UUU–EPI 25

103977454_653445081909496_2472649225753995686_n-29cb36c3

UUU–EPI 25

அத்தியாயம் 25

உலக உற்பத்தியில் நாற்பது சதவீத பாதாம், சாக்லேட் செய்வதற்காக பயன்படுத்தப்படுகிறது. இருபது சதவீத வேர்க்கடலை சாக்லேட்டில் கலப்பதற்காக பயிரடப்படுகிறது.

 

அன்று நடந்தது என்ன???

இந்த விபத்து எப்படி ஆனது என முற்றும் முழுதாய் அறிந்தவர்கள் மூன்றே மூன்று பேர்தான். ஒருவன் ரவிபாரதி! அதை சொல்ல தற்பொழுது அவன் உயிரோடு இல்லை. இன்னொருவர் விதியை எழுதி வைத்தக் கடவுள். கத்திக் கதறினாலும் அவர் பூமி இறங்கி வந்து சொல்லப் போவதில்லை. மூன்றாவது ஆள் கதையை எழுதிய நான். என் வாய்(கை) வழியாக அன்று நடந்தது என்ன என்று பார்ப்போம்!  

ரவிபாரதி தனது சாமார்த்தியத்தால் அவர்களின் நிறுவனத்துக்குப் பெரிய ஆர்டர் ஒன்று கிடைக்கும்படி செய்திருந்தான். அந்த ஒப்பந்தம் கையெழுத்து ஆகியிருந்த இடம்தான் ஈப்போ, பேராக். அதை கொண்டாடும் விதமாக பெரிய ஹோட்டலில் பார்ட்டி அரேஞ் ஆகியிருந்தது.

இந்த ஒப்பந்தத்தின் வெற்றியால் ரவிபாரதிக்கு கமிஷன் கணிசமாக கிடைக்கும் என மேலிடம் இமேயில் மூலமாக அறிவித்திருந்தார்கள். அதோடு பதவி உயர்வும் கிடைக்கக் கூடிய வாய்ப்பிருக்கிறது என நம்பத்தகுந்த ஆட்களிடம் இருந்து செய்தி கிடைத்திருந்தது இவனுக்கு. அதனால் சந்தோஷத்தின் உச்சியில் இருந்தான் ரவிபாரதி. தனது சந்தோஷத்தை ரதியிடம் பகிர்ந்துக் கொள்ள வேண்டும் என மனம் ஆவலாய் பறந்தது. ஆனால் அவனால் எங்கும் நகர முடியவில்லை. அவனை சூழ்ந்துக் கொண்டு எல்லோரும் வாழ்த்து மழையைப் பொழிந்த வண்ணம் இருந்தார்கள். புன்னகை முகமாகவே எல்லோரின் வாழ்த்தையும் பெற்றுக் கொண்டவன், சிரித்தப்படி அவர்களுடன் அளவளாவிக் கொண்டிருந்தான்.

நேரம் ஆக ஆக பார்ட்டியோ மது, மாமிசம் என களைக்கட்டிக் கொண்டிருந்தது. ரவிபாரதி இந்த மாதிரி கார்ப்பரேட் பார்ட்டிகளில் கேர்ட்டசிக்காக மது அருந்தப் பழகி இருந்தான். அந்த நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் மதுவின் பக்கம் தலை வைத்துப் படுக்கமாட்டான் பாரதி. கேமரன் குளிரில் விறைத்துப் போய் இருக்கும் போது கூட சூட்டுக்கு ரதியைத் தேடுவானே தவிர மதுவைத் தேடமாட்டான் அவன். நீரோடு செல்லும் ஓடமாய் தன் இணையுடன் கைக்கோர்த்து காதல் பயணம் செய்பவன், மது உள்ளே போனால் மட்டும் அணை கடந்த வெள்ளமாய் தன் ரதியை காதலால் திக்குமுக்காட வைப்பான். அதனாலேயே வேலை நிமித்தம் தவிர மதுவுக்கு அந்த வீட்டில் தடா போட்டிருந்தாள் நந்தனா.  

