உயிர் விடும்வரை உன்னோடுதான்

அத்தியாயம் 36

 

காரில் சென்னை விமான நிலையத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தனர் சித்ராவும் அவள் குடும்பமும். இவர்கள் அமெரிக்காவிலிருந்து வந்து ஆறு மாதங்கள் முடிவடைந்த நிலையில் இன்றுதான் தீபீ தாய் நாட்டுக்கு வருகிறாள். சந்தோஷம் குமுழியிட்டாலும், பக்கத்தில் முறைத்தவாறு வரும் தீபாவை நினைத்து கலக்கமாக இருந்தது சித்ராவுக்கு. பிரகாஷ் மட்டும்தான் அமெரிக்கா சென்றிருந்தான் மகளை அழைத்து வர. அவனுடன் சிவாவும் விடுமுறைக்காக வருவதாக இருந்ததால், அவர்களே சமாளித்துக் கொள்வதாக சொல்லிவிட்டார்கள்.

நிலாவுக்கும் மணிக்கும் முழுவதுமாக விஷயத்தை விளக்காமல், பெர்டிலிட்டி செண்டரில் தனது கருமுட்டை தவறாக பிரகாஷின் தம்பி குடும்பத்திற்கு கொடுக்கப்பட்டு விட்டது என்று மட்டும் தான் சொல்லி இருந்தாள் சித்ரா. மணி ஏற்றுக் கொண்டாலும், நிலா சந்தேகமாகவே தன் அக்காவைப் பார்த்தாள். தம்பி அந்தப் புறம் போனதும்,

“சொல்லுக்கா! மாதி வேலையா இது?” என கேட்டாள் நிலா.

“அதெல்லாம் இல்ல நிலா.”

“நீ சொன்ன கதைய மணி நம்புவான். நான் நம்ப மாட்டேன். மாதிக்கு உன் மேல எவ்வளவு வெறுப்புன்னு கூடவே இருந்துப் பார்த்தவளாச்சே நான், எனக்குத் தெரியாதா? கண்டிப்பா அவ கைங்கர்யமா தான் இது இருக்கும். கர்மா இருக்குக்கா! உனக்கு துன்பத்தை மட்டுமே குடுத்த அவ அல்ப ஆயுசுல போயிட்டா. ஆனா உனக்கு  ரெண்டு குழந்தைங்க, கண்ணுக்குள்ள வச்சுப் பார்த்துக்கற புருஷன்னு கடவுள் ஆசிர்வாதம் பண்ணியிருக்காரு. இனியாச்சும் நீ சந்தோஷமா இருக்கனும்கா”

கண் கலங்க தங்கையக் கட்டிக் கொண்டாள் சித்ரா.

“இறந்தவங்களுக்கு நாம செய்யற மரியாதையா இனி பழைய கதை எதுவும் பேச வேணாம் நிலாம்மா.”

“சரிக்கா. இனி பேச மாட்டேன்” அக்காவின் அணைப்பில் அடங்கிப் போனாள் நிலா.

அன்று இரவே மெல்ல தீபாவிடம் விஷயத்தை விளக்கினார்கள் பிரகாஷும் சித்ராவும். தூங்கும் முன் அவர்களிடம் விளையாடிக் கொண்டிருந்தவளை மடியில் அமர்த்திக் கொண்டாள் சித்ரா. சித்ராவின் அருகில் அமர்ந்திருந்தான் பிரகாஷ்.

“தீபா செல்லம்”

சித்ராவின் கழுத்தைக் கட்டிக் கொண்டவள்,

“ஹ்ம்ம்” என்றாள்.

“உனக்கு ஒரு அக்கா இருந்தா எப்படி இருக்கும்?” கேட்டாள் சித்ரா.

“நல்லா இருக்காதும்மா.”

“இல்லடா, அக்கா இருந்தா உனக்கு விளையாட ஆள் இருக்கும். ரெண்டு பேரும் ஒன்னா கார்ட்டூன் பார்க்கலாம். ஒரே ரூம்ல படுத்துக்கலாம். நானும் நிலாவும் மாதிரி. ஃபனா இருக்கும்”

“நீயும் நிலாவும் அடிக்கடி சண்டைப் போடுவீங்களே! சோ அக்கா வேணா. சண்டை வரும். அக்கா இருந்தா எல்லாம் ஷேர் பண்ணனும். நீயும் நிலாவும் நேய்ல் பாலிஷ், ஷூ எல்லாம் ஷேர் பண்ணற மாதிரி. எனக்கு வேணாம். என் டாய்ஸ்லாம் நான் ஷேர் பண்ண மாட்டேன்.” பேசி முடிப்பதற்குள் கண்ணீர் தாரை தாரையாக ஊற்றியது சின்னவளுக்கு.

