UUU–EPI 14

103977454_653445081909496_2472649225753995686_n

UUU–EPI 14

அத்தியாயம் 14

சாக்லேட் சாப்பிடுவதால் முகத்தில் பரு வருகிறது என நம்பிக் கொண்டிருக்கிறோம் நாம். ஆனால் இன்று வரை அது நிரூபிக்கப்படவில்லை. முகத்தில் உள்ள எண்ணெயினாலும் பாக்டீரியாவினாலும் தான் முகப்பரு வருகிறது என ஆராய்ச்சி சொல்கிறது.

சிம்ரன் மெல்ல நிமிர்ந்து ரிஷியின் கண்களை ஏறிட்டு நோக்கினாள். அவளைத் தன் நெஞ்சோடு இறுக்கிக் கொண்டவனின் வாய் மட்டும் தான் போய்விடு எங்களை விட்டு என சொன்னது. கண்களோ எங்களுடனே காலமெல்லாம் இருந்து விடு என யாசித்தது.

மெல்ல அவன் இறுகிய அணைப்பில் இருந்து விலகியவள், கால்கள் இரண்டையும் கட்டிக் கொண்டு தாடையை கால் முட்டியின் மேல் வைத்து ரிஷியை ஆழ்ந்து நோக்கினாள். அவனும் அவள் முகத்தைத்தான் கண் கொட்டாமல் பார்த்தப்படி இருந்தான்.

கை நீட்டி சிம்ரனின் கால் விரல்களை ஒவ்வொன்றாய் வருடியவன்,

“என்ன சிம்ரன்? போயிடறியா?” என மெல்லிய குரலில் கேட்டான்.

“கண்டிப்பா போயிடுவேன் ரிஷி. எனக்கு கொஞ்சம் டைம் குடுங்க. நம்ம நந்துக்கு பேபி பொறந்து, அதோட முகத்தப் பார்த்த பிறகு, நானே போயிடுவேன்! அது வரைக்கும் என்னை விரட்டாதீங்க ரிஷி! ப்ளிஸ்!”

போய் விடுகிறேன் என அவள் சொன்னதும், நெஞ்சில் வலி வந்து பாரமாய் அழுத்தியது ரிஷிக்கு. அவன் கை விரல்கள் அவள் காலை இறுக்கிப் பிடித்தன. சின்னவள் மூச்சு விடும் சத்தம் மட்டும் தான் கேட்டது சற்று நேரம். இவர்கள் இருவரின் பார்வை ஒருத்தரை ஒருத்தர் கௌவி நின்றது.

சின்ன பெருமூச்சுடன்,

“ரவிபாரதி பத்தி சொல்லுங்க ரிஷி!” என கேட்டாள் சிம்ரன்.

கையில் படுத்திருந்த சின்னவளின் உச்சியில் மென்மையாய் முத்தமிட்டவன், சற்று நேரம் அமைதியாகவே இருந்தான்.

அவனிடம் இருந்து எந்த பதிலும் வராது என நினைத்து எழ முயன்ற சிம்ரனின் கைப்பற்றி நிறுத்தினான் ரிஷி.

“ஆரம்பத்துல இருந்து சொல்லறேன் சிம்ரன். உட்காரு! நாங்க மிடில் கிளாஸ் தான். அப்பா ஒரு எலெக்ட்ரோனிக் கம்பெனில மெய்ண்டேனேன்ஸ் வேலைல இருந்தாரு. அம்மா ஹவுஸ் வைப். அக்கம் பக்கத்துல எதாச்சும் விஷேசம்னா கேக் சாக்லேட்னு செஞ்சு கொடுத்து கொஞ்சம் சம்பாதிப்பாங்க. வரவுக்கு ஏத்த செலவுன்னு சரியா இருக்கும். அப்படியும் மாச கடைசில துண்டு விழும் பட்ஜெட்ல. நானும் நந்துவும் மட்டும்தான். வேற சிப்லிங்ஸ் யாரும் இல்ல. கஸ்டத்த சொல்லித்தான் வளத்தாங்க எங்க வீட்டுல. ஆனாலும் நாங்க சந்தோசமாத்தான் இருந்தோம். நாங்க ரெண்டு பேரும் ரொம்பவே ராப்பாட்(அந்நியோன்யம்). வயித்துக்குள்ள இருந்து ஒன்னாவே இருந்ததுனாலயா கூட இருக்கலாம். எல்லா வீட்டுலயும் பிள்ளைங்க அடிச்சுக்கற மாதிரி நாங்களும் அடிச்சுப்போம். ஆனா பத்து நிமிசத்துலயே சமாதானம் ஆகிடுவோம். எங்க ரெண்டு பேர் கிட்டயும் எந்த ஒளிவு மறைவும் இருந்தது இல்லை சிம்ரன். நந்து வயசுக்கு வந்தத கூட என் கிட்டத்தான் முதல்ல சொன்னா! ஆனா எனக்கு தெரியாம ஒன்னு மறைச்சு வச்சிருந்தானா, அது ரவிபாரதி விஷயம்தான்”

வாய் பாட்டுக்கு பேசிக் கொண்டிருந்தாலும் சிம்ரனைப் பிடித்தக் கையை மட்டும் விடவில்லை ரிஷி. அமைதியாகவே அவனைப் பார்த்திருந்தாள் சிம்ரன்.

“நந்தனா ரொம்ப நல்லா படிப்பா சிம்ரன். நான் அவரேஜ்தான். எனக்கு சந்தோஷமா ப்ரேண்ட்ஸ் கூட சுத்தறதுலயும், கேர்ள்ஸ்ங்க கூட கடலை போடறதுலயும், நந்துவ வம்பிழுக்கறதுலயும், அம்மாவ செல்லம் கொஞ்சறதுலயும், அவங்க கேக் சாக்லேட் செய்யறப்போ ஹெல்ப் செய்யற மாதிரி சாக்லேட் கலவயை நக்கி நக்கி சாப்புடறதுலயும் டைம் ஓடிடும். அப்பா எப்பவும் வேலை வேலை வேலைதான். ஓவர்டைம்னு சொல்லி கம்பேனியிலயே கிடப்பாரு. ஆனா நைட் வரப்போ எங்களுக்குன்னு சாப்பிட எதாச்சும் வாங்கிட்டு வருவாரு. தூங்கிட்டு இருந்தாலும் எழுப்பி ஊட்டி விடுவாரு. அவருக்கு என்னை விட நந்தனா மேல அவ்ளோ பாசம். அம்மாவுக்கு என் மேல சாப்ட் கார்னர். அம்மா உனக்குத்தான் செல்லம் குடுக்கறாங்கன்னு இவ கோச்சிப்பா, அப்பா உன்னைத்தான் கொஞ்சறாருன்னு நான் கோச்சிப்பேன். அப்புறம் டேன் மினிட்ல, நந்தாதான் என் செல்லம்னு வந்து நிப்பா! நந்துதான் என் சாயாங்னு நானும் அவளை சமாதானப்படுத்திடுவேன்.”

