UTN 25

உயிர் தேடல் நீயடி 25

இரவின் மடியில் முழுநிலவு தாலாட்டும் நேரம்!

இரவு வெளியை வெறித்தபடி உறக்கம் தொலைத்து நின்றிருந்தான் விபீஸ்வர்.

நிறுவன வேலைகள் எப்போதும் போல அவன் பகல் நேரத்தை இழுத்து கொள்ள, இரவின் தனிமைகள் மட்டும் பாரமாக, கழிவேனா! என்றது.

ஜனனி உடனான திருமண ஏற்பாடு அவனுக்குள் கசப்பையே தெளித்திருக்க, தன் உயிரையும் காதலையும் காரணம் காட்டி, விபீஸ்வரை நிர்பந்த நிலையில் நிற்க வைத்திருந்தாள் ஜனனி.

ஊஞ்சல் ஆடும் சத்தம் அவனை கலைக்க, திரும்பினான்.

பால்கனியில் போடப்பட்டிருந்த வெற்று ஊஞ்சல் மெல்லிய காற்றில் மெதுவாய் ஆடி அவனை அழைத்தது!

முன்பு காவ்யா இந்த ஊஞ்சலில் அமர்ந்திருந்த காட்சி அவன் நினைவேடுகளில் காட்சியாக, மெதுவாக சென்று ஊஞ்சலில் அமர்ந்துக் கொண்டான்.

இப்போதும் தன்னருகில் தன்னவளின் வாசம் உணர்ந்தவன் மனதில் ஏக்கத்தின் பாரம் ஏறியது.

தண்ணிலவும் மென் தென்றலும் தவிப்பான தனிமையும் உயிர் துணையின் அருகாமையை வேண்ட, காதல் நினைவை புரட்டியபடி, அங்கேயே தலைசாய்த்து படுத்துக் கொண்டான்.
.
.
.

பட்டு வேட்டி சட்டையில் சற்று அசௌகரியமாக தன் அறைக்குள் வந்தனின் பார்வை அங்கே ஒருமுறை வலம் வந்தது.

அறையின் சுவர்கள் முழுதிலும் ஒற்றை ரோஜாக்கள் பூத்திருந்தன. அறை வாயிலில் இருந்து கட்டில் வரை பன்னீர் ரோஜா இதழ்களால் பாதை விரிக்கப்பட்டு இருக்க, மெத்தையில் இதயத்திற்குள் இதயம் போன்ற வடிவில் அலங்கரித்து இருந்த வண்ண மலரிதழ்கள் அழகு கூட்டின.

கட்டிலின் ஒரு முனையில்,
தங்க நிற பார்டர் வைத்திருந்த சந்தன நிற பட்டில், சிறு கிளிப் கொண்டு விரித்த கூந்தலில் நான்கு சரம் மல்லிகை தவழ, மயக்கும் அலங்காரத்தோடு காவ்யதர்ஷினி அமர்ந்திருந்தாள்.

தெளியாத மனக்குழப்பத்தில் உழன்று இருந்தவள், கணவனின் வரவை உணர்ந்து தயக்கமாய் எழுந்து நின்றாள்.
உரிமை பார்வையில் தன்னவள் பேரழகை ரசித்தவன், அடங்கா காதலோடு அவளை நோக்கி வந்தான்.

பதட்டத்தின் சாயல் அவள் முகத்தில் அப்பட்டமாக படர, இவனிதழின் மென்னகை விரிந்தது.

“கொல்றடீ” என்று அவள் மூக்கோடு மூக்கு உரசியவன், “ஒன் நைட் ஆஃபர்க்கு தான் நீ சரிப்பட்டு வரல, இப்ப லைஃப் லாங் ஆஃபர் உனக்கு ஓகே தான பேபி” என்று குறும்பு மேலிடும் குரலில் கேட்டு, அவளின் மலரிதழில் மிக மென்மையாய் தன்னிதழ் ஒற்றி எடுக்க, அந்த சிறு தீண்டலுக்கே அவள் உடல் முழுதும் அதிர்ந்து அடங்கியது.

