UUP–EPI 21

அத்தியாயம் 21

 

டிஹைட்ரோடேஸ்டெஸ்ட்ரோன் (dihydrotestosterone) எனும் ஹார்மோன் தான் ஆண்களின் பருவமடைதலுக்கு உதவுவதோடு அவர்கள் வளர்ந்ததும் அவர்களுக்கு வரும் குணநலன்களையும் நிர்ணயிக்கிறது. அவர்களின் உடலில் செக்‌ஷுவல் ஆசைகள் வரவும் இந்த ஹார்மோன் தான் துணைப்புரிகிறது.

 

அன்று

இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் ஏர்போர்ட் வந்து இறங்கும் வரை தம்பியின் கையையே பிடித்தவாறு வந்தாள் சண்மு. அக்காவை விட்டுவிட்டு ஒரு வாரம் இவர்களுடன் கூட இருந்து செல்வதற்காக வந்திருந்தான் கண்ணன். இருவருக்குமே பாஸ்போர்ட் விசா என எல்லாம் ப்ரதாப் தான் செலவு செய்திருந்தான்.

அந்த நாட்டில் வாழ சண்முவுக்கு ஏற்ற மாதிரி உடைகளையும் கண்ணனிடம் சொல்லியே வாங்கிக் கொடுக்க சொல்லி பணம் போட்டிருந்தான் அவன். திருமணம், வரவேற்பு எல்லாம் முடித்து சில நாட்களிலேயே ஆஸ்திரேலியா பயணப்பட்டுவிட்டான் ப்ரதாப். ப்ராசிடர் எல்லாம் முடியும் வரை சண்முவை சென்னையில் அவனின் ப்ளாட்டில் தங்க வைத்தவன், அவளுக்குத் துணையாக கண்ணனையும் காலேஜ் மாற்றி தங்க வைத்துவிட்டான். இவன் படித்து முடித்ததும் மேல் படிப்புக்கு ஆஸ்திரேலியா அழைத்துக் கொள்வதாகவும் இனி கண்ணன், சண்மு தன் பொறுப்பு எனவும் வாக்குக் கொடுத்திருந்தான் மீனாட்சியிடம்.

விமான நிலையத்தில் வந்து இறங்கியதும் மலங்க மலங்க விழித்தாள் சண்மு. கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல இருந்தது அவளுக்கு. அங்கிருந்த வரை மற்றவர் முன்னால் சிரித்த முகமாகவும் தனியறையில் முறைத்த முகமாகவும் இருந்த கணவனை எப்படி மலை இறக்குவது என யோசித்தப்படியே வந்தவளுக்கு தரை இறங்கியதும் தான் சுற்றுப்புறம் உறைத்தது.

பாஸ்போர்ட் செக்கிங் போது ஆபிசர் பேசிய ஆஸ்திரேலியன் ஸ்லாங் ஆங்கிலம் இவளை திக்குமுக்காட வைத்தது. கிளியரண்ஸ் வரிசையில் ஒருத்தருக்கு பின் ஒருத்தர் தானே செல்ல முடியும். அவளுக்குப் பின்னால் நின்றிருந்த தம்பியைப் பாவமாக பார்க்க, அவன் உதவிக்கு வந்தான். இவளின் பயத்தைப் பார்த்த ஆபிசர், நிறுத்தி நிதானமாக கேள்வியைக் கேட்க, அப்பொழுதும் அவர்கள் ஆங்கிலம் புரியவில்லை இவளுக்கு.

‘படிச்சு படிச்சு சொன்னியேடா இங்கிலீசு படிச்சுக்கன்னு! பூரான் விட்டுருவேன்னு உன்னை ஆப் பண்ணதுக்கு இப்ப நான் நல்லா படறேன்!’ என நண்பனிடம் மனதில் முறையிட்டாள் சண்மு.

ஒரு வழியாக லக்கேஜை எடுத்துக் கொண்டு வெளியே வந்தார்கள். சுற்றி நடந்த வித விதமான மனிதர்களை ஆச்சரியமாகப் பார்த்தாள் சண்மு. இது வரை ஒன்றோ இரண்டோ வெள்ளையர்களை அவர்கள் ஊர் பக்கம் பார்த்திருக்கிறாள். இங்கோ மஞ்சளாக சீனர்கள், வெள்ளையாக வெள்ளையர்கள், பிங்க் நிறத்தில் என்ன இனமென்றே அவளால் அறிய முடியாத மனிதர்கள் என பலரும் நடமாடிக் கொண்டிருந்தனர். கசமுசவென பல பாஷைகள். அவளுக்கு பயந்து வந்தது. தம்பியின் கையை இறுகப் பற்றிக் கொண்டாள்.

