Un Vizhigalil Vizhuntha Naatkalil – 2
Un Vizhigalil Vizhuntha Naatkalil – 2
உன் விழிகளில் விழுந்த நாட்களில்..2
“அடியேய் ! எந்திரி டி. விடிஞ்சது கூட தெரியாம நல்லா கனவு கண்டுகிட்டே இரு. இதுல நைட்டெல்லாம் உளறல் வேற..” ரேகா கிச்சனில் இருந்து இதயவாணிக்கு சுப்ரபாதம் பாடிக் கொண்டிருந்தார்.
உளறல் என்ற வார்த்தை அவளை பதைதைத்து எழும்ப வைத்தது. ‘ஐயையோ உளறிட்டேனா!! ‘தாய்கிழவி கழுவி ஊத்த போகுது..’ அவசரமாக எழுந்து கிச்சனுக்குள் சென்றாள்.
அடுப்பில் தாளித்துக் கொண்டிருந்த ரேகாவை பின்னாலிருந்து இடுப்போடு கட்டிக் கொண்டாள்.
“ பல்லு விளக்காம கிச்சனுக்குள்ள வராதன்னு எத்தன தடவ சொல்லிருக்கேன். போய் பல்லு விளக்கி குளிச்சுட்டு வா. அப்புறம் வந்து கொஞ்சு.. போடி” அவளை அங்கிருந்து அப்புறப் படுத்த நினைக்க,
“ சரி சரி.. போறேன். ஆமா என்னமோ உளறினேன்னு சொன்ன.. என்ன சொன்னேன்?” லேசாக பிட் போட்டுப் பார்த்தாள். எக்குத்தப்பாக எதாவது சொல்லிட்டோமோ என்ற பயம் உள்ளுக்குளே எட்டிப் பார்த்தது.
“ என்னமோ சொன்ன எனக்கும் சரியா ஞாபகம் இல்ல. ஏன் கேட்ட? எதுக்கு கேட்டன்னு?.. ஏதோ சொல்லிட்டு இருந்த. நானும் தூக்கத்துல இருந்ததால சரியா கேட்கல .. “ அடுப்பிலிருந்து சாம்பாரை இறக்கி வைத்துக் கொண்டே சொல்ல,
‘அப்பாடி… தப்பிச்சோம் டா சாமி! ஆனாலும் அவனால தான் பொலம்பிருக்கேன் ..ச்சே..அவன் கிட்ட இன்னிக்கு கேட்டே ஆகணும். இல்லனா இப்படித் தான் உளருவோம்.’ எங்கோ வெறித்த படி நினைத்துக் கொண்டிருக்க,
“என்னடி நின்னுகிட்டே தூங்குற, மணி ஆயிடுச்சு போய் கிளம்பு. வீட்ல தான் ஒரு வேலையும் செய்யறது இல்ல. உன்னோட வேலையாவது ஒழுங்கா செஞ்சுக்கோ. “ ரேகா விரட்டினார்.
“ம்ம்ம் போறேம்மா..இன்னிக்கு சாம்பார் மனமா இருக்கு. கொஞ்சம் பெரிய பாக்ஸ்ல போட்டு குடு. நீ வைக்கிற சாம்பாருக்கு என் கிளாஸ் ஃபுல்லா அடிச்சிகிட்டு திங்குதுங்க. எனக்கு கொஞ்சம் கூட பத்தல. “ செல்லும் போது கொஞ்சம் ஐஸ் வைத்துச் செல்ல,
மகிழ்ந்து போனார் ரேகா.
குளித்து முடித்து பாவாடை தாவணி போட்டுக் கொண்டு வெளியே வந்தாள். (ஆம். அவளது கல்லூரியில் தாவணி,புடவை தான் அணியவேண்டும். பெண்கள் கல்லூரி.ரேகா அங்கு தான் தன் மகள் படிக்க வேண்டும் என்று பிடிவாதமாக தள்ளிவிட்டிருந்தார்.ஆரம்பத்தில் வாணிக்கு அது பிடிக்காவிட்டாலும் போகப் போக அது தான் மிகவும் பிடித்தது.)
சாப்பாட்டு பாக்ஸ் வாங்கிக் கொண்டு ஹீரோவைப் பார்க்க சிட்டாகப் பறந்தாள்.
