UVU28

UVU28

“ஹே சிமி! ஏன் அழற? என்னாச்சு?” பதறினான் பிரகாஷ்.

அவள் கண்களில் விடாமல் கண்ணீர் வழிவதை காண பொறுக்காதவன், துடைப்பதற்காக இன்னும் நெருங்கினான்.

“அங்கயே நில்லுங்க மிஸ்டர் பிரகாஷ் கப்பூர்!”

மிஸ்டர் எனும் வார்த்தையில் ஆணி அடித்தது போல அப்படியே நின்றான் அவன்.

“என்ன பேசற சிமி!” குரலில் கோபமும் வருத்தமும் சரி பங்கு கலந்திருந்தது.

தன் கையில் இருந்த கவரை அவன் முன் ஆட்டியவள்,

“நாடகம் முடிஞ்சு, கேர்ட்டனையும் இறக்கியாச்சு. இனி நடிக்கத் தேவையில்ல” தேம்பியபடியே சொன்னாள்.

கவரைத் தன் நெஞ்சில் அணைத்துக் கொண்டவள்,

“எப்படி இது சாத்தியம்? எப்படி? எப்படி? என்ன யோசிச்சும் எனக்குப் புரியலையே. எங்க நடந்த தப்பு இது?” தனக்குள்ளேயே பேசியபடி கண்களில் நீர் வழிய குறுக்கும் நெடுக்கும் நடந்தாள்.

கவரைப் பார்த்தவன் முகத்தில் சொல்லொண்ணா துயரம். இந்த ட்ரிப் முடியும் போது அவனே அவளிடம் சொல்வதற்கு தான் இருந்தான். அதற்கு தான் இந்தப் பத்திரத்தை எடுத்து வந்திருந்தான். அதிர்ச்சிக்கு அவளைத் தயார் படுத்தி பதமாய் சொல்ல நினைத்த விஷயம், இந்த மாதிரி அவளுக்குத் தெரிய வரும் என நினைக்கவில்லை. பெர்சனல் விஷயங்களில் மூக்கை நுழைக்காத சித்ராவின் குணம் தெரியுமாதலால் இந்தக் கவரை அவள் எடுத்து பார்க்க சாத்தியமில்லை என அசட்டையாக இருந்துவிட்டான். கீழே இறைந்து கிடந்தப் பத்திரங்களைப் பார்த்தவன் தீபாவின் வேலை என்பதை புரிந்துக் கொண்டான்.

“சிமி, அழாதே ப்ளிஸ். லெட் மீ எக்ஸ்ப்லேய்ன்!” அழுபவளை, நெருங்காமல் எப்படி சமாதானப் படுத்துவது என தெரியவில்லை அவனுக்கு. எதையும் சமாளிப்பான் பிரகாஷ், அழும் தன் சித்ராவைத் தவிர.

அதற்குள் சித்ராவின் காலைக் கட்டிக் கொண்ட தீபாவும் அழ ஆரம்பித்திருந்தாள்.

“அம்மா, இனிமே பிகாஷோட பேப்பர்லாம் எடுக்க மாட்டேன். அழாதீங்க! தீபாவும் அழுவேன்”

அழும் தீபாவை தூக்க வந்தான் பிரகாஷ். அவனை முறைத்தவள், கண்களைத் துடைத்துக் கொண்டு தானே தூக்கிக் கொண்டாள்.

“தீபா என் மகள். உனக்குப் புரியுதா? என் மகள்! யார் கூடவும் அவள நான் பங்குப் போட்டுக்க மாட்டேன். ஐயோ, எனக்கு மண்டையே வெடிக்குது. எப்படி நடந்துச்சு இது?”

அழுகையிலும், அதிர்ச்சியிலும் பிள்ளையோடு தடுமாறியவளை இறுக அணைத்துக் கொண்டான் பிரகாஷ்.

