UUP–EPI 11

அத்தியாயம் 11

லெப்டின்(leptin) எனப்படும் ஹார்மோன் நமது உடல் பருமன் பிரச்சனைக்கு நேரடியாக சம்பந்தப்பட்ட ஹார்மோனாகும். இந்த லெப்டின் தான் உடலுக்கு சக்தி தேவைப்படுகிறது, ஆகவே உணவு அவசியம் என சிக்னல் அனுப்பி நம்மை சாப்பிடத் தூண்டுகிறது. இந்த லெப்டின் சரியாக வேலை செய்யாத போது, நாம் அதிக உணவை உட்கொண்டு ஓபேசிட்டி எனப்படும் நிலைமையை அடைகிறோம்.

 

அன்று

“லாஜா!”

“ஹ்ம்ம்!”

“இன்னா கோவம்?”

“ஒன்னும் இல்லப்பா”

இருள் கவியும் நேரத்தில் வீட்டின் பின்னால் இருக்கும் துணி துவைக்கும் கல்லில் அமர்ந்திருந்தான் கதிர். கோபம், துக்கம், சந்தோஷம் எது வந்தாலும் அவன் அடைக்கலமாவது சண்முவிடம் அல்லது அந்தக் கல்லிடம் தான்.

“ஜொல்லுப்பா! இங்கன ஒக்காழ்ந்துருக்க! கண்டிப்பா கோவோம்தான். அம்மா ஏஜனாளா?”

“ஆமா!”

“உன்ன ஜும்மா ஏஜமாட்டாளே பாழு! நீ என்னா பண்ண லாஜா?”

“ஸ்கூல்ல எக்ஸ்கர்ஷன் ஏற்பாடு செஞ்சிருக்காங்க ஊட்டிக்கு”

“ஜெரி!”

“அம்மா கிட்ட பணம் கேட்டேன்!”

“ஜெரி!”

“குடுப்பேன் ஆனா குடுக்க மாட்டேன்ன்னு சொல்றாங்க”

தலையை சொறிந்தார் பரமு. அடித்த சரக்கு மகனின் பேச்சில் தெளிந்து விடும் போல இருந்தது.

“டெளிவா ஜொல்லுப்பா!”

“மீனாம்மா சம்முவ அனுப்ப முடியாதுன்னு சொல்லிட்டாங்க. சும்மா சுத்திப் பார்க்கலாம் செலவு செய்ய முடியாது, அடங்கி வீட்டுல இருன்னு சொல்லிட்டாங்களாம். இத கண்ணா என் கிட்ட சொன்னான். அவளுக்கு அங்க வர ரொம்ப ஆசைப்பா. ஆனா என் கிட்ட, நீ போய்ட்டு வாடா கதிரு. அங்கலாம் குளிரும். என்னால தாங்க முடியாதுன்னு பீலா விடுறா!”

மீனாட்சி மயங்கி விழுந்த நாளில் இருந்து சண்மு ரொம்பவே அடங்கிப் போயிருந்தாள். அந்த ஒரு நாள் அவள் குட்டி வாழ்க்கையைப் புரட்டிப் போட்டிருந்தது. குடும்பத்தின் ஆணி வேறான அம்மா இல்லாமல் போனால் தங்களின் நிலைமை என்னவென பயம் சூழ்ந்திருந்தது அவள் மனதில். மீனாட்சி எது சொன்னாலும் எதிர்த்துப் பேசுவதை விட்டாள். சோம்பேறிப்படாமல் கூடமாட எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தாள். வீட்டில் வேலைகள் நெட்டி முறித்ததால் பள்ளி படிப்பில் கவனம் சிதறியது அவளுக்கு.

அதோடு பத்தாவதில் அடித்துப் பிடித்துப் பாஸ் ஆகி இருந்ததால் காமர்ஸ் க்ருப்பில் இடம் பிடித்திருந்தாள் சண்மு. கதிரோ சயின்ஸ் க்ருப்பில் இருந்தான். இருவரும் பள்ளி ஆரம்பிக்கும் முன் பார்த்துக் கொள்வார்கள். இடைவெளியில் கதிர் ஆண் நண்பர்களுடன் இருக்க, இவள் பெண்களுடன் இருப்பாள். பள்ளி முடிந்ததும் ஒன்றாக வீட்டுக்குப் போவதை மட்டும் இன்னும் கடைப்பிடித்து வந்தார்கள் இருவரும். அதன் பிறகு இவன் டியூசன், உடற்பயிற்சி என பிசியாகி விடுவான். இவளோ வீட்டு வேலை, தோட்ட வேலை என பிசியாகி விடுவாள். சின்ன வயதில் இவர்கள் சந்தித்து அடித்துப் பிடித்துக் கொள்ளும் ஆலமரம், இவர்கள் வரவின்றி வெறிச்சோடிப் போய் கிடந்தது.

