UUP–EPI 10

அத்தியாயம் 10

கிஸ்பெப்டின் (kisspeptin) எனும் ஹார்மோன் உதவியால் தான் டேஸ்டெஸ்ட்ரோன் மற்றும் ஓஸ்ட்ரடியோல் ஹார்மோன்கள் மனித உடம்பில் சுரக்கிறது. இந்த இரு ஹார்மோன்களே பெண்கள் பூப்படையவும், ஆண்கள் உடல் வளர்ச்சியடையவும் உதவுகிறது. கிஸ்பெப்டின் அப்நார்மலாக இருக்கும் போது பெண்கள் மாதவிடாய் சுழற்ச்சி பாதிக்கப்படுகிறது. அதோடு கருத்தரிப்பதும் கஸ்டமாகிறது. ஆண்களின் தேக வளர்ச்சிப் பாதிக்கப்படுவதோடு பெண்கள் பூப்படைவதும் தாமதமாகிறது.

 

அன்று

 

“நான் பேஜ நின்பதெல்லாம்

நீ பேஜ வேணும் பாழு…..

நாழோடும் பொழுடோடும்

உளவாட வேணும் மை பாழு

உளவாட வேணும்…..”

சாப்பாட்டு மேசையில் அமர்ந்து இட்லியைப் பிசைந்து வாயில் தள்ளிக் கொண்டே கிடைத்த கேப்பில் பாடிக் கொண்டிருந்தார் பரமு. அதே மேசையில் இரவு உணவை சாப்பிட்டப்படி அமர்ந்திருந்தனர் பார்வதியும் கதிரும்.

மகன் இருக்கும் தைரியத்தில் மனைவியை வம்பிழுத்தப்படி இட்லியை ஒரு கட்டுக் கட்டினார் பரமு. கதிர் பக்கத்தில் இல்லாவிட்டால் இவர் பாடிய பாடலுக்கு இந்நேரம் தண்ணீர் டம்ளர் பறந்து வந்திருக்கும்.

“இந்தாளு பேசறத அப்படியே நானும் பேசுனா இந்த உல்கம் அழ்ஞ்சி போய்டும்! அடச்சை கர்மம்! இந்தாளு மாதிரியே நம்ம வாயும் கபடி ஆடுதே!” தனக்குள்ளேயே முனகினார் பார்வதி.

“பாழு இன்னும் லெண்டு இட்லி எட்த்து வையேன்!” கோணல் வாய் சிரிப்புடன் மனைவியை பாசமாக பரிமாறக் கேட்டார் பரமு.

“தலை வாழை இலைப் போட்டு பரிமாரறது ஒன்னுதான் இங்கக் குறைச்சலா இருக்கு!” மகனுக்காகப் பொறுமையாய் இருந்த பார்வதி பொங்கி விட்டார்.

பாவமாகப் பார்வதியைப் பார்த்தவர்,

“பாழு, லெண்டு முடியலன ஒன்னாச்சும் வையேன்! பழ்மு பாவம்ல!” கண்களில் வேறு நீர் கோர்த்துக் கொண்டது.

“யோவ்! இந்த ஊளை அழுவைய எல்லாம் வேற எங்கயாச்சும் போய் வச்சிக்கோ! என் கிட்ட இப்டி படம் காட்டுன, ரீலு அந்துப் போயிரும் பாத்துக்கோ” பத்ரகாளியாய் உறுமினார் பார்வதி.

அவர்கள் இருவரின் சண்டையில் தலையிடாத கதிர், தன் தகப்பனுக்கு தானே இரண்டு இட்லிகளை எடுத்து வைத்து கறிக் குழம்பை அள்ளி ஊற்றினான்.

“நீ சாப்டுப்பா!’

பாசத்தோடு மகனைப் பார்த்தவர்,

“லாஜா, டேங்க்சுப்பா” என சொல்லியபடியே சாப்பிட்டார்.

“ஊருக்கெல்லாம் விடியுது! எனக்கு எப்பத்தான் விடியுமோ தெரியல!” சத்தமாக ஆரம்பித்த பார்வதி, கதிரின் முறைப்பில் வார்த்தையை வாயிலேயேப் போட்டு மென்றார்.

