103977454_653445081909496_2472649225753995686_n-ab84910a

அத்தியாயம் 19

சாக்லேட் சாப்பிடுவதால் தூக்கம் நன்றாக வரும் என சொல்லப்பட்டாலும், அது கெட்ட கனவையும் சேர்த்தே கொடுக்கும் என நம்பப்படுகிறது. சாக்லேட்டில் காணப்படும் கபேனும் இனிப்பும் நைட்மேர் அதாவது கெட்ட கனவுகளை தர வல்லது என்பதால் உறங்கும் முன் சாக்லேட் சாப்பிடுவதை தவிர்க்கலாம். அல்லது கொஞ்சமாக சாப்பிடலாம்.

 

இவர்கள் நடந்து வாசல் அருகில் வர, அங்கு நின்றவர்கள் இரு பிரிவாய் பிரிந்து நடுவே இடம் விட்டு நின்றார்கள். பின்னாலிருந்து மெல்ல நடந்து வந்து அவர்களின் நடுவே நின்றார் கம்பீரமான வயதானவர் ஒருவர். தலை முழுதாய் நரைத்திருக்க, முறுக்கி விட்டிருந்த மீசையை நீவியபடி சிந்தியாவையே வைத்தக் கண் வாங்காமல் பார்த்திருந்தார் அவர். அவர் மட்டுமில்லாது அங்கு நின்றிருந்த அனைவருமே அவளைத்தான் கண் எடுக்காமல் பார்த்திருந்தனர்.

எல்லோர் முன்னும் ரிஷியின் கையைப் பிடித்தவள், அவர்களைக் கண்டுக் கொள்ளாமல் உள்ளே நுழைந்தாள். அவள் இழுத்த இழுப்புக்கு சென்று கொண்டே பின்னால் திரும்பி நின்றிருந்தவர்களைப் பார்த்து தர்மசங்கடமாக இவன் புன்னகைக்க, அவர்களின் பார்வையோ சிந்தியாவின் மேலேயே இருந்தது.  

உள்ளே நுழைந்ததும் இது என்ன மாயலோகமா அல்லது மந்திரலோகமா என பிரமித்துப் போனான் ரிஷி. வெளியே பிரமாண்டமாய் காட்சியளித்த இல்லம், உள்ளே பிரமலோகமாய் கவர்ந்திழுத்தது. கலைநயமான பொருட்கள் அங்கங்கே கண்ணை கவரும்படி வீற்றிருக்க, அண்ட்டிக் வகையை சேர்ந்த பால் வண்ண சோபாவும் காபி டேபிளும் வரவேற்பறையை அலங்கரித்தன. கண்ணைக் கவரும் சரவிளக்கு, காலை வருடிக் கொடுக்கும் பொசு பொசு கார்ப்பேட் என பார்த்து பார்த்து அலங்கரிக்கப்பட்டிருந்தது அவ்விடம். மசாலா விற்ற பணம் எல்லாம் வீட்டை மாஸாக காட்டப் பயன்படுத்தப்பட்டிருந்தது.

“உட்காரு ரிஷி”

ராஜகம்பீரமாய் ஒற்றையாய் இருந்த சோபாவில் அவனை அமர்த்தினாள் சிந்தியா.

“இது என்ன பழக்கம்? யாரையும் மதிக்காம நீ பாட்டுக்கு என்னை உள்ள இழுத்துட்டு வந்துருக்க! இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்ல சிந்தியா!” என மெல்லியக் குரலில் கடிந்துக் கொண்டான் ரிஷி.

“அதான் நீயே கூப்படிறீயே சிந்தியான்னு! இந்த சிந்தியா இப்படித்தான் நடந்துப்பா! ச்சில் மை டியர் ரிஷி”

மற்றவர்கள் எல்லோரும் இவர்களைத் தொடர்ந்து உள்ளே வந்தார்கள்.

“ராமண்ணா” என அழைத்தாள் சிந்தியா.

அமைதியாய் வந்து நின்றார் ஒருவர்.

“கார்ல என் லக்கேஜ், அப்புறம் என் ஹாஸ்பிட்டல் ஸ்டப்ஸ்லாம் இருக்கு. எல்லாத்தையும் என் ரூம்ல வச்சிடுங்க” என்றாள்.

அவர் நகர்ந்தவுடன், இடுப்பு செத்தவள் போல ரிஷியின் எதிரே இருந்த நீள் சோபாவில் தொப்பென விழுந்தவள், அப்படியே சொகுசாய் படுத்துக் கொண்டாள்.