“டோண்ட் டூ திஸ் டு அஸ் சிமி. ப்ளிஸ்மா! என்னோட நியாயத்தக் கேட்காம என்னைத் தண்டிச்சிறாதடா!” அவன் கண்களும் கலங்கியது.

தன் துக்கம் தீர அவன் நெஞ்சிலேயே சாய்ந்து அழுதவள், மகள் பயப்படுவதைப் பார்த்து கஸ்டப்பட்டு தன்னை சமாளித்துக் கொண்டாள். அவனை விட்டு விலகியவள்,

“ஐ நீட் டைம்! இதை ஜீரணிக்க எனக்கு டைம் வேணும் பிரகாஷ்.”

அதற்குள் ரூம் கதவைத் தட்டும் சத்தமும்,

“அக்கா, ரெடியா? சீக்கிரம் வாங்க. பசிக்கிது” மணியின் குரலும் கேட்டது.

கண்களை இன்னும் நன்றாகத் துடைத்தவள்,

“இரு மணி. உங்க ஜீஜூ குளிக்கிறாரு. டேன் மினிட்ல வரோம்” என்றாள்.

பின் பிரகாஷைப் பார்த்தவள்,

“கிளம்புங்க ! இந்த விஷயம் நமக்குள்ள இருக்கட்டும். இவங்க மூனு பேராச்சும் சந்தோஷமா இருக்கட்டும்.” என சொன்னபடியே தீபாவுக்கு உடை மாற்ற ஆரம்பித்தாள்.

அவளின் சோக முகத்தைப் பார்க்கவே இவனுக்கு தாளவில்லை. அவளை அப்படியே அணைத்து கைவளைவிலேயே நிறுத்தி, நீ மட்டும் தான் என் உலகம் என கதற வேண்டும் போல் துடித்தது அவனுக்கு. அதற்கான நேரம் இதுவல்ல என்ன அமைதியாக ரெடியாகி வந்தான்.

அவள் மனதில் என்ன ஓடுகிறது என அவனால் புரிந்துக் கொள்ள முடிந்தது. அதோடு மேலும் ஒரு ரகசியத்தை அவளிடம் சொல்லும்போது என்ன ஆகுமோ என மனம் இப்பொழுதே தவிக்கத் தொடங்கியது.

“சிமி!”

“ஹ்ம்ம்”

“என்ன நடந்தாலும், என்ன ஆனாலும் உன்னை சின்சியரா லவ் பண்ணித்தான் கல்யாணம் செஞ்சிக்கிட்டேன்னு நம்புவியா சிமி?”

“நம்பனேன். நீதான் எல்லாம்னு நம்பனேன். எனக்கே எனக்கானவன், எனக்காகவே வந்தவன்னு நம்புனேன் பிரகாஷ். ஆனா எல்லாமே தீபாவுக்காக தான்னு நினைக்கறப்ப, என்னால தாங்கிக்க முடியலை. பிள்ளைக்காக வந்தவன், ஏன்டா என்னைக் காதலிக்கறேன்னு சொன்ன? எதுக்கு என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட? ஏன்டா என்னை தொட்ட? நாளை நமக்கு இல்லைங்கற மாதிரி ஏன்டா என்னைக் கொஞ்சினே? சொல்லு, ஏன்?” கண்களில் மீண்டும் கண்ணீர் உடைப்பெடுத்தது.

பின் ஏதோ நினைத்துக் கொண்டவள்,

“நீயா என்னைத் தொடல இல்ல! நானாதான் வான்டேட்டா என்னைக் குடுத்தேன். அந்த விஷயத்துல நீ நல்லவன் தான்டா. விஷயம் தெரியறப்ப முழுசா உன்னை குற்றவாளியாக்க முடியாதபடி அழகா மூவ் பண்ணியிருக்க.” தனக்குள்ளே சன்னமாகப் பேசிக் கொண்டாள்.

