UTN 21

UTN 21

உயிர் தேடல் நீயடி 21

வழக்கமான காலை நேரம் இதமான சூட்டில் தேநீரை பருகிய படி, இதுவரை காவ்யா வழக்கில் எதுவும் சரியாக தெரியவில்லை என்று குழம்பிக் கொண்டிருந்தார் காசிநாதன்.

இன்னும் ஒரு மாதத்தில் இந்த வழக்கை முடித்தே தீர வேண்டும் என்று மேலிடத்தின் அழுத்தம் வேறு இவரை படுத்திக் கொண்டு இருந்தது.

இந்த மூன்று வார விசாரணையில் பெரிதாக விவரங்கள் ஏதும் கிடைக்கவில்லை. இன்று காவ்யதர்ஷினி பிறந்த வீட்டிலாவது ஏதாவது தகவல் கிடைக்குமா? என்று எண்ணமிட்டபடி கிளம்பினார்.

காலைநேர பரபரப்பிலும் அமைதியாக இருந்தது அவர்கள் வீடு. சிவா குளித்துவிட்டு துவைத்த உடைகளை உலர்த்திவிட்டு வர, மஞ்சரி சமைத்துக் கொண்டிருந்தாள். பார்கவி ஓய்வில் உள்ளே படுத்திருந்தார்.

அழைப்பு மணி ஒலிக்கேட்டு வந்து கதவை திறந்த சிவா, காசிநாதனை உள்ளே அமர சொல்லி விட்டு உடைமாற்றி வர வேகமாக நகர்ந்து விட்டான்.

அந்த வீட்டை ஒருமுறை அலசிய அவர் பார்வையில் திகைப்பே மிஞ்சியது. அந்த சிறிய வீடு விலையுயர்ந்த சோஃபா, மர சாமான்கள் அலங்கார பொருட்கள் என வெகு ஆடம்பரமாக காட்சி தந்தது.

‘லோன் போட்டு வாங்கின வீட்டை இவ்வளோ செலவு பண்ணி டெகரேட் செஞ்சிருக்காங்க… ஓ பணக்கார வீட்டு சம்மந்தம் கிடைச்சதால வந்த ஆடம்பரமா இது!’ காசிநாதன் தனக்குள் கணக்கிட்டு கொண்டார்.

“சொல்லுங்க இன்ஸ்பெக்டர், காவ்யா பத்தி நீங்க என்ன விசாரிக்கணும்?” என்று சிவா அவர் முன் வந்து அமர்ந்து கொள்ள, மஞ்சரியும் அவர்கள் அருகில் வந்து நின்றாள்.

பார்கவியும் எழுந்து வந்து மகனோடு அமர்ந்து கொண்டார். மாலை அணிந்து நிழற்படமாக சிரித்து கொண்டிருந்த தன் மூத்த மகளின் முகத்தில் பார்கவியின் பார்வை பட்டு திரும்பியது.

“நான் விசாரிச்ச வரைக்கும் காவ்யா தைரியமான பொறுப்பான பொண்ணா இருந்திருக்காங்க… ஆனா, இந்த கல்யாணம் எப்படி சாத்தியம் ஆச்சு? அவங்களோடது வசதியான குடும்பம், உங்களோடது…?” காசிநாதன் கேள்வியாக நிறுத்தினார்.

“ஒருநாள் திடீர்னு விபீஸ்வரை, காவ்யா வீட்டுக்கு அழைச்சிட்டு வந்திருந்தா… அப்ப தான் ‘நாங்க ரெண்டு பேரும் விரும்புறோம் கல்யாணத்துக்கு உங்க சம்மதம் மட்டும் போதும்’னு அவர் கேட்டாரு… எங்க காவ்யாவுக்கு இவ்வளோ பெரிய இடம் அமைஞ்சிருக்குன்னு நான் ரொம்ப சந்தோசபட்டேன்… ஆனா இப்ப அவளையே முழுசா பறிகொடுத்துட்டு நிக்கிறேன்…” பார்கவி சொல்லிமுடித்து சேலை முந்தானையால் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டார்.

“விபீஸ்வர் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?”

