UUU–EPI 11
UUU–EPI 11
அத்தியாயம் 11
சாக்லேட் ச்சிப் குக்கீயைக் கண்டுபிடித்த ரூத் வேக்பீல்ட், தனது ரெசிபியை நெஸ்ட்லேவுக்கு விற்றார். அதற்கு அவர் ஊதியமாக வாங்கியது, வாழ்நாள் முழுக்க ஃப்ரீ சாக்லேட் சப்ளையாகும்.
அந்த ப்ரைவேட் ஹாஸ்பிட்டலின் காபிடேரியாவில் தலையைப் பிடித்தப்படி அமர்ந்திருந்தான் ரிஷி. தலைவலி விண்விண் என தெறிக்க, காபி அருந்தலாம் என அங்கே வந்து அமர்ந்திருந்தான் அவன்.
சுட சுட கருப்பு காபியை வாங்கியவன், அங்கிருந்த மேசையிலேயே அமர்ந்து விட்டான். அப்பொழுதுதான் வேலை இடத்தில் இருந்து நந்தனாவின் வீட்டுக்கு ஒரு எட்டுப் போய்விட்டு வந்தான். வாங்கி வந்திருந்த மதிய உணவை டைனிங் ஹால் மேசை மேல் வைத்தவன் இருவரையும் தேடி அறைக்குப் போனான். அங்கே நந்தனாவின் அறையில் சிம்ரன் கழுத்தை இறுக கட்டிக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தாள் சின்னவள். சிம்ரனும் அவள் மேல் கைப்போட்டு அணைவாகப் பிடித்தப்படி தூங்கிக் கொண்டிருந்தாள். அப்படியெ சில பல நிமிடங்கள் இருவரையும் பார்த்தப்படி நின்றிருந்தவன், கிளம்பி நந்தனாவைப் பார்க்க வந்திருந்தான்.
ஒரே அலைச்சல் தான் ரிஷிக்கு. வேலை இடம், வீடு, ஹாஸ்பிட்டல் என அலைந்துக் கொண்டிருந்தான். சரியான தூக்கமும் இல்லை. சற்று முன் கூட நந்தானா இருந்த வார்டை எட்டிப் பார்க்க, அவள் தூங்கிக் கொண்டிருந்தாள். அதனால் தான் காபி அருந்த வந்திருந்தான். மதிய உணவு உண்ணக் கூட மூட் இல்லை அவனுக்கு. அன்று சிம்ரன் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் நந்தனா நிலை என்ன ஆகியிருக்கும் என ஒரே யோசனைதான் அவனுக்கு.
இரவு உணவு முடித்து சிம்ரனை நந்தனாவின் வீட்டில் விட்டு விட்டு கிளம்பியவனுக்கு அரை மணி நேரத்தில் போன் வந்தது. அப்பொழுதுதான் பைட் மீயின் அருகே காரை பார்க் செய்திருந்தான் அவன். சிம்ரன் பேரைப் பார்த்து போனை அட்டேண்ட் செய்தவனுக்கு அவளின் படபட பேச்சுத்தான் காதில் விழுந்தது. பேக்கிராவுண்டில் சீனி பாப்பாவின் அழுகுரல் வேறு.
“ரிஷி! ரிஷி! நந்து மயக்கமாகிட்டா! சீக்கிரம் வாங்க! நான் ஆம்புலன்ஸ்கு போன் அடிச்சுட்டேன். அவங்களும் வந்துடுவாங்க” என இவள் பேசி முடிப்பதற்குள் காரை ஸ்டார்ட் செய்திருந்தான் ரிஷி.
“தோ, வந்துட்டே இருக்கேன் சிம்ரன்!”
அவன் வீட்டை அடையும் நேரம், ஆம்புலன்சும் வந்திருந்தது. எப்பொழுதும் நந்தனா செக் அப் போகும் ஹாஸ்பிட்டலுக்கு ஆம்புலன்சை விட சொன்னான் ரிஷி.
ரோஷினி வீச் வீச்சேன கத்தி அழ, அவளை தூக்கி அணைத்துப் பிடித்திருந்தாள் சிம்ரன். அவர்கள் இருவரையும் தன் காரில் ஏற்றிக் கொண்டு ஆம்புலன்சை பின் தொடர்ந்தான் ரிஷி. தாய் அழுதது, இயோன் இயோன்(இப்படிதான் சத்தம் போடுமாம்! எங்க வாண்டு சொன்னுச்சு) என சத்தமிட்டப்படி ஆம்புலன்ஸ் வந்தது என பயந்து போயிருந்த சின்னவளை சமாதானப்படுத்தியபடியே வந்தாள் சிம்ரன்.
