UVU – 32(3)

UVU – 32(3)

உயிர் விடும்வரை உன்னோடுதான்

அத்தியாயம் 32-3

“சார், மேடம் காலேஜ் போனாங்க, வீட்டுக்கு வந்தாங்க, தம்பி தங்கச்சியோட ஜாகிங் போனாங்க, அப்புறம் பானி பூரி ரெண்டு ப்ளேட் ரோட்டுக் கடையில சாப்பிட்டாங்க, திரும்பவும் வீட்டுக்குள்ள போயிட்டாங்க.”

கேட்கும்போதே சிரிப்பு வந்தது பிரகாஷிற்கு.

‘மோட்டி, என்னம்மா பாடு படற உடம்ப குறைக்க! அதுக்கப்புறம் பானி பூரி, சமோசா, ஜாங்கிரி இப்படி மொக்கறியே, எப்படிமா குறையும்? ரொம்ப கஸ்டப்படாதடா! நீ இப்படி மோட்டியா, கியூட்டியா இருக்கறது தான் எனக்குப் பிடிச்சிருக்கு. சீக்கிரம் உன் இடத்துக்கே வந்துருவேன். அதுக்கப்புறம் உன்னை துரத்தி துரத்தி லவ் பண்ணறது மட்டும் தான் என் வேலை’

“சார்!” மறுபக்கம் கேட்ட குரலால் தன் கற்பனையில் இருந்து வெளி வந்தான் பிரகாஷ். சென்னையில் அவளைப் பார்த்து பல மாதங்கள் ஓடி விட்டன. நேரில் பார்க்காவிட்டாலும் அவள் வீட்டுக்குள் நடப்பது தவிர, வெளியில் என்னென்ன செய்கிறாள் என்பது அவனுக்கு அத்துப்படி. அவளின் போட்டோக்களும் அவனுக்கு செக்குரிட்டி ஏஜென்சி மூலம், மொபைலுக்கு வந்துக் கொண்டு தான் இருக்கும். அதில் தம்பி தங்கையுடன் சிரித்துக் கொண்டிருக்கும் படத்தை பிரிண்ட் செய்து ஆபிஸ் மேசையில் வைத்திருந்தான். அப்படத்தைப் பார்க்கும் போதெல்லாம் தன் குடும்பம் எனும் உரிமை உணர்வு தோன்றிக் கொண்டே இருக்கும்.

“தேங்க்ஸ் ரவி.” செக்குரிட்டி ஆபிசருக்கு நன்றி சொல்லி காலைக் கட் செய்தான்.

தனது ஜாகையை சென்னைக்கு மாற்ற எல்லா ஏற்பாடுகளையும் கவனித்துக் கொண்டிருந்தான் பிரகாஷ். இங்கிருக்கும் கேலரியை விற்க ஏற்பாடு செய்திருந்தான். கரெக்டான பயர் கிடைக்காமல் விற்பனை தள்ளிக் கொண்டே சென்றது. அதோடு இல்லாமல் சென்னையில் வாங்கி இருந்த வீட்டையும் புதுப்பிக்கும் வேலைகள் இன்னும் நடந்துக் கொண்டிருந்தன. அவன் வாங்கி இருந்த பிஸ்னஸ் பில்டிங், இண்டீரியர் வேலை எல்லாம் முடியும் தறுவாயில் இருந்தது. பிஸ்னஸ் செட் அப் செய்ய வேண்டிய ப்ராசிடர் அவனது வக்கிலால் கவனிக்கப்படுவதால் அமெரிக்காவில் இருக்கும் வேலைகளை முடிக்க முழுமூச்சாக இறங்கி இருந்தான்.

இவ்வளவு பிசியிலும் தம்பிக்கு போன் செய்து தேஜலும், வயிற்றுக் குழந்தையும் எப்படி இருக்கிறார்கள் என மேலோட்டமாக விசாரிக்க மறந்தது இல்லை அவன். அதிக அக்கறைக் காட்டினால், தன் பிள்ளையாய் இருக்கவும் தானே அக்கறைக் காட்டுகிறான் என தம்பி வருத்தப்படுவானோ என்ற நல்லெண்ணத்தில் அதிகம் விசாரிக்க மாட்டான்.

ஆரா மருமகளைக் கண்ணுக்குள் வைத்து தாங்கினார். பேரக்குழந்தை வரவை குடும்பமே சந்தோஷமாக எதிர்பார்த்திருந்தது. எட்டாவது மாதத்தில் அடி எடுத்து வைத்திருந்த தேஜலுக்கு அடிக்கடி தலை சுற்றல் வந்தது. சில பெண்களுக்கு லாஸ்ட் ட்ரிமெஸ்டரில் இப்படி இருப்பது நார்மல் தான் என டாக்டர் சொல்லியிருந்தார். ஜெபீ அவளை மிக கவனமாகப் பார்த்துக் கொண்டான்.

அன்றிரவு ஏசியிலும் வியர்க்க எழுந்து அமர்ந்த தேஜலுக்கு நா வரண்டு போயிருந்தது. கணவனை எழுப்பலாம் என நினைத்தவள், தன் எண்ணத்தைக் கைவிட்டாள். அவனே, இரவெல்லாம் அவளுக்கு கால் பிடித்து விட்டு, தலை பிடித்து விட்டு என பணிவிடைகள் செய்து இப்பொழுதுதான் களைத்து உறங்குகிறான். அவன் தலை முடியை செல்லமாக களைத்து விளையாடியள், கட்டிலை விட்டு மெல்ல எழுந்தாள். டாக்டர் ஐஸ் நீர் குடிக்க கூடாது என தடை விதித்திருந்ததால் ரூமில் இருந்த குளிர் சாதனப் பெட்டியை அகற்றி இருந்தான் அவள் செல்ல மணாளன். கீழே இறங்கி குடித்து விட்டு வரலாம் என மெல்ல சத்தம் செய்யாமல் வெளியேறினாள் தேஜல்.

