UUP—EPI 20

அத்தியாயம் 20

அஞ்சியோடென்ஷின் (angiotensin) எனும் இந்த ஹார்மோன் மொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் உதவுவது மட்டுமில்லாது முக்கியமாக ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. இந்த ஹார்மோன் தேவையை விட அதிகமாகும் போது ஹார்ட் பெயிலியர் வர வாய்ப்பிருக்கிறது.

 

இன்று

“என்னத்த ஏன் சொல்லல?”

“சம்மு! பீ சீரியஸ்! இதுதான் உனக்கு ஃபர்ஸ்ட் டைம்முனு ஏன் சொல்லல? நான் வேற பட்டினி கிடந்தவன் பிரியாணிய பார்த்ததும் பாயற மாதிரி உன் மேல பாஞ்சிட்டேன்! சாரிடி சம்மு! ரொம்ப வலிக்குதாம்மா?”

“வலிக்குதுன்னு சொன்னா மட்டும் விட்டுருப்பியா?”

“அது வந்து..ஒரு ப்ளோல போறப்போ ரொம்பவே கஸ்டம்தான்! ஆனாலும் ஸ்டாப் பண்ணிருப்பேன்! நிதானமா பொறுமையா நடந்துருப்பேன்! ஏன்டி சொல்லல? ஏன்?”

“எப்படிடா சொல்லட்டும்? கல்யாணம் ஆனதுல இருந்து என் புருஷன் என்னைத் தொடல! எங்களுக்குள்ள ஒன்னும் நடக்கல! எப்படி போனேனோ அதே மாதிரிதான் திரும்பி வந்துருக்கேன்னு எப்படி சொல்ல? முடியல கதிரு! சொல்ல முடியல! வாய் வரைக்கும் வந்துரும் சொல்லலாம்னு! ஆனா முடியல! இதெல்லாம் வெளிய சொல்லறதுக்கு எனக்கு எவ்வளவு அவமானமா இருக்கும்னு உனக்குப் புரியலயா? புள்ள எங்கடின்னு எங்கம்மா, என் மாமியாரு எல்லாரும் கேக்கறப்போ எனக்கு எப்படி இருக்கும் தெரியுமா? எங்களுக்குள்ள ஒரு மண்ணும் நடக்கல புள்ள எங்கிருந்து வரும்னு கத்திக் கேக்கனும் மாதிரி இருக்கும்! ஆனா என்னால முடிஞ்சதே இல்லைடா! தொண்டை அப்படியே அடைச்சிக்கும்” என சொல்லியவள் அவன் மார்பில் சாய்ந்து கண்ணீர் உகுத்தாள்.

தன் நெஞ்சில் சாய்ந்து ஆறுதல் தேடுபவளை ஆதரவாக அணைத்துக் கொண்டான் கதிர். மெல்ல முதுகை வருடிக் கொடுத்தவன்,

“நீ திரும்பி வந்தப்போவே அவன் சரியில்லன்னு எனக்குப் புரிஞ்சிருச்சுடி சம்மு. எந்த சூழ்நிலை வந்தாலும் அனுசரிச்சு, அம்மா, தம்பி, குடும்பம்னு உயிர விடறவ நீ! கல்யாணம் ஆனதும் நான் கூப்பிட்டப்போ கூட என் கூட வராம தாலிதான் முக்கியம்னு கையை அறுத்துக்கிட்டவ நீ! உன்னாலயே அங்க வாழ முடியாம விவாகரத்து வாங்கிட்டு வந்துட்டன்னு கேள்விப் பட்டப்போ நான் எப்படி துடிச்சுப் போயிட்டேன் தெரியுமா? என் சம்மு இந்த முடிவு எடுத்துருக்கான்னா, என்ன விதமான கஸ்டங்கள அனுபவிச்சாளோன்னு அதே நெனைப்புத்தான் எனக்கு” என சொன்னான் கதிர்.

அழுகை விசும்பலாக மாற சலுகையாக அவனை அணைத்துக் கொண்டு கன்னத்தை அவன் தோளில் தேய்த்தாள் சண்மு. அவளை விலக்கி கண்ணீரைத் துடைத்து மீண்டும் தன்னோடு இறுக்கிக் கொண்டான் கதிர்.

