Un Vizhigalil Vizhuntha Naatkalil – 7

Un Vizhigalil Vizhuntha Naatkalil – 7

“ வேலை எல்லாம் எப்படி போகுது?” சாப்பிட்டு முடித்து வெற்றிலையை மடித்து வாயில் போட்ட படியே சாய்வு நாற்காலியில் அமர்ந்துகொண்டு கேட்டார் தவசி.

வீட்டின் ஒரு தூணில் ஒற்றைக் காலை மடித்து சாய்ந்தபடி  நின்றுகொண்டிருந்தான் ஜீவா. அப்பாவிடம் சிறு வயது முதலே சற்று பயம் தான் அவனுக்கு. வளர வளர பயம் மறைந்து அது மரியாதையாக மாறியிருந்தது.

“ நல்லா போகுதுப்பா.” எங்கோ பார்த்தபடி சொல்ல,

“பதவி உயர்வு வந்ததுலேந்து கொஞ்சம் லேட்டா வர்ற வீட்டுக்கு. அவ்ளோ தூரம் போய்ட்டு வர சிரமமா இருக்குன்னு தான் உன்ன வண்டி வாங்கிக்க சொன்னேன். நீயே வாங்கறேன்னு சொன்ன..எப்போ வாங்கப் போற?” அவன் கண்களைப் பார்த்துக் கேட்க,

முன்பு போல இருந்தால், பதவி உயர்வு வந்ததும் அவனால் ஒரு கார் வாங்கிக் கொண்டு இருந்திருக்க முடியும். ஆனால் இப்போது அவனுக்கு வாங்க மனம் இல்லை. ரயிலில் தன்னவளுடன் பார்வை பரிமாற்றம் செய்தபடியே வரும் சுகம் அதில் கிடைக்காதே!

“ இல்லப்பா, அப்பறம் வாங்கிக்கலாம். இப்போ தான கொஞ்சம் சம்பாதிக்க ஆரம்பிச்சிருக்கேன். உடனே செலவு பண்ண வேண்டாம்ன்னு…” அவன் நிறுத்த,

“ அதுவும் சரி தான். நீயே சேத்து வெச்சா தான் பணத்தின் அருமை தெரியும்.” சொல்லிவிட்டு பின் தானே தொடர்ந்தார்.

“ நம்ம சுபிக்கு சீக்கிரம் நிச்சயம் பண்ணிடலாம்ன்னு இருக்கேன். நீ என்ன நினைக்கற?” இப்போதெல்லாம் குடும்ப விஷயத்தில் அவனையும் கலந்துகொள்ளாமல் அவர் முடிவெடுப்பதில்லை.

அவன்  தங்கை சுபத்ரா இப்போது தான் காலேஜ் சேர்ந்திருந்தாள். அவள் சிறு பெண் என்று தோன்ற,

“அப்பா, அவ ரொம்ப சின்ன பொண்ணு, அதுக்குள்ள ஏன் நிச்சயம்? அவ கொஞ்சம் பக்குவம் அடையட்டும்”  தங்கைக்காக அவன் குரல் சற்று சத்தமாகவே வெளியே வந்தது.

“ அவ சின்ன பொண்ணு தான். அதுனால தான் நிச்சயம் மட்டும் இப்போ பண்ணலாம். ஏன்னா உங்க மாமாக்கு உடம்பு இன்னும் மோசமாகிட்டே போகுது அதுனால பையனோட நிச்சயமாவது கண்ணால பார்க்கட்டும்னு

உங்க செண்பகம் அத்தை இங்க வந்து ஒரே பொலம்பல். பாவமா இருக்கு அவங்களையும் பார்க்க.. நீ என்ன சொல்ற?” அவருக்கும் ஆசை மனதில் இருக்கத்தான் செய்தது.

