முகம் சிவக்க, தன் எதிரே நின்றிருந்த ரோவனை ஆசை தீர ஒரு முறை பார்த்தாள் ஆராதனா.
“வெல்கம் டூ இந்தியா ரோவன். எப்படி இருக்கீங்க?”
“பேச்ச மாத்தாத பேபி! ஹவ் குட் யூ டூ திஸ் டு மீ?”
“ஏன் ரோவன்? ஏன் இந்த கோபம்? உங்களுக்கு இருக்கற கேபசிட்டிக்கு நீங்க எத்தனைப் பிள்ளைங்க வேணும்னாலும் பெத்துக்கலாமே! நீங்க வேணாம்னு ஒதுக்கன இந்த ஆரா பெத்த பிள்ளை மேல ஏன் இவ்வளவு அக்கறை?” மனதைக் கல்லாக்கி கொண்டு கேட்டாள்.
“பிகாவ்ஸ் ஐ லவ்ட் யூ. என் காதலுக்கு கிடைச்ச பரிசு அவன். அவன் வாழ்க்கையில நான் இருக்கனும். அப்பன் பெயர் தெரியாத பிள்ளையா அவன் வளர கூடாது”
ஐ லவ்ட் யூ எனும் வார்த்தை அவளை இன்னும் ராட்சசியாக மாற்றியது. அதாவது காதலித்தேன் என பாஸ்ட் டென்ஷில் சொன்னது அவள் மனத்தை அறுத்திருந்தது. தான் மட்டும் இன்னும் அவனையே நினைத்திருக்க இவன், தன்னை மறந்து வாழ ஆரம்பித்து விட்டானே என கோபம் எழுந்தது.
“பிரகாஷ் என்னோட மகன். அவனை சுமந்து கஸ்டப்பட்டப்ப யாரோட உதவியும் இல்லாம எல்லாத்தையும் தனியா தாங்கனவ நான். அவன் எனக்கு மட்டுமே சொந்தம். சந்தோசத்தை மட்டும் என் கூட அனுபவிச்சுட்டு, கஸ்டத்தை என்னை தனியா தாங்க வச்ச உங்களுக்கு அவனை மகன்னு கூப்பிடற அருகதையே இல்ல” வார்த்தைகள் தடித்து விழுந்தன.
அவளது பேச்சைக் கேட்டு கைத்தட்டியவன்,
“ப்ராவோ ஆரா ப்ராவோ! எப்படி , எப்படி, கஸ்டத்தை தனியா தாங்க வச்சேனா? இந்த விஷயத்தை என் கிட்ட சொல்லி இருந்தா இந்தக் கஸ்டமே வந்துருக்காதே ஆரா. வை ஆரா வை? எனக்கு ஒரு மகன் இருக்கான்ற விஷயமே உன் அப்பா சொல்லித்தான் எனக்குத் தெரியனுமா?”
‘ஓ! அவர் வேலையா இது! கொஞ்ச நாளா என்னையும் என் மகனையும் ஒரு மார்க்கமா பார்த்தது இதுக்குத்தானா? பெத்த மகள பாசமா வளர்க்க துப்பில்ல, இப்ப சாவப் போற வயசுல அவள வாழ வச்சுப் பார்க்கணும்னு துடிக்குதா!’ தன் அப்பாவை மனதிற்குள்ளேயே அர்ச்சனை செய்தாள் ஆராதனா.
“இப்ப மகன் இருக்கறது தெரிஞ்சு மட்டும் எதாவது மாற போகுதா ரோவன்?”
“கண்டிப்பா பேபி. இனி என் மகன் வாழ்க்கையில எனக்கும் இடம் வேணும்”
“மகன், மகன், மகன்! வந்ததுல இருந்து அவன் மட்டும் தான் உன் நினைப்புல இருக்கானா? இதோ, கத்திக்கிட்டு இருக்கேனே இந்த பைத்தியக்காரி, நான் இல்லையா?”
‘என் மனசு முழுக்க நீ தான் இருக்க ஆரா! ஆனா நீ கேட்கறத என்னால தர முடியலையே. என் சுயத்தை சுடும் ஒரு செயல என்னால எப்படி செய்ய முடியும்? அப்படி என் கலைய விட்டுட்டு வந்தாலும், இந்த உயிர் அரை உயிரா தானே இருக்கும். அந்த அரை உயிரால நீ கேட்கற சந்தோஷத்தைக் கொடுக்க முடியாமா ஆரா?’ மனம் வலிக்க தன் உயிர் கொல்லும் காதலியைப் பார்த்தான் ரோவன்.
