103977454_653445081909496_2472649225753995686_n-58d154f0

அத்தியாயம் 23

சாக்லேட் 34 செல்சியசில் உருகும் தன்மையுடையது. நமது உடலின் வெப்ப நிலையும் 34 செல்சியல் ஆகும். அதனால் தான் நாம் வாயில் வைத்ததும் சாக்லேட் உருகி கரைகிறது.

“ண்ணா!”

“பேசாதே போ!”

“நெஜமா போய்டவா?”

“போ போ! எனக்குன்னு யாரு இருக்கா? நான் இப்படியே அனாதையா இருந்துட்டுப் போறேன்” என்றவன் அவளுக்கு முதுகு காட்டி திரும்பி நின்றுக் கொண்டான்.

திரும்பி நடக்கும் காலடி ஓசை கேட்கவும், இவன் கண்களில் கண்ணீர் வழிந்தது.

‘சின்ன புள்ள கிட்ட உனக்கு என்னடா கோபம்! வரல வரலன்னு ஒவ்வொரு நாளும் ஏங்கிட்டு, வந்ததும் போக சொல்லறியே மட்டி மடையா!’ என மனசாட்சி திட்ட, கண்ணைத் துடைத்துக் கொண்டவன் அவசரமாய்,

“பேபிமா” என கத்தியபடியே திரும்பினான்.

அவன் முன்னே உதட்டில் சிரிப்புமாய் கண்களில் கண்ணீருமாய் நின்றிருந்தாள் சிந்தியா. அவளைப் பார்த்ததும் இவனுக்கு சிரிப்பு பீரிட்டுக் கொண்டு வந்தது. சிரித்துக் கொண்டே தன் தங்கையை இறுக அணைத்துக் கொண்டான்.

தூரத்தில் இருந்து விசில் சத்தமும்,

“மச்சா! மாக்வே யே?(மச்சான், காதலியா)” எனும் கிண்டல் குரல்களும் கேட்க,

“ஹோய் போடோ! அடேக்லா!(முட்டாப்பசங்களா, தங்கச்சிடா)” என கத்தினான் இவன்.

விடலை பருவத்தில் இருக்கும் பையன்களுக்கு எல்லாவற்றிலும் கிண்டல் கேலிதான். இவன் பதினாறு வயதில், நெடுநெடுவென வளர்த்தியில், அரும்பு மீசையுடன், குச்சியாய் இருந்தான். மூர்த்தியின் ஜாடை அப்படியே இருந்தது. அவரைப் போலவே மாநிறத்தில், அழகனாய் இருந்தான்.

அவனைப் பார்க்க பள்ளி ஹாஸ்டலுக்கு வந்திருந்த தமக்கையிடம்,

“பேபிமா! தனியாவாடா வந்த? இங்கலாம் தனியா வரக்கூடாதுடா! எல்லாம் ஆம்பள பசங்க, கெட்ட பயலுங்க! ஆம்பள ஸ்கூல் வேறயா, அதான் பொம்பள புள்ளயப் பார்த்தா காணாதத கண்ட மாதிரி ஆன்னு வாயப் பொளந்துட்டு நிப்பானுங்க!” என்றான்.

“நீயும் யாராச்சும் கேர்ள் விசிட்டிங் வந்தா இப்படித்தான் பார்ப்பியா?” என கேட்டாள் சின்னவள்.

தலையை சொறிந்தவன், அசட்டு சிரிப்பொன்றை உதிர்த்தான். அண்ணனைப் பார்த்து இவளுக்கும் சிரிப்பு வந்தது.

“தில்லும்மா கூட வந்தேன். கூடவே இன்னொரு ஆளும் வந்திருக்காங்க! யார்னு சொல்லு பார்ப்போம்?”

“யார்டா? அப்பாவா? அவர் போன வாரம் தானே வந்துட்டு, என்னை ஷாப்பிங் கூட்டிட்டுப் போனாரு!”

“அப்பா இல்ல சில்லி! நம்ம கிரேட் சிவசு தாத்தா”

நெஞ்சைப் பிடித்துக் கொண்டான் பெரியவன். அவன் செயலைப் பார்த்து இன்னும் பொங்கி சிரித்தாள் சிந்தியா.

“கால் ரொம்ப வலிக்குதாம்! அதனால இங்கலாம் நடந்து வர முடியாதாம்! கார்லயே உக்காந்துருக்காரு! அவருக்கு பேச்சுத் துணையா தில்லும்மாவையும் புடிச்சு வச்சிருக்காரு! நாம பேசி முடிச்சுட்டு, அவங்கள விசிட்டர் கார் பார்க்கிங்ல போய் பார்க்கலாம்” என்றாள் சிந்தியா.

