103977454_653445081909496_2472649225753995686_n-0d26064c

அத்தியாயம் 18

சாக்லேட் சாப்பிடுவதால் ஸ்ட்ரோக் வரும் விபரீதத்தைக் குறைக்க முடியும் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. சாக்லேட் சாப்பிடாதவர்களை விட, வாரத்தில் ஒரு முறையாவது சாக்லேட் சாப்பிடுபவர்கள் ஸ்ட்ரோக் பாதிப்பில் இருந்து 22 சவீதம் தங்களை காத்துக் கொள்ள முடியும் என ஒரு ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

 

கார் சீரான வேகத்தில் ஈப்போ, பேராவை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது. சிந்தியாவின் ட்ரைவர் வாகனத்தை ஓட்ட, பின்னால் ரிஷியின் அருகே அவன் கையைப் பற்றியபடி அமைதியாய் கண் மூடி உறங்கிக் கொண்டிருந்தாள் அவள்.

அவன் கைச்சூட்டில் தான் தன் உலகமே இயங்குவது போல பிடி இறுக்கமாக இருந்தது. ட்ரைவர் குறுகுறுவென இவர்களைப் பார்த்தாலும் ஒற்றை வார்த்தை பேச முயலவில்லை. ரிஷியும் அருகில் உறங்கியபடி வருபவளையேப் பார்த்திருந்தான்.

எப்பொழுதும் அவள் உடுத்தும் பூப்போட்ட கலர் ட்ரெஸ் மிஸ்ஸிங். அதற்கு பதிலாக ஜீன்ஸ் அணிந்து ப்ளேன் நீலத்தில் ஒரு குட்டி டீஷேர்ட் போட்டிருந்தாள். கண்களில் கலர் லென்சையும் காணவில்லை. சாயமிட்ட முடி மீண்டும் கருப்பு வர்ணத்துக்குத் திரும்பி இருந்தது. மூக்கில் டாலடிக்கும் வட்ட மூக்குத்தியையும் காணவில்லை. முகம் துடைத்து வைத்த குத்து விளக்கைப் போல துளி மேக்கப் இல்லாமல் இருந்தது. இவள் தான் சிந்தியா, தங்களோடு இருந்தவள் சிம்ரன் என தெள்ளத் தெளிவாக புரிந்தது இவனுக்கு.

யாரை நான் காதலித்தேன்? சிம்ரனையா, சிந்தியாவையா என மனதினுள் பெரிய போராட்டமே நடந்தது. மெல்ல கையை அவளிடம் இருந்து இழுக்கப் பார்த்தான் ரிஷி.

தூக்கத்திலேயே ஹ்ம்ம் என ஆட்சேபித்தவள், சரிந்து அவன் தோளில் சாய்ந்துக் கொண்டாள். அவளின் வெப்ப மூச்சு தன் கழுத்தில் உராய, கண்களை மூடிக் கொண்டான் ரிஷி.

‘ஒவ்வொரு ஆம்பிளைங்க வாழ்க்கையிலயும், காதலிச்ச கங்கா கல்யாணம் ஆனதும் சந்திரமுகியா மாறிடறது இல்லையா! போடின்னு விட்டுட்டா போயிடறாங்க! அது போல, நான் காதலிச்ச சிம்ரன் இப்போ சிந்தியாவா மாறிட்டான்னு நெனைச்சிக்கிறேன். சிந்தியாவோ சிம்ரனோ, அவ மேல வச்ச என் காதல் நெஜம். அவ இல்லாம என்னால இருக்க முடியாதுன்றதும் நெஜம்.’

இத்தனை நாள் இவளைக் காணாமல் துடித்த துடிப்பு ஒரு முடிவுக்கு வந்திருக்க, இவனும் சுகமாக கண்ணசந்தான்.

ஏர்போர்ட்டில், ஓடி வந்து அவள் கட்டிக் கொண்ட தருணம் உலகையே மறந்திருந்தான் ரிஷி. முத்த மழை ஓய்ந்து சுற்றுப்புறம் உறைக்க அவளை கீழே இறக்கி விட்டவனுக்கு, கோபம் ஏறி உட்கார்ந்து கொண்டது.

