UUP–EPI 16

அத்தியாயம் 16

அரித்ரோபொயட்டின் (erythropoietin) எனும் ஹார்மோன் தான் நமது உடலில் உள்ள சிகப்பு அணுக்கள் உருவாக காரணமானவை. உருவாக்கத்தில் மட்டும் உதவாமல் சிவப்பணுக்களைப் பாதுகாக்கவும் செய்கின்றன இந்த ஹார்மோன்கள்.

அன்று

கதிர் கிளம்பிப் போன சில மாதங்களில், தெரிந்தவர்கள் மூலம் சண்முவுக்கும் வேலைக் கிடைத்தது அரியலூரில். தினம் போய் வர சிரமமென அங்கிருந்த சாதாரணமான ஹாஸ்டலில் சேர்த்து விட்டார் மீனாட்சி. வெள்ளி இரவு வீடு வந்து ஞாயிறு மீண்டும் கிளம்பி விடுவாள் சண்மு.

அது ஒரு வளர்ந்து வரும் சிமேண்ட் தொழிற்சாலை. இவளுக்கு ஆபிசில் தான் வேலை. வரவேற்பாளர், கிளினர், டீ லேடி, டைப்பிஸ்ட் என எல்லா வேலைக்கும் ஆல் இன் ஆல் இவள் தான். எடுபிடி என கூட சொல்லலாம். யார் என்ன வேலை சொன்னாலும் செய்ய வேண்டும். ஆபிசில் வேலை என மீனாட்சி சந்தோஷமடைய, இவளுக்கோ தோட்டம் போட்டால் கூட அவ்வளவு களைத்துப் போகாது என தோன்றும். ஹாஸ்டல், சாப்பாடு போக சேமிக்கவும் முடிந்ததால் இந்த வேலையை எந்தக் காரணமும் கொண்டு விட்டு விடக்கூடாது என மீனாட்சி கண்டிப்பாக சொல்லி இருந்தார்.

ஆபிசில் இரு பெண்கள் வேலை செய்தார்கள். இருவருமே திருமணம் ஆகி குழந்தைக் குட்டி என இருப்பவர்கள். மற்றப்படி தொழிற்சாலையிலும் சரி, ஆபிசிலும் சரி மற்ற எல்லோரும் ஆண்கள் தான். சின்னப் பெண் இவளை பல கண்கள் வட்டமிடவே செய்தன. யாரிடமும் எந்த வம்பும் வைத்துக் கொள்ளாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என இருக்கப் பழகிக் கொண்டாள் சண்மு.

கதிர் கைத்தொலைப்பேசி பயன்படுத்த ஆரம்பித்திருந்தான். வெள்ளிக்கிழமை வீட்டுக்குப் போகும் முன் அவனுக்கு கடையில் இருந்து போன் பேசிவிட்டே செல்வாள் சண்மு. அந்த நாளுக்காக ஆவலாக காத்திருப்பான் கதிர். இப்படியே இரண்டு வருடம் ஓடி இருந்தது.

“ஹலோ!”

“சொல்லுடி சம்மு! எப்படி இருக்க? சாப்பிட்டுட்டியா?” என கேட்டான் கதிர்.

“நான் நல்லா இருக்கேன்டா கதிரு! வீட்டுக்குப் போய் சாப்பிட்டுக்கலாம்டா! வீட்டு சாப்பாட்டுக்கு நாக்கு ஏங்குது”

“போடி! வாரா வாரம் வீட்டுக்குப் போயிடற உனக்கே இப்படி இருந்தா, என்ன மாதிரி மாசக்கணக்குல வீட்டுக்கு வராதவனுக்கெல்லாம் எப்படி இருக்கும்? நாக்கு செத்து சுடுகாட்டுக்குப் போயிருச்சு”

“பேச்சப் பாரேன், சாவு சுடுகாடுன்னு! அடுத்த லீவுக்கு வரப்போ இறால் பிரியாணி செஞ்சு தரேன்டா! வேலை செய்யற இடத்துல அந்த அக்காங்க ரெண்டு பேரும் ரெசிபி, வீட்டுக் குறிப்பெல்லாம் பரிமாறிக்குவாங்க! நானும் அப்படியே கேட்டு மனசுல பதிச்சுக்குவேன்”

“பார்டா! இப்பவே வீட்டுக் குறிப்பெல்லாம் தெரிஞ்சு வச்சிக்கிறியா? அதுக்கெல்லாம் அவசியமே இல்லைடி! இதெல்லாம் கத்துகிட்டா கல்யாணம் செஞ்சு குடுத்துருவாங்க சம்மு!”

