Un Vizhigalil Vizhuntha Naatkalil – 10

 “ இதயா, இதை சொல்ல உனக்கு இத்தனை நாள் தேவைப் பட்டுதா? இப்போ கூட நான் சொல்லலனா நீயா சொல்லிருக்க மாட்டல்ல. உன்கிட்ட நான் தோத்த்துட்டேன். உன்ன என்கிட்ட உ மனச திறந்து சொல்ல வைக்கனும்னு நெனச்சேன். ஆனா முடியல.” அவள் முகத்தை கையில் ஏந்திய படியே சொல்ல,

“ இல்ல ஜீவா நீங்க தோக்கல, எப்போ உங்கள முதல் முறையா பாத்தேனோ அப்போவே நான் நானா இல்ல. உங்கள சுத்தி தான் என் மனசு இருந்துச்சு . ஆனா சொல்லத் தான் தயக்கம் , பயம் எல்லாமே!” தன் நிலையை நினைத்து வருந்த அவள் முகம் சுருங்கியது.

அதை உணர்ந்தவன், “ ஹே இதயா ! என்ன ஆச்சு ? எதுக்கு பயம் ? “ சுருங்கிய அவள் முகத்தை கண்டவன் பததைத்துக் கேட்க,

“ எங்க வீட்ட நினச்சா தான் பயமே! வெற்றி அண்ணா ரொம்ப நல்லவங்க தான், ஆனா குடும்பம்னு வந்துட்டா எப்படி மாருவாருனு தெரியல, அதே மாதிரி அம்மா அதுக்கு மேல, அவங்க அண்ணன் தம்பிக்கு பயந்தே எங்கள வளத்தாங்க, இந்த மாதிரி காதல் கல்யாணம் எல்லாம் அவங்க ஏத்துக்க மாட்டாங்க. அது தான் ஆரம்பத்துல இருந்தே என் மனசுல இருந்த தயக்கம்.” கண்கள் லேசாக கலங்க,

அவளை அழைத்துச் சென்று அந்த மரத்தடியில் அமர வைத்தான். தானும் அவள் அருகில் அமர்ந்து மரத்தில் சாய்ந்தவன் ,

“ இங்க பாரு டா, எதுவுமே கஷ்டப் படாம கிடைக்காது, அவங்க எல்லாம் அந்தக் காலத்து ஆளுங்க, அதுனால சாமானியமா ஒதுக்கமாட்டாங்க, எங்க அப்பா மட்டும் சொன்னதும் கூப்பிட்டு வெச்சு கல்யாணம் பண்ணிடுவாரா!! நம்ம காதல நாம தான் காப்பாத்திக்கணும். உங்க அண்ணன் கூடவா சம்மதிக்க மாட்டான்?” அவளைக் கேள்வியாய் நோக்க,

“ ஜீவா, எங்க அண்ணன் ரொம்ப பாவம், சின்ன வயசுல எங்க அப்பா இறந்தப்ப எனக்கு எதுவுமே தெரியாது. அவன் தான் என்ன ரொம்ப பொறுப்பா பாத்துப்பான். எங்க மாமா எல்லாம் வந்து எங்கள சரியா வளக்க முடியாதுன்னு சொன்னப்ப, தைரியமா அவங்க முன்னாடி வாழ்ந்து காட்டனும்னு எங்க அம்மாகிட்ட சொல்லுவான். அவனோட சின்ன சின்ன ஆசையைக் கூட கட்டுப் படுத்திப்பான்.

அவன் ப்ரெண்ட்ஸ் எல்லாம் சினிமாக்கு போனா கூட, இவன் போக மாட்டான். வெளில எங்கயாவது எங்க மாமா பாத்துட்டா, பையன் தறிகெட்டுப் போய்ட்டான் , நீ வளத்த லட்ச்சணம் இதுதானான்னு அம்மாவ பேசுவாங்கன்னு போகமாட்டான். என்ன மட்டும் செல்லம்மா பாத்துப்பான். அவனுக்கு என் மேல அவ்ளோ பாசம்.

முதல்ல உங்கள பாத்தப்ப நான் வெறும் அட்ராக்ஷன்னு நினச்சேன், போகப் போக உங்கள நினைக்காம என்னால இருக்க முடியல, என் குடும்பத்தை நெனச்சு என்னைக் கட்டுப் படுத்திக்க ரொம்ப கஷ்டப் பட்டேன் , அதுனால தான் சொல்லல. எனக்கு இப்போ கூட பயமா தான் இருக்கு ஜீவா.” அருகில் இருந்தவன் தோளில் ஆதரவாய் சாய்ந்து கொண்டாள்.

