UUU–EPI 5

UUU–EPI 5

அத்தியாயம் 5

சாக்லேட்டில் கிட்டத்தட்ட 500க்கும் மேல் ப்ளேவர்ஸ் இருக்கின்றன. அதில் மிக பிரபலமான மூன்று ஹாஷெல்நட், கரமெல் மற்றும் ஆரஞ்சு சுவையாகும்.

 

வழிபறி முயற்சி நடந்த தினத்தில் இருந்து நந்தனாவுக்கு உயர் ரத்த அழுத்தம் கொஞ்சம் அதிகரித்திருந்தது வீட்டு வேலைகளை செய்வதில் கூட மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது. சீனி பாப்பாவை சமாளிப்பது கூட மிகுந்த கஸ்டமாக போனது அவளுக்கு. டாக்டர் சில மருந்துகளைக் கொடுத்து நன்றாக ஓய்வெடுக்க சொல்லி இருந்தார்.

ஒரு வாரமாக ப்ளே ஸ்கூல் முடிந்ததும் அங்கேயே இருந்த நர்சரியில் விட்டு வைத்திருந்தாள் குழந்தையை. அதற்கு அவர்கள் எக்ஸ்ட்ராவாக பணம் வசூலிப்பார்கள். ஆனால் குழந்தைக்கு உணவு கொடுத்து, உடல் கழுவி நன்றாக கவனித்துக் கொள்வார்கள். மாலை ஆறு மணிக்கு நந்தா அழைத்துக் கொண்டு வந்து வீட்டில் விட்டு, பிள்ளை களைத்துக் போகும் வரை விளையாட வைத்து விட்டுப் போவான். அவன் கிளம்பியதும் இவள் குழந்தைக்கு உணவு கொடுத்து படுக்க வைத்து விடுவாள்.

இப்படி போய் கொண்டிருக்க, அன்று ப்ளே ஸ்கூலில் விட நந்தனாவும் நந்தாவுடன் கிளம்பி வந்தாள்.

“வீட்டுல ரெஸ்ட் தானே எடுக்க சொன்னாங்க? இப்போ எதுக்கு கிளம்பி வர நீ?” என சத்தம் போட்டான் ரிஷி.

“எவ்ளோ நேரம்டா வீட்டுல உள்ள நாலு சுவரையேப் பார்க்கிறது? கஸ்டமா இருக்குடா நந்தா! இன்னிக்கு பாப்புவ விட்டுட்டு நாம ப்ரேக்பர்ஸ்ட் போலாம் ப்ளிஸ்! அப்புறம் என்னை வீட்டுல விட்டுட்டு நீ ஷோப்கு போ” என ப்ளிஸ் போட்டாலும் குரல் அதிகாரமாகத்தான் வந்தது நந்தனாவுக்கு.

மூவரும் காரில் அமர்ந்திருந்தார்கள். நந்தனா முன்னால் அமர்ந்திருக்க, பேபி கார் சீட்டில் பின்னால் இருந்தாள் சீனி பாப்பா.

“பேக்பஸ்ட் எனக்கும்!” என உதட்டைப் பிதுக்கி அழ ஆயத்தமானாள் குட்டி.

“காலையிலே அம்மா உனக்குப் புடிச்ச ‘ப்ரூட் லூப்ஸ்’ சீரியல் குடுத்துட்டேன் தானே! இதுக்கும் மேல சாப்டா உனக்கு உவா வரும்”

“உவா வராது! வராது! பேக்பஸ்ட் வேணும்!” என குரல் மெல்ல மெல்ல உயர்ந்து அழுகை ஆரம்பமானது.

சின்னவளுக்கு காலையில் ஹெவியாக சாப்பிட முடியாது. சீரியலும் பாலும் தான் அவளின் காலை உணவு. வேறு எதாவது கொடுத்தால் வாந்தி எடுத்து வைப்பாள். ஆனால் அம்மாவும் மாமாவும் தன்னை விட்டு விட்டு சாப்பிட போகிறார்கள் என்பதே அவளுக்கு அழுகையை வர வைத்தது.

