உயிர் தேடல் நீயடி 15
போர்வைக்குள் தன்னை மறைத்தபடி வெளிரிய முகத்துடன் தன் அறையின் கட்டிலில் நடுங்கிய உடலை குறுக்கிக் கொண்டு அமர்ந்திருந்தாள் ஜனனி.
அவளெதிரில் மாணிக்க சுந்தரம் யோசனையோடு நடந்தபடியிருக்க, வளர்மதி மகளை அணைத்துக் கொண்டிருந்தார். ஜனனி சொன்ன பேய் கதையை இருவராலும் முழுமையாக நம்பமுடியவில்லை.
“விபியோட பொண்டாட்டி பேயா அங்கதான் அலையறாளா? பின்ன, இப்ப தான் புதுசா கல்யாணம் ஆனவளோட ஆத்மா எங்க சாந்தியாகி இருக்க போவது! நீ இனிமே அங்க போகாத ஜனனி” வளர்மதி பயத்தோடு புலம்ப,
“என்னால என் விபிய விட்டு இருக்க முடியாது மம்மி” இவள் சின்ன குழந்தை போல சிணுங்கினாள்.
“அடம்பிடிக்காத ஜனனி, நீ இப்பெல்லாம் நடந்துக்கிறது எதுவுமே சரியா இல்ல. படிப்ப பாதியிலயே விட்டுட்டு இங்க வந்து அந்த விபி வீடே கதின்னு கிடக்கிற! வேணா டா இதெல்லாம் தப்பு மா” வளர்மதி சங்கடமாக மகளுக்கு அறிவுரை சொல்ல,
“என் விபிய விட்டு விலகி போனது தான் நான் பண்ண பெரிய தப்பே. நான் தூர போனா அவன் மனசு மாறி என்னை தேடி வருவான்னு நினச்சேன்… என் காதலை புரிஞ்சுட்டு மேரேஜ்க்கு பிரோபஸ் பண்ணுவான்னு ஆசபட்டேன்… எல்லாமே தலைகீழா போச்சு” என்று ஜனனி முகம் பொத்தி அழுதாள்.
மாணிக்கம் சுந்தரம் மகளை கவலையாக பார்த்து நின்றார். அந்த விபீஸ்வரின் பிடியில் இருந்து ஜனனியை காப்பாற்ற தான் வெளிநாட்டில் மேற்படிப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தார் அவர். ஆனால் ஜனனியின் மனம் அவனிடமிருந்து இன்னும் மீள்வதாக இல்லை.
ஒரு தந்தையாக தன் ஒற்றை மகளின் நிலையை எண்ணி அவர் கவலையின் கனம் கூடியிருந்தது.
பொத்தி பொத்தி வளர்த்த அவரின் ஆசை மகள் இப்படி வயது கோளாறில் காதல் தந்த போதையில் தரிக்கெட்டு போவாளென்று அவர் என்ன கனவா கண்டார்?
அவளை அடித்து நொறுக்கும் அளவு அவருக்கு கோபம் வரத்தான் செய்தது. ஆனால், இப்போதும் மகளை குழந்தையாக பாவித்து, அவளின் மீது இவர் கொண்டிருந்த பாசம் இவரை பொறுத்திருக்க செய்தது.
“விபி விபின்னு ஏன் அவனையே பிடிச்சு தொங்கிட்டு இருக்க? போயும் போயும் அவனுக்கு ரெண்டாம் தாரமா போகணும்னு என்ன தலையெழுத்து உனக்கு?” வளர்மதி ஆதங்கமாக கேட்டு விட்டார்.
“மம்மி எனக்கு எல்லாத்தையும் விட அவன் தான் முக்கியம்… அவன் இல்லாம என்னால வாழ முடியாது” ஜனனி பயத்தையும் மறந்து அவள் பிடியிலேயே நிற்க,
“சொன்னா புரிஞ்சிக்க ஜனனி, ஒரு மாசத்துக்கு மேல ஆகியும் அவனால எழுந்து நடக்க முடியல… அவனால முன்னமாதிரி நடக்கிறது கஷ்டம்னு தான் பேசிக்கிறாங்க! அதனால அந்த விபிய மறந்துடு டா” வளர்மதி தன் சந்தேகத்தைச் சொல்லி மகளை எச்சரித்தார்.