“பாழ்டா லாஜா! உங்கொம்மா எப்புடி பேஜுறான்னு! ஜொல்லி வைடா, ஒன்க்கு ஒரு வாழுக்கை அமேஞ்சதும் நான் ஜொர்ருன்னு மேலோகம் போய்ழுவேன்னு! இது எங்காத்தா ஜெவப்பாயி மேல ஜத்தியம்டா! லோஜக்காரன்டா நானு” என கெத்தாக ஆரம்பித்தவர் கண்ணீரில் முடித்தார்.

“ஏன்மா ஏன்? அவர் தான் தண்ணியப் போட்டுட்டா ஒன்னு தூங்குவாரு இல்ல அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுவாருன்னு தெரியும்ல! பின்ன ஏன்மா நீங்களும் சேர்ந்து வம்பிழுக்கிறீங்க? கேட்ட ரெண்டு இட்லிய போட்டு விட வேண்டியது தானே?”

கைக்கழுவி விட்டு வந்தவரைப் பிடித்துக் கொண்டான் கதிர்.

“கையக் கழுவியாச்சுடா கதிரு!” சூசகமாக தன் மனதை சொன்னவர் முன்னறைக்கு நடந்து விட்டார்.

பெருமூச்சுடன் தன் தகப்பனின் அருகில் அமர்ந்து அவர் சாப்பிடுவதையேப் பார்த்திருந்தான் கதிர். வாயில் பாதியும் வெளியில் மீதியும் சிந்தியபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தார் பரமு. தனக்கு ரோல் மாடலாக இருக்க வேண்டியவர் இப்படி இருப்பதைப் பார்த்து மனம் வலித்தது மகனுக்கு. சண்மு சொல்லும் ‘உனக்காச்சும் ஒரு அப்பா இருக்காரு. எனக்கு அது கூட இல்லை’ எனும் வாக்கியம் ஞாபகம் வர மெல்ல புன்னகைத்துக் கொண்டான்.

“ஆமாம், அப்பான்னு ஒருத்தர் எனக்கு இருக்காருடி! அது போதும்டி சம்மு!” மெல்ல முனகிக் கொண்டான். எவ்வளவு பெரிய விஷயத்தையும் தன் தோழி அசால்ட்டாய் அணுகுவதை எப்பொழுதும் போல இப்பொழுதும் நினைத்தவனுக்கு புன்னகை சிரிப்பாக மாறியது.

இருவரும் பத்தாவது எழுதி இருந்தார்கள். நட்பு இன்னும் இறுகி இருந்தது. தன் தோழி அழகி என உணர்ந்ததில் இருந்து நண்பன் என்பதையும் தாண்டி பாதுகாவலன் போஸ்ட்டுக்கு முன்னேறி இருந்தான் கதிர். பெருமாளுக்கு நடந்த தரமான சம்பவம் பள்ளி முழுக்க பரவியிருக்க, சண்முவைப் பார்க்கும் பையன்களின் பார்வை கதிர் அருகில் இருக்கும் போதெல்லாம் மரியாதைத்தன்மையை பூசிக் கொள்ளும். மற்ற சமயங்களில் அவர்களின் வயதிற்கேற்ப திருட்டு சைட்டு படு ஜரூராக நடக்கத்தான் செய்தது. இதையெல்லாம் கதிரின் காதுக்கு கொண்டு செல்லமாட்டாள் சண்மு. சாந்தமாக இருக்கும் கதிர்வேலன் இந்த ஒரு விஷயத்தில் மட்டும் சூரசம்ஹாரம் செய்யும் வேலனாக மாறிவிடுவது தான் அதற்கு காரணம்.

சண்மு தளதளவென இருக்க கதிர் இன்னும் ஒல்லியாகத்தான் இருந்தான். ஆனால் இவள் வளர்த்திக்கு வளர்ந்திருந்தான். போலிஸ் ஆக வேண்டும் எனும் கனவில் இருப்பவன், தினமும் உடற்பயிற்சி செய்வான். மகனின் ஆர்வம் அறிந்த பார்வதி, சென்னைக்கு செல்லும் போதெல்லாம் சொந்தங்களிடம் விசாரித்து உடற்பயிற்சி உபகரணங்களை வாங்கி வந்துப் போடுவார். இவனும் முட்டை, பால், காய்கறி, உடற்பயிற்சி என இப்பொழுதிலிருந்தே ஆரம்பித்திருந்தான்.