ரயில்வே ஸ்டேஷனில் தன் தோழியை எதிர்ப்பார்க்க, அவள் அன்றும் வரவில்லை. ஒரு புறம் பேச்சுத் துணைக்கு ஆள் இல்லை என்று வருந்தினாலும், ஜீவாவுடன் பேசவது அவள் இருந்தால் முடியாது என்றுணர்ந்து சற்று மகிழ்ந்தாள்.
ரயில் வருவதற்கு கடைசி மணி அடித்ததும், மனம் ஏனோ பதட்டம் கொண்டது. தூரத்தில் புள்ளியாக தெரிந்த ரயில் அருகே வர வர அவளது உள்ளங்கைகள் வியர்த்தது.
ரயில் வந்து நின்றதும், பெண்களுக்கான பெட்டியில் ஏற மறந்து அதற்கு பக்கத்தில் இருந்த பெட்டியில் ஏறி விட்டாள். ரயிலும் கிளம்பி விட்டது.
‘ஐயையோ கூட்டமா இருந்ததுல மாத்தி ஏறிட்டேனே!அவனும் இதுல தான வருவான். அவனுக்காக ஏறிட்டோம்னு நினைப்பானோ! அப்படியே சொன்னாலும் கெத்த விடாம மெய்ன்டைன் பண்ணு வாணி.’ யோசித்துக் கொண்டே இருந்தாலும் கண்கள் அவனைத் தான் வலை போட்டுத் தேடிக் கொண்டிருந்தது.
அவனும் அவளை ஏமாற்றாமல் சற்று தொலைவில் நின்று அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். பிரவுன் நிற சட்டை அணிந்து , கண்களில் கூலிங்க்ளாஸுடன் படு ஸ்மார்ட்டாக காட்சியளித்தான். நெற்றியில் சிறு கோடாக சந்தனம்.
அவனைப் பார்த்ததும் அவளுக்குள் பல வண்ணப் பூக்கள் மலர்ந்தது. ‘இவன் என்னை கவுக்கறதுக்காகவே இப்படி வரானா. ஐயோ கண்ணை எடுக்கவே முடியல. பாவி..’
அவளது பால் நிறத்தை எடுத்துக் காட்டும் மெரூன் நிற தாவணி அணிந்து, முல்லைப் பூச் சூடி , நெற்றியில் கருப்புப் பொட்டும் அதற்கு மேல் சிறு கீற்றாக திருநீர் அணிந்து காதில் சின்ன ஜிமிக்கி போட்டு அந்தக் காலை வேளையில் அம்சமாக நிற்கும் தன் மனத்தைக் கவர்ந்தவளை விழிகளால் பருகிக் கொண்டே மெல்ல நகர்ந்து அவளிடம் வந்தான்.
அவளிடமிருந்து வந்த அந்தப் பூவாசம் அவனை மயக்கியது. அவளது கழுத்து வளைவில் முகம் புதைத்து அதன் வாசம் பார்க்க துடித்த மனதை மானசீகமாக தலையில் குட்டி அடக்கினான்.
“ ஹ்ம்ம் ..ஹ்ம்ம்.. “ தொண்டையைச் சரி செய்து கொண்டான்.
சுற்றி சுற்றிப் பார்த்தவள், தெரிந்தவர்கள் யாரும் இல்லையென்றதும் , சிறிது தைரியமாக அவனை எதிர் கொண்டாள். இல்லை இல்லை! தைரியாமாக இருப்பதைப் போல காட்டிக் கொண்டாள்.
“ நான்..”
“ நான்..”
இருவரும் ஒரே நேரத்தில் ஆரம்பிக்க, அவளுக்கு சிரிப்பு வந்தது.
“ நீயே சொல்லு” அவன் விட்டுக் கொடுத்தான்.
“ ஆமா, நானே சொல்லிடறேன். அன்னிக்கு ஏன் அப்படி கேட்டீங்க..? என்னைப் பார்த்தா லவ் பண்ற மாதிரி தெரியுதா. அவன் என்னோட ஸ்கூல் மேட் ,சின்ன வயசுலேந்து ப்ரெண்ட்ஸ். அதுனால பேசுனேன். அவன் மத்த பசங்க கிட்டலாம் என்ன சொல்லி வெச்சிருக்கான்னு எனக்குத் தெரியாது. ஆனா அதை நம்பி என்கிட்டே எப்படி அந்த மாதிரி கேப்பீங்க.. எனக்கு எக்ஸ்ப்ளேன் பண்ணுங்க…” அப்பளம் போல பொரிந்து தள்ளி விட்டாள்.