“அட போடா! தம்பி படிச்சு முடிக்கட்டும் முதல்ல! அவன் காலேஜ் போய், ஒரு நிலைக்கு வரட்டும்! அப்புறம் கல்யாணம் கத்திரிக்காய்லாம் பார்த்துக்கலாம்”

“ஆமா அதுதான் கரெக்டு! கண்ணனுக்கு உன்ன விட்டா வேற யார் இருக்கா? நீ திடுதிப்புன்னு கல்யாணமாகி போயிட்டா அவன் உடைஞ்சி போயிருவான் சம்மு! சோ மெதுவா, லெட்ஸ் சே இன்னும் ஒரு ஆறு வருஷம் கழிச்சு கல்யாணம் செஞ்சுக்கலாம். புரியுதா?” என அழுத்தமாக கேட்டான்.

“நான் கம்முன்னுதான்டா இருக்கேன் பக்கி! நீயே கல்யாணம்னு ஆரம்பிச்சு நீயே வேணாம்னு முடிச்சு வைக்கற!”

“அது வந்து, உங்கம்மா அதப்பத்தியேதானே பேசறாங்க! அதான் நான் இப்ப வேணாம்னு எடுத்து சொல்லி உனக்குப் புரிய வைக்கறேன்”

“அம்மா என் சம்பளத்துல ஒரு கூட்டு போட்டுருக்காங்க! அதுல கழுத்துக்கு ஆரம் வாங்கப் போறாங்களாம். அந்த கூட்டு முடிஞ்சதும் இன்னொரு கூட்டு போடப்போறாங்களாம். அதை வர மாப்பிள்ளைக்கு வரதட்சணை குடுக்க சேர்த்து வைக்கனுமாம்! இப்படி பல திட்டம் இருக்குடா அவங்களுக்கு! கொஞ்சம் காசு எடுத்து அவங்களுக்கு ஒரு சேலை வாங்கி குடுத்தா கூட ஒரே சத்தம், காச ஏன்டி கரியாக்கறன்னு!”

“விடுடி, அம்மான்னா அப்படித்தான்! சரி சொல்லு! நான் வாங்கிக் குடுக்கவா?”

“எத்தனை தடவைத்தான் சொல்லறது வேணான்னு”

“ப்ளிஸ்டி சம்மு”

“சொன்னா கேளுடா கதிரு”

“சாதரணமா ரொம்ப விலை கம்மியா வாங்கித் தரேன்டி! நீயே ஒன்னு வாங்கிக்கன்னு சொன்னாலும் எதுக்கு வீண் செலவுன்னு சொல்லுற! நான் வாங்கித் தரேன்னு சொன்னாலும் ஒத்துக்க மாட்டிக்கிற! ஏன்டி இப்படி செய்யற!”

“டேய் நான் என்ன பெரிய அப்பாட்டக்கரா செல் போன்லாம் தூக்கிட்டு அலைய!”

“இல்ல சம்மு! இந்தப் படிப்பு போக போக ரொம்ப கஸ்டமா இருக்குடி! பரீட்சை, அசைண்ட்மேண்ட், அப்படி இப்படின்னு கொல்லுறானுங்க! இங்க பிரண்ட் இருந்தாலும் உன்னை மாதிரி பெஸ்ட் பிரண்ட் யாரும் இல்லடி சம்மு! படிச்சு படிச்சு மண்ட காஞ்சு போற டைம்ல உன் குரல கேட்டா எனக்கு ஆறுதலா இருக்கும். நீ என்னன்னா வாரத்துக்கு ஒரு தடவை அதுவும் பத்தே நிமிஷம் தான் பேசற! அது பத்தவே இல்லைடி! சொன்னா ஏன்டி புரிஞ்சுக்க மாட்டுற! எனக்குத் தெரியாது! அடுத்த தடவை வரப்போ நான் வாங்கிட்டு வருவேன், மறுக்காம எடுத்துக்கனும்”

“முடியாது”

“சம்மு!”

