ஆனந்தின் குடும்பம் தவசியின் குடும்பத்தைப் போலே வசதி உள்ளவர்கள் தான். மிகவும் மரியாதை தெரிந்தவர்கள். ஆனந்தின் அப்பா முத்து , சங்கரியின் உடன் பிறந்த அண்ணன்.
முத்துவிற்கு இரண்டு முறை ஹார்ட் அட்டாக் வந்துவிட்டதால் , ஒரே மகனான ஆனந்தின் திருமணத்தை விரைவில் பார்த்துவிட ஆசைப் பட்டார். ஆனந்த் தன் தந்தையின் தொழிலான கார்மெண்ட்ஸ் பிசினெஸ்சை இப்போது அவரை விட லாபம் அதிகம் வரும்படியே பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனுக்கு சிறு வயது முதலே சுபத்ராவின் மீது கொள்ளைப் பிரியம். சங்கரியும் அவனிடம் ‘இவ தான் உன்ன கட்டிக்ப்போறா’ என்று சொல்லியே வளர்த்துவிட அந்த ஆசை மனதில் வேரூன்றி நின்றுவிட்டது. சுபத்ராவும் அவன் மீது ஆசை வைத்திருந்தாள்.
வீட்டில் ஏதேனும் விசேஷம் என்றால், மற்றவர்களை விட இவர்களுக்கே கொண்டாட்டம். ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளலாம், தங்களின் வாழைத் தோப்புக்கு சென்று தனிமையில் பேசலாம் என்று திட்டம் போட ஆரம்பித்துவிடுவார்கள். ஒரே ஊர் என்பதால் அடிக்கடி திருட்டுத்தனமாக சந்திப்பார்கள்.
அதனால் தான் யமுனா வெளியூர் சென்று நல்ல கல்லூரியில் படிக்கலாம் என்று சொன்ன போது, வேண்டாம் என்று உள்ளூரிலேயே ஒரு சுமாரான கல்லூரியில் அடம் பிடித்து சேர்ந்திருந்தாள். அடிக்கடி ஆனந்தைப் பார்க்கலாம் என்ற எண்ணம்.
என்ன தான் முறைப் பெண் என்றாலும் ஒரு கண்ணியத்தோடே பழகுவான் ஆனந்த். அதுவே அவன் மீது சுபத்ராவிற்கு காதல் அதிகமாக காரணம்.
ஜீவாவிற்கும் இவர்களின் பழக்கம் தெரிந்தாலும், ஆனந்தைப் பற்றி நன்றாகத் தெரியும் என்பதால் கண்டுகொள்ள மாட்டான்.
ஆனந்தின் குடும்பத்திடம் இப்போது பேசி, அவர்களின் நிச்சயத்தை வரும் வாரத்தில் செய்ய ஏற்பாடு செய்திருந்தனர். அனைத்து ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருந்தது.
“ யம்மு.. நீ உன் ப்ரெண்ட்ஸ கூப்பிடப் போறியா?” அவளிடம் சிரித்தபடி கேட்டான் ஜீவா.
“ம்ம் .. சாருக்கு யாரைக் கூப்பிடனும்?” இடுப்பில் கை வைத்துக் கொண்டு அவனைப் பார்க்க,
“ என் தங்கச்சிக்கு எல்லாம் தெரியுமே அப்பறம் என்ன கேள்வி…?” அவள் தலையில் கொட்ட,
“ தங்கச்சிங்களா பொறந்தா என்ன என்ன வேலை செய்ய வேண்டியதா இருக்கு…! இதுல சுபத்ரா தப்பிச்சிட்டா.. அப்பயே சொன்னா நான் தான் கேட்காம அங்க வந்து சேர்ந்தேன்.ஹ்ம்ம் “ என அலுத்துக் கொள்ள,
“ அண்ணனுக்கு ஹெல்ப் பண்ணா அந்த அண்ணாமலையானுக்கே ஹெல்ப் பண்ண மாதிரி.. பண்ணு பரிட்சைல பாஸ் பண்ணிடுவ பாரு” கிண்டலடித்தான் .
