un vizhigalil vizhuntha naatkalil – 17
un vizhigalil vizhuntha naatkalil – 17
உடலை ஒட்டிய சுடிதாரும், நேர் செய்து விரித்து விட்ட கூந்தலும், ஸ்டைலாக அவளது காரின் மீது சாய்ந்து , அங்கு செல்பவர்களை ஒரு ஏளனப் பார்வை வீசிக் கொண்டிருந்தவளைக் கண்டதுமே அறிந்துகொண்டான். அவள் தான் வசுந்தரா என்று.
வெற்றி பேசிய வார்த்தைகளைக் கேட்டு , சீக்கிரம் இவளை சரிகட்ட வேண்டுமென நினைத்துக் கொண்டே வந்தவன், அவள் நிற்கும் தோரணையிலேயே தெரிந்து கொண்டான். அவள் அவ்வளவு சீக்கிரம் வழிக்குவருவது முடியாத காரியம்.
இருந்தும் வேறு வழி அவனுக்கு இல்லையே! வாழ்வில் பிடிக்காவிட்டாலும் சிலவற்றை நாம் சகித்துக் கொண்டே ஆகவேண்டும். தன் நிலைமையை நொந்து கொண்டே அந்த அகங்காரம் பிடித்தவளை நோக்கி நடந்தான்.
நல்ல உயரம், உயரத்திற்கேற்ற உடல் வாகு , பார்ப்பவர்அனைவரையும் வசீகரிக்கும் முகம், அவனது முகத்திற்கு அழகு சேர்க்கும் அந்த கண்கள் , அவனது ஆண்மையை அலங்கரிக்கும் அந்த அடர்ந்த மீசை , காந்தம் போல் இழுக்கும் அந்தக் கண்களால் தன்னையே எடை போட்டபடி கம்பீரமாக நடந்து வரும் அந்தப் பேரழகனை தனதாக்கிக் கொள்ளும் ஆசை அவளுள் எழுந்தது.
விதி எல்லாரது வாழ்க்கையிலும் விளையாடும் நேரம் என்பது உண்டு. அது ஜீவா வாணியின் வாழ்க்கையில் அவர்களின் காதல் மலர்ந்த அன்றே தனது ஆட்டத்தை தொடங்கியது போலும்.
‘ நீ இவ்வவளவு அழகா இருந்தா ஏன் பொண்ணுங்க உன் பின்னாடி சுத்த மாட்டாங்க. யாருக்கும் அடங்காத நானே உன்னை பார்த்த ரெண்டு நிமிஷத்துல முடிவேடுக்கறப்ப, மத்தவங்க நிலைமை மோசம் தான்.’
அவன் அருகில் வந்ததும் ,
“ ஹாய் ஜீவா! ஐ அம் வசுந்தரா” தனது கையை அவன் முன் நீட்ட,
சிறிதும் அதைக் கண்டு கொள்ளாமல் , “ ஹலோ ..” முகத்தை தீவிரமாக வைத்துக் கொண்டு சொன்னான்.
அவன் தன்னை ஒரு ஒதுக்கத்துனடே பார்ப்பது அவளுக்கு நன்றாகவே புரிந்தது. இருந்தாலும் தனது நோக்கத்தில் குறியாகத் தான் இருந்தாள்.
“ எதாவது சாப்ட்டுகிட்டே பேசலாமா? இங்க பக்கத்துல கடை…”
“அதெல்லாம் வேணாம். “ வெட்டும்படி பேசினான்.
“ சரி சொல்லுங்க..” கையைக் கட்டிக் கொண்டு அவனை கவனிக்க, உடனே அவனுக்கு எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை.
“நீங்க என்னமோ சொல்லனும்னு சொன்னீங்களே, முதல்ல அதை சொல்லுங்க..” ஜீவா அவளிடமே கேட்டான்.
“ ம்ம் .. சரி நானே சொல்லிடறேன். எங்க அண்ணனுக்கு கொஞ்சம் கூச்ச சுபாவம் . யமுனா கிட்ட பேசணும்னு நினைக்கறான். ஆனா அவ கிட்ட போன் வேற இல்லையே. உங்க கிட்ட நேரா கேட்கவும் அவனுக்கு சங்கடமா இருக்கு. அதான் நான் உங்க மூலமா பேச சொல்றேன்னு அவன் கிட்ட சொன்னேன்.”
“ ஓ! அவ்ளோ தானா” ஆர்வமில்லாமல் கேட்க,
வசுந்த்ரவிற்கு சற்று எரிச்சல் மூண்டது.. தான் பேசுவதைக் கேட்க விருப்பம் மில்லாமல் கூட ஒருவன் இருக்கிறானா? கல்லூரியில் படிக்கும் போது தன்னிடம் ஒரு வார்த்தை பேச மாட்டாளா என்று ஏங்கிய ஆண்களைத் தான் அவள் பார்த்திருக்கிறாள். அத்தனை பேரையும் அலட்சியம் செய்தவள் இன்று தன்னை அலட்சியம் செய்யும் ஒருவனிடம் பேச நிற்பது அவளுக்கே வியப்பு!