“ஓ! மம்மவளுக்கும் அம்மாகிட்ட காஜு கேட்டியா?”

ஆமென தலையாட்டினான் பதினேழு வயது கதிர்.

“ஒனக்குனா அழ்ழி குழ்ப்பாடா! மத்தவங்கனா கை வழாது பாழுக்கு”

“சம்மு போகலனா நானும் போகலப்பா!”

“ஜெரி எம்புட்டு வேணும்?”

எவ்வளவு என சொன்னான் கதிர். தாடையை சொறிந்தப்படி யோசித்தார் பரமு.

“என் கித்தினிய வித்துருவா?”

“அப்பா!!!!!” என கத்தினான் கதிர்.

“ஜெரி வுடு! என் கிட்னி இன்னேழம் ஜட்னியா போய்ழுக்கும். ஒனக்கு ஒண்டி அம்மாட்ட காஜு வாங்கிக்க கதிழு. லாஜாத்திக்கு நான் தேத்திக் குழ்க்கறேன்”

விருந்தாளிகள் வீட்டுக்கு வந்தால் சமைப்பதற்கென பார்வதி வாங்கி அடுக்கி இருந்த பெரிய சில்வர் அண்டாக்களில் இரண்டு சில நாட்களில் காணாமல் போயிருந்தது.

“என் வீட்டு அண்டாவைக் காணோம்” என பார்வதி காட்டுக் கத்தலாய் கத்த,

“நான் இழ்கறப்போ என் வூட்டுல எவன்டா அண்டாவ திழ்டுனான்?” என பரமு வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு தள்ளாடி சீன் போட்டார்.

அவர் சும்மா போயிருந்தாலாவது பார்வதி பேசாமல் இருந்திருப்பார். ஓவர் சீன் போடவும், பரமுவைப் பிடிபிடியென பிடித்துக் கொண்டார் பார்வதி. தான் எடுக்கவே இல்லை என துண்டைப் போட்டுத் தாண்டியவர், ஆத்தா சிவப்பாயி மேலேயும் சத்தியம் செய்தார். பார்வதி குரலை உயர்த்த உருண்டு புரண்டு அழுதார் பரமு. அவரின் அட்டகாசம் தாங்க முடியாமல் தலையில் அடித்துக் கொண்டார் பார்வதி. அன்றிலிருந்து அண்டாவை அடுக்கி வைக்கும் அலமாரிக்குக் கூட பூட்டு போடும் கட்டாயத்திற்கு ஆளானார் அவர்.

வேண்டாம் பரவாயில்லை என சொன்ன தோழியை சரிக்கட்டி, பணம் இல்லை என ஆட்சேபித்த மீனாட்சியையும் கரையாய் கரைத்து சண்முவை பஸ்சில் ஏற்றி இருந்தான் கதிர். பெண்கள் வரிசையில் கண்ணில் சிரிப்புடனும் முகத்தில் பூரிப்புடனும் அமர்ந்திருந்த சண்முவைப் பார்க்க பார்க்க தெவிட்டவில்லை அவனுக்கு. நிமிர்ந்து இவனைப் பார்த்தவள், ‘தேங்க்ஸ்டா’ என வாயசைத்தாள். இவன் சிரிப்புடன் ‘எஞ்சாய்’ என வாயசைத்தான். கூச்சலும் கும்மாளமுமாக அவர்களின் ட்ரீப் ஆரம்பமானது.

