றாள் ரம்யா. ஒன்றும் பதில் பேசாமல் விசும்பிக்கொண்டே இருந்தாள் கீதா.

“சரி வாங்க எல்லாரும் உள்ள கலை வா வந்து கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடு” என்றாள் ரம்யா.

“நீங்க போங்க நான் கொஞ்சம் கழிச்சு வர்றேன்” என்ற கலையின் மனவலி உணர்ந்த ரம்யா அவளை சிறிது நேரம் தனிமையில் விட்டாள். அப்பொழுது கலையின் கையில் இருந்த அவளது அலைபேசி அதிர்ந்து கிருஷ்ணாவின் பெயரை காட்டியது.

‘அய்யோ வந்ததும் சொல்ல மறந்துட்டோமே’ என தன் தலையில் மெல்லமாக அடித்துக் கொண்டு அலைபேசியை உயிர்ப்பித்து காதில் வைத்தாள்.

“சாரி கிருஷ்ணா வந்து அரைமணி நேரம் ஆகுது இங்க பேசிக்கிட்டே இருந்ததுல மறந்துட்டேன்” என்றாள் கலை.

“சரி சரி உன்னோட ராஜினாமா லெட்டரை ராகுலுக்கு மெயில் பண்ணிட்டேன். அவன் இனி உனக்கு கால் செஞ்சா நீ பேசாத” என்றான் கிருஷ்ணா.

“சரிங்க” என்றாள் கலை. அவ்வளவு நேரம் கடுப்பில் இருந்த அவனுக்கு ‘சரிங்க’ எனும் அவளது ஒற்றை வார்த்தை பனியை அள்ளி தூவியது போல இருந்தது. கொஞ்சம் சாந்தமானான்.

“என்ன டா பேச்சு வாட்டமா இருக்கு? நான் ஹார்ஷா பேசிட்டேன்னு வருத்தமா?” என்றான் கிருஷ்ணா.

“இல்லை கிருஷ்ணா அதெல்லாம் ஒன்னுமில்லை” என்றாள் தன் தங்கையின் பேச்சில் துயருற்றவள். அவளை சமாதானபடுத்த எண்ணிய கிருஷ்ணா

“நீ என்ன புருஷன பெயர் சொல்லி கூப்பிட்டுக்கிட்டு இருக்க? எங்க மாமானு கூப்பிடு பார்ப்போம்” என்றான்.

தன் தங்கை அவ்வாறு பேசியதில் மிகவும் நொந்து போன கலைக்கு தான் கிருஷ்ணாவை அடைந்த விதம் தவறோ என தோன்ற ஆரம்பித்து விட்ட்து. அதனால் தன்னவனது குறும்பினை கூட ரசிக்க இயலாமல் வேதனையில் மூழ்கி இருந்தாள்.

“கலை லைன்ல இருக்கியா?” என்றான் கிருஷ்ணா.

“ம்ம் இருக்கேன் என் மேல ஏதாவது தப்பு இருக்கா கிருஷ்ணா?” என்றாள் கலை.

“எந்த விஷயத்துல” என்றாள் கலை.

“புரியல என் விஷயத்துலயா?” என்றான் கிருஷ்ணா. தன் நிலையினையும் குழப்பத்தினையும் வார்த்தைகளால் விவரிக்க தெரியாத கலை

“ஒன்னுமில்லை நான் அப்புறமா பேசுறேன்” என்று அலைபேசியை துண்டித்தாள்.

அவளது மனம் ஏதோ நொந்துக் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்துக் கொண்ட கிருஷ்ணா மீண்டும் அவளுக்கு அழைப்பு கொடுத்தான்.

“சொல்லுங்க கிருஷ்ணா” என்றாள் கலை.

“லவ் யூ மை பொண்டாட்டி” என்றான் அவன்.

முதன்முதலில் அந்த வார்த்தைகளை கேட்டவள் தன்னை மறந்து வேறு லோகம் சென்று விட்டாள்.

“ஹலோ மிசஸ். கிருஷ்ணா லைன்ல இருக்கீங்களா? உங்கள் சேவகன் இங்க காத்துக்கிட்டு இருக்கேன்” என்றான் கிருஷ்ணா.

இதை கேட்டு சத்தம் வெளியில் வராமல் சிரித்துக் கொண்ட கலை, ”உங்கள் நாயகி இங்க இல்லை வேறு லோகத்துல, அவளோட நாயகனோட டூயட் ஆடிக்கிட்டு இருக்கா” என்றாள் கலை.

“ஹாஹா” என சிரித்தவன் “அந்த நாளுக்காக நானும் காத்துக்கிட்டு இருக்கேன்” என்றான்.

“நானும்” என வெட்கத்தில் வார்த்தையை சுறுக்கிக் கொண்ட கலை,

“சரி நான் அப்புறமா பேசவா?” என்றாள்.

“அந்த பேப்பர்ல என்ன எழுதியிருந்தனு சொல்லமலே போயிட்டியே?” என்றான்.

“அதுக்காவும் காத்திருங்க உங்களுக்கானது உங்களை வந்து சேர வேண்டிய நேரத்துல சேரும்” என்றவள் சிரித்துக் கொண்டே வீட்டினுள் சென்றாள். கிருஷ்ணாவும் மந்திர புன்னகையோடு தன் வேலைகளை கவனிக்கத் தொடங்கினான்.

இவ்வாறாக நாட்கள் நகர்ந்து அவர்களது நிச்சயதார்த்த சுப தினம் வந்தது. கிருஷ்ணாவின் வீட்டார் கன்னியாகுமரியில் உள்ள கலை வீட்டிற்கு வந்திருக்க, மேள தாளங்களும் மங்கல சுப கீதங்களும் ஒலித்துக் கொண்டுருந்தது. கலை அவளது அறையில் தயாராகிக் கொண்டிருந்தாள்.

“அடியேய் இன்னைக்காவது அந்த மனுஷன் கிட்ட என்ன பேச விடுவியா டி?” என்றாள் ரம்யா. அவளை நோக்கி சிரித்துக் கொண்ட கலை பதில் எதுவும் கூறவில்லை.

‘இவ ஒன்னும் கிழிக்க மாட்டா நாமதான் களத்துல இறங்கணும் மாப்பிள்ளையே நம்ம முன்னால இருக்காரு இன்னும் என்ன வேணும்’ என மனதிற்குள் எண்ணியவள் கலையை பார்த்து “ஹுக்கும்” என விளையாட்டாய் நொடித்துக் கொண்டு சென்று விட்டாள். அப்போது உள்ளே வந்தாள் மதிஷா.

“கலை எப்படி இருக்க?” என்றாள்.

“ஹே அசிமா நல்லா இருக்கேன் நீ எப்படி இருக்க? ராகுல் எப்படி இருக்காரு?” என்றாள் கலை.

“அண்ணன் மேல உனக்கு கோவமே இல்லையா?” என்றாள் மதிஷா.

“கிருஷ்ணாவும் உங்க அண்ணாவும் பேசி சமாதனம் ஆகிக்கிட்டதை அவரு எனக்கு சொன்னாரு. ராகுல் தான் இனி இங்க வரமாட்டாரே ஆஸ்திரேலியாவுலயே செட்டில்.. அப்படி தானே” என்றாள் கலை.

“ஆமாம் கலை அண்ணா என்கிட்ட ரொம்ப ஃபீல் பண்ணான். உன் விஷயத்துல அப்படி நடந்துக்கிட்டத நினைச்சி. அவன் ரொம்ப நல்லவன்” என்றாள் மதிஷா.

“ஹே என்ன டி இது? என் கிட்ட ஏன் நீ இவ்வளவு எக்ஸ்ப்லைன் பண்ணுற? பழச விட்டுடு” என்றாள் கலை.

பின்பு பெண்ணை அழைத்து வர சொல்லி ஐயர் கூற, ருத்ரா உள்ளே வந்து கலையை அழைத்து வந்தாள்.

கலையின் குடும்பமும், அவளது தோழி ரம்யாவும் ஒரு பக்கம் இருக்க, கிருஷ்ணாவின் குடும்பமும் அவனது நண்பர்களான மதிஷா, தீபக் மற்றும் ரமேஷ் இவர்கள் அனைவரும் மறுபுறம் இருக்க பூ வைத்து நிச்சயத்தை முடித்தனர்.