இப்பொழுதுதான் மது அருந்துவது கார்ப்பரேட் கலாச்சாரமாக போய் விட்டதே! அதுவும் பெரிய பதவியில் இருப்பவன், மது அருந்தாவிட்டால் என்னவோ ஜூவில் இருந்து தப்பித்து வந்தவன் போல் அல்லவா பார்ப்பார்கள். அதனால்தான் கெர்ட்டசிக்காக ஒரு பெக் அல்லது இரண்டு பெக் என அளவோடு நிறுத்தி விடுவான் ரவிபாரதி. அன்று அவனுக்கிருந்த மகிழ்ச்சியில் அவனை அறியாமலே இரண்டு பெக் மூன்றாகி இருந்தது.

ஹோட்டல் ஏற்பாடு செய்திருந்த கெஸ்ட் ரிலேஷன் ஆபிசர்ஸ் எனப்படும் சில பெண்களும் பார்ட்டியில் கலந்து கொள்ள, இவன் அதற்கு மேல் நிற்காமல் கிளம்பி விட்டான். மதுவைப் பழகி கொண்ட அளவுக்கு மாதுவைப் பழகிக் கொள்ள பிடிக்கவில்லை பாரதிக்கு. அவனுக்கு கொஞ்சவும், கெஞ்சவும், மிஞ்சவும் என்றுமே ரதி மட்டுமே வேண்டும்.       

லேசாக டிப்சியாக இருந்தது பாரதிக்கு. டிப்சி ஸ்டேஜ் என்பது இரண்டு அல்லது மூன்று பேக் அடிக்கும் போது ஏற்படும் ஒருவகை லேசான தள்ளாட்டம். இவர்கள் நார்மலாகத்தான் இருப்பார்கள், ஆனால் உடலின் செயல்பாடுகள் கொஞ்சம் மெதுவாய் ஆகியிருக்கும். ஒரு வித சந்தோச மனநிலை ஆட்கொண்டிருக்கும். உளறல் குளறல் எல்லாம் இல்லாமல் உடலின் செயல்பாடுகள் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பது போலத்தான் மாயத் தோற்றமளிக்கும்.  

வாலட் பார்க்கிங்கில் இருந்து கார் கொண்டு வரப்பட, விசிலடித்தப்படியே காரில் ஏறி அமர்ந்தான் ரவிபாரதி. லாவகமாக காரை ஓட்டியப்படி கேமரனுக்குப் பயணத்தை மேற்கொண்டான் அவன். ஏற்கனவே ஹோட்டலில் இருந்து செக் அவுட் செய்து லக்கேஜ்களை காரில் போட்டிருந்தான். இத்தனை நாள் பிரிவு, மனைவி மகளை ரொம்பவே தேடியது அவனுக்கு. சர்ப்ரைசாக வீட்டில் போய் நிற்க முடிவெடுத்திருந்தவன் புன்னகை முகமாக தன் பயணத்தைத் தொடங்கினான். சிவபதம் அடையவே அப்பயணம் என முன்னமே அறிந்திருந்தால், அதை தவிர்த்திருப்பானோ ரவிபாரதி!

மியூசிக் ப்ளேயரைத் தட்டிவிட, அந்த ஏகாந்த வேளைக்கு ஏற்றது போல காதல் பாடலை ஒலிபரப்பியது அது.  

“இரவையும் பகலையும் மாற்றிவிட்டாய்

எனக்குள் உன்னை நீ ஊற்றிவிட்டாய்

மூழ்கினேன் நான் உன் கண்ணிலே” என பாடலோடு சேர்ந்து பாடியவனுக்கு அப்பொழுதே தன்னவளின் குரலைக் கேட்க வேண்டும் எனும் வெறி எழுந்தது. பேண்ட் பாக்கேட்டில் இருந்த ப்ளூதூத் டிவைசை எடுத்து காதில் சொறுக முயல, கை தடுமாறி அது அவன் காலுக்கடியில் விழுந்தது. ம்ப்ச் என சலித்துக் கொண்டவன், போனை எடுத்து டயல் செய்து ஸ்பீக்கரில் போட்டான். நந்தனா போனை எடுத்ததும்,

“இச்சு இச்சு இச்சு” என தன் ஆசையெல்லாம் கலந்து கட்டி முத்தத்தால் வெளிப்படுத்தினான் ரவிபாரதி.

“பாரதி!!!!”