“சிமி, சிமி!. அப்படிலாம் பேசாதே சிமி ப்ளிஸ். நீதான் சிமி எனக்கு முதல்ல. நம்பு சிமி” தவித்தான் பிரகாஷ். மீண்டும் அணைக்க வந்தவனை,

“இனிமே என்னைத் தொடாதே பிரகாஷ்! நீ தொட்டா என்னால சிந்திக்க முடியாது. இப்போ நான் நிறைய யோசிக்கனும். நிறைய முடிவுகள எடுக்கனும். அதனால என்னை பலவீனப்படுத்தாத பிரகாஷ்.” அவளது ப்ரௌனியும், கப்பூரும் காணாமல் போயிருந்தது.

மனம் கணக்க, அழும் அவள் முகத்தையே கண் இமைக்காமல் பார்த்திருந்தான் பிரகாஷ்.

மீண்டும் மணி அழைக்கும் குரல் கேட்கவும்,

“வரோம் மணி” என்றவன், அவளைப் பார்த்து,

“போய் முகத்தை கழுவிட்டு, கொஞ்சம் பவுடர் போட்டுட்டு வா சிமி. ” என்றான். தலையை ஆட்டியவள் பாத்ரூமை நோக்கி சென்றாள்.

அவளுக்குள் ஒரே குழப்பம். அந்த கவரில் இருந்த டி.என்.ஏ முடிவுகள் தீபா பிரகாஷின் மகள் என உறுதிப்படுத்தியிருந்தது.

‘ஃபெர்டிலிட்டி ஹாஸ்பிட்டலில் ஏதாவது தப்பு நடந்திருக்குமா? அது தெரிந்து பிள்ளையை தேடி வந்திருக்கிறானா? அப்படி வந்தவன், ஏன் உண்மைய சொல்லாம என்னைக் கல்யாணம் செஞ்சிகிட்டான்? தீபா என் கருமுட்டையிலும், அவனோட விந்தணு மூலமா வந்தவளா? ராஜேஷும் விந்தணு குடுத்தானே! மாதி சுமந்தது யாரு பிள்ளைய?’ நினைக்க, நினைக்க தலை விண் விண்ணென தெறித்தது.

‘வேணாம்! எதுவும் நினைக்காதே மனமே. பொறுமையா இரு. அவசரப்பட்டு இப்போ எதையும் கேட்க வேணாம். விஷயம் பெருசா இருந்தா தனியா ஒளிஞ்சி அழ கூட இங்க எனக்கு வாய்ப்பு இல்ல. அதோட இருக்கறது வெளி நாட்டுல. பிரகாஷை எதிர்த்து இங்க என்னால எதுவும் செய்ய முடியாது. நம்ம நாட்டுல தான் நமக்கு பலம் அதிகம். அது வரைக்கும் பொறுப்போம். என்ன ஆனாலும் தீபா என் மக.’ முயன்று மனதைக் கட்டுப்படுத்தினாள்.

பாத்ரூமில் இருந்து வெளியே வந்தவளை ஓரக்கண்ணால் பார்த்திருந்தான் பிரகாஷ். பவுடர் போட்டிருந்தாலும், கண்களின் சிவப்பு அப்படியே இருந்தது.

மகளைத் தூக்கிக் கொண்டவனை ஆழ்ந்துப் பார்த்தாள் சித்ரா. இருவருக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை கலரைத் தவிர.

‘எப்படி, எப்படி?’ மீண்டும் மனம் முரண்டியது. உரிமைப் போராட்டம் தலை தூக்கியது. பிள்ளையைக் கொடுக்க சொல்லி கையைநீட்டினாள். அவள் மனம் படும் பாட்டை அறிந்தவன், ஒன்றும் பேசாமல் மகளை அவளிடம் கொடுத்தான்.