இவளின் அழுகை கூட கூட, நந்தனாவின் மண்டைக்கு மணி(கோபப்படுத்துதல்) அடிக்க ஆரம்பித்தது. கத்துவதற்கு வாயைத் திறக்க, ரிஷி அவள் கையைப் பிடித்து அழுத்திக் கொடுத்தான்.

“காலையிலே கத்தி பீபீய ஏத்திக்காதே நந்து! சின்ன பிள்ளதானே! இரு நான் சமாளிக்கறேன்!” என மலாயில் சொல்லி உடன் பிறந்தவளை சமாதானப்படுத்தினான்.

மலாய் இன்னும் சின்னவளுக்கு புரிய ஆரம்பிக்கவில்லை. அதனால் அவளுக்குப் புரியாமல் பேசுவதென்றால் அந்த மொழியைப் பயன்படுத்துவார்கள். சில சமயம் தெரியாமல் தமிழில் பேசி இப்பொழுது மாட்டிய மாதிரி மாட்டியும் கொள்வார்கள்.  

“சீனி பாப்பா அழாம ஸ்கூல் போனாங்கன்னா, இன்னிக்கு ப்ளேஸ்கூல் முடிஞ்சதும் மாமா வந்து ‘பைட் மீ’க்கு கூட்டிட்டுப் போவேன்! அங்க போய் சாக்லேட் சாப்டலாம், மாமா ஆபிஸ் ரூம்ல லேகோ வெளையாடலாம், தேன் மார்ஸ்மெல்லோ போட்டு ஹாட் சாக்லேட் குடிக்கலாம்! டீலா?”

அழுகை நின்றுப் போக, முகம் மலர்ச்சியைத் தத்தெடுத்தது குட்டிக்கு.

“ப்ராமீஸா?”

“ப்ராமிஸ்டா சீனி பாப்பா”

“இன்னிக்கு இம்பார்டேண்ட் வேலை எதுவும் இல்லையா? நர்சரில இருக்கடும், நீ வேலையா முதல்ல பாரு” என சொன்னாள் நந்தனா.

“பாவம் பிள்ளை, ஒரு வாரமா நர்சரில இருக்கா! முகமே பொலிவிழந்து கிடக்கு. நீ ரெஸ்ட் எடு நந்து, இன்னிக்கு நான் பார்த்துக்கறேன்! வேலை இருக்குத்தான்! அதெல்லாம் உங்களுக்குப் பிறகுதான்! நாளைக்கு எட்ஸ்ட்ரா டைம் எடுத்து முடிச்சிட்டா போச்சு!”

லேசாக கண் கலங்க, கியரில் இருந்த தன் தமையனின் இடது கையை இறுகப் பற்றிக் கொண்டாள் நந்தனா.

அவளைத் திரும்பிப் பார்த்தவன்,

“கீலா(பைத்தியம்)! இப்ப எதுக்கு கண்ண கசக்கற?” என மென்மையாக கடிந்துக் கொண்டான்.

“கண்ணுல அதுவா தண்ணி வருது! நான் என்ன செய்ய? ப்ளேம் பண்ணறதுனா என்னோட ப்ரேக்னசி ஹார்மோன்ஸ்ச ப்ளேம் பண்ணு! என்னமோ நான் இஸ்டப்பட்டு கண்ண கசக்கற மாதிரிதான்!” என சொன்னவள் தன் மேடிட்ட வயிற்றைத் தடவிக் கொண்டாள்.

காரில் ஏறிய பதினைந்து நிமிடங்களில் சிரிப்பு, அழுகை, கோபம், வருத்தம் என பல இமோஷன்களை காட்டி அவனைப் புரட்டிப் போட்ட இரு பெண்களையும் பார்த்தவன்,

‘நல்ல வேளைடா நமக்கு கல்யாணம் ஆகல! இவங்க ரெண்டு பேரு, வயித்துல இருக்கற இன்னொன்னு, இந்த மூனும் போதும்டா சாமி என்னை உருட்டிப் பொரட்டி மிரட்டி எடுக்க! இன்னொரு பொண்ணுக்கு சத்தியமா என் மனசுலயும் இடம் இல்லை, சமாளிக்க உடம்புலயும் தெம்பு இல்ல!’ என எண்ணிக் கொண்டான்.