ஊட்டி மலை ஏற ஏற குளிர ஆரம்பித்து. இளங்கன்று பயம் அறியாது என்பது போல இந்தக் கன்றுகளுக்கு குளிர் கூட தெரியவில்லை. வந்திருந்த ஆசிரியர்கள் போர்த்திக் கொண்டு வர இவர்கள் ஆட்டம் பாட்டம் மட்டும் ஓயவில்லை. அடுத்த வருடம் முக்கிய பரீட்சை வருகிறதே, இப்பொழுதாவது நன்றாக சுற்றிப் பார்த்து சந்தோஷமாக இருக்கட்டும் என ஆசிரியர்களும் விட்டு விட்டார்கள். ஏற்கனவே அறைகள் புக் செய்யப்பட்டிருக்க, பெண்கள் தனியாகவும் ஆண்கள் தனியாகவும் பிரித்து அனுப்பப்பட்டார்கள். எல்லோரும் ரிப்ரெஷாகி கிளம்பி வர, மதிய உணவு ஹோட்டலிலே வழங்கப்பட்டது.

அதற்குப் பிறகு ஆரம்பித்தது அவர்களின் பயணம். ஊட்டி டீ எஸ்டேட்டில் இருந்து அவர்களின் நிகழ்ச்சி நிரல் ஆரம்பித்தது. அவர்கள் ஊரில் இன்னும் அதிநவீன செல்போன் தனது கரங்களை நீட்டி இருக்கவில்லை. பலர் உபயோகிக்க ஆரம்பித்திருந்தாலும், பள்ளி பிள்ளைகள் கைகளில் தவழும் அளவுக்கு இன்னும் செல்போன் தன் சிறகை விரித்திருக்கவில்லை. அதனாலேயே எல்லா அழகிய வியூவையும் தங்கள் கண்களினாலே படம் பிடித்துக் கொண்டனர் மாணாக்கர்கள்.

கதிர் மட்டும் காமிரா கொண்டு வந்திருந்தான். எல்லா மாணவர்களும் என்னைப் பிடி என்னைப் பிடி என போஸ் கொடுத்து அவனை ஒரு வழி செய்து கொண்டிருந்தனர். ரோஸ் கார்டனில் மஞ்சள் நிற ஸ்வெட்டர் அணிந்து மங்களகரமாக இருந்த சண்முவை மஞ்சள் ரோஜா அருகே நிறுத்தி இவனாகவே ஒரு படம் எடுத்தான். குளிரில் கன்னங்கள் ரோஜா நிறம் கொண்டிருக்க, கண்கள் சிரிக்க, உதடு மினுமினுக்க அழகாக இருந்தாள் சண்மு.

“லவ்ஸ்சா மச்சி?”

சண்மு மீண்டும் தன் தோழிகளுடன் இணைந்திருக்க, தன் காதருகே கேட்ட குரலில் திரும்பிப் பார்த்தான் கதிர். பேசியவன் அவர்கள் பள்ளிக்கு மாற்றலாகி புதிதாக வந்திருந்தவன்.

“சேச்சே, இல்லடா! என் ப்ரேண்ட் அவ!”

“நெஜமா ப்ரேண்ட் மட்டும் தானா மச்சி? அவ உன்னைப் பார்க்கறதையும், சிரிக்கறதையும் பார்த்தா அதுக்கும் மேல மாதிரி இருக்குடா! அவ மட்டும் உன் லவ்வர இருந்தா இந்த உலகத்துலயே நீதான்டா குடுத்து வச்சவன் கதிர்!” பெருமூச்சுடன் அவன் சொல்ல, இந்நேரம் கதிருக்கு முனுக்கென வந்திருக்க வேண்டிய கோபம் மிஸ்சிங்.

அந்த நேரம் சத்தமாக சிரித்த சண்முவை மெல்லத் திரும்பிப் பார்த்தான் கதிர்.

‘இவள் எனக்கே எனக்கானவளா?’ மனம் கேள்விக் கேட்க,

‘அடச்சீ! இப்படிலாம் யோசிக்காதடா! தப்பு, தப்பு!’ என அறிவு அட்வைஸ் செய்தது.

தலையை பலமாக உலுக்கிக் கொண்டவன், சண்மு இருக்கும் இடத்தை விட்டு தூரமாகப் போய் நின்றுக் கொண்டான்.

காதல்!!!! எந்தப் புள்ளியில் அது தொடங்குகிறது? எந்தப் புள்ளியில் நிறைவடைகிறது? இது தெரிந்து விட்டால் மனிதன் காதல் யோகி ஆகிவிடுவான். யாரும் கற்றுக் கொடுக்காமல் தானாக வருவதே காதல். ஒருவன் வாழ்க்கையை அழகுற மாற்றும் அபூர்வ விந்தையே காதல். காதல் எனும் மகுடிக்கு மயங்காதவர் யாருமில்லை.

