உயிர் தேடல் நீயடி 7

விடுமுறை முடிந்து இன்று தான் வேலைக்கு வந்திருந்தாள் காவ்யதர்ஷினி. பார்கவி கண் புரை நீக்கம் சிகிச்சை முடிந்து வீட்டில் ஓய்வில் இருக்கிறார். இப்போது பார்வை தெளிவாக தெரிவதாக சொல்லி சந்தோசப்பட்ட அம்மாவை பார்க்கும் போது, சிகிச்சைக்காக செலவான கணிசமான தொகை பெரிதாக படவில்லை மகளுக்கு.

இரண்டு நாட்கள் விடுமுறையில் தேங்கி இருந்த அவள் வேலைகளை முடிக்கவே இன்று முழுவதும் காவ்யதர்ஷினிக்கு சரியாக இருந்தது.

மாலை ஐந்து மணியை கடிகாரமுள் நெருங்கி கொண்டிருக்க, “காவ்யா, பாஸ் உங்கள வரச்சொன்னார்” என்று ரிக்கி இறுகிய முகத்துடன் அவள் முன் வந்து நின்றான்.

“என்னையா? இப்பவா?” அவள் விளங்காமல் எதிர் கேள்விகளை அடுக்க, “ஆமா, சீக்கிரம் போங்க” சிடுசிடுத்துவிட்டு அவன் நகர்ந்து விட்டான்.

‘இவன் என்ன இஞ்சி தின்ன குரங்கு மாதிரி இப்படி குரைச்சிட்டு போறான்’ என்று அவள் முணுமுணுத்துக் கொள்ள, ‘குரங்கு எப்படி குரைக்கும்?’ அவளின் அறிவு சட்டென அவளை திருத்தியது. தனக்கே தனக்காய் அசடு வழிந்தவள், சுற்றும் ஒருமுறை கவனித்தாள்.

வேலை நேரம் முடிந்து வீட்டுக்கு செல்லும் கடைசி நேர பரபரப்பில் அனைவரும் இருந்தனர்.

காவ்யா சின்ன தயக்கத்துடன் அனுமதிகேட்டு எம்டி அறைக்குள் நுழைய, இதுவரை அவனிடம் நேரடியாக அதிகம் பேசி இராத காரணத்தால் இவளுக்குள் சின்ன படபடப்பு.

அங்கே விபீஸ்வருடன் மேலாளர் ரங்கராஜனும் அமர்ந்திருக்க, சற்று நிம்மதியாக அவர்கள் முன் சென்றாள்.

“மிஸ் காவ்யதர்ஷினி, டென்டர் கொண்டேஷன் ஃபார்ம் பண்ணனும். நீங்களும் எங்களோட ஜாய்ன் பண்ணிக்கங்க, டேக் யுவர் சீட்” என்று அவன் பக்கத்து இருக்கையை அவளுக்கு காட்டி விபீஸ்வர் ஆணை பிறப்பிக்க, காவ்யா திருதிருத்து விழித்து நின்றாள்.

“ஹே காவ்யா குயிக், வெரி இம்பார்டன்ட் வொர்க், ஈவன் கான்ஃபிடன்ஷியல், ஜஸ்ட் டூ ஹவர்ஸ்ல முடிச்சிடலாம். நாங்க டிஸ்கஸ் பண்ணி சொல்றோம். நீங்க அதுக்கேத்த மாதிரி ஃபார்ம் பண்ணிடுங்க. ஓகே” விபீஸ்வர் துரிதப்படுத்த, காவ்யா மறுபேச்சின்றி அவன் சொன்னபடி செய்ய தொடங்கினாள்.

காவ்யாவிற்கு ஒருபுறம் சந்தோசமாவும் இருந்தது, அதே நேரத்தில் குழப்பமாகவும் தோன்றியது.

