Uyir kaadhal

Uyir kaadhal

சுழலும் மின்விசிறி தன் பணியை கவனமாக சத்தமின்றி செய்து கொண்டிருக்க, சாய்வு நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து கண்களை மூடியிருந்த தனாவின் நெற்றியில் இருந்த சுருக்கம், அவனுள் நிறைந்திருந்த சிந்தனையை எடுத்துக் காட்டியது.

ஹரிணி ஃபோன் செய்து திடீரென்று சம்பந்தமில்லாமல் ஆனந்தனைப் பற்றி கேட்டதில் இருந்து, மனது ஒருநிலையில் இல்லை அவனுக்கு.

பதட்டத்தை வெளிக்காட்டாமல் எதை எதையோ சொல்லி சமாளித்து அலைபேசியை வைத்துவிட்ட போதும், மனதின் படபடப்பு அடங்க வெகு நேரமாயிற்று அவனுக்கு.

அலுவலகம் செல்லக்கூடப் பிடிக்காமல் மனதை உழட்டும் பழைய நினைவுகள்… பெற்றவர்கள் இரண்டு நாள் பயணமாக குலதெய்வம் கோவிலுக்குச் சென்றிருக்க,

அவன்மட்டும் வீட்டில் தனிமையிலிருப்பது மேலும் மேலும் பழைய நினைவுகளிலேயே ஊறிக்கிடக்க ஏதுவாயிருந்தது.

சிறு வயதில் இருந்தே ஒன்றாக பழகி ஒன்றாக விளையாடி ஒன்றாக படித்து உயிராய் இருந்த நண்பனின் நினைவுகள் அளவுக்கதிகமாய் மேலெழும்பியது.

இத்தனை வருடங்களில் ஒரு துளிகூட மறக்காமல் உள்ளுக்குள் கனன்று கொண்டிருக்கும் நெருப்பு போல, குமுறலை அடக்கி வைத்திருக்கும் எரிமலை போல அழுத்தி வைக்கப்பட்டிருந்த ஆனந்தனின் நினைவுகள் கொல்லாமல் கொன்று கொண்டிருந்தது அவனை.

எந்த கங்கையில் மூழ்கினாலும் தீராத பாவத்தை செய்து விட்ட மனது சாமானியத்தில் சமாதானம் அடையுமா என்ன? வாழ்க்கைக்கு மட்டும் ரிவர்ஸ் பட்டன் என்ற ஒன்று இருந்தால் பின்னோக்கிச் சென்று பலவற்றை மாற்றியமைத்து விடலாமே… நடக்கவே நடக்காத பேராசைக்கு ஆசைப்பட்டது மனது.

வாழ்க்கையை வெறுத்து போலியாய் வாழ்ந்து கொண்டிருக்கும் போதும் செய்த பாவம் சிறுகச் சிறுக அவன் உயிரைக் கொன்று தின்று கொண்டிருப்பது அவனுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.

எட்டு வருடங்களாக அனுபவிக்கும் இந்த சித்ரவதைக்கு பதில் அன்றே உயிரைக்கூட விட்டிருக்கலாம்…

எண்ணியதும் தன்னைமீறி கண்ணோரத்தில் கண்ணீர் வழிந்தது.

அலைபேசி இசைக்கவும் சற்று தன்னிலைக்கு வந்தவன், அழுந்த முகத்தைத் துடைத்துக் கொண்டு அலைபேசியை உயிர்ப்பித்து காதில் வைத்துக் கொண்டான்.

எதிர்புறம் சொல்லப்பட்ட செய்திகளை கவனமாக காதில் வாங்கியவன், “ஓ… சரண் மலைக்கு மேல விசாரணைக்குப் போயிருக்காரா? எதுக்காக? நீயும் பின்னாடி போயிருக்க வேண்டியதுதான?”

“…”

“ஓ… ஓகே… ஓகே… கவனமா இரு.”

“…”

“அதுக்குதான் உனக்கு பணம் தரேன். எனக்குத் தேவையான எல்லா தகவலும் திரட்டித் தரவேண்டியது உன் வேலை.”

“…”

“இந்தக் கேஸோட மொத்த டிடெயிலும் எனக்கு வேணும்.

விசாரணை எந்த லெவல்ல போயிட்டு இருக்குன்னு உடனுக்குடனே சொல்லு.”

“…”

“பார்த்து கவனமா பண்ணு. சரண் கண்ணுல சிக்கிடாதே. தப்பித் தவறி மாட்டினாலும் என் பேர் வெளிய வரக்கூடாது.”

“…”

“அவர் என் தங்கச்சி மாப்பிள்ளை. சொன்னது நினைவுல இருக்குல்ல. அவருக்கு உன்னால எந்தப் பிரச்சினையும் வரக்கூடாது. அவருக்குத் தெரியாம தகவல் திரட்றது மட்டும்தான் உன் வேலை.”

“…”

“ம்ம்… சரி.” அலைபேசியை அணைத்தவன் ஆயாசமாக நாற்காலியில் சாய்ந்து கொண்டான். வலிக்கும் என்று தெரிந்தே மனம் மீண்டும் மீண்டும் தன்னைத் தானே கீறிக்கொள்ள ஆரம்பித்தது.

