சென்னை – அண்ணா நகர்
அண்ணாநகரின் நான்காவது அவென்யூ தெரு விதவிதமான அடுக்கு மாடி வீடுகளோடு நிறைந்து இருக்க அந்த பகுதி முதல் பார்வையிலேயே செல்வந்தர்கள் மாத்திரமே வாழும் பகுதி அது என்பதை கூறாமல் கூறியது.
அங்கே இருந்த வீடுகளிலேயே பெரிய அரண்மனை ஒன்றின் தோற்றத்தை ஒத்திருந்த அந்த ‘செந்தமிழ் இல்லம்’ மாலை நேரத்திற்கான அஸ்தமனத்தை தழுவி விளக்குகளை ஒளிர விட்டு கொண்டிருக்கையில் அந்த வீட்டின் ஹாலில் அந்த இல்லத்தின் குடும்பத்தினர் எல்லோரும் ஒன்று கூடியிருந்தனர்.
மறுபுறம் அந்த இல்லத்தில் பணி புரியும் வேலையாட்களுக்கென்று ஒரே மாதிரி சீருடைகள் கொடுக்கப்பட்டிருந்தது போல ஒரே மாதிரியான உடைத் தோற்றத்தில் இருந்த அவர்கள் எல்லோரும் தங்கள் வேலைகளில் வெகு சிரத்தையுடன் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
ஹாலின் நடுவில் போடப்பட்டிருந்த இருக்கையில் நடுநாயகமாக அசோகன் அமர்ந்திருக்க அவரை சுற்றி அவரது மனைவி, பிள்ளைகளும், பேரப் பிள்ளைகளும் நின்று கொண்டிருக்க அவர்கள் அனைவரது முகத்திலும் கவலையின் சாயல் தேங்கிப் போய் இருந்தது.
மதியழகன் தன் பாட்டி வளர்மதியைப் பார்த்து ஜாடையில் தன் தாத்தாவிடம் பேசுமாறு கூறவும் சிறிது தயக்கத்துடன் தன் கணவரின் புறம் திரும்பி பார்த்தவர் மெல்ல எட்டு வைத்து அவரருகில் சென்று அவரது தோளில் தன் கரத்தை வைத்தார்.
அத்தனை நேரமாக தலையைக் குனிந்தவாறு அமர்ந்திருந்த அசோகன் தன் தோளில் பட்ட ஸ்பரிசத்தில் திரும்பிப் பார்க்க தன் கணவரின் கலங்கிய கண்களை பார்த்து பரிதவித்து போனார் வளர்மதி.
“என்னங்க! என்ன இது?” தவிப்போடு தன் கணவரின் கண்களை துடைத்து விட்டபடியே அவர் கேட்கவும்
அவரது கரங்களை தன் கரங்களுக்குள் வைத்து இறுக்கிப் பிடித்துக் கொண்டவர்
“என்னோட இழையினிக்கு என் குரலைக் கூட கேட்கப் பிடிக்கலையா மதி?” நா தழுதழுக்க கேட்கவே அவரை சுற்றி நின்றவர்கள் அவரது அந்த நொறுங்கிப் போன தோற்றத்தை பார்த்து கவலையுடன் நின்று கொண்டிருந்தனர்.
தன் குடும்பத்தின் முதல் பெண் வாரிசு கலைச்செல்வியின் பிள்ளை அதிலும் தன் பரம்பரையில் மூன்றாம் தலைமுறையின் முதல் பெண் வாரிசு இழையினி என்பதால் என்னவோ அசோகனுக்கு அவள் மேல் மற்ற அனைவரையும் விட அளவு கடந்த அன்பு உண்டு.
இழையினிக்கும் அவ்வாறு தான் தன் தாய், தந்தை, சகோதரனை விடவும் தாத்தா என்றால் அவ்வளவு பிரியம்.
ஆனால் இப்போது அவரோடு பேசுவதற்கு கூட அவள் மனதில் தைரியம் இல்லை.
