UTN 19

UTN 19

உயிர் தேடல் நீயடி 19

அன்று மாலையில் சற்று தாமதமாக வேலை முடிந்திருக்க, தன் காரை நோக்கி நடந்தவனின் பார்வை வாயிலில் தேங்கி நின்றது.

அங்கே வாயிற் காவலரிடம் சிவா ஏதோ விவாதித்து கொண்டு இருப்பது தெரிய, விபீஸ்வர் அவர்களை அருகழைத்தான்.

அவனின் கையசைப்பிற்கு அனைவரும் அவன் முன் பவ்வியமாய் வந்து நின்றனர். சிவாவின் முகம் இருண்டு கிடந்ததை கவனித்து, “என்னாச்சு சிவா? இந்த நேரத்தில இங்க என்ன பண்ற?” என்று கேட்க,

“இந்த தம்பி காவ்யா மேடம் பத்தி கேட்டாங்க சர், அவங்க சாயந்திரமே கிளம்பிட்டாங்கன்னு சொன்னதை கேட்காம உள்ள வந்து விசாரிக்கணும்னு சொல்றாங்க சர், எல்லாரும் வேலை முடிஞ்சு போயிட்டாங்கன்னு சொல்லியும் நம்பல” காவலாளி ஒருவர் நிலைமையை வேகமாக ஒரே மூச்சில் ஒப்புவித்தார்.

“சிவா, காவ்யாவுக்கு என்னாச்சு?” விபீஸ்வரிடமிருந்து பதற்றமாக கேள்வி வந்தது.

“தெரியல சர், ஆஃபிஸ்ல இருந்து கிளம்பிட்டேன்னு ஈவ்னிங் மெஸேஜ் பண்ணி இருந்தா, ஆனா இவ்வளவு நேரமாகியும் வீட்டுக்கு வரலை… எவ்வளவு ட்ரை பண்ணியும் அக்காவோட மொபைல் ரீச் ஆகல” சொல்லும் போதே சிவாவின் கண்கள் கலங்கியது.

விபீஸ்வர் மனதிலும் கலக்கம் பரவ, அவசரமாய் காவ்யாவின் எண்ணிற்கு முயன்றான். எதிர்முனை அணைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வர, என்ன ஆபத்தில் சிக்கிக் கொண்டாளோ என்று கலவரமானான்.

வேகவேகமாய் அலைப்பேசியில் ஏதோ தட்டி விட்டு ரவிக்கு தொடர்பு கொண்டான். “ரவி காவ்யா மொபைல் நம்பர் உனக்கு சென்ட் பண்ணி இருக்கேன். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அந்த மொபைல் சிங்னல் இருக்கிற கரெக்ட் லொகேஷன் எனக்கு தெரியணும் அர்ஜன்ட்” என்று உத்தரவிட.

“ஷுர் சர்” ரவி நிலைமை உணர்ந்து உடனே ஆமோதித்து வைத்தான்.

வாயில் காவலர்களிடம் திரும்பி, “காவ்யா ஆஃபிஸ் விட்டு போகும்போது யார் பார்த்தீங்க, அவ எந்த பக்கமா போனா?” என்று விசாரிக்க, அதில் ஒருவர் அவள் வழக்கமாக போகும் திசையை காட்டி, “நான் பார்த்தேன் சார், எப்பவும் போல மேற்கு பக்கமா தான் போனாங்க” என்றார்.

“சிவா கார்ல ஏறு” விபீஸ்வர் தாமதிக்காமல் சிவாவை ஏற்றிக் கொண்டு தன் காரில் பறந்தான்.

விபீஸ்வரின் அதிவேக செயல்பாட்டில் சிவா அசந்து தான் போனான். காவ்யாவிற்கு எந்த ஆபத்தும் நேர கூடாது என்று மனதிற்குள் அரற்றியபடி தமக்கையின் எண்ணுக்கு விடாமல் முயன்று கொண்டே இருந்தான்.

மாலை சரியாக ஐந்து மணிக்கு ‘நான் கிளம்பவா சர்’ காவ்யா தயக்கமாக கேட்க, அவளின் ஓய்ந்த தோற்றம் கவனித்து இவனும் ஆமோதித்தான்.

இப்போது ‘ஏன் அவளை போகவிட்டேன்!’ என்று விபியின் மனம் கவலையுற்றது.