அவர்களின் பாசத்தைக் கேட்டு மெல்லிய புன்னகை வந்தது சிம்ரனுக்கு.

“என் ஸ்கூல் கேர்ஸ்ங்க எனக்கு அடிக்கடி கார்ட்ஸ், கிப்ட்ஸ், சாப்பாடுனு வாங்கிக் குடுப்பாங்க. அன்போட குடுக்கறத ஏன் வேணாம்னு சொல்லனும்னு நானும் வாங்கிப்பேன். வீட்டுல இதெல்லாம் சொல்லாம இருக்கனும்னா எனக்கும் குடுன்னு, எனக்கு வர சாக்லேட், சிப்ஸ், மியூசிக்கல் பாக்ஸ் இதெல்லாம் மிரட்டிப் புடிங்குக்குவா! ரெண்டு பேரும் ஒரே கிளாஸ்னால, என்னோட தில்லாலங்கடி எல்லாம் அவளுக்குத் தெரியும். சில சமயம் இவ கிட்டயே கூட கார்ட்ஸ், லவ் லெட்டர்லாம் குடுத்து விடுவாங்க. ஆனா அவளுக்கு மட்டும் எவனாச்சும் எதாச்சும் குடுத்தா போட்டு மிதிச்சிடுவேன் நான். அதனாலயே அடிக்கடி டிசிப்ளின் வாத்தி கிட்ட பிரம்படிலாம் வாங்கிருக்கேன்” சொல்லி புன்னகைத்தான் அவன்.

“அதாவது லவ், க்ரஷ்லாம் மேய்ண்டேய்ன் பண்ணற உரிமை ஐயாவுக்கு மட்டும் தான் இருக்கு! நந்துக்கு இல்ல! இவரு தங்கச்சிய மட்டும் யாரும் லவ் பண்ணக்கூடாது! ஊருல உள்ளவன் தங்கச்சிய எல்லாம் இவர் லவ் பண்ணுவாரு. என்ன நியாயம்டா சாமி!”

“அதெல்லாம் அப்படித்தான்! ஆம்பளையா பொறந்தவனுக்கு மட்டும் தான் என் பீலீங் புரியும்!” என புன்னகைத்தான் ரிஷி.

“யோவ் சேகர்! நீ சைட்டடிச்சது, கடலைப் போட்டது, காவிய காதல் பண்ணது எல்லாத்தையும் கேக்கற அளவுக்கு தெம்பு இல்ல எனக்கு! நந்து மேட்டருக்கு வரியா?” என கடுப்பாக சொன்னாள் சிம்ரன்.

“அடுப்புல எதாச்சும் வச்சிருக்கியா சிம்ரன்?”

“இல்லையே”

“என்னவோ கருகுற மாதிரி வாசம் வரல?” என சிரிப்புடன் கேட்டான் ரிஷி.

“தோடா! காலுக்கு போடுவோம் செருப்பு, ரிஷிக்கு ஓவர் நெனப்பு!” என சொன்னவள், தன் கையை அவன் பிடியில் இருந்து விடுவித்துக் கொண்டாள்.

அவன் கை மீண்டும் நகர்ந்து வந்து அவள் காலைப் பற்றிக் கொண்டது. பார்வையோ விட்டத்தை வெறித்திருந்தது.

“அப்போ, நாங்க இடைநிலைப்பள்ளி படிச்சு முடிச்சு, யூனிவெர்சிட்டிக்கு அப்ளை செஞ்சிருந்தோம் சிம்ரன். எனக்கு மேத்ஸ்லயும், சயின்ஸ்லயும் நல்ல மார்க் வந்திருந்தது. நந்து எல்லா சப்ஜேக்ட்லயும் ஸ்கோர் பண்ணியிருந்தா. யூனி ரிசல்ட்டும் வந்தது. எனக்கு வேற யூனிலயும் நந்துக்கு வேற யூனிலயும் இடம் கிடைச்சது. நம்ம ஆளுங்களுக்கு யூனி கிடக்கறது சுலபம் இல்லையே அந்த டைம்ல! எங்கள பெத்தவங்களுக்கு அவ்ளோ மகிழ்ச்சி. எங்கள கட்டிப்புடிச்சு கொண்டாடிட்டாங்க. எனக்கும் நந்துவுக்கும் பிரிஞ்சு இருக்கனுமேனு ஒரே கவலை. வாழ்க்கையோட எதார்த்தத்த ஏத்துக்கிட்டு புதிய பாதைல பயணிச்சோம்.”

கண்களை இறுக மூடிக் கொண்டவன்,

“எங்க யூனி லைப் முதல் வருஷ முடிவுல, அப்பாக்கிட்ட இருந்து போன் வந்தது. எப்போதும் போல உற்சாகமா பேச ஆரம்பிச்சேன்! ஆனா அதுதான் நான் உற்சாகமா, துரு துருன்னு இருந்த கடைசி நிமிடங்கள்னு எனக்குத் தெரியாம போச்சு.” என்றான்.

“ஏன், என்னாச்சு ரிஷி?” பதட்டமாகக் கேட்டாள் சிம்ரன்.

“அம்மா எங்கள விட்டுட்டுப் போயிட்டாங்க சிம்ரன்” தொண்டையடைக்க சொன்னான் ரிஷி. அந்த துக்க சம்பவம் அப்பொழுதுதான் நிகழ்ந்தது போல, கண்ணில் கண்ணீர் வழிந்தது ரிஷிக்கு. அவனை நெருங்கி அவன் கன்னத்தைத் துடைத்து விட்டாள் சிம்ரன்.