அவன் பார்வையிலேயே மனதைப் படித்த ஆராதனா,
“நமக்குள்ள எல்லாம் இன்னும் அப்படியே தான் இருக்கு ரோவன். எப்போ என்னை விட்டு உன்னோட கலை பெருசுன்னு முடிவு எடுத்தியோ, அப்பவே முடிவு பண்ணேன் பிள்ளையைக் காட்டி உன்னைக் கட்டிப் போடக்கூடாதுன்னு. அது எனக்கும், என் காதலுக்கும் கேவலம். இப்போ கூட எங்க கூட உன்னால சேர்ந்து வாழ முடியாது. அப்புறம் எதுக்கு இந்த சீன்? பேசாம திரும்ப போயிரு ரோவன்”
“பையன என் கண்ணுல கூட காட்ட மாட்டீயா ஆரா? என் வாரிச பார்க்கனும்னு எனக்கு ஆசை இருக்காதா?”
“எந்த வாரிசு ரோவன்? டெல் மீ! வாரிசு வந்துரக் கூடாதுன்னு அவ்வளவு கவனமா இருப்ப! எங்கயோ தப்பு நடந்ததுனால இந்த வாரிசு வந்துச்சு. இல்லைன்னா இப்போ பார்க்கத் துடிக்கறீயே வாரிசு, அது எப்படி சாத்தியம்?” ஏளனமாக சிரித்தாள் ஆராதனா.
“உனக்காகத் தான் நான் கவனமா இருந்தேன்னு உனக்குப் புரியலையா ஆரா? எங்க கல்ச்சர்ல கல்யாணம் இல்லாமலே குழந்தைப் பெத்துக்கறது சர்வ சாதாரணம். உங்களுக்கு அப்படி இல்லையே. என்னோட செயல் ஒன்னொன்னும் உன் நன்மைய சுற்றி தான் இருக்கு ஆரா.” கண்களைத் தேய்த்துக் கொண்டான்.
போன் வழியாக விஷயத்தைக் கேள்வி பட்டதில் இருந்து அவனால் அங்கே இருக்க முடியவில்லை. ஆராதனாவையும் மகனையையும் பார்க்க வேண்டும் எனும் ஆவலில் கிடைத்த அடுத்த ப்ளைட்டிலேயே விழுந்தடித்துக் கொண்டு வந்திருந்தான். அவள் போன இந்த ஒரு வருடமாக, அவளைப் பார்க்கத் துடித்த மனதை அடக்கி இப்பொழுது தான் கொஞ்சம் சமன் பட்டிருந்தான். மீண்டும் இந்த திருப்பம் அவன் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டிருந்தது.
களைப்பில் நெற்றியைத் தேய்த்து கொண்டவனை அமர சொன்னவள், செக்ரட்டரியை அழைத்து ப்ளாக் காபி கொண்டு வர சொன்னாள்.
“குடிங்க ரோவன்!”
மறுக்காமல் வாங்கிக் குடித்தவனுக்கு, லேசாக களைப்பு நீங்கி இருந்தது. அவள் கரிசனத்தைப் பார்த்தவனுக்கு நெஞ்சை அடைத்தது. தன் குடும்பத்தை விட்டுவிட்டு தான் மட்டும் வாழ்க்கையில் என்ன சாதிக்கப் போகிறோம் என்ற எண்ணம் வேறு மனதைக் குடைந்தது. அவள் கொடுத்த சாய்ஸ் கண் முன்னே ஆடியது. கண்களை இருக மூடித் திறந்தவன்,
“ஆரா பேபி! நான் உன் கூடவே வந்துடறேன். இனி எனக்கு வேற எதுவும் வேணாம். நீயும், மகனும் போதும்” என்றான்.
கைகளைக் கட்டிக் கொண்டு சிறிது நேரம் அவனை ஆழப் பார்த்தாள் ஆராதனா.
“நீ எங்களுக்காக உன் வாழ்க்கைய பிச்சைப் போட வேணாம் ரோவன். அப்படிப்பட்ட வாழ்க்கையே எங்களுக்கு வேணாம்” என வார்த்தைகளைக் கடித்துத் துப்பினாள்.
ஏற்கனவே, ஆண் வாரிசு என்பது கனவாய் போனதும் தன்னிடம் பாசம் காட்டிய பெற்றவர்களை கண்டவளுக்கு, இவ்வளவு நாள் தன்னைத் தேடி வராமல் பிள்ளை இருப்பது தெரிந்ததும் வந்திருக்கும் ரோவன் மேல் கொலை வெறியே வந்தது.
‘அன்புக்கு மட்டும் தான் நான் தலை வணங்குவேன். ஆனா நான் மனம் திறந்து உன் கிட்ட காட்டுன அன்புக்கு நல்ல பாடத்தை அனுபவிச்சுட்டேன். போதும்! இந்த காட்டாறு இனி யாருக்கும் தேங்கி நிற்காது. அடிச்சு தள்ளிட்டுப் போய் கிட்டே இருக்கும்’
“ஆரா!”