நான்கு படிகள் இறங்கியவளுக்கு தலை சுற்றி வர விழுந்தவள் அப்படியே படிகளில் உருண்டாள். நினைவு இழக்கும் முன் அத்தான் என அவள் கத்திய கத்தல் அந்த மாளிகையையே உலுக்கி எழுப்பியது.

பலத்த அடிகளுடன் ஐசியூவில் அனுமதிக்கப் பட்ட தேஜலுக்கு ஆப்ரேஷன் மூலம் குழந்தையை பிரசவிக்க வைக்க வேண்டிய கட்டாய நிலை. 8 மாத குழந்தை வேறு. குறைப்பிரசவத்தில் பிறக்கப் போகும் இந்த குழந்தைப் பிழைப்பது கஸ்டம் என வேறு டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள். எப்பொழுதும் போல் அண்ணனுக்கு போன் செய்து அழுதான் ஜெபீ. தம்பிக்காகவும் தம்பி பிள்ளைக்காகவும் இருக்கும் வேலை எல்லாவற்றையும் அப்படியே போட்டு விட்டு ஓடி வந்தான் பிரகாஷ். மனதில் கூட தம்பிப் பிள்ளை என்றுதான் அழைக்கப் பழகியிருந்தான் அவன்.

ஸ்பெசலீஸ்ட் மருத்துவ குழு போராடி தாயையும் சேயையும் காப்பாற்றினார்கள். தேஜலுக்கு இடுப்பு முறிவு ஏற்பட்டிருந்ததால் இடுப்புக்கு கீழ் அசைவு இல்லாமல் போய்விட்டது. பெட் ரெஸ்டிலேயே இருக்க வேண்டும் என டாக்டர்கள் சொல்லி விட்டார்கள். வருடங்கள் எடுத்தாலும் அவள் எழுந்து நடமாட வாய்புக்கள் உள்ளது என கொஞ்சமாக வயிற்றில் பாலை வார்த்தார்கள். ஜெபீ அவளை விட்டு அசையவில்லை.

எலிக்குட்டி சைசில் பிறந்த குழந்தையை ஐசியூ வெளியே இருந்துப் பார்த்ததும் ஆராவே கதறிவிட்டார். அவரை சமாதானம் படுத்தியவன் தானே ஐசியூ உள்ளே சென்றான்.

பிள்ளைக்கு இன்பெக்சன் ஆகிவிடாமல் இருக்க, உடம்பு முழுக்க மருத்துவ உடை அணிந்து ஐசியூவிக்குள் அனுப்பட்டான். தாதி தூக்கிக் கொடுத்தப் பிள்ளையை கை நடுங்க வாங்கியவன் கண்கள் கண்ணீரை சொரிந்தன. தன் பிள்ளை எனும் தந்தைமை உணர்வு தலைத்தூக்கியது அவனுக்கு. தாய்க்கு பிள்ளையைப் பார்க்கும் போது மார்பில் பால் சுரப்பது போல தன் பிள்ளையைப் பார்த்து அவனுக்கு கண்களில் நீர் சுரந்தது.

“சார், பிள்ளையைக் குடுங்க. இன்குபேட்டர்ல வைக்கனும்” பிடுங்காத குறையாக குழந்தையை வாங்கினாள் தாதி.

ஒரு வாரம் ஆகியும் மயக்கத்திலேயே தான் இருந்தாள் தேஜல். அவள் அருகில், இடிந்துப் போய் அமர்ந்திருந்தான் ஜெபீ. தன் சுயநலத்தால் தான் காதல் மனைவிக்கு இந்த நிலைமை என மனம் இடித்துரைக்க மீளா துயரில் இருந்தான் அவன். பிள்ளை இல்லாமல் இருந்திருந்தால் இப்படி அவள் உயிருக்கு ஆபத்து வந்திருக்குமா என பலவாறாக நினைத்துக் கொண்டே இருந்தான். பிள்ளையைக் கூட பார்க்கத் தோணவில்லை, பிடிக்கவில்லை.