“ஐ மிஸ் யூ டி ரதி”

“மீ டூ பாரதி”

ஸ்பீக்கரில் அவள் பேசுவது எதிரொலிப்பது போல இருக்க, ஸ்பீக்கரை அடைத்து விட்டு நார்மல் மோட்டுக்கு மாறி காதில் வைத்தான் போனை. ஒரு கை ஸ்டீயரிங் வீலைப் பிடிக்க மறு கை போனை பிடித்திருந்தது.

மனைவியிடம் தன் சந்தோஷத்தைப் பகிர்ந்து, அவள் கவனிப்பு குறைந்துவிட்டது என வம்பிழுத்து, பின் அவனே சமாதானப்படுத்தி, பாட்டுப் பாடி, அவளையும் பாட வைத்து, காதலால் உருகி வழிந்து அவளையும் உருக வைத்து என சந்தோஷமான மனநிலையிலேயே காரை ஓட்டினான் ரவிபாரதி.

“நீங்க திரும்பி வந்ததும் இன்னும் இன்னும் நெறைய ஸ்வீட் மெமரிஸ் சேகரிச்சு வைக்கலாம் பாரதி! ஐ லவ் யூ!” என நந்தனா சொல்ல, அப்படியே ஜிவ்வென இருந்தது இவனுக்கு.

“ஐ லவ்..” யூ டூ என சொல்ல வந்தவன் அப்பொழுதுதான் கவனித்தான் நாய் ஒன்று ரோட்டைக் கடந்துக் கொண்டிருப்பதை. அன்று ரவிபாரதியின் உயிரை எடுக்க பைரவரை அனுப்பி வைத்தானோ எமன்!

கையிலிருந்த போனை அதிர்ச்சியில் அப்படியே கீழே நழுவவிட்டான் ரவிபாரதி. ஆல்கஹாலினால் லேசாக மந்தித்திருந்த மூளை அடுத்து என்ன செய்ய வேண்டும் என கட்டளையிட நேரம் எடுத்துக் கொண்டது. தன்னால் முடிந்த வேகத்தில் ஸ்டீயரிங்கை ஒடித்து காரை மறுபக்க ரோட்டில் விட்டிருந்தான் பாரதி. காரை இடது பக்கம் விட்டிருந்தால், மரத்தில் மோதி சில பல காயங்களுடன் தப்பி இருப்பான். மதுவின் தாக்கத்தால் தடுமாறி சரியான முடிவெடுக்க முடியாமல் வலது பக்கம் காரை செலுத்தியது தான் அவனுக்கு எமனாகிப் போனது. வேகமாய் தன்னை நோக்கி நேராக வந்துக் கொண்டிருக்கும் சிவநேசனின் காரை தவிர்க்க முடியாமல் நேருக்கு நேராய் தனது காரைக் கொண்டு போய் மோதினான் ரவிபாரதி.

“படார்” என்ற கோர சத்தம், குழித் தோண்டிப் புதைத்தது நால்வரின் வாழ்க்கையை.

ஆபத்து வரும் போது நமது உடல் சட்டென அதை தடுக்க எதிர்வினை ஆற்ற முயலுமாம். இங்கே அல்கஹோலின் தாக்கத்தில் இருந்த பாரதியால் தனக்கு நேர இருக்கும் விபத்தை உணர முடிந்தாலும் தடுக்க முடியவில்லை. கண்ணைத் திறந்துக் கொண்டே காலனைத் தேடிப்போனான் ரதியின் பாரதி.

இந்த விபத்தினால் ஒருவனுக்கு உயிர் போனதும்(பாரதி), இன்னொருவனுக்கு ஒற்றைக் கால் போனதும்(நேசன்), ஒருத்திக்கு வாழ்க்கையின் ஆதாரம் போனதும்(நந்தனா), இன்னொருத்திக்கு உயிராய் நினைத்த தொழில் போனதும்(சிந்தியா), மற்றொருவன் ஆதரவு காட்டிய ஆன்மாவை இழந்ததும்(ரிஷி), சீனி பாப்பா தன் தந்தையை இழந்ததும், பிறந்த குழந்தைக்கு தந்தை முகம் காணக் கிடைக்காததும் யாருடைய குற்றம்?