ஆம்புலன்சில் இருந்து இறக்கி, நந்தனாவை எமெர்ஜென்சி டிபார்ட்மெண்டுக்கு கொண்டு சென்றார்கள். இரவு நேரமானாலும் எமர்ஜேன்சி செக்ஷன் பிசியாகத்தான் இருந்தது. குழந்தையை இவள் ஒரு நாற்காலியில் அமர வைத்து பார்த்துக் கொள்ள, ரிஷி ரிஜிஸ்ட்ரேஷன் மற்றும் இதர நடைமுறைகளை கவனித்துக் கொண்டான். இரவில் பெரும்பாலும் டூட்டி டாக்டர்கள் தான் இருப்பார்கள். உண்மையாலுமே எமெர்ஜென்சி என்றால்தான் ஸ்பெஷலிஸ்ட் வரவழைக்கப்படுவார்கள்.
இரண்டு மணி நேரம் இவர்கள் அங்கிருந்த நாற்காலியில் அப்படியே அமர்ந்திருந்தனர். அழுது ஓய்ந்த குட்டி அப்படியே சிம்ரன் மடியில் அமர்ந்து அவள் கழுத்தைக் கட்டிக் கொண்டு உறங்க ஆரம்பித்து விட்டாள். குளிர் வேறு எலும்பைத் துளைக்க, இன்னும் சிம்ரனை இறுக்கிக் கொண்டாள் சின்னவள். சிம்ரனால் அப்படி இப்படி நகரமுடியவில்லை.
“நான் தூக்கிக்கிறேன் சிம்ரன்!” என சொன்னவன் குட்டியை தூக்க முயல, தூக்கத்தில் சிணுங்கியவள் இன்னும் கழுத்தை இறுக்கிக் கொண்டாள்.
“பரவாயில்ல நந்தா சார்! என் கிட்டயே இருக்கட்டும். எப்படியும் டாக்டர் வந்து கூப்புடுவாரு! நீங்க எழுந்து போகனும்! தூக்கம் கெட்டுடும் இவளுக்கு. அப்புறம் இன்னும் அழுவா” என சொன்னாள் சிம்ரன்.
பேசும் போதே பற்கள் தந்தி அடித்தது அவளுக்கு. இந்த மாதிரி இடங்களில் ஏசி எப்பொழுதுமே அதிகமாக தான் வைத்திருப்பார்கள். பாக்டீரியாயின் பரவலைத் தடுக்கவும், அங்கிருக்கும் மெசின்களின் பாதுகாப்புக்கும் தான் ஹாஸ்பிட்டலில் ஏசி அதிகரித்து வைக்கப்படுகிறது.
“இரு வரேன்!” என எழுந்து சென்றவன், அவனது ஸ்போர்ட் ஜாக்கேட்டோடு வந்தான்.
“என்னோடதுதான். கார்ல இருந்து எடுத்துட்டு வந்தேன்” என்றவன் இரு பெண்களுக்கும் ஜாக்கேட்டை வைத்து போர்த்தி விட்டான்.
வெண்டிங் மெசினில் இருந்து சூடாக மைலோ(சாக்லேட் பானம்) எடுத்து வந்தவன், ஊதி ஊதி சிம்ரனுக்கு தன் கையாலேயே பருக கொடுத்தான். இவளும் குளிருக்கு, பிகு செய்யாமல் குடித்துக் கொண்டாள்.
“கேர் டேக்கர் ஆப் ரதி நந்தனா!!!” என குரல் வர, ரிஷி எழுந்துப் போனான்.
அங்கே டூட்டி டாக்டர் அமர்ந்திருந்தார். சிம்ரனும் அவர்கள் பேசுவதைக் கேட்க சின்னவளைத் தூக்கிக் கொண்டு வந்தாள். அவள் வரவும், தனது பக்கத்து இருக்கையை நகர்த்தி அமர வசதி செய்துக் கொடுத்தான் ரிஷி.
