UUU–EPI 22

103977454_653445081909496_2472649225753995686_n-85e31487

UUU–EPI 22

அத்தியாயம் 22

நமக்கு இன்பத்தைத் தரும் சாக்லேட் மில்லியன் கணக்கான கானா நாட்டுக் குழுந்தைகளுக்கு துன்பத்தை அளிக்கிறது. குழந்தைகளை கடத்தியும், அடிமைப்படுத்தியும் சாக்லேட் செய்யும் தொழிலில் ஈடுபடுத்துகிறார்கள். சட்டப்படி பல நடவடிக்கைகள் எடுத்தும் இந்த சட்ட விரோத செயலை முடுக்க முடியவில்லை.

 

அன்று முதல் நாள் கிண்டர்கார்டனில் அடி எடுத்து வைக்கிறாள் சிந்தியா. நிறைய நண்பர்கள் கிடைப்பார்கள், நன்றாக விளையாடலாம், கலரிங் செய்யலாம் என்றெல்லாம் சொல்லி மகளைத் தயார்படுத்தி இருந்தார் வாணி.

அவ்வளவு வேலைக்காரர்கள் இருந்தும், ஏன் அம்மா பாட்டி இருந்தும் கூட வீட்டில் இருக்கும் வேளைகளில் பேத்திக்கு தானே உணவூட்டுவார் சிவசு. அவளும் தன் குட்டி வாயைத் திறந்து சமத்தாக வாங்கிக் கொள்வாள். சில சமயம் தன் பெயருக்கேற்ப, பிஞ்சு விரல்களால் கீழேயும் மேலேயும் சிந்தி இவளும் தாத்தனுக்கு ஊட்டி விடுவாள். அவள் செயலில் பூரித்துப் போவார் சிவசு.

அன்றும் தன் கையால் பேத்திக்கு காலை உணவு ஊட்டிய சிவசு, தொப்பை இடித்தும் கஸ்டப்பட்டுக் குனிந்து அவளுக்கு சாக்ஸ் ஷூவையும் மாட்டி விட்டார். மீசையை முறுக்கியபடியே மேலும் கீழும் பேத்தியைப் பார்த்து திருப்தியுற்றவர் அவளின் குட்டி கரம் பிடித்து பள்ளிக்குத் தானே கூட்டிப் போனார். தங்கள் பிள்ளைகளுக்குக் கூட இதெல்லாம் செய்தறியாதவரை மனதில் திட்டித் தீர்க்க மட்டுமே முடிந்தது தில்லும்மாவால்.

அது ஒரு புகழ்பெற்ற தனியார் கிண்டர்கார்டன். தங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கான முதற்படியை எடுத்து வைத்திருக்கும் குழந்தைகளாலும் அவர்களை பெற்றவர்களாலும் நிரம்பி வழிந்தது அவ்விடம். தங்கள் பிள்ளை வளர்ந்து விட்டானே எனும் பெருமிதமும், தனியாய் சமாளிப்பானா எனும் கலக்கமாகவும் அமர்ந்திருந்தனர் பெற்றோர்கள். இவளோ தாத்தனின் கையைப் பற்றிக் கொண்டு மற்ற பிள்ளைகளின் அழுகையை அமைதியாய் பார்த்திருந்தாள்.

பேத்தியை கிளாஸ் உள்ளே விட்டுவிட்டு பள்ளியின் காண்டினில் மற்ற பெற்றவர்களுடன் காத்திருக்கலானார் சிவசு.

வகுப்பறையில் பல இன மாணவர்களின் மத்தியில் பயமில்லாமல் அமர்ந்திருந்தாள் சின்னவள். பெற்றவர்கள் வேண்டும் என அழுது ஆர்ப்பாட்டம் செய்த குழந்தைகளை சகஜமாக்க முயன்ற ஆசிரியை ஒவ்வொருவரின் பெயரையும் சொல்லி அறிமுகப்படுத்திக் கொள்ள சொன்னார். சிந்தியாவின் முறையும் வந்தது.

எழுந்து நின்றவள் நெஞ்சைத் தொட்டுக் காட்டி,

“மை நேம் இஸ் டாக்டர் சிந்தி!” என கணீரென்ற குரலில் சொன்னாள்.

அவள் சொல்லியதைக் கேட்டு மற்ற குழந்தைகள் கெக்கேபெக்கேவென உருண்டு புரண்டு சிரித்தார்கள். ஏன், அவள் ஆசிரியைக்கே சிரிப்பு வந்துவிட்டது. எல்லோரும் தன்னைப் பார்த்து சிரித்ததில் அவமானமாய் போய் விட்டது குட்டிக்கு. மற்ற குழந்தைகளை விட வயதுக்கு மீறிய முதிர்ச்சியுடன் இருந்த சிந்தியாவை வேற்று கிரகவாசி போல பார்த்தனர் பிள்ளைகள். சரளமாக பல பாஷைகள் பேசும் அவளை ஆச்சரியமாகப் பார்த்தனர். டீச்சர் காட்டிய படம் வைத்த ப்ளேஷ்கார்டுக்கு எல்லாம் பட்பட்டென பதில் சொன்னவளை ஒதுக்கி வைத்தனர் மற்ற பொடுசுகள்.