அவன் அகராதியில் நிச்சயம் இந்த சிறு இதழொற்றலுக்கு முத்தமென்ற பெயர் கிடையாது. இதற்கே அவளின் தவிப்பை கண்டு இவனுள் இன்னும் இன்னும் காதல் ஊற்றெடுக்க, அவளை பின்னோடு அணைத்து, “ஹே பேப், நான் நினைச்சு கூட பார்த்தது இல்ல தெரியுமா! என் லைஃப்ல கூட இப்படி ஒரு ஃபில்மியான நைட் வரும்னு…” என்று அவன் குரல் தேய, அவன் கைகள் தேடலை தொடங்கி இருந்தன. கணவனின் முதல் நெருக்கத்தில் இவளின் பூவுடலில் நடுக்கம் பரவியது.

“கவி… ஏதாவது பேசணுமா உனக்கு?” அவளின் காதுமடலோரம் அவன் குரல் கிசுகிசுக்க, இவள் நீங்காத அச்சத்தோடு இல்லையென தலையசைக்க, அடுத்த நொடி அவனின் இறுக்கமான அணைப்பில் சிக்கி இருந்தாள். “லவ் யூ பேபி…” என்று ஹஸ்கி குரலில் சொன்னவன் விளக்கணைத்து, தன் காதலின் வேகத்தை மொத்தமாய் தனதானவளிடம் காட்டலானான்.

சில நிமிடங்கள் இடைவெளியில் அந்த அறை மீண்டும் ஒளிர்ந்தது.

விபீஸ்வர் முகத்தில் பதற்றம் பரவியிருக்க, காவ்யா அவன் கைகளில் மூர்ச்சையாகிக் கிடந்தாள்.

“ஏய் கவி என்னாச்சு? காவ்யா எழுந்திரு!” அவளை தெளிவிக்க இவன் முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடிய, மருத்துவரை வரவழைத்தான்.

அரைமணி பொழுதில் வந்த அவர்களின் குடும்ப மருத்துவர் ஷீலா, காவ்யாவை சோதித்து அவளுக்கு ஊசி மூலம் மருந்தேற்றி சிகிச்சை அளித்தார்.

“அதிகமான மன அழுத்தம், பயம், அதோட உடல் சோர்வு வேற, காலையில திருமணம், உடனே அன்னிக்கே முதலிரவு… ப்ச் உங்க மனைவியோட உடல்நிலை, மனநிலை மேலயும் கொஞ்சம் அக்கறை எடுத்து இருக்கலாம் விபி” என்றார் அவரும் ஒரு பெண்ணாய்.

விபீஸ்வருக்கு புரிந்தது! ஆனாலும் ஆண்மகனாய் அன்றைய இரவில் பெருத்த ஏமாற்றத்தை உணர்ந்தான்.

தந்த கட்டிலில் சந்தன பட்டில் தேவதை பெண்ணாய் துவண்டு கண்மூடி கிடந்தாள் அவள், இவன் கனத்த பார்வை அவளிடம்…

உன்னில் எனை
தொலைத்து விட்டேன்!
எனை மீட்டு கொள்ளவே
உனைச் சிறையெடுத்தேன்!
காத்திருக்கிறேன்…
நீ என்னில் தொலைந்து கரையும் தருணத்திற்காக!

# # #

திருமண வரவேற்பு விழா!

தங்க கொடிகள் படர்ந்து குறு மலர் சொரியும் நுணுக்க வேலைப்பாடுகள் நிறைந்து அவளுக்கேனவே தனித்துவமாய் வடிவமைத்திருந்த பிங்க் நிற லெஹங்காவில் பேரழகு மிளிர, நாணங்கொண்ட மென்னகையோடு நடைபழகி வந்தாள் திருமதி காவ்யதர்ஷினி.