அவன் முகமாற்றத்தைக் கண்டவளுக்கு சிரிப்புத்தான் வந்தது. அவன் பேச ஆரம்பிப்பதற்குள்,

“டையர்ட்டா இருக்கு ரிஷி! ப்ளைட்ல தூங்கவே முடியல. கண்ண மூடுனாலே உன் ஞாபகம் தான். எதா இருந்தாலும் வீட்டுல போய் பேசிக்கலாமா? ப்ளீஸ் ரிஷி, ப்ளீஸ்!” என அவன் தாடையைப் பிடித்துக் கெஞ்சினாள் சிந்தியா.

“ஹ்ம்ம்” ஒற்றை வார்த்தையை பதிலாய் சொன்னாலும், அவள் கைப்பிடித்துப் பக்கத்தில் இருந்த “பாப்பா ரிச்” கபேவுக்கு அழைத்துப் போனான். மெனுவை அவள் புறம் நகர்த்தி விட்டு அமைதியாய் அமர்ந்திருந்தான் ரிஷி.

அவள் முகத்தை வைத்தே பசியை உணர்ந்துக் கொண்டவனை புன்னகையுடன் ஏறிட்டாள் சிந்தியா.

“சோ ஸ்வீட் டா நீ! ஐ லவ் யூ சோ மச் ரிஷி”

“போதும்! முதல்ல ஆர்டர் பண்ணு” என சொன்னவனின் குரலில் அடக்கப்பட்ட கோபம்தான் இருந்தது.

“டோஸ்ட் போதும் ரிஷி. ஹேவியா ஒன்னும் வேணாம்” என்றவள் மெனுவை அவன் புறமே நகர்த்தினாள்.

இருவருக்கும் பீனாட் பட்டர் டோஸ்ட், மில்க் டோஸ்ட் மற்றும் காபி ஆர்டர் செய்தான் ரிஷி. உணவு வரும் வரை வருவோர் போவோரை இவன் பார்த்திருக்க, அவனை மட்டுமே இவள் பார்த்திருந்தாள். சிந்தியா தன்னையே பார்த்திருப்பது தெரிந்தும் இவன் கண்டுக் கொள்ளவேயில்லை.

“ரிஷி”

“ஹ்ம்ம்”

“ரிஷி”

“ஹ்ம்ம்”

“ரிஷி!!!!!!!”

அவளைத் திரும்பிப் பார்த்தவன்

“என்ன?” என கடுப்பாக கேட்டான்.

“ஐ லவ் யூ!”

“வாய மூடு! இன்னொரு தடவை லவ் யூ சொன்ன, கெளம்பிப் போயிட்டே இருப்பேன். லவ் யூவாம், லவ் யூ! ஒரு வார்த்தை சொல்லாம விட்டுட்டு ஓடிட்டு, என்ன ஹேருக்கு இப்போ நேருல பார்த்ததும் இத்தனை லவ் யூ சொல்ற! என்னை லவ் பண்ணறியா பண்ணலியா? என் மேல லவ் இருக்கா இல்லியான்னு பைத்தியம் மாதிரி என்னை பொலம்ப விட்டுட்டு, இப்போ ஈன்னு இளிச்சிட்டு இச்சு இச்சுன்னு முத்தம் குடுத்துட்டா எல்லாம் சரியா போச்சா!” என படபடவென பொரிந்தவனை ஆசையாகப் பார்த்திருந்தாள் சிந்தியா.

அந்த நேரம் தான் வெயிட்டர் இவர்களின் உணவுடன் வந்தான். மேசையில் உணவை அடுக்கியவன்,

“எஞ்சாய் யுவர் மீல்” என சொல்லி புன்னகைத்தான்.