ஆங்கிலத்தில் அவர்களின் உரையாடல் தமிழில் உங்களுக்காக.
“ஹாய்! நான் டூட்டி டாக்டர் இஸ்மாயில். இங்க கொண்டு வரதுக்கு முன்னமே முதலுதவி செஞ்சிருக்கறதுனால, ஷீ இஸ் ஆல்ரைட் நவ். ஸ்ட்ரேஸ் லெவல் ஹை ஆகி, ப்ளட் பிரஷரும் ஏறிருக்கு! இந்த மாதிரி ப்ரெக்னசி டைம்ல ஹார்மோன் மாற்றங்கள் ரொம்ப சகஜம்தான். அதுதான் ஸ்ட்ரேஸ் லெவல ட்ரீகர் பண்ணும்! ஆனா ஹை ப்ளட் ப்ரஷர் இஸ் நாட் குட்! குழந்தை பிறக்கறப்போ கம்ப்ளிகேஷன் வர வாய்ப்பிருக்கு”
“இப்போ எப்படி இருக்காங்க டாக்டர்?” என கேட்டான் ரிஷி.
“இன்னும் கொஞ்ச நேரத்துல கன்ஷியஸ் ஆகிடுவாங்க! பயப்படாதீங்க”
“பேபி எப்படி இருக்கு டாக்டர்?” என கேட்டாள் சிம்ரன்.
“பேபி இஸ் பர்பேக்ட்லி ஆல்ரைட்! வெளிய என்ன நடந்தாலும் உள்ள, அம்மாவோட கதகதப்புல அவங்க நல்லாத்தான் இருக்காங்க! நாங்க ஸ்கேன் பண்ணிப் பார்த்துட்டோம். நாளைக்கு இவங்களோட கைனி(மகப்பேறு மருத்துவர்) இவங்கள கேர் பண்ணிப்பாங்க. சோ அட்மிஷன் போட்டுரலாம்! சில நாள் தங்கி இருக்கட்டும். பிரஷர் நார்மல் ஆனதும் டிஸ்ச்சார்ஜ் பண்ணிடலாம்” என சொன்னார் அவர்.
“ஓகே டாக்டர்! நாங்க அவள பார்க்கலாமா?” என தவிப்புடன் கேட்டான் ரிஷி.
“கண்டிப்பா. ஆனா குழந்தைய உள்ளுக்கு கூட்டிட்டுப் போக வேணா! யாராவது ஒருத்தர் எமெர்ஜென்சி ரூம்ல போய் பாருங்க! தனியறைக்கு மாத்தினதும், எல்லாரும் பார்க்கலாம்” என சொல்லி சென்றார் அவர்.
சிம்ரன் குழந்தையோடு வெளியே அமர்திருக்க ரிஷி உள்ளே போய் தன் சகோதரியைப் பார்த்தான். அதற்குள் ஹாஸ்பிட்டல் கவுன் மாற்றி இருந்தார்கள். பாவமாய், ஆதரவு அற்றவளைப் போல படுத்திருந்தாள் நந்தனா. அவளை நெருங்கி கையைப் பற்றிக் கொண்டான் ரிஷி.
“கொஞ்ச நேரத்துல எனக்கு மரண பயம் காட்டிட்டியேடி! உன்ன விட்டா எனக்கு வேற யாருடி இருக்கா!” என முனகியவன் கண்ணில் லேசாய் நீர் கோர்த்துக் கொண்டது. கையைப் பிடித்துக் கொண்டு அப்படியே நின்றிருந்தான். வெளியே அமர்ந்திருக்கும் இரு ஜீவன்களின் ஞாபகம் வரவும், தமக்கைக்கு போர்த்தி விட்டுவிட்டு வெளியேறினான்.
ரூம் அரேஞ்மேன்ட் முடிய சில மணி நேரம் ஆனது. விடிகாலையில் தான் நந்தனாவை ரூமுக்கு மாற்றினார்கள். சிங்கிள் ரூம் வேண்டும் என கேட்டிருந்தான் ரிஷி. அது கிடைக்கவும் ஸ்ட்ரெச்சரில் நந்தனாவை அங்கே கொண்டு போய் படுக்க வைத்தார்கள். அங்கிருந்த மெத்தை வைத்த திவானில், சின்னவளை சிம்ரனிடம் இருந்து பிரித்துப் படுக்க வைத்தான் ரிஷி. கை உடலெல்லாம் மரத்துப் போனது போல இருந்தது சிம்ரனுக்கு. லேசாய் தடுமாறியவளை, மெல்ல நடத்திக் கொண்டு போய் நாற்காலியில் அமர வைத்தான் ரிஷி.