இன்னும் எப்படி விளக்குவது என புரியவில்லை சித்ராவுக்கு. மகளை அணைத்தவாறு, ஏதாவது பண்ணேன் என்பது போல பிரகாஷைப் பார்த்தாள். டோண்ட் வோரி என்பது போல சித்ராவைப் பார்த்தவன், தீபாவை தூக்கிக் கொண்டான்.

அவள் கண்களைத் துடைத்து, தூக்கியவாறே ரூமை சுற்றி நடந்தவன்,

“தீபா பேட்டி, அம்மாவுக்கு நீங்க இருக்கற மாதிரி, பிகாஷுக்கும் ஒரு பாப்பா இருக்காங்க. அவங்க பேரு தீபீ. இப்போ அவங்களுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல. நல்லா ஆனதும், நம்ம கூட வந்து ஸ்டே பண்ணுவாங்க. அவங்க உங்களுக்கு அக்காவா இருந்தாலும், நீங்க தான் அவங்கள பார்த்துக்கனும்.”

“ஏன்?”

“அவங்களுக்கு சரியா பேச வராது, அதோட உங்கள மாதிரி ஓடி விளையாட முடியாது. அக்காவுக்கு உங்க ஹெல்ப் ரொம்ப தேவைப்படும்மா”

“பேச முடியாதா?”

“முடியும், ஆனா தீபா மாதிரி வேகமா பேச முடியாது”

“ஓட முடியாதா?”

“முடியும், ஆனா தீபா மாதிரி வேகமா ஓட முடியாது”

“அக்கா சோ பிட்டி”

“ஹ்ம்ம். அக்கா ஊருல சோ லோன்லியா இருக்காங்க. இங்க வந்தா தீபா பாப்பா கூட விளையாடலாம்னு தான் பிகாஷ் வர சொன்னேன்.”

“அக்கா உன்னை என்ன சொல்லிக் கூப்பிடும்?”

“பிதாஜினு கூப்பிடுவாங்க”

“அப்போ இங்க வந்தா அக்கா, அம்மாவ என்னன்னு கூப்பிடும்?”

“ஹ்ம்ம் அது வந்து”

“சொல்லு பிகாஷ்”

“அம்மான்னு தான் கூப்புடுவாங்க”

“என்னை இறக்கி விடு பிகாஷ்” என நெளிந்து கீழே இறங்கியவள் அவள் ரூமுக்கு சென்று கதவை மூடிக் கொண்டாள்.

சித்ராவும், பிரகாஷும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“கொஞ்ச நேரம் தனியா விடலாம் பிரகாஷ். நான் திரும்ப போய் பேசுறேன். தனியாவே இருந்து எல்லார் பாசத்தையும் அனுபவிச்சிட்டால்ல, அதான் எதையும் ஷேர் பண்ண மனசு வரல.”  

இவர்கள் இருவரும் ஒருவர் கையை ஒருவர் பிடித்தபடி அமர்ந்திருந்தனர். ஐந்து நிமிடங்களில் ரூம் கதவைத் திறந்து வெளியே வந்தாள் தீபா. பிரகாஷின் அருகின் வந்தவள்,

“பிதாஜி” என அழைத்தாள். இவர்கள் இருவருக்குமே ஷோக்.

“என்னன்னு கூப்பிட்ட தீபா?” நம்ப முடியாமல் கேட்டான் பிரகாஷ்.

“பிதாஜினு. இனிமே தீபா பாப்பா பிகாஷ அப்டித்தான் கூப்டுவேன். அக்கா மட்டும், எங்கம்மாவ அம்மான்னு கூப்பிட போறால்ல, நானும் உங்கள அக்கா மாதிரி பிதாஜினு தான் கால் பண்ணுவேன்” கைகள் இரண்டையும் அடமாக நெஞ்சில் கட்டிக் கொண்டு நின்றாள் குட்டி.

அப்படியே மகளைத் தூக்கி தட்டாமாலை சுற்றியவன், படுக்கையில் போட்டு கிச்சு கிச்சு மூட்டினான். முகம் சந்தோஷத்தில் சிரித்தாலும் கண்கள் கலங்கி இருந்தது பிரகாஷிற்கு.

“அப்படியே கூப்பிடுடா தீபா குட்டி. பிதாஜி சோ ஹேப்பி” அவனது கிச்சு கிச்சுக்கு சிரித்து ஓய்ந்தவள்,

“பிதாஜி வை க்ரையிங்? அக்காவ நான் ஏச மாட்டேன். நல்லா பாத்துக்குவேன். டோண்ட் க்ரை” என சமாதானப் படுத்தி கண்களைத் துடைத்து விட்டாள்.