தாத்தா சொன்ன காரணம் தன்னைப் பார்க்கப் பிடிக்காமல் தான் என்பது அவனுக்கும் புரிந்தது, அவளுக்கும் புரிந்தது. ஆனாலும் இருவரும் அதை பெரிது படுத்திக் கொள்ளவில்லை.

தாத்தனின் தகிடுதத்தங்களை அறிந்ததில் இருந்து அவரை தன் வழிக்குக் கொண்டு வர பல திட்டங்களை வகுத்தாள் சின்னவள். தாயைப் போல பிள்ளை, நூலை போல சேலை என சொல்வது இங்கே பொருந்தவே பொருந்தாது. தாத்தனுக்கு மேலே பேத்தி, அவருக்கே இவள் வாத்தி என்று சொன்னால் சாலப் பொருத்தமாக இருக்கும். அதற்கு முதல் அடியாக தன் மாதாந்திர பரிட்சை ரிசால்ட்டுடன் தாத்தனின் முன் போய் நின்றாள் சிந்தியா.

“என்னடாம்மா? படிக்கற நேரத்துல இங்க வந்து நிக்கற? தலை கிலை வலிக்குதா? தாத்தா காபி போட்டு எடுத்துட்டு வரவாடா?” என பாசமாகக் கேட்டார் சிவசு.

“தாத்தா!” பேத்தி குயில் கொஞ்சியது.

“சொல்லுமா செல்லம்”

“மந்த்லி டெஸ்ட்ல நான் ஒரு பாடத்துல பெயில் ஆகிட்டேன்!” என சொல்லியபடியே ரிசால்ட்டை தாத்தனிடம் நீட்டினாள்.

அதிர்ந்துப் போனார் சிவசு. இது வரை குறைவான மார்க் என்றால் சில பாடங்களில் நூற்றுக்கு எண்பது எடுத்திருக்கிறாள். ஆனால் ஒரு முறை கூட பெயில் ஆனதில்லை. சிவசுவின் கற்பனையில், நார் நாராக கிழிந்துப் போன டாக்டர்களின் வெள்ளை அங்கி வந்துப் போனது. தலையை பலமாக உலுக்கிக் கொண்டார் அவர்.

“பெயில் ஆகற அளவுக்கு எப்படிடா போச்சு? இது வரைக்கும் இப்படி நடந்ததே இல்லையே! இன்னும் எக்ஸ்ட்ரா டியூசன் ஏற்பாடு பண்ணவா?” கேள்வியாய் கேட்டுத் துளைத்தார்.

“ம்ப்ச், போங்க தாத்தா! என்னால காண்சேண்ட்ரேட் பண்ணி படிக்கவே முடியல” என சலித்துக் கொண்டாள் பேத்தி.

“ஐயயோ! என்னம்மா குண்டத் தூக்கிப் போடற! ஏன், ஏன் படிக்க முடியல?”

“கொஞ்ச நாளா ஒன்னுமே சரியில்ல தாத்தா! அண்ணா ஞாபகமா இருக்கு! புக்க தொறந்தாலே அவன் மூஞ்சு தான் பக்கம் பக்கமா வருது! படிக்கவே முடியல. எங்க வர டெஸ்ட்லயும் மார்க் கொறஞ்சிடுமோன்னு பயமா இருக்கு தாத்தா”

“இவ்ளோ நாள் இல்லாம இப்போ என்ன அவன் ஞாபகம்?”

“சிவசியாம(வீட்டில் அழைப்பது சியாம்) பார்க்க பார்க்க மறந்து போன அண்ணா ஞாபகம் வருது போல தாத்தா! என்னமோ பார்க்கனும் மாதிரி இருக்கு! கூட்டிட்டுப் போறீங்களா தாத்தா ப்ளீஸ்!” என கெஞ்சியவளை முறைத்தார் சிவசு.

“சரி விடுங்க! அவன பார்க்காத ஏக்கத்துல நான் பெயில் ஆனா என்னைக் கோவிச்சுக்கக் கூடாது, சொல்லிட்டேன்” என அசால்ட்டாக சொல்லியவள், எழுந்து ரூமுக்குள் புகுந்து கொண்டாள்.

அந்த வாரக் கடைசியிலேயே பேத்தியையும் மனைவியையும் அழைத்துக் கொண்டு பள்ளி ஹாஸ்டலுக்கு வந்துவிட்டார் சிவசு.  

“எவ்ளோ நாள் கழிச்சு இன்னிக்குத்தான் உன்னைப் பார்க்கறேன்! தில்லும்மா வரப்பலாம் உன் போட்டோ காட்ட சொல்லிக் கேட்பேன்! வளந்துட்டடா குட்டிமா நீ! சரி, வா காண்டீன் போகலாம். அங்க அண்ணா உனக்கு பெலாஞ்சா(ட்ரீட்) பண்ணறேன்.” என தங்கையை அழைத்தான்.