“கண்ணா! ரொம்ப பயமா இருக்குடா”

“பயப்படாதக்கா! இவங்களாம் நம்ம மாதிரி மனுஷங்க தான். அதோட மாமா உனக்குப் பக்கபலமா இருக்க என்ன பயம்?” என தமக்கையைத் தேற்றினான்.

‘உங்க மாமாவ கண்டாதான்டா எனக்கு இன்னும் பயமா இருக்கு! மனுஷன பேச விடாம பார்வையாலே தள்ளி வைக்கிறாரு. என் பக்கத்து நியாயத்த நான் பேசினா காசுக்கு அலையற மாதிரி இருக்கும். பேசலைனா என் வாழ்க்கை இருட்டடிச்சிரும். நான் என்னடா செய்ய?’ மனதில் மட்டும் புலம்பிக் கொண்டாள்.

இவர்கள் வெளியே வர, ப்ரதாப் புன்னகையுடன் காத்திருந்தான்.

“வெல்கம் டூ ஆஸ்திரெலியா!” என இருவரையும் வரவேற்றவன் கண்ணனை அணைத்து தோள் தட்டி சிரித்தான்.

“வெல்கம் ப்ரியா!” என சொன்னவன் அவளை மேலிருந்து கீழ் வரை பார்வையால் அளந்து விட்டு பின் அணைத்து தலை உச்சியில் உதடு பதித்து விலக்கி நிறுத்தினான்.

“லெட்ஸ் கோ காய்ஸ்” என லக்கேஜை எடுத்துக் கொண்டவன் சரளமாக கண்ணனிடம் பேசிக் கொண்டே அவர்களை தன் காருக்கு அழைத்து சென்றான்.

“கண்ணா, அத்தைக்கு போன் போட்டு வந்துட்டோம்னு சொல்லிடு! பயந்துட்டே இருப்பாங்க” என சொல்லி தன் போனை எடுத்து கண்ணனிடம் கொடுத்தான். அக்காவும் தங்கையும் பேசியவுடன் ஸ்பீக்கரில் போட்டு ப்ரதாப்பிடம் நீட்டினான் கண்ணன்.

“மாம்ஸ்! அம்மா உங்க கிட்ட பேசனுமாம்”

காரை லாவகமால செலுத்திக் கொண்டே,

“சொல்லுங்க அத்தை! நல்லா இருக்கீங்களா? மருந்து மாத்திரைலாம் கரெக்டா சாப்படறீங்களா? உங்களையும் கூப்டா வர மாட்டேன்னு சொல்லிட்டீங்க” என குறைப்பட்டுக் கொண்டான் ப்ரதாப்.

“நான் நல்லாருக்கேன் மாப்பிள்ளை. கொஞ்ச காலம் போகட்டும். கால் கை ஓஞ்சா அப்பூறம் புள்ளைங்க இருக்கற இடம்தானே வரனும். அது வரைக்கும் வீடு வாசலா பார்த்துட்டெ இங்க இருக்கேன் மாப்பிள்ளை. அப்புறம் வந்து…” என இழுத்தார் மீனாட்சி.

“எதுவா இருந்தாலும் தயங்காம சொல்லுங்க அத்தை! என் கிட்ட என்ன தயக்கம்!’

“இல்ல மாப்பிள்ளை! நம்ம சண்முவ நினைச்சித்தான் கவலையா இருக்கு. இங்க அரியலூர் தாண்டி அவளுக்கு வேற ஒன்னும் தெரியாது! இப்ப ஆத்திரேலியால எப்படி குடும்பம் பண்ண போறான்னு நினைச்சா கவலையா இருக்கு. அவள நல்லபடி வழி நடத்தி மனசு கோணாம பாத்துக்குங்க மாப்பிள்ளை. அவ நினைப்புத்தான் எனக்கு மனச போட்டு அரிக்குது.” அவரின் குரல் கலங்கி ஒலித்தது.