“விபி மாமா பத்தி குறை சொல்ல ஒண்ணுமே இல்ல சர், கல்யாணத்துக்கு முன்னையும் அப்புறமும் அக்கா மேல ரொம்ப உயிரா இருந்தாரு… இப்படி ஒரு விபத்து நடக்காம இருந்து இருக்கலாம்… காவ்யா உயிரோட இருந்து இருக்கலாம்”
சிவா விபீஸ்வருக்கு சாதகமாகவே பேச, பார்கவி மகனை முறைத்து வைத்தார்.

“கல்யாணத்துக்கு பிறகு காவ்யதர்ஷினி கிட்ட ஏதாவது சொல்லும் படியா மாற்றம் தெரிஞ்சதா உங்களுக்கு?” காசிநாதனின் அடுத்த கேள்விக்கு மஞ்சரி பதில் தர முன் வந்தாள்.

“நிறைய இன்ஸ்பெக்டர், இந்த கல்யாண பேச்சு ஆரம்பிச்சுதுல இருந்தே அக்கா ரொம்பவே மாறி போயிருந்தா… காதலிச்சவரை கல்யாணம் பண்ணிக்க போற நிறைவோ, பெரிய இடத்துல வாக்கபட போற சந்தோசமோ அவ கிட்ட இல்லவே இல்ல…!”

“நீங்க இதைப்பத்தி காவ்யா கிட்ட கேட்டீங்களா?”

“கேட்டேன் அக்கா சரியா பதில் தரல… அதோட எங்ககிட்ட அதிகமா பேசறதையும் குறைச்சுட்டு தனியா போய் உக்கார்ந்திருப்பா…”

“சரி கல்யாணம் முடிஞ்ச அப்புறம்?”

“அது… எப்பவாவது தான் வீட்டுக்கு வருவாங்க, விபி மாமாவும் கூடத்தான் வருவாரு… எங்க எல்லார்கிட்டயும் ரொம்ப ஜாலியா பேசுவாரு, அக்காவை பேச்சுக்கு இழுத்துட்டே இருப்பாரு… காவ்யா தான் உம்முன்னே இருப்பா…” மஞ்சரியின் கண்முன்னே அனைவரும் சந்தோசமாக இருந்த நிகழ்வுகள் விரிந்து மறைந்தன.

“ஒருவேளை நடந்த விபத்து கொலை முயற்சியா இருந்தா நீங்க யாரை சந்தேகபடுவீங்க?” காசிநாதனின் கடைசி கேள்வியில் இளையவர்கள் யோசனையில் இருக்க, பார்கவியின் பதில் பட்டென்று வந்தது.

“விபீஸ்வர் மேல தான்…”

“எப்படி அவ்ளோ உறுதியா சொல்றீங்க மா?”

“ஒருமுறை இதை காவ்யா தான் சொன்னா, ‘பணக்காரங்க பத்தி அவங்க குணம் பத்தி தெரியாம வெகுளியா இருக்கீங்க ம்மா! அதை புரிஞ்சிக்கும் போது நீங்க கஷ்டபடுவீங்க, நான் உங்ககூட இல்லாம போனாலும் சிவா, மஞ்சரியை நல்லபடியா பார்த்துக்கங்க, உடைஞ்சு போய் மூலையில உக்கார்ந்துட்டு அவங்களையும் கலங்க விட்டுடாதீங்க, எப்பவும் தைரியமா இருங்க…!’ அவ சொன்னதை அப்ப நான் தான் புரிஞ்சுக்கில…” பார்கவி தலையில் அடித்து கொண்டு அழ, மற்ற இருவரும் அவரை சமாதானம் செய்ய முயன்றனர்.

அதற்கு மேலும் விசாரணையை தொடர முடியாமல் காசிநாதன் விடைபெற்று கிளம்பினார். அந்த விபத்து பற்றிய ரகசியத்தை எப்படியும் கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்ற உறுதியோடு.

# # #

அதே காலை வேளையில் விபீஸ்வர் தயாராகி சக்கர நாற்காலியில் நகர்ந்து வர, தயங்கி தயங்கி அவனெதிரே வந்து நின்றாள் ஜனனி

“ஹேய் குட் மார்னிங் ஜெனி” விபீஸ்வர் முகத்தில் இயல்பான புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது.