“ஒல்லிப்பிச்சான் அடிக்கிற அடி ஒவ்வொன்னும் இடிடா” என சொல்லிக் கொண்டு திரிந்தான் பலமாய் வாங்கி இருந்த பெருமாள்.

கதிர் சாப்பாட்டு மேசையில் பரமு செய்துக் கொண்டிருந்த அலப்பறைகளை அமைதியாக பார்த்தப்படி அமர்ந்திருக்க, வெளியே சண்முவின் பதட்டமான குரல் கேட்டது.

“கதிரு, டேய் கதிரு!”

தோழியின் குரலில் இவன் எழுந்து ஓட,

“மம்மவளே!” என தள்ளாடி எழுந்த பரமு, கையைக் கூடக் கழுவாமல் விரலை வாயில் விட்டு சுத்தப்படுத்திக் கொண்டே மகன் பின்னால் தள்ளாட்டமாக நடந்தார்.

வாசலில் கலங்கியக் கண்களுடன் நின்றிருந்தாள் சண்மு.

“என்னடி, என்ன ஆச்சு?”

இவர்கள் சத்தத்தில் டீவி பார்த்துக் கொண்டிருந்த பார்வதியும் வாசலுக்கு வந்திருந்தார்.

“கதிரு, கதிரு! அம்மாடா! மயக்கம் போட்டு விழுந்துட்டாங்கடா! நானும் தண்ணிலாம் தெளிச்சுப் பார்த்தேன். எழ மாட்டறாங்கடா” பயத்தில் வார்த்தைகள் தந்தியடித்தன.

பரமு, நடுங்கிய சண்முவின் கையைப் பிடித்துக் கொள்ள, வீட்டின் உள்ளே ஓடினான் கதிர். வீட்டில் இருந்த போனின் வழி, இவர்கள் அவசரத்துக்குக் கூப்பிடும் கார் வைத்திருக்கும் அண்ணனைத் தொடர்புக் கொண்டு சண்முவின் வீட்டுக்கு வர சொன்னவன் மீண்டும் வாசலுக்கு ஓடினான்.

பார்வதியின் அருகே வந்தவன் சண்முவுக்கு கேட்காத மெல்லிய குரலில்,

“அம்மா, பணம் வேணும்! மீனாம்மாவ ஹாஸ்பிட்டல் கூட்டிப் போகனும். அவங்க கிட்ட இருக்குமா இல்லையான்னு தேட நேரம் இல்லைம்மா” என கேட்டான்.

மகனை நிமிர்ந்து ஆழ்ந்துப் பார்த்தவர் ஒன்றும் சொல்லாமல் உள்ளே சென்று பணம் எடுத்து வந்துக் கொடுத்தார். அந்த நேரத்தில் மீனாட்சியை ஏற்றிக் கொண்டு அரசாங்க மருத்துவமனைக்கு விரைந்தனர். மப்பில் இருந்த பரமு, மருத்துவமனை ஓரத்தில் இருந்த பைப்பில் தண்ணியை அள்ளி தலையோடு ஊற்றிக் கொண்டார். உடல் குளிரில் நடுங்கினாலும் கொஞ்சம் தெளிந்திருந்தார்.

மீனாட்சியை சிகிச்சைக்குத் தள்ளி சென்றிருக்க, நடுங்கியப்படி நின்றிருந்த சண்மு கதிரின் கையை விடவேயில்லை. அவள் தம்பியோ அவள் முதுகில் ஒண்டிக் கொண்டு அழுதவாறே இருந்தான். சும்மாவே அவன் எல்லாவற்றுக்கும் பயப்படுவான். தாயின் நிலைமை அவனை இன்னும் பயமுறுத்தி இருந்தது.

பிள்ளைகள் மீனாட்சியைக் கொண்டு சென்ற அறை வாசலில் நின்றிருக்க பரமுவும், கார் எடுத்து வந்த அவர்களின் சொந்தக்கார பையனும் தான் என்ன ஏது என விசாரித்து வேண்டியதை செய்தனர்.