“ இது வேறயா… செய்யறேன்.. இன்னும் என்ன என்ன செய்யணுமோ” அலுத்துக்கொண்டே செல்ல,
“ யம்மு ஒரு நிமிஷம்” ஏதோ யோசனையில் அவளை நிறுத்தினான்,
என்ன என்பது போல அவள் கேள்வியாய் அவனைப் பார்க்க,
“ நீ அவள கூப்பிட வேணாம் . நானே கூப்டுறேன். எத்தனை நாள் தான் இந்த கண்ணாமூச்சி ஆடறது” ஒரு முடிவுடன் சொல்ல,
“ அட, அப்போ மீட் பண்ண போறியா? எப்போ ?” ஆர்வமானாள் யமுனா,
“ தெரியல பார்போம். பிளான் எதுவும் இல்ல, ஆனா நான் அவ கிட்ட பேசணும்” உதட்டோர புன்னைகையுடன் அங்கிருந்து சென்றான்.
அடுத்த நாளே காலையில் அவளை ரயிலில் சந்தித்தான். அவள் இருக்கும் இடம் சென்று அவளை அழைத்தான்.
உடன் கண்மணி இருக்க அவள் என்னவென்று கேட்க அவன் அருகில் சென்றாள்.
“ இன்னிக்கு ஈவினிங் காலேஜ் முடிஞ்சு நேரா சர்ச் கிட்ட இருக்கற ஐஸ் கிரீம் பார்லருக்கு வந்துடு. தனியா . உன்கிட்ட கொஞ்சம் பேசணும். “ நேராக விஷயத்திற்கு வந்தான்.
அவளுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சி. இருந்தாலும் உடனடியாக ஒப்புக்கொள்ளாமல் மறுக்க நினைத்தாள்.
“ இல்ல அது தனியா…” என்று ஆரம்பிக்க,
“ ப்ளீஸ் எக்ஸ்கியூஸ் சொல்லாத , நான் அஞ்சு மணிக்கு கரெக்டா அங்க இருப்பேன். நீயும் வந்துடு” அவள் பதிலுக்காக காத்திருக்காமல் சென்று விட்டான்.
அவள் திரும்பி வர , அவர்களின் பேச்சு வார்த்தையை க் கேட்டுக் கொண்டிருந்த கண்மணி ,
“ ஹே போய்ட்டு வா , மிஸ் பண்ணாம “ சிரித்துக் கிண்டல் செய்தாள்.
அன்று முழுதும் அவன் என்ன பேசப் போகிறான் எப்படி ரியாக்ட் செய்வது என்று மனம் ஒரு பதட்டத்துடனே இருந்தது.
அவன் ஒரு வேளைக் காதலை சொன்னால், அதற்கு தன்னுடைய பதில் என்ன என்று யோசித்தாள். அவளுக்கு மறுக்கும் எண்ணம் சிறிதும் வரவில்லை. ஆனால் ஏற்கவும் தயக்கம் தான்.
இதயத்தில் காய்ச்சல் வந்தது போன்ற உணர்வு. இது ஒரு புது வித அனுபவம். உடல் நன்றாகத் தான் இருந்தது. மனம் மட்டும் காய்ச்சலில் தவித்தது. காதல் காய்ச்சல் போலும்!
ஒவ்வொரு மணி நேரமும் யுகம் போல சென்றது. எப்படியோ நெட்டித் தள்ளினாள். அவள் எதிர்ப்பார்த்த நேரமும் வந்தது. கல்லூரி முடிந்து அனைவரும் கிளம்பினர்.
இதயத் துடிப்பு அதிகமானது. இத்தனை நாள் அவனை தனிமையில் எங்கும் திட்டமிட்டு சந்தித்ததில்லை. ஆனால் இன்று அவன் தன்னை அழைத்திருக்கிறான். யமுனாவிடம் பேசியவரை அவன் நல்லவனாகத் தான் தெரிந்தான்.
மூச்சை ஆழ்ந்து இழுத்து விட்டாள். ஒரு முறை. இரு முறை . இன்னொரு முறை. அங்கிருந்து கிளம்பினாள்.
போகும் பொது ‘ ஆல் தி பெஸ்ட், மனசுல இருக்கறத வெளிப்படையா பேசிட்டு வா ‘ என்று சொல்லி அனுப்பினாள் கண்மணி.