அவனின் நேம் டெக்கைப் பார்த்த சிந்தியா,

“ஜெப்ரி! நான் ஐ லவ் யூ சொன்னா சாருக்குப் புடிக்கலியாம்! எதுக்கு பிடிக்காதவங்க கிட்ட அதை வேஸ்ட்டா சொல்லனும். உனக்கு ஓகேன்னா அந்த ஐ லவ் யூவ, நான் உன் கிட்ட சொல்லவா?” என ஹஸ்க்கியான குரலில் கேட்டாள்.

அந்த ஜெப்ரியாகபட்டவன் நெளிய, ரிஷிக்கு சிரிப்பு வந்துவிட்டது.

“வீ வில் மேனேஜ் ஜெப்ரி” என சொல்லி அவனை அனுப்பி வைத்தான் ரிஷி.

அவனையேப் பார்த்திருந்தவளை,

“அராத்து! சாப்பிடுடி” என புன்னகையுடன் சொன்னான்.

ரிஷி சற்று முன்புதான் ஏர்போர்ட் வந்து சேர்ந்திருந்தான். இன்று அமெரிக்காவில் இருந்து வருகிறாள் சிந்தியா என தில்லும்மாதான் சொல்லி இருந்தார் அவனிடம்.

எப்பொழுது நோண்டி கேட்டாலும் மழுப்புபவர், அவராகவே வந்து விஷயத்தை சொல்லி இருந்தார் இவனிடம். அதற்கு மேல் வேலை ஓடுமா அவனுக்கு. கடையை வேலை செய்பவர்களின் வசம் ஒப்படைத்தவன், நந்தனாவையும் குழந்தைகளையும் தில்லும்மா வசம் ஒப்படைத்து விட்டு காரை விரட்டிக் கொண்டு வந்திருந்தான்.

எங்கே இப்பொழுது மிஸ் செய்தால் இனிமேல் தன்னவளைக் காணவே முடியாதோ எனும் பதட்டம் அப்பிக் கிடந்தது அவனுள். தில்லும்மா ப்ளைட் டீட்டேய்ல்ஸ் கொடுத்திருந்ததால் கரேக்டாக அரைவெல் இடத்தில் காத்திருந்தான், அவளையும் கண்டுக் கொண்டான்.

“ரிஷி! ஃபர்ஸ்ட் ஈப்போல இருக்கற நம்ம வீட்டுக்குப் போகலாம். அங்க எனக்கு செட்டில் பண்ண வேண்டிய விஷயங்கள் கொஞ்சம் இருக்கு. அதுக்குப் பிறகு, சேர்ந்தே கேமரன் போவோம்” என சாப்பிட்டப்படியே தானே திட்டமிட்டாள் சிந்தியா.

சரி என்பதைப் போல தலையாட்டினான் ரிஷி. தன்னைப் பார்க்க வேண்டும் என முடிவெடுத்துதான், தான் வரும் விஷயத்தை தில்லும்மா மூலம் கசிய விட்டிருக்கிறாள் இவள் என ஆற அமர இப்பொழுது உட்கார்ந்து யோசிக்கும் பொழுது நன்றாகவே புரிந்தது ரிஷிக்கு. சிந்தியாவைப் பார்க்க முடியுமா, முடியாதா? தான் வருவதற்குள் கிளம்பி விடுவாளா எனும் பதட்டத்தில் காரோட்டி வந்தவனுக்கு அந்த நேரத்தில் எதையும் சீர்தூக்கிப் பார்க்க முடிந்திருக்கவில்லை.

அவளாய் வாயைத் திறந்தாள் மட்டுமே, போட்ட புதிரெல்லாம் விடுபடும் என அறிந்தவன் அவள் இழுத்த இழுப்புக்குப் போனான். அவனது காரை அங்கேயே பார்க்கிங் போட சொன்னவள், இவள் காரில் ரிஷியை தனது ஊருக்கு அழைத்துப் போய் கொண்டிருந்தாள்.

ரிஷி கண் விழித்தப் போது, கார் நின்றிருந்தது. சிந்தியா இவன் எழுவதற்காக காத்திருந்தாள்.

“எழுப்பியிருக்கலாம்ல!” என்றவாறே கண்களைத் தேய்த்துக் கொண்டான் ரிஷி.