அடர் சிவப்பு நுண்ணிய வேலைப்பாடுகள் அமைந்த ஷெர்வானியில், இள சந்தன நிற பைஜாமாவில் ஆண்மையின் மிடுக்கோடு மயக்கும் இளநகையோடு காதலானவள் கரம் பற்றி மேடை ஏறினான் திருவாளர் விபீஸ்வர்.

இருவரின் ஜோடி பொருத்தமும் காண்போரின் கண்களை சற்றே விரிய செய்திருந்தன. சிலரை பொறாமையில் பொங்கச் செய்தன.

ஆரவார ஆர்ப்பரிப்பு கொண்டாட்டங்கள் கேளிக்கைகளோடு வரவேற்பு விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது.

தொழில்முறை சார்ந்த நண்பர்கள் அனைவரும் தனிப்பட்ட அழைப்பின் பேரில் பங்கேற்று இருந்தனர்.
ஒவ்வொராய் விபீஸ்வர் அறிமுகம் செய்ய, காவ்யா நிறைந்த புன்னகையோடு அவர்களின் வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்டாள்.

உண்மையில் அவளின் மனநிலை இப்போது இலகுவாகி இருந்தது.

இரவின் நிகழ்வு அவளை மிகவும் சங்கடப்படுத்தி இருந்தது. விடியலில் நேரங்கழித்து விழித்தவள் பதற்றத்தோடு தான் படுக்கையிலிருந்து எழுந்திருந்தாள்.

திருமணம் முடிந்த முதல் நாளே நேரங்கழித்து எழுந்தால், மாமியார் வீட்டில் என்ன சொல்வார்களோ என்று அச்சம் தோன்றியது. அதுவும் திருமணத்திற்கு வந்திருந்த நெருங்கிய சொந்தங்கள் வீட்டில் தான் தங்கி இருந்தனர் வேறு.

திருமண சடங்குகள் ஒவ்வொன்றிலும் பெண் வீட்டாரை குட்ட மட்டும் அவர்கள் மறக்கவில்லை. பெண் வீட்டாரின் செல்வநிலை குறைவு பற்றி குத்திக் காட்டல் ஏதோவொரு வகையில் இருந்து கொண்டு தான் இருந்தது. பார்கவி கூடுமான அளவு பொறுத்து சகித்து போனது வேறு இவளை தவிக்க செய்திருந்தது.

அவர்கள் செல்வ வளமைக்கு தங்கள் நிலை தாழ்வு தான், விபீஸ்வருடன் தான் எந்த வகையிலும் பொருத்தமானவள்‌ இல்லை தான் என்பதையும் அவள்‌ உணர்ந்தே தான் இருந்தாள்‌ ஆனாலும் பிடிவாதத்தின் மொத்த ரூபம் தான் தான் என்று நிற்பவனை என்ன தான் செய்ய?

இவையெல்லாம் சேர்ந்து அவள் மன அழுத்தத்தை கூட்டி இருக்க, அவனால் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களும், பிற பெண்களோடு கணவனை நெருக்கத்தில் பார்க்க நேர்ந்த காட்சிகளும் சரியாய் அப்போது‌ நினைவில் அலைகழிக்க, அத்தோடு பெண்மைக்கேயுரிய பயமும் செர்ந்து கொள்ள மயங்கி தொலைத்திருந்தாள் அவள்.

‘அச்சோ வெளியே சொன்னா கூட வெட்கக்கேடு! உப்பு செத்தவள்னு சொல்லுவாங்க அது நான் தான் போல!’ என்று தன் தலையில் அடித்து கொண்டாள்.

இவள் விழிக்கும் போது விபி அறையில் இல்லை. ‘சும்மாவே அவனுக்கு சுறுசுறுவென்று கோபம் ஏறும் இப்போது தான் செய்து வைத்திருக்கும் வேலைக்கு என்ன செய்து வைப்பானோ’ என்று எண்ணவே மனம் பதறினாள்.