அதிலும் ரசாயன மாற்றங்கள் உடலைப் புரட்டிப் போடும் பதின்ம வயது இளையவர்களுக்கு எதிர்பாலரின் சிறு கண்ணசைவோ, சின்னச் சிரிப்போ போதும் காதல் தீ பற்றிக் கொள்ள. இதை காதல் என சொல்வதா அல்லது ஹார்மோன் செய்யும் மாயம் என சொல்வதா? தெளிந்த தடாகமாய் இருந்த கதிரின் மனம் சின்ன கல் விழுந்து மெல்ல களங்கிப் போனது.

அதன் பிறகு போட்டிங் போனார்கள். திரும்பி வரும் போது இவன் அருகே வந்து கையைப் பற்றிக் கொண்டாள் சண்மு.

“கதிரு! ரொம்ப குளிருதுல! செம்மையா இருக்குடா க்ளைமேட். நீ மட்டும் சண்டை போட்டு கூப்டு வரலனா, நான் இதை எல்லாம் மிஸ் பண்ணியிருப்பேன்டா”

எப்பொழுதும் கல்மிஷமில்லாமல் கைப்பற்றி பேசிக் கொள்பவர்கள் தான் இருவரும். இன்றைய தொடுதலில் அவள் சாதாரணமாக இருக்க, இவன் நெளியாய் நெளிந்தான்.

“டீச்சர் கூப்டுறாங்க பாரு சம்மு” என அவளைத் திசைத் திருப்பி கையை விடுவித்துக் கொண்டவனின் மனம் தடதடவென மத்தளம் கொட்டியது.

‘கதிர், அவ உன் சொந்தம்டா! உன் சம்மு’ மனம் கூக்குரலிட,

‘வேணான்டா கதிர். புது இடம், இந்தக் குளிர், கண்டவன் பேசன அர்த்தமில்லா பேச்சு, அழகா ஆகிட்டே வர சம்மு இதெல்லாம் தான்டா உன் மனச தடுமாற வைக்குது. அவ சம்முடா, உன்னோட ப்ரெண்ட் சம்மு’ என அறிவு அலறியது. தலையைப் பிடித்துக் கொண்டான் கதிர்.

ஹோட்டலுக்குப் போக பஸ் ஏறும் போது, அவன் அருகே வந்த சண்மு கையில் எதையோ திணித்தாள். இவன் என்னவென பார்க்க, அமிர்தாஞ்சன் பாட்டில் அது.

“என்னடா அப்பப்ப தலையைப் பிடிச்சுட்டு நிக்கிற! பூசிக்கோ! தலை வலிக்காது.” என சொல்லியபடியே பஸ் ஏறி அமர்ந்தாள் அவள். அவள் செயலில் அடிக்கடி எட்டிப் பார்த்த மிஸ்டர் அறிவு பாய் போட்டு படுத்துக் கொள்ள, மிஸ்டர் மனசு குஜாலாக கதிரை ஆக்ரமிக்க ஆரம்பித்தார்.

“ஒரு மூங்கில் காடெரிய

சிறு பொறி ஒன்று போதும்

அந்தப் பொறி இன்று தோன்றியதே!” மெல்ல அவன் உதடுகள் முணுமுணுத்தன.

அன்றிரவு கேம்ப் பயர் வைத்து எல்லோரும் வெளியே அமர்ந்து ஆடிப் பாடி சிரித்திருந்தனர். அவரவர் திறமையை வெளிப்படுத்த, சண்முவைப் பாட சொல்லி ஊக்கினார்கள் தோழிகள். அவள் எழுந்து நின்று தொண்டையைக் கணைக்க எல்லோரும் அவள் பாடுவதைக் கேட்க ரெடியாகினர்.

“ஆஆஆ” வென அவள் இழுக்க, கதிர் அவசரமாக பக்கத்தில் வைத்திருந்த தன் பேக்கில் இருந்து தனது புல்லாங்குழலை வெளியே எடுத்தான். அவள் ஆரம்பிக்கும் போதே என்ன பாடல் என அறிந்திருந்தவன், அதற்கேற்ற மாதிரி குழலை இசைக்க ஆரம்பித்தான்.