பின் உணவருந்த செல்ல அனைவரும் காத்திருந்த நேரம், தனிமை சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கிருஷ்ணா தனது மனதின் புதிரை கலையிடம் கேட்டுத் தெளிய விரைந்தான். மெல்ல மெல்ல பேச்சை தொடங்கினான் கிருஷ்ணா.

“அந்த பேப்பர்ல என்ன எழுதியிருந்த? சொல்லு ப்ளீஸ்” என்றான்.

“இப்ப சொல்ல மாட்டேனே அது” என பேசத் தொடங்கியவளை தடுத்தது “நான் வந்துட்டேன்!!” என்ற ரம்யாவின் குரல்.

அவருடன் பேசும்பொழுது இடையில் வரும் ரம்யா மீது கோபம் வந்தது கலைக்கு. இருந்தாலும் பொறுமையாக கிருஷ்ணாவிடம் அறிமுகம் செய்து வைத்தாள்.

“இவள் என்னுடைய நெருங்கிய தோழி ரம்யா. கவிதையெல்லாம் நல்லா எழுதுவாள். இவளது முதல் கவிதை புத்தகம் சில மாதத்திற்கு முன்புதான் வெளிவந்தது. இதோ பாருங்க” என காட்டினாள் கலை.

தமிழ் புத்தகம்னா சொல்லவா வேணும் நம்ம கிருஷ்ணாவுக்கு. “அடடே ரம்யாக்குள்ள இப்படி ஒரு திறமையா?!” என புகழ ஆரம்பித்தான்.

கலைக்கு கோபம் உச்சிக்கு ஏறியது. தன் முன்னரே அவளை பாராட்டுகிறாரே என்று அங்கு நிற்க பிடிக்காமல் நின்றுக் கொண்டிருந்தாள்.

நான் இந்த புத்தகத்தை எடுத்துகலாமா?? என்று கிருஷ்ணா கேட்க கலையின் மனம் மேலும் நொந்தது. இருந்தும் தன் அன்புக்குறியவன் முதல் முதலாக தன்னிடம் கேட்கும் ஒன்று என்பதால் சம்மதம் தெரிவித்தாள். நடப்பவை எல்லம் கலைக்கு சுருக்கென சுட்டாலும் நிச்சயதார்த்த நாள் நல்ல நினைவாக இருக்க வேண்டுமென எண்ணி அமைதிக்கொண்டாள்.

உணவருந்த அப்போது அழைப்பு வந்துவிட, தம்பதிகளை அழைத்து உணவு பரிமாறுவதில் தொடங்கி, வீட்டார் அனைவரும் உண்டு முடித்து தங்கள் உறவின் பாச பேச்சுகளை பேசி முடித்தனர்.

மாப்பிள்ளை வீட்டார் வீடு திரும்பும் நேரம் கைக்கூட அனைவரும் கிருஷ்ணாவை தேடினர். அவன் கலையுடன் உரையாடலை முடித்தபடி வந்துக்கொண்டிருந்தான். கிருஷ்ணாவின் கைப்பிடிக்க ஏங்கும் கண்களோடு அவனை ஊருக்கு வழியனுப்பி வைத்தாள் கலை.

அவர்களது வண்டி வீட்டு வாசலை தாண்டவும் “கலை“ என ஒரு சத்தம் கேட்டது. திரும்பி பார்த்தாள்.

“வாழ்த்துக்கள் ரொம்ப லேட்ஆ வந்து வாழ்த்து சொல்லுறனே நான் யாருனு பார்க்குறீங்களா?” என்றாள் ஒரு பெண்.

“ஆமா நன்றி. ஆனா நீங்க யாருனு நான் தெரிஞ்சிக்கலாமா?” என்றாள் கலை.

“மாத்தி வச்ச போட்டோல உள்ள முகத்த இவ்வளவு சீக்கிரம் மறந்துட்டீங்களா கலை?” என்றாள் அவள். அதிர்ச்சியில் உறைந்தாள் காலை.

“நீங்க மறக்கலாம். ஆனால் அசிங்கப்பட்ட நான் அவ்வளவு சீக்கிரம் மறப்பேனா? இல்லை விட்டுடுவேனா?” என்றவள் அங்கிருந்து விடைப்பெற்றாள்.

கலை – கிருஷ்ணா கல்யாணம் ஆறு மாதங்கள் கழித்து என்பது அவர்களை ஏங்க வைத்தாலும், தினசரி அவர்களது கைபேசி பேச்சுக்களும், குறுஞ்செய்திகளும் காதல் தவிப்பின் சுகமாய் இனிதே நாட்கள் நகரத் தொடங்கின.

அந்த நாட்களில் ஒரு நாள் கலை ரம்யாவிடம்

“பீச்சுக்கு நான் கொண்டு போன அந்த பேப்பர பற்றி கிருஷ்ணா கேட்டார் டி நீ கஷ்டப்பட்டு எழுதின கவிதைய அவரு படிக்கக் கூட இல்லை” என்றாள்.

“என்னது படிக்கலையா? நீ என்ன சொன்ன அவர்கிட்ட?” என கேட்டாள் ரம்யா.

“நிச்சயம் அன்னைக்கும் கேட்டாரு. நான் ஒன்னும் சொல்லல இப்போதைக்கு சொல்லமாட்டேன்னு மட்டும் சொல்லி வச்சிருக்கேன்” என்றாள் கலை.

“ஒன்னும் சொல்லலையா? பின்ன கிளம்புற முன்ன வர ரொம்ப சீரியஸா பேசிக்கிட்டு இருந்தீங்க ரெண்டு பேரும்? இதைப் பத்தி இல்லையா?” என கேட்டாள் ரம்யா.

“இல்லை டி.. அது நான் ஒர்க் ஷாப் போயிருந்தேன்ல அவரு ஆபிஸ்க்கு, அப்ப நான் தான் போட்டோவ மாத்தி வச்சேன்கிற உண்மைய சொல்லிக்கிட்டு இருந்தேன்” என்றாள்.

“என்ன சொன்னாரு அதுக்கு?” என கேட்டாள் ரம்யா.

“அந்த நல்லவனுக்கு ஒர்க் ஷாப்புக்கு நான் வந்தேன்கிறதே தெரியல” என்று அலுத்துக் கொண்டாள் கலை.

“ஆஹா கொடுத்து வச்சவ டி நீ அக்மார்க் ராமனதான் கட்டிக்க போற போ” என்றாள் ரம்யா.

வெட்கத்தில் சிவந்த கலை,

“அந்த பேப்பர்ல என்ன எழுதியிருந்துதுனு என்கிட்டயே கேட்டாரு டி அந்த கவிதைக்கு சொந்தக்காரி நீதானு சொல்லி உன்ன கொஞ்ச நேரத்தில நானே கூப்பிட்டிருப்பேன். அதுக்குள்ள நீ வந்துட்ட மனுஷன்கிட்ட சரியா பேசவே இல்லை நான் அன்னைக்கு போ டி” என்றாள்

“அடிபாவி உன் ஆத்துக்காரர் வந்ததும் என்னையே டீல்-ல விட்டுட்டியா?” என்று செல்ல சண்டை ஆரம்பித்து முடிந்தது.

அப்பொழுதுதான் கலைக்கு நிச்சயதார்த்த இரவில் வந்து மிரட்டல் விட்ட அந்த பெண்ணின் நினைவு வந்தது.

“ரம்யா! சொல்ல மறந்துட்டேன் டி! நான் போட்டோவ மாத்தி வச்சேன்ல அந்த பொண்ணு நிச்சயத்தார்த்தம் அன்னைக்கு வந்திருந்தாள் டி” என்றாள் கலை.

“என்ன டி சொல்லுற? அந்த பொண்ணு எங்க இங்க?” என்று குழப்பத்தில் கேட்டாள் ரம்யா.

“அது தான் டி எனக்கும் புரியல எப்படி வந்திருப்பா?” என்றாள்.

“நீ கிருஷ்ணாவ கண்டுபிடிச்ச மாதிரி இவளோட வரலாறையும் எடுத்துருவோமா?” என்றாள் ரம்யா.