பள்ளிக்குப் போன முதல் நாளே மற்ற தோழர் தோழிகளைப் போல தான் இல்லையோ என சந்தேகம் கொண்டாள் குட்டி சிந்தியா. அவள் மேல் விளையாட்டு பொருட்களை தூக்கி வீசி, ப்ளேடோவை முடியில் ஒட்டி, தண்ணீரை அவள் மேல் ஊற்றி என பள்ளி சென்ற ஒரு வாரத்திலேயே அவள் வாழ்க்கையை நரகமாக்கினார்கள் பொடுசுகள்.

அதற்கடுத்த வாரம் பள்ளிக்கு செல்ல மாட்டேன் என அடம் பிடித்து அழுதவளை ஒரே ஒரு பார்வைத்தான் பார்த்தார் சிவசு. பொட்டி பாம்பாய் அடங்கிய ஐந்து வயது சிந்தியா, கண்ணீரைத் துடைத்துக் கொண்டு தாத்தனின் கையைப் பற்றிக் கொண்டாள். பாசத்தைக் கொட்டும் தாத்தா லேசாக முறைத்ததைக் கூட தாங்க முடியவில்லை அவளால்.

“யம்மா வாணி! டாக்டர் சிந்திக்கு முகம் துடைச்சு பவுடர் போட்டு விடு” என குரல் கொடுத்தார் சிவசு.

“வாம்மா சிந்தியா” என அழைத்த வாணியை முறைத்தார் பெரியவர்.

சிவசுவின் முறைப்பில் பம்மிய வாணி,

“வாம்மா டாக்டர் சிந்தி!” என அழைப்பை மாற்றி, மகளை குளியல் அறைக்கு அழைத்துப் போனார். அவளுக்கு முகம் கழுவி, கட்டி அணைத்து முத்தமிட்டு சமாதானப்படுத்தினார் வாணி.

பேத்தியின் அழுகைக்கு காரணம் அறிந்துக் கொண்ட சிவசு, பள்ளி நிர்வாகத்தை ஒரு வழியாக்கி விட்டார். அன்றிலிருந்து மற்ற பிள்ளைகளிடம் இருந்து பாதுகாப்பு கிடைத்தது குட்டி சிந்தியாவுக்கு. ஆனால் அந்த வயதுக்குரிய விளையாட்டு தோழமைகள் அமையாமலே போய்விட்டது.

ஏ,பீ,சீ,டீ சொல்லி தாத்தனின் கவனைத்தை ஈர்த்த தினத்தில் இருந்து சின்னவளின் வாழ்க்கையே மாறிப் போயிருந்தது. தனது லட்சியத்தை நிறைவேற்ற சரியான வாரிசு இவளே என உறுதியாய் நம்பிய சிவசு, சிந்தியாவை பொம்மலாட்ட பொம்மையாக்கி அதன் நூலை இறுக்கமாக தன் கையில் பிடித்துக் கொண்டார்.

மலேசியாவின் புகழ் பெற்ற தன்முனைப்பு பேச்சாளரை தனியாக சந்தித்து எப்படி பேத்தியைத் தன் இஸ்டத்துக்கு வளைப்பது என பயிற்சி எடுத்துக் கொண்டார் சிவசு. சின்ன வயதிலேயே ஒரு விஷயத்தை திரும்ப, திரும்ப அவர்களை கேட்க செய்வதும், மனதில் பதியும்படி அவ்விஷயத்தை விதைப்பதும் நல்ல பலன் கொடுக்கும் என பயிற்சியின் வாயிலாக புரிந்துக் கொண்டவர் அதையே செயல் படுத்த முனைந்தார்.

அன்றிலிருந்து சிந்தியா, தில்லும்மாவைத் தவிர வீட்டில் உள்ள மற்ற எல்லோராலும் டாக்டர் சிந்தி என அழைக்கப்பட்டாள். அப்படி அழைக்க சொல்லி கட்டாயப்படுத்தினார் சிவசு. அவர் கண்டிப்பு சொந்த மனைவியிடம் எடுபடவில்லை. எல்லோரும் சிவசுவின் தாளத்துக்கு சரியாக ஆடினாலும், அவர் மனைவி மட்டும் தப்பாட்டம் ஆடி அவருக்கே தண்ணி காட்டினார். பேத்தியை டாக்டராக பார்க்காமல் பேத்தியாக மட்டும் பார்த்தார் அந்த பாட்டி.

சிந்தியா விளையாட டாக்டர் செட் வாங்கி கொடுத்தார் சிவசு. ப்ளாஸ்டிக்கிலான விளையாட்டு டாக்டர் செட் என நீங்கள் நினைத்தால், தயவு செய்து கன்னத்தில் தப்பு, தப்பு என இரண்டு அடி போட்டுக் கொள்ளவும்! அந்த வயதிலேயே நிஜ ஸ்டெட்டேஸ்கோப் வைத்து விளையாடியது நம் சிந்தியாவாய் தான் இருக்கும். பேத்தி ஸ்டெட்டேஸ்கோப்பை தன் நெஞ்சில் வைத்து விளையாடும் போது, கண்ணெல்லாம் கலங்கி விடும் நம் சிவசுவுக்கு. வீட்டிலுள்ளவர்களை வரிசையாய் அவள் முன் நிறுத்தி வைத்து,

“தில்லும்மாவுக்கு வயித்துல வலி! மருந்து குடுமா” என்பார் சிவசு.