“ஆரா தான்! வந்தது வந்துட்டீங்க. பிள்ளையைப் பார்த்துட்டு கிளம்பி போயிட்டே இருங்க”
வீட்டிலிருந்து மகனை அழைத்து வர செய்தவள், அமைதியாக நாற்காலியில் அமர்ந்து கணக்கு வழக்குகளைப் பார்க்க ஆரம்பித்து விட்டாள்.
பிள்ளையுடன் ஆராவின் அம்மாவும் அப்பாவும் சேர்ந்தே வந்திருந்தார்கள். அவர்கள் வரும் போதே ஆராவுக்குப் புரிந்து விட்டது ஏதோ திட்டத்துடன் தான் வருகிறார்கள் என.
அவர்கள் தூக்கி வந்த தன் மகனைப் பார்த்ததும் ரோவனுக்குக் கண் கலங்கி விட்டது. ஆசையாக ஒரு வயது பிரகாஷைத் தூக்கி உச்சி முகர்ந்தவன், இறுக்கி அணைத்துக் கொண்டான். அந்நிய ஆளைப் பார்த்ததும் குட்டிப் பிரகாஷ் வீறிட்டு அழ ஆரம்பித்தான்.
“புள்ளைக்கு இவர்தான் அப்பான்னு கூட சொல்லாம, எங்களையும் சொல்ல விடாம வளர்த்துருக்க. பெத்த தகப்பன் பேரு தெரியாம வளரறது எல்லாம் நம்ம பரம்பரைக்கு எவ்வளவு அவமானம் தெரியுமா?” ஆரம்பித்தார் ஆராவின் அம்மா.
இன்னும் என்ன வரப்போகிறது என யோசித்துக் கொண்டே அமைதி காத்தாள் ஆரா. ரோவனோ இங்கே நடக்கும் சம்பாஷனையை கவனிக்காமல் மகனை சமாதானப் படுத்தும் முயற்சியில் இறங்கி இருந்தான்.
“இவ்வளவு நாள் தான் நீ இழுத்த இழுப்புக்கு வந்தோம். இப்பவாவது நாங்க சொல்லறத கேளு ஆரா. நான் இருக்கப் போறது இன்னும் ஒரு மாசமோ, ரெண்டு மாசமோ தான். அதுக்குள்ள நீ வாழ்க்கையில செட்டல் ஆகறத நாங்க பார்க்கனும்” கண் கலங்கினார் ஆராவின் அப்பா. அவருக்கு சமீபத்தில் தான் ப்ரோஸ்டேட் கான்சர் என கண்டுப்பிடிக்கப் பட்டிருந்தது. அவருக்குப் பின் மனைவி வாழ வீடு, பணம் என ஒரு வழி செய்துவிட்டாலும், மகளை இப்படியே விட்டு போக அவருக்கு மனம் வரவில்லை. அதனால் தான் தேடிப் பிடித்து ரோவனை தொடர்பு கொண்டிருந்தார்.
“என்ன செய்யனும்?” கைகளைக் கட்டிக் கொண்டு தகப்பனை நேர் பார்வைப் பார்த்தபடி கேட்டாள் ஆரா.
“நீ காதலிச்ச இவரையே கல்யாணம் பண்ணிக்க. சேர்ந்து சந்தோஷமா இருங்க. அப்பத்தான் என் ஆத்மா சாந்தி ஆகும்”
“கல்யாணம் பண்ணிக்கறேன். ஆனா இவர இல்ல”
“ஆரா!” அதிர்ச்சி அடைந்தனர் அவளின் பெற்றோர்.
ஹிந்தியில் இவர்களின் வாக்குவாதம் நடந்ததால், புரியாமல் நின்றிருந்தான் ரோவன்.
“பிள்ளையை அவன் கிட்ட பெத்துக்கிட்டதனால அவனைத் தான் கட்டிக்கனும்னு ஏதாவது கட்டாயம் இருக்கா? நீங்க எந்த காலத்துல இருக்கீங்க?” நக்கலாக கேட்டாள்.
“ஆரா! உன்னைப் பெத்தவங்க கிட்ட இப்படித்தான் பேசுவியா?” ஆத்திரமாக கேட்டார் அவள் அம்மா.
“பெத்தேன், பெத்தேன்னா! ஆடு மாடு கூட தான் பெத்துக்குது. அதெல்லாம் மேட்டரா?” இன்னும் நோகடித்தாள்.
அவர்கள் மிஞ்ச மிஞ்ச இவள் இன்னும் எகிறுவாள் என அறிந்த அவள் அப்பா, பட்டென அவளது கையைப் பற்றிக் கொண்டார். மகளின் கையைப் பிடித்து தன் முகத்தில் வைத்துக் கொண்டு கதறிவிட்டார்.