# # #

வானின் நிறமாறி இருள் பரவ தொடங்கி இருக்க, காவ்யா பின்னந்தலையை பிடித்தபடி எழ முயன்றாள். இப்போது தான் தன்னை சுற்றி கவனிக்க ஏதோ அறையில் அடைப்பட்டு கிடப்பது புரிந்தது.

இன்று மாலை வீட்டுக்கு திரும்பி செல்லும் வேலையில் ஒரு வயதான பெண்மணி அவளின் வண்டி முன் கைநீட்டி உதவி கேட்க, இவளும் நிறுத்தினாள்.

‘என்னால முடியல கண்ணு, பக்கத்துல தான் என்வீடு இருக்கு, கொஞ்சம் விட்டுறீயா?’ என்று அவர் உடல்நலமின்மையால் கெஞ்சி கேட்க, இவளும் அவரை ஏற்றிக்கொண்டு அவர் சொன்ன கிளைபாதை வழியே சென்றாள்.

கிட்டத்தட்ட இருபது நிமிட இடைவெளியில் ஒரு சிறு வீட்டின் முன் வண்டியை நிறுத்த, அந்த இடம் அத்தனை சரியானதாக தோன்றவில்லை இவளுக்கு. எங்கோ தூரம் தூரமாய் சிறு சிறு வீடுகள் தென்பட, அந்த பகுதி ஆள் நடமாட்டம் இன்றி அநாதரவாய் காட்சி தந்தது.

அந்த வயதானவர் இறங்கியவுடன் தலையசைத்து விட்டு கிளம்பியவளின் பின்னந்தலையில் யாரோ பலமாய் தாக்க, உயிர்ப்பில் இருந்த அவளின் ஸ்கூட்டி, கட்டுபாடின்றி நிலைதடுமாறி எதிலோ மோதி கவிழ்ந்தது. அதற்குமேல் இவளின் நினைவில் எதுவும் பதிந்திருக்கவில்லை.

நன்றாக புடைத்து இருந்த அவள் பின்னந்தலை அதிகமாக வலிக்க, கைகளிலும் கால்களிலும் அங்கங்கே இரத்த கீறல்கள், அதோடு உடலின் வலிவேறு அவளை கஷ்டப்படுத்தியது.

சற்று தூரத்தில் அவளின் கைப்பை கிடக்க, அதனை எடுத்து தன் கைப்பேசியை தேடினாள். கிடைக்கவில்லை. மற்ற பொருட்கள் எல்லாம் அப்படியே இருந்தன. அவளின் பணப்பையும் கைபேசியும் மட்டும் மாயமாகி இருக்க, ஏதோ ஆபத்தில் வசமாய் சிக்கிக் கொண்டது அவளுக்கு நன்றாகவே புரிந்தது.

அதேநேரம் கதவு திறக்கப்பட உள்ளே வந்தவனை திகைப்பாக பார்த்தவள், தன் துணிவை திரட்டிக்கொண்டு முயன்று எழுந்து நின்றாள்.

“மாணிக்கம்… இதெல்லாம் உன் வேலை தானா, சே நீயெல்லாம்… மரியாதையா என்னை போகவிடு” என்று எச்சரித்தாள்.

“உன்ன போகவிடவா இவ்வளோ தூரம் இழுத்துட்டு வந்திருக்கேன். உன்ன தான் நான் சீண்டவே இல்லல்ல, அப்புறம் எதுக்கு என் விசயத்தில தேவையில்லாம தலையிட்ட?”

“…!” காவ்யா அவன் எக்களிப்புக்கு அஞ்சிய மனதை மீட்டு எடுத்து, தான் தப்பிக்கும் வழியை ஆராய்ந்தாள்.

“இந்த மாணிக்கம் யாருன்னு தெரியாம மோதிட்ட பாவம், அதுக்கான பலன தான் இப்ப அனுபவிக்க போற” என்று எக்காளத்துடன் அவளை நெருங்கினான்.

காவ்யா தன் பையிலிருந்த மிளகாய் தூளை எடுத்து அவன் முகத்தில் விச, எதிர்பாராத இந்த தாக்குதலில் கண்களின் எரிச்சலில் அலறிவிட்டான். உடனே இவள் கொலிகுண்டுகளையும் எடுத்து தரையில் வீச, அவற்றின் மீது கால் வைத்து குப்புற விழுந்து வாரினான்.