ஸ்பீக்கரில் அதை கேட்ட சண்முவுக்குமே கண்கள் கலங்கியது. பினால் அமர்ந்திருந்த தன் மனைவியை கண்ணாடியின் வழி பார்த்தவன்,

“அத்தை கவலைய விடுங்க! உங்க மக இனி என் பொண்டாட்டி! அவள நான் கண் கலங்காம பார்த்துப்பேன்” என தேற்றினான். அவன் பார்வை தன்னையே துளைப்பதை கண்டவள், அவசரமாக கண்களைத் துடைத்துக் கொண்டாள். அதன் பிறகு தான் பார்வையை வேறு புறம் திருப்பினான் ப்ரதாப். அவர்கள் பேசி முடித்ததும், வழியில் தெரிந்த இடங்களை எல்லாம் காட்டி விளக்கியபடி வந்தான் அவன்.

“மாமா!”

“என்னடா?”

“பசிக்குது”

“சரி, சாப்பிட்டுட்டு வீட்டுக்குப் போகலாம்! நான் ஒத்தை ஆளா சமையல் எல்லாம் செஞ்சிகிட்டது இல்ல. வேலை முடிஞ்சு களைச்சிப் போய் வீடு வரவே பத்தாகிடும். அதுக்கு மேல எங்க சமைக்க! இனி வீட்டுக்கு உங்கக்கா வந்துட்டாங்கல்ல, க்ரோசரி எல்லாம் வாங்கிப் போட்டுடலாம். இஸ்டப்பட்டா வீட்டுல சமைச்சிக்கலாம் இல்ல வெளிய சாப்பிட்டுக்கலாம்” என சொல்லியபடியே வழியில் தெரிந்த ஹங்கரி ஜேக் எனும் துரித உணவுக் கடையில் காரை பார்க் செய்தான்.

என்ன சாப்பிடுவது என முழித்த அக்கா தம்பி இருவருக்கும் அவனே ஆர்டர் செய்து கொடுத்தான். பர்கரின் ருசியில் நன்றாக சாப்பிட்ட கண்ணனுக்கு இன்னொரு செட் வாங்கிக் கொடுத்தான் ப்ரதாப். இது மாதிரி உணவை சாப்பிட்டிராத சண்முவுக்குத் தான் தொண்டையில் சிக்கியது பர்கர். அவசரமாக நீரைக் குடித்து உணவை உள்ளே தள்ளினாள். வந்த முதல் நாளே உணவு சிக்கியது. இன்னும் என்னென்ன சிக்குமோ!

ப்ரதாப்பின் வீடு ப்ரிஸ்பேன் நகரில் உள்ள குவீன்ஸ்லேண்ட் பகுதியில் இருந்தது. அது ஒரு தனி வீடு. கொஞ்சம் இடைவெளி விட்டு அடுத்த வீடு இருந்தது. அங்கே ஆஸ்திரேலியாவில் நிலப்பரப்பு அதிகம் இருப்பதால் பெரும்பாலும் தனி தனி வீடுகள் தான் இருக்கும். வீட்டை சுற்றி இடம் இருக்க, வெள்ளை வெளேரென அழகாக இருந்தது அவ்வீடு. கிட்டே நெருங்கியதும், இவன் சாவியில் இருந்த ஒரு பட்டனை அழுத்த கார் கராஜ் திறந்துக் கொண்டது. உள்ளே வண்டியை விட்டவன், மீண்டும் கராஜை பட்டன் கொண்டு மூடினான். சண்மு வாயைப் பிளக்க, கண்ணனோ வாவ் என வாய் விட்டு சொன்னான். சிரித்தப்படி கராஜ் வழியே இருந்த கதவைத் திறந்து இருவரையும் உள்ளே வரவேற்றான் ப்ரதாப்.

“வெல்கம் டூ அவர் ஹோம்! வலது கால எடுத்து வச்சு வாங்க!” என கூறியவன் பெட்டிகளை காரில் இருந்து எடுத்து வர போய்விட்டான்.

“கண்ணா! என்னடா ஜீபூம்பா மாதிரி பட்டன தட்டனா கதவு தொறக்குது!”

“அதுலாம் லேட்ட்ஸ்ட் டெக்னோலோஜிக்கா! நம்ம வாரியங்காவல்ல இன்னும் வரல. போக போக எல்லாம் பழகிடுவக்கா நீ. வா, வா! இன்னும் என்ன மேஜிக்லாம் இருக்குன்னு பார்க்கலாம்” என உற்சாகமாக வீட்டை சுற்றி வந்தான் கண்ணன்.