தன் வாழ்க்கையில் தனக்கு ஒரு அடையாளமாக இருந்த தன் தாத்தாவும் தன் தாயின் உயிர் பிரியக் காரணம் என்பதை இன்று வரை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
தன் பேத்தியின் வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும் என்று தானே தான் இதையெல்லாம் செய்தோம் அப்படியிருந்தும் அவள் தன்னை புரிந்து கொள்ளவில்லையே என்று எண்ணியபடியே மனம் வருந்தி அசோகன் முற்றிலும் நொறுங்கி போய் அமர்ந்திருக்க மதியழகனோ அவர் முன்னால் வந்து முழங்காலிட்டு அமர்ந்து கொண்டான்.
“தாத்தா!” அவனது அழைப்பில் மெல்ல அவனை நிமிர்ந்து பார்த்தவர் சிறு புன்னகையுடன் தன் மனைவியின் கரத்தைப் பற்றி இருந்த ஒரு கரத்தை எடுத்து அவனது தலையை கோதி விடவே
அவரது கரத்தின் மேல் தன் கரத்தை வைத்து அழுத்தி கொடுத்தவன்
“நீங்க தான் இந்த குடும்பத்தின் ஆணி வேர் தாத்தா! நீங்களே இப்படி உடைந்து போய் இருந்தால் நாங்க எல்லாம் என்ன செய்வோம் தாத்தா?” என்று கேட்க அவரோ சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருந்தார்.
“இழை சின்ன பொண்ணு தாத்தா அவளுக்கு அம்மான்னா அவ்வளவு இஷ்டம் அவளுக்கு அவங்க இழப்பை உணர்ந்து கொள்ள இன்னும் கொஞ்சம் நேரமும், காலமும் எடுக்கும் அவ அதை எல்லாம் உணர்ந்த பிறகு நிச்சயமாக பழைய படி உங்களைத் தேடி வந்து பேசுவா”
“இரண்டு வருஷமாக என் கூட பேசாமல் இருக்குறவ இனியும் வருவான்னு எனக்கு தோணல அழகா!”
“அப்படியெல்லாம் சொல்லக் கூடாது தாத்தா! நீங்க முதலில் உங்க ரூமுக்கு போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க நீங்க கொஞ்சம் தூங்கி எழுப்பினால் சரி ஆகிடுவீங்க வாங்க தாத்தா ரூமுக்கு போகலாம்” அவரைத் தன் தோளோடு சேர்த்து அணைத்தவாறு அந்த விசாலமான ஹாலின் பக்கவாட்டில் இருந்த ஒரு மைதானம் போன்று பரந்து விரிந்து இருந்த அறைக்குள் அவரை அழைத்துச் சென்ற மதியழகன் அவர் தூங்கும் வரை அவரருகில் இருந்து விட்டு அவருக்கு போர்வையையும் போர்த்தி விட்டு அவரது தலையை ஆதரவாக வருடிக் கொடுத்து விட்டு மீண்டும் ஹாலை நோக்கி சென்றான்.
“தாத்தா தூங்கிட்டாரா அழகா?” தன் தந்தை இளமாறனின் கேள்விக்கு அவரைப் பார்த்து ஆமோதிப்பாக தலை அசைத்தவன்
“யாருக்கு ஆறுதல் சொல்லுறதுன்னே புரியலப்பா! எல்லோருக்காகவும் ஓடியாடி வேலை செய்த தாத்தாவைப் பார்க்குறதா? இல்லை ராணி மாதிரி வாழ வேண்டிய பொண்ணு தன் வாழ்க்கையையே இழந்துட்டு யாருமே இல்லாத ஆதரவற்றவள் மாதிரி தனியா எங்கேயோ இருந்து கஷ்டப்பட்டுட்டு இருக்காளே அவளைப் பார்க்குறதா? எனக்கு ஒண்ணுமே புரியலப்பா” சோர்வாக அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொள்ள
அவனருகில் வந்து நின்ற அவனது மாமா கதிரரசன்
“இதற்கெல்லாம் ஒரேயொரு வழி தான் இருக்கு அழகா! எப்படியாவது அப்பாவையும், இழையையும் நேரில் பார்க்க வைத்தால் போதும் இழைக்கு மனதில் என்ன தான் கோபம் இருந்தாலும் அவ அடுத்தவங்க மனதை காயப்படுத்துவது மாதிரி ஒரு நாளும் நடந்து கொள்ள மாட்டாள்! நீ அதற்கான ஏற்பாடுகளைப் பண்ணு அப்போதான் இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு வரும்” என்று கூறவும்
“அது அவ்வளவு சுலபம் இல்லை” என்றவாறே அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தாள் தேன்மொழி.