அவள் கூறிய அனைத்தையும் பொறுமையாகக் கேட்டவன்,

“ உங்க அண்ணன் நிஜமாவே கிரேட் தான் இதயா. உங்க குடும்பத்துக்கு எந்தக் கெட்ட பேரும் வராம, அதே சமயம் என் இதயாவ என்கிட்டேயே வெச்சுக்கறதுக்கும் நான் பொறுப்பு, நீ உங்க அண்ணனுக்குச் செல்லமா இருக்கலாம், ஆனா எனக்கு நீ தான் லைஃபே. உன்ன என் கண்ணுக்குள்ள வெச்சுப் பாத்துப்பேன். அதுனால உனக்கு இனிமே பயமே வேண்டாம். எந்த பிரச்சனை வந்தாலும் நான் சமாளிக்கறேன். சரியா? ” அவளது தோளைச் சுற்றி வளைத்து ஆறுதல் சொன்னான்.

அவனின் அருகாமையிலும் அவன் பேச்சிலும் சற்று ஆறுதல் பெற்றவள் , நிமிர்ந்து அவனைப் பார்க்க, அவளது பார்வை அவனை கவர்வதாய் இருந்தது. உள்ளுக்குள் ஏதோ சென்றுவந்தது இருக்க,

“ என்ன அப்படிப் பாக்குற !? “ இமைக்கவும் மறந்து இருப்பவளை உலுக்கினான்.

“ இத்தனை நாள் எங்க இருந்தீங்க ஜீவா?! என்னையே மறந்து நான் இருக்கறதுக்கு காரணம் நீங்க தான். “ அவனை இன்னும் விடாமல் தன் விழியால் பருகினாள்.

“ எனக்கே வெட்கமா இருக்கு டி . என்னப் பார்வை இது! நானும் என் வாழ்க்கைல மனசு ஃபுல்லா ஒரு பொண்னையே நினச்சு நாட்களைக் கடத்துவேன்னு கொஞ்சமும் எதிர்ப்பார்க்கல. உன்ன பார்த்ததும் எனக்குள்ள ஒரு ஸ்பார்க். அதோட தாக்கம் என்னை ரொம்ப பாதிச்சுது. நம்ம ரெண்டு பேருக்குள்ள பேசிக்கலன்னாலும் அப்படி ஒரு கெமிஸ்ட்ரி இருந்துது. அதை கண்டிப்பா நீயும் உணர்ந்திருப்ப.  உன்கிட்ட என் காதல சொல்றவரைக்கும் நெஞ்சுக்குள்ள ஒரு பதட்டம்.”  இரு புறமும் அவள் தோள் மேல் சாதரணமாக அவன் கையை வைத்துக் கொண்டு பேச,

“ ம்ம்ம்.. எல்லாம் சரி தான். நானும் நமக்குள்ள அந்த வேவ்லெந்த்த ஃபீல் பண்ணிருக்கேன். “ சற்று நிறுத்தி

“ நான் ஒன்னு சொன்னா நீங்க சிரிக்கக் கூடாது.”  தலை குணிந்து கொண்டு கேட்க,

“ அப்படி என்ன சொல்லப் போற!” ஆச்சரியமாக அவளைப் பார்த்தான்.

“ அன்னிக்கு என் ப்ரென்ட் கூட வந்தப்ப நீங்க பைக்ல பின்னாடி வந்தீங்களே! அன்னிக்கு நீங்க…..”

“நானு?!”  புருவத்தை சுருக்கி அவளைப் பார்க்க,

“ அன்னிக்கு நீங்க சொன்ன எதுவும் எனக்கு ஞாபகம் இல்ல!” காதை சொரிந்த படி கேட்க,

கல கலவென சிரிக்கத் தொடங்கினான் ஜீவா.

“சிரிக்காதீங்கன்னு சொன்னேன்ல.. போங்க நான் போறேன்!” அவள் சிணுங்கிக் கொண்டே எழுந்து செல்ல,

பின்னோடு சென்று அவள் கையைப் பிடித்து இழுத்து ,இடையைத் தன்னோடு சேர்த்தனைத்தான்.

“ எங்க ஓடற? இனிமே நீ என்கிட்ட லாக். எங்கயும் விடமாட்டேன்” அவளின் கூந்தலில் இருந்த பூவாசம் அவனை மயக்க அவளது கழுத்து வளைவில் தன் தாடையை அழுத்திக் கொண்டு நின்றான்.