“உனக்குன்னு சாப்பாடு எடுத்துட்டு வந்துருக்கேன். அம்மாவும் தில்லும்மாவும் சமைச்ச ஐட்டம்ஸ். காண்டின்ல போய் சாப்பிடலாம் வா” என்றாள் இவள்.

காண்டினுக்கு அழைத்துப் போய் தங்கையை அமர்த்தியவன், ஜில்லென இரண்டு கேன் கோக் வாங்கி வந்தான். அதற்குள் உணவைப் பரிமாறி வைத்திருந்தாள் சின்னவள். இருவரும் சாப்பிட ஆரம்பிக்கும் போது, இவன் நண்பர்கள் நால்வர் கூட்டமாய் அருகில் வந்தார்கள். போங்கடா பக்கிங்களா என்பது போல முறைத்தான் இவன்.

“மச்சி, சாப்பிடற போல” என்றான் ஒருவன்.

“இது என்ன மச்சி, கோழி மாதிரி இருக்கு” என்றான் மற்றொருவன்.

“மச்சா, ஊடாங்(இறால்) தலைய தலைய காட்டுது” என்றான் இன்னொருவன்.

ஹாஸ்டல் சாப்பாடு சாப்பிட்டு நாக்கு செத்து போய் கிடப்பவர்களாயிற்றே!

“நானும் தங்கச்சியும் ரொம்ப நாளைக்கு அப்புறம் இப்போத்தான் பார்க்கறோம்! எங்கள தனியா பேச விடுங்களேன்டா! சாப்பாடு தரேன்! குடுத்ததும் ஓடிப் போயிடனும்!” என காய்ந்தவன், தன் தட்டில் மீதம் இருந்த ஐட்டங்களை அப்படியே கொட்டி அவர்களிடம் நீட்டினான்.

“நம்ம தங்கச்சிட்ட எவ்ளோ நேரம் வேணும்னாலும் பேசு மச்சா! நாங்க இப்படியே கெளம்பறோம்” என சொல்லியவர்கள், சிந்தியாவைப் பார்த்து,

“ரத்தத்தின் ரத்தமே

என் இனிய உடன்பிறப்பே” என பாடியபடியே தட்டுடன் ஓடிப்போனார்கள்.

“ஆ காட்டு!” என தன் தட்டில் இருந்த உணவைப் பிசைந்து அண்ணனுக்கு ஊட்ட முனைந்தாள் சிந்தியா.

“நீ சாப்பிடுடா”

“வீட்டுல தெனம் இந்த மாதிரி தான் நான் சாப்பிடறேன்! நீ தான் நல்ல சாப்பாடு இல்லாம இளைச்சுப் போய் கிடக்கற! இன்னிக்கு உனக்குன்னு எடுத்துட்டு வந்ததயும் உன் ப்ரேண்டுங்க எடுத்துட்டு ஓடிட்டாங்க! நீ வாயத் தொற” என மிரட்டினாள் அவள்.

புன்னகையுடன் வாய் திறந்து அவள் கொடுத்ததை வாங்கிக் கொண்டான் பெரியவன்.

சில சமயங்களில், நம் மனதுக்கு மிக பிடித்த உறவுக்காரர்களையோ, நண்பர்களையோ பல வருடங்கள் பார்த்திருக்க மாட்டோம். ஆனால் திடீரென ஒரு நாள் பார்க்கும் போது அந்த வருட இடைவெளி என்பது இல்லாதது போல சகஜமாக நெருங்கி விடுவோம்! அது போலத்தான் இந்தப் பிரிவென்பது எங்களுக்கு ஒன்றுமே இல்லை என்பது போல பார்த்தவுடனே ஒட்டிக் கொண்டார்கள் ரத்த உறவுகள் இருவரும். உண்டு முடித்து, கோக்கையும் பருகி முடித்தார்கள்.

“அண்ணா மேல என்ன கோபம்? ஏன் என்னைப் பார்க்கவே வரல?” என சோகமான குரலில் கேட்டான் இவன்.

மூர்த்திக்கு திருமணம் ஆகி ஹாஸ்டலுக்கு வந்ததில் இருந்து அவன் வீட்டுக்கே வந்தது இல்லை. பள்ளி விடுமுறைக்கு கூட, ஹாஸ்டல் வாசம்தான். தனியார் பள்ளியாதலால் வருடம் முழுக்க ஹாஸ்டல் திறந்து தான் இருக்கும். தீபாவளி பண்டிகையின் போது, காலையில் சாமி கும்பிட்டு விட்டு, மருமகள்களிடம் பொறுப்பைக் கொடுத்து விட்டு பேரனைப் பார்க்க வந்துவிடுவார் தில்லும்மா! மீத பொழுது அவனுடன் தான் கழியும் அவருக்கு. இவனாலேயே சிவசுவுக்கும் தில்லும்மாவுக்கும் அடிக்கடி மாட்டிக் கொள்ளும்!

