UTN 23

உயிர் தேடல் நீயடி 23

விபீஸ்வரும், காவ்யதர்ஷினியும் கைகள் கோர்த்து வருவதை அலுவலகத்தில் உள்ள அனைத்து கண்களும் அதிசயமாக பார்க்க, அவர்கள் தங்களுக்குள் சுவாரஸ்யமாக கிசுகிசுத்துக் கொண்டனர்.

“எல்லாரும் நம்மையே பார்க்கிறாங்க… தயவு செஞ்சு கையை விடுங்க சர்” காவ்யா சங்கடமாய் கேட்க, அப்படியே நின்று திரும்பியவன், “ஹாய் கெய்ஸ்… நான் ரொம்ப ரொம்ப ஹாப்பியா இருக்கேன்… சீக்கிரமே மிஸ் காவ்யதர்ஷினி, மிஸஸ் விபீஸ்வர் ஆக போறாங்க…ஹூ” அவள் கையை தன் நெஞ்சோடு சேர்த்து, உற்சாகமாய் சத்தமிட்டு அங்குள்ள அனைவருக்கும் தங்கள் திருமணச் செய்தியை அறிவிக்க, அனைவரும் வாழ்த்துடன் சத்தமிட்டு கரகோஷம் எழுப்பினர்.

“ஹே… ஹே… கங்கிராட்ஸ் விபி சர்… கங்கிராட்ஸ் காவ்யா மேம்”

“தேங்க் யூ கைய்ஸ்…” விபீஸ்வர் நன்றி சொல்லிவிட்டு அதிர்ந்து நின்றிருந்தவளை இழுத்துக்கொண்டு வெளியேறினான்.

விபீஸ்வர் கைகளின் லாவகத்தில் அவன் கார் சாலையில் வேகமெடுத்து சீறி பாய்ந்து கொண்டிருந்தது.

“உங்களுக்கு என்ன புத்தி மழுங்கி போச்சா சர்… நீங்க என்ன செய்றீங்க? என்ன பேசறீங்கன்னு உங்களுக்கு புரியுதா இல்லையா? ஆஃபிஸ்ல எல்லார் முன்னையும் இப்படி சொல்லி வச்சிருக்கீங்களே, அச்சோ எல்லாமே போச்சு” காவ்யா படபடக்க,

“ஹே பேப் கூல் யா, எப்படி இருந்தாலும் எல்லாருக்கும் நம்ம மேரேஜ் அனோன்ஸ் பண்ணி தான ஆகணும், அதை இப்பவே சொல்லிட்டேன், அவ்வளோ தான” விபீஸ்வர் வெகு இயல்பாக பதில் தந்தான்.

“அச்சோ உங்களுக்கு எப்படி புரிய வைக்கிறது? நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் எதுவும் நடக்காது சர்”

“அதை எப்படி நடத்திக் காட்டணும்னு எனக்கு தெரியும் ஸ்வீட் ஹார்ட், இறங்கி வா” என்று காரை நிறுத்தி விட்டு இறங்கினான்.

அந்த இடம் அவளின் அடுக்குமாடி குடியிருப்பு! காவ்யாவின் பதற்றம் கூடியது.

“அய்யோ சர், இங்க எதுக்கு வந்திருக்கீங்க?” என்றவளின் கைபிடித்து மறுபடி இழுத்து சென்றான்.

எதையும் யோசிக்கவும் இயலாமல், அவனை தடுக்கவும் முடியாமல், நொந்தபடி அவன் இழுப்பிற்கு இவளும் நடந்தாள்.

அழைப்பு மணி ஒலிக்கேட்டு கதவை திறந்த பார்கவி, “வந்துட்டியா காவ்யா, நீ வர தாமதமாகும் போல, நானே ஆட்டோ பிடிச்சு ஹாஸ்பிடல் போகலாம்னு…!” மகளுடன் விபீஸ்வரை பார்த்தவரின் பேச்சு பாதியில் நின்றது.

அவர்களின் இணைந்திருந்த கைகளை சந்தேகமாக பார்த்தவர், “உள்ளே வாங்க…” சற்று தயக்கமாக வரவேற்றார்.

காவ்யா சங்கடத்துடன் அவன் பிடியிலிருந்து தன் கையை உருவிக் கொள்ள முயல, அவன் பிடி மேலும் இறுகியது தான் மிச்சம்.