“அவ இன்னும சுதாரிக்காம இருப்பா? அதுக்கும் மேல, கிருஷ்ணா விஷயத்துல நம்ம காலேஜ் சீனியர் அசோக்கிட்ட தான் ஹெல்ப் கேட்டேன். வேலை முடிஞ்சதும் தான் அவன் அவனோட புத்திய காட்டினான். யாரையும் நம்ப முடியாது டி இனி” என்றாள் கலை.

“உனக்கு என்ன பைத்தியமா டி அவன் கிட்ட போய் எதுக்கு கேட்ட நீ?” என்று திட்டினாள் ரம்யா.

“ஏதோ அன்னைக்கு புத்தி கெட்டு போய் கேட்டுட்டேன். கால் பண்ணி பண்ணி டார்ச்சர் பண்ணான். கீதா முதல் வருஷம் ஜாயின்ட் பண்ணின அப்பவும் கால் பண்ணி அவள ஏதாவது பண்ணிருவேன்னு மிரட்டினான்” என்றாள் கலை.

“என்ன டி இவ்வளவு சாதாரணமா சொல்லுற” என்றாள் ரம்யா.

“இல்லை டி நான் அவன்கிட்டு தைரியமா முடிஞ்சத பார்த்துக்கோனு சொல்லிட்டேன். சுவர்ணா அத்தை வீட்டு மாமா கமிஷ்னர் தானே அவர்கிட்டயும் சொல்லி வச்சேன். யாருக்கும் இது தெரிய வேணாம். மனசுல வச்சிக்க” என்றாள் கலை.

“லைஃப்-அ சீரியஸ்-ஆ பார்க்கவே மாட்டியா டி? உன் இஷ்டத்துக்கு என்னென்னலாமோ செய்யுற? பிரச்சனை ஆகிடாம” என்று எச்சரித்தாள் ரம்யா.

“புரியுது டி நான் தான ஆரம்பிச்சேன் நானே முடிக்கிறேன்” என்றாள் கலை.

குழப்பங்களும் அச்சங்களும் கலையின் மனதில் குடி கொண்டிருந்தாலும், நாட்கள் அனைத்தும் இனிப்பாகவே நகர்ந்தது. போதும் போதும் என திகட்டாது, இன்னும் வேண்டும் வேண்டும் என தித்திக்கும் அழகிய காதலை தன் கிருஷ்ணன் மேல் இதமாய் அள்ளித் தெளித்து வந்தாள் கலை.

கொஞ்சம் கொஞ்சமாக கலையின் காதல் சாரலில் நனைந்து அவளுக்கான தனது காதலை மழைநீர் தொட்டியென சிறுக சிறுக நெஞ்சில் சேமித்தான் கிருஷ்ணா. பார்க்கும் ஒவ்வொன்றிலும் புது புது கோணம் காண்பவனுக்கு வடிவங்கள் எல்லாவற்றிலும் கலையின் கலையான முகம் மட்டுமே தெரிய ஆரம்பித்தது.

கிருஷ்ணா தன்னை மறந்தான் காதலில் கரைந்தான். அவள் முகம்தனை நெஞ்சில் நிறுத்தி முற்றிலும் அவளது நினைவில் நிறைத்திருந்தான். அவ்வப்போது அவனை உயிர்ப்பிக்கும் அவளது குறுஞ்செய்தி சிணுங்கல்களில் எல்லாம் தொலைந்துக்கொண்டே இருந்தான். அவளிடம் தன்னை தொலைத்துக் கொண்டே இருந்தான்.

“கிருஷ்ணா டேய் கிருஷ்ணா என்ன டா கனவு கண்டுகிட்டு இருக்கிற? எல்லாரும் மீட்டிங் ஹாலுக்கு வந்தாச்சு. உனக்கு தான் வெயிட்டிங் வா” என்றான் ரமேஷ்.

“சாரி டா சாரி டா இதோ வர்றேன்” என்று எழுந்து கலந்துரையாடல் அறையினை அடைந்தான் கிருஷ்ணா.

அவன் உள்ளே வரவும் வந்திருந்த அனைத்து உத்யோகஸ்தர்களும் எழுந்து நின்றனர்.

“யா.. சிட் டவுன் ப்ளீஸ்.. சாரி ஃபார் தி டிலே..” என்றான் கிருஷ்ணா.

“சார் முதலாவதா எங்களுடைய வாழ்த்துக்களை தெரிவிச்சிக்கிறோம். கல்யாணம் நிச்சயம் ஆகிடுச்சாமே” என்றார் குழுவில் ஒருவர்.

“ஆமாம் ஸ்ரீநாத் சார் ரொம்ப நன்றி இப்ப எதுக்காக இந்த மீட்டிங்னா நம்ம கம்பெனி இதுவரை எந்த ஒரு கம்பெனி கூடவும் பாண்டு சைன் பண்ணது இல்லை. தனித்துவமா நிக்கிறதுதான் நம்ம ஸ்பெஷலிட்டி இது எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம். ஆனால், ஒரு பியூட்டி பெஜியண்ட் கம்பெனி நம்மல ரொம்ப வருஷமா ரெக்வஸ்ட் பண்ணிட்டு இருந்தாங்க அவங்களோட சைன் பண்ண சொல்லி.. ஆனால், இப்ப அந்த ரெக்வஸ்ட் மிரட்டலா மாறியிருக்கு” என்றான் கிருஷ்ணா.

“என்ன சார் சொல்லுறீங்க” என்றார் அவரது மேனேஜர்.

“யஸ். அதனால இப்ப நான் என்ன முடிவு பண்ணிருக்கேன் அப்படீன்னா நாம இண்டிவிஜுவலா ஒரு பியூட்டி பெஜியண்ட் கம்பெனி ஆரம்பிக்க போறோம்” என்றான் கிருஷ்ணா.

“ஆனால் கிருஷ்ணா, அவங்களுக்கு போட்டியா தெரியாத ஒரு விஷயத்த நம்ம ஆரம்பிக்கிறது சரியா வருமா?” என்றான் ரமேஷ்.

“நாம தெரியாத விஷயத்தை செய்ய போறதில்லை கிருஷ்ணா இஸ் டிஃபரெண்ட் மறந்துட்டியா?” என்ற கிருஷ்ணா

“இந்த புது ஆர்கனைசேஷனுக்கு என் வருங்கால மனைவிதான் எம்.டி. சீக்கிரமா உங்க எல்லாருக்கும் நான் மற்ற டீட்டயில்ஸ் ஃபேக்ஸ் பண்ணிடுவேன். அதுக்கு அப்பறமா அடுத்த மீட்டிங் வச்சிக்கலாம் நன்றி” என்று கூறிவிட்டு தனது கேபினுக்கு வந்தான்.

“அடேய் ரசிக கர்த்தா இதுல என்ன டா வித்தியாசமா பண்ண போற..?” என்று கூவியவாறு ரமேஷ் உள்ளே வந்தான்.

“கிருஷ்ணாவையும் பெயிண்டிங்கையும் பிரிக்க முடியாதுனு உனக்கு தெரியாதா டா” என்றான் கிருஷ்ணா.

“பியூட்டி பெஜியண்ட்ல எங்க டா பெயிண்டிங் வந்தது?” என்றான் ரமேஷ்.

“நம்மளோட ஆர்கனைசேஷன் பெண்களை வச்சி அழகி போட்டி நடத்த போறது இல்லை. அழகா ரசனையா வித விதமா, முக்கியமாக கண்ணியமா பெண்கள் படம் பெயிண்டிங் பண்ணனும் கொஞ்சநாள்ல பெண் பெயிண்டிங்னாலே கிருஷ்ணாவோட கம்பெனினு பெயரு வரனும் அதுதான் என் டார்கெட்” என்றான் கிருஷ்ணா.

“சூப்பர் ஐடியா டா கலை சரினு சொல்லிடுச்சா?” என கேட்டான்.

“சொல்லிட்டாள் டா. ஆனால் அத்தை தான் கல்யாணத்துக்கு அப்புறம் தான்னு சொல்லிட்டாங்க. நானும் சரினு சொல்லிட்டேன்.” என்றான் கிருஷ்ணா.

“சரி டா அரேஞ்மெண்ட்ஸ் எல்லாம் பொறுமையா நல்லா பண்ணிடலாம் அதுக்குள்ள” என்றான் ரமேஷ்.

“சரி டா தீபக் கிட்ட ஒரு அக்ரிமெண்ட் எடுத்துக்கிட்டு வர சொல்லியிருந்தேன் வீட்டுல இருந்து கிளம்பிட்டானானு கேளு” என்றான் கிருஷ்ணா.