“கதிரு!”

“என்னடி சம்மு?”

“ரொம்ப பயமா இருக்குடா”

“அம்மாக்கு ஒன்னும் இருக்காதுடி! பயப்படாத”

“அம்மா இல்லைனா நாங்க ரெண்டு பேரும் அனாதைடா” குரல் கம்மி இருந்தது. ஆனால் அழுகையில்லை. கதிரின் கைப்பிடியில் கொஞ்சமாக தைரியம் அடைந்திருந்தாள் சண்மு.

“அனாதை பனாதைன்னுலாம் சொன்ன, கொன்னுருவேன்! நான் இருக்கேன்டி உனக்கு! நான் இருக்கற வரைக்கும் நீ அனாதை இல்ல. புரியுதா?”

புரிகிறது என்பது போல தலையசைத்தாள்.

“அம்மாக்கு சரியாகிருமாடா?” என மீண்டும் ஆரம்பித்தாள்.

இருவரும் அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்திருந்தார்கள். கண்ணன் சண்முவின் மடியில் விசும்பியபடியே படுத்திருந்தான்.

“சரியாகிரும்டி. அப்பாவும் அண்ணாவும் உள்ள போயிருக்காங்க. இப்ப வந்து நல்லா இருக்காங்கன்னு சொல்லுவாங்க பாரேன்!” என கையை அழுத்தி சமாதானப்படுத்தினான் கதிர்.

சற்று நேரத்தில் வெளியே வந்த பரமு,

“ஒன்னும் இல்லடா ராஜாத்தி! அம்மா கண்ணு முழிச்சுட்டாங்க! அவங்களுக்கு பீபீ இருக்காம். அத கவனிக்காமலே விட்டுட்டாங்கடா! அதான் திடீர்னு கூடி போயி, மயக்கம் அடிச்சிருச்சு. இனிமே மருந்து மாத்திரைலாம் எடுத்துக்கிட்டா சரியா இருப்பாங்கலாம். இன்னிக்கு நைட்டு இங்கன தங்கனுமாம்டா. நீ போயி உள்ள பாருடா” என சண்முவை உள்ளே அனுப்பியவர்,

“அடே கண்ணா! நீ எங்கூடவே இர்டா! அக்காவும், கதிரும் போய் பாக்கட்டும்” என அவனைத் தன்னோடு இருத்திக் கொண்டார். உள்ளே ட்ரீப்ஸ்சோடு சோர்ந்துப் போய் இருக்கும் மீனாட்சியைப் பார்த்து எங்கே மீண்டும் அழுது வைப்பானோ என தன்னுடனே வைத்துக் கொண்டார்.

உள்ளே வந்த மகளைப் பார்த்த மீனாட்சிக்கு கண் கலங்கியது. வயதுப் பிள்ளையை எப்படி மருத்துவமனையில் தன்னுடன் வைத்துக் கொள்வது! அல்லது வீட்டிலும் தானில்லாமல் எப்படி தனித்து விடுவது என பயம் பற்றிக்கொண்டது அவருக்கு.

“சண்மு! உங்களப் பத்தி நினைக்காம இப்படி வந்துப் படுத்துக்கிட்டேனேடி நானு! நீங்க ரெண்டு பேரும் எப்படிடி தனியா இருப்பீங்க?” கண்ணீர் வந்தது அவருக்கு.

சண்மு வாயைத் திறப்பதற்குள்,

“நான் இருக்கேன் மீனாம்மா! நீங்க வர வரைக்கும் சம்முவப் பத்திரமா பாத்துப்பேன்!” என சொல்லி இருந்தான் கதிர். அவனை ஏறிட்டுப் பார்த்த மீனாட்சி,

“அப்பாவ கொஞ்சம் வர சொல்லுப்பா கதிரு” என சொன்னார்.

இவர்கள் இருவரும் வெளியேற உள்ளே வந்தார் பரமு.

“அண்ணா!”

“இப்ப என்னாத்தா? புள்ளயப் பார்த்துக்கனும்? அவ்வளவுதானே? என் மருமகளயும் அவ தம்பியயும் நான் பத்திரமாப் பார்த்துக்கறே. நீ உடம்ப தேத்திக்கிட்டு வா தாயி!” என தைரியம் சொன்னவர், பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு கிளம்பினார்.