கண்மணியுடன் சென்று இவள் வேறு புறம் திரும்பிச் செல்ல, கண்மணி வழக்கம் போல சென்றாள்.
மைக்கல்ஸ் ஐஸ் கிரீம் பார்லர் , வாசலிலேயே ஒரு நிமிடம் நின்றாள். கையில் இருந்த வாட்சைப் பார்க்க, மணி ஐந்து ஐந்து ஆகி இருந்தது. கருப்பு கண்ணாடியால் உள்ளே இருப்பது வெளியே தெரியாதவாறு அமைக்கப் பட்ட கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றாள்.
மிதமான அளவில் ஏ சி ஓடிக் கொண்டிருந்தது சற்று இதம் அளிக்க, சுற்றிப் பார்த்து அவனைத் தேடினாள்.
ஒரு ஓரத்தில் இருந்த டேபிளில் இருந்து எழுந்து நின்றான்.
“ ஹாய் “ என்று கை மட்டும் அசைத்தான்.
அவனுக்கு எதிரே சென்று அமர்ந்தாள். சற்று களைத்திருந்தாலும் மிகவும் அழகாக இருந்தான். அவனுக்கும் உள்ளே டென்ஷன் தான்.
“ என்ன ப்ளேவர் புடிக்கும் சொல்லு, ஆர்டர் பண்றேன்” அவளின் விருப்பத்தைக் கேட்க,
அவளும் மறுக்காமல் அலட்டாமல் “ வெண்ணிலா “ என்றாள்.
அருகே வந்த வெய்டரிடம் “ ரெண்டு வெண்ணிலா வித் ப்ரூட்ஸ் “ என்று சொல்லிவிட்டு அவன் சென்றதும் , அவளைப் பார்த்தான்.
“ காலேஜ் எப்படி போச்சு இதயா ?” சாதரணமாக பேச்சைத் தொடங்கினான்.
ஏற்கனவே அவர்களுக்குள் இருந்த சிறு சிறு பேச்சு வார்த்தையால் அவளும் சகஜமாகவே பேசினாள்.
“ ம்ம்ம்.. ஏதோ .. உண்மைய சொல்லணும்னா கொஞ்சம் டென்ஷனா போச்சு” மறைக்காமல் சொன்னாள்.
“ இருக்கும். எனக்கும் அப்படித் தான். உன்ன பார்க்க வர வரைக்கும் டென்ஷன் தான். இப்போ பரவால்ல..”
“ சரி சொல்லுங்க ஜீவா , என்ன விஷயம்”
“ என்னவா இருக்கும்னு நினைக்கற?”
“ நான் எதுவும் நினைக்கல..” அவசரமாகக் கூறினாள்
அவனுக்கு அவளைக் கண்டு சிரிப்புத் தான் வந்தது. அதற்குள் ஆர்டர் செய்த ஐஸ்கிரீம் அலங்கரிக்கப்பட்ட பழங்களுடன் வந்துவிட அதை சுவைக்க ஆரம்பித்தனர்.
“ சரி நான் நேரா விஷயத்துக்கு வரேன். அடுத்த வாரம் சண்டே நிச்சயதார்த்தாம்.” ஓரக்கண்ணால் அவளைப் பார்த்துக் கொண்டே அவன் சொல்ல,
அவள் சாப்பிட்டுக் கொண்டிருந்த திராட்சையை கடிக்காமலேயே முழுங்கி விட்டாள். அவளுக்குத் தூக்கி வாரிப் போட்டது. அவன் என்ன சொன்னான் என்று விளங்கவில்லை.
அருகில் இருந்த ஐஸ் வாட்டரை எடுத்து கட கடவென குடித்தவள்,
“ என்ன சொன்னீங்க இப்போ?” என்று அவனைக் கண்ணை உருட்டிக் கேட்டாள். ‘என்னடா இது , காதலை சொல்லுவான்னு பார்த்தா, அவனோட கல்யாணத்தப் பத்தி சொல்றான்’ உள்ளுக்குள் சுனாமியே வந்தது அவளுக்கு.
அவனுக்கு அதைக் கண்டு அடக்க மாட்டாமல் சிரிப்பு வந்தது. சிரித்தும் விட்டான். சற்று எரிச்சலுற்றாள் வாணி.