“ அதுவும் சரிதான். முத்து மாமா முன்ன மாதிரி இல்ல, ஆனந்த் தான் எல்லாத்தையும் பாத்துகறான். அவன் பொறுப்பானவன் தான். சரிப்பா சுபி கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு முடிவு பண்ணிடலாம். ஆனா கல்யாணம் அவ படிப்பு முடிஞ்சா பிறகு தான் , அதை தெளிவா சொல்லிடுங்க.“ அவனது சம்மதத்தை தெரிவித்தான்.

நேரே தங்கையின் அறைக்குச் சென்றான்.

“ சுபி  … சுபி …” அழைத்துக் கொண்டே உள்ளே செல்ல,

சட்டென புத்தகத்தை மூடி வைத்து விட்டு எழுந்தாள் அவனது செல்லத் தங்கை.  அதைக் கண்டும் காணாதது போல நடித்தான் ஜீவா.

“ படிக்கிறியா டா… எங்க அந்த வாலு யம்மு… ?”

அவர்கள் கூட்டுக் குடும்பம் என்பதால் யமுனாவின் தாய் காந்திமதியும் யமுனாவும் அங்கேயே தான் இருந்தனர். யமுனாவின் தந்தை இரண்டு வருடம் முன்பு தான் மஞ்சள்காமாலையில் இறந்திருந்தார்.

காந்திமதி தன் மகளுடன் பிறந்த வீட்டிற்கு கிளம்ப, தவசி தான் அவர்களை தடுத்து தங்களுடனேயே வைத்துக் கொண்டார்.

யமுனாவும் சுபத்ராவும் ஒரே வயதுடையவர்கள் தான். சிறு வயது முதலே ஒரே வீட்டில் இருப்பதால் தன் சொந்தத் தங்கையைப் போலத் தான் யமுனாவையும் பார்த்தான் ஜீவா.

சுபத்ராவிற்கும் யமுனவிற்கும் ஒரே அரை தான். அவள் அங்கே இல்லாததைக் கண்டு ஜீவா கேட்க,

“ அவ மொட்ட மாடில படிக்கறாண்ணா.. “  

“ சரி டா.. உன்கிட்ட ஒரு விஷயம் கேட்கணும். உனக்கும் நம்ம ஆனந்துக்கும் நிச்சயம் மட்டும் இப்போ பண்ணிடலாம்னு அப்பா நினைக்கறாங்க. உனக்குச் சம்மதமா ?”  அவள் முகத்தை ஆராய்ந்த படியே கேட்க,

சிறிது வெட்கம் அவள் முகத்தில் தோன்றவே செய்தது. அவளுக்கு இதில் சம்மதம் என்பதை அவன் ஏற்கனவே அறிவான். ஏனெனில் ஆனந்த், தன் சொந்த அத்தை மகளான சுபத்ரா மீது சிறு வயது முதலே ஆசை வைத்திருந்தான் என்பது அவர்களின் குடும்பம் அறிந்த ஒன்று.

“ அண்ணா.. நானும் உங்கிட்ட இத பத்தி சொல்லனும்ன்னு இருந்தேன்.”

“ என்ன டா . எதுவா இருந்தாலும் சொல்லு” அவளின் தலையைத் தொட்டுக் கேட்க,

“ இல்ல .. எனக்கும் யம்முக்கும் ஒரே வயசு தான் , அவல கூடவே வெச்சிகிட்டு , எனக்கு மட்டும் நிச்சயம்னு சொன்னா, அவ மனசு கஷ்டப்படாதா..? அதுனால …”

அப்போது தான் அவனுக்கும் அது உரைத்தது. உடனே சங்கடமாக உணர்ந்தான்.

சொல்லிக் கொண்டிருக்கும் போதே இடையிட்டாள் யமுனா,

“ ஒரு கஷ்டமும் இல்லை தாயே.. நீ முதல்ல கல்யாணம் பண்ணிட்டுக் கிளம்பு .. நான் பொறுமையா வெயிட் பண்ணி, லவ் பண்ணித் தான் கல்யாணம் பண்ணிப்பேன்.. அண்ணன் மாதிரி” இருவரையும் ஒரே நேரத்தில் வம்பிழுத்தாள்.