‘நல்ல வேளை இவன் வந்தான்டா கதிரு! இல்லைனா இதெல்லாம் பார்த்து பயந்து பெப்பரேப்பேன்னு நான் முழிச்சிருப்பேன்.’ என நண்பனிடம் அப்டேட் கொடுக்க தவறவில்லை சண்மு. என்னதான் கதிரை வாழ்க்கையில் இருந்து விலக்கி வைக்க நினைத்தாலும், சின்ன வயதில் இருந்து நேரிலும் மனதிலும் அவனிடம் பேசி வளர்ந்தவளுக்கு அந்த பழக்கத்தை மட்டும் மாற்ற முடியவில்லை.

இண்டீரியர் எல்லாம் வெள்ளையிலேயே இருந்தது. மூன்று அறைகள், இரண்டு குளியலறைகள், கிச்சன், டைனிங் ஹால், வரவேற்பறை என அழகாக கச்சிதமாக இருந்தது வீடு. சோபாவில் இருந்து வீட்டு தளவாடப் பொருட்கள் வரை எல்லாமே வெள்ளையிலேயே இருந்தது. மிக மிக சுத்தமாக இருந்தது.

அவள் ராஜாங்கம் பண்ணப்போகும் சமையல் அறையை பார்த்து வாய் பிளந்து நின்றாள் சண்மு. இன்டக்‌ஷன் அடுப்பு, காபி மேக்கர், சிங்கில் சுடுதண்ணிர் மற்றும் நார்மல் தண்ணிர் வர இரண்டு பைப்கள், பளபளவென மார்பளில் இருந்த கவுண்டர்டாப், ஓவன், இப்படி எல்லாமே மாடர்னாக இருந்தது.

‘ஐயோ! நம்ம வீட்டுல காஸ் அடுப்பு வாங்கியே இப்போத்தான் ரெண்டு வருஷம் ஆகுது. இங்க அடுப்பு தட்டையா இருக்கே! இதுல சட்டி, பானை வச்சு எப்படி குழம்பு வைப்பேன், எப்படி சாதம் வைப்பேன்!’ மிரட்சியாகப் பார்த்தாள் சண்மு.

தோளின் மேல் கை விழ, திரும்பிப் பார்த்தாள் இவள். கண்ணன் தான் இவளைப் பார்த்து புன்னகைத்தான்.

“என்னக்கா?”

ஒன்றுமில்லை என தலையாட்டினாள் இவள். சும்மா இவனை வேறு கலவரப்படுத்துவதால் மன பாரத்தோடு அல்லவா திரும்பி இந்தியா போவான். அதனால் தன் மிரட்சியை உள்ளுக்குள்ளேயே அடக்கியவள் பாசமாக தம்பியுன் கன்னத்தை தடவிக் கொடுத்தாள்.

அதற்குள் லக்கேஜ்ஜை எடுத்து ரூமில் வைத்து விட்டு கிச்சனுக்கு வந்திருந்தான் ப்ரதாப். கண்ணனின் கன்னத்தில் இருந்த சண்முவின் கரத்தில் அவன் பார்வை பதிந்து நின்றது. பட்டென கையை எடுத்துக் கொண்டாள் இவள்.

“என்ன கண்ணா அக்காவும் தம்பியும் ஒரே கொஞ்சலா இருக்கு?”

“நாங்க சிப்ளிங்ஸ் இப்படித்தான் கொஞ்சிப்போம்! இதுல எல்லாம் பொறாமை கூடாது மாம்ஸ்” என சரளமாக கிண்டலடித்தான் கண்ணன்.

“சரி, சரி காபி வேணுமா?” என கேள்வி கண்ணனிடம் இருந்தாலும் பார்வை சண்முவின் மேல் இருந்தது.

“இல்ல மாம்ஸ்! இப்போத்தானே சாப்டோம்! டயர்டா இருக்கு! ஹால்ல படுத்துக்கவா?”

“உனக்கு கெஸ்ட் ரூம் அரேஞ் பண்ணிருக்கேன். லேசா குளிருதுல! ஹீட்டர்ல குளிச்சிட்டு, படுத்துக்கோ. வா நானே ஹீட்டர்லாம் எப்படி போடறதுன்னு சொல்லிக் குடுக்கறேன்! ப்ரியா, அது நம்ம ரூம்! போய் பாரு உள்ள, இவனுக்கு எல்லாம் காட்டிக் குடுத்துட்டு வரேன்” என மாஸ்டர் ரூமை இவளுக்குக் காட்டினான்.