“எங்களை மன்னிச்சிரு ஆரா. நாங்க உனக்கு ஆராதனானு பெயர் வச்சோமே தவிர, உன்னை ஆராதிக்கல. மன்னிப்புன்னு ஒரு வார்த்தையில நாங்க செஞ்ச பாவத்தைக் கழுவ முடியாது. ஆனா இப்படி நீ பட்ட மரமா இருக்கறது எங்களை தினம் தினம் கொல்லுதும்மா ஆரா. தயவு செஞ்சி எங்களுக்கு மோட்சத்தைத் தா”
ஆராதனா கல் நெஞ்சுக்காரி தான். மிரட்டுபவர்களை கோபத்தால் சாய்த்திருப்பாள், கண்ணீர் விடுபவர்களை என்ன செய்வாள்!
‘நீங்க கேட்கறத என்னால குடுக்க முடியாதே அப்பா ! ஒரு சுதந்திர மனுஷன என் காதலைக் காட்டி என்னால கட்டிப் போட முடியாதே. என் கூட இவன் எப்பவும் இருக்கனும்னு ஆசைப்பட்டேன் தான். ஆனா அப்படி வந்தா அவன் சந்தோஷமா இருக்கற மாதிரி நடிப்பானே தவிர, உயிர்ப்போட இருக்க மாட்டான்! என் ரோவனா என்னால நடைப்பிணமா மாத்த முடியாதுப்பா. அதுக்காக அவன் இன்னொருத்திய கலை கண்ணால பார்த்துட்டுப் போகட்டும்னும் என்னால விட முடியலையே. நான் என்னப்பா செய்யட்டும்?’
“நான் ஏற்கனவே இன்னொருத்தன காதலிக்கறேன்பா. உங்க கிட்ட சொல்லறதுக்குள்ள, நீங்க இவர வரவச்சு பிரச்சனையை இழுத்து விட்டுட்டீங்க” என பொய் சொன்னாள்.
“யாரு ஆரா? சொல்லு நாங்க பார்க்கனும். இப்பவே!” உணர்ச்சிவசப்பட்டவர் அவள் முன்னேயே மயக்கம் போட்டு விழுந்தார். அப்பாவைத் தாங்கிப் பிடித்தவள், அவசரமாக தன் செகரெட்டரியை கத்தி அழைத்தாள்.
“ஜெய், கால் தே ஆம்புலன்ஸ்”
அடுத்தப் பதினைந்தாவது நிமிடத்தில் குடும்பமே, ஐசியூ முன் நின்றிருந்தது. வெளியே வந்த டாக்டர்,
“ஆரா மேடம்! அப்பாவுக்கு இப்பவோ அப்பவோன்னு தான் இருக்கு. உங்க கிட்டப் பேசனும்னு சொல்லறாரு. போய் பாருங்க” என்றார்.
உள்ளே நுழைந்தவள் அவரது கையைப் பற்றிக் கொண்டு,
“டாடி” என அழைத்தாள்.
மெல்ல கண் விழித்தவர்,
“ஆரா! எனக்கு டைம் இல்லம்மா. நான் கண்ண மூடுறதுக்குள்ள உன் கல்யாணத்தப் பார்க்கனும். கொஞ்சம் தயவு காட்டும்மா” என விட்டு விட்டுப் பேசினார். ஆராவுக்குமே அவர் நிலையைப் பார்த்துக் கண் கலங்கியது.
சரி என தலை ஆட்டியவள், மெல்ல வெளியே வந்தாள். செக்ரட்டரியை அருகே அழைத்தவள்,
“ஜெய், கோ கெட் மீ அ மங்கல்சூத்ரா. யூஸ் மை கார்ட்” என நீட்டினாள்.
“என்ன மாதிரி டிசைன் வேணும் மேம்?”
“ஏதாவது ஒரு டிசைன். வாங்கிட்டு வந்து தொலை. நான் எப்பொழுதும் சொல்லற மாதிரி கேள்வி கேட்கறத குறைச்சுக்க. போ!” கத்தினாள்.
விட்டாள் போதும் என ஓடினான் ஜெய்.
“ஆரா! அப்பா எப்படி இருக்காரு? ஹிஸ் எவரிதிங் ஓகே?” என கேட்டான் ரோவன்.
அவன் முகத்தை ஒரு நிமிடம் ஆழ நோக்கியவள், ஆமென தலையாட்டினாள்.
பிரகாஷ் அவன் பாட்டியின் மடியில் தூங்கி இருந்தான்.