சண்முவும், கண்ணனும் வீட்டின் உள் படுக்க, திண்ணையில் படுத்துக் கொண்டனர் அப்பாவும் மகனும். நடுநிசி அமைதியில் மெல்லிய விசும்பல் சத்தம் கேட்க எழுந்து அமர்ந்தான் கதிர். கையில் இருந்த புல்லாங்குழலை எடுத்தவன், மெல்ல வாசிக்க ஆரம்பித்தான்.

“வளரும் பிறையே தேம்பாதே

இனியும் அழுது தேயாதே

அழுதா மனசு தாங்காதே

அழுதா மனசு தாங்காதே”

குழல் குழைந்து வந்தது. பெண் குயிலும் துயர் துறந்து துயில் கொண்டது.

 

இன்று

 

“என் வேல் உங்கள லவ் பண்ணறாரா?”

நடுங்கியக் கையை முயன்று கட்டுப்படுத்திய சண்மு, நிதானமாக காபியை அருந்தினாள். காலி கப்பை கட்டில் ஓரம் இருந்த மேசை மேல் வைத்தவள், மெல்ல கட்டிலில் அமர்ந்து கால் மேல் கால் போட்டுக் கொண்டாள். பின் நிமிர்ந்து, நின்றிருந்த மங்கையை ஏறிட்டுப் பார்த்தாள்.

“நீங்க டீச்சர்னு கேள்விப்பட்டேனே உண்மையா மங்கை?”

“ஆமா, செகண்டரி ஸ்கூல் டீச்சர்”

“வயசுப் பிள்ளைங்களுக்குப் பாடம் சொல்லிக் குடுக்கற டீச்சர் இவ்வளவு கட்டுப்பட்டித்தனமா இருப்பீங்கன்னு நான் கொஞ்சம் கூட எதிர்ப்பார்க்கல மிஸ் தவமங்கை” லேசாக குரலில் கடுமையைக் கொண்டு வந்திருந்தாள் சண்மு.

“என்ன சொல்லுறீங்க?”

“பின்ன என்னங்க? ஒரு ஆணும் பெண்ணும் நட்பா இருக்கக் கூடாதா? எதிர் பாலர் ரெண்டு பேரும் சேர்ந்து பழகனா அது காதலா தான் இருக்கனுமா? திஸ் இஸ் ரிடிக்குலஸ், பார்பேரிஷம், இடியட்டிக்” என தனக்குத் தெரிந்த இன்னும் சில பல ஆங்கில வார்த்தைகளை விட்டடித்தாள் சண்மு.

தவமங்கை பேச வாய் திறக்க, அவளை முந்திக் கொண்டு,

“என் வேல்னு சொந்தம் கொண்டாடினா மட்டும் பத்தாதுங்க மங்கை! தவா தவான்னு உருகறானே அவன் மேல கொஞ்சம் நம்பிக்கையும் வைக்கனும்ங்க. நீங்க என் கிட்ட கேட்ட வார்த்தைய மட்டும் அவன் கிட்ட கேட்டிருந்தீங்க இந்நேரம் காச்மூச்சுன்னு கத்திருப்பான் அவன். நானா இருக்கவும் பொறுமையா பேசறேன்” என்றாள்.

“இருங்க சண்மு! காச்மூச்னு கத்தாதீங்க! நாம பொறுமையா பேசலாம்” என தனது டீச்சர் குரலைக் கொண்டு வந்தாள் மங்கை.

“சரி காபி குடிச்சிட்டு வந்து என் பக்கத்துல உட்காருங்க! நாம உங்க கல்யாணத்தப் பத்தி டீட்டேய்லா பேசுவோம்”

கல்யாணம் எனும் வார்த்தையில் முகம் மலர்ந்தாள் மங்கை. காபியை மடக்கென விழுங்கியவள், சண்முவின் பக்கத்தில் அமர்ந்து அவள் கையைப் பற்றிக் கொண்டாள்.