“பாட்டி டேலி டூ டைம்ஸ் டாய்லேட் போங்க. வலி ஓடிரும்” என்பாள் நான்கு வயது சிந்தியா. அந்த வயதில் வயிற்று வலிக்கு நிவாரணம் அது என்பது மட்டும் தானே பிள்ளைகளுக்கு தெரியும்!

“உங்கம்மாவுக்கு காய்ச்சலாம்” என்பார் சிவசு.

“அம்மா கஞ்சி மட்டும் சாப்டுங்க! நோ கோழி, நோ மீனு” என்பாள் சிந்தியா.

“உங்கப்பாவுக்கு பின்னால கட்டியாம்” என்பார் தாத்தா.

“அப்பா, கீழ உக்காரவே கூடாது! கட்டி புஸ்க்குன்னு ஒடஞ்சிடும்! பாவம் கட்டி” என கட்டிக்குப் பரிதாபப்படுவாள் குட்டி.

மொத்தத்தில் தாத்தா பேத்தியின் அட்டகாசத்தில் வீடே அல்லோலகல்லோலப்படும்.   

குட்டி சிந்தியாவுக்கு மூன்று வயதிலேயே ஸ்கேடியூல் போட்டு வீட்டிலேயே பாடம் நடத்தப்பட்டது. தூங்கும் நேரம் தவிர மற்ற நேரம் எல்லாம் எதாவது கற்றுக் கொடுக்கப்பட்டது அவளுக்கு.

சிறு வயதிலேயே கற்றுக் கொண்டால், எந்த மொழியும் வசமாகிவிடும் என யாரோ சொன்னதை ஏற்று தமிழ், மலாய், ஆங்கிலம், மேண்டரின், ஜப்பனீஸ் எல்லாம் பயிற்றுவித்தார் சிவசு. மற்ற மொழிகள் சரி, அது ஏன் ஜப்பான் மொழி?

“ஜப்பான்காரன் ரோபோட்டு கண்டுப்புடிச்சிட்டானாம்! இனிமே ரோபோட்டு தான் சீக்கு பார்க்குமாம்! நாளை பின்னே டாக்டர்லாம் ரோபோட்டுக்கு பேட்டரி மாத்தற வேலை தான் செய்யனுமாம்” என அவர் பழகும் வட்டாரத்தில் பேசியதைக் கேட்டு, தன் பேத்தி டாக்டராகி ரோபோட்டுக்கு பேட்டரி மாற்றும் போது மொழி தெரியாமல் சிரமப்படக்கூடாதே எனும் கரிசனம் தான் அதற்கு காரணம்.

தந்தை செய்யும் காரியங்களை தடுக்க முடியாமல் வாய் பொத்தி நின்றார் சிவராமன். அந்த வீட்டின் ஆணிவேர் அவரல்லவா! பிறந்ததில் இருந்து அவர் பட்ட கஸ்ட நஸ்டங்களைப் பார்த்து வளர்ந்தவர் அல்லவா சிவராமன். வாழ்ந்து கேட்ட மனிதர், தங்களுக்காக அல்லவா உழைத்து ஓடாய் தேய்ந்து மறுபடி இந்த சாம்ராஜ்யத்தை நிறுவி உள்ளார். அப்படி பட்டவரின் ஒற்றை ஆசையை தன் மகள் நிறைவேற்றுவதில் தப்பொன்றும் இல்லையே என வாளாவிருந்தார் அவர். மகள் டாக்டராகினால் தனக்கும் தானே பெருமை என நினைத்தார் சிவராமன்.   

தாத்தாவின் திடீர் மாறுதலால் அல்லாடிப் போனது சிந்தியின் சகோதரன் தான். தன் செல்ல பாப்பாவுடன் முன் போல விளையாடி, கொஞ்சி மகிழ முடியவில்லை அவனால். தாத்தாவுடன் விளையாடும் போது அண்ணனையும் கூப்பிடுவாள் சின்னவள். பேத்திக்கு தெரியாமல், அவர் முறைக்கும் முறைப்பைப் பார்த்து இவனாகவே படிக்க வேண்டும், பாடம் செய்ய வேண்டும் என சொல்லி ஓடி விடுவான்.

தன்னம்பிக்கையோடு வளர வேண்டும் என இவளுக்கும் தனி ரூம் கொடுக்கப்பட்டது. இரவில் வாணியும் சிவராமனும் கொஞ்சி விட்டுப் போன பிறகு பேத்திக்கு கதை சொல்லி தூங்க வைப்பார் சிவசு. ரூமில் ஓர் ஓரமாய் அமர்ந்து சிவசு செய்யும் ரவுசுவை கடுப்பாய் பார்த்திருப்பார் தில்லும்மா! தினம் ஒரே கதையையே வேறு வேறு மோடுலேஷனில் சொல்வதில் சிவசு கில்லாடி! கதை சொல்லும் தாத்தனை கேள்வி கேட்டு கதறடிப்பதில் சிந்தியா கில்லாடிக்கு கில்லாடி.