பேசும் அவளது வாயையும் கண்களையுமே பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான். இது தான் அவள் முதல் முறை தன்னிடம் இத்தனை பெரிதாக பேசியது. அதுவே அவன் உதடுகளை வளைத்து புன்னகைக்க வைத்தது.
“ அது எப்படி டா என்னை பார்த்து அந்த கேள்விய கேட்ட..? ன்னு கவுண்டமணி மாதிரி கேக்கற.. அப்படித் தானே..” அவன் சிரிக்காமல் சொல்லவும்,
அவளுக்கு உதட்டை மடக்கி சிரிப்பை முழுங்க சற்று சிரமப்பட வேண்டியிருந்தது.
“ அந்த டோன்ல கேட்கல. ஆனா மீனிங் அது தான் “ சளைக்காமல் பதில் சொன்னாள்.
‘ நீ தான் எனக்கு சரியான மேட்ச்..இப்படி பதில்லுக்கு பதில் பேசத் தான் எனக்குப் பிடிக்கும்’ மனதிற்குள் மெச்சிக் கொண்டான்.
“ நீ எந்த டோன்ல கேட்டாலும் , என்னோட பதில் இது தான். எனக்கு உன்ன பத்தி தெரிஞ்சுக்க, வேற யார் கிட்டயும் போய் கேட்கப் பிடிக்கல. அது தான் உண்மையான ரீசன். உன்கிட்ட கேட்டா டோட்டலா கிளியர் ஆயிடும் அதுனால தான் கேட்டேன். இது தப்புன்னா நீ என்ன சொன்னாலும் செய்யறேன்.” இரு கையையும் நீட்டி சகஜமாக அவளிடம் பேசினான்.
அது அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. தன்னைப் பற்றி வெளியே கேட்காமல் தன்னிடமமே கேட்கும் அவனையும் தான். இருந்தாலும் காட்டிக் கொள்ளாமல் இருந்தால்.
“ நீங்க ஏன் என்னைப் பத்தி தெரிஞ்சுக்கணும். தெரிஞ்சு என்ன செய்யப் போறீங்க?” வாய் சண்டையிட்டாலும் கண்கள் அவனை கொஞ்சவே செய்தது.
அந்தக் கண்களில் தன்னைத் தொலைத்தவன், ‘ ஏன் ன்னு உனக்குத் தெரியாதா? என் வாய முதல்ல திறக்க வைக்கணும்னு பாக்கற. சொல்றேன் இதயா. கண்டிப்பா சொல்றேன். ஆனா இப்போ இல்ல. இன்னும் கொஞ்சம் டைம் வேணும். இது வெறும் இன்ஃபாக்சுவேஷனா உனக்கு இருந்திட கூடாது. எனக்கு உன்னோட மனசு முழுசா எனக்கே எனக்கா வேணும். காதலை நீ உணரனும். அப்பறம் நமக்கு அந்தக் காதலை வெளிப்படையா சொல்லிக்க கூட அவசியம் இல்லன்னு உனக்கே தோணும். ’
“ என்னப் பத்தி அன்னிக்கு நான் உன்கிட்ட சொன்னேன். அது மாதிரி உன்னப் பத்தி தெரிஞ்சுக்க நெனச்சேன். ஜஸ்ட் ப்ரென்ட்லியா.” அவன் சொன்னதும் அவளது முகம் வாடியது.
ஆனால் அவள் உண்மையில் சிந்தித்தாள். அன்று அவன் அவனைப் பற்றி சொன்னான் தான். ஆனால் ஒன்று கூட அவளுக்கு இப்போது நினைவில் இல்லை. என்ன சொன்னான் என்று தான் யோசித்தாள்.
அவளுக்கு முன்னால் கையை ஆட்டி , “ ஹலோ” என்று அவன் சொல்ல , அந்த நாளின் நினைவிலிருந்து நடப்புக்கு வந்தாள்.
“என்ன ..எதாவது கேட்டீங்களா?” மென்மையாகக் கேட்க,
“ ஆமா! காலைல சாப்பிடல அதான் நான் பேசுனது உனக்கு மெதுவா கேட்டிருக்கும்.”
“சாப்பிடலையா? ஏன்?” அவளுக்கு சாப்பாடு மட்டும் ரொம்ப முக்கியம். அந்த வேளைக்கு சாப்பிட்டே ஆகவேண்டும். அவன் சாப்பிடவில்லை என்றதும், உடனே தன் டிபன் பாக்ஸ் எடுத்துக் கொடுத்தாள்.