“மறுபடி இப்படி பேசினா எனக்கு கெட்ட கோவம் வரும் மம்மி, விபிக்கு சீக்கிரம் கால் குணமாகி அவன் எழுந்து நடப்பான். எனக்கு நம்பிக்கை இருக்கு” ஜனனி பதில் உறுதியாக வந்தது.
“சரி, இப்ப எங்களை என்ன தான் செய்ய சொல்ற ஜனனி?” மாணிக்க சுந்தரம் அமர்த்தலாக கேட்டார்.
“அந்த காவ்யா பேயால, விபிக்கு ஏதாவது ஆபத்து வருமோனு பயமா இருக்கு டேட்… அந்த பேயை ஓட்ட என்ன பண்ணனும்னு பாருங்க” ஜனனி சொல்ல, “சரி என்ன பண்ணலாம்னு விசாரிச்சு தொலைக்கிறேன்” எரிச்சலாக சொல்லிவிட்டு நகர்ந்தார். இன்னும் அங்கே இருந்தால் மகளை ஏதாவது திட்டி விடுவோமோ என்று பயம் அவருக்கு.
அதே நேரம், காசிநாதன் விக்கியின் வீட்டு அழைப்புமணி பொத்தானை அழுத்தினார்.
ஒரு மாற்றுதிறனாளி வந்து கதவை திறக்க, “ரிக்கியை பார்க்கணும்” என்றார்.
“நான் தான் ரிக்கி, நீங்க யாரு?” என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டவனை சற்று திகைப்பாக பார்த்தவர், “உன் காலுக்கு என்னாச்சு? முன்ன நல்லா தான இருந்த?” சந்தேகமாக விசாரித்தார்.
“முதல்ல நீங்க யாருன்னு சொல்லுங்க?” ரிக்கி எரிச்சலாக எதிர் கேள்வி கேட்க,
“நான் இன்ஸ்பெக்டர் காசிநாதன், ஒரு கேஸ் விசயமா உன்கிட்ட பேசணும்”
“சாரி சார், நீங்க யாருன்னு தெரியாம ஏதோ பேசிட்டேன், உள்ள வாங்க” என்று ஒரு நாற்காலியை அவருக்கு எடுத்து போட்டு அமர சொன்னான்.
அந்த சிறிய வீட்டை பார்த்தவருக்கு அவனின் பொருளாதார நிலை சொல்லும்படியாக இல்லையென்று தான் தோன்றியது.
“நான் எந்த தப்பும் செய்யலையே சார்… என்னை எதுக்கு விசாரிக்கணும்?” ரிக்கி சற்று பயமாகவே கேட்டான்.
“முதல்ல உன் காலுக்கு என்னாச்சுன்னு சொல்லு”
“அது வந்து… பைக் ஆக்ஸிடென்ட்ல இப்படி ஆகிடுச்சு சார்” முகம் வேர்த்து போய் அவன் பதில் தர,
“நிஜமாவே ஆக்ஸிடென்ட்ல தான் இப்படி ஆச்சா?” அவர் சந்தேகமாக மறுபடி வினவினார்.
“ஆமா ஆமா சார்… ஆக்ஸிடென்ட் தான்” ரிக்கி பதில் வேகவேகமாக வந்தது.
“சரி, நீ முன்ன விபி கம்பெனியில வேலை பார்த்த இல்ல. ஏன் அந்த வேலையை விட்டுட்ட?” அவரின் கேள்வியில் இவன் முகம் வெளுத்து போனது.
“அது அது முடிஞ்சு போச்சு… இப்ப ஏன் அதெல்லாம் கேக்குறீங்க”
“ஒரு ஆக்ஸிடென்ட்ல விபீஸ்வர் மனைவி காவ்யதர்ஷினி இறந்து போயிருக்காங்க, அதைப்பத்தி உனக்கு தெரியுமா?”