“ஐம் சாரி ரிஷி”

கண்ணைத் திறந்து அவளைப் பார்த்தான் அவன். இரண்டு கண்களும் சிவந்துப் போய் கிடந்தன.

“அவங்களுக்கு ப்ரெஸ்ட் கான்சர்! சாதாரண கட்டி தான்னு அப்படியே விட்டுட்டாங்க. ரொம்ப வலி வந்து ஹாஸ்பிட்டல் போனப்போ, தேர்ட் ஸ்டேஜ்னு சொல்லிட்டாங்க. வலி அப்பப்போ இருந்தும், அவங்க அதை இக்னோர் பண்ணிருக்காங்க. நாங்க கல்வி கடனுதவில படிச்சாலும், புக்ஸ், சாப்பாடு, ஹாஸ்டல் செலவுன்னு மூச்சு முட்டிப் போய் தான் இருந்தாங்க ரெண்டு பேரும். இதுல இவங்க வேற கஸ்டத்தக் குடுக்கனுமான்னு அப்பா கேட்டப்பலாம், சாதாரண கட்டித்தான்னு சொல்லிருக்காங்க. அவரும் சீன மருந்து கடையில நாட்டு மருந்துலாம் வாங்கிக் குடுத்துருக்காரு. கடைசில மயக்கம் போட்டு விழவும் தான் கவர்மேண்ட் ஹாஸ்பிட்டல்ல சேர்த்துருக்காரு! வீட்டுக்கு வந்துடுவாங்க, எங்க கிட்ட சொல்லி பயப்படுத்த வேணாம்னு இருந்துருக்காரு அப்பா. கடைசில பெட்டில தான் கொண்டு வந்தாங்க.”

சட்டென அவனின் மறுபக்கம் படுத்துக் கொண்டவள், மெல்ல அவன் நெஞ்சை நீவி விட்டாள். அவள் வாய் மட்டும் ஐம் சாரி ரிஷி என முணுமுணுத்துக் கொண்டே இருந்தது. சற்று நேரம் அப்படியே இருந்தார்கள் இருவரும்.

“காரியம் எல்லாம் முடிஞ்சதும் நந்து அப்பாவ விட்டுட்டு திரும்பவும் படிக்கப் போக மாட்டேன்னு அடம் புடிச்சா! நானோ என் செல்ல அம்மா இல்லாத வெறுமையான வீட்டப் பார்த்து பார்த்து, அவங்க போட்டோவ புடிச்சுக்கிட்டு கண்ணீர் விட்டுட்டே இருந்தேன். அப்பாத்தான் எங்கள கெஞ்சி, மிரட்டி உருட்டி மறுபடி யூனிக்கு அனுப்பி வச்சாரு. தினம் நாங்க ரெண்டு பேரும் போன் போட்டு பேசுவோம் அவருக்கு. ஆனாலும் அவரோட நடவடிக்கையை எங்களால கண்டுப்புடிக்க முடியல. வெளிய காட்டிக்கலனாலும் அம்மாவும் அப்பாவும் ரொம்ப அந்நியோன்யம். வார்த்தையாலயோ, செயலாலயோ காட்டிக்கலனாலும் அவங்க இடையே இருந்த அன்பையும் அக்கறையையும் எங்களால உணர முடியும். அம்மா இல்லாம அப்பா பிகேம் என் அல்கஹோலிக். தினம் குடிக்க ஆரம்பிச்சிருக்காரு. எங்க ரெண்டு பேருக்குமே அது தெரியல. நாங்களும் இல்லாத தனிமை வேற. யூ க்நோ சிம்ரன், ஆம்பளைங்க அவங்கதான் எல்லாத்தையும் தாங்கி குடும்பத்த கொண்டு வரோம்னு மார் தட்டலாம். ஆனா அந்த குடும்பத்தத் தாங்கிப் புடிக்கற வேர் அம்மாத்தான். அவங்க இல்லைனா ஆலமரமே ஆனாலும் அப்படியே சாஞ்சிடும். எங்கப்பாவும் சாஞ்சிட்டாரு. அம்மா போன ஒரே வருஷத்துல அவரும் போய்ட்டாரு. நாங்க ரெண்டு பேரும் அனாதையா நின்னோம்”   

சிம்ரனுக்கும் கண்கள் கலங்கியது. கண்களில் நீரோடு, ரிஷியை நிமிர்ந்துப் பார்த்தாள்.

“ம்ப்ச்! உன்னையும் அழ வச்சிட்டேன் பாரேன்” என கவலையாக சொன்னவன், அவள் கன்னத்தைத் துடைத்து விட்டான். அவர்கள் அருகே படுத்திருந்த குட்டி இவர்களின் அசைவில் முண்டினாள். தன் கையில் இருந்து அவளை மெல்ல இறக்கி கார்ப்பேட்டில் வசதியாகப் படுக்க வைத்தான் ரிஷி. பின் சற்று நகர்ந்து சோபாவில் சாய்ந்து அமர்ந்துக் கொண்டான் அவன். இவளும் அவனை நெருங்கி அப்படியே அமர்ந்துக் கொண்டாள். அவன் கையை எடுத்து தன் கைகளுக்குள் பொத்தி வைத்துக் கொண்டாள் சிம்ரன்.

“எனக்கு நீ உனக்கு நான்னு ஆகிருச்சு எங்க நிலைமை. எங்க பந்தம் இந்த துக்கத்துனால இன்னும் இறுகிடுச்சு. என்ன செய்யன்னு யோசிச்சு, நாங்க இருந்த வீட்ட அப்படியே சேவாக்கு(வாடகைக்கு) விட்டோம். இன்னும் வீட்டு மேல கடன் இருந்துச்சு. வந்த வாடகைப் பணத்தை அப்படியே வீட்டு கடனுக்கு கட்டனோம். இங்க பல இந்தியர்கள் போலவே எங்கப்பாவும், அவரோட ஈ.பி.எப்(மத்திய சேமநிதி)கு வாரிசை நியமிக்காம விட்டுட்டாரு. அங்கயும் இங்கயும் அலைஞ்சு அதுக்கு எழுதி போட்டோம். காசு கைக்கு வர வரைக்கும் சாப்பிட, ஹாஸ்டல் பீஸ் கட்டன்னு தவிச்சுப் போயிட்டோம். அப்போ தெய்வமா எங்க லைப்ல வந்தவருதான் ரவிபாரதி. நந்தனாவோட சீனியர்.”