இன்குபேட்டரிலே பிள்ளையை வைத்திருந்தாலும், தாய் அல்லது தந்தையின் அருகாமை, சூடு இருந்தால் இன்னும் பிள்ளை சீக்கிரம் வளர்ச்சி அடையும் என சொன்னார்கள் டாக்டர்கள். வளர்ச்சிக் குறைவு மட்டுமே அப்பொழுது பிள்ளைக்கு டையக்னொஸ் செய்யப்படிருந்தது. ஜெபீ வாயைத் திறந்து மறுக்கும் முன்னே, தான் பிள்ளை அருகில் இருப்பதாக கூறினான் பிரகாஷ். ஆரா, ஜெய், ஜெபீ மூவரின் பார்வையும் அவன் மேல் ஆழப் பதிந்தது.
‘இவனுக்கு என்ன ஆச்சு? இந்த அக்கறைக்கு என்ன காரணம்’ என ஆராவும், ‘தம்பி பிள்ளை மேல என்ன பாசம் பாரு!’ என ஜெயும். ‘இதுக்குப் பேருதான், தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்னு சொல்லுறதோ’ என் ஜெபீயூம் நினைத்தார்கள். யார் பார்வையையும் கண்டு கொள்ளாமல், முழுக்க முழுக்க பிள்ளையுடன் இருந்தான் பிரகாஷ். 
தன் நெஞ்சின் சூட்டிலேயே பிள்ளையை வைத்திருப்பான். குட்டியான குழந்தையை எப்படி கையாள்வது என தாதியிடம் கற்றுக் கொண்டவன், அதன் பிறகு குழந்தைக்குத் தேவையானவற்றை அவனே செய்தான். வாய் என்னேரமும் பிள்ளையைப் பியாரி பச்சி என முணுமுணுத்துக் கொண்டே இருக்கும் அவனுக்கு. ஐசியூவில் இருந்து நார்மல் வார்டுக்கு மாற்றியும் குழந்தையை விட்டு அவன் அகலவே இல்லை. இப்படியாக ஒரு மாதம் ஓடியிருந்தது. தேஜல் கண் விழித்திருந்தாலும், எல்லாமே படுக்கையில் என ஆனது. கண் கலங்க, முகம் சுழிக்காமல் மனைவியைக் கவனித்துக் கொண்டான் ஜெபீ. தன் பாவத்தை அவளுக்கு சேவகம் செய்து கழித்தான். ஆராவும், ஜெய்யும் பிஸ்னஸ், பிள்ளைகள் என அல்லாடினார்கள். பிள்ளை தூங்கும் நேரத்தில் போனிலும், ஆன்லைனிலும் தன் வேலைகளை முடிப்பான் பிரகாஷ். சென்னை பிஸ்னஸ் செட் அப், அமெரிக்காவின் இருந்த மிச்ச மீதி வேலைகள், குழந்தை என களைத்து ஒடுங்கிப் போனான் பிரகாஷ். அவனின் ஒரே சந்தோஷம், போனில் வரும் சித்ராவின் படங்களும் அவள் அன்றாட நடவடிக்கைகளும் தான். பிள்ளையை நெஞ்சில் போட்டுக் கொண்டே அவளது படங்களைப் பார்த்து சிரித்துக் கொண்டிருப்பான். கொஞ்சம் சதைப் பிடிக்க ஆரம்பித்திருந்த குழந்தை கூட சித்ரா போலவே இருப்பதைப் போல தோணும் அவனுக்கு. சித்ரா பைத்தியம் முற்றி விட்டது என தனக்குள் சிரித்துக் கொள்வான்.
அப்படியே போய் கொண்டிருந்த நாட்களில் தான் அவனுக்கு அந்த அதிர்ச்சியான போன் கால் வந்தது. சித்ரா கிட்டதட்ட அனாதையான செய்தியைக் கேட்டவன் அதிர்ந்துப் போனான். வாழ்க்கை தங்களுக்கு இன்னும் என்ன வைத்திருக்கிறதோ எனும் பயம் முதன் முதலாக அவனை உலுக்கியது. அவள் அருகில் இப்பொழுது இருந்தே ஆக வேண்டும் என்ற வேகத்தில், பிள்ளையை ராணிம்மாவிடம் ஒப்படைத்துவிட்டு அவள் போயிருப்பதாக சொன்ன பெங்களூருக்குப் பறந்தான்.
அங்கே தங்கள் பிரான்ச்சின் மேனஜரை அழைத்துக் கொண்டவன் அவனுக்குக் கிடைத்திருந்த செய்தியின்படி கவர்மண்ட் ஆஸ்பிட்டலுக்கு சென்றான். கீழே விசாரித்து விட்டு சித்ராவின் பெரியம்மா இருந்த வார்டுக்கு சென்றான். டாக்டரிடம் அவரது நிலைமையை விசாரித்தவன், வேறு ஆஸ்பிட்டலுக்கு மாற்ற விழைந்தான். எங்கு கொண்டு போனாலும் புண்ணியம் இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.