இது போன்ற முக்கிய வேலை தனக்கு தரப்பட்டதில் மகிழ்ச்சி தான் என்றாலும் வேலைக்கு சேர்ந்து இரண்டு மாதங்களில் இத்தனை நம்பிக்கை வாய்ந்த பணியை தருவது என்பது அவளுக்குள் நெருடவும் செய்தது.

விபீஸ்வரும் ரங்கராஜனும் கலந்தாலோசித்தபடி இவளிடம் விவரங்களை தந்து கொண்டிருக்க, காவ்யா அவற்றை கணினியில் தகவல்களாக சேகரித்து கொண்டிருந்தாள்.

நிமிடங்கள் நேரமாக நீள, தன் வீட்டிற்கு இன்னும் தான் தகவல் சொல்லாதது காவ்யா நினைவுக்கு வந்தது. மணியை கவனிக்க, ஆறுமணியை கடந்து நேரம் சென்றிருக்க இவளுக்கு இருப்பு கொள்ளவில்லை.

‘அச்சோ நான் இன்னும் வரலன்னு அம்மா வாசல் பார்த்திட்டு இருப்பாங்களே, அரைமணிநேரம் லேட்டா போனாலே பதருவாங்க, இப்ப ரெண்டு மணிநேரம் லேட்டானா பயந்திடுவாங்க’ என்று தன் கைப்பேசியை பார்க்க, வேலை தொடங்கும் முன்னே எம்டியின் கட்டளை பேரில் அதை அணைத்து வைத்து இருந்தாள்.

‘ச்சே எனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்ல, இன்னைக்கு வர லேட்டாகும்னு வீட்ல சொல்லி இருக்கணும் இல்ல. இப்ப எத்தனை முறை எனக்கு கால் பண்ணி தோத்து போனாங்களோ?’

‘எல்லா இந்த எம்டியால வந்தது. அவர் அவசரமா வேலைய ஆரம்பிக்க சொல்ல, நானும் வந்து உக்கார்ந்துட்டேன்’

‘இப்ப, வீட்டுக்கு பேசணும்னு பர்மிஷன் கேட்கலாமா?’ என்று அவர்கள் முகம் பார்க்க, இருவரும் தீவிர விவாதத்தில்‌ இருந்தனர்.

விசை பலகையில் தட்டிய அவள் விரல்களின் வேகம் குறைவதை கவனித்த விபீஸ்வர், நிமிர்ந்து அவளின் முகம் பார்த்தான்.

அவள் கண்கண்ணாடியை வழி அவள் கண்களின் பரிதவிப்பும் முகத்தின் வாட்டமும் தெரிந்தது.

சற்று பொறுத்தவன், “ஓகே ரங்கா சர், டென் மினிட்ஸ் பிரேக் எடுத்துக்கலாம்” என்க, உடனே காவ்யா முகம் பிரகாசமானது.

ரங்கராஜன் தனக்கு காஃபியும் விபிக்கு ப்ளாக் காஃபியும் ஆர்டர் சொல்லிவிட்டு, “உனக்கு காஃபி ஓகேவா காவ்யா?” என்று கேட்க, “எனக்கு டீ ஓகே சர்” என்று சொன்னவள், சட்டென நாக்கை கடித்துக் கொண்டாள்.

“எக்ஸ் கியூஸ் மீ சர்” அனுமதி பெற்று அறையிலிருந்து வெளியேறிவள், சிவாவிற்கு போன் செய்து தான் வீடு வர தாமதமாகும் என்று சொல்ல, “ஏன்? என்னாச்சு?” தம்பியின் கேள்வி பதட்டமாக வந்தது.

“ஆஃபிஸ்ல முக்கியமான வேலையில மாட்டிக்கிட்டேன், இன்னும் ஒரு மணி நேரமாகும்னு நினைக்கிறேன். இதுக்கு மேல என்னால தனியா வர முடியாது. நீ வந்து என்னை அழைச்சிட்டு போடா” உரிமையுடன் கட்டளையிட, “சரி காவ்யா, நான் வந்திடுறேன்” சிவா பதில் உடனே வந்தது.