ஐந்து நிமிடம் கழித்து ரூமுக்கு வந்தவன் சட்டை லேசாக நனைந்திருந்தது.

“ஹீட்டர் திறக்கறப்போ என் மேல தண்ணீ அடிச்சிருச்சு” என சொன்னவன், அவள் முன்னாடியே டீ சர்டை கலட்ட, இவள் தான் பதட்டத்துடன் திரும்பி நின்று கொண்டாள்.

அவள் பதட்டத்தைப் பார்த்து அவன் சிரிக்க, இவள் திரும்பவேயில்லை. அட்டாச் பாத்ரூம் போய், இவளுக்கு ஹீட்டரை போட்டவன்,

“போய் குளிச்சிட்டு வா ப்ரியா! தென் டேக் ரேஸ்ட்! ஈவ்னிங் வெளியெ போய்ட்டு அப்படியே சாப்பிட்டுட்டு வந்திடலாம்” என சாதாரணமாக பேச, இவளுக்கு முகம் மலர்ந்தது.

பாத்ரூமுக்குள் இவள் அடி எடுத்து வைக்க, அவன் குரல் இவளை அப்படியே ஷாக் அடித்தது போல நிறுத்தியது.

“எப்படி இருக்கான்?”

“யா..யாரு?”

“அவன் தான் உன் முன்னாள் காதலன் கதிர்வேலன்? இல்ல இன்னாள் காதலன்னு சொல்லனுமோ?”

“அப்படிலாம் பேசாதிங்க ப்ரதாப். அவனுக்கும் எனக்கும் இப்ப எந்த வித தொடர்பும் இல்ல. நம்புங்க ப்ளிஸ்”

“இப்ப தொடர்பு இல்ல!!! அப்படினா அப்போ தொடர்பு இருந்துச்சோ?” என நக்கல் குரலில் கேட்டான் ப்ரதாப்.

“இல்ல, இல்ல! அவன் எனக்கு ப்ரெண்ட் மட்டும்தான்”

“ஷட் அப் ப்ரியா! ஐ ஹேட் யூ ஃபோர் பீயிங் எ லையர்! இன்னும் இன்னும் தரம் தாழ்ந்துட்டே போகாதே! இட்ஸ் சிக்கேனிங்”

இன்னும் பல ஆங்கில வார்த்தைகள் படபடவென அவன் வாயில் இருந்து உதிர்ந்தது. எவ்வளவு அடக்கியும் முனுக்கென கண்ணீர் வழிந்து விட்டது சண்முவுக்கு.

“இனாப் ஆப் யுவர் ட்ராமாஸ்! சும்மா சும்மா கண்ணீரைக் காட்டி என்னை ஆப் பண்ணாதே! நீ அழுதா என்னால தாங்க முடியல! இப்படிலாம் பேசக் கூடாதுன்னு நினைக்கறேன். பாஸ்ட் இஸ் பாஸ்ட். இப்படியே உன்னை ஏத்துக்கலாம்னு நினைக்கறேன். ஆனா முடியல. முடியலடி என்னால! கிவ் மீ சம் டைம் ப்ரியா! உன் தம்பி போகிற வரைக்கும் இந்த கண்ணீர் எல்லாம் வேணா! நம்ம பிரச்சனை நம்மோட இருக்கட்டும். அவனையும், அத்தையும் கலவரப்படுத்த வேணாம்!” என சொன்னவன் அவள் கண்ணீரைத் துடைத்து விட்டு பட்டென ரூமை விட்டு வெளியேறி விட்டான். அவன் சாத்தி சென்ற கதவையே வெறித்துக் கொண்டு நின்றாள் சண்மு.

‘கதிரு! எங்கள விட்டுப் போடா! போ! போ! நான் செய்யாத குற்றத்துக்கு எதுக்குடா இந்த தண்டனை? இவர் கிட்ட என்னால பேசவே முடியலையே! நான் பேச வந்தாலே பொய்க்காரி, புழுகுணி, பித்தலாட்டக்காரின்னு சொல்றாரே! மீறி பேசினாலும் எனக்கு புரியாத இங்கிலீசுல படபடன்னு பேசி வாயடைக்க வச்சிடறாரே! நான் என்னடா செய்யட்டும்? சொல்லுடா என்ன செய்யட்டும்?’ மனம் பாரமாக அழுத்த, கண்களில் கண்ணீர் வழிய குளியலறைக்குள் புகுந்துக் கொண்டாள் சண்மு.