“என்ன அவ்வளவு தானான்னு கேட்கறீங்க? எங்க அண்ணன் விஷயம் மட்டும் இல்ல, நம்ம விஷயத்தையும் தான் பேச வந்தேன். எங்க அண்ணனாவது என் மூலமா யமுனா கிட்ட பேச நினைக்கறான். ஆனா நீங்க.. என்னைப் பத்தி எதுவுமே கேட்கலையே! “ குத்தலாகவே கேட்க,
“ இல்ல.. அது..” ஜீவா சற்று தயங்கி நிற்க
“ என்ன தயக்கம் , நானே ஸ்டெப் எடுத்து பாக்க வந்துட்டேன். நீங்க என்னடான்னா பேசவே யோசிக்கறீங்க” வாய் விட்டு கேட்டே விட்டாள்.
நீண்ட பெருமூச்சை எடுத்துக் கொண்டவன், அவள் இத்தனை பேசும்போது தானும் அனைத்தையும் சொல்லிவிட வேண்டியது தான் என்று முடிவு செய்தான்.
“ நான் ஒரு விஷயம் சொல்றேன். நீங்க தப்பா எடுத்துக்காதீங்க.. நான் வேற ஒரு பொண்ண விரும்பறேன். அவளைத் தான் கல்யாணம் செஞ்சுக்கணும்னு இருக்கேன். அதுனால நம்மள பத்தி பேசுன விஷயத்தை நீங்க மறந்துடுங்க. இதை நீங்க ரொம்ப ஸ்போர்டிவா எடுத்துப்பீங்கனு நினைக்கறேன். பெரியவங்க கிட்ட பேசி அவங்கள சங்கடப் படுத்தறத விட நாமே பேசி விருப்பம் இல்லன்னு சொல்லிட்டா, அவங்களுக்கும் கொஞ்சம் திருப்தியா இருக்கும் . அதுனால தான் உங்க கிட்ட பேச வந்தேன்” அவளது கண்களைப் பார்த்துப் பேச,
எடுத்த எடுப்பிலேயே அவன் இப்படிச் சொல்லுவான் என்று அவள் நினைக்கவில்லை தான். ஆனாலும் இது எதிர்ப்பார்த்த ஒன்று தான். அவனைப் பற்றித் தெரிந்த பின் தானே அவளுக்கு ஈர்ப்பும் வந்தது. அவ்வளவு சீக்கிரம் ஒப்புக் கொள்வாளா!
“ அதுக்கு இப்போ என்னை என்ன செய்ய சொல்றீங்க? நீங்களே அன்னிக்கு எல்லாரும் இருக்கறப்ப சொல்ல வேண்டியது தானே. அப்படி என்ன சங்கடப் படப் போறாங்க? “ கோபத்தில் முகத்தைத் திருப்பிக் கொண்டு அவள் சொல்ல,
“ அப்போ தான் தங்கச்சிங்களுக்கு நிச்சயம் முடிஞ்சிருக்கு, எல்லாரும் சந்தோஷமா இருக்கறப்ப எப்படி அந்த மாதிரி சொல்ல முடியும்” புரிந்து கொள்ளாமல் பேசும் அவள் மேல் சிறு கடுப்பு உண்டானது.
“ அப்போ உங்க தங்கச்சிங்க சந்தோஷமா இருக்கணும், நாங்க வருத்தப் பட்டா பரவால்ல, அப்படித் தானே!”
“ ப்ச்… அப்படி சொல்லலங்க. உங்க வீட்டுலயும் ஃபீல் பண்ணக் கூடாதுன்னு தான் நான் பேசாம இருந்தேன். உங்க கிட்ட பேசி புரியவைக்கலாம்னு வந்தா,…” பின் தலையை அழுந்தக் கோதிக் கொண்டு ,… “ உங்க அம்மாவே பெட்டர்” வாய்க்குள் முணுமுணுத்தான்.
“ என்ன சொன்னீங்க… சரிங்க நான் புரிஞ்சுக்கறேன். எங்க வீட்ல போய் சொல்லிடறேன். இந்த ரெண்டு கல்யாணமும் நடக்காதுன்னு”
அவள் பேச்சைக் கேட்டு ஒரு நொடி அதிர்ந்தான்.
“ என்ன.. ஏங்க அவங்க கல்யாணம் நிக்கணும், ?”