“ஒரு ஊர்ல ஒரு குட்டி தேவதை இருந்தாளாம்”

“தேவதைனா இங்லிஸ்ல என்ன தாத்தா?”

அவள் கேள்வியில் முழிப்பார் சிவசு.

“தில்லு, தேவதைக்கு இங்கீலீசுல என்ன புள்ள?”

“அந்த அளவுக்கு இங்கீலீசு தெரிஞ்சா உங்களை ஏன் கட்டி சீரழிய போறேன்!” நொடித்துக் கொள்வார் அவர்.

“பட்டும் பவுனுமா உன்னை அம்மன் சிலையாட்டம் வச்சிருந்தா, சீரழிச்சுப்புட்டேன்னா சொல்லுற” என எகிறுவார் சிவசு.

“தாத்தா இங்லீசுல சொல்லுங்க ப்ளிஸ்!” என தாத்தனின் கவனத்தைத் மீண்டும் தன் புறம் திருப்புவாள் குட்டி.

“இரும்மா டாக்டர் சிந்தி!” என அவளை சமாதானப்படுத்தி விட்டு வாணிக்குப் போனை போடுவார் சிவசு.

பாதி தூக்கத்தில் இருப்பவர் அடித்துப் புடித்து போனை எடுப்பார்.

“யம்மா, தேவதைக்கு இங்கீலீசுல என்னா சொல்லுவாங்க?”

கோட்டாவியை கேட் போட்டு நிறுத்தி விட்டு பதிலளிப்பார் வாணி.

“ஏஞ்சலுங்க மாமா”

“சேரி சேரி! நீ லைனுலே இரு! பாப்பா வேற சந்தேகம் கேட்டா, மறுக்க மறுக்க போன் போட தேவை இல்ல பாரு!”

‘என்ன கொடுமைடா சாமி!’ என லைனில் இருக்கும் வாணி குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருக்கும் சிவராமனையும் ஒரு இடி இடித்து எழுப்பி விடுவார். தான் மட்டும் விழித்திருக்க, அவர் மட்டும் தூங்கலாமா எனும் நல்லெண்ணம் மட்டுமே அதற்கு காரணம்.

பேத்தி ஆங்கிலத்தில் கதை கேட்க, தட்டுத் தடுமாறி மறுபடி ஆரம்பிப்பார் சிவசு.

“ஓன் ஊர்ல ஓன் ஏஞ்சல் லீவிங்ஸ்டனாம்! தட் ஏஞ்சல்க்கு ஓன் க்ராண்ட் தாத்தாவாம்! தட் க்ராண்ட் தாத்தா..” அடுத்த வார்த்தைக்கு முழிப்பவர் போனில் இருக்கும் வாணியிடம்,

“எம்மா மருமகளே, ரொம்ப நல்லவர்னு எப்படிமா சொல்லறது?” என கேட்பார்.

“குட்ட்ட்ட்ட்ட்ட்டு மேனு……………………………..னு சொல்லனும் மாமா”

ரொம்பஆஆஆஆஆஆ நல்லவராம்! வடிவேலுவுக்கு முன்னமே அந்த மோடுலேஷனை ஆங்கிலத்தில் பேசியவர் நம் சிந்தியின் அம்மா என்பதை இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும்.

மீண்டும் பேத்தியிடம் திரும்பி,

“தட் க்ராண்ட் தாத்தா குட்டு மேன்! அந்த தாத்தாவுக்கு ஏஞ்சல்னா உசுராம்! அவர் அந்த ஏஞ்சலுக்கு குட்டுதான் செய்வாராம்! அந்த ஏஞ்சலுக்கு, புடிச்ச விளையாட்டு சாமான்லாம் ஹ்ம்ம் டாய்ஸ்லாம் வாங்கி குடுப்பாராம், புடிச்ச சாப்பாடுலாம் வாங்கி குடுப்பாராம், புடிச்ச ட்ரேஸ்லாம் வாங்கி குடுப்பாராம்! ஆல் திஸ் கிராண்ட் தாத்தா டூ, ஏஞ்சல் ரிட்டர்ன் வாட் டூ? அந்த ஏஞ்சல் டாக்டர் ஆனா மட்டும் போதுமாம் கிராண்ட் தாத்தாவுக்கு!”

இங்கேதான் ஒரு ட்விஸ்ட்! புடிச்ச, புடிச்ச என சிவசு சொன்னது எல்லாம் குழந்தைக்கு புடிச்ச இல்லை, அவருக்கு புடிச்ச என அர்த்தம் கொள்ள வேண்டும்!

இந்த கட்டத்தில் எல்லாம் குழந்தை தூங்கி இருப்பாள். காலையில் இருந்து விளையாட்டுப் பிள்ளையை படிப்பு, படிப்பு சார்ந்த விளையாட்டு, மீயூசிக் கிளாசஸ் என பாடு படுத்தினால், அவளும் தான் என்ன செய்வாள்!