“என்னை அம்போன்னு விட்டுட்டு வந்துட்டனு கோபம் ண்ணா! அதோட என் கூட இருக்கறத விட இங்கதான் சந்தோசமா இருக்க நீன்னு தில்லும்மா சொன்னாங்களா! எனக்கு ரொம்ப சேடா ஆகிருச்சு! உனக்கு நான் யாருமே இல்லைத்தானேனு தோணிருச்சு! வெளாட நீ இல்லாம, என் காயத்துக்கு முத்தம் வைக்க நீ இல்லாம, சாக்லேட் குடுக்க நீ இல்லாம, நான் பாடறத கேக்க நீ இல்லாம, நான் சொல்ற ஜோக்குக்கு சிரிக்க நீ இல்லாம, என் கூட சேர்ந்து ஆட நீ இல்லாம நான் எவ்வளவு தவிச்சுப் போனேன் தெரியுமா! தாத்தா கதை சொல்லிட்டுப் போனதும், விடியற வரைக்கும் உன்னை நெனைச்சு நான் அழுதுட்டே இருப்பேன்! ஐ மிஸ்ட் யூ சோ மச் ண்ணா! அந்த சேட்நெஸ் தான் மேட்நெஸா மாறிடுச்சு! உன் மேல செம்ம கோபமா ஆகிருச்சு. ஆனா இப்போ எல்லாமே புரிஞ்சிகிட்டேன்ணா! மறுபடி என் கூட வீட்டுக்கு வந்துடு! நான் தாத்தா கிட்ட பேசறேன்” என கலங்கிய கண்ணைத் துடைத்தப்படியே சொன்னாள் சிந்தியா.

மெல்ல தலையை இடம் வலம் ஆட்டினான் அவன்.

“இங்க வந்த புதுசுல என்னால அட்ஜஸ்ட் பண்ணிக்கவே முடியலடா குட்டிமா! உன்னையும் தில்லும்மாவையும் நெனைச்சு ரொம்ப அழுவேன்! ஆனா தாத்தா முகத்த மனசுல கொண்டு வந்து, என் அழுகைய நிறுத்திக்குவேன். இங்க பழகற வரைக்கும் தனிமையா ஃபீல் பண்ணேண்டா. ஆனா போக போக அடாப்ட் ஆகிக்கிட்டேன். நெறைய குட் ப்ரேண்ட்ஸ் கிடைச்சிருக்காங்க. நெறைய ஸ்போர்ட்ஸ் கத்துக்கறோம், நெறைய பாடம் படிக்கறோம், வேற நெறைய ஆக்டிவிட்டிஸ்னு நான் பிசியா இருக்கேன்டா. நம்ம வீட்டுல மாதிரி தாத்தா எப்ப கொட்டுவாரோன்னு பயம் இல்ல! அவர் வந்ததும் ஓடி ரூமுல ஒளியற அவசியம் இல்ல! அவர் எனக்கு செஞ்சதுலயே, இங்க சேர்த்து விட்டதுதான் ரொம்ப நல்ல விஷயம் பேபிமா” என பொறுமையாக விளக்கினான் அண்ணன்காரன்.

“அப்போ வரமாட்ட?” என கோபமாகக் கேட்டாள் சிந்தியா!

“புரிஞ்சுக்கோடா செல்லம்! நான் வீட்டுல இருந்தா, தாத்தாவுக்கும் தில்லும்மாவுக்கும் எப்போவும் சண்டையா இருக்கும். மேகலா சித்தி ஒரு மாதிரியா பீல் பண்ணுவாங்க! அதோட..”

“இன்னும் என்ன?” கத்தினாள் சிந்தியா.

சுற்றும் முற்றும் பார்த்தவன்,

“கத்தாதடா பேபிமா! எல்லாரும் நம்மள பார்க்கறாங்க பாரு! பொறுமையா சொல்லறத கேளுடா ப்ளீஸ்” என கெஞ்சினான் இவன்.

முகத்தைத் திருப்பிக் கொண்டவள்,

“சொல்லு, கேக்கறேன்” என்றாள்.

அவள் செயலில் புன்னகை விரிந்தது இவனுக்கு.   