“இது ஹேப்பி க்ரையிங்டா செல்லம்.” அணைத்துக் கொண்டான் மகளை.

“ஹேப்பினா நாம ரெண்டு பேரும் ஐஸ்க்ரீம் சாப்டலாமா?” கழுத்தைக் கட்டிக் கொண்டாள் தீபா.

‘இப்படி லாக் பண்ணிட்டாளே! கொடுத்தா அவங்க அம்மா மொத்துவா! கொடுக்கலனா மக கோவிச்சிக்குவா.’ அசட்டு சிரிப்புடன் சித்ராவை பார்த்தான் பிரகாஷ்.

இவர்கள் இருவரின் பாச பிணைப்பை ஆசையாகப் பார்த்திருந்தவள், ஐஸ்க்ரீம் பேச்சு வரவும் பத்ரகாளியாக மாறி இருந்தாள். வாய் திறந்து அவன் கேட்பதற்குள்,

“நோ” என ஒற்றை சொல்லில் மறுத்தாள் சித்ரா.

மீண்டும் உதடு துடிக்க அழ ரெடியானாள் தீபா.

“பிதாஜி, நான் சேட் க்ரை பண்ண போறேன் இப்போ. தீபா சோ சேட் பிதாஜி. பிதாஜி ப்ளிஸ் பிதாஜி” பிதாஜிகளை அள்ளித் தெளித்தாள் மகள். தாங்குமா பிரகாஷிற்கு?

“ரோ மத் பேட்டி. ஓன் ஸ்கூப் மட்டும் சாப்பிடலாம். சரியா?” என்றவன், சித்ராவிடம் கண்களால் கெஞ்சினான்.

அவள் அசையாமல் நிற்கவும், மகளைக் கட்டிலில் விட்டுவிட்டு மனைவியின் அருகில் வந்தவன்,

“சிமி செல்லம், ஓன் ஸ்கூப் மட்டும் தான். காட் ப்ராமிஸ்! சரின்னு சொல்லுவியாம். அப்போத்தான் நைட் உனக்கு நிறைய வாய்க்ரீம் குடுப்பேன்” ஆசைக் காட்டினான்.

“வாய்க்ரீமா?”

“ஹ்ம்ம். ஐஸ்க்ரீம என் வாயில வச்சு உன் வாய்க்கு மாத்தறது தான் வாய்க்ரீம். உனக்கு பிடிச்ச பட்டர்ஸ்காட்ச் ப்ளேவர் வாங்கி வச்சிருக்கேன். டீல் ஓகேவா?” மயக்கினான் சித்ராவை.

“சரி, போய் தொலை! ஓன் ஸ்கூப் தான் குடுக்கனும் அவளுக்கு. ஆனா நைட் எனக்கு நிறைய ஸ்கூப் வேணும்”

“அடி கள்ளி!” அவள் தாடையைப் பிடித்து கொஞ்சியவன், மகளை கிச்சனுக்கு தூக்கிச் சென்றான்.

இப்பொழுது நினைக்கும் போது கூட முகம் சிவக்க சிரிப்பும் வந்தது அவளுக்கு. அன்றிலிருந்து தீபீ வருவதை தீபா ஏற்றுக் கொண்டாலும், அவ்வப்பொழுது முகத்தையும் திருப்புவாள். சின்ன பிள்ளைதானே, அவளது மூட் மாறி மாறி வருவது இயல்புதானே. காலையில் கிளம்பும் போதே அக்கா வேண்டாம் என ஆரம்பித்திருந்தாள். சித்ரா தான் ஆயிரம் சமாதானம் சொல்லி அழைத்து வந்திருந்தாள்.

விமான நிலையத்தில் ஏற்கனவே பத்மாவும், பாலனும் தங்கள் மகனுடன் வந்து காத்திருந்தனர். அவர்கள் தத்தெடுத்த மகன், தீபன் சக்ரவர்த்திக்கு இப்பொழுது ஏழு மாதம் ஆகிறது. பிறந்து சில நாட்களே ஆன பிள்ளையை ஆசிரமத்தில் இருந்து தத்தெடுத்திருந்தனர் அவர்கள். கருத்தக் குட்டியாக இருந்தவன், இந்த ஆறு மாதத்தில் பாலனின் மாநிறத்தை அடைந்திருந்தான். முகமும் பத்மாவைப் போல் மாறி இருந்தது. இது தான் கடவுளின் கருணை. யாரோ பெற்ற பிள்ளையை, ரத்த சம்மந்தம் கூட இல்லாத இன்னொருவர் வளர்க்கும் போது குழந்தை, வளர்த்தவர் ஜாடையில் இருப்பது விந்தையிலும் விந்தையல்லவா!