“அதான் தூங்கிட்டால்ல, கெளம்புங்க!” என காய்வார் தில்லும்மா.

“இருடி!”

தூங்கும் பேத்தியைத் தட்டி எழுப்பும் சிவசு,

“அந்த ஏஞ்சல் யாரு?” என கேட்பார்.

“டாக்டர் சிந்தி”

“க்ராண்ட் தாத்தா யாரு?”

“சிவசு தாத்தா”

“பெருசா ஆனதும் என்ன வேலை செய்வீங்க?”

“டாக்டர் வேலை”

தூக்கத்தில் கூட கரேக்டாக சொல்லும் அளவுக்கு அவள் மனதையும் மூளையையும் ட்யூன் செய்திருந்தார் சிவசு. பேத்தியின் பதிலில் முகம் எல்லாம் புன்னகை பூக்க, கன்னத்தில் முத்தமிட்டு கதவை சாற்றி விட்டுப் போவார் சிவசு. அவர் போனதும், பேரனின் ரூம் கதவைத் தட்டுவார் தில்லும்மா! ஓடி வந்து திறப்பான் அவன்.

“போய்ட்டாரா பாட்டி?”

பேரனின் தலையைத் தடவிக் கொடுப்பவர்,

“ஆமாடா! பாப்பு தூங்கிட்டா! பார்த்துட்டு உடனே வந்துப் படுத்துடனும்! நாளைக்கு ஸ்கூல் இருக்குல்ல உனக்கு” என நினைவுருத்துவார்.

தங்கையின் அறைக்கு பறந்துப் போவான் அண்ணன்காரன். அவனின் வாசம் வைத்தே அவன் வருகையை அறிந்துக் கொள்பவள், பட்டென கண் விழிப்பாள்.

“ண்ணா”

ஓடி வந்து தாவி அணைத்துக் கொள்வான் தங்கையை.

“காலு வலிக்குது, தொண்டை வலிக்குது, கையி வலிக்குது” என தன் அண்ணனிடம் சலுகையாக முறையிடுவாள் சின்னவள்.

குழந்தைகளுக்கு ஐந்து வயதுக்கு மேல் தான் எழுத பழக்க வேண்டும் என ஆய்வுகள் சொல்கிறன. அதுவும் கை விரல்களுக்கு பேப்பரை கசக்குதல், ப்ளேடோவில் விளையாடுதல் போன்ற நிறைய எக்ஸ்சர்சைஸ்கள் கொடுத்தப் பின்னரே எழுதுகோல் பிடிக்க பழக்க வேண்டும். அவர்களின் விரல் எலும்புகள் மிக மென்மையானவை. விளையாட்டுப் பருவத்தில் இருக்கும் பிள்ளையை எழுத சொல்லி கட்டாயப்படுத்துவதால் குட்டி சிந்தியாவுக்கு கை வலி எடுக்கும். அண்ணனிடம் மட்டுமே பகிர்ந்துக் கொள்வாள் தன் கஸ்டத்தை.

தங்கையின் கைப்பிடித்து முத்தமிடுபவன், மெல்ல கையைப் பிடித்து விடுவான்.

“குடுண்ணா!’ என கையை நீட்டுவாள் சின்னவள்.

அவளுக்காக ஒளித்து எடுத்து வந்திருக்கும் சாக்லேட்டை ஊட்டி விடுவான் இவன். மூளை வளர்ச்சிக்கு சத்தான உணவு வகைகளை கொடுக்க வேண்டும் என டீவியில் சொல்லி இருக்க, சிந்தியாவுக்கு இனிப்பு வகைகள் கொடுக்கவே கூடாது என சொல்லி இருந்தார் சிவசு. பாட்டி பள்ளிக்கு கொடுக்கும் பணத்தில் தங்கைக்கு மிகவும் பிடிக்கும் சாக்லேட் வகைகளை வாங்கி வருவான் இவன். அவள் ருசித்து சாப்பிடுவதை பாசமாகப் பார்த்திருப்பான். அவளுக்குப் பிடித்த ஸ்நோ வைட் கதை சொல்லுவான். அந்த ரூமினுள்ளேயே ஓடிப் பிடித்து விளையாடுவார்கள் இருவரும். இவனும் தில்லும்மாவைப் போல டாக்டர் சிந்தி என அழைக்காமல் அவள் பெயர் சொல்லியோ, குட்டிம்மா, பேபிம்மா எனவோ ஆசையாய் அழைப்பான்.  

அவள் ஒன்றும் ஜீனியஸ் இல்லை. ஆனால் வீட்டில் நடத்தப்படும் டியூசன், இன்ன பிற பாடங்கள் அவளை மற்ற விளையாட்டுப் பிள்ளைகளை விட புத்திசாலியாய் காட்டியது. பள்ளியில் யாருடனும் ஒட்ட முடியாமல் தவித்தவள், அண்ணனிடம் எல்லாவற்றையும் பகிர்ந்துக் கொள்வாள். அவள் துவண்டு போகும் நேரங்களில் தூணாய் தாங்கிப் பிடித்தது அவனே! அதற்கும் ஆப்பு வந்தது.