“உனக்கே வச்சிருக்கேன் மூச்சு

எதுக்கு இந்த கதி ஆச்சு

அட கண்ணு காது மூக்கு வச்சு

ஊருக்குள்ள பேச்சு

ராசாவே உன்னை நம்பி

இந்த ரோசாப்பூ இருக்குதுங்க!” ஒவ்வொரு வரி அவள் பாடி முடிக்கும் போதும் குழல் அருமையாக அவள் குரலோடு பின்னிப் பிணைந்து வந்தது.

இவர்கள் பள்ளி மாணவர்கள் தவிர, அந்த ஹோட்டலில் தங்கி இருந்தவர்கள் கூட மெய் மறந்து நின்றுவிட்டார்கள் இவர்கள் இருவர் கூட்டணியில். பாடல் முடிய கரகோஷம் வானைப் பிளந்தது. சண்மு கூச்சத்துடன் நெளிய, அவளையே வைத்தக் கண் வாங்காமல் பார்த்திருந்தான் கதிர். சட்டென தன்னை மீட்டுக் கொண்டவன், தோழியாய் பார்த்தவளை காதலியாய் பார்க்க சொல்லித் தூண்டும் மனதை அடக்க முடியாமல் துடித்துப் போனான். கண்களில் சிரிப்புடன் தன்னை நோக்கி கட்டை விரலை உயர்த்திக் காட்டும் சண்முவைப் பார்த்து குற்றக் குறுகுறுப்பில் குறுகிக் குற்றுயிராய் ஆனான் குமரன். இனி நித்தம் போராட்டம்தான்!!!

 

இன்று

அவன் அணைப்பு இறுக இறுக இவளுக்கு மூச்சு முட்டியது.

“இப்படியே இன்னும் கொஞ்சம் இறுக்கிப் பிடிடா கதிரு! போய்ருவியான்னு கேக்கறியே, ஒரேடியா மேல போய்ருவேன்!” என சத்தம் போட்டாள் சண்மு.

சட்டென அவன் பிடி இளகியது. அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவனை தள்ளி விட்டவள், மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கினாள்.

“பைத்தியமாடா உனக்கு? பொசுக்கு பொசுக்குன்னு கட்டிப்பிடிக்கிறியே, உன் போலிஸ் பிடியை என்னால தாங்க முடியுமான்னு கொஞ்சமாச்சும் யோசிச்சுப் பார்த்தியா? மட்டி! மாடு மாதிரி வளந்து நிக்கறியே, எதிர்ல நிக்கறது இன்னொரு மாடா இல்லை முயலான்னு கூடவா தெரியல! ராஸ்கல்!” என திட்டு திட்டென திட்டியவள், நடந்துப் போய் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்துக் கொண்டாள்.

அமைதியாகவே அவள் திட்டியதை வாங்கிக் கொண்டான் கதிர்.

“வாய மூடிட்டு மரம் மாதிரி நிக்கறியே, எதாச்சும் பேசு!” அதற்கும் கத்தினாள்.

அந்த அதிகாலை வேளையில் அவள் சத்தம் எதிரொலித்து கணீர் கணீரென கேட்டது.

“என்ன சொல்லனும்? எனக்கு எப்பவும் நான் சாப்பாடு போட்டு வளர்த்து விட்ட சிங்கப்பெண்ணா தான் நீ கண்ணுக்குத் தெரியற! சிங்கம் வெளிநாடு போய் முயலா மாறி வந்தது யாரோட குற்றம்?” என கேள்வி கேட்டவன் அவள் அருகில் வந்து உட்கார்ந்தான்.

சண்முவின் கையை மெல்லப் பற்றியவன்,

“தவா சொல்லுறா நீ இன்னும் கொஞ்ச நாளுல கிளம்பி போய்டுவேன்னு! சொல்லு போய்டுவியா?” என கேட்டான்.

“ஆமா போய்டுவேன்! அப்படி எதாச்சும் பண்ணிட்டே இரு,கண்டிப்பா போய்டுவேன்!” என சொல்லியவள் கையை உறுவ முயன்றாள். அவளால் முயல மட்டும்தான் முடிந்தது.

“சம்மு, எப்படியோ இந்தியா வந்துட்ட! இனி இங்கிருந்து கிளம்ப முடியாது. கிளம்பவும் நான் விடமாட்டேன்!”

“மிரட்டறீங்களா ஏசிபி சார்? அப்படி என்ன செஞ்சிருவீங்க?”