“நியூஸ்ல… பார்த்தேன் சார்”
“நீ அங்க வேலை செய்யும் போதே, காவ்யாமேல உனக்கு விரோதம் இருந்ததா கேள்விப்பட்டேன், அந்த பிரச்சனைல தான் உன் வேலையும் போச்சுன்னு…”
“அய்யோ இன்ஸ்பெக்டர், காவ்யா மேடம்க்கு பிரோமோஷன் கிடைச்சதுல எனக்கு பொறாமை இருந்தது உண்மைதான்… நான் வேலைவிட்டு வந்ததுக்கும் அவங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல… இந்த காலை வச்சுட்டு நாலடி எடுத்து வைக்கவே கஷ்டமா இருக்கு… என்னை சந்தேகபடாதீங்க… நான் எந்த தப்பும் பண்ணல” ரிக்கி பதறி படபடத்தான்.
“அப்ப, விபி கம்பெனிக்கு சொந்தமான குடோன் எரிஞ்சதுக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல, அப்படித்தான?”
“இஇல்ல இன்ஸ்பெக்டர்…” என்று பொய் கூறி ரிக்கி தலையை குனிந்து கொண்டான்.
“ம்ம் அந்த கம்பெனியில வேலை செஞ்ச மாணிக்கம் பத்தி உனக்கு தெரியுமா?”
“தெரியும்!”
“இப்ப அவன் எங்க இருக்கான்?”
“மாணிக்கம் இறந்து போய் அஞ்சு மாசமாச்சு”
“வாட்? எப்படி?”
“தற்கொலை பண்ணிக்கிட்டான்னு கேள்விப்பட்டேன்… அது தவிர வேறெதுவும் எனக்கு தெரியாது”
கேள்வி ஒவ்வொன்றிற்கும் ரிக்கி அரண்டு மிரண்டு திக்கி திணறி பதில் தர, காவல்துறை ஆய்வாளருக்கு அவன் தந்த பதில் எதுவும் அத்தனை நம்பிக்கைக்கு உரியதாக தோன்றவில்லை.
இனியும் அவனிடம் கேட்டு பயனில்லை என்று தோன்ற, “மறுபடியும் ஏதாவது சந்தேகம் வந்தா உன்ன விசாரிக்க வருவேன், ஊரைவிட்டு ஓடி போக முயற்சி செஞ்ச, சந்தேக கேஸ்ல உன்ன பிடிச்சு உள்ள போட்டுடுவேன். ஜாக்கிரதை” என்று மிரட்டி விட்டு நகர்ந்தார்.
இரு கைகளாலும் வியர்த்த தன் முகத்தை அழுத்தி துடைத்துக் கொண்டான் ரிக்கி.
அன்று விபீஸ்வர் ஆட்களிடம் வாங்கிய அடி இப்போதும் இவனை கதிகலங்க வைத்திருந்தது. அதோடு மாணிக்கத்தின் தற்கொலை பற்றியும் இவனுக்கு சந்தேகம் தான்.
‘வேணா மாணிக்கம், அந்த விபி நம்ம கைகால உடைச்சு விட்டதோட விட்டானேன்னு நானே கொஞ்சம் நிம்மதியா இருக்கேன்! மறுபடி பிரச்சனை வச்சுக்க வேணாம்’
‘மறுபடி அவன்கிட்ட தலைய கொடுக்க எனக்கு என்ன பைத்தியமா? நம்ம ரெண்டு பேரோட இந்த நிலைமைக்கு அந்த பிஏ தான காரணம்! நம்மகிட்ட மோதினா இல்ல அவளை கொஞ்சமாவது கவனிக்கணும் டா’
‘அட போய்யா, அவளை அவங்கூட கோர்த்து விட்டதுக்கு தான், என்னை வேலையை விட்டு துரத்தினான், ஆத்திரப்பட்டதுக்கு நஷ்டம் எனக்கு தான், முன்ன மாதிரி நேரா நடக்கிறது கஷ்டம்னு டாக்டர் சொல்லிட்டாங்க”
‘அவளை தான் நான் சீண்டவே இல்லயேல, என்னவோ மத்த பொண்ணுங்களுக்கு நியாயம் செய்யறதா என்ன சிக்க வச்சா இல்ல, அவளை ஏதாவது பண்ணா தான்ல என் மனசு ஆறும்’
‘நீ எப்படியாவது போ, என்னை கூட்டு சேர்க்காத, கிளம்புறேன்’
அன்று தான் கடைசியாக மாணிக்கத்திடம் பேசியது, அடுத்த மாதமே அவன் இறந்த சேதி வந்திருக்க, ரிக்கி நடுங்கி தான் போனான். இன்னும் அந்த நடுக்கம் அவனுள் இப்போதும் மிச்சம் இருக்க தான் செய்தது.