கண்ணன் அங்கே இருந்த வரை இவர்கள் மூவரும் வீட்டிலேயே இருக்கவில்லை. காலையில் எழுந்தவுடன் உடனே வெளியே கிளம்பிவிடுவார்கள். நன்றாக சுற்றி விட்டு, உணவையும் முடித்துக் கொண்டு இரவு தான் வீடு வருவார்கள். ப்ரதாப் ஒரு ஐ.டி கன்சர்னில் ட்ரைனராக வேலைப் பார்த்தான். அந்த கன்சர்ன் ஆஸ்திரேலிய முழுக்க கிளை வைத்திருந்தது. இவன் அடிக்கடி அவ்விடங்களுக்கு ட்ரைனிங் சம்பந்தமாக போய் மூன்று நான்கு மாதங்கள் தங்கி வேலை முடித்து விட்டு வருவான். ஹெட் ஆபிஸ் ப்ரிஸ்பேனில் இருந்ததால் வீட்டை இங்கேயே வாங்கி இருந்தான். லீவ் இல்லாமல் அவ்விடங்களில் வேலைப் பார்த்து வருபவனுக்கு இங்கே வந்ததும் சில வாரங்கள் விடுப்பு வழங்கப்படும். அந்த விடுப்பில் இருக்கவும் தான் இவனும் அக்கா தம்பி இருவரோடும் சேர்ந்து சுற்றினான்.

முதல் நாள் சவுத்பாங்க் கூட்டி சென்று மனிதன் உருவாக்கிய கடற்கரையை சுற்றிக் காட்டினான் ப்ரதாப். அங்கே குட்டி குட்டி ஸ்டால்களில் விற்ற துணி பைகளை இவளுக்கு வாங்கிக் கொடுத்தவன், கண்ணனுக்கு கையில் போட்டுக் கொள்ளும் சில்வர் காப்புகள், கூலர்ஸ் என வாங்கிக் கொடுத்தான். என்னதான் தன் மேல் கோபமாக இருந்தாலும் தன்னை மட்டும் இல்லாது தம்பியையும் நன்றாக பார்த்துக் கொள்ளும் ப்ரதாப் மேல் சண்முவுக்கு மரியாதை வரத்தான் செய்தது. அங்கே பேமசாக இருக்கும் கேபாப் வாங்கிக் கொடுத்தான் சாப்பிட. ஒரு கெபாப் 10 ஆஸ்திரேலியா டாலர் என்றால் இந்தியா ரூபாய் 488ஆ என வாய் பிளந்தாள் சண்மு. அதற்கு பின் அதை சாப்பிடவும் தான் முடியுமா அவளால்!

மறுநாள் ப்ரிஸ்பேன் நகரத்தில் இருந்த பல ஷோப்பிங் கம்ப்ளேசுக்கு அழைத்து சென்றான். அக்கா தம்பி இருவருக்கும் நிறைய துணிமணி வாங்கிக் கொடுத்தான். கண்ணன் வேண்டாம் என மறுக்க,

“எடுத்துக்கடா! நான் வாங்கிக் குடுக்காம வேற யாரு வாங்கிக் குடுப்பா!” என முறைப்பை பரிசாய் கொடுத்தான்.

அதற்கும் மறுநாள் மவுண்ட் கூத்தா எனும் குட்டி மலையை ஏறி அங்கிருந்து ஜிலு ஜிலு கிளைமேட்டில் கீழே தெரிந்த ப்ரிஸ்பேன் நகரத்தைக் கண்டு மகிழ்ந்தனர். பகலில் மகிழ்வுடன் பேசி சிரிப்பவன், இரவில் மட்டும் அந்நியன் ஆகி விடுவான். ரூமுக்கு வந்துவிட்டாள் ஒரு வார்த்தை அவன் வாயில் இருந்து வராது. கட்டிலில் அவள் பக்கத்தில் தான் படுப்பான். ஆனால் அவன் தலை முடி கூட இவளை நெருங்காது.