“ நீங்க என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டீங்க, எங்க அண்ணன் மட்டும் உங்க தங்கச்சிய கல்யாணம் பண்ணிகனுமா. ?” காழ்ப்புணர்ச்சி நன்றாகவே வெளிப்பட்டது வசுந்த்ராவிடத்தில்.
“ நான் தான் வேற ஒரு பொண்ண விரும்பறேன்னு சொல்றேனே, அதுக்கப்பறமும் ஏன் இப்படி பேசறீங்க, நம்மளால நம்ம அண்ணா தங்கச்சி வாழ்க்க ஏன் வீணாகனும். கொஞ்சம் யோசிங்க” விடாமல் பேசிப் பார்த்தான்.
அவளோ ஈவிரக்கம் இன்றி பதில் சொன்னாள்.
“ எனக்கு உங்க லவ் பத்தி கவலை இல்ல. உங்கள எனக்குப் பிடிச்சிருக்கு. உங்க தங்கச்சி வாழ்க்கை நல்ல இருக்கணும்னா நீங்க என்னைக் கல்யாணம் பண்ணிக் கோங்க. அப்படி இல்லனா உங்க தங்கச்சிக்கு வேற மாப்பிள்ளை பார்த்துக்கோங்க. உங்க முடிவ சீக்கிரம் சொல்லுங்க. நாளைக்கு நான் போன் பண்றேன்.” திமிராகப் பேசிவிட்டு தன் காரில் ஏறிச் சென்றாள்.
“ச்சே… பொண்ணா இவ! இவ வீட்டுக்கு யம்மு போனா, அவளும் சேர்ந்து கஷ்டப் படனும். சேரன் மட்டும் நல்லவனா இருந்து என்ன புண்ணியம். வீட்ல இருக்கறவங்க நல்லா இருக்க வேண்டாமா.இந்த சம்மந்தமே வேணாம்னு அப்பா கிட்ட சொல்லிடனும். “
மனமும் உடலும் களைத்துப் போய் வீட்டிற்கு வந்தான் ஜீவா. ஒரு புறம் வெற்றியிடம் தான் சொல்லிவிட்டு வந்தது நினைவிற்கு வந்தது. மறுபுறம் இந்த வசுந்தரா.
வீட்டுக் கூடத்தில் யாரையும் காணவில்லை. சமையல் அறையில் தாயின் குரல் கேட்க,
“ அம்மா.. தல வலிக்குது காஃபி குடுங்க” சத்தமாகச் சொல்லிவிட்டு தன் அறைக்குச் சென்றான்.
வழியில் இருந்த காந்திமதியின் அறையில் அழுகுரல் கேட்க, சட்டென நின்றான்.
“ நம்ம பொண்ணுக்குக் கல்யாணம் நடக்கப் போகுதுங்க, நீங்க போனப்பறம் எங்க நிலைமை ரொம்ப மோசம் ஆயிடும்னு நெனச்சேன். ஆனா தன்னோட சகோதரியா என்னைப் பாத்துக்கறாங்க சங்கரி அக்காவும் மாமாவும். யமுனா மேல கூட பொறந்த தங்கச்சிய விட அதிக பாசம் வெச்சிருக்கான் ஜீவா. அவன் கண்டிப்பா யமுனா கல்யாணத்தை நடத்திடுவான். இன்னிக்கு மாப்பிள்ளை வீட்டிலிருந்து வந்து யமுனாவிற்கு புடவையும் நகையும் கொடுத்துட்டு எவ்வளவு நல்லா பேசிட்டுப் போனாங்க. அவளோட கல்யாணம் தடையில்லாம நடக்க நீங்க தான் பக்கத்துல இருந்து பாத்துக்கணும்.” கணவனின் படத்தின் முன்பு அழுது கரைந்துகொண்டு நின்றார் காந்திமதி.
இதைக் கேட்ட ஜீவா இத்தனை நேரம் கல்யாணத்தை நிறுத்தி விடலாம் என்று யோசித்ததை நிறுத்தி விட்டான். மூளை வேலை செய்வதை நிறுத்திவிட்டதைப் போன்று உணர்ந்தான்.
தன் மேல் நல்ல அபிப்பராயம் வைத்திருக்கும் சித்தியிடம் சென்று இந்தக் கல்யாணம் யமுனாவிற்கு வேண்டாமென்று எப்படிச் சொல்வது. தலை மேலும் வலித்தது.
காந்திமதி எப்போதும் கணவரின் படத்திற்கு முன்பு நின்று புலம்புவது உண்டு. ஆனால் இன்று தான் முதல் முறை கண்ணீருடன் பார்க்கிறான். அதுவும் ஆனந்தமாக. தன் நிலைமையை நினைத்து மிகவும் வருந்தினான். தனி ஒருவனாக தான் நிற்பதாகத் தோன்றியது. சுற்றி நல்லவர்களும் உள்ளனர், தீயவர்களும் உள்ளனர்.