“நீ எவ்ளோ டயர்ட்டா இருப்பன்னு எனக்குத் தெரியும். அதான் அப்படியே விட்டுட்டேன். இங்க சின்ன வேலை ஒன்னு இருக்கு. கூட வரியா? இல்ல கார்லயே இருக்கியா ரிஷி?” என கேட்டாள் சிந்தியா.

வெளியே எட்டிப் பார்த்தான் ரிஷி. அது ஒரு ஹாஸ்பிட்டல் வளாகம் போல தெரிந்தது.

“வரேன்!” என சொல்லியவன் காரிலிருந்து இறங்கினான்.

“அங்கிள், இன்னும் ஒரு போர்ட்டி மினிட்ல காரை லாபிக்கு கொண்டு வாங்க! திங்ஸ்லாம் ஏத்தனும்” என ட்ரைவரிடம் பணித்து விட்டு இவளும் கீழே இறங்கினாள்.

வாசலில் இருந்த செக்யூரிட்டி இவளைப் பார்த்ததும் புன்னகைத்தார்.

“சலாம் செஜாத்தேரா(வணக்கம்) டாக்டர்”

இவளும் புன்னகையுடன் வணக்கம் சொல்லிவிட்டு நடந்தாள். நடக்கையில் கூட ரிஷியின் கரத்தைப் பிடித்தப்படி தான் நடந்தாள். அவள் கைகளில் லேசான நடுக்கத்தை உணர்ந்த ரிஷி, கேள்வியாக அவளை நோக்கினான்.

ஒன்றும் இல்லை என்பது போல தலையாட்டியவளின் கண்கள் மட்டும் லேசாக கலங்கி இருந்தது.

“என்னம்மா ஆச்சு? எதுக்கு இங்க வந்துருக்கோம்?” என கவலையுடன் கேட்டான் ரிஷி.

“ஒன்னுமில்ல ரிஷி. ஜஸ்ட் பேக்கப். அவ்ளோதான்” என கண்களை எட்டாத புன்னகையுடன் தெரிவித்தவள், லிப்டில் நுழைந்தாள்.

அது ஒரு ப்ரைவேட் ஹாஸ்பிட்டல். ஈப்போவில் மிக புகழ்பெற்ற மருத்துவமனை அது. ஐந்தாவது தளத்துக்கு வந்ததும் லிப்ட் கதவுகள் திறந்தன.

“லெட்ஸ் கோ ரிஷி!” என அவன் கைப்பற்றி நடந்தாள் சிந்தியா.

ஸ்பெஷலிஸ்ட் கண்சல்டன்ட் அறைகள் வரிசையாக இருந்தன அங்கே. ஒவ்வொரு ஸ்பெஷலிஸ்ட் டாக்டருக்கும் ஓர் அறை ரிசப்சனோடு கொடுக்கப்பட்டிருந்தது. அறைக்கு வெளியே நாற்காலிகள் போடப்பட்டு, அதில் டாக்டரைப் பார்க்க வந்தவர்கள் அமர்ந்திருந்தனர்.

டாக்டர் சிந்தியா MBBS (Melb) MRCOG (London) என எழுதி இருந்த அறை வாயிலின் முன் நின்று மூச்சை இழுத்து விட்டாள் சிந்தியா. அறை இருட்டாய் இருந்தது. தனது பேக்கில் இருந்து சாவியை எடுத்தவள், கதவைத் திறக்க முயன்றாள். கை நடுங்கியதில், அவளால் அது முடியவில்லை.

மென்மையாக அவள் கைகளில் இருந்து சாவியை வாங்கிக் கொண்டவன், அக்கதவினைத் திறந்து ஸ்விட்ச் எங்கே இருக்கிறது என தேடி லைட்டைப் போட்டான்.

“தே..தேங்க்ஸ் ரிஷி” என்றவள் மெல்ல உள்ளே நுழைந்தாள்.

ரிஷப்சனில் இருந்த போனை எடுத்து யாரையோ அழைத்தாள் சிந்தியா. அதன் பிறகே பக்கவாட்டில் இருந்த தனது கன்சல்டன்ட் அறையைத் திறந்தாள்.