“நீ திரும்பி வந்ததும் உன் மேல எனக்கு செம்ம கோபம். நான் கூப்பிட்டப்போவே வந்துருந்தா இப்படி ஒரு நிலமை உனக்கு வந்துருக்குமான்னு மனசு அடிச்சிக்கும்! அதான் சில சமயம் ஹார்ஷா பேசிருக்கேன்! அதுக்கப்புறம் என் சம்முவையா இப்படி பேசனேன்னு ஐயோன்னு ஆகிடும். மறுபடியும் உன்னைத் தேடி ஓடி வருவேன். கோபமா பேசனாலும், நக்கல் அடிச்சாலும், முகத்த கல்லு மாதிரி வச்சிருந்தாலும் உள்ளுக்குள்ள இருக்கற சோகத்தை உன் கண்ணு படம் போட்டு காட்டுச்சுடி! எத்தனை வருஷமா உன்னைப் பார்க்கறேன்! உன்னோட ஒவ்வொரு அசைவும் எனக்கு அத்துப்படி சம்மு!”

“அப்புறம் ஏன்டா என் கிட்ட ஒன்னுமே கேக்கல நீ?”

“என்னால கேட்க முடியலடி! நீயா சொல்லுவ! என் கிட்ட ஆறுதல தேடி வருவேனுன்னு எவ்வளவு எதிர்ப்பார்த்தேன் தெரியுமா? நீ என்னை ஒதுக்கித் தள்ளி வைக்கறதுல தான் குறியா இருந்த! நான் துருவி கேட்க போய், ஆறிட்டு வர உன்னோட மனப்புண்ண இன்னும் குத்திக் கிழிச்சிருவோமோன்னு பயம் ஒரு பக்கம். ஆனா அந்த டைம்ல ஒன்னு மட்டும் நல்லா புரிஞ்சது. இந்த நிலமைல நீ இருக்கறப்போ என்னால இன்னொருத்திய சத்தியமா கல்யாணம் செஞ்சு சந்தோஷமா வாழ முடியாதுன்னு. ஒன்னு உன்னை என் மனைவியா ஆக்கிக்கனும், இல்ல அப்படியே காலம் பூரா உன்னப் பார்த்துகிட்டே உனக்குப் பாதுகாப்பா இருந்துடனும்! அது மட்டும்தான் என் மனசுல ஓடிகிட்டே இருந்துச்சு”

ஆவேசமாக அவனை அணைத்துக் கொண்டவள்,

“காதல், கல்யாணம், மண்ணாங்கட்டி எதுவும் வேணா! இப்படியே தனியாளாவே இருந்துடலாம்னு நினைச்சேன்டா கதிரு! ஆனா..ஆனா உன் அன்புக்கு முன்னால நான் தோத்துப் போயிட்டேன்! நானும் ரத்தமும் சதையும் உள்ள சாதாரண மனுஷிதானே! நீ என்னை ராணி மாதிரி கவனிக்க கவனிக்க, எனக்கு கிடைக்கவே கிடைக்காதுன்னு நெனைச்ச பாசம் வேணும், இப்படி இறுகிய அணைப்பு வேணும், பாதுகாப்பு வேணும், அக்கறை வேணும், அணுசரனை வேணும், ஆதரவு வேணும், உன்னை மாதிரியே என்னை தாங்கற நமக்கே நமக்குன்னு குழந்தைங்க வேணும்னு மனசு எதிர்ப்பார்க்கத் தொடங்கிருச்சுடா கதிரு” என விசும்பலுக்கிடையே சொன்னாள் சண்மு.

“நான் இருக்கேன் சம்மு உனக்கு! நீ கேட்டதை எல்லாம் காதலோட உனக்கு அள்ளித் தர நான் இருக்கேன்! என் சம்மு எவ்வளவு தைரியசாலி! இப்படி பொசுக்கு பொசுக்குன்னு அழலாமா?” என மெல்ல தேற்றினான் சண்முவை.