மதுரை பேருந்து நிலையத்தில் ஹரிணியும் சுஜியும் வந்து இறங்கிய போது நன்றாக விடிந்திருந்தது. காலை வெயிலே சற்று சுள்ளென்று உரைத்தது.

“இது என்னடி இந்த ஊர்ல காலையிலயே இவ்வளவு வெயில் அடிக்குது? பெங்களூர் கிளைமேட்டுக்கு ஃபிரிட்ஜ்ல வச்ச மாதிரி ஃபிரெஷ்ஷா இருந்துட்டு இந்த ஊர்ல நாலு நாள் இருந்தா வத்தலாகிடுவோம் போலவே…”

சுஜியின் அங்கலாய்ப்புக்குப் பதில் சொல்லாமல் சிரித்துக் கொண்டாள் ஹரிணி.

“இங்க பக்கத்துல எதாவது நல்ல ஹோட்டல்ல ரூம் போட்டு ஃபிரெஷ் பண்ணிட்டு ஹேப்பிண்ணா வீட்டுக்குப் போகலாம்.”
கூகுள் ஆண்டவரிடம் தகவல் பெற்று அருகில் இருந்த நல்ல ஹோட்டலை தேர்ந்தெடுத்தவர்கள் ஆட்டோ ஒன்றை அமர்த்திக் கொண்டு அந்த ஹோட்டலுக்குச் சென்றனர்.

ஹோட்டலில் அறை எடுத்து பிரெஷ் செய்து கொண்டவர்கள் அங்கேயே ரிசப்ஷனில் தங்களுக்குத் தெரிந்த தகவல்களைக் கூறி ஆனந்தனின் வீட்டுக்குப் போகும் வழியை அறிந்து கொண்டனர்.

பின்னர் ஆட்டோ ஒன்றை அமர்த்திக் கொண்டு ஆனந்தனின் வீடு இருக்கும் ஏரியா வரை வந்த பிறகு, ஓரளவுக்கு ஹரிணிக்கு தாங்கள் இருந்த இடம் நியாபகம் இருக்கவும், சரியாக வீட்டைக் கண்டுபிடித்து வாசலில் இறங்கிக் கொண்டனர்.

சிமெண்ட் காரைகள் பெயர்ந்து பெயிண்ட் அடித்தே பல வருடங்கள் ஆகிப்போய், களையிழந்து பாழடைந்து கிடந்தது ஆனந்தனின் வீடு.

வீடு இருக்கும் நிலையே உள்ளிருப்பவர்களின் மனநிலையைத் தெளிவாகக் கூறியது. இரண்டடுக்குத் தொட்டிக்கட்டு வீடு… பத்து நபர்கள் படுக்கும் அளவுக்கு விஸ்தாரமான திண்ணை அதில் விளையாடிய பழைய நியாபங்களைக் கொடுத்தது அவளுக்கு.

பராமறிப்பில்லாத தோட்டம் களையிழந்து காணப்பட்டது. அக்கம்பக்கத்து வீடுகள் நவீனமாகியிருக்க, இந்த வீடு மட்டும் புகை படிந்த ஓவியமாக அப்படியே இருந்தது.

“இதுவா? இந்த வீடா ஹரிணி?”
வீட்டைப் பார்த்த ஹரிணி மெல்ல தலையசைத்து ஆமோதித்தாள். தான் ஓடியாடிய இடங்களைக் கண்கள் மீண்டும் படம் பிடித்துக் கொண்டன.

“என்னடி வீடு இப்படி பாழடைஞ்சு போய் கிடக்குது? உள்ள ஆளுங்க யாரும் இருக்காங்களா இல்லையா?”

“ம்ம்… தெரியலையே. வா உள்ள போய் பார்க்கலாம்.”
சற்று அளவில் பெரிய அந்த கம்பி கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே வந்தனர். எண்ணெய் ஊற்றியே பல வருடமானதால் கிரீச்சென்ற சத்தத்தோடு இவர்களது வருகையை உள்ளிருந்தவர்களுக்குத் தெரிவித்தது அந்த கேட்.

கேட் திறக்கும் ஓசையைக் கேட்டு வெளியே வந்தார் முதிய பெண்மணி ஒருவர். உடைந்து விழுந்துவிடும் போல மெல்லிய தேகம், சுருக்கம் விழுந்த முகம். நரைத்த முடியை ஏனோதானோவென்று அள்ளி முடிந்திருந்தார். கண்களைச் சுற்றியிருந்த கருவளையம் சோகத்தின் சாயலை நிரந்தரமாக தந்திருந்தது அவர் முகத்துக்கு.

“யாரும்மா? யார் வேணும் உங்களுக்கு?” சற்று பலவீனமான குரலில் விசாரித்தவரை நினைவுக்கு கொண்டு வர முயற்சித்தாள் ஹரிணி.

‘ஹேப்பிண்ணாவுக்கு பெரியம்மா அம்மா சித்தி இருந்தாங்க… ஒரு அத்தை கூட இருந்த நியாபகம்… இதுல இவங்க யாருன்னு நமக்கு அடையாளம் தெரியலையே’ என்றெண்ணிக் கொண்டவள்,

“நாங்க பெங்களூருவிலிருந்து வரோம். இங்க பக்கத்து வீட்ல முன்னாடி கார்த்திகேயன் சுபத்ரான்னு இருந்தாங்களே…”
சற்று யோசித்தவர், “ஆமாம், ஆனா அவங்க காலி பண்ணிட்டு போய் ரொம்ப வருஷமாச்சேம்மா.”