நிலாவும், மணியும் வளவளத்தப்படி வர இவர்கள் மூவரும் அமைதியாகவே ஹோட்டல் ரெஸ்டாரண்டுக்கு சாப்பிட சென்றனர். எப்பொழுதும் சாப்பிடும் போது, தீபாவை இவள் பார்த்துக் கொள்ள, பப்பே(buffet) வகையில் அடுக்கப் பட்டிருக்கும் உணவு வகைகளை பிரகாஷ் தான் எடுத்து வந்துக் கொடுப்பான். இன்று மகளுக்கு மட்டும் ஊட்டியவள், அவன் கைப்பட்ட பதார்த்தங்களைத் தொட்டும் பார்க்கவில்லை. இவனும் அவளையேத் தான் கவனித்துக் கொண்டிருந்தான். அவளது உண்ணாவிரதத்தைப் பார்த்து அவனும் சாப்பிடவில்லை.

“அக்கா, சாப்பிடல?” நிலா தான் கேட்டாள்.

“எனக்கு வயிறு சரி இல்ல நிலா. இங்க சாப்பாடு ஒத்துக்கல. மூனு வேளை சாப்பிடாம இருந்தா சரியா போயிரும்”

‘மூனு வேளை சாப்பிடாம இருப்பியா?’ முகம் இறுகியது பிரகாஷிற்கு.

“ஜீஜூ! நீங்க ஏன் சாப்பிடல? உங்களுக்கும் வயிறு சரி இல்லையா?”

“உங்க அக்கா சாப்பிடாம நான் எப்படி சாப்பிடுவேன்? சுகதுக்கத்துல கூட இருப்பேன்னு ப்ராமிஸ் பண்ணியிருக்கேனே! பட்டினியிலும் கூட இருப்பேன்” விளையாட்டாக சொன்னாலும் உறுதி இருந்தது குரலில். நிமிர்ந்து ஒரு செகண்ட் அவனை நோக்கியவள், ஒன்றும் சொல்லாது அவனுக்குப் பிடித்த மாதிரி காபியை க்ரீமர் மிதக்காமல் மிக்ஸ் செய்து அவன் புறம் நகர்த்தினாள். அவனும் பால் கிளாசை அவள் புறம் நகர்த்தி வைத்தான். பாலை அவள் அருந்த ஆரம்பிக்கவும் தான் காபியை அவனும் எடுத்துக் குடித்தான்.

நிலா இருவரையும் ஜாடையாக கவனித்துக் கொண்டுதான் இருந்தாள். ஏதோ சண்டை என்பது வரை புரிந்தது. சண்டையிலும் ஒருவர் மேல் மற்றவர் வைத்திருந்த அக்கறையைப் பார்த்தவள் உள்ளுக்குள்ளேயே சிரித்துக் கொண்டாள். எந்தப் பிரச்சனையா இருந்தாலும் இருவரும் அழகாக, ஒற்றுமையாக சமாளிப்பார்கள் என உணர்ந்தவள், நிம்மதியாக சாப்பிடும் வேலையைப் பார்த்தாள்.

லோக்கல் பிளேன் எடுத்து டிஸ்னிலேண்ட் செல்வது தான் இன்றைய பிளான். சிவாவும் அங்கே வந்து இவர்களுடன் சேர்ந்து கொள்வது என ஏற்கனவே முடிவெடுத்திருந்தார்கள். ப்ளேன் டிக்கேட், டிஸ்னிலேண்ட் பார்க் டிக்கேட், இரண்டு நாள் தங்க ஹோட்டல் ரிசர்வேஷன் என எல்லாம் ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்ததால், இருவரும் முகத்தில் எதையும் காட்டாமல் பயணத்துக்கு ரெடியாகினர். என்னப் பிரச்சனை என்றாலும், தீபாவின் ஆசை முக்கியம் என இருவருமே அமைதி காத்தனர்.