நானே இளவரசி, மத்தவங்க எல்லாம் என் கால் தூசி என்பது போல நடந்துக் கொண்டவளை கண்ணெடுக்காமல் பார்த்திருந்தான் ரிஷி. இவளா டாய்லெட் கழுவிய சிம்ரன், இவளா தடா தடாவென சமையல் செய்த சிம்ரன், இவளா சீனி பாப்பாவோடு இன்னொரு பாப்பாவாய் விளையாடிய சிம்ரன், இவளா சாக்லேட்டைத் திருடி சாப்பிட்ட சிம்ரன், இவளா விதவிதமாய் இளித்து வைக்கும் சிம்ரன் என பல இவளா மனதில் ஓட ஆச்சரியமாய் பார்த்திருந்தான் இவன்.

அந்த விசாலமான ஹாலில் அமர்ந்திருந்த ரிஷிநந்தனின் பார்வை எதேச்சையாய் அங்கே பெரிதாய் மாட்டியிருந்த குடும்பப் படத்தை ஏறிட்டது. அந்தப் படத்தையும் சிந்தியாவையும் மாறி மாறிப் பார்த்தவனின் கண்களில் ஆச்சரியம் போய் கொலை வெறி தாண்டவமாடியது. படத்தில் வீட்டுப் பெரியவரின் அருகே பட்டும் பகட்டுமாய் அழகாய் சிரித்தப்படி அமர்ந்திருந்தார் தில்லும்மா.

‘அடிப்பாவி! சொந்தப் பாட்டியையே எங்க வீட்டுக்கு வேலைக்காரி வேஷத்துல அனுப்பி வச்சிருக்கியா? இப்படியாப்பட்ட தெனாவெட்டு இந்த உலகத்துலயே உனக்கு மட்டும் தான்டி இருக்கும்’

ரிஷிக்கு எதிரில் இருந்த நீள சோபாவில் குட்டி தலையணையைக் கட்டிப் பிடித்துப் படுத்தவாறே இவனைப் பார்த்திருந்தவளுக்கு அவனின் முக மாற்றமும் கோப பார்வையும் சிரிப்பை வரவழைத்தது.

வாய் விட்டு சிரித்தவள், இன்னும் அவனை வம்பிழுக்க முனைந்தாள்.

“என்ன ரிஷி? ஏன் என்னையும் போட்டோவையும் மாறி மாறி லுக் விடற? உன் பார்வையைப் பார்க்கறப்போ, ‘பார்வை ஒன்றே போதுமே, பல்லாயிரம் சொல் வேண்டுமா!’ன்னு பாட தோணுது! பாடவா?” என ராகமாகக் கேட்டாள்.

தன்னிடத்தில், முதலாளி எனும் கெத்தில், வைத்து செய்ததுக்கெல்லாம் பழி வாங்குகிறாளோ என தோன்ற இவனால் முறைக்க மட்டும் தான் முடிந்தது. வேறு என்ன செய்வான் அவனும்! அவள் படுத்திருந்த சோபாவை சுற்றி அரணாய் நின்றிருந்தனர் அவளின் சொந்தங்கள் எல்லாம்.  

“எனக்கு டையர்ட்டா இருக்கு ரிஷி! நான் போய் குளிச்சிட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வரேன்! நீங்க இவங்க கிட்ட சொந்தமா அறிமுகம் ஆகிக்குங்க!” என்றவாறே எழுந்து நின்று சோம்பல் முறித்தாள்.

கோபத்தை உடனே கைவிட்டு, பார்வையாலே போகாதே என கெஞ்சினான் ரிஷி. அவன் வந்து இறங்கியதில் இருந்து அந்தக் குடும்பமே அவனை அக்கு வேறு ஆணி வேறாகப் பார்த்து வைத்ததே தவிர, வாய் திறந்து யாரும் ஒரு வார்த்தைப் பேசவில்லை. ஜூவில் இருந்து தப்பி வந்த அரிய வகைப் பாண்டா கரடியைப் பார்ப்பது போல இவனை மேலிருந்து கீழ் வரை பார்த்தப்படியே இருந்தார்கள்.

இவனுக்கோ சங்கடமாக இருந்தது. ஆதி மொழியான புன்னகைக்கு கூட பதில் புன்னகை வரவில்லை. அதற்கும் பார்வை வீச்சே பதிலாய் வந்தது. ஒவ்வொருவரின் முகத்திலும் இறுக்கம். நொந்துப் போனான் ரிஷி.