“இப்போ உனக்கும் விவரம் தெரியுது! முன்னனா தாத்தா என்னை முறைக்கிறதோ, கொட்டறதோ புரியாத வயசு உனக்கு. சோ தாத்தா இஸ்டம் போல இருந்தாரு. இப்போ உன் முன்னுக்கு என்னை சகிச்சுக்க வேண்டிய கட்டாயமாகிடும் அவருக்கு. வயசான காலத்துல அவருக்கு எதுக்கு இந்த ஸ்ட்ரேஸ். அதோட என்னை மிஸ்ட்ரீட் பண்ணா உனக்கும் கோபம் வரும். உன்னை உயிரா பார்த்துக்கற தாத்தா கிட்ட சண்டை போட முடியாம உனக்கும் ஸ்ட்ரேஸ் ஆகும். என்னை வெறுத்தாலும், உன் மேல அவ்ளோ அன்பு வச்சிருக்காரு சிவசு தாத்தா! நான் மறுபடி வந்து உங்களுக்குள்ள பிளவைக் கொண்டு வர வேண்டாம்டா. புரிஞ்சுக்கோ! எனக்கு, என்னை விட உன் நிம்மதிதான் முக்கியம்” என ஐந்து வயது மூத்தவனாக அழகாய் புரிய வைத்தான் தங்கைக்கு.

அதற்கும் கண்ணைக் கசக்கினாள் அவள்.

“உனக்கு என் மேல பாசமே இல்லை” என குறைப்பட்டாள் அவள்.

“கிட்ட இருந்து பாசம்னு உன் நிம்மதிய பறிக்கறதுக்கு, தூரமா பாசமில்லாதவனாவே இருந்துட்டுப் போறேன் போ”

“எனக்கு நீ வேணா போ”

“இப்படி பொசுக்குன்னு இந்த அண்ணாவ வேணான்னு சொல்லிட்டியே! வாங்கிட்டு வந்த சாக்லேட்ட எல்லாம் குடுக்க இப்ப அவசரமா வேற தங்கச்சிய நான் எங்க போய் தேடறது?” என சத்தமாய் யோசித்தான் அவன்.

எழுந்து வந்து அவன் பின்னால் நின்று முதுகிலேயே மொத்தினாள் சிந்தியா. அவள் கொடுத்த அடியை சத்தம் போடாமல் வாங்கிக் கொண்டான் பெரியவன். பின்,

“ண்ணா” என இவள் கை நீட்ட, கோக் வாங்கும் போது வாங்கியிருந்த சாக்லேட்களை பாக்கேட்டில் இருந்து எடுத்து நீட்டினான் அவன்.

சிரிப்புடன் வாங்கிக் கொண்டாள் அவள். அவள் சாப்பிட்டு முடித்ததும், தாத்தா பாட்டியைப் பார்க்க போனார்கள் இருவரும். தில்லும்மா அவனைக் கட்டிக் கொள்ள, பேத்தி முன் வேறு வழி இல்லாமல் அவன் தலையைத் தடவி,

“நல்லா இருக்கியாப்பா? தாத்தாவுக்கு மில்லுல ரொம்ப வேலை. அதான் இத்தனை நாளா பாட்டிய மட்டும் அனுப்பி வச்சேன். இனி அடிக்கடி வரேன்” என சொல்லி வைத்தார்.

பேத்தி அந்த வார்த்தையை மெய்யாக்குவாள் என அப்பொழுது அவருக்குத் தெரியாது. அன்றிலிருந்து மாதம் ஒரு முறை தாத்தாவை கெஞ்சி கொஞ்சி மிரட்டி அண்ணனைப் பார்க்க வந்துவிடுவாள். தீபாவளிக்கு தில்லும்மாவுடன் இவளும் வந்து அவனோடு நேரத்தை செலவளிப்பாள்.

மார்க் தொன்னூறுக்கும் மேல் எடுத்து, அதற்கு பரிசாக அண்ணாவுடன் ட்ரீப் போக வேண்டும் என தாத்தனிடம் பேரம் பேசினாள். தனக்கு பிடித்த பல விசயங்களை படிப்பைக் காட்டியே நிறைவேற்றிக் கொண்டாள். ஸ்வீமிங் பூல், கம்ப்யூட்டர், அண்ணாவுக்கு கடிகாரம் வாங்கிக் கொடுக்க, நல்ல ப்ராண்டேட் சட்டை வாங்க, நைக்கி ஷூ வாங்க பணம் என எல்லாவற்றையும் சாதித்துக் கொண்டாள் சிந்தியா.

உடை, உணவு, படிப்பு எல்லாம் இன்னும் தாத்தாவின் சாய்ஸ் தான். ஒரு டாக்டராக அவளை சின்ன வயதிலேயே க்ரூம் செய்ய ஆரம்பித்தவர், அவள் உடைகளிலும் ஒரு கண்ணியத்தை கடைப்பிடிக்க வைத்திருந்தார். சிவசுவின் கைங்கர்யத்தால் சிந்தியா கங்காவாக மாறிப்போனாள். கங்கா சந்திரமுகியாய் நின்றாள், பாடினாள், ஆடினாள், ஓடினாள். சிந்தியா டாக்டராய் நின்றாள், உடுத்தினாள், சாப்பிட்டாள், படித்தாள், குளித்தாள், படுத்தாள், கனவு கண்டாள்.      