“வண்டிய மெதுவா ஓட்டிட்டு வர, இல்ல உதை வாங்குவ” என்று அவன் வேகம் தெரிந்து இவள் எச்சரிக்க,

“ஆமா, இந்த செகண்ட் ஹேண்ட் வண்டி என்ன முறுக்கினாலும் ஊர்ந்துட்டு தான் நகரும்” என்று அலுத்தபடியே தொடர்பை துண்டித்தான் அவன்.

சிவாவிற்கு எப்போதுமே பைக் என்றால்‌ அத்தனை பைத்தியம். நண்பர்களின் வண்டி இவன் கைகளில் கிடைத்தால் போதும் காற்றின் வேகத்தை கிழித்துக் கொண்டு பறப்பான்.

இதனாலேயே மகன் திரும்ப திரும்ப கேட்டும் கோவிந்தன் அவனுக்கு புது பைக் வாங்கி தரவில்லை. அவரின் பொருளாதாரமும் அவருக்கு இடம் தரவில்லை. அவரின் இறப்பிற்குப் பிறகு அவரின் இந்த வண்டியை சிவா தான் உபயோகித்து கொண்டிருக்கிறான்.

பணியாள் காவ்யாவிடம் தேநீரை நீட்ட, அதனை வாங்கிக் கொண்டவள் சுவற்றில் சாய்ந்தபடி, தேநீரின் புத்துணர்வு மணத்தை ஆழ மூச்செடுத்து தன்னுள் நிரப்பிக் கொண்டு மெதுமெதுவாய் பருகலானாள். அங்கு யாரும் இல்லை என்ற தைரியத்தில் தான் அவள் தன் பழக்கபடி செய்தது.

கண்ணாடி தடுப்பு வழியே இவள் தேநீர் பருகும் அழகை சன்ன சிரிப்போடு வேடிக்கை பார்த்தபடி விபீஸ்வர், தன் பிளாக் காஃபியை சுவைக்கலானான்.

அவன் பார்வை ரசனையாய் நிலைத்திருந்த திசையை கவனித்த ரங்கராஜனின் முகத்தில் யோசனை பரவியது.

“சீனியர் ஸ்டாஃப்ஸ் அத்தனை பேர் இருக்கும்போது, இந்த வேலைக்கு காவ்யதர்ஷினிய ஏன் செலக்ட் பண்ண விபி?” அவர் கேள்வியும் சந்தேகமாக வர, அவர் பக்கம் திரும்பிய விபீஸ்வரின் பார்வை கேள்வியாய் நின்றது.

“இல்ல விபி, காவ்யா சின்ன பொண்ணு, சரியா விவரம் தெரியாதவளும் கூட, அதோட நீ ரிக்கிய அவாய்ட் பண்ணதால அவன் உன்மேல வருத்தமா இருக்கான்” என்று விளக்கம் தந்தார்.

“யாரு? காவ்யா விவரம் தெரியாத பொண்ணா?” என்று புன்னகைத்தவன், “அப்பாவோட துணை இல்லாம குடும்பத்தை தாங்குற யாரும் விவரம் இல்லாதவங்களா இருக்க மாட்டாங்க ரங்கா சர்”.

“அதோட ரிக்கிய வச்சு இந்த பிளான் பண்ணா, கண்டிப்பா அவன் சொதப்பிடுவான். எனக்கு காவ்யா பர்ஃபெக்ட்டா இருப்பாங்கன்னு தோணுச்சு” என்றான்.

இப்போதும் அவரின் முகம் தெளியவில்லை.

மறுபடி அவர்கள் வேலை துவங்கி, முடித்து நிமிரும்போது ஒன்றரை மணிநேரம் கடந்து இருந்தது. இறுதிகட்ட வேலைகள் மட்டும் மிச்சமிருக்க, “சரி நீ கிளம்பு காவ்யா, மீதி நான் பார்த்துக்கிறேன்” என்று ரங்கராஜன் சொல்ல, அவருக்கு நன்றி கலந்த புன்னகை தந்தவள், “தேங்க்ஸ் சர்” என்று பொதுவாய் நன்றியை உதிர்த்துவிட்டு வெளியேறினாள்.