“உங்கம்மா பணத்துல எனக்கு எதுவும் வேணாடா!”

“என்னடி இப்படி சொல்லிட்ட!”

“அப்போ சம்மு ஒன்னும் தெரியாத பச்சப்புள்ள, நீ எது குடுத்தாலும் வாங்கிக்கிட்டேன். இப்போ நாலு பேர் கூட பழகறேன்! கொஞ்சமா உலக அனுபவம் தெரியுது! நீயே அம்மா காசுல படிக்கற, அதுல எனக்கு வீண் செலவு பண்ணறது ரொம்ப உறுத்தலா இருக்குடா கதிரு. சொன்னா கேளு, வேணா! சரி, மணியாகுது! போனை வைக்கறேன்டா கதிரு. பாய்!”

“ஐ மிஸ் யூ சம்மு” உள்ளிருந்து உணர்ந்து சொன்னான் கதிர்.

“நானும்தான்” அவசர கதியில் சொல்லி போனை வைத்திருந்தாள் சண்மு.

அடுத்த முறை லீவுக்கு வந்தப்போது செல்போன் வாங்கி வந்திருந்தான் கதிர். இவள் முறைக்கவும்,

“என் சொந்தக் காசுல வாங்கனேன் சம்மு! கை வலிக்க விடிய விடிய முழிச்சு பல பேருக்கு அசைண்ட்மேண்ட் எழுதி குடுத்தக் காசு! நான் உழைச்சக் காசுடி, ப்ளீஸ் எடுத்துக்கோ!” என கொடுத்தான்.

பேசிக் மாடல் போன் அது! போன் வந்தால் ஊருக்கே கேட்கும் அளவுக்கு சத்தம் போடும் போன் அது! முகம் பூரிக்க அதை வாங்கி, தொட்டுத் தடவிப் பார்த்தாள் சண்மு.

“தேங்க்ஸ்டா கதிரு”

“உதைப்பேன்டி தேங்க்ஸ் சொன்னா! மூனு மாசத்துக்கு ஒரு தடவை ஷேர்ட், டீ சர்ட்னு எடுத்து அனுப்பறியே எனக்கு, அதுக்குலாம் நான் என்ன சொல்லறது?”

“படிக்கற பையன் டிப்டாப்பா இருக்கனும்ல! நான் சம்பாதிக்கறேன், அனுப்பறேன்! நீ சம்பாரிச்சா எனக்கு எடுத்துக் குடுக்க மாட்டியா, அப்படித்தான்!” என சிரித்தாள் சண்மு.

“நான் சம்பாரிச்சா, எல்லாமே உனக்குத்தான்டி குடுப்பேன்!” சீரியசாக சொன்னான் கதிர்.

“ஹ்கும்! உங்கம்மாவும் உன் பொண்டாட்டியும் சேர்ந்து வந்து என்னை மொத்தறதுக்கா! போவியா!” என கிண்டலடித்தாள் சண்மு.

எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இருவரின் வாழ்க்கையும் சுமூகமாக சென்று கொண்டிருந்தது. கதிர் டிகிரி முடித்து, முதல் முறை சிவில் எக்சாம் எழுதி அதில் தோல்வியும் அடைந்திருந்தான்.

சோக கீதம் வாசித்தவனை இவள் தான் தேற்றி இன்னொரு முறை எடுக்க வைத்திருந்தாள். இரண்டாவது முறை இன்னும் கடுமையாக உழைத்து பரிட்சை எழுதினான் கதிர்வேலன்.