“எனக்கு பசி மட்டும் பொறுக்க முடியாது. மத்தவங்க பசியா இருந்தாலும் எனக்கு ஒரு மாதிரி இருக்கும். இந்தாங்க.சாப்பிடுங்க.”
அவளை ஆச்சரியமாகப் பார்த்துவிட்டு , மறுக்காமல் வாங்கிக் கொண்டான். அவள் கொடுத்த ஸ்பூனின் உதவியாலும், சூடாக இருந்த அந்த சாம்பார் வாசம்அவனை இழுக்க, ஐந்து நிமிடத்தில் அனைத்தையும் காலி செய்தான்.
அவள் தண்ணீர் கொடுக்க திருப்தியாக வயிற்று வேலை முடிந்தது.
“ தேங்க்ஸ் இதயா”
“ என்ன ..!”
“இதயா ன்னு சொன்னேன்.” அவன் நெஞ்சை தன் கையால் தொட்டுக் கொண்டே சொல்ல,
அவளுக்கு உள்ளுக்குள் குளிர்ந்தாலும் அவனைக் கண்டும் காணாதது போலவே இருந்தாள்.
“எல்லாரும் என்னை வாணின்னு தான் கூப்பிடுவாங்க”
“ எனக்கு இதயா தான் புடிச்சிருக்கு. “
‘டபிள் மீனிங் ல சொல்றானோ!’
மனதிற்குள் ஏனோ ஐஸ் மழை கொட்டியது. பதில் சொல்லாமல் மெளனமாக வெளியே பார்த்துக் கொண்டு வந்தாள்.
அந்த ஐஸ் மழையை நெருப்பு மழையாக மாற்றுவதற்கு அங்கிருந்து வந்தாள் யமுனா. அவளே இப்போது தான் அவனிடம் சற்று வாய் திறந்திருந்தாள். இவளைக் கண்டதும் சற்று நேரம் முன்பிருந்த சிறு இணக்கமும் காணாமல் போனது..
ஜீவாவைக் கண்டது முதல் அவளுக்கு மனதில் ஒரு பிடித்தம் இருந்தது. ஆனால் அவன் யமுனாவோடு பேசும் போது அடிவயிற்றிலிருந்து எரிந்து காது வழியாக புகை வரும்.
யமுனா அவளுக்கு முழுவதுமாக தெரியாத பெண் இல்லை. அவளுடைய கல்லூரியில் தான் படித்தாள். வெவ்வேறு வகுப்பு என்றாலும் மியூசிக் கிளாசில் ஒன்றாகத்தான் படித்தார்கள். ஆனால் வாணி அனைவரிடமும் பேசிவிட மாட்டாள். தனக்கென்று ஒரு நட்பு வட்டாரம், அவர்களுடன் மட்டும் தன்னுடைய சேட்டை விளையாட்டு, பேச்சு பாட்டு என அனைத்து வித்தைகளையும் காட்டுவாள். மிகவும் நெருங்கிவிட்டால் மட்டுமே! அது போல யமுனாவைப் பார்த்திருக்கிறாளே தவிர, அவளைப் பற்றி ஒன்றும் தெரியாது.
அதனால் யமுனா அவனுடைய சித்தப்பா மகள் என்று அவளுக்குத் தெரிய வாய்பில்லாமல் போனது. அவன் இவளுடன் பேசுவது தெரிந்த பின் அவள் மேல் ஒரு வெறுப்பு வரவே செய்தது.
யமுனா வந்து அவன் அருகில் நின்று, வேண்டுமென்றே வம்பிழுத்தாள்.
“ என்ன நடக்குது பாஸ்.”
“ ஒண்ணுமில்ல. எனக்கு பசிச்சுது அவங்க சாப்பாடு குடுத்தாங்க”
இவர்களின் பேச்சு அவளுக்கு ரசிக்கவில்லை என்று நன்றாகவே அவனுக்குத் தெரிந்தது. யமுனா தனது தங்கை என்று அவள் அறியவில்லை என்றும் தெரியும்.
இவனைப் போல் அவளும் உரிமையாக தன்னைப் பற்றிக் கேட்க வேண்டும் என்று தான் அவனும் விரும்பினான். அவளை வாய் திறக்கவைக்கவே அவனுக்கு பெரும் பாடாக இருந்தது.