“நான் அவங்க பொண்ணுதான். ஹரிணி. தனசேகர் தங்கச்சி.”
முகமெல்லாம் மலர்ந்தது அவருக்கு.

“அடடே ஹரிணியா, குட்டிப் பிள்ளையா பார்த்தது. அடையாளமே தெரியலம்மா. எவ்வளவு வளர்ந்துட்ட. அம்மா அப்பாலாம் வந்திருக்காங்களா? நல்லாயிருக்காங்களா? தனியாவா வந்திருக்க?” படபடவெனப் பேசியவரை மலர்ந்த முகத்தோடு நோக்கியவள்,

“அம்மா அப்பாலாம் வரல ஆன்ட்டி. எல்லாரும் நல்லாயிருக்காங்க. இவ என் ஃபிரெண்டு. நாங்க எங்க படிப்பு சம்மந்தமான ஒரு புராஜக்ட் வொர்க்குக்காக மதுரை வந்தோம். அப்படியே உங்க எல்லாரையும் பார்க்கனும் போல இருந்தது. அதான் வந்தோம்.”

“வாம்மா… வா… உள்ள வா. நீயும் வாம்மா.”
இருவரையும் கைபிடித்து உள்ளே அழைத்துச் சென்றவர், “அண்ணி, யாரு வந்திருக்காங்கன்னு பாருங்க.” என்றபடி உள்ளே போக… அவர் ஆனந்தனின் அத்தை என்று புரிந்து கொண்டாள்.

“இத்தனை வருஷம் கழிச்சும் எங்களையெல்லாம் நியாபகம் வச்சு பார்க்கனும்னு தேடி வந்திருக்கியே… ரொம்ப சந்தோஷமா இருக்கு ராசாத்தி.” என்றபடி கன்னம் தடவி முத்தமிட்டவரை புன்னகையோடு பார்த்துக் கொண்டாள்.

இவரின் குரல் கேட்டு வெளியே வந்த இரு பெண்மணிகள், ஹரிணியைப் பற்றி அறிந்து கொண்டு சந்தோஷப்பட, அவர்கள் இருவரும் ஆனந்தனின் பெரியம்மா மற்றும் சித்தி என்று அறிந்து கொண்டாள். பெற்றவர்களைப் பற்றியும் பெரியப்பா, பெரியம்மா, தனா அண்ணன் பற்றியும் விசாரித்தவர்களுக்குத் தகவல்களைச் சொன்னாள்.

“இந்த சேகர்கூட அதுக்கப்புறம் வந்து எங்களைப் பார்க்கவே இல்லையே. ஆனந்தனே போனதுக்கப்புறம் நாங்கலாம் தேவையில்லைன்னு நினைச்சிட்டான் போல.” வெகுவாக வருந்தியவரை நெஞ்சில் ஏற்பட்ட திடுக்கென்ற வலியோடு ஏறிட்டாள்.

“ஹேப்… ஆனந்தண்ணா… இப்ப… என்னாச்சு?” என்ன கேட்பது ஏது கேட்பது என்று புரியாத தயக்கத்தோடு தடுமாறியவளைப் பார்த்த மூவரின் விழிகளுமே நீரால் நிறைந்தது.

“உனக்கு எதுவுமே தெரியாதாடா?”
ஏதோ ஒன்று இதயத்தை அழுத்த, கலங்கத் துவங்கிய கண்களோடு இல்லையென்று தலையசைத்தாள்.

உள்ளத்தின் ஏதோ ஒரு கடைசி மூலையில் ஆனந்தன் நலமாக ஃபாரினில் இருப்பான் என்று நூலிழை போல ஒட்டியிருந்த எண்ணம் உதிர்ந்தது.

ஆனந்தனின் பெரியம்மா சேலைத் தலைப்பை வாயில் வைத்தபடி விசும்ப, அத்தையோ கலங்கிய கண்களுடன்,

“சின்னப்புள்ளன்னு உனக்குச் சொல்லாம இருந்திருப்பாங்க. ஆனந்தன் நம்மையெல்லாம் விட்டுட்டுப் போய் எட்டு வருஷமாகிடுச்சிடா. பெரிய விபத்துல சிக்கி உயிரை விட்டுட்டான். இந்த வீட்டோட சந்தோஷம் ஜீவன் எல்லாம் அவனோடவே போயிடுச்சி. ஏதோ உயிரோட வாழனுமேன்னு நாங்கலாம் வாழ்ந்துகிட்டு இருக்கறோம்.”

கண்களில் நீரோடு முகம் கசங்கச் சொன்னவரைப் பார்த்த ஹரிணியின் கண்களிலும் கண்ணீர் நிறைந்தது.