“குட் மார்னிங்” என்று சிறு குரலாய் சொன்னவள், தன் கைப்பையில் இருந்த கருப்பு கயிறை எடுத்து அவன் கையில் கட்டினாள்.

“என்ன ஜெனி இது?” விபீஸ்வர் மறுக்க, “இது மந்திரிச்ச கயிறு, இதை கைல கட்டிக்கிட்டா துஷ்ட சக்தி எதுவும் நம்மகிட்ட நெருங்காதாம், இதோ நானும் கட்டியிருக்கேன் பாரு” என்று தன் கையை காட்ட, பால்நிற மூங்கிலாய் நீண்டிருந்த அவளின் மென்கரத்தில் கட்டியிருந்த கருமை நிற கயிறு தனியாக தெரிந்தது.

“ஷிட் நீ‌ எப்ப இதையெல்லாம் நம்ப ஆரம்பிச்ச?” என்றவன் தன் கையிலிருந்த கயிற்றை கழற்றி தூர வீசினான்.

“ஏன் விபி இப்படி பண்ற, உன் நல்லதுகாக தானே, இதெல்லாம் செய்றேன்” ஜனனி கவலையாக பேச,

“புதுசா‌ கருப்பு கயிறு விக்கிற பிஸ்னஸ்‌ ஏதாவது ஸ்டார்ட் பண்ணி இருக்காரா உன் அப்பா? அதான் என்னை வச்சு டிரையல் பார்க்கிறயா” விபீஸ்வர் சற்று கடுப்பாகவே கேட்டான்.

“விளையாடாத விபி, உன் பக்கத்துல தான் நான் அந்த காவ்யா உருவத்தை பார்த்தேன் ப்ராமிஸ்ஸா… அதால உனக்கு ஏதாவது ஆபத்து வருமோன்னு பயமா இருக்கு” ஜனனி சற்று நடுக்கமாகவே சொல்ல,

“அப்படி நீ சொல்றது ஒருவேளை உண்மையா இருந்தா கூட அதுக்காக நீ பயப்பட தேவையில்ல, என் காவ்யாவோட நிழல்கூட என்னை காயப்படுத்தாது” என்று உறுதியாக சொன்னவன் தன் சக்கர நாற்காலியோடு நகர்ந்து சென்றான். ஜனனியும் ஒருவித பயம் கலந்த பரிதவிப்போடு அவனோடு சென்றாள்.

அலுவலகத்தில் விபீஸ்வர் தனது வழக்கமான வேலைகளை கவனிக்க, ரங்கராஜன் அவன் உத்தரவுபடி மற்ற வேலைகளை செய்து வந்தார்.

ஜனனி இன்று விபீஸ்வரின் பார்வையில் இருந்து விலகாமல், அவனுக்கு தேவையான உதவிகளை செய்தபடி அங்கேயே அமர்ந்து இருந்தாள். எதிலிருந்தோ அவனை பாதுக்காக்க வேண்டும் என்ற உளைச்சல் அவளுக்குள்.

மாலை பணி முடியும் நேரத்தில், ரங்கராஜன், சிவாவுடன் விபீஸ்வர் கேபினுக்குள் வந்தார். சிவாவின் முகம் துவண்டு இறுக்க, அவனை அங்கு பார்த்தும் விபியின் முகத்தில் மென்மை பரவியது.

அப்போது அங்கே விபீஸ்வர், ஜனனி தவிர மேலும் இரு பணியாளர்களும் இருந்தனர். விபியின் பார்வையில் எல்லோரும் கூண்டோடு வெளியேற, ஜனனி மட்டும் தயங்கியபடியே நகர்ந்தாள்.

“வா சிவா, வந்து உட்காரு, இப்ப தான் என்னை பார்க்கணும்னு தோணுச்சா உனக்கு?”

சிவா தலை கவிழ்ந்தபடி அவன் காட்டிய இருக்கையில் அமர்ந்து கொண்டான்.

“அத்தை, மஞ்சு எல்லாம் எப்படி இருக்காங்க?”