‘இதுக்குப் பேருதான் மாப்பிள்ளை பார்க்கிறதா! பார்த்தே பதற வைக்கிறாங்களே, வாயத் தொறந்தா சிதற வச்சிடுவாங்களோ!’

அவன் பார்வையை கண்டுக் கொள்ளாமல் அலட்சியப்படுத்தியவள், ஏதோ பாடலை முணுமுணுத்தவாறே மாடிக்கு செல்ல படியில் காலெடுத்து வைத்தாள்.

“டா..சிந்தி பாப்பா!” டாக்டர் சிந்தி என வாய் வரை வந்ததை அவளது முறைப்பால் உள்ளேயே விழுங்கிக் கொண்டு, பாப்பா என அழைத்தார் அந்த குடும்பத்தின் ஆணிவேர் சிவசுப்ரமணியம். நம் தில்லும்மாவுக்கு சிவசு அத்தான்.

என்ன என்பது போல கேள்வியாய் பார்த்தாளே தவிர வாயைத் திறக்கவில்லை அவள்.

“அது வந்து, மாப்பிள்ளைய எங்களுக்கு அறிமுகம் செய்யாம நீ பாட்டுக்கு ரூம்புக்கு போற! அவரு என்னமோ புதுசா பால்வாடில விட்ட குழந்தை மாதிரி பெப்பெரெப்பேன்னு முழிச்சிட்டு நிக்கிறாரு”

அவராகவே பேசுவதற்காகத்தானே இவ்வளவு நேரம் காத்திருந்தாள் அவள். என்னவோ மற்றவர்களை விட தாத்தனின் மேல் மட்டும் இன்னும் கோபம் டன் டன்னாக இருந்தது பேத்திக்கு. ரிஷியின் அருகே வந்து, சோபாவின் கைப்பிடியில் அமர்ந்தாள் சிந்தியா.

“இன்னிக்கு என்ன எல்லோரும் மௌன விரதமா? நானும் வந்ததுல இருந்துப் பார்க்கறேன், ஒரு வார்த்தைப் பேசல யாரும். இந்த வீட்டுக்கு வர போகிற மாப்பிள்ளைய அழைச்சிட்டு வருவேன்னு ஏற்கனவே போன் செஞ்சு ராமண்ணா கிட்ட சொல்லிட்டேன். வரவேற்பாய் ஒரு வாழை மர தோரணம் இல்ல, பட்டாசு வெடிக்கல, ஒரு பேண்டு வாத்தியம் வைக்கல, அட் லீஸ்ட் ஒரு ஆரத்தி… அது கூட இல்ல! யாரும் வாயத் தொறந்து உள்ள வான்னு கூட என் ரிஷிய கூப்பிடல. எல்லோரும் பேயடிச்ச மாதிரி நிக்கறீங்க! ரிஷி என்ன நினைப்பாரு நம்மள பத்தி? அவர் அவங்க ஊருல எவ்ளோ பெரிய ஆள் தெரியுமா? அங்க உள்ளவங்க எப்படி நடுங்குவாங்க தெரியுமா?” என தன் சொந்தங்களைப் பார்த்து படபடவென பொரிந்தாள் சிந்தியா.

‘ஐயோ! நான் அவ்ளோ பெரிய அப்பாடக்கர்லாம் இல்லடி! அந்த ஊரு குளிருக்கு நடுங்கறாங்க! என்னமோ என்னைப் பார்த்து நடுங்கற மாதிரி என்னடி பில்டப்பு இதெல்லாம். அவ்வா! அவ்வா!’ என மனதில் அலறியவன் பதட்டமாய் சிந்தியாவைத் திரும்பிப் பார்த்தான். அவன் முகம் போன போக்கைப் பார்த்து வாய் விட்டு சிரித்தாள் சிந்தியா.

அவள் படபடவென பொரிந்ததைக் கூட என்னவோ ஆசீர்வாதம் அளித்ததைப் போல ஆசையாகப் பார்த்திருந்தனர் அவள் குடும்பத்தினர். அவளது படபட பேச்சையும், குறும்பையும் சிரித்த முகத்தையும் பார்த்து இறுக்கமாய் இருந்த ஒவ்வொருவரின் முகமும் மெல்ல மலர்ந்தது.

தனக்குள் ஒடுங்கிப் போய் எந்நேரமும் விட்டத்தை வெறித்தப்படி இருந்தவள், நெருங்கினாலே எட்டி நில் என்பது போல கோபக்கனல் தெறிக்கும் பார்வையை வீசியவள், முற்றாய் மாறி இருந்தாள். அவள் கண்களில் தெரிந்த சாந்தமும் ரிஷிக்கான நேசமும் அவர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது.