ஏர்போர்ட்டில் இருந்த கார் வாடகை சென்டரில், காரை ஒப்படைத்துவிட்டு அவர்கள் ப்ளைட் ஏறினார்கள். ஏர்போர்டில் இவர்கள் இறங்கும் போது, ஏற்கனவே சிவா வந்து காத்திருந்தான். லக்கேஜை வைத்துவிட்டு , ரிப்ரெஷ் ஆக நேராக டிஸ்னிலேண்ட் ஹோட்டலுக்கு சென்றார்கள். ஆண்கள் மூவரும் ஒரு ரூமும், பெண்கள் மூவருக்கும் ஒரு ரூம் என புக் செய்திருந்தார்கள். மனைவியையும் மகளையையும் திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே தனதறைக்கு சென்றான் பிரகாஷ். சித்ரா அவன் பார்வையை உணர்ந்தும் நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.

அன்று முழுக்க தீம் பார்க்கை சுற்றோ சுற்று என சுற்றினார்கள். இவர்கள் இருவரின் பிணக்கை உணர்ந்திருந்த நிலா, தீபாவையும் மணியையும் தன்னுடனே வைத்துக் கொண்டாள். 

“என்னாச்சு உங்க மாம்ஸுக்கும் அக்காவுக்கும்? ரெண்டு பேர் முகமும் சிரிச்ச மாதிரி இருந்தாலும், அனல் இங்க வரைக்கும் அடிக்குதே?” கேட்டான் சிவா.

“கல்யாணம் முடிஞ்சி பர்ஸ்ட் சண்டை. ஆனாலும் லவ் ஸ்டில் ஆன் தெ ஏர்(air). அவரு பார்க்காதப்ப இவ பார்த்து பீல் பண்ணறதும், அவ பார்க்கதப்ப இவர் பார்த்து பெருமூச்சு விடறதும், அட! அட! கவிதைப்பா. ரெண்டும் வெறும் லிக்குயூட் டயட்ல இருக்குதுங்க. அவ தண்ணி குடிச்சா தன் இவரு குடிக்கறாரு. ஓவரா செய்றாங்கடா! எனக்கு கண்ணு வேர்க்குது”

“தோ வைசி! இவங்கள பார்த்து நீ ஓவரா கற்பனை எல்லாம் வளர்த்துக்காத. அவங்க வேற நாம வேற. அந்தக் கப்புரூ ரெஞ்சுக்கு நான் கவுந்து கிடப்பேன்னு நீ கனவுல கூட நினைக்கக் கூடாது. நான், ரெண்டும் ஒன்னும் கூட்டுன நாலு வரும்னு சொன்னா, ஆமாங்கத்தான்னு ஒத்துக்கனும். அத விட்டுப்புட்டு உங்கக்கா மாதிரி ரவுசு விட்ட, அப்புறம் நடக்கறதே வேற. இப்பவே முடிவு எடு, கண்ணகி சிலையா? கண்ணம்மா பேட்டையா?” என வம்பிழுத்தான்.

அவன் குமட்டிலேயே குத்தியவள்,

“நான், எங்கக்காவ விட ட்ரீப்பள் ரவுசு. நீ முதல்ல முடிவு எடு கல்யாண மேடையா, இல்ல உயிரோட சமாதியான்னு? யாருகிட்ட!” முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

“ஏய் வைசி. சும்மா சொன்னேன்டி. உடனே முகத்த தூக்கி வச்சிக்காதடி. என் பக்லாவா இல்ல, என் மூன் கேக் இல்ல, என் சின்னமென் ரோல் இல்ல” கொஞ்சினான்.

“அதான் இல்ல, இல்லன்னு சொல்லிட்டியே! நான் தெரியாம தான் கேக்கறேன், கொஞ்சும் போது கூட பன்னு, பிரெட்டு , கேக்குன்னு தான் கொஞ்சுவியா?”

“உனக்காக தானேடி நான், இந்த படிப்பையே எடுத்து படிச்சேன். சின்ன புள்ளையில இருந்தே இனிப்புக்கு நீ அடிமை, உனக்கு நான் அடிமை. உனக்கு புடிச்சத நானே செஞ்சு குடுக்கனும்னு நினைச்சேன். அது என்னை அமெரிக்காவுல கொண்டு வந்து நிறுத்திருக்கு.”