லட்சியத்தில் கண்ணும் கருத்துமாக இருந்தாலும், வருடம் ஏற ஏற அவனின் காதலும் வேர் விட்டு கப்பும் கிளையுமாக செழித்து வளர்ந்து நிற்கவே செய்தது.

இங்கு கண்ணனும் பள்ளி படிப்பு முடிந்து அரியலூரில் ஒரு காலேஜில் படிக்க ஆரம்பித்திருந்தான். அந்த நேரம் தான் சண்முவின் வாழ்க்கையில் யாரும் எதிர்ப்பார்க்காத ஒரு சம்பவம் நடந்தேறியது. அந்த சம்பவம் மீனாட்சியின் உயிரையே உலுக்கி, மகளுக்கு சீக்கிரமே கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என முடிவெடுக்க வைத்தது.

இன்று

“உங்கம்மா கிட்ட கூட சேர்க்க மாட்டாங்கன்னு அன்னிக்குப் பேசுன பேச்சுலயே தெரிஞ்சு போச்சு! ஆனா எங்கம்மா கூட இப்படி ஒரேடியா முகத்தத் திருப்பிக்குவாங்கன்னு நான் நினைக்கவே இல்லை! இப்ப என்ன செய்யறது?”

“என்னமோ செய்! அதை கொஞ்சம் சீக்கிரம் செய்! அக்கடானு ஒண்டிக்க ஒரு வீடு இருந்துச்சு! அதையும் இல்லாம பண்ணிட்டல்ல எனக்கு!”

“சென்னைல என்னோட குவார்டர்ஸ்லயே இருந்துருக்கலாம்டி! ஆனா கடம்பூவனம் திறப்பு விழா வருது! உன் செடி கொடிங்க வேற மம்மிய காணோமேன்னு வாடி போயிருக்கும்னு தான் மறுபடி இங்க வந்தேன்! உனக்காகத்தான் வந்தேன்!”

அடிக்கும் வெயிலைக் கூட பொருட்படுத்தாமல் இருவரும் காரின் வெளியே நின்றபடி வாதாடிக் கொண்டிருந்தனர்.

“எனக்காக எனக்காகன்னு காதுல பூ சுத்தாத நீ! யாரு எனக்கு தாலி கட்ட சொன்னா, இப்போ பப்பரப்பான்னு நடு ரோட்டுல நிக்க சொன்னா! என்னோட கடை திறப்பு விழாவ எப்படி நடத்தனும்னு எனக்குத் தெரியும்! நீ இப்படியே கிளம்பி உன் குவார்ட்ரஸ்க்குப் போயி, குவார்ட்டர் அடிச்சிட்டு குப்புறப் படு, போ!” என எரிந்து விழுந்தாள் சண்மு.

“முடியாது! என் சம்மு இருக்கற இடம் தான் இந்தக் கதிருக்கு திருப்பரங்குன்றம்”

“என்ன உளருற?”

“ராமன் இருக்கற இடம் தான் சீதைக்கு அயோத்தி மாதிரி, நீ இருக்கற இடம் தான் இந்த கதிர்வேலனுக்கு திருப்பரங்குன்றம், பழனி, திருச்செந்தூர், திருத்தணி…”

“போதும் போதும் நிறுத்து! சத்தியமா முடியல!”

“இன்னும் ரெண்டு இடத்தை சொல்லலடி!”

“செய்யறத எல்லாம் செஞ்சிட்டு எப்படிடா உன்னால இப்படி ஜோக்கடிக்க முடியுது?”

“ஜோக்கு, சிரிப்புலாம் ரொம்ப நாளா மறந்து, மறைஞ்சிப் போய் இருந்தது. இப்போ நீ பக்கத்துல இருக்கவும் தானாவே வெளி வருது!”

பரமுவின் தயவால் இவர்கள் விஷயம் ஏற்கனவே ஊரில் பரவி இருந்தது. ஆகவே கதிரின் வீட்டு வெளியே நின்றிருந்த இருவரையும் பார்க்கவென ஒவ்வொருவராக வர ஆரம்பித்தார்கள். கூட்டத்தில் இருந்தவர்கள்,

“எனக்கு அப்பவே தெரியும் இதுங்க ரெண்டும் கட்டிக்குங்கன்னு!”