நல்லதை மட்டும் எடுக்க நினைத்தால் கூடவே சில தீயவற்றை பொறுத்துக் கொண்டாகவேண்டிய கட்டாயம் . இது எல்லோருடைய வாழ்க்கைக்கும் பொருந்தும்.
ஜீவா பேசாமல் சென்று கட்டிலில் விழுந்தான். யோசித்துக் குழம்பிய அவனது மூளைக்கு இப்போது ஓய்வு தேவையாக இருக்கவே , அப்படியே உறங்கியும் போனான். சங்கரி வந்ததோ அவனை எழுப்பி காபி குடிக்கச் சொன்னதோ அவனை சிறிதும் அசைக்கவில்லை.
அந்த நேரத்தில் தவசி சங்கரியிடம் வந்தார். ஜீவா அசந்து தூங்குவதைக் கண்டவர் மெல்ல சங்கரியை அழைத்தார்.
“சங்கரி , கொஞ்சம் இங்க வா, பேசனும்” தங்கள் அறைக்குள் சென்றார்.
சங்கரியும் செல்ல, சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தார் தவசி.
“ ஜீவா என்ன சொல்றான்? அந்தப் பொண்ணை போய்ப் பார்த்தா கண்டிப்பா அவனுக்குப் பிடிக்கும். ஆனா ஏன் பாக்காமலே விருப்பமில்லன்னு சொல்றான். வரதனுக்கு நம்ம ஜீவாவை ரொம்ப பிடிச்சு இருக்கு. இன்னிக்கு அவங்க புடவை நகை குடுக்க வந்தப்ப என்கிட்ட அதப் பத்தித் தான் கேட்டான். “ சங்கரி குனிந்த தலை நிமிராமல் இருப்பதைப் பார்த்து பேச்சை நிறுத்தினார்.
“ என்ன சங்கரி, நான் சொல்லிட்டே இருக்கேன், நீ எதுவும் சொல்லாம இருக்க? ஜீவா என்ன தான் சொல்றான்” சற்று சத்தம் அதிகமாவே கேட்க,
சங்கரிக்கு ஜீவாவின் காதலைப் பற்றி சொல்ல தைரியம் வரவில்லை.
“ அவன் இதைப் பத்தி என்கிட்டே பேசலைங்க” மெதுவாகச் சொல்ல,
“ என்ன நீ! பொறுப்பில்லாம பதில் சொல்ற, அவங்க பெண் கொடுத்து பெண் எடுக்கறதா தான சொன்னாங்க, நீ தான் ஒரு அம்மாவா அவன் கிட்ட இதைப் பத்திக் கேட்கணும். இப்படி நாளை கடத்திட்டு இருந்தா அவங்க என்ன நினைப்பாங்க. அவங்க சைட்ல நம்ம பொண்ணுக்கு செஞ்ச மாதிரி நாமளும் செய்யணும்னு எதிர்ப்பார்ப்பாங்கல, நாளைக்கே உன் பையன் கிட்ட கேட்டு சொல்லு, எப்போ பொண்ண பார்க்கலாம்னு, அப்புறம் பெண்ணை பிடிக்கலன்னா பாத்துக்கலாம்.”
இப்போது வாணியைப் பற்றிக் கூறினால் நிச்சயம் அதற்கும் திட்டு விழும் என்று பயந்து பேசாமல் வந்துவிட்டார் சங்கரி.
இரவு சாப்பாட்டிற்குக் கூட ஜீவா எழுந்து வரவில்லை. மனதின் பாரம் எப்போதடா உறங்குவாய் என்று அவனது உடலை அசந்து உறங்க வைத்திருந்தது.
இரண்டு முறை அவனது கைபேசி அழைத்தும் அவன் எடுக்கவில்லை. சத்தம் கேட்டு அங்கு வந்த யமுனா, போனைக் கையில் எடுக்க , அதில் சேரன் என்று ஒளிர்ந்தது.
மீண்டும் அந்த எண்ணிலிருந்து அழைப்பு வர வேறு வழியின்றி எடுத்துப் பேசினாள்.
முதலில் ஜீவா அனைத்தையும் சரி செய்யும் வரை பேசவேண்டாம் என்று நினைத்தவள் பின் அவனது விசாரிப்புகளுக்கு பதில் சொல்லிச் சொல்லி பேச்சு தொடர்ந்து கொண்டே இருந்தது.
அவளுக்கும் சேரனைப் பிடித்துத் தான் இருந்தது. அதனால் தானும் சகஜமாகப் பேச ஆரம்பித்தாள்.
அவளுக்குத் தெரியாமலேயே ஜீவாவின் வாழ்க்கையைப் பணயம் வைத்துக் கொண்டிருந்தாள்.