“ஆன்ட்டி, உங்க கிட்ட முக்கியமா ஒரு விசயம் கேட்க வந்திருக்கேன்…” விபீஸ்வர் நேராக பேச்சை தொடங்கினான்.

“பிளீஸ் சர்… எதுவும் சொல்லிடாதீங்க…” காவ்யா இறங்கிய குரலில் அவனிடம் கெஞ்சி கொண்டிருக்க, “நானும் காவ்யாவும் லவ் பண்றோம்… எங்க கல்யாணத்துக்கு உங்க சம்மதம் வேணும் ஆன்ட்டி!” விபீஸ்வர் பட்டென உடைத்து கேட்டு, பார்கவியையும் அதிர செய்தான்.

தன் காதுகளையும் கண்களையும் நம்ப‌ முடியாமல் பிரமித்து போனார் பார்கவி. விபீஸ்வரின் செல்வ செழிப்பையும் ஆளுமையையும் காவ்யா, சிவா முன்பு சொல்லிருக்க, அதை எண்ணி பார்த்தவருக்கு கால்கள் தரையில் படாமல் மிதப்பது போலிருந்தது.

“எம்மாடியோவ் நிசமாவா சொல்றீங்க… எங்க வீட்டு பொண்ணை நீங்க கல்யாணம் செஞ்சிக்க போறீங்களா!” அவருக்கு தன்னிலை மறந்து போனது.

“அச்சோ அம்மா! இதெல்லாம் உண்மை இல்ல! இவர் தான் ஏதோ நினைச்சிட்டு…” காவ்யா பதற,

“எது உண்மை இல்ல, இப்படி திடுதிப்புனு அவரோட கைக்கோர்த்துட்டு வந்து நிக்கிறதை பார்த்தும் ஒண்ணுமில்லன்னு நம்ப சொல்றீயா?” பார்கவி அவர்களின் கோர்த்திருந்த கைகளை சுட்டி காட்டி பேசினார்.

காவ்யா, விபீஸ்வரை ஏகத்துக்கும் முறைத்து விட்டு தன் கையை உதறி விடுவித்து கொள்ள, அவன் அசராமல் கண்ணடித்து சில்லென்ற சிரிப்பை சிதற விட்டான்.

பார்கவி வெளி உலக அறிவை வளர்த்துக் கொள்ளாத சாதாரண பெண்மணியாக இருந்தார். முன்பு கணவனின் நிழலிலும் பின்பு மகளின் நிழலிலுமே அரவணைப்பாக வாழ்ந்து பழகி விட்டிருந்தார். அதனாலேயே விபீஸ்வர் போல சர்வ லட்சனமான கணவன் தன் செல்ல மகளுக்கு வாய்க்கப் பெற்றதில் சாதக பாதகங்களை ஆராயாது பூரித்து போனார்.

சமையலறைக்குள் சென்றவர் சிறு கிண்ணத்தில் சர்க்கரையை எடுத்து வந்து, “கையும் ஓடல, காலும் ஓடல, எவ்வளவு சந்தோசமான விசயம் சொல்லி இருக்கீங்க, இந்தாங்க முதல்ல சீனி எடுத்துக்கோங்க” என்று நீட்டினார்.

விபீஸ்வர் அதை விளங்காமல் பார்த்து நிற்க, ஆர்வ மிகுதியில் அவரே ஒரு தேக்கரண்டி சக்கரையை அள்ளி அவன் வாயில் திணித்தார். அதே வேகத்தில் காவ்யாவின் வாயிலும் சக்கரையை திணித்து வைத்தார்.

காவ்யாவின் தவிப்பினை ரசித்து பார்த்தவன் தன் வாய் இனிப்பை விழுங்கி இருந்தான். இந்த சந்தோசம் இவனுக்கு புதிதாக இருந்தது. பிடித்தும் இருந்தது.

“நீங்க சொல்லிட்டீங்க சரி, ஆனா உங்க வீட்டு ஆளுங்க ஒத்துக்கணும் இல்ல, எங்களால உங்க அளவுக்கு எதுவும் செய்ய முடியாதே, அதோட இப்ப சிவா வேற அடிப்பட்டு கிடக்கான்…!” பார்கவிக்கு இப்போது தான் நிதர்சனம் புரிய, தவிப்பாக கேட்டார்.