காவ்யா விலகி சென்று கதவின் தாழ்பாளை திறக்க முயல, அவனோ தன் சட்டையில் அரைகுறையாய் முகத்தை துடைத்து கொண்டு  எழுந்து வந்து அவளின் கைபிடித்து இழுத்து தடுத்தான்.  மிளகாய் வீச்சின் காரமும் குப்புற விழுகையில் தரையில் மோதி அடிப்பட்ட மூக்கின் வலியும் அவனை இன்னும் வெறியேற்றி இருக்க, அவளை ஆங்காரமாய் அறைந்து தள்ளினான். முதலிலேயே காயத்தால் சோர்ந்து போயிருந்தவள் விழுந்த வலியில் மேலும் துவண்டு போனாள்.

தன் கண்களை இப்போது நன்றாக துடைத்துக் கொண்டவன், “ரொம்ப தான் திமிரெடுத்து திரியற டீ நீ… ஒவ்வொரு நிமிஷமும் உன்ன கதற வைக்கிறேன் பாரு” இன்னும் அவன் கண்கள் எரிந்து கொண்டிருக்க, அந்த கோபத்தையும் சேர்த்து அவளின் துப்பட்டாவை பறித்து தூர எறிந்தான்.

தன்னை நோக்கி விகார சிரிப்போடு குனிந்தவனை தன் பலத்தை திரட்டி தூர தள்ளியவள் அதே வேகத்தோடு மீண்டும் கதவை நொக்கி ஓடினாள்.

# # #

ரவியின் தகவல்படி அந்த இடத்திற்குள் நுழைந்த விபீஸ்வரும், சிவாவும் நாலாபுறமும் அலசியபடியே வந்தனர். “சார் அக்காவோட ஸ்கூட்டி அங்க இருக்கு” சிவா பதறி சொல்ல, அங்கே காரை நிறுத்தியதும், சிவா வேகமாக இறங்கி விழுந்து கிடந்த வண்டியை நோக்கி ஓடினான்.

விபீஸ்வர் அங்கே தனித்திருந்த வீட்டை கவனித்து அங்கே விரைந்தான்.

கதவை திறந்து தப்பித்து வந்தவள் யார் மீதோ மோதி பதறி விலகியோட முயல, “காவ்யா ரிலாக்ஸ்…” அவளின் தோள் பிடித்து விபீஸ்வர் பயத்தில் துடிதுடித்தவளை அமைதிப்படுத்த முயன்றான்.

காவ்யா அவனை நிமிர்ந்து பார்க்க, அவளின் கலங்கி ஓய்ந்த கண்களும் கன்னத்தில் அடிபட்ட தடமும், நெற்றியில் இரத்தம் கசியும் கீறல்களும் அவன் மனதை அசைத்து பார்த்தது.

தன்னவளை அந்த கோலத்தில் கண்டவன் மனம் கொதித்து போனது.

உள்ளிழுந்து எழுந்தோடிவந்த மாணிக்கம் அங்கே விபீஸ்வரை பார்த்ததும் மிரண்டு தப்பித்து ஓட, “சிவா…” விபீஸ்வரின் கத்தலில் அவன் ஓடோடி வந்தான். அவனிடம் காவ்யாவை ஒப்படைத்தவன், “காவ்யாவுக்கு முதல்ல பர்ஸ்ட் எய்டு பண்ணு” என்று விட்டு மாணிக்கத்தை துரத்திக் கொண்டு ஓடினான்.

விபீஸ்வர் ஆத்திரமும் ஆவேசமுமாக அவன் முதுகில் எட்டி உதைத்து, குப்புற விழுந்தவனை திருப்பி, அவன் முகத்தில் சரமாரியான குத்துக்களை இறக்கினான்.

 “அய்யோ சார், விட்டுடுங்க நான் ஓடி போறேன்” என்று வலியில் கதறியவனுக்கு வாயிலும் வயிற்றிலும் குத்துக்களும் சரமாரியான உதைகளும் தான் கிடைத்தன.

காவ்யாவை அழைத்து வந்து காரில் அமர்த்தி தண்ணீர் எடுத்து கொடுத்து பருகவைத்த சிவா, அக்காவின் காயங்களை பார்த்து கலக்கமும் ஆத்திரமும் ஒன்றாய் எழ, “ஒரு நிமிஷம் இரு காவ்யா” என்று அவர்களை நோக்கி ஓட்டம் பிடித்தான். விபீஸ்வரின் அடியில் நாராய் கிழிந்திருந்தவனை இழுத்து, “என் அக்காவோட நிலைமைக்கு நீதானடா காரணம்… தெரு பொறுக்கி நாயே” என்று வெறி ஏற இவனும் சேர்ந்து அவனை தாக்க, இருவரின் தாக்குதலை தாங்க முடியாமல் மாணிக்கம் அலறினான்.