“என்னை மன்னிச்சிருங்க சண்மு! எனக்கு சில நாளா மனசே சரியில்ல! என்னமோ தப்பா நடக்கற மாதிரி, என் பொருள் என் கை விட்டுப் போகிற மாதிரி ஒரு பீல். அதான் பட்டுன்னு அப்படி கேட்டுட்டேன்”

“உங்களுக்கு ஏங்க அப்படி ஒரு சந்தேகம்?” என மங்கை வாயைக் கிளறினாள் சண்மு.

“ரெண்டு வருஷமா எங்களுக்கு கல்யாணம் பேசறாங்க! முதல்ல இவர் ஒத்துக்கவே இல்ல. அப்புறம் அத்தை எப்படி எப்படியோ பேசி கரையா கரைச்சு ஒத்துக்க வச்சாங்க! அப்புறம் கூட நான் தான் வெக்கத்த விட்டு முதல் அடி எடுத்துச் வச்சேன். நான் மேசேஜ் போட்டேன், அவர் ரிப்ளை செஞ்சாரு. அவரா கால் செய்ய மாட்டாரு. நான் செஞ்சா எவ்ளோ பிசினாலும் நாலு வார்த்தைப் பேசுவாரு. என்னை தவான்னு கூப்பிடுங்கன்னு நான் கேட்க, அதுக்குக் கூட பல மாசம் எடுத்துக்கிட்டாரு. ரொம்ப கேரிங்கா இருப்பாரு, ஆனாலும் என்னமோ ஒதுக்கம் தெரியும். அது வந்து..”

“ஹ்ம்ம். சொல்லுங்க மங்கை”

“இன்னும் ஒரு உம்மா கூட நாங்க குடுத்துக்கல!”

இவள் முகம் விளக்கெண்ணெய்யைக் குடித்தது போல ஆனது.

“யம்மா, புருஷன் பொண்டாட்டிக்குள்ள நடக்கற இந்த டீட்டெயில் எல்லாம் எனக்கு சொல்ல வேண்டாம்மா ப்ளிஸ். என்னா இருந்தாலும் அவன் எனக்கு நண்பன். அவன காதல் மன்னன் ரேஞ்சுக்குள்ளாம் என்னால கற்பனைப் பண்ணிப் பார்க்க முடியல”

“ஐயோ! இன்னும் குடுத்துக்கலன்னு தானே சொன்னேன்! நீங்க வேற ஏங்க! கூட்டத்துல கைப்பிடிச்சு நகர்த்தறது, தோளைத் தொட்டுக் கூப்பிடறது இப்படி தவிர வேற எதுவும் இல்லைங்க சண்மு. ஆனா உங்கள அன்னிக்கு தோள் பிடிச்சி நின்னாரு, சாப்பிடற இடத்துல நீங்க தண்ணிய தவற விட்டப்போ நாப்கின் எடுத்து உங்க கையைத் தொடைச்சி விட்டாரு, உங்களுக்கு எல்லாம் பார்த்து பார்த்து செய்யறாரு. அதான் எனக்கு அப்படி ஒரு சந்தேகம் வந்துருச்சு”

“இத போய் நீங்க அவன் கிட்டயே கேட்டுருக்கலாம். தெளிவ இல்லைன்னு சொல்லிருப்பான். சண்மு என் பெஸ்டிதான். நீ எப்படி இப்படி நினைக்கலாம்னு போலிஸ் காட்டு காட்டிருப்பான். ஜஸ்டு மிஸ்”

“என் வேல் கிட்டயே கேட்டுருப்பேன். ஆனா”

“என்ன ஆனா?”

“அவர் ஆம்னு சொல்லிட்டா அத தாங்கிக்கிற சக்தி எனக்கு இல்ல. இந்த முசுட்டு கதிர்வேலன நான் ரொம்பவே லவ் பண்ண ஆரம்பிச்சிட்டேன். எனக்கு அவர் வேணும்! தவாவோட வேலா வேணும்!” இவ்வளவு நேரம் சிரித்த முகமாக கேசுவலாக தன் உணர்வுகளைப் பகிர்ந்துக் கொண்டிருந்தவளின் குரல் லேசாக கடினப்பட்டிருந்தது.