சிந்தியா அமெரிக்கா சென்றிருந்தது, வந்ததும் நேராக ஹாஸ்பிட்டலுக்கு போயிருந்தது எல்லாவற்றையும் அறிந்திருந்தவர்கள் எப்பொழுது வெடிக்கப் போகிறாளோ என பயந்து போய் இருந்தனர். அதனால் தான் தாங்களாகவே எதுவும் பேசாமல் அவளது முகத்தை மட்டும் பார்த்தவாறு இருந்தனர் இவ்வளவு நேரமும்.

அந்த கோர சம்பவத்துக்குப் பிறகு, தில்லும்மாவைத் தவிர மற்றவர்களிடம் பாராமுகம் காட்டி ஒதுக்கியவள், இன்று நேரிடையாகப் பேசாவிட்டாலும் பொதுவாகப் பேசியது அவர்களுக்கு நிம்மதியைத் தந்தது.

அவள் முகத்தின் வெளிச்சம், அக மகிழ்வின் வெளிப்பாடு அல்லவா! அதை தந்தவன் இவனல்லவா என ரிஷியின் மேல் இன்ஸ்டண்ட்டாய் பாசம் பொங்கியது சிந்தியாவின் சொந்தங்களுக்கு.

“வாங்க தம்பி, வாங்க மாப்பிள்ளை” என இவனை சட்டென நெருங்கி கைப்பிடித்து ஆளாளுக்கு காட்டிய காட்டில் இவன் தான் ஆடிப்போனான்.

“இருங்க, இருங்க! ஒவ்வொருத்தரா வரிசையா வாங்க! ஆடி சேல்ல அடிச்சுப் புடிச்சுத் துணி எடுக்கற மாதிரி, என் ரிஷிய புழிஞ்சு எடுக்காதீங்க” என்றவள், ஒவ்வொருவராய் அறிமுகப்படுத்தினாள்.

“இவர் எங்க வீட்டோட தலை, சிவசு தாத்தா. பாட்டிய ஏற்கனவே உனக்கு ரொம்ப பெர்சனலா தெரியும் ரிஷி. இவர் மேல உள்ள கடுப்புல, என் தில்லும்மாவ ஸ்டேட்டு விட்டு ஸ்டேட்டு தள்ளி வச்சிருக்கேன். கொஞ்ச நாள் தனியா இருக்கட்டும். அப்படியாச்சும் திருந்தறாரான்னு பார்ப்போம்” என்றவள் குரலில் கோபத்தை விட வலியே நிறைந்திருந்தது.

“பாப்பா, சிந்திம்மா, கண்ணு” என அவளை சமாதானப்படுத்தப் பாசமாய் நெருங்கியவர்களை கை நீட்டி தடுத்து நிறுத்தினாள் சிந்தியா. சிவசு தாத்தாவோ பாவமாய் பேத்தியைப் பார்த்தார். அவரைக் கண்டு கொள்ளாதவள், தன் தகப்பனை அறிமுகப்படுத்தினாள்.

“இவர் இந்த சிந்தியாவோட அப்பா, உனக்கு மாமனார். பேரு சிவராமன்.”

முன் தலையில் வழுக்கை விழுந்திருக்க, சராசரி உயரத்தில், நெற்றியில் திருநீறு துலங்க பார்க்க கம்பீரமாய் இருந்தார் அவர்.

“வணக்கம்” என புன்னகையுடன் வணங்கியவன்,

‘இவர்தான் மலேசிய சிம்ரன் பேரவையின் தலைவரா? இப்படி பக்திப் பழமா இருக்கறவர, சிம்ரனப் பார்த்து முக்தி அடைஞ்சவர்னு வாய் கூசாம புழுகிருக்கா பாரேன் இந்த கேடி’ என மனதில் திட்டித் தீர்த்தான்.

“இவங்க என் அம்மா! பேரு கலைவாணி.”

மகள் அருகில் வந்தவர், அவள் உச்சி முகர்ந்து மெல்ல அணைத்துக் கொண்டார்.

“நீ இல்லாம வீடு வீடா இல்லம்மா!” என்றவரை இவளும் இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.   

“தம்பி, என் மக முகத்துல ரொம்ப நாளைக்குப் பிறகு தெளிவையும் நம்பிக்கையையும் பார்க்கிறேன். இதெல்லாம் உங்களாலத்தான்! ரொம்ப நன்றிப்பா” என ரிஷியின் கரங்களைப் பற்றிக் கொண்டார் வாணி.