அவர்களின் மூடை மாற்ற,

“சீனி பாப்பா, மேண்டரின் க்ளாஸ்ல ரைம்ஸ் சொல்லிக் குடுக்கறாங்க தானே! அம்மா வயித்துல பாப்பா இருக்காங்கல்ல, அவங்களுக்காக ஒரு ரைம்ஸ் சொல்லுங்க, கேக்கலாம்!” என மருமகளிடம் கேட்டான்.

அவன் குரலில் வயிற்றில் இருந்த குட்டியும் ரைம்ஸ் வேண்டும் என்பதை ஆமோதிப்பது போல ஒரு முறை சுழன்று வந்தது. நந்தனாவின் முகத்தில் புன்னகை தானாக அரும்பியது.

“ரைம்சா? மேண்டரின் ரைம்சா மாமா? சீனி பாப்பா பாடவா?”

“ஆமாடாம்மா! பாடுங்க”

“சீ சொய்லா

சீன கத்திரிக்கா

அல்லூர்ல(இங்கே சாக்கடை என பொருள்படும்) போட்டா

குண்டு கத்திரிக்கா!!!”  

(இந்தப் பாடல் எந்த அர்த்தமும் இல்லாத பாடல். இந்த ஊர் சீனர்களை கிண்டலடிப்பதற்காக இந்தியர்கள் விளையாட்டாய் பாடும் பாடல்.)

குட்டி பாடிய பாடலைக் கேட்டு அதிர்ச்சியானான் ரிஷி. திரும்பிப் பார்த்து நந்தனாவை இவன் முறைக்க, அவளோ வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்துக் கொண்டிருந்தாள்.

“யாரு இந்தப் பாட்ட சொல்லிக் கொடுத்தது?” என கோபத்தைக் குரலில் மறைத்துக் கேட்டான் இவன்.

“அம்மாத்தான்! நாங்க நைட்ல தூச்சா டைம்ல சேர்ந்து சிங் பண்ணுவோம்!”

“ஏன்டி உனக்கு அறிவு இல்ல? அவ்ளோ காசு கட்டி என் மருமகள தி பெஸ்ட் ப்ளே ஸ்கூல் அனுப்பறேன்! அவளுக்குப் போய் சீன்சொய்லா சீன கத்திரிக்கான்னு சொல்லிக் குடுத்துருக்கே!” என மலாயில் கடிந்துக் கொண்டான் நந்தனாவை.

“இப்போ இத சொல்லிக் குடுத்ததுல என்ன கெட்டுப் போச்சு? நீயும் நானும் இந்த பாட்டுலாம் படிச்சு, ஓடி விளையாடி, கீழ விழுந்து எந்திருச்சு, பக்கத்து விட்டு மாங்காயைத் திருடி சாப்டுன்னு சந்தோஷமாத்தானே வளந்தோம்! கவர்மெண்ட் தமிழ் ஸ்கூல் போனோம், படிச்சோம், இப்போ நல்லாத்தானே இருக்கோம்! நாம ஆறு வயசுல கிண்டர்கார்டேன் போனோம்! இப்போ மூனு வயசுலயே அனுப்ப வேண்டிய சூழ்நிலை. அனுப்பலனா இன்னுமா ஸ்கூல் சேர்க்கலன்னு என்னமோ பெரிய குத்தம் செஞ்சிட்ட மாதிரி பார்க்கறவங்க எல்லாம் கேள்வி கேட்கறாங்க. இன்னும் வீட்டுலயும் படி படின்னு சின்னக் குழந்தைய போட்டு வாட்ட சொல்லுறியா? விட்ரா டேய்! வீட்லயாச்சும் சந்தோஷமா இருந்துட்டுப் போறா!”  