“உள்ள வா ரிஷி”

அவள் முகத்தில் அப்பியிருந்த சோகம், உடல் மொழியில் தெரிந்த தடுமாற்றம் இவனை என்னவோ செய்தது. அவளுடனே அறைக்குள் நுழைந்து கதவை சாற்றியவன், அவளை இழுத்து அணைத்துக் கொண்டான். எந்த எதிர்ப்பும் இல்லாமல் இவளும் அவனைக் கட்டிக் கொண்டாள்.

மெல்ல தேம்பியவள்,

“என்னால முடியல ரிஷி! நான் என்ன தப்பு பண்ணேன்? ஏன் என் கனவையெல்லாம் இப்படி கலைச்சிப் போட்டாரு உங்க ஆண்டவன்? எத்தனை வருஷத்து தவம் தெரியுமா இந்த டாக்டர் படிப்பு? எத்தனை தூங்கா இரவுகள், எத்தனை எண்ணிலடங்கா பேப்பர்வோர்க், ஃபீல்ட்வோர்க், சீக் நைட்ஸ்! எல்லாம் வீணாப்போச்சு ரிஷி. படிக்கறப்போ ஒரு பேப்பர் பெயில் ஆகிட்டா, மறுபடி ஆரம்பத்துல இருந்து கிளாஸ் அட்டேண்ட் பண்ணி, எல்லாம் முதல்ல இருந்து செஞ்சு எவ்ளோ கஸ்டம் தெரியுமா! படிப்புலயே காண்செண்ட்ரேட் செஞ்சு சம்டைம்ஸ் சாப்பிட்டமான்னு கூட மறந்துடும். எக்ஸாம் டைம்ல பயத்துலயே பாத்ரூம் கூட வராது எனக்கு. இத்தனைக்கும் நான் ப்ரிலியண்ட் ஸ்டூடண்ட் இல்ல ரிஷி. விழுந்து பொரண்டு படிச்சு பாஸ் ஆகிற கூட்டத்துல நானும் ஒருத்தி. ரெண்டு வயசுல இருந்தே டாக்டர் சிந்தின்னு கூப்பிட்டு, என் உடம்புல இருக்கற ஒவ்வொரு செல்லுலயும் நீ டாக்டர்னு பதிய வச்சிருக்காங்க ரிஷி. இப்போ இந்த சிந்தியா டாக்டர் சிந்தியா இல்ல. வெறும் சிந்தியா! என்னால ஏத்துக்கவே முடியல ரிஷி. முடியவே இல்ல” என கதறியவளை, உச்சி முகர்ந்து, தலை வருடி, முதுகை வருடி தேற்றியவனுக்கும் கண்ணில் குளம் கட்டியது.

அவர்கள் அறைக் கதவு தட்டப்பட, சட்டென விலகியவள் கண்களை அவசர அவசரமாகத் துடைத்துக் கொண்டாள்.

“கம்மின் நோரா” என சிந்தியா அழைக்க, கதவைத் திறந்து உள்ளே நுழைந்தாள் ஒரு மலாய் நர்ஸ்.

“டாக்டர் சிந்தி” என விசும்பியவள், சிந்தியாவைக் கட்டிக் கொண்டாள்.

“சுடா சுடா! ஜாங்கான் நாங்கிஸ்!”(சரி சரி அழாதே) என சற்று முன்பு அழுதுக் கொண்டிருந்தவள், இவளைத் தேற்றினாள்.

“ஐ வில் மிஸ் யூ டாக்டர்” என மூக்கை உறிஞ்சினாள் அந்த நர்ஸ்.

அவள்தான் சிந்தியாவின் அசிஸ்டேன்ட் கம் நர்ஸ். பேஷண்ட் அப்பாயிண்ட்மேண்ட் பார்த்துக் கொள்வது, எத்தனை மணிக்கு ரவுண்ட்ஸ் போக வேண்டும், எத்தனை மணிக்கு டெலிவெரி ஸ்லோட், எமெர்ஜன்சி என வந்தால் இவளுக்கு போன் செய்வது என சர்வம் நோரா தான் இன்சார்ஜ்.