“ ஹே வாலு.. அடி வாங்காத, எதுக்கு இப்போ சத்தமா பேசி டமாரம் அடிக்குற…அப்பா காதுல விழறதுக்கா… உங்க ரெண்டு பேர் கிட்டயும் சொல்லியே இருக்கக் கூடாது”அவள் காதைத் திருக,

“ ஸ்ஸ்ஸ்.. ஆஆ.. சரி சரி விடுண்ணா …” காதைத் தேய்த்துக் கொண்டே அவள் கத்த,

“ அண்ணா , சுபி , ரெண்டு பேரும் நல்லா கேட்டுக்கோங்க. முதல்ல சுபி நிச்சயம் முடியட்டும். எனக்கு அதுல எந்த வருத்தமும் இல்ல. இன்ஃபேக்ட் ரொம்ப சந்தோஷம் தான். என்ன பத்தி எதுக்கு இப்போ கவலை? “ சிரித்துக் கொண்டே அவள் சொல்ல, அந்த அறைக்குள் நுழைந்தார் காந்திமதி.

“ ஜீவா , முதல்ல சுபி நிச்சயம் நல்லபடியா முடியட்டும், நாம அந்த வேலைய முதல்ல பார்ப்போம்ப்பா. இவளுக்கு என்ன அவசரம்.” பாசமாகக் கூறினார்.

“ இல்ல சித்தி, ரெண்டு பேருக்கும் ஒரே வயசு, நாளைக்கு வெளில யாரும் தப்பா ஒரு வார்த்த சொல்லிடக் கூடாது. நானும் இதப் பத்தி யோசிக்காம விட்டுட்டேன்.

உடனே அவன் கையைப் பற்றினாள் யமுனா.

“அண்ணா, எனக்கு நீ இருக்கறப்ப என்ன கவலை.  யாரும் தப்பா பேச மாட்டாங்க, கவலைப் படாதண்ணா” சமாதானம் சொல்ல

தன் மேல் அவள் வைத்திருக்கும் நம்பிக்கை  ஜீவா வை கண்கலங்க வைத்தது.

“ சரி அப்போ , ஆனந்த் மாமாக்கு  போன் பண்ணி விஷயத்தை சொல்லுங்க.. நம்ம சுபி நேர்ல பார்க்கட்டும். பாவம் எவ்வளோ நாள் தான் புக்குலயே ஒளிச்சி வெச்சு பார்ப்பா ”  என போட்டுக் கொடுத்தாள் யம்மு.

“அடியேய்! உன்னை கொல்லாம விடமாட்டேன் . நில்லு டி எருமை..” அவளை சுபி அடிக்க வர , சிக்காமல் ஓடினாள் யமுனா. வீடே கல்யாணக் களைக் கட்டியது போலத் தோன்றியது பெரியவர்களுக்கு.

சிறிது வருத்தம் ஜீவா  மனதில்  இருக்க, தன் தந்தையிடம் இதைப் பற்றிப் பேசினான்.

“ நானும் இதைப் பத்தி யோசிச்சேன் ஜீவா. நம்ம சுபிக்கு நல்ல இடமா பாத்த மாதிரி அவளுக்கும் நல்ல இடமா அமையனும். அதுனால அவசரப் பட வேணாம். என்னோட நண்பன் ஒருத்தன் இருக்கான். அவன் பையன்னுக்கு நம்ம யமுனாவ கேட்கலாம்னு ஒரு யோசனை இருக்கு. அவன சுபி நிச்சயத்துக்கு வர சொல்றேன். பேசிப் பார்ப்போம்” அவர் மனதில் இருந்ததை காந்திமதி மற்றும் சங்கரியின் முன்பே சொன்னார்.

எல்லோருக்கும் அது நல்ல படியாக நடக்க வேண்டும் என்ற வேண்டுதல் மனதில் இருந்தது.