“திரும்பி வந்த சில மாசத்துலயே, மறுபடி பழைய ஆள கப்புன்னு புடிச்சு கல்யாணமும் முடிச்சுட்டாளே!”

“காலுல மட்டும் அடி இல்லையோ! படாத இடத்துல பட்டு குறையாகிருச்சோ! இப்படி ரெண்டாந்தாரமா இவளுக்கு வாழ்க்கைப்பட்டிருக்கானே இந்தக் கதிரு!”

என இவர்கள் இருவர் காது படவே முணுமுணுத்தார்கள்.

அவர்கள் பேச்சைக் கேட்டு சண்மு கோபத்துடன் அவனை முறைக்க,

“சீச்சீ! அந்தக் கவலையெல்லாம் உனக்கு வேணாம்டி சம்மு! எல்லா பார்ட்ஸும் பெர்பெக்டா வேலை செய்யுது எனக்கு!” என அவசரமாக சொன்னான் கதிர்.

“உன் தலை!” என வெடித்தவளுக்கு கண்கள் இரண்டும் கலங்கி சிவந்தது.

“அதுவும் நல்லாத்தான் வேலை செய்யுது. அப்பப்போ உன்னைப் பார்த்தா மட்டும் லேசா கிறுகிறுத்துப் போயிருது. தட்ஸ் ஆல்!” அவள் கைப்பற்றி அழுத்தி ஜோக்கடித்து அவளின் மனம் படும் பாட்டிற்கு மருந்திட முயன்றான்.

வீட்டுக்குள் வர வேண்டாமென கத்தி விட்டு உள்ளேயே பார்வதி அமர்ந்திருக்க, பரமு அப்பொழுதுதான் தாஸ்மாக்கில் இருந்து வந்திருந்தார்.

“என்னா கூட்டம் இங்க! கெழ்ம்பு, கெழ்ம்பு” என தோளில் இருந்த துண்டை சுழற்றி கூட்டத்தைக் கலைத்தவர்,

“பாழு உள்ளாற வுடழியா லாஜா?” என கேட்டார்.

ஆமென மகன் தலையாட்ட,

“இது என் வூடு! என் மம்மவளக்கு இங்க எடம் இல்லேன்னு யாழு சொன்னா?” என சவுண்டு விட ஆரம்பித்தார் அவர்.

பார்வதி வேகமாக வெளியே வந்து,

“என்னா சத்தம்? இல்ல என்னா சத்தம்ங்கறேன்? அப்படியே பாசம் பொத்துக்கிட்டு வந்தா, இந்த லாஜா லாஜாத்திக்கூட இந்த கூஜாவும் சேர்ந்து வெளிய போகலாம்” என சத்தம் போட்டார்.

“இல்ல பாழும்மா! பாவம்ல நம்ம புள்ளீங்கோ!”

“அவதான் வேணும்னு கட்டிக்கத் தெரிஞ்சவனுக்கு, வச்சி வாழவும் தெரியும்! கிளிக்கு ரெக்கை முளைச்சிருச்சு! இனி எப்படியோ பறந்து போன்னு விட்டுடனும்! நான் விட்டுட்டேன்! நீயும் விட்டுட்டு உள்ளாற வா! இல்லைனா கதவ மூஞ்சி மேலயே சாத்திடுவேன்”

“ஜாத்திறாதே பாழு! நீ போ, நான் வழேன்”

“அம்மா! நான் சொல்லறத..” என ஆரம்பித்த மகனை பேசவிடாமல் முறைத்தபடியே அவர் உள்ளே போய்விட்டார்.