தன் மகனுக்காக தன்னை விட பாடுபடும் சிந்தியாவை தன் தந்தைக்குத் தெரியாமல் தங்கமாய் தாங்கினார் மூர்த்தி. தங்கள் ஒரே மகள் மீது கொள்ளைப் பாசம் வைத்திருக்கும் சிவராமனும், வாணியும் சிந்தியா அவள் அண்ணாவுடன் செல்லும் வெளிநாட்டு ட்ரீப்புகளுக்கு கூடவே சென்று தங்கள் நேசத்தைப் பகிர்ந்துக் கொண்டனர். எல்லோரும் நேராகவும் மறைமுகமாகவும் சிந்தியாவைத் தாங்குவதைப் பார்த்து, மேகலாவும் அவளை அனுசரித்துப் போய்விடுவார். இப்படித்தான் அந்த குடும்பத்தின் இளவரசியாய் வலம் வந்தாள் சிந்தியா.

அண்ணா தங்கையின் பாசம், அவர்கள் வளர வளர இன்னும் வலுப்பெற்றது. இவளை கேட்காமல் அவன் ஒரு காரியத்தையும் செய்யமாட்டான். இவளும் தன் வாழ்வில் நடக்கும் எல்லாவற்றையும் அவனிடம் ஷேர் பண்ணிக் கொள்வாள். முதல் பீரியட், முதல் லவ் லெட்டர், யாருக்கும் தெரியாமல் நெஞ்சில் குத்திக் கொண்ட டாக்டர் சிந்தி டாட்டூ என எல்லாம் அவனிடம் சொல்லி விடுவாள்.

உள்நாட்டு காலேஜிலேயே டிப்ளோமா முடித்தவன், வெளிநாட்டுக்குப் போய் டிகிரி செய்ய விருப்பப்பட்டு தந்தையிடம் சொல்ல, அவர் அவருடைய தந்தையிடம் கேட்க,

“தொரை எடுத்த மார்க்குக்கு இங்க காலேஜ்ல சேர்த்து படிக்க வச்சதே பெருசு! இதுல வெளிநாட்டுக்குப் போகனுமாமா? யார் சேர்த்த சொத்த யார் அழிக்கறது?” என எகிறினார் சிவசு.

விஷயம் தில்லும்மா மூலம் சிந்தியாவின் காதுக்குப் போக, போன் போட்டு அண்ணனை வறுத்துவிட்டாள்.

“ஏன் வெளிநாடு? இவ்ளோ நாள் தூரம் இருந்த! படிச்சு முடிச்சுட்டு இந்த வீட்டுக்கு வராட்டியும் என் பக்கத்துல எங்கயாச்சும் இருப்பன்னு நெனைச்சேன்! ஆனா என்னை விட்டுப் போறதுலயே இருக்க நீ?” என கத்தித் தீர்த்தாள்.

“இப்படி ஒரு ரியாக்‌ஷன் வரும்னுதான் உன் கிட்ட இதப்பத்தி ஒன்னும் சொல்லலடா! எனக்குலாம் வெளிநாட்டுக்குப் போய் படிக்கக் கூடாதுன்னு விதிச்சிருக்குப் போல! விடுவிடு” என வருத்தப்பட்டான்.

படித்து முடித்ததும் இங்கேயே மில்லிலேயே வேலை செய்ய சொல்லி ஏற்கனவே சொல்லி வைத்திருந்தாள் சிந்தியா. அவனுக்கோ இங்கிருந்து கண்காணாமல் எங்கேயாவது போய் விட வேண்டும் எனும் எண்ணம். நம் காலையே சுற்றி வரும் பூனைக்கூட சீண்டி விட்டால் சீறி நிற்கும். அப்படி இருக்கையில் இள ரத்தம் பாயும் இவனை முதுகெலும்பு இல்லாதது போல நடத்தினால் இவனும் எவ்வளவு நாள் தான் பொறுப்பான்! நீரையும் தாயையும் பழிப்பது எவ்வளவு பாதகமான செயல்! தன்னை உலகுக்கு கொண்டு வந்து உயிரை விட்ட அப்பாவி ஜீவன், இன்னும் சிவசுவின் நாக்கால் செத்து செத்து மடிவதை எவ்வளவு காலம்தான் தாங்க முடியும் அவனால்!