ஜெய் திரும்பி வரும் போதெல்லாம் ஆராவின் அப்பாவை நார்மல் வார்டுக்கு மாற்றி இருந்தார்கள். போகப் போகும் உயிரை ஐசியூவில் அடைத்து வைக்க வேண்டாம் என சொல்லி விட்டாள் ஆரா. அனைவரும் ரூமில் இருக்க,
“டேடி! கொஞ்சம் கண்ணைத் திறந்து பாருங்க” என அழைத்தாள் ஆராதனா. அவர் கண்ணைத் திறந்து அனைவரையும் ஒரு முறைப் பார்த்தார்.
“நீங்க கேட்டத நான் நிறைவேத்தி தரேன் டேட். இனி நிம்மதியா இருங்க” என்றவள்,
“ஜெய்! கிவ் மீ தெ மங்கள்சூத்ரா” என கேட்டாள்.
குட்டி பாக்சில் இருந்ததை அவளிடம் நீட்டினான் அவன்.
“திறந்து குடு”
அங்கு நடப்பதை ஒரு வித புரியாத பாவத்துடன் பார்த்திருந்தான் ரோவன்.
திறந்து அவள் கைகளில் நீட்டினான். அதை வாங்காமல் ஜெயின் முகத்தையே கூர்ந்து நோக்கினாள் ஆரா. அவளின் பார்வை வீச்சை தாங்க முடியாமல், தலை குனிந்துக் கொண்டான் அவன்.
“ஜெய்! இத என் கழுத்துல பூட்டு” ஆளுமையுடன் சொன்னாள் ஆரா.
“மேம்!” குரல் நடுங்கியது அவனுக்கு. அவர்கள் பேசுவது புரியாத ரோவனைத் தவிர மற்றவர்கள் அதிர்ச்சியாக பார்த்திருந்தார்கள்.
“ஹ்ம்ம். சீக்கிரம்” கட்டளையாக வந்தது குரல்.
கை நடுங்க அந்த கருப்பு மணியில் தங்கம் கோர்த்திருந்த மங்களநாணை அவள் கழுத்தில் அணிவித்தான் ஜெய். அவன் அணிவிக்கும் போது கூட ஆராவின் பார்வை முழுக்க ரோவனையே பார்த்திருந்தது.
அந்த மாதிரி திருமண சடங்கை ஏற்கனவே பார்த்திருந்தா ரோவன்,
“ஆரா!” என அதிர்ச்சியில் கூவினான்.
நேராக அவன் கண்ணைப் பார்த்தவள்,
“நவ் ஐ ஹேவ் செட் யூ ப்ரீ ரோவன். இனிமே பிள்ளை குடுத்ததுக்காக நீ எனக்கு எந்த வகையிலும் கடமைப் படல. யூ ஆர் அ ப்ரீ மேன் நவ். பிரகாஷ் மேல உனக்கு உரிமை இருக்குன்றத நான் ஒத்துக்கறேன். உன்னால அவனை வளர்க்க முடியாது. உன் லைப் ஸ்டைலுக்கு அது ஒத்து வராது. வருஷத்துல ஓன் மன்த் சம்மர் ஹோலிடே அப்போ உன் கிட்ட இருக்கட்டும். மீதி நாள்லாம் என் கூட இருக்கட்டும். என் வக்கீல் கிட்ட இருந்து லீகலா உனக்கு எல்லா டீடெய்ல்சும் வரும்.”
அதிர்ச்சியில் நின்றிருந்தவன் அருகில் வந்தவள், அவனை இறுக அணைத்து விடுவித்தாள்.
“டேக் கேர் ரோவன்! தேங்க்ஸ் ஃபார் எவரிதிங். பாய்” என நடக்க ஆரம்பித்தவள், பின் திரும்பி வந்து மகனைத் தூக்கிக் கொண்டாள். ஜெயை திரும்பிப் பார்த்தவள்,
“வா !” எனும் ஒற்றை சொல்லோடு இவர்களின் கண்ணில் இருந்து மறைந்தாள். இது நடந்து ஒரு வாரத்தில் உலகை விட்டுப் பயணித்தார் ஆராவின் அப்பா.
அதிலிருந்து ஆரம்பித்தது பிரகாஷின் சட்டதிட்டங்களுடன் கூடிய மிலிட்டரி வாழ்க்கை. ஜெய் இவர்களுடன் தான் இருந்தான் ஆராவின் நிழலாக. ஆராவின் பின் ஒரு பீதியுடனே சுற்றிக் கொண்டிருப்பான். நில் என்றால் நிற்பான், ஓடு என்றால் ஓடுவான். வாய் திறந்து அவர்கள் இருவரும் பேசி யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். பேசுவதெல்லாம் ஆராதான். அவளின் செக்ரட்டரியாக இருந்ததால் கண் அசைவிலேயே என்ன வேண்டும் என அறிந்துக் கொள்வான் ஜெய். பிரகாஷிடம் தனித்துவமான பாசம் எதையும் அவன் காட்டியதில்லை என்றாலும், சீ போ என ஒதுக்கியதும் இல்லை. இருவருக்கும் தனி தனி அறைதான். திருமணம் ஆகியும் கன்னிப்பையனாக சுற்றிக் கொண்டிருந்த ஜெய்கும் கடவுள் கருணை காட்டினார்.