“கை நம்ப் ஆச்சு ரிஷி!” என மெல்லிய குரலில் முறையிடவும், அவள் கை இரண்டையும் சூடு வர தேய்த்து விட்டான் அவன்.
“இதுக்குப் பேருதான் சூடேத்தறதோ!” என குரல் கேட்கவும் இருவரும் திரும்பிப் பார்த்தனர்.
அங்கே இவர்களைப் புன்னகை முகமாய் பார்த்திருந்தாள் நந்தனா.
“நந்து!!! முழிச்சிட்டியா?” என கேட்டப்படி அவள் அருகே விரைந்தாள் சிம்ரன்.
நந்துவின் கன்னம் இரண்டிலும் மாறி மாறி முத்தமிட்டவள்,
“நான் ரொம்ப பயந்துட்டேன் தெரியுமா! இனிமே இப்படி மயங்கி வை, அடிய கெளப்பி விடறேன்” என சந்தோஷம், கோபம், துக்கம் எல்லாம் கலந்த கலவையான குரலில் படபடத்தாள் சிம்ரன்.
“உன் அழகுல மயங்கி விழுந்துட்டேன் போல! அதுக்கு நீ சந்தோச படனுமே தவிர, இப்படி பொரிய கூடாது” என குறும்புடன் சொன்ன நந்தனா புன்னகையுடன் தன் தமையனை ஏறிட்டாள். அவன் முன் எந்த வித மன கிலேசத்தையும் காட்டிக் கொள்ள மாட்டாளே அவள்.
நந்தனாவையே விழி மூடாமல் பார்த்திருந்தான் ரிஷி.
“என்னடா பார்க்கற! இங்க வா” என அவனை அருகே அழைத்தவள், கையைப் பற்றிக் கொண்டாள்.
“ஒன்னும் இல்லடா ரிஷி! இதெல்லாம் ப்ரெக்னசில சகஜம். கப்பல் கவுந்த மாதிரி மூஞ்ச வச்சிக்காதே! பார்க்கவே சகிக்கல!” என இவள் கிண்டலடிக்க, ஒரு துளி கண்ணீர் சராலென அவன் கன்னத்தில் வழிந்தது.
“நான் தான் நந்தாவுக்கு எல்லாமே!” என நந்தனா சொன்னது இப்பொழுது நன்றாக புரிய, இரட்டையர்களின் பாசப் பிணைப்பை கண்ணெடுக்காமல் பார்த்திருந்தாள் சிம்ரன்.
“நந்தா! ஒன்னும் இல்லடா! ஐம் பெர்பெக்ட்லி ஆல்ரைட்!”
“என்ன, என்ன ஆல்ரைட்!!!!! சிம்ரன் கூட இல்லைனா இந்நேரம் என்ன ஆகியிருக்கும்!!!! ப்ரேக்னண்டா இருக்கற நேரத்துல கூட உன் பிடிவாதம் உன்னை விட்டுப் போகல இல்ல. உனக்கு எல்லா விஷயத்துலயும் விட்டுக் குடுக்கறேன்ல, அதான் என்னை இந்தப் பாடு படுத்தற நீ! கூட இருக்கறேன்னு சொன்னவன, எவ்வளவு நாள் உன்னை சார்ந்து வாழறதுனு சொல்லி பிடிவாதமா தள்ளி நிறுத்தி வச்சிருக்க! இனிமே எல்லாத்துக்கும் உன் இஸ்டம்னு விட முடியாது நந்து! ஐ காண்ட்!” என கோபத்தில் வெடித்தான் ரிஷி.
“சரி, சரி சண்டை போடாதீங்க ரெண்டு பேரும்! குட்டி முழிச்சுக்குவா” என சொன்ன சிம்ரனை,
“யாரு சண்டை போட்டா இப்போ!!!” என கேட்டு வாயடைக்க வைத்தார்கள் இரட்டையர்கள் இருவரும்.