எல்லா வீடுகளிலும் மகள் காதலிக்கிறாள் என்றால் எதிர்ப்புத்தானே கிளம்பும்! இங்கே இவள், தன் காதலன் என சொல்லி தைரியமாக இவனை வீடு வரை அழைத்து வந்திருக்கிறாள்! இவர்களோ துளி கூட வெறுப்பைக் காட்டாமல், ஏதோ சாதனை செய்ததைப் போல பார்ப்பதும், பேசுவதும் ரிஷிக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது.

“இவங்க என் சித்தி மேகலா. இவன் அவங்க மகன் சியாம், மை லிட்டில் ப்ரோ” என பதின்ம வயது பையனை சுட்டிக் காட்டினாள் சிந்தியா.

மேகலா சித்தியின் பக்கத்தில் நின்றிருந்தார் இன்னொருவர். அவரை சுட்டிக்காட்டி,

“இவர் என் சித்தப்பா. பேரு” என ஆரம்பிக்க, ரிஷியின் முன்னே வந்து நின்றார் அவர்.

“வாங்க முதல்ல சாப்பிடலாம்! களைச்சுப் போய் வந்திருப்பீங்க! சாப்பிட்டுட்டு ரெஸ்ட் எடுத்துட்டு அப்புறம் மத்ததெல்லாம் பேசிக்கலாம்” என சொல்லி கையோடு அவனை எழுப்பி டைனிங் ஹாலுக்குத் தள்ளிக் கொண்டு போனார்.

ஏற்கனவே இவர்கள் வருவதை அறிந்து சமைத்து வைத்திருந்த பதார்த்தங்களை மேசையில் அடுக்கினார்கள் வீட்டுப் பெண்கள். ரிஷியை நடுநாயகமாக அமர வைத்து அவன் அருகே அமர்ந்துக் கொண்டாள் சிந்தியா.

தலவாழை இலை போட்டு மாப்பிள்ளை விருந்து தடபுடலாக ஆரம்பித்தது. மசாலா மில் ஓனர் வீட்டு விருந்து என்றால் இப்படித்தான் இருக்குமோ என திணறிப் போனான் ரிஷி. நண்டு மசாலா, சிக்கன் கிரேவி, இறால் சம்பல், ஜீரா ரைஸ், சாம்பார், கீரை மசியல், அப்பளம், ஊறுகாய் என எண்ணிலடங்கா ஐட்டங்கள்.

ஒவ்வொரு ஐட்டத்தை அவன் சுவைக்கும் போதும்,

“இது நம்ம சாம்பார் தூள்ல செஞ்சது தம்பி. இது நம்ம குருமா தூளுல செஞ்சது மாப்பிள்ளை. இது நம்ம நம்ம கோழி தூள்ல செஞ்சது! நம்ம ப்ராண்ட் ஊறுகாய் இது! நாம தயாரிச்ச அப்பளம் இது” என குரல்கள் கேட்ட வண்ணம் இருந்தன.

சாக்லேட் பேக்டரி ஓனர் இப்படி மசாலா பேக்டரியில் எழ முடியாத அளவுக்கு விழுந்து மாட்டிக் கொண்டானே! இந்த காம்பினேஷன் எப்படி இருக்கும்? கோழி குழம்பில் சீனி சேர்த்தது போல இருக்குமா? அல்லது சாக்லேட் கேக்கில் உறைப்பை சேர்த்தது போல இருக்குமா? எப்படி இருந்தால் நமக்கென்ன! காதலில் விழுந்தவனுக்கு கசப்பும் காஜூ கட்லியாய் இனிக்கும், புளிப்பும் பூந்தி லட்டாய் சுவைக்கும்!  

ரிஷி அவர்களின் உபசரிப்பில் திக்குமுக்காடினாலும், அவன் பார்வை உணவை அளைந்துக் கொண்டிருக்கும் சிந்தியாவின் மேல் அடிக்கடி படிந்து மீண்டது. மற்றவர்கள் பார்வையும் அவள் மேல் இருந்தாலும், யாரும் வாய் திறந்து ஒன்றும் சொல்லவில்லை.

“சிந்தியா!” மென்மையாக அழைத்தான் ரிஷி.

“ஹ்ம்ம்”

“அள்ளி சாப்பிடு”

“சரி!” என்றவளின் கண்கள் அவர்கள் எதிரே அமர்ந்திருந்த தன் தாத்தனின் மேல் படிந்து மீண்டது.