“ சாப்பாடு குடுக்கற அளவு வந்தாச்சா.. இந்த விஷயம் சங்கரிக்கு தெரியுமா.” அவளது பெரியன்னையை அவள் அப்படித் தான் அழைப்பாள். வேண்டுமென்றே அவனோடு சேர்ந்து வாணியைப் படுத்தினாள்.
‘அது யாரு சங்கரி. ஒரு வேளை இவன் அவளை லவ் பண்ணுவானோ!’ மனம் கனத்தாது. அவர்களை கவனிக்காதது போல இருந்தாலும் , காதைக் கழட்டி அவர்களிடையே தான் வைத்திருந்தாள்.
மேலும் தூபம் போட்டான் ஜீவா.
“ ஆமா. சங்கரிக்கு போட்டிக்கு ஆள் வந்துட்டாங்கன்னு போய் சொல்லிடாத. அப்பறம் சண்டைக்கு வருவா” சிரிப்பைக் கட்டுப் படுத்தி அவன் பேசினான்.
வாணியின் முகம் போன போக்கிலிருந்து உள்ளுக்குள் கொதிக்கிறாள் புரிந்து கொண்டான்.
எப்படியும் அவளை தன்னிடம் பேச வைக்க வேண்டும் என்று தான் சீண்டிக் கொண்டிருந்தான்.
ஆனாலும் அவள் சிறிதும் அசைய வில்லை.
‘அழுத்தக்காரி. கொஞ்சம் கோப பட்டாலும் என்னை புடிச்சிருக்கறது தெரிஞ்சிடும்னு காட்டிக்காம இருக்கா. எவ்ளோ நாளைக்குனு நானும் பார்க்கறேன்.’
போதுமான அளவு சீண்டிவிட்டான். அவள் இறங்கிச் சென்ற பிறகு, யமுனாவை அழைத்தான்.
“ யம்மு, அவகிட்ட நான் உன் அண்ணன்னு இன்னிக்கு சொல்லிடு. “
“ ஐயோடா! அண்ணனுக்கு அவங்க முகம் வாடுனா பொருக்கலையோ?! “
“ ஹே வாலு. பாவம் அவ, இதையே நெனச்சுட்டு அப்பறம் என்கூட சுத்தமா பேசாம போய்ட போறா. ப்ளீஸ் டா. அண்ணன் சண்டே உனக்கும் சுபிக்கும் மரத்துல ஊஞ்சல் கட்டித் தருவேனாம்.” லஞ்சம் கொடுத்தான்.
“ ஹே… சுப்பர் அண்ணா.. அவ கிட்ட சொல்றேன். சாரி..அண்ணி கிட்ட சொல்றேன்” வணக்கம் வைத்துக் கூற , அவளது தலையில் தட்டி அவளை அனுப்பினான்.
கல்லூரிக்கு வந்ததும் முதல் வகுப்பு ஆரம்ப்பமாகி இருந்தது. யமுனா அவசரமாக வாணியின் வகுபிற்கே வந்தாள். வகுப்பு ஆசிரியரிடம் அனுமதி வாங்கி அவளை வெளியே அழைக்க, வேறு வழியின்றி அவளும் சென்றாள்.
“ என்ன வேணும்.” வெடுக்கென கோபத்தைக் காட்டினாள்.
“ யம்மா தெய்வமே! கோச்சிக்காத.. ஜீவா எனக்கு அண்ணன். என்னோட சொந்த பெரியம்மா பையன். அப்பறம் சங்கரி தான் எங்க பெரியம்மா. சும்மா உன்ன பேச வைக்கத் தான் அண்ணன் அப்படி வம்பிழுத்துச்சு. அதை சொல்லத் தான் வந்தேன். கிளாஸ்க்கு டைம் ஆச்சு. அப்பறம் பார்க்கலாம். பை.” என்று விட்டு போயேவிட்டாள்.
இதயவாணிக்கு அவளின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் காதில் தேனாக வந்துப் பாய்ந்திருந்தது. சந்தோஷ வானில் மிதந்தாள். துள்ளிக் குதிக்க வேண்டும் போல இருந்தது.
ஆனாலும் அவன் தன்னை இப்படிக் கிண்டல் செய்துவிட்டானே என்று ஒரு முரட்டு மனம் முறுக்கிக் கொண்டது.
super a konduporinga story a .nice