தன் முன்னே ஆட்காட்டி விரலை நீட்டி,
“பாயாசத்துல போடுவாங்க சேமியா
யாரு அடுச்சிக்கிட்டா நமக்கென்னனு வாய மூடிட்டு போவியா!” என அவளை அவளே கேட்டுக் கொண்டாள் சிம்ரன்.
அவள் செய்கையில் நந்தாவுக்கும் நந்துவுக்கும் சிரிப்பு வந்துவிட்டது. அதோடு அங்கிருந்த நிலைமை சகஜமாகியது. ரிஷி நந்தனாவின் அருகில் அமர்ந்திருக்க, சிம்ரன் அந்த குட்டி திவானில் சின்னவளை அணைத்துக் கொண்டு சுருண்டிருந்தாள்.
நந்தனாவின் பார்வை அவர்கள் இருவரின் மேல் பதிந்து மீள,
“நம்ம சிம்ரன் செம்ம ச்செக்காப்(திறமையான) தெரியுமா நந்து! நீ மயங்கனதும், சின்னவளையும் சமாதானப்படுத்தி, உடனே ஆம்புலன்சுக்கு போன் போட்டு, என்னையும் வரவச்சா! நான் வீட்டுக்கு வரதுக்குள்ள உனக்கு வேண்டிய துணிமணி, பேஸ்ட், பிரஸ், இன்னும் என்னன்னமோ பேக் பண்ணி வச்சிட்டா! இந்த குட்டியை தூக்கி வச்சிக்கிட்டே அவ்வளவும் செஞ்சிருக்கா!” என சொன்னான் நந்தா.
“உனக்கு சிம்ரன புடிச்சிருக்கா நந்தா?”
“அவள பிடிக்காம போகுமா!”
“மடையா! காதலிக்கற அளவுக்குப் பிடிச்சிருக்கா?”
“அதெல்லாம் ஒன்னும் இல்ல! வீணான கற்பனை எல்லாம் பண்ணாத நீ! என்னை சுருட்டி, துவைச்சுப் போடற அளவுக்கு இந்த சிம்ரன் பெரிய பருப்பு இல்ல! அந்த விஷயத்த விடு! சரி, உனக்கு பசிச்சிருக்கும்! காபிடேரியால எதாச்சும் இருக்கான்னு போய் பார்க்கறேன்” என கிளம்பி விட்டான் ரிஷி.
வெளியேறும் தன் தமையனின் முதுகையே புன்னகையுடன் பார்த்திருந்தாள் நந்தனா.
“சிம்ரன் பெரிய பருப்பு இல்லையாம்! பேச்சப் பாரு! எந்நேரமும் கண்ணு ரெண்டும் அவ மேலத்தான் ப்ரேக் அடிச்சு நிக்கிது! அவ கிட்டப் பேசறப்ப குரல் அப்படியே குழைஞ்சுப் போகுது! உடல் மொழியே மென்மையா மாறிடுது! இதுல வீணான கற்பனைன்னு என்னையே டபாய்க்கப் பார்க்கறான். பார்ப்போம் எவ்ளோ நாள் இந்த கண்ணாமூச்சி ஆட்டம்னு” என முணுமுணுத்தாள் ரிஷியின் சகோதரி.
மறுநாள் காலையில் தூங்கி எழுந்தது முதல், ரோஷினி ஒரே அழுகை. அம்மா கையில் ஏறும் ட்ரீப்ஸ் பார்த்து அழுகை, அடிக்கடி வந்துப் போகும் டாக்டர், நர்சைப் பார்த்து அழுகையேன படுத்தி எடுத்தாள். விழி பிதுங்கிப் போனது நந்தனாவுக்கும் சிம்ரனுக்கும்.
ஒரு மேரேஜ் ரிஜிஸ்ட்ரேஷனுக்கு சாக்லேட் ஆர்டர் குவிந்திருந்தது. மற்ற தொழில்கள் போல் இல்லையே உணவு தொழில்! குடும்பத்தில் என்ன நடந்தாலும் எடுத்த ஆர்டரை முடித்துக் கொடுத்தாக வேண்டுமே! வேறு வழி இல்லாமல் சிம்ரனை நந்தனாவுடன் இருக்கும்படி கேட்டிருந்தவன் வேலையைப் பார்க்க போயிருந்தான். இதெல்லாம் கேட்க வேண்டுமா என ரிஷியிடம் அவள் சண்டைப் பிடித்தது வேறு கதை.