“எவ்ளோ தைரியசாலியா இருந்தாலும், அடி மேல அடி விழுந்தா மனசு நஞ்சி போய் தைரியமெல்லாம் பறந்து காணா போயிடும் கதிரு! நான் வசதியா வாழனும், வளமா வாழனும்னு நினைச்சு எங்கம்மா இந்தக் கல்யாணத்த பண்ணி வச்சாங்க! ஆனா சந்தோஷமா வாழுவேனான்னு நினைக்கத் தவறிட்டாங்க. அந்த டைம்ல நான் இருந்த மனநிலைல என்னால சுயமா சிந்திக்கக் கூட முடியலடா! அழுதே என்னைக் கரைச்சிட்டாங்க. என் தம்பி, பேசியே என்னைக் கவுத்துட்டான்!”

கண்ணைத் துடைத்துக் கொண்டவள், கதிரை பார்த்து மெல்லிய புன்னகை ஒன்றை தந்தாள்.

“எல்லாம் முடிஞ்சதுன்னு ஓஞ்சிப் போனப்போ இங்கதான் வரனும்னு தேணுச்சு! உன்னைப் பார்க்கனும், உன்னைப் பார்த்துட்டே அப்படியே இருந்துடனும்னு தான் தோணுச்சு. அது காதல்னு நான் சொல்லமாட்டேன்டா கதிரு! என் நண்பன் இருக்கான். அவன பார்த்துட்டா வாழறதுக்கு திடம் வந்திடும், எதையும் சமாளிச்சிடலாம், அவ்ளோதான் என் மனசுல ஓடுச்சு! உனக்கு கல்யாணம்னு தெரிஞ்சப்போ சத்தியமா சந்தோஷப்பட்டேன்டா கதிரு! என் நண்பனும் குடும்பஸ்தன் ஆகப்போறான்னு பூரிச்சுப் போயிட்டேன். நீ எப்படி என் கண்ணுல கவலையப் பார்த்தயோ அதே மாதிரி நான் உன் கண்ணுல கடலளவு காதல பார்த்தேன். கல்யாணத்த வச்சிக்கிட்டு இவன் என்னடா இப்படி இருக்கான்னு பதட்டமா இருந்துச்சு. அதான் நட்பா கூட கிட்ட நெருங்க விடாம கடுப்பாவே பேசனேன்! ஆனா நீ எங்கடா சான்ஸ் கிடைக்கும்னு கிடைச்ச கேப்லலாம் கிடா வெட்டிட்ட”

“ஏய் நான் என்னடி செஞ்சேன்?” என கேட்டவன் அவள் கழுத்தடியில் முகம் புதைத்து ஆழ மூச்சிழுத்தான்.

“எட்டப் போடா! கூசுது” என அவனைத் தள்ளி விட்டவள்,

“என்ன செஞ்சியா? படக்கு படக்குன்னு கட்டிப் புடிக்கல?” என கோபமாக கேட்டாள்.

“வேற என்ன செய்யட்டும்? ஏசிபி சார்னு கூப்டு கூப்டு கடுப்பேத்துன! அதான் நான் ஏசிபி மட்டும் இல்ல, உன் பழைய நண்பன், இனி புதிய புருஷன்னு டெமோ காட்டுனேன்” என சொன்னவனை தலையணையால் மொத்தி எடுத்தாள் சண்மு.

மொத்த அடியையும் வாங்கிக் கொண்டவன்,

“சம்மு!” என ஏக்கமாய் அழைத்தான்.

அவன் குரலை வைத்தே என்ன கேட்க விளைகிறான் என புரிந்துக் கொண்டவள்,

“சொல்லறேன்டா! எல்லாத்தையும் சொல்லறேன்! உன் கிட்ட சொல்லி ஆறுதல் தேடாம யார் கிட்ட தேடப் போறேன்! ஒவ்வொரு தடவையும் சொல்லிடலாமான்னு தோணும்! ஆனா முடியல. அதுவே எனக்கு பாதி ஸ்ட்ரெஸ்டா! உன் கிட்ட நேர்மையா இல்லையேன்னு மனசு வேற உறுத்த ஆரம்பிச்சிருச்சு!! ஆனா நான் பட்ட அவமானத்த எப்படி சொல்ல! உன்னால நான் பட்ட அவமானத்த எப்படி சொல்ல கதிரு?” என கேட்டாள்.