மூர்த்திக்கு திருமணம் பேச முடிவெடுத்தார் சிவசு. அவரின் முதல் திருமணம், குழந்தை என விஷயம் எல்லாம் அறிந்தும் நல்ல வரன் ஒன்று வந்தது. அவர்கள் கேட்டது எல்லாம், முதல் தாரத்துப் பிள்ளையை தங்கள் மகள் தலையில் கட்டக் கூடாது என்பதுதான். இதையே சாக்காய் வைத்து, அவனை ஹாஸ்டலில் சேர்த்தார் சிவசு. மகன் இங்கே படும் பாட்டுக்கு ஹாஸ்டலிலாவது சுதந்திரமாய் இருக்கட்டும் என விட்டுவிட்டார் மூர்த்தி. தகப்பனின் விருப்பப்படி கோலாகலமாய் திருமணம் நடந்தது அவருக்கு.   

பள்ளி முடிந்து வந்தவள் தனக்காய் இருந்த ஒருவனும் காணாமல் போனதில் தவித்துப் போனாள்.

பாட்டியிடம் போய்,

“தில்லும்மா! அண்ணா எங்க?” என அழுதபடியே கேட்டாள்.

பேரனை படிக்க அனுப்பியதில் இருந்து மனதொடிந்து கிடந்தவர், பேத்தியின் அழுகையில் இன்னும் துவண்டு போனார். கணவரின் அட்டகாசம் அவரை மிகவும் பாதித்தது. ஆனாலும் மகனின் நல்வாழ்வும் மலர வேண்டுமே. எவ்வளவு நாள் தான் மூர்த்தியும் தனித்து இருப்பார் என அமைதியாகி விட்டார் இவர். பேரன் தூரமிருந்தாலாவது அடிக்கடிப் போய் பார்த்து, கொஞ்சி தீர்க்கலாம்! பக்கத்திலேயே வைத்துக் கொண்டு அன்பைக் காட்டாமல் இருப்பது அவருக்கும் கொடுமையாகவே இருந்தது.

மனதில் பாசம், நேசம் இருக்கும் வரை தான், கோபத்தைக் கூட கணவனிடம் காட்டுவாள் பெண். அது வற்றிப் போனால், பேரமைதிதான். என்ன செய்கிறாயோ செய்! நீ செய்வது எல்லாம் என் கூந்தலுக்கு சமானம் என ஒரு பெண் ஒதுங்கிக் போகும் போது தோற்றுப் போகிறது அந்த திருமணம். அந்த மனநிலையில் தான் இருந்தார் தில்லும்மா!

பேத்தியைக் கட்டிக் கொண்டவர்,

“பாப்பா! அண்ணா படிக்கப் போயிருக்கான்டா! படிச்சு முடிச்சதும் நம்ம கூடவே திரும்பி வந்துடுவான்! அந்த ஸ்கூல்ல அண்ணாவுக்கு நெறைய ப்ரேண்ட்ஸ் கிடைப்பாங்க! அண்ணா ஹேப்பியா இருப்பான்” என சமாதானப்படுத்தினார்.

அண்ணா ஹேப்பியா இருப்பான் என்ற வார்த்தைகள் குட்டியின் இதயத்தில் பல மாற்றங்களை கொண்டு வந்ததன.

‘நான் பக்கத்துல இல்லைனாலும் அண்ணா ஹேப்பியா இருப்பான்! அவனுக்கு நான் தேவையில்ல’ என அவள் வயதிற்கே உரிய விதமாய் எடுத்துக் கொண்டாள் குட்டி சிந்தியா. மென்மையாய் குழந்தைத்தனமாய் இருக்க வேண்டியவள், பள்ளி குழந்தைகளின் ஒதுக்கம், அண்ணனின் ஹாஸ்டல் வாசம், தினம் நடக்கும் டியூசன் வகுப்புகள், என பல திசை தாக்குதலில் கொஞ்சம் கொஞ்சமாய் முரட்டுத்தனமாய் மாறி போனாள்.

வீட்டில் எல்லோரையும் எடுத்தெறிந்து பேசினாள். பள்ளியில் திமிராக நடந்துக் கொண்டாள். யாராவது கண்டித்தால் வீட்டில் பொருளெல்லாம் உடைந்தது. வாணியும், தில்லும்மாவும் பயந்துப் போனார்கள். சிவசுவோ,

“சாமான உடைச்சா வேற வாங்கிப் போடு சிவராமா! அதுக்குன்னு நல்லா படிக்கற புள்ளய ஏன் கண்டிக்கனும். அவ உடச்சி போடறதிலயா நம்ம சொத்து அழிஞ்சிட போகுது!” என சொல்லி சிரிப்பார்.  

பேத்தி செய்வதெல்லாம் அவருக்கு குழந்தையின் குறும்பாகவே தெரிந்தது.

கிண்டர்கார்டென் முடிந்து தொடக்க நிலை படிப்பை படிக்க ப்ரைவேட் பள்ளிக்கு அனுப்பினார் சிவசு. ப்ரைவெட் என்றாலும் மலேசிய பாடத்திட்டம் தான் மலாயில் அங்கே சொல்லிக் கொடுக்கப்பட்டது. இப்பொழுது போல யூ.கே மற்றும் அமெரிக்கா சிலிபஸ் அப்பொழுது புகழ் அடைந்திருக்கவில்லை. பள்ளி முடிந்து எப்பொழுதும் போல ஹோம் டியூசன் விடாமல் நடந்தது.