அதோடு இவன் அவர்களின் சொந்தக்காரன் என நினைத்த தாதி, பிள்ளையை இவனிடம் தான் முதலில் கொடுத்தாள். மறுத்துப் பேசாமல் தீபாவைக் கையில் ஏந்தியவன் கண்களில் கண்ணீர். பிறந்த உடனே இத்தனை உறவுகளை இழந்து விட்டதே இந்தக் குழந்தை என மனம் பிசைந்தது. ஏற்கனவே பிள்ளையைக் கையாள கற்றிருந்தவன், மென்மையாக கன்னத்தில் முத்தமிட்டு அதன் பாட்டியின் அருகில் கொண்டு சென்றான்.
கண் விழித்த வள்ளி, கையில் குழந்தையுடன் இவனைப் பார்த்ததும் புரியாமல் விழித்தார்.
“உங்க பேத்தி” என குழந்தையைக் காட்டினான்.
கண்களில் நீர் வழிய பேரப் பிள்ளையைத் தடவிப் பார்த்தார் வள்ளி.
“நீங்க?”
“உங்க குடும்பத்துக்கு வேண்டியவன். கவலைப்படாதீங்கம்மா உங்க பிள்ளைகள நான் பத்திரமாப் பார்த்துக்குவேன்” என தான் சித்ராவைக் காதலிப்பதாகவும் உயிராய் பார்த்துக் கொள்வதாகவும் வாக்குக் கொடுத்தான்.
அவருக்கு ஏதோ புரிந்தது போல கண்களில் கண்ணீர் வழிய அவனைக் கூர்ந்துப் பார்த்தவர் தலையை மட்டும் சரி என்பதுபோல ஆட்டிவிட்டு மீண்டும் மயக்கத்திற்குப் போனார்.
பிள்ளையைக் கையில் சுமந்தவாறு அவர் அருகில் தான் இருந்தான் பிரகாஷ். சித்ரா வரும் அரவம் கேட்டு கொஞ்சம் தூரமாக தள்ளிப் போய் நின்று கொண்டான்.
அழுகையுடனே வந்தவளைக் கண்டவனுக்கு மனம் வலித்தது. கூட இருந்து ஆறுதல் சொல்லி அணைக்கக் கூட உரிமை இல்லாத தன் நிலைமை வெறுப்பாக இருந்தது. அவள் கதறிய கதறலை இவனால் தாங்கவே முடியவில்லை. நெஞ்சம் கணக்க ஒரு நிமிடம் கூட அவளைப் பார்வையில் இருந்து விலக்காமல் பார்த்துக் கொண்டே இருந்தான்.
“முடிஞ்சா இந்தப் பெரிம்மாவ மன்னிச்சிருடா. புள்ளைங்கள பத்திரமா பாத்துக்கடா. இனிமே நீதான் அவங்களுக்கு, அம்மா அப்பா எல்லாம்.” என்ற வள்ளி, பிரகாஷின் மேல் பார்வையைத் திருப்பி, மற்றவர்களுக்கு இவள் தான் அம்மா, அப்பா, ஆனால் இவளுக்கு எல்லாமுமாக இனி நீ இரு என்பது போல பார்த்துவிட்டு,
“நான் போறேன், மாதிகிட்ட போறேன்” என சித்ராவின் மேல் பார்வை நிலைக்க உயிரைவிட்டார்.
“பெரிம்மா” என அவளின் ஓலம் பிரகாஷின் கண்களையும், மனதையையும் கசிய வைத்தது. பிள்ளையைப் பார்த்தாலாவது அவள் அழுகை நிற்காதா எனும் நப்பாசையில் அருகில் இருந்த தாதியிடம் குழந்தையைக் கொடுத்து அவளிடம் சேர்ப்பிக்கச் சொன்னான். 
பிள்ளையைக் கொடுத்த தாதி சித்ராவின் பொருள் விளங்கா பார்வையில்,
“யுவர் பேமிலி பேபி. மார்கழி திங்கள் பேபி” என்றாள். பிரகாஷின் கையில் அமைதியாக இருந்தக் குழந்தை இவள் கை அணைப்பில் மார்பை முட்டவும், கண் கலங்க திரும்பி நின்றுக் கொண்டான் பிரகாஷ். அவள் மடிந்து அமர்ந்து கதறிய கதறலுக்கு எங்கே அங்கேயே நின்றால் தானும் அவளைக் கட்டிக் கொண்டு கதறி விடுவோமோ என பயந்து வேக வேகமாக வெளியேறினான்.
அவனின் மேனேஜரை பாலனிடம் பேச வைத்து அவர்களுக்கு வேண்டிய உதவியைத் தள்ளி இருந்தே செய்தான். தமிழ் பேசிய பிரகாஷின் மேனேஜரின் உதவியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார் பாலன். ராஜேஷும் வெளிநாட்டில் இருந்ததால் புதிய ஊரில் தவித்துப் போய்விட்டார் அவர். பிரகாஷின் மறைமுக உதவியால் உடல்களைக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் சீக்கிரம் கிடைத்தது.
இவன் இங்கே வந்ததும் மும்பையில் குழந்தைக்கு காய்ச்சல் என போன் வரவும், வேறு வழி இல்லாமல் மனம் கணக்க கிளம்பினான்.