“என்னோட முடிவுக்கு என் அம்மா எப்பவும் மறுத்து சொல்ல மாட்டாங்க. சிவா பத்தி நீங்க கவலைபடாதீங்க ஆன்ட்டி… அவனுக்கான முழு பொறுப்பையும் நான் ஏத்துக்கிறேன். அதோட நீங்களும் இனி என்னோட குடும்பம், நீங்க எங்க கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னா மட்டும் போதும்…” விபீஸ்வர் தன்மையாக அவரிடம் பேசினான்.

“எங்க காவ்யா சந்தோசம் தான் எங்களோட சந்தோசம், எதுக்கும் உங்க அம்மாவுக்கும் சம்மதம்னு காதால கேட்டுட்டேன்னா, எங்க மனசுக்கும் ஆறுதலா இருக்கும்” என்று தன் தவிப்பை பார்கவி கூற, விபீஸ்வரும் சரியென்று சம்மதமாக தலையசைத்தான்.

தன் முன்னே தனது கல்யாண பேச்சு நடந்தேறிக் கொண்டிருக்க, தன் வாயில் நிறைந்திருந்த சர்க்கரையை மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் திணறியபடி நின்றிருந்தாள் காவ்யா.

# # #

அந்த பங்களாவின் வெளித்தோற்றம் பிரம்மாண்டமாக காட்சி தந்து அவளை வரவேற்றது.

வழக்கம் போல காவ்யதர்ஷினியை தன் வீட்டிற்கு வம்படியாக இழுத்து வந்திருந்தான் விபீஸ்வர்.

காரிலிருந்து இறங்கியுடன் அவன், அவள் கையை பிடித்து கொள்ள, “முதல்ல கையை விடுங்க, நான் எங்கேயும் ஓடி போக மாட்டேன்” என்று தன் கையை உருவிக்கொண்டு அவனுடன் நடந்தாள். அவனும் தோளை குலுக்கி விட்டு தன்னவளை முதல் முதலாக தன் இல்லத்திற்கு அழைத்து வந்தான்.

பங்களாவின் உள் தோற்றத்தின் பிரம்மாண்டமும் பேரழகும் அலங்கார நேர்த்தியும் அவர்கள் செல்வ செழிப்பை பறைசாற்றி, இவளை மிரள வைத்தது.

கூடுதலாக லலிதாம்பிகை முகமும் கடுமையையும் இறுக்கத்தையும் வெளிப்படையாகவே காட்டியது.

“மாம், உங்க மருமகளை இழுத்துட்டு வந்திருக்கேன் பாருங்க” விபீஸ்வர் சொல்ல நிமிர்ந்தவரின் பார்வையில், மகனின் முதுகுக்கு பின்னால் இருந்து தயங்கி தயங்கி வந்து நின்றாள் அப்பெண்.

அவளின் எளிமையான உடையும், பிரத்யேக ஒப்பனையற்ற முகத்தோற்றமும், சற்று மிரட்சியான பார்வையும் எதுவுமே லலிதாவிற்கு பிடித்தத்தை உண்டாக்கவில்லை.

‘போயும் போயும் இவளா தன் மகனுக்கு ஜோடியாக வாய்க்கப்பெற்றவள்’ அவரின் மனம் முரண்டியது.

லலிதாம்பிகையின் முகபாவத்தை வைத்தே தன்மீது அவருக்கு பிடித்தம் இல்லை என்பதை உணர்ந்து கொண்டவள், வேறுவழியின்றி தன் அம்மா நூறு முறை சொல்லி அனுப்பியபடி தயக்கமாக அவர் பாதம் பணிந்தாள்.

அமர்ந்த வாக்கிலிருந்து எழாமலேயே, “ம்ம் நல்லாயிரு பொண்ணு” என்று தன் வருங்கால மருமகளுக்கு வேண்டா வெறுப்பாக ஆசி வழங்கினார் லலிதாம்பிகை.