கண்ணைத் துடைத்துக் கொண்ட அந்த நர்ஸ் அப்பொழுதுதான் ரிஷியை கவனித்தாள்.

“சியாப்பே நீ டாக்டர்?”(யாரிது டாக்டர்?) என ஆராய்ச்சியாய் கேட்டாள்.

தற்பொழுது என் பாய்பிரேண்ட், இன்னும் சிறிது நாட்களில் என் கணவன் என ரிஷியை அறிமுகப்படுத்தினாள் சிந்தியா.

‘இன்னும் எதையும் பேசித் தீர்க்கல. அதுக்குல்ல எங்க போயிட்டா பாரேன்! எல்லாமே இவ முடிவுதான். கல்யாண தேதியாச்சும் சொல்வாளா இல்ல ஸ்ட்ரேய்ட்டா கோயிலுக்குக் கூட்டிட்டுப் போய் என் கழுத்துல இவ தாலி கட்டிடுவாளோன்னு தெரியல’ என மனதில் புலம்பியவன் நர்சைப் பார்த்து புன்னகைத்தான்.

அவளும் புன்னகையுடன்,

“யூ ஆர் சோ லக்கி டூ ஹேவ் டாக்டர் சிந்தி அஸ் யுவர் வைப்” என சொன்னாள்.

“கேட்டுக்கோ கேட்டுக்கோ! சோ லக்கியாம் நீ” என புன்னகைத்தாள் சிந்தியா.

“இப்படி சொல்ல சொல்லி அவளுக்கு எவ்ளோ லஞ்சம் குடுத்த?”

“போடா போடா! உனக்கு அவ்ளோ சீன்லாம் இல்ல” என முறைக்க முயன்றவளுக்கு சிரிப்புத்தான் வந்தது.

இவ்வளவு நேரம் அழுது அரற்றியவளின் முகத்தில் சிரிப்பைக் கண்ட ரிஷிக்கு மனம் நிறைந்துப் போனது.

நோரா இவர்களிடம் சொல்லி விட்டு அட்டைப் பெட்டிகளை எடுத்து வரப் போனாள்.

“உட்காரு ரிஷி! நான் பேக் பண்ண ஆரம்பிக்கறேன்”

என்ன நடந்தது, ஏன் அவ்வளவு பிடித்த டாக்டர் வேலையை விடுகிறாள் என கேள்விகள் நெஞ்சை முட்டி நின்றன ரிஷிக்கு. தனிமையில் இருக்கும் போது கேட்டுக் கொள்ளலாம் என விட்டு விட்டான். நோரா வேறு திரும்பி வருவேன் என சொல்லி சென்றிருந்தாள். இவன் கேட்க போய் சிந்தியா மறுபடி அழுது வைத்தால், யார் எவர் இருக்கிறார்கள் பக்கத்தில் என கூட பார்க்காமல் கண்டிப்பாக கட்டிக் கொள்வான் தன்னவளை. மரியாதைக்குரிய டாக்டர் சிந்தியா, வேலையை விட்டுப் போகும் போதும் அதே மரியாதையுடன் போக வேண்டும் என தான் அமைதியாக இருந்தான் ரிஷி.

“நான் எதாச்சும் ஹெல்ப் பண்ணட்டா?”

“ஹ்ம்ம். அந்த நோட்டிஸ் போர்ட்ல நான் டெலிவர் செஞ்ச குழந்தைகள் போட்டோலாம் ஒட்டி இருக்குப் பாரேன், அதெல்லாம் கலட்டிக் குடு ரிஷி. என்னோட பொக்கிஷங்கள் இவை எல்லாம்.”