மும்பையில் குழந்தையுடன் இருந்தாலும், சென்னையில் நடக்கும் ஒவ்வொன்றும் எப்பொழுதும் போல் அவனுக்கு நியூசாக வந்துக் கொண்டிருந்தது. தன்னவள் சமாளித்துக் கொண்டாள் என அறிந்தவனுக்கு அவளை நினைத்துப் பெருமையாக இருந்தது.
வீட்டுக்குள் ராஜேஷ் அவள் கையைப் பிடித்து இழுத்ததோ, அவள் போக மறுத்ததோ அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. வெளியே தானே ஆள் வைத்திருந்தான், உள் நாட்டுக் கலவரம் எப்படி தெரியும்!
குழந்தை கொஞ்சம் தேறி வந்திருந்தாள், ஆனால் தேஜலுக்கு அப்படியேத்தான் இருந்தது. வீட்டுக்கு அழைத்து வரப்பட்ட பிள்ளை ராணிம்மாவின் கண்காணிப்பில் விடப்பட்டாள். வீட்டில் நிலவிய அசாதரண நிலையில் பெயர் வைக்க கூட யாரும் முயற்சிக்கவில்லை. சித்ரா தன் மகளுக்கு கார்த்திகை தீபா என பெயர் சூட்டி இருக்கிறாள் என அறிந்தவன், ஜெபீயிடம் பேசி இவளுக்கு தீபீகா கப்பூர் என பெயர் வைத்தான். பிறப்புப் பத்திரம் ஜெபீ, தேஜல் பெயரில் தான் இருந்தது. அங்கேயும் மாதி, ராஜேஷ் பெயரில் தான் தீபாவின் பத்திரம் இருந்தது.
பிள்ளை கொஞ்சம் தேறிக் கொண்டாள் என நினைத்த பிரகாஷ் விட்ட வேலையை முடிக்க அமெரிக்கா சென்றான். சில மாதங்கள் வேலை இழுத்து விட்டது. அங்கே இருந்தப்படியே சித்ராவின் பெற்றவர்கள் இன்சுரன்ஸ் அவள் கைக்குக் கிடைக்க உதவினான். அதே போலவே வேலைத் தேடுகிறாள் என அறிந்து அவள் இண்டெர்வியூ சென்றிருந்த பேங்க் வேலை கிடைக்க ஏற்பாடு செய்தான். அந்த பாங்கின் உரிமையாளர் அவனுக்குத் தெரிந்தவர். அதோடு அவனின் பணவரவையும் அந்த பேங்கிலேயே ஆரம்பித்தான். அதற்குள் இன்னும் சில மாதங்கள் ஓடி இருந்தன.
தந்தை இருந்த வீட்டையும், சென்னையில் இருந்து பார்த்துக் கொள்ள முடிந்த இன்வெஸ்ட்மென்டை மட்டும் வைத்து விட்டு மற்றதை எல்லாம் விற்று விட்டு, மீண்டும் அங்கே தான் வருவோம் என அறியாமல் பாய் சொல்லிவிட்டு வந்தான் அமெரிக்காவுக்கு.
பிள்ளையைப் பார்க்க முதலில் மும்பைக்குத்தான் சென்றான். வீட்டில் நுழையும் போதே இருந்த அமைதி அவனுக்கு ஒரு மாதிரியாக இருந்தது.
“ராணிம்மா” அழைத்துக் கொண்டே குழந்தையின் அறைக்குச் சென்றான். குழந்தையைக் காணோம்.
ஓடி வந்தவர்,
“பிரகாஷ், வாப்பா” என வரவேற்றார். முகம் கலவரமாக இருந்தது அவருக்கு.
“பேபி எங்க?”
“அது வந்து பிரகாஷ்” தடுமாறினார்.
அவனின் குரலைக் கேட்டு ரூமுக்கு வந்தார் ஆராதனா.
“வா பிரகாஷ். எல்லாம் நல்லபடியா முடிஞ்சதா?” எனக் கேட்டார்.
ஆமென தலையாட்டியவன்,
“தீபி எங்க மம்மி?” மீண்டும் கேட்டான். அதற்குள் ஜெபீ, ஜெய், சக்கர நாற்காலியில் தேஜல் எல்லோரும் வந்திருந்தார்கள். எல்லோர் முகத்திலும் குற்ற உணர்ச்சி.
“சொல்லுங்க! கேட்கறேன்ல” குரலை உயர்த்தினான். 
“அவள கேர் சென்டர்ல விட்டுட்டோம்” ஆராதனா தான் பதிலளித்தார்.
“ஏன்?” குரலில் பதற்றம்.
“பிறந்து ஆறு மாசத்துக்கு மேல ஆச்சு. கை மட்டும் அசைக்கிறா, ஆனா காலுல எந்த அவைவும் இல்ல. அதான் ஃபுல்லா செக் பண்ணோம். அவளுக்கு மைல்ட் பிவீஎல்(Periventricular leukomalacia) அப்படினு சொல்லிட்டாங்க. அதாவது குழந்தைக்கு மூளையில உள்ள வைட் மேட்டர் பாதிக்கப்பட்டிருக்காம். அதனால நரம்பு சம்பந்தமான குறைபாடு இருக்கும்னு சொல்லிட்டாங்க. குறைப்பிரசவத்துல பொறந்ததனால இப்படி நடந்துருக்கலாம், இல்ல தேஜல் கீழ விழுந்ததனாலயா இருக்கலாம்னு சொல்லிட்டாங்க.“ என்றார் ஆரா.
“என் கிட்ட ஏன் யாரும் சொல்லல? நான் போன் போடறப்ப எல்லாம் பிள்ளை தூங்கறான்னு ஏன் சமாளிச்சீங்க?” கோபம் ஏறியது குரலில்.
“பய்யா, பிள்ளை மேல நீங்க ரொம்ப பாசமா இருக்கீங்க. தாங்கிக்க மாட்டீங்கன்னு தான் சொல்லல.”
“முட்டாளாடா நீ? தாங்கிக்க முடியாது தான், அதுக்குன்னு அப்படியே விட்டுருவியா? என் பிள்ளைக்கு என்ன நடக்குதுன்னு எனக்கு தெரிய வேணாமா?”