தங்கைக்காக, அவள் காட்டிய பாசத்துக்காகப் பொறுத்து பொறுத்துப் போனவன், அவள் பெயரில் இருக்கும் சொத்துபத்துக்களை தன் பெயருக்கு மாற்ற முடிவெடுத்திருப்பதை தில்லும்மா மூலம் அறிந்ததில் இருந்து துடியாய் துடித்தான். கண்டிப்பாக இந்த விஷயம் தெரிந்தால் வீட்டில் போர் வெடிக்கும்! தங்கை, தாத்தாவின் கட்டுக்கடங்காத கோபத்தை சந்திக்க நேரும் என அறிந்து வைத்திருந்தவன், மொத்தமாய் வெட்டிக் கொண்டு போவது என முடிவெடுத்தான். படிக்கப் போவது போல போய் வெளிநாட்டிலேயெ செட்டில் ஆகி விடலாம் என்பது தான் அவன் திட்டம். மற்றவர்களிடம் உறவை வெட்டிக் கொண்டாலும் தங்கையைப் பார்க்காமல் முடியாது என நன்றாக புரிந்தது. உலகம் ஒரு க்ளோபல் கிராமம் தானே! எப்பொழுது வேண்டுமானாலும் அவளை வரவைத்து கொஞ்சிக் கொள்ளலாம் என முடிவெடுத்தப் பின் தான் நிம்மதியானது அவனுக்கு.

“அண்ணா இங்கயே படிண்ணா! என் கூடவே இருண்ணா! இந்த வீட்டுக்கு வர பிடிக்கலனா விடு! நான் அபார்ட்மேண்ட் வாங்கி போடறேன்! அங்க இருந்துக்கலாம் நாம ரெண்டு பேரும். உன் ப்யூச்சருக்கு நான் என்னலாம் ப்ளான் பண்ணிருக்கேன் தெரியுமா!”

“என்ன, என்ன ப்ளான் பண்ணிருக்க? உன் தாத்தன் காச எடுத்து எனக்குப் பிச்சை போட போறியா?” என மனதைக் கல்லாக்கி கொண்டு கோபத்தைக் கொண்டு வந்தான் குரலில்.

“ண்ணா” அவன் கோபக் குரலில் அதிர்ந்துப் போனாள் சின்னவள். குட்டிமா, பேபிமா என தன்னைத் தாங்கும் அண்ணனா குரலை உயர்த்திக் கத்துவது என தடுமாறிப் போனாள் சிந்தியா.

“இங்க பாரு பாப்பா! காசு குடுக்கறேன், வீடு குடுக்கறேன்னு எனக்காக எதாச்சும் செஞ்ச, நான் கண் காணாம போய்டுவேன்! அதுக்கப்புறம் என்னை நீ பார்க்கவே முடியாது! என்னைப் பெத்தக் கடமைக்கு எங்கப்பா காசு போட்டு என்னை வெளிநாட்டுக்கு அனுப்பட்டும். அனுப்பியே ஆகனும்! மத்த யாரும் எனக்கு எந்தப் பிச்சையும் போட வேணாம்” என்றவன் பட்டென போனை வைத்து விட்டான்.

“என் கிட்டயே ரோஷம்! என் கிட்டயே கோபம்! போடா போ! எனக்கும் நீ வேணா! எங்கயோ போ, என்னவோ படி! ஐ டோண்ட் கிவ் அ டேம்ன்” என கத்தியவள், போனை சுவற்றில் விட்டடித்தாள். அவள் மனதைப் போலவே, அதுவும் பாகம் பாகமாக உடைந்து விழுந்தது.

அவ்வளவு கோபத்திலும் அவன் வெளிநாடு செல்வதற்கான அனுமதியை தாத்தாவிடம் வாங்கியிருந்தாள் சிந்தியா. அதன் பிறகு இருவருக்குள்ளும் ஒரு கேப் விழுந்திருந்தது. இவன் அழைத்த போன் கால்கள் எடுக்கப்படாமல் போனது! அனுப்பிய மேசேஜ்கள் படிக்கப்பட்டு ரிப்ளை இல்லாமல் போனது, அனுப்பிய எண்ணிலடங்கா பரிசுகள் அப்படியே திருப்பி அனுப்பப்பட்டது! மறுபடி முருங்கை மரத்தில் ஏறி அமர்ந்துக் கொண்டாள் பிடிவாதம் பிடித்த சிந்தியா. பாசம் நெஞ்சு முட்ட இருந்தது, அதைவிட அவன் விரும்பிய தனிமையைக் கொடுக்க வேண்டும் எனும் பேரன்பும் அவளுள்ளே ஒளிந்திருந்தது.

“அவனுக்கு நீ என்னலாம் செய்யப் போறேன்னு நான் எடுத்து சொல்லி கூட பிடிவாதம் புடிச்சு வெளிநாட்டுக்குப் போறேன்னு நிக்கறான். பிடிவாதத்துல நீயும் அவனும் அப்படியே உங்க தாத்தன கொண்டிருக்கீங்க” என தில்லும்மா புலம்பியதிலேயே அண்ணனின் மனதில் இருப்பதைப் புரிந்துக் கொண்டாள் சிந்தியா.