“நாம வாழ்ந்து வளர்ந்த காலம் வேற நந்து! கம்படீட்டிவ் வோர்ல்ட் இப்போ! மூனு வயசுல இருந்தே போட்டி தொடங்கிருது! நம்ம புள்ள லெப்ட் அவுட் ஆகிடக்கூடாது! மூவினத்துக்கூடயும் முட்டி மோதி முன்னேறி வரனும். என்னால முடிஞ்ச அளவுக்கு பேஸ்மெண்ட்(பணம்) ஸ்ட்ராங்கா போட முயற்சி பண்ணிட்டு இருக்கேன்! முயற்சியும், உழைப்பும் உன் கிட்ட இருந்துத்தானே வரனும்! அவள கைட் பண்ணி நல்லா கொண்டு வா நந்து! அவளும், சின்னக்குட்டியும் தானே நம்மளோட பியூச்சர்! அவங்க தானே நாம ஆரம்பிச்சிருக்கற இந்த சாம்ராஜ்யத்தை தூக்கி நிறுத்தனும். நாம முதல் அடி எடுத்து வச்சிருக்கோம், அவங்க பல அடிகள கடந்து அப்படியே ரிச்சா, கெத்தா நிக்கனும்”

“இப்போல்லாம் பணம், பணம்னு நீ ஓவரா உழைக்கற நந்தா! எப்படி இருந்த நீ, இப்படி ஆகிட்டியேன்னு எனக்கு எவ்ளோ கஸ்டமா இருக்குத் தெரியுமா?”  

“காசு இல்லைனா காக்கா கூட நம்மள மதிக்காது நந்து! பட்டு தெளிஞ்சும் புத்தி வரலனா எப்படி? குறுக்கு வழியில பணத்தத் தேடாம உழைச்சித்தானே சம்பாரிக்கறேன். நீ நல்லபடி பேபிய பிறக்க வச்சு வரதுல மட்டும் கன்சேண்ட்ரேட் பண்ணு! என் கவலை உனக்கு வேணா, புரியுதா!”

“போடாங்! இவர் மட்டும் எங்கள நினைச்சு, உழைச்சுக் களைச்சுப் போவாராம்! ஆனா நாங்க மட்டும் இவர பத்திக் கவலைப்பட கூடாதாம்! வாயில நல்லா வந்துடும்”

“மாமா, அம்மாக்கு வாய்ல கமிங்காம்! காடிய(கார்) ஸ்டாப் பண்ணுங்க! அம்மா கோ வாந்தி, கோ, கோ!” என பின்னால் இருந்து குரல் வர, இருவருக்கும் பேச்சு நின்று சிரிப்பு வந்தது. பள்ளி வளாகமும் வந்திருக்க, சின்னவளுக்கு முத்தமிட்டு உள்ளே விட்டு விட்டு வந்தார்கள் இருவரும்.

நந்தனாவுக்கு பிடித்த சீன கடை அருகே காரை பார்க் செய்தான் ரிஷி. இவர்களைப் பார்த்ததும் புன்னகைத்தார் அந்த கடையின் வயதான முதலாளி.

“மீனாட்சி, சோக்கியமா(சௌக்கியமா)?” என கேட்டார் அவர்.

(மீனாட்சி எனும் பெயரை தான், பெயர் தெரியாத இந்திய பெண்களை அழைக்கப் பயன்படுத்துவார்கள் மலாய்காரர்களும் சீனர்களும்! அந்தக் காலத்து பெருசுகள் உடைந்த தமிழ் ஓரளவு பேசுவார்கள்)  

“நான் நல்லா இருக்கேன்! நீங்க நல்லா இருக்கீங்களா? காலையில பல்லு விளக்கனீங்களா? காபி குடிச்சீங்களா?” என இவள் வேண்டுமென்றே சரளமாக தமிழில் உரையாட, அவர் திருதிருவென முழித்தார்.

“ரெண்டே வார்த்தைய கத்து வச்சிக்கிட்டு ரவுச பாரேன் இந்த கிழவனுக்கு! இனிமே மீனாட்சின்னு கூப்டுவாரு!!!!” என ரிஷியிடம் சொல்லிக் கொண்டே இடம் தேடி அமர்ந்தாள் நந்தனா.