‘நிஜம்தானா…? ஹேப்பிண்ணாவுக்கு ஏதோ நடந்திருக்கிறது என்று நான் சந்தேகப்பட்டது நிஜம்தானா? நூறில் ஒரு வாய்ப்பாக அவர் நன்றாக இருக்கக்கூடும் என்று நான் எண்ணியிருந்தது பொய்யாய் போனதே’ மனம் வெகுவாக அரற்ற…

ஹரிணியின் கண்களில் கண்ணீர் வழிந்தது. சூழ்நிலையின் கணம் சுஜியையும் வருத்த ஹரிணியின் கரங்களைப் பிடித்து அழுத்திக் கொடுத்தாள்.

உள்ளுக்குள் பெரும் புயலே வீசிக் கொண்டிருந்த போதும் அவளுக்குப் பல தகவல்கள் தெரிய வேண்டி இருந்ததால் சற்று தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட ஹரிணி, “ஆனந்தண்ணா அப்பா அம்மா எங்க ஆன்ட்டி?”
ஹரிணியின் கேள்விக்கு ஆனந்தனின் சித்திதான் பதில் கூறினார்.

“மாமா கடைக்குப் போயிருக்காங்க. அக்காவுக்கு இப்ப சில வருஷங்களாவே உடம்புக்கு முடியல. ரூம்ல படுத்திருக்காங்க. வாம்மா அவங்களைப் பார்க்கலாம்.” என்றழைக்க அவர் பின்னே எழுந்து சென்றனர் ஹரிணியும் சுஜியும்.

உள்ளறைக்கு நடக்கும் போது வழியில் எதிர்ப்பட்ட பூஜையறையின் வாசலில் தேங்கி நின்றாள் ஹரிணி. அவளது கண்கள் பூஜையறையின் உள்ளே மாட்டி வைக்கப் பட்டிருந்த புகைப்படங்களை நோக்கியது.

மேல் வரிசையில் மூன்று புகைப்படங்கள் மாட்டப்பட்டு இருக்க கீழே நடுநாயகமாக ஆனந்தனின் புன்னகைக்கும் முகம் கொண்ட புகைப்படம் மாட்டப்பட்டிருந்தது.

பொட்டிட்டு மாலையிட்டிருந்த புகைப்படத்தைப் பார்க்கவே மனம் பிசைந்தது.

ஆனந்தனின் புகைப்படத்தில் தோற்றம் மறைவு என்று குறிப்பிடப்பட்டிருந்த தேதியில் மறைவுத் தேதி அவன் கடைசியாக டைரி எழுதிய தேதி. அதைப் பார்த்ததும் ஹரிணியின் முகம் மேலும் கசங்கிக் கலங்கியது.

டைரியின் பக்கங்கள் ஏன் மேலும் நிரப்பப்படவில்லை என்பது புரிந்தது.
அவளது தோளைத் தொட்ட ஆனந்தனின் சித்தியின் முகத்தை ஏறிட்டவளின் கலங்கிய கண்களைக் கண்டவர், மிகுந்த வருத்தம் நிறைந்த குரலில், “ஆச்சி தாத்தாவ நியாபகம் இருக்காடா?”
ஆமோதித்து தலையசைத்தாள்.

“ஆச்சி, தாத்தா, பெரிய மாமா மூனு பேருமே ஆனந்தன் இறந்து ஒரு வருஷத்துக்குள்ள அடுத்தடுத்து இறந்துட்டாங்கடா.”
ஆனந்தனின் பெரியம்மாவின் முகத்தைப் பார்த்தவளுக்கு அப்போதுதான் அவரது வெறுமையான நெற்றி உரைத்தது. வீட்டின் உயிர்நாடியாய் ஜீவநாதமாய் இருந்தவனின் மறைவு அவ்வீட்டின் நிலைமையை தலைகீழாய் மாற்றியிருப்பது புரிந்தது.

பாரமாகிப்போன மனதோடு நகர்ந்தவள் அறையினுள் சென்று ஆனந்தனின் தாயைப் பார்த்தாள். வற்றிப் போன தேகத்தோடு படுத்திருந்தவர் இவர்களைக் கண்டதும் மெல்ல எழுந்து யாரெனக் கேட்க, ஹரிணியின் விபரத்தைச் சொன்னதும் மெல்ல ஒளிர்ந்தது அவரது முகம்.

நடுங்கிய கரங்களைத் தூக்கி ஹரிணியின் முகம் வருடியவர், அவளிடம் அவளது சிறுபிராயத்தை நினைவு கூர்ந்து கொண்டார்.
சிறுவயதில் தனக்கு எத்தனையோ பொழுதுகளில் உணவூட்டியவரின் பிரியத்தை நினைத்துக் கொண்டவள், அவரது உடல்நிலையை விட மனநிலையே அவரை வெகுவாக முடக்கிப் போட்டுள்ளதை புரிந்து கொண்டாள்.

சிறிது நேரம் அவரிடம் பேசிக் கொண்டிருந்துவிட்டு வெளியே வந்த ஹரிணியும் சுஜியும் ஆனந்தனின் சித்தியின் அருகே சென்று அமர்ந்துகொண்டனர். அவர்களுக்கு கேட்க வேண்டிய கேள்விகளும் தெரிந்து கொள்ளவேண்டிய விபரங்களும் நிறைய இருந்தன.

“அக்காங்கலாம் இப்ப எப்படி இருக்காங்க ஆன்ட்டி?” மெல்ல பேச்சு கொடுத்தாள்.