பத்மாவை பார்த்ததும் தீபா ஓடி சென்று கட்டிக் கொண்டாள்.

“பத்தும்மா, ஐ மீஸ் யூ” முத்த மழை பொழிந்து விட்டாள் தீபா.

தீபாவை அள்ளி அணைத்துக் கொண்ட பத்மா,

“தீபாகுட்டிய நானும் ரொம்ப மிஸ் பண்ணேண்டா” என கண் கலங்கினார்.

பாலனிடம் இருந்த தீபனைக் காட்டி,

“பாலாப்பா, தீபுவ நான் கேரி பண்ணவா?” என கேட்டாள் தீபா.

குழந்தையை அவள் கைகளில் வைத்தார் பாலன். குழந்தை துள்ளிய துள்ளலில் தடுமாறிய தீபாவை, மகனோடு சேர்த்து அணைத்துக் கொண்டார் பாலன்.

ப்ளைட் வர இன்னும் நேரம் இருந்ததால் குடும்பமாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். தீபனைத் தூக்கிய நிலா,

“டேய் கருத்தக்குட்டி” என கொஞ்சினாள்.

மகனை அப்படிக் கூப்பிடவும் கோபம் வந்து விட்டது பத்மாவுக்கு.

“யாருடி கருத்தக்குட்டி? என் மவன் நல்லா கலரா தான் இருக்கான். ஆம்பிள்ளைக்கு அழகு தேவையில்ல, அறிவு இருந்தா போதும். வந்துட்டா பெரிய ஐஸ்வர்யா ராய், என் மகன பத்தி பேச” நொடித்துக் கொண்டார்.

“டேய் மருமகனே! உங்காத்தாவுக்கு வாய் ரொம்ப நீளம்டா. என் மகள உனக்கு கட்டி வச்சு, அவங்க வாய தைக்க சொல்லுறேன்.”

“சொல்லுவடி, சொல்லுவ! பல்லிக்கு வாழ்வு வந்தா பன்னீருல பல்லு விளக்குமாம். கல்யாணத்துக்கு நான் சரின்னு சொல்லிட்டேன்ல, அந்த திமிரு பேச வைக்குது!”

“மருமகனே! உங்க ஆத்தா ஆட்டம் ஓவரா இருக்கு. என்னம்மோ உங்க மாமன் பெரிய லாடு லபக்குதாஸ் மாதிரியும், அவன நான் லவட்டிக்கிட்டுப் போயிட்ட மாதிரியும் பில்ட் அப்பு. அவங்க மட்டும் தான் பழமொழி சொல்லுவாங்களா? நானும் சொல்லுவேன் கேளுடா. வேண்டா வெறுப்புக்கு புள்ளைய பெத்து காண்டா மிருகம்னு பேரு வச்சாங்களாம்.”

“நாம பேசிட்டு இருக்கறதுக்கும் இந்த பழமொழிக்கும் என்னடி சம்மந்தம்?” சுதி ஏறியது பத்மாவின் குரலில்.

“பழமொழி சொன்ன அனுபவிக்கனும், ஆராய கூடாதுன்னு சொல்லுடா உங்கம்மாட்ட” என்றவள் பத்மாவை முறைத்துப் பார்த்தாள். அவரும் இவளை முறைத்துப் பார்த்தார். சில நிமிடங்கள் முறைத்தவாறு நின்றவர்கள், குபீரென வெடித்து சிரிக்க ஆரம்பித்தார்கள்.

நிலாவின் நினைவுகள் சில மாதங்களுக்கு முன்னோக்கி சென்றது. அமெரிக்காவிலிருந்து நெஞ்சம் தழும்ப காதலுடன் வந்தவள், தாங்கள் சேர்வதற்கு தடையாக இருக்கும் பத்மாவை சரி கட்டவென அவர்கள் வீட்டிற்கு சென்றிருந்தாள். மகனைத் தூங்க வைத்துவிட்டு அக்கடாவென அமர்ந்திருந்த பத்மா, நிலாவைப் பார்க்கவும் முகம் சுளித்தார்.

“வாடி சீமை சித்ராங்கி. என்ன காத்து இந்தப் பக்கம் வீசுது?”

“இங்க கெட்ட ஆத்மா ஒன்னு சுத்திட்டு இருக்காம். என் காத்து பட்டாலாச்சும் அது அடங்குதான்னு பார்க்கலாம்னு வந்தேன்”

“ஹ்கும். ஒரு பேயே பேயோட்டுதாம்! கலி முத்திருச்சு” முனகியவர்,

“உட்காரு, போய் டீ போட்டு எடுத்துட்டு வரேன்” என உள்ளே சென்றார்.