ரிஷி போய் அந்த சீன மனிதரிடம் வன்தான் மீ(wantan mee—noodles) இரண்டு ப்ளேட் ஆர்டர் செய்து விட்டு வந்தான். நந்துவுக்கு சோயா பானமும், தனக்கு காபியும் வரவழைத்தான்.

“சரி சொல்லு! என் செலெக்‌ஷன் சி சிம்ரன் எப்படி வேலை செய்யறா? ஒரு வாரம் ஆச்சுல்ல வேலைக்கு சேர்ந்து!”

“ஹ்ம்ம் ஓகே, ஓகே!” என விட்டேத்தியாக சொன்னான் ரிஷி.

“அப்போ தொடர்ந்து வேலைக்கு வச்சுக்கலாமா? எனக்கு என்னமோ அவள ரொம்ப பிடிச்சிருக்கு நந்தா! நான் அந்தப் பக்கமே வரலனு, ஷீலா கிட்ட போன் நம்பர் வாங்கி எப்படி இருக்கீங்கன்னு விசாரிச்சா! உடம்பு முடியலைன்னு சொன்னதும், டாக்டர் கிட்ட போனீங்களா, மெடிட்டேஷன் செஞ்சீங்களா, மருந்து சாப்டீங்களான்னு ஒரே விசாரிப்பு. தெனமும் குட் மார்னிங் மேசேஜ், குட் நைட் மேசேஜ் வேற அனுப்பிடறா! சோ ஸ்வீட்ல!”

“ஹ்க்கும்! இது வேற நடக்குதா? சொல்லவே இல்ல என் கிட்ட!”

“நின்னு நிதானமா பேசனாத்தானே சொல்ல! நீதான் பாப்பாவ இறக்கி விட்டுட்டு ஆர்டர், வேலை அப்படின்னு ஓடறியே”

இந்த ஒரு வாரமாக கல்யாண சீசனால் நிஜமாலுமே சாக்லேட் ஆர்டர்கள் குவிந்திருந்தன. கல்யாணத்துக்கு வந்தவர்களுக்கு கொடுக்கும் கிப்ட் பாக்கில் வைக்க குட்டி குட்டியாய் மணமக்கள் இனிஷியல் வைத்த சாக்லேட்களை ஆர்டர் கொடுப்பார்கள் இவனிடம். ஆகையால் இவனும் கிச்சனில் நின்று ஹெல்ப் செய்ய வேண்டிய சூழ்நிலை. நந்தனாவிடம் கூட ஆற அமர உட்கார்ந்து பேச முடியவில்லை அவனால்.

சாப்பிட்டுக் கொண்டே சிம்ரன் முதல் நாள் வேலைக்கு சேர்ந்த தினத்தில் செய்த அட்டகாசத்தையும், அதற்கு அவனின் பதிலடியையும் சொன்னான் ரிஷி. இவளுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

“ஹீல்ஸ் கழுவ விட்டுட்டாளா!!! ஹஹஹ! நல்லா வேணும் உனக்கு. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்னு சும்மாவா சொன்னாங்க! ஸ்கூல் டைம்ல பேரழகன் மாதிரி அந்த பந்தா பண்ணுவ! ஈன்னு உன் பின்னாடி வர பிள்ளைங்க கிட்ட அசைன்மேண்ட் செஞ்சு குடுக்க சொல்றதென்னா, கோக் வாங்கி குடுக்க சொல்றதென்னா, என்னமோ உனக்கு நேர்ந்து விட்ட வேலைக்காரிங்க மாதிரி நடத்தனதென்னா! அப்படிப்பட்ட உன் அழகு மூஞ்சிய பார்த்தும் சிம்ரன் உன்னை சின்னாபின்னமாக்கிட்டாடா! ஐ டோட்டலி லவ் ஹேர்”

“ஓவரா லவ்விடாதே! அது ஒரு கடைஞ்செடுத்த அராத்து(ராங்கி). நான் வச்ச வேலைக்கு ஒரே நாளுல துண்ட காணோம் துணிய காணோம்னு ஓடிருவான்னு பார்த்தேன். என்னமோ தாக்குப் புடிக்கறா!”