“எல்லாரும் நல்லாயிருக்காங்கடா. அவங்கவங்க மாமியார் வீட்ல இருக்காங்க. எப்பனாலும் தோதுபோல வந்து போவாங்க.”

“ஆனந்தண்ணாவுக்கு என்ன ஆச்சு ஆன்ட்டி?” அவளுக்கு பூரணியைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியிருந்தது. எப்படி கேட்பது என்றுதான் புரியவில்லை. அதனால் அவர் சொல்வதிலிருந்து ஏதேனும் விபரம் கிடைக்குமா என்று பார்த்தாள்.

“எந்த ஜென்மத்துல என்ன பாவம் செய்தோமோ, வாழ வேண்டிய வயசுல எங்க பிள்ளைய இழந்துட்டோம்.” பெருமூச்சு விட்டுக்கொண்டவர் தொடர்ந்தார்.

“அவனுக்கு கல்யாணம் பேசி முடிச்சிருந்தோம்டா. நம்ம மாதவி நியாபகம் இருக்கில்ல உனக்கு, அவளோட உறவுக்காரப் பிள்ளைதான். ஆனந்தன் ஆசைப்பட்டுக் கேட்டதால பேசிமுடிச்சோம். எல்லாம் சந்தோஷமாதான் போச்சு.
அந்தப் பிள்ளையும் இவனும் அப்ப பெங்களூருல படிச்சிட்டு இருந்தாங்க. நம்ம சேகர்கூட ஆனந்தனோட சேர்ந்து அங்கதான் படிச்சாப்ல.

கல்யாண சேதிய அந்தப் பிள்ளைக்கிட்ட நானே சொல்லப்போறேன்னு ஆசையா போனவன்தான் திரும்பவே இல்லை.”
மீண்டும் அன்றைய நினைவின் தாக்கத்தில் அவருக்குத் தொண்டையடைக்க, ஆனந்தனின் அத்தைதான் தொடர்ந்தார்.

“கல்யாணச் செய்திய சொல்றதுக்காக அந்தப்பிள்ளையையும் கூட்டிக்கிட்டு சிக்மகளூர் மலைக்கு போனவன் கார் அந்த மலைப் பாதையில தடுமாறி விழுந்துடுச்சாம்மா.

கார் விபத்துக்குள்ளானதை கண்டுபிடிக்கவே ஒரு வாரம் ஆகிடுச்சு. எரிஞ்ச நிலமையில இருந்த காரையும் வெறும் சாம்பலையும்தான் எங்க கண்ல காட்டினாங்க. இரண்டு பேரும் செத்துப் போயிட்டாங்கங்கறதை இப்பவரை எங்களால ஏத்துக்கவே முடியல.

மாதவி வீட்லயும் அவங்க வீட்டுப் பொண்ணு செத்துப் போனதுல ரொம்ப உடைஞ்சு போயிட்டாங்க.

திருவண்ணாமலையில கல்யாண சேதிய பேசி முடிச்சு பெங்களூரு கிளம்புனவன், அந்த நேரத்துக்கு மேல அந்த புள்ளையக் கூட்டிக்கிட்டு மலைக்கு மேல போயிருக்கவே வேண்டாம். என்ன செய்ய எல்லாம் விதி.

விபத்து நடந்தப்ப எங்களுக்குத் தகவல் சொல்லி, சேகர்தான் கூடவே இருந்து எல்லா உதவியும் செய்தான் அப்ப. ஆனா, அதுக்கப்புறம் அவனுமே இங்க வரலை.”
சிறிது நேரம் நிசப்தமாயிருந்தது. சுஜிதான் கேட்டாள்,

“திருவண்ணாமலையில இருந்து ஆனந்தண்ணா எத்தனை மணிக்கு கிளம்புனாங்க? விபத்து எத்தனை மணிக்கு நடந்ததா போலீஸ்ல சொன்னாங்க?”
சுஜியின் கேள்விக்கு யோசனையாக புருவத்தைத் தூக்கினாலும் ஆனந்தனின் சித்தி பதில் கூறினார்.

“ஆனந்தன் திருவண்ணாமலையில அவங்க வீட்ல பேசி முடிச்சிட்டு ஒரு பதினோரு பன்னென்டு மணிக்கெல்லாம் அங்க இருந்து கிளம்பிட்டான். சாயங்காலம் நாலு மணிக்கு அந்த புள்ளய கூட்டிட்டு மலைக்கு கிளம்பினானாம். விபத்து ஏழு எட்டு மணிக்கு மேல நடந்திருக்கலாம்னு சொன்னாங்க.

எங்களுக்கு இந்த விபரமெல்லாம் தனாவும் அவன்கூடத் தங்கியிருந்த கூட்டாளிப் பசங்களும்தான் சொன்னாங்கப்பா. ”
இதைக் கேட்டதும் சுஜிக்குள் ஏகப்பட்ட குழப்பங்கள். இதைப் பற்றி விரிவாக ஹரிணியிடம் பேச வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள். மேலும் சிறிது நேரம் பேசி சில விபரங்களைப் பெற்றுக் கொண்டனர்.

அந்த நேரத்தில் ஆனந்தனையும் பூரணியையும் இழந்த சோகத்தில் இவர்கள் தடுமாறி நின்றபோது தனாவும் அவனது நண்பர்களுமே அனைத்து போலீஸ் ஃபார்மாலிட்டிகளையும் முடித்துக் கொடுத்தனர் என்பது அவர்களிடம் பேசியதில் புரிந்தது.