“ரோஷம், ரோஷம்! என் கிட்ட கூட ரோஷம்! நீ வேணாம்னு சொன்னா விட்டுருவனா! உனக்கு சேர வேண்டிய உரிமையான சொத்த, நேரம் வரப்போ உன் கிட்டயே சேர்ப்பேன்!” கோபம் போய் செல்லமாகத் திட்டிக் கொண்டாள் அவனை.

அவன் அமெரிக்காவில் செட்டில் ஆகி இருக்க, இவள் மலேசிய எஸ்.பி.எம் பரிட்சையில் நல்ல ரிசால்ட் எடுத்து வெளிநாட்டில் ப்ரைவேட்டாக டாக்டர் படிப்பை தொடர்ந்தாள். ஆஸ்திரேலியாவில் படித்து, அதன் பிறகு லண்டனில் முடித்தாள் தனது படிப்பை. அவள் கிராடுவேஷனின் போது குடும்பமே குழுமி இருந்தது. பேத்தியைக் கட்டிக் கொண்டு கதறி அழுதுவிட்டார் சிவசு. தாத்தனின் கண்ணீர் துளிகள், தான் இத்தனை வருடம் பட்ட கஸ்டங்களை எல்லாம் கழுவி விட்டது போல உணர்ந்தாள் சிந்தியா. அண்ணன்காரன் யாருக்கும் தெரியாமல் ஓர் ஓரமாய் நின்று கண் கலங்க பார்த்துவிட்டுப் போனான்.

ண்ணா கை வலிக்குது, கால் வலிக்குது, தொண்டை வலிக்குது என சலுகையாய் அழுத தங்கை இன்று ஒரு டாக்டர் எனும் எண்ணமே அவனுக்கு புன்னகையையும் பெருமையையும் ஒருங்கே தோற்றுவித்தது.   

மலேசிய கவர்மெண்ட் ஹாஸ்பிட்டலில் குறிப்பிட்ட வருடங்கள் தன் சேவையை முடித்தவள், அதன் பிறகு ப்ரைவேட் ஹாஸ்பிட்டலில் தனது வேலையைத் தொடர்ந்தாள். இரண்டு வயதில் இருந்து தன் சக்திக்கு மீறிய உழைப்பைப் போட்டிருக்கிறாளே டாக்டராக! அந்த தொழில் அவளுக்கு வேலையாய் இல்லாமல் உயிராய் உணர்வாய் ஆகிப் போனது! டாக்டர் சிந்தி என மற்றவர்கள் அழைக்கும் போது, தானாகவே ஒரு புன்னகை அவள் இதழ்களில் வந்தமர்ந்து கொண்டது. பிரசவம் பார்த்து குழந்தைகளை கையில் ஏந்தும் போது, தானும் கடவுள் தான் எனும் இருமாப்பு வந்தது! டாக்டர் சிந்தியா சந்தோஷத்தின் உச்சியில் இருந்தாள்.

ஓர் நாள் நடு இரவு அண்ணன்காரனுக்கு அவளிடம் இருந்து போன் வந்தது.

“பேபிமா!”

“எனக்கு இந்த விக்கியப் பிடிக்கல! தாத்தா ஒத்தைக் காலுல நிக்கறாரு! என்னை இந்தக் கல்யாணத்துல இருந்து காப்பாத்து!” என படபடவென சொல்லி போனை வைத்துவிட்டாள் அவள்.

அழுத்தக்காரியான தங்கையின் குரலில், அழுகை தெரிந்ததோ என சந்தேகித்தவன், அடுத்த நாள் இரவே வீடு வந்து சேர்ந்தான்.  அந்த கருப்பு தினம் இந்த அண்ணா தங்கையின் வாழ்க்கையை மட்டும் அல்ல அந்த இரட்டையர்களின் வாழ்க்கையையும் புரட்டிப் போட்டது!

வாழ்க்கையையேப் புரட்டிப் போட்டது!

‘கனவு காணுங்கள் என்றார் அப்துல் கலாம்

கனவை பாடுபட்டு நனவாக்கிய சிந்தியாவுக்கு ஒரு சலாம்’

(உருகுவான்….)

போன எபிக்கு லைக், காமேண்ட், மீம் போட்ட அனைவருக்கும் என் நன்றி. இவங்க ரெண்டு பேரோட போண்டிங்க ஓரளவு விளக்கிட்டேன்! எழுத எழுத நீண்டுட்டே போகுது எபி. சோ அடுத்த எபில ப்ளேஷ்பேக்க கதம் கதம் பண்ணிடலாம்! அண்ட்டில் தென் லவ் யூ ஆல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!