“இதோ கேட்கிறேன் டா” என ரமேஷ் தீபக்குக்கு அழைப்பு கொடுக்க, கிருஷ்ணா கலைக்கு கொடுத்தான்.

“கலை இன்னைக்கு அனௌன்ஸ் பண்ணிட்டேன் என் வருங்கால மனைவி தான் புது ஆர்கனைஷேசனுக்கு எம்.டினு” என்றான்.

“ம்ம்ம்ம்.. சரி சரி” என்றாள் கலை.

“என்ன யாரோ வெட்கப்படுற மாதிரி தெரியுது” என்றான் கிருஷ்ணா.

“அதெல்லாம் இல்லை” என்றாள் கலை.

“பின்ன என்னவாம்?” என்று கிருஷ்ணா மேலும் கேட்க,

“மதிஷா பேசினாள் கொஞ்சம் நேரம் முன்னாடி” என்றாள் கலை.

“ஆமா நானும் சொல்ல நினைச்சேன். ராகுல் தான் எக்சிக்யூடிவ் சைடுல இருக்க போறான் இந்த ஆர்கனைசேஷனுக்கு” என்றான் கிருஷ்ணா.

“எப்படி அது முடியும். அவரு தனியா வேற கம்பெனி ரன் பண்ணுறப்ப அவர எக்சிக்யூடிவ் சைடுல போட்டா நாம வேற கம்பெனியோட பாண்டு பண்ண மாதிரி தானே இதை வச்சிதான நிச்சயத்துக்கு முன்னாடியே சண்டை வந்துது?” என்றாள் கலை.

“ஆமாம் கலை. ஆனால் ராகுல் இப்ப மாறிட்டானே ராகுல் என்னோட பிரண்டுனு எல்லருக்குமே தெரியும் முதல் முதலா டிசைனிங்-அ வச்சி இவ்வளவு பெரிய கம்பெனிய சக்சஸ் பண்ண முடியும்னு அசோசியேஷன்ல பேசினது நாங்க தான், செஞ்சதும் நாங்க தான்..

அதனால நாங்க இணைந்து பண்ணுற விஷயம், மத்த கம்பெனியோட பாண்டு வச்சிக்கிற மாதிரி இல்லை. உண்மையா சொல்லனும்னா அவன் உன் விஷயத்துல இடைஞ்சலா வந்ததுனால தான் நான் அன்னைக்கு அப்படி பேசினேன்” என்றான் கிருஷ்ணா.

“சரி சரி எல்லாம் நல்லபடியா நடக்கட்டும்” என்றாள் கலை.

இவ்வாறு புது ஆர்கனைசேஷனுக்கான வேலைகள் செம்மையாக நடந்துக் கொண்டிருக்க கல்யாணத்துக்கான ஆறு மாதங்களும் வேகமாக ஓடி விட்டன.

இருவரது கண் இமைகள் பாதுகாத்த கல்யாண கனவது நிறைவேறும் நாள் வந்தது. இருவர் வீடும் திருவிழா கோலமாய் காட்சியளிக்க, மேளதாளம் கொட்ட மாப்பிள்ளை அழைப்பும் பெண் அழைப்பும் ஊரே வியக்கும் வண்ணம் நடந்தேறியது. மறுநாள் திருமண நிகழ்வினை எதிர்நோக்கி அனைவரும் காத்திருந்தனர்.

தம்பதிகளின் குறுஞ்செய்தி விளையாட்டு மட்டும் நின்ற பாடில்லை. கிருஷ்ணாவின் நண்பர்கள் கல்யாண வேலைகளில் மும்முரமாக இருந்ததால் கேலி செய்ய ஆளின்றி சுதந்திரமாக குறுஞ்செய்தியினை ரசித்துக் கொண்டிருந்தான். மறுபக்கம் கீதா கலையை போட்டு படுத்தி எடுத்துக்கொண்டிருந்தாள்.

“அக்கா விடிஞ்சா கல்யாணம் நாளைல இருந்து நீ ஆன்ட்டியா?” என்று கீதா வாயாடிக் கொண்டிருந்தாள்.

“வாய மூடிகிட்டு இரு டி கொஞ்ச நேரம்” என்றாள் கலை..

அப்போது உள்ளே வந்த ரம்யா, “அப்படியா அப்ப நீ கொஞ்ச நேரம் சும்மா இரு, நாங்க மாப்பிள்ளைக்கிட்ட பேசுறோம்” என கைபேசியை பிடுங்கி கிருஷ்ணனுக்கு கால் செய்தாள்.

கலை தடுக்க வந்து முடியாமல் சோர்ந்தாள். அந்த இரவின் நேரம் மணி 1 ஐ நெருங்கிக் கொண்டிருந்தது. அதனால் கீதா தூங்கிப்போக, ரம்யாவும் கலையும் கிருஷ்ணாவிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தனர்.

இன்னொரு முனையில் கிருஷ்ணாவின் அருகில் இருந்துக் கொண்டு ரமேஷ் ருத்ராவிடம் பேசிக் கொண்டிருந்தான்.

“டேய் ரெண்டு பேரும் என் கல்யாணம் முடியுற வர கொஞ்சம் அடக்கி வாசிங்க டா” என்றான் கிருஷ்ணா.

“உனக்கு க்ளிக் ஆகிட்டுல அந்த வேலையை மட்டும் பாரு நம்ம வீட்டோட அடுத்த ஃபங்ஷன் எங்க நிச்சயதார்த்தம் தான்“ என்று மகிழ்ந்துக் கொண்டிருந்தான் ரமேஷ்.

“என் தங்கச்சி உனக்கு நல்லா டிரெயினிங் கொடுத்திருக்கா போல அதான் இவ்வளவு வாய் அளக்குற நீ”என்றான் கிருஷ்ணா.

“கடைசி என்ன அம்போனு சிங்கிளா விட்டுட்டீங்களே டா” என கதறிக் கொண்டிருந்தான் தீபக்.

அதை காதில் வாங்காதவற்களாய் கேலிக்கைக்கு வேண்டுமென்றே தங்கள் வேலைகளில் மும்முரமானார்கள் கிருஷ்ணாவும் ரமேஷும்.

“அதான நாம ஒன்னு பேசிற கூடாதே” என்ற தீபக் “வா கத்ரீனா நாம கனவுல டூயட் ஆடுவோம்” என உறங்கி விட்டான்.

ரம்யா கிருஷ்ணாவிடம் தன் பேச்சை தொடர்ந்தாள். “எங்க கலை கிட்ட உங்களுக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் என்ன?” என்று கேட்டாள்.

அதற்கு கிருஷ்ணா “அவளது கையெழுத்துதான்.. அவளை காதலிக்கும் முன்னாடியே அவளோட கையெழுத்தை காதலிக்க ஆரம்பிச்சிட்டேன். முதல் முதல்-ல எனக்காக ஏதோ எழுதி பீச்-ல என் முகத்துல பறக்கவிட்டா பாருங்க. என்னை தாக்கினது காகிதம் மட்டும் இல்லை காதலும் தான் என் முதல் மனைவி கலை அல்ல காகிதத்துல இருந்த என்னவளோட கையெழுத்துதான்!” என்றான்.

இருவருக்கும் பெரும் அதிர்ச்சிக் கொடுத்த அந்த வாசகத்தைத் தாண்டி ஒன்றும் பேச முடியவில்லை அவர்களால். சரியான நேரத்தில் அம்மா உள்ளே வந்து “கொஞ்ச நேரம் தூங்கு டி” என்றார்.

அதனை சாக்கு வைத்து அலைபேசியை துண்டித்துவிட்டனர். ரம்யாவின் கையெழுத்தை தன் கையெழுத்தென எண்ணி தான் விரும்பியதாய் கிருஷ்ணா பேசிய காதல் வசனம் தந்த துயரிலிருந்து மீள முடியாமல் தவித்துக்கொண்டிருந்தாள் கலை. ரம்யா ஆறுதலாக கைகளைப் பற்றிக் கொண்டு,

“மனச போட்டு குழப்பிக்காத டி. அது உன்னுடையதுனு நினைச்சதால மட்டும் தான் அவரு இப்படி பேசிருக்காரு இல்லைனா பேசியிருக்க மாட்டாரு” என்றாள். கலை மனமோ ஏற்கவில்லை.