அங்கங்கே நின்று கைகளை நீவி விடுவதும், இடுப்பை தானே மசாஜ் செய்வதுமாக இருக்கும் சிம்ரனின் செய்கைகள் நினைவு வந்தது அவனுக்கு. கஸ்டப்பட்டாலும் வேலையை விட்டுப் போகாமல் இருக்கவும் தான், அவளுக்கு நிஜமாலுமே பணத்தட்டுப்பாடு போலும் என முடிவுக்கு வந்தான் இவன். முதல் நாள் தன் அழகினைக் கொண்டு மயக்க முயன்றது போல, அதன் பிறகு எதையும் செய்யவில்லை அவள். இவனைக் கண்டாலே வேகமாக விலகிப் போனது இவனுக்குள் அவள் மேல் சின்னதாய் மரியாதையை வரவழைத்தது.

டாய்லட் கழுவுவதை நான்கில் இருந்து மூன்று வேளையாக குறைத்து, பானைகளை தேய்ப்பதற்கு உதவிக்கு இன்னொரு ஆளையும் அனுப்பினான் ரிஷி. எல்லோருக்கும் சில சமயம் வாங்கிக் கொடுப்பது போல அவளுக்கும் சேர்த்து உணவு வாங்கிக் கொடுத்தான். அதற்கு மேல் அவள் மேல் தனியாக அக்கறை கொள்ள அவனுக்கும் நேரம் இல்லை, இருந்த சலனத்தை ஊதி பெரிதாக்க குப்பிட்டுக்கும்(cupid) வேளை வரவில்லை.  

“சிம்ரன்கிட்ட ஒரு ஃபைட்டிங் ஸ்பீரிட் இருக்கு நந்தா! என்னை மாதிரி போகட்டும் போன்னு விட்டுடற கேட்டகரி இல்ல அவ! அன்னிக்கு அவன அடிச்சு வெளுத்ததாகட்டும், வேலை வேணும்னு என்னை கன்வீண்ஸ் பண்ணதாகட்டும், இப்போ நீ சொன்ன போல கடின வேலைய செய்யறதாகட்டும், ஷீ இஸ் அ ஃபைட்டர். உன்னை மாதிரியே”

“போதும் போதும்! விட்டா அவளுக்கு காவடியே தூக்கிடுவ போல! கிளம்பு நந்து, உன்னை விட்டுட்டு நான் கடைக்கு போகனும். கொஞ்ச நேரம் தூங்கி ரெஸ்ட் எடு. லன்ச் கிரேப் ப்பூட்ல ஆர்டர் பண்ணிடறேன். டெலிவர் செஞ்சிடுவாங்க. ஒன்னும் சமைக்க வேண்டாம் இன்னிக்கு” என சொல்லியவள் அவளை கிளப்பி கொண்டு போய் வீட்டில் விட்டான்.

அன்று வேலைகளை ஒதுக்கி வைத்து விட்டு, சின்னவளுக்கு ப்ராமிஸ் செய்த மாதிரியே ப்ளேஸ்கூலில் இருந்து கடைக்கு அழைத்து வந்திருந்தான்..

தனது இடத்துக்கு அழைத்துப் போய் உடம்பு கழுவி விட்டு, வேறு உடை அணிவித்து கீழே கடைக்கு அழைத்து வந்தான் மருமகளை. ஒரு கையில் அவளைப் பிடித்துக் கொண்டு மறு கையில் அவளுக்கான உணவை வைத்துக் கொண்டு ஆபிஸ் அறைக்குள் நுழைந்தான். சுற்றி சுற்றி ஓடியவளை, பேச்சுக் கொடுத்துக் கொண்டே உணவை கரண்டியால் ஊட்டிக் கொண்டிருந்த வேளைதான் கதவு தட்டும் ஓசை கேட்டது.

“கமீன்” என இவன் சொல்ல, கதவைத் திறந்து வந்தவள் முன்னே சடீரென ஓடினாள் சீனி பாப்பா!