“ரவிபாரதி” பெயரை உச்சரிக்கும் போதே தொண்டைக் கட்டியது அவனுக்கு.

“கொஞ்ச நாளா நந்து கையில பணப்புழக்கம் இருந்தது. எனக்கு அடிக்கடி பேங்க்ல காசு போட்டா! ஐ வாஸ் லைக் சஸ்பிசியஸ். ரொம்ப பயமா இருந்தது சிம்மு. எங்க யூனிலயே செலவுக்கு காசு பத்தலன்னு கேசுவலா பாய்ஸ் கூட ரிலேஷேன்ஷிப் வச்சிக்கறது, அவங்க கூட பப் போகறதுன்னு நெறைய பொண்ணுங்க இருந்தாங்க. என் நந்து எனக்காக இப்படி எதாச்சும் வகையில சம்பாதிக்கறாலான்னு மனசு அடிச்சுக்கிச்சு! அவ கிட்ட சொல்லாமலே ஓன் டைம் அவள பார்க்க அவளோட யூனிக்கு போயிருந்தேன். அங்கிருந்த கார் பார்க்கிங்ல, கார் மேல ஒருத்தன் சாஞ்சிருக்க இவ அவன் தோள்ல சாஞ்சு நின்னுட்டிருந்தா. எனக்கு அப்படி ஒரு கோபம். பாஞ்சு போய் ஒரே குத்து, மூக்குல. ரத்தம் பொல பொலன்னு கொட்டிருச்சு. நந்து அதிர்ச்சில கத்த, நான் அவன் சட்டைய பிடிச்சு உலுக்கிட்டேன்! என் கைய ரெண்டையும் இறுக்கிப் புடிச்சிக்கிட்டு, அந்த சிட்டுவேஷன்லயும் புன்னகையோட ‘என்ன மச்சான் என் மேல இவ்ளோ வெறித்தனமான பாசம்னு’ கேட்டாரு! அவர் தான் ரவிபாரதி. நந்துவோட சீனியர். படிச்சு முடிச்சுட்டு அப்போத்தான் வேலைப் பார்க்க ஆரம்பிச்சிருந்தாரு.”

ரவிபாரதியின் பெயரைக் கேட்டதும் சிம்ரனுக்கு கண்கள் கலங்கியது. நந்துவை நெருங்கி அவன் தோளில் தன் தலையை சாய்த்துக் கொண்டாள். அவள் தோளை சுற்றி தன் கரத்தைப் போட்டு வளைத்துக் கொண்டான் ரிஷி.

“தென் ஒன்லி ஐ க்நோ, அவங்க ரெண்டு பேரும் ரொம்ப நாளாகவே லவ் பண்ணறாங்கன்னு. பெத்தவங்க இழப்புல இருந்து அவள தேத்தி, படிப்புல அவ கவனத்தைத் திசை திருப்பி, சரியான டைம்ல சாப்பிட வச்சு அவ நலத்தைப் பேணி கண்ணுக்குள்ள வச்சிப் பார்த்துருக்காரு சீனியர். அவ செலவு முழுக்க அவரேப் பார்த்திருக்காரு. வேலைக்குப் போக ஆரம்பிச்சதும் என் செலவயும் ஏத்துக்கிட்டாருன்னு எனக்கு அப்புறம் தான் தெரிஞ்சது. என் கிட்ட எதையும் சொல்லாம மறைச்சிட்டா நந்துன்னு எனக்கு ரொம்ப அப்செட். எப்படிலாம் ஒன்னு மண்ணா வளந்தோம். என் கிட்ட எப்படி மறைச்சான்னு ஆதங்கம். சீனியர் தான் அவளோட நிலமைய விளக்கனாரு.”

“‘நான் ரொம்ப நாளா ரதிய ஃப்போலோ பண்ணறேன் நந்தா. அவ என்னைத் திரும்பி கூட பார்க்கல. தான் உண்டு தன் வேலை உண்டுன்னு தான் இருப்பா. அம்மாவோட இறப்பு அவள ரொம்ப பாதிச்சிருச்சு! அந்த நேரத்துல மனசொடிஞ்சு போய் இருந்தவளுக்கு ஆறுதலா நான் நாலு வார்த்தைப் பேசவும், என்னை ப்ரேண்டா ஏத்துக்கிடா. போக போக என்னோட அன்பும், அரவணைப்பும் அவளுக்குள்ளயும் காதலை வரவச்சது. அப்பத்தான் அப்பாவோட இறப்பும் நிகழ்ந்தது. திரும்பி இங்க வந்தப்போ, முழுசா டிப்ரெஷன்ல இருந்தா. கொஞ்ச கொஞ்சமா அவள வெளிய கொண்டு வந்தேன். அவளுக்கு ரொம்ப தயக்கம் நந்தா! எங்க லவ்வ உன் கிட்ட சொன்னா, பெத்தவங்க இறந்த இவ்ளோ சீக்கிரத்துல உன்னால எப்படி அவங்கள மறந்து லவ் பண்ண முடிஞ்சது? அவ்ளோ செல்பிஸா நீன்னு கேட்டுருவியோன்னு ரொம்ப பயந்தா. அது தான் காரணம் உன் கிட்ட இருந்து மறைக்க. உங்க சொந்தமெல்லாம் ஒதுக்கி வச்சதும், அவளுக்குன்னு இருக்கறது நீ மட்டும் தானே! அவ உன் மேல உயிர வச்சிருக்கா நந்தா. என் ரதி உயிர வச்சிருக்கற உன் மேல நானும் உயிர வச்சிருக்கேன்’ அப்படின்னு அவர் சொன்னதும் பாஞ்சு அணைச்சிக்கிட்டேன் அவர. அதுக்குப் பிறகு எனக்கு எல்லாமே சீனியர் தான். செமஸ்டர் ப்ரேக்ல அவர் கூட அவர் அபார்ட்மேண்ட்ல தான் தங்கிப்பேன். அப்பா காசு எங்களுக்கு கிடைக்கற வரைக்கும் எங்களுக்கு செலவு செஞ்சது எல்லாமே சீனியர் தான்.”