முதல் முறை ஒரு ஆணின் அருகாமை, அதுவும் தன் மனம் முழுதும் நிரம்ப நிரம்ப அவனுக்கானக் காதலை வைத்துக் கொண்டிருக்கும் ஒருவனின் முதல் அணைப்பு ! அவளது இடையைச் சுற்றிய அவனது வலிய கைகள் கொடுத்த சுகம்! அவனின் மூச்சுக் காற்றை தன் கண்ணத்தில் உணர்ந்த நொடி , சப்த நாடியும் அடங்கி அவன் கைகளில் துவண்டாள் வாணி.

அவனும் தன் இதயத்தில் இருப்பவளை முதல் முறை அணைத்த சுகத்தை அனுபவித்த படி நிற்க,

சில நொடிகளோ நிமிடமோ சென்று , அந்த வெட்ட வெளியில் தான் நிற்கும் கோலத்தை கண் திறந்து கண்டவள், சட்டென விலகப் பார்க்க,

அவளை விடாமல் இழுத்துப் பிடித்தான் மீண்டும்.

“ ஜீவா.. என்ன இது பப்ளிக் பிளேஸ்ல.. “ அவன் கையைத் தளர்த்த,

“ இது எங்க தோப்பு தான், இந்த நேரத்துல இங்க யாரும் வரமாட்டாங்க, கவலைய விடுங்க மேடம், இதுக்கப்பறம் எப்போ இப்படி ஒரு சான்ஸ் வருமோ தெரியல. மல்லிகை வேற மயக்குது. சரி நீ சொல்லு, ஏன் அன்னிக்கு நான் பேசுனது உனக்கு ஞாபகம் இல்ல!” மேலும் அவளை சீண்ட,

“ அது… அது…..” நெளிந்து கொண்டே நிற்க,

“ மாமா வ சைட் அடிச்சுட்டே இருந்திருப்ப, அதான் நான் பேசுனது உனக்குக் கேட்கல அப்படித்தான!” அவன் சொல்லவும்,

சட்டெனத் திரும்பி அவன் தோள்களில் கையை மாலையாகக் கோர்த்து,

“ மாமா வா?!” அவனை ஆச்சரியமாகப் பார்க்க,

அவனோ அவள் இடையை விடாமல் நெருக்கிப் பிடித்திருக்க, அவள் மொத்தமாக அவன் மேல் இடித்து நின்றாள். தான் கேட்ட கேள்வியே பிரதானமாக அவள் நிற்க, அவனோ , அவளின் இந்த நெருக்கத்தை சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை.

 அவன் இதயத் துடிப்பு அதிகரிக்க, ஏற்கனவே பூவாசம் வேறு அவனை வலை போட்டு இழுத்துக் கொண்டிருந்தது. அவளின் மென்மையை தன் மேல் உணர , அதற்கு மேல் கட்டுப் படுத்த முடியாமல் , தன் முதல் முத்திரையை அவளின் செப்பு இதழ்களில் எழுதத் தொடங்கினான்.

திடீர் தாக்குதலால் அதிர்ந்து விழி விரித்து செய்வதறியாது அவனது கைக்குள் கட்டுண்டு கிடந்தாள் இதயா.  வேட்டி சட்டையில் அவனது தோற்றமும் , மீசையின் குறுகுறுப்பும் , அவனது வாசமும் அவளைக் கிறங்கச் செய்ய , அவனது முத்தத்தில் தன்னையும் அறியாமல் மூழ்கினாள்.

இருவரும் கண்மூடி ஒருவரை ஒருவர் உள்வாங்கிக் கொண்டிருந்தனர். சொல்லமுடியாமல் தவித்த தங்களின் காதலை இன்று சொல்லிவிட்ட இன்பம் மனதை நிறைக்க,  அந்த முத்தத்தால் ஒருவருக்குள் மற்றவர் சென்றுகொண்டிருந்தனர்.

நீண்ட முத்தத்திற்குப் பிறகு இருவருமே களைத்து விலக, அவனைக் காண முடியாமல் ஓடிச் சென்று திரும்பி நின்றாள் வாணி.

என்ன இருந்தாலும் தான் செய்தது தவறோ என்று நினைத்தான் ஜீவா. காதலை அவள் சொன்ன அன்றே கொஞ்சம் அதிகமாக நடந்துகொண்டோமோ என்று தோன்ற,

பின்னே சென்று அவளை மென்மையாகத் தன் புறம் திருப்பி, “ சாரி இதயா, உன்ன எப்போதோ என் வோய்ஃப்பா நான் பார்க்க ஆரம்பிச்சுட்டேன். அதான் உன்ன அவ்ளோ நெருக்கமா வெச்சுக்கிட்டு என்னால கட்டுப் படுத்த முடியல.. சாரி டா “ அவளது கண்ணம் தாங்க,

“ ப..பரவால்ல .. “ அவளுக்கே கேட்காமல் சொல்ல,

அவளின் நிலை புரிந்து , மேலும் அவளை வெட்கப் பட வைக்காமல்

“ சரி வா, வீட்டுக்குப் போலாம், என்னப் பத்தி போறப்ப மறுபடியும் சொல்றேன்!” எனவும்,

“ இல்ல, வேண்டாம். யமுனா எல்லாம் சொல்லிருக்கா” என்று அவனுடன் பைக்கில் ஏறி அமர்ந்தாள்.