அங்கே வேறு ஜீப் வந்து நிற்க, அதிலிருந்து சில‌ ஆட்கள் இறங்கி அவர்களை நோக்கி வந்தனர்.

உயரமாக கட்டுமஸ்தான முரட்டு தோற்றத்துடன் இருந்த கருணா விபீஸ்வரை விலக்கி நிறுத்த,

மற்றொருவன் சிவாவையும் விலக்கினான்.

“என்ன சார், இவனை எல்லாம் போய் நீங்க அடிச்சிட்டு?” – கருணாவிற்கு விபீஸ்வரின் இத்தனை ஆவேசம், கோபம் புதிது.

“என் கவி மேல கைவைக்க துணிஞ்சிருக்கான் கருணா… இனி ஒவ்வொரு நிமிஷமும் இவனுக்கு நரகமா இருக்கணும்… உன்னோட கவனிப்புல அடுத்த நிமிஷம் உயிரோட இருக்க இவன் யோசிக்கணும்” விபீஸ்வரின் ஆவேச குரலுக்கு, “செஞ்சிலாம் சார்” ஆமோதித்தவன், வலியில் சுருண்டு கிடந்த மாணிக்கத்தை இழுத்து சென்று ஜீப்பில் போட்டுக் கொண்டு கிளம்பினர்.

நேராக காருக்குள் வந்தமர்ந்த விபீஸ்வர், தன் கை முஷ்டிகளில் படிந்திருந்த இரத்தத்தை டிஸ்ஷூ காகிதம் கொண்டு துடைத்துவிட்டு காவ்யாவிடம் திரும்பினான்.

அவள் உடல் சோர்விலும் தப்பி விட்டோம் என்ற ஆசுவாசத்திலும் கண்கள் மூடி இருக்கையில் தலைசாய்த்திருந்தாள்.

“ஆர் யூ ஓகே காவ்யா?” கேட்டுவிட்டு அவள் ஆமோதிப்பாக தலையசைக்க, முதலுதவி பெட்டியை எடுத்து அவளின் காயங்களை துடைத்து மருந்திடலானான்.

சிவா இதையெல்லாம் கவனித்தபடி பின் இருக்கையில் அமர்ந்து கொண்டான். விபீஸ்வர் காவ்யா மீது காட்டும் அக்கறை, அவளுக்கு ஆபத்தென்றதும் அவனின் துடிப்பு, வேகம்… அவளை காயப்படுத்தியவனை தாக்கிய அவனின் ஆவேசம்… இதெல்லாம் இவனை பிரம்மிக்க செய்திருந்தது. முதலாளி என்பதை தாண்டி அவன் காவ்யாவிடம் எடுத்துக் கொள்ளும் உரிமையில் சிவா சற்று குழப்பியும் போனான்.

காவ்யா வலியில் முணங்கியபடி, “ஸ்ஸ் தேங்க்ஸ் சர்” தேய்ந்த குரலாய் நன்றி சொல்ல, அதற்கும் அவளை கோபமாய் முறைத்து வைத்த விபீஸ்வர்,  திரும்பி அமர்ந்து‌ காரை வேகமாக செலுத்தினான்.

பிரபல மருத்துவமணையில் காவ்யாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அவள் தலையில் தாக்கப்பட்டு இருந்ததால் ஸ்கேன் எடுக்கப்பட, காவ்யா சற்று ஓய்வில் இருந்தாள். அவளுக்கு துணையாக விபீஸ்வரும் சிவாவும் இருந்தனர்.

விபியின் தோரணை, பேச்சு, செயல் வேகம் எல்லாமே சிவாவை கவர்ந்திருக்க, காவ்யாவின் பாசமிகு தம்பி என்ற ஒரே காரணத்தினால் விபீஸ்வருக்கும் சிவாவை பிடித்து‌ இருந்தது.

கிட்டத்தட்ட நான்கு மணி நேரத்திற்கு பின், பெரிதாக பிரச்சனை இல்லை என்ற சாதக தகவலோடு நன்றாக ஓய்வெடுக்க வேண்டும் என்ற அறிவுரையும் சொல்லி மருத்துவர் காவ்யாவை அழைத்து போக சொன்னார்.