கீழே அக்காவிற்காக காத்து நின்ற சிவா, “என்ன காவ்யா இவ்வளோ லேட் பண்ணிட்ட” என்று அங்கலாய்த்தபடி வண்டியை உயிர்ப்பிக்க,

“நீ வேற, இன்னும் வேலை மிச்சமிருக்கு. இப்ப விட்டதே மேலு டா” என்று அவன் பின்னோடு தொற்றிக் கொள்ள,
இரவு சாலையில் அந்த வண்டி இருவரையும் சுமந்தபடி ஊர்ந்து சென்றது.

ரங்கராஜன் சிலபல முக்கிய திருத்தங்கள் செய்து கடைசி கட்ட வேலையை முடித்திருக்க, அதனை சரிபார்த்த விபீஸ்வரின் கண்களில் வெற்றியின் கர்வம் பளிச்சிட்டது.

# # #

ஷவரின் நீர் திவலைகள் அவனின் வெற்றுடலை நனைத்தபடி வழிய, மாலை வேளையின் இதமான குளியலை அனுபவித்து கொண்டிருந்தவனை கைப்பேசி சிணுங்கல் கலைக்க முயன்று தோற்று அடங்கியது.

சற்று நேரத்தில் மீண்டும் கைப்பேசி ஒலி எழுப்ப, சலிப்போடு ஷவரை நிறுத்திவிட்டு இடுப்பில் சுற்றிய துண்டோடு வந்து அழைப்பை ஏற்றவன், “ஹலோ விபீஸ்வர் ஹியர்” என்றான்.

“சர் நான் காவ்யதர்ஷினி பேசுறேன்” அவள் குரலில் பதற்றம் தெரிந்தது.

“எஸ் காவ்யா சொல்லுங்க”.

“கொஞ்ச நேரம் முன்ன, நான் பஸ்ல வரும்போது ஒரு லேடி வந்து என்கிட்ட பேசினாங்க சர்” என்று அவள் ஆரம்பிக்க,

‘ஷிட் இவ என்ன கதை சொல்றா’ இந்த முனையில் இவன் கடுப்பானான்.

“அவங்க… நீங்க நேத்து ஃபைனல் பண்ண கொட்டேஷன் டீடெயில்ஸ் சொல்ல சொல்லி என்னை பிரைன் வாஷ் பண்ண டிரை பண்ணாங்க சர்”.

அவன் நெற்றி சுருங்க, “ஓகே” அவள் சொல்வதை உள்வாங்கி கொண்டவன், “நீங்க என்ன பதில் சொன்னீங்க காவ்யா?” என்று சாதாரணமாக கேட்டான்.

“நான் யோசிச்சு பதில் சொல்றேன்னு சொல்லி வச்சிருக்கேன் சர்” அவளின் குரல் இறங்கி ஒலித்தது.

“ஆஹான் இப்ப என்ன யோசிச்சு இருக்கீங்கனு நான் தெரிஞ்சுக்கலாமா?” அவனிதழில் மந்தகாச புன்னகை விரிந்தது. அவள் இத்தனை புத்திசாலியாக இருப்பாளென்று அவன் நினைத்திருக்கவில்லை.

“எப்படியும் நாளைக்கு அவங்க கேட்கும் போது ஏதாவது ஒரு ஃபேக் டீடியல்ஸ் கொடுக்கணும் சர்” அவள் பதட்டம் குறையாமல் மேலும் சொல்ல,

“ம்ஹும் குட், கொடுத்துடுங்க”

“சர் அதுவந்து என்ன டீடைல்ஸ் கொடுக்கறதுன்னு…” காவ்யா தயக்கமாக நிறுத்தினாள். அவரின் நிறுவனத்திற்கு எதிராக நடக்கும் சதி வேலையை பற்றி தான் கூறியும் அதை சாதாரணமாக எடுத்துக்கொண்டு அவன் இயல்பாக பேசுவது இவளுக்கு சற்று குழப்பமாக தோன்றியது.