காசிநாதன், மாணிக்கம் இறப்பு பற்றிய தகவல்களை சேகரிக்க உதவி ஆய்வாளருக்கு உத்தரவிட்டு, காவ்யதர்ஷினியின் தாய் வீட்டை நோக்கி தன் வண்டியை செலுத்தினார்.
#
வர்ஷினி பேசி சென்றவை விபீஸ்வர் மனதை அழுத்தி கொண்டிருக்க, வழக்கம் போல அவன் எண்ணம் முழுமையையும் அவனவள் நினைவுகள் ஆக்கிரமித்து கொண்டன.
இவன் சிந்தனையில் எப்போதும் தேன் சாரல் வீசும் நினைவுகள் அவை…
காதல் என்ற புது உணர்வை
அதன் தித்திப்பை திகட்ட திகட்ட
இவன் துய்த்த தருணங்கள் அவை…
.
.
.
அன்றைய காலை நேரத்தில், பூரித்த புன்னகையொடு உடன் பணிபுரியும் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கிக் கொண்டிருந்தாள் காவ்யதர்ஷினி.
மேலாளர் ரங்கராஜனும் இனிப்பை எடுத்துக் கொண்டு, “என்ன விசேஷம் காவ்யா?” என்று வினவ, “என் தம்பி சிவாக்கு வேலை கிடைச்சிருக்கு சார்” உற்சாகமாய் சற்று பெருமையாகவும் சொன்னாள்.
“உண்மையிலேயே சந்தோஷமான விஷயம் தான் மா, சாதிச்சிட்ட டா” என்க, இவள் விரிந்த சிரிப்பை தந்தாள்.
விபீஸ்வர் வேக நடையோடு அலுவலக்கத்திற்கு வர, அவனுக்கு பல குரல்கள் மரியாதையோடு காலை வணக்கம் வைத்தன.
“குட்மார்னிங் சர்” காவ்யா காலை வணக்கம் சொல்லி இனிப்பை அவனிடமும் நீட்ட,அவன் பார்வை கேள்வியாக அவள் முகத்தில் பதிந்தது.
“சிவாக்கு வேலை கிடைச்சிருக்கு சர்”
வழக்கத்திற்கு அதிகமாக அவள் முகத்தில் குமிழிட்டிந்த உற்சாகத்தையும் மகிழ்ச்சியும் கண்டு மறுப்பு சொல்லாமல் அதிலொன்றை
எடுத்துக் கொண்டவன், “கன்வே மை பெஸ்ட் விஷ்ஸஸ் டூ ஹிம்” என்று நகர்ந்து விட்டான்.
அவனுக்குள் ஏதோ இறுக்கமான உணர்வு சூழ்ந்திருந்தது. நேற்று இரவு முழுவதும் ரிக்கி, மாணிக்கம் கதறி கெஞ்சி மன்னிப்பு கேட்ட பின்னரே அவர்களை விட்டுவிடும்படி கையசைத்து வந்திருந்தான்.
ஆனாலும் அவன் மனம் அமைதியடையாமல் அரற்றிக் கொண்டே இருந்தது.
அன்று முழுவதும் கடுகடுத்தபடி கழித்தவன், மாலையில் கேளிக்கை விடுதியை நோக்கி தன் காரை செலுத்தினான்.
