103977454_653445081909496_2472649225753995686_n-35bf560a

அத்தியாயம் 20

டயட்டில் இருக்கும் போது சாக்லேட் சாப்பிடலாமா? எதுவுமே அளந்து சாப்பிடும் போது நமது டயட்டை அது பாதிக்காது. அதே போல அளவாய் எடுத்துக் கொள்ளும் சாக்லேட்டும் டயட்டுக்கு ஊறு விளைவிக்காது. மாறாக நமது மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும்.

 

தில்லும்மாவுடன் தான் படுப்பேன் என படுத்தி எடுத்த சீனி பாப்பாவை அவள் போக்கிலேயே விட்டு விட்டாள் நந்தனா. சொந்தம் என தன்னையும் நந்தாவையும் மட்டும் பார்த்து வளர்பவள், வீட்டில் வந்து யார் தங்கினாலும் அவர்களுடன் அட்டாச் ஆகி விடுகிறாள். சிந்தியா வந்து தங்கி இருந்தப் பொழுதும் அப்படித்தான். அவள் கிளம்பி போனதில் இருந்து சிம்மு ஆண்ட்டி எங்கே என அழுது ஆர்ப்பாட்டம் செய்தவளை அரவணைத்துக் கொண்டார் தில்லும்மா.

பாட்டி எனும் பந்தத்தை அறிந்திராத குட்டியும் பள்ளியில் இருந்து வந்ததும் அவர் பின்னாலேயே வால் பிடித்து சுற்றிக் கொண்டிருப்பாள். அவரும் ஊட்டுவதில் இருந்து குளிப்பாட்டுவது வரை பாசமாய் செய்வார். ராஜாத்தி, கன்னுக்குட்டி, என் பவுனு என வாய்க்கு வாய் கொஞ்சித் தீர்ப்பார். சீனி பாப்பாவும் பாட்டி, பாட்டி என வாய் ஓயாமல் கூப்பிட்டு செல்லம் கொஞ்சுவாள். இவரும் கிளம்பி விட்டால் பிள்ளை என்ன பாடு படுவாளோ என மனதை பிசைந்தது நந்தனாவுக்கு. ஆனாலும் இருவரின் பாசப் பிணைப்பைத் தடுக்க மனம் வராமல் அமைதியாய் பார்த்துக் கொண்டிருந்தாள்.

சிந்தியா பயன்படுத்திய அறையையே தில்லுமாவுக்கும் கொடுத்திருந்தாள் நந்தனா. அவளது நாற்ற தலையணையை எடுத்துக் கொண்டு, நந்தனாவுக்கும், குட்டித் தங்கைக்கும் புச்சு புச்சு என முத்தமிட்டுவிட்டு தில்லுமாவுடன் படுக்க போய் விட்டாள் சீனி பாப்பா. நடு இரவில் சிணுங்கிய குழந்தைக்குப் பால் கொடுத்துப் படுக்க வைத்த நந்தனா, பெரியவள் ஒழுங்காக தூங்குகிறாளா என பார்க்க எழுந்துப் போனாள். அங்கே ரூமில் தில்லும்மா தூங்கிக் கொண்டிருக்க, அவர் வயிற்றில் காலைப் போட்டு குறுக்காகப் படுத்திருந்தாள் இவள். மெல்லிய புன்னகையுடன் அவளை நகர்த்தி நன்றாகப் படுக்க வைத்து, போர்வையைப் போர்த்தி விட்டு தனதறைக்கு வந்தாள் நந்தனா.

சின்னவளின் அருகே படுத்துக் கண்ணை மூடினாள். தூக்கம் வரமாட்டேன் என கண்ணாமூச்சி ஆடியது. என்னவோ மனம் பாரமாய் அழுத்தியது அவளுக்கு. அருகில் படுத்திருக்கும் மகளின் முகத்தை வருடிக் கொடுத்தப்படி அவள் முகத்தையேப் பார்த்திருந்தாள் நந்தனா.

“சீனி பாப்பா என்னை மாதிரியே இருக்கா! இன்னொரு பிள்ளை உன் சாயல்ல வேணும்டினு கேட்டீங்களே பாரதி. இவ பார்க்க என்னை மாதிரியே இருக்கான்னு தில்லும்மா சொல்லுறாங்க. ஆனா இவள பார்த்து ரசிக்கத்தான் நீங்க இல்லாம போயிட்டீங்க” மெல்லிய குரலில் முணுமுணுத்தவளின் கண்களில் குபுக்கென கண்ணீர் வழிந்தது.