“மாம், அப்படியே எனக்கும்” என்று விபியும் காவ்யாவை தொடர்ந்து, முதல் முதலாக தன் அம்மாவின் பாதம் தொட்டு வணங்கி நின்றான். லலிதா நெகிழ்ந்து போனவராய் எழுந்து நின்று தன் செல்லமகனின் முகம் வருடி, “என்னோட ஆசிர்வாதம் எப்பவும் உனக்கு இருக்கும் விபி, எந்த குறையும் இல்லாம ராஜா மாதிரி நீ வாழணும் டா” என்றார்.

“அதான் எனக்கான ராணி வந்துட்டா இல்ல மாம், இனி ராஜபோகம் தான்” என்று காவ்யாவை தன் அருகிழுத்து, தோளைணைத்து சொன்னான்.

“சரிதான் கண்ணா. எப்ப, உன் விருப்பத்துக்கு நான் தடையா இருந்து இருக்கேன் சொல்லு” அவர் சம்மதம் சொல்லி விட, விபீஸ்வர் அம்மாவின் கன்னத்தில் அழுத்த முத்தமிட்டு, “தேங்க் யூ மாம்” என்று காவ்யாவை இழுத்து கொண்டு அங்கிருந்து அகன்றிருந்தான்.

தன் கன்னத்தை துடைத்து விட்ட லலிதாம்பிகைக்கு தன் மகனின் திருமணத்தை எண்ணி ஆயாச பெருமூச்சு தான் விட முடிந்தது.

தன் வருங்கால மனைவியை தன் அறைக்குள் அழைத்து வந்திருந்தான் விபீஸ்வர். அவன் அறையின் நேர்த்தியும் அழகும் காவ்யாவின் கவனத்தை ஈர்க்க தான் செய்தன. அவனின் அற்புத ரசனையை மனதிற்குள் மெச்சிக் கொண்டாள் அந்த நேரத்திலும்.

அந்த அறையின் விசாலத்தோடு தன் வீட்டை ஒப்பிட்டவளுக்கு தன் வீடு சிறிதாகவே தோன்றியது.

“உனக்கு நம்ம ரூம் பிடிச்சு இருக்கா? ஏதாவது சேஞ்சஸ் செய்யணுமா சொல்லு செய்திடலாம்” விபி உற்சாகமாய் கேட்க,

“அவசியம் இல்ல சர், உங்க ரூம் பர்பெக்டா ரொம்ப அழகா இருக்கு” காவ்யா மனதில் பட்டதை சொன்னாள்.

அவளின் இடைவளைத்து அருகே இழுத்து கொண்டவன், “இன்னும் நான் உனக்கு சர் தானா கவி?” என்று அவன் தவிப்பாக வினவ, இவள் சங்கடமாக நெளிந்தாள்.

“உங்க அம்மாவுக்கு என்னை சுத்தமா பிடிக்கல” என்று இவள் பேச்சை மாற்ற, “ம்ம் தெரியும், உன்ன பத்தி அவங்களுக்கு எதுவும் தெரியாதில்ல அதான். போக போக உன்ன புரிஞ்சிக்குவாங்க, யூ டோண்ட் வொர்ரி அபௌட் இட்” என்றான்.

“யாருக்கும் விருப்பம் இல்லாத, ஒத்துவராத இந்த கல்யாணம் அவசியம் தானா? கொஞ்சம் யோசிச்சு பாருங்க”

“அவசியம் தான். இப்படி என்னோட நீ ஏட்டிக்குப் போட்டியா வம்பளக்க, உன்ன நான் திகட்ட திகட்ட காதல் செய்ய, அப்புறம்…” என்று அவள் முகம் நோக்கி நெருங்க, அவள் கண்கள் மூடி தலைத்தாழ்த்தி இடவலமாக மறுத்து தலையசைத்தாள்.

‘உன் மறுப்பை அவன் எப்போது ஏற்று இருக்கிறான். இப்போது ஏற்றுக் கொள்ள?’ என்று அவளின் உள்மனம் பதைபதைக்க, “நீங்க எல்லாத்துலயும் ரொம்ப அவசரபடுறீங்க…” அவள் மென்குரல் தழுதழுத்தது.

“ம்ஹும்… நான் அப்படி தான்” என்றவன் அவள் பூமுகம் நிமிர்த்தி அவளின் தேனிதழ்களைச் சிறைக் கொண்டான்.