மகள் படுத்திய பாட்டில், சிம்ரனை வீட்டுக்குப் போக சொல்லி விட்டாள் நந்தனா!
“சிம்மு! இங்க வச்சி சமாளிக்க முடியாது இவள! நீ வீட்டுக்குப் போய் அங்கயே இவள பார்த்துக்க! அவ பொம்மை, விளையாட்டு சாமான்லாம் பார்த்தா சரியாகிடுவா! என்னைத் தேடுவா தான்! நைட் வந்திருவேன்னு சொல்லி சமாளி. இங்கதான் நர்ஸ், டாக்டர்னு சுத்தி ஆளுங்க இருக்காங்க! பஸ்ஸர் அழுத்தன உடனே வந்துடுவாங்க! அப்புறம் என்ன கவலை! வீட்டுக்குப் போய் நீயும் ரெஸ்ட் எடு” என அனுப்பி வைத்து விட்டாள்.
நந்தனா ஹாஸ்பிட்டலில் இருந்த நாட்களில், இரவில் வேலையை முடித்து நந்தனாவைப் பார்த்து விட்டு, தமக்கை வீட்டு ஹாலிலேயே படுத்துக் கொள்வான் ரிஷி.
காபியைப் பருகியதால் தலை வலி சற்று மட்டுப்பட்டிருந்தது ரிஷிக்கு. அதன் பிறகு மறுபடியும் நந்தனாவைப் போய் பார்த்து விட்டு பைட் மீக்கு போனான். இரவு கடையடைத்து, டீவாவுக்கு உணவிட்டு, ஹாஸ்பிட்டல் போய் விட்டு நந்துவின் வீட்டை அடைந்தான். எப்பொழுதும் அவன் வரும் நேரம் இருவரும் உறங்கி இருப்பார்கள். அன்று சீனி பாப்பா இன்னும் ஹாலில் அமர்ந்து லேகோ வைத்து கட்டிடம் எழுப்பிக் கொண்டிருந்தாள். சிம்ரனும் அவளுக்கு உதவிக் கொண்டிருந்தாள்.
“தூங்கலையா ரெண்டு பேரும்?” என வந்தவனை நோக்கி ஓடி வந்தாள் சின்னவள்.
“இரு, இரு சீனிம்மா! மாமா ஹாஸ்பிட்டல் போய்ட்டு வந்துருக்கேன்! குளிச்சிட்டு வந்து தூக்கறேன்” என சொல்லிக் கொண்டே அவனுக்கென்று இருக்கும் ரூமுக்கு நடந்தான்.
“நந்து எப்படி இருக்கா?”
“நல்லா இருக்கா சிம்ரன்! தூங்கறா இப்போ” என சொல்லியபடியே உள்ளே நுழைந்துக் கொண்டான்.
அவன் குளித்து விட்டு வரும் நேரம், மணக்க மணக்க இஞ்சி டீ காத்திருந்தது.
“குடிங்க நந்தா சார்! ரொம்ப டயர்ட்டா இருக்கீங்க” என சொன்னாள் சிம்ரன்.
ஒரு நன்றியுடன் டீ மக்கை எடுத்துக் கொண்டான் ரிஷி. ஹால் சோபாவில் அவன் அமர, சின்னவள் அங்கிருந்த கார்ப்பேட்டில் படுத்தவாறே போத்தலில் பால் அருந்திக் கொண்டிருந்தாள். பால் போட்டலை ஒரு கை பிடித்திருக்க, இன்னொரு கை அவளது நாற்ற தலையணையை மூக்கில் வைத்து மோந்துக் கொண்டிருந்தது. அந்தக் குட்டித் தலையணை இல்லாமல் தூங்கமாட்டாள் சீனி பாப்பா. (வளர்ந்தும் கூட இன்னும் சிலர் சின்ன வயதில் பாவித்த பொம்மை, தலையணை, அல்லது எதாவது பொருளை இன்னும் பொக்கிஷமாக வைத்திருப்போம். என் மக மூனு வயசுல வாங்குன ஹஸ்கி டாக் பொம்மையை கையில வச்சிக்கிட்டுத்தான் தூங்குவா! என் தம்பிக்கு ஏழு கழுதை வயசாச்சு இன்னும் மடிப்பு கலையாம ஒரு கைலியை கையில பிடிச்சுட்டுத்தான் தூங்குவான். எனக்கு என்னோட போர்வை. கல்யாணத்துக்கு முன்ன இருந்தே வச்சிருக்கேன்! நஞ்சி போச்சு! அதே துணியில இன்னொரு போர்வை அம்மா குடுக்கவும்தான் கிழிஞ்சு போனத தூக்கிப் போட்டேன்! நீங்களும் கண்டிப்பா இப்படி எதாச்சும் வச்சிருப்பீங்க! செண்டிமெண்ட் இல்லைனா நாம மனுஷங்க இல்லை..ஹிஹி)
“இன்னைக்கு பகல்ல ரொம்ப நேரம் தூங்கிட்டா இவ! இப்போ படுக்க வச்சா, வேணான்னு அழறா! அதான் விளையாடட்டும்னு விட்டுட்டேன்” என சொன்னாள் சிம்ரன்.