“என்னது? என்னாலயா?”

அதிர்ந்துப் போனான் கதிர்வேலன்.

அன்று

 

திருமண இரவு என்பது மற்றவருக்கு எப்படி இருக்குமோ, சண்முவுக்கு மனம் மிக இறுக்கமாக இருந்தது. கலங்கிப் போய் திரும்பிப் பார்த்துக் கொண்டு சென்ற கதிரே கண் முன் வந்து நின்றான். நண்பனின் நெஞ்சில் காதல் எனும் நஞ்சு எப்பொழுது கலந்தது என புரியாமலே மறுகிப் போய் நின்றாள் மாது.

ப்ரதாப்பின் அக்கா முறை பெண்கள் இவளுக்கு சீவி சிங்காரித்து விட்டார்கள். எண்ணி எண்ணி நான்கு வார்த்தைகள் அவளுடன் பேசினார்கள். திடீரென மருமகளாகி வந்தவள் என்பதால் சிறிது ஒதுக்கம் இருக்கத்தான் செய்தது அவர்களிடம். கையில் என்ன காயம் என கேட்க, பாத்ரூம் கதவின் ஆணி கீறி விட்டது என சொல்லி சமாளித்தார் மீனாட்சி.

கொஞ்சமாக கிடைத்த தனிமையில்,

“சண்மு! யாருக்கும் கிடைக்காத வாழ்க்கை உனக்கு கிடைச்சிருக்குடி! அந்த வீணாப்போனவன் உளறனத எல்லாம் நினைச்சு உன் வாழ்க்கையப் பாழாக்கிடாதடி! இனி மாப்பிள்ளை தான் உனக்கு எல்லாம்” என அறிவுரை கொடுத்தார் மீனாட்சி.

அமைதியாக தன் அம்மாவை ஏறிட்டவள்,

“அந்த வீணாப்போனவன் தான்மா உன் பொண்ணுக்கு சாப்பாடு போட்டு வளர்த்தான். அந்த வீணாப்போனவன் தான் உன் பொண்ணுக்கு பாதுகாப்பா இருந்தான். அதே வீணாப்போனவன் தான் உன் மகன் காலேஜ்கு அட்மிஷனுக்கு பணம் பத்தாம திண்டாடனப்போ தன்னோட சங்கிலிய வித்து பணம் கட்டனான். நன்றி கெட்டவங்களுக்கு பாத்து பாத்து செஞ்சான் பாரு, அவன் வீணாப்போனவன் தான்மா!” என சாட்டையாக வார்த்தைகளை வீசினாள்.

“அதெல்லாம் சும்மாவா செஞ்சிருக்கான்? இப்போத்தானே தெரியுது உன் மேல உள்ள ஆசையில செஞ்சிருக்கான்னு”

“ஆமாம்மா! ஆறு வயசுல என் மேல காதல் பொத்துக்கிச்சு, அதனால பலகாரம் குடுத்தான். ஏழு வயசுல ஆசை பிச்சிக்கிச்சு அதனால கைப்பிடிச்சு விளையாடினான். பத்து வயசுல பக்குன்னு பத்திக்கிச்சு அதானல ஸ்கூல் பாடம் சொல்லிக்குடுத்தான்! ஏன்மா ஏன்? இப்படிலாம் மனசாட்சி இல்லாம பேச உங்களுக்கு நா கூசல? விடும்மா! எனக்கு கல்யாணம் செஞ்சு வச்சிட்ட! இனி நான் இன்னொருத்தான் பொண்டாட்டி. அப்ப இருந்து இப்ப வரைக்கும் கதிரு எனக்கு நண்பன் தான். அதனால அட்வைஸ் பண்ணறேன்னு என் மனச குத்திக் கிழிக்காம போயிடு!”