“அதான் தெளிவா சொல்லிட்டாரே! என்ன விட அந்த கையெழுத்து தான் பிடிக்கும், அதுதான் அவருக்கு முதல் முக்கியத்துவம்னு. அப்புறம் என்ன?” என்று கண்களை கசக்கினாள் கலை.

ரம்யா எவ்வளவு கூறியும் சமாதானம் ஆகாதவள் அழுகையில் விசும்பிக் கொண்டே தூங்கினாள். அனைவரும் தூங்கிக் கொண்டிருக்கும் அந்த லோ வாட்ஸ் பல்பின் வெளிச்சத்தில், கதவின் அருகில் ஏதோ உருவம் தென்பட பதட்டத்தோடு நோக்கினாள் கலை.

“கல்யாணம் ஆக போகிற சந்தோஷத்துல இருக்கியா? அந்த கையெழுத்து உன்னுடையது இல்லைனு தெரியவர நேரம் அவன் உன் கிருஷ்ணாவாக இருக்க மாட்டான்” என்ற வாசகம் கேட்டு வெடுக்கென எழுந்தாள்.

முகத்தில் பூத்த வியர்வை முத்துகளை துடைத்தவாறு கதவின் அருகில் சென்றாள் கலை. யாருமில்லை என்றதும் “ஹப்பாடா கனவா?!” என பெருமூச்சு விட்டாள்.

இருந்தும் மனதில் பாறாங்கல்லை வைத்தார் போல் மிகுந்த பாரத்தை உணர்ந்தாள். சிறிது தண்ணீர் குடித்துவிட்டு உறங்க சென்றாள். உறக்கம் வரவில்லை. அவள் நினைவு முழுவதும் காகிதம் குறித்து மட்டுமே.

நிஜமாகவே அவருக்கு அந்த கையெழுத்தில் தான் விருப்பமா? அது என்னுடையது இல்லை என்றால் என் மீது காதல் குறைந்திடுமா? என்ற ஏக்கமும் குழப்பமும் அவள் மனதைக் குத்திக் கீறிக் கொண்டிருந்தது.

இருந்தும், தன்னவன் மேல் தான் கொண்ட உண்மை காதலை பிரித்திடும் சக்தி இவ்வையகத்தில் எதற்கும் இல்லையென்ற நம்பிக்கை அதிகம் கொண்டிருந்தாள் கலை.

அவ்வாறே அன்றைய பொழுது விடிந்தது. துயில் எழுந்து, தன் மணவாழ்வுக்கு தயாராகத் தொடங்கினாள் கலை.

கலை கல்யாண மண்டபத்தில் அவளது அறையில் தனியாக அமர்ந்திருக்க, நிச்சயதார்த்தம் அன்று மிரட்டிச் சென்ற அதே பெண் உள்ளே வந்தாள்.

“என்ன நீ இங்க உட்கார்ந்திருக்க? இது என்னுடைய இடம் எழுந்திரு!” என்றாள்.

“நீ எப்படி இங்க?” என்று கோபத்துடன் எழுந்தாள் கலை.

“என்ன டி கோபம் உனக்கு?” என்று கலையின் சங்கினை பிடித்தாள் அந்த பெண். தொண்டைக் குழியில் சுவாசம் அடைக்க மூச்சு திணறி போனாள் கலை. கஷ்டப்பட்டு அவள் கைப்பிடியில் இருந்து தன் கழுத்தை விடுவித்துக் கொண்ட கலை,

“உனக்கு என்ன பைத்தியமா?” என்றாள்.

“ஆமா டி ஆமா எனக்கு பைத்தியம் தான். என்ன பத்தி என்ன டி தெரியும் உனக்கு?” என்றாள் அவள். பேச முடியாமல் தொண்டை வலியால் துடித்துக் கொண்டிருந்த கலைக்கு அவள் பேசுவதை கேட்பதை தவிர வேறு வழி கிடைக்கவில்லை. அந்த பெண் தன் பேச்சை தொடர்ந்தாள்.

“கன்னியாகுமரியின் அருவிக்கரையில பெரிய ஜமீன் வம்சம் நாங்க. எனக்கும் இந்த காலத்துக்கு ஏத்த மாதிரி மார்டனா இருக்கனும்னு ஆசை. ஆனால் எங்க குடும்பத்தோட பண்பாடு மாற கூடாதுனு குடும்பத்துல ஒரே ஒரு பெண் குழந்தையா பிறந்த என்ன பொத்தி பொத்தி வளர்த்தாங்க எங்க வீட்டுல

ஆனால் கோழையா வளர்க்கல. வில், வாள், சிலம்பம், ஓவியம், சித்தாந்தம்னு எல்லாமே எனக்கு அத்துபடி. எங்க சாம்ராஜியத்துல ஆண் வர்க்கமே என் கிட்ட போட்டி போட பயப்படுவாங்க. நான் நினைச்சத அடையாம இருந்ததே இல்லை. தோல்வினு ஒன்னு என் அகராதியிலேயே இல்லை

எந்த கலங்கமும் இல்லாம வளர்ந்த என் மனசுல கல்யாண ஆசையை வளர்த்து கிருஷ்ணாவோட போட்டோவ காட்டினாங்க. இந்த காலத்துக்கு ஏற்ற வாழ்க்கை வாழ ஆசைப்பட்ட எனக்கு என் குடும்பம் கொடுத்த ஒரே ஒரு பரிசு தான் கிருஷ்ணா.

ஒவ்வொரு ஆண் மகனையும் யுத்த களத்துல எதிரியா மட்டுமே பார்த்துட்டு வந்த நான், முதல் முறையா ஒருத்தர என் கணவனா பார்த்தேன் அது கிருஷ்ணா

என்ன பெண் பார்க்க வர்ற அன்னைக்கு எவ்வளவு சந்தோஷமா தயாராகிட்டு இருந்தேன் தெரியுமா? நீ இடையில புகுந்து எல்லாத்தையும் துவம்சம் பண்ணிட்ட. நீ செஞ்ச வேலையால அவரு என்ன பார்க்க கூட இல்லாம கிளம்பிட்டாரு.

இந்த ஏமாற்றத்த தாங்கிக்க முடியாத எனக்கு கொஞ்ச நாள்ல பைத்தியம் பிடிச்சி, என் வீட்டுல உள்ள எல்லாரையும் என் கையாலேயே கொலை பண்ணீட்டு உட்கார்ந்திருந்தேன்.

ஆரம்பத்துலையே என்னோட விருப்பப்படி என்ன வாழ விட்டுருந்தா என் நிலைமை இன்னைக்கு இப்படி ஆகிருக்குமா? அதான் அவங்கள கொன்னுட்டேன்.

நீ இடையில வராம இருந்திருந்தால் என் நிலைமை இப்படி ஆகிருக்காதுல அதனால உன்னையும் கொல்லாம விட மாட்டேன்” என கனல் தெரிக்கும் பார்வையுடன் கர்ஜித்தாள் அவள்.

“பெண் பார்த்து பிடிச்சிருக்கா பிடிக்கலையானு சொல்லுறதுக்கு முன்னாடியே எப்படி நீ கணவனா நினைப்ப? அது உன் தப்பு” என்றாள் கலை.

“என்ன டி தப்பு? நீ செஞ்சத விட நான் செஞ்சது தப்பா? தப்பா டி?” என தன் இடுப்பில் சொருகியிருந்த கத்தியை எடுத்து கலையை குத்த வேகமாய் முன்னுக்கு வந்தவளை பிடித்து இழுத்து கீழே தள்ளினான் ராகுல். விழுந்த வேகத்தில் மயங்கிவிட்டாள் அந்த பெண்.

பயத்தில் மூச்சு முட்ட சுவருடன் ஒட்டிக் கொண்டு நின்றிருந்த கலை, தன் தலை, கை, கால்களில் எல்லாம் கட்டுடன் வந்து நின்ற ராகுலை பார்த்து

“ரா.. ரா.. ராகுல்” என்றாள்.