“கைவசம் நிலுவையில கேசா இல்ல! அதுல எதையாச்சும் உன் மேல தூக்கிப் போட்டு பாஸ்போர்ட் யூஸ் பண்ண முடியாத படி செஞ்சிருவேன் சம்மு! நான் இப்போ சாதாரண கதிரு இல்ல கதிர்வேலன் அசிஸ்டேண்ட் கமிஷனர் ஆப் போலிஸ்! மைண்ட் இட்!” என விறைப்பாக சொன்னான் கதிர்.

கலகலவென நகைத்தாள் சண்மு.

“கதிரு டேய்! வில்லன் கணக்கா பேசறடா நீ!”

“எங்கடி எங்கள ஹீரோவா இருக்க விடறீங்க? எதையாச்சும் செஞ்சு வில்லனால மாத்திடறீங்க!” என அதற்கும் எகிறினான் அவன்.

“கதிரு!”

“என்ன?”

“இப்படிலாம் நடந்துக்காதடா!”

“மொதல்ல சொல்லு, நீ இருப்பியா போய்ருவியா?”

“இப்படி கட்டிப் பிடிக்கிறதுலாம் சரியில்லடா!”

“இருப்பியா கிளம்பிடுவியா?”

“உனக்குன்னு ஒருத்தி வர போறாடா கதிரு!”

“இருப்பியா பாய் சொல்லிடுவியா?”

“அடேய் ஏசிபி! நீ மாத்தி மாத்தி ஒரே விஷயத்தை எத்தனை முறை கேட்டாலும் என் பதில் ஒன்னுதான்!”

“என்ன அது?”

“டிபேண்ட்ஸ்”

“தெளிவா சொல்லு சம்மு!”

“நீ ப்ரேன்ட்ஷிப் மட்டும் மெய்ண்டேய்ன் செஞ்சினா இருப்பேன்! அதையும் மீறி எதாச்சும் கோக்குமாக்கு பண்ணினா கெளம்பிருவேன். ஊர விட்டு இல்ல, இந்த உலகத்த விட்டு!”

“சம்மு!!!!”

“டேய் கைய விடுடா! உடச்சிருவ போலிருக்கு! மண்ணு கிளற, பூ பறிக்க, போக்கே செய்ய கை வேணும்டா! இனிமே தன் கையே தனக்குதவிடா எனக்கு!” என தன் கையை அவன் பிடியில் இருந்து உருவிக் கொண்டாள் சண்மு.

“இப்படிலாம் பேசாதடி! எங்கயோ ஒரு மூலையில சந்தோஷமா உசுரோட இருக்கன்னு தான் நான் இத்தனை நாள் மனச தேத்திட்டு நடமாடிட்டு இருக்கேன். ஒரேடியா போய்ருவேன்னு என் முன்னாடி சொல்லிப் பாரு, சுட்டுப் பொசுக்கறேன் பேசன வாய!”

“இப்ப நான் நம்பறேன்டா!”

“என்ன?” என புரியாமல் கேட்டான் கதிர்.

“என்னோட ஒன்ரைக்கண்ணன் போலீஸ் ஆகிட்டான்னு இப்போ நம்பறேன்டா!”

“இப்ப எதுக்கு இந்த பிட்டு?”

“இல்ல உன் பேச்சுல சுட்டுருவேன், பொசுக்கிருவேன், செஞ்சிருவேன் இப்படிலாம் வார்த்தைகள் விளையாடுதுடா! இப்ப நம்பறேன் நீ சிரிப்பு போலிஸ் இல்ல சீரியஸ் போலிசுதான்னு” என சொன்னவள் கலகலவென சிரித்தாள்.

அவள் சிரிப்பதையே பார்த்திருந்தவனின் கடினமான முகம் மெல்ல இளகியது. சிரிப்பையே மறந்திருந்த உதடுகள் மெல்ல புன்னகைத்தன. கை நீட்டி அவள் உதட்டை வருடியவன்,

“எத்தனை வருஷம் ஆச்சுடி இப்படி நீ சிரிக்கறதப் பார்த்து! உன்னை, என் சம்முவ ரொம்ப மிஸ் பண்ணறேன்டி” என குரல் கரகரக்க சொன்னான்.