“பத்து, டீ மனுசன் குடிக்கற மாதிரி போடுங்க.”

“எல்லாம் என் நேரம்டி!” டீயைக் கொண்டு வந்து தந்தவர்,

“என்னடி விஷயம்?” என கேட்டார்.

தான் வாங்கி வந்திருந்த குழந்தைகள் துணியை அவரிடம் கொடுத்தவள்,

“என் வாழ்க்கையைப் பற்றி பேசனும்” என்றாள்.

“அத என் கிட்ட ஏன் பேசப் போற?” அலட்சியமாக கேட்டார்.

“உங்க கிட்ட பேசாம வேற யாரு கிட்ட பேசறது. நீங்க தானே என் மாமியாரு”

“உளறாதே நிலா. அது இந்த ஜென்மத்துல நடக்காது”

“ஏன் நடக்காது?”

“எனக்குப் பிடிக்கல. என் தம்பி யார கட்டிக்கிட்டாலும் ஓகே. நீ வேணாம்”

“ஏன் பத்துக்கா? நான் என்ன பாவம் பண்ணேன்? எங்க வீட்டுல எல்லாரையும் பிடிக்குது, என்னை மட்டும் ஏன் பிடிக்கல?” கண்கள் கலங்கி விட்டது அவளுக்கு.

இந்த நேரடி கேள்வியிலும் அவளின் கண்ணீரிலும் சற்று தயங்கியவர்,

“எனக்கு உன்னை அப்போதிருந்தே பிடிக்கல நிலா. அந்த திமிர் பிடிச்ச மாதி மாதிரியே ஜாடை இருக்கறதனால மட்டும் இல்ல, உன்னோட இந்த அடங்காப்பிடாரித்தனம், ஆம்பள குணம் எதுவும் எனக்கு பிடிக்கல. என் தம்பி உன் கூட எப்படி சந்தோசமா இருப்பான்? என்னைக்காச்சும் அவன் கிட்ட அன்பா பேசியிருக்கியா? எப்போ பாரு சண்டை, அடிதடி, கோபம். உன்னைக் கட்டிக்கிட்டா அவன் எப்படி காலமுச்சோடும் நிம்மதியா இருப்பான்? கொஞ்ச நாளுலயே சிண்ட புடிச்சு சண்டை போட்டு டைவோர்ஸ்ல வந்து நிப்பீங்க. உன் நல்லதுக்கும் தான் சேர்த்து சொல்லுறேன். இந்த கல்யாணம் வேணா நிலா” என முடித்தார்.

“ஏன் பத்மாக்கா, நான் நானா இருக்கறது தப்பா? வெளிய ஒரு வேஷம் போட்டு உள்ளுக்குள்ள விஷத்தை வச்சிருக்கறவங்கள தான் நீங்க நம்புவீங்களா? சின்ன பிள்ளையில இருந்து பார்க்கறீங்களே நாங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கிட்டாலும், அடுத்த நிமிஷமே சேர்ந்து சிரிக்கறது இல்லையா? சொல்லுங்கக்கா! அவன் இல்லாம நான் எப்படியோ வாழ்ந்துருவேன். உங்க தம்பி நான் இல்லைனா, உருத்தெரியாம போயிருவான். பாசத்தக் கொட்டி வளர்த்தீங்களே, அவன் மனசு இன்னுமா உங்களுக்குப் புரியல?”

தர்மசங்கடமாக அமர்ந்திருந்தார் பத்மா.

“பத்மாக்கா! இத்தனை நாளு உங்க கிட்ட சரிக்கு சரியா வாய் பேசி, வெறுப்பேத்தனதுக்கு எல்லாம் மன்னிப்புக் கேட்டுக்கறேன். எங்கள பிரிச்சிறாதீங்கக்கா. சிவா தான் என் உயிர். அவன் கிடைக்கலனா அவன் நினைவோடவே இப்படியே இருந்துருவேன். அவன நினச்ச இந்த மனசுல வேற யாருக்கும் இடம் இல்ல” பத்மாவின் கைகளை தன் முகத்தில் பதித்து கதறிவிட்டாள் நிலா.