அவள் சுட்டிக் காட்டிய போர்ட்டின் அருகே போய் நின்றான் ரிஷி. ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்கள். குழந்தைகளை கையில் ஏந்திக் கொண்டு முகம் நிறைய புன்னகையுடன் நின்றிருந்தாள் சிந்தியா. மலாய், சீனர், இந்தியர் என பாகுபாடின்றி அத்தனை குழந்தைகளையும் பூமிக்குக் கொண்டு வந்திருக்கிறாள் தன்னவள் எனும் விஷயமே அவனுக்குள் பிரமிப்பையும் பெருமையையும் ஒருங்கே தோற்றுவித்தது. அமைதியாய் அதையே பார்த்திருந்தான் ரிஷி. அவன் அருகே வந்தவள்,

“ஏன் ரிஷி, நானும் ஒரு அம்மா தானே?” என கேட்டாள்.

வார்த்தைகள் வராமல் தலையை மட்டும் ஆமென அசைத்தான் அவன்.

“என் கிட்ட வர அம்மாக்கள் கூடவே நாங்களும் அந்த குழந்தையை சுமக்கறோம் ரிஷி. நாங்கன்னா கைனிய சொல்றேன். அப்படி பார்த்தா எனக்கு ஐம்பது குழந்தைங்க இருக்காங்க ரிஷி. குழந்தைகளின் வளர்ச்சியப்போ நாங்களும் கூடவே இருக்கோம். அம்மா கூடவே நாங்களும் குழந்தையோட இதய துடிப்ப கேக்கறோம், ஸ்கேன்ல உடலசைவ பார்க்கிறோம். கடைசியா அந்த அம்மாக்களே பார்க்கிற முன்ன குழந்தையோட முகத்த நாங்கதான் பார்க்கறோம். கடவுள் அனுப்பன ஏஞ்சல்ச இதோ, இந்த ரெண்டு கையாலத்தான் நாங்க பூமிக்கு கொண்டு வரோம். ரத்தத்தோட அந்தக் குழந்தைகள கையில ஏந்துறப்ப வர ஃபீல் இருக்கே, வாவ்! நாங்கதான் கடவுள்னே தோணும் ரிஷி. ம்ப்ச்..அதென்ன தோணறது? நாங்க கடவுளேதான். ஜாதி, மதம், கலர், பணக்காரன், ஏழைன்னு எந்த பாகுபாடுமின்றி எல்லா குழந்தையையும் சரிசமமா நினைச்சு கையில ஏந்துற நாங்க கடவுள் தான்” என சொன்னவளை தோளோடு அணைத்துக் கொண்டான் ரிஷி.

“கடவுள் உதவி செய்ய நேர்ல வரமாட்டாராம்! மனுஷங்க சிலரத்தான் தனது பிரதிநிதியா அனுப்பி வைப்பாராம். அப்படி அவர் அனுப்பன சிலர்ல டாக்டர்களும் அடக்கம். என் சிந்தி செல்லமும் அதுல வராங்க” என சொன்னவனுக்கு குரல் கரகரத்தது.    

அதற்குப் பிறகு அமைதியாக எல்லாவற்றையும் எடுத்து வைத்தார்கள். டாக்டர் சிந்தியா என இருந்த அவளது பெயர் பலகையை பெருமூச்சுடன் எடுத்து பெட்டியின் உள்ளே வைத்தாள் இவள். நோராவும் இவர்களுக்கு உதவினாள்.

நோராவை அணைத்து, நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பினாள் சிந்தியா. வெளியேறும் முன் ரிசப்ஷன் டெஸ்க்கைப் பார்த்தாள். இவளுக்கு அடுத்து வரப்போகும் டாக்டரின் பெயர் பலகை அந்த டெஸ்க்கில் வீற்றிருந்தது. கசப்பான புன்னகை ஒன்று இவள் இதழ்களில் நெளிந்தது.

ரிஷியிடம் அதைக் காட்டியவள்,

“பெத்த அம்மா அப்பாவைத் தவிர மத்த எல்லாத்துக்கும் ரிப்லேஸ்ட்மேண்ட் இருக்குல்ல ரிஷி! இது புரியாம, கேரியர், இன்க்ரீமேண்ட்னு சொல்லி குடும்பம் குட்டிய கூட விட்டுட்டு எப்படிலாம் பாடுபடறாங்க மக்கள்!” என வாழ்க்கையின் தாத்பரியத்தை அசால்ட்டாக சொல்லியவாறே நடந்தாள் சிந்தியா.