“நேத்து நாம கோட் பண்ண டீடியல்ஸ் கொடுத்துடுங்க மிஸ் காவ்யா” அவன் சுலபமான வழியை சொல்ல,

“சார்! அதெப்படி?” அவள் குழப்பம் உச்சத்தை தொட்டது.

“நாங்க ஃபைனல் பண்ணது வேற அமௌட், சோ நீங்க தயங்காம உங்களுக்கு தெரிஞ்ச டீடைல்ஸ் கொடுங்க, நாளைக்கு ஆஃபிஸ்ல மீட் பண்ணலாம். பை” என்று அவன் அலைபேசியை அணைத்திருந்தான்.

அவன் சொன்னதின் அர்த்தம் சற்று பொறுத்தது தான் காவ்யாவிற்கு விளங்கியது. அவளுக்குள் சுருசுருவென ஆத்திரம் மூண்டது.

ஒரு பொய்யான வேலைக்காக இரண்டரை மணிநேரம் மாங்கு மாங்கென்று வேலை செய்திருக்கிறாள் அவள்.

தான் அத்தனை பதற்றத்தோடு அவனிடம் சொல்ல, அவன் வெகு அலட்சியமாக பதில் பேசியது இவளுக்குள் சுழன்றபடி இருந்தது.

அன்று வீட்டுக்கு வந்த பிறகும் அவளின் மனம் ஆரவே இல்லை. முடிந்த மட்டும் தன் எம்டியை மனதிற்குள் திட்டிதீர்த்தபடி இரவை கழிந்திருந்தாள்.

காலையில் சந்திக்க வந்த அந்த பெண்மணியிடம், தனக்கு தெரிந்த தகவல்களை மேலோட்டமாக தான் கூறினாள். அதற்கு பதிலாக அவள் நீட்டிய காசோலையை மறுப்பு இன்றி வாங்கி கொண்டு, நேராக நிறுவனம் நோக்கி விரைந்தாள்.

விபீஸ்வர் மனம் இதற்கு நேர்மாறாக துள்ளிக் கொண்டிருந்தது. தங்கள் நிறுவனத்தின் ஒப்பந்தம் பற்றிய தகவல்களை எப்படியும் அறிய எதிர்ப்பு நிறுவனம் எல்லாவகையிலும் முயல்வதாக இவனுக்கு தகவல் வரவே, முதுகில் குத்த திட்டமிடும் அவர்களின் மூக்கை உடைக்க இவனும் திட்டம் வகுத்தான்.

அதற்காகவே எதிலும் உடனிருக்கும் ரிக்கியை கழற்றி விட்டு, காவ்யதர்ஷினியை சேர்த்து கொண்டான்.

அவளின் பொருளாதார நிலையை ஓரளவு அறிந்திருந்தவனாதலால், எதிர்ப்பு நிறுவனம் லஞ்சமாக தர முன்வரும் பணத்திற்கு ஆசைப்பட்டு, எப்படியும் தங்கள் நிறுவன ஒப்பந்த தொகையை காவ்யதர்ஷினி அவர்களிடம் சொல்லி விடுவாள் என்ற எண்ணத்தில் தான் இவன் திட்டமிட்டு இருந்தது.

பொய்யான ஒப்பந்த படிவத்தை காவ்யாவைக் கொண்டு வடிவமைத்து, அதற்கு முற்றிலும் மாறான வேறோரு ஒப்பந்தபடிவத்தை இவர்கள் முடிவு செய்து அனுப்பி இருந்தனர்.