காலேஜ் முடிந்து அப்போது தான் வந்தது போல் களைத்து போய் இருந்தவள் முகம் மதியழகனிற்கு ஏதோ ஒரு புத்துணர்ச்சியை அளித்தது போல இருக்கவே அவன் அவளையே சிறிது நேரம் இமைக்காமல் பார்த்து கொண்டு இருந்தான்.
அவள் கையில் இருந்த புத்தகங்களை எல்லாம் வாங்கிக் கொண்ட படியே
“ஏன் அப்படி சொல்லுற தேனு?” எழிலரசி கேள்வியாக அவளை நோக்க
அவர்கள் முன்னால் வந்து நின்றவள்
“எனக்கு இழையைப் பற்றி ரொம்ப நல்லா தெரியும் அவ எந்த விஷயத்தில் வேண்டுமானாலும் இறங்கி வருவா ஆனால் அத்தை விஷயத்தில் அவ மாறவே மாட்டா இந்த இரண்டு வருஷத்தில் உங்களுக்கு எல்லாம் அது நல்லா புரிந்து இருக்கும் இல்லைன்னா நம்ம கிட்ட இது வரை எப்போதாவது பேசுற இழை தாத்தா கிட்ட ஒரு வார்த்தை கூட இது வரை பேசவே இல்லையே! ஏன் அவரைப் பற்றி ஒரு வார்த்தை கூட விசாரித்ததும் இல்லையே!” என்று கூறவும்
அதை கேட்டு கொண்டு நின்ற வளர்மதி
“தேனு சொல்லுறதும் சரி தான் இழையினி எப்போதும் இவ்வளவு பிடிவாதமாக இருந்தது இல்லை இன்னைக்கு கலைச்செல்வியோட இரண்டாவது வருட நினைவு நாள் அந்த நாளில் அவ தாத்தா மீதான கோபம் அவளுக்கு இன்னும் அதிகமாக இருக்குமே தவிர குறைந்து இருக்காது ஒரு இரண்டு, மூணு நாள் போகட்டும் நான் இழையினிகிட்ட பேசி இதற்கு என்ன பண்ண முடியும்னு பார்க்கிறேன் அதோடு எனக்கு அவ மேல முழு நம்பிக்கை இருக்கு என்ன தான் தாத்தாவோட அவளுக்கு கோபம் இருந்தாலும் அவரோட பாதுகாப்பில் இருக்கும் இடத்தில் தானே அவ இப்போதும் இருக்கா அது ஒண்ணே போதுமே அவளை சமாதானப்படுத்த!” என்று கூறவே அங்கிருந்த அனைவரும் அதை ஏற்றும் கொண்டனர்.
சிறிது நேரத்தில் அங்கு நின்று கொண்டிருந்த எல்லோரும் அவரவர் வேலைகளைப் பார்க்க சென்று விட அந்த ஹாலில் தேன்மொழி மற்றும் மதியழகன் மாத்திரமே எஞ்சியிருந்தனர்.
ஹாலில் யாரும் இல்லை என்பதை பார்த்துக் கொண்ட தேன்மொழி நாற்காலியில் பின்னோக்கி சாய்ந்து அமர்ந்து கண்களை மூடியபடி அமர்ந்திருந்த மதியழகன் முன்னால் வந்து நின்று
“அத்தான்!” மெல்லிய குரலில் அவனை அழைத்தாள்.