பிள்ளை பிறந்ததால் மாறி இருந்த ஹார்மோன்கள் செய்த சதிராட்டமோ என்னவோ வெறுமையாய் உணர்ந்தாள் நந்தனா. இரவின் தனிமையில் கணவனை ரொம்பவே தேடியது அவள் மனமும் உடலும். தோள் சாய்த்து, கன்னம் வருடி, தன்னவன் கொடுக்கும் நெற்றி முத்தத்துக்கு ஏங்கித் தவித்தாள் ராதை. ஜில்லென உடல் விறைக்க வைக்கும் இந்த குளிருக்கு, தன்னவன் அணைப்பு கொடுக்கும் கதகதப்புக்கு ஏங்கினாள் பேதை. இரவின் நிசப்தத்தில் சங்கீதமாய் காதை நிறைக்கும் தன்னவனின் மெல்லிய குறட்டை சத்தம் கேட்க ஏங்கினாள் கோதை. இது எதுவும் இனி தனக்கு இல்லை எனும் நிதர்சனம் முகத்தில் அறைய கண்ணீர் நிற்காமல் வழிந்தது.

“ஏன் பாரதி? ஏன் என்னை விட்டுப் போனீங்க? எனக்கு நீங்க வேணும் பாரதி! உங்க ரதி, உங்களை ரொம்பத் தேடறேன் பாரதி! வேணும் பாரதி! உங்க எச்சில் முத்தம் வேணும்! இறுகிய அணைப்பு வேணும்! ரதிம்மான்னு நீங்க கூப்பிடறத கேக்க வேணும்! நீங்க பாடறத ரசிக்க வேணும்! திட்டறத வாங்கிக்க வேணும். ஊட்டறத சாப்பிட வேணும்! வேணும், வேணும், வேணும்!” என வாய் மூடி கதறினாள்.

பாரதியைப் பார்த்தே ஆக வேண்டும் என மனம் சண்டித்தனம் செய்தது. கட்டிலின் அருகே இருந்த போனை கை நீட்டி எடுத்தாள் நந்தனா. சிந்தியா காப்பாற்றிக் கொடுத்த போன் தான் அது. அதில் சேமித்து பொக்கிஷமாய் வைத்திருக்கும் ஒவ்வொரு படங்களையும் பார்த்து பார்த்துக் கண்ணீர் வடித்தாள். யூனி டைமில் டேட்டிங் போன போது எடுத்தப் படங்கள், கல்யாண படங்கள், குழந்தைப் பிறந்தப் பின்பு எடுத்தப் படங்கள் என தன் வாழ்க்கையை மீண்டும் ஒரு முறை வாழ்ந்துப் பார்த்தாள் நந்தனா.

பின் கை நடுங்க தான் ரெக்கார்ட் செய்து வைத்திருத்த அவனது கடைசி அழைப்பை தேடினாள். அப்பொழுது நினைத்திருப்பாளா அது தான் அவன் விட்டுப் போகும் கடைசி காதல் பரிசு என! தொழில் தொடர்பாக அடிக்கடி வெளியூர் பயணம் போவான் பாரதி. பள்ளி விடுமுறை என்றால் இவளையும் கடத்திக் கொண்டு போய் விடுவான். ஆனால் பிள்ளை வந்ததில் இருந்து இருவரும் சேர்ந்து செல்லும் பயணங்கள் அறவே இல்லாமல் போனது. ஒரு நாள் தாக்குப் பிடிப்பவன், அடுத்த நாளில் இருந்து ஐ மிஸ் யூ, ஐ லவ் யூ என போன் செய்து புலம்புவான். அதை எல்லாம் ரெக்கார்ட் செய்து வைத்து மறுபடி மறுபடி கேட்டு சிரித்துக் கொள்வாள் நந்தனா. திரும்பி வருபவனுக்கு ரெக்கார்ட் செய்ததை போட்டுக் காட்டி கலாய்த்து தள்ளுவாள்.

அன்றும் போன் செய்திருந்தான். ரெக்கார்ட் பட்டனை தட்டி விட்டு போனை அட்டண்ட் செய்தாள் இவள்.

“இச்சு இச்சு இச்சு”

“பாரதி!!!!”

“ஐ மிஸ் யூ டி ரதி”

“மீ டூ பாரதி”

“போய் சொல்லாதடி! நான் தான் உன்னை ரொம்ப தேடறேன்! போன் எடுத்ததும் அத்தனை முத்தம் கொடுத்தனே, நீ ஒன்னாச்சும் திருப்பி குடுத்தியா?”