மகனை தனியே தள்ளிக் கொண்டு போன பரமு,

“கதிழு, என் பொண்டாட்டி வச்சது தான் இங்க ஜட்டம்! அட்சாலும் புட்சாலும் பாழு இச் மை வைப்! அவ போன்னு ஜொன்ன நீ உன் பொண்டாட்டிய கூட்டிட்டு போய்த்தான் ஆவோனும்! ஜீக்கிரம் கெளம்பு” என சத்தமாக சொல்லி, பின் குரலை தழைத்து

“தனியா இழ்ந்தா தான் நம்ப புர்ஷன், நம்ப வாழ்க்கைன்னு மம்மவளுக்கு ஒரு பிடிப்பு வழும்டா மவனே. அதனால கொஞ்ச நாள்க்கு தன்யாவே இருங்க” என மென்குரலில் சொன்னார்.

“எம்மா மம்மவளே உன் புர்ஷன் கூட கெளம்பு! அவங்க அவங்க வாழ்க்கையே அவங்க அவங்க பாழுங்கோ! நல்லா வாழுங்கோ!” என சண்முவைப் பார்த்தும் சொன்னார்.

“மண மகளே மண மகளே 
வாழும் காலம் ஜூழும் மங்களமே  
குணா மகளே குழாமகளே 
பாழும் தேனும் நாழும் பொங்கிடுமே
கொத்தம் கொறை இல்லா ஒரு கொங்கு மணிச்சழமே
மஞ்சள் வளமுடனே என்றும் வாழோணும் வாழோணுமே”

என பாடிக்கொண்டே தள்ளாடியபடி வீட்டின் உள்ளே நுழைந்து கதவை சாத்திக் கொண்டார் பரமு.

ஏற்கனவே மீனாட்சியின் வீட்டுக்குப் போய் இவர்கள் நிற்க, வாசலிலேயே இவளது துணி மணி பெட்டியைக் கொண்டு வந்து வைத்து ஒரு வார்த்தை பேசாமல் கதவை மூடி இருந்தார் அவர்.

அதற்கே கோபமாக இருந்தவள், இங்கு நடந்த அவமானத்தில் இன்னும் முகம் சிவக்க நின்றிருந்தாள்.

“வா சம்மு போகலாம்! ஜெயங்கொண்டம் போய் லாட்ஜ் எடுத்து தங்கிப்போம். முதல்ல கடம்பூவனத்தை செட்டில் பண்ணலாம். அப்புறம் நம்ம விஷயத்தைப் பார்க்கலாம்”

அவன் பேசியதை கேட்டது போல கூட காட்டிக் கொள்ளாமல், காரில் போய் அமர்ந்துக் கொண்டாள். இவன் சுற்றி வந்து ஓட்டுனர் இருக்கையில் அமரும் முன்னே, பக்கத்தில் இன்னொரு கார் வந்து நின்றது.

யாரென இவன் பார்க்க, அதில் இருந்து ஒய்யாரமாய் இறங்கினான் பெருமாள். கதிர் பல்லைக் கடிக்க, சண்மு ஆத்திரத்தில் காரில் இருந்து இறங்கி வந்தாள்.

“என்னடா?” என இருவரும் ஒருசேர குரல் கொடுத்தனர்.

“வணக்கமுங்க! சிநேகமா இருந்த நீங்க ரெண்டு பேரும் தாலிய கட்டி சில்மிஷமா ஆகிட்டிங்களாமே! அதான் பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன்”

“அடேய் பெருமாளு!” என கதிர் அவன் மேல் பாய, சண்முவும் பெருமாளை தாக்க நெருங்கி இருந்தாள்.

“அப்பா” என இளங்குரலில் கதிர் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு பெருமாளின் சட்டையை விட்டான்.

பெருமாளின் காரில் இருந்து இரண்டு சின்ன வாண்டுகள் இறங்கி வந்தன.

கதிர் சட்டையை விட்டதும், தன் இரண்டு மகள்களையும் இரு பக்கமாக தூக்கிக் கொண்டான் பெருமாள்.

“ஒன்னும் இல்ல கண்ணு! அப்பாவும் அங்கிளும் அடிச்சு விளையாண்டோம். சின்ன புள்ளயிலே இருந்து நாங்க மூனு பேரும் அப்படித்தான் விளையாடிப்போம்” என சொல்லி மகள்களை சமாதானப்படுத்தினான்.