“…”

“ஏன் அமைதியா இருக்க, ஏதாவது பேசு டா, அத்தை மாதிரி நீயும் என்னை சந்தேகபடுறியா?”

சட்டென நிமிர்ந்த சிவா, மறுப்பாக தலையசைத்தான். “இல்ல மாமா… என்ன பேச தெரியல… காவ்யா இல்லன்னு இப்ப கூட என்னால நம்ப முடியல…”

விபீஸ்வர் அமைதியாக அவனை பார்த்திருந்தான்.

“காவ்யா இறந்ததுக்கு நீங்க காரணம் இல்லன்னு அம்மாகிட்ட எவ்வளவோ சொல்லி பார்த்தேன்… அவங்க நம்புறதா இல்ல…”

“சரி விடு, அத்தை நம்பும் போது நம்பட்டும் என்ன விசயமா என்ன பார்க்க வந்த?”

“அது… வந்து… இனி நீங்க… எங்க வீட்டுக்காக செலவு எதுவும் செய்ய வேண்டாம் மாமா… நானே சமாளிச்சிக்கிறேன்!”

“ஓ நீ தான் இப்ப வேலைக்கு போக ஆரம்பிச்சிட்ட இல்ல, பெரிய மனுசன் ஆகிட்ட போல. அதான!”

“அச்சோ அப்படி எல்லாம் இல்ல மாமா, நான் வேலையில இன்னும் நிலைச்சிருக்க காரணமே நீங்க தான்…! ஏன் இப்ப உயிரோட உங்க கிட்ட பேசறேன்னா அதுக்கும் நீங்க தான் காரணம்…! அக்கா இருந்தவரைக்கும் எல்லாத்தையும் நீங்க பார்த்துட்டீங்க சரி… இப்ப அவ இல்லாம போனதுக்கு அப்புறமும் உங்க பணத்தில வாழறது… கஷ்டமா இருக்கு!”

“இங்க பாரு சிவா, காவ்யாவ எப்ப நேசிக்க ஆரம்பிச்சேனோ அப்பவே அவளோட பொருப்பு எல்லாத்தையும் என்னோடதா ஏத்துக்கிட்டேன். இப்ப நீங்க என்னோட பொருப்பு மட்டும் இல்ல, என்னோட குடும்பமும் கூட… காவ்யா இடத்தில இருந்து உங்க எல்லாரையும் பார்த்துக்கிற கடமை எனக்கு இருக்கு”

“ஆனா மாமா… அம்மா…” சிவா தயங்கினான். விபீஸ்வரின் தயவால் வந்த எந்த பொருளும் வீட்டில் இருக்கக்கூடாது என்று பார்கவி பிடிவாதமாக மகனிடம் சண்டை இட்டிருந்தார்.

“எனக்கு கால் சரியானதும் நானே அத்தை கிட்ட பேசி சமாதானபடுத்துறேன். நீ கவலையை விடு”

மேலும் என்ன பேசுவது என்று தெரியாமல் சிவா எழுந்தான். அவனின் சந்தேகம் நினைவு வர, “விபி மாம்ஸ், போலிஸ்ல நாங்க எந்த கம்ளெய்ண்ட்டும் பண்ணலயே… அப்ப எப்படி போலிஸ் விசாரணை செய்றாங்க?” அவசரமாக கேட்டான்.

“நீ ஏன் புகார் செய்யாம விட்ட சிவா?”

“உங்க மேல எனக்கு சந்தேகம் இல்ல மாமா, போலீஸ் முதல் கட்ட விசாரணையில கேக்கும் போதும் அதை தான் சொன்னேன்… அதான் அவங்க ஆக்ஸிடென்ட் கேஸ்னு பதிவு பண்ணாங்க… இப்ப அது கொலையா இருக்கலாம்னு சந்தேகத்தில விசாரிக்கறதா சொல்றாங்க, எனக்கு புரியல!”

“உங்க தரப்புல இருந்து இந்த கேஸ்ல சந்தேகம் இருக்கிறதா கம்ளெய்ண்ட் ஃபைல் பண்ண சொன்னது நான் தான்! நம்ம வக்கீல் மூலமா தான் மூவ் பண்ணேன்!”