“அப்புறம்?” குரல் நடுக்க கேட்டாள் சிம்ரன்.

“யூனி லைப் முடிச்சு நான் வேலைப் பார்க்க ஆரம்பிச்சேன். நந்து தமிழ் டீச்சர் ஆகனும்னு மக்தாப்(டீச்சர் ட்ரைனிங்) சேர்ந்தா. அவ படிச்சு முடிச்சதும் ரெண்டு பேரும் கல்யாணம் செஞ்சிக்கிட்டாங்க. சீனியர் சைட்ல யாருக்கும் அவர் ஒரு அனாதைய கட்டிக்கறதுல இஸ்டம் இல்ல. தண்ணி தெளிச்சு விட்டுட்டாங்க. ஆனா இவங்க ரெண்டு பேரும் ரொம்ப சந்தோஷமா இருந்தாங்க. நந்துவுக்கு கேமரன்ல உள்ள ஸ்கூலுல போஸ்ட்டிங் கிடைக்கவும், வீட்ட இங்க வாங்கிட்டு வந்துட்டாங்க ரெண்டு பேரும். சீனியர் கோலாலம்பூர்ல இருந்த பெரிய ஆர்கனைசேஷன்ல வைஸ் பிரசிடெண்ட்டா இருந்தாரு. பிஸ்னஸ் கொண்டு வரதுதான் அவர் வேலை. பாதி நாள் வீட்டுல தான் நந்துக்கு சமைச்சு வச்சிக்கிட்டு இருப்பாரு. மீதி நாள் நாடு விட்டு நாடு, மாநிலம் விட்டு மாநிலம்னு ட்ரவல்தான். லீவ்கெல்லாம் நான் வந்துடுவேன். ஒரே ஜாலிதான். சுத்தோ சுத்துன்னு சுத்துவோம். நந்துவ உட்கார வச்சி சமைச்சுப் போடுவோம். எங்க சந்தோஷத்துக்கு எல்லாம் முத்தாய்ப்பா வந்தா எங்க சீனி பாப்பா. ஹேப்பி பேமிலி நாங்க! எனக்கும் கல்யாணம் செஞ்சு வைக்கனும்னு சொல்லிட்டு இருப்பா நந்து. அவனாச்சும் கொஞ்சம் நாள் சந்தோஷமா இருக்கட்டுமே ரதின்னு வம்பிழுப்பாரு சீனியர். என் முன்னுக்கே அடிதடி நடக்கும். நான் நந்து சைட் சேர்ந்துட்டு அவருக்கு ஓசியடி குடுப்பேன். அடேய் உனக்கு சப்போர்ட் பண்ணா எனக்கே ஆப்பு வைக்கறியான்னு சிரிப்பாரு. சும்மா ஏனோதானோன்னு வேலை செய்யறியே, உனக்கு எதுல இண்டெரெஸ்ட்னு ஒரு நாள் கேட்டாரு சீனியர். நல்லா பணம் சம்பாரிக்கனும் சீனியர், நம்மள ஒதுக்கி வச்சவங்க முன்னுக்கு வாழ்ந்து காட்டனும்னு சொல்லி, சாக்லேட் செய்யறதுலயும் கபே வைக்கறதுலயும் தான் எனக்கு இண்டெரெஸ்ட் இருக்குன்னு சொன்னேன். அவர்தான் நம்ம ‘பைட் மீ’ய வாங்க முன்பணம் குடுத்தாரு. மீதிய அவர் பேர்ல பேங்க் லோனா எடுத்துக் குடுத்தாரு.  அதோட படிச்சுட்டு வான்னும் அனுப்பி வச்சாரு. பணம் அவங்க ரெண்டு பேரும் அனுப்ப, நான் ஹேப்பியா இத்தாலில ஒரு ஷோர்ட் கோர்ஸ் செஞ்சேன். மலேசியாவுலயும் பேஸ்ட்ரி கோர்ஸ் படிச்சேன்”

அந்த இனிமையான நாட்களை எண்ணி அவன் முகம் இளகி கிடந்தது.

“அவர் முகத்துல எந்நேரமும் புன்னகை இருக்கும் சிம்ரன். பேரா மாநிலத்துக்கு வோர்க் ட்ரீப் போனவர, அதே புன்னகை முகத்தோட பெட்டியில வச்சித்தான் அனுப்பனாங்க. ரோட் ஆக்சிடேண்ட்.” என கண் கலங்கினான் ரிஷி.

அவனை இறுக அணைத்துக் கொண்டாள் சிம்ரன். அவள் உடலும் அழுகையில் குலுங்கியது. இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டனர்.

“கண்ண கட்டி காட்டுல விட்ட மாதிரி தவிச்சுப் போயிட்டோம். எங்க வாழ்க்கையே சீனியர சுத்திதான் இருந்துச்சு. அவர் போனதும் துடுப்பில்லாத படகு போல தத்தளிச்சோம் நாங்க. ஓஞ்சிப் போன நந்துவ என்னால தேத்திக் கொண்டு வரவே முடியல. சோர்ந்து சோர்ந்து மயங்கனா. அப்புறம் தான் அவ கேரியிங்கா இருக்கான்னு தெரிஞ்சது. அன்னைக்கு அவ அழுத அழுகை! யப்பப்பா! கொடுமை சிம்ரன். சீனி பாப்பாவ சரியா கவனிக்கறது இல்ல, அவளயே சரியா கவனிச்சிக்கிறது இல்ல! எந்நேரமும் விட்டத்த வெறிச்சிக்கிட்டு இருக்க ஆரம்பிச்சா! இப்படியே விட்டா சரியா வராதுன்னு ஒரு ட்ராமா போட்டேன். நீ தான் என்னோட தைரியம், நீதான் என்னோட உந்துசக்தி, நீ இப்படி இருக்கறப்போ எனக்கு ஒன்னும் முடியல. செத்துப்போகலாம் போல இருக்குன்னு பயம் காட்டுனேன். பொண்ணுங்களுக்குத்தான் தன்னை சார்ந்த ஆண்களுக்கு எதாச்சும்னா தாய்மை ஊற்றெடுக்குமே! எனக்காக சட்டுன்னு தேறிக்கிட்டா! தப்புத்தான்! என்னால சமாளிக்க முடியாத மாதிரி நடிச்சு அவள ஏமாத்தனது தப்புத்தான். மூனு உயிர காப்பாத்த எனக்கு வேற வலி தெரியல. அன்னைக்கு இருந்து இன்னை வரை அவளால தான் நான் நடமாடறேன்னு நம்ப வச்சிக்கிட்டு வரேன். எனக்கு அவ உயிரோட மட்டும் இல்ல, உயிர்ப்பா வேணும் சிம்ரன். என்னை மகன் மாதிரி பார்த்துக்கிட்டாரு சீனியர். அவ்ளோ பாசம் என் மேல. அதே போல அவரோட பிள்ளைங்கள கண்ணுக்குள்ள வச்சிப் பார்த்துக்கனும்னு நெனைக்கறேன் சிம்ரன்.”