மேலும் சற்று நேரம் அவர்களோடு பேசிக்கொண்டிருந்துவிட்டு விடைபெற்றுக்கொண்டு அறைக்குத் திரும்பினர்.

அறைக்குள் வந்ததும் வேகமாக அந்த டைரியை எடுத்துப் பார்த்த சுஜி கடைசி பக்கத்தில் இருந்த ஆனந்தனின் வரிகளைப் படித்துப் பார்த்தாள்.

“ஹேய் ஹரிணி ஒரு விஷயம் கவனிச்சியா? ஆனந்தண்ணா காலையில பதினோரு பன்னென்டு மணிக்கு திருவண்ணாமலையில இருந்து கிளம்பியிருக்காரு. நிக்காம வந்திருந்தா நாலு மணிக்கு வந்து பூரணிய சிக்மகளூர் கூட்டிட்டுப் போயிருக்க வாய்ப்பு இருக்கு.

ஆனா இந்த டைரியோட கடைசி பக்கத்தைப் படிச்சுப் பாரு. அவர் காவிரிப் போராட்டத்தால கிட்டத்தட்ட அஞ்சு மணிநேரம் ஓசூர் பார்டர்ல இருந்திருக்காரு. அவர் கண்டிப்பா நாலு மணிக்கு பெங்களூர் போயிருக்க வாய்ப்பே இல்லை.”
தீவிரத்தோடு பேசிய சுஜியின் வாதத்தைக் கேட்ட ஹரிணியின் முகமும் மாறியது. உண்மைதானே சுஜி சொல்வது. குழப்பத்தோடு சுஜியை ஏறிட்டாள்.

“அவர் பெங்களூருக்குப் போயிருக்கவே எட்டு மணிக்கு மேல ஆகியிருக்கும். அதுக்கு மேல பூரணிய கூட்டிட்டு சிக்மகளூர் எப்படி அவர் போயிருப்பாரு? கண்டிப்பா போயிருக்க வாய்ப்பேயில்லை.”

“ஆனா அவரோட ஃபோட்டோல மறைவுத் தேதி ஹேப்பிண்ணா கடைசியா டைரி எழுதிய தேதிதான். அதை நான் பார்த்தேன்.”

“ம்ம்… நானும் பார்த்தேன். விபத்து அன்னைக்குதான் நடந்திருக்கு. ஆனா, அவங்க தானா அங்க போயிருக்க வாய்ப்பில்ல ஹரிணி. ரிசர்வ் ஃபாரஸ்ட் ஏரியால ஆறு மணிக்கு மேல மலை ஏற பர்மிஷனே கிடைக்காது.”
சுஜி சொல்வதில் உள்ள உண்மை ஹரிணிக்கு உரைத்தது.

“உண்மையில ஆனந்தண்ணாவுக்கும் பூரணிக்கும் என்ன ஆச்சுங்கறதுக்கான பதில் தனா அண்ணனுக்கும் அவங்க பிரெண்டுங்களுக்கும்தான் தெரியும். அவங்களால ஆனந்தண்ணாவுக்கும் பூரணிக்கும் ஏதாவது ஆகியிருக்கலாம்.

காட்டுல நீ பார்த்தது கண்டிப்பா ஆனந்தண்ணாதான். அவர்தான் பழி வாங்கறதுக்காக கொலைகளைச் செய்திருக்கலாம்.

ஆனந்தண்ணா பிரெண்டுங்கள்ல மூனு பேரு உயிரோட இல்லை. மீதி இருக்கறது தனா அண்ணன் மட்டும்தான். அவருக்கும் ஆனந்தனால ஏதாவது ஆபத்து வரும்முன்ன அவரை நாம அலர்ட் பண்ணனும். முதல்ல இதெல்லாம் சரணுக்கு இன்ஃபார்ம் பண்ணனும்.”
சுஜி பேசப் பேச ஏனோ நெஞ்சைப் பிசைந்தது. அவர் இறந்துவிட்டதாக எண்ணித் தவிக்கும் பெற்றவர்களைக்கூட வந்து பார்க்காமல் காட்டில் அலையும் ஆனந்தனின் நினைவு வந்தது.

என்னதான் ஆனது அவருக்கு? அவனது குடும்பத்தினரிடம் தற்போது நடக்கும் எதையுமே சொல்ல முடியாமல் கிளம்பி வந்திருந்தனர்.

தனாவையும் தவறாக எண்ணக்கூட முடியவில்லை அவளால். ‘தனா அண்ணனுக்குள் என்ன ரகசியம்தான் புதைந்துள்ளது?’ அவரை நேராகச் சந்தித்துக் கேட்டால் மட்டுமே பதில் கிடைக்கும். என்று எண்ணிக் கொண்டவள் பலவீனமான குரலில்,

“ஹேப்பிண்ணாவும் தனாண்ணாவும் சின்ன வயசுல இருந்து பிரெண்ட்ஸ் சுஜி. தனா அண்ணன் கண்டிப்பா எதுவும் செய்திருக்க மாட்டாங்க.”
அவளது குரலே ஹரிணியின் பலவீனத்தை எடுத்துக் காட்டிவிட, ஆதங்கத்தோடு அவளைப் பார்த்தாள் சுஜி.