பேரன் என்றும் எண்ணிப் பார்க்காமல் ஜாதி வெறியில் அவன் பிறப்பையே கேள்விக்குறியாக்கி ஓட வைத்த சிவசுவை குற்றவாளி கூண்டில் ஏற்றலாமா? மதுபானம் அருந்தி இருக்கிறோம் என தெரிந்தும், கார் ஓட்டியபடியே போனில் பேசிக் கொண்டு வந்த பாரதியின் மேல் குற்றம் சுமத்தலாமா? கணவன் எங்கிருந்து பேசுகிறான், என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பதை போன் பேசும் போது கேட்க தவறிய நந்தனாவின் புறம் குற்றத்தை நகர்த்தலாமா? சாதாரணமாகவே காதல் கணவனாக இருப்பவன் மதுவின் தாக்கத்தில் இருக்கும் போது இன்னும் இமோஷனலாகி குரல் குழைய உருகி வழிவான் என இத்தனை வருட தாம்பத்தியத்தில் அறிந்து வைத்திருப்பவள் அன்று கண்டுப்பிடிக்காமல் போனதையும் அந்த குற்றத்தில் சேர்த்துக் கொள்ளலாமா? தாத்தனின் மேல் கொண்ட கோபத்தை கார் ஓட்டுவதில் காட்டிய சிவநேசனை குற்றவாளி என முடிவெடுக்கலாமா? அண்ணனின் கோபத்தைத் தணித்து அவனை நார்மலாக்க ஜோக்கடித்த சிந்தியாவை குற்றம் செய்தவள் என பழி போடலாமா? அந்த ராத்திரி நேரத்தில் சாலையைக் கடந்த அந்த நாயை குற்றவாளி என தீர்ப்பளிக்கலாமா? அல்லது இதுதான் விதி என மேலிருந்து காட்சிகளை டைரக்ட் செய்யும் கடவுளை குற்றவாளி கூண்டில் ஏற்றி தண்டனைக் கொடுக்கலாமா? யாரின் குற்றம் இந்த விபத்து என்பதை உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.

இதில் பாரதி அருமையான காதல் கணவன். தன் ரதியை கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக் கொள்ளும் அன்பானவன். இத்தனை வருடங்களாய் பார்ட்டிக்கு செல்கிறான், கெர்ட்டசிக்காக குடித்திருக்கிறான். அதன் பிறகு எந்த பிரச்சனையும் இல்லாமல் கார் ஓட்டியிருக்கிறான். எல்லா நேரமும் ஒன்று போல் இருக்காது அல்லவா!

இவனைப் போல எத்தனையோ பாரதி நம்மில். குடித்துவிட்டு வண்டி ஓட்டி ஆக்சிடேண்ட், போனில் மேசேஜ் அனுப்பியபடியே கார் ஓட்டியதால் ஆக்சிடேண்ட், போன் பேசியபடியே பைக் ஓட்டியதால் ஆக்சிடேண்ட் என எத்தனை நியூஸ் படித்து அப்படியே கடந்திருப்போம் நாம்! அவர்கள் வீட்டில் எல்லாம் அழகான ஒரு நந்தனா இருப்பாள், ஓர் அருமையான சீனி பாப்பா இருப்பாள், பால் மணம் மாறாத கைக்குழந்தை ஒருத்தி இருப்பாள் என எண்ணிப் பார்த்திருப்போமா! இனிமேல் வாழ்க்கையை டேக் இட் ஃபோர் க்ராண்டாட்டாக எடுத்துக் கொள்ளாமல், கவனமாக இருப்போம்! மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர்கள், உங்கள் குடும்பத்தினரையும் ஓட்ட விடாதீர்கள்.

“ரெண்டு வாரம் என்னை சுத்தி என்ன நடக்குதுன்னு தெரியாம கோமால இருந்தேன் ரிஷி”

குளிர் காற்று ஊசியாய் உடலைத் துளைக்க, கால்கள் இரண்டையும் நெஞ்சோடு கட்டிக் கொண்டு அமர்ந்தவாறே பேசினாள் சிந்தியா. யாரோ கோமாவில் இருந்தார்கள் என்பது போல ஒட்டாத குரலில் பேசியவளை அப்படியே வாரி தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான் ரிஷி.