“என்ன மன்னிச்சிடு கலை.. நீ எனக்கு கிடைக்கலங்கற ஆதங்கத்துல மிருகமா மாறி, நான் தான் கிருஷ்ணாவுக்கு பார்த்து வச்சிருந்த உண்மையான பொண்ண கண்டுபிடிச்சு எல்லா உண்மையையும் சொல்லி உன்ன அவன்கிட்ட இருந்து பிரிச்சி நான் கல்யாணம் பண்ணிக்க நினைச்சேன்.ஆஸ்திரேலியாவுல செட்டில்னு எல்லார்க்கிட்டயும் பொய் சொல்லி நம்ப வச்சி, நான் இவள தேடுற வேலையில தான் இருந்தேன். ஆனால், என் தங்கச்சி என் மேல வச்சிருந்த பாசமும், உன் தங்கச்சி என் மேல வச்சிருந்த காதலும் என்னை மனுஷனா மாத்திருச்சு கலை.. என்ன மன்னிச்சிடு” என்று அழுது கதறினான்.

“என்ன சொல்லுற ராகுல்” என தலையை பிடித்துக் கொண்டு கலை நிற்க, இவ்விஷயத்தை முன்னரே அறிந்திருந்த கலையின் பெற்றோரும், மதிஷாவும் சத்தம் கேட்டு அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் பின்னே ஓடி வந்த கீதாவும் ருத்ராவும் மயங்கிக் கிடந்த அந்த பெண்ணை தூக்கிக் கொண்டு கிருஷ்ணாவின் அப்பா உதவியுடன் மனநல மருத்துவமனைக்கு செல்ல, மதிஷா கலையின் அருகில் சென்று அவளை தன் மார்போடு அணைத்துக் கொண்டாள்.

“என்ன அசிமா நடக்குது இங்க?” என்று அழுதுக் கொண்டிருந்தாள் கலை.

“முன்னாடியே எங்களுக்கு இந்த விஷயம் தெரியும் கலை. ஒன்னா வாழப் போற நீயும் கிருஷ்ணாவும் இந்த விஷயத்தை தெரிஞ்சிக்க வேணாம்னு நினைச்சோம் அதுக்குள்ள இப்படி ஆகிட்டு” என்று நடந்தவற்றை எல்லாம் கலைக்கு கூறினாள் மதிஷா.

அப்போது மனநல மருத்துவமணையில் இருந்து திரும்பிய கிருஷ்ணாவின் அப்பா, ருத்ரா மற்றும் கீதா அறைக்குள் வந்தனர்.

“அக்கா” என அழுதுக் கொண்டே அங்கு வந்த கீதா,

“கொஞ்சம் நாள் முன்னாடி காலேஜ் வாசல்ல ஒரு ஆக்சிடெண்ட் யாருனு போய் பார்த்தா அது ராகுல். ஆஸ்திரேலியா போனவரு இங்க எங்கேனு பார்த்து ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனேன். நம்ம அப்பா மூலமா மதிஷா அக்காவுக்கு தெரிய படுத்தினேன்

ராகுலுக்கு ஆக்சிடண்ட்னால ஆன அடி மட்டும் இல்லை.நீ கிடைக்காத துக்கத்துல குடிச்சி குடிச்சி கிட்னியே செயல் இழந்திடுச்சாம். உடனேயே ஆப்ரேஷன் பண்ணனும்னு சொல்லிட்டாங்க.

நம்ம வீட்டுலையும் கிருஷ்ணா மாமா வீட்டுலையும் நான் காதலிக்கிற விஷயத்த சொல்லிட்டு, எல்லார் சம்மதத்தோட தான் நான் என் கிட்னியை கொடுத்தேன். உன் கிட்ட பிராஜட் விஷயமா வெளியூர் போனதா சொன்னது பொய் அக்கா ஆப்ரேஷனுக்கு தான் போயிருந்தேன்” என்றாள்.

அனைத்து உண்மைகளையும் மொத்தமாய் கேட்ட அதிர்ச்சியில் கலை மயங்கி விழுந்தாள்.

“அய்யோ கடவுளே என் குழந்தைக்கு கல்யாணம் அன்னைக்கா இப்படி எல்லாம் நடக்கனும்?” என கூச்சலிட்டார் கலையின் அம்மா.

மயங்கிய கலையினை தண்ணீர் தெளித்து எழுப்பினர். அதிகாலை வேளை என்பதால் மண்டபத்தில் அவ்வளவு கூட்டம் ஏதும் இல்லை. அதை கூறிய கிருஷ்ணாவின் அப்பா

“ஆட்கள் எல்லாரும் வருவதற்கு முன்னால எல்லாரும் எழுந்து ஃரெஷ் ஆகுங்க. கிருஷ்ணாவுக்கு எதுவும் தெரிய வேண்டாம்.ஏதோ நம்ம குடும்பத்துக்கு விழுந்த திருஷ்டி கழிஞ்சிட்டதா நினைச்சிக்கலாம்” என்றார்.

“என்னங்க பேசிக்கிட்டு இருக்கீங்க இவ்வளவு நடந்துருக்கு” என கிருஷ்ணாவின் அம்மா கத்தத்தொடங்க,

“சிவகாமி அமைதியா இரு.. இது நம்ம பிள்ளைங்களோட வாழ்க்கை.. உன்னோட கோவத்தால அத அழிச்சிடாத.. இந்த முறையாவது என் பேச்ச கேளு.. இடியே விழுந்தாலும் கலை தான் என் மருமக” என்றார் கிருஷ்ணாவின் அப்பா.

அந்த இடமே மீளா பிணியின் பிடியில் சிக்கி இருக்க, கிருஷ்ணாவின் அப்பா பேசிய வார்த்தைகளை கேட்ட பின், இன்னும் நமக்கு நேரம் இருக்கிறது. நாம் மனது வைத்தால் இன்று கல்யாணம் நல்லபடியாக நடக்கும் என்பதை அனைவரும் சற்று உணர்ந்தனர்.

அனைவரும் எடுத்த முடிவுபடி கிருஷ்ணாவுக்கு எதுவும் தெரிய படுத்தாமலேயே கல்யாணம் நடந்தது.

தேவதூதர்கள் ஆசிவழங்க, வேதங்கள் யாவும் காதுகளில் முழங்க, தன் அன்புக்குரியவளின் கழுத்தில் மங்களகயிறினை கட்டினான் கிருஷ்ணா.

புது தம்பதிகளாக தங்களுக்கான புது வீட்டிற்குள் கால் பதித்தனர் கலையும் கிருஷ்ணாவும்.

“பசங்களா இங்க திரும்பி நில்லுங்க ஆரத்தி எடுக்கனும்” என்றார் கிருஷ்ணாவின் அம்மா.

வேகமாக உள்ளே சென்று ஆரத்தி கரைத்து எடுத்து வந்த கீதா, தன் அக்கா – மாமாவுக்கு ஆரத்தி எடுத்தாள். கிருஷ்ணா ஆரத்தி தட்டில் இரண்டாயிரம் ரூபாய் தாளை வைத்தான்.

“மாம்ஸ் என்ன ஒத்த தாள வைக்குறீங்க?” என்றாள் கீதா.

“என்னது ஒத்த நோட்டா? எம்மா கீதா இரண்டாயிரம் ரூபாய் மா!” என்றான் தீபக்.

“அதெல்லாம் தெரியாது கட்டா வைங்க” என்றாள் கீதா.

“சரி கீதா, டேய் ரமேஷ் அந்த பத்து ரூபாய் கட்டு எடு” என்று தட்டில் வைத்த இரண்டாயிரம் ரூபாயை திருப்பி எடுத்தான் கிருஷ்ணா.

“என்னது பத்து ரூபாய் கட்டா?” என்ற கீதா கிருஷ்ணா கையில் எடுத்த இரண்டாயிரம் ரூபாயை பிடுங்கிக் கொண்டாள்.

“ஹாஹா எப்படி சரண்டர் ஆக்கிட்டோமா?” என்று சிரித்தான் ரமேஷ்.

“சரி சரி கல்யாண மாப்பிள்ளையா போயிட்டாரே! அதனால விடுறேன் உள்ளே போங்க” என்று ஆரத்தியை கொட்டச் சென்றாள் கீதா.

மணமக்களை உள்ளே அழைத்து வந்ததும் பால், பழம் கொடுத்தாள் ருத்ரா.

“அடுத்த ஆடு நீதான் டா” என கிருஷ்ணா ரமேஷை பார்த்து கூறினான்.