பேரனைப் பார்க்க போகும் போது இவளையும் அழைப்பார் தில்லும்மா! பிடிவாதமாய் வரமாட்டேன் என்று விடுவாள். அங்கே ஏற்கனவே தனிமையில் வாடியவன், தங்கை தன்னைப் பார்க்க வர மறுக்கிறாள் என அறிந்து துடித்துப் போவான். முதல் முறை வராத போதே, தன் கைப்பட அவளுக்கு லெட்டர் எழுதி பாட்டியிடம் கொடுத்து விட்டான் அவன்.

“டியர் குட்டிமா,

அண்ணா மிஸ் யூ சோ மச். ஏன் என்னைப் பார்க்க வரமாட்டற? என் மேல என்ன கோபம்? நான் நெறைய சாக்லேட் வாங்கி வச்சிருக்கேன் உனக்காக. பாட்டி கிட்ட கொஞ்சம் கொடுத்து விடறேன். சமத்தா தாத்தா பார்க்கற முன்னாடி சாப்பிட்டறனும். மத்த சாக்லேட் எல்லாம் நீ இங்க வந்தாத்தான் தருவேன் சிந்தி! ப்ளிஸ், வாடா பாப்பா! அண்ணா சிந்தி பாப்பாவ பார்க்கனும்!

லவ் யூ சோ மச்,

அண்ணா”

சாக்லேட்டை சாப்பிட்டவள், லெட்டரை பத்திரமாக தனது தலையணை உறையின் உள்ளே வைத்துக் கொண்டாள். ஆனாலும் அவனைப் பார்க்க போகவில்லை. பிடிவாதத்திலும், தலைக்கணத்திலும் கூட இவள் அப்படியே தாத்தனின் வாரிசு.     

மூர்த்திக்கும் அவர் மனைவிக்கும் மகன் பிறந்தான். இருந்தாலும் சிவசுவின் பாசம் முழுக்க பேத்தியே கொள்ளையடித்திருந்தாள். ஆரம்பத்தில் தன் லட்சியத்துக்காக பேத்தியை பாசமாகப் பார்த்தவர், போக போக அவளின் கொஞ்சலுக்கும் கெஞ்சலுக்கும் அடிமையாகித்தான் போனார். பேத்தியும் விவரம் தெரிய ஆரம்பிக்கும் வயதில் இருந்தே மற்றவர்களை விட அதிகமாக பாசம் காட்டிய தாத்தாவை தன் இதய சிம்மாசனத்தில் அமர்த்தி வைத்திருந்தாள். தனது தாத்தாதான் மற்றவர்களை தன்னிடம் அதிகம் நெருங்க விடுவதில்லை என்பதையும், அண்ணனை ஒதுக்கி வைத்திருப்பதும் அவர்தான் என அறியும் போது இவளின் நிலை என்ன? அந்த தாத்தாவின் நிலையும்தான் என்ன?

மார்க் குறைந்தால் தாத்தா ரொம்பவே அப்செட்டாவதை புரிந்துக் கொண்டவள், முட்டி மோதி நல்ல மார்க் எடுத்தாள். என்னதான் முயன்றாலும் கேபேசிட்டி என்று ஒன்று இருக்கிறதே! தன் கேபேசிட்டியை மீறி தாத்தாவுக்காக விழுந்து புரண்டு படித்தவள், அது கொடுத்த ஸ்ட்ரெசில் தன் கோபத்தை எல்லாம் மற்றவர்கள் மீது காட்டினாள். பேத்தி படும் பாட்டைப் பார்த்த தில்லும்மாவுக்கு கவலையாய் போனது! சிவசு இல்லாத நேரத்தில் தன்னால் முடிந்த அளவுக்கு அவளை கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக் கொண்டார்.

பள்ளி விடுமுறைகளில் வாணி, மகளைத் தன் அம்மா வீட்டிற்கு அழைத்து சென்று விடுவார். அதற்குமே சிவசு பெரிய போராட்டம் நடத்துவார் பேத்தியை பிரிந்து இருக்க முடியாது என!

“உங்களுக்கு மட்டும் அவ பேத்தி இல்ல! வாணியோட அம்மா அப்பாவுக்கும் அவ பேத்திதான்!” என சண்டையிட்டுத்தான் அனுப்பி வைப்பார் தில்லும்மா.