ஒற்றை இதழணைப்பில் தன் பிடிவாத காதலின் வேகம் கூட்டி, மெல்லியலாளை துவளச் செய்தான்.

# # #

மாலை வேலை முடிந்து வீடு நோக்கி வந்தவளின் முகத்தில் சோர்வே விஞ்சி தெரிந்தது.

வரும் போது சிவாவிடம் பேசிவிட்டு தான் வந்திருந்தாள். திருமண பேச்சு பற்றி கேள்விப்பட்டு அவன் எழுந்து குதிக்காத குறை தான். விபீஸ்வரை போதும் போதும் என்னும் அளவிற்கு புகழ்ந்து தள்ளி இருந்தான். அதே யோசனையில் வீட்டிற்குள் வர, அந்த வீடே தடம்மாறி இருந்தது.

“என்ன நடக்குது இங்க?” காவ்யா புரியாமல் கேட்க,

“இன்டீரியல் வொர்க் நடந்திட்டு இருக்கு மேம், விபி சாரோட ஆர்டர். டூ, திரீ டேஸ்ல ப்னீஷ் பண்ணிடுவோம், அதுவரை கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க மேம்” அங்கிருந்தவர்களில் நாகரிகமான உடை அணிந்திருந்தவன் அவளிடம் தகவல் சொல்லிவிட்டு தன் வேலையை கவனிக்கலானான்.

பார்கவியும் மஞ்சரியும் அங்கே சுவாரஸ்யமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

விபீஸ்வர் எண்ணுக்கு அழைத்து, “எங்க வீடு எப்பவும் போல இருந்தாலே போதும், வீண் ஆடம்பரம் எல்லாம் எங்களுக்கு தேவையில்ல. இவங்களை இப்பவே போக சொல்லுங்க” என்று கத்திவிட்டாள்.

“ஓய் பேபி, செம ஹாட்டா இருக்க போல, போய் ஐஸ் வாட்டர் குடி” விபிஸ்வர் அவளை சீண்டினான்.

“விளையாடாதீங்க சர், இதெல்லாம் எதுவும் வேணாம். புரிஞ்சிக்கங்க” அவள் இன்னும் அழுத்தமாக மறுத்துச் சொன்னாள்.

“நெக்ஸ்ட் வீக், மாம், ரிலேட்டிவ்ஸ் எல்லாம் உன்ன பொண்ணு பார்க்க அங்க வராங்க, வீடு பெருசா இல்லைன்னாலும் கொஞ்சம் கிராண்டா இருந்தா தான் நல்லாயிருக்கும் அதான், பியூட்டிஷனுக்கு சொல்லி இருக்கேன் அவங்களும் வருவாங்க, நீ கொஞ்சம் கோஆப்ரேட் பண்ணு பேபி. லவ் யூ பை”

மறுமுனையில் அவன் பேசிவிட்டு வைத்து விட, தன் கை மீறி போகும் எதையும் தடுக்கவியலாமல் காவ்யாவிற்கு சலிப்பாக இருந்தது.

இருள் கவிழும் நேரம், காவ்யா ஏதேதோ சிந்தனையில் உழன்றபடி, பால்கனி சுவற்றில் சாய்ந்து அமர்ந்து இருந்தாள்.

இன்று அலுவலகத்தில்,

‘சின்ன புள்ளபூச்சி ஒண்ணு, பெரிய சிங்கத்தை சாய்ச்சிடுச்சாம் கேள்விபட்டியா?’

‘என்ன? ஓஹ் விபி சர் காவ்யா கிட்ட கவுந்ததை சொல்றீயா?’

‘ஆமாம்பா நான் கூட ஷாக்காயிட்டேன். என்னயா நடக்குது இங்க மோமண்ட் தான்’

‘போயும் போயும் இவ கிட்ட எப்படி விபி சர் மடங்கினாருன்னு தெரியலையே, ரூட் தெரிஞ்சு இருந்தா நானும் ட்ரை பண்ணி இருக்கலாம்’

‘அதுக்கெல்லாம் ஒரு சூட்சுமம் தெரியணும், அது அவளுக்கு தெரிஞ்சு இருக்கு, வேலைக்கு வந்தவ கொஞ்ச நாள்லயே முதலாளிய வளைச்சு போட்டிருக்கான்னா பெரிய கைகாரிதான்’ – அதற்கு மேல் அவர்கள் பேசுவதை கேட்க முடியவில்லை. காவ்யாவின் காதுபடவே அவர்கள் வாய்க்கு வந்த படி பேசியதை கேட்டு கத்தி மேல் நிற்பது போன்ற உணர்வு அவளை இம்சித்தது. ‘நான் அப்படி இல்ல…’ என்று அவர்களிடம் கத்த வேண்டும் போல் இருந்தது காவ்யாவிற்கு.