“இன்னுமா அவன் பலியாகாம இருப்பான் ஹாஹா” என்றான் தீபக்.

மணமக்களுக்கு பால் கொடுத்த டம்ளரை தூக்கி தீபக்கின் மண்டையில் எறிந்தாள் ருத்ரா.

“அம்மாடி நான் சொன்னது சரினு காட்டிட்டா பார்த்தீங்க்களா?” என்று வலியின் ராகத்துடன் பாடினான் தீபக்.

“இல்லை டா நீ தப்பா புரிஞ்சிருக்க என்ன தங்க தட்டுல வச்சி தாங்குவா என் செல்லம் அடி உதை எல்லாம் மத்தவங்களுக்கு தான். என் மேல தூசி விழுந்தா கூட ருத் குட்டியால தாங்க முடியாது” என்று கவச குண்டல வார்த்தைகளால் தன்னை காப்பாற்றிக் கொண்டான் ரமேஷ்.

“நடத்துங்க டா நடத்துங்க” என்றான் தீபக்.

“சரி பா மாலையை கழட்டிடுங்க கொஞ்சம் சவுகரியமா காத்தாடிக்கிட்ட உட்காருங்க” என்றார் கலையின் அம்மா.

தம்பதிகள் வாழப் போகும் அந்த வீட்டில் சில சாமான்களை ஒதுக்கி கொடுத்துவிட்டு கலை வீட்டார் ஊருக்கு கிளம்பினர்.

“கலை-ய பத்திரமா பார்த்துக்கோங்க தம்பி” என்று கலையின் அப்பா கூறி முடிப்பதற்குள்ளாக தன் அப்பாவை கட்டி அணைத்து அழத் தொடங்கினாள் கலை.

அவளது அழுகையை கண்ட கலையின் அம்மாவுக்கும் கீதாவுக்கும் தங்கள் அழுகையை அடக்க இயலவில்லை.

“சந்தோஷமா இரு டா கண்ணா! அழாத என் அம்மா-ல” என்று அவளை தேத்தினார்.

அவருக்கு பின் அம்மா தன் பாசத்தை கலை மேல் பொழிய கீதாவை பார்த்து கலை,

“இனி உன் சாக்லேட்-அ திருட நான் அங்க இருக்க மாட்டேன்-ல கீதா?” என்றாள்.

கூப்பாடு போட்டு அழ தொடங்கிவிட்டாள் கீதா. அக்கா – தங்கை இருவரும் ஒருவருக்கொருவர் கட்டிக் கொண்டு அழுத அந்த காட்சி அங்கிருந்த அனைவரது கண்களையும் நீரூற்றாய் மாற்றியது.

இனி இந்த பாசப் போராட்டத்தை எப்படி கையாள போகிறோம் என்ற கேள்வியுடனேயே அனைவரும் அங்கிருந்து விடைப்பெற்றனர்.

அனைவரும் கன்னியாகுமரி செல்லும் பேருந்தில் ஏறி அமர கீதாவும் ராகுலும் ஒன்றாய் அமர்ந்தனர். ராகுலுடன் இருந்தால் கீதாவின் மனம் சற்று லேசாகும் என அவர்களை தடுக்கவில்லை அவளது பெற்றோர்.

ராகுல் தன் தோள்களில் கீதாவை சாய்த்துக் கொள்ள தன் நெஞ்சின் பாரத்தை இறக்கிக் கொண்டிருந்தாள் கீதா.

“கீதா பாவம் டா” என வீட்டில் இருந்த ருத்ரா ரமேஷிடம் கூறினாள்.

“ஆமா ருத்ரா. எப்பவும் சேட்டையும் விளையாட்டாவுமே பார்த்த கீதாவ இப்படி பார்த்தது மனசுக்கு கஷ்டமாதான் இருக்கு” என்றான் ரமேஷ்.

“நமக்கு கல்யாணம் முடியுறப்பவும் இப்படிதான் எனக்கு கஷ்டமா இருக்குமா?” என குழந்தை போல கேட்டாள் ருத்ரா.

“அட லூசு நான் எப்பவும் கிருஷ்ணா கூட தான் இருக்கேன். பின்ன ஏன் உனக்கு இந்த கவலை அந்த வலியெல்லாம் நான் உனக்கு தரமாட்டேன்” என்ற ரமேஷ், ருத்ரா கண்களில் துளிர்த்த கண்ணீரை துடைத்துவிட்டு அவள் நெற்றியில் இதழ் பதித்தான்.

“இன்னைக்காவது தோனுச்சே” என்றாள் ருத்ரா.

“என்ன?” என ஒன்றும் புரியாதவனாய் கேட்டான் ரமேஷ். தன் விழிகளை உருட்டி ஒரு பார்வை பார்த்தாள் ருத்ரா.

“ஹாஹா வேணும்னா கேட்க வேண்டிதான டி” என்றவன் மீண்டும் அவள் நெற்றியில் தன் முத்த சுட்டை பரப்பினான்.

இவர்கள் இருவரும் காதல் உலா வந்து கொண்டிருக்க, கிருஷ்ணா கலையிடம்

“கலை நான் முன்னாடியே சொன்ன மாதிரி நாளைக்கு சென்னை போறேன் புது அர்கனைசேஷன் விஷயமா” என்றான்.

திருமணமான முதல் நாள் மாலை கிருஷ்ணாவின் குடும்பத்தார் கிருஷ்ணா – கலை தம்பதிகளின் தனி வீட்டில் இருந்து, அவர்களது வீட்டிற்கு செல்ல, இரண்டாம் நாள் கிருஷ்ணன் புதிய பியூட்டி பெஜியெண்ட் ஆர்கனைசேஷன் விஷயமாக வெளியூர் சென்றான்.

ஒரு மாதத்தில் தான் வீடு திரும்புவதாகவும், அதுவரை பத்திரமாக இருக்க வேண்டியும் கலையிடம் கூறினான் கிருஷ்ணா.

ஏக்கம் கலந்த அன்புடன் கண்களால் காதல் மொழிந்து அவனை வழியனுப்பிவிட்டு வீட்டிற்குள் வந்த கலை, தனிமையாய் இருக்கும் எண்ணத்தை போக்குவதற்கு வீட்டை ஒதுங்கவைக்கும் பணியில் ஈடுபட்டாள்.

கிருஷ்ணாவுடைய பெட்டியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பற்பல புத்தகத்தை பார்த்தாள். அவளது அச்சமும் குழப்பமும் கூடியது. வில்லில் இருந்து புறப்பட்ட நாணாக விரைந்துச் சென்று தன் பெட்டிகளில் அந்த காகிதத்தை தேடலானாள். கடற்கரையில் அவன் மீது அவள் வீசிய அதே காகிதத்தை தான். பேனா மையினால் எழுதப்பட்ட வார்த்தைகளை தன் கண்ணீர் மையினால் அழித்துக்கொண்டிருந்தாள்.

அவனிடம் இது என் கையெழுத்து என விளையாட்டாய் கூறிய வார்த்தை இன்று வினையாகி நிற்குமென அறிந்திடாது இருந்த கலை தன்னிலை அறியாது அதனை கிழித்தெறிந்தாள்.

அழுது அழுது தன் ஸ்வரங்கள் அடங்கிட அமைதியாய் படுத்திருந்தவளுக்கு திடீரென தோன்றியது ஒரு யோசனை. அவர் கூறிய வார்த்தையினை தான் நிஜமாக்கினால் என்ன? என்று எண்ணினாள்.

விரைந்து ஓடி, தான் கிழித்திறிந்த காகிதத்திற்கு மீண்டும் உருவம் அளித்தாள். அதே போல எழுதி எழுதி பழகினாள்.

அவ்வப்போது ரம்யாவுக்கு போன் செய்து வாக்கியங்கள் சில எழுதி புகைப்படம் எடுத்து அனுப்ப சொல்லி விடாமுயற்சியோடு ஈடுபட்டாள் தன் காதலுக்காக.

திருமணத்திற்கு முன் வந்து மிரட்டிய அதே கைபேசி அழைப்பு மீண்டும் வந்தது.

“என்ன கல்யாணம் முடிஞ்சி சந்தோஷமா இருக்க போல..?” என்றது அந்த குரல்.