“ஹேய் பேபி, எழுந்தாச்சா, மறுபடி டாக்டரை கூப்பிடணுமோனு நினைச்சேன்” இயல்பான விசாரிப்போடு அறைக்குள் நுழைந்த கணவனை காவ்யா பயத்தோடே பார்த்தாள்.

குளித்து முடித்து தயாராகி நின்றிருந்தான் அவன். ‘அச்சோ போச்சு, அவன் ஃபிரஷ்சா ரெடியாகி நிக்கிறான், நான் இப்படி தூங்கி வழிஞ்சு கிடக்கிறேனே!’ அவள் மனம் சாடியது.

மேலும் அங்கே நிற்காமல் குளியறைக்குள் புகுந்து கொண்டாள். விபீஸ்வர் கோபம் காட்டாமல் இயல்பாக பேசியது இவளை உறுத்தியது.

காவ்யா தயாராகி தயங்கி வர, அவளிடம் தேநீர் கோப்பையை நீட்டினான். இவனுக்கு அவளின் சங்கடம் புரிந்தது. அவளுடன் இயல்பாக இருக்கவே முயன்றான்.

அதை பெற்று கொண்டு அவள் பருக முயல, “ஹே பேபி உன்னோட ஸ்டைல்ல டீ குடிக்கலாமே?” என்று கேட்டு, தனக்கான குளம்பியை எடுத்து, அவளைப் போலவே ஆழ மூச்செடுத்து அதன் புத்துணர்வு வாசத்தை சுகித்து பின்பு பருகலானான்.

காவ்யா, ‘அச்சோ இதெல்லாம் இவனுக்கு எப்படி தெரிஞ்சது?’ என்று பேந்த பேந்த விழித்தாள்.

“முட்ட கண்ணி, நல்லா திருதிருன்னு முழிச்சு கண்ணாலயே கொல்றடீ” இவன் பார்வை அவள் மீதேயிருக்க, அவள் படபடப்போடு தேநீரை பருகி, உதட்டை சுட்டுக் கொண்டாள்.

“ஷ்ஆ…”

விபீஸ்வர் சிரித்து விட்டான். அவளின் பரிதவிப்பும் படபடப்பும் எப்போதும் போல இப்போதும் அவனை கவர்ந்தது. “ஹேய்‌ பார்த்துடி சோடாபுட்டி, ஒரு டீ கூட உனக்கு ஒழுங்கா குடிக்க தெரியாதா?” என்று கேலி பேச, காவ்யா முகம் சுருங்கி போனது.

“நிஜமா உங்களுக்கு என்மேல கோபமில்லையா சர்?” பரிதவிப்பாக கேட்க, “ஏன் இல்லாம, டன் கணக்கா இருக்கு” என்று அவள் மூக்கை பிடித்து ஆட்டியவன், ” பட், அதைவிட அதிகமா உன்மேல லவ் இருக்குடி!” என்று காதலாய் சொன்னவனை வியப்பாக பார்த்தாள்.

“அதோட கோபதாபமெல்லாம் பார்த்தா குடும்பம் நடத்த முடியாதாம்” அவன் பேச்சோடு சொல்ல,

“இதை யார் சொன்னது?” இவளும் அவன் பேச்சில் கலந்து கொண்டாள்.

“போற போக்குல யாரோ எப்பவோ சொல்லிட்டு போனாங்க விடு, நமக்கு கருத்துதான முக்கியம்”

“நல்லாவே பேசறீங்க”

“ம்ஹும் பேச மட்டும் தான செய்றேன்” என்று ஏக்க பெருமூச்செறிந்தான்.

அவளுக்கு சங்கடமாக இருக்க, “சாரிங்க, இனி அப்படி நான் நடந்துக்க மாட்டேன், ஏதோ பயத்துல… டென்ஷன்ல மயங்கிட்டேன்!” மன்னிப்பு கோரினாள்.