அந்தக் குரலில் இருந்த மறைமுக மிரட்டல் என்பதா, கட்டளை என்பதா, அந்த ஏதோ ஒன்றை புரிந்துக் கொள்ள முடியாத அளவுக்கு முட்டாளா சண்மு!

“எண்ட நண்பன் உங்களுக்கு கணவன் ஆகிட்டு வரும். பட்சே உன் கணவன் எனக்கி காதலன் ஆகிட்டு வராது. மங்கைக்கு மனசிலாயி?” என கேட்டு புன்னகைத்தாள் சண்மு. சண்முவின் புன்னகை மங்கையையும் தொத்திக் கொண்டது.

அந்த நேரத்தில் போன் வர, எடுத்துப் பார்த்தாள் சண்மு. அழைப்பைப் பார்த்து முகம் மாற, மங்கைக்காக புன்னகையை ஒட்ட வைத்துக் கொண்டு காலை அட்டேண்ட் செய்தாள்.

“சொல்லுங்க”

‘சொல்லித் தொலைடா’

“நல்லா இருக்கேங்க”

‘கொலை காண்டுல இருக்கேண்டா’

“கொஞ்சம் டைம் குடுங்க”

‘கொல்ல டைம் குடுடா’

“கோபம் போனதும் சீக்கிரம் வரேன்”

‘நீ கொள்ளியில போனதும் வரேன்’

“ஹ்ம்ம், ஹ்ம்ம். சரி”

‘ஹ்ம்ம் ஹ்ம்ம்ம் எனக்கு ஏறுதுடா வெறி’

“டாட்டா, பாய் பாய்”

‘கட்டையில போவாய்!’

மங்கை முன் வாய் ஒன்று பேச மனம் வேறு பேசியது.

பேசி முடித்துப் போனை ஆப் செய்து வைத்தவள், கேள்வியாக நோக்கிய மங்கையைப் பார்த்து சிரித்தாள்.

“என்னோட எக்ஸ் ஹஸ்பேண்ட் பிரதாப். ரொம்பபபப நல்லவரு! அவசரப்பட்டு நான் தான் முட்டாள்த்தனமா வெளிய வந்துட்டேன் இந்த பந்தத்துல இருந்து. கொஞ்ச நாள் போகட்டும் மங்கை. மனசு சரியானதும் திரும்ப ஆஸ்திரேலியா போயிருவேன். சோ என்னையும் என் நண்பனையும் பத்தி தப்பு தப்பா யோசிக்காம அவன கல்யாணம் செஞ்சுட்டு சந்தோஷமா இரு. நட்பு என்னையே இப்படி தாங்கறான்னா, நீ மனைவி ஆகிட்ட எப்படி தாங்குவான்னு யோசிச்சுப் பாருடா! அவன் சந்தோஷம் இனி உன் கையிலதான். நல்லா பார்த்துக்கோடா அவன” மெல்ல குரல் கரகரக்க சட்டென தன்னை சமாளித்தாள் சண்மு.

சந்தோசத்துடன் மங்கை விடைப்பெற்றுப் போக, இவள் இரவெல்லாம் அழுது அரற்றினாள். விடிகாலையிலேயே எழுந்து கிளம்பி நர்சரிக்குப் போனாள் சண்மு. அந்த நேரத்தில் கதிரின் கார் அங்கே நின்றிருந்தது.

‘இவன் எதுக்கு காலங்காத்தால வந்து நிக்கிறான்?’ யோசனையுடன் இறங்கி காரைப் பூட்டினாள் இவள்.

அவள் வந்ததை கவனித்து இறங்கி வந்தான் கதிர்.

“உள்ள போலாம்” என அழைத்தான் அவளை.

இன்னும் கட்டி முடிக்காத கட்டிடத்தின் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தனர் இருவரும்.

“என்ன இந்த நேரத்துல ஏசிபி சார்?” என கேட்டு வாய் மூடவில்லை இவள். இழுத்து அணைத்திருந்தான் சண்முவை.

“மறுபடி என்னை விட்டுட்டுப் போய்ருவியா? போய்ருவியாடி? போய்ருவியா?” ஒவ்வொரு கேள்விக்கும் அவன் அணைப்பு இறுகியது.

 

(உயிர் போகும்…)