ஆசையாக அவனை அணைத்துக் கொண்டாள் நிலா.

“ஹ்ம்கும்! என்ன நடக்குது இங்க? இன்னும் ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகல. ஞாபகம் இருக்கட்டும்” தீபாவுடன் டாய் ஸ்டோரி ராட்டின ரைட் போய் விட்டு வந்த மணி அவர்களைப் பிரித்துவிட்டான்.

அவர்களைத் தள்ளி நாற்காலியில் அமர்ந்திருந்த பிரகாஷ்,

“சிமி! யார தண்டிக்கறதுக்கு இப்படி பட்டினியா இருக்க? என்னையா? அப்படின்னா நீ ப்லையிங் கலர்ல பாஸ் ஆகிட்டடி. உன்னோட ஓய்ந்து போன தோற்றத்தை என்னால கண் கொண்டு பார்க்க முடியல சிமிம்மா. ப்ளிஸ், சாப்பிடு. இப்போதைக்கு எல்லாமே என் தப்பாவே இருக்கட்டும். தப்பு செஞ்சவன் நான் வேணும்னா பட்டினியா இருக்கேன். நீ எதுக்கு இருக்கனும்? வேணாண்டா ப்ளிஸ்! சாப்பிடு சிமி.” உணவுப் பொட்டலைத்தைக் கையில் வைத்துக் கொண்டு கெஞ்சிக் கொண்டிருந்தான் பிரகாஷ்.

வேண்டாமேன தலையைத் திருப்பிக் கொண்டாள். அந்த செய்கையே மயக்கம் வருவது போல் இருந்தது அவளுக்கு. அவனின் கைகளை அழுந்தப் பற்றிக் கொண்டாள்.

“என்னடி பண்ணுது?” பதட்டமானான் பிரகாஷ்.

ட்ராவல் செய்தது, இரவு கண் விழித்தது, மன அழுத்தம், பட்டினி எல்லாம் சேர்த்து அவளுக்கு கண்ணைக் கட்டியது. இருந்தாலும் பிடிவாதமாக இருந்தாள்.

“சிமி, இன்னியோட எல்லா விஷயத்தையும் சொல்லிருறேன். இங்க வரும் போது, உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்குன்னு சொன்னேனே, ஞாபகம் இருக்கா. கடைசி நாள் கூட்டிப் போகலாம்னு நினைச்சேன். நீ செய்யறத பார்த்த அது சரிப்படாது போல. இன்னிக்கு நைட் நீ மட்டும் என் கூட வா. உனக்கு எல்லாமே புரியும்! இப்போ, வாய திற. நான் சாப்பாடு குடுக்கறேன்.”

மீண்டும் முடியாது என தலையாட்டினாள்.

“இன்னிக்கு நான் காட்டப் போற விஷயத்தை தாங்கிக்க உனக்கு தெம்பு வேணும் சிமி. ப்ளிஸ்!”கெஞ்சி கெஞ்சி உணவை ஊட்டினான்.

கண்ணில் நீர் வழிய சாப்பிட்டவள், பாதி உணவில் நிறுத்திக் கொண்டாள்.

“நீ சாப்பிடு கப்பூரு”

பிரகாஷின் கண்களில் அப்பொழுதுதான் ஒளி வந்தது. கப்பூர் என கூப்பிட்டு விட்டாளே!