 

***************************************

 

ஒருவரின் மீது தேவையில்லாமல் பழி சொன்ன பிறகோ அல்லது தவறு செய்யாத ஒருவர் மீது குற்றம் சாட்டுவது போலவோ நடந்து கொண்டால் , நிச்சயம் மனசாட்சி உறுத்தவே செய்யும். அதுவும் சம்மந்தப் பட்டவர்கள் அதை அறியாமலேயே பழி சொன்னவரிடம் இன்னும் நட்பாக இருந்தால் அந்த நிலை துரோகம் செய்துவிட்டோமோ என்ற உணர்வையே தரும்.

அப்படிப்பட்ட உணர்வு செய்த தவறை வெளிப்படையாக சொல்லி மன்னிப்பும் கேட்க முடியாமல், அவர்களின் அந்தப் பாசத்தை ஏற்கவும் முடியாமல் இருதலைக் கொள்ளி எறும்பாக துடிக்க வைக்கும். அது நரகம்.

அந்த நரகத்தின் வாசலில் தான் இப்போது நின்று கொண்டிருந்தாள் வாணியின் உயிர்த் தோழியான கண்மணி.

இதை எதையுமே அறியாத வாணி அவளிடம் அன்பைப் பொழிந்தாள். வாணிக்கும் உள்ளே உறுத்தல் இருந்தது, அது ஜீவாவைப் பற்றி அவளிடம் சொல்வது.

அன்று எப்படியும் அவளிடம் சொல்லிவிட வேண்டும் என்று முடிவு செய்தாள். கல்லூரியில் அன்று ‘ ஸ்போர்ட்ஸ் டே ‘!

எப்போதும் போல தங்களது டிபார்ட்மென்டுக்காக கரகோஷம் செய்தும், உற்சாகப்படுத்தியும் பொழுதைக் கழித்துக்கொண்டிருந்தார்கள்.

கத்தி கத்தி தொண்டை வறண்டு போகவே , தண்ணீர் பிடித்து வர எழுந்தாள் கண்மணி, தானும் உடன் வருவதாக உடன் சென்றாள் இதயவாணி.

எவ்வளவு தான் உள்ளுக்குள் பூசல் இருந்தாலும், ஒருவரின் கம்பனி மற்றவருக்கு எப்போதும் பிடித்தமான ஒன்று. இருவரும் அன்று நடந்த போட்டிகளைப் பற்றி பேசிக்கொண்டே செல்ல, வாணி தன் மனதில் இருப்பதை சொல்ல நினைத்தாள்.

 “ கண்மணி , உன்கிட்ட ரொம்ப நாளா சொல்லணும்னு நெனச்சிட்டு இருந்தேன். என்னடா இவ இப்போ மட்டும் வந்து சொல்றாளேன்னு என்னை தப்பா நினைக்காத. உங்கிட்ட ஜீவாவப் பத்தி சொல்லணும்.” மெதுவாக ஆரம்பிக்க,

முன்னைப் போல் இருந்தால் முறுக்கிக் கொண்டு, ‘ஒன்னும் வேணாம் எனக்கு எல்லாம் தெரியும் நீ ஏன் லேட்டா சொல்ற’ என்று உரிமையோடு சண்டைப் போட்டிருப்பாள். இப்போது தன பக்கமும் ஏதோ தவறு செய்த உணர்விருந்ததால் பொறுமையாகவே ,

“சொல்லுங்க மேடம்.. இப்போவாச்சும் சொல்லனும்ன்னு தோன்னுச்சே.. நானும் உங்க ஊமை நாடகத்தை கொஞ்ச நாளா வாட்ச் பண்ணிட்டுத் தான் இருக்கேன். சொல்லுங்க ..” தண்ணீர்ப் பிடித்துக் கொண்டே கேட்க,

அவர்களின் முதல் சந்திப்பு முதல் படிப்படியாக இன்று யமுனாவிடம் பேசுவது வரை அனைத்தையும் சொல்லி முடித்தாள்.