“வீட்டுக்கு வாங்க பாரதி! சலிக்க சலிக்கத் தரேன்”

“சலிக்காதுடி, இந்த ஜென்மத்துக்கு சலிக்கவே சலிக்காது!”

“என்ன, ஐயா இன்னிக்கு செம்ம ஜாலி மூட்ல இருக்காரு போல”  

“ஆமாடி ரதிம்மா! யூ க்நோ டார்லிங், நான் ரொம்ப ஹேப்பியா இருக்கேன்! ஐ மேட் அ ஹுயூஜ் டீல் டுடே! இன்னிக்கு பார்ட்டில என்னை எல்லாரும் பாராட்டித் தள்ளிட்டாங்க! இவங்க பாராட்டு யாருக்கு வேணும்! என் ரதிம்மா குடுப்பா பாரு எனக்கு பாராட்டு, அது தான் சீக்ரேட் ஆப் மை சக்சஸ்! கொஞ்ச நாளா என்னைப் பாராட்டவே மாட்டறடி நீ! பாப்பூ வந்து என் ரதிம்மாவ மொத்தமா என் கிட்ட இருந்துப் பிடிங்கிகிட்டா! என்னைப் பார்த்து கண்கள் மின்ன மோகனமா சிரிப்பியே, அதெல்லாம் இல்லாமலே போச்சுடி! என்னமோ இன்னிக்கு என் பக்கத்துல நீ வேணுங்கற மாதிரி இருக்கு ரதிம்மா!”

ரதிம்மா என குழைந்து வந்த குரலைக் கேட்டதும், ரெக்கார்டிங்கை நிறுத்தியவள் தேம்பி தேம்பி அழுதாள். லட்சம் முறையாக மனது மீண்டும் அவளை குற்றம் சுமத்தியது. கேட்டிருக்க வேண்டுமோ எங்கிருக்கிறான், என்ன செய்கிறான் என கேட்டிருக்க வேண்டுமோ! அவன் காட்டிய காதலில் மதி மயங்கி நின்றது குற்றமோ என மனசாட்சி ஈட்டியாய் நெஞ்சைக் குத்திக் கிழித்தது. கண்ணீரை துடைத்துக் கொண்டே மீண்டும் அவர்களின் சம்பாஷணையை ஓட விட்டாள்.

“என்ன பாரதி இது! இப்படிலாம் ஏக்கமா பேசனா எனக்கு கவலையா இருக்கும்னு தெரியாதா! ஸ்கூல் போய்ட்டு, வீட்டுக்கு வந்து இவள பார்த்துக்கிட்டுன்னு நேரம் ஓடிருது செல்லம். உங்களுக்குன்னு டைம் சரியா குடுக்கறது இல்லைன்னு எனக்குமே புரியுது! கடமைகள் அதிகரிக்க, பிரியோரிட்டிஸ் மாறுது பாரதி! ஐம் சோ சாரி! இப்படி மனச விட்டு பேசனாத்தானே நான் எங்க மிஸ்டேக் விடறேன்னு தெரியும்! இனிமே என் பெரிய குழந்தையை ஏங்க விடமாட்டேன்! கண்ணுக்குள்ள வச்சிப் பார்த்துக்குவேன்! சரியா!” என கொஞ்சி சமாதானப்படுத்தினாள் நந்தனா.

“எனக்குப் புரியுதுடா ரதிக்குட்டி! அம்மான்றது பெரிய பொறுப்பு இல்லையா! நீயும் இப்போத்தானே அதோட நெளிவு சுழிவுகள கத்துக்கற! சீக்கிரம் மேனேஜ் பண்ணிடுவ” என அவள் குரலில் தெரிந்த கலக்கத்தைப் போக்க முனைந்தான் இவன்.

“போங்க பாரதி! வீட்டுல இருக்கறப்ப, எல்லாமே நீங்கதான் கவனிக்கறீங்க! பாப்பாவ பார்த்துக்கறது, சமைக்கறது, என்னைப் பார்த்துக்கறதுன்னு! எனக்கு உங்கள மாதிரி மல்ட்டிடாஸ்க்கிங் இன்னும் வரல பாரதி”

“வரலனா போகுது விடு! என்னையும் பாப்புவையும் மட்டும் பாரு! மத்ததுக்கு எல்லாம் ஆள் வச்சிக்கலாம்! இன்னிக்கு முடிச்ச டீலுக்கு கமிஷன் மட்டுமே செம்மையா வரும்டி! அந்த காசுல ரிஷிக்கும் சீக்கிரம் கல்யாணம் பண்ணி வச்சிடலாம். அவனுக்காச்சும் என்னை மாதிரி இல்லாம அழகா அறிவா பொண்ணு பார்க்கனும்” என வம்பிழுத்தான் பாரதி.