மெல்ல தொண்டையை செறுமியவன்,

“நீ என்னோட பாதைய மாத்தி அமைக்கப் பார்க்கற சிம்ரன். நந்து, சீனி பாப்பா, வயித்துல உள்ள பேபி மட்டும் தான் என் சிந்தனையில இருந்தாங்க. இப்போ கொஞ்ச நாளா அதுல நீயும் இணைஞ்சு வர. எப்படி விரட்டுனாலும் திரும்ப திரும்ப வர. எனக்கு பயமா இருக்கு சிம்ரன். என் லைப்ல பொண்ணு ஒருத்தி வந்தா, என் கடமையில இருந்து தவறிடுவனோன்னு பயமா இருக்கு. எனக்குன்னு பிள்ள குட்டிங்க வந்துட்டா, இவங்க ரெண்டு பேரையும் இக்நோர் பண்ணிடுவேனோன்னு பயமா இருக்கு சிம்ரன். பைத்தியக்காரத்தனமாத் தோணலாம் உனக்கு, ஆனா தன் ரத்தம்னு வரப்போ, தங்கச்சி பிள்ளைங்க ரெண்டாம் பட்சமா போறது இயற்கையா மனித வாழ்வுல நடக்கறது தானே! உன் மேல உள்ள ஆசையினாலயும், இவங்க மேல உள்ள பாசத்துனலாயும் நான் தெனம் தெனம் செத்துட்டு இருக்கேன் சிம்ரன். உன்னை விடவும் முடியல, போன்னு ஒதுக்கவும் முடியல. நான் என்ன சிம்ரன் செய்யட்டும்?” என அவளையே பதில் சொல்லும்படி கரகரப்பான குரலில் கேட்டான்.

“நமக்குள்ள எதுவும் வேண்டா ரிஷி! நீ நந்துவயும் பிள்ளைங்களயும் பாரு! நான் சீக்கிரம் போயிடறேன் உன்ன விட்டு! இந்த ஆசை, சலனம் எல்லாம் என்னோடயே உன்னை விட்டுப் போயிடும்” என மெல்லிய குரலில் சொன்னவள், எழுந்து நின்றாள்.

அவள் கையைப் பற்றியவன், ஏக்கமாய் அவள் முகத்தைப் பார்த்தான்.

“என்னடா ரிஷி!” இவள் குரலிலும் கரகரப்பு.

ஒன்றும் இல்லை என்பது போல தலையை ஆட்டினான். கண்கள் மட்டும் அவள் முகத்தை விட்டு அகலவில்லை. அதில் அவ்வளவு துயரம். சட்டென மடங்கி அமர்ந்த சிம்ரன், அவன் முகத்தை ஏந்தி அதில் ஈர முத்தங்களால் குளிப்பாட்டினாள். கண்களை மூடி அமைதியாய் அவள் கொடுத்ததைப் பெற்றுக் கொண்டான் ரிஷி.

“கண்ண திற ரிஷி”

மெல்ல கண் விழித்துப் பார்த்தான் அவன்.

“இத உன் காதலோட மூடு விழா பரிசா வச்சிக்கோ!” என்றவள் அவன் உதட்டில் அழுந்த முத்தமிட்டாள். அவன் கை உயர்ந்து அவள் தலை முடியை அளைந்தது. இருவரும் தங்கள் உயிரையும் உணர்வையும் ஊற்றி அதை முத்தத்தின் வாயிலாக பரிமாறிக் கொண்டார்கள்.

சட்டென விலகிய சிம்ரன், கலங்கிய கண்களோடு மெல்ல புன்னகைத்தாள்.

“ஸ்கூல் போலன்னா அடிப்பாங்க மிஸ்

யப்பா செம்ம ஸ்வீட் டா உன்னோட கிஸ்” என மெல்லிய குரலில் சொன்னாள் சிம்ரன்.

புன்னகையுடன், மீண்டும் வேண்டும் என்பதைப் போல அவளை தன் புறம் இழுத்தான் ரிஷி. சட்டென விலகி எழுந்தவள், குட்டியை அள்ளிக் கொண்டு ரூமிற்குள் நுழைந்துக் கொண்டாள்.

“சிம்மு ஆண்ட்டி!” எனும் தூக்கக் கலக்கத்தில் இருந்த குரல் அவளை தன் சுயநினைவுக்குக் கொண்டு வந்தது. அன்று நடந்த நிகழ்வுகளின் தாக்கத்தில் இருந்து தன்னை மீட்டுக் கொண்டவள், சின்னவளை ஏறிட்டுப் பார்த்தாள்.

“மழை ஆண்ட்டி, இடி டொங் டொங்னு! பயந்துப் போய்ட்டேன் சீனி பாப்பா”

புன்னகையுடன் சின்னவளை அள்ளிக் கொண்டாள் சிம்ரன். வளையல் நிறைந்த தட்டையும், பல வகையான கலந்த சாதம் இருந்த தட்டுக்களையும், ஹாலில் செய்திருந்த அலங்காரத்தையும் வாய் பிளந்துப் பார்த்தாள் குட்டி.