விபீஸ்வர் அவளை ஆழமாக பார்த்து, “எனக்கு சரியா பதில் சொல்லு காவ்யா, நான் உன்ன‌ கஷ்டபடுத்துறேனா?” கேட்க,

“இல்ல சர்… நீங்க திடீர்னு ப்ரோபோஸ் பண்ணது, அவசரமா கல்யாண ஏற்பாடு பண்ணது, சிவா ஆக்ஸிடென்ட்… நம்ம ரெண்டு ஃபேமிலிக்கு நடுவுல இருக்க ஸ்டேட்ஸ் பிராப்ளம்… இது எல்லாத்தையும் சேர்த்து நான் ரொம்ப குழம்பிட்டேன் அதான்…” காவ்யா கூடுமானவரை தன்நிலையை எடுத்து சொன்னாள்.

“இது மட்டும் தான் காரணமா?” இன்னும் அவன் அழுத்தமான பார்வை அவளிடமே இருந்தது. காவ்யா தயக்கமாக தலை தாழ்த்திக் கொண்டாள். அவள் இதயம் எம்பி துடித்தது.

“உனக்கு என்னை… பிடிக்கலையா கவி?” காலம் தாழ்ந்த கேள்வி என்று அவனுக்கும் புரிந்தது. அவள் நிச்சயம் எதிர்மறையான பதிலை தரமாட்டாள் என்ற அவனின் உறுதி ஊசலாட கேட்டான்.

“பிடிக்கும் சர்…!” அவளின் பதில் மழலையின் முதல் மொழியாய் ஒலிக்க,

“அவ்ளோதானா?” இன்னும் ஏதேதோ யாசித்தது அவன் கேள்வி.

“ஆனா, நீங்க சொல்ற காதல் கத்திரிக்கா எல்லாம் எனக்கு வரல, உங்களுக்கு என்மேல லவ் வந்ததை என்னால இப்ப கூட நம்ப முடியல! இத்தனை வேகமா நீங்க கல்யாணம் முடிச்சிருக்க வேண்டாம் சர்…” அவள் பேச்சு அந்தரத்தில் நிற்க, அவளின் அதரங்கங்களை தன்வசமாக்கி இருந்தான் அந்த பிடிவாத காதல்காரன். தன் காதலின் மொத்த வேகத்தையும் காட்டி அவளை தோற்கடிக்க முயன்று இவனும் தோற்றுக்கொண்டிருந்தான். இருவருக்குமே வெற்றிவாகை சூடிட ஆசையில்லை போலும்.

“நானும் பார்த்துட்டே இருக்கேன், எத்தனை சர் டீ போடுவ என்னை, இனிமே நீ சார்னு கூப்பிட்ட இதான் உனக்கு தண்டனை” தண்டனையை நிறைவேற்றிய பின் அவளுக்கு தீர்ப்பு எழுதி தந்தான்.

காவ்யா தன்னை சமன் செய்யும் மூச்சுக்களோடு அவன் மார்பின் மீதே துவண்டிருந்தாள். விழியோரம் கண்ணீர் தடம் வேறு!

அவனின் ஒவ்வொரு அத்துமீறலிலும் இவள் விழிகளில் ஈரம் ஒட்டிக்கொள்கிறது. காதலின் அத்துமீறல்கள் திருமணத்திற்கு பின் அத்துமீறலாகா! ஏனோ இப்போதும் அவன் நெருக்கத்தை இயல்பாக ஏற்றுக்கொள்ள இயலாமல் தவித்திருந்தாள்.

“நீதான் என்னைவிட்டு விலகி போறதுலயே குறியா இருந்தியே, உன்ன என்னோடவே வச்சுக்க வேறவழி தெரியல. அதான் கல்யாணத்தை முடிச்சிட்டேன்” அவள் மறந்துபோன கேள்விக்கு இவன் விடை தர, அவள் மௌனித்திருந்தாள்.