அங்கே அவரும் உணவைப் பிசைந்தப்படி இவளையேத்தான் பார்த்தவாறு இருந்தார். சட்டென எழுந்தவள், அவர் நாற்காலி அருகே போய் மண்டியிட்டு அமர்ந்தாள். எல்லோரின் பார்வையும் அவர்கள் இருவரையே துளைத்தது.

“பாப்பா” நடுக்கமாய் அழைத்தார் சிவசு தாத்தா.

“ஆ!!!” என வாயைத் திறந்தாள் சிந்தியா.

கண்கள் கலங்கிப் போக உணவை அள்ளி தன் பேத்திக்கு ஊட்டினார் அவர். கண்களில் கண்ணீர் வழிய ஒரு வாய் உணவை வாங்கிக் கொண்டவள், சட்டென எழுந்து அவ்விடத்தை விட்டு ஓடி போனாள். அவள் பின்னால் போக எழுந்த ரிஷியை, தோள் பிடித்து அமர்த்தினார் சிந்தியாவின் அப்பா.

“உட்கார்ந்து சாப்பிடுங்க மாப்பிள்ளை! அவ கொஞ்ச நேரத்துல சரியாகிடுவா”

அவளை அந்த நிலையில் பார்த்தப் பின் உணவு இறங்குமா இவனுக்கு! தன்னையேப் பார்த்திருப்பவர்களுக்காக கஸ்டப்பட்டு விழுங்கி வைத்தான் ரிஷி. அதன் பிறகு சிந்தியாவைக் கண்ணாலேயே பார்க்க முடியவில்லை அவனால்.

உணவு முடித்து சற்று நேரம் அவனிடம் பேசிக் கொண்டிருந்தார்கள் வீட்டினர். நந்தனாவைப் பற்றி, குழந்தைகளைப் பற்றி எல்லாம் தெரிந்திருந்தது அவர்களுக்கு. வாய் பேசினாலும், கண்கள் சிந்தியா எங்காவது தெரிகிறாளா என தேடிக் கொண்டே இருந்தன. உறங்கும் நேரமாக, அவனுக்கு மாடியில் இருந்த விருந்தினர் அறையைக் காட்டினார் வாணி.

குளித்து விட்டு வந்தவன், தமக்கைக்குப் போன் செய்து நலம் விசாரித்தான். சிந்தியாவைப் பார்த்து விட்டதை மட்டும் பகிர்ந்துக் கொண்டவன், வேறு எதையும் தெரிவிக்கவில்லை. நேரில் சொல்லிக் கொள்ளலாம் என விட்டுவிட்டான். டீவாவை விட்டு விட்டு வந்திருக்கும், பெட் ஹோட்டலுக்கும் போன் செய்து அதன் நலத்தை விசாரித்து அறிந்துக் கொண்டான்.

இங்கே அழைத்து வந்து இப்படி தனியாய் தவிக்கவிட்டவளை நினைத்து கோபம் வந்தாலும், அவளது கலங்கிய தோற்றம் நெஞ்சைப் பிசைந்தது. அவளைப் பார்த்ததுமே தற்போது அவள் உபயோகிக்கும் போன் நம்பர் எல்லாம் வாங்கிக் கொண்டான்தான். ரூமுக்கு வந்தது முதல் அத்தனை முறை கால் செய்தும், மேசேஜ் போட்டும் அவளிடமிருந்து எதற்கும் பதில் இல்லை.

“ராட்சசி! தூர இருந்தா நினைவால சாகடிக்கறா! கிட்ட இருந்தா கண்டுக்காம நோகடிக்கறா! மொத்தத்துல என்னை மொத்தமா கொல்ல பொறந்துருக்கா! எத்தனை பேர் சைட் அடிச்சாங்க என்னை! அத்தனையும் ரிஜேக்ட் பண்ணிட்டு இந்த பேட்ரோமாக்ஸ் லைட்டேத்தான் வேணும்னு ஊர் ஊரா அலைஞ்சதுக்கு, எவ்ளோ முடியுமோ அவ்ளோ வச்சி செய்றா! ராட்சசி” என திட்டியப்படியே படுக்கையில் தொபுக்கடீர் என விழுந்தான் ரிஷி.  

நடு இரவில், நெஞ்சில் பாரமாய் எதுவோ அழுத்த, கழுத்தடியில் சூடான மூச்சுக் காற்று உரச பட்டென கண் விழித்தான் ரிஷி.