முழுதாக ரோவனை மறக்க மூன்று வருடம் எடுத்துக் கொண்ட ஆராதனா, ஜெயின் ரூமுக்குள் அன்று நுழைந்தாள்.
“என் ரூமுக்கு வா ஜெய்!” ஆச்சரியமாகப் பார்த்தவனை,
“சுத்தமா குளிச்சிட்டு, வாசமா வா! யூ ஹேவ் டென் மினிட்ஸ்!” என்றவள் விறுவிறுவென தன் ரூமுக்குள் சென்று விட்டாள். அன்று ஜெய் தீயாய் செய்த வேலை, அடுத்த பத்தாவது மாதத்தில் பலனைத் தந்தது. பிரகாஷின் ஐந்தாவது வயதில் ஆராதனா, ஜெய்பிரகாஷ் கப்பூரை ஈன்றெடுத்தாள். பிரகாஷ் கப்பூர்.ஜே(Prakash Kapoor.J) என பேர்த் சர்டிபிகெட்டில் கொடுத்திருந்தாள் ஆரா. ஏன் என கேட்ட ஜெய்க்கு,
“பிரகாஷ் எங்க குடும்ப பெயர். என் அப்பா கூட ராம்பிரகாஷ். உனக்கு தெரியாதா? அவரோட அப்பா பெயர் ராம்தேவ் பிரகாஷ். இப்படி அப்பா பெயருல பாதிய எடுத்து பிரகாஷ கோர்த்து தான் எங்க பரம்பரையில பெயர் வைப்பாங்க. நான் பொண்ணா போயிட்டதால எனக்கு அந்த ரோதனை இல்லாம போச்சு. உன் பேர நம்ம மகனுக்கு வச்சிருக்கேன். ஆனா பிரகாஷ் அப்பா மேல உள்ள கோபத்துல அவனுக்கு வெறும் பிரகாஷ்னு வச்சிட்டேன். பிரகாஷ்கு விவரம் தெரிஞ்சு அவங்க அப்பா பெயர அவனுக்கு ஏன் வைக்கலன்னு கேட்கக் கூடாது பாரு. அதுக்குத்தான். நாம சின்னவன, ஜேபீன்னு கூப்படலாம்.” என்றவள்,
“சரி, எப்ப இருந்து நான் எடுக்கற முடிவுக்கு எதிர் கேள்வி கேட்க ஆரம்பிச்ச? பக்கத்துல படுக்க இடம் குடுத்த உடனே உனக்கு உரிமை வந்துருச்சா?” முறைத்தவாறே கேட்டாள்.
“இல்ல ஆரா! ஹ்ம்ம் ஆரா மேம்!” தடுமாறினான் ஜெய்.
“இப்படியே பயத்திலேயே சுத்திட்டு இருக்கனும். போ, போய் கதவ சாத்திட்டு வா. என்னை எதிர்த்து பேசன வாய்க்கு தண்டனை வேணாம்!” கோபமாக பேசினாலும், அதில் மறைந்திருக்கும் அன்பை அறியாதவனா ஜெய்! சந்தோசமாக கதவை மூட சென்றான்.
“டாடி! எனக்கு லெமனெட் வேணும்” மியாமி பீச் மணலில் துண்டு விரித்துப் படுத்திருந்த பிரகாஷ், பக்கத்தில் படுத்திருந்த ரோவனை அசைத்தான்.
“ஓன் செக் சன்” எழுந்து சென்றவன், மகன் கேட்ட பானத்தோடு ஹாட் டோக்கையும் சேர்த்து வாங்கி
வந்தான். சாப்பிடும் தன் பணிரெண்டு வயது மகனை ஆசை தீர பார்த்திருந்தான் ரோவன்.
‘ராட்சசி! டயட், டிசிப்ளின், டைம் கீப்பிங்னு சொல்லி சின்ன பையன இப்படி வளர்த்து வைக்கிறா. ஒரு வயசுலயே மோட்டார் ஸ்கில் கிளாஸ்னு யாராச்சும் அனுப்பிருப்பாங்களா? வளர வளர கையும் காலும் தானா வேலை செய்யப் போகுது. அதுக்குப் போய் கிளாஸ் அனுப்பி, பேப்பர கசக்கறது, கலிமண்ணை உருட்டறதுன்னு டார்ச்சர் பண்ணி வச்சிருக்கா. ஏதாவது கேட்டா, ஓன் மந்த் பார்க்கிறதையும் நிறுத்தவான்னு மிரட்டறா.’