ஆனால், காவ்யதர்ஷினி ஏழ்மையிலும் இத்தனை நேர்மையாக நடந்து கொள்வாள் என்று விபி யோசிக்கவே இல்லை. அதிலும் அவர்களை திசை மாற்றி விட, சமயோசிதமாக யோசித்து அவள் செயல்பட்ட விதம், இவனுக்கு கைதட்ட தான் தோன்றியது.

‘இந்த காலத்தில் நேர்மையும் அறிவாற்றலும் கொண்ட இப்படியொரு பெண்ணா!’ விபியை முதன் முதலில் வியக்க செய்திருந்தாள் காவ்யா.

அடக்கப்பட்ட ஆத்திரத்துடன் தன் முன்னால் நின்றிருந்தவளை, இதழ் மடித்த சிரிப்புடன் பார்த்தபடி விபீஸ்வர் அமர்ந்திருக்க, காவ்யதர்ஷினியின் வாய்ப்பூட்டு கழன்று கொண்டது.

“என்ன சர் நினைச்சிட்டு இருக்கீங்க என்னை பத்தி? கேவலம் பணத்துக்காக நம்ம கம்பெனி சீக்ரேட்ஸ்ஸ லீக் பண்ணுவேன்னு முடிவெடுத்துட்டீங்க இல்ல” உயர்ந்து ஒலித்த அவள் குரல் இறுதியில் தோய்ந்து முடிந்தது.

ஆதங்கத்தில் விரல் நடுங்க கண்கண்ணாடியை மூக்கின் மேல் சரியாக ஏற்றி விட்டு கொண்டவள், “பணத்துக்காக துரோகம் செய்யற அளவுக்கு என்னை கீழ்தரமானவளா நினைச்சீட்டீங்க இல்ல சர்?” அவளின் விழிகளில் கலங்கிய கண்ணீர், அவள் கண்ணாடி வழியே இவன் பார்வையில் மின்னியது.

“ரிலாக்ஸ் காவ்யா, சாரி, நான் உங்கள கொஞ்சம் அண்டரஸ்டிமேட் பண்ணிட்டேன், பட் நௌ, உங்கள நினைச்சு ரொம்ப பெருமையா இருக்கு” என்று சொல்ல, இவள் அமைதியாக தன்னிடமிருந்த காசோலையை அவன் முன் வைத்தாள்.

“என்ன இது?”

“அந்த பொம்பள எனக்கு கொடுத்த செக்”

“இது உங்களுக்கு கொடுத்தது தான!”

“நான் செஞ்ச வேலைக்கு கொடுத்தது… அந்த வேலையை செய்ய வச்சது நீங்க தான சர்… சோ இது உங்களுக்கு தான் சேரணும்” என்று சொல்லிவிட்டு காவ்யா சென்றுவிட, அந்த காசோலையில் இருந்த தொகையை பார்த்த இவன் ஒற்றை புருவம் ஏறி இறங்கியது.

காவ்யாவின் பொருளாதார நிலைக்கு நிச்சயம் இது பெரிய தொகைதான். அதனை துச்சமாக அவள் எறிந்து விட்டு போனதில் அவளின் சுயகௌரம் மிளிர்ந்தது.

# # #

இரு கைகளால் தலையை தாங்கிய படி அமர்ந்திருந்த கணவனை பார்த்ததும் புரிந்து விட்டது நீலவேணிக்கு, இம்முறையும் விபீஸ்வர் தங்களை முந்தி கொண்டான் என்று.

அவனருகில் வந்தவள், “மகிழ் ரிலாக்ஸ்” என்று அவன் தோள்தட்டி ஆறுதல் சொல்ல, நிமிர்ந்தவன், “எப்படி ரிலாக்ஸா இருக்க முடியும் நீலா? எவ்வளோ பெரிய கான்ராட் தெரியும் இல்ல, ச்செ மொத்தமா போச்சு” மகிழ்நன் புலம்பி தள்ளினான்.