“பரவாயில்ல விடு சிம்ரன். இப்பவே கண்ணு சொறுகுது! தூங்கிடுவா!” என அவன் சொல்லி வாய் மூடவில்லை, போத்தலை தூக்கி எறிந்து விட்டு அமர்ந்தாள் சீனி பாப்பா.
“மாமா, வெளாடலாம் வா! காஸல் செஞ்சி குடு மாமா! சிம்மு ஆண்டிக்கு செய்யவே தெரில” என அழைத்தாள் சின்னவள்.
டீயை அருந்தி முடித்தவன் அவ்வளவு களைப்பாக இருந்தும் மருமகளோடு விளையாட அமர்ந்தான்.
“மாமா இன்னிக்கு சீனி பாப்பா, மாமா கூட தூங்கி! சரியா?”
“அப்போ சிம்மு ஆண்ட்டி?”
“சிம்மு ஆண்ட்டி பாப்பாக்கூட தூங்கி! அம்மா எப்போ ஊசி போட்டு வருவாங்க? சீனி பாப்பா மிஸ் அம்மா” என சொல்லியவளின் உதடு பிதுங்கியது.
“சீக்கிரம் வந்துடுவாங்க செல்லம்” என சொன்னவன் அவளை தூக்கிக் கொண்டு அப்படியே கார்ப்பெட்டில் சரிந்தான்.
அவளுக்குப் பிடித்த கிச்சுகிச்சு மூட்டி அவளை சிரிக்க வைத்தான் ரிஷி. அழுகை மூடில் இருந்து சட்டென குஷி மூடுக்கு மாறினாள் சின்னவள். மாமனின் ஒரு பக்க கையில் படுத்துக் கொண்டே,
“சிம்மு ஆண்ட்டி! வாங்க! இங்க படுத்தா!” என அவனின் மறுபக்க கையைக் காட்டினாள் அந்தக் குட்டி.
“நானா? வேணாண்டா குட்டிமா” என மழுப்பினாள் சிம்ரன்.
“வாங்க!!!!” என இருவரின் காது கிழியும் அளவுக்கு கத்தினாள் சின்னவள்.
ரிஷியைப் பார்த்து வேர்க்குரு வந்த வேங்கை போல இளித்து வைத்த சிம்ரன்,
“மே ஐ கம்மின்?” என கேட்டாள்.
புன்னகையோடு தலையை ஆட்டினான் அவன். அவனது மற்றொரு கையில் ஒட்டியும் ஒட்டாமல் தலை வைத்துப் படுத்துக் கொண்டாள் சிம்ரன். காற்றாடியைப் பார்த்தவாறு மல்லாக்க படுத்திருந்தனர் மூவரும்.
சின்னவள் எதேதோ பேசிக் கொண்டிருந்தாள். இவர்கள் இருவரும் வெறும் உம் மட்டும் கொட்டிக் கொண்டிருந்தனர். அப்படியே குட்டி உறங்கிப் போக, எழ முயன்ற சிம்ரனை மெல்ல இழுத்து தன் நெஞ்சில் அவள் முகத்தை வைத்து இறுக்கிக் கொண்டவன்,
“எங்கள விட்டுட்டுப் போயிடு சிம்ரன்!” என்றான்.
‘இறுக்கிப் புடிச்சான் ஒரு புடி
பிறகு போக சொன்னா எப்புடி!!!!!!’
(உருகுவான்!!!)