“டேய்.. இனி உன் மிரட்டல் எல்லாம் செல்லாது. கிருஷ்ணாவோட கைபேசி அழைப்பை டிராக் பண்ணி தந்ததை வச்சி மிரட்டுறியா? நான் இப்ப அவரோட மனைவி எல்லா உண்மையும் அவருக்கு தெரியும் போய் வேற வேலை இருந்தா பாரு” என்றவள் அழைப்பை துண்டித்தாள்.

விடை தெரியா வினாக்களுக்கு விடை தேடி அழைந்துக் கொண்டிருந்த கலை, தற்போது தானே விடையாக மாறத் தொடங்கினாள். தன்னவனின் ரசனைக்காக காதல் வேள்வி சமுத்திரத்தில் விருப்பமாய் மூழ்கினாள். கலையின் எல்லையில்லா காதல் அவளுக்கு வெற்றிக் கனியினை ஈன்று தந்தது. தான் நினைத்ததை விட அதிக எழிலுடன் கையெழுத்து மாறியது.

அந்த கையெழுத்துடன் அவள் அவனது மனைவியாய் ஒரு காதல் கவிதை எழுதினாள். ஒரு ஓவியம் ஒன்றும் புனைந்தாள். அதை வாட்ஸ் ஆப்-ல் அவனுக்கு அனுப்பி வைத்தாள்.

மகிழ்ச்சியின் உச்சம் கண்ட அவன் நல்லதோர் செய்தியை கலைக்கு கூறினான்.

“நம்ம ஆர்கனைஷேன் இன்னாகுரேஷன் பிராஜெக்ட் ஓகே ஆகிடுச்சு கலை. பெண் மெண்டாரும் கிடைச்சாச்சு அவங்க தான் என்னோட பெர்சனல் அசிஸ்டண்டா வேலை செய்ய போறாங்க.அவங்களுக்கு நான் கொடுக்க போற முதல் வேலை நீ இப்ப அனுப்பிருக்கியே அந்த கவிதைய பெயிண்டிங்ல போடுறதுதான்” என்றான்.

இதனை கேட்ட கலையும் மகிழ்ச்சியில் திளைத்திருக்க, கிருஷ்ணா வீடு திரும்பும் நாளும் வந்தது. அவளுக்கான இன்ப அதிர்ச்சியினை தயார் செய்ய கலையின் பிறந்த வீட்டிற்கு முதலில் சென்றான் கிருஷ்ணன்.

அவளது சிறு வயது ஆ- னா முதல் தற்சமய ஃ வரை அனைத்தையும் வரிசையாக ஒரு படைப்பாகக் கொண்டு பரிசு செய்ய நினைத்தான். அப்பொழுது அவளது உண்மை கையெழுத்தைக் கண்டு குழப்பம் கொண்டவன் ரம்யாவிடம் நடந்ததை வினவினான். இன்று வரை நடந்த எல்லாவற்றையும் வேறு வழியின்றி ரம்யா கூறினாள்.

அதனை கேட்ட கிருஷ்ணா, கலை பயந்ததற்கு மாறாக ‘ தனக்காக இவ்வளவு பிணியினை தாங்கிக் கொண்டாளா? ‘ என எண்ணினான். கலை மேல் இருந்த காதல் பன்மடங்கு பெருகி மரியாதைக்குறிய மங்கையாக அவன் மனதில் வளம்வந்தாள் கலை.

அவளது கல்லூரி நோட்டு ஒன்றை எடுத்து அவள் கையெழுத்தினை தொழிநுட்ப உதவியுடன் அதிசயிக்கத் தக்க கையேடாக மாற்றி வியக்கும் பரிசாக்கினான் கிருஷ்ணா.

கலையை பார்க்க தன் வீட்டிற்கு சென்றான் அவன். நீண்ட நாட்களுக்கு பின் இணைந்துவிட்ட ஆனந்த பூரிப்பில் இருவரும் இன்பம் கொண்டாடும் அந்த அழகிய வேளையில், அவளுக்கான பரிசினை கிருஷ்ணா அவளது கைகளில் கொடுத்தான். தன் பழைய நோட்டின் புது வடிவம் கண்டு சிலிர்த்துப்போனாள்; அவன் விழி வீசும் காதல் மழையில் மெய் சிலிர்த்து போனாள்.

“என்னுடைய இந்த கையெழுத்து உங்களுக்கு பிடிச்சிருக்கா? நிஜமா சொல்லுங்க” என்றாள்.

“இது கையெழுத்தா? என் தேவதை இட்ட கோலம்” என்றான்.

தமிழின் அழகான எழுத்துக்களை ரசிக்கும் தமிழன் தான் நான். கையெழுத்தை நிராகரித்து துணைவியை கையாளாகாமல் செய்ய என் தமிழ் பண்பாடு எனக்கு சொல்லித்தரவில்லை” என்று கூறி கலையை உச்சிக்குளிரச் செய்தான்.

“நம் காதலை தாண்டி இது நம்மை பிரித்திடும்னு நினைச்சியா கலை?” என்று அவளை அணைத்துக்கொண்டான்.

ஏழு பிறவியின் இன்பத்தை அவனது ஒற்றை சொல்லில் கண்டு உள்ளம் மகிழ்ந்துக்கொண்டாள். ஆனந்தத்தின் உச்சியினை கண்டு வந்த கிருஷ்ணா உற்சாகத்தில் கலையை தூக்கிக்கொண்டு சுற்றினான்.

அன்பை மட்டுமே எதிர்ப்பார்த்த அவனுக்காக கையெழுத்தை மாற்ற எண்ணி துயர் பல ஏற்ற பேதை அவள்..

அவன் வருகைக்காக கவி வரைந்து காத்திருந்த அவளுக்கு, அவனது துணையே இன்பமென அறியாது பரிசுக்காக திண்டாடிய காதல் பித்தன் அவன்

இறுதியில் அவனும் தோற்றான் அவளும் தோற்றாள். ஆனால் அவர்களது காதல் வென்றுவிட்டது.

இன்ப வெள்ளத்தில் நிறைந்தவர்கள் தங்கள் அறையை நோக்கி செல்ல எத்தனிக்கையில் வீட்டு வாசலில் இருந்து அழைப்பு மணி கேட்டது.

“சொல்ல மறந்துட்டேன் பாரு நான் சொன்னேன் –ல நம்ம புது ஆர்கனைசேஷனோட மெண்டார். அதான் என்னோட புது பி.ஏ. அவங்கதான் வந்திருப்பாங்க. ஊருல இருந்து என் கூட தான் வந்தாங்க. ரொம்ப நாள் கழிச்சி பார்க்கிறோம் நாம அவங்களும் என்னோட வந்து நின்னா உனக்கு கொஞ்சம் ஃபீலிங் எக்ஸ்ப்ரெஸ் பண்ண கஷ்டமா இருக்கும்னு என்ன முன்ன அனுப்பிட்டு பின்னாடி வர்றேன்னு சொல்லிட்டாங்க சோ நைஸ்-ல? நீ போய் அவங்கள ரிசீவ் பண்ணு நான் இதோ முகம் கழுவிட்டு வர்றேன்” என்றான் கிருஷ்ணா.

“ரியலி சோ ஸ்வீட்.. யாரு அவங்க நான் போய் பார்க்கிறேன் நீங்க ஃப்ரெஷ் ஆகிட்டு வாங்க” என்றவள் வாசலுக்கு வந்து கதவை திறந்தாள்.

கிருஷ்ணா கூறியது போல அவனது பி.ஏ. தான் அங்கு நின்றுக் கொண்டிருந்தார். கல்யாணத்தன்று வந்து பிரச்சனை செய்த அதே பெண், கிருஷ்ணாவிற்கு பார்த்த உண்மையான மணப்பெண். அதிர்ச்சியுற்றாள் கலை.

“ஹலோ கலை.. அயம் கயல் விழி ஃப்ரம் அருவி கறை” என்று புன்னகைத்தாள் அவள்.

அவள் கையில் வைத்திருந்த பெயிண்டிங்-ஐ பார்த்தாள் கலை. கிருஷ்ணாவுக்கு கலை எழுதிய கவிதையையை அச்சிட்டு, தன்னுடைய புகைப்படத்தை தீட்டியிருந்தாள் கயல் விழி ‘உன் மனைவியாகிய நான்’ என்ற தலைப்போடு.

கர்மா இஸ் அ பூமரங்..!

( முற்றும் )