“ஐ லவ் யூ ரிஷி!”

“என்னடி இந்த நேரத்துல?” தூக்கக் கலக்கத்தில் குரல் கரகரப்பாய் இருந்தது அவனுக்கு.

“செக்சியா இருக்கு உன் வாய்ஸ்”

“இத சொல்லத்தான் வந்தியா? போடி எழுந்து” என்றவனின் கைகள் இறுக்கமாய் தன்னவளைக் கட்டிக் கொண்டது.

“ரிஷி, செம்ம தைரியம் தான் உனக்கு! மேளம் கொட்டல, தாலி கட்டல, அதுக்குள்ள மாமியார் வீட்டுல வந்து உட்கார்ந்துகிட்டு ஜல்சா செய்ய ரெடியாகிட்ட! மச்சக்காரன்டா நீ” என சிரித்தாள் சிந்தியா.

“சத்தமா சிரிக்காதடி பிசாசு! யாராச்சும் வந்திட போறாங்க! முதல்ல இங்கிருந்து போ! எதா இருந்தாலும் காலையில பேசிக்கலாம்.”

சிந்தியாவைத் தன் மேல் இருந்து தள்ளி விட்டவன், எழுந்து அமர்ந்தான்.

“முடியாது”

“போ சிந்தியா”

“நோ”

“ப்ளிஸ்டி!”

“தா போலே”(முடியாது மலாயில்)

“என் சிம்முல்ல!”

“சரி போலாம், வா”

“எங்க?”

“மொட்டை மாடிக்கு”

“அங்க எதுக்கு?”

“லவ் சொல்லாம ஓடி போய்ட்ட, உனக்கு லவ் இருக்கா இல்லையான்னு கூட தெரியாம தவிச்சேன், அப்படி இப்படின்னு எத்தனை காம்ப்ளேண்ட் பண்ண நீ! சோ இப்போ நாம மொட்டை மாடிக்குப் போய், நிலா வெளிச்சத்துல ’மொட்டை மாடி, மொட்டை மாடி, ஒரு லவ் ஜோடி லவ் ஜோடி’னு பாட்டு பாடிக்கிட்டே துரத்திப் புடிச்சு லவ் பண்ண போறோம்!” என சொல்லி சிரித்தவளின் வாயைப் பொத்தினான் ரிஷி.

“ஷ்!!!! சிரிக்காதடி!”

“என் வீட்டு ஆளுங்க முன்னாடி உன் இமேஜ் டேமேஜ் ஆகக்கூடாதுனா இப்பவே வா!” என மிரட்டினாள் சிந்தியா.

எழுந்து நின்றவன், அவளையும் எழுப்பி நிறுத்தினான்.

“அநியாயம் செய்யறடி நீ!”

“சிந்தியோட பாய்பிரண்ட்னா சும்மாவா! இந்த டார்ச்சர்லாம் அனுபவிச்சுத்தான் ஆகனும்! ஒரு தடவை என்ன சொன்ன நீ? என்னைக் கட்டிக்கறவனுக்கு டீஸ்ட்ரேஸ் மசாஜ் மட்டும் பத்தாது! தஞ்சோங் ரம்புத்தான்ல(மெண்டல் ஹாஸ்பிட்டல்) லைப் லாங் அட்மிஷனும் தேவைப்படும்னு சொன்னல்ல! சீக்கிரம் உனக்கு அங்க ஒரு அட்மிஷன் போட்டுடலாம்!” என சொல்லிக் கொண்டே பின்னால் இருந்து ரிஷியை அணைத்துக் கொண்டாள் சிந்தியா.

அவள் அணைப்பில் சற்று நேரம் அடங்கி நின்றவன்,

“ஆர் யூ ஓக்கே சிந்தியா?” என பரிவாக கேட்டான்.

அவன் முன்னே வந்து நின்று நிமிர்ந்துப் பார்த்தவள், இல்லையென தலையை ஆட்டினாள். அவள் தலையை தடவிக் கொடுத்தவன், மெல்ல அவளை இழுத்து நெஞ்சில் சாய்த்துக் கொண்டான்.