“இதெல்லாம் என்ன?”

“இது அம்மா வயித்துல இருக்காங்களே குட்டி பேபி, அவங்களுக்கு பேர்த்டே மாதிரி ஒரு செலெப்ரேஷன்”

“பாப்பா அம்மா வயித்துல இருக்கே, எப்டி கேக் கட் பண்ணும்?”

“அது வந்து..” என முழித்தாள் சிம்ரன்.

“பேபி வெளிய வந்து உங்கள மாதிரி பிக் ஆனதும் தான் கேக் கட் பண்ணும் சீனீ பாப்பா! இப்போ அம்மாவும் நீங்களும் கட் பண்ணுவீங்களாம், பேபி அம்மா சாப்பிடறத ஷேர் பண்ணிப்பாங்களாம்!” என சொன்னான் ரிஷி.

ட்வீன்ஸ் இருவரும் ஷாப்பிங் முடித்து நனைந்துப் போய் வந்திருந்தார்கள். வந்தவர்கள் வீட்டில் நடந்திருந்த வளைக்காப்பு ஏற்பாட்டில் ஆனந்த அதிர்ச்சியில் இருந்தார்கள். இவள் பார்ட்டி எனவும் ஷாப்பிங் முடித்து, ரிஷி அவன் பங்குக்கு ‘பைட் மீ’யில் இருந்து கேக் எடுத்து வந்திருந்தான்.

“என்ன சிம்மு இதெல்லாம்!” என கண் கலங்கினாள் நந்தனா.

“உங்களுக்கு பேங்கள் செரமோனி செஞ்சுப் பார்க்கனும்னு எனக்கு ஆசையா இருந்தது நந்து. சொன்னா விடுவீங்களோ என்னமோன்னு தான் நானே ஏற்பாடு செஞ்சேன். கண் கலங்கி, செண்டிமேண்ட் சீன் போடலாம் இப்போ டைம் இல்ல. ஓடுங்க, குளிச்சிட்டு நல்லா எதாச்சும் உடுத்திட்டு வாங்க” என விரட்டினாள் சிம்ரன்.

அவளின் பிடிவாதத்தில், மெல்லிய புன்னகையுடன் குளிக்கப் போனாள் நந்து. மகளையும் கூடவே குளிக்க வைக்க அழைத்துப் போனாள்.

அவர்கள் இருவரின் தலை மறைந்ததும் சிம்ரனின் கிட்டே நெருங்கினான் ரிஷி. அவனைப் பார்த்து இடுப்பு வலி வந்த ஹிப்போ(ஹிப்போபோட்டமஸ்) போல இளித்து வைத்தாள் சிம்ரன். அவள் இளிப்பில் அவனுக்கும் புன்னகை வந்தது. தலையை இடமும் வலமும் ஆட்டினான். நனைந்திருந்த முடியில் இருந்த நீர்த்துளிகள் அவள் கன்னத்தில் பட்டுத் தெறித்தன.

“என்ன ரிஷி இது, சின்னப்புள்ள மாதிரி!” என திட்டியவள், முகத்தைத் துடைக்க கைத் தூக்கினாள். அவனே மிக மிக மென்மையாக அவள் கன்னத்தைத் துடைத்து விட்டான்.

“தேங்க்ஸ்டி இந்த ஏற்பாட்டுக்கு.”

“டி யா?”

“ஹ்ம்ம்”

“என்ன சார்! காதலுக்கு மூடு விழா பண்ணி சீல் வச்சாச்சுல்ல! அப்புறம் என்ன டி வேண்டி கிடக்கு!” என முனகினாள் சிம்ரன்.

“எத்தனை தடவை சீல் வச்சாலும், அது பொத்துக்கிட்டு வெளியே வருதே! நான் என்னடி செய்யட்டும்!”

“நோ ரிஷி! இதெல்லாம் சரி வராது நமக்குள்ள”

“வரும்! நான் நல்லா யோசிச்சுட்டேன்! என்னால உன்னை விட முடியாதுடி! உன்னை விட்டுட்டா நான் வெறும் கூடா ஆகிடுவேன். அப்புறம் எங்கிருந்து நந்துவையும் பிள்ளைங்களையும் பார்த்துக்கறது! இனிமே உன் கூடவே, உன் கையைப் புடிச்சுக்கிட்டே எல்லாத்தையும் ஒன்னா கடந்து வரலாம்னு முடிவு பண்ணிட்டேன். உன்னை விட யாருடி, எங்கள இவ்ளோ நல்லா பார்த்துப்பா!” என அவள் கன்னத்தை மென்மையாக வருடியபடியே கேட்டான் ரிஷி.

“இல்ல ரிஷி! சொன்னா கேளுங்க” என அவன் வருடலில் மயங்கியப்படியே மெல்லிய குரலில் மறுத்தாள் சிம்ரன்.

“மாமா” என ஓடி வந்தாள் குட்டி. சட்டென நகர்ந்தவன்,

“இன்னிக்கு நைட் நம்ம ரெண்டு பேரும் பேசறோம்! மனசு விட்டுப் பேசறோம். ஐ லவ் யூ சிம்மு வித் மை ஹார்ட் அண்ட் சோல்! ஐ காண்ட் லீவ் விதவுட் யூ!” என மெல்லிய குரலில் சொன்னவன் விலகி நடந்தான்.

விலகிப் போனவனையே கண்களில் நீருடன் பார்த்திருந்தாள் சிம்ரன்.

குளித்து வந்த நந்தனாவை நாற்காலியில் அமர்த்தி இவர்கள் இருவரும் அவளுக்கு வளை அடுக்கி மகிழ்ந்தனர். சீனி பாப்பாவும், நான் நான் என தன் அம்மாவுக்கு வளையலைப் போட்டு விட்டாள். பொங்கல், புளியோதரை என அங்கிருந்த கலந்த சாதங்களை மாற்றி மாற்றி ஊட்டி விட்டார்கள் அவளுக்கு.