வெகு தீவிரமான சிந்தனையில் அமர்ந்திருந்த மதியழகன் செவிகளுக்குள் அவள் குரல் சென்றடையாததால் அவன் எந்த பதிலும் கொடுக்காமல் இருக்க
“அத்தான்!” முன்பை விட சற்று சத்தமாக அவனை அழைத்துக் கொண்டே அவள் அவனது தோளில் தட்ட
“என்ன? என்ன?” பதட்டத்துடன் எழுந்து அமர்ந்தவன் தன் முன்னால் நின்று கொண்டிருந்தவளைப் பார்த்து விட்டு
“நீ தானா?” என்றவாறே தன்னை சற்று நிதானப் படுத்திக் கொண்டான்.
“ரொம்ப கஷ்டமாக இருக்கா அத்தான்?”
“ரொம்ப ரொம்ப கஷ்டமாக இருக்கு தேனு! ஆரம்பத்தில் சரியாக எல்லாவற்றையும் விசாரித்து செய்து இருக்கலாம்னு ஒவ்வொரு நாளும் யோசித்து யோசித்து ரொம்ப கஷ்டமாக இருக்கு”
“அத்தான் நடந்து போன விஷயங்களை நம்மால் எதுவும் பண்ண முடியாது அதையே யோசித்து கொண்டு இருந்தால் வீணா மனக் கஷ்டம் தான் வரும் நடந்த தப்பை எப்படி நமக்கு ஏற்ற மாதிரி சரி செய்வது என்று யோசிங்க அதை விட்டுட்டு நடந்தையே நினைத்து உங்களையே நீங்க வருத்திக் கொள்ளாதீங்க! ஏன்னா நீங்க நல்லா இருந்தால் தான் நான் நல்லா இருக்க முடியும்” இறுதி வாக்கியத்தை அவன் கண்களைப் பார்த்த படியே கூறிவிட்டு தேன்மொழி அங்கிருந்து ஓடி சென்று விட மதியழகன் சிறு புன்னகையுடன் அவள் சென்ற வழியையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.
இந்த இரண்டு வருடங்களில் தன் குடும்பம் பல்வேறு மனக் கஷ்டங்களை சந்தித்த போது தான் அவர்களுக்கு எல்லாம் ஆறுதலாக இருந்த நிலையில் தனக்கென்று ஆறுதலாக வந்து நின்ற அந்த தேன்மொழி எப்போதும் அவன் மனதிற்கு நெருக்கமானவளே.
காதல் வசனங்கள் பேசிக் கொள்ளவில்லை, காதல் பார்வை பரிமாற்றம் இல்லை ஆனால் அவனுக்கு அவள் மீதும் அவளுக்கு அவன் மீதும் பிரிக்க முடியாத ஒரு பந்தம் இருந்து கொண்டே தான் இருக்கிறது.
இங்கே சென்னையில் இழையினியின் வீட்டில் உணர்வு மாற்றங்கள் வெவ்வேறு விதமாக அரங்கேறிக் கொண்டிருக்க மறுபுறம் லூல்கந்துரவில் தன்னறைக்குள் அமர்ந்து கொண்டிருந்த இழையினிக்கோ அது எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை அதை பற்றி சிந்திக்கும் மனநிலையும் அவளுக்கு இல்லை.
பழைய நினைவுகள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக துரத்த கண்களை இறுக மூடிக் கொண்டு முழங்காலில் தன் முகம் புதைத்து அமர்ந்திருந்தாள் இழையினி.
இங்கே அவள் தன் பழைய நினைவுகளில் மூழ்கி கவலையில் லயித்து இருக்க மறுபுறம் பொன்ஆதவனும் தன் பழைய நினைவுகளில் மூழ்கி இன்பத்தில் லயித்து இருந்தான்.
பொன்ஆதவனின் பெயர் சற்று வித்தியாசமாக இருப்பது போல் அவனது எண்ணங்களும், செயல்களும் வித்தியாசமானது தான்.
பொதுவாக எல்லோரும் ஒரு விடயத்தில் நமக்கு கிடைத்த தீங்குகள், நமக்கு நடந்த அநீதி என எல்லா எதிர்மறை எண்ணங்களையும் தான் முதலில் சிந்திப்போம்.