“நீங்க இவ்வளவு செஞ்சிதே பெரிசு சர்,  இன்னும் உங்களுக்கு சிரமம் வேண்டாம் நாங்க கிளம்புறோம்” மருத்துவமனை வாசலில் காவ்யா விபீஸ்வரிடம் விடைபெற முயல, அவளை ஏகத்துக்கும் முறைத்து நின்றது விபீஸ்வர் பார்வை.

“சிவா கார்ல ஏறு, உன் அக்காவையும் ஏற சொல்லு” என்றிட சிவா மறுப்பின்றி ஏறிக் கொண்டான்.

“சிவா?” காவ்யா தம்பியை கேள்வியாக பார்க்க, “உன்ன சரியான நேரத்தில காப்பாத்தினது இவர் தான் க்கா, உன் நல்லதுக்கு தானே எல்லாத்தையும் பார்த்து செய்றார். வந்து ஏறு க்கா” என்றான்.

அவள் தயக்கமாக சிவாவுடன் பின் இருக்கையில் அமர்ந்து கொள்ள, கார் வேகமெடுத்தது.

முன்னிரவு வேளையில் அவர்களின் அடுக்குமாடி குடியிருப்பில் அவர்களை இறக்கி விட்டான். பார்கவி, மஞ்சரி இன்னும் சிலரும் அவர்க்களை எதிர்பார்த்து அங்கே நின்றிருந்தனர்.

சிவா அவர்களிடம் ஸ்கூட்டி விபத்தாயிற்று என்று மட்டும் சொல்லி இருந்தான். பார்கவி, மஞ்சரி காவ்யாவை நேரில் கண்டதும் சற்று பதற்றம் நீங்க, மற்றவர்கள் அவளின் நலம் விசாரித்தனர்.

சிவா அனைவருக்கும் சமாதானம் சொல்லி விட்டு விபீஸ்வரை அறிமுகம் செய்தான். ஒவ்வொருவரும் மரியாதையோடு அவனுக்கு நன்றி சொல்லிக் கொள்ள, இவன் சின்ன தலையப்புடன் அமைதியாக நின்றிருந்தான். இது போன்ற மனிதர்கள், சூழ்நிலைகள் அவனுக்கு புதிது.

“எனக்கு உதவி செஞ்சு, இவ்வளவு நேரம் எங்ககூட இருந்து…! எனக்காக இவ்வளவும் செஞ்சிருக்கீங்க…! ரொம்ப நன்றி சர்” காவ்யா விபீஸ்வரிடம் தன் நன்றியை தெரிவிக்க,

“சும்மா கண்டவங்களுக்கு எல்லாம் இரக்கம் காட்றேன்னு இப்படி ஆபத்துல போய் சிக்கிக்காத காவ்யா, இனிமேலாவது கொஞ்சம் எச்சரிக்கையா இரு” விபீஸ்வர் அழுத்தமாகவே அவளை கடிந்து சொன்னான்.

முதல் முறையாக விபீஸ்வர் சொல்வது சரியென்று இவளுக்கு புரிய, சம்மதமாக தலையாட்டினாள்.

“குட், டூ டேஸ் நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு அப்புறம் ஆஃபிஸ் வந்தா போதும் ஓகே, டேக் கேர் பேபி” என்று அவளிடமும் மற்றவர்களிடமும் விடைபெற்று  கிளம்பினான்.

அவனுக்கு முக்கியமாக  கவனிக்க வேண்டிய வேறொரு வேலையும் இருந்தது.

# # #

அங்கே, கருணாவின் அடியாட்கள் மாணிக்கத்தை வெளுத்துக் கட்டிக் கொண்டிருக்க, விபீஸ்வர் உணர்ச்சி துடைத்த முகத்தோடு பார்த்து நின்றிருந்தான்.

“அய்யோ சார், அந்த பொண்ணு மேல கை வச்சா நீங்க வருவீங்கன்னு எனக்கு தெரியாது சார், புத்தி கெட்டு செஞ்சிட்டேன் என்னை விட்டுடுங்க சார்…” அவன் கத்தி கதறியதை அங்கு யாரும் கண்டுகொள்வதாக இல்லை.

“அன்னிக்கு உன் கைகால உடைச்சு போட்டு கூட திரும்ப அதே செஞ்சிருக்கனா என்ன தெனாவெட்டு டா உனக்கு” கருணா அவனை மிதித்து தள்ளினான்.

“அப்ப, நீ முன்ன கவனிச்சது போதலன்னு தான அர்த்தம் கருணா?” விபீஸ்வரிடமிருந்து கொதிப்பாக வந்த கேள்வியில் கருணாவின் முகம் இறுகி இருந்தது.