குழந்தை திடிரென முன்னே வரவும் அவளை மோதி விடாமல் இருக்க முயன்றவள் கால் இடறி ரிஷியின் முன்னே நெடுஞ்சான்கிடையாக

“மம்மீ” என கத்தியபடியே விழுந்தாள்.

உணவு தட்டை மேசை மேல் வைத்தவன் வேகமாக அவள் புறம் வந்தான். அவள் தோளைப் பற்றி மெல்ல தூக்கியவன்,

“ஆர் யூ ஆல்ரைட் பீரூ(நீலம்)?” என கேட்டான்.

அவனின் நீலம் எனும் அழைப்பிற்கிணங்க அன்று நீல நிற பூக்கள் தூவிய ப்ளவுசும், நீல நிற ஜீன்சும் அணிந்திருந்தாள் சிம்ரன். அதோடு கண்களும் நீலமாகத்தான் இருந்தது.

“ஐம் ஓகே!” என சொல்லி நடக்க முயன்றவள் தடுமாறினாள்.

“இரு, இரு! கால ஒரேடிய அழுத்தி வைக்காத” என சொன்னவன் அவள் தோளை சுற்றி தன் கரத்தைப் போட்டு மெல்ல நடத்திக் கொண்டு போய் சோபாவில் அமர வைத்தான்.

கால் முட்டி இரண்டும் அவ்வளவு வலி கொடுத்தது சிம்ரனுக்கு. இருந்தும் அவன் முன் வலியைக் காட்டாது கெத்தாக இருப்பது போல அமர்ந்திருந்தாள். அவள் முன்னே வந்து நின்ற சின்ன வாண்டு,

“சாரி ஆண்ட்டி, சாரி! சோ சாரி! நான் பாக்கல! சாரி, சாரி” என சொல்லியபடியே கண்கள் இரண்டும் குளம் கட்டி நிற்க பாவமாய் பார்த்தாள்.

தன்னால் தான் ஆன்ட்டி விழுந்து விட்டாள், கண்டிப்பாக அம்மாவைப் போல ஏசுவாள், அதற்குள் அழுது விடலாம் என தனது வேலையை ஆரம்பித்திருந்தாள் சீனி பாப்பா.

குழந்தை அழவும் பாவமாய் போய் விட்டது இவளுக்கு. அவளைத் தூக்கி தன் மடியில் அமர்த்திக் கொண்டாள் சிம்ரன்.

“டோண்ட் க்ரை பேபி! ஆண்ட்டி தான் நீங்க ஓடனதா பார்க்காம வந்து படார்னு விழுந்துட்டேன். என்னோட மிஸ்டேக் தான்! ஐம் அம் சாரி” என அவள் கண்ணீரைத் துடைத்துக் கொஞ்சினாள்.

“ஆமா ஆமா, யுவர் மிஸ்டேக் தான்! சீனி பாப்பா மிஸ்டேக் இல்ல” என தப்பித்துக் கொண்டாள் குட்டி.

“ஓ நீங்க தான் நந்தனாவோட சீனி பாப்பாவா? எங்க சீனி பாப்பா இனிக்குதா பார்ப்போம்!” என சொல்லி சின்னவளின் குண்டு கன்னத்தில் முத்தமிட்டாள் சிம்ரன்.

“எனக்கு ஒரு முத்தம்?” என இவள் பதிலுக்கு கேட்க,

“தேஞ்சர்கு(ஸ்ட்ரேஞ்சர்) முத்தா குடுக்க கூடாதுன்னு அம்மா சொல்லிருக்காங்க! ஆண்ட்டி வேணா குடுங்க!” என மறு கன்னத்தையும் காட்டினாள் அவள்.

ஸ்ட்ரேஞ்சருக்கு கிஸ் கொடுக்கக் கூடாது என புரிந்த குழந்தைக்கு அவர்களிடம் இருந்து கிஸ் வாங்கவும் கூடாது என புரியாத வயதில் குட் டச், பேட் டச், நோ டச் சொல்லிக் கொடுக்க வைத்திருக்கும் காலத்தின் கோலத்தை எண்ணி மனம் வலித்தது சிம்ரனுக்கு.