“நான் உன்ன சும்மா பேபினு கூப்பிட்டேன்… ப்ச் நைட் தான் புரிஞ்சுது நீ நிஜமாவே பேபி தான்” விபி அவளை சீண்டி சிரிக்க, அவனிடமிருந்து விலகி முகம் கோணினாள்.

“எல்கேஜி பேபி கூட இல்ல, ஃபிரி கேஜி பேபி, உன்னவச்சு நான் என்னடி செய்ய” அவன் ஏகத்துக்கும் அலுத்துக் கொள்ள, “ப்ளீஸ் கேலி பண்ணாதீங்க சா… விபி”
காவ்யா சங்கடமாக சுணங்கினாள்.

“சரியான கட்டுபெட்டி… உன்னையெல்லாம் எந்த லிஸ்ட்ல சேர்க்கறது… நைட் எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா?” என்று அவளை சேர்த்து அணைத்துக் கொண்டான்.

காமம் வடிகட்டிய அன்பின் இதமான அந்த அணைப்பு… இருவருக்குமே தேவையாக இருந்தது. அவர்கள் மனதும் அமைதியை தத்தெடுத்து கொண்டது.

அதே நினைவில் காவ்யா சற்று மனம் தெளிந்திருக்க, விபீஸ்வருடன் பார்ட்டியில் மகிழ்ச்சியாகவே பங்கேற்றாள்.

நண்பர்களோடு சேர்ந்த கொண்டாட்டத்தில் விபீஸ்வர் மது கோப்பையை கையிலேந்தி இருக்க, இவள் மனதில் கலவரம் மூண்டது.

ஒரு நிலைக்கு மேல் அவள் கணவனை தடுக்க முயல, “ஹே கவி, லெட்ஸ் டேன்ஸ்” என்றான்.

“அச்சோ ச…விபி எனக்கு டேன்ஸ் சரியா வராது” சங்கடமாக குரல் தாழ்த்தி சொல்ல, “டோன்ட் வொர்ரி பேபி, நீ ஜஸ்ட் பாடி ஃப்ரியா விடு‌ போதும்” என்று அவள் கரம் கோர்த்து இடை‌ வளைத்து துள்ளிசைக்கு ஏற்ப விலக்கி சுழற்றி இழுத்து பிடித்து லாவகமாக ஆடலானான்.

விருந்தோடு விழா சிறப்புற்று முடிந்தது.

அன்றிரவு விபீஸ்வர் வெறும், “குட் நைட் பேபி” என்றதோடு கட்டிலில் சரிந்து களைப்பில் உறங்கி போனான்.

காவ்யாவிற்கு உறக்கம் பிடிக்கவில்லை. மீண்டும் அவளுள் குழப்பம் பரவியது. இன்றைய பார்ட்டிக்கு ரிதுவும் வந்திருந்தாள். காவ்யாவிற்கு வாழ்த்து சொன்னவள் உடன் ‘நானும் விபிய மேரேஜ் பண்ணி செட்டிலாக எவ்வளவோ ட்ரை பண்ணேன். பட் விபி அசறவே இல்ல… நீ எப்படி அவனை கரெக்ட் பண்ண?’

அவள் கேள்வியில் இவள் முகம் சங்கடம் காட்ட, ‘நீ சொன்னா நானும் லைஃப்ல செட்டிலாக யூஸ் ஃபுல்லா இருக்கும்…” என்று இழுத்தாள்.

இவள் பதிலின்றி நிற்க,
“விபிக்கு ரிலேஷன்ஷிப்ல சீக்கிரமே போரச்சுடும், ஷோ லெட்ஸ் கவுண்ட் டவுன் யுவர் டேஸ்” என்று நக்கலோடு சொல்லி நகர்ந்து விட்டாள்.

அவள் இறைத்து சென்ற வார்த்தைகளில் இவள் மனம் சிக்கி தவித்தது.

# # #

உயிர் தேடல் நீளும்…