கலங்காமல், கண்ணீர் சிந்தாமல் தன் கதையை சொல்லிக் கொண்டு வந்தவள், அவனின் அணைப்பில் மௌனமாய் கண்ணீர் விட ஆரம்பித்தாள். இவ்வளவு நேரம் தைரியமாகக் காட்டிக் கொண்டவள், அவன் அணைப்பில் உடைந்துப் போனாள். எது வந்தாலும் சமாளிக்க முடியும் என கெத்தாக இருக்கும் பெண் கூட, உன்னோடு சேர்ந்து பாரம் சுமக்க நான் இருக்கிறேன் எனும் தன்னவனின் ஒற்றை வார்த்தையில் மனம் உருகித்தான் போகிறாள்.

“பாரதியின் உயிர் போனத என் ரெண்டு கண்ணால பார்த்தேன் ரிஷி! என்னால அவர் உயிர புடிச்சு வைக்க முடியல. ஒரு டாக்டரா என் வாழ்க்கையில எத்தனையோ இறப்ப பார்த்திருக்கேன்! இந்த மாதிரி நட்ட நடுக் காட்டுல, ரோட்டு ஓரத்துல, என் கண்ணு முன்னுக்கு, என்னால ஒன்னுமே செய்ய முடியாம ஒரு உயிர் போனத தாங்கிக்கவே முடியல ரிஷி! அவர் உயிர் போகற நிலையில கூட அவ்ளோ பாசத்தோட மென்மையா ரதின்னு நம்ம நந்துவோட பேர உச்சரிச்சாரு. ரதிய பார்க்கனும்னு சொன்னாரா, இல்ல ரதிய பார்த்துக்கன்னு சொன்னாரான்னு கூட எனக்கு தெரியல ரிஷி. பேசிக்கிட்டு இருக்கறப்பவே உயிர் போயிடுச்சு. ஆனா அந்தக் கண்ணு மட்டும்..அந்த கண்ணுல வலியையும் மீறின காதலையும் தவிப்பையும் நான் பார்த்தேன் ரிஷி! நான் பார்த்தேன்! கோமால இருந்து நான் முழிச்சி முதல்ல சொன்ன வார்த்தை ரதிதானாம்!” என தேம்பினாள்.

அவளின் முதுகைத் தடவிக் கொடுத்தவன்,

“சீனியர் ஆக்சிடேன்ட் பண்ணது சிவநேசன் த/பெ சிவமூர்த்தின்னு (த/பெ என்பது தகப்பனார் பெயர், அடையாள அட்டையில் இப்படித்தான் மலாயில் எங்களது முழுபெயர் எழுதப்பட்டிருக்கும். அதனால் தான் சித்தப்பாவின் பெயரை முதலிலேயே சொல்லவில்லை. சொல்லி இருந்தால் நந்தா கண்டுப்பிடித்திருப்பான்) போலிஸ் ரிப்போர்ட்ல இருந்தது. ஆனா ரிப்போர்ட்ல உன் பெயர் எங்கயும் வரலியே சிந்திம்மா”   

“அண்ணா மயங்கற முன்னே ஆம்புலன்சுக்கும் சித்தப்பாவுக்கும் போன் செஞ்சிருக்கான். ஆம்புலன்ஸ் வரதுக்குள்ள என்னை தனியா தூக்கிட்டுப் போய் ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணிட்டாங்க சித்தப்பாவும் அப்பாவும். என் பெயர் எதுலயும் வராம அப்படியே அமுக்கிட்டாரு சிவசு. அவர் பேத்தி போலிஸ் இன்வெஸ்டிகேஷன்ல இன்வால்வ் ஆகறதுல அவருக்கு இஸ்டம் இல்லை. அண்ணாவும் அவன் மட்டும்தான் கார்ல இருந்ததா வாக்குமூலம் குடுத்துட்டான். இதெல்லாம் நான் கண் முழிக்கற முன்னமே நடந்துருச்சு ரிஷி. நான் வேலை செஞ்ச ஹாஸ்பிட்டல்லயே ட்ரீட்மேண்ட் செஞ்சு என் பேர் வெளி வராம பார்த்துக்கிட்டாங்க. மசாலா குவீன் இன்வால்வ் ஆகியிருக்கேன்னு தெரிஞ்சா இன்னும் வேற வேற கோணத்துல புரளிய கிளப்பிடுவாங்க மீடியால! பணம் இருந்தா பத்தும் செய்ய முடியும் ரிஷி! சிவசுக்கு பணமும் இருக்கு, எனக்கு செய்ய மனமும் இருக்கு!”