ஒரு வார்த்தை கதிரைப் பற்றி பேச விடாமல் சண்டைக்கு வரும் மகளை இயலாமையுடன் பார்த்தார் மீனாட்சி. அந்த நேரம் ரூமுக்கு வந்த கண்ணன்,

“அம்மா! அக்காவுக்கு எந்த நேரத்துல எப்படி நடந்துக்கனும்னு தெரியும்! அவ குடும்பம் இனி ப்ரதாப் மாமாதான். அவரோட கௌரவம் இனி அக்கா கையில. அத கண்டிப்பா அக்கா காப்பாத்துவா! நீ வாம்மா, நாம ஊருக்குக் கிளம்பலாம். மாமா எல்லா ஏற்பாடும் செஞ்சிருக்காரு. இன்னும் ஒரு வாரத்துல ஊருல ஒரு வரவேற்பு வச்சிட்டு, சென்னைக்கு கிளம்பனும்னு சொல்லிருக்காரு. அந்த ஏற்பாடுலாம் பார்க்கனும்” என தாயைக் கிளப்பினான்.

வெளியேறும் முன்,

“இனிமே இது உன் குடும்பம் சண்மு. மாப்பிள்ளை மனசு கோணாம நல்லபடி நடந்துக்கடி! பத்திரமா இருடி!” என லேசாக கண் கலங்கினார் மீனாட்சி. கண்ணன் தன் தமக்கையை இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.

தனியாக தெரியாத இடத்தில் இவர்கள் விட்டு செல்ல, சண்முவுக்கும் கண்கள் கலங்கின. சரியென தலையை மட்டும் ஆட்டி விடைகொடுத்தாள் அவள்.

கட்டிலில் அமர்ந்து பதுமை போல தன் கணவனின் வருகைக்காக காத்திருந்தாள் சண்மு. அந்நிய ஆணுடன் தனியறையில் இருக்கப் போகிறோம் எனும் நினைவே பயம் தர, நெஞ்சம் மத்தளம் கொட்டியது. அவள் இருந்த மனநிலையில் நான்கைந்து தடவைத்தான் ப்ரதாப்பின் முகத்தை நிமிர்ந்து பார்த்திருந்தாள். அம்முகத்தை நினைவில் கொண்டு வந்து,

‘கதிர் சொன்னத, பேசனத எல்லாத்தையும் மறக்கனும். அவன் மனசுல என் மேல ஆசைய வளத்துக்கிட்டாலும், எனக்கு உயிர் தோழன் மட்டும்தான். அவன் நல்லா இருக்கனும்னா இனி இந்த நட்ப கூட நான் தொடரக் கூடாது. என்னை மறந்து அவனுக்குன்னு ஒரு வாழ்க்கைய அமைச்சிக்கனும்னா நான் விலகிப் போகனும். இனி இவர்தான் என் கணவர். இனி என் வாழ்க்கை இவரோடதான். வாழ்வோ சாவோ இனி ப்ரதாப் தான் எனக்கு எல்லாம். எத்தனையோ கல்யாணம் முன் பின் அறிமுகம் இல்லாதவங்கள இணைச்சு வைக்கறது இல்லையா! அவங்களாம் புருஷன ஏத்துக்கிட்டு புள்ள குட்டின்னு வாழலியா! நானும் அவர ஏத்துக்கனும்! வளைஞ்சி குடுத்து வாழனும்!’ என உருப்போட ஆரம்பித்தாள். காலியாக கிடந்த மனதில் கணவனை உட்கார வைக்க முயன்றுக் கொண்டிருந்த வேளையில் தான் கதவு மெதுவாக திறக்கப்பட்டது.

அழுத்தமான காலடிகளுடன் உள்ளே நுழைந்தான் ப்ரதாப். உடல் நடுங்குவது போல இருந்தாலும் மெல்ல எழுந்து நின்று அவனைப் பார்த்து புன்னகைக்க முயன்றாள் சண்மு.

அவள் அருகே வந்தவன், கைக்கட்டி அவளைப் பார்த்தப்படி நின்றிருந்தான். பின் கட்டிலில் அமர்ந்தவன்,

“சண்முகப்ரியா, மை ப்ரியா! உட்காரு ப்ளீஸ்” என தன் அருகே கட்டிலைத் தட்டிக் காட்டினான்.

மெல்ல அவன் காட்டிய இடத்தில் அமர்ந்தாள் சண்மு.