ஆனால் பொன்ஆதவன் தனக்கு அநீதியே இழைக்கப்பட்டிருந்தாலும் அதில் தனக்கு கிடைத்த ஒரு சிறிய நற்செயலை எண்ணியே அந்த விடயத்தை கடந்து சென்று விடுவான்.
சுருக்கமாக சொல்ல போனால் எதிர்மறையையும் நேராக மாற்றி யோசிக்கும் வல்லமை அவனிடம் உண்டு.
பொன்ஆதவனின் பூர்விகம் தஞ்சாவூர் பகுதியில் இருக்கும் சோலையூர் கிராமம்.
ஐந்து தலைமுறைகளாக ஜமீன்தார் வம்சமாக இருந்து வந்த அவனது பரம்பரை காலப் போக்கில் தன் சொத்து, நில, புலன்களை எல்லாம் இழந்து நிர்க்கதியாகும் நிலைக்கு தள்ளப்படவே அவனது தந்தை அங்கிருந்த தன் சொத்துக்களை எல்லாம் விற்று விட்டு சென்னையில் வந்து குடியேறினார்.
அவர்கள் சென்னையில் வந்து குடியேறும் போது பொன்ஆதவனிற்கு வயது இரண்டு.
அவனது தந்தை தமிழ்ச்செல்வன் தன் கையில் இருந்த பணத்தை எல்லாம் போட்டு ஒரு பெரிய டிபார்ட்மெண்ட் ஸ்டோரை ஆரம்பித்தார்.
நாளாக நாளாக அந்த கடையின் வருமானம் மூலம் அவர்கள் பொருளாதாரம் முன்னேற்றம் கண்டு அவர்கள் தங்கி இருந்த அடையார் பகுதியிலேயே ஒரு இரட்டை மாடி வீடு அவர்களுக்கு சொந்தமாகும் அளவில் வந்து சேர்ந்தது.
பொன்ஆதவனின் அன்னை வள்ளியம்மை தன் கணவருக்கும், பிள்ளைக்கும் என்றே தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்.
தன் தந்தையின் விடாமுயற்சியைப் பார்த்து வளர்ந்த ஆதவன் பி.இ முடித்து விட்டு அடையாறில் இருக்கும் சாப்ட்வேர் கம்பனி ஒன்றில் டீம் லீடராக பணி புரிந்து வந்தான்.
இயல்பான நீரோட்டம் போன்று சென்று கொண்டிருந்த அவர்களது வாழ்க்கையில் அவனது தந்தையின் தங்கை விஜயதேவியினால் பெரும் பிரளயமே நடந்து முடிந்தது.
அவர் செய்து விட்டு சென்ற பெரும் பிரச்சினையே இன்று அவனை இழையினையைத் தேடி இவ்வளவு தூரம் அழைத்து வந்திருக்கிறது.
எதிர்மறையிலும் நேரான விடயங்களை தேடுபவன் தன் அத்தை செய்து விட்டு சென்ற பிரளயத்திலும் தனக்கு கிடைத்த நன்மையை எண்ணிப் புன்னகைத்த படியே அமர்ந்திருக்க அவனருகில் அவனது நண்பன் ராஜா காரை ஓட்டிக் கொண்டு சென்று கொண்டிருந்தான்.
அன்று வார இறுதிநாள் என்பதால் சாலை எங்கும் வாகனங்கள் நிறைந்து இருக்க ‘ஹக்கல’ பூந்தோட்டம் அமைந்திருக்கும் பாதை வழியாக ராஜா காரை செலுத்திக் கொண்டிருக்க ஆதவன் அந்த இயற்கை சூழலை ரசித்துப் பார்த்தபடியே அமர்ந்திருந்தான்.
பச்சைப் பசேலென்ற புல்வெளிகளுக்கு நடுவில் வண்ணமயமாக பூத்துக் குலுங்கிய பூக்களை பார்க்கவே கண்களுக்கு தெவிட்டாத காட்சியாக அமைந்திருந்தது.