கருணாவின் கையசைப்பில் இருவர் மாணிக்கத்தின் வாயை துணிக்கொண்டு அடைத்து பிடித்துக் கொள்ள, அவன் கண்கள் உயிர் பயத்தில் விரிந்து பிதுங்கி நடுநடுங்கின. கருணாவின் அடுத்தடுத்த லாவகமான தாக்குதலில் அவன் கைகள் இரண்டும் செயலிழந்து போக, விடாமல் அவன் காலும் தாக்கப்பட்டது.

மாணிக்கம் வலி தாங்காமல் துடிதுடிப்பதை பார்த்து நின்ற விபீஸ்வர் மேலும் சகிக்க முடியாமல் முகத்தை திருப்பி கொண்டு வெளியேறினான்.

ஒர் உயிர் எதிரில் துடிப்பதை பார்த்து சிரிக்கும் அளவிற்கு அவன் இரக்கம் இல்லாதவனாய் வளரவில்லை. எதையும் அலட்சியமாக கடந்து போவது தான் எப்போதும் அவன் இயல்பு. ஆனால்  தொழிலில் இவன் முதுகில் கொத்தும் கோடாரிகளை கண்டு, அகற்றவேண்டிய சூழலில் இத்தகைய வன்முறையை இவனும் பழக்கப்படுத்தி கொள்ள வேண்டியதாயிற்று.

இப்போது தன் காதலானவளை அந்த நிலையில் பார்த்தவனால் தன் ஆத்திரத்தை கட்டுபடுத்தி கொள்ள முடியாமல் போனது.

“ரவி, காவ்யாவுக்கு புரொடக்ஷன் ஏற்பாடு பண்ணு” அந்த நடு இரவில் அவனை அழைத்து விபீஸ்வர் உத்தரவிட,

“என்ன சர் திடீர்னு?” ரவி திகைப்பாக கேட்டான்.

“அவளுக்கு மறுபடி எந்த ஆபத்தும் வரக்கூடாது. யாருகிட்டெல்லாம் இவ பிரச்சனை பண்ணி வச்சிருக்காள்னும் நமக்கு முழுசா தெரியாது… எனக்கு காவ்யாவோட சேஃப்டி முக்கியம்” அழுத்தமாக சொல்லி வைத்தான்.

# # #

இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பின் காவ்யதர்ஷினி ஓரளவு தேறி வந்திருந்தாள்.

அவளில்லாத இந்த இரு நாட்களும் அவனுக்கு இருளடித்து போயிருந்தது.

அவளின்றி அவன் கடந்திருந்த இருபத்தேழு வருடங்களும் ஏதோ முற்பிறவியின் மாயத் தோற்றமாய் மாறி இருந்தது.

இடையில் இருமுறை அவளுடன் அலைபேசி வழி நலம் விசாரித்து‌ இருந்தான் எனினும் அதுவும் போதாமல் அவன் தவிப்பு கூடத்தான் செய்தது.

தன்நிலை எண்ணி அவன் உழன்றிருக்க, “அந்த மாணிக்கத்தை… என்ன சர் பண்ணீங்க?” காவ்யா வந்ததும் முதல் கேள்வியாய் இவனிடம் கேட்டு வைத்தாள். இவனுக்கு அவளின் குடைமிளகாய் மூக்கை நோக்கி ஒரு குத்து விட்டால் என்னவென்று கைகள் பரபரத்தன.

“அதைப்பத்தி உனக்கு எந்த அவசியம் இல்ல” கடுப்பாக பதில் தந்தான்.

“உங்க ஆளுங்க அவனை தூக்கிட்டு போனதுல இருந்து எனக்கு… பயமாவே இருக்கு சர்”

“உனக்கு…? சில்லி பௌடர், கோலி குண்டுன்னு அவனை வச்சு செஞ்சிருக்க போல” இவன் கேலி போல கேட்டு பேச்சை மாற்றினான்.

அதெல்லாம் உன்மீது நம்பிக்கை இன்றி தான் சேகரித்து வைத்திருந்தவை என்று இவளால் சொல்லவா முடியும்! அமைதியாக நின்றிருந்தாள்.

காவ்யாவின் அந்த தைரியத்தையும் போராட்டகுணத்தையும் தனக்குள் மெச்சிக் கொண்டான் விபீஸ்வர்.

# # #

உயிர் தேடல் நீளும்…

error: Content is protected !!