அவள் அமர்ந்ததும் எழுந்து கொண்டவன் கட்டிலின் அருகே இருந்த பால் சொம்பை எடுத்து வந்து அவளிடம் நீட்டினான்.

“குடி ப்ரியா! பேயறைஞ்ச மாதிரி ஓன்னு இருக்க. சொட்டு விடாம குடிச்சு முடிக்கனும். கமான், ட்ரீங்க்”

அவன் அழுத்தமான குரலில் மறுக்க முடியாமல், வாங்கி பருகினாள் சண்மு.

“குட் கேர்ள்!” என சொன்னவன் சொம்பை வாங்கி டேபிளில் வைத்தான். பின் அவள் முன்னே குறுக்கும் நெடுக்கும் நடந்தான்.

“என் பெயர் என்னன்னு உனக்கு தெரியுமா ப்ரியா?” என திடீரென கேட்டான்.

“ஹ்ம்ம் தெரியும்! ப்ரதாப்” என மெல்லிய குரலில் பதிலளித்தாள் இவள்.

“எவ்ளோ பொருத்தம் பார்த்தியா நம்ம பேருல? ப்ரதாப், ப்ரியா” என சொல்லி சிரித்தான்.

“கண்ணா உன் பேர் இதுன்னு சொன்னப்போ இந்த பெயர் பொருத்தம் தான் சட்டுன்னு எனக்கு தோணுச்சு! அப்புறம் உன் போட்டோ காட்டுனான்! அதுக்கு அப்புறம் இனி நீ தான் எல்லாம்னு தோணுச்சு” என சொல்லியவன், அவள் அருகே வந்து இரு பக்க தோள்களையும் பற்றினான்.

உடலில் மெல்லிய நடுக்கம் பரவ அவனை நிமிர்ந்துப் பார்த்தாள் சண்மு.

இவ்வளவு நேரம் சாதாரணமாக இருந்தவனின் கண்கள் இரண்டும் செக்க செவேலென சிவந்துப் போய் கிடந்தது.

“பேர்ல பொருத்ததப் பார்த்து சந்தோஷப்பட்ட இந்த முட்டாளுக்குத் தெரியல, மனசு பொருத்தம் இங்க இல்லவே இல்லைன்னு! ஹூ தெ ஹேல் இஸ் கதிர்? டெல் மீ டேம்மிட்!!!” என திடீரென குரல் உயர்த்திக் கத்தியவன், அவள் தோள்களைப் பிடித்து உலுக்கினான்.

“கண்ணா சொன்னான் எங்கக்கா பத்திரமாத்து தங்கம்னு. காதல், கருமாந்திரம்லாம் என்னன்னே தெரியாதுன்னு! ஆனா, ஆனா அந்த கதிருக்காக நம்ம கல்யாணத்தன்னிக்கே கையை வெட்டிக்கிட்டு நிக்கறியே, உன் மேல உசுரயே வச்சு இவ்ளோ போராடி கரம் புடிச்ச எனக்கு எப்படிடி இருக்கும்? சொல்லு எப்படி இருக்கும்?” என சண்முவைப் போட்டு உலுக்கியவன் ஒரு கட்டத்தில் ஓய்ந்து போய் மடிந்து தரையில் அமர்ந்தான்.

முகத்தை இரு கரத்தால் மூடிக் கொண்டவன்,

“என்னால முடியலடி! எவ்ளோ ஆசையா இந்த நாள எதிர்ப்பார்த்து காத்திருந்தேன்! ஆனா என்னால உன் முகத்தக் கூட பார்க்க முடியலடி இப்போ. உன்னைப் பார்த்தாலே அவன் தான் கண்ணு முன்னுக்கு வரான். உன்னைத் தடவே பயமா இருக்குடி! என்னை அவனா கற்பனை பண்ணிக்குவியோன்னு நெஞ்சு பதறி துடிக்குதுடி! எந்த ஆம்பளைக்கும் இந்த நிலைமை வரவே கூடாது ப்ரியா, வரவே கூடாது! ஓ காட்!” என கதறியவனை செய்வதறியாது பார்த்திருந்தாள் சண்மு.