சீனி பாப்பா வயிற்றில் இருந்த சமயத்தில் செய்த வளைக்காப்புக்கு, ரவி பாரதி வளையலிட்டப்படியே பாடிய

‘தங்க நிலவுக்குள் நிலவொன்று

மலருக்குள் மலர் என்று வந்ததே’ ஞாபகம் வந்து நெஞ்சை அடைத்தது நந்தனாவுக்கு. தன்னை சுற்றி மகிழ்ச்சியாக இருப்பவர்களுக்காக கண்ணீரை முயன்று அடக்கினாள் அவள்.

சிரிப்பும் கும்மாளமுமாக நேரம் செல்ல, திடிரென வயிற்றைப் பிடித்துக் கொண்டு வீறிட்டாள் நந்தனா. சற்றும் எதிர்ப்பார்க்காத இந்த நேரத்தில் பனிக்குடம் உடைந்து தரை நனைந்துப் போனது.

“ஓ மை காட்! ஓ மை காட்” என பதட்டத்துடன் சொல்லியவாறே நந்தனாவைத் தாங்கினாள் சிம்ரன்.

“இன்னும் நாள் இருக்கே! அதுக்குள்ள எப்படி!” என முனகியவள்,

“ரிஷி கால் தி ஆம்புலன்ஸ். குவிக்!” என சொன்னாள். வெளியே மழை அடித்து ஊத்தியது.  

ரிஷி பயந்துப் போயிருந்த குழந்தையைத் தூக்கிக் கொண்டே ஹாஸ்பிட்டலுக்கு போன் செய்ய முற்பட்டான். இவர்கள் வீட்டுக்கு வரும் போதே கடும் மழை. அங்கங்கே மண் சரிவு வேறு. கேமரானில் மழை அடித்து ஊற்றும் சில சமயங்களில் மண் சரிவு ஏற்பட்டு பாதைகள் மூடப்படுவது சகஜம்தான்.

சிம்ரனோ,

“டோண்ட் பேனிக் நந்து! பீ கால்ம். மூச்ச இழுத்து விடு” என சொல்லியபடியே அவளை மெல்ல நடத்திப் போய் படுக்கையில் விட்டாள். படபடவென நந்தனாவின் மெட்டர்னிட்டி சட்டையை மேலே ஏற்றியவள், நனைந்துப் போய் இருந்த பேண்ட்டிசை கலட்டிப் போட்டாள்.

“சிம்மு, என்ன செய்யற நீ!” என வலியைப் பொறுத்துக் கொண்டு அரற்றினாள் நந்து.

“ரிலேக்ஸ் நந்து! பயப்படாதே” என்றவள் குனிந்து அவளை செக் செய்ய முயன்றாள். அப்படியே பூமி ஒரு முறை சுழன்று பின் நேரானது அவளுக்கு. தலையை உலுக்கிக் கொண்டு,

“யூ கென் டூ இட்” என மீண்டும் மீண்டும் தனக்குள் சொல்லிக் கொண்டாள் சிம்ரன்.

“ஆம்புலன்ஸ் வர கொஞ்சம் லேட் ஆகுமாம். லேண்ட் ஸ்லைட் ஆகிருக்காம். இந்த நிலமைல நாமளும் வெளிய கார எடுக்க முடியாது” என சொல்லிக் கொண்டே பிள்ளையுடன் உள்ளே ஓடி வந்தவன், சட்டென திரும்பி நின்றுக் கொண்டான்.

“ஹே! என்னடி பண்ணற!”

“ரிஷி! ஐ நீட் ஹாட் வாட்டேர் அண்ட் க்ளீன் டவல்ஸ்”

“சிம்ரன், வெளாடதடி! இது சினிமா பிரசவம் இல்ல, யார் வேணா செய்யறதுக்கு” என கடிந்துக் கொள்ளும் நேரம், நந்தனா அம்மா என அலறினாள்.

“பேச நேரம் இல்லடா டேய்! ஓடு, கேட்டத எடுத்துட்டு வா” என கத்தியவள், பின் ஒரு பெருமூச்சுடன் தன் அறைக்கு ஓடினாள்.

திரும்பி வந்தவள் கையில், பெரிய மெடிக்கல் கிட் இருந்தது. அதிர்ச்சியாய் பார்த்த ரிஷியிடம், குற்ற உணர்ச்சி நிறைந்த முகத்துடன் ஒரு நேம் கார்ட்டை நீட்டினாள் சிம்ரன்.

வெள்ளைத் தாளில்,

‘சிந்தியா கைனக்கொலொஜிஸ்ட் MBBS (Melb) MRCOG (London)’ என எழுதி இருந்தது அதில்.

வெளியே இடித்த இடி தன் நெஞ்சிலே இடிப்பது போல அதிர்ந்துப் போய் நின்றான் ரிஷிநந்தன்.

‘சிந்தியா ஒரு மெடிக்கல் டாக்டரு

சிம்ரன் ஒரு டூபாக்கூர் சீட்டரு’

(உருகுவான்…..)

(இந்த சிந்தியா யாருன்னு தெரியுதா டியரிஸ்???????? தெரியாதவங்க இன்னிக்கு எபி காமேண்ட் படிங்க. நம்ம செல்லங்க யாரு அந்த சிந்தியான்னு புட்டு புட்டு வைப்பாங்க. எதுக்கு சி சிம்ரன்னு இப்போ புரியுதா!!! நெறைய பேருக்கு ஆரம்பத்துலயே புரிஞ்சுடுச்சு. உங்கள திசை திருப்பத்தான், அவளோட அடையாள அட்டைல சிம்ரன்னு இருந்ததா சொன்னேன்.(இந்த மேட்டரோட விளக்கமெல்லாம் மெல்ல அடுத்த அடுத்த எபில வரும்.) இவ டாக்டருன்னு லேசா அங்கங்க கோடி காட்டிருந்தேன். யாரும் கேட்ச் பண்ணல. அவ்வ்வ்வ். இனி கதை எப்படி போக போதுன்னு பார்க்க நானும் ஆவலா உங்களோட வேய்ட்டிங். பெரிய எபி இன்னிக்கு. உங்க கருத்த சொல்லிட்டுப் போவீங்களாம். போன எபிக்கு லைக், கமேண்ட், மீம் போட்ட அனைவருக்கும் என் அன்பான நன்றி.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!