ஆராவின் திருமணம் முடிந்ததும் மனமொடிந்து திரும்பியவன், வரைவதிலேயெ தன்னை மூழ்கடித்துக் கொண்டான். ஆரா தன் முன்னே இப்படி நடந்துக் கொண்டும் கூட, அவனால் அவளை கோபிக்க முடியவில்லை. முயன்று மனதை தேற்றியவன், கொஞ்சம் கொஞ்சமாக நார்மலாக ஆரம்பித்தான். மறுபடியும் டேட்டிங், ஓன் நைட் ஸ்டாண்ட், இப்படி மனதை திருப்பினாலும் எந்தப் பெண்ணும் அவன் மனதைத் தொடவில்லை. மகனுடன் இருக்கும் அந்த ஒரு மாதம் மட்டுமே அவனை உயிர்ப்புடன் வைத்திருக்கும். வேலை எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து விட்டு மகனுடனே நேரத்தைக் கழிப்பான்.
இவனுடன் இருக்கும் போது மட்டும், மகனை சுதந்திரமாக விட்டு விடுவான் ரோவன். அவனுக்குப் பிடித்ததை சாப்பிட விடுவான், ஆரா தடை விதித்திருந்த ஓவியம் வரைவதை செய்ய விடுவான், என்னேரம் வேண்டும் என்றாலும் தூங்கி என்னேரம் வேண்டுமானாலும் எழ அனுமதிப்பான்.
“சன்! இப்போ உன்ன என்ன கிளாசுக்கு அனுப்பறா உங்க மம்மி?” ஒவ்வொரு தடவை வரும் பொழுதும் புதிதாய் ஏதாவது கற்றிருப்பான் பிரகாஷ்.
“தமிழ் கிளாஸ் போறேன் டேட்”
“தமிழா?”
“யெஸ் ! நம்ம கார் சேல்ஸ் தமிழ் நாட்டுலயும் நடக்குது இல்ல. அதனால தமிழும் கத்துக்கனும் சொல்லிட்டாங்க மம்மி”
“ஏன்னா நான் உங்க மகன். உங்க மாதிரியே லைப்ப ஈசியா எடுத்துக்குவேன். சோ ஐ நீட் டிசிப்பிளின். தம்பி, ஜெய் டாடியோட மகன். அவனுக்கு ஜெனடிக்லி எல்லாம் சரியா இருக்கும்.”
முகம் சுருங்கியது ரோவனுக்கு.
“அப்படின்னு யார் சொன்னது?”
“யாரும் என் கிட்ட சொல்லல. மம்மி, ராணிம்மா கிட்ட பேசனப்போ நான் கேட்டேன். உங்கள மாதிரி நான் லைப்ப ஜாலியா எடுத்துக்க கூடாதாம். பொறுப்புணர்ச்சி இருக்கனுமாம். இன்னும் நிறைய சொன்னாங்க”
‘இப்படி எந்த கவலையும் இல்லாம நீங்க இருக்கறது தான் ரொம்ப பிடிச்சிருக்கு. உங்க டேக் இட் ஏசி போலிசி தான் என்னை கவர்ந்திழுக்குது. ரசனையோட என்னை நீங்க கையாளற விதத்துல தான் நான் உங்க காலடியில விழுந்து கிடக்கறேன். இப்படிலாம் பேத்திட்டு, அதே குணங்கள் மகனுக்கு வரக்கூடாதுனு நீ நினைக்கறது நியாயமே இல்ல ஆரா. விதை ஒன்னு போட்டா சுரை ஒண்ணா முளைக்கும்?’(லைக் ஃபாதர் லைக் சன்- அப்படிதாங்க நினைச்சாரு. நான் தான் தமிழ்ல மாத்திட்டேன்)
“சாரி சன்! ஐ லெட் யூ டவுன். என்னால தானே உனக்கு இவ்வளவு கட்டுப்பாடு. மம்மி கிட்ட பேசி உன்னை என் கூடவே வச்சிக்கவா?”
வேண்டாமென தலையாட்டியவன்,
“ஐ லவ் மம்மி. கண்டிப்பா இருந்தாலும் டீப் டவுன் ஷீ லவ்ஸ் மீ. நான் வந்துட்டா அவங்க ரொம்ப சேட் ஆயிருவாங்க. தம்பிய கிளாசுக்கு அனுப்பலனாலும், என்னை ட்ரீட் பண்ணுற மாதிரி தான் அவனையும் ட்ரீட் பண்ணுறாங்க டாடி. இப்ப இருக்கற மாதிரியே இருக்கலாம்.”