“என்ன பார்க்கற! நீ தீபாவுக்காக கல்யாணம் செஞ்சிகிட்ட, நான் என் கூட பொறந்தவங்களுக்காக கல்யாணம் செஞ்சிகிட்டேன். உன்ன விட நான் எந்த வகையில உசத்தி, உன் கிட்ட கோவிச்சிக்க? அப்புறம் ஏன் பட்டினி கிடந்தேன்னு யோசிக்கிறயா? பட்டினியா இருந்தா தான் எனக்கு ஒழுங்கா யோசிக்க வரும். அதுக்குத்தான். எதுக்காக கல்யாணம் நடந்துருந்தாலும், நீ காட்டுன காதல்ல பொய் இல்லை ப்ரௌனி. இப்போ நான் உன் மேல வச்சிருக்கற காதலும் பொய் இல்ல. கண்டிப்பா உனக்கு ஏதோ காரணம் இருக்கும்னு தோணுச்சு. அதை தான் இவ்வளவு நேரமா யோசிச்சிட்டு இருந்தேன். விஷயம் தெரிஞ்சப்ப கோபத்துல கண்டதையும் பேசிட்டேன். என்னை மன்னிச்சிரு ப்ரௌனி. இப்போ நான் ரெடியா இருக்கேன். அமைதியா நீ சொல்லுறத கேட்க ரெடியா இருக்கேன். அதுக்கு முன்ன, சாப்பிடு”

உணவு பொட்டலத்தைக் கீழே வைத்தவன், அவளை இறுக அணைத்துக் கொண்டான்.

“நீ கண்டிப்பா என்னை புரிஞ்சிக்குவேன்னு தெரியும் சிமி. உன்னால யாரையும் வெறுக்கவும் முடியாது, ஒதுக்கவும் முடியாது. நீ என் வாழ்க்கையில வந்தது நான் செஞ்ச மாதவம்”

அன்றிரவு தீபாவை மற்றவர்களிடம் விட்டு விட்டு, இவர்கள் இருவர் மட்டும் காரில் பயணித்தனர்.

“சிமி, பீ ஸ்ட்ரோங். இந்த விஷயத்தை என் வாயால சொல்லறத விட நீயே பார்க்கறது தான் நல்லது. இவ்வளவு நாளா ஏன் மறைச்சேன்னு பிறகு சொல்லுறேன். அங்க வந்து அழ கூடாது. புரியுதா?”

குழந்தைக்கு சொல்வது போல சொல்லிதான் கூட்டி சென்றான். கார் லாஸ் ஏஞ்சலஸ்சில் இருந்த அந்த விஸ்தாரமான வளாகத்துக்குள் நுழைந்தது. பி.வி.எல் தெராபி சென்டர் என பெயர் பொறிக்கப் பட்டிருந்த அந்த இடத்தை பயத்துடன் பார்த்தாள் சித்ரா. ஏதோ ஒரு ஹாஸ்பிட்டல் வளாகம் போல் இருந்தது.

“இங்க யார் இருக்கா பிரகாஷ்?” நடுக்கத்துடன் கேட்டாள் சித்ரா.

“பயப்படாதே சிமி. இரு இப்போ கூட்டிட்டு வருவாங்க” அவள் கையை இறுகப் பற்றிக் கொண்டான்.

“தாஜி, ம்மா” என சந்தோஷத்தில் கத்திக் கொண்டே சக்கர நாற்காலியில் வந்த அந்தக் குழந்தையைப் பார்த்ததும் சித்ரா அப்படியே சரிந்து கீழே அமர்ந்தாள். அவளோடு தானும் கீழே முட்டிப் போட்டு அமர்ந்த பிரகாஷ், முகத்தில் சிரிப்புடன் வந்த குட்டி சித்ராவை வாரி அணைத்துக் கொண்டான்.

“மேரி பியாரி பச்சி” மகளை உச்சி முகர்ந்து முகம் எங்கும் முத்தமிட்டான் பிரகாஷ்.

அச்சு அசல் சித்ராவையே உரித்து வைத்திருந்த சின்னவள்,

“தாஜி, தாஜி. மிச்சூ, மிச்சூ” என அவனை கட்டிக் கொண்டாள்.

அவர்களின் பாச பிணைப்பைப் பார்த்து கண்களில் நீர் வழிய உறைந்து போய் அமர்ந்திருந்தாள் சித்ரா.

மெல்ல அவளை அசைத்தவன்,

“சிமி, மீட் அவர் டாட்டர் தீபிகா கப்பூர்” என்றான்.

(தொடர்ந்து உன்னோடுதான்)

Comments Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!