அதிர்ந்தார் ஆரா.
“என்னடா நடக்குது இங்க?”
மூவரும் தலைக் குனிந்தார்கள்.
“சொல்லுங்க?”இப்பொழுது கத்துவது ஆராவின் முறையானது.
தயங்கி தயங்கி சொன்னான் ஜெபீ. அப்படியே அமர்ந்துவிட்டார் ஆரா.
“யாரோட கரு முட்டைய பயன்படுத்தினீங்க?” அதிர்ச்சியாக கேட்டார் ஆரா.
“யாரோடதா இருந்தா என்ன? அவ என் மக. மார்லயும் தோளுலயும் போட்டு என் உடல் சூட்ட கொடுத்து காப்பாத்தன என் பியாரி பச்சி. அவள எப்படி நீங்க என் கிட்ட கூட கேட்காம கேர் சென்டர்ல விடலாம்?” மனம் துடிக்க கேட்டான் பிரகாஷ்.
“பிரகாஷ்! அவள வீட்டுல வச்சி நம்மாள பார்த்துக்க முடியாதுடா. அதான் அங்க விட்டோம். அது தான் நல்லதுடா”
“யாருக்கு நல்லது மம்மி? உங்க எல்லோருக்குமா இல்லை குழந்தைக்கா?”
“பிரகாஷ்!”
“இன்னும் அவளுக்கு ஒரு வயசு கூட ஆகல மம்மி. எப்படி உங்களுக்கு மனசு வந்துச்சு, அனாதையா கெர் செண்டர்ல விட? நீ சொல்லுடா ஜெபீ! பிள்ளை வேணும்னு துடிச்சியே, அந்தப் பிள்ளைக்கு குறைன்னதும் கண் காணாம கொண்டு போய் விட்டுட்ட இல்ல? மனசாட்சியே இல்லையாடா உங்களுக்கு? அதுவும் என் கிட்ட இருந்து மறைச்சு!” வெறுத்துப் போனது அவனுக்கு.
“பய்யா! நான் பிள்ளைய பார்ப்பனா இல்ல இவள பார்ப்பனா? என் நிலமைய கொஞ்சம் புரிஞ்சிக்கிங்க” விட்டால் அழுது விடுவான் போல் நின்றிருந்தான். இத்தனைக்கும் சுமந்து பெற்ற தேஜல் வாயைத் திறக்கவே இல்லை. அவள் இருப்பதோ இந்த நிலையில், குறையுள்ள பிள்ளையை தான் எப்படி பார்த்துக் கொள்ள முடியும் என அமைதியாக இருந்தாள்.
“அந்த கேர் செண்டர் அட்ரஸ் குடுங்க. இனி தீபி என் பிள்ள. அவள உறவு கொண்டாடிட்டு யாரும் என் கிட்ட வராதீங்க. இந்த வீட்டுல எனக்கு ஒட்டியிருந்த பந்தம் இத்தோட முடியுது. நான் வரேன்”
கிளம்பியவனைத் தடுத்தார் ஆரா.
“பிரகாஷ், நீ ஒத்தை ஆளு. உன்னால பிள்ளைய பார்த்துக்க முடியாது. நான் குழந்தை நலனுக்குத்தான் இப்படி செஞ்சேன். உனக்காக மறுபடியும் வீட்டுக்கு கூட்டிட்டு வரேன்.”
“போதும் மம்மி. எனக்காக எனக்காகன்னு நீங்க இனி ஒன்னும் செய்ய வேணாம். என் வழிய நான் பார்த்துக்கறேன். ராணிம்மாவ மட்டும் என் கூட கூட்டிட்டுப் போறேன். வேற எதுவும் எனக்கு வேணாம்.” ஆத்திரத்தில் கத்தியவன்,
“ராணிம்மா, என் கூட வருவீங்களா?” என கேட்டான்.
அவர் கண்கள் ஆராவை பார்த்தது. போ என்றார் கண் ஜாடையில்.
“இருப்பா, என்னோட பேக்கை எடுத்துட்டு வரேன் “ என உள்ளே போனார்.
அமர்ந்திருந்தவன் அருகில் வந்த ஜெபீ,
“பய்யா, தீபியோட எக் டோனர் லாஸ்ட் மினிட்ல மாறிபோச்சு. இத்தனை நாளா உன் கிட்ட சொல்ல சந்தர்ப்பம் வரல. அந்த டீடேய்ல்ஸ் உனக்கு இப்ப அனுப்பறேன். வருங்காலத்துல உனக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டா போய் பாரு” என்றான்.
“நல்ல நேரம் பார்த்தடா சொல்லறதுக்கு” ஆத்திரமாக சொன்னவன், வாட்ஸாப்பைப் பார்த்து அதிர்ந்து விழித்தான். அதில் வந்த சித்ராவின் படத்தைப் பார்த்தவனுக்கு இருதயம் ஒரு நிமிடம் நின்று மீண்டும் அதிவேகமாக துடித்தது. அவனின் முழு உயரத்துக்கும் நிமிர்ந்தவன், விட்டான் ஜெபீயை ஒரு அறை. தடுமாறி கீழே விழுந்தான் அவன்.
“பய்யா!”
“பய்யான்னு கூப்பிட்ட கொன்னுப் போட்டுருவேன்டா ராஸ்கல். உனக்காக நான் பார்த்து பார்த்து எல்லாம் செஞ்சதுக்கு, எவ்வளவு பெரிய விஷயத்தை என் கிட்ட இருந்து மறைச்சிருக்க. நீ எல்லாம் ஒரு தம்பியாடா? துரோகி!”
“பய்யா! வேணும்னு மறைக்கல. யாரோடதா இருந்தா என்ன, நம்ம கேட்ட குவாலிபிகேஷன்ல இருந்தாப் பத்தாதான்னு விட்டுட்டேன். அதோட..” அவன் சொல்ல தடுமாறிக் கொண்டிருக்கும் போது, அமைதியாக வந்த வேலையாள்,
“ஜி, உங்களப் பார்க்க ஒருத்தர் வந்துருக்கார். ஆபிஸ்ல போய் விசாரிச்சுட்டு இங்க தேடி வந்துருக்கார்” என்றான் பிரகாஷைப் பார்த்து.