அங்கே புத்தகம், படிப்பு என்று இல்லாமல் சுதந்திரமாக இருக்க விடுவார் வாணி. தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பதற்கிணங்க, சற்று நேரம் தொலைக்காட்சி பார்ப்பவள், மீண்டும் பாட புத்தகங்களோடு அமர்ந்து விடுவாள். ஒரு செயல் பழக்கமாக மாற அறுபத்து ஆறு நாட்கள் போதுமாம் என ஆராய்ச்சிகள் சொல்கின்றன. அப்படி இருக்க இரண்டு வயதில் இருந்தே படிப்பு, படிப்பு என பழக்கப்படுத்தப்பட்டவள், படிக்காவிட்டால் என்னமோ குறைவது போல நெர்வஸ் ஆக ஆரம்பித்தாள். இதுவும் ஒரு வகை போதைதான்! நமக்கு எப்படி கதை படிக்காமல், சிலருக்கு ட்ராமா பார்க்காமல், காபி குடிக்காமல், பலான படங்கள் பார்க்காமல், சிகரேட் பிடிக்காமல் இருக்க முடியாதோ அது போல சிந்தியாவுக்கு படிக்காமல் இருக்க முடியாது. இப்படி நாம் பழக்கப்படுத்திக் கொண்ட சில விஷயங்கள் நம்மை அடிமைப் படுத்திவிடும். இதில் இருந்து வெளி வர கூட நாமே முழு மனது வைத்தால்தான் முடியும்.

வயது ஏற ஏற தன்னை சுற்றி நடக்கும் விஷயங்களை ஆழ்ந்து கவனிக்க ஆரம்பித்தாள் சிந்தியா. ஒரு பக்கம் படிப்பு, டியூசன் என போனது! வீட்டில் தாத்தாவின் சாம்ராஜ்யம், மற்றவர்களின் அமைதி, எல்லாவற்றையும் புரிந்து கொள்ளும் பக்குவம் வந்தது, அந்த வயதுக்கு மீறிய முதிர்ச்சி அடைந்த(முதிர்ச்சி அடைய வைக்கப்பட்ட) குழந்தைக்கு. புரியாததை அறிந்து கொள்ள பாட்டியை நாடினாள் பதினொன்று வயது சிந்தியா!

தன் தாத்தாவால் அண்ணாவுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள், பெற்றவர்களைக் கூட தன்னிடம் அதிகம் நெருங்க விடாத பொசசிவ்னெஸ், தன்னை டாக்டர் ஆக்கிப் பார்க்க முயலும் வெறித்தனமான லட்சியம் எல்லாம் சிந்தியாவுக்கு புரியவைக்கப்பட்டது தில்லும்மாவால்.   

ஆனாலும் தாத்தாவை எதிர்க்கும் துணிவு இல்லை அவளுக்கு! அவரின் மேல் அளவுகடந்த பாசம் வைத்திருந்தாள் சிந்தியா. சின்னதில் இருந்து அவளுக்கு உடம்பு முடியாவிட்டால் துடித்து, பாசமாய் ஊட்டி, இடுப்பில் தூக்கி வைத்து ‘பேபி பேபி, ஓ மை பேபி குட்டி கதை சொல்லவா’ என பாடி, அவள் பேவதை காது கொடுத்து கேட்டு, டாக்டர் சிந்தி டாக்டர் சிந்தி என அன்பொழுக அழைத்து அணைத்து முத்தமிட்டு, தனக்காய் மட்டுமே வாழ்ந்த தாத்தனை வெறுக்க முடியவில்லை அவளால். தன் குட்டி உயிரை சிவசு தாத்தாவின் மேல் வைத்திருந்தாள் சிந்தியா.

அவர் தன்னை தன் இஸ்டத்துக்கு வளைத்தது போல, இனி அவரை தன்னுடைய இஸ்டத்துக்கு வளைப்பது என முடிவெடுத்தாள் வயதுக்கு வர கூடிய காலகட்டத்தில் நின்றிருந்த சிந்தியா! தாத்தாவின் மிக பெரிய பலவீனம் தான் என்பதை அழகாகப் புரிந்துக் கொண்டவள், அவருக்கு எதிராக காய்களை நகர்த்த முடிவெடுத்தாள்.

‘நடக்குது பாரு சதுரங்க வேட்டை

இனி அடங்கப் போகுது சிவசுவின் சேட்டை!’

(உருகுவான்…..)

(போன எபிக்கு லைக், கமேண்ட், மீம் போட்ட அனைவருக்கும் முத்தான நன்றி! கோரோனா நெக்ஸ்ட்டு ரவுண்டு கட்டி அடிக்க ஆரம்பிச்சிருக்கு. எல்லோரும் கவனமா இருங்க. எங்க பில்டிங்ல அன்னார் விஜயம் செஞ்சிருக்கறதுனால நாங்களும் செல்ப் குவராண்டின்ல இருக்கோம்! மனச ஒரு நிலை படுத்தி எழுதவே டைம் எடுத்திருச்சு! அடுத்த எபில ப்ளேஸ்பேக் முடிஞ்சுடும். ப்ளிஸ் லேட்டானதுக்கு மன்னிச்சிருங்க! சிம்ரனா இருந்த சிந்தியாவோட ட்ரெசிங் சென்ஸ், லென்ஸ், அவளோட வாயாடித்தனம், எல்லாம் ஏன் வந்ததுனு இன்னேரம் புரிஞ்சிருக்கும் எல்லோருக்கும். புரியலனா விடுங்க! ரிஷி கிட்ட சொல்லறப்போவே நாமளும் கேட்டுக்கலாம். பாய் டியர் ஆல்! ஹேப்பி வீக்கேன்ட்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!