சக பணியாளர்கள் அவளுக்கு வாழ்த்தினை தெரிவித்து கொண்ட போதும் குதற்கமான கேள்விகளை கேட்டு அவள் மனதை காயப்படுத்தவும் தவறவில்லை.

வேறுவழியின்றி தன் மனக்குழப்பத்தை சிவாவிடம் கூற, அவனோ, ‘இதுல என்னக்கா குழப்பம்? அன்னைக்கு நீ காணோம்னு தெரிஞ்ச உடனே விபி மாமா எப்படி தவிச்சு போனார் தெரியுமா?’ என்றான்.

‘என்னது விபி மாமாவா?’ என்று காவ்யா திகைத்து கேட்க,

‘அக்கா… அவர் உன்ன ரொம்ப லவ் பண்றாரு. அவர் கண்ணுல உனக்கான தவிப்பையும் துடிப்பையும் காதலையும் பக்கத்துல இருந்து நான் பார்த்திருக்கேன். சும்மா கண்டதை நினச்சு குழப்பிக்காம கல்யாணத்துக்கு ரெடி ஆகுற வழிய பாருக்கா’

‘என்னடா நீ கூட அவர் பக்கம் பேசுற!’

‘நீ இன்னும் விபி மாமா லவ்வ சரியா புரிஞ்சிக்கலன்னு நினைக்கிறேன். அதான் இப்படி யோசிக்கிற… எனக்கு முழு நம்பிக்கை இருக்கு க்கா, விபி மாமா உன்ன ரொம்ப சந்தோஷமா பார்த்துப்பாரு’ – சிவா பேசிக்கொண்டு போக காவ்யா அரை மனதாக தலையாட்டிவிட்டு வந்திருந்தாள்.

இதற்கிடையே பார்கவி வேறு தலைக்கால் புரியாமல் மகளை கொண்டாடிக் கொண்டிருந்தார்.

‘எவ்வளோ பெரிய இடம் என் பொண்ணுக்கு அமைஞ்சிருக்குன்னு ஊரு கண்ணே உன்மேல தான் பட்டிருக்கு’ என்று காவ்யாவை அமரவைத்து திருஷ்டி வேறு கழித்து விட்டார்.

‘அம்மா, அவர் கல்யாணத்துக்கு இவ்வளோ அவசரப்படுறாரே, உனக்கு எதுவும் தப்பா தோணலையா?’ காவ்யா சந்தேகமாக கேட்டு வைக்க,

‘இதுல என்ன தப்பிருக்குன்னு சொல்ல வர காவ்யா, பெரிய இடத்து புள்ள, உன்மேல வச்ச ஆசைக்காக இவ்வளோ இறங்கி வந்து பேசறதே பெரிசு’ என்று சிலாகித்தார்.

‘பணக்காரங்க பத்தி அவங்க குணம் பத்தி தெரியாம வெகுளியா இருக்கீங்க ம்மா! அதை புரிஞ்சிக்கும் போது நீங்க கஷ்டபடுவீங்க, எந்த ஆதாயமும் இல்லாம அவங்க எதையும் செய்ய மாட்டாங்க, ஒருவேளை நாளைக்கு நான் உங்ககூட இல்லாம போனாலும் சிவா, மஞ்சரியை நல்லபடியா பார்த்துக்கங்க, உடைஞ்சு போய் மூலையில உக்கார்ந்துட்டு அவங்களையும் கலங்க விட்டுடாதீங்க, எப்பவும் தைரியமா இருங்க…!’ காவ்யா ஏனோ சிறிதும் நம்பிக்கை இன்றி அப்படி பேசி இருந்தாள்.