“நானும் அப்படிதான் நினைச்சேன் ஹரிணி. ஆனா இப்ப எனக்கு அப்படி தோனலை. நடந்திருக்கற கொலைகள் அப்படி நினைக்க விடல. எனக்கு தனா அண்ணன் மேலயும் சந்தேகம் இருக்கு. அவருக்குத் தெரியாம எதுவுமே நடந்திருக்காது. நான் சரணுக்குப் பேசறேன்.” என்றபடி தனது அலைபேசியை எடுக்க, இப்பொழுதும் தடுத்தாள் ஹரிணி.

“ப்ளீஸ் சுஜி… இப்ப எதுவும் சொல்ல வேணாம். நாம திருச்சிக்குப் போய் தனா அண்ணனை நேராவே பார்த்து பேசலாம். என்ன நடந்ததுன்னு அவர்கிட்ட கேட்கலாம். அதுக்கப்புறம் சரண்கிட்ட சொல்லலாம் பா…”
கெஞ்சிய ஹரிணியைப் பார்த்தவள், வேறு வழியின்றி தலையசைத்த நேரத்தில் சரியாக ஹரிணியின் அலைபேசி இசைத்தது.

சரண் காலிங்… என்ற வார்த்தைகளைப் பார்த்து சில நொடிகள் ஸ்தம்பித்துப் போனவள் சற்று சுதாரித்துக் கொண்டு அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தாள்.

“எங்க இருக்க இப்ப? ஊருக்குப் போறதைக்கூட நீ எனக்கு சொல்ல மாட்டியா? அம்மா இப்பதான் சொன்னாங்க. எவ்வளவு பிரச்சனைகள் உன்னைச் சுத்தி இருக்கு. ஆனா நீ தனியா கிளம்பி போயிருக்க.”
எடுத்தவுடன் படபடவென்று பொறிந்தவன் மறுமுனையில் பதிலின்றி மௌனமாக இருக்கவும்,

“ஹரிணி உன்னைத்தான், பேசு…”

“…”
அவளின் மௌனம் அவனது குரலைக் குழைத்தது. “ஹேய் சாரிடா. நான் ஏதோ கோபத்துல நேத்து பேசிட்டேன். கஸ்டடில எடுப்பேன்னு சொன்னது தப்புதான். உனக்கு ஏதாவது பிரச்சனை வந்துடுமோன்னு ரொம்ப பயந்துட்டேன். நீயும் நடந்த எதையும் என்கிட்ட சொல்லலைங்கவும் கோபம் வந்துடுச்சி. நான் பேசியது தப்புதான் சாரி. பேசுடா…”

“சாரியெல்லாம் எதுக்கு சொல்றீங்க? நடந்ததை சொல்லாம மறைச்சது என் தப்புதான.”
மெல்லிய அவளது குரலைக் கேட்டு சில நொடிகள் மௌனமாக இருந்தவன், “இன்னமும் நடந்ததை முழுசா நீ சொல்லலை ஹரிணி.”

“அப்படியெல்லாம் எதுவுமில்லை” குரல் குற்றவுணர்வோடு வந்தது.

“உனக்கா சொல்லனும்னு தோனும்போது சொல்லு. என்னைக்குமே உனக்கு நான் இருப்பேன் அதை மட்டும் நினைவுல வச்சிக்கோ. இப்ப எங்க இருக்க?”

“திருச்சில தனா அண்ணன் வீட்ல இருக்கேன். சுஜிகூடதான் வந்தேன்.” கிளம்புவதற்குத் தயாராக அனைத்தையும் பேக்கில் எடுத்து வைத்தவள் சரணிடம் வேறு வழியின்றி பொய்யைச் சொன்னாள். மதுரை என்றால் மதுரைக்கு ஏன் சென்றாய் என்று குடைவான் என்பதால்.

“ம்ம்… ஓகே. என்னைக்குத் திரும்பி வர்ற?”

“இரண்டு நாள்ல கிளம்பி வந்துடுவேன்.”

“ஓகே. டேக் கேர்.”
ஹரிணி அலைபேசியை அணைத்ததும் அறையை காலி செய்து கொண்டு வெளியே வந்தவர்கள் ஆட்டோ ஒன்றைப் பிடித்து மதுரை பஸ்நிலையம் சென்று திருச்சி செல்லும் பேருந்தில் ஏறினர்.

ஹரிணியிடம் பேசிவிட்டு அலைபேசியை வைத்தவனின் உள்ளம் சற்று ஆசுவாசமாக உணர்ந்தது. அவள்மீது கோபமிருந்தாலும் அவளோடு பேசாமலிருக்கத் தன்னால் முடியவில்லை என்பதை சற்று அலுப்போடு உணர்ந்து கொண்டான்.

அவனிடம்கூட சொல்லாமல் ஊருக்குச் சென்றிருக்கிறாள் என்று திலகவதி கூறியதும், அவளுடைய கோபம் புரிந்தது. தான் அவளிடம் பேசியதும் சற்று அதிகப்படி என்பதை உணர்ந்து கொண்டதால் தயங்காமல் மன்னிப்புக் கேட்டுவிட்டான்.