அவன் உலுக்கிய உலுக்களில் உடம் பிய்ந்து போவது போல் வலிக்க, வாயில் வார்த்தையே வரவில்லை. இருந்தாலும் இது தான் பேச வேண்டிய நேரம் என முடிவெடுத்தவள் எச்சிலைக் கூட்டி விழுங்கி,

“ப்..ப்ரதாப்! கதிர் என்னோட” நண்பன் மட்டும்தான் என சொல்ல முயன்றாள்.

“யூ பிட்ச்! சொல்லாத உன் வாயால சொல்லாத! அவன் பேர சொல்லாத ப்ரியா! சொல்லாத!” என ஆக்ரோஷமாக கத்த ஆரம்பித்தான் ப்ரதாப்.

முகம் சிவந்துப் போய் காட்டுக் கத்தல் கத்தும் அவனைப் பார்த்து ஆடித்தான் போனாள் சண்மு. இவன் சத்தம் வெளியே வேறு கேட்டு விடுமோ என அஞ்சியவள், அவரசமாக எழுந்து அவன் அருகே வந்து அவன் தோளைப் பற்றினாள். அவள் கையைத் தள்ளிவிட்டவன்,

“டோண்ட் டச் மீ! டோண்ட் எவர் டேர் டு டச் மீ ப்ரியா! உன் தொடுகை பூப்போல இருக்கும்னு கற்பனை செஞ்சு வச்சிருந்தேன். இப்போ நீ தொடறப்போ அவன நெனச்சு என்னைத் தொடறியோன்னு நெருப்பு கங்குல சுட்ட மாதிரி தகிக்குது! வொய் ப்ரியா வொய்? ஏன் என் ப்ரியாவா இல்லாம போன? எதுக்கு அவனுக்காக கைய அறுத்துக்கிட்ட! வொய் வொய் வொய்?” என ஒவ்வொரு வொய்க்கும் தரையில் ஓங்கி ஓங்கி குத்தினான்.

அதன் பிறகு ஆங்கிலத்தில் விளாசு விளாசென்று விளாசி தள்ளினான். தமிழில் பேசும் போதே அவளால் தன்னிலை விளக்கம் கொடுக்க முடியவில்லை, ஆங்கிலத்தில் அதுவும் ஆஸ்திரேலியன் ஸ்லாங்கில் அவன் பேசியதில் சர்வமும் ஒடுங்கிப் போய் கட்டிலின் ஓர் ஓரத்தில் பயந்தப்படி அமர்ந்திருந்தாள் சண்மு.

பின் அமைதியானவன்,

“மன்னிச்சிரு ப்ரியா! சோ சாரி, ரொம்ப உணர்ச்சிவசப்பட்டுட்டேன்! ஐ காண்ட் ஹெல்ப் இட். நீ குடுத்த ஏமாற்றத்த என்னால தாங்க முடியல!” என அவன் சொல்ல,

“இல்ல ப்ரதாப்! கதிர் என் ப்ரேண்ட் மட்டும்தான். எனக்கும் அவனுக்கும் நட்ப தவிர வேற ஒன்னும் இல்ல!” என இவள் படபடவென ஒப்பித்தாள்.

அவளை ஆழ்ந்துப் பார்த்தவன்,

“என் பணத்த பார்த்ததும், என் அழக பார்த்ததும் அவன் வெறும் நண்பனா போய்ட்டான்ல ப்ரியா? நீ சொல்லறத நம்பி நான் உன்னைத் தொடனும், மனச கொன்னுப் புதச்சிட்டு மிருகம் மாதிரி உன் கூட கூடி குலாவனும்?” என கேட்டவன் கட்டிலில் ஒடுங்கிப் போய் அமர்ந்திருந்தவளை எலும்புகள் நொருங்கும் அளவுக்கு இழுத்து அணைத்தான்.

அவன் செயலில் கண்ணில் நீர் வழிய, அவன் பேசிய பேச்சில் அவமானம் பிடிங்கித் தின்ன, அணைப்பில் இருந்த்து வெளி வர போராடினாள் சண்மு.

“விடுங்க ப்ரதாப்! விடுங்க!”