சண்முவும் கதிரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

இவர்கள் புறம் திரும்பிய பெருமாள்,

“நம்ம வீட்டுக்குப் போலாம் வாங்க” என அழைத்தான்.

இவர்கள் இருவருக்கும் இன்னும் அதிர்ச்சி.

“சண்முகவள்ளி! பாப்பா கூட காருக்குள்ள இருடா! அப்பா இப்ப வரேன்” என பிள்ளைகளை உள்ளே அமர வைத்தான்.

“புள்ள பேர கேட்டியாடி? சண்முகவள்ளியாம்!” பற்களை நறநறத்தான் கதிர்.

“புள்ளைக்கு ஏன்டா சண்முன்னு வர மாதிரி பேரு வச்சிருக்க?” என பக்கத்தில் வந்து நின்றவனை கடுப்பாக கேட்டான் கதிர்.

“ஆட்டோகிராப் சேரன் சொல்லிருக்காருடா, மொத காதலி பேர நமக்கு பொறக்கற புள்ளைக்கு வைக்கலாம்னு! ஆமா அப்படி சொன்னது ஆட்டோகிராப் சேரனா இல்ல அழகி பார்த்திபனா?”

“இப்ப ரொம்ப முக்கியம்டா அந்த சந்தேகம்!” என கதிர் கடிய

“நான் உன்னைக் காதலிக்கவே இல்லை, என் பேர ஏண்டா வச்ச?” என சண்மு குரலை உயர்த்தினாள்.

“என்னம்மா சம்மு! ஓன் சைட்னாலும் காதல் காதல்தான் , பீலிங் பீலிங்தான்மா” என விளக்கம் வேறு கொடுத்தான் பெருமாள்.

இவர்கள் இருவரும் அவனை முறைக்க,

“என்னா பாசமா லுக்கு வேண்டி கிடக்கு? அதெல்லாம் வீட்டுல போய் சாப்பிட்டுகிட்டே பார்க்கலாம் வாங்க! பார்க்கப் போனா என்னை கோயில் கட்டி கும்புடனும் நீங்க ரெண்டு பேரும்” என அசால்ட்டாக சொன்னான் பெருமாள்.

“எதுக்குடா? எங்கள விடாது கருப்பு மாதிரி டார்ச்சர் பண்ணதுக்கா?” கதிர் ஆத்திரத்துடன் கேட்டான்.

ஆனாலும் உள் மனம் பெருமாள் சொன்ன கூற்றை ஒத்துக் கொண்டது! சண்முவுக்கு லவ் லெட்டரை பெருமாள் கொடுக்காமல் இருந்திருந்தால், தன் தோழியை வேறு கோணத்தில் பார்த்திருப்பானா என்பது சந்தேகம்தான்.

“பின்னே, நான் சம்முவ வச்சிக்கறேன்னு பயம் காட்ட, இவ உன் கிட்ட பொலம்ப, என் சம்முவுக்கு இந்த நிலைமையான்னு நீ கலங்க, இன்னும் எவன்லாம் குறுக்க வருவானோன்னு பயந்து தானே பட்டுன்னு தாலிய கட்டுன! இல்லைன்னா இன்னும் தள்ளி நின்னு உருகி உருகி தானே பார்த்துட்டு நின்னுருப்ப!”

பெருமாள் இப்படி கேட்டான் என சண்மு கலங்கிய தினத்தில் இருந்தே கதிருக்கு உள்ளுக்குள் ஒரே யோசனைதான். பெருமாள் மட்டும் ஆண்பிள்ளை இல்லையே இந்த ஊரில்! இன்னும் எத்தனைப் பேர் இந்த எண்ணத்தோடு அவளை நெருங்குவார்களோ! எவ்வளவு நாள் இதனை சண்மு தாங்குவாளோ என கலங்கியபடியே இருந்தவன் தான், கேப் கிடைக்கவும் தாலியைக் கட்டிவிட்டான். அவன் கட்டிய தாலி தீய எண்ணம் கொண்ட ஆண்களுக்கு வேலியல்லவா!