ஒவ்வொரு முறையும் அந்த விபீஸ்வரனிடம் தோற்று திரும்புவது மகிழ்நனுக்கு அவமானமாகவும் ஆத்திரமாகவும் தோன்றியது.

முன்பு முன்னணியில் இருந்த மகிழ்நனின் நிறுவனம் விபி தலையெடுத்த பிறகு பின்னுக்கு தள்ளப்பட்டது. மீண்டும் இழந்த இடத்தை பிடிக்க எல்லாவகையிலும் முயற்சி செய்து கொண்டிருந்தது. ஆனால் இம்முறையும் தோல்வியை தழுவ நேர்ந்தது.

தங்களின் காரியதரிசிக்கு அழைப்பு விடுக்க, அவள் அவர்கள் முன்பு சங்கடமாக வந்து நின்றாள்.

“நீங்க ப்ளான் பண்ண மாதிரி தான் சர் நானும் செஞ்சேன். கொட்டேஷன் கோட் பண்ணும் போது அவங்க கூட இருந்த காவ்யா பொண்ணு கிட்ட இருந்து தான் டீடெயில்ஸ் வாங்கினோம்…” திலோதமா தயக்கமாய் சொல்ல,

“காவ்யா யாரு? ரிக்கி தான எப்பவும் விபி கூட இருப்பான்!” நீலவேணி யோசனையாக கேள்வி எழுப்பினாள்.

“எஸ் மேம், பட் இந்த முறை ரிக்கிய ஓரங்கட்டிட்டு காவ்யாவ சேர்த்துட்டு இருக்காங்க, அந்த பொண்ணு இப்ப கொஞ்ச நாளா தான் அங்க வேலை பார்க்குது”.

“சே இப்ப தான் வேலைக்கு சேர்ந்த ஸ்டாஃப்கிட்ட, இவ்வளவு கான்பிடன்ஷியலான வேலையை எந்த முட்டாள் எம்டியாவது கொடுப்பானான்னு நீங்க யோசிக்கவே மாட்டீங்களா திலோ?” நீலவேணி கொபமாகவே கத்தி விட்டாள்.

எங்கு தாங்கள் தவறி விட்டோம் என்பது இப்போது தான் மகிழனுக்கும் புரிந்தது. தங்களின் திட்டத்தை முன்பே அறிந்து விபி அதே வழியில் எங்களை முட்டாளாய் அடித்திருக்கிறான்.

“சாரி மேம் நான் இந்த ஆங்கள்ல யோசிக்கல” திலோதமாவின் குரல் இறங்கியது.

“இந்த மாதிரி முட்டாளுங்கள வச்சிட்டு இருந்தா நாம எப்படி முன்னேறுவோம் மகிழ்” நீலவேணி கொபமாக கேட்க,

“ரிலாக்ஸ் நீலா, இந்த நேரத்தில நீ இவ்வளோ டென்ஷன் ஆக கூடாது. விபி நம்மகிட்ட சிக்காமலா போக போறான்? அப்ப பார்த்துக்கலாம்”.

கரு கொண்டிருக்கும் மனைவியின் உடல்நிலைக்கு முன்னே மற்ற விசயங்கள் பின்னோக்கி சென்றுவிட, மகிழ்நன் நீலாவை அமைதிபடுத்த முயன்றான்.

“அவன் சீக்கிரம் மாட்டணும், நமக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்கு எல்லாம் சேர்த்து அவனை ஒட்டு மொத்தமா அடிக்கணும் மகிழ்” நீலா விடாமல் சொல்ல,

“சரி டியர், அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் நீ இப்ப வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடு” என்று நீலவேணியை அனுப்பி வைத்தவனின் யோசனை விபீஸ்வரனை எப்படி வீழ்த்தலாம் என்றே சுற்றி கொண்டிருந்தது.

அதேநேரம் விபி, காவ்யாவிடம் ஒரு காகிதத்தை நீட்டினான்.

# # #

உயிர் தேடல் நீளும்…

error: Content is protected !!