‘அடி போடி, எதையாவது புரியாம உளறிகிட்டு, நீ பொறந்தப்பவே கொடத்தூரு ஜோசியரு நீ பெரிய இடத்தில வாக்கபட போறவன்னு ஜாதகம் கணிச்சதா உங்க அப்பா வந்து சொன்னாரு. அது நெசமாகிடுச்சு பாரேன்’ என்று அவர் தன் பங்கிற்கு கதை அளக்க, இவள் பதில் பேசாமல் வந்து விட்டிருந்தாள்.

இவற்றை எல்லாம் யோசித்து இருண்டு வந்த வானத்தில் பார்வையை வெறித்தபடி அமர்ந்திருந்தாள் காவ்யா.

விபியின் பிடிவாதத்தையும் தன்னை சுற்றி இருப்பவர்களின் ஆர்பாட்டத்தையும் தாண்டி, காவ்யாவிற்குள் தனிப்பட்ட அலைபுறுதலும் துன்புறுத்தியது.

விபியின் தடாலடி திருமணத்தை தான்னால் ஏதேனும் ஒரு வகையில் தடுக்க இயலும் தான்! எனினும் தான் இப்படி அமைதியாக இருப்பதன் காரணம் அவளுக்குமே விளங்கவில்லை. ஒருவேளை தன் மானத்தையும், தன் தம்பியின் உயிரையும் காப்பாற்றியதால் அவன்மீது வந்த நன்றியுணர்வா? அல்லது அவன் காதலை தன் மனமும் ஏற்றுக் கொண்டதா?

அப்படி ஏற்றுக் கொண்டால் என் மனதில் ஏன் நெருடல் ஏற்பட வேண்டும். தன்நிலை விளங்காமல் குழம்பி தவித்திருந்தாள் அவள்.

“என்னாச்சு க்கா? இங்க வந்து உக்காந்திருக்க?” மஞ்சரி கேள்வியில் காவ்யா திரும்பினாள்.

“ஒண்ணுமில்ல மஞ்சு, சும்மா தான்”

“உனக்கு இந்த கல்யாணத்தில இஷ்டமில்லையா?”

“ஏன் அப்படி கேக்குற மஞ்சு?”

“உன் முகத்துல கல்யாண சந்தோஷமே இல்லையே க்கா!” மஞ்சரி கேட்டதும் எழுந்து வந்து காவ்யா தங்கையை அணைத்து கொண்டாள். அவளின் கண்ணோரம் கண்ணீர் கரித்தது.

இந்த சிறு பெண் கவனத்தில் வந்தது கூட பெரியவர்கள் கண்ணில் படவில்லையே என்று அவளின் பேதை மனம் வருந்தியது.

“உனக்கு அவரை பிடிக்கலையா க்கா?” அணைப்பினூடே மஞ்சரி கேள்வி தொடுக்க, “தெரியல மஞ்சு” என்று விலகி நின்றாள்.

“இதுவரைக்கும் அவர் உன்கிட்ட பேசினதை, பழகினதை யோசிச்சு பாரு, நல்லவிதமா தெரிஞ்சா உனக்கு அவரை பிடிச்சிருக்கு… தப்பா தெரிஞ்சா உனக்கு அவரை பிடிக்கல… சிம்பிள்” சின்னவள் தனக்கு தெரிந்த யோசனை சொல்ல, பெரியவள் நடந்தவைகளை ஒருமுறை புரட்டி பார்த்தாள்.

“அவர் சிலசமயத்தில என்கிட்ட ரொம்ப மோசமா நடந்திட்டு இருக்காரு… அதேநேரம் எனக்காக நிறைய உதவியும் செஞ்சிருக்காரு… அவரை எந்த லிஸ்ட்ல‌ சேர்க்கிறதுன்னு புரியல மஞ்சு”

“எனக்கு தெளிவா புரியுது, நீ ரொம்ப குழம்பி போய் இருக்க, நடக்குறதெல்லாம் நல்லதுக்குன்னு நினைச்சுட்டு வந்து சாப்பிடு வாக்கா” என்று மஞ்சரி அவளை இழுத்துக் கொண்டு சென்றாள்.

தங்கை சொல்வது சரியெனவே காவ்யாவிற்கும் பட்டது. நடப்பது நடக்கட்டும் என்று தன்னைத்தானே தேற்றிக் கொண்டாள்.

# # #

உயிர் தேடல் நீளும்…