 

“ ஓ! அப்போ சரி, கிளம்பலாம், உன்ன யமுனா, அவ  ப்ரென்ட்னே அப்பா கிட்ட சொல்லுவா… சரியா அதையா மெயின்ட்டன் பண்ணிக்கோ “

“ ம்ம்ம்.. “  அவள் அலுத்துக்கொள்ள,

“ சீக்கிரம் என் பொண்டாட்டின்னு சொல்லி கூட்டிட்டு போறேன். கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க ஸ்வீட்ஹார்ட்”

“ சரிங்க மாமா டார்லிங்” என்று அவனது இடுப்பில் கை போட,

“ அடடா… ஜீவா.. இதுக்காகவே சீக்கிரம் கல்யாணம் பண்ணனும் டா” எனத் தனக்குத் தானே சொல்லிக் கொண்டு வண்டியைக் கிளப்பினான்.

வீட்டில் தன் தந்தை தவசி இருக்கிறாரா என்று சுபிக்கு போன் செய்து கேட்டு, இல்லை என்றதும், அவளை தைரியமாக அழைத்துச் சென்றான்.

உள்ளே நுழைந்ததும், சுபி ஓடி வந்து அவளை அனைத்துக் கொண்டு,

“வாங்க வாங்க” என்று வரவேற்க,

“ வா ன்னே சொல்லு” நாம ரெண்டு பேரும் ஒரே வயசு தான “ சகஜமாகப் பேசினாள். எல்லாம் யமுனாவினால்!

யமுனாவும் பின்னே வந்து அவளை அழைத்துப் போக , அவர்களுக்குள் ஒரு வயதினருக்கு உரிய சுமுகமான நட்பு மலர்ந்தது.

ஜீவா , முதலில் தன் தாயிடம் இது பற்றி சொல்ல எண்ணி, அவரைத் தேடி அடுக்களைக்குள் சென்றான். நிச்சயத்திற்கு சமயல் காரர்களை வைத்து வேலை வாங்கிக் கொண்டிருக்க,

அவரைக் கூட்டிக் கொண்டு வீட்டின் பின் புறம் வந்தான்.

“என்ன ஜீவா , நெறையா வேலை இருக்கு, என்ன விஷயம்” அவர் பரபரக்க,

“ உன் மருமகள பாக்க வேண்டாமா?!” கையைக் கட்டிக் கொண்டு சாதாரணமாகக் கேட்க,

ஒரு நொடி அதிர்ந்தே விட்டார் சங்கரி.

“ என்ன ப்பா சொல்ற!”

“ஆமா ம்மா . நான் ஒரு பொண்ண விரும்பறேன். அவளத் தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசப் படறேன். நீங்களும் பார்த்து ஓகே சொல்லிடுங்க”

“ எங்க ஜீவா? நம்ம வீட்லையா?” என்று விழி விரிக்க,

யமுனாவும் சுபியும் வாணியை அழைத்துக் கொண்டு வந்து விட்டுச் செல்ல,

அவள் தயங்கி நின்றாள்.  ஜீவா அவளை கண்களால் தன் அருகில் அழைக்க, அருகே சென்றாள்.

“இது தான் மா, இதயா .. இல்ல இதயவானி “ சங்கரிக்கு அறிமுகம் செய்தான் ஜீவா,

வாணி செய்வதறியாது ,“ வ..வ..வணக்கம் ஆண்ட்டி” கை கூப்பி திக்கித் திணறி சொல்ல,

உணர்ச்சியிலாத முகத்துடன் அவளை முதலில் தன் கண்களாலேயே எடை போட்டவர் , வாணியின் முகத்தில் எதைக் கண்டாரோ! , பின் அவள் அருகில் சென்று ,

 “ ஆண்ட்டியா …” சீரியசாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்க,

சற்று பயந்து வாணி “ இல்ல.. “ என இழுக்க,

அவளது தாடையைப் பற்றிக் கொண்டு “அத்தை ன்னு சொல்லு ம்மா” என்கவும்,

நிமத்தியாகச் சிரித்தனர் மூவரும்.

அதே நேரம் வாணி ஜீவாவுடன் சென்றதை தன் கைபேசியில் படமெடுத்து அதைப் பார்த்துக் கொண்டிருந்தான் வில்லியம்.