அணைத்த வேகத்தில் அவளை விடுவித்தவன்,

“எப்படியெல்லாம் வாழனும்னு கனவு கண்டவன் ஆசையைக் இப்படி குலைச்சிட்டியேடி பாவி! இனி நானா மனசு மாறற வரைக்கும் என்னை மயக்கப் பார்க்காத! வெட்கம், மானம், ரோஷம் இருந்தா தள்ளி இரு! தயவு செஞ்சு தள்ளி இரு ப்ரியா! இதெல்லாம் மறக்க எனக்கு டைம் குடு. ப்ளிஸ் ப்ரியா” என கடைசியாக கை எடுத்துக் கும்பிட்டவன், அங்கிருந்த சோபாவில் தடாலென போய் விழுந்தான்.

‘டேய் கதிரு! உன்னை தோழனா நினைச்சுப் பழகனதுக்கு என் புருஷன் எனக்கு என்ன பட்டம் குடுத்துட்டான் பாத்தியா? பணத்துக்கு வந்த பரத்தைன்னு நேரிடையா சொல்லல! இன்ன பிற வார்த்தையில சொல்லிட்டான்டா! நான் என்னடா தப்பு பண்ணேன்? சொல்லுடா கதிரு! நான் என்ன தப்பு பண்ணேன்? இனிமே எங்களுக்குள்ள எதுனாச்சும் நடந்தாலும் என் மனசுல, ஐயோ இவரு நான் கதிர தான் மனசுக்குள்ள வச்சிருக்கேன்னு நினைச்சிப்பாறோன்னுலடா தோணும்! மனசு வலிக்குதுடா கதிரு! கேவலமா இருக்குடா கதிரு!’

தன் வாழ்க்கையை சிக்கலாக்கியனவனிடமே மனதால் முறையிட்டு அழுதாள் சண்மு.

தங்கள் ஊரில் வைத்த வரவேற்பில் மற்றவர்களுடன் பரமுவும் கலந்துக் கொண்டார். கவனமாக மம்மகளே எனும் அடைமொழியைத் தவிர்த்தவர்,

“ராஜாத்தி! நீ கேக்கலைனாலும் உன் மனசு நிம்மதிக்காக நான் சொல்லித்தான் ஆவேன்! கதிரு கெளம்பி போய்ட்டான்மா! மனச தேத்திக்கிட்டுப் போய்ட்டான்! இனி உன் வாழ்க்கையில வர மாட்டான். நீ எதைப்பத்தியும் கவலைப்படாம சந்தோஷமா இருடா ராஜாத்தி!” என தெளிவாக இருந்தவர் அவள் கன்னம் வழித்து வாழ்த்தினார். மகன் பட்ட பாட்டையோ, கண்ணில் இருந்து காணாமல் போன ஒளியையோ எதையும் அவர் சொல்லவில்லை. காலம் எல்லாவற்றையும் சீர் படுத்தும் என மனதைத் தேற்றிக் கொண்டவர், சண்மு நிம்மதியாக இருக்க வேண்டும் என தன்னால் ஆன பொய்களை சொல்லி அவளை அமைதிப்படுத்தினார்.

தன் நண்பன் ஓரளவு தேறிக்கொண்டான் என அறிந்தவள் உள்ளுக்குள் மகிழ்ந்துப் போனாள். இனி தன் வாழ்க்கையை நிம்மதியாக சீரமைக்க முயற்சிக்கலாம் என முடிவெடுத்தவள் ஒரு உறுதியுடன் தான் சென்னைக்கும் பின் சில மாதம் கழித்து ஆஸ்திரேலியாவுக்கும் பயணப்பட்டாள்.

ஆஸ்திரேலியா சண்முவுக்கு ஆதரவு அளித்ததா? இப்பொழுது அங்கே எரிந்து கொண்டிருக்கும் தீயைப் போல சுட்டு சுண்ணாம்பாக்கியதா?

(உயிர் போகும்…..)

(இந்த எபியில இன்று ஆரம்பத்துலயும் அன்று இறுதியிலயும் வருது. கதையோட்டத்துக்காக இப்படி வைக்க வேண்டியதா போச்சு. கன்பியூஸ் ஆகாதீங்க டியர்ஸ்..)