“அழாத நிலா! எனக்கும் உனக்கும் சரி வராதுடி. உன் முகத்தப் பார்த்தா எனக்கு ஆகாது, என் முகத்தப் பார்த்தா உனக்கு ஆகாது. இது தேவையா? சிவா வாழ்க்கைதான் நரகம் ஆகும் அக்காவா, ஆத்துக்காரியான்னு”

“என் சிவுக்காக உங்க முகத்த நான் கஸ்டப்பட்டாச்சும் சகிச்சுக்குவேன்”

“அரிசில செய்வாங்களாம் அரிசி கொழுக்கட்டை, வாய் கொழுப்பெடுத்தவளுக்கு வெளக்கமாத்து கட்டை. அம்புட்டு கஸ்டப்பட்டு என் மூஞ்ச நீ சகிச்சுக்க வேணாம். கிளம்பி போய்கிட்டே இரு” முகவாய்கட்டையை தோளில் இடித்துக் கொண்டார்.  

அதற்குள் நிலாவின் போனிற்கு மேசேஜ் வந்தது.

“பத்து, உன் தம்பி ஸ்கைப்ல பேசனுமாம். கம்ப்யூட்டர திறங்க”

ரூமில் இருந்த கணிணி முன் இருவரும் வந்து அமர்ந்தார்கள். வீடியோ காலில் வந்தான் சிவா. முதலில் இவர்கள் இருவரின் முகத்தைத் தான் ஆராய்ந்தான் அவன். நிலாவின் கலங்கிய கண்களும், பத்மாவின் சிவந்த முகமும் அவனை கலவரப்படுத்தியது. நான் முதலில் அக்காவிடம் பேசுகிறேன், பிறகு நீ பேசலாம் என சொல்லியும் பிடிவாதமாக வந்திருந்தாள் நிலா.

“ரெண்டு பேரும் என்ன முடிவு எடுத்திருக்கீங்க? என்ன வாழ வைக்க போறீங்களா? இல்ல சாகடிக்க போறிங்களா?”

பத்மா பேசட்டும் என நிலாவும், நிலா பேசட்டும் என பத்மாவும் அமைதியாக இருந்தனர்.

“என்ன ரெண்டு பேரும் அமைதியா இருக்கீங்க? வைசி, அக்காவுக்கு  கிச்சனுல போய் தண்ணி எடுத்துட்டு வா.” அனுப்பி வைத்தான்.

“சொல்லுக்கா! எனக்கு கல்யாணம் நடக்கறது பிடிக்கலையா? இல்ல எங்களுக்கு கல்யாணம் நடக்கறது பிடிக்கலையா?”

“என்னடா இப்படி பேசற?”

“எங்களுக்கு கல்யாணம் நடக்கலைனா என்னிக்குமே எனக்கு கல்யாணம் நடக்காதுக்கா. ப்ளிஸ் புரிஞ்சுக்கோ! வைசியால மட்டும் தான் உன்னை மாதிரியே எனக்கு அன்ப குடுக்க முடியும். அவளால மட்டும் தான் என் உணர்வுகளை தட்டி எழுப்ப முடியும். அவ இல்லைனா எனக்கு வாழ்க்கை இல்லைனு நல்லா புரிஞ்சிகிட்டேன்கா. ஆனாலும் உன் சம்மதம் இல்லாம எதுவும் நடக்காதுக்கா. உன்னை மீறி நான் போக மாட்டேன். அவளுக்கு புருஷனா ஆகிற பாக்கியம் இல்லைனா வாழ்நாள் பூராவும் உன் தம்பியா காலம் கழிச்சிருவேன்.” கலங்கிய கண்ணை மறைக்க கீழே குனிந்துக் கொண்டான் சிவா.

பின் நிமிர்ந்தவன்,

“என் மேஜைக்கு அடியில ஒரு பாக்ஸ் வச்சிருப்பேன். அதுல நிறைய டைரி அடுக்கி வச்சிருப்பேன். அதுல ஒன்ன எடுத்துப் பாருக்கா” என்றான்.

தட்டாமல் அவன் சொன்னதை செய்த பத்மா, மூச்சடைக்க நின்றார். சிவாவுக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து தினமும் ஸ்ரீ ராம ஜெயம் போல்

“என் காதல் நிலா

என்று வாசல் வரும்

அந்த நாள் வந்து தான்

என்னில் சுவாசம் வரும்”

எனும் பாடல் வரியை ஒவ்வொரு ஏட்டிலும் கிறுக்கி வைத்திருந்தான். மற்ற டைரிகளையும் புரட்டிப் பார்த்தார், அதிலும் அந்த வரிகள் தான்.