சில இரவுகளில் மாமன் மச்சான் இருவரும் பப்புக்குப் போய் வருவார்கள். அங்கே குடி, சிகரேட் வாடை, சத்தமான இசை என ஓவராக இருக்கும் என கண்ணன் சொல்ல, இவள் வீட்டிலேயே இருந்துக் கொள்வாள். இப்படியாக கண்ணன் இருக்கும் வரை இருவருக்கும் பாலமாக இருந்தான். அவன் கிளம்பும் நாளன்று இவள் அழுது கரைந்தாள். அவனுக்கும் கண் கலங்கத்தான் செய்தது. அக்காவைக் கட்டிக் கொண்டான்.

“பத்திரமா இருக்கா! இன்னும் கொஞ்ச மாசத்துல நான் இங்க வந்துடுவேன். மேல் படிப்புக்கு மாமா எல்லா ஏற்பாடும் செஞ்சிட்டாரு. எனக்கு ஸ்பான்சர் பண்ணறேன்னு சொல்லிருக்காரு. அது வரைக்கும் சமத்தா இருக்கனும். சரியா?”

சரி என தலையாட்டினாள் சண்மு. எங்கே வாயைத் திறந்தால் என்னை விட்டுவிட்டு போகாதே என கதறி விடுவோமோ என வாயை இறுக மூடிக் கொண்டாள். அக்கா தம்பியின் அந்நியோன்யத்தைப் பார்த்தப்படி நின்றிருந்த ப்ரதாப்,

“உன் அக்காவ கொஞ்சம் விட்டுட்டு கெளம்பற வழிய பாருடா கண்ணா! ப்ளைட்டுக்கு டைமாச்சு” என கூப்பிட்டான்.

“வரேன் மாம்ஸ்! அக்காவ பத்திரமா பாத்துக்கோங்க! சீக்கிரம் சிம் கார்ட் வாங்கிக் குடுங்க! நாங்க அடிக்கடி பேசிக்கனும்”

“ஏன்டா? நான் உங்கக்காவ நல்லா பாத்துக்கறனா இல்ல அடிச்சு கிடுச்சு கொடுமை பண்ணறனான்னு கேக்கனுமா?” என புன்னகையுடன் சொன்னான் ப்ரதாப்.

“நீங்க பாத்துக்குவீங்க! அந்த நம்பிக்கை இல்லாமலா என் அக்காவையே உங்களுக்கு குடுத்தேன் மாம்ஸ்!” என இவனும் புன்னகைத்தான்.

“சரி சரி வா!” என கராஜுக்கு லக்கேஜை எடுத்துக் கொண்டு கிளம்பினான் ப்ரதாப். சண்மு ஏர்போர்டில் வந்து அழுவாள் என அவளை வர வேண்டாம் என சொல்லி விட்டான் ப்ரதாப்.

தம்பியைக் கன்னம் வழித்து, கண்ணுக்குள் நிறைத்துக் கொண்டவள்,

“அடிக்கடி அம்மாவப் போய் பார்த்துக்கடா கண்ணா!” என அழுகையை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு சொன்னாள்.

சரியென தலையாட்டியவன், கலங்கிய கண்களுடன் கிளம்பினான். அவனோடு தன் நிம்மதியும் சந்தோசமும் கிளம்பிப் போவது போலவே தோன்றியது சண்முவுக்கு.

கண்ணனை அனுப்பிவிட்டு வந்த ப்ரதாப் ஒரு வார்த்தைக் கூட பேசாமல் போய் படுத்துக் கொண்டான். மறுநாள் இவள் எழுந்து பல் துலக்கிவிட்டு வர கிச்சன் டேபிளில் வெள்ளை காகிதம் ஒன்று இவளைப் பார்த்து பல்லிளித்தது.

“ப்ரியா!

அர்ஜேண்ட் வொர்க். சிட்னிக்குக் கிளம்பிட்டேன். ரெண்டு வாரத்துல வந்துடுவேன். அட்ஜஸ்ட் பண்ணிக்கோ!

லவ்,

ப்ரதாப்”

படித்தவளுக்கு கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல இருந்தது.

அவன் திரும்பி வந்து இரு வாரத்திற்குள் பாதி உயிராய் ஆகி இருந்தாள் சண்மு.

 

இன்று

 

கதிரின் கைவளைவில் இருந்துக் கொண்டே தன் கதையை யாரோ மூன்றாம் மனிதரின் கதை போல எந்த வித உணர்ச்சியும் இல்லாமல் சொல்லிக் கொண்டு இருந்தாள் சண்மு.