அன்று காவ்யா செய்த களேபரத்திற்கு பிறகு, இவன் மது, மாதுவை நாடாமல் இருந்து வந்தான். இன்றைய மனநிலையில் அவனுக்கு மாற்றம் தேவையாக இருந்தது.
ஏனோ இதுவரை இல்லாமல் எதிலோ தவறுவது போன்ற நெருடல் உணர்வு அவனை அலைகழிக்க, காரணம் மட்டும் விளங்கவில்லை அவனுக்கு. தன் கவனத்தை சாலையோர காட்சிகளில் திருப்பினான்.
அவனை எப்போதும் வீழ்த்தும் ஆயுதம் அங்கே காட்சியாக, சலிப்பாக நெற்றியை அழுத்திக் கொண்டான். தன் வழியில் எப்போதும் ஏன் இவள் என் பார்வையில் விழுந்து தொலைக்கிறாள்? என்ற சலிப்பு தான் முதலில் தோன்றியது அவனுக்கு.
அங்கே சாலையோரத்தில் வசிக்கும் அழுக்கு உடையணிந்த சிறுவர், சிறுமியர் காவ்யதர்ஷினியை சூழ்ந்து நின்று கூச்சலிட்டு கொண்டிருக்க, அவள் அங்கிருந்து விலகி முடியாமல் திணறியபடி ஏதோ பேசி சமாளித்து கொண்டிருந்தாள்.
‘என்ன வேண்டாத வேலை செஞ்சுட்டு இங்க மாட்டிட்டு முழிக்கிறாள்னு தெரியலயே’ என்று எண்ணிக் கொண்டவன், அவளை அப்படியே விட்டு போக மனம் வராமல் காரை சாலை ஓரமாக நிறுத்தினான்.
அவர்களிடம் வந்தவன், “காவ்யா என்ன பிரச்சனை இங்க?” என்று கேட்க,
அவனை சங்கடமாக பார்த்து விழித்தவள், “எல்லாருக்கும் கொடுத்து மீதி இருந்த ஸ்வீட்ஸ்ஸ இவங்களுக்கு கொடுத்தேன் சர், அதை பார்த்து நிறைய பசங்க ஓடி வந்துட்டாங்க, எல்லாருக்கும் ஸ்வீட்ஸ் பத்தல, இன்னும் வேணும்னு கெஞ்ச ஆரம்பிச்சுட்டாங்க, ஆயிடுச்சுன்னு சொன்னாலும் புரிஞ்சிக்கல” பாவமாய் சொன்னவளை காரமாக முறைத்து வைத்தான் இவன்.
“ஏய் இங்க வா” அங்கே உயரமாக இருந்த ஒரு சிறுவனை அழைத்தவன், அவனிடம் இருநூறு ரூபாய் தாள்களை கொடுத்து, “இவங்களை எல்லாம் கூட்டிட்டு போய் என்ன வேணுமோ வாங்கி கொடு, கிளம்பு, ஏய், எல்லாரும் அவன்கூட போங்க” விபீஸ்வரின் அதிகார குரலில் அனைவரும் உற்சாக கூச்சலோடு ஓடினர்.
‘ச்சே எனக்கு இந்த யோசனை தோணாம போச்சே’ என்று நொந்தபடி அவனெதிரில் வந்தாள் காவ்யா.
“தேவையா இதெல்லாம்? மனசுல பெரிய மண்ணாங்கட்டின்னு நினப்பில்ல உனக்கு” பற்களை கடித்தபடி அவளை கண்டிக்க, “சாரி சர்” என்று அப்பாவியாய் மன்னிப்பை வேண்டியவள் தன் கைப்பையில் இருந்து பணத்தை எடுத்து அவனிடம் நீட்டினாள்.
விபீஸ்வருக்கு சுறுசுறுவென கோபம் ஏறியது.
“எதுக்கு இது?”
“எனக்கு உதவி செய்ய தானே நீங்க பணம் கொடுத்தீங்க! அதான்…”
“கேவலம் பிச்சையா கொடுத்த காசை, உங்ககிட்ட வாங்கற அளவுக்கு என்னை சீப்பா நினச்சிட்டியா?”