“உனக்குள்ள நெறைய கேள்வி இருக்கும்! என்னைப் பத்தி, நான் கேமரனுக்கு வந்த நோக்கத்தப் பத்தி! இதுவே வேற ஆளா இருந்தா இந்நேரம் ரணகளமாகி இருக்கும் என் நிலமை! ஏன் வந்த, எதுக்கு எங்கள ஏமாத்துனன்னு செவுனி அறை குடுத்துருப்பான்! ஆனா நீ ரொம்ப பொறுமைசாலி ரிஷி! சோப்ட் நேச்சர்! ஐ லவ் யுவர் கேரிங் நேச்சர்! நந்தனாவையும் அவ குழந்தைகளையும் உணர்வா உயிரா மதிக்கற உன்னை நான் மனசார காதலிக்கறேன் ரிஷி. எனக்கு ஓன் பேக்கேஜா நீங்க எல்லாரும் வேணும்!”

மெல்லிய குரலில் சொன்னவள், அவனுக்கு பேச சந்தர்ப்பம் கொடுக்காமல் அவன் அணைப்பில் இருந்து விலகிக் கொண்டாள்.

“போகலாம் ரிஷி!”

அவன் கைப்பிடித்து வெளியே அழைத்துப் போனாள் சிந்தியா. வீட்டின் பக்கவாட்டில் இருந்த படிகளில் ஏறி மொட்டை மாடியை அடைந்தார்கள் இருவரும். விசாலமாக இருந்த அந்த மாடியில், ஓவல் வடிவத்தில் அழகாய் காட்சியளித்தது நீச்சல் குளம். அதன் நீர்பரப்பில் நிலவின் வரிவடிவைக் கண்டு வாய் பிளந்தான் ரிஷி.

“பியூட்டிபுள்”

“ஆறாம் வகுப்பு பரிட்சையில நான் ஸ்ட்ரேய்ட் ஏ’ஸ் எடுத்ததுக்கு தாத்தா கட்டிக் குடுத்த பரிசு இந்த ஸ்வீம்மிங் பூல்! வா ரிஷி”

நீரீல் கால் நனைய அவள் அமர்ந்துக் கொள்ள, இவனும் அவள் கைப்பற்றிக் கொண்டு அருகே அமர்ந்துக் கொண்டான். ஏகாந்த இரவில், தென்றல் காற்று மேனி வருட, இருவரும் ஒருவர் அருகாமையை மற்றவர் அனுபவித்தவாறு அமைதியாக அமர்ந்திருந்தனர்.

“ரிஷி!”

“ஹ்ம்ம்”

“கீழ எங்க பேமிலி போட்டோ பார்த்தல்ல, அதுல ஒரு ஆள் மிஸ்ஸிங்”

“யாருடா? யார் மிஸ்ஸிங்?”

“என்னோட அண்ணா!”

அண்ணனின் பெயரை மென்மையாக உச்சரித்தாள் சிந்தியா.

உடல் விறைக்க, அவளைப் பிடித்திருந்த கரங்களை உதறி, நிமிர்ந்து நேராய் அவள் முகம் நோக்கிய ரிஷியின் இரு விழிகளும் சிவந்துப் போய் கிடந்தன.

‘பெயரை சொன்னாள் பெண்

சிவந்து போனது அவன் கண்!!!!’

 

(உருகுவான்….)

 

(ஹாய் டியர்ஸ்..என்ன எதையும் சொல்லாம இழுக்கறேன்னு என் மேல கொலை காண்டுல இருப்பீங்க! அவ கதைய சொல்றதுக்கு முன்ன இந்த சீன்லாம் எழுதி தான் ஆகனும். இல்லைனா ப்ளோ சரியா வராது. சோ, ப்ளிஸ்..கோச்சிக்காதீங்க! இவளோட பேமிலிய அறிமுகம் பண்ணிட்டேன். சித்தப்பா பேர சொல்லல, அண்ணானு ஒரு கேரக்டர் வந்துருக்கான்! தாத்தா மேல கோபமா இருக்கா! டாக்டர் வேலை விட்டாச்சு/ போயிருச்சு. ரிஷி குடும்பத்துக்கு உதவி செஞ்சிருக்கா. இதெல்லாம் கலந்து கட்டி யோசிச்சுப் பாருங்க. எதாவது தோணுதா? சிம்பிள் ப்ளோட் தான் இந்தக் கதை. பெரிய சஸ்பென்ஸ்லாம் இல்ல. சில பேர் கெஸ் கூட பண்ணீட்டீங்க.

இங்க கோவிட் திரும்பவும் அதிகரிச்சிட்டு வரதனால, மறுபடி ஆன்லைன் கிளாஸ் ஆரம்பிச்சிருச்சு. லேப்டாப் கையில கிடைக்கறது ரொம்ப குஸ்டமாயிடுச்சு. அதான் லேட்டாகுது. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க டியர்ஸ். டேக் கேர்! லவ் யூ ஆல்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!