“யார்னு சொன்னாரா?”
“ராஜேஷ்னு சொன்னாரு”
‘ராஜேஷா? அவன் ஏன் என்னைப் பார்க்க வந்திருக்கான். என்னோட நேம் கார்ட் அவன் கிட்ட இருக்குன்னு தெரியும். ஆனாலும் ஏன்?’
“வர சொல்லுங்க”
கோபத்தைக் கட்டுப் படுத்தியவன், வந்தவனை மலர்ந்த முகத்தோடு வரவேற்றான்.
“வாங்க ராஜேஷ். நல்லா இருக்கீங்களா?”
“ஃபைன் பிரகாஷ் சார். உங்க கிட்ட கொஞ்சம் தனியா பேசனும்” அவனை சுற்றியிருந்தவர்களைத் தயக்கமாகப் பார்த்தான்.
“சரி வாங்க” என அவனை ஸ்டடி ரூமுக்கு அழைத்துச் சென்றான்.
அவர்கள் பின்னாலேயே ராணிம்மா, தேநீருடன் வந்தார். ராஜேஷை உபசரித்தவன் அவன் குடித்து முடிக்கும் வரை காத்திருந்தான்.
சித்ராவின் அக்கா கணவன் தன்னை தேடி வந்த நோக்கம் என்ன என இன்னும் அவனுக்குப் புரியவில்லை.
“சொல்லுங்க ராஜேஷ். என்ன விஷயம்? நாம பார்த்து ஒரு வருஷத்துக்கும் மேல இருக்குமா? தீடீர்னு என்னை தேடி வந்த காரணம் என்ன?”
ராஜேஷிடம் பெருத்த தயக்கம். பின் தன்னைத் திடப்படுத்திக் கொண்டவன் கையில் இருந்த மொபைலை திறந்து ஒரு படத்தைக் காட்டினான். அதைப் பார்த்த பிரகாஷ்,
‘இவன் ஏன் தீபா பேபி படத்த என் கிட்ட காட்டறான்?’ என யோசித்தான். மற்ற மூவருடன் இப்பொழுது குழந்தையின் படமும் அவனுக்கு வரும். தன் சித்ராவின் குடும்பத்தில் இந்த குழந்தையும் ஓர் அங்கம் அல்லவா!
“மீட் யுவர் டாட்டர் கார்த்திகை தீபா” என்றான் ராஜேஷ்.
மீண்டுமொரு அதிர்ச்சியில் எழுந்து நின்றான் பிரகாஷ். நெஞ்சை அழுந்தப் பிடித்துக் கொண்டான் அவன்.
“சார், ஆர் யூ ஓகே?” பதட்டமடைந்தான் ராஜேஷ்.
“நீங்க என்ன சொல்லறீங்க ராஜேஷ்” மீண்டும் மீண்டும் கேட்டான் பிரகாஷ்.
ஃபெர்டிலிட்டி செண்டரில் நடந்த பண்டமாற்று வியாபரத்தை விளக்கிய ராஜேஷ் அவமானத்தில் கண்களை மூடிக் கொண்டான்.
“திங்கள் எனக்கு இந்த துரோகத்தை செய்வான்னு நான் நினைச்சுக் கூடப் பார்க்கல. என் மேலயும் சித்து மேலயும் உள்ள கோபத்துல இப்படி நம்ம நாலு பேரோட வாழ்க்கையிலும் விளையாடிட்டா”
தொப்பொன நாற்காலியில் அமர்ந்தான் பிரகாஷ். தீபாவை முதன் முதலாக கையில் ஏந்தியது அவன் நினைவில் வந்தது.
‘இந்தக் குட்டி தேவதையும் என் பொண்ணா? என்னோட இல்ல எங்களோட பொண்ணு! நிறைய புள்ளைக் குட்டிப் பெத்துக்கனும்னு சொல்லுவீங்களே டாடி, விதி எங்கள எப்படி பெத்துக்க வச்சிருக்குப் பார்த்தீங்களா?’ உள்ளுக்குள் குமுறினான்.
முழுதாக தன் கதையை பிரகாஷிடம் சொன்னான் ராஜேஷ். சித்ராவை விரும்பியது, மாதியை குடிபோதையில் அணைத்தது, திருமணம் எல்லாவற்றையும் சொன்னான்.
அதிர்ச்சியாக கேட்டிருந்தான் பிரகாஷ்.
“ட்ரீட்மெண்ட் முடிஞ்சு என் கிட்ட வந்தப்போ ரொம்ப அமைதியா மாறி இருந்தா. ஒரே சிந்தனையா இருப்பா. என்னை எதுக்கும் கோவிச்சிக்கிறது இல்ல. காதல திகட்ட திகட்ட காட்டுனா. எனக்கு ஒன்னும் புரியல. அந்த மாற்றமும் சுகமாத்தான் இருந்தது. ஆனா வளைக்காப்புக்குப் போயிட்டு வந்து பேயாட்டம் ஆடிட்டா. ஏன் சித்ராவ பார்த்த அப்படினு. நான் எதார்த்தமா பார்த்தாக் கூட அவளால தாங்கிக்க முடியல.அப்போதான் கோபத்துல வாய விட்டா திங்கள். நான் சுமக்கறது உன் பிள்ளை இல்ல, எவனோ பிரகாஷ் கப்பூரோட பிள்ளைன்னு. பெரிய சண்டையே நடந்தது அன்னைக்கு. எல்லாத்தையும் சொன்னா. உங்க குடும்பத்துல அதுக்கு ஒத்துக்குட்டாங்கன்னும் சொன்னா. என்னால ஏத்துக்கவே முடியல. எந்த ஆம்பளையால இந்த விஷயத்தை ஏத்துக்க முடியும் சொல்லுங்க?” கண் கலங்கினான் ராஜேஷ்.
“பொறந்த பிள்ளையக் கூட நான் கண் கொண்டு பார்க்கல. என்னால முடியல”
உங்க குடும்பத்துக்கும் தெரியும் என ராஜேஷ் சொன்னது பிரகாஷைப் புரட்டிப் போட்டிருந்தது. தம்பியின் துரோகத்தை அவனால் தாங்கவே முடியவில்லை. தன்னையும் சித்ராவையும் வைத்து விதி விளையாடி இருந்த விளையாட்டை நினைத்து அழுவதா சிரிப்பதா என தெரியவில்லை அவனுக்கு. 