“போலிஸ் ரிப்போர்ட்ல சீனியர் லேன் மாறி வந்ததுல தான் ஆக்சிடேண்ட் ஆச்சுன்னு பார்த்தப்பவே நாங்க பாதி செத்துட்டோம்! போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்ல அண்டர் அல்கஹோல் இன்புளுவன்ஸ்னு வந்தப்போ முழுசா உடஞ்சி போய்ட்டோம்! நான் தடுத்துருக்கலாம் இதன்னு சொல்லி சொல்லி அழுதா நந்தனா! தண்ணி சாப்டுருக்காருன்னு கண்டுப் புடிச்சிருந்தா, கார ஓட்ட விட்டுருக்க மாட்டேன்! ரோட்டோரமா நிறுத்த சொல்லி க்ரேப்(வாடகை வண்டி) அரேஞ் பண்ணிருப்பேன்! நான்லாம் என்ன பொண்டாட்டின்னு சாப்பிடாம தூங்காம பைத்தியம் மாதிரி அழுது பொலம்பிட்டு இருந்தா! அவள தேத்தறதுலயும், சீனீ பாப்பாவைப் பார்த்துக்கறதுலயும் நாள் பறந்துருச்சு! தப்பு எங்க சைட்னு தெரிஞ்சதும், இங்க நந்தனாவ ஒரு வழியா செட்டில் பண்ணிட்டு போலிஸ் ரிப்போர்ட்ல இருந்த நம்பர காண்டேக்ட் பண்ணேன். சிவநேசன் தான் எடுத்தாரு”

அந்த விஷயம் தான் அவளுக்கும் தெரியுமே! அமைதியாய் அவன் அரவணைப்பை அனுபவித்தப்படியே கேட்டிருந்தாள் சிந்தியா.

“நான் பாரதியோட ப்ரதர் இன் லான்னு அறிமுகப்படுத்திக்கிட்டேன்! மன்னிப்பு கேட்க வந்த என்னை, விடவே இல்ல அவர். தப்பு அவர் மேலயா இருந்தாலும், நான் ஸ்பீடா வராம இருந்தா இந்த விபத்தத் தடுத்திருக்கலாம்! அதனால ப்ளிஸ் சாரிலாம் சொல்லாதீங்க அப்படின்னு என் வாய அடச்சிட் டாரு! ட்ரீட்மேண்ட்கு வெளிநாடு போகறதாவும், இனிமே நம்பர் தொடர்புல இருகாதுன்னும் சொன்னாரு. கடைசியா தயக்கத்தோட, பாரதி இறக்கற முன்ன ரதின்னு ஒருத்தங்க பெயர் சொன்னாராம். ப்ளிஸ், அவங்கள நல்லா பார்த்துக்குங்கன்னு சொல்லிட்டு வச்சிட்டாரு! அதுக்கு மேல அந்தப் போன் நம்பர் நாட் ரிச்சபிள்னே வந்துச்சு சிந்திம்மா!”

“ஆமா, அமெரிக்காவுக்கே மறுபடி போய்ட்டான். ஆக்சிடேன்ட் அப்போ அவனோட ஒரு கால் டோட்டலா டேமேஜ் ஆயிடுச்சு. முட்டிக்குக் கீழ கால வெட்டி எடுத்துட்டாங்க!”

“எங்க சீனியரால அவருக்கு ஒரு கால் போயிருச்சுன்னு நீ இப்ப சொல்லித்தான் தெரியும் சிந்திம்மா! எவ்ளோ ஸ்பீட்டா வந்தாலும் சிவநேசன் அவர் பாதையில தான் வந்தாரு! தப்பு எல்லாம் எங்க மேலத்தான்! அப்படி இருந்தும் கோபப்படாம என்னை மன்னிப்புக் கூட கேட்க விடாம பெருந்தன்மையா பேசி போனை வச்சிட்டாரு!”