‘பாரேன் இவனை! இந்தப் புள்ள மேல இவ்ளோ லவ் வச்சிக்கிட்டு நான் சொன்னேன்னு சித்ராவ கட்டிக்க சம்மதிச்சானே! நான் கூட இதுங்க ரெண்டுக்கும் வயசு கோளாறு, போக போக சரியாகிரும்னு நினைச்சிட்டேன்னே’

மீண்டும் கம்ப்யூட்டருக்கு சென்றவர்,

“பார்த்தேன்டா, நீ கிறுக்குத்தனமா கிறுக்கி வச்ச நிலா பாட்ட. அந்தப் பாட்டு மட்டும் தான் கிடைச்சதா? ஏன்

“நிலா நிலா ஓடி வா

நில்லாமல் ஓடி வா

மலை மீது ஏறி வா

மல்லிகைப்பூ கொண்டு வா” பாட்டு கிடைக்கலியா?”

“அக்கா! நிலாவுக்கு கூட சொல்லாத ரகசியத்த உன் கிட்ட சொன்னேன் பாரு! என்னையே கலாய்க்கிறியா?”

“நீ என்னதான் சொன்னாலும் அவள இப்ப வீட்ட விட்டு போக சொல்லப்போறேன்”

“அக்கா!”

“இப்போ போகட்டும், இனி நம்ம வீட்டு மருமகளா இந்த வீட்டுக்கு வரட்டும்” சிரித்தார் பத்மா.

“அக்கா! நெஜமாவாக்கா? நெஜமா ஒத்துகிட்டியா?” முகம் மலர கண் கலங்க கேட்டான் சிவா.

“ஆமாண்டா ஆமா! என் தம்பி சந்தோசத்தை தவிர வேற என்ன வேணும் எனக்கு! இத்தனை நாளு உன் உண்மையான காதல, இனக்கவர்ச்சின்னு நினைச்சுட்டேன். என்னை மன்னிசிருடா சிவா”

“என்னக்கா மன்னிப்புலாம் கேக்கற. போக்கா!” கடிந்துக் கொண்டான்.

“ஆமாடா பொண்டாட்டி வர போறால, அக்காவ போக தான் சொல்லுவ. இங்க பாருடா, உன் பொண்டாட்டி கிட்ட சொல்லி, என்னை மதிச்சு நடக்க சொல்லு. சரிக்கு சமமா வாயடிச்சா, நாக்கை இழுத்து வச்சு அறுத்துருவேன்”

இவர்கள் பேசுவதை கதவின் அருகிலே நின்று கவனித்துக் கொண்டிருந்த நிலா,

“ஆமா, நீங்க அறுக்கற வரைக்கும் என் கை கோலம் போட்டுட்டு இருக்குமா? தோ பத்து, கிவ் ரெஸ்பேக்ட், டேக் ரெஸ்பேக்ட்” என்றபடியே வந்தாள்.

“பாருடா சிவா! இப்பத்தான் கல்யாணத்துக்கு சரின்னு சொன்னேன், அதுக்குள்ள சண்டைய ஆரம்பிக்கறா”

“இங்க பாரு சிவு! உங்கக்கா சொல்லுறத எல்லாத்தையும் என்னால கேட்க முடியாது. எது நியாயமா இருக்கோ அத மட்டும் தான் நான் கேப்பேன்”

“சிவா டேய்! உன் பொண்டாட்டி நியாயஸ்தினா நாங்களாம் யாருடா? பொய்க்கார புழுவிகளா? பார்த்து பேச சொல்லுடா, வாயில பல்லு இருக்காது!”

“சிவுடு! உங்கக்கா பல்ல பேக்கற வரைக்கும், நாங்க ஈன்னு காட்டிட்டு நிப்போமா? தெறிக்க விட்டுருவோம்!”

“கடவுளே! நிறுத்துறிங்களா ரெண்டு பேரும்? இப்பவே கண்ண கட்டுது. வாழ்நாள் முழுக்க உங்கள எப்படி சமாளிக்கப் போறேனோ தெரியல” கடுப்பாய் சொன்னான்.

“ஏன் நாங்க ரெண்டு பேரும் என்ன முடிய புடிச்சு இழுத்து போட்டா சண்டை போடறோம்? சமாளிக்க முடியலையாம். ஹ்கும். என் மருமகன் அழற சத்தம் கேட்குது. நீங்க வாங்க பத்மாக்கா நாம போகலாம்”

“அதானே! நீ வா நிலா. இவன் கிடக்கறான் லூசு பையன்” இருவரும் அவனை அம்போவென விட்டு விட்டு ரூமை காலி செய்திருந்தார்கள்.

‘இது உனக்கு தேவையாடா சிவா? பொம்பளைங்க சண்டையில மட்டும் மூக்க நுழைக்க கூடாது. நமக்கே ஆப்படிச்சிருவாங்க’ மனசாட்சி காரி துப்ப ஸ்கைப் காலை நிறுத்திவிட்டு வேலையைப் பார்க்க சென்றான் அவன்.  