“நீங்களேவா? ஏன் மாமா?”

“அது நிச்சயமா சாதாரண விபத்து இல்ல சிவா… யாரோ என்னை கொல்ல டார்கெட் பண்ணது! அதுல காவ்யா…!” விபீஸ்வர் தொண்டை அடைத்துக் கொண்டது.

அந்த ஒரு காட்சி தானே மறுபடி மறுபடி அவனுள் தோன்றி கத்தியின்றி ரத்தமின்றி அவன் இதயத்தை அறுத்துக் கொண்டிருக்கிறது.

சிவா அதிர்ந்து தொப்பென அமர்ந்து விட்டான். அந்த சகோதரனின் கண்களில் கண்ணீர் தளும்பியது.

சில நிமிடங்கள் அந்த இடம் அமைதியாக இருக்க, “காவ்யா சொன்னமாதிரி உங்க கல்யாணம் நடக்காம போயிருந்தா, இப்ப அவ உயிரோட இருந்து இருப்பா இல்ல! நான் தான்… பாவி நான் தான் காவ்யா வேணாம்னு சொல்லியும் சமாதானம் சொல்லி கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சேன்” அவன் தலையில் அடித்து கொண்டு அழுது விட்டான்.

இந்த செய்தி விபீஸ்வருக்கு புதிது. சிவா சொன்ன விசயத்தை உள்வாங்கி கொண்டு ஏதோ சிந்திக்கலானான்.

“விபி நேரமாச்சு கிளம்பலாமா?” ஜனனி பொறுமை இழந்து கேபின் கதவை திறந்து சிடுசிடுக்க, அவளிடம் தன் கண்டன பார்வை வீசினான்.

“சிவா, நீ எதையும் நினச்சு குழப்பிக்காத, அத்தையையும் மஞ்சுவையும் நல்லா பார்த்துக்கோ, கிளம்பு” விபீஸ்வர் சொல்ல, சிவா முகத்தை துடைத்து கொண்டு கிளம்பிவிட்டான். மறுவார்த்தை எதுவும் பேசாமல்.

விபீஸ்வரும் எதுவும் பேசாமல் கிளம்ப, ஜனனி தான் தவிப்பின் பிடியில் சிக்கிக் கொண்டிருந்தாள்.

இந்த ஒன்றரை மாத காலமாக இரவும் பகலும் எப்போதும் விபி உடனே தான் கிடக்கிறாள். ஒரு வருடம் முன்பு இவள் பார்த்து பழகிய விபி நிச்சயம் இவன் இல்லை என்று தோன்றும் அளவு மொத்தமாக மாறி தெரிந்தான் அவளுக்கு.

வாழ்நாள் முழுவதும் ஒருத்தியோடு மட்டும் என்னால் வாழ முடியாது என்று வசனம் பேசியவன் இன்று, இல்லாத ஒருத்தியின் நினைவில் தன் சுயத்தை இழந்து தவித்து கிடக்கிறான்!

அவன் மீது தீரா காதல் கொண்ட இந்த பேதையின் உள்ளமோ அவனின் வேதனைக்கு தான் ஏதேனும் ஒருவகையில் மருந்தாக மாட்டோமா! என்ற ஏக்கத்தில் விழைகிறது. ஆனால் விபீஸ்வர் தன் நிழலை நெருங்க கூட அவளுக்கு அனுமதி மறுக்கிறான்.

காரில் தன் அருகில் ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந்திருந்த விபியை கவனித்தாள். இப்போதெல்லாம் இவனின் இந்த அசாத்திய மௌனமும் தீவிர சிந்தனையும் காரணம் விளங்காமல் ஜனனிக்குள் கலக்கத்தையே தோற்று வித்தது.

பங்களாவின் போர்ட்டிக்கோவில் கார் வந்து நிற்க, ஓட்டுநர் உதவியோடு சக்கர நாற்காலியில் அமர்ந்துக் கொண்டவனின் பார்வை அங்கிருந்த புதிய காரின் மேல்‌ நிலைத்தது.