ரவிபாரதியை விட்டுக் கொடுக்காமல், தப்பிழைத்தது நாங்கள் என அவனையும் நந்தனாவையும் அதில் சேர்த்துக் கொண்டதிலேயே ரிஷி தன் மாமன் மேல் வைத்திருந்த அதீத அன்பைப் புரிந்துக் கொண்டாள் சிந்தியா.

விரக்தியாய் புன்னகைத்தவள்,

“என்னால தான் ரிஷி அவனுக்கு கால் போச்சு! கல்யாணத்த நிறுத்துன்னு அவன நான் கூப்பிட்டிருக்கக் கூடாது! இங்க வரவும் தான் சிவசு கூட சண்டை வந்தது. கோபத்துல கார வேகமா ஓட்டி ஆக்சிடேண்டும் ஆச்சு! நான் கூப்பிடலனா அவன் பாட்டுக்கு வெள்ளைக்காரப் புள்ளைங்கள சைட் அடிச்சுக்கிட்டு நிம்மதியா இருந்துருப்பான்” என மீண்டும் கண்ணீரை உற்பத்தி செய்ய ஆரம்பித்தாள் சிந்தியா.

“இப்படியே நீ, நந்தனா, நேசன் எல்லோரும் என்னோட தப்புன்னு சொல்லிட்டு திரிஞ்சா இதுக்கு ஒரு முடிவே இல்லாம போய்கிட்டு இருக்கும் சிந்தியா! நாம் பொறக்கறப்பவே இதெல்லாம் உன் வாழ்க்கையில நடந்தேதான் தீரும்னு எழுதி வச்சுத்தான் அனுப்பறான் ஆண்டவன். குட்டிக்கரணம் போட்டாலும் நடக்கறது நடந்து தான் ஆகும். எங்க சீனியர் பாதி வழியிலேயே எங்கள விட்டுப் போகனும்னு விதிச்சிருந்தா அதை யாராலும் மாத்த முடியாது! அவர என்னைக்குமே என்னாலயும் நந்துவாலயும் மறக்க முடியாது சிந்திம்மா! சிரிச்சுப் பேசி, வாழ்க்கையை அது போக்குல வாழ்ந்தாலும், மனசுல ஓர் ஓரத்துல நெருஞ்சி முள்ளாய் அவர் நினைவுகள் சுருக் சுருக்குன்னு குத்திட்டேத்தான் இருக்கும். நாங்க அந்த வலியோட வாழ்ந்துதான் ஆகனும். மறதி கடவுள் கொடுத்த வரம்னு சொல்லுவாங்க. ஆனா என் சீனியர மறக்க வைக்கற அந்த வரம் எனக்கு வேணாம்டா! என்ன நடந்தாலும் நேரம் நமக்கு நிக்காம போய்கிட்டேத்தான் இருக்கும்! லைப் கோஸ் ஆன் சிந்திம்மா!” என்றவன் அவள் கன்னத்தை இரு கரங்களாலும் பிடித்து தன் முகத்தைப் பார்க்க வைத்தான்.

“இப்ப நீ அழுகைய நிறுத்தலனா நான் கண்ணீர் காட்டேரன்னா ஆகிடுவேன்!” என மிரட்டினான் ரிஷி.

“காட்டேரன்னா?”

“ஆமா! நீ காட்டேரினா நான் காட்டேரன்”

“நல்லா கண்டுப்புடிக்கறீங்கடா ஆண்பாலு” என சொல்லியவளின் முகத்தில் புன்னகை வந்திருந்தது.

“சரி சொல்லு சிந்திம்மா! எதனால கோமால இருந்த? கோமால இருந்து எழுந்ததும் என்ன ஆச்சு? ஏன் எங்கள தேடி வந்த?” என அவள் கண்களை ஆழ்ந்துப் பார்த்து கேட்டான் ரிஷிநந்தன்.

“கேமரன்ல ரிஷி ரிஷின்னு சிங்கிள் முனிவர் ஒருத்தன் இருக்கானாம்! அவனை மயக்கி மணமேடை ஏத்த மாய மோகினி ஒருத்தி தேவைன்னு பேப்பர்ல விளம்பரம் பார்த்தேன்! அதான் உன்னைத் தேடி வந்தேன்” என சொன்னவள் நட்டுக் கலண்டு போன சிட்டு போல இளித்து வைத்தாள்.