அதன் பிறகு எல்லா ஏற்பாடும் துரித கதியில் நடக்க, இந்த வருகையே திருமணத்தை முடித்து நிலாவை அவனோடு அழைத்து செல்லதான். மூன்று வருட காண்ட்ராக்ட் முடித்து மீண்டும் இங்கேயே வந்து செட்டல் ஆகி விட பிளான். வந்த பிறகே திருமணத்தை நடத்தலாம் என பத்மாவும் பாலனும் சொன்னதுக்கு இருவருமே ஒத்துக் கொள்ளவில்லை.

ஒரு வழியாக ப்ளைட் வந்திறங்கிய அறிவிப்பு வர, ஆவலுடன் நின்றிருந்தனர் இவர்கள். லக்கேஜ்களை சிவா தள்ளி வர, தீபீயைப் பிரகாஷ் தூக்கிக் கொண்டு வந்தான். எல்லோருடைய கண்களும், தீபாவின் மேலேயே நிலைத்திருந்தன. அவளும் தீபீயைத் தான் வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

இவர்களை நெருங்கியதும், பிரகாஷ் தீபீயைக் கீழே இறக்கி விட்டான். அனைவரையும் பார்த்து முகம் மலர சிரித்த தீபீ, தீபாவை மட்டும் குறுகுறுவென பார்த்தாள். ஒருவரை ஒருவர் பார்வையாலே அளவெடுத்தனர் இருவரும்.

தீபீ மெல்ல நடந்து தீபாவின் அருகில் வந்து,

“டீபா, நைத் து மீத் யூ”(nice to meet you) என கையை நீட்டினாள். பிரகாஷ் ஏற்கனவே தீபாவின் படத்தைக் காட்டி அறிமுகம் செய்வித்திருந்தான்.

தீபாவோ கையைக் கொடுக்காமல் தனது ஜீன்ஸ் பாக்கேட்டில் கையை நுழைத்துக் கொண்டாள். சித்ரா பேச வாயை திறக்கும் முன், பிரகாஷ் அவள் கையை அழுத்தி தடுத்துவிட்டான்.

பாக்கேட்டில் கையை விட்ட தீபா, அதன் உள்ளே இருந்து ஒரு சாக்லேட்டை வெளியே எடுத்து தீபீக்கு நீட்டினாள். பாக்கேட்டில் இருந்த அந்த குட்டி சாக்லேட் உருகி போயிருந்தது. தீபீ வாங்கிக் கொண்டதும்,

“வெல்கம் டூ…. இரு அக்கா” என்றவள், சித்ராவை திரும்பிப் பார்த்து,

“அம்மா, இது என்னா ஊரு?” என கேட்டாள்.

சித்ரா சென்னை என சொல்லவும், மீண்டும் தீபீயிடம் திரும்பியவள்,

“வெல்கம் டூ சென்னை அக்கா” என தீபீயின் கையைப் பிடித்துக் குலுக்கினாள்.

பின் பிரகாஷிடம் திரும்பியவள்,

“பிதாஜி! இவ்வளவு நேரம் அக்காவ தூக்குனீங்க இல்ல, இப்ப என்னை தூக்குங்க” என உரிமைப் போராட்டத்தை இனிதே ஆரம்பித்து வைத்தாள்.

புன்னகையுடன் பிரகாஷ் தீபாவைத் தூக்கிக் கொள்ள, தீபீயை சித்ரா தூக்கிக் கொண்டாள்.

‘வீட்டுக்கு போன உடனே முதல்ல இவங்க நாலு பேருக்கும் சுத்தி போடனும். என் கண்ணே பட்டுருச்சு’ என மனதில் பேசிக் கொண்டார் பத்மா.

தீபீயை சித்ராவிடம் இருந்து மாற்றி மாற்றி தூக்கி கொஞ்சிக் கொண்டனர் மணியும், நிலாவும். தீபா மனம் கோணாமல் அவளையும் தூக்கிக் கொண்டனர். ஒரு வழியாக, சிவா தன் மருமகனைத் தூக்கிக் கொள்ள, நிலா அவன் கைப்பிடித்துக் கொண்டாள். குடும்பமாக பேசி சிரித்தப்படி விமான நிலையத்தை விட்டு வெளியேறினார்கள் அவர்கள்.

 

(தொடர்ந்து உன்னோடுதான்)

(அடுத்து எபிலோக் எபியில் சந்திக்கலாம் மக்களே)

 

    

 

Written by

Ardent reader, kirukkufying something, want to travel with characters around me.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!