ஜனனி, “அது என்னோட கார் தான் விபி, டாட் பிரசன்ட் பண்ணது… நியூ மாடல் செமயா இருக்கு இல்ல” உற்சாகமாக‌ சொன்னவளுக்கு ஆமோதிப்பாக தலையசைத்து விட்டு வீட்டிற்குள் நகர்ந்தான்.

‘இவன் என்ன மௌன சாமியார் வேஷம் போடுறான், பேசினாதான் என்னவாம், என் பழைய விபி எப்ப திரும்பி வருவான்!’ என்று முணுமுணுத்து பெருமூச்சு மட்டுமே அவளால் விட முடிந்தது.

# # #

“எதாவது தெரிஞ்சதா ரவி?”

தன் அறையின் தனிமையில் விபீஸ்வர், ரவியுடன் தனது தனிப்பட்ட அலைப்பேசியில் உரையாடிக் கொண்டிருந்தான்.

“இல்ல சர், ஆனா நிச்சயம் கண்டுபிடிச்சிடலாம், எப்பேர்ப்பட்ட புத்திசாலியா இருந்தாலும் தப்பு செய்யும்போது ஏதாவதொன்னை மிஸ் பண்ணி இருப்பாங்க, அதை நாம கண்டுபிடிச்சா போதும் சர்”

“இவ்வளவு நாளா எதுவுமே கிடைக்கலயே ரவி! எவ்வளவு யோசிச்சும் அந்த காரோட எந்த அடையாளத்தையும் என்னால நினைவுக்கு கொண்டு வர முடியல… எல்லாரையும் சந்தேக பார்வையோட பார்த்து எனக்கு வெறுத்து போச்சு”

விபீஸ்வர் எதற்கும் இப்படி புலம்புபவன் இல்லை என்பது இத்தனை வருட பழக்கத்தில் ரவிக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. காதல் ஏற்றிய பித்தம் அவனையும் தளர செய்திருக்கிறது என்பதை உணர்ந்து ரவியும் சங்கடப்பட்டான்.

“இன்ஸ்பெக்டர் காசிநாதன் விசாரணை எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு ரவி?” விபீஸ்வரின் அடுத்த கேள்விக்கு, “சுத்த போர் சர், சம்பந்தபட்டவங்களை விசாரிச்சிட்டு இருக்காரு, இம்ரூவ்மென்ட் மூவ்ஸ் எதுவும் இல்ல சர், இப்படியே போனா, அடுத்த வருசம் தான் கேஸ் முடியும் போல” என்று ரவி சலிப்பாக சொன்னான்.

“முதல்லயே ஒரு மாசம் வீணா போயிடுச்சு, என் உயிரை வாங்க முயற்சி பண்ணது யாருன்னு எனக்கு தெரிஞ்சு ஆகணும், அப்படி என்மேல என்ன கோபம்னு நான் பார்க்கணும், இனியும் என்னால பொறுத்திருக்க முடியாது ரவி, சீக்கிரம் இன்ஸ்பெக்டர் காசிநாதனோட சீக்ரெட் மீட்டிங் அரேஜ் பண்ணு” விபீஸ்வரின் உத்தரவு ரவிக்கும் சரியென படவே அவனும் ஆமோதித்து வைத்தான்.

எங்கும் இருளின் ஆக்கிரமிப்பு, உயிர் துணையையும் உறக்கத்தையும் தொலைத்துவிட்ட அவன் கண்களில் பரிதவிப்பு…

விபீஸ்வர் மடி கணினியை திறந்து, காவ்யதர்ஷினி நிழற்படங்களை பார்வையிடலானான். அந்த ஒவ்வொரு நிழல் பிம்பமும் அவனுள் நிஜமான தாக்கத்தை ஏற்படுத்துவதாய்…
.
.
.

தன்மீதும் தன் காதல் மீதும் நம்பிக்கை இல்லை என்று காவ்யதர்ஷினி சொன்ன பிறகு விபீஸ்வர் மொத்தமாக மாறி போயிருந்தான். முகத்தில் இறுக்கத்தை பூட்டிக்கொண்டு வலம் வந்தான்.