அவள் சொல்ல சொல்ல கோபத்தில் உடல் விறைத்துப் போனான் கதிர். ப்ரதாப் தனியாக தன்னை தவிக்க விட்டு சிட்னி சென்றது வரை சொல்லியவள்,

“நீ என் புருஷன்றது நெஜம்னா…” என கதிரின் முகம் பார்த்தாள்.

“என்ன செய்யனும்? எந்த தப்பும் செய்யலையேடி நீ! செஞ்சதெல்லாம் நான் தானே! லவ் பண்ணது நான் தானே! கல்யாணம் ஆனவள கைப்பிடிச்சு இழுத்தது நான் தானே! ஏன்டி உன்னைப் பேசக் கூட விடாம இப்படி டார்ச்சர் பண்ணியிருக்கான் அந்த சைக்கோ? சொல்லுடி என்ன செய்யனும்? கை கால எடுக்கவா? இல்ல கள்ள துப்பாக்கிய மூக்குல சொருகி மேல அனுப்பட்டா? சொல்லுடி சம்மு” என படபடத்தான்.

“சேச்சே! அவ்ளோ ஹெவியா ஒன்னும் வேணா கதிரு! என்னால அவன அடிக்க முடியல! ட்ரை பண்ணேன்! ஒரே தள்ளுல கீழ தள்ளிட்டான்! சோ நீ அடிக்கனும்! என் கண்ணு முன்ன அவன அடிக்கனும். கொஞ்சமே கொஞ்சம் ரத்தம் வந்தா போதும். அதுவே எனக்கு திருப்தியாகிடும்”

“எனக்கு திருப்தியாகாதுடி! வார்த்தையால உன்னை கொன்னுருக்கான்! மொத்த ரத்தத்தையும் வெளிய எடுக்கனும்! அப்போத்தான் என் கோபம் அடங்கும்”

பட்டென அவன் வாயில் ஒன்று போட்டாள் சண்மு.

“நான் சொன்னத மட்டும் செய்டா பக்கி! என்ன இருந்தாலும் அவன் எங்கம்மாவுக்கு மருமகன்!”

அதை கேட்டதும் கதிருக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. தன் நெஞ்சில் ஒய்யாரமாய் படுத்திருந்தவளை கீழே பிடித்துத் தள்ளியவன்,

“அவன் மருமகன்னா, அப்போ நான் யாருடி? கேணைக் கிறுக்கனா?” என கடுப்புடன் கேட்டான்.

“நீ என் புருஷன்! அவன் எங்கம்மாவுக்கு மருமகன்” என சீரியசாக சொன்னாள் சண்மு.

அவள் பதிலில் முறைத்தப்படி இருந்தான் கதிர்.

“சரி கதிரு! ஒரு கேம் வெளியாடலாமா?”

“ஒரு மண்ணும் வேணா”

“ப்ளிஸ்டா” என பாவமாக கெஞ்சினாள் சண்மு.

“சரி! என்ன கேம்னு சொல்லித் தொலை” இருவரும் இன்னும் அரைகுறை ஆடையுடன் தான் இருந்தனர்.

“நான் பெண்பால் சொல்லுவேன்! அதுக்கு நீ ஆண்பால் சொல்லனும்! சரியா?”

“காமபாடம் படிச்சுட்டு இருந்தோம்! அதுல ப்ளேஸ்பேக் பாதி ஓட்டி என்னை துடிக்க வச்ச! இப்போ தமிழ்பாடம் எடுக்கறியா?”

“ஆமா! கேம்கு போவோமா?”

“ஹ்ம்ம்”

“பெண்?”

“ஆண்!”

“சீமாட்டி”?

“சீமான்”

“மனைவி?!”

“கணவன்”

“காதலி?”

“காதலன்”

“சக்களத்தி?”

“ஹூஹூம் தெரியல”

“ஏன் தெரியல? ஏன், ஏன்? சக்களத்திக்கு ஆண்பால் என்ன? சொல்லு கதிரு சொல்லு! சொல்லு!” ஹிஸ்டீரியா வந்தவள் போல் அவன் நெஞ்சில் குத்தி கத்த ஆரம்பித்த தன் சம்முவை இழுத்து அணைத்துக் கொண்டான் கதிர்…..

(உயிர் போகும்…)

(எதாச்சும் கெஸ் பண்ண முடியுதா டியர்ஸ்? கமேண்ட்ல ஷேர் பண்ணிக்குங்க! நெக்ஸ்ட் எபில எல்லாம் சோல்வ் ஆகிரும்)