சண்மு இன்னும் முறைத்தப்படி நிற்க, அவளைப் பார்த்து எல்லாப் பல்லையும் காட்டினான் பெருமாள்.

“என்னமோ சின்ன வயசுல இருந்தே உன் மேல ஒரு ஆசை, பாசம்! அப்போ எப்படி என்னைப் பார்க்க வைக்கறதுன்னு தெரியாம குரங்கு சேட்டைலாம் பண்ணியிருக்கேன். அதனாலயோ என்னவோ உனக்கு என்னைப் புடிக்காமலே போயிருச்சு! அப்புறம் போக போக இந்த ஐயாவுக்கும் உன் மேல தெய்வீக காதல்னு புரிஞ்சுக்கிட்டேன்! எப்படின்னு கேக்கறியா? பாம்பின் கால் பாம்பறியுமே! உன்னை சைட்டடிக்க நான் வரப்பலாம் தூரத்துல நின்னு இவரும் சைட்டடிச்சுட்டு இருப்பாரு! சரி நம்மலதான் பிடிக்காது, இவன் கூடவாச்சும் சேர்வன்னு பார்த்தா வேற ஒருத்தன கட்டிக்கிட்டுப் போயிட்ட! அப்படியாச்சும் கண் காணாம நல்ல இருப்பன்னு பார்த்தா, மறுபடி திரும்பி வந்துட்ட! உசுரா காதலிச்சவ வாழ்க்கையத் தொலைச்சிட்டு வந்தா எந்த ஆம்பளைக்கு மனசு தாங்கும் சொல்லு! என்னை மாதிரி தானே இவனுக்கும் இருக்கும். அதான் அன்னிக்கு உன்னை வச்சிக்கறேன்னு உசுப்பேத்தி விட்டேன்! நாரதர் கலகம் நன்மையில முடியும்கற மாதிரி கல்யாணத்துல முடிஞ்சிருச்சு! கல்யாண விருந்து நம்ம வீட்டுல தான். அப்படியே தங்கற இடம் கிடைக்கற வரைக்கும் என் வீட்டுலயே தங்கிக்குங்க” என மீண்டும் வற்புறுத்தி அழைத்தான் பெருமாள்.

காரில் இருந்து இறங்கிய குட்டி சண்மு,

“வாங்க பெரியம்மா! நம்ம வீட்டுக்குப் போகலாம்” என அழைத்தாள்.

“பெரியம்மாவா?” என சண்மு வாய் பிளக்க,

“பின்ன! முறை அப்படித்தானே வரும்!” என புன்னகைத்தான் பெருமாள்.

“அடங்கமாட்டியாடா நீ!” என கதிர் பல்லைக் கடித்தான்.

“யாருக்கும் அடங்க மாட்டான் இந்த பெருமாளு!” என பெருங்குரல் எடுத்து சிரித்தவன், அவர்கள் இருவரையும் தங்கள் வீட்டுக்கு வலுக்கட்டாயமாக அழைத்துப் போய் உணவிட்டே அனுப்பினான்.

சில நாட்கள் லாட்ஜில் இருந்தவர்கள், கடம்பூவனத்தின் கட்டிட வேலை முடிய, சண்மு ஓய்வெடுக்க கட்டி இருந்த சின்ன அறையையே தங்கள் ஜாகையாக மாற்றிக் கொண்டனர்.

குட்டி அறை, ஒற்றைக் கட்டில், செடி கொடி சூழ சில்லென காற்று, ஆணாய் உணர ஆரம்பித்த நாட்கள் முதல் உடலையும் உள்ளத்தையும் உலுக்கிய அழகிய சம்மு என மூச்சு முட்டிப் போனது கதிர்வேலனுக்கு!!!

கடமை தவறா கட்டுமஸ்தான ஏசிபி….

இனி தினம் உங்களுக்கு பிம்பிலிக்கிபிலாப்பி!!!!!

(உயிர் போகும்…)