“அச்சோ அப்படியெல்லாம் இல்ல சர்”
“உனக்கு என் லெவல் என்னனு தெரியல… இல்ல தெரிஞ்சும் புரிஞ்சிக்காம இருக்கியா?” கேட்டவனின் முகம் சிறுக சிறுக நிறம் மாற இவளுக்குள் குளிர் பரவியது. உலர்ந்த தொண்டை குழியில் எச்சிலை விழுங்கி கொண்டாள்.
“இஇல்ல சர்… சசாரி சர்” என்று தன் முன் பயந்து நின்றவளை கண்கள் சுருக்கி ஆழமாக பார்த்தவன், தன் கோபத்தை கட்டுப்படுத்தியபடி, காரை உயிர்ப்பித்து வேகமெடுத்து பறந்தான்.
காவ்யா மீது ஏற்பட்ட கோபத்தையும் தாண்டி, வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஏதோ நச்சரிப்பு அவனுக்குள்.
வழக்கம் போலவே இளைஞர்கள் இளம்பெண்களின் கொண்டாட்டத்தோடு, அந்த உயர் ரக கேளிக்கை விடுதி களேபரமாகிக் கொண்டிருந்தது.
வழக்கத்திற்கு மாறாக விபீஸ்வர் எதிலும் கலக்காமல் தனித்து உட்கார்ந்து இருந்தான். அவனை இணையாக ஆட அழைத்த அழகிகள் யாரும் அவனுக்கு ரசிக்கவில்லை. மறுப்பாக தலையசைத்தவன் மெதுமெதுவாக மதுவை சுவைக்க துவங்கி இருந்தான்.
‘ஏகத்துக்கும் திமிர் ஏறி போயிருக்கு அவளுக்கு, அவ எப்படி மாட்டிட்டு முழிச்சா என்னனு நான் வந்திருக்கணும், பாவம் பார்த்து உதவி செஞ்சேன் பாரு ச்சே!’ அவளை மனதிற்குள் வருத்தெடுத்துக் கொண்டிருந்தான்.
‘இனி அவளை நான் கண்டுக்கறதா இல்ல, தானா வம்புல போய் மாட்டிக்கிட்டு முழிக்கட்டும்…” எனும் போதே அவளின் மிரண்டு பரிதவிக்கும் பார்வை அவன் நினைவில் வந்து போனது.
‘சோடாபுட்டி, உன்னால நான் நானா இல்லடி, இன்னும் ரெண்டு மாசம் தான் அப்புறம் போயிடு, என் கண்ணுல படாம போயிடு, என்னை எனக்காக விட்டுட்டு போ…!’ போதையின் மயக்கத்தில் பிதற்றலானான்.
‘கமான் விபி, லெட்’ஸ் டேன்ஸ்?” ஒரு நாகரிக அழகி அவனிடம் மிழற்ற, இம்முறை மறுப்பின்றி அவளோடு கரம் கோர்த்து துள்ளிசைக்கேற்ப உடலசைவுகளை கூட்டியும் குறைத்தும் ஆடலானான்.
மெல்ல மெல்ல இன்ப களியாட்டத்தில் தன்னை அமிழ்த்திக் கொண்டிருக்கும் தருணத்தில் அவன் பார்வையின் வட்டத்தில் காவ்யதர்ஷினி விழுந்தாள்.
விபீஸ்வர் ஒருமுறை தலையை குலுக்கி கொண்டு அங்கே பார்க்க, மினுமினுக்கும் மயங்கிய ஒளியில் ஆட்டமிட்டு கொண்டிருந்தவர்களை விலக்கி விட்டபடி, அதே மிரண்ட பரிதவித்த பார்வையின் தேடலோடு வந்து கொண்டிருந்தாள் காவ்யதர்ஷினி.
இரவு மணி பதினொன்றை தாண்டி கொண்டிருக்க இவளுக்கு என்ன வேலை இங்கே? என்று தான் தோன்றியது அவனுக்கு.
நிச்சயம் அவள் பார்வையின் தேடல் தனக்கானது இல்லை என்று எண்ணிக் கொண்டான்!
#
உயிர் தேடல் நீளும்…