இருவரும் பெட்டிகளை ட்ராலியில் வைத்துத் தள்ளியபடி வந்தார்கள். வழி நெடுக இவளைத் தெரிந்தவர்கள் வந்து விசாரித்து விட்டுப் போனார்கள். காரில் பொருட்களை ட்ரைவரின் துணையுடன் அடுக்கினார்கள் இருவரும். பின் ஏறி அமர கார் புறப்பட்டது.

“எங்க போறோம் இப்ப?” என கேட்டான் ரிஷி.

“உன் மாமியார் வீட்டுக்கு”

“என்னடி சொல்லற?” ஜெர்க்கானான் ரிஷி.

காதலையே இன்னும் ஒழுங்காய் சொல்லி பைசல் பண்ணவில்லை. அதற்குள் குடும்பத்தைப் பார்க்க அழைத்துப் போகிறேன் என ரிஷியின் வயிற்றில் சாக்லேட்டைக் கரைத்தாள் சிந்தியா.

“வொய் ரிஷி இந்த பயம்? தியாஸ் மில்ஸோட ஏகபோக வாரிசை மயக்கி, காதலிச்சு, கிஸ் அடிச்சப்போ எங்க போச்சு இந்தப் பயம்?” என வம்பிழுத்தவள் நெல்லி தின்ன பல்லி போல இளித்து வைத்தாள்.

“அடியே ராட்சசி! தியாஸ் மில்லோட வாரிசை நான் லவ் பண்ணலடி! தேஞ்சு போன முகரைய வச்சிருந்த என் சிம்ரனைத் தான் நான் லவ் பண்ணேன்”

“யாரைப் பார்த்து தேஞ்சு போன மூஞ்சுன்னு சொன்ன? நானா நானா? தீஞ்சு போன உன் மூஞ்ச விட தேஞ்சு போன என் மூஞ்சே பெட்டர்”

“இந்த தீஞ்சு போன மூஞ்ச பார்த்துதான் இன்னிக்கு முழுக்க அத்தனை ஐ லவ் யூ சொன்ன நீ!”

“ஓஹோ! தெரியாம சொல்லிட்டேன் சாமி! என் முப்பாட்டன் பொறந்த ஊரு இந்தியா, இனி லவ் யூ சொல்ல மாட்டா இந்த சிந்தியா! போ போ!” என சிலிர்த்துக் கொண்டாள் இவள்.

“ஜோதிகா நடிச்சப் படம் குஷி, உன் மேல இப்போ காண்டுல இருக்கான் ரிஷி”

“எப்படி ஜோதிகா நேம்லாம் நீ சொல்லலாம்? சிம்ரன் மட்டும்தான் உன் வாயில வரனும்! புரியுதா?” என அதற்கும் ஒரண்டையை இழுத்தாள் சிந்தியா.

இவர்கள் சண்டைப் போட்டுக் கொண்டே வர, புன்னகையுடன் காரை வீட்டின் முன்னே நிறுத்தி இறங்கிக் கொண்டார் ட்ரைவர்.

“மாமியார் வீடு வந்தாச்சு. கமான் ரிஷி, சிரிச்ச முகமா இறங்கி வா பார்க்கலாம்!” என அவனை அழைத்தவள், வாடா மாப்பிள்ளை பாட்டை விசில் அடித்தவாறே கீழே இறங்கினாள்.

மெல்ல இறங்கி வந்தான் ரிஷி. அந்த மாளிகையின் வாசலில் ஒரு பட்டாளமே நின்றிருந்தது இவனை வரவேற்க.  

 

“அவளோ மொளகாய் பொடி

ரிஷிக்கு இனி ஏறப்போகுது நெடி!!!!”

 

(உருகுவான்…)

 

(போன எபிக்கு லைக், கமேண்ட், மீம்ஸ் போட்ட அனைத்து அன்பர்களுக்கும் எனது நன்றி. )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!