அவளுக்கு ஒன்றென்றால் தன்னால் தாங்க முடியுமா? அவளுக்காக ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்து கொண்டிருக்கையில் அவளிடம் கோபத்தோடு முகம் திருப்பி என்ன செய்யப் போகிறேன் என்று உணர்ந்ததாலேயே தாமதிக்காமல் ஹரிணிக்கு அழைத்துவிட்டான்.

அவளுடன் பேசியபிறகு மனம் சற்று சமாதானமாகியிருந்தது. தன்னுடைய அலுவலக அறையில் அமர்ந்து ரகு திரட்டித் தந்திருந்த வனத்துறை அதிகாரி ஜார்ஜின் இளமைப் பருவ விபரங்கள் அடங்கிய கோப்பை படித்துக் கொண்டிருந்தான்.

மூன்று கொலைகள் ஒரே மாதிரி நிகழ்ந்துள்ளது. ஏதோ ஒரு ஒற்றுமை கண்டிப்பாக மூவருக்கும் இருக்கும். எதை நான் தவற விடுகிறேன்? வெகுவாக யோசித்தவாறு அந்தக் கோப்பில் உள்ள விபரங்களைக் கூர்ந்து படித்துக் கொண்டிருந்தான்.

கூடவே கிஷோர் மற்றும் ஜனார்த்தனனின் விபரங்களும் அருகே இருந்தது. ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டிருந்தான்.

ஜார்ஜின் இளமைப் பருவம் முழுக்க சிக்மகளூரில்தான். அவரது தந்தையும் வனத்துறை அலுவலர்தான். சிறுவயதில் இருந்தே தந்தையைப் போல இந்தப் பணிக்குதான் வரவேண்டும் என்று ஆர்வமாகப் படிப்பாராம்.

ஓவ்வொன்றாக வாசித்துக் கொண்டிருந்தவனின் கண்கள் ஓரிடத்தில் நிலைத்தது.

பெங்களூருவில் உள்ள பிரபலமான தனியார் பயிற்சி நிலையத்தில் ஐஏஎஸ் தகுதித் தேர்வு பயிற்சிக்காக இணைந்து, பயிற்சியை முழுதாக முடிக்காமல் எட்டு மாதங்களில் வெளிவந்திருக்கிறார்.

இதைப் பார்த்ததும் சரணுக்குள் நெருடியது. கொலை செய்யப்பட்ட மூவருமே ஐஏஎஸ் பயிற்சி வகுப்புகளில் இணைந்து படித்திருக்க வாய்ப்பிருக்கிறதே.

உடனடியாக கிஷோரின் வீட்டுக்கும் ஜனார்த்தனன் வீட்டுக்கும் நேரடியாக சென்று விசாரித்ததில் மூவருமே ஒரே வருடத்தில் அந்த பயிற்சி நிலையத்தில் படித்தது புலனாகியது.
சிக்கலான கேசின் ஒருமுனை பிடிபட்டதில் வெகுவாக மகிழ்ந்தவன்,

அப்பொழுதே அந்த பயிற்சி நிலையத்தில் விசாரிக்கக் கிளம்பினான். அப்பொழுது அவனது அலைபேசி ஒலிக்கவும் எடுத்துப் பார்த்தவன் ரகுவின் எண்ணைக் கண்டதும் இணைப்பை உயிர்ப்பித்துக் காதில் வைத்தான்.

“சொல்லு ரகு.”

“சார், சிக்மகளூர் அரசு மருத்துவமனையில் லஞ்சம் கொடுத்து, கொலை செய்யப்பட்ட ஜார்ஜோட போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் பற்றிய தகவல்களைத் திரட்டப் பார்த்திருக்கான் சார் ஒருத்தன்.”

“வாட்… யார் அவன்?”

“தெரியல சார். அந்த டாக்டர் கொடுத்த தகவலின்படி அவனைக் கைது செய்து வச்சிருக்காங்க சார்.”

“அந்த சஞ்சயோட அப்பா வனத்துறை அமைச்சர் அனுப்பின ஆளாயிருக்கும். அவனோட ஃபோனை செக் பண்ணுங்க.”

“செக் பண்ணிட்டோம் சார். ஃபோன்ல எந்தத் தகவல்களும் இல்லை. எம்ப்டியா இருக்கு சார். அவனையும் விசாரிச்சுப் பார்த்திட்டோம். எதுவுமே வாயைத் திறந்து பேச மாட்டேங்கறான் சார்.”

“அந்த ஃபோனோட நம்பரை வச்சு அவன் யார்கூடலாம் பேசியிருக்கான்னு விசாரிங்க ரகு. விசாரிச்சிட்டுத் தகவல் சொல்லுங்க.”

“சரி சார்.”
அலைபேசியை அணைத்தவன் உள்ளத்தில் குழப்ப மேகங்கள்… ‘இந்த வழக்கின் விபரங்களைத் திரட்டுபவன் யார்? யாருக்காகத் திரட்டுகிறான்?’ யோசித்தபடியே ஆனந்தன் படித்த தனியார் ஐஏஎஸ் பயிற்சி நிலையத்தை நோக்கி வண்டியைச் செலுத்தினான்….

வேட்டை தொடரும் …

error: Content is protected !!