“என் வைப் இறந்தப்ப அவ மேல இருந்தக் கோபத்துலயும், சித்ரா மேல இருந்தா காதலிலும் அவள என் கூட வந்தர சொல்லி கேட்டேன். அவளை மட்டும்!”
பிரகாஷிற்கு இந்த செய்தி அதிர்ச்சியாக இருந்தது.
“சித்ரா என்ன சொன்னா?”
“மூஞ்சில அடிச்ச மாதிரி முடியாதுன்னு சொல்லிட்டா. என்னை அக்கா புருஷனா மட்டும் தான் பார்க்கறேன்னு சொல்லிட்டா”
நிம்மதி பெருமூச்சு வந்தது இவனுக்கு.
பிரகாஷால் இன்னும் நம்ப முடியவில்லை திருமணம் ஆகாமலே தங்கள் இருவருக்கும் இரு குழந்தைகள் இருக்கிறார்கள் என. மனம் ஒரு புறம் லேசாகி பறந்தாலும், மறுபுறம் தீபீயை நினைத்துக் கணத்தது.
“இப்ப ஏன் வந்து உங்க கிட்ட உண்மைய சொல்லறேன்னு நீங்க நினைக்கலாம்.”
கேள்வியாக மட்டும் நோக்கினான் பிரகாஷ்.
“சித்ரா, என் கிட்ட எந்த உதவியும் வாங்கிக்க மாட்டிக்கறா. நாலு பேரும் பைனான்சியலி ஸ்ட்ரகல் பண்ணுறாங்க. இன்சுரண்ஸ் வந்தத கூட பிக்ஸ்ல போட்டுட்டாலாம். பாலன் மாமா சொன்னாரு. இப்போ வேலைக்குப் போறா போல இருக்கு. அவங்க என்ன ஒதுக்கி வச்சாலும் , அவங்க மேல எனக்கு அக்கறை இருக்கு. சித்ரா கல்யாணம் பண்ணி குழந்தை குட்டின்னு வாழனும். அதுக்கு குழந்தை இடைஞ்சலா இருக்கும். வேலை இடத்துலயும், வெளியிலயும் கேக்கறவங்க கிட்ட இல்லாம் புள்ளை இருக்கு, புருஷன் செத்துட்டான்னு சொல்லிடறா. இப்படி சொல்லிட்டு திரிஞ்சா அவளுக்கு எப்படி கல்யாணம் ஆகும்? மறுபடியும் மனசு கேட்காம போய் கேட்டேன், குழந்தைய என் கிட்ட குடுத்துட்டு வேற யாரயாச்சும் கல்யாணம் செஞ்சுக்கோன்னு. முடியாதுன்னு சொல்லிட்டா. இனிமே என் வீட்டு வாசல மிதிக்காதீங்கன்னு கதவை அறைஞ்சு சாத்திட்டா. என்னால போராட முடியல. அதான் குழந்தையோட பயோலோஜிக்கல் அப்பா உங்க கிட்ட வந்தேன். உங்க பிள்ளைன்னு டி.என்.ஏ செஞ்சி அவகிட்ட நிரூபிச்சு நீங்க எடுத்துக்குங்க சார். ப்ளிஸ்! அவ இனியாச்சும் நல்லா இருக்கட்டும்”
“பிள்ளைய நான் எடுத்துகிட்டா அவ சந்தோஷமா இருப்பாளா ராஜேஷ்?” வேண்டும் என்றே கேட்டான்.
“இருக்க மாட்டா. ஆனா அவளுக்குன்னு ஒரு பிள்ளை வந்தா காலப்போக்குல மறந்துருவா”
‘அவள பற்றி நீ புரிஞ்சிகிட்டது இவ்வளவுதானா ராஜேஷ்? தம்பி, தங்கச்சியையே விட்டு தராதவ, புள்ளைய குடுப்பாளா?’
“அவள இன்னும் கல்யாணம் பண்ணிக்கற நோக்கத்துல இருக்கியா ராஜேஷ்?” கொஞ்சம் கடினமாக வெளி வந்தது குரல்.
“இல்ல சார். அவள கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். அவ மேல காதல் வச்சிருந்தது உண்மைதான். அவ தனிச்சி நிக்கவும், காதல் தலை தூக்கி அவள என் கூட கூப்பிட்டதும் உண்மைதான். ஆனா இப்போ யோசிச்சுப் பார்க்கறப்போ, அவள நான் கல்யாணம் செஞ்சா என்னை பைத்தியம் மாதிரி காதலிச்ச திங்களுக்கு நான் செய்யற துரோகமா படுது. அவ எனக்குப் பண்ணது எல்லாம் துரோகம் தான், ஆனா திங்கள் என் மேல வச்சிருந்த காதல் உண்மை. அந்தக் காதல அவ தங்கச்சியையே கட்டி, நான் கொச்சைப்படுத்த விரும்பல. அவசரத்துல அவ கையப் பிடிச்சி இழுத்தத நினைச்சி நான் வருந்தாத நாள் இல்ல சார்”
“அப்போ நீங்க இப்படியே இருந்துருவீங்களா ராஜேஷ்?”
“கொஞ்ச காலம் போகட்டும் சார். என் மன ரணம் ஆறட்டும். கண்டிப்பா ஒருத்திய கல்யாணம் செஞ்சிக்குவேன். ஆனா அது சித்ரா கிடையாது. இப்ப சொல்லுங்க, உங்க பிள்ளைய எடுத்துகிட்டு சித்ராவுக்கு நல்ல வாழ்க்கை அமைய வழி செஞ்சு குடுப்பீங்களா?”
மெல்ல சிரித்த பிரகாஷ்,
“என் வாழ்க்கையே அவதான் ராஜேஷ். பிள்ளைங்களுக்கும் எனக்கும் அவ தான் வாழ்க்கை குடுக்கனும். அவ கூட வாழ்ந்தா இந்தப் பிரகாஷ் உயிர்ப்பா இருப்பான், இல்லைனா வெறும் உயிரோட தான் இருப்பான்”
(தொடர்ந்து உன்னோடுதான்)

Comments Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!