“ ஜீவா.. ஸ்டாப் .. உங்களுக்கு நிச்சயமா?” அதிர்த்து கேட்க,
அவனுக்கு அவளைக் கட்டிக் கொண்டு கொஞ்ச வேண்டும் போல இருந்தது.
“ ம்ம்ம்… “ என யோசித்து விட்டு ,
“ இல்ல இதயா, என் தங்கச்சிக்கு “ என்று சொல்ல, அவளுக்கு அப்போது தான் மூச்சே வந்தது.
‘பாவி! ஒரு நிமிஷத்துல கலங்கடிச்சுட்டானே! ‘ ஆர்ப்பரித்தது அவளது மனம்.
கண்ணை மூடித் திறந்தவள் , “ ஓ” என ஒற்றை வார்த்தையில் நிறுத்தினாள்.
“ என்ன மேடம் எதுக்கு டென்ஷன் ஆனீங்க?” நேரடியாகக் கேட்டான்.
“அதெல்லாம் இல்ல” காட்டிக் கொள்ளாமல் இருந்தாள்.
“ கமான் இதயா. இன்னும் எத்தனை நாள் தான் மறைக்கறது. உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும். அடுத்த ஸ்டெப் எடுத்து வைக்க வேண்டாமா? ம்ம் ?” அவன் பேச்சில் அவளுக்கு இதயம் சில்லிட்டது.
“ ஜீவா…” வார்த்தை வரவில்லை வாணிக்கு. ஒரு சில நிமிடம் அங்கே மௌனம் நிலவியது.
“ சரி நீயா எதாவது சொல்லுவன்னு எதிர்ப்பார்த்தேன். அது நடக்காது போலிருக்கு. ஆனா எனக்கு மனசுக்குள்ளேயே போட்டு அழுத்திக்க முடியல. “ அவன் ஆரம்பிக்க,
அவள் அவனைப் பார்க்காமல் , கஅங்கிருந்த ஐஸ் க்ரீமைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ இதயா…!” மெல்ல அவன் அழைக்க,
நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
“ உன்னப் பார்த்த முதல் சந்திப்பிலேந்து , நீ தான் என் மனசு ஃபுல்லா இருக்க இதயா. என்னோட மனசுக்குப் பிடிச்ச முதல் பொண்ணு நீ தான். அது எந்த காலத்துலயும் மாறாது. சும்மா உன்ன டீஸ் பண்ணிருப்பேன் அப்பப்ப ஆனா அதெல்லாம் …. நீ என்கிட்ட பேசணும்னு மட்டும் தான்.
ஐ வான்ட் டு ஷேர் மை என்டையர் லைஃப் வித் யூ , வித் ஆல் மை லவ். என்னோட லவ் , லைஃப் ரெண்டும் , இதயா மட்டும் தான்னு என் மனசு சொல்லுச்சு. உன் மனசும் அதே மாதிரி சொல்லுதான்னு கேட்டு சொல்லு… உன்ன நான் கார்னர் பண்ணல, நான் வெய்ட் பண்றேன்.
நெக்ஸ்ட் சண்டே எங்க வீட்டுக்கு நீ வந்தா அதையே உன்னோட சம்மதமா எடுத்துக்கறேன். “ மிகவும் டீசன்ட்டாக அவனது காதலை அவளிடம் சொல்லிவிட்டான்.
அவள் இமைக்கவும் மறந்து அவன் வசம் இருந்தாள். இப்போது காதுகளை நன்றாக விரித்து வைத்து அவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
அப்போதே அவளுக்கும் சரி என்று சொல்லிவிட ஆசை தான். ஆனால் அவளது அம்மாவும் அண்ணனும் இதயத்தில் வாயில் காப்பாளர்கள் போல நின்றுகொண்டிருந்தார்கள். அவளின் பதிலுக்காக அவன் காத்திருக்கிறான் என்று புரிய,
“ தேங்க்ஸ் ஃபார் தி டைம். “ புன்னகைத்துக் கொண்டே சொல்ல,
அவளின் மனம் அவனுக்கு சொல்லாமலேயே புரிந்தது. இருந்தாலும் சண்டேவிற்காகக் காத்திருந்தான்.
அவளும் தான்!!
Comments Here
Leave a Reply