காவ்யதர்ஷினி எப்போதும் போல தன் வேலையில் மட்டும் கவனமாக இருக்க, நிறுவன வேலைகள், முக்கிய சந்திப்புகள் என அடுத்தடுத்த நாட்கள் ஓய்வின்றி கழிந்திருந்தன.

“ஹலோ மதுமிதா”

“சொல்லு காவ்யா, எப்படி இருக்க”

“ம்ம் நல்லாயிருக்கேன் மது, உங்க கம்பெனில இருந்து எந்த ஆர்டரும் இன்னும் வரலையே… லேட் ஆகும் போல?”

“சாரி காவ்யா, அந்த வேலைக்கு… உனக்கு அடுத்து இருந்தவங்களை அப்பாய்ண்ட் பண்ணிட்டாங்க”

“ஏன் அப்படி? இன்டர்வியூல உறுதியா சொன்னாங்களே…”

“எனக்கும் மேம் உறுதியா தான் சொன்னாங்க, ஆனா, உங்க எம்டி தான் நடுவுல ஏதோ சொல்லி, வேலை உனக்கு கிடைக்காம செய்திருக்காரு!”

“விபி சாரா?”

“ம்ம்”

அலைபேசியை அணைத்த காவ்யாவிற்குள் ஆத்திரம் கொதித்தெழுந்தது.

விபீஸ்வர் அப்போதுதான் வேலை நேரம் முடிந்து லிஃப்ட்டுக்குள் நுழைந்தான். அதனை கவனித்து காவ்யாவும் வேகமாக சென்று அதற்குள் நுழைந்து கொண்டாள்.

விபீஸ்வர் அவளின் வேகத்தையும் கோபத்தையும் கண்டு கொள்ளாமல் தன் கைப்பேசியில் ஏதோ நோண்டிக் கொண்டிருக்க,

அவனை காரமாய் முறைத்து நின்றிருந்தவள், “நீங்க இவ்வளவு கீழ்தரமான வேலை செய்வீங்கன்னு நான் நிச்சயமா யோசிக்கல சர்” முகம் சுருங்க மொழிந்தாள்.

கைப்பேசியில் இருந்து தலையை நிமிர்த்தி அவள் பேச்சு விளங்காதது போல நெற்றி சுருக்கினான்.

“எனக்கு கிடைக்க வேண்டிய வேலைய கூட கிடைக்க விடாம செஞ்சிருக்கீங்க… ஏன் சர், ஒவ்வோரு விசயத்திலயும் உங்க தரத்திலிருந்து இறங்கி போயிட்டே இருக்கீங்க?”

“நீ வேற இடம் வேலைக்கு போறது எனக்கு பிடிக்கல, அதான் அப்படி செஞ்சேன். நீ இதை தப்பா தான் எடுத்துக்குவன்னா அது உன் இஷ்டம்… என்னையும் என் காதலையும் நம்பாதவ… என் பேச்சை மட்டும் நம்பவா போற!” என்று சலிப்பாக சொன்னவன் லிஃப்ட் கதவு திறக்க, தோளை குலுக்கி விட்டு நடந்தான்.

காவ்யாவிற்கு அப்படியே பற்றிக் கொண்டு வந்தது. அங்கிருக்கும் எதையாவது தூக்கி அவன் தலைமேல் போட்டால் என்ன? என்று தோன்ற ஆங்காரமாய் சுற்றும் பார்வை சுழற்றினாள். அங்கே தீயணைப்பு கருவி தான் அவளருகில் இருந்தது ஆனாலும் அதை எடுத்து அவன் மண்டையை உடைக்கும் தைரியம் வரவில்லை அவளுக்கு.

விபீஸ்வர் தன் காரில் ஏறிக் கொள்ள, காவ்யா தன் ஸ்கூட்டி இடம் சென்றாள். அவள் கைப்பேசி கிணுகிணுக்க, அதை காதில் ஒற்றிவள், அதில் சொன்ன சேதி கேட்டு அதிர்ந்து கண்கள் இருள அங்கேயே மயங்கி சரிந்தாள்.

உயிர் தேடல் நீளும்…

error: Content is protected !!