“எனக்குத் தெரியல கண்மணி. இதை காதலா நினைக்கறத்துக்குத் தான் ஆசையா இருக்கு, என் குடும்பத்தை பத்தியும் யோசிக்க வேண்டியதா இருக்கே! அதை நினைச்சாலே மனசுல பொங்கி வர்ற ஆசை கூட டக்குனு அடங்கிடுது. ஆனா அவன பாக்கறப்ப என் மனசு என்னையும்  மீறி அவன் கிட்ட தான் போகுது. இது எங்க கொண்டு போய் விடுமோ தெரியல“, தன்னுடைய உண்மை நிலையை அவள் விளக்கினாள்.

அதைக் கேட்ட போது கண்மணிக்கே கொஞ்சம் மனம் இளகித்தான் போனது.

 காதலை மனதில் வைத்துக் கொண்டு, அதை சொல்லாமல் தவிப்பது மிகவும் கொடுமை தான்.

அதை அவளும் அனுபவித்தவள் தான். தன் அத்தை மகனையே காதலித்து அதை சொல்ல 2 வருடம் போராடி பின்பு அவனும் ஒப்புக்கொண்டு, இப்போது நிச்சயமும் செய்திருந்தார்கள். அதனால் தான் முதலில் அவள் ஜீவாவை நேசிப்பது தெரிந்ததும் மகிழ்ந்தாள்.

இப்போது அவள் தன்னிடம் சொல்லியும் விட்டாள். அவளுடைய பாரத்தை இறக்கி வைத்துவிட்டாள். ஆனால் கண்மணியோ தான் செய்த அந்த காரியத்தை எப்படி சீர் செய்வது. அத சுலபமான காரியமும் இல்லையே! இந்த சங்கடத்தை எங்கு போய் தீர்ப்பது.

ஒரு வேளை அதை இப்போது வாணியிடம் சொன்னால், அவள் எவ்வாறு எடுத்துக் கொள்வாள் என்பது தெரியாது. சொல்லாமல் இருப்பதும் வதையாக இருந்தது.

மனதில் குழப்ப ரேகை ஓடிக்கொண்டிருந்தது முகத்தில் தெரிய,

“ என்ன கண்மணி ஒன்னும் சொல்ல மாட்டேங்கற ?!” அவளின் பதிலுக்காக காத்திருந்தாள் வாணி.

தன் நினைவிலிருந்து கலைந்தவள்,

“ மனசுல காதல் வந்துட்டா கூடவே குழப்பமும் வந்துடும். அதுனால நீ ஜீவா கிட்ட இதப் பத்தி பேசு வாணி. அது தான் நல்லது.” , இப்போதாவது தன் தோழிக்காக பேச வேண்டும் என்று தோன்றியது. பிறகு எப்படியாவது வில்லியமிடம் விலகிக்கொள்ளச் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்தாள்.

“ அவனுக்கும் மனசுல இருக்குன்னு தெரியும். ஆனா அவன் ஒரு வார்த்தை கூட அந்த மாதிரி பேசுனதில்ல , நான் போய் எதுவும் பேச மாட்டேன்.” பிடிவாதமாகச் சொன்னாள்.

“ இங்க பாரு, நாளைக்கு என்ன நடக்கும்னு யாருக்கும் தெரியாது. அதுனால ஒழுங்கா உன் மனச அவன்கிட்ட சொல்லிடு. அது தான் நல்லது. “ வில்லியம் பற்றி லேசான பயத்தில் தான் அவ்வாறு சொன்னாள் கண்மணி.

“ நாளைக்குள்ள என்ன நடந்துடும்? அதெல்லாம் வெய்ட் பண்ணி சொல்லிக்கலாம். உன்கிட்ட சொல்லிட்டேன். எனக்கு இப்போதான் நிம்மதியா இருக்கு.. அது போதும். வா போகலாம்..” சாதரணமாக எடுத்துக் கொண்டு சென்றுவிட்டாள்.

Comments Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!