இருவரையும் அமைதியாக பார்த்தவாறே, முதலுதவி பெட்டியை எடுத்து வந்தான் ரிஷி. அவள் மடியில் இருந்து சின்னவளைத் தூக்கிக் கொண்டவன்,

“எங்க வலிக்குது சிம்ரன்?” என கேட்டான்.

“இல்ல சேகர்.. வந்து நந்தா சார்! வலிலாம் ஒன்னும் இல்ல” என மறுத்தாள் சிம்ரன்.

“அந்த பாக்ஸ்ல தைலம் இருக்கும்! எடுத்துட்டுப் போய் வலிக்கற இடத்துல போடு! போட்டுட்டு கிளம்பு! டேக் தெ டே ஆப்! போய் ரெஸ்ட் எடு!”

மறுக்க வந்தவளை ஆழமாக நோக்கியவன்,

“அடி பலம்னு பார்த்தாலே தெரியுது! எதுக்கு வெட்டி பந்தா! கெளம்புன்னு சொல்றேன்ல!” என லேசாக குரலை உயர்த்தினான்.

“எனக்கு வேலை கன்பர்மா இல்லையான்னு சொன்னீங்கனா நிம்மதியா கெளம்புவேன் நந்தா சார்! நான் ரொம்ப ஓவரா பேசனது எல்லாம் தப்புத்தான். ஆனா ஹீல்ஸ் கழுவ சொன்னது தப்பில்ல! அதுக்கு மட்டும் மன்னிப்பு கேட்க மாட்டேன்! மத்ததுக்கெல்லாம் வெரி சாரி! வெறும் வாயால கேக்கல, மனசால கேக்கறேன்! ஐம் சாரி! பழசெல்லாம் மறந்துட்டு புதுசா, ப்ரெஸ்சா ஆரம்பிக்கலாமா? ப்ரேண்ட்ஸ்?” என எதிர்ப்பார்ப்புடன் மெல்ல எழுந்து நின்று கையை நீட்டினாள் சிம்ரன்.

அவள் நீல கண்களையே சில நிமிடம் பார்த்திருந்தான் ரிஷி. பின் பெருமூச்சுடன் அவள் கையைப் பற்றிக் குலுக்கியவன்,

“ஓகே, ப்ரேண்ட்ஸ்” என சொன்னான்.

அவன் தூக்கி வைத்திருந்த சீனி பாப்பாவும் இவள் முன்னே கையை நீட்டி,

“ப்ரேண்ட்ஸ்!” என சொன்னாள்.

சிரிப்புடன் அவள் கையைப் பற்றிக் குலுக்கி அவளுக்கும் ப்ரேண்ட் ஆனாள் சிம்ரன்.

“ப்ரேண்ட்கு கிஸ் பண்ணலாம்! கம்” என கிட்டே அழைத்தாள் குட்டி.

ரிஷியை நெருங்கி தன் கன்னத்தைக் குழந்தைக்கு காட்டினாள் சிம்ரன். அவளின் நெருக்கமும், அவன் உதட்டருகே வந்த கன்னமும், அவள் வாசனையும் சேர்ந்து குப்பென முகம் சூடேறி வியர்த்துப் போனது ரிஷிக்கு. மனமோ வெட்கமே இல்லாமல்,

“நாங்க சிங்கிள் பசங்க

இப்ப மிங்கிள் ஆக வந்திருக்கோம்

கம்மிட்டட்னு ஸ்டேட்டஸ் மாத்த

சிக்னல் கொடுங்க”

என பாடமுனைந்தது. அதனை தட்டி அடக்கும் நேரம், அவன் உதட்டை லேசாக உரசியபடி போய் தன் கன்னத்தை சின்னவள் முத்தமிட காட்டினாள் சிம்ரன்.

சீனி பாப்பா கொடுத்தாள் முத்தம்,

ரிஷியின் தலைக்கு ஏறியது பித்தம்,

இனி நெஞ்சில் நித்தம் யுத்தம்,

கலங்கிப் போக போகுது இவன் சித்தம்!!!!!!!!

(உருகுவான்!!!!!)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!