பல நாட்களுக்குப் பிறகு தன்னவளின் இளிப்பைப் பார்த்தவனுக்கு முகம் மலர்ந்துப் போனது.

“மாய மோகினின்னு யாரோ வந்தாங்கன்னு சொன்னியே சிந்தியா, யாரது? என்னைத் தேடி சிம்ரன்னு ஒரு சிப்பன்சி தானே வந்துச்சு!” என கலாய்த்தான்.

“நான் உனக்கு சிப்பன்சியா? சீக்கு வந்த சிக்கன் மாதிரி இருந்துகிட்டு என்னை சிப்பன்சின்னு சொல்றியா?” என அவன் கன்னைத்தை வலிக்க கடித்து வைத்தாள் சிந்தியா.

கன்னத்தைத் தேய்த்துக் கொண்டே,

“காதல தப்பு தப்பா பண்றடி நீ!” என சொல்லி அவள் முகத்தை தன் இரு கரம் கொண்டு இறுக்கிப் பிடித்துக் கொண்டான் ரிஷி.

“அப்போ காதல சரியா செய்ய சொல்லிக் குடு ரிஷி! முரட்டு சிங்கிளுக்குத்தான் இதெல்லாம் நல்லா தெரியுமாம்” என வம்பிழுத்தாள் தன்னவனை.

இரண்டு வயதில் இருந்தே பெரிய மனுஷியாய் நடத்தப்பட்டவள், வயதுக்கு மீறிய மன வளர்ச்சிக் கொண்டிருந்தவள், தன்னிடம் மட்டும் காட்டும் குறும்பிலும் குழந்தைத்தனத்திலும் மனம் கசிந்துப் போனான் ரிஷி.

“இத்தனை வருஷம் நான் சேமிச்சு வச்சிருந்த காதலேல்லாம் யாருக்குடி! எல்லாம் உனக்குத்தான்! என் சிந்தி கண்ணுக்கு சொல்லிக் குடுக்காம வேற யாருக்கு சொல்லிக் குடுக்கப் போறேன்!” என்றவன் மென்மையாய் அவள் இதழை தன் விரலால் வருடினான்.

விரல் செய்த ஜாலங்களை சற்று நேரத்தில் அவன் இதழ் செய்ய ஆரம்பித்தது. மென்மையாய் ஆரம்பித்த இதழ் முத்தம், கொஞ்சம் கொஞ்சமாக வன்மையாய் மாறி, டாக்டர் சிந்தியாவை நந்தனின் சிம்ரனாக்கியது.

“ஐ லவ் யூடா சேகர்”

“ஐ லவ் யூடி சிம்ரன்”

 

‘நீண்ட நேரம் நீடித்தது முத்தம்

கலங்கிப் போனது இருவரின் சித்தம்’

 

(உருகுவான்..)

 

(போன எபிக்கு லைக், காமேண்ட், மீம் போட்ட அனைவருக்கும் நன்றி. ஏற்கனவே இந்த எபிக்கு ஹிண்ட் குடுத்திருந்தேன். ரதி, பாரதிய நெனைச்சு அழுத எபிய படிச்சுப் பார்த்தீங்கனா தெரியும் நன் குடுத்த ஹிண்ட். நீங்க என்ன நினைக்கறீங்கன்னு ஷேர் பண்ணிக்குங்க. அதோட ரவிபாரதி இல்லைன்றத ஆரம்பத்துல இருந்தே கதைல சொல்லிட்டே வந்தேன் டியர்ஸ். ஆனாலும் நமக்கு எல்லாருக்குமே அவன் உயிரோட இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்னு கண்டிப்பா தோணும். ஆனா இதுதான் நிதர்சனம். நமக்கு மத்தியில பல நந்தனாக்கள் இருக்காங்க. அவங்களுக்கு எல்லாம் இந்த கதை சமர்ப்பணம். அடுத்த எபில மீண்டும் சந்திக்கலாம் டியர்ஸ். லவ் யூ ஆல்!)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!