“யோ பாரதி! எங்க போனாலும் கடைசில வீட்டுக்குத்தானே வரனும்! மூஞ்சு குடுத்தே பேச மாட்டேன் போயா” என திட்டியவளுக்கு தெரியுமா, தான் பேசினாலும், அழுதாலும், கதறினாலும் வீட்டுக்கு வந்தவன் திருப்பி பேச மாட்டான் என!

“இச்சு, இச்சு, இச்சு! கோபத்துல தான்டி நீ அழகா இருப்ப. சிவந்து போய் தக்காளி மாதிரி தகதகன்னு! அப்படியே கடிச்சு தின்னுடலாம் போல இருக்கும்! ம்ப்ச்! ரெண்டு நாள் கூட உன்னையும் பாப்புவையும் விட்டுட்டு இருக்க முடியலடி! உடம்பு இங்க இருந்தாலும் என் நினைப்பு முழுக்க அங்கதான் இருக்கு! எப்ப முதன் முதல்லா உன்னை யூனில பார்த்தனோ, அந்த நொடியில இருந்து இப்ப வரை என்னை உன் சுண்டு விரல்ல முடிஞ்சு வச்சிருக்கடி ரதி!”

வெட்கத்தில் மெலிதாய் நகைத்தாள் நந்தனா.

“சிரிக்காதடி! உன் சிரிப்பு சத்தம் கேட்டா நாடி நரம்பெல்லாம் அப்படியே ஜிவ்வுன்னு இருக்கு! ரதிம்மா….” என ஆசையாக இழுத்தான் பாரதி.

“ஹ்ம்ம்!”

“ரதிம்மா! நீ எனக்குத்தான்னு நம்மள படைக்கறப்பவே அந்த கடவுள் முடிச்சுப் போட்டுட்டான். என்னில் பாதி நீ, என் பெயரின் பாதி நீ! இந்த பாரதியின் ரதி நீ! அந்த பரந்து விரிந்த வானம் சாட்சியாக, எட்டிப் பார்க்கும் நிலவு சாட்சியாக, ஜில்லென வீசும் தென்றல் சாட்சியாக என் மனைவியாகிய இந்த ரதி நந்தனாவை என் உயிருக்கும் மேலாக காதலிப்பேன் என சத்தியம் செய்கிறேன். ஐ லவ் யூ டீ, பொண்டாட்டி!” என இமோஷனலாக பேசினான் பாரதி.

கர்வப் புன்னகை வந்தமர்ந்தது அப்போதைய நந்தனாவுக்கு. தற்போதைய நந்தனா தலையிலேயே அடித்துக் கொண்டு அழுதாள்.

‘இவ்ளோ எமோஷனலா இருந்திருக்காங்க! ஏன்னு நான் கேக்கவே இல்லையே! கேட்டிருந்தா இதெல்லாம் நடந்திருக்காதோ!’ மீண்டும் மனதை குத்திக் கீறி ரணமாக்கிக் கொண்டாள் நந்தனா.

ரெக்கார்டிங் அது பாட்டுக்கு ஓடிக் கொண்டிருந்தது.

“கூந்தல் நரைத்துப் போனாலும்

கூடல் குறைந்துப் போனாலும்

தேகம் ஒடுங்கிப் போனாலும்

தேடல் அடங்கிப் போனாலும்

போகாதடா உன் மேல் வைத்த பாசம்

அடங்காதடா உன் மேல் வைத்த நேசம்!!!

நானும் உங்களை உயிருக்கும் மேலாக காதலிக்கிறேன் எனதினிய ரவிபாரதி” என வெட்கத்துடன் சொல்லி சிரித்தாள் நந்தனா.

“லவ்லி டார்லிங்! தமிழ் டீச்சர்ல, அதான் காதல கவிதையா சொல்லி கலக்கிட்டீங்க! எனக்கு கவிதை வராதுடி! ஆனா என் ரதிய ஆராதிக்கற மாதிரி நல்லா பாட வரும். நம்ம அந்தரங்க பாட்டு பாடவா ரதிம்மா?””

“போங்க பாரதி!” சிணுங்கினாள் நந்தனா.

அவர்கள் இருவரின் பெயரும் வரும்படி இருக்கும் பாடல் அது! கூடல் முடிந்து மனைவியைத் தன் நெஞ்சில் போட்டுக் கொண்டு எப்பொழுதும் பாடுவான் ரவிபாரதி. அவளும் இணைந்துக் கொள்வாள் அவனோடு.