பல்வேறு வகையான பூக்களின் அணி வகுப்பு அவனைப் பார்த்து சந்தோஷமாக தலையசைப்பது போல் இருக்க அந்த பூக்களுக்கு நடுவிலும் இழையினியின் புன்னகை நிறைந்த முகமே வந்து சென்றது.
ஆமை வேகத்தில் தங்கள் முன்னால் சென்ற வாகனங்களை எல்லாம் கடந்து சென்று அங்கிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள ‘பொம்புரெல்ல’ நீர்வீழ்ச்சியில் இருந்து சற்று தொலைவில் உள்ள ராஜாவின் வீட்டின் முன்னால் அவர்கள் கார் சென்று நின்றது.
அந்த வீட்டில் இருந்து பார்த்தால் நீர்வீழ்ச்சியின் ஒரு பக்கத் தோற்றம் நன்றாக தெரியும்.
கார் சத்தம் கேட்டதும் வீட்டிற்குள் இருந்து வெளியேறி வந்த ராஜாவின் அன்னை சரஸ்வதி
“என்ன மகன் நல்லா ஊர் சுற்றி பார்த்தீங்களா?” ஆதவனைப் பார்த்து புன்னகையோடு கேட்கவும்
அவனோ
“உங்க பையன் ரொம்ப நல்லா சுற்றி காட்டுனான்மா நான் இத்தனை நாட்களாக பார்க்க காத்திருந்த விடயத்தை இன்னைக்கு தான் உங்க பையன் காட்டுனான்” ராஜாவின் தோளில் தட்டி கொடுத்தபடியே கூறினான்.
“எப்படியோ ஆசப்பட்டதைப் பார்த்தால் சரி வாங்க உள்ள போவோம்” சரஸ்வதி அவர்கள் இருவரையும் பார்த்து கூறி விட்டு சென்று விட
அவரைத் தொடர்ந்து வீட்டிற்குள் செல்லப் போன ராஜாவின் கையைப் பிடித்துக்கொண்ட ஆதவன்
“ராஜா இது இழை வந்த காரோட நம்பர் இதோட டீடெய்ல்ஸ் கொஞ்சம் எனக்கு எடுத்துக் கொடு அதுவரைக்கும் நான் கொஞ்ச நேரம் வாட்டர் பால்ஸ் கிட்ட இருந்துட்டு வர்றேன் பாய் டா!” அவனது பதிலை எதிர்பார்க்காமலேயே அங்கிருந்து சென்று மறைந்தான்.
இங்கு வந்த இந்த ஒன்றரை வருடங்களில் அவனது முகத்தில் இவ்வளவு சந்தோஷத்தைப் பார்த்திராத ராஜாவும் அவனது ஆசைக்கு மறுப்பு கூறாமல் புன்னகையுடன் அவன் சென்ற பாதையை பார்த்து விட்டு அவன் கொடுத்த காரின் இலக்கங்களைப் பார்த்த படியே வீட்டிற்குள் சென்றான்.
இரவு நெருங்கி வரும் நேரம் தங்கத்தை மஞ்சளோடு கலந்து ஒன்றாக சேர்த்து பூசினாற் போல ஜொலித்து கொண்டிருந்த வானத்தில் இருந்து கொட்டுவது போல நீர் பேரிரைச்சலுடன் பாய்ந்து கொண்டிருக்க அங்கிருந்த கல் ஒன்றின் மீது தன் கையை தலையணையாக்கி சாய்ந்து அமர்ந்திருந்தான் பொன்ஆதவன்.
துளித் துளியாக தன் மேல் தெறிக்கும் நீர்த்திவலைகளின் குளிர்மையை கண்களை மூடி அனுபவித்துக் கொண்டிருந்த ஆதவன் இழையினியுடனான தன் அடுத்த சந்திப்பை எவ்வாறு உருவாக்குவது என்பது பற்றி திட்டம் போட்டு கொண்டிருக்க மறுபுறம் அவளோ இன்று காலை சந்தித்த அந்த நபரை மீண்டும் சந்திக்கவே கூடாது என்ற எண்ணத்தோடு கண் மூடி உறங்கிக் கொண்டிருந்தாள்…..