“அப்போ நீ என்னை லவ் பண்ணலயா சன்?”
தந்தையை இருக அணைத்தவன்,
“இந்த முடிவு உங்களுக்காகவும் தான் டாடி. ஓன் மன்த் என் கூட இருக்கறப்பவே, நீங்க நிறைய ஆர்ட் டீலிங்ச மிஸ் பண்ணிருறீங்க. எவ்வளவு லாஸ் ஆகுது உங்களுக்கு. ஐ டோண்ட் வாண்ட் டூ பேர்டன் யூ” என்றான்.
பனிரெண்டு வயதில் மகனின் அறிவாளித்தனத்தில் மனம் நிறைந்து போனான் ரோவன்.
‘ஆரா, நாம ஒரு அழகான தேவதைப் பையன படைச்சிருக்கோம். அன்பு, அழகு, அறிவு, ஆளுமை, அரவணைப்பு எல்லாமே கலந்து செய்த கலவை இவன். வீ ஆர் லக்கி டூ ஹேவ் ஹிம்.’ மகிழ்ந்துப் போனான்.
“சன், ஐ லவ் யூ சோ மச். டூ யூ க்னோ தட்?”
“ஐ லவ் யூ டூ டாட்”
இருவரும் நீந்தி விட்டு வந்து மீண்டும் ஓய்வெடுத்தனர்.
“பை தெ வே டாட்! உங்க நீயூ மாடல் கார்லாவ எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. ஐ திங்க் ஐம் இன் லவ் வித் ஹேர்”
‘அடேய் சன்! அவளுக்கு இருபது வயசுடா ! நானே பதினாலு வயசுல தான் சைட்டடிக்க ஆரம்பிச்சேன். நீ பனிரெண்டு வயசுலயே ஸ்டார்ட் பண்ணிட்டியா? எப்படி உங்கம்மா பார்த்து பார்த்து வளர்த்தாலும், என் மகன்டா நீ. என் ரத்தம்’ உள்ளுக்குள் சந்தோஷம் ஊஞ்சலாடியது. அதெல்லாம் கோபத்தில் முகம் சிவக்க ஆரா அவன் மனக்கண்ணில் வரும் வரைக்கும் தான்.
‘உங்க மம்மிக்கு தெரிஞ்சா இனி என் முகத்துலயே முழிக்க விடமாட்டாளே’
யோசனையாக மகனைப் பார்த்தவன், அவனின் சீரியஸ்சான முகத்தைப் பார்த்து வந்த சிரிப்பை அடக்க மிகவும் கஸ்டப்பட்டான் ரோவன்.
“இது காதல் செய்யற வயசு இல்ல சன். இந்த வயசுல உடம்புக்குள்ள பல மாற்றங்கள் வரும். ஹார்மோன்கள் பேயாட்டம் போடும். எந்த கேர்ள் சின்னதா பார்த்து சிரிச்சாலும், நமக்குள்ள பல கற்பனைகள் ஓடும். ஒரு அப்பாவா மட்டும் இல்லாம ஒரு ஆம்பிளையா உன்னோட பீலிங்ஸ்ச என்னால புரிஞ்சிக்க முடியுது சன். பட் இதெல்லாம் இன்பாக்சுவேஷன் தான். ட்ரூ லவ் நீ இன்னும் ரொம்ப பெரியவனா ஆனதும் தான் வரும். அது வரைக்கும் பெண்கள் கண்ண பார்த்து மட்டும் தான் பேசனும். உனக்குன்னு வரவ கிட்ட மட்டும் எங்க வேணும்னாலும் பார்த்து பேசலாம்” (இதுல சில வரிகள் ஏற்கனவே எங்கயோ கேட்ட மாதிரி இல்ல? ப்ரௌனி மணி கிட்ட பேசனதுதான்)
“ட்ரூ லவ்னு நான் எப்படி தெரிஞ்சிக்கறது டாடி?”
“ஹ்ம்ம்!” தாடையை சொரிந்தான் ரோவன்.
“அவ கண்ணுல தண்ணிய பார்த்தா உனக்கு மனசு துடிக்கும். உடனே ஓடி போய் கண்ணைத் துடைச்சி அணைச்சிக்கனும்னு தோணும். அது ட்ரூ லவ்” இந்த வயதில் இவ்வளவு எளிதாக சொன்னால் போதும் என நினைத்தான் ரோவன்.
ஆனால் மகன் அதையே நினைத்திருந்து, தன் காதலை அப்படிதான் அடைவான் என்பது அந்த தந்தைக்குத் தெரிந்திருக்கவில்லை.
(தொடர்ந்து உன்னோடுதான்)
Leave a Reply
Please use the coupon code DISC20 for 20%discounts on all products Dismiss