“இன்னிக்கு என்னமோ ஆச்சு உங்களுக்கு!”

கலகலவென சிரித்தான் பாரதி.

“லலலாலலலலால லலலா!” என ரவிபாரதியின் இனிமையான குரல் ரெக்கார்டிங்கில் கேட்க, போனை பார்த்தப்படி பொங்கி அழுதாள் நந்தனா.

“ரவிவர்மன் எழுதாத கலையோ” என அவன் பாட, இவள்

“ஆஹாஹா” என பதில் கொடுத்தாள்.

“ரதிதேவி வடிவான சிலையோ”

“ஆஹாஹா”

“கவிராஜன் எழுதாதா கவியோ

கரை போட்டு நடக்காத நதியோ

ஓஹோஹோ”

“ஹ்ம்ஹ்ம்ஹ்ம்”

“ரதி ஞாபகம் இருக்கா! முதல் தடவை இந்தப் பாட்ட பாடனப்போ, ‘பூமாலையே உன்னை மணப்பேன், புதுச்சேலை கசங்காமல் அணைப்பேன்’ற வரிக்கு விழுந்து விழுந்து சிரிச்சியே”

“ஆமா, ஆமா! சேலை கசங்காமல் அணைக்கறது எல்லாம் ஒரு அணைப்பா? நீங்க சைவப்பிரியரோன்னு கிண்டல் பண்ணேனே” என சிரித்தாள் இவள்.

அவனும் அங்கே சிரித்தான்.

“உள்ள வந்ததுமே சேலைய உருவிட்டா அது ஏன் கசங்க போகுதுன்னு நான் சொல்ல, துரத்தி துரத்தி அடிச்சியே! ஹாஹா! அதெல்லாம் நம்மோட ஸ்வீட் மெமரிஸ்டி ரதி”(இது அந்த பாடலின் ஆசிரியர் வைரமுத்துவே சொன்னது! அவர் டீசண்டா அந்த நேரத்தில் புடவைக்கு விடுமுறைன்னு சொல்லிருக்காரு. நான் என் ஸ்டைல்ல சொல்லிருக்கேன். வைரமுத்து பேசிய வீடியோ அட்டாச் பண்ணியிருக்கேன். பார்க்கறவங்க பார்க்கலாம்)

“நீங்க திரும்பி வந்ததும் இன்னும் இன்னும் நெறைய ஸ்வீட் மெமரிஸ் சேகரிச்சு வைக்கலாம் பாரதி! ஐ லவ் யூ!”

“ஐ லவ்…….” என பாரதி சொல்ல முயன்றதோடு அந்த கால் கட் ஆகி இருந்தது அன்று.

யார் அறிந்திருப்பார், ஆசையாய் எடுத்த போட்டோக்கள், ஒருத்தொருக்கொருத்தர் அனுப்பிக் கொண்ட வொய்ஸ் மேசேஜ்கள், காதலர் தினத்துக்கு கொடுத்து கொண்ட கிரீட்டிங் கார்டுகள் எல்லாம் பிறிதொரு பொழுதில் பொக்கிஷமாய், ஞாபக சின்னமாய் போய் விடுமென்று! நாளை வாழ்க்கை நமக்கு என்ன வைத்திருக்கிறது என அறிந்து கொண்டால் மானிடன் மகானாகி விடமாட்டானோ!

இங்கே இவள் அழுது அரற்றிக் கொண்டிருக்க, அங்கே கோபம் மெல்ல வடிய, முகம் கசங்க சிந்தியாவின் கைப்பிடித்து தன் முகத்தில் வைத்துக் கொண்டு கண்ணீர் விட்டான் ரிஷி.

“மன்னிச்சிரு, எங்கள மன்னிச்சிரு சிந்தியா!”

 

‘சோகத்தில் கலங்குது ஆண் நெஞ்சம்

மன்னித்து நிம்மதி கொடுப்பாளா கொஞ்சம்!!!!’

 

(உருகுவான்…)

 

(போன எபிக்கு லைக், கமேண்ட், மீம் போட்ட அனைவருக்கும் எனதினிய நன்றி..இன்பாக்ஸ்ல, சைட்ல, முகபுத்தகத்துல என்னை தேடன அனைவருக்கும் நன்றி..இன்னிக்கு எபியோட சேர்த்து எல்லா க்ளுவூம் குடுத்து முடிச்சுட்டேன். இதுக்கு மேல ப்ளேஸ்பேக் போய் கதைய முடிக்கறது தான் பாக்கி! லவ் யூ ஆல் டியர்ஸ். ) 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!