‘நானும் இப்படி சிரிச்சு பல வருஷம் ஆச்சுடா கதிரு! உன் முன்னாடி மட்டும் தான் என்னால மனசு விட்டு சிரிக்க முடியுது, கோபப்பட முடியுது, அழ முடியுது. உன் முன்னாடி மட்டும் தான் இந்த சண்முகப்ரியா எந்த வெளிப்பூச்சும் இல்லாம சந்தோஷமான சம்முவா இருக்கா! ஆனா இது சரியில்லையே! நீ ஊரும் உலகமும் மெச்ச சீரும் சிறப்புமா வாழ வேண்டியவன்டா!’

அவன் கையை மெல்ல தன் உதட்டில் இருந்து விலக்கியவள்,

“கதிரு, உன் கிட்ட நான் ஒன்னு கேக்கவாடா?” என்றாள்.

“கேளு சம்மு”

“இப்போ நம்ம உறவுக்கு என்னடா பேரு? நட்புன்னு சொல்லாத! நட்புல இப்படி இறுக்கிக் கட்டிப் புடிக்க மாட்டாங்க! சொல்லுடா இந்த உறவுக்கு என்ன பேரு? அந்த பெருமாள் மாடு கேட்ட மாதிரி என்னை நீயும் வச்சிக்கனும்னு நினைக்கறியா?”

சடாரென அவன் எழுந்த வேகத்துக்கு அமர்ந்திருந்த நாற்காலி எங்கேயோ போய் விழுந்தது. ஆத்திரத்தில் கண்கள் சிவக்க, குறுக்கும் நெடுக்கும் நடைப்போட்டவன் முன்னே தட்டுப்பட்ட அனைத்தும் பறந்தன. அவன் கோபத்தை அமைதியாகவே பார்த்திருந்தாள் சண்மு.

நடந்துக் கொண்டே,

“நாங்க நெறைய கள்ளத்துப்பாக்கி, பாம், இப்டிலாம் சீஸ் பண்ணுவோம் தெரியுமா சம்மு” என கேட்டான்.

எதற்கு இப்பொழுது இதை சொல்கிறான் என குழப்பமாகப் பார்த்தாள் சண்மு.

“அதுல ஒன்னு ரெண்ட எதுக்கும் இருக்கட்டும்னு நான் எடுத்து வச்சிருக்கேன். இல்லீகலா தான்!”

“ஓஹோ!”

“அதுல எம்1911 பிரவுணிங் பிஸ்டல் அப்படின்னு ஒன்னு என் கிட்ட இருக்கு சம்மு! பளபளன்னு ரொம்ப அழகா இருக்கும். அத ரொம்ப நாளா யூஸ் பண்ணி பார்க்கனும்னு ஆசைடி எனக்கு!”

“ஓஹோ!”

“அந்தப் பிஸ்டல அப்படியே பீத்த பெருமாள் வாயில வச்சி அழுத்துனா தொண்டை பின்னாடி குண்டு பிச்சிக்கிட்டு வரும். அழுத்தலாமா?”

என்னவோ தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என கால் செண்டர் மிஷின் சொல்லுவது போல சர்வசாதாரணமாக சொன்னவனை பார்த்து சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்தாலும் முகத்தை சீரியசாக வைத்திருந்தாள் சண்மு.

“இப்ப எதுக்குடா இந்த கொலைவெறி?”

“எவ்ளோ திமிர் இருந்தா இப்படி கேட்பான் அவன்? என் சம்முவ பார்த்து எப்படி அவன் அந்த வார்த்தைக் கேட்கலாம்?”

“அவன் புத்திய பத்தி தான் நமக்கு சின்ன வயசுல இருந்து தெரியுமே! அவன விடு! உன் மேட்டருக்கு வா! நீ என்ன அர்த்தத்துல இப்படி நடந்துக்கற? சொல்லுடா கதிரு! உனக்காக தவா இருக்கா, இன்னும் சில மாசத்துல கல்யாணம் நடக்கப் போகுது உனக்கு! உன் மரமண்டைக்கு அது புரியுதா? எதுக்கு என்னை நெருங்கி வர? இது தப்புன்னு தெரியுதா இல்லையா?”

“நடக்காது!”

“என்ன நடக்காது?”

“இந்தக் கல்யாணம் இனி நடக்காது!” என ஒவ்வொரு வார்த்தையையும் தெளிவாக நிறுத்தி நிதானமாக உச்சரித்தான் கதிர்வேலன்.

அதிர்ந்துப் போய் நின்